திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது சோழநாட்டுத் திருப்பதிகளுள் முதன்மையானது. கோயில், திருமலை,
பெருமாள் கோயில் என்று பிரதானமாகச் சொல்லப்பட்ட மூன்றினுள் முதன்மையானது.
பெரிய கோயில் என்றும், பூலோக வைகுண்டம் என்றும் போக மண்டபம் என்றும் போற்றப்படும் இத்தலத்தை, அண்டர் கோன் அமரும் அணியரங்கமென்றும், தென்திருவரங்கமென்றும், செழுநீர்த் திருவரங்கமென்றும் திட்கொடிமதில் சூழ்த் திருவரங்கமென்றும் ஆழ்வார்கள் மாந்தி மகிழ்வர்.
திருச்சீரங்க நாதன் பள்ளியாகி அவ்விதமே அழைக்கப்பட்டு காலப்போக்கில் திருச்சிராப்பள்ளியாகி தற்போது திருச்சியாயிற்று.
இந்த திருவாராதனப் பெருமாளை வீடணனுக்கு (விபீஷணனுக்கு) சீதனமாக கொடுத்தார்.
வீடணன் இப்பெருமாளைப் பெற்றுத் திரும்பியதை வால்மீகி தமது இராமாயணத்தில்
விபிஷணோபி தர்மாத்மா ஸஹ தைர் நைர்ருதைர்ஷபை
லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா-(வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம், 87 வது சுலோகம்.)
பின்னர் தர்மவர்மன் அவ்விமானத்தைச் சுற்றி சிறிய கோவில் எழுப்பி வழிபாடு செய்ய ஆவன செய்தான்.
இக்கோவில் காவிரியாற்றின் வெள்ளப் பெருக்கால் சிதல மடைந்து, மண் அரித்துக்காடு சூழ்ந்து யாருக்கும்
தெரியாவண்ணம் மறைந்து இருக்கையில் தர்மவர்மாவின் மரபில் வந்த கிள்ளி வளவன் இக்காட்டிற்கு வேட்டையாட வந்து
ஒரு மர நிழலில் தங்கியிருக்கும்போது அம்மரத்தின் மீதிருந்த கிளி ஒன்று வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணுவின் கோவிலான திருவரங்கம் இருந்த இடம் இது.-இப்போதும் அக்கோவிலைக் காணலாமெனத் திரும்பத் திரும்பச் சொல்லியது.
இதைக் கேட்டுப் பலவிடத்தும் தேடியலைந்தும் கோவிலைக்காணாது அயர்ந்த கிள்ளிவளவனின் கனவில்
தன் இருப்பிடத்தை எம்பெருமான் தானே காட்டியருளினார்.
அவ்விடத்தைக் கண்ட கிள்ளி வளவன் மெய்சிலிர்த்து தொழுது நின்று மீளவும் மதிலும் கோபுரமும் எழுப்பினான்.
மூலவர்–ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்-நம் பெருமாள், அழகிய மணவாளன் என்னும் திருப்பெயர்களும் உண்டு.
ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டியபுஜங்க சயனம்
உற்சவர்-நம் பெருமாள்
தாயார்– ஸ்ரீரங்க நாச்சியார்–பெரிய பிராட்டியார்
தீர்த்தங்கள்
இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள்
1. சந்திரபுஷ்கரணி 2. வில்வ தீர்த்தம்
3. நாவல் தீர்த்தம் 4. அரசு தீர்த்தம்
5. புன்னை தீர்த்தம் 6. மகிழ் தீர்த்தம்
7. பொரசு தீர்த்தம் 8. கடம்ப தீர்த்தம்
9. மா தீர்த்தம்
இதில் இன்று இருப்பதும், பிரதானமானதும் சந்திர புஷ்கரணியே.
ஸ்தல விருட்சம்–புன்னை
விமானம்– ப்ரணா வாக்ருதி
காட்சி கண்டவர்கள்- வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன்.
நீல மேகம் நெடும் பொற்குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தி
திருவமர்மார்பன் கிடந்த வண்ணம்”-– என்கிறார் இளங்கோவடிகள்.
இது. 11 ஆழ்வார்கள் 247 பாக்களில் மங்களாசாசனம் பொழிந்த திவ்யதேசம்.
108 திவ்யதேசங்களில் இப்பெருமை வேறெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லை
இங்கு எல்லாமே பெரியவைகள். ஆம் கோவில் பெரிது.
இராமபிரானே நமக்குப் பெருமாள் ஆவார்.
அவரால் தொழப்பட்ட இந்த ரங்கநாதன் பெரிய பெருமாள்.
கோவிலும் பெரிது. அதனால் பெரிய கோவில் ஆயிற்று.
7 மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது.
இதற்குச் சிகரம் வைத்தாற்போல் இத்தலத்தின் கோபுரம் ஆசியாவிலேயே பெரிது.
இங்கு எழுந்தருளியுள்ள கருடன் மிகப்பெரியவர்.
இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர்
உரையாசிரியர், ஆச்சான்பிள்ளையோ பெரியவாச்சான் பிள்ளை.
திருமதில்கள் பெரிது.
இங்கிருந்த ஆச்சார்யார் நம்பிகளின் திருநாமமோ பெரிய நம்பி.
தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர்
இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம் என்று பெயர்.
இங்குள்ள வாத்யத்திற்கு பெரிய மேளம் என்றுபெயர்.
இங்கு தயாரிக்கப்படும் பட்சணங்கட்குப் பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர்.
ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக்
கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார்.
இரண்டாகப்பிரிந்து ஓடும் காவிரியும், கொள்ளிடமும் தமிழ்நாட்டிலேயே பெரிய நதிகள்.
ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள்.-ஆம் 108 திவ்ய தேசங்களில் 11 ஆழ்வார்களால் 247
பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள். இராமாயண காலத்திற்கும் முற்பட்டு, இப்பூமிக்கு வந்த பெருமாள் இவரென்றால்
இவரின் தொன்மை பற்றி ஆராய்வது பெரிய ஆய்வு.
அப்பேற்பட்ட தொன்மையான பெருமாள் தமிழகத்தில் இங்கு வந்து பள்ளி கொள்ள விரும்பினாரென்றால் அது பெரிய விஷயம். இங்கு எல்லாமே பெரியவைகள்.
தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கத்திற்கு அருகாமையில் ஒரு நந்தவனம் அமைத்து
தினந்தோறும் திருவரங்க நாதனுக்கு பூமாலையும் பாமாலையும் சமர்ப்பித்து வந்தார்.
திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு மதில்கட்டும் சமயம் தொண்டரடிப்பொடியாழ்வாரின் நந்தவனம் குறுக்கிட்டது.
எனவே நந்தவனத்தை ஒதுக்கிவிட்டு திருமதில் வளைத்தார்.
இஃதறிந்த தொண்டரடிப் பொடியாழ்வார் மலர் கொய்யும்போது தமது ஆயுதத்திற்கு திருமங்கையின்
பட்டப் பெயர்களுள் ஒன்றான “அருள்மாரி” என்னும் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
இத்தலத்திற்குரிய நிலங்களைக் குத்தகைக்குவிட்டு அதிலிருந்து அறுவடை செய்து வந்த நெற்கதிர்களை ஆண்டுதோறும் சித்திரைமாதத்தன்று
யானை மீது ஏற்றி வெள்ளைப் பிள்ளை என்பார் கொண்டு வந்து பெருமாள் திருவீதி எழும்போது அவர்க்கெதிரே சமர்ப்பிப்பார். ஆண்டுதோறும்
நடைபெறும் இந்நிகழ்ச்சி கதிர் அலங்காரம் என்ற பெயரில் விசேடமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவரங்கனை நேராகக் கை கூப்பி வணங்கிய வண்ணம் உள்ள மிகப் பெரிய கருடன் இங்கிருப்பதைப் போல்
பிரம் மாண்டமான வடிவில் இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லையென்று சொல்லலாம்.
இந்தக் கருடாழ்வாரின் சன்னதி வாயிலை சுக்ரீவனும், அங்கதனும் காவல் புரிவதாக ஐதீஹம்.
பாண்டிய மன்னன் சுந்தரவர்மன் காலத்தில் இது கட்டப்பட்டதாக இருக்கலாமென்று வரலாற்றாய்வர் பகர்வர்.
இச்சன்னதிக்கு எதிரே உள்ள பரமன் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் பார்ப்பதற்குப் பேரழகு பொருந்தியவை.
இவை தேவராஜன் குறடு என்றும் கூறுவர்.
இக்கோவிலின் நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி சன்னிதிக்கு வட புர கோபுர வாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு.
இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி மூன்று வாசல் என்பது பெயர்.
இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று இந்த ஐந்து குழிகளிலும் தன் கைவிரல்களை வைத்து மூன்று வாசல்கள் வழியாகவும் பார்ப்பாராம்.
7 திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று தற்போது 7 மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.
இதற்கு அடைய வளைந்தான் திருச்சுற்று என்று பெயர். சப்த பிரகாரங்கள் எனப்படும் 7 பிரகாரங்களுக்குள் இது அடங்காது.
7 வது திருமதில்
இதற்கு பூலோகம் என்று பெயர். இதற்கு ராஜவீதி, மாட மாளிகை வீதி, சித்திரைத் திருவீதி எனவும் பெயர்கள் உண்டு.
இது தற்போது கடைகள், வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் சூழ ஒரு குறுநகரம் போல் தெரிகிறது.
இதில் ஒரு கண்ணன் சன்னிதி, ஒரு ஆஞ்சநேயர் திருக்கோவில், வானமாமலை மண்டபம் ஆகியன உண்டு.
6வது திருமதில்
புவர்லோகம் என்று அழைக்கப்படும் இத்திருச்சுற்று திருவிக்கிரமன் திருவீதி என்று அழைக்கப்படுகிறது.
இது ஜவுளிக்கடைகளும், பாத்திரக்கடைகளும் நிறைந்து ஒரு பஜார் மாதிரி அமைந்துள்ளது.
இந்த வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப்போகும் காரணத்தால் இதற்கு உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர்.
இதில்தான் யானைகட்டும் மண்டபம் உள்ளது.
ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக் கவனித்த மடம் இதில்தான் உள்ளது.
இது இன்றும் ஸ்ரீரங்கநாராயண ஜீயர்களின் மடம் என்ற பெயரிலேயே வழங்கி தொன்று தொட்டு ஜீயர்கள்
பரிபாலனத்திலேயே இருந்து வருகிறது.
அஹோபில மடம், மணவாள மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது.
மணவாள மாமுனிகள் தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான் காட்டியருளினார்.
5வது திருமதில்
ஸு வர் லோகம் என்று அழைக்கப்படும் இந்த 5வது திருச்சுற்றில் நுழையும் நுழைவாசலுக்கு நான்முகன் கோட்டை வாசல் என்று பெயர்.
இதைச் சோழமன்னன் அகளங்கன் என்பவன் கட்டியதால் அவன் பெயராலேயே அகளங்கன் திருச்சுற்று என்று அழைக்கப்படுகிறது.
இதில் உள்ள ஆண்டாள் சன்னிதி பேரழகு வாய்ந்ததாகும். பெருமாள் உலா சுற்றி வந்ததும் திருஷ்டி கழித்து கொள்ளும் பழக்கம் உண்டு.
அது இச்சுற்றில் உள்ள ஒரு நாலுகால் மண்டபத்தில்தான் நடைபெறுகிறது.
திருஷ்டி கழிப்பதென்பது ஒரு சிறிய குடத்தின் மேல் ஒரு சிறு கிண்ணம் வைத்து அதில் கனமான திரியிட்டு
ஏற்றிப் பெருமாளுக்கு எதிரில் ஏற்றியிறக்குவதுபோல் சுற்றுவர்.இந்நிகழ்ச்சிக்கு திருவந்திக் காப்பு என்று பெயர்.
இத்திருச்சுற்றில் எட்டுக் கரங்களுடன் கூடின வரப்பிரசாதியான சக்கரத்தாழ்வார் சன்னதி, பேரழகு பொலியத் தோன்றும்
வேணுகோபால கிருஷ்ணர் சன்னதி போன்றனவும் உண்டு.
ஸ்ரீரங்க விலாச மண்டபம் என்று ஒரு மண்டபமும், வைகாசித் திருவிழா நடைபெறும் வஸந்த மண்டபமும் தாயார் சன்னதியும் இதில்தான் உள்ளது.
தாயார் சன்னதிக்கு எதிரில்தான் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய கம்பர் மண்டபம் உள்ளது.
இங்குள்ள மாடக்கோயிலில்தான் மேட்டழகிய சிங்கர் எனப்படும் நரசிங்கப் பெருமாள் சன்னிதியும் உள்ளது.
ஆயிரங்கால் மண்டபமும் இதில்தான் உள்ளது. இதன் நடுவே உள்ள திருமாமணி மண்டபத்தில்தான் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று
தொடங்கும் திருவாய்மொழித்திருநாள் உற்சவம் நடைபெறும். அவ்வமயம்திருவாய் மொழி சேவிப்பதும்,
அரையர் சேவையும் தெய்வீகமான நிகழ்ச்சிகளாகும்.
இராமானுஜரின் திருமேனி வைக்கப்பட்டுள்ள கோவிலும் இந்த சுற்றுக்குள்தான் உள்ளது.
தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் ஆகியோருக்கும் கூரத்தாழ்வாருக்கும் பிள்ளை
லோகாச்சார்யாருக்கும் இதில்தான் சன்னிதிகள் உள்ளது.
4வது திருமதில்
மஹர்லோகம் எனப்படும் 4வது திருச்சுற்றுக்கு திருமங்கை மன்னன் சுற்று, ஆலிநாடான் வீதி என்றும் பெயர்.
இம்மதில் திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்டது. இதன் நுழைவாயிலுக்கு கார்த்திகை கோபுர வாசல் என்று பெயர்.
இதில்தான் பிரம்மாண்டமான கருடாழ்வார் சன்னிதி உள்ளது.
இதற்கெதிரே உள்ள பரமன் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் மிக்க கலை நுணுக்கம் வாய்ந்தவை.
இதில் முதலாழ்வார்கள் மூவரின் சன்னிதி, நம்மாழ்வார் சன்னிதி, திருமழிசையாழ்வார் சன்னதி, திருக்கச்சி நம்பிகள் சன்னிதி போன்றனவும் உண்டு.
மிகச்சிறந்த சந்திர புஷக்ரணியும் இதில் தான்
உள்ளது. பிரசாதம் விற்கும் இடமும் இங்குதான். சொர்க்க வாசல் என்பதும் இதில் தான்.
வேறெங்கும் காண்டற்கரிய மருத்துவப் பெருமாளான தன்வந்திரி சன்னிதியும் இதில்தான் உள்ளது.
3வது திருமதில்
ஜநோலோகம் எனப்படும் இந்த 3வது திருச்சுற்றுக்கு ஆர்யபடர்வாசல் என்று பெயர்.
முன்பு ஒரு காலத்தில் ஆர்யர் என்னும் வடநாட்டு அந்தணர்கள் இவ்வாசலைக் காவல்புரிந்து வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
இதற்கு குலசேகரன் திருச்சுற்று என்றும் பெயர். இந்தச் சுற்றில் தான் தங்கமுலாம் பூசப்பட்ட துவஜ ஸ்தம்பம் (கொடிமரம்) உள்ளது.
இது 102 தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கொடிமரம் ஆகும். விஜயநகரத்து மன்னர்களால் இக்கம்பம் உண்டாக்கப்பட்டதென அறியமுடிகிறது.
உள்கோடை மண்டபம், பரமபதவாசல் டோலோத்ஸ்வ (ஊஞ்சல் உற்சவம்) மண்டபமும் இதில் உண்டு
2வது திருமதில்
தபோலோகம் எனப்படும் 2வது திருச்சுற்றுக்கு ராஜ மகேந்திரன் திருச்சுற்று என்பது பெயர். ராஜமகேந்திர சோழனால் இது கட்டப்பட்டது.
இதன் நுழைவாயிலுக்கு நாழிகேட்டான் வாசல் என்பது பெயர். பெருமாள் இவ்வாசலுக்கு வந்ததும்
நாழிகை என்ன என்று கேட்கும் வழக்கம் இருந்ததால் இப்பெயர் உண்டாயிற்றென்பர்.
இதில் யாகசாலை, சேனை முதலியார் சன்னிதி, கண்ணாடி அறை, திருப்பரிவட்டாரங்கள் வைக்குமிடம் ஆகியன உண்டு.
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் தம் குடும்பத்துடன் நின்றுள்ள காட்சியும் இத்திருச்சுற்றில்தான் உண்டு.
கற்பூரப் படியேத்தம், என்னும் விசேட நிகழ்ச்சி கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று நடைபெறும்.
இந்நிகழ்ச்சியைக் காண்பதற்காகவே விஜயரங்க சொக்கநாத நாயக்கர் தமது குடும்பத்துடன் வந்தாரென்றும்
வருவதற்குள் இந்நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் அடுத்த ஆண்டு இந்நிகழ்ச்சியைக் காணவேண்டுமென்று ஓராண்டுக்காலம் தம் குடும்பத்துடன்
தங்கிவிட்டாரென்றும் கூறுவர்.
ராஜகம்பீரமான தோற்றத்துடன் உள்ள இவர்களின் சிற்பங்கள் காண்பதற்கும் வசீகரமானவையாகும். ஸ்ரீசைலேச தனியனை பெருமாளால் குழந்தை வடிவில் மொழியப்பட்டது. இந்தத் திருச்சுற்றில்தான்.
இதில் உள்ள கிளி மண்டபம் திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்டதென்பர். துலுக்க நாச்சியார் சன்னிதியும் இத்திருச்சுற்றில்தான் உண்டு.
முதல் திருமதில்
சத்தியலோகம் எனப்படும் இந்த முதல் சுற்றை உண்டாக்கியவன் சோழமன்னன் தர்மவர்மன் என்று அறியப்படுகிறது.
இதன் நுழை வாயிலுக்குத் திருஅணுக்கன் திருவாசல் என்பது பெயர். கருவறை (மூலஸ்தானம்) அமைந்துள்ளது
இந்தச் சுற்றில்தான். பேரழகுடன் பெருமாள் சயனித்திருப்பது இந்த சத்திய லோகத்தில் தான்.
கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு ரங்கமண்டபம் என்று பெயர். இதை காயத்ரி மண்டபம் என்றும் சொல்வர்.
இதில் 24 தூண்கள் உண்டு காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாக இதைக்கூறுவர்.
ஏறத்தாழ 400 சோழர் கல்வெட்டுகள் உண்டு.
கி.பி. 1060-1063 இராச மகேந்திர சோழன் இங்குள்ள முதலாம் பிரகாரத்தின் திருமதிலை கட்டினான்.
எனவே அது இராசமகேந்திரன் திருவீதி என்றே வழங்கப்பட்டுள்ளது.
—————-
2–உறையூர் என்னும் திருக்கோழி
கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா— பெரிய திருமொழி 9-2-5-
திருக்கோழி என்னும் உறையூர் திருச்சி நகருக்குள்ளேயே அமைந்துள்ளது
இவ்வூர் உறையூர் என்றும் உறந்தை என்றும் நிகளாபுரி என்றும் அழைக்கப்படும்.
இந்த உறையூரில் தர்மவர்மாவின் வம்சத்தில் பிறந்த நந்தசோழன்என்னும் மன்னன் மிகச் சிறந்த பக்திமானாக
அரங்கனுக்குத் தொண்டு செய்வதில் பேரவா கொண்டவனாயிருந்தான்
புத்திரப்பேறில்லாத பெரும் கவலை மட்டும் அவன் நெஞ்சைவிட்டு நீங்கா திருக்கவே இதற்கும்
ஸ்ரீரங்கநாதனே பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான்.
பக்தனுக்கருளும் பரந்தாமன் வைகுண்டத்தில் இலட்சுமி தேவியைக் கடைக்கண்ணால் நோக்கி நந்தசோழனுக்கு புத்திரியாகுமாறு அருள,
உறையூரில் தாமரை ஓடையில் தாமரைப் பூவில் குழந்தையாக அவதரிக்க-வேட்டைக்குச் சென்ற நந்த சோழன் அம்மகவைக்கண்டெடுத்தான்.
கமலமலரில் கண்டெடுத்தமையால் கமலவல்லி என்று பெயரிட்டு அன்புடன்வளர்த்து வர நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கமலவல்லி திருமணப் பருவம் எய்தினாள்.
ஒருநாள் ஸ்ரீரெங்கநாதன் குதிரை மீதேறி பலாச வனத்தில் வேட்டைக்கு வந்ததுபோல் உலாவர, தோழிமாருடன்
அப்பக்கம் வந்த கமலவல்லி, எம்பெருமான் பேரழகைக்கண்டு யார் இவர் என வியந்தனள்.
தன் பேரழகை முழுவதும் எம்பெருமான் கமலவல்லிக்கு காட்டி மறைய, காதல் மோகத்தில் பக்தி வெள்ளத்தில் கலக்கலானாள்
கமலவல்லி.மகளின் நிலைகண்டு என்னசெய்வதென்று தெரியாது மன்னன் திகைத்து சிந்தனையில் மூழ்கியிருக்க,
அவன் கனவில் வந்த பெருமான் குழந்தைப் பேறில்லா நின் குறை தீர்க்கவே யாம் திருமகளை அனுப்பினோம்.
என்சன்னதிக்கு அழைத்துக் கொண்டுவா, ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்ல,
மிகவியந்து மகளை பலவாறாய் துதித்துப் போற்றி நகரை அலங்கரித்து கமலவல்லியைத் திருமணக்கோலத்தில் ஸ்ரீரங்கம் அழைத்துவர,
கோவிலினுள் நுழைந்ததும் கமலவல்லி மண்ணில்புக்கு மறைந்து அரங்கனோடு இரண்டறக் கலந்தாள்.
சேனை பரிவாரங்களுடன் இந்தக் காட்சியைக் கண்ட மன்னன் தான் பெற்ற பெரும் பேற்றை எண்ணி வியந்து
ஸ்ரீரங்கத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்து உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன்
திருமண நினைவாக மாபெரும் கோவில் எழுப்பினான்.
ஸ்ரீரங்கநாதனே அழகொழுகும் மாப்பிள்ளையாக வந்து திருமணம் செய்து கொண்டதால் அழகிய மணவாளன் ஆனார்.
(இவரே மீண்டும் ஒரு முறை வயலாளி மணவாளன் ஆவார். அதனை திருவாலி திருநகரி ஸ்தல வரலாற்றில் காணலாம்)
இந்நிகழ்ச்சி நடைபெற்றது துவாபரயுகத்தின் முடிவிலென்பர்.
கலியுகத்தில் ஒரு சமயம் இந்த உறையூரில் மண்மாரி பெய்து பட்டனம் முழுகிப்போக அதன்பின் சோழ மன்னர்கள்
கங்கை கொண்டானைத் தலைநகர் ஆக்கி ஆண்டுவருங்காலை இந்த உறையூரில் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவிலைத்தான் இப்போது நாம் காண்கிறோம். இவன் இக் கோவிலில் அழகிய மணவாளனையும் (ஸ்ரீ ரங்கநாதனின் திருமணக்கோலம்) கமல வல்லியையும் பிரதிட்டை செய்தான்
மூலவர்–அழகிய மணவாளன், நின்ற திருக்கோலம் வடக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்-கமலவல்லி நாச்சியார். உறையூர் வல்லி வடதிசை நோக்கி
திருமணத்திற்குத் தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலம்.
தீர்த்தம்-கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி
விமானம்-கல்யாண விமானம்
காட்சிக் கண்டவர்கள்–ரவிதர்மா, கமலவல்லி.
திருப்பாணாழ்வார் இங்குதான் அவதரித்தார். இத்தலத்தில் அவருக்கு தனிச் சன்னதி உள்ளது.
சோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானை யொன்று இவ்வூருக்குள் வந்தபோது ஒரு கோழி அதனை யெதிர்த்து யுத்தம் செய்து
தனது கால் நகங்களினாலும். அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றும் அதனால்
இவ்வூருக்கு கோழியூர் என்ற பெயருண்டாகித் திருக்கோழியாயிற்று. என்றுரைப்பர்.
குலசேகரப் பெருமாள் (குலசேகராழ்வார்) சேர, சோழ, பாண்டிய மண்டலங்கட்கு மன்னனாய் இந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டு
ஆண்டு வந்தாரென்றும், அவ்வமயம் இக்கோவிலுக்கு மதில் எழுப்பியும் அளவற்ற நிலதானமும் செய்தாரெனவும் அறியமுடிகிறது.
அல்லிமாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லையிலடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன்
சொல்லினின் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்க ளாவரே (பெருமாள் திருமொழி 2- 10 )
சிபிச் சக்கரவர்த்தி இந்த உறையூரிலிருந்து ஆட்சி புரிந்ததாகவும் சோழர்களின் முதல் தலைநகரமாக இந்த உறையூர் விளங்க,
காவிரிப் பூம் பட்டிணம் இரண்டாவது கடற்கரைத் தலைநகரமாக விளங்கியதென்றும்.
இளஞ்சேட்சென்னி என்னும் அரசன் இவ்வூரை ஆண்டதாகவும்
இறைவனின் பூஜைக்கு வைத்திருந்த மலர்களை அரசி தலையில் சூடிக்கொண்டதால் இறைவன் சினந்து இந்த ஊரை அழித்துவிட்டதாகவும்,
நெருப்பு மாரி இந்த ஊரில்பெய்ததாகவும் ஒரு வரலாறுமுண்டு.
மண்மாரி பொழிந்து இவ்வூர்அழிந்து பட்ட தென்பதற்கே ஆதாரம் அதிகம் எவ்வாறெனில் நன்றாயிருந்த
உறையூர் அழிந்துபட்ட தென்பதே நூல்கள் உரைக்கும் செய்தி,
உறையூரை ஆண்ட ஆதித்த சோழன் தன் பட்டத்து யானையின் மீது வரும்போது,வில்வ மரத்தின் நிழலில் மறைந்து இருந்த
சிவன் இவ்வூரின் பெருமையை அவனுக்கு உணர்த்த எண்ணி அம் மரத்தின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த
கோழியை நோக்க, அது உக்கிரம் கொண்டு யானையைக் குத்தி வீழ்த்தியது என்றும், இதை உணர்ந்த பின்பே, மன்னன் இவ்வூருக்கு
அந்தக் கோழியின் பெயரால், திருக்கோழி என்றே பெயரிட்டான்.
இவ்வூருக்கு, குக்கிடபுரி, வாரணபுரி, கோழியூர், திருமுக்கீசுரம் என்ற பெயர்களுமுண்டு.
கமலவல்லி நாச்சியாரை திருவரங்கன் அழகிய மணவாளனாக வந்து திருமணம் புரிந்ததை நினைவுகூறும் முகத்தான் இன்றும் வருடமொருமுறை
ஸ்ரீரங்கத்திலிருந்து அரங்கன் இங்கு எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன் ஏகாசனத்தில் இங்கு சேவை அளிக்கிறார்.
———–
3-திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவில்
பேரானைக் குறுங்குடி யெம் பெருமானைத் திருத்தண்கா
லூரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண்கடலேழும் மலையேழிவ் வுலகுண்டும்
ஆராதென் றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –பெரிய திருமொழி 5-6-2
இத்தலம் திருச்சியிலிருந்து வடக்கே நான்கு மைல் தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் உள்ளது.
ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு மைல் தூரம்.
பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது.
பிரம்மன், ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார்.
பிரம்மனின் பக்தியைச் சோதிக்க விரும்பிய திருமால் இத்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நிற்க
இதை யுணர்ந்தபிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க,
பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து
இவ்விடத்தே வழிபடவும் என்று கூறியதால் பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார்.
பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும்,
சிவனுடைய பிட்சா பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமியை திருமால் கேட்டுக் கொள்ள
அவ்விதமே மஹாலட்சுமி பிச்சையிட்டதும் இதுவரை நிறையாத கபாலம் நிரம்பியது. ஆதலால் பிராட்டிக்கும் பூரணவல்லி தாயார் என்னும் பெயர் ஏற்பட்டது.
தனது பிச்சை பாத்திரம் நிறைந்த காரணத்தால் சிவபெருமானும் இங்குபிட்சாடன் மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
திருமால் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்றே இத்தலம் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கரம்பனூர் ஆயிற்று, திருமங்கையாழ்வாரால் “உத்தமன்” என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோவிலாயிற்று. பன்னிரண்டு ஆழ்வார்களில்திருமங்கையாழ்வாரும், ஆண்டாளுமே பெருமாளை உத்தமன் என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர்.
ஓங்கி உலகளந்த உத்தமன் என்பது ஆண்டாளின் திருப்பாவை.
மூலவர்–புருஷோத்தமன், புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–பூர்ணவல்லி, பூர்வாதேவி எனவும் பெயர்.
தீர்த்தம்–கதம்ப தீர்த்தம், கதம்ப மர உருக்கொண்டு நின்ற பெருமானை தம் கமண்டல நீரால் பிரம்மா திருமஞ்சனம் செய்ய
அந்நீரே பெருக்கெடுத்து குளமாகத் தேங்கி கதம்பத் தீர்த்தமாயிற்று.
விமானம்–உத்யோக விமானம்
காட்சி கண்டவர்கள்–பிரம்மா, சிவன், உபரிசரவசு, ஸநக ஸந்தன. குமாரர்கள்,
ஸ்தல விருட்சம்– கதலீ (வாழை மரம்)
மும்மூர்த்திகளும், ஒரே கோவிலுக்குள் எழுந்தருளியுள்ள இக்காட்சி வேறெங்கும் கண்டற்கரியது. எனவே இது ஒரு த்ரிமூர்த்தி தலம்.
பிச்சையெடுத்து வந்த நிலையில் தனது பாத்திரம் (கபாலம்) நிறைந்ததால் பிட்சாடன மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.
எனவே பிட்சாண்டார் கோயில் என்ற மறுபெயரும் உண்டு.
ஜனகர் இங்குள்ள கதம்ப தீர்த்தக்கரையில் ஒரு யாகம் செய்தார்.
யாகத்தில் அவியுணவுகளை நாய் ஒன்று புசித்து மாசுபடுத்திவிட்டதால், அத்தோஷம் நீங்க கதம்ப மரத்தை பூஜிக்குமாறு ஜனகனிடம் முனிவர்கள் கூற,
மீண்டும் யாகத்தைத் துவக்கி கதம்ப மரத்தை பக்தி சிரத்தையோடு வழிபட அரவணையில் அறிதுயிலமர்ந்த கோலத்தில் தனது நாபியில் பிரம்மாவுடனும்,
அருகில் பிட்சாண்ட மூர்த்தியான சிவனுடனும் திருமால் ஜனகனுக்கு காட்சி கொடுத்தார்.
பக்தன் ஒருவனுக்கு மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்த ஸ்தலம் இது ஒன்றுதான்.
மும்மூர்த்திகளையும் ஒருங்கே கண்ட ஜனகர்தான், இங்கு மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் எடுத்தார் என்று வரலாறும் உண்டு.
ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம்.
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
சில மாதவஞ் செய்தும் தீ வேள்வி வேட்டும்
பல மாநதியிற் படிந்தும் உலகில்
பரம்ப நூல் கற்றும் பயனில்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல்-– என்பது பிள்ளை பெருமாளயங்காரின் பாடல்
ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப
தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத்திருவிழாவாகும்.
திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார்.
கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன்
தங்கியிருந்ததின் காரணமாகவே “ஆழ்வார்பட்டவர்த்தி” என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
கரம்பனூரில்” கோயில் கொண்டுள்ள உத்தமனை “தென்னரங்கத்தில்” கண்டேன் என்றார் திருமங்கையாழ்வார்.
இதற்கு வியாக்கியானம் செய்த பெரிய வாச்சான் பிள்ளை “வழிக்கரையிலே” திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்துகிடக்கிறவனை” என்றார்.
எல்லோரும் நடந்து செல்லக்கூடிய வழியாக இருப்பதனால் சேவிப்போர் எந்நேரமும் வரலாம் போகலாம் என்று எண்ணி
தனக்கு கதவு வைத்துக் கொள்ள அவகாசம் இல்லை என்று கதவிடாதே கிடந்து விட்டான் என்பது மற்றும் ஒரு
உரையாசிரியரின் கருத்து.-ஒரு காலத்தில் கதவு இல்லாமல் இருந்த இத்தலத்திற்கு இப்போது கதவு உண்டு.
இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் பிரமனுக்கு உள்ள கோயிலில் சரசுவதி தேவி எழுந்தருளியுள்ளாள்.
ஆண்டுதோறும் வரும் கார்த்திகை திருநாளன்று பெருமாளும் சிவனும் சேர்ந்தாற்போல் வீதி உலா வருவார்கள்.
——–
4. திருவெள்ளறை
ஸ்ரீரங்கத்திற்கும் முந்தியதான இதன் தொன்மையைக் குறிக்கவே ஆதிவெள்ளறை என்று இது அழைக்கப்படுகிறது.
திரு என்பது உயர்வைக் குறிக்கும். வெள்ளறை என்பது வெண்மையான பாறைகளாலான மலை என்பதைக் குறிக்கும்.
வடமொழியில் ஸ்வேதகிரி என்றும், உத்தம ஷேத்ரம், ஹித ஷேத்ரம் என்றும் பெயர் பெறுகிறது.
அயோத்திக்கு அதிபதியாய் விளங்கிய சிபிச் சக்ரவர்த்தி ஒரு சமயம் தன் படை பரிவாரங்களுடன் வந்து
திருவெள்ளறையில் தங்கி இருக்கும் போது, அங்கு தோன்றிய ஒரு வெள்ளைப் பன்றியைத் (ஸ்வேத வராம்) துரத்த
அது பக்கத்தில் உள்ள ஒரு புற்றில் சென்று மறைந்து விட்டது. இதனைக் கண்டு ஆச்சர்யமுற்ற சிபி
அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரை அணுகி வினவ, அவர் சொற்படி பன்றி மறைந்த
அப்புற்றுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்து வழிபட உடனே பகவான் சிபிச் சக்கரவர்த்திக்கும்,
மார்க்கண்டேயருக்கும் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளியதாகவும், அதனாலேயே
“ஸ்வதே வராஹத் துருவாய் தோன்றினான் வாழியே” என்ற திருப்பெயரும் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று.
மூலவர்–புண்டரீகாட்சன் (தாமரைக் கண்ணன்) நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்– செண்பகவல்லி, பங்கயச் செல்வி, உற்சவருக்கும் பங்கயச் செல்வி என்றே திருநாமம்.
விமானம்– விமலாக்ருதி விமானம்
காட்சி கண்டவர்கள்– சிபி, பூதேவி, மார்க்கண்டேயர் ப்ரஹ்மா, ருத்திரன்.
தீர்த்தம்– கோவில் மதிலுக்குள்ளேயே 7 தீர்த்தங்கள் உள்ளன.
1. திவ்ய தீர்த்தம்
2. வராஹ தீர்த்தம்
3. குசஹஸ்தி தீர்த்தம்
4. சந்திர புஷ்கரிணி தீர்த்தம்
5. பத்ம தீர்த்தம்
6. புஷ்கல தீர்த்தம்
7. மணிகர்ணிகா தீர்த்தம்.
மார்க்கண்டேயரின் வேண்டுகோளின்படி வடநாட்டில் வாழ்ந்து வந்து-3700 ஸ்ரீ வைஷ்ணவர்களை இங்கே
கொண்டுவந்து குடியேற்றி கோவிலையுங் கட்டிப் பெருமாளையும் பிரதிஷ்டை செய்தார் சிபிச் சக்கரவர்த்தி.
பிரதிஷ்டை செய்ததும் ஒரு வைஷ்ணவர் காலமாகிவிடவே மிகவும் மனம் வருந்தினார்.-சிபி. சிபிச் சக்கரவர்த்தியின் வேதனையைத் தீர்க்க பகவான்
ஒரு ஸ்ரீ வைஷ்ணவனின் வேடங்கொண்டு மன்னனிடம் வந்து வேதனைப் படாதே,-என்னையும் சேர்த்தே 3700 என கணக்கிட்டேன் என்று
ஸ்ரீவைஷ்ணவர்களின் மேன்மைக்கு அடையாளமிட்ட திவ்ய தேச இதனால்தான்
“பாங்குடன் மூவாயிரத்து எழுநூற்றாள் வாழியே” என்று தாயாருக்கு திருமொழி உண்டாயிற்று.
இங்குள்ள பூங்கிணற்றில் பகவானை நோக்கி தவம் செய்த பிராட்டிக்கு (பங்கயச் செல்வி) பெருமாள் செந்தாமரைக் கண்ணனாய் காட்சியளித்தார்.
எனவே கிருஷ்ணா வதாரத்தை மறைமுகமாக உணர்த்தும் ஸ்தலம். இதனால்தான். பெரியாழ்வாரும் இங்குள்ள பெருமாளை ஓடிவிளையாடும் கண்ணனாகப் பாவித்து பூச்சூட்டி, நீராட்டி காப்பிட்டு மகிழ்கிறார் தமது பாசுரங்களில்.
பூங்கிட ங்கில் தவம் செய்யும் பொற் கொடியாள் வாழியே
பொரு நீலி வனத்தில் வந்த பூ மகளார் வாழியே
தேங்கு சுனை சூழ்ந்த திரு வெள்ளறையாள் வாழியே
செல்வத்தில் வளர்கின்ற திரு மகளார் வாழியே
பாங்குடன் மூவாயிரத்து எழு நூற்றான் வாழியே
பத்ம தள பர்வதத்தின் மேல் அமர்ந்த பங்கயத்தாள் வாழியே
ஏங்கும் நம்மை ஈடேற்ற இனிது அமர்ந்தான் வாழியே
எழில் பங்கயச் செல்வி இணை அடிகள் வாழியே
இங்கு எழுந்தருளியுள்ள ஜீயர் சுவாமிகளுக்கும் பங்கயச் செல்வி ஜீயர் என்னும் அழகு தமிழ்ப் பெயரே பிராட்டியின் நினைவாக இலங்குகிறது.
இக்கோவிலுக்கு அருகில் “நீலிவனம்” (திருப்பைஞ்ஞீலி) என்னும் கிராமம் உள்ளது.
சிவன் தன்கையில் ஒட்டிக் கொண்ட கபாலம் நீங்குவதற்காக இப்பெருமாளை வழிபட்டதால்,
நீலி வனத்தில் இப்பெருமாளை வழிபட்ட வண்ணமான சிவஸ்தலம் இன்றும் உள்ளது.
பிரம்மனுக்கும் இத்தலத்தில் காட்சி கொடுத்தமையால் மும்மூர்த்திகளும் (மறைமுகமாக) ஒருங்கிட்ட ஸ்தலம்.
இங்கு ஸ்வஸ்திக்குளம் என்று சொல்லப்படும், சக்ரகுளம் ஒன்று உள்ளது. இதில் ஒரு துறையில் குளிப்பவர்களை
இன்னொரு துறையில் குளிப்பவர்கள் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
உத்ராயணவாசல், (தை முதல் மார்கழி வரை திறந்திருக்கும்) வழியாகவே பெருமாளை வழிபட வேண்டும்.
6 மாதத்திற்கு ஒரு முறை வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே சென்று எம்பெருமானை வழிபடும் நடைமுறை இங்கு தவறாமல் பின்பற்றப்படுகிறது.
ஸ்ரீதேவி, பூதேவி, சூரிய, சந்திரன், ஆதிசேடன் இவர்கள் மானிட உருவில் இங்கு நின்று பெருமாளை வழிபடுவதாக ஐதீஹம்,
இவ்வமைப்பில் இங்குள்ள திருக்கோலம் கண் கொள்ளாக் காட்சி,
“இந்திரனோடு, பிரமன், ஈசன், இமையவரெல்லாம், மந்திர மாமலர் கொண்டு வந்து மறைந்தவராய் வந்து நின்றார்,
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை” என்பது பெரியாழ்வாரின் பாசுரம்.
திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் மங்களாசாசனம், (மொத்தம் 24 பாசுரம்)
ஸ்ரீ நாதமுனிகளின் சீடரான உய்யக் கொண்டார் என்ற வைணவ மேதாவியும், முற்றுப் பெறாமல் இருந்த
ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்த விஷ்ணு சித்தர் என்ற எங்களாழ்வான், (இவரது மேதா விலாசத்தைக் கண்டு
எம்பெருமானேரே இவரை எங்களாழ்வான் என்று சொன்னதாக ஐதீஹம்)-மேற் குறிப்பிட்ட இருவரும் அவதரித்த ஸ்தலம்
————
5 திரு அன்பில்
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேர் அன்பில் – நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கு மாதி நெடுமால்
அணைப் பார் கருத்தனாவன்— நான்முகன் திருவந்தாதி – 36
ஸ்ரீரங்கத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது.
டோல்கேட்டில் இருந்தும், திருச்சியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் செல்லலாம்.
திருப்பேர் நகர் என்று அழைக்கப்படும் (அப்பக் குடத்தான்)
சன்னிதியிலிருந்து கொள்ளிட நதிக் கரையை கடந்து நடந்தே வந்தால் சுமார் 2 கி.மீ. தூரம் தான் ஆகும்.
புராண நூல்கள் இத்தலத்தைப் பிரம்மபுரி என்று குறிப்பிடுகின்றன.
பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டு, பிரம்மாவின் கபாலம் (மண்டை ஓடு) சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது.
அத்துடன் பல ஸ்தலங்களை தரிசித்து கொண்டு வந்த சிவன் கரம்பனூர் என்னும் உத்தமர் கோவிலுக்கு வந்த
அங்கு மஹா லட்சுமி இட்ட பிச்சையால் கபாலம் நிறையப் பெற்ற பின் கண்டியூர் செல்லும் வழியில் சிவபெருமான்
இத்தலத்தையும் வந்து வழிபட்டு சென்றார். இவ்வரலாறு கந்த புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.
சிவபெருமான் இத்தலத்திற்கு வந்து சென்ற வரலாறு பல நூல்களில் இல்லாவிட்டாலும் இங்கு கர்ண பரம்பரையாக வழங்கி வரும் செய்தியாகும்.
இத்தலத்தோடு தொடர்பு கொண்ட பலபுராணங்களிலும் பேசப்படும் வரலாறு ஒன்று உண்டு.
ஒருரிஷியானவர் தண்ணீருக்குள் மூழ்கி தவஞ் செய்வதில் பெருஞ் சக்தி பெற்று விளங்கினார். இதனால் அவர் மண்டுக மஹரிஷியென்றே அழைக்கப்பட்டார்.-இவர் ஒரு சமயம் தவத்தில் ஈடுபட்டிருக்கும் போது இவரைக் காண வந்த துர்வாச முனிவர் வெகுநேரம் காத்திருந்தார்.
ஆனால் மண்டுக மஹரிஷியோ தவத்திலிருந்து மீளவில்லை. இதனால் தன்னை அலட்சியப் படுத்துவதாகக் கருதிய
துர்வாசர் சினந்து இம்முனிவரை மண்டூகமாகவே (தவளையாக) போகுமாறு சபித்தார்.
இந்த மண்டுக மஹரிஷி இவ்விடத்தில் தவமிருந்து மஹாவிஷ்ணு பிரத்யட்சமாகி துர்வாச முனிவரின் சாபத்தை நீக்கினார்.
இதனால் இவ்விடத்திற்கு மண்டுக புரி என்ற பெயரும் உண்டு.
மூலவர்–வடிவழகிய நம்பி, கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
உற்சவர்–சுந்தர ராஜன்
தாயார்–அழகிய வல்லி நாச்சியார்
தீர்த்தம்–மண்டுக தீர்த்தம் – கொள்ளிடம்-விமானம்– தாரக விமானம்
காட்சி கண்டவர்கள்–சிவன், பிரம்மா, ஊர்வசி
இவ்விடம் வால்மீகியின் அவதாரஸ்தலம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. வால்மீகி தமிழ் நாட்டிலிருந்து சென்றவர் என்று கூறும்
ஆராய்சியாளருக்கு இங்குள்ள கல்வெட்டுகள் உதவும். இத்தலத்து எம்பெருமான் வால்மீகிக்கும் காட்சி கொடுத்ததாக அறியும் செய்தியும்
வால்மீகிக்கும் இத்தலத்திற்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்துகிறது.
———
6. கோவிலடி என்னும் திருப்பேர் நகர்
இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புராணம் இதனை பலசவனச் ஷேத்திரம் என்று பகர்கிறது. தமிழில் புரசாங்காடு என்பதையே வட வானர் பலசவனம் என்று எடுத்தாண்டுள்ளனர்.
இவ்விடத்து புரசஞ் செடிகள் இன்றும் அளவு கடந்து பல்கிக் கிளைத்து சூழ்ந்து வளர்ந்தோங்கிய காட்சியைக் காணலாம்.
உபமன்யு என்னும் மன்னன் துர்வாச முனிவரின் சாபத்தால் தன்பலமிழந்து போக அதற்கு விமோசனம் வேண்ட
இப்பலசவனம் ஷேத்திரத்தில் லட்சம்பேருக்கு அன்னதானம் அளித்தால் (ததி ஆராதனம்) சாபந்தீரும்
என்று துர்வாசர் தெரிவிக்க இத்தலத்தின் அருகில் ஒரு அரண்மனையெழுப்பி அன்னதானம் செய்யலானார்.
நீண்டகாலமாக அன்னதானம் தொடர்ந்து நடந்து வருகையில் ஒருநாள் ஸ்ரீமந்நாராயணனே
கிழப்பிராமண வேடங்கொண்டு இங்கு வந்து அன்னம் கேட்க அவருக்கும் பரிமாறப்பட்டது.
ஸ்ரீமந்நாராயணன் அன்றைய தினம் தயாரிக்கப்பட்ட உணவு முழுவதையும் உண்டு தீர்க்க
“இதென்ன காரியம்” என்று வியந்த மன்னன் இன்னும் என்ன வேண்டுமென்று கேட்க எனக்கு
ஒரு குடம் அப்பம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல அப்பம் செய்து கொண்டுவரப்பட்டது.
அந்த அப்பக் குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யு சாபம் தீர்ந்ததென வரலாறு.
இதனால் இப்பெருமானுக்கு “அப்பக்குடத்தான்” என்னும் பெயருண்டாயிற்று.
இப்பெருமானின் வலது கை ஒரு அப்பக் குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது.
ததி பாண்டனுடன் த்தி பாண்டமும் முக்தி பெற்றதை நேராகவே இங்கு காணலாம் –
மூலவர்–அப்பக்குடத்தான், அப்பால ரெங்கநாதன் புஜங்க சயனம்.
தாயார்–1. இந்திரா தேவி 2. கமலவல்லி
தீர்த்தம்–இந்திர தீர்த்தம்
விமானம்–இந்திர விமானம்
காட்சி கண்டவர்கள்– உபமன்யு, பராசரர்
இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்றும், ஸ்ரீரெங்கத்திற்கு முன்னதாக ஏற்பட்டதென்றும் அதனால் தான் கோயிலடி
அதாவது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த ஸ்தலமென்பதால் கோவிலடி என பெயர் பெற்றதாக கர்ண பரம்பரை.
அப்பாலரங்கம் ஸ்ரீரங்கத்தைவிட முன்னானது என்னும் கருத்தை ஒப்பலாம்.
பஞ்ச ரங்கம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்கங்களில் இதுவும் ஒன்று.
1. ஆதிரங்கம் – ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்)
2. அப்பால ரெங்கம் – திருப்பேர் நகர்
3. மத்தியரங்கம் – ஸ்ரீரெங்கம்
4. சதுர்த்தரங்கம் – கும்பகோணம்
5. பஞ்சரங்கம் – இந்தளூர் (மாயவரம்)
நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார்,
பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் 33 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.
நம்மாழ்வார் இப்பெருமானைப் பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச் சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது தான்.
பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே -திருவாய்மொழி 10-8-2
அதனால்தான் பெருமானுக்குள் “அடங்கப் பிடித்தேன்” என்றார் போலும்.
பேர் நகரில் வணங்கிப் போன பின்பும் அப்பக்குடத்தான் திருமங்கை மன்னனை விடாது பின் தொடர்கிறார்
தம்மை விட்டு நீங்காத அந்த அர்ச்சாவதார சோதியை திருவெள்ளறை சென்று கண்டேன் என்று மீண்டும்
மங்களாசாசனம் செய்கிறார்.
துளக்கமில் சுடரை, அவுணணுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
விளக்கினை, சென்று வெள்ளறைக் காண்டுமே.
7. திருக்கண்டியூர்
பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்துண்ணும்
உண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர், உலகமேத்தும்
கண்டியூர ரங்கம் கச்சிபேர் மல்லை யென்று
மண்டினார் குயலல்லால் மற்றையோர்க்குய்யலாமே –திருக்குறுந்தாண்டகம் – 19-
திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவிலில், மஹாவிஷ்ணு கேட்டுக் கொண்டதற்கிணங்க
மஹாலெட்சுமி (பூர்ணவல்லி தாயார்) பிரம்ம கபாலத்தில் பிச்சையிட்டதும் அது நிறைந்து சிவனின் பசித்துயர் ஓய்ந்தது.
பாத்திரம் (கபாலம்) நிறைந்து பசித்துயர் ஓய்ந்தபோதும் மண்டையோடு மட்டும் கையைவிட்டு நீங்காமலிருக்கவே
அவ்விடத்திலிருந்தே திருமாலை நினைத்து சிவன் வழிபட, அப்போது திருமால் சிவபெருமானைக் கண்டியூர் வந்து
பத்ம தீர்த்தத்தில் நீராடி அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரையும், என்னையும் வழி பட்டால் கபாலம் கையைவிட்டு அகலும் என்று சொல்ல, அவ்வண்ணமே கண்டியூர் வந்து தீர்த்தத்தில் நீராடி எழுந்ததும் கபாலம் அகன்றது.
இவ்வாறு அரன் சாபம் தீர்த்ததால் ஹரசாப விமோசனப் பெருமாள் என்றே இங்கு திருமாலுக்கும் பெயர் உண்டாயிற்றென்பது வரலாறு.
சில நாட்கள் இங்குள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியதாகவும், சற்றே மாறுபட்ட தொனியிலும் இக்கதை பேசப்படுகிறது.
சிவனுக்கு கண்டீச்சுவரர் என்று ஒரு பெயர் இருப்பதால் அவர் சாபந்தீர்ந்த நினைவாக கண்டியூர் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது.
மூலவர்–ஹர சாப விமோசனப் பெருமாள்–. நின்ற திருக்கோலம்.- கிழக்கே திருமுக மண்டலம்- கமல நாதன் என்ற திருப்பெயரும் உண்டு.
உற்சவர்- உற்சவருக்கும் இரண்டு திருநாமங்கள் பிரதானம்.
தாயார்.– கமலவல்லி நாச்சியார்
விமானம்– கமலாக்ருதி விமானம்
தீர்த்தம்1. கோவிலுக்குச் சற்று மேற்கே இருக்கும் கபால மோட்ச புஷ்கரிணி.
2. கோவிலுக்கு எதிரில் இருக்கும் ஹத்யா விமோசன தீர்த்தம் என்ற பத்ம தீர்த்தம். இதற்கு பலி தீர்த்தம் எனவும் பெயர்.
காட்சி கண்டவர்கள் 1. சிவபெருமான். 2. அகத்தியர்
சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக
தானும் இவ்விடத்தே கோவில் கொண்டார். எனவே இது ஒரு மும்மூர்த்தி தலம்.
தற்போது இங்குள்ள பிரம்மாவின் கோவில் மூடப்பட்டு
பிரம்மா மற்றும் ஸரஸ்வதிசிலைகள் சிவபெருமானின் தலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கண்டன ஷேத்ரமென்றும், பஞ்சகமல ஷேத்ரமென்றும்
அழைக்கப்படும் இங்கு ஐந்து கமலங்கள் உள்ளன. அதாவது
கமலா ஷேத்ரம்,
கமலா புஷ்கரணி,
கமல விமானம்,
கமலநாதன்,
கமலவல்லி நாச்சியார் என ஐந்து.
இத்தலம் ஸ்ரீரங்கத்தைவிட மிகவும் தொன்மைவாய்ந்தது. இத்தலத்தின் முதல் பெருமாள் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனும், நவநீத கிருஷ்ணனும் ஆவார்கள்.
பல சதுர்யுகங்களுக்கு முன்னால் உண்டானது இந்த திவ்ய ஷேத்ரம்.
ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூலை எழுதிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்னும் மஹான் கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சார்ந்தவர்.
கண்டியூர் பெருமான் மீது அளவு கடந்த பக்தி பூண்டவர்.
நினைத்த காரியத்தை நிறைவேற்றச் செய்யும் வரப்பிரசாத வடிவமான, ஸ்ரீ லட்சுமி நரசிம்மன், ஸ்ரீ மகா சுதர்சனன், சிலைகள் அழகிலும், அருளிலும் பொலிவுற்று திகழ்பவை.
பேசவரின் தென்னரங்கன் பேரெல்லாம் பேசுக வாய், கேசவனைக் காண்க விழி, கேட்க செவி – ஈசனார்
உண்டியூர் தோறுமுழன் றிரவாமல் தவிர்த்தான்.
கண்டியூர் கூப்புக என்கை – என்று நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி புகலும்.
திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். ஒரே ஒரு பாடலில் இத் தலத்துப் பெருமை பற்றிக் கூறுகிறார். இத்தலத்தோடு சேர்ந்து ஸ்ரீரங்கம், கச்சி (காஞ்சி) பேர் (திருப்பேர் நகர் என்னும் கோயிலடி) மல்லை என்னும்
திருக்கடன் மல்லை என்னும் நான்கு ஸ்தலங்களையுஞ் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.
சேக்கிழாரின் பெரியபுராணமும், கந்தபுராணமும் பிரம்மனின் மண்டையோடு சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டதைப் பற்றிப் பேசுகின்றன.
மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஒரு சமயம் இக்கோவிலின் முகப்பில் நின்று சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் உண்டாக
அப்போது இப்பெருமான் திப்பு சுல்தானை ஆட்கொண்டார் எனவும்.
இப் பெருமான் மீது பக்தி கொண்ட திப்பு, கோவிலை வலம் வந்து போர் முடித்து வென்றார் என்பதும்
கர்ண பரம்பரையான பழங்கால வாய்வழிக் கதையாகும்.
8. ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்னும் திருக்கூடலூர்
கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ
ரேற்றா னெந்தை பெருமானூர் போல்
சேற்றே ருழவர் கோதை போதூண்
கோற்றேன் முரலுங் கூடலூரே — பெரிய திருமொழி 5-2-4-
கூடலூர் என்றதுமே அனைவருக்கும் நினைவுரக் கூடியது மதுரையேயாகும். ஆனால் இந்தக்கூடலூர் அதுவன்று.
ஸங்கம ஷேத்ரம் என்று அழைக்கப்படும் இத்திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது.
மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர்.
அதேபோல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து
சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ள ஆடுதுறை என்னும் நகரமன்று.
ஏற்கனவே சொன்னது போல் திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
இந்த எளிய கிராமத்தின் பெயர் ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே வழங்கப்படுகிறது.
திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம் தான் என்று புராணங்கள் பேசுகின்றன.
இதனைத் திருமங்கையின் மேற்படி பாடலும் சான்று காட்டும்.
திருமால் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத் தாங்கி காட்சி தந்தார் என்பர்.
மஹாலெட்சுமியைக் காக்கும் பொருட்டு வராஹ அவதாரமெடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் காட்சி கொடுத்ததாலும்
முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால்
திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைமட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தைப் பாடாது விட்டாரென்றும் ஆன்மீக ஆய்வாளர் கூறுவர்.
அம்பரிஷனுக்கு அருளியதால் அம்பரிஷ வரதரென்றும் —வையங்காத்த பெருமானென்றும் இங்கு பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது.
ஒரு சமயம் பொன்னியில் வெள்ளப்பெருக்கு உண்டாகி அதன் கரையிலிருந்த (காவேரிப் பிரளயம் என்றும் இதனைக் கூறுவர்)
இக்கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து மண்மேடாகிவிட்டது.
மூலவரும் உற்சவரும் தாயாரும், இதர விக்ரஹங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
கோபுரத்தையும், மதில்களையும், இதர விக்ரஹங்களையும் வெள்ளம் இடித்துச் சென்றாலும் மூலவர், உற்சவர், தாயார் மட்டும்
பொன்னியின் போக்கில் சென்று ஒருபுறம் ஒதுங்கி நிற்க, மீன் வேட்டைக்குச் சென்று வந்த பரதவர் வலையில் சிக்கி
அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் சேரியில் அமர்ந்தனர்.
வெள்ளம் வடிந்து வானம் வெறிச்சோடிய சில தினங்களில் மதுரையில் நிலாமுற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் கனவில் மஹாவிஷ்ணு தோன்றி ஆற்றங்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்கு கோவில் கட்டுமாறு கேட்டுக்கொள்ள
தனது தளபதி கிருஷ்ணராஜு நாயக்கருடன் படை பரிவாரத்துடன் தஞ்சைத் தரணி நோக்கிப் புறப்பட்டு
அழிந்த கோவிலைப் பார்வையுறுங்கால், சேரித் தலைவன் மீனவன் ராமன் என்பான் ஓடிவந்து இறைவன் தமது சேரியிலிருப்பதை தெரிவிக்க,
ராஜ மரியாதையுடன் வழிபாடியற்றி அவைகளைப் பெற்றுக் கொள்ள எவ்விடத்தில் கோவில் கட்டுவதென்ற ஐயம் எழ,
சேரிக்கருகாமையில் பேரொளி தோன்றி அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால்
உணர்த்தினான் என்றே நினைத்து அவ்வொளி தோன்றிய இடத்தில் (ஆடுதுறை கிராமத்தில்) ராணி மங்கம்மாவினால் இப்போதுள்ள கோவில் கட்டப்பட்டது
எண்ணற்ற தான தர்மங்களுடன் பெருஞ்சிறப்பான வழிபாடுகள் இக்கோவிலில் நடைபெற்று வந்தன.
சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட உற்சவரும் தாயாரும் மட்டும்தான் இக்கோவிலில் உள்ளனர்.
மூலவர் அருகில் உள்ள வழுத்தூர் என்னுமிடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
மூலவர்-வையங்காத்த பெருமாள் (ஜெகத்ரட்சகன்) உய்யவந்தார் என்னும் திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–பத்மாசனி, புஷ்பவல்லி.
உற்சவர்–மூலவருக்கு உள்ள பெயர்களே
தீர்த்தம்– சக்கர தீர்த்தம், இந்திர தீர்த்தம், காவேரி நதி
விமானம்– சுத்தஸ்தவ விமானம்
காட்சி கண்டவர்கள் – அம்பரிஷி, நந்தக முனிவர், காவேரி
மும்மூர்த்திகளில் திருமாலை, காலால் உதைத்த பிருகு முனிவர் மஹாவிஷ்ணுவே பொறுமையின் சிகரம் என்பதை உணர்ந்து
தாம் செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடும் முகத்தால் மஹாலெட்சுமியே தனக்கு மகளாக வரவேண்டுமென்றும்,
அவரை வளர்த்து தம் பாவம் போக்கி மீண்டும் திருமாலுக்கு அளிக்கவேண்டும் என்று
இத்தலத்தில் தவமிருந்து அது நிறைவேறியதாக ஐதீகம். -இதே கதைதான் கும்பகோணத்திலும்
நந்தக முனிவரோடு தேவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வழிபட்டமையால் இதற்கு கூடலூர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.
ஆஞ்சநேயர் ஒரு சமயம் விண்வெளியில் சென்று கொண்டிருக்கும்போது இக்கோவிலில் இருந்த ஜனத் திரளைக் கண்டு வியந்து,
இது என்னவென்று பார்க்க வந்தவர், தனது தெய்வம் ஸ்ரீராமருக்கே மக்கள் இங்கு வழிபாடு எடுக்கிறார்கள் என்று தாமும் அவர்களோடு கலந்து
ஆனந்தக் கூத்தாடி மூர்ச்சித்துக் கிடக்க, ஒளிமயமாக பெருமாள் ஆஞ்சநேயருக்கு காட்சி கொடுத்தாராம்.
இதன் நினைவாகவே இக்கோவிலின் முன் கூத்தாடும் பாவனையில் ஆஞ்ச நேயருக்கு இன்றும் ஒரு சிறிய கோவில் உள்ளது.
இந்தக் கூடலூர் சோலையில் ஒரு தென்னை மரத்தில் வாழ்ந்து வந்த கிளியொன்று தினமும் ஒரு நாவல் பழத்தைக்
கொண்டு வந்து பெருமானுக்குச் சமர்ப்பித்து விட்டு ஹரி, ஹரி என்றும் கூவும் பழக்கம் கொண்டிருந்தது.
ஒரு நாள் அவ்விதமே நாவல் பழத்துடன் ஹரியின் பூசைக்கு வந்துகொண்டிருக்கும்போது வேடன் ஒருவனால் எய்யப் பட்ட அம்பால்
கழுத்தறுபட்டுத் தரையில் வீழ்ந்து துடிக்க, அதை எடுக்க வந்த வேடன் அக்கிளியைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பதைக் கண்டு பயந்து ஓடிப்போக,
தன் உயிர் பிரியும் தருவாயில் கூட அக்கிளி ஹரி, ஹரி என்றே முனக, இறுதியில்
அக் கிளிக்கு திருமால் காட்சி கொடுத்து நீ முன்பிறவியில் வித்யா கர்வத்துடன் அனைவரையும் இகழ்ந்து பேசவே
இப்பிறவியில் எனது பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே திரியும் கிளியாக ஆனாய்.
வேடனின் அம்பு பட்டதும் நினது பூர்வ ஜென்ம பாபம் தொலைந்தது என்றதும் ஜோதிமயமான மானிட உருப்பெற்று இறைவனுடன் அக்கிளி கலந்த காட்சியை எண்ணற்ற மக்கள் கண்டு ஹரி, ஹரி, ஹரி என்று விண்ணைப் பிளக்க கோஷமிட்டனர் என்று புராணங் கூறும்.
————-
9. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா, தீ
மாற்றமும் சாரா வைகயறிந்தேன் – ஆற்றங்
கரைகிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும், மாயன்
உரைக் கிடக்கு முள்ளத் தெனக்கு
தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில்
உள்ளது. இவ்வழியில் 4 திவ்ய தேசங்கள் உள்ளன
மூலமே யென்ற கரிமுன் வந்திடர்
தொலைத்து நீலமேகம் போல் நின்றான்”
கூற்றுரல் கராவின் வாயின்றழைத்த
குஞ்சர ராஜன் முன் அன்று –
தோற்றிய படியே தோற்றினான் – முடிவும்
தோற்றமும் இலாத பைந்துழவோன்”–குஞ்சரம் என்றால் யானை, கரா என்றால் முதலை.
மூலவர்–கஜேந்திர வரதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–ரமாமணவல்லி (பொற்றாமரையாள்)
விமானம்- ககநாக்ருத விமானம்
காட்சி கண்டவர்கள்–கஜேந்திரன் என்ற இந்திராஜு ம்னன் முதலையாயிருந்த, கூஹூ.
தீர்த்தம்– கஜேந்திர புஷ்கரணி, கபில தீர்த்தம்.
———-
10. திருப்புள்ளம் பூதங்குடி
இத்திவ்ய தேசம் திரு ஆதனூர் திவ்ய தேசத்திலிருந்து சுமார் 3 பர்லாங் தூரத்தில் உள்ளது.
ஸ்ரீரங்கத்தைப் போலவே இத்தலமும் காவேரி கொள்ளிடத்திற்கு மத்தியில் உள்ளது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் அவதாரஸ்தலமான
மண்டங்குடி இங்கிருந்து சமீப தொலைவில் உள்ளது.-
நான்கு கரங்களுடன் சங்கு சக்ரதாரியாக ராமன் சயன திருக்கோலத்தில் உள்ள ஸ்தலம் 108 இல் இது ஒன்றுதான்.
மூலவர்–வல்வில் இராமன், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–பொற்றாமரையாள்
விமானம்– சோபன விமானம்
காட்சி கண்டவர்கள்– க்ருத்ரராஜன்
ஸ்ரீவைணவர்கட்கு) இரண்டு பூதபுரிகள் உண்டு.-ஒன்று ஸ்ரீபெரும்புதூர்.-அது ராமானுஜர் அவதரித்த இடம். இதை ஆழ்வார்கள் அபிமானித்தார்கள்.
அதை ஆச்சார்யார்கள் அபிமானித்தார்கள்.
சூரியனின் மகன்ஜடாயு-ஆதித்தன் மகனன்ன அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயென்பான்”–உயிர் கிடக்க உடலை விசும்பேற்றினார் உணர்விறந்த கூற்றினாரே”
மறங்கொண்டங்கி ராவணன் தன் வலி கருதி வந்தானை புறங்கொண்ட சடாயென்பான்”
தூய்மையின் இருங்கலைத் துணிந்த கேள்வியன்
வாய்மையின் மறுஇலன் மதியின் கூர்மை
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்
சேய்மையின்நோக்குறு சிறு கணான்
தூய்மையின் இருங்கலை துணிந்த கேள்வியர் – அதாவது-ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு தத்துவங்களை அறிந்தவர்.
வாய்மையின் மறு இலன் – அதாவது வாக்கு மாறாத் தன்மை பெற்றவர்.
மதியின் கூர்மை ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – அதாவது இவரின் அறிவானது திருமந்திரத்தை அறிந்த கூர்மையுடையது –
சேய்மையின் நோக்குறு சிறு கணான் – அதாவது வெகு தொலைவில் நடப்பதைக் காணக்கூடிய ஆற்றல் பெற்ற சிறிய கண்களை உடையவர் –
ஜடாயு என்ற வட சொல்லுக்கு – பலமயிர்கள் சேர்த்து திரித்த ஜடைபோல பலவாய் மிக்குத் திரண்ட ஆயுள் உடையவரென்றும், சிறகில்
உயிரை உடையவரென்றும் சடை உடையவரென்றும் பொருள்
தகப்பனாருக்குச் ச்ரம பரிஹாரம் பண்ணப் பெறாமையால் உண்டான குறை தீர ஜடாயுவுக்கு அதைச் செய்து அவனுக்கு மோட்சம் தந்து
அம்மகிழ்ச்சியால் பொலிவுறத் திகழ்ந்த இராமனை வல்வில் ராமன் என்றுதமிழில் வர்ணிக்க வடமொழியில் இதே பொருளில் த்ருட தந்வி என்று
வர்ணிக்கின்றனர்.
செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார்ந்த தடந்தோளோடும் தாழ்தடக் கைகளோடும்
அம்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றமென்ன
வந்தான் இவன்ஆகும் அவ்வல்வில் இராமன் என்பான்–சூர்ப்பணகை வார்த்தை
பூத்புரி ஷேத்ர வந்தே புன்னைவந ஸம்ஸ்திதம்
ஸௌமித்ரே சார சாஷ்டாநி நிர்மதிஷ்யாம பாவகம்
க்ருத்ராதம் திஷாஷாமி மத்க்ருதே நிதநம்கரம் – ஸ்ரீ ராமாயணம், ஆரண்யகாண்டம் 68-27
வைம் முத்தவா சிதலம் தீப்தா மரோப்ய பதகேச்வரம்
ததாளைராமோ தர்மாத்மா ஸ்வபந்து பிவ துக்கித்— 68-31
விமாநே ஸோபநே அம்புஜஸ்ரீ ஸீஸ மக்ரதம்
க்ரூத்ராஜண் புஷ்கரணித்தீரே லஷமனோலஷ்மி ஸம்பன்ன”
———
11. திரு ஆதனூர்
என்னை மனங்கவர்ந்த ஈசனை – வானவர்தம்
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”– பெரிய திருமடல் 126 – 129
இத்தலம் சுவாமி மலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ளது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது.
இத்தலத்து எம்பெருமானைச் சேவித்துவிட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு நடந்தே சென்றுவிடலாம்.
ஆவாகிய காமதேனு மகாவிஷ்ணுவிடம் சரணடைய வேண்டுமென்று இத்திருத்தலத்தில் தவமிருந்து அது சித்தித்தது. காமதேனு தவமிருந்ததால்
ஆ+தன்+ஊர் ஆதனூராயிற்று. இங்குள்ள எம்பெருமானை ப்ருகு மஹரிஷியே பிரதிஷ்டை செய்ததாக ஸ்ரீபாஞ்ராத்ர ஆகமத்தில் உள்ள பௌஷகா
ஸம்ஹிதையின் மூலம் அறியப்படுகிறது.
இந்திரன் இத்தலத்தில் வந்துவேண்ட அவனது சாபம் தீர்ந்து இழந்தது பெற்றான். சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ள அது கையில் ஒட்டிக்
கொள்ள அதைச் சுட்டெரித்து சாம்பலாக்குமாறு சிவன் அக்னிதேவனிடம் செல்ல அக்னியால் அது முடியாமல் போனது மட்டுமன்றி அவனையும்
பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அப்பாபம் நீங்க அக்னி பகவான் இத்தலத்தில் கடுந்தவமிருந்து எம்பெருமான் காட்சி தந்து சாபம் போக்கினார்.
எல்லா தேவர்களுக்கும் அக்னி பதிலியாக இருந்தபடியால் அக்நிர்வை ஸர்வ தேவர் என்பர் இத்தன்மைத்தான அக்னியின் தோஷமும், இந்திரன்
சாபமும் நீங்கினமையால் இத்தலம் தேவாதி தேவர்களின் ஸ்தலமாக கருதப்படுகிறது.
ஆதிரங்கேச்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம்
ப்ருகு, அக்னி, காமதேனுப்யோ தத்தாபீதம் தயாந்திரம்
விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸு ஸ மாசரிதம் ஸு ர்ய
புஷ்கர்னி திரே சேஷஸ்யோபரி ஸாயிநம்-
மூலவர்-ஆண்டளுக்கும் ஐயன், தலையின் கீழ் மரக்காலும் இடது கரத்தில் ஓலை எழுத்தாணியுடன், கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட திருக்கோலம்.
தாயார்- பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி.
உற்சவர்– அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்)
விமானம்– ப்ரணவ விமானம்
வ்ருட்சம்– புன்னை, பாடலி
தீர்த்தம்– சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
காட்சி கண்டவர்கள்–காமதேனு, ப்ருகுமுனிவர், அக்னி பகவான், திருமங்கையாழ்வார்.
இத்தலத்தில் காமதேனுவுக்கும், காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள் உண்டு.
ஸ்ரீரங்கத்திற்கு இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுதல் போன்று இத்தலத்திற்கும் 2 கல் தொலைவில் இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும்
ஓடுகிறது.–ஒரு காலத்தில் திருவரங்கம்போன்று இங்கும் 7 மதில்கள் இருந்ததாகவும் பிற்காலத்தே காலவெள்ளத்தே அழிந்துபட்டது என்றும் அறிய முடிகிறது.திருவரங்கம் கர்ப்பகிருகத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு தங்கத் தூண்களை மணத்தூன் என்றும் சொல்வார்கள். இதேபோன்று ஆதனூரிலும் எம் பெருமானின் கர்ப்பகிருஹத்திற்குள் இத்தூண்கள் உண்டு
மிகச் சிறப்புற்று விளங்கிய இக்கோவிலின் பழைய அமைப்பு பூமிக்கு அடியில் புதைந்துவிட அச்சமயம்-காஷ்மீர் தேசத்து ராஜாவின் புதல்விக்கு (பேய்) பிர்ம்மராட்சஸு பிடித்து, எவ்வளவு பாடுபட்டும் அதைத் தீர்க்க முடியாது அம்மன்னன் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கனவில் தோன்றிய இப்பெருமான் இக் கோவிலை செப்பனிடுமாறு தெரிவிக்க, அவன் பரிவாரங்களுடன் வந்து தங்கி
இப்போதுள்ள மாதிரியை ஒத்துக்கட்டி முடிக்க அவன் மகளைப் பிடித்திருந்த பிர்ம்மராட்சஸு ம் ஒழிந்தது
திருமுழிக்களத்து எம்பெருமானும் இப்பெருமானும் ஒருவரே என்பது ஐதீஹம்.
என்னை மனங்கவர்ந்த ஈசனையென்று திருமங்கை தனது
மங்களாசாசனத்தை இப்பெருமானுக்காக ஆரம்பிக்கிறார்.
என்னை மனங்கவர்ந்த என்று சொல்லி நம்மாழ்வார் திருமுழிக்களத்து எம்பெருமானுக்காக எடுத்தாண்ட
முழிக்களத்து வளத்தின் என்பதை இவர்-மூழிக்களத்து விளக்கினையென்று மங்களாசாசித்தார்.
மூழிக்களத்தின் வளமாவது – ஸம்பத்து- இங்கு ஆண்டளக்கும் ஐயன் என்பதே ஸம்பத்திற்கு அடையாளமன்றோ
மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்
திருமங்கையாழ்வார் அரங்கநாதனுக்கு திருமதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது சமயங்கையில் இருந்த பொருள் எல்லாம் தீர்ந்துவிட
கைங்கர்யத்திற்குப் பணம் இல்லையே என்று பெருமானிடம் வேண்ட-கொள்ளிடக்கரைக்குவா பணந்தருகிறேன் என்று சொல்ல
அவ்விதமே வந்து நிற்க, எம்பெருமான் தலைப்பாகை அணிந்து கையில் ஒரு எழுத்தாணி, மரக்கால் சகிதிமாய் ஒரு வணிகரைப் போன்று வர,
இவரைக் கண்ட திருமங்கை, யாரென்று வினவ, அதற்கு அந்த வணிகர் உம்பொருட்டே என்னை ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளனே அனுப்பிவைத்தான் என்று சொல்ல,
சரி, அப்படியானால் சுவாமி, காலியான மரக்காலுடன்
வந்திருக்கிறீர்களே என்று கேட்க, அதற்கந்த வணிகர் இந்த மரக்காலைக் கையில் எடுத்து
வேண்டிய பொருளை மனதில் தியானித்து எம்பெருமானே சரண் என்று 3 தடவை சொன்னால் அப்பொருள் சித்திக்கும் என்று சொன்னார்.
அப்படியானால் இங்குள்ளவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். இந்த மணலை அளந்து போடும் என்று கூறினார்.
அதற்குச் சரியென்று ஒப்புக் கொண்ட வணிகர் ஒரு நிபந்தனை விதித்தார். அவர்களின் கூலிக்காக இந்த மணலை நான் அளந்து போடுகிறேன். உண்மையாக உழைத்தோருக்கு பொன்னாகவும் சோம்பலுடன் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவே காட்சி தரும்
என்று கூறி அளந்து போட பெரும் பாலானோர்க்கு மணலாகவே தெரிய, இவன் மந்திரவாதி என்று பலர் அடிக்கவர,
வணிகர் மெல்ல நகர, திருமங்கை
பின்தொடர, இவருக்கு காட்சியளிக்க நினைத்த எம்பெருமான் மிகவிரைவாகச் செல்ல
திருமங்கை தமது குதிரையிலேறி பின் தொடர்ந்தார்.
இவ்விதம் ஓடிவந்து திருமங்கைக்கு காட்சி கொடுத்து மரக்கால், ஓலை, எழுத்தாணியோடு ஆதனூரில் புகுந்து கொண்டதாக ஐதீகம்.
அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும்
கம்பீரமாக நடந்துவந்த ஊர்க்கு விசயமங்கை எனவும், ஓடிவரும் போது திரும்பிப் பார்த்த ஊர் திரும்பூர் எனவும்,
திருமங்கையாழ்வார் விரட்டிக்கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர்(மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும்,
மரக்காலுக்குள் கை வைத்த ஊர்-வைகாவூர், என்றும்-புகுந்தது பூங்குடி என்றும்,-அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர்.
இத்தலத்தின் கோபுரத்தில் மஹாவிஷ்ணு சிலை உள்ளது. “ஒங்காரோ பகவான் விஷ்ணு” என்ற ப்ரமாணத்தின் பேரில் ப்ரணவ விமானத்தில் வாசுதேவன்
உள்ளான். இவன் திருவடி தெரிந்துவிட்டால் இந்த யுகமானது (கலியுகம்) முடிந்து பிரளயம் உண்டாகும். இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம்.
இப்போது முழங்கால்வரை தெரிகிறது. இச்சிலை வளர்ந்து வருவதாக இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீஇராமபிரான் இங்கே வந்து எனது சகாயான் இங்கு வந்தாரா என்றுகேட்டுத் தனது திருவடியை வைத்துவிட்டுச் சென்றதாகவும், வரலாறு. இந்த
அஞ்சநேயருக்கு “வீரசுதர்சன ஆஞ்சநேயர்” என்பது பெயர். ஸ்ரீராமன் திருவடியும், ஸ்ரீஆஞ்சநேயரும் இப்போது இங்கு உளர். சிறந்த
வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் இந்த ஆஞ்சநேயர்.
2. திருக்குடந்தை (கும்பகோணம்)
மும்மூர்த்திகளில் சாந்தம் நிறைந்தவர் யார் என்று அறியச் சென்ற ப்ருகு முனிவர், திருமாலின் நெஞ்சில் உதைக்க இதனால் அவமானம்
அடைந்த லெட்சுமி தன் மணாளனை விட்டுப் பிரிந்து இப்பூவுலகிற்கு வந்து மறைந்திருக்கலானார். ப்ருகு முனிவரும் எம்பெருமானை உதைத்த பாவத்தைப்
போக்கவும், மனம் நொந்த திருமகளை சாந்தி அடையச் செய்யவும், திருமகளே தனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டுமென்றும், தான் பணிவிடை செய்து
தனது பாவத்தைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்றும் நினைத்து ஹேம மஹரிஷி என்ற பெயரில் இத்தலத்தில் கடுந்தவம் செய்து வரலாயினர். திரு
இழந்த லோகத்தில் தாமும் இருக்க வொன்னா எம்பெருமான் லட்சுமி தேவியைத் தேடி பூவுலகிற்கு வந்து திருமலையில் (திருப்பதியில்) ஒரு புற்றில்
மறைந்து வசிக்க, பத்மாவதி என்னும் கன்னியைத் திருமணம் செய்து கொண்டார்.
கலியுகத்தில் பத்மாவதியை மணந்துகொள்வதாக எம்பெருமான் இராமாவதாரத்தில் வாக்கு கொடுத்திருந்தார். இந்த பத்மாவதி தேவியே
இராமாவதாரத்தில் வேதவதி என்னும் பெயர் பூண்டிருந்தாள்.
இன்றும் இக்கோவிலில் பாதாளச் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கடியில் ஒரு திருச்சன்னதி உள்ளது. இவ்விதம் வேங்கடநாதன்
இங்கு வந்து சேர்ந்தார்.
ப்ரண வாக்ருதியின் இன்னொரு பிரிவான வைதிக விமானத்துடன் யாம் குடந்தை சென்று ஹேம மஹரிஷிக்கு அருள் புரிந்து லட்சுமி தேவியையும்
மணக்கவிருக்கிறோம் என்று சொல்லி அர்ச்சா ரூபியானான்.
அப்போதே கையில் சார்ங்கம் என்னும் வில்லுடன் மகர சங்கராந்தியன்று வைதீக விமானத்துடன் குடந்தை வந்திறங்கிய எம் பெருமான்
கோமள வல்லியை ஏற்றுக்கொண்டு (மணம் செய்து) ப்ருகு முனிவருக்கும் பேரருள் புரிந்தார். இவ்விதம் ஸ்ரீரங்கநாதனும் இவ்விடம்வந்து சேர்ந்தார்.
மூலவர்–சாரங்க பாணி, ஆராவமுதன் சயனதிருக்கோலம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்-கோமளவல்லி
உற்சவர்-பெயர்களே
தீர்த்தம்–ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
விமானம்- வைதிக விமானம்
காட்சி கண்டவர்கள்– ஹேம மஹரிஷி
மொத்தம் 52 பாசுரங்களில் முதலாழ்வார்கள் மூவருடன் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள்
ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.
இங்கு உள்ள ராஜகோபுரம் உயரத்தில் மூன்றாவதாகும். முதலாவது ஸ்ரீரங்கம் 236 அடி உயரம் ஆகும். இரண்டாவது-ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் உயரம் 165 அடி ஆகும். 150 அடி உயரமுள்ள இத்தலத்தில் ராஜகோபுரம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.-ராஜகோபுரம் இப்பெருமான் மீது பக்திகொண்ட
லட்சுமி நரசிம்ம சுவாமி என்ற பக்தர் ஒருவரால் கட்டப்பட்டதாகும்.-தீபாவளி அன்று இவருக்கு திருஅத்யயனம் ஆராவமுத ஆழ்வானே கண்டு அருளுகிறார்
108 திவ்ய தேசங்களில் இத்தலத்திற்கு மட்டுமே உபய பிரதான திவ்ய தேசம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதாவது மற்ற ஸ்தலங்களைப்
போலன்றி இங்கு மூலவருக்குள்ள சகல மரியாதைகளும் சிறப்புக்களும் உற்சவருக்குமுண்டு. இருவரும் ஒப்பிலா அழகில் திளைத்தவர்கள். உபயமாகப்
பயன்படுவதே இங்கு பிரதானமானதாகவும் ஆவதால் இதற்கு உபயப் பிரதான திவ்ய தேசம் என்று பெயர்.
வடஇந்தியாவில் 12 ஆண்டுகட்கு ஒரு முறை கும்பராசியில் குரு வரும் காலத்தில் கும்பமேளா கொண்டாடப்படுவதைப் போல் 12
ஆண்டுகட்கு ஒருமுறை சிம்மராசியில் உள்ள மக நட்சத்திரத்தில் வியாழன் வரும் காலத்தில் இங்கு மகாமகம் என்னும் நீராடல் விழா
கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளான கங்கை, காவேரி, யமுனை, ஸரஸ்வதி, கோதாவரி, நர்மதா, கிருஷ்ணா, சிந்து, சரயு
முதலிய ஒன்பது நதிகளும் இங்குவந்து இந்த மகாமகக் குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கி புனிதம் அடைகின்றனவாம். இச்சமயத்தில்
இச்சந்நதியில் உள்ள மகாமகப் பொற்றாமரைக் குளத்தில் நீராடுவது மிகப் பெரிய புண்ணியமாகும். இந்த குளக்கரையில்தான் 9 நதி கன்னிகைகட்கு
அவர்களின் உருவத்திற்கொப்ப 9 சிலைகள் உள்ளன. இவ்வமைப்பு இங்கு மட்டும் உள்ளது.
இத்தலத்தில் அமைந்துள்ள சித்திரைத்தேர் அல்லது சித்திரத்தேர் எனப்படும் தேர் தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும்.
இத்தேரை திருமங்கையாழ்வாரே இப்பெருமானுக்கு அர்ப்பணித்தார். -இத்துடன் திருவெழு கூற்றிருக்கை ரதபந்தமும் சமர்ப்பித்தார்
சாய்ந்தவாறே எழுந்திருக்க முயலும் திருக்கோலத்தில்தான் காட்சி தருகிறார். இந்த நிலைக்குத் தான் உத்தனன் சாயி (சாய்ந்து எழமுயலும் திருக்கோலம்)
என்று திருப்பெயர்.திராவிட பிரபந்தம் மீண்டும் அருளிய பெருமையால் கோயில் திருமலைப்பெருமாள் கோவில் எனப்படும் மூவரில் முதல்வன் இவனே
முகலாயர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை கொள்ளையிட்டு அழித்துவிட எத்தனித்துவிடுங்கால் மெய்வாசல் உடையார் என்னும் பக்தர்
தமது பக்தி மேலீட்டால் வைக்கோற்போரால் இப்பெருமானின் இருப்பிடத்தை மூடி மாடுகட்டும் இடம் என்று சொல்லி அவர்களை மருளச் செய்து
திருப்பியனுப்பினார். நெய்வாசல் உடையார் வம்சத்தாருக்கு ஸாசனமும், மரியாதைகளும் இங்கு தொன்றுதொட்டு இருந்து வந்தது.
முன்னொரு யுகத்தின் முடிவு நெருங்கும் வேளையில் பிரளயம்வரப்போவதை உணர்ந்த பிரம்மன் சிருஷ்டிக்கு காரணமான விதையையும்,
வேதங்களையும் அமுதத்தையும் இட்டு நிரப்பி வைத்த ஒரு குடத்தை இமயத்தின் சிகரத்தில் வைக்க பிரளயத்தின் போது ஏற்பட்ட
பெருவெள்ளத்தில் அக்குடம் மிதந்து வந்து சோழநாட்டை அடைய அப்போது தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பரமசிவன் வேடன் உருக்கொண்டு ஒரு அம்பால் குடத்தின் மூக்கை உடைக்க அக்குட மூக்கின் வழியாக உள்ளிருந்த அமுத வெள்ளம் கீழே பரவி மீண்டும் சிருஷ்டிக்கு வழி வகுத்ததென்றும்,
அது இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒன்று மகாமகக் குளத்தையும், மற்றொன்று பொற்றாமரைக் குளத்தையும் சார்ந்ததென்று ஸ்தல புராணம் விளக்குகிறது.
அவ்விதம் குட மூக்கின் வழியாக அமுதம் வெளிவந்த இடமாகையால் இவ்வூருக்கு குடமூக்கு (திருக்குடந்தை) அல்லது கும்பகோணம் என்றும்
பெயர் வந்ததாகக் கூறுவர்.
இச்சேத்திரத்தில் இவ்வெம்பெருமான் தவிர ஸ்ரீசக்ரபாணி, ஸ்ரீராமர், ஸ்ரீவராஹர், ஸ்ரீகோபாலன், ஸ்ரீவேத நாராயணன், ஸ்ரீவரதராஜன் போன்ற
எம்பெருமான்களும் எழுந்தருளியுள்ளனர் இதில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தின் திருக்கோலத்தில் உள்ள சந்நிதி பார்ப்பதற்கு பேரழகு பொருந்தியதாகும்.
குடந்தையில் “ஸௌந்தர்யம் பிரஸித்தம்” என்பது வடமொழி. ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் என்பது ஆழ்வார்கள் மொழி.
தூணிலா முற்றம் என்று பெரியாழ்வாரின் பாசுரத்தில் கூறப்படும் இடம் இக்கோவிலின் வடக்குப் பிரகாரமாகும்.
பெருமாளின் கருவறையைச் சுற்றிச் செல்லும் போது அந்த அழகான திருக்காட்சி நம் கண்ணைக் கவர்கிறது. சுவாமியின் கருவறையே
(மூலஸ்தானமே) தேர்வடிவில் அமைந்துள்ளது. மிகவும் பிர்ம்மாண்ட சக்கரங்கள் கொண்ட திருத்தேர். தாயாரைத் திருமணம் செய்ய பெருமாள்
வைகுண்டத்திலிருந்து இறங்கிய தேரின் வடிவம் இது.-உத்ராயண வாசல், தட்சிணாயன வாசல் என்ற இருவாசல்களுண்டு.
—————
13. திருவிண்ணகர் என்னும் ஒப்பிலயப்பன் கோவில்
மூலவர்-ஒப்பிலயப்பன் (ஒப்பற்றவன்) உப்பிலியப்பன் உப்பில்லா பண்டம் ஏற்பவன் என்பது திருநாமம்.
திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்றதோற்றம். நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்-பூமிதேவி (பூமிநாச்சியார் எனும் திருநாமம்)
உற்சவர்–மூலவருக்கும், தாயாருக்கும் உரிய அதே பெயர்கள்.
இங்கு பெருமாள் மட்டும் தனியே புறப்பாடு ஆவதே இல்லை. எப்போதும் பிராட்டியுடன் சேர்ந்தே செல்வார்.
விமானம்– சுத்தானந்த விமானம் (தரிசிப்பவருக்கு ஆனந்தம் தருவது) விஷ்ணுவிமானம் என்றும் பெயர்.
தீர்த்தம்– அஹோராத்ர புஷ்கரணி (இரவு, பகலென்றில்லாமல் 24 மணி நேரமும்
நீராடலாம் என்பதால் அஹோராத்ர தீர்த்தமாயிற்று)
மற்றும் ஆர்த்தி புஷ்கரிணி, சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம்.
காட்சி கண்டவர்கள் — மார்க்கண்டேயர், காவேரி, கருடன்.
சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம் எடுத்துக் குறி சொல்லுவது இங்குவிசேஷம்)
இத்தலத்துப் பெருமான் தானே மிகவும் உகந்து ஆழ்வாரை அணைந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார்.
அவையாவன. பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்
இத்தலத்தையும், பெருமானையும் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரம், திருமங்கையாழ்வார் 34 பாக்கள், பொய்கை யாழ்வார் 1, பேயாழ்வார் 2.
மங்களாசாசனம்
வடமொழியில் இத்தலம் வைகுண்டத்திற்குச் சமமானதாகப் பேசப்படுகிறது. எனவே இதனை ஆகாச நகரி என்றே வடநூல்கள்
கூறுகின்றன. வைகுண்டத்தில் ஓடக்கூடிய விரஜா நதியே நாட்டாரு (தட்சிண கங்கை) என்ற பெயரில் இங்கு ஓடுவதாக ஐதீஹம்.
———–
14. திருநறையூர் என்னும் நாச்சியார் கோவில்
பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் நம்பி மேக விடுதூது என்னும் நூலும் திரு.டி நரசிம்மாச்சாரியின் திருநறையூர் இரட்டை மணி மாலை
என்னும் நூலும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களும் இத்தலத்தைப்பற்றி பரக்கப் பேசுகின்றன.
சுகந்தகிரி -சுகந்தவனம் என்னும் பெயராலேயே வடமொழியில் இத்தலம் பேசப்படுகிறது.
இத்தலம் உள்ள பகுதி கிருஷ்ணாரண்யம் என்று வழங்கப்படுகிறது.
திருநறையூர்தான் கிருஷ்ணாரண்யத்தின் துவக்கமாகும். கிருஷ்ணாரண்யம் என்னும் இந்த கிருஷ்ணன் காடு திருநறையூரில் ஆரம்பித்து திருச்சேறை,
திருக்கண்ணமங்கை, திருக் கண்ணபுரம் வரை சென்று திருக்கண்ணங்குடியில் முடிகிறது.
மூலவர்–திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வ்யூகவாசுதேவன், சுகந்தவனநாதன் என்னும் திருநாமங்கள்.
தாயார்– வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார், திருமணக் கோலத்திலேயே நின்று அருளுகிறார்.
உற்சவர்– மூலவருக்குரைத்த அதே பெயர்களே
விமானம்–ஸ்ரீனிவாச விமானம், ஹேம விமானம்.
விருட்சம்–வில்வ விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம்.
தீர்த்தம் இங்கு முக்கியமான 5 தீர்த்தங்களுண்டு
மணிமுத்தா புஷ்கரணி-சோழன் தெய்வ வாள் பெற்றது.
ஸங்கர்ஷன தீர்த்தம்-பிரம்மாவின் தோஷம் விலகியது.
பிரத்யுமன தீர்த்தம்-பானுதத்தன் என்னும் அரக்கனின் சாபந் தீர்ந்தது.
அனிருத்தன் தீர்த்தம்–இந்திரனின் சாபமகன்றது
ஸாம்ப தீர்த்தம்– சப்தரிஷிகள் தவம் செய்த பெருமை பெற்றது.
காட்சி கண்டவர்கள்– மேதாவி முனிவரும் திருமணத்திற்கு வந்திருந்த பிரம்மாவும்.
வ்யூக வாசுதேவனாக இவ்விடத்திற்கு எழுந்தருளிய எம்பெருமான் தனது 5 நிலைகளில் உண்டான சக்தியை தேவிக்கு அளித்து ஸ்ரீனிவாசன்
என்னும் திருநாமத்தோடு தேவியை திருமணக்கோலத்தில் ஏற்றுக் கொண்டார்.
எனவே இத்தலத்தில் திருமாலும் திருமணக்கோலத்திலேயே நின்று அருளுகிறார். இதுவே இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். வ்யூக ரூபத்துடன்
எம்பெருமான் இங்கு எழுந்தருளியதும் ஒரு தனிச்சிறப்பாகும்.
திருமகளை மணம்புரிந்த கோலத்தில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி சற்றே முன்புறம் வருவதுபோல் ஒரு தோரணை காட்டி
பஞ்ச சமஸ்காரம் என்னும் ஸ்ரீ வைஷ்ணவ லட்சணை செய்ய முற்படுதல் போல் (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு வைணவ அடையாளம் இடுதல்) ஆகமசிற்ப சாஸ்திரத்தில் கூறப்பட்ட அனைத்து இலக்கணங்களுக்கும் ஒருங்கே பொருந்தியிருக்க எம் பெருமான் இங்கு
எழுந்தருளி இருக்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.
இத்தலம் மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. கோபுர வாயிலினின்று நோக்கினால் இப்பெருமான் ஒரு மாடத்தின்
மேல் பொலிந்து நிற்பது போன்று தெரியும். இக்கருவறையின் அமைப்பும்
அதில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் தோற்றமும் ஒரு சிறிய வடிவமைக்கப்பட்ட மலைமேல் எழுந்தருளியிருப்பது போல் தெரியும்
இத்தலம் சிறிதும் பெரிதுமான 16 கோபுரங்களை உடையது. ராஜகோபுரம் 5 அடுக்கும் 76 அடி உயரமும் கொண்டதாகும்.
மூலஸ்தானத்திற்கு (கருவறைக்கு) மேல் உள்ள விமானமும், கோபுர வடிவிலேயே அமைந்திருக்கிறது. இதுபோன்ற அமைப்பினை வேறு திவ்ய
தேசங்களில் அதிகமாக காணமுடியாது.
கருவறைக்கு மேல் உள்ள விமானம் கோபுரம் போல் அமைந்திருப்பது இங்கும் திருவல்லிக்கேணியிலும் மட்டுமே.
இத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகேயுள்ள மகா மண்டபத்தில் சாளக்கிராம வடிவத்தில்
நீள்சிறகும், நீள்முடியும், நீண்டு வளர்ந்த திருமேனியுடன் கம்பீரத்தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார்.
இவர் எழுந்தருளியுள்ள இடம் 10 1/2 சதுர அடி. இவர் வாகன மண்டபத்திற்குப் புறப்படும் சமயம் இவர் திருப்பாதங்களை நால்வர்
தாங்கிவருவாராம். இவரது இருப்பிடம்விட்டு வெளிவந்ததும் மூலைக்கு ஒருவராக மேலும் நால்வர். இவ்விதம் 16 பேர்கள் தாங்கிவர படிகளில்
இறங்கும் தறுவாயில் பலபேர்கள் தாங்க இந்நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக அமையும். இந்தக் கருடன் மீது எம்பெருமான் திருவீதி கண்டருள்வது
நாச்சியார் கோவில் கருட சேவை எனப் பெரும் புகழ்பெற்றதாகும்
திருநறையூர் நம்பியை உற்று நோக்கினால் அவர் சற்றே முன்வந்து பஞ்ச ஸமஸ்காரம் செய்யும் தோற்றத்திலேயே இருப்பது போலத் தோன்றும்.
தானே ஆச்சார்யனாகவும், தானே சிஷ்யனாகவுமிருந்து பத்தி ரியில் எம்பெருமானே திருமந்திரத்தை உலகிற்கு இட்டு அருளினான் என்பர். தானே
ஆசிரியனாகவும், தானே சீடனாகவும் இருந்ததால் பத்திரி எம்பெருமானை முழுமையான ஆச்சார்ய லட்சணம் பெற்றவனென்று சொல்ல முடியாது.
ஆனால் நறையூரானோ தாம் முழு லட்சணம் பெற்ற ஆச்சார்யனாய் இருந்து நீலன் என்னும் பக்தனை சீடனாகக் கொண்டு
பஞ்ச ஸமஸ்காரம் செய்து திருமங்கையாழ்வாராக ஆக்குகிறார்.
இதனால் எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களில் சிகரம் வைத்த பெருமையை இத்தலம் பெறுகிறது.
இவ்வூரில் வாழ்ந்த ஒரு வைதீகப் பிரம்மச்சாரிக்கு 108 திவ்ய தேசங்களை காணவேண்டும் என்ற பேராவல் இருந்தது. ஆனால் காலச்
சூழ்நிலையால் அது இயலவில்லை. 108 எம்பெருமான்களையும் சேவிக்க வேண்டுமென தினந்தோறும் இப்பெருமானை கண்ணீர் மல்க வேண்டிக்
கொண்டார். இந்த பக்தருக்காக அவரது கனவில் திருநறையூர் ஸ்ரீனிவாசனே நேரில் வந்து 108 திவ்யதேசத்து எம் பெருமான்களின் விக்கிரகங்களைக்
கொடுத்ததாகவும், நெடுங்காலம் தமது இல்லத்தில் வைத்து பூஜித்த இவைகளை தமது அந்திம காலத்தில் இத்தலத்தில் ஒப்படைத்ததாகவும் கூறுவர். இந்த 108 திவ்யதேசத்து எம்பெருமானின் விக்ரகங்களை இத்தலத்தில் இன்றும் காணலாம்.
திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு மதில் கட்டினார். இதனால் இவர்மேல்உகந்த அரங்கன் ஆழ்வாருக்குத் தீர்த்தம், திருமாலை, பரிவட்டம்,
சடகோபம் போன்றவற்றை அளித்து, “ஆழ்வீர் திருமடல் பிரபந்தங்களை நமக்கு அருளிச் செய்யல் ஆகாதோ” என்றார்.
அதற்கு திருமங்கை எம்பெருமான் முன் பணிந்து வாய் புதைத்து நின்று நம்பிக்குத் திருமடலும், தேவரீருக்கு திருமதிலும் அமைந்தது. மதில் இங்கே
மடல் அங்கே என்று மாற்றஞ் சொன்னாராம்.–இத்தலம் திருமடல் பரிசு பெற்ற ஸ்தலம் என்றும் கொள்ளலாம்.
திவ்ய தேசத்தின் பெயரோடு நம்பி என்று சேர்த்தழைக்கப்படும் திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இவ்வகையில் திருக்குறுங்குடி நம்பியும், திருநறையூர் நம்பியும் மிகு புகழ் பெற்றவர்கள்.
திருமங்கையாழ்வாருக்கு திருக்குடந்தை ஆராவமுதன், திருவரங்கத்து அரங்கன், நறையூர் நம்பி இம்மூவரும் தத்வத்ரஸம் போன்றவர்கள் அதாவது
ஜீவாத்மா, பரக்ருதி, உடல் போன்றவர்கள்
அதாவது, திருமங்கையாழ்வார் திருக்குடந்தை யானைச் சேவிக்கும்போது,–ஆவியே அமுதே என நினைந்துருகி-என்று தனது ஜீவன் திருக்குடந்தையான் என்று தலைக் கட்டுகிறார்.
திருவரங்கத்தெம் பெருமானிடம்தான் இவர் மோட்சம் வேண்டுமெனக் கேட்கிறார். அதாவது அரங்கனையே பரமபதநாதனாக (பரக்ருதி) கொண்டு
மோட்சம் கேட்கிறார். அவர் திருமங்கையை நோக்கி மோட்சம் வேண்டுமாகில் நீ, நமது தெற்கு வீட்டுக்குப் போ என்று கூறுகிறார்.
உந்தி மேல் நான்முகனைப் படைத் தான் உலகுண்டவன் எந்தை யெம்மான்— என்று இவ்வரங்கத்து எம்பெருமானையே பரமபத நாதனாக் கண்டு
அவனது வ்யூகத்தை வர்ணிக்கிறார். எனவே இவர் திருமங்கைக்கு பரக்ருதியானார்.
திருநறையூரானே திருமங்கைக்கு குமுத வல்லியாரைக் காட்டிக் கொடுத்தமையாலும், அவரது திருமேனியில் பஞ்ச ஸமஸ்காரம் செய்வித்து,
திருமந்திரம் உரைத்து உடல் விளக்கம் செய்தமையால் இவர் உடலாகிறார்.
15. திருச்சேறை
கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாகத் திருவாரூர் செல்லும் எல்லாப் பேருந்துகளும், நாச்சியார் கோவில் என்னும்
திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை ஆகிய மூன்று திவ்ய தேசங்களைத் தாண்டித்தான் செல்கிறது.
முன்பு ஒரு பிரளயத்தின்போது பிரம்மா சிறிது மண் எடுத்து ஒரு கடம் பண்ணி அதில் சகல வேதங்களையும் மறைத்து வைத்துக் காப்பாற்ற எண்ணி
பல இடத்தில் மண் எடுத்துப் பானை செய்யவும், எல்லாம் உடைந்து போக இறுதியில் வழக்கம்போல் மஹாவிஷ்ணுவைத் துதி செய்ய, அவர் வழக்கம்
போல் பல ரிஷிகளும் தவஞ்செய்யக்கூடியதும், தனக்கு மிகவும் உவப்பானதுமான “ஸார ஷேத்திரத்தில்” மண் எடுத்துக் கடம் செய்யுமாறு கூற பிரம்மனும் ஸாரச் சேத்திரம் என்னும் இந்தத் திருச்சேறை வந்து மண் எடுத்துக் கடம் செய்து வேதங்களை அதிலிட்டுவைத்துக் காத்தார். மண் எடுத்த இடமே ஸார
புஸ்கரணியாயிற்று.
ஸாரபுஷ்கரிணியில் உள்ள அரச மரத்தடியில் திருமாலைக் குறித்து கடுந்தவஞ் செய்யுமாறு கூற, அவ்வண்ணமே காவேரி கோடையில் பஞ்சாக்கினி
மத்தியிலும், குளிர் காலத்தில் ஜலத்தின் மத்தியிலும் கடுந்தவஞ்செய்ய,மஹாவிஷ்ணு ஒரு தை மாச பூச நட்சத்திரத்தன்று சிறு குழந்தையாய்த்
தோன்றித் தவழ்ந்து வர அந்தக் கோடி சூர்ய ப்ரகாசத்தைக் கண்ட காவிரி இது சாதாரணக் குழந்தையன்று எம்பெருமானே என்று தீர்மானித்து தொழுது நின்றாள்.
உடனே எம்பெருமான் தனது மழலை வேடத்தை மறைத்து கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி
என்னும் 5 தேவிகள் புடைசூழ சங்கு சக்ர தாரியாக காட்சியளித்தார்.
இக்காட்சியைக் கண்டு பேரானந்தமும் மயிர்க் கூச்செறிப்பும் கொண்ட காவேரி பலவாறு போற்றி எம்பெருமானைத் துதித்துப் பாடினாள். என்ன வரம்
வேண்டுகிறாய் காவேரி, என்று பெருமாள் கேட்டதும், தாங்கள் இதே கோலத்தில் இங்கு காட்சி தரவேண்டுமென்றும், கங்கையினும் மேன்மையைத்
தனக்கு தரவேண்டுமெனவும் வேண்டினாள்.
அவ்விதமே அருளிய எம்பெருமான் நான் திரேதா யுகத்தில் நின்னிடத்தில் தங்குவேன் என்று கூறினார்.
அவ்வண்ணமே இராமாவதாரம் முடிந்து, விபீஷணன் எம்பெருமானை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அரங்கநாதனாக காவிரியில்
பள்ளிகொண்டார்.
திருமால் காவேரிக்குப் பிரத்யட்சமானது தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகட்கு ஒரு முறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம் வரும்போது இந்த ஸார புஷ்கரணியில் நீராடுவது குடந்தை என்னும்
கும்பகோணத்தில் கொண்டாடப்படும் மகாமகத்திற்கு ஈடானதாகும்.
எம்பெருமான் குழந்தையாகத் தவழ்ந்து வந்ததால் “மாமதலையாய்” என்றும் காவிரிக்கும் மேன்மை அளித்ததால் “கங்கையிற் புனிதமாய காவேரி”
என்றும் ஆழ்வார்கள் மங்களாசாசித்துள்ளனர்.
மூலவர்–ஸாரநாதன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்–ஸார நாயகி அல்லது ஸார நாச்சியார்.
தீர்த்தம்–ஸார புஸ்கரணி
விமானம்– ஸார விமானம்
காட்சி கண்டவர்கள்- காவேரி
குளக்கரையில் காவேரியம்மனுக்குத் தனிக்கோவில் உள்ளது.
புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய வரப் பிரசாதி.
——-
16. திருக்கண்ணமங்கை
முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ்ந்து காண இவ்விடத்தே எம்பெருமான் திருமகளை மணம் புரிந்து
கொண்டார். மகாலட்சுமியை அடைய எம்பெருமான் தன்னுடைய (சிந்துவை) பாற்கடலை விட்டு புறத்தே வந்து இங்கு எழுந்தருளியதால் “பெரும்புறக்கடல்
என்பதே பகவானின் திருநாமம். வடமொழியிலும் பிருஹத் பஹிஷ் சிந்து நாத் (பெரும் புறக்கடல்) என்பது திருநாமம்.
முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனிக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்து கொண்டு தினமும் கண்டு மகிழ்கிறார்கள் -இன்றும் தாயார் சன்னதியில் வடபுறம் உள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் ஒரு தேன்கூடு உள்ளது
லட்சுமி தவமியற்றியதால் “லட்சுமி வனம்” என்றும் இவ்விடத்தே திருமணம் நடை பெற்றதால் கிருஷ்ணமங்கள ஷேத்ரம் என்றும் ஒரே
ஸ்தலத்திற்கு இருக்க வேண்டிய-விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களால் அமையப் பெற்றதால் “ஸ்ப்த புண்ய ஷேத்ரம்” ஸப்தாம்ருத ஷேத்ர மென்றும் இதற்குப் பெயர்.
மூலவர்-பக்தவத்சலப் பெருமாள். பத்தராவிப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். மிகவும் பிர்ம்மாண்டமான பேரழகு பொருந்திய திருஉருவம்.
தாயார்–கண்ணமங்கை நாயகி
உற்சவர்– பெரும் புறக் கடல்
தாயார்– ஸ்ரீ அபிஷேக வல்லி
தீர்த்தம்– தர்சன புஷ்கரிணி
விமானம்– உத்பல விமானம்.
காட்சி கண்டவர்கள்– முப்பத்து முக்கோடி தேவர்கள், வருணன்.
இத்தலத்தின் “ஸ்தல வ்ருட்சம்” மகிழமரம் ஆகும்
பக்தர்+ஆவி=பத்தராவி என்பது இங்குள்ள மூலவரின் திருநாமம். பக்தர்களின் பொருட்டு ஆவி போல் வேகமாக வந்து அருள் பாலிப்பதால்
பத்தராவியென்றும், பக்தர்களை விட்டு ஒரு போதும் நீங்காது பக்தர்களின் அருகிலேயே இருப்பதால் பக்தவத்ஸலர் என்றும் இவ்வெம் பெருமானுக்குத்
திருநாமம்.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்த நாத முனிகளுக்கு திருக்கண்ண மங்கையாண்டான் என்று ஒரு சீடர் இருந்தார் அவர் இவ்வூரில்
பிறந்தவர். அவர் இப்பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இக்கோவிலின் உட்புறத்தே புல்லினைச் செதுக்கிச் சுத்தப்படுத்தி இப்பெருமானே
அடைக்கலம் என்று இருந்தார். ஒரு நாள் அவர் நித்யாநுஸந்தான கோஷ்டியுடன் வேத பாராயணஞ் செய்து கொண்டு இக்கோவிலுக்குள்
நுழையும் பொழுது திடீரென நாய் வடிவங்கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண
நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது வானத்தை அளந்த பாதத்தை பிரம்மன் தனது கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய அதிலிருந்து
தெறித்துவிழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்து அதுவே தர்சன புஷ்கரிணி
இந்த தர்சன புஷ்கரிணியின் நீரினை எடுத்து பிராட்டிக்கு பட்ட மகிஷியாக பகவானால் அபிஷேகம் செய்யப்பட்டதால் இந்தப் பிராட்டிக்கு
அபிஷேகவல்லி எனப்பெயர்.
இங்குள்ள பெருமாள் சன்னதியில் வெளிப்புறச் சுவரில் அஞ்சலி ஹஸ்தராகப் புத்தர் பிரான் சிலை உள்ளது.
அந்தகக்கவி வீரராகவ முதலியார் இந்த தாயார் மேல் 100 பாக்கள் கொண்ட “கண்ணமங்க மாலை” பாடியுள்ளார்.
இப் பெருமாளைப் பற்றிக் காளமேகப்புலவர்
நீல நெடுங்கடலோ நீலமணிக் குன்றமோ”
கோலம் சுமந்தெழுந்த கொண்டலோ – நீல நிறக்
காயா மலரோ களங்கனியோ கணமங்கை
மாயா உனது வடிவு–வடலூர் இராமலிங்க அடிகளார்
எங்கும் 4 கரங்களுடன் விளங்கும் விஸ்வக் சேனர் இங்கு இரண்டு கரங்களுடன் தோன்றுகிறார்.
கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா
ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் பெருத்த
முகில் – வண்ண மங்கை கண்கால் வரைகன் திருவரங்கம்
கண்ணமங்கை யூரென்று காண் — பிள்ளைப் பெருமாளையங்கார்
——————
17. திருக்கண்ணபுரம்
வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்திபெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான். ஒரு காலத்தில்
தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட இம்மன்னின் உதவியால் தேவர்கள்
வெற்றிபெற்றனர்.
போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு (“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”)
மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால்
கொய்ய, முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய அசுரர்களை வென்ற நமக்கு
இச்சிறுவன் ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து
நாராயணஸ்திரத்தை ஏவ அது சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு
மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான்.
என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால் இதற்கு உத்பலவதாக
விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர். உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று
பெருமாள் அருள, தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க, மாயவனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.
மூலவர்–நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர்– சௌரி ராஜாப் பெருமாள்
தாயார்– கண்ணபுர நாயகி
தீர்த்தம்– நித்ய புஷ்கரிணி
விமானம்– உத்பாலவதாக விமானம்
காட்சி கண்டவர்கள்– கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு
முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம் இவற்றில்
ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள் இவ்விடத்து திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார்.
ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம்
ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம்
நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ
ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம்
திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத
அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.–பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்கள்
சௌரி, சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள். 75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம்
இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார்.
வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு
தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம்
செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.
நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காணவேண்டும் என்று வீபிஷணர் கேட்க, கண்ணபுரத்தில் காட்டுவோம்
வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு.
தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம். இவ்வமைப்புள்ள
இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.
இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது. கருடனின்
வடிவங்கொண்ட இம்மலை கருடபர்வதமென்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட
இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம்.-இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு
இங்குமங்கும் பறக்க, இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க கீழே விழுந்த கருடன் தன் தவறு
உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள்
கூறும்.
சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான். அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில்
நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும்,
மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க, பாண்டியனின் அவைக்கு வந்த சகலலோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி,
மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார். கங்கை முதலான
சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப்
போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க, சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில்
உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க, சகல தீர்த்தங்களும்,
இப்புஷ்கரணியில் புகுந்தன. அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்தபுஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன்
மகளும் இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து தன் அரண்மனையில்
விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு.
வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான். அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில்
அசுவமேதயாகம் செய்யயாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன் இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி
சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க
வேண்டுமென்று, தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத்தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும்
செய்தியாகும்.
இக்கோவிலில் பூஜை புரிந்து வந்த சிரீதரன் என்னும் அர்ச்சகர் தான் காதல் கொண்ட கன்னிக்கு சூட்டிய மாலையை பெருமாளுக்குச் சூட்ட,
இரவிலே சோழராஜன், சந்நிதிக்குவர, பெருமாளுக்குச் சூட்டிய மாலையைசிரீதரன் சோழனுக்கு அளிக்க, அதில் தலைமுடி ஒன்றிருக்க அரண்மனைக்கு
சிரீதரனை அழைத்து காரணம் வினவ, பெருமாளுக்கு முடி வளர்ந்துள்ளதாகஸ்ரீதரன் தெரிவிக்க, இதனைச் சோதிக்க மறு நாள் காலை சோழன் சந்நிதிக்கு
வர பெருமாளின் தலையில் இரண்டு மூன்று கேசங்கள் நீண்டு வளர்ந்திருக்க, அவற்றை பிடித்து இழுக்குமாறு மன்னன் ஆணையிட, ஒரு கேசத்தையிழுக்க
அதனின்றும் தெறித்த ரத்தத் துளிகள் மன்னனின் முகத்தில் தெறிக்க, இறைவன் தன் பக்தனைக் காப்பதற்கே இந்நாடக மாடினான் என்று உணர்ந்த
சோழன் அர்ச்சகரின் பக்தியை மெச்சிய தோடு தானும் இப்பெருமானுக்கு அடிமையானான். இதன் காரணமாகத்தான் சௌரி ராஜன் என்னும் திருநாமம்
இப்பெருமானுக்கு உண்டாயிற்றென்பர்.
இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார். அவர்
பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை.
அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக
இறைவனுக்குப் படைக்க, மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான்
அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு
முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை
அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அறையர் என்பர்
“பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது
விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான
“நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.
கீழைவீடு” என்று குறிக்கப்படுவது இத்தலம்தான்.
18. திருக்கண்ணங்குடி
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில் சுமார் 5 மைல் தூரத்தில் உள்ள ஆழியூர் என்ற
இடத்தில் இறங்கி தெற்கே சுமார் 5 பர்லாங் தூரம் சென்று இத்தலத்தை அடையலாம்.
கிருஷ்ண பக்தியில் வசிட்டர் மிகவும் சிறந்தவர். “கிருஷ்ண பிரேமை வசிட்டாய நாமா” என்று சொல்வார்கள். வசிட்டர் வெண்ணையில்
கிருஷ்ணனைப் போல் விக்ரகம் செய்து தமது பக்தியின் மேலீட்டால் வெண்ணெய் இளகி திரவமாகாமல் கட்டி வைத்து, திவ்ய மங்கள
விக்கிரகமாகச் செய்து தியானத்தில் ஈடுபட்டு வழிபடுவாராம். இவ்வாறு வெகுகாலம் செய்து வர இவரது பக்தியை மெச்சிய கிருஷ்ணன், ஒரு நாள்
சிறு குழந்தையாக, கோபாலனாக வடிவங்கொண்டு வசிட்டர், ஆராதனைக்கு செய்து கொண்டிருந்த வெண்ணையைக் கண்ணன் அப்படியே எடுத்து விழுங்கி விட்டு, ஓட்டம் பிடிக்க, இதைக் கண்ட வசிட்டர் கோபாலனை அடே, அடே என்று கூறி விரட்டிக் கொண்டே சென்றார்.
திருக்கண்ணங்குடியை, கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணனின் காடு) என்றே புராணங்குறிப்பிடுகிறது. இந்தக் கிருஷ்ணாரண்யத்தில், மகிழ மரத்தின்
அடியில் மஹாவிஷ்ணுவைக் குறித்து எண்ணற்ற ரிஷிகள் தவஞ்செய்து கொண்டிருந்தார்கள்.
இப்பகுதியில் கிருஷ்ணன் ஓடிவருவதை தமது, ஞான திருஷ்டியால் உணர்ந்த ரிஷிகள், தமது பக்தியென்னும் பாசக்கயிற்றால் கண்ணனைக்
கட்டுண்ணப் பண்ணி நிறுத்தினர்.
அவர்கள் பக்திக்கு கட்டுண்டு நின்ற கண்ணன், வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டிய வரத்தைச் சீக்கிரம் கேளுங்கள் என்று அவசர
அவசரமாகச் சொல்ல, அவர்களோ எங்களுக்கு காட்சி கொடுத்ததைப் போலவே இங்கேயே நின்று எப்போதும் காட்சியருள வேண்டுமென்று
வேண்டிக் கொண்டனர்.
வேண்டுதலுக்கு இணங்கி நின்ற வேணுகானனை, ஒரு நிமிட நேரத்தில் ஓடிவந்த வசிட்டர் அவன் பாதாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டார். உடனே
கோபுரங்களும் விமானங்களும் உண்டாகிவிட்டன. பிரம்மனும் தேவர்களும் வந்து பிரம்மோத்ஸவம் நடத்தினராம்.
கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடியாயிற்று இத்தலம். கிருஷ்ணன் அர்ச்சை வடிவில் நின்ற காரணத்தால் கிருஷ்ண
ஷேத்திரமாயிற்று.
மூலவர்-லோகநாதன். சாம மாமேனிப் பெருமாள் என்பர். அதாவது ச்யாமள மேனி. (நீலமேகவண்ணன்) நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்- லோகநாயகி
உற்சவர்–தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி உடன் இடது கையை இடுப்பில் கொண்டு (கண்ணன் நிற்கும் கோலம் போல)
தாயார்- அரவிந்த நாயகி
விமானம்– உத்பல வதாக விமானம்
தீர்த்தம்– சிரவண புஷ்கரிணி, பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே சகல பாபங்களையும் போக்கவல்லதால்
இப்பெயர் பெற்றது. இன்றும் காண்பதற்கு பேரெழில் வாய்ந்தது.
ஸ்தல விருட்சம்– மகிழ மரம் (வகுளம்)
காட்சி கண்டவர்கள்– பிரம்மன், கௌதமர், உபரிசரவசு, வசிட்டர், ப்ருகு, மாடரர்,திருமங்கையாழ்வார்.
கிருஷ்ணாரண்யம் என்றழைக்கப்படும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்றாகும். பஞ்ச கிருஷ்ண ஷேத்திரத்தின் விபரங்கீழ்
வருமாறு.
1. திருக்கண்ணமங்கை 2. திருக்கண்ணபுரம் 3. கபிஸ்தலம்
4. திருக்கோவிலூர் 5. திருக்கண்ணங்குடி.
இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணங்கூறும். (ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம்) இவ்வைந்தினாலும் புகழ்பெற்ற இடமாதலால் பஞ்ச பத்ரா
என்றாயிற்று.
திருக்கண்ணங்குடிக்கு அருகில் உள்ள மற்ற நான்கு ஸ்தலங்களையும் இதனுடன் சேர்த்து பஞ்ச நாராயணஸ்தலம் என்றும் வழங்குவர். அவைகளின்
விபரம் வருமாறு.
1. தெற்கில் – ஆபரணதாரி என்ற பதியில் ஆனந்த நாராயணன்
2. தென்மேற்கில் – பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்
3. தென்மேற்கில் – தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன்
4. தென்மேற்கில் – கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன்
5. தென்மேற்கில் – திருக்கண்ணங்குடி என்ற பதியில் தாமோதர நாராயணன்.
இவ்வைந்தும் சுமார் 6 கி.மீ சுற்றுவட்டாரத்திற்குள்ளாகவே அமைந்துள்ளன.
மற்றெல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் நிலையில் உள்ள கருடாழ்வாரைத்தான் காணமுடியும். ஆனால்
இங்கு இரண்டு கைகளையுங் கட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.
இங்குள்ள அழகிய சிரவண புஷ்கரணியின் தெற்கு கரையில் உள்ள கோவிலில் ஆதிப் பெருமாள் வீற்றிருந்த நிலையில் உள்ளார்
இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீரணி விழா” என்பது மிகச் சிறப்பான ஒன்றாகும். இந்த விழாவில் பெருமாள் விபூதி
அணிந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும் அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவஸு
மன்னனுக்காக இவ்விதம் செய்யப்பட்டது.
காயாமகிழ், உறங்காப்புளி, ஊராக்கிணறு, தோலா வழக்கு திருக்கண்ணங்குடி என்பது அவ்வூரைப் பற்றிய
பழமொழியாகும். இதில் முதலாவதாக உறங்காப்புளியைக் காண்போம்.
உறங்காப்புளி–திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கப்பெருமானின் மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கட்டிடப் பணிக்கு கையில் காசில்லாது போயிற்று.
அப்போது நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றுள்ளது. அந்த தங்கத்தைக் கொண்டுவந்தால் மதில் கட்டி விடலாமென்று
இவரது சீடர்கள் தெரிவிக்க உடனே நாகப்பட்டினஞ் சென்று அச்சிலையைப் பார்த்து உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை, செம்பு போன்றவற்றால்
சிலை செய்தால் ஆகாதோ பொன்னும் வேண்டுமோ என்று அறம் பாடின மாத்திரத்தில் சிலையின் வடிவம் மட்டும் அவ்வாறேயிருக்க சுற்றி வேயப்பட்ட
தங்கம் மட்டும் பிதுங்கிக்கொண்டு வந்து விழுந்ததாம். இதோ அப்பாடலைப் பாருங்கள்.
ஈயத்தா லாகாதோ இரும்பினா லாகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தா லாகாதோ
பித்தளை நற்செம்புக ளாலா காதோ
மாயப் பொன்னும் வேண்டுமோ
மதித்துன்னைப் பண்ணுகைக்கே.
அதனை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கத்திற்குச் செல்ல இவ்வூரின் வழியாக வந்தவர் நடந்த கால்கள் நொந்ததால் சாலையோரத்தில் நாற்று நடுவதற்காக
அடித்துப் பண்படுத்தப்பட்ட (சேறும் சகதியும் நிறைந்த) நிலத்தில் அத்தங்கத்தைப் புதைத்து வைத்துவிட்டு சாலையோரமிருந்த
புளியமரத்தினடியில் சற்றே படுத்துறங்க எண்ணினார்.
அப்போது அந்தப் புளிய மரத்தைப் பார்த்து “நான் அயர்ந்து தூங்கினாலும் நீ தூங்கிவிடக் கூடாது” என்று கூறிவிட்டு அயர்ந்து தூங்கி
விட்டார். மறுநாள் விடிந்தபொழுதில் வயலுக்குச் சொந்தக்காரன் ஏர்கட்டி உழ ஆரம்பிக்க, இப்புளிய மரம் தனது இலைகள் முழுவதையும்
திருமங்கையாழ்வார் மேல் உதிர்த்து விட்டதாம். சற்றே புல்லரித்த நிலையில் எழுந்த திருமங்கையாழ்வார் அப்புளிய மரத்தைப் பார்த்து உறங்காப்புளியே
நீ வாழ்க என்று கூறினாராம்.
இந்த உறங்காப்புளி இப்போது திருக்கண்ணங் குடியில் இல்லை. அவ்விடத்தில் வயலும் சிறு மேடும்தான் உள்ளது. ஆனால் உறங்காப்புளி
இருந்த இடத்தை இன்றும் காணலாம். இவ்வூரில் உள்ள புளியமரங்கள் வித்தியாசமானதாகவும் சற்றே வேறுபட்ட நிலையிலும் தெரிவது கண்கூடு.
தோலா வழக்கு–உறங்காப்புளியே நீ வாழ்க என்று கூறிய திருமங்கை நிலச் சொந்தக்காரனைப் பார்த்து, ஏய், நீ உழுகக்கூடாது இது எனது நிலம்
என்று சொல்ல, அவனோ பரம்பரை பரம்பரையாக இது எனது நிலமாயிற்றே நீ யார் என்று கேட்க, திருமங்கையும் நானும் அதைத்தான் கேட்கிறேன் இது
எனது நிலம் நீ யார் என்று திருப்பிக் கேட்டார்.வாதம் முற்றி ஊர்ப் பஞ்சாயத்தாரிடம் வழக்காக வந்து நின்றது.
நிலத்துச் சொந்தக்காரன் தனது உரிமைப்பட்டாவை பஞ்சாயத்தாரிடம்காட்டினான். இப்போது என்ன சொல்கிறீர் என்று பஞ்சாயத்தார்
திருமங்கையிடம் கேட்க. எனக்கு பட்டா ஸ்ரீரங்கத்தில் உள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் இங்கு தங்கியிருந்துவிட்டு நாளை சென்று நானும்
உரிமைப் பட்டயம் கொண்டு வருகிறேன் என்றார்.
ஊர்ப் பஞ்சாயத்தும் இதை ஆமோதித்தது.–அன்று முதல் இன்றுவரை இந்த ஊரில் எந்த வழக்கு ஏற்பட்டாலும்
சரியான தீர்ப்பில்லாமல் தேரா வழக்காகவே (தோலா வழக்காகவே, தீராத வழக்காகவே) முடிவில்லாத வழக்காகவே இருந்து கொண்டே வருகிறது.
இன்றும் இங்குள்ள பெரியவர்கள் இது எங்களுக்கு வழக்கமாகிவிட்டது. எந்த வழக்கு ஆரம்பித்தாலும் சாமான்யத்தில் முடிவதில்லை என்று ஒத்துக்
கொள்கின்றனர்.எனவே தேரா வழக்குத் திருக்கண்ணங்குடி என்றும் இவ்வூரைக் கூறுவதுண்டு.
ஊராக்கிணறு–இன்று ஒரு நாள் இங்கு தங்குவதற்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்ட திருமங்கையாழ்வாருக்குச் சில மணி நேரம் சென்று தாகம் எடுக்கவே, அந்த ஊர்க் கிணற்றடியில் நீர் இறைத்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஒரு பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.
இவன் நிலத்திற்கு தாவா செய்தது போல் நம்பானைக்கும் தாவா செய்துவிடுவானோ என்று எண்ணிய அப்பெண் தண்ணீர் தரமுடியாது என்று
மறுத்துவிட்டாள்.-இந்த ஊரின் கிணறுகளில் தண்ணீர் ஊராமல் போகக் கடவது என்று திருமங்கை சபித்து விட்டார்.
இன்றும் இந்த ஊர்க் கிணறுகளில் தண்ணீர் சரியாக ஊறுவதில்லை. அப்படியே தண்ணீர் இருந்தாலும் அதுவும் உப்பாகத்தான் உள்ளது. இதை
இன்றும் நேரடியாகச் சென்றால் காணலாம். அரசாங்கத்திலிருந்து வெகு ஆழமாகத் தோண்டி நல்ல தண்ணீருக்காக ஓவர் டேங் அமைக்க அதுவும் உப்பாய் போய்விட்டது.
இப்போது உள்ள கோவிலுக்குள் இறைவனின் திருமஞ்சனத்திற்காக தண்ணீர் எடுக்கப்படும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.
விடிந்தால் எல்லோரும் இங்கு வந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலையை இன்றும் காணலாம்.-எனவே ஊராக்கிணறு திருக்கண்ணங்குடி என்பது சாலவும் பொருந்தும்.
காயா மகிழ்– ஊராக் கிணறாகக் கடவது என்று சபித்துவிட்டு மிகுந்த பசிமயக்கத்தோடு அங்கிருந்த மகிழ மரத்தடியில் அயர்ந்து அமர்ந்தார்
திருமங்கை. அப்போது ஸ்ரீமந் நாராயணனே தீர்த்தப் பிரசாதத்தோடு வந்து இவரைத் தட்டியெழுப்பி, நீவிர் யாவர் என்று கேட்க, நானொரு
வழிப்போக்கன் என்றார் திருமங்கை. வழிப்போக்கரா சரி, பசி மயக்கத்தோடு இருப்பது போலத் தெரிகிறதே,
முதலில் இதைச் சாப்பிடும் என்று தன்னிடம் இருந்த உணவைக் கொடுக்க தன்னை மறந்த நிலையில் உணவுண்டுவிட்டு ஏறிட்டுப் பார்த்தார் திருமங்கை.
தனக்கு உண்டி கொடுத்தோனை எங்கும் காணாது பேராச்சர்யப்பட்டு,எல்லாம் அவன் திருவுள்ளம் என்றென்னி தனது பசியைப் போக்கி களைப்பும்
நீங்கக் காரணமாக இருந்த மகிழ மரத்தைப் பார்த்து நீ என்றும் காயாமகிழ மரமாக (பசுமை உடையதாகவும், இளமை குன்றாமலும்) இருக்க வாழ்த்தினார்.
இந்தக் காயா மகிழ்ச் சமீப காலம் வரை இருந்து புயலில்அழிந்துபட்டதாம். இப்போது அந்த இடத்தில் புதியதாக மகிழ மரம் ஒன்றை
நட்டு வைத்துள்ளனர். அது வளர்ந்து பார்ப்பதற்குப் பசுமையோடு காயா மகிழமாக இருந்து கொண்டிருக்கிறது. கோவிலுக்குப் பின்புறமே திருமங்கையின்
வரலாற்றை நினைவு கூறும் அழியாச் சின்னமாக நின்று கொண்டிருக்கிறது.
இத்தல வ்ருட்சமான காயா மகிழின் விதைகளைப் போட்டால் முளைப்பதில்லையாம் இதனாலும் காயா மகிழ் என்ற பெயருண்டாயிற்று என்பர்.
காயாமகிழின் கீழிருந்து பசி தீர்த்த திருமங்கை இரவோடிரவாக தங்கத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கமோடி விட்டார்.
திருக்கண்ணங்குடியை விட்டுச் செல்லும் போதும், தனது பசி தீர்த்தவன் யார் என்ற ஐயம் திருமங்கையின் நெஞ்சை வருடிக்கொண்டேயிருக்க
நடுவழியில் இவரை ஒருவன் மறிக்க, யார் என்று திருமங்கையாழ்வார்கேட்க, நான் “தலையாரி” என்றவன் சொல்ல அருகில் வந்து சற்றே உற்று நோக்கிய
திருமங்கைக்கு அவனிடம் சங்கும், சக்கரமும் தெரிந்து மறைய, வழிப்போக்கன் என்று நாம் கூறியதால் வழிப்போக்கனாகவே வந்து கண்ணங்குடி யானே
காட்சி கொடுத்தான், உண்டியும் இவனே கொடுத்தான் என்று தெரிந்து, தெளிவிசும்பு சேர்வாரொப்ப தேஜசுடன் தென்னரங்கம் வந்தடைந்தார் திருமங்கை.
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply