மூலவர் -வையம் காத்த பெருமாள் / ஜகத் ரக்ஷகன் /நின்ற திருக் கோலம் /கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பத்மாசனி -புஷப வல்லி
விமானம் -சுத்த சத்வ விமானம் –
தீர்த்தம் -சக்ர தீர்த்தம்
மங்களாசாசனம் –திரு மங்கை ஆழ்வார் -5-2-பதிகம்
ஹிரண்யாக்ஷன் இடம் இருந்து பூமா தேவியை காக்க வராஹப் பெருமாள் -இங்கு கோரைப் பற்களால் உள்ளே புகுந்து
ஸ்ரீ முஷ்ணத்தில் வெளியே வந்தார் — கடல் மலைகள் – அருந்தும் பெருமாள் -ஸ்ரீ வராஹர் புகுந்த இடம் -இது-பிரயோக சக்கரத்துடன் சேவை
அம்பரீஷ மஹா ராஜர் இப் பெருமாள் அருள் பெற்று பல கைங்கர்யங்களைச் செய்துள்ளார் –
பிற்காலத்தில் ஸ்வப்னத்தில் சாதித்து – -காவேரி வெள்ளத்தால் அடித்துப் போக்கப்பட்டு இராணி மங்கம்மாள் புனர் நிர்மாணம் செய்துள்ளார் –
இங்கு நர்த்தன ஆஞ்சநேயர் பிரசித்தம் -கூத்தாடும் திருக் கோலம் -உத்சவம் கண்டு வசம் இழந்து நர்த்தனம் செய்தாராம்
திருவையாறில் இருந்து 11 கி மி தூரம் –
தற்போது உள்ள பெயர் ஸ்ரீ ஆடுதுறை பெருமாள் கோவில்
மூலவர் ஸ்ரீ ஜகத் ரக்ஷகன், ஸ்ரீ வையங்காத்த பெருமாள்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ ஜகத் ரக்ஷகன், ஸ்ரீ வையங்காத்த பெருமாள்
தாயார் ஸ்ரீ பத்மாசனி, ஸ்ரீ புஷ்பவல்லி
தீர்த்தம் சக்ர தீர்த்தம்
விமானம் சுத்த ஸத்வ விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் கும்பகோணம்
நாமாவளி ஸ்ரீ பத்மாஸநவல்லீ ஸமேத ஸ்ரீ வையங்காத்த ஸ்வாமிநே நமஹ
——————-
தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே–5-2-1-
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல்
நறும் தண் தீம் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—5-2-2-
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவரூர் போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே –5-2-3-
கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர்
ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
சேறு ஏர் உழவர் கோதைப் போதூண்
கோல் தேன் முரலும் கூடலூரே–5-2-4-
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகளூர் போல்
வண்டல் அலையுள் கெண்டை மிளிரக்
கொண்டல் அதிரும் கூடலூரே —5-2-5-
தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன்
துக்கந்துடைத்த துணைவரூர் போல்
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே –5-2-6-
கரும் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமருமூர் போல்
பெரும் தண் முல்லைப் பிள்ளையோடிக்
குருந்தம் தழுவும் கூடலூரே -5-2-7-
கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்
மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே–5-2-8-
பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே—5-2-9-
காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே–5-2-10-
கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ
ரேற்றா னெந்தை பெருமானூர் போல்
சேற்றே ருழவர் கோதை போதூண்
கோற்றேன் முரலுங் கூடலூரே — பெரிய திருமொழி 5-2-4-
கூடலூர் என்றதுமே அனைவருக்கும் நினைவுரக் கூடியது மதுரையேயாகும். ஆனால் இந்தக்கூடலூர் அதுவன்று.
ஸங்கம ஷேத்ரம் என்று அழைக்கப்படும் இத்திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது.
மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர்.
அதேபோல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து
சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ள ஆடுதுறை என்னும் நகரமன்று.
ஏற்கனவே சொன்னது போல் திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
இந்த எளிய கிராமத்தின் பெயர் ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே வழங்கப்படுகிறது.
திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம் தான் என்று புராணங்கள் பேசுகின்றன.
இதனைத் திருமங்கையின் மேற்படி பாடலும் சான்று காட்டும்.
திருமால் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத் தாங்கி காட்சி தந்தார் என்பர்.
மஹாலெட்சுமியைக் காக்கும் பொருட்டு வராஹ அவதாரமெடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் காட்சி கொடுத்ததாலும்
முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால்
திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைமட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தைப் பாடாது விட்டாரென்றும் ஆன்மீக ஆய்வாளர் கூறுவர்.
அம்பரிஷனுக்கு அருளியதால் அம்பரிஷ வரதரென்றும் —வையங்காத்த பெருமானென்றும் இங்கு பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது.
ஒரு சமயம் பொன்னியில் வெள்ளப்பெருக்கு உண்டாகி அதன் கரையிலிருந்த (காவேரிப் பிரளயம் என்றும் இதனைக் கூறுவர்)
இக்கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து மண்மேடாகிவிட்டது.
மூலவரும் உற்சவரும் தாயாரும், இதர விக்ரஹங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
கோபுரத்தையும், மதில்களையும், இதர விக்ரஹங்களையும் வெள்ளம் இடித்துச் சென்றாலும் மூலவர், உற்சவர், தாயார் மட்டும்
பொன்னியின் போக்கில் சென்று ஒருபுறம் ஒதுங்கி நிற்க, மீன் வேட்டைக்குச் சென்று வந்த பரதவர் வலையில் சிக்கி
அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் சேரியில் அமர்ந்தனர்.
வெள்ளம் வடிந்து வானம் வெறிச்சோடிய சில தினங்களில் மதுரையில் நிலாமுற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் கனவில் மஹாவிஷ்ணு தோன்றி ஆற்றங்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்கு கோவில் கட்டுமாறு கேட்டுக்கொள்ள
தனது தளபதி கிருஷ்ணராஜு நாயக்கருடன் படை பரிவாரத்துடன் தஞ்சைத் தரணி நோக்கிப் புறப்பட்டு
அழிந்த கோவிலைப் பார்வையுறுங்கால், சேரித் தலைவன் மீனவன் ராமன் என்பான் ஓடிவந்து இறைவன் தமது சேரியிலிருப்பதை தெரிவிக்க,
ராஜ மரியாதையுடன் வழிபாடியற்றி அவைகளைப் பெற்றுக் கொள்ள எவ்விடத்தில் கோவில் கட்டுவதென்ற ஐயம் எழ,
சேரிக்கருகாமையில் பேரொளி தோன்றி அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால்
உணர்த்தினான் என்றே நினைத்து அவ்வொளி தோன்றிய இடத்தில் (ஆடுதுறை கிராமத்தில்) ராணி மங்கம்மாவினால் இப்போதுள்ள கோவில் கட்டப்பட்டது
எண்ணற்ற தான தர்மங்களுடன் பெருஞ்சிறப்பான வழிபாடுகள் இக்கோவிலில் நடைபெற்று வந்தன.
சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட உற்சவரும் தாயாரும் மட்டும்தான் இக்கோவிலில் உள்ளனர்.
மூலவர் அருகில் உள்ள வழுத்தூர் என்னுமிடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
மூலவர்-வையங்காத்த பெருமாள் (ஜெகத்ரட்சகன்) உய்யவந்தார் என்னும் திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–பத்மாசனி, புஷ்பவல்லி.
உற்சவர்–மூலவருக்கு உள்ள பெயர்களே
தீர்த்தம்– சக்கர தீர்த்தம், இந்திர தீர்த்தம், காவேரி நதி
விமானம்– சுத்தஸ்தவ விமானம்
காட்சி கண்டவர்கள் – அம்பரிஷி, நந்தக முனிவர், காவேரி
மும்மூர்த்திகளில் திருமாலை, காலால் உதைத்த பிருகு முனிவர் மஹாவிஷ்ணுவே பொறுமையின் சிகரம் என்பதை உணர்ந்து
தாம் செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடும் முகத்தால் மஹாலெட்சுமியே தனக்கு மகளாக வரவேண்டுமென்றும்,
அவரை வளர்த்து தம் பாவம் போக்கி மீண்டும் திருமாலுக்கு அளிக்கவேண்டும் என்று
இத்தலத்தில் தவமிருந்து அது நிறைவேறியதாக ஐதீகம். -இதே கதைதான் கும்பகோணத்திலும்
நந்தக முனிவரோடு தேவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வழிபட்டமையால் இதற்கு கூடலூர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.
ஆஞ்சநேயர் ஒரு சமயம் விண்வெளியில் சென்று கொண்டிருக்கும்போது இக்கோவிலில் இருந்த ஜனத் திரளைக் கண்டு வியந்து,
இது என்னவென்று பார்க்க வந்தவர், தனது தெய்வம் ஸ்ரீராமருக்கே மக்கள் இங்கு வழிபாடு எடுக்கிறார்கள் என்று தாமும் அவர்களோடு கலந்து
ஆனந்தக் கூத்தாடி மூர்ச்சித்துக் கிடக்க, ஒளிமயமாக பெருமாள் ஆஞ்சநேயருக்கு காட்சி கொடுத்தாராம்.
இதன் நினைவாகவே இக்கோவிலின் முன் கூத்தாடும் பாவனையில் ஆஞ்ச நேயருக்கு இன்றும் ஒரு சிறிய கோவில் உள்ளது.
இந்தக் கூடலூர் சோலையில் ஒரு தென்னை மரத்தில் வாழ்ந்து வந்த கிளியொன்று தினமும் ஒரு நாவல் பழத்தைக்
கொண்டு வந்து பெருமானுக்குச் சமர்ப்பித்து விட்டு ஹரி, ஹரி என்றும் கூவும் பழக்கம் கொண்டிருந்தது.
ஒரு நாள் அவ்விதமே நாவல் பழத்துடன் ஹரியின் பூசைக்கு வந்துகொண்டிருக்கும்போது வேடன் ஒருவனால் எய்யப் பட்ட அம்பால்
கழுத்தறுபட்டுத் தரையில் வீழ்ந்து துடிக்க, அதை எடுக்க வந்த வேடன் அக்கிளியைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பதைக் கண்டு பயந்து ஓடிப்போக,
தன் உயிர் பிரியும் தருவாயில் கூட அக்கிளி ஹரி, ஹரி என்றே முனக, இறுதியில்
அக் கிளிக்கு திருமால் காட்சி கொடுத்து நீ முன்பிறவியில் வித்யா கர்வத்துடன் அனைவரையும் இகழ்ந்து பேசவே
இப்பிறவியில் எனது பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே திரியும் கிளியாக ஆனாய்.
வேடனின் அம்பு பட்டதும் நினது பூர்வ ஜென்ம பாபம் தொலைந்தது என்றதும் ஜோதிமயமான மானிட உருப்பெற்று இறைவனுடன் அக்கிளி கலந்த காட்சியை எண்ணற்ற மக்கள் கண்டு ஹரி, ஹரி, ஹரி என்று விண்ணைப் பிளக்க கோஷமிட்டனர் என்று புராணங் கூறும்.
உண்டு கேட்டு உற்று மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே
தொண்டு படலாமோ உன் தொண்டனேன் விண்டு இலங்கும்
ஆடல் ஊர் நேமி முதல் ஐம்படையாய் அன்பு உடையாய்
கூடலூராய் இதனைக் கூறு –25-
விண்டு இலங்கும் -விட்டு விட்டு பிரகாசிக்கும்
ஆடல் ஊர் -வெற்றி பொருந்திய
நேமி முதல் ஐம்படையாய்
அன்பு உடையாய் -உயிர்கள் உடைய நிர்ஹேதுக கிருபையை உடையவனே
கூடலூராய்
உன் தொண்டனேன் -உனக்கு அடியேனான நான் -அவ்வாறு அடிமையாய் இருத்தலை விட்டு
உண்டு கேட்டு உற்று மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே
தொண்டு படலாமோ
இதனைக் கூறு-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -வாஸூதேவஸ் சர்வம் -சர்வ ரச சர்வ கந்த –
தேவர்கள் கூட்டமாக வந்து எம்பெருமானை சேவிக்கும் ஸ்தலம் என்பதால் திருக் கூடலூர் –
————-———————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply