வேதாந்தமென்னும் உபநிஷத்துக்களின் கருத்தை அறிவது நம்போலியர்க்கு அரிதாகையால் எம்பெருமான் க்ருஷ்ணத்வைபாயனரெனும் வ்யாஸ மஹர்ஷியாய் அவதரித்து ஶாரீரகமீமாம்ஸா- ஸூத்ரங்களால் அதைத் தெளிவித்தான்.
இவை நான்கு அத்யாயங்களும் ஒவ்வொரு அத்யாயத்திலும்
நான்கு பாதங்களும் கொண்டு, 156 அதிகரணங்களில் 545 ஸூத்ரங்களாக அமைந்துள்ளன. அதில்
ப்ரஹ்மம் ஜகத்காரணமென்றும், அதை மறுக்க இயலாதென்றும், அதை அடைய வழிகளும், அதை அடைந்து பெருவாழ்ச்சி பெறுவதும் முறையே நான்கு அத்யாயங்களில் விளக்கப்பட்டுள்ளன.
அதில் முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில் முதல் ஸூத்ரம் –
ஓம் அதாதோ ப்ரஹ்மஜிஜ்ஞாஸா (1.1.1) என்று.
இந்த ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் இந்த ஒரே ஸூத்ரம் தான் உள்ளது. இது இந்த ஶாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தகுந்தது தான் என ஸாதிக்கிறது.
இந்த ஸூத்ரத்தில், அத, அத:, ப்ரஹ்மஜிஜ்ஞாஸா என மூன்று சொற்கள் உள்ளன. பின்னர், அதனால், ப்ரஹ்மத்தின்(தை) அறி(வில்)ய ஆவல் என தனிச்சொற்பொருட்கள்.
அதிகரணம் என்றால் ‘விஷயம்’, ‘ஸம்ஶயம்’, ‘பூர்வபக்ஷம்’, ‘ஸித்தாந்தம்’, ‘ப்ரயோஜநம்’ இந்த ஐந்தும் கூடியது.
இந்த முதல் ஸூத்ரத்துக்கு ப்ரஹ்மஜிஜ்ஞாஸா ‘விஷயம்’. அதாவது ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய ஆவல்.
அது தொடங்கத் தக்கதா, இல்லையா என ‘ஸம்ஶயம்’, அதாவது ஐயம். தொடங்கத்தகாதது என ‘பூர்வபக்ஷம்’ அதாவது, முதற்கூற்று. தொடங்கத் தக்கது, வேண்டியது என ‘ஸித்தாந்தம்’ அதாவது முடிவான கொள்கை. ‘பயனா’வது, இந்த ஶாஸ்த்ரத்தின் அர்த்தநிர்ணயம், அதாவது, ப்ரஹ்மத்தைப் பற்றி ஐயந்திரிபற அறிதல்.
‘परीक्ष्य ल ोकान् कर्मचितान् ब्राह्मण ो निर्वेदमायात् …. तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्’ என்பது விஷய வாக்யம்.
ப்ரஹ்மவிசாரம் தானாக ஆவல் ஏற்பட, அதாவது தன் விருப்பத்தால், உந்துதலால் ஏற்படுவதால், இந்த விதிவாக்யம், அப்ராப்த ப்ராபகமான ‘அபூர்வவிதி’யல்ல, அதாவது, அறியாததை அறிவிப்பதாகிய அல்லது அடையாததை அடைவிக்கும் கட்டளை அன்று. பின் ஏதென்னில், ‘நியமவிதி’யாம், அதாவது,
ஆசார்யனின் உபதேஶத்தை முன்னிட்டே ப்ரஹ்ம விசாரம் செய்யவேண்டுமென்கிற நியமம்
அறிந்திராததாகையால் ‘அபிகச்சேத்’ என்று நியமவிதி, அதாவது, ஒன்றைச் செய்ய விரும்பினால், அதை எவ்வாறு செய்ய வேண்டுமெனக் கட்டளையிடுவதாம்.
இப்பொழுது, இந்த ஸூத்ரத்தின் ஸித்தாந்தமாவது, ‘அத’ – அநந்தரம், அதாவது, பிறகு, வேதத்தினுடைய முதல் பகுதியான கர்மகாண்டமென்பதின் அர்த்தத்தை விசாரித்த பிறகு என்றபடி. ‘அத:’ – ப்ரஹ்மஜ்ஞானமில்லாத கர்மங்கள் குறைவானதும் நிலையற்றதுமான பலன்களையே அளிப்பவை-யாகையாலும், ப்ரஹ்மஜ்ஞானம் அளவற்ற, நிலையான பலனை அளிப்பதாகக் காண்பதாலும்,
‘ப்ரஹ்மஜிஜ்ஞாஸா’, அதாவது ப்ரஹ்மவிஷயகமான ஶாரீரகமீமாம்ஸை – இந்த ஶாஸ்த்ரம் – செய்யத் தக்கதென்றபடி. இங்கு ‘கர்த்தவ்யா’ என்று ஒரு சொல்லைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
‘ப்ரஹ்ம’ஶப்தத்தால் இயற்கையாகவே எல்லாவித விடத்தக்க பண்புகளுக்கும் எதிர்த்தட்டாய், எல்லா உயர்ந்த நற்பண்புகளுக்கெல்லாம் ஒரே இருப்பிடமான திருமகள் கேள்வனாம் ‘புருஷோத்தமன்’ சொல்லப்படுகிறான்.
‘ப்ரஹ்மவிசாரம் கர்த்தவ்யம்’ என்கிற ஜ்ஞானம் இந்த ஸூத்ரத்தில் விதிக்கப்படுகிறது.
இந்த அதிகரணம் ஶ்ரீபாஷ்யத்தில் மிக விரிவாக உரைக்கப்பட்டுள்ளது. ஸித்தாந்தத்தின் பல முக்கிய அம்ஶங்கள் இங்கு மற்ற ஸித்தாந்தங்களுடன் ஒப்பிட்டு முடிவிடப் படுகின்றன. அதனால் லகுபூர்வபக்ஷ, ஸித்தாந்தங்கள், மஹாபூர்வபக்ஷ, ஸித்தாந்தங்களெனவும், (மஹா ஸித்தாந்தத்திலும் ஆத்மஸ்வரூபஶோதனம் – {‘அஹம்’ என்ற சொல்லின் பொருளே ஆத்மா, அவன் ‘அறியும் சுடர்’ என்றும், ‘அறிவாகி அறிவதுமாய்’ என்றும், ‘தான் தனக்குக் தன்னாலே தோன்றித் தன்னோர் ஒளியணைக்குங் குணத்தாலும் தன்னைக்கண்டு’ என்று முதலியவற்றின்படி ஜ்ஞான ஸ்வரூபனும், ஜ்ஞான குணகனுமாகிறான்} –
ஶ்ருதிப்ரக்ரியை, புராணப்ரக்ரியை, ஏழுவித ஆக்ஷேபங்கள் – [ஶங்கர அத்வைத மதத்தின்
அவித்யாவாதத்தைக் கண்டிக்க அதன் ஆஶ்ரயம் (இருப்பிடம்), திரோதானம் (ப்ரஹ்மத்தை மறைத்தல்),ஸ்வரூபம் (பிரிவில்லா இருளொன்று பிணக்கொன்றில்லாப் பெருவெயிலை மறைத்துலகங் காட்டுமென்னல்), அநிர்வசநீயம் (உளதுமல்லது இலதுமல்லதெனல்), ப்ரமாணம் (அவித்யையை நிரூபிக்கும் ப்ரமாணமின்மை), நிவர்தகம் (அதை ஒழிக்குமது), நிவ்ருத்தி (அதன் ஒழிதல்) சொல்லமுடியாமையால் ஸப்தவித அநுபபத்திகள் – பொருத்தமின்மைகள்)], பின்னர், முடிவில் ‘அதிகரணபூர்வபக்ஷம்’ மீமாம்ஸகர் வாயிலாக வர, அதன் ஸமாதானத்துடன் ‘அதிகரணஸித்தாந்தம்’ ஆகியவை இதில் இடம் பெறுகின்றன.
வேதத்தின் பொருளை விசாரித்து அறிவித்தல் என்கிற ‘மீமாம்ஸா’ (உயர்ந்த விஷயத்தைப் பற்றிய விசாரம்) ஶாஸ்த்ரம் ஒன்றாகையாலே அதில் முதல் பாகமான கர்மமீமாம்ஸையினுடைய கடைசியில்,
‘ஸ விஷ்ணுராஹ ஹி’, ‘தம் ப்ரஹ்மேத்யாசக்ஷதே’ என்று ப்ரஹ்மம் சொல்லப்பட்டதால் அந்த
ப்ரஸங்கத்தாலே, மேல் பாகத்தின் விசாரமாகிய ‘ப்ரஹ்மமீமாம்ஸை’யை ஆரம்பிக்கிறார் வ்யாஸ பகவான்.
‘அத்ராயமதஶப்த’ முதலிய வாக்யங்களால் ‘அத’, ‘அத:’ என்கிற சொற்களுக்கு முறையே
ஆநந்தர்யத்தையும் – பின்னர் வருதல், நடந்த கர்ம விசாரத்துக்கு ஹேதுபாவத்தையும் – காரணமாதலையும், பொருளாக விவரித்தார்.
‘அதீதஸாங்க’ முதலியவைகளால் கர்மவிசாரம் முந்தி நடந்ததென்றும், ப்ரஹ்மவிசாரம் மேல்
நடக்கவேண்டியதென்றும், கர்மங்களுக்கு குறைந்ததாகவும், நிலையற்றதுமான பலனை மட்டுமே கொடுக்கத்தக்க தன்மையின் முடிவுடன் கூடிய ப்ரஹ்மஜ்ஞானத்தின் அளவற்ற, அழிவற்ற பலனைக் கொடுப்பதில் மேலெழுந்தவாரியான எண்ணமும், ப்ரஹ்ம விசாரத்தை ஆரம்பிப்பதற்கு ‘ஹேது’ – காரணம் என்று காட்டினார்.
‘ப்ரஹ்மணோ ஜிஜ்ஞாஸா’ என்றாரம்பிக்கும் வாக்யத்தால் ‘ப்ரஹ்மண:’ என்கிற ஆறாம் வேற்றுமைக்கு கர்மார்த்தத்வத்தை நிரூபித்தார்.
ஆறாம் வேற்றுமை, ‘ஷஷ்டீ ஶேஷே’ என்னும் ஸூத்ரத்தால் ஸமாஸத்தில் (சொற்றொகையில்) உள்ள சொற்களின் பொதுவான தொடர்பைக் குறிக்கும். இது ‘ஸம்பந்தஸாமாந்யம்’ எனப்படும்.
இதைக்கொண்டாலும், ‘அறிய ஆவல்’ என்ற விடத்து ‘எதை அறிய?’ எனக் கேள்வி தோன்றுமாதலால், ப்ரஹ்மம் கர்மாவென்று கிடைக்கும்.
ஆயினும், குறிப்பாகக் ‘கர்த்ருகர்மணோ: க்ருதி’ என்று விஶேஷித்து ஷஷ்டியை விதித்திருப்பதால், இங்கு கர்மார்த்தத்தில் – ‘கர்மணி’ – ஷஷ்டீ வந்திருக்கிறது. (இங்கு ‘கர்தா’ எனக் கொள்ளல் பொருந்தாது
- ‘ப்ரஹ்மம் அறிய விரும்புகிறது’ எனப் பொருளாதலால். தவிரவும் ‘கர்தா’, ‘கர்ம’ இரண்டும் வரில் கர்மாவையே கொள்ள வேண்டும், ‘உபயப்ராப்தௌ கர்மணி’ என்ற ஸூத்ரத்தால்). அதாவது ஷஷ்டியானது கர்த்ருகர்ம இரண்டுக்கும் பொதுவாயினும், தாபத்ரயத்தால் வருந்துபவனுக்கே ப்ரஹ்மஜிஜ்ஞாஸாகர்த்ருத்வம், ப்ரஹ்மத்துக்கே கர்மத்வம், ஆவதால் ‘கர்மணி ஷஷ்டீ’, என்றார்.
‘ப்ரதிபதவிதாநா ச ஷஷ்டீ ந ஸமஸ்யதே’ என்ற வார்திகத்தால் ‘ப்ரஹ்மஜிஜ்ஞாஸா’ என்ற ஷஷ்டீஸமாஸம் வராதென்ற கேள்விக்கு ‘க்ருத்யோகா ச ஷஷ்டீ ஸமஸ்யதே’ என்ற ப்ரதிப்ரஸவம் (விலக்குக்கு விலக்கு) உள்ளதால் தடையின்றி கர்மணி ஷஷ்டீ ஸமாஸம் வருமென்றார். ‘உபபதவிபக்தி’யை விட ‘காரகவிபக்தி’ வலிமையுள்ளது என்றபடி.
‘ப்ரஹ்மஶப்தேந ச’ என்கிற வாக்யங்களினால் ஶப்த ஶக்தியாலும் அர்த்த ஸாமர்த்யத்தாலும் ‘ப்ரஹ்ம’ஶப்தம் புருஷோத்தமனை ப்ரதிபாதிக்கிறதென்று ஸமர்த்தித்தார். ப்ரஹ்ம ஶப்தத்துக்குப் பெருமை உடையதும் பெருமை அடைவிப்பதும் பொருள், அதாவது, ‘ப்ருஹத்த்வம்’, ‘ப்ரும்ஹணத்வம்’ என்றபடி.
‘ஜ்ஞாதுமிச்சா’ முதலியவைகளால் – ‘அப்ராப்தே ஹி ஶாஸ்த்ரம் அர்த்தவத்‘ – ஏற்கனவே அறிந்திராததை அறிவிப்பது தானே ஶாஸ்த்ரமெனப்படும். ப்ரஹ்ம விசாரமோ ராகப்ராப்தம் – விருப்பத்தால் செய்வது, ஆகையால் விதிக்கத்தக்கதல்ல. - மற்றும் உபநிஷத்துக்களுக்கு ஸித்தவஸ்துபரத்வமில்லாததால் ‘ஸத்யம்
ஜ்ஞானமி’த்யாதி வாக்யம் ப்ரஹ்மத்தைத் தெரிவிக்கமாட்டாதாகையாலே வேதாந்தஶாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கதன்றென்று மீமாம்ஸகன் ஆக்ஷேபிக்க,
அந்த ஶங்கைக்கு, குழந்தைகளுக்கு சொற்களுக்கும் அவற்றின் பொருட்களுக்கும் உள்ள தொடர்பின் அறிவு, பெரியவர்கள், அப்பா, அம்மா, மாமா, முதலியவர்களையும், அம்புலி, மாடு, மனிதன், விலங்குகள், பறவை, பாம்பு முதலியவற்றையும் கைவிரல்களால் சுட்டிக் காட்டி அவற்றைக் குறிக்கும் சொற்களை வழங்குவதால் ஏற்படுவது கண்கூடாக இருப்பதால், கார்யபொருள் அல்லாதவற்றிலும்
‘வ்யுத்பத்தி’ – சொற்பொருட்தொடர்பு – உண்டாகுமென்று விடையளித்து,
மீமாம்ஸா விசாரத்துக்கு ‘கர்த்தவ்யத்வம்’ முன் அறியப்படாததால் அதை விதிப்பதிலே நோக்கு என்றும்
விதி ஶப்தத்துக்கு அறியாததை அறிவிப்பதில் தவிர, செய்யாதவனைச் செய்விப்பதில் நோக்கு எனல் தேவையில்லை எனவும் காட்டியருளினார்.
இப்படி இந்த அதிகரணத்தின் சில முக்கிய விஷயங்கள் தொகுக்கப்பட்டன.
.
—————————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply