ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ-திரு ஆய்ப்பாடி –ஸ்ரீ கோகுலம்

மூலவர் -நவ மோஹன கிருஷ்ணன் / நின்ற திருக் கோலம் /கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் -ருக்மிணீ -சத்யபாமா தாயார்
விமானம் -ஹேம கூட விமானம்
தீர்த்தம் -யமுனா நதி
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -ஆண்டாள் -திருமங்கையாழ்வார்

யமுனையின் மறு கரையில் இருக்கும் கோகுலம் -கண்ணன் 10 ஆண்டுகள் வளர்ந்த ஸ்தலம் –
-இங்கு ஒவ்வொரு அடி பொழியும் கண்ணன் தொடர்பு கொண்டது –
நந்தகிராமம் -கோவர்த்தனம் -பிருந்தாவனம் –ஆகிய அனைத்தும் கோகுலத்தில் அடங்கும் –

ப்ரஹ்மாண்ட காட் -மண் பிரசாதம் / உள் பந்தன் குரலையும் சேவிக்கலாம் / நந்தன் பவன் தொட்டில் நாமும் ஆட்டலாம் /
உருண்டு மண் சம்பந்தம் / ரமன் ரேடி/ கூசும் சரோவர் நாரதர் வனம் / மான்சீ கங்கா /
கோவிந்தன் -உதவ ஷீலா -ஜிஹ்வா ஷீலா / ரெங்கோஜி மந்திர் -/ காம்யவனம் ராஜஸ்தான் -/ சரண் பகடி/ லுகாலுக்க குண்டம் /கயா குண்டம் /

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ கோகுலம்
மூலவர் ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன், ஸ்ரீ மன மோகன கிருஷ்ணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்ய பாமா
தீர்த்தம் ஸ்ரீ யமுனை நதி
விமானம் ஸ்ரீ ஹேம கூட விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஸ்ரீ உத்தரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ தில்லி
நாமாவளி ஸ்ரீ ருக்மணீ ஸத்ய பாமா நாயிகா ஸமேத ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணாய நமஹ

————————–

ஸ்ரீ பெரியாழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -5-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்

————

ஸ்ரீ பெரியாழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம் –

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பர்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்
றாடுவார்களுமாய ஆயிற்று ஆய்ப்பாடியே -1-1-2-

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனராய் ஆய்ப்பாடி ஆயரே –1-1-4-

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2-2-5 –

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-9 –

பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – 3-2 2-

வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே -3 2-4 –

மிடறு மெழு மெழுத் தோடே வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3 2-6 –

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 4-10 –

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப
அவி உணா மறந்து வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறைய புகுந்து ஈண்டி
செவி உணா இன் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – 3-6 7- –

———————–

ஸ்ரீ ஆண்டாள் -5-பாசுரங்கள் மங்களாசாசனம்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்த கோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். –திருப்பாவை – 1-

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே–13-4-

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

———————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-5-

அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே–5-9-8-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2-

ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே —11-5-4-

ஆராத தன்மையனாய் ஆங்கொரு நாளாய்ப் பாடி சீரார்கலயல்குல் சீரடிச் செந்துவர் வாய்—சிறிய திருமடல் – 28-

இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8
மைல் தூரத்தில் உள்ளது.

கண்ணனின் பாலபருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம்
எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த
கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. சுருக்கமாக இதன்
வரலாற்றை ஒரே வரியில் சொன்னால் கண்ணனின் பால பருவ வளர்ச்சிதான் கோகுலம்.

மூலவர்-  நவமோகன கிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- ருக்மணி தேவியார், சத்திய பாமா
விமானம்-    ஹேம கூட விமானம்
காட்சி கண்டவர்கள்–   கோகுல வாசிகள்

இங்கு யமுனையை அடைந்ததும் கண்ணன் வாசனை வந்துவிடுகிறது. ஒரு காலத்தில் (துவாபரயுகத்தில்) இங்கு கண்ணன் பாலகுமாரனாக ஓடியாடி
விளையாடி லீலை செய்த காட்சிகளை நினைவு கூறும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1
கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதாவது எல்லாமே கோகுலம் என்று சொன்னாலும்
இந்த இடம் மட்டுமே கண்ணனின் ஸாநித்தியம் நிரம்பி வழிந்த இடமாகும்.
புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை,
பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள விக்கிரகங்கள் யாவும் மரத்தினால் செய்யப்பட்டவையாகும். மர விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் பொருந்தியனவாகும்.

ஆயர்பாடி முழுமைக்கும் மங்களாசாசனம் பொருந்தும் மதுராவில் இப்போதுள்ள தொன்மைமிக்க கோவில்களையும், யமுனையையும் ஆழ்வார்கள்
மங்களாசாசனம் செய்ததாகவே கொள்ளலாம்.

அயோத்தியைப் போலவும், துவாரகை போன்றும் பரபரப்பாகக் காணப்படாவிடினும் அமைதி தவழும் ஆரண்யம் போல் திகழ்கிறது கோகுலம்.

எம்பெருமான் “ரஸோ வைஸா” என்று வேதம் வர்ணிக்கிறது அதாவது நீதான் சிறந்த ரஸம். பகவானை விட சிறந்த ரஸனை உள்ளவன்
இல்லை என்று வேதம் வர்ணிக்கிறது.
இந்த ரஸோ வைஸ என்பது கிருஷ்ணவதாரத்திற்கே அதிலும் குறிப்பாக கோகுல வாசத்திற்கே சாலவும் பொருந்தும் என்பது பெரியோர் வாக்கு.

ரஸோ வை ரஸ, என்று வேதமும் உன்னைச் சிறந்த ரஸம் என்கிறது. நீ இருக்கும் இடம் ரஸம் நிறைந்ததாகவே இருக்கிறது. கிருஷ்ண ரஸாயணம் பிப
என்றார் குலசேகரர். அவர் சொன்னபடி கிருஷ்ணரஸாயணத்தை (கிருஷ்ண சரித்திரங்களை) உண்டு சுவைப்பதிலேயே உயிரினங்களும்
காலங்கடத்துகின்றன.  என்னே அருமையான ரஸபாவனையில் மூழ்கியுள்ளனர் பெரியோர்கள்.

கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும்
பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர் மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி அமலர் அடியார் அடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும்–106-

(இ – ள்.) (உலகத்தவர்களே!) –
மலிந்த புகழ் – நிறைந்த கீர்த்தியையுடைய,
அண்டர் – இடையர்கள்வாழ்கின்ற,
ஆய்ப்பாடி – திருவாய்ப்பாடி யென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளியிருக்கின்ற,
அமலர் – குற்றமற்ற கண்ணபிரானது,
அடியார் அடியார் தொண்டர் ஆய் – தாஸஅநுதாஸர்க்கு அடிமைப்பட்டவராய்,
பாடி – (அவரது குணங்களைப்) பாடி,
தொழும் – (அவரை) வணங்குங்கள்; (அவ்வாறு வணங்கினால்), –
அமரரோடும் – நித்ய ஸூரிகளோடும்,
கரைகண்டாரோடும் – (இவ்வுலகத்தினின்று) அக்கரை சேர்ந்தவரான முக்தர்களோடும்,
கலந்து – ஒருசேரக்கலந்து,
பொலிந்து – சிறப்புப்பெற்று,
திருநாடு – பரமபதத்தில்,
இருக்க – அழிவின்றி இருக்கும்படி,
போவீர் – செல்வீர்கள்; (எ – று.)

திருமால் ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவவதரித்து விளையாடின இடமாகிய திருவாய்ப்பாடியி லுள்ள அடியாரின்
அடியார்கட்கு அடியவராகி அவரது குணங்களைப் பாடித் துதித்தால், அதன்பயனாக, நீங்கள் ஸ்ரீவைகுண்டலோகத்தில்
அநாதியாய் வாழ்கின்ற நித்யஸூரிகளோடும் ஸம்ஸாரத்தினின்று வீடுபெற்றுச்சென்ற முக்தரோடும்
ஒருகோவையாகக்கலந்து பேராநந்தமநுபவிக்கப்பெறுவீ ரென்று உலகத்தோர்க்கு உபதேசித்தவாறு:
இச்செய்யுளால், பாகவதசேஷத்தின் சிறப்பைக் கூறின ரென்க.

அமரர் – என்றும் மரணமில்லாதவர்; நித்யஸூரிகள் எனப்படுவர்; அவராவார் – அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலியோர்.
கரைகண்டோர் – எம்பெருமானது நிர்ஹேதுககிருபையினால் தத்துவஞானம் தோன்றப்பெற்று ஸாம்ஸாரிக
ஸகலபாபங்களையும் ஒழித்து முக்தியிற் சேர்ந்தவர்கள்;
“கரைகண்டோர், துளக்கமில்லாவானவர்” என்றார் நம்மாழ்வாரும்.
இங்கு கலை கண்டார், என்ற பாடம் சாஸ்திரங்களில்வல்லவரெனப் பொருள்படுமாயினும, இனிதுபொருந்தாமை உணர்க.
அண்டர் ஆய்ப்பாடி அமலர் என்பதற்கு – இடையர்களது ஆய்ப்பாடியில் தோன்றிய குற்றமற்ற பாகவதர் என்றும்,
அண்டராகிய ஆய்ப்பாடியமல ரென்றும் பொருள் கூறினுமாம்.

ஆய்ப்பாடி – இடையர்கள்வசிக்கின்ற சேரி யெனப் பொருள்படும்; ‘கோகுலம்’ என்று வடமொழியில் வழங்கப்பெறும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading