ஸ்ரீ மா முனிகள் ரஹஸ்ய அர்த்த ஸம்ப்ரதாய பரம்பரைக்கு அருளிச் செய்த தனியன்
தாயம்
ப்ரதாயம்
ஸம் ப்ரதாயம்
ஸூத்த ஸத்வ சம்ப்ரதாயம் அன்றோ இது
லோக குருஸ் குருபிஸ் ஸஹ பூர்வைஸ் கூர குலோத்தம தாஸம் உதாரம்
ஸ்ரீ நக பதயபி ராமவரே ஸு தீப்ரஸயாந குருஸ் சபேஜஹம் –
——
ஸ்ரீ ஈயுண்ணி பத்ம நாபர் அருளிச் செய்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் விஷயமான தனியன்
லோகாச்சார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம
——–
பூர்வ உக்த குரு பரம்பரைக்கு ப்ரத்யேக தனியன்கள்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ கூர குலோத்தம தாசர் விஷயமான தனியன்
லோகாச்சார்ய கிருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
ஸமஸ்த ஆத்ம குண வாஸஸ் வந்தே கூர குலோத்தமம்
—-
ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை விஷயமான தனியன்
நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே
——–
ஸ்ரீ மா முனிகளுக்கு மாதா மஹாரான ஸ்ரீ கோட்டூர் அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை தனியன்
லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்ஸாயி தாந்தரம்
ஞான வைராக்ய ஜலதி வந்தே ஸும்ய வர குரும்
———-
ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையன் விஷயமான தனியன்
ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ ஸாஸ்த்ர விதம்
ஸூந்தர வர குரு கருணா கந்தளிதா ஞான மந்த்ரம் கலயே –
————-
ஸ்ரீ வானமாலை ஜீயர் அருளிச் செய்த தனியன் –
கோதில் உலகாசரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திருமலை ஆழ்வார் செழும் குரவை மணவாளர்
ஒதரிய புகழ் திரு நாவீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள மா முனிவன் பொன்னடிகள் போற்றுவனே –
வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு
ஒது முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —
முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்
————–
(ஸ்ரீயப்பதியான தனக்கு லோக ரக்ஷணத்தில் உண்டான மஹா ஆர்த்தி தீர்ந்து திருப்தி பெறுகைக்காக
அவதரிப்பித்து அருள திரு அவதரித்தவராய் -திரு அனந்தாழ்வானுடைய திரு அவதார விசேஷமான
அழகிய ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று
பிரகாசிப்பித்து அருளின ரஹஸ்ய த்ரயத்தினுடைய சம்பிரதாய ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் தம்முடைய பரம கிருபையாலே செய்து அருளின
ஸ்ரீ முமுஷுப்படி என்னும் கிரந்தத்தின் வாக்ய அர்த்தங்களை அத்யந்தம் மந்த மத்தியிலும் அநாயாசேன அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி பஞ்ச லக்ஷண லஷிதமான வியாக்யானம் செய்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
முமுஷுப்படிக்கு மூலமான ரஹஸ்யத் த்ரயத்தினுடைய அவதாரண க்ரமத்தை
உபோத்காத சங்கதியாக முந்துற இந்த ஸூர்ணையாலே அருளிச் செய்கிறார் )
——–
ஸ்ரீ யபதியாய்–ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அனுபாவ்யனாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன் —
—
(ஸ்ரீ யபதியாகை யாவது -ஸர்வ மங்களாவஹையாய் -ஸர்வ உத்கர்ஷாவஹையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் இருக்கை
ஸ்ரீ வைகுண்ட நிகேதனாகை யாவது -ஸ்ரீயப்பதித்வத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தையும் நகர விசேஷத்தையும் இருப்பிடமாக உடையனாய் இருக்கை
நித்ய முக்த அனுபாவ்யனாகை யாவது -அபரிச்சின்ன ஞானாதி குணகரான நித்ய முக்தராலும் ஸதா பஸ்யந்திப்படியே அனுபாவ்யனாய் இருக்கை
நிரதிசய ஆனந்த யுக்தனாகை யாவது -ஆனந்த வல்லியில் சொல்லுகிறபடியே நிரதிசய ஆனந்த குண யுக்தனாய் இருக்கை
சர்வேஸ்வரன் -ஆகையாவது -த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் ஈஸ்வரனாய் இருக்கை )
——–
அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய்
வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் –அத்தை இழந்து –அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து -அத்யந்த வியாகுல சித்தனாய் –
———-
(அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவிக்கை யாவது -அவர்கள் ஸதா பஸ்யந்தி ப்படியே அனுபவிக்கிறாப்போலே
பகவத் கடாக்ஷத்தாலே ஸம்ஸாரம் கழிந்து முக்தராய் -அபரிச்சின்ன ஞானாதி குணகராய் அனுபவிக்கை
தன்னை -ஸர்வ சேஷியான தன்னை
கைங்கர்யமாவது -பகவன் முக விலாஸ ஹேதுவான வ்ருத்தி விசேஷம்
நித்ய கைங்கர்ய ரசராய்-என்றது -அனுபவ ஜெனித ப்ரீதி காரித நித்ய கைங்கர்யத்தில் ப்ரீதி உடையவர்களாய் என்றபடி
வாழுகையாவது -ஸ்வாமி ஸந்நிதியிலேயே ஸூகமாக வர்த்திக்கை
பிராப்தி யாவது -சேஷ சேஷி பாவ சம்பந்தம்
அத்தை இழந்து என்றது -அந்த சேஷ சேஷி பாவ ஞானத்தை இழந்தது என்றபடி
அசந்நேவ-என்கிறபடியே-என்றது -அசந்நேவ-என்ற ஸ்ருதி அர்த்தத்தின் படியே என்றபடி
அசத் கல்பராய் கிடக்கிற என்றது -அஸத் ஸப்த வாஸ்ய மானத்தோடு கிஞ்சித் ந்யூனமாக ஸத்ருசராய் இருக்கிற என்றபடி
சம்சார சேதனர் உடைய இழவை -என்றது அநாதி அசித் சம்பந்தத்தாலே ப்ரவாஹ ரூபேண வருகிற
அவித்யா கர்ம வாஸனா ருசி விவசராய் ஜென்ம மரணாதி கிலேச பாகிகளாய்த் திரிகிற பத்த சேதனருடைய இழவை என்றபடி
அனுசந்திக்கை யாவது -இடைவிடாமல் எண்ணுகை
அத்யந்த வியாகுல சித்தனாய் -அந்தம் இல்லாத வ்யாகுல ஹ்ருதனாய் -என்றபடி )
———
இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே –
கரணாதிகளைக் கொடுத்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகைக்கு உடலாக –
——-
(இவர்கள் -கீழ்ச் சொன்ன ஸம்ஸாரி சேதனர்
கரணம் -ஸ்ரோத்ரம் முதலான கரணங்கள்
களேபரங்கள் -கரணங்களுக்கு ஆஸ்ரயமான சரீரங்கள்
இறகு ஒடிந்த பஷி போலே–விஷ்ணு பத ப்ராப்தி ஸாதனங்களான இறகுகள் ஒடிந்த பக்ஷி போலே என்றபடி
கிடக்கிற தசையிலே -மூல ப்ரகாராதிகளிலே கிடக்கிற தசையில்
கரணாதிகளைக் கொடுத்து -பகவத் ப்ராப்தி உபகரணங்களான காத்ரங்களைச் சொல்கிறது
அவற்றைக் கொண்டு -தன்னை ஆஸ்ரயிக்கைக்குக் கொடுத்த அந்தக் கரணாதிகளைக் கொண்டு
வியபிசரியாதே -அந்தக் கரணாதிகளைக் கொண்டு அந்யத்ர ஸஞ்சரியாதே
தன்னை ஆஸ்ரயித்து -அவற்றைக் கொண்டு தன்னை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிகைக்கு உடலாக -உத்க்ருஷ்டமாக ஜீவிக்கைக்கு உபாயமாக )
——–
அபுருஷேயமாய்-நித்ய நிர் தோஷமாய் -ஸ்வத பிரமாணமான வேதத்தையும் -தத் உப ப்ரும்ஹணங்களான
ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும் ப்ரவர்ப்பித்த இடத்திலும் –
——–
(அபுருஷேயமாய்-புருஷனால் செய்யப்படாதது
நித்ய நிர் தோஷமாய் -நித்யமாயும் நிர்தோஷமாயும்
ஸ்வத பிரமாணமான -ஸாஸ்த்ரங்களிலே சொல்லுகிற அர்த்தங்களுக்குப் பிரமாணமாகத் தன்னை அபேக்ஷிக்குமா போலே
தன்னில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு ப்ரமாணமாகத் தான் ஒன்றுமே அபேஷியாமல் தனக்குத் தானே ப்ரமாணமாய் இருக்கை
வேதத்தையும் -புபுதஸூ க்களாய் ஆஸ்திகராய் இருப்பவருக்கு ஸ்வ அர்த்த ப்ரகாசமாய் இருக்கையாலே வேதம் என்கிறது
தத் உப ப்ரும்ஹணங்களான-அந்த வேதார்த்த வ்யக்தீ கரணங்களான
ஸ்ம்ருதி -மன்வாதி ஸ்ம்ருதிகள்
இதிகாச -மஹாபாரத ராமாயணங்கள்
புராணங்களையும் -விஷ்ணு புராணாதிகள்
ப்ரவர்ப்பித்த இடத்திலும் -மந்த மதிகளாலே வேதார்த்தம் அறுதி இடப் போகாது என்று மஹா மதிகளான
பராசர பாராசார்ய வால்மீகி ப்ரப்ருதி மஹரிஷிகளைக் கொண்டு ப்ரவர்த்திப்பித்த இடத்திலும் -_
——-
அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே –
அவ்வழியாலே ஞானம் பிறந்து சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரகமாக இவர்கள் அறியலாம் படி பண்ண வேண்டும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான
ரகஸ்ய த்ரயத்தையும் ஸ்வயமேவ ஆசார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினான்-
——–
(அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு -ஸ உப ப்ரஹ்மணமான அந்த வேத ஸாஸ்த்ர அப்யாசத்துக்கு
அநேக யோக்யதை வேண்டுகையாலே -நியமம் பஹு வேதந சாமர்த்தியம் தீர்க்க ஆயுஷ்யம் முதலான அநேக யோக்யதை அவஸ்ய அபேக்ஷிதம் ஆகையாலே
அவ்வழியாலே -அநேக யோக்யதா சா பேஷமான அந்த மார்க்கத்தாலே
ஞானம் பிறந்து -ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய ஞானம் பிறந்து
சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி -உஜ்ஜீவிக்கை துர்லபமாய் இருக்கும் பிரகாரத்தைத் திரு உள்ளத்திலே விசாரித்து
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் -ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி ஸகல ஸாஸ்த்ர தாத்பர்யங்களையும்
ஸூக்ரகமாக -அநாயாசமாக
இவர்கள் -பரிமித கால வர்த்திகளாய் -அல்பஞ்ஞராய் அல்ப ஸக்தர்களாய் இருக்கிற ஸம்ஸார சேதனர்கள்
அறியலாம் படி பண்ண வேண்டும் என்று -அறியும்படியாக
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான ரகஸ்ய த்ரயத்தையும் -இவற்றினுடைய யதாவஸ்தித வேஷத்தைப் ப்ரதிபாதியா நிற்கிற
ஸ்வயமேவ –ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளைப் போலே அந்யரை இட்டுப் ப்ரவர்த்திப்பியாதே ஸ்வயமேவ என்றபடி
ஆசார்யனாய் நின்று -ஆச்சார்ய ரூபேண அவதரித்து
பிரகாசிப்பித்து அருளினான்– ஸர்வ ஸ்லாக்யமாகப் பண்ணினான் )
——–
அதில்
திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் ஸ்வ அம்ச பூதனான ஸ்ரீ நரன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்திலே ஸ்வ மகிஷியான ஸ்ரீ பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான் –
சரம ஸ்லோகத்தை திருத் தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரீதனான ஸ்ரீ அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இறே
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் என்று குரு பரம்பராதியிலே ஸ்ரீ ஈஸ்வரனை அனுசந்திக்கிறது –
(அதில்-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்
ஸ்வ மகிஷி-என்றது பிராட்டிமாரில் பிரதானை என்றபடி –
த்வயம் என்கிறது இரண்டு வாக்யமாய் இருக்கையாலே
சரம ஸ்லோகம் என்கிறது சரமமான ஸ்லோகம் என்று அன்று -சரமமான உபாயத்தை ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகம் என்கிறது
ஆகையால் -ஸர்வேஸ்வரன் ஸ்வயமேவ ஆச்சார்யனாய் நின்று ரஹஸ்ய த்ரயத்தையும்
தத் தத் விஷயங்களில் பிரகாசிப்பித்து அருளினான் என்கையாலே இறே -இவ்வர்த்தம் பிரசித்தம் அன்றோ என்றபடி )
(இவ்வளவாய் ரஹஸ்ய த்ரயத்தினுடைய அவதரண கிரமத்தை அருளிச் செய்து
இனி தாம் வியாக்யானம் செய்து அருளும் முமுஷுப்படி கிரந்த அவதரண கிராமத்தை அருளிச் செய்கிறார் )
இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் –
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் –
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வருக்கும் ஸூக்ரமாகவும் ஸூவ்யக்தமாகவும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –
தம்முடைய பரம கிருபையாலே -இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –
——–
(இனி -இப்போது என்றபடி
இந்த ரகஸ்ய த்ரயம் தான் -ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினை ரஹஸ்யத் த்ரயம் தான்
சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் -ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் போலே க்ரஹண தாரணாதிகளுக்கு வருத்தமாம் படி பல ஸப்தங்களாய் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தும்
இருபத்தைந்து எழுத்தும்
முப்பத்து இரண்டு எழுத்துமாக
அநாயாசேன க்ரஹிக்கும் படி இருந்த போதிலும்
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் -ஸ்வ புத்தி பலத்தாலும் ஸாஸ்த்ர அப்யாஸத்தாலும் அறியத்தக்கது அன்றிக்கே ஆச்சார்ய உபதேசத்தால் அறியத்தக்கத்து ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் -உபதேஸ கம்யமான அந்த ரஹஸ்யத்ரய அர்த்தத்தை அறிந்தே எல்லாரும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அறிந்தே -என்ற அவதாரணத்தாலே அறியாத போது உஜ்ஜீவனம் இல்லை என்றதாயிற்று
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் -அந்த ரஹஸ்யத்ரய அர்த்தம் தன்னிலும்
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை -நம்மாழ்வார் தொடக்கமான பூர்வாச்சார்யர்களுடைய உபதேஸ பரம்பரையாகத் தமக்குப் பிராப்தமான விசேஷ அர்த்தங்களை
சர்வருக்கும் -ஸ்த்ரீ பாலாதி சர்வருக்கும்
ஸூக்ரமாகவும் -அநாயாசேன க்ரஹிக்கும் படியாகவும்
ஸூவ்யக்தமாகவும் -மிகவும் அர்த்த ப்ரகாசகமாகவும்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் -தம்முடைய பரம கிருபையாலே -ரஹஸ் யத்ரய கிருபையிலும் அதிசயிதமான கிருபையால்
இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –வியாக்யானமான இப் பிரபந்த ஸ்ரேஷ்டத்தாலே -)
———–
(இப் பிரபந்த முகேன-என்றதாலே -இதற்கு முன்பே சில பிரபந்தங்கள் அருளிச் செய்ததாகத் தோன்றுகையாலே
அவற்றை உதாஹரித்து -அவற்றுக்கு உண்டான தோஷத்தையும்
அவற்றைக் காட்டில் இதற்கு உண்டான வை லக்ஷண்யத்தையும் அருளிச் செய்கிறார் மேல் )
—————
முன்பே ரகஸ்ய த்ரய விஷயமாக மூன்று பிரபந்தம் இட்டு அருளி இருக்க செய்தேயும் -அதில்
யாத்ருக்சிகப்படி அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் –
பரந்த படி -அதி விஸ்ருதம் ஆகையாலும் –
ஸ்ரீ யபதிப்படி உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -சம்ஸ்க்ருத வாக்ய பகுளம் ஆகையாலே –
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமை யாலும் –
த்ரிவித தோஷம் இல்லாத படி இன்னமும் ஒரு பிரபந்தம் இட வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி
எல்லா வற்றுக்கும் பின்பு இறே முமுஷுப்படி ஆகிற இப் பிரபந்தம் இட்டு அருளிற்று –
ஆகை இறே அல்லாத பிரபந்தங்கள் கிடக்க -இத்தை எல்லாரும் அதிகரிக்க போருகிறது –
இன்னமும் பூர்வ பிரபந்தங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப் பிரபந்தத்திலே
உண்டு ஆகையாலும் இதுவே எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும் .
(முன்பே -இப்பிரபந்தம் அருளிச் செய்வதற்கு முன்பே
அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் -பெண்ணுக்கும் பேதைக்கும் விசதமாக அர்த்த பிரகாசம் ஆகாமையாலும்
அதி விஸ்ருதம் ஆகையாலும் -இன்ன இடத்தில் இன்ன அர்த்தம் சொல்லிற்று என்று அறியப் போகாமையாலும்
உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -அதி ஸங்க்ரஹமாயும் அதி விஸ்தாரமாயும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
பேதை -அறிவில்லா சபலை
எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும்-பண்டிதர்களுக்கும் பரிக்ரஹிக்கத் தக்கது )
———————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply