நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை மீரே வம்மின் திவ்யதேசம் தொழுவோம், வம்மின்–வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் —

ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசி திருவிழா பகல் பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம்
இனத்தவரைப் போன்று லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும்
நடந்துவருகிறது.

துலுக்க நாச்சியாருக்கு எம்பெருமான் ஒருவனே புகலிடம். அவனின்றி தனக்கு வேறு கதியில்லை என்ற (சரணாகதி பூண்ட) வைணவ சித்தி
விளைந்ததால் ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்துத் தொழத்தக்கப் பெருமை பெறுகிறார்.

இதே போன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்க்கோட்டை திருநாராயணபுரத்தில் செல்லப்பிள்ளைப் பெருமாளிடம் இரண்டறக் கலந்த
துலுக்க நாச்சியாரின் வரலாறும் மேற்படி நிகழ்வோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் தீர்த்தவாரி கொண்டாடப்படும் இரண்டு தினங்களில் முஸ்லீம்கள் திருப்பாவை பாடி
பரவசத்துடன் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியும் வைணவத்தில் சமய வேறுபாடின்மையும் பரம்பொருள் ஒருவனே என்பதையும், சரணாகதியே
ஆத்மவிமோசனம் என்பதையும் தெளிவாக்குகிறது.

பாண்டி நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருக்குறுங்குடியில் பெருமாளுக்கு பக்கத்தில் சிவனும் நிற்கிறார்.

இங்கு தினந்தோறும் வழிபாடு நடைபெறும்போது சிவனுக்கும் பூஜைகள் நடந்தேறி விட்டதா என்று கேட்கும் பாவனையில் இங்குள்ள ஜீயர் சுவாமிகள்
“பக்கம் நின்ற பண்பர்க்கு குறையாதும் உளதோ” என்று வினவுவர்.
குறையொன்றுமில்லை என்று பட்டர்கள் பதில் மொழிவர். இந்தச் சுவையான நிகழ்ச்சி இன்றும் நடைபெறுவதைக் காணலாம்.

சோழநாட்டுத் திவ்யதேசமான திருக்கண்ணங்குடியில் ஒரு நாளில் பெருமாள் விபூதி அணிந்து வருதலையும், காணலாம்.

கங்கை நீரைக் கையில் வைத்திருப்பவன் கிணறு வெட்டித் தாகம் தீர்த்துக் கொள்ள நினைக்கமாட்டான். விஷ்ணுவாகிய எம்பெருமான்
ஸ்ரீமந்நாராயணனை “உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன், என்னையும் உன்னிலிட்டேன்”. என்றவாறு இரண்டறக் கலந்த மனப்பாங்கைப் பெற்றபின்
அவனுக்குப் பிற தெய்வ சிந்தனைக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

எத்தனையோ மதங்களில் பிரவேசித்து உண்மை நிலையை அறிந்து பகவானை அடைய விரும்பிய பக்தர்கள் அவைகளை உதறிவிட்டு வைணவம்
புகுந்ததை வரலாறு காட்டும். திருமழிசையாழ்வாரே சிவவாக்கியர் என்னும் பெயரில் சித்தராய் இருந்து சைவம் முதலான சமயங்களில் நுழைந்து
அவைகளில் கடைத்தேற வழியில்லாமையையும், முக்தியடைய உபாயம் இல்லாததையும் அறிந்து வைணவத்திற்கு வந்து (எம்பெருமானாலே திருத்திப்
பணி கொள்ளப்பட்டு) ஆழ்வாராக ஆனார்.

விண்மீதிருப்பாய், மலைமேல்நிற்பாய், கடற்சேர்ப்பாய்
மண்மீதுழழ்வாய், இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்
என்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி
உன்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ?

செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றியிவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ்மாறன் பயின்று

1) ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தலங்கட்கு ஆர்ஷம் என்று பெயர்.
2) புராணங்களில் விரித்துரைக்கப்பட்ட ஸ்தலங்கட்கு ‘பௌராணிகம்’ என்று பெயர்.
3) தானே தோன்றியவைகள் ‘ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்’ என்றும் அல்லது சைத்தம் என்றும் மொழிவர்.

4) பிரம்மாதி தேவர்களால் தவஞ்செய்து உண்டாக்கப்பட்டவைகளை ‘தைவம்’ என்பர்.
5) மன்னர்களாலும், அடியார்களாலும் பிரதிட்டை செய்யப் பட்டவைகளுக்கு ‘மானவம்’ என்பர்.
6) ஆச்சார்ய புருஷர்களால் அபிமானிக்கப் பட்டதை அபிமான ‘ஸ்தலம்’ என்பர்.

ஏழு புண்ணியங்கள் என்பவை–ஷேத்ரம் வநம் நதி ஸிந்து புரம்    புஷ்கரிணி ததா  விமானம் ஸப்த புண்யஞ்ச யத்ர தேஸ

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம்  2. விமலாக்குருதி விமானம்  3. சுத்தஸ்த்வ விமானம்       4. தாரக விமானம்
     5. சுகநாக்ருதி விமானம்       6. வைதிக விமானம்    7. உத்பலா விமானம்         8. சௌந்தர்ய விமானம்
     9. புஷ்கலாவர்த்த விமானம்    10. வேதசக்ர விமானம்  11. சஞ்சீவி விக்ரஹ விமானம்   12. அஷ்டாங்க விமானம்
     13. புண்யகோடி விமானம்      14. ஸ்ரீகர விமானம்   15. ரம்ய விமானம்            16. முகுந்த விமானம்

17. விஜய கோடி விமானம் 18. சிம்மாக்கர விமானம்  19. தப்த காஞ்சன விமானம் 20. ஹேமகூட விமானம்

முற்காலத்தில் புண்ணிய ஸ்தலங்களை மனிதர்கள் தாங்கள் நினைத்த இடத்தில் ஏற்படுத்தினார்களில்லை. பூமியின் உள்ளே மனித ஜீவாதார
சக்திக்கு தேவையான ஒரு நரம்பு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குறுக்கே ஓடி இருக்குமாம். அதற்குத் தான் தரித்ரீசாரம் எனப்பெயர். அது நியூட்டன்
கண்டுபிடித்த புவியீர்ப்பு சக்தியின் பெரும் பகுதியாகும். இத்தகைய இடம் நம் இந்தியாவில் சிறப்பாகத் தென்பகுதியில் அதிகமாக இருப்பதால்தான்
இந்தியாவையே உண்மையான ப்ருத்வி (பூமி) என மகாகவி காளிதாசனும் கூறினார். ஆகவேதான் அந்த நரம்பு இழையோடும் தென்னாட்டின் பகுதியில்
ஆலயங்கள் பல தோன்றின.

ஈரிருபதாஞ் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர்பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் – சீர்நடுநாடு
ஆறோடீரெட்டுத் தொண்டை அவ்வட நாடாறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாக் கொள்.

1. பொய்கையாழ்வார் 6-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
2. பூதத்தாழ்வார் 13-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
3. பேயாழ்வார் 15-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
4. திருமிழிசையாழ்வார் 17-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
5. நம்மாழ்வார் 37-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
6. குலசேகராழ்வார் 9-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
7. பெரியாழ்வார் 18-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
8. ஸ்ரீ ஆண்டாள் 11-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
9. தொண்டரடிப் பொடியாழ்வார் 1-திவ்ய தேசம் மங்களா சாசனம்
10-திருப்பாணாழ்வார் 3-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
11-திருமங்கையாழ்வார் 86-திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் 

11 -ஆழ்வார்கள் மங்களா சாசனம் -ஸ்ரீ ரெங்கம்
10- ஆழ்வார்கள் மங்களா சாசனம்–திருமலையும் திருப்பாற்கடலும்
8-ஆழ்வார்கள் மங்களா சாசனம்–பரம பதம்
7–ஆழ்வார்கள் மங்களா சாசனம்–திருக்குடந்தை
6-ஆழ்வார்கள் மங்களா சாசனம்–திருமாலிருஞ்சோலை
5-ஆழ்வார்கள் மங்களா சாசனம்-6 திவ்ய தேசங்கள்
4-ஆழ்வார்கள் மங்களா சாசனம்-3-திவ்ய தேசங்கள்
3-ஆழ்வார்கள் மங்களா சாசனம்-5-திவ்ய தேசங்கள்
2-ஆழ்வார்கள் மங்களா சாசனம்-21-திவ்ய தேசங்கள்
1-ஆழ்வார் மங்களா சாசனம்–67 –திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தலங்களின் எண்ணிக்கை – 67
இதில்,

கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் 39
மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம் 12
தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம் 14
வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம் 2

இதே போல் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள ஸ்தலங்களின் எண்ணிக்கை 17.
இதில்
கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 13
மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 3
தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் இல்லை
வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 1

இதே போல் சயனத் திருக்கோல ஸ்தலங்கள் 24
இதில்,
கிழக்கு நோக்கி நோக்கிய சயனம் 18
மேற்கு நோக்கி நோக்கிய சயனம் 3
தெற்கு நோக்கி நோக்கிய சயனம் 3
வடக்கு நோக்கி நோக்கிய சயனம் இல்லை.

திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும்.–அவைகள்

1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்

நம் முன்னவர்கள் சோழநாட்டிற்கு எல்லைச் சொல்லிச் சென்றுள்ளனர்.
கடல் கிழக்கு தெற்கு கரை பொரு வெள்ளாறு
குடதிசையிற் கோட்டைக்கரையாம் – வடதிசையி
வோனாட்டு பண்ணை இருபது நாற்கதஞ்
சோனாட்டுக்கு எல்லையெனச் செப்பு

இப்பேர்ப்பட்ட சோழநாட்டில் 40 திவ்ய தேசங்கள் எங்குள்ளது.
இதனையும் பின்வரும் பாடல் மூலம் நம்முன்னோர்கள் காட்டிப் போயுள்ளனர்.

உயர் திருவரங்கம் உறையூர் தஞ்சை
அயர் வகற்றிடும் அன்பில் கரம்பனூர்
புகழ் வெள்ளறை புள்ளம் பூதங்குடி
அந்தமில் பேர்நகர் ஆதனூர் அழுந்தூர்
போதமருட் சிறுபுலியூர்ச் சேறை
மாதலைச்சங்க நான்மதியங் குடந்தை
விரவு கண்டியூர் விண்ணகர் கண்ண
புரமுடனாலி பொன்னாகை நறையூர்
நத்துநந்தி புரவிண்ணகர மிந்தளுர் திருச்
சித்திரகூடஞ் சீராம விண்ணகரம்
கூடலூர் கண்ணங்குடி கண்ணமங்கை
வீடருள் கவித்தலம் வெள்ளியங்குடி
வண்ண மணி மாடக்கோவில் வைகுந்த
விண்ணகரம் மரிமேய விண்ணகரம்
திருத்தேவ னார்த்தொகை சிறந்த தாயவண்
புருடோத்தமஞ் செம்பொன் செய்கோயிலே
பாவனத் தெற்றியம்பலம் பல மணிக்கூடங்
காவளம் பாடிக் கவின் வெள்ளக்குளம்
துதி பார்த்தன் பள்ளிசேர், சோழநாட்டுப்
பதியதோர் நாற்பதும் பணிந்து போற்றுவோம்.– – பெருங்கதை

———

கொங்கு நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையே இருந்த பகுதிதான் நடு நாடாகும்.
இவ்வாறு இடைப்பட்டிருந்தது மட்டுமன்றி பாண்டி நாடும் சேர நாடும் இந்நாட்டின் எல்லையிலிருந்து தென்மேற்காகப் பிரிவதாலும்,
மேற்சொன்ன கொங்கு நாடும் சோழ நாடும் வடக்கேயும் கிழக்கேயும் அமைவதாலும், நிலவமைப்பில் நடு நாடாயிற்று.
இந்நாட்டினை மலையமான்கள் ஆண்டு வந்தனர்.
கடைச்சங்க காலம் முதல்பல நூற்றாண்டுகள் வரை அவர்கள் தொடர்ந்து ஆண்டு வந்தனரென்று அறிய முடிகிறது.
இவர்களில் மிகச் சிறந்த மலையமான் திருமுடிக்காரியின்
புகழைச் சங்க நூல்கள் எடுத்தியம்புகின்றன. இதன் தலைநகர் திருக்கோவலூராகும்.
இந்த நடுநாட்டின் கீழ்த்திசையில் திருவஹீந்தபுரம் (திரு அயிந்தை) என்னும் திவ்ய தேசமும்
மேல் திசையில் திருக்கோவலூரும் நடு நாடிரண்டு எனக் குறிப்பிடப்படும் திவ்ய தேசங்களாகும்.

———–

“பொன்னுடை யயிந்தரபுரம் திருக்கோவலூர்
இந்நடு நாட்ட திரண்டையும் சேவித் தேத்துவோம்-– என்பது திவ்ய தேசக் கணக்கிற்குண்டான பாடலாகும்.

மேற்குப் பவளமலை வேங்கடம் நேர் வடக்காம்
ஆர்க்கு முவரி யணிகிழக்கும் – பார்க்குளுயர்
 தெற்குப் பினாகி திகழிருபதன் காதம்
  நற்றொண்டை நாடெனவே நாட்டு – பெருந்தொகை 2102

தொண்டை நாடென்பது வடவேங்கடம் முதல் புராணங்களிலும் வடநூல்களிலும் பினாகி எனக் குறிக்கப்படும் தென்பெண்ணையாற்றை
தெற்கெல்லையாகவும், கிழக்கே கடலையும், மேற்கே பவள மலையினையும் எல்லையாகக் கொண்டு விளங்கிய பெரு நிலப்பரப்பு

தொண்டைக் கொடியால் சுற்றி கடல்வழி வந்த நாக கன்னிகையான பீலிவளயின் மகனான இளந்திரையன் ஆண்டதால் தொண்டை மண்டலம்
எனப் பெயர் பெற்றதாக தமிழ் நூல்களால் அறிகிறோம்.-தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோருடைத்து’ – என்பது
ஒளவையார் வாக்கு.

அயோத்யா மதுரா மாயா காஸி காஞ்சி
அவந்திகா புரி த்வராவதி சைவ சப்த ஏகா மோசஷதாயகா’

நகரேஷு காஞ்சி–பூமாதேவி இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற பகுதியாக இந்நகரம்
திகழ்வதால் காஞ்சியெனப் பெயர் வந்ததாய்க் கூறுவர். இடையில் அணியக்கூடிய அணிகலனுக்கு காஞ்சி என்ற பெயரும் இருந்தது.

தொண்டை மண்டலத்தின் திலகமான இந்தக் காஞ்சியில் தொண்டை மண்டலத்து 22 திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்களைத் தன்னகத்தே
கொண்டுள்ளது.

ஆறோடு ஈரெட்டு தொண்டை எனப்பட்ட 22 தொண்டை நாட்டுத் திவ்ய தேசங்கள் எவையெனக் காண்போமாயின்.

அந்தமா மத்தியூர் அட்டபுயக் கரம்
விந்தை தண்கா வேளுக்கை பாடகம்
நீரகம் புனித நிலாத்திங் கட்த்துண்டம்
ஊரகம் வெஃகா வுடனே காரகம்
வந்துலாவுங் கார்வானங் கள்வனூர்
பந்த மகற்றிடும் பவள வண்ணமே
தொன்மை யாம்பர மேச்சுர விண்ணகரம்
நின்மலப் புட்குழி நின்றவூ ரெவ்வுள்ளூர்.
நீர்மலை இடவெந்தை நீர்க்கடன் மல்லை
சீர்மிகு மல்லிக்கேணி சிறந்ததாங் கடிகை
எண்டிசை புகழுமிவ் விருபத்தி யிரண்டு
தொண்டை நாட்டுப் பதி தொழுது போற்றுவோம்.–இந்த 22 இல் காஞ்சி மாநகரில் மட்டும் 14 திவ்ய தேசங்கள் உள்ளன.

பெரிய காஞ்சியில் உள்ள திவ்ய தேசங்கள்

1. திருப்பாடகம்    2. திருநிலாத்திங்கள் துண்டம்
3. திரு ஊரகம்    4. திரு நீரகம்
5. திருக்காரகம்    6. திருக்கார்வானம்
7. திருக்கள்வனூர்  8. திருப்பவளவண்ணம்
9. திருப்பரமேச்சுர விண்ணகரம்.

சின்னக் காஞ்சி எனப்படும் சிறிய காஞ்சியில் உள்ள திவ்ய தேசங்கள்

1. திருக்கச்சி     2. திருஅட்டபுயக்கரம்
3. திருத்தண்கா  4. திருவேளுக்கை
5. திருவெஃகா

திவ்ய தேசங்களின் புகழோடு இம்மண்டலம் நின்றுவிடவில்லை.
ஆழ்வார்களில் நால்வரின் அவதார ஸ்தலங்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது.
முதலாழ்வார்கள் மூவரும், திருமழிசையாழ்வாரும் அவதரித்த மண்டலம் என்னும் பெருமை கொண்டது.

1. பொய்கையாழ்வார்–காஞ்சியில் உள்ள திருவெஃகாவென்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.
2. பூதத்தாழ்வார்–கடன்மல்லை எனப்படும் மகாபலிபுரத்தில் அவதரித்தார்.
3. பேயாழ்வார்–சென்னையில் உள்ள திருமயிலையில் அவதரித்தார்.
4. திருமழிசையாழ்வார்–சென்னைக்கு அருகேயுள்ள திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார்

இது மட்டுமா பெருமை. ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையில்நடுநாயகமாகவும்,
திருவரங்கச் செல்வத்தைத் திருத்திப் பணிசெய்தவருமான
எம்பெருமானாரையும்
ஸ்ரீவைஷ்ணவத்தின் ஒரு கண்ணாக விளங்கும் வடகலை ஸம்பிரதாயத்தில் முக்கிய ஆச்சாரியரான ஸ்வாமி
வேதாந்த தேசிகனையும் ஈந்து வான் முட்டும்
பெரும்புகழடைந்து இலங்குகிறது.

காஞ்சி வரதராஜனுக்குத் திரு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தவரும் தனது ஆச்சார்யனாக ஏற்றுக்கொள்ள விழைந்த இராமானுஜருக்கு
தேவப்பெருமாள் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளைக் கூறி பெரியநம்பியை அடையுமாறு கூறிய திருக்கச்சி நம்பிகள்
அவதரித்த பூவிருந்தவல்லி என்ற
பூந்தமல்லி,
எம்பெருமானால் கற்பிக்கப்பட்ட வைணவ பாதைகளையும், காத்து வந்த கீழ்க்கண்ட ஆச்சார்ய புருஷர்களையும் இவ்வுலகிற்குத் தந்தருளியதும் இத்தொண்டை மண்டலம் தான்.
1. எம்பார் அவதரித்த மதுரமங்கலம்
2. முதலியாண்டார் அவதரித்த பேட்டை எனப்படும் வரதராஜபுரம்
3. கூரத்தாழ்வான் அவதரித்த கூரம்

இவர்கள் மட்டுமென்ன எங்களுக்கும் பங்கில்லையா என்று
இம்மண்டலத்தின் ஊடே பாய்ந்து இதன் செழுமைக்கும் சிறப்புக்கும் மெருகேற்றும் நதிதேவதைகள் நால்வருண்டு.

1. சக்ஷிர நதி எனப்படும் பாலாறு
2. பாகு நதி எனப்படும் செய்யாறு
3. வேகவதி எனப்படும் சரஸ்வதி நதி
4. கமண்டல நதி எனப்படும் கம்பா நதி.

——–

வேழமுடைத்து மலைநாடு–இங்கு கோவில்களை அம்பலம் என்றே அழைக்கின்றனர்-

இங்கு நடைபெறும் பிரகார ஊர்வலத்திற்கு ஸ்ரீ வல்லி என்று பெயர்.-தமிழ்நாட்டில் அமைந்துள்ளது போன்று பெரிய
துவஜஸ்தம்பங்கள் (கொடிமரங்கள்) இங்கு உண்டு.

மலையாளத்து திவ்ய தேசங்கள் சதுரவடிவில் அமைந்தவை. நான்கு வாசல்கள் கொண்டதாக
நாற்புரம் சூழ்ந்த சுற்றுச் சுவர்களால் அமைக்கப்பட்டவை. இதற்குள் வட்ட வடிவமான மூலஸ்தானம். மூலஸ்தானத்தின் மேல் முக்கோண வடிவில்
தொப்பியைக் கவிழ்த்து வைத்தது போன்றது கூரைகள். புணல் ஒன்றைக் கவிழ்த்து வைத்தது போன்ற அமைப்புக் கொண்ட மூலஸ்தானங்களும் உண்டு.

தூய்மை நிறைந்த சுற்றுப்புற நடைபாதைகள் இந்த நடைபாதையில் அமைந்துள்ள தூண்களில் ஒவ்வொரு
தூணுக்கும் ஒருபாவை விளக்கு ஏந்திய பெண்ணின் சிற்பமும் அமைந்திருக்கும்.

இவைகளில் கருடாழ்வார் திருஉருவம் விளக்குகள் அமைக்கப்பட்டு பொலிந்து
தோன்றுகின்றன. திருவல்லாவில் அமைந்துள்ள துவஜஸ்தம்பம்
மிகப்பெரியதாகும்.

இங்குள்ள ஸ்தலங்களில் மூலஸ்தானத்திற்கு முன்புறம் சதுரவடிவிலான மேடை ஒன்று இருக்கும். இதைப் பொதுவாக பலிபீடம் என்று கூறுவர். இது
சில ஸ்தலங்களில் பிரம்மாண்டமானதாயும், சிலவற்றில் சுமாரானதாயும் அமைந்துள்ளது. இந்த மேடையின் முன்பு நின்றுகொண்டுதான் பகவானை
வழிபட வேண்டும். மேடையில் ஏற யாரையும் அனுமதிப்பதில்லை. பகவானின் பூஜையில் ஈடுபடும் போத்திகள் மட்டும் இந்த மேடையின் மீதேறி
சாஷ்டங்கமாய் விழுந்து எம்பெருமானுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பூஜையில் ஈடுபடுவர்.

இங்கு பூஜை செய்பவர்கள் போத்திகள் எனப்படுவர். இவர்கள் மலையாள பிராம்மணர்கள் என்றும் அழைக்கப்படுவர்.
இவர்கள் தூய்மையான பக்தியோடு விடிகாலே எழுந்து நீராடி ஈரத்துணியோடு பூஜை செய்ய வருவர்.

இங்கு பிரஸாதமாக துளசி, புஷ்பம், சந்தனம் போன்றவற்றை ஒரு சிறிய வாழை இலையில் வைத்து தமது கைபடாமல் தருகிறார்கள். பொங்கல், சுண்டல் எல்லாம் இங்கு கிடையாது. இங்கு நடைபெறும் வழிபாட்டுக்கு ஆராட்டு என்று பெயர்.தினந்தோறும் பெருமாளுக்கு அபிஷேகம் உண்டு.

மலையாள திவ்யதேசங்கள் 13ல் பஞ்ச பாண்டவர்களால் புனர் நிர்மாணம் -ஸ்தாபிக்கப்பட்ட, 5 திவ்ய தேசங்கள் உண்டு. இவைகளைப் பாண்டவர்
கோயில் என்றே அழைக்கின்றனர். அவைகள்.

1. திருச்சிற்றாறு    – தர்மன் பிரதிஷ்டை செய்தது.
2. திருஆரம்முளா  – அர்ஜு னன்
3. திருப்புலியூர்    – பீமன்
4. திருவன்வண்டூர் – நகுலன்
5. திருக்கடித்தானம் – சகாதேவன்.

மலையாளத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஓணம் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றதாகும்.

சிறப்புற்றுத் திகழ்ந்த சேர நாடான மலையாளத்தில் ஓர் பதின்மூன்றும் மலைநாடு என்று சொல்லப்பட்ட அந்த 13 திவ்ய தேசங்கள் யாவையெனப் பின்வரும் பாடல் பகர்கிறது.

மாவனந்த புரம் வண் பரிசாரம்
காவலுள்ள காட்கரை மூழிக்கழம்
இலகிடு புலியூ ரெழிற் செங்குன்றூர்
நலமிக வளித்திடும் நாவாய் வல்லவாழ்
மற்றும் வண்வண்டூர் வாட்டாருடனே
வித்துவக் கோடு மேலாங் கடித்தானம்
மதிளாறன் வினை மலைநாட்டுப் பதி
பதிமூன்று மவைப் பணிந்து போற்றுவோம்.

—————-

பாண்டி நாடு என்றாலே அது தமிழ் மணக்கும் காடாகும். பாண்டியா நின் நாடுடைத்து நல்ல தமிழ் என்பது ஒளவையின் வாக்கு. தமிழ் காத்த
வேந்தர்களுள் பாண்டிய மன்னர்களே தமிழுக்குச் சங்கம் அமைத்த பெருமைக்கு உரியவர்கள். உலகிலேயே ஒரு மொழிக்கு முதன் முதலாகச்
சங்கம் அமைத்திட்ட பெருமை உண்டென்றால் அது பாண்டிய நாட்டிற்குத்தான். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என
முச்சங்கங்களைக் கொண்டு தமிழ் வளர்த்து, தமிழ் காத்த நிலமாகும் பாண்டிய நாடு.

இத்தகைய பெருமை பெற்றதனால்தான் என்னவோ நாலாயிரத்திவ்ய பிரபந்தமும் இந்த பாண்டிய மண்ணில்தான் கிடைத்தது. ஆம், நாத
முனிகளுக்கு நாலாயிரத் திவ்ய பிரபந்தம் கிடைத்தது, பாண்டிநாட்டின் திருக்குரு கூரான ஆழ்வார் திருநகரியில்தான். இது மட்டுமன்று இந்நாட்டின்
பெருமை 12 ஆழ்வார்களில் 4 ஆழ்வார்களைத் தன்னகத்தே கொண்டிருந்ததும் பாண்டி நாடுதான். ஆழ்வார்களில் பெரியவரான
பெரியாழ்வார், பிராட்டியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள் தேவி, வேதத்தை தமிழில் விரித்துரைத்த நம்மாழ்வார், அவரின் அடிபோற்றி உய்ந்த
மதுரகவியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்கள் அவதரித்ததும் இந்த பாண்டி நாட்டில்தான்.

பாண்டி நாடு என்றால்
வடிவேல் எறிந்த வான்பகை பொறாஅது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”–என்று சிலம்பு காட்டும் பாண்டிய நாடு
தற்போதுள்ள குமரியிலிருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் வரை பரவியிருந்த லெமூரியாக்கண்டம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.
அந்த மாபெரும் நிலப்பரப்பில் தற்போதைய வைகை நதி போன்று பன்மடங்கு நீண்டதாயிருந்த, பஃறுளியாறு என்னும் நதியும்
அடுக்கடுக்கான பல மலைகளும், குமரி எல்லையும் கடல்வாய்ப்பட்டு அழிந்தது என்று சங்க நூல்கள் செய்தி கூறுகின்றன.

வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனர்கன்னி தெற்காகும் – உள்ளார்
ஆண்டகடல் கிழக்கா யைம்பத்தாறு காதம்
பாண்டிநாட் டெல்லை பகர்— பெருங்கதை 2098

பாண்டி நாட்டின் வட எல்லை வெள்ளாறு. தெள்ளாறு எனப்படும் தெள்ளாற்றின் பெரும் வழியே மேற்கு எல்லையாகும்.
புனர் கன்னி யென்பது குமரிமுனை ஆகும்.

துய்ய மாலிருஞ்சோலை கோட்டியூர்
மெய்யம் புல்லாணி விளங்குதன் காளூர்
குளிர்க்கு மெழின் மோகூர் – கூடலூர் வில்லிபுத்தூர்
மிளிர்க குருகூர்த் தொலைவில்லை மங்கலம்
ஸ்ரீவரமங்கை ஸ்ரீவைகுண்டம் தென்பேரை
மாவளப் புளிங்குடி வரகுண மங்கை
கோன்தவிர் குளந்தை குறுங்குடி கோளூர்
பாண்டி நாட்டுப்பதி பதினெட்டு மேத்துவம்

———-

இந்தியாவின் தொல் புகழை, ஆன்மீக முதிர்ச்சியை மெல்லிய ரீங்காரத்தில் உலகம் தோன்றிய போதுண்டான ஓம் என்னும் சப்தத்தோடு
தோன்றி புகழ்பாடிக் கொண்டிருப்பவை. அ உ ம என்ற மூன்றெழுத்துக்களின் சேர்க்கையோடு ஓங்கார வடிவத்தில் திகழ்பவைகள். இத்தலங்கள்,
நதிகளோடும், அவதாரங்களோடும் பின்னிப் பிணைந்து கிடப்பவை. அ என்ற எழுத்தாகவும், பிரத்யுமனனாகவும் இருக்கிறாள். சரஸ்வதி, உ என்ற
எழுத்தாகவும், அநிருத்தனாகவும் இருக்கிறாள் யமுனை. ம என்ற எழுத்தாகவும் சங்கர்சணனாகவும் இருக்கிறாள் கங்கை.
(அதாவது நார என்ற சொல்லால் ஸ்ரீமந் நாராயணன் ஜல சொரூபமாக (தீர்த்தமுமாகி) திகழ்கிறார் எம்பெருமான், ஸர்வம் விஷ்ணு மயம் என்பது
போல பிரத்யுமனனாக இருக்கும் அவனே சரஸ்வதி நதியாகி தீர்த்த சொரூபமாகிறான். அநிருத்தனாக யமுனை சொரூபமாகி சங்கர்ஷணனாக
கங்கை சொரூபமாகிறான், (தீ, நீர், எரி, கால், விசும்புமாகி என்றாரேயாழ்வார்) என்று வேதம் பகர்ந்து பரமபதத்திலிருந்து எம்பெருமான் தன்னை வ்யூக
நிலைக்கு எழுந்தருளப் பண்ணியதை தன்னோடு சங்கமித்துக் கொண்ட நதிகளின் அரவணைப்பில் கிடப்பவை இத்தலங்கள்.

வடநாட்டு தலங்கள் பதினொன்றென்றும், பன்னிரெண்டென்றும் கருத்து வேறுபாடுகள் உண்டு.
இருப்பினும் அவ்வடநாடாறிரண்டு என்னும்
சொல்லிற்கேற்ப வடநாட்டுத் திருப்பதிகள் 12 எனவே கொள்ளலாம்.

அப்பன்னிரு ஸ்தலங்கள் யாவையென கீழ்க்காணும் பாடலால் உணரலாம்.

திகழ்திரு வேங்கடஞ் சிங்கவேள் குன்றம்
நகரமா மயோத்தி நைமிசா ரண்யம்
தன்னிக ரில்லாச் சாளக்கி ராமம்
மன்னிய புகழுடை வதரியாச் சிரமம்
காவற் கங்கைக் கரைகண்டம் பிரிதி
தூவட மதுரை துவாரை யாய்ப்பாடி
படர்பாற் காடலிப் பன்னிரண் டுமே
அவ்வட நாட்டுப் பதியென வணங்கிப் போற்றுவம்.

————–

அஷ்டாங்க விமானம்
பகவான் எழுந்தருளியிருக்கும் விமானங்கள் 96 வகையென்று ஆகம சாஸ்திரங்கள் கூறும்.
அவற்றுள் மிக அருமையானது அஷ்டாங்க விமானம்.
திருக்கோட்டியூர், கூடல்மாநகர், உத்திர மேரூர் போன்ற ஸ்தலங்களில் விமானங்கள் அஷ்டாங்க அமைப்புடன் கூடியவை.
இவை 8 அங்கம் 3(தளம்) அடுக்கு உடையது.

அதாவது திருமந்திரமானது எட்டெழுத்துக்களாகவும், மூன்று பதமாகவும் இருப்பதைப் போல திருவஷ்டாச்சர மந்திரத்தின் ஸ்தூல வடிவமாக இவைகள் திகழ்கின்றன.-ஸ்ரீமந் நாராயணன் திருமேனி இந்த மந்திரத்தில் அடங்கி 8 அம்சங்களாக விமானத்தில் நிறைந்திருக்கின்றன என்பது பொருள்.

அகால மிருத்யு ஹரணம்
ஸர்வ வியாதி விநாசனம்
விஷ்ணோ பாதோதகம் பீத்வா
புனர் ஜன்ம ந வித்யதே
துளசி தளம் கலந்த ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகுபவர்களுக்கு மறு பிறப்பில்லை.
அகால மரணம், உடல், உள்ளம் பற்றியவியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது ஆயுர்வேதம்.

துளசி எடுப்பதை ஸ்ரீவைஷ்ணவர்கள் திருத்துழாய் எழுந்தருளப்பண்ணுதல் என்பர்.
துளசியை எடுக்கும்போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தையும் கூறுவர்.

விருந்தாயை துளசி தேவ்யை
பிரியாயை கேசவஸ்யச
கேசவார்த்தே சினோமி த்வாம்
வரதா பவ சர்வதா
“திருமாலுக்கு உகந்த ஒளஷதியே, விருந்தா, துளசி என்றெல்லாம் போற்றப்படும் தேவியே உன்னை வணங்குகிறேன்.
ஸ்ரீமந் நாராயணனை ஆராதிக்க உன்னைத் தொழுகின்றேன். எனக்கு என்றும் அருள் பாலிப்பாயாக” என்பது இதன் பொருள்

மார்கழி மாதம் வளர்பிறை பிரதமை திதி முதல் தசமி திதி முடிய 10 நாள் விழாவிற்கு பகல்பத்து என்று பெயர்.
இதில் திருப்பல்லாண்டு முதலாயிரம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,
திருநெடுந்தாண்டகம், ஆகிய இரண்டாயிரம் பாசுரம் இசைக்கப்படும்.

தசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி முடிய 10 நாள் விழாவிற்கு இராப்பத்து என்று பெயர்.
இதில் திருவாய் மொழி ஆயிரம் பாசுரம் இசைக்கப்படும்.
இதற்கு மறுநாளான இருபத்தியோராவது நாள் இயற்பா ஆயிரமும் இசைக்கப்படும்.

இப்பாடல்களை எம்பெருமானே இனிமையுடன் கேட்பதால் தாளத்தோடு இசைக்க இசை வல்லாரான அரையர்களையும்நாதமுனிகள் நியமனம் செய்தார்.
எனவே இதற்கு அரையர் சேவை அல்லது அரையர் இசை எனப் பெயருண்டு.

ராமாவதார ஸு ர்யஸ்ய சந்தர்ஸ்ய யதுநாயக
ந்ருஸிம் ஹோ பூமிபுத்ரஸ்ய ஸெம்ய, ஸோம ஸிதஸ்யச
வாமநோ விபுதேந்தரஸ்ய பார்கவோ பார்க்கவஸ்ய
கூர்மோ பாஸ்கர புத்ரஸ்ய ஸைம்ஹிகேயஸ்ய ஸு கர
கேதுர் ம்நாவாதாரஸ்ய யோகாசாந்யேபி கேசரா – ஸ்வாமி வேதாந்த தேசிகர் -தசாவதார ஸ்தோத்திரம்
ஸ்ரீராமவதாரம் – சூர்யன்
ஸ்ரீகிருஷ்ணவதாரம் – சந்திரன்
ஸ்ரீநரசிம்மவதாரம் – செவ்வாய்
ஸ்ரீகல்கி அவதாரம் – புதன் (சோமபுத்ரன், சந்திரனின் மகன்)
ஸ்ரீவாமன அவராரம் – வியாழன்
ஸ்ரீபரசுராம அவதாரம் – சுக்கிரன்
ஸ்ரீகூர்ம அவதாரம் – சனி (பாஸ்கர புத்திரன்,சூரியனின் மகன் சனி)
ஸ்ரீவராஹ அவதாரம் – இராகு
ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் – கேது
ஸ்ரீபலராம அவதாரம் – குளிகன் (சனியின் மகன்)

ஆதி திராவிடர்களை திருக்குலத்தார் என்று பெயரிட்டு
ஆலயப்பிரவேசம் செய்வித்து புரட்சி செய்தவர். ஸ்வாமி ராமானுஜர்
இன்றைக்கும் திரு நாராயணபுரத்தில் வருடத்தில் மூன்று நாட்கள் ஆதி திராவிடர்கள் பெருமளவில் கோவிலின் கர்ப்பக் கிரஹத்திற்குள் நுழைந்து
பெருமாளை ஆலிங்கனம் செய்து வணங்கும் வழிபாடு நடைமுறையில் உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரிலும் ஆதி திராவிடர்கட்கு ஏற்றம் உண்டு.
இங்கு நடைபெறும் உற்சவத்தின் 7ஆம் திருநாளன்று ஆதி திராவிடர்கள் வந்து இறைவனை வணங்கி தேர் வடம் தொட்டு இழுக்கின்றனர்.
இதற்குப் பின்னரே மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

நாவலந்தீவு என்னும் பரத கண்டம்
அங்கம், வங்கம், குலிங்கம், காம்போஜம், ஆந்திரம், புளிந்தம், கூர்ஜரம், மச்சம், காஷ்மீரம், மாளவம், சிங்களம், சோனம் சீனம், பாஞ்சாலம், சேதி,
அவந்தி, கொல்லம், கொங்கணம், நேபாளம், பாண்டி மாளவம், சூரசேனம், சோனகம், கேரளம், நிடதம், கோசலம், குரு, மராடம் கன்னடம், கபாடம்,
காசளம், குந்தளம், கிராடம், குடகம், கருசம், ஒட்டியம், பப்பரம், பல்லவம், சவ்வீரம், திராவிடம், துளுவம், விதர்ப்பம்.

இவைகளே பிர்ம்மாண்ட புராணங்கூறும். பரத கண்டத்தில் இருந்த பண்டை நாடுகளாகும்.

காஷாயாம்பர கவிசத சாத்ரம்
கவிதக மண்டலு தண்ட பவித்ரம்
வித்ரு தசிகா ஹரினாஜன சூத்ரம்
வ்யாக்யதா த்வைபாயன சூத்ரம் – (யதிராஜ ஸ்தோத்திரம்-பஜ யதி ராஜம்)
காஷாய வஸ்திரத்தினால் சாத்திக் கொள்ளப்பட்ட திருமேனியை உடையவரும். கமண்டலத்தையும் திரி தண்டத்தையும், திரி தண்டத்துக்கு
மேல் பாகத்தில் உள்ள வஸ்திர விசேஷத்தை உடையவரும், சிவிகையை உடையவரும், மான் தோல் முகம் கொண்ட யஞ்ஞோப வீதத்தை உடையவரும்
த்வைபாயனர் என்று சொல்லும்பாடியான வ்யாசர் அருளிய பிரம்ம சூத்திரங்கட்கு வ்யாக்யானம் செய்தவரான எதிராஜரை ஜெபியுங்கள்
என்று வடுக நம்பிகள் வம்சத்தவரானவரும், மிதுனகால இராமவாசியான ரங்காச்சாரியார் தாம் அருளிச்செய்த பஜயதிராஜ ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading