ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருத் துவாரகை

மூலவர் -கல்யாண நாராயணன் -துவாரகா தீசன் -நின்ற திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம் –
தாயார் -கல்யாண நாச்சியார்
விமானம் -ஹேம கூட விமானம்
மங்களா சாசனம் -திருமழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -திருமங்கை ஆழ்வார் –

மேற்கு கடல் கரை ஓரம் -மோக்ஷம் அடைய வழி -துவாரத்தை காட்டும் இடம் -முக்தி தரும் ஏழு க்ஷேத்ரங்களில் ஓன்று –
மதுரையார் மன்னன் -துவாரகா தீசன் -ஆசை யுடன் கொள்ளும் திரு நாமம் –
கோமதி நதி மேற்கு நோக்கி ஓடி கடலுக்குள் சங்கமிக்கும் இடம் -கோமதி துவாரகா –
ரைவதர் என்னும் ராஜா குஷங்களை-தர்ப்பங்களை -பரப்பி த்வம் செய்த படியால் இவ்விடம் குதஸ்தாலி -என்றும் அழைக்கப்படும்
இந்த ஷேத்ரத்தில் டாகூர் –கோமதி –பேட்–மூல –ஸ்ரீ நாத துவாரகா என்ற ஐந்து த்வாரகைகள் உள்ளன –

5 மைல் கோமதி அங்கேயே உருவாக்கி அங்கே கடலில் கலக்கும்
காங்க்ரோலி த்வாராக சேர்த்து ஆறாவது துவாரகை
போடானா ஸ்வாமி இங்கு உள்ள மூர்த்தியை டாகூர்த்வாரகையில் எழுந்து அருள
வஜ்ரநாபன் பிரதிஷ்டை செய்த மூர்த்தி இங்கு –
ருக்மிணி கோயில் தனி -ருக்மிணி பிராட்டி ஆராதித்த திரு மூர்த்தி இன்று இங்கே
த்ரி விக்ரமன் -தனி சந்நிதி -சனகாதிகளுக்கு -தனி சந்நிதி
56 படிக்கட்டுக்கள் 56 கோடி யாதவர்கள்
சார் தாம் -நான்கு
7 நிலைகள்
52 -கஜம் கொடி மாற்றும் உத்சவம்
பேட் துவாரகா பிராட்டிமார்க்கு தனி சந்நிதி -குசேலர் சந்தித்த இடம் -12 மைல் தூரம் படகில் போக வேண்டும்
ராணா சோடராய் யுத்த பூமியில் இருந்து ஓடியவன் தாகூர் துவாரகை –
முசுகுந்தன் –காலயவனன்–சாம்பலானவன் –
ஸ்ரீ நாத -துவாரகா – மீரா பிரதிஷ்டை -ராஜஸ்தான் -உதய்பூர் வடக்கே

மூலவர் ஸ்ரீ கல்யாண நாராயணன், ஸ்ரீ துவாரகா தீசன், ஸ்ரீ துவாரகா நாத்ஜி
கோலம் நின்ற
திருமுக மண்டலம் மேற்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீகல்யாண நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ கோமதி ஆறு, ஸ்ரீ சமுத்ர சங்கமம்
விமானம் ஸ்ரீ ஹேம கூட விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஸ்ரீ குஜராத்
அடிப்படை இடம் ஸ்ரீ ஜாம் நகர்
நாமாவளி ஸ்ரீ கல்யாண நாச்சியார் ஸமேத ஸ்ரீ கல்யாண நாராயணாய நமஹ-

——————–

ஸ்ரீ பெரியாழ்வார் -5-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம் மங்களாசாசனம்

மொத்தம் -13-பாசுரங்கள் மங்களாசாசனம்

————-

ஸ்ரீ பெரியாழ்வார் -5-பாசுரங்கள் மங்களாசாசனம்

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

————–

ஸ்ரீ ஆண்டாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–4-8-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

—————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
முதுதுவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர்
இனவளை கொண்டானடிக் கீழ் எய்த கிற்பீர்!
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய
வளங்கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே. –6-6-7-

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே.–6-8-7-

—————–

ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

அன்னையென் செய்யிலென்? ஊரென் சொல்லிலென்? தோழிமீர்!
என்னை யினியுமக் காசையில்லை அகப்பட்டேன்
முன்னை யமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே- மூன்றாம் திருவாய்மொழி – மாசறுசோதி

———–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம் மங்களாசாசனம்

சேயனணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக்கோனாய் நின்ற – மாயன் அன்று
ஓதிய வாக்கதனைக் கல்லார் * உலகத்தில்
ஏதிலராம் மெய்ஞ் ஞானமில். –நான்முகன் திருவந்தாதி – 71-

தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. இந்தக்கோவிலை இங்குள்ள
மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாகக் கட்டப்பட்டதாகும். கடந்த 5000
ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற  இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.

கண்ணபிரானின் சரித்திரத்தோடும், பாரதப் போரினோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்த துவாரகாபுரி அமைந்துள்ள மாநிலம் தான்
இன்றைய இந்தியா சுதந்திரம் பெறக் காரணமான மகானையும் ஈன்று அன்று போல் இன்றும் தன் ஒல்காப் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

மூலவர்- துவாரகா நாத்ஜி. கல்யாண நாராயணன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- கல்யாண நாச்சியார் (ஸ்ரீலட்சுமிதேவி) ருக்மணி, அஷ்டமஹிஷிகள்.
தீர்த்தம்- கோமதி நதி
விமானம்- ஹேம கூட விமானம்
காட்சிகண்டவர்கள்-  கண்ணன் வாழ்ந்த போதிருந்த துவாரகா வாசிகள் மற்றும் திரௌபதி

இங்கு செங்கோல் செலுத்தி மன்னாதி மன்னனாக வாழ்ந்த கண்ணபிரானை துவாரகா நாத்ஜி என்றே இங்குள்ள மக்கள் அழைப்பர்.
எவ்வளவு அரசியல்மாற்றங்கள் வந்தாலும் இங்குள்ள மக்கள் கண்ணனே தங்கள் மன்னன் என்று எண்ணி வாழ்கின்றனர். தங்களை துவாரகா நாத்ஜியின்
பிரஜைகளாக இன்றும் எண்ணி இறுமாப்பெய்துகின்றனர்.

இங்குள்ள ஸ்ரீகண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது அஷ்ட மகிஷிகட்கும் அண்ணன்
பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.

இங்கே கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து
மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை
உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 71/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும்
படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு
அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு கனி வர்க்கங்கள் இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறான்.
இதனால் பயந்து போய் உணவு செரிமானம் ஆயிற்றோ என்னவோ என்று கருதி செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம்
கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு (திருவாராதனத்திற்கு) போக் என்று பெயர்.

பக்த மீரா அன்ன ஆகாரமின்றி கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனை ஆரத்தழுவி அவனோடு இரண்டறக்
கலந்தது இந்த தலத்தில் தான். இவளின் கானம் தூணுக்குத் தூண் எதிரொலித்து கண்ணனை புளகாங்கிதம் அடையச் செய்ததும் இங்குதான்.
மீராவுக்கு மேவார் நகரில் விஷம் தர ஏற்பாடு செய்யப்பட்டதும் இச்சன்னதியின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. மேவாரிலிருந்து பித்துப்
பிடித்தவள் போல் ஓடி வந்த மீரா, எங்கே துவாரகை எங்கே என் நாதன்என்று கூவிக் கொண்டே இச்சன்னதியின் வாசலை அடைந்தவுடன்
கோவிற்கதவுகள் தானாகத் திறந்து கொண்டன.

அரண்மனை எவ்வாறு கலகலப்பாக இருக்குமோ அதேபோல் இங்கு யாத்ரீகர்கள் (பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்) கூட்டம் கூட்டமாக
வருவதால் எந்நேரமும் கலகலப்பு களைகட்டியிருக்கின்றது. இங்கு பெண்கள்கூட்டங்களையும் அவர்களின் உடைகளையும் பார்க்கும்போது ஆயர்ப்பாடி
கோபிகைகளின் நினைவே நமக்கு வருகிறது. கண்ணன் இருக்கிறான்
கோபியர்கள் இருக்கிறார்கள். ஆநிரைகள் மட்டும் எங்கே சென்றுவிடும். இங்கே ஊருக்குள் திரியும் ஆநிரைகளை மக்கள் கண்ணனின்
ஆநிரைகளாகவே அவைகளைத் தொடுவதில் மகிழ்ச்சி கொள்வதும், அவைகட்கும் பூச்சூட்டி மகிழ்வதும் அவைகள் பொலிவு தோன்ற இறுமாந்து நின்று செம்மாந்து திரிவதும் சிந்தனையைத் தூண்டுவது மட்டுமன்றி காண கிடைக்காத ஒரு தெய்வீகம் கலந்த காட்சியாகும்.

ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி
சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் இங்கு தனிக்கோவில். பட்ட மகிஷி அல்லவா ருக்மணி ஊருக்கு வெளியே இருந்தாலும் ராஜகளை
ஜொலிக்க வீற்றிருக்கிறாள்.

ஒருநாள் ராதை துவாரகை வந்தாள். ருக்மணி வரவேற்று பாலும், தேனும் கொடுத்தாள். இருவரும் மிக்க அன்போடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
அன்றிரவு கண்ணன் படுக்கையறைக்கு வந்ததும் ருக்மணி கண்ணனுக்குப் பாத பூஜை செய்தாள். கண்ணனின் பாதங்களில் சிறு கொப்புளங்கள்
உண்டாயிருந்தன. இதைக் கண்டு திடுக்கிட்ட ருக்மணி பெருமானே, இந்தக் கொப்புளங்கள் எப்படி வந்தன என்று கேட்டாள். ருக்மணி நீ இன்று
ராதைக்குப் பால் கொடுத்தாயல்லவா அது சூடாக இருந்தது. அதை அவள் பருகியபோது எப்போதும் அவள் தனது இதய கமலங்களில் வைத்திருக்கும்
எனது பாதங்களில் சூடுபட்டு இந்தக் கொப்புளங்கள் வந்துவிட்டதென்றான். ஆனால் பால் சூடாக இருந்தது என்று ராதை கூறவில்லையே என்றாள்
ருக்மணி. நீ பிரியமாக கொடுத்ததால் சூடு உள்ளது என்று உன்னிடம் சொல்லாமலேயே குடித்துவிட்டாள். ஆகா, உம் பாதங்கள் கோமளமானவை
அதைவிடக் கோமளமானதன்றோ ராதையின் இதயம் என்றாள் ருக்மணி. என்னே அன்பு கலந்து நிகழ்ச்சியைக் கூட்டி விட்டான் இந்த துவாரகையில்.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணன் தன்னை நாடிவரும் பக்தர்கட்கு
இங்கிருந்துகொண்டு மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இந்த ஸ்தலம் கருதப்படுகிறது. இதனாலும் துவாரகை என்று பெயர் வந்தது என்பர்.

இங்கு கடலுக்குள் தற்போதும் ஒரு துவாரகை உள்ளது. இது ஒரு தீவு. எனவே இதனைத் தீவுத் துவாரகை என்பர். இங்குள்ள மக்கள் இதனை
பேட்துவாரகா என்று அழைக்கின்றனர். நாம் முன்னே சொன்ன துவாரகா சன்னதியிலிருந்து ஒகா துறைமுகம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து
விசைப்படகு மூலம் இத்தலத்தை அடையலாம். இங்கு மூலவர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கும் துவாரகா நாத்ஜி என்றே பெயர்.
இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு ராஜாவைப் போலவும்
நடைபெறும் அலங்காரங்களை நாம் எதிரில் நின்று கொண்டே கண்குளிரக் காணலாம். இங்கு பெருமாளின் திருமார்பில் லட்சுமி ஸேவை தருகிறாள்.
இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி நாராயணன் என மொத்தம் ஐந்து சன்னதிகளும், சங்க தீர்த்தம் என்னும் மிகப்
பிரசித்தமான தீர்த்தமும் உண்டு.

துவாரகையிலிருந்து ஒகா துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 3 மைல் தூரத்தில் உள்ள ருக்மணி தேவியின் சன்னதியில் தான்
ஸ்ரீகிருஷ்ணபகவான் ருக்மணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீஹம்.

இங்கிருந்து திரும்பும்போது (அதாவது பேட்துவாரகையைச் சேவித்துவிட்டு) விராவல் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கினால் பிரசித்தி
பெற்ற சோமநாதர் ஆலயம் செல்லலாம். இதற்கு அருகாமையில் அமைந்துள்ள பாலகா என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணன் ஆலயம் உள்ளது. கிருஷ்ணன் வைகுண்டம் போவதற்கு முன் இங்குள்ள அரசமரத்தடியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாக ஐதீஹம். இன்றும் இந்த இடத்தில் கிருஷ்ணரின் அரசரடி சயன திருக்கோலத்தைக் காணலாம். கிருஷ்ணன் சயனத் திருக்கோலத்தில் இருப்பது அநேகமாக 108 திவ்ய தேசங்களில் இந்த ஒரு இடத்தில் என்று மட்டுமே கூறலாம். துவாரகா புரியை மட்டுமே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருப்பினும் நிகழ்ச்சிகளால் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து
கிடக்கும் இங்குள்ள ஸ்தலங்கள் யாவற்றையும் மங்களாசாசனம் செய்வதாக கொள்ளலாம்.

ஜராசந்தன் என்னும் அரக்கன் மக்களுக்கு பல துன்பங்கள்விளைவித்து வந்த வேளையில் அவனால் மக்கள் துன்பம் அடையாதவாறு
உள்ள ஒரு நகரத்தை நிர்மானிக்க வேண்டுமென கடலுக்குள் துவாரகா நகரத்தை சிருஷ்டிக்க கிருஷ்ணன் விஸ்வகர்மாவை யழைக்க அவனால்
வடிவமைக்கப்பட்டதே துவாரகாபுரி. இதனால் மிக்க சந்தோஷமடைந்த சமுத்திர ராஜன் இந்நகரைக் காத்து வந்ததாகவும் ஐதீஹம். இந்த துவாரகாபுரி
கடல் கோள்களால் விழுங்கப்பட்டு விட்டது.

இங்கு செல்பவர்கள் தனி பிரயாணத்திட்டம் வகுத்து சுமார் 6 நாட்கள் வரை தங்கி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கையோடு
தொடர்புடைய இடங்கள், பேட்துவாரகை, விராவல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்தலங்கள் மற்றும் இங்குள்ள ப்ராபஸ தீர்த்தம், ஜீனகட்
எனப்படும் ரயில்நிலையத்திலிருந்து 100மைல் தொலைவிலுள்ள கிரிதார் என்னும் ரைவதமலை மற்றும் இங்கு வாழும் பெரியவர்களாலும்,
பக்தர்களாலும் சொல்லப்படும் முக்கியமான புனித ஸ்தலங்களைத் தரிசித்து, தீர்த்தாடனம் செய்து வருவது மிக்க விசேஷம்.

கோமதி நதி கடலில் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ள கிருஷ்ண சாம்ராஜ்யமான இந்த துவாரகாபதி சென்று வந்தவர்கட்கு இங்கு
கண்ட காட்சிகள் வாழ்நாள் முடிய மறக்கவொன்னாதவைகளாகும்.

திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி பாதகர் ஓர் ஐவர் நறுந்துளவ
மாதுவரை யோனே மனம் துணையாகக் கொண்டு என்னைக்
காதுவர் ஐயோ மெய் கலந்து –105-

(இ – ள்.) நறுந் துளவம் – நறுமணமுடைய திருத்துழாய்மாலையைத் தரித்த,
மா துவரையோனே – பெருமைபெற்ற துவாரகையென்னுந் திவ்வியதலத்தை வாழுமிடமாகக்கொண்டவனே! –
பாதகர் ஓர் ஐவர் – மிகக்கொடிய பாதகங்களைச் செய்வதற்குக் காரணமாய்நிற்கின்ற பஞ்சேந்திரியங்கள்,
திறம்திறம் ஆ – விதம்விதமாக,
தாம் துய்க்கும் – தாம் அனுபவித்தற்கு உரிய.
தீஞ்சுவையை – இன்சுவையுள்ளபொருள்களை,
நாடி – தேடிக்கொண்டு,
அறம் திறம்பி – தருமமார்க்கத்தினின்று தவறி,
மனம் துணை ஆ கொண்டு – (எனது) மனத்தை(த் தமக்கு) உற்றதுணையாகக்கைக்கொண்டு,
மெய் கலந்து – எனது உடலிற் பொருந்தி,
என்னை -, காதுவர் – இடைவிடாது வருத்துவார்கள்; ஐயோ -! (எ – று.)

“மனமாளு மோரைவர்” என்றபடி கொடிய பஞ்சேந்திரியங்கள் மனத்தைத் தமக்கு உற்ற துணையாகக்கொண்டு
சரீரத்திற்கு உள்ளாகவே இருந்து தம்தமக்குஉரிய விஷயங்களில் விரும்பி என்னுயிரை வருத்திக் கொல்கின்றன;
இவற்றை உனது அருளென்னுந் தண்டா லடித்து வலியொடுக்கி நற்கதி யளிக்கவேண்டுமென்பதாம்.
எம்பெருமான் சேதநர்கள் தன்னையுணர்ந்து வழிபட்டு ஈடேறுதற்பொருட்டே கரணகளேபரங்களை அவர்கட்கு அளித்திருக்க,
இந்திரியங்கள் அவ்வெம்பெருமானை வழிபடுதற்கு இசையாது மனத்தைத் துணைக்கொண்டு வேறுவழியிற் செல்லுதலால்
“பாதகர்ஓரைவர் அறந்திறம்பிக் காதுவர்’ என்றார். பஞ்சேந்திரியங்கள் புறம்பே விலகிநின்றால் ஒருவாறு உய்தல்கூடும்;
உள்ளேபுகுந்து உற்றதுணைவர் போன்று உயிரை வருத்துதலால், உய்யும் வகை யில்லை யென்பது, ‘
காதுவ ரையோ மெய்கலந்து’ என்பதன் கருத்து;
“புறப்பகைகோடியின் மிக்குறினு மஞ்சார், அகப்பகையொன்றஞ்சிக் காப்ப” என்றது காண்க.
‘திறந்திறமாத் தாம்துய்க்குந் தீஞ்சுவை’ என்றது – மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்களும்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐவகைப் புலன்களைத் தமக்கு விஷயமாகக் கொண்டிருத்தலால் என்க.
செறலினால் ‘ஐவர்’ என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்.

துவரை – த்வாரகா என்ற வடசொல்லின் சிதைவு; அகன்ற துவாரத்தையுடையது எனக் காரணப்பொருள்படும்.
இதுவும் முத்திதரும் நகரமேழனுள் ஒன்று. இந்நகரம் – காலயவனன் பெருஞ்சேனையோடு வடமதுரையை
முற்றுகைசெய்தபோது அவனால் யாதவர்க்கு எங்குத் தீங்குவருமோ? என்ற கருத்தினால்
ஸ்ரீகிருஷ்ணபகவான் சமுத்திரத்தினிடையே அவ்யாதவரைப் பாதுகாக்குமாறு ஏற்படுத்தி அரசாண்ட நகரம்.
“பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரையென்னு, மதில் நாயகராகிவீற்றிருந்த மணவாளர்” என்பது, பெரியார்பாசுரம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading