ஸ்தான பிரமாணத்தாலே உகாரம் அவதாரணர்த்தம்
(ஸ்தானம் ஆகிற பிரமாணத்தால் )-சூரணை -58
அநந்தரம் மத்யம அஷரமான உகாரத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக உபக்ரமிக்கிறார் –
அதாவது –
ததேவ பூதம் தாது பவ்யமா இதம் -என்றும்
ததே வாக்விச் ததத் வாயுஸ் தத் ஸூர்யச் தது சந்த்ரமா -என்றும் இத்யாதிகளிலே
ஏவகார ஸ்தானத்திலே உகாரத்தை பிரயோகிக்கக் காண்கையாலே-ஸ்தான பிரமாணத்தாலே
உகாரம் அவதாரணத்தை அர்த்தமாக உடைத்தாய் இருக்கும் என்கை
————————————————————
இத்தால் பிறர்க்கு சேஷம் அன்று என்கிறது-சூரணை -59-
அவதாரணத்துக்கு அர்த்தம் அயோக வியச்சேதம் ஆதல் -அந்ய யோக வியச்சேதம் ஆதல் –
ஆகையாலே இவ் அவதாரணத்தால் சொல்லுகிறது எது ?-என்ன அருளிச் செய்கிறார் –
(ராமன் வில்லலாளியே அயோக விவச்சதேம்
ராமனே வில்லாளி -அந்யோக விவச்சதேம் )
அதாவது
அவதாரண வாசகமான இவ் உகாரத்தால் கீழ் ஈஸ்வர சேஷமாக சொன்ன இவ் ஆத்மா வஸ்து –
அந்யருக்கு சேஷம் அன்று என்னும் இடத்தை சொல்லுகிறது -என்கை
சதுர்த்தியாலே ஈஸ்வர சேஷத்வம் பிரதிபாதிதமாகச் செய்தே -அந்ய சேஷத்வம் ப்ரஸ்துதம் ஆமோ ?-என்னில்
லோகத்தில் ஒருவனுக்கு சேஷமான க்ருக ஷேத்திர புத்ர தாஸாதிகள்-வேறே சிலருக்கும் சேஷமாய் இருக்கக் காண்கையாலே –
அப்படிப்பட்ட அந்ய சேஷத்வம் இந்த ஸ்தலத்திலும் உண்டோ ?-என்ற சங்கை உதிக்கும் இறே-
ஆகையால் தாத்ருசமான அந்ய சேஷத்வம் இங்கு இல்லை என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது -உகாரம்
(யோகமாவது– ஸம்பந்தம்
அயோகமாவது –ஸம்பந்த அபாவம்
வியவச்சேதமாவது –போக்குமை
அந்ய யோகமாவது –அந்நியரோடு உண்டான ஸம்பந்தம்
வியவச்சேதமாவது–இல்லை என்கை
ஏவஞ்ச
அயோக வியச்சேதம் ஆவது -ஸம்பந்தம் உண்டு என்கை
அந்ய யோக வியச்சேதம் ஆவது –அந்நியரோடு ஸம்பந்தம் இல்லை என்கை)
(கீழ் –அகாரத்திலே
ஈஸ்வர சேஷமாக சொன்ன இவ் ஆத்மா வஸ்து –அந்யருக்கு சேஷம் அன்று -அக்னி இந்த்ராதி தேவர்களுக்கு
சதுர்த்தியாலே ஈஸ்வர சேஷத்வம் பிரதிபாதிதமாகச் செய்தே -அகாரத்திலே தாதார்த்யே வந்த லுப்த சதுர்த்தியாலே நிருபாதிகமான ஈஸ்வர சேஷத்வம் பிரதிபாதிதமாகச் செய்தே
அந்ய சேஷத்வம்–நிருபாதிகமான அந்நிய சேஷத்வம் சேஷமான -ஓவ்பாதிக சேஷமான
சேஷமாய் இருக்கக் –உபாதி வஸாத் சேஷமாய் இருக்கை
அப்படிப்பட்ட அந்ய சேஷத்வம் –ஸோபாதிக அந்நிய சேஷத்வம் போல் அன்ரிக்கே நிருபாதிக அந்நிய சேஷத்வம்
இந்த ஸ்தலத்திலும் –தாதார்த்ய சதுர்த்தியிலும்
ஆகையால் –ஸோ பாதிகமான அந்நிய சேஷத்வம் போல் நிருபாதிகமான அந்நிய சேஷத்வம் உண்டோ என்கிற சங்கை உதிக்கையாலே
தாத்ருசமான அந்ய சேஷத்வம் –அப்படிப்பட்ட சங்கா விஷயமான அந்நிய சேஷத்வம்
இங்கு இல்லை என்னும் இடத்தை பிரதிபாதிக்கிறது -உகாரம்-இந்த சதுர்த்தியிலே)
—————————————-
பெரிய பிராட்டியாருக்கு சேஷம் என்கிறது என்றும் சொல்வார்கள் –சூரணை -60
அங்கன் இன்றிக்கே இவ் உகாரத்தாலே -லஷ்மி சேஷத்வம் சொல்லுகிறது என்பாரும் உண்டு என்கிறார் –
அதாவது
அகாரச் சித் ஸ்வரூபஸ்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே
உகாரச் சித் ஸ்வரூபயா- ஸ்ரீ யோ வாசி ததா விது
மகாரஸ்து தயோர்தாஸ
இதி பிரணவ லஷணம் -என்றும்
(அகாரமானது சித் ஸ்வரூபனான விஷ்ணுவுக்கு வாசகமாக இச்சிக்கப் படா நின்றது
உகாரத்தை சித் ஸ்வரூபையான ஸ்ரீ க்கு வாசகமாக அறியா நின்றார்கள்
மகாரம் அவர்களுக்கு தாஸனான ஆத்மாவாகச் சொல்லப்படுகிறது
இது ப்ரணவத்த்துக்கு லக்ஷணம்)
அகாரேனோ ஸ்யதே விஷ்ணுஸ் சர்வ லோகேஸ்வரோ ஹரி
உத்த்ருதா விஷ்ணுனா லஷ்மீ ருகாரேநோஸ்யதே சதா
மகாரஸ்து தயோர் விபர ஸ்ரீ நாராயண யோஸ் சதா ஆத்மனஸ் சேஷ பூதஸ்ய வாசக ஸ்ருதி சோதித-என்றும்
இத்யாதிகளாலே பகவத் சாஸ்த்ரத்திலே-ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனங்கள்
(ஸர்வ லோகத்துக்கும் ஈஸ்வரனாய் வியாபகனான ஹரியானவன் அகாரத்தாலே சொல்லப்படா நின்றான்
அந்த விஷ்ணுவாலே எப்போதும் திரு மார்பிலே தரிக்கப் பட்டு இருக்கிற லஷ்மியானவள் உகாரத்தாலே சொல்லப்படுகிறாள்
மகாரமானது அந்த ஸ்ரீ நாராயண மிதுனத்துக்கு எப்போதும் சேஷ பூதனான ஆத்மாவுக்கு வாசகமாக ஸ்ருதியிலே சொல்லப்பட்டது)
அகாரத்தை பகவத் வாசகமாகவும்
உகாரத்தை லஷ்மி வாசகமாகவும்
மகாரத்தை தத் உபய பூத சேஷ பூத ஜீவ வாசகமாகவும்- சொல்லுகையாலே
உகாரத்தை அவதாரண வாசகமாகக் கொள்ளாதே -லஷ்மி வாசகமாகக் கொண்டு
இவ் உகாரத்தாலே பெரிய பிராட்டிமாருக்கு சேஷம் என்கிறது என்றும் நிர்வஹிப்பர்கள் என்கை –
(அக்ரத –இத்யாதி –முன்னே பெருமாள் எழுந்து அருளினார் -ஸூ மத்யமையான பிராட்டி நடுவே எழுந்து அருளினாள்
பின்னே கையும் வில்லுமாகக் கொண்டு இளையபெருமாள் எழுந்து அருளினார்
இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் -பிரணவம் கால் கொண்டு நடந்தால் போல் இருக்கிறது என்று
பூர்வாச்சார்யரான சோமாசி யாண்டான் நிர்வாகமாக அருளிச் செய்வார்கள்)
————————————————-
அதிலும் அந்ய சேஷம் கழிகையே பிரதானம் –சூரணை-61-
அத்தை பற்றவே பூர்வ யோஜனையே முக்கியம் என்னும் அத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
பெரிய பிராட்டியாருக்கு சேஷம் ஆகை ஆகிற அதிலும் காட்டிலும் கீழ் சொன்ன
பகவத் சேஷத்வத்துக்கு விரோதியான அந்ய சேஷத்வம் கழிகையே பிரதான அபேஷிதம் என்கை
————————————————–
தேவர்களுக்கு சேஷமான ப்ரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே -ஈஸ்வர சேஷமான
ஆத்ம வஸ்துவை சம்சாரிகளுக்கு சேஷம் ஆக்குகை-சூரணை -62
அந்ய சேஷத்வம் இப்படி க்ரூரமோ என்ன க்ரௌர்யத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆராத்யரான இந்த்ராதி தேவர்களுக்கு யோக்யதா சேஷமாக கல்பிதமான ப்ரோடாசத்தை
தர்சன ஸ்பர்சநாதிகளுக்கு அநர்ஹகாம் படி நிஹீனமாய் இருக்கிற நாய்க்கு இடுமா போலே இருப்பதொன்று –
ப்ராப்த சேஷியான ஈஸ்வரனுக்கு சேஷமான ஆத்ம வஸ்துவை சர்வ பிரகாரத்தாலும் ஹேயமான
சம்சாரிகளுக்கு சேஷம் ஆக்குகை என்கை –
(சம்சாரிகளுக்கு–ஸர்வ பிரகாரத்தாலும் ஹெயமான இந்திராதி தேவர்களுக்கு -சர்வ பிரகாரத்தாலும் –ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களாலும்)
—————————————————
பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே பிரதானம் –சூரணை -63-
இப்படி குரூரமான அந்ய சேஷத்வம் கழிகையே ஆத்மாவுக்கு பிரதான அபேஷிதம் -என்று
கீழ் சொன்ன அர்த்தத்தை ஸ்த்ரீ கரிக்கிறார் –
அதாவது –
லஷ்மி சேஷத்வத்திலும் காட்டிலும் பிரதானம் என்ற அளவே அன்று –
பகவான் தனக்கு சேஷமாய் இருக்கும் அதிலும் காட்டிலும் அந்ய சேஷத்வம் கழிகையே
ஆத்மாவுக்கு பிரதான அபேஷிதம் என்கை-
————————————————————–
மறந்தும் புறம் தொழா மாந்தர் என்கையாலே –சூரணை-64-
இதுக்கு பிரமாணம் காட்டுகிறார் –
அதாவது
யம கிங்கரர் சம்வாதத்தை திரு மழிசைப் பிரான் அருளி செய்த –
திறம்பேன்மின் கண்டீர் -என்கிற பாட்டிலே பாகவத லஷணம் சொல்லும் அளவில் –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் -என்று
ஸவாமி உடைய திரு நாமத்தை மறந்தார்கள் ஆகிலும் மற்று ஒரு விஷயத்தில்
சேஷ வ்ருத்தி பண்ணாதவர்கள் என்று சொல்லுகையாலே என்கை –
(திருவடி தன் நாமம் மறந்து-என்றது திருமந்திரத்தை மறந்தும் என்றதாய் பகவத் சேஷத்வ ஞானம் இல்லாவிடில் என்றபடி -)
(திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை –இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-)
—————————————–
இத்தால் தனக்கும் பிறர்க்கும் உரித்தன்று என்கிறது-சூரணை -65
ஈஸ்வர சேஷமான ஆத்மா வஸ்துவுக்கு ஸ்வ சேஷத்வ பர சேஷத்வங்கள் இரண்டும்
அந்ய சேஷத்வம் ஆகையாலே -உபயததையும் இவ் உகாரம் கழிக்கின்றது என்று சொல்லி நிகமிக்கிறார்
அதாவது
அந்ய சேஷத்வ நிவர்தகமான இவ் உகாரத்தாலே -அந்யரில் அந்ய தமத்வம் அவிசிஷ்டமாகையாலே
இவ் ஆத்மா வஸ்து தனக்கு உரித்த தன்று –
தன்னை ஒழிந்த சம்சாரிகளுக்கும் உரித்த தன்று என்னும் இடம் சொல்லுகிறது -என்கை-
(அந்ய தரம் -இருவரைச் சொல்லும் பொழுது அந்ய தமம்-பலரைச் சொல்லும் பொழுது )
(உபயததையும்-ஸ்வ சேஷத்வ பர சேஷத்வம் இரண்டையும்
அந்யரில் அந்ய தமத்வம் அவிசிஷ்டமாகையாலே-பகவத் அந்நியரில் ஒருவனாய் இருக்கை தனக்கு சமானமாகையாலே
உரித்த தன்று –-சேஷமாய் இருக்கை யோக்யமன்று
அந்நிய சேஷத்வ நிவர்த்தகமான இவ்வுகாரத்தாலே
தனக்கும் -அந்நியரில் அந்நிய தமனான தனக்கும்
பிறருக்கும் -தன்னை ஒழிந்த சம்சாரிகளுக்கும்
சேஷம் அன்று என்னும் இடம் சொல்கிறது)
———————————————————–
மகாரம் இருப்பத்தஞ்சாம் அஷரமாய்-ஞான வாசியுமாய் -இருக்கையாலே ஆத்மாவைச் சொல்லுகிறது –சூரணை -66-
ஆக உகார அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
அநந்தரம் த்ருதிய அஷரமான மகார அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
அதாவது
பூதானி ச கவர்க்கேன சவர்க்கேன இந்த்ரியாணி ச டவர்க்கேன தவர்கென
ஞான கந்தா தயச்தாதா மன பகாரேனை வோக்தும் பகாரேன த்வஹன்க்ருதி
பகாரேன பகாரேன மகான் பிரகிருதி உச்யதே ஆத்மாது ச மகாரேன பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித -என்கிறபடியே
(இந்த்ரியாணி-கர்ம இந்திரியங்கள் -ஞான -ஞான இந்திரியங்கள் -)
ப்ருதிவ்யாதி பிரகிருதி அந்தமான இருபத்து நாலு தத்துவத்துக்கும் வாசகமாய் இருந்துள்ள –
ககாராதி பகாரந்தமான இருபத்து நாலு அஷரமும் போல் அன்றிக்கே –
மகாரம்
இருபத்தஞ்சாம் அஷரமாய்
மன ஞானே -என்கிற தாதுவிலே ஆதல்
மனு அப போதனே என்கிற தாதுவிலே ஆதல்
நிஷ்பன்னம் ஆகையாலே
ஞான வாசியுமாய் இருக்கையாலே
பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மாபவதி -என்கிறபடியே
பஞ்ச விம்சகனாய் –
விஞ்ஞானாத்மா புருஷ விஞ்ஞா தாரமரே கேன விஜாநீயாத் -என்கிறபடியே
ஞான ஸ்வரூபனாய்-ஞான குண கணுமாய் இருக்கிற ஆத்மாவைச் சொல்லுகிறது -என்கை-
———————————————————–
இது தான் சமஷ்டி வாசகம்–சூரணை -67
கீழ் சொன்ன சேஷத்வம் சர்வ சாதாரணம் ஆகையாலே த்ரிவித ஆத்ம வர்க்கத்தையும்
இதிலே சொல்ல வேண்டும் ஆகையாலே அருளிச் செய்கிறார் –
அதாவது
இப்படி ஆத்ம வாசகமான இம் மகாரம் தான் ஆத்ம சமஷ்டிக்கு வாசகம் என்கை-
(சர்வ சாதாரணம் ஆகையாலே -என்றது ஸர்வாத்ம சாதாரணம் ஆகையாலே)
(இப்படி என்றது -பகவத் அநந்யார்ஹ சேஷத்வேநவும் –பஞ்ச விம்சத்வேநவும் –ஞான ஆனந்த ஸ்வரூபத்வேநவும் –ஞான ஆனந்த குணகத்வேநவும் -என்றபடி)
——————————————————–
ஜாத் ஏக வசனம்–சூரணை -68
ஏக வசனம் சமஷ்டி வாசகமோ என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –
அதாவது –
வ்ரீஹி சமூகத்தை சொல்லுகிறவன் இது ஒரு நெல் என்றால் –
அந்த ஏக வசனம் ஜாதி பரமாப் போலே
இதுவும் ஆத்ம ஜாதி பரமான ஏக வசனம் என்கை –
(சமஷ்டி வாசகம் என்றது ஆத்ம ஸமூஹ வாசகம்)
—————————-
இத்தால் ஆத்மா ஞாதா என்று தேஹத்தில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று–சூரணை -69
இம் மகாரத்தால் ஆத்மாவினுடைய எவ் வாகாரம் சொல்லுகிறது என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
பஞ்ச விம்ச அஷரமாய் -ஞான வாசியுமாய் இருந்துள்ள இம் மகாரத்தால் –
சேஷத்வ ஆஸ்ரயமான ஆத்மா ஞான ஆஸ்ர்ய பூதன் ஆவான் என்று
அசேதனமான தேஹத்தில் காட்டில்
ஆத்மாவின் வியாவ்ருத்தி சொல்லிற்று ஆயிற்று -என்கை-
(சித்துக்கும் அசித்துக்கும் சேஷத்வம் பொது தானே –
ஞாத்ருத்வமே ஆத்மாவுக்கு சரீரத்தில் வாசி என்றவாறு)
—————————————————
தேஹத்தில் வியாவ்ருத்தி தத்வ சேகரத்தில் சொன்னோம்–சூரணை -70-
தேவோஹம் மனுஷ்யோஹம் ஸ்தூலோஹம் க்ருசோஹம்-என்று
தேஹத்தில் அஹம் புத்தி வியவஹாரங்கள் நடவா நிற்க –
அஹம் அர்த்த பூதனான ஆத்மா
தேஹத்தில் வியாவ்ருத்தன் என்று சொல்லுகிறபடி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –
அதாவது –
அநேக ஹேதுக்களாலே தேஹத்தின் உடைய அநாத்மவத்தை சாதியா நின்று கொண்டு
ஆத்மாவின் உடைய தத் வியாவ்ருத்தியை
தத்வ சேகரம் ஆகிற பிரபந்தத்திலே வியக்தமாய் சொன்னோம் –
அதிலே கண்டு கொள்க என்கை-
—————————————
மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே
சேஷம் என்று ஆத்மாவை ஆதரிக்கிறது –
அல்லாத போது -உயிரினால் குறைவிலம் -என்கிறபடியே த்யாஜ்யம் –
அது தோன்ற சேஷத்வத்தைச் சொல்லி பின்னை ஆத்மாவைச் சொல்லுகிறது–சூரணை -71
தர்மி ஸ்வரூப கதன பூர்வகமாக தத் தர்மமான சேஷத்வத்தை சொல்லுகை ப்ராப்தமாய் இருக்க –
இப் பிரணவம் தன்னிலே ப்ரதமம் சேஷத்வத்தை சொல்லி
பின்னை ஆத்மாவை சொல்லுவான் என் -என்கிற சங்கையிலே
அப்படி சொல்லுகைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
அதாவது
மணத்துக்கு ஆஸ்ரயம் என்று பூவை விரும்புமா போலேயும் –
ஒளிக்கு ஆஸ்ரயம் என்று ரத்னத்தை விரும்புமா போலேயும் –
சேஷத்வதுக்கு ஆஸ்ரயம் என்று ஆயிற்று ஆத்மாவை ஆதரிக்கிறது –
சேஷத்வம் ஆஸ்ரயம் அல்லாத போது -உயிரினால் குறைவிலம் –திருவாய் மொழி -4-8-10-என்று
பகவத் சேஷத்வ ரஹிதமான ஆத்மாவால் அபேஷை உடையோம் அல்லோம் என்கிறபடியே –
த்யாஜ்யனாய் விடும் அத்தனை –
இப்படி இருந்துள்ள சேஷத்வத்தின் ஊற்றம் தோன்ற -சேஷத்வத்தை முந்துற சொல்லி
பின்னை ஆத்மாவை சொல்லிற்று என்கை-
(உடம்பினால் குறைவில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்துகந்த
தடம் புனல சடை முடியன் தனியொரு கூறமர்ந்து றையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே –4-8-10-)
(உயிரினால் குறைவிலமே –இந்த ஆத்மா தொலைந்து போகட்டும் என்றபடி–நித்ய வஸ்து தானே
எம்பெருமான் உடைய விருப்பத்துக்கு உடலாவதே ஆத்மாவின் ஸ்வரூபம் என்று கூட்டின படி –
சேஷத்வ பஹிர்ப்பூத ஜ்ஞானந்த மயனையும் சஹியாதார் த்யாஜ்ய உபாதியை ஆதரியார்களே -நாயனார்)
———————————————-
ஆக
பிரணவத்தால்- கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ -பெரிய திரு மொழி -8-9-3-
என்கிறபடி ஜீவ பர சம்பந்தம் சொல்லிற்று –சூரணை-72-
பத த்ரயாத்மகமான இப் பிரணவத்தால் சொல்லித் தலைக் கட்டின அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
கீழ் சொன்ன எல்லா வற்றிலும் -பிரணவத்தால் –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு –என்று சதுர்த்தி அந்தமான அகாரத்தையும்
அடியேன் -என்று சேஷத்வ ஆஸ்ரய வாசியான மகாரத்தில் அர்த்தத்தையும் –
ஒருவருக்கு உரியேனோ-என்று அந்ய சேஷத்வ நிவர்தகமான உகாரத்த அர்த்தத்தையும்
சொல்லா நின்று கொண்டு
பிரணவ அர்த்தத்தை அனுசந்தித்த திரு மங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திப் படியே –
ஜீவ பரர்களுக்கு உண்டான சேஷ சேஷி பாவ சம்பந்தத்தைச் சொல்லிற்று என்கை-
(விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-)
———————————–
இத்தால் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றது ஆயிற்று –சூரணை -73-
இன்னமும் பொய்கையார் உடைய ஸ்ரீ ஸூக்தி யாலே-(67-) சேஷத்வ பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும்
இடம் தோற்ற இந்த ஜீவ பர சம்பந்தத்தை அருளிச் செய்கிறார் இத்தால் –
அதாவது –
இப் பிரணவத்தால்
தாமரையாள் கேள்வன் -என்று அகார வாச்யனாய் -சேஷத்வ பிரதி சம்பந்தியான ஸ்ரீ யபதியையும் –
ஒருவனையே நோக்கும் -என்று சதுர்த்தி உகாகரங்களால் சொல்லுகிற அனந்யார்ஹ சேஷத்வ
பிரயுக்தமான ஆத்மாவினுடைய ததேக பரததையும் –
உணர்வு -என்று அந்த சேஷத்வ ஆஸ்ரயமாக மகாரத்தில் சொல்லப்பட்ட
ஞானைக நிரூபணியனான-ஆத்மாவையும் சொல்லுகிற ஸூக்தியில் படியே
ஜீவ பர சம்பந்தம் சொல்லிற்று ஆயிற்று -என்கை –
(பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு —67-)
—————————————–
அகாரத்தாலும் மகாரத்தாலும் -ரஷகனையும் ரஷ்யத்தையும் சொல்லிற்று –
சதுர்த்தியாலும் உகாரத்தாலும் -ரஷண ஹேதுவான ப்ராப்தியையும் பலத்தையும் சொல்லிற்று –சூரணை -74-
அகாரத்தில் ப்ரர்த்யயார்த்த பிரதானமாக பிரணவ அர்த்தத்தை யோஜித்தார் கீழ் –
அதில் தாத்வர்த்த பிரதானமாக ப்ரணவதுக்கு இன்னமும் ஒரு யோஜனை அருளிச் செய்கிறார் –
அதாவது
அகாரத்தாலே ரஷகனான ஈஸ்வரனைச் சொல்லிற்று –
மகாரத்தாலே தத் ரஷ்யமான ஆத்மா வஸ்துவைச் சொல்லிற்று –
சதுர்த்தியாலே ரஷிக்கைக்கு ஹேதுவான சேஷத்வம் ஆகிற ப்ராப்தியைச் சொல்லிற்று –
இப்படி ரஷிக்கிறதுக்கு பலம் – இவ் ஆத்மா வஸ்து அத் தலைக்கு அனந்யார்ஹமாக விநியோகப் படுகையாலே
அனந்யார்ஹ சேஷ வாசியான உகாரத்தாலே -ரஷண பலத்தைச் சொல்லிற்று என்கை –
—————————————-
இனி மேல் பிரணவத்தை விவரிக்கிறது –சூரணை -75-
ஆக இம்மந்த்ரத்தில் பிரதம பதமான பிரணவ அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –
இனி மேலில் பதங்களுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக மந்திர சேஷமும் இதுக்கு விவரணமாய்
இருக்கும் படியை முந்துற அருளி செய்கிறார் –
இவ் இடத்தில் விவரணம் ஆகிறது –
ப்ரஸ்துதமான அர்த்தத்துக்கு உபயுக்தமான அர்த்தத்தைச் சொல்லிக் கொண்டு -பூர்வோக்தமான அர்த்தத்தை
விசதீகரிக்கை என்று தீப பிரகாசத்திலும் –
உக்த்தார்தத விசதீகார யுக்த்தார்த்தாந்தர போதனம் மதம் விவரணம்
தத்ர மஹிதானாம் மநீஷிணாம்-என்று
ரஹஸ்ய த்ரயார்த்த விவரண க்ரமம் அருளிச் செய்த பிரபந்த்தத்திலும்
விவரண லஷணத்தை (வாதி கேசரி மணவாள )ஜீயர் அருளி செய்தார் இறே-
————————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply