வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு
வந்த பேர்
நலிவு எலாம் அகற்றும் நாமம்; நால்-இரண்டு
எழுத்துடன்
பொலியும் நாமம்; மறைகள் சொன்ன பொருள்
விளக்கும் நாமம்-முன்
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட
நாமமே.கடவுள் வாழ்த்து
அன்று – முன்னொருகாலத்தில், வலியில் – கடுமையாக,
தந்தைசெற்ற – பிதாவான இரணியனாற் கோபித்துவருத்தப்பட்ட, மைந்தனுக்கு –
இளம்பிள்ளையான பிரகலாதனுக்கு, வந்த பேர் நலிவு எலாம் – நேர்ந்த
பெருந்துன்பங்களையெல்லாம், அகற்றும் – நீக்கியருளின, நாமம் – திருநாமமும்,-
நால் இரண்டு எழுத்துடன்-எட்டு எழுத்துக்களோடு, பொலியும் – விளங்குகிற,
நாமம் – திருநாமமும்,- மறைகள் சொன்ன பொருள் – வேதங்கள் சொல்லிய
அருத்தங்களையெல்லாம், விளக்கும் – விளங்கத்தெரிவிக்கிற, நாமம் –
திருநாமமும்,-முன் – முன்பு, கலியன் – கலியனென்னும் பெயருடையவரும், எங்கள்
மங்கை ஆதி-திருமங்கை யென்னும் ஊருக்குத் தலைவருமாகிய எங்கள்
திருமங்கையாழ்வார், கண்டுகொண்ட – அறிந்து கொண்ட, நாமம்ஏ –
திருநாமமேயாம்;
தன்மகனான பிரகலாதன் தன்கட்டளைப்படி தன்பெயரைச் சொல்லிக்
கல்விகற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே, தந்தையான இரணியன்
மிகக்கோபங்கொண்டு பாம்புகளையும் யானைகளையும் நெருப்பையும் விஷத்தையும்
காற்றையும் மற்றும்பலவுபாயங்களையும் கொண்டு அம்மகனை மிகவும்வருத்த, அவன்
நாராயணநாமோச்சாரணபலத்தால் சிறிதும் துன்பமுறாமல் அந்த
அபாயங்களெல்லாவற்றினின்றும் நீங்கினான் என்பது-பிரசித்தம்.
நம்பெருமாளெட்டெழுத்தின் பெருமை நவிலுமதோ சம்பரன் மாயப்புரோகிதர்
சூழ்வினை தாரணிவாள், வெம்படை மாசுணம் மாமத வேழம்விடம் தழல் கால்,
அம்பரமேமுதலானவை பாலனுக்கு அஞ்சினவே” என்றார்
திருவரங்கத்துமாலையிலும். “ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்த்தம்” என்றும்,
“ஸர்வவேதாந்தஸாரார்த்த:”என்றும்நூல்களிற் கூறப்படுதல்பற்றி, ‘மறைகள் சொன்ன
பொருள் விளக்கு நாமம்” என்றார்.
கலியன்-மிடுக்குடையவன்; கலி-வலிமை. இவர் பெருமாளைக்
கொள்ளையிடும்பொழுது, சகலவஸ்திராபரணங்களையுங் கவர்ந்த பின்
திருவடிவிரலிலுள்ள திருவாழியைப் பல்லாற் கடித்துவாங்கின மிடுக்கால், இவரைத்
திருமால் கலியனென்று பேரிட்டு அழைத்தனர். எங்கள் என்றபன்மை –
தன்னைச்சேர்ந்தவர்களையுங் கூட்டியது. ‘எங்கள்மங்கையாதி’ என்றதனால்,
வில்லிபுத்தூராரது ஸ்ரீவைஷ்ணவஅபிமானமும் திருமங்கைமன்னன்பாசுரத்தில்
இவர்க்குள்ள ஈடுபாடும் விளங்கும். திருமங்கையாழ்வார் – ஸ்ரீவைஷ்ணவ
சம்பிரதாயத்தில் சிறந்த பக்தர்களாக வழங்கப்படுகிற ஆழ்வார்கள் பதின்மருள்
ஒருவர்; சோழநாட்டில் திருமங்கையென்ற தலத்தில் பிறந்தவர்; இவர் ஒரு
சோழராசனிடத்தில் மந்திரியாயிருந்து அவனது திறைப்பொருளையெல்லாம்
பாகவதாராதநம்பண்ணிச் செலவுசெய்து மற்றும் அந்தக்கைங்கரியத்தை நடத்தும்
பொருட்டு வழிபறித்துப் பொருள்தேடிவருகையில், திருமால் இவருக்குத்
திருவருள்செய்யக்கருதித் தாம் பிராட்டியுடனே கலியாணக்கோலங்கொண்டு மிகுந்த
ஆபரணங்களோடும் திரண்ட செல்வத்தோடும் அவ்வழியிலே செல்ல, இவர்
கூட்டத்தோடு சென்று அவர்களை வளைத்துவழிபறித்துப் பொருள்களை யெல்லாங்
கட்டிவைத்து எடுக்கத்தொடங்க, அது எடுக்க முடியாமையாலே,
அவ்வெம்பெருமானைநோக்கி ‘நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்’ என்றுசொல்லி
வருத்திக்கேட்க, அப்பொழுது ஸ்ரீமந்நாராயணன் ‘அந்தமந்திரத்தை
உனக்குச்சொல்லுகிறேன் வா’ என்று தனக்குரிய அஷ்டாக்ஷரமகாமந்திரத்தை
இவருக்கு உபதேசித்தருளிக் காட்சிகொடுக்க, இவரும் பெருமாளைச் சேவித்து
ஞானக்கண்பெற்று “வாடினேன்………நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்” என்று தொடங்கிப் பெரியதிருமொழி முதலிய
திவ்வியபிரபந்தங்களைப் பாடிப் பெருமையுற்றுப் பேறு பெற்றனரென்பது வரலாறு.
இதுமுதல் பதினாறு கவிகள் – ஈற்றுச்சீரொன்று விளச்சீரும் மற்றவை
மாச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.
வர சங்கமும், தாரையும், சின்னமும், பொன்
மணிக் காளமும்,
முரசங்களும், துந்துபியும், எங்கும் எழ விம்ம,
முழ விம்மவே,
கரை சிந்து, திரை சிந்து, நுரை சிந்து, விரை சிந்து,
கணம் என்னவே,
அரசன் பெருஞ் சேனை வெள்ளம் புறப்பட்டது,
அணியாகவே.2.-இரண்டுகவிகள் – தருமன்தன்சேனையோடு போர்க்களங்குறுக,
முந்தியவியூகமாகவே சேனை அணிவகுப்படுதல்.
இதுமுதல் நான்கு கவிகள் – குளகம்.
(இ-ள்.) தருமராசன் மதலை-யமதருமராசனது புத்திரனான யுதிட்டிரன்,
பஞ்சசயனம் நின்று-படுக்கைமெத்தையில் நின்று, எழுந்த பின்-துயிலொழிந்து
எழுந்தபின்பு, காலையில் கடன் ஆன கருமம் கழித்து-உதயகாலத்திற் செய்யத்தக்க
கடமைகளாகிய (சந்தியாவந்தநம் முதலிய வைதிகத்) தொழில்களைச் செய்து
முடித்து, நேமி அம் பெருமனோடு சென்று தக்க பெற்றி பேசி –
சக்கராயுதத்தையுடைய அழகியபெருமையயுடைய தலைவனான கண்ணபிரானிடம்
போய் அவனோடு (அன்றைக்குச்செய்யத்) தக்க தன்மைகளைப்பற்றிப் பேசி,
வெற்றியின் பொரு மகீபர் சூழ-சயத்தையுடைய போர்செய்யவல்ல அரசர்கள்
(தன்னைச்) சூழ்ந்து வர, நின்ற இளைஞரோடு போத-கூடநின்ற தம்பிமார்களோடு
புறப்பட,-(எ-று.)- “ஆகவத்துள் அணிய” என அடுத்தகவியோடு தொடரும்.
பஞ்சசயனம்-அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, மயில் தூவி,
வெண்பஞ்சு என்னும் இவ்வைந்துபொருளாற் செய்யப்பட்ட மெத்தை;“சிறுபூளை
செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம், உறுதூவி சையையோ ரைந்து” என்றார்,
முன்னோரும்; இனி, திருப்பாவையில்,“மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறி”
என்றவிடத்து,‘பஞ்சவிதமானபடுக்கையாவது-அழகு, குளிர்த்தி, மார்த்தவம்,
பரிமளம், தாவள்யம் ஆக இவை; அஞ்சுஉருவிட்டுச் செய்த படுக்கை யென்றுமாம்:
பஞ்சாலேசெய்தபடுக்கை யென்னவுமாம்’ என்று பெரியவாச்சான்பிள்ளை
வியாக்கியானமிட்டருளியுள்ளார். பெருமன்-பெருமான் என்பதன் குறுக்கல்
திரண்டு பல் இயங்கள் தேவர் செவி புதைக்க, வானிடைப்
புரண்டு எழுந்த தூளி கண் புதைக்க, மெய் பதைக்கவே,
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே
அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே,
பல் இயங்கள் – அநேகவாத்தியங்கள், திரண்டு-(தம்மிற்) கூடி
(முழங்கி), தேவர் செவி புதைக்க-தேவர்களுடைய காதுகளை அடைக்கவும்,
வானிடை புரண்டு எழுந்த தூளி-ஆகாசத்தில் துள்ளியெழுந்த புழுதிகள், கண்
புதைக்க-(தேவர்களது இமையாக்) கண்களை மறைக்கவும், மெய் பதைக்க-
(போர்செய்வதற்கு) உடம்பு பதறவும்,-முரண்தொடங்கு சேனை-போரைச்
செய்யத்தொடங்குகிற (தங்கள்) சேனை, ஆகவத்துள்வந்து-போர்க்களத்தில் வந்து,
முன்னர் நாளை யூகமே அரண் தொடங்கு யூகம் ஆக அணிய-முந்தியநாளில்
(செய்த பதும) வியூகமே (அன்றைக்குக்) காவலைச்செய்யும் வியூகமாகும்படி
அணிவகுத்துநிற்க,-(எ-று.)-“வீடுமன்எனும்மன்(4) தேரிலேறினான்” (5) என
அடுத்தகவிகளோடு தொடரும்.
தருமன்சேனை ஒன்பதாநாளிற்போலவே,பத்தாநாளிலும் பதுமவியூகமாகப்
படைவகுக்கப்பட்டதென்க. மெய்பதைக்க – செவிபுதைத்தலாலும் கண்புதைத்தலாலும்
தேவர் உடல் வருந்த என்றலும் ஒன்று.
வீடுமன் எனும் தடக் கை வீர மன்னும், வெஞ் சுடர்க்
காடு மன்னு பரிதியைக் கரம் குவித்து இருந்த பின்,
தோடு மன் வலம்புரித் துலங்கு தாம நிருபனும்,
நீடு மன்னர் பலரும், வாயில் இரு புறத்தும் நிற்கவே,4.-இரண்டு கவிகள்-வீடுமன் நித்தியக்கடனை முடித்துத்
தன் தேரிலேறினமையைக் கூறும்.
(அப்பொழுது), வீடுமன் எனும்-பீஷ்மன் என்கிற, தட கை வீரம்
மன்உம்-பெரியகைகளையுடைய வீரத்தன்மையுள்ள அரசனும், வெம்சுடர் காடு
மன்னு பரிதியை – உஷ்ணமான ஒளிகளின் தொகுதி பொருந்திய சூரியனை, கரம்
குவித்து இருந்தபின்-கைகூப்பித்தொழுது [சந்தியாவந்தனம் முதலியன முடித்து]
இருந்தபின்பு,-தோடு மன் – இதழ்கள் நிறைந்த, வலம்புரி- நஞ்சாவட்டை
மலர்களாகிய, துலங்கு – விளங்குகிற, தாமம்-மாலையையுடைய, நிருபன்உம்-
துரியோதனராசனும், நீடு மன்னர் பலர்உம்-பெரிய மற்றும்பல
அரசர்களும், வாயில் இரு புறத்துஉம் நிற்க,- (எ-று.)-“நீடுதேரிலேறினான்”
எனஅடுத்த கவியோடு முடியும்.
வீடுமன்னெனும், ன்-விரித்தல். பரிதியைக் கரங்குவித்திருத்தல்-
உபஸ்தாநமும்,ஸூர்யநமஸ்காரமுமாம். திரிபு என்னுஞ்சொல்லணி
காண்க.
வனைந்து இலங்கு கழலும், முத்து வடமும்,
வாகு வலயமும்,
புனைந்த செம் பொன் மவுலியோடு பொற்பின்மீது
பொற்பு எழ,
‘முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும், வெய்ய
போர்!’ எனா
நினைந்து, தன் பனைப் பதாகை நீடு தேரில் ஏறினான்.
வனைந்து இலங்கு – அணியப்பட்டு விளங்குகிற, கழல்உம் –
வீரக்கழலும், முத்துவடம்உம் – முத்தாரங்களும், வாகுவலயம்உம் –
தோள்வளைகளும், புனைந்த செம் பொன் மவுலியோடு – தரித்த
செம்பொன்னலாகிய கிரீடமும், பொற்பின்மீது பொற்பு எழ – (தனதுஉடம்பின்)
அழகின் மேல் அழகியதாய்ப்பொருந்த, ‘இன்று- இன்றைக்கு, நாம்-, அடங்க-
(பகை)ஒழியும்படி, முனைந்து – உக்கிரமாக முயன்று, வெய்ய போர் முடித்தும் –
கொடியபோரை முடித்துவிடுவோம்,’ எனா நினைந்து-என்று எண்ணி, தன் –
தனது,பனை பதாகை நீடு தேரில் – பனைக்கொடியையுடைய உயர்ந்த
தேரின்மேல்,ஏறினான்-; (எ-று.)
“அழகின்மே லழகுபெற அணியனைத்து மணிந்தருளி” என்றார்,
கலிங்கத்துப்பரணியிலும். பத்தாநாளில் தான் அழிவதாக முன்னே
சொல்லியுள்ளானாதலால், இவ்வாறு நினைத்தான். முனைந்து –
பொருது எனினுமாம்.
சுற்று அறாத வில்லினன்; தொடை மிடைந்த தூணியன்;
கொற்ற வாகை வாளினன்; கூர வீர வேலினன்;
மற்றும் ஆயுதங்களோடும், மன்னரோடும், வார் முரசு
எற்றும் ஆரவத்தினோடும், அடு களத்தின் எய்தினான்.6.-வீடுமன் போர்க்களஞ் சேர்தல்.
சுற்று அறாத – கட்டு நீங்காத, வில்லினன் – வில்லையுடையவனும்,
தொடை மிடைந்த – அம்புகள் நெருங்கிய, தூணியன் – புட்டிலை யுடையவனும்,
கொற்றம் வாகை வாளினன்- வெற்றிக்குஅடையாளமானவாகைப் பூமாலையைச்
சூடின வாளையுடையவனும், கூர வீரம் வேலினன் -கூர்மையையுடைய
வீரத்தன்மைக்குஉரிய வேலாயுதத்தை யுடையவனுமாய், மற்றும்ஆயுதங்களோடு
உம்- வேறு பல படைக்கலங்களுடனும், மன்னரோடுஉம்-எல்லாஅரசர்களோடும்,
வார் முரசு எற்றும் ஆரவத்தினோடுஉம்-தோற்கயிற்றாற்கட்டிய
பேரிகைகள் அடிக்கப்படும் முழக்கத்தோடும், அடு களத்தின் எய்தினான் –
போர்செய்தற்குரிய களத்தில் சேர்ந்தான் (வீடுமன்); (எ-று.)-தொடை –
தொடுக்கப்படுவது; அம்பு.
தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி, அச்
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு,
செங் கண் மால்,
‘வானின் நின்று இழிந்த கங்கை மைந்தனுக்கு வான் உலாம்
யானம் இன்று அளித்தி’ என்று விசயனோடு இசைக்கவே,7.-முன்னைநாள்வியூகமே வீடுமனும் வகுத்துநிற்க,
ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனிடம் இன்றுவீடுமனுக்குவிமானமளிப்பாயெனல்.
இதுமுதல் ஆறுகவிகள் – குளகம்.
(இ-ள்.) அ சேனை மன்னன் – அந்தச்சேனைத்தலைவனான வீடுமன்,-
தான்உம் – (பாண்டவர்கள்போலவே) தானும், முன் அணிந்த ஆறு-முந்தின நாளிற்
படைவகுத்தவிதமாகவே [சருவதோபத்திரவியூகமாக], தானையை நிறுத்தி – (தன்)
சேனையை (அணிவகுத்து) நிற்கச்செய்து, வந்து நின்ற – (எதிரில்) வந்து நின்ற,
நிலைமை-நிலைமையை, கண்டு-,-செம் கண் மால்-சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணபிரான், விசயனோடு – அருச்சுனனுடனே, ‘வானினின்று இழிந்த கங்கை
மைந்தனுக்கு-ஆகாயத்தினின்று இறங்கிய கங்கையின் குமாரனான வீடுமனுக்கு,
வான் உலாம் யானம் – மேலுலகத்துக்குச் செல்லும் விமானத்தை, இன்று –
இன்றைத்தினத்தில், அளித்தி – கொடுப்பாய்,’ என்று இசைக்க – என்றுசொல்ல,-
(எ-று.)- “விசயன் (8) என்ற போது (11)” என மேற்கவிகளோடு தொடரும்.
வானுலாம் யான மளித்தல்-இறந்து தேவவிமானமேறிச்சுவர்க்கஞ் செல்லும்படி
செய்தல். ‘வானினின்று இழிந்த’ என்றதைக் கங்கைக்கு அடைமொழியாக்கினால்,
பகீரதன் கங்கை கொணர்ந்த சரித்திரத்தையும், மைந்தனுக்கு அடைமொழியாக்கினால்
சாபத்தால பிரபாசவசு பீஷ்மனான வரலாற்றையும் குறிக்கும். யாநம் – வாகனம்;
வடசொல்.
போரின் அண்டர் பகையை முன்பு பொருது
வென்ற வின்மையான்,
மூரி வெங் கொடிக் குரங்கு முன் நடக்கும் மேன்மையான்,
வாரிதம் கொள் மேனியான், வனம் புகுந்து வருதலான்,
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே,8.-அருச்சுனன்சிறப்பு.
முன்பு – முன்னொருகாலத்தில், அண்டர் பகையை-
தேவர்களுக்குப்பகைவர்களை, போரின் பொருது – யுத்தத்தில் தாக்கி,
வென்ற – சயித்த,வின்மையான்-வில்லின் திறத்தாலும், முன் – (தனதுதேரின்)
முன்னிடத்தில், மூரிவெம் கொடி-வலிமையுடைய பயங்கரமான துவசத்தில்,
குரங்கு நடக்கும் -அனுமான் பொருந்திய, மேன்மையான் – பெருமையாலும்,-
வாரிதம் கொள் -மேகத்தையொத்த, மேனியான் – திருமேனியினாலும்,-வனம்
புகுந்து வருதலான் -காட்டிற்சேர்ந்து (வசித்து) வந்ததனாலும், யார்உம் இன்று
இராமன் என்ன -யாவரும் இக்காலத்தில் (இவன்) இராமபிரான் என்று
சொல்லுதற்கு, இசைய நின்ற -ஏற்றபடி நின்ற, விசயன் – அருச்சுனன்,- (எ-று.)-
“என்றபோது” என மேற்பதினோராங்கவியோடு இயையும்.
விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமமூர்த்திக்கும் அருச்சுனனுக்கும் சில
ஒற்றுமைநயங்காட்டி உவமைகூறினார். இராமனுக்கு, அண்டர்பகையை வெல்லுதல்-
இராவணாதி இராக்கதரை அழித்தல்; அருச்சுனனுக்கு, அண்டர்பகையை வெல்லுதல்
– நிவாதகவசகாலகேயர்களை வதைத்தல். அனுமக் கொடியும், நீலமேனியும்-
இருவர்க்கும் உண்டு, இராமனுக்கு வனம்புகுதல்-பதினான்குவருஷமும்,
அருச்சுனனுக்கு வனம்புகுதல்-பன்னிரண்டு வருஷமுமாம்; இனி, இரண்டாமடிக்கு –
இராமனுக்கு ஆகும்பொழுது, வலிய கொடிய நீண்ட குரங்கின்சேனை
முன்னேசெல்லப்பெற்ற பெருமையால் என்று உரைப்பினும் அமையும்; கொடி –
நீளம். வாரிதம் – வடசொல்; நீரைக் கொடுப்ப தென்று பொருள்.
சிலை, பதாகை, இவுளி, தேர், செழுங் கனல் அளித்தன;
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ;
தல மகீபர் அல்ல; தேவர் தானவர் எதிர்ப்பினும்,
கொலை படாமல் ஏவர் போவர்? குன்று எடுத்த கோவலா!9.-இரண்டுகவிகள்-வீரவாதமாக அருச்சுனன் கண்ணனோடு கூறுவன.
குன்று-கோவர்த்தனமலையை, எடுத்த-(குடையாக) எடுத்துப்பிடித்த,
கோவலா-பசுக்களைக் காத்தலில் வல்லவனே! சிலை-(எனது) காண்டீவவில்லும்,
பதாகை-குரங்குக்கொடியும், இவுளி-(வெள்ளைக்) குதிரைகளும், தேர்-(சிறந்த)
தேரும், செழுகனல் அளித்தன-சிறந்த அக்கினிதேவனால் கொடுத்தருளப்
பட்டவையாம்; வலவன் யார் எனில்-(எனக்குத்) தேர்ப்பாகன் யாரென்றால்,
குறிப்பொடு என்னை ஆள வந்த நீ-திருவுள்ளக்கருத்தோடு
என்னைப்பாதுகாத்தருளுதற்குஎழுந்தருளின நீயாவாய்; (ஆதலால்) தலம் மகீபர்
அல்ல-நிலவுலகத்து அரசர்கள் மாத்திரமேயல்ல; தேவர் தானவர் எதிர்ப்பின்உம்-
(மற்றையுலகத்திலுள்ள) தேவர்களும் அசுரர்களும் (ஒருங்கேவந்து) எதிர்த்தாலும்,
கொலை படாமல் ஏவர் போவர்-(என்னால்) கொல்லுதல் படாமல் யாவர்
தப்பிப்போவார்? (எ-று.)-எவரையும் தப்பாமற் கொல்லவல்லேனென்பதாம்.
பதாகை-பெருங்கொடி. மகீபர் அல்ல – திணைவழுவமைதி; ‘அல்லர்’ எனப்
பாடங்கொள்ளின், வழாநிலையாம்: இனி, அல்ல என்பதை, வேறு இல்லை உண்டு
என்பனபோல, இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொது வென்றலும் ஒன்று:
இது, புதியன புகுதல். பி.-ம்: அளித்தனன்.
எந்தை ஆக; துணைவர் ஆக; தனயர் ஆக; எந்தைதன்
தந்தை ஆக; நீ உரைக்கில், யாரையும் தறிப்பன் யான்-
முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என்
சிந்தை ஆர முற்றுவித்து, வினை அறுத்த செம்மலே!’
முந்தை-பழமையான, ஆரணங்களுக்கு-வேதங்களுக்கெல்லாம்,
முடிவில்-முடிவாகிய உபநிஷத்துக்களில், நின்ற-பொருந்திய, பொருளை-அர்த்தத்தை,
என் சிந்தை ஆர-எனது மனம் கொள்ளும்படி, முற்றுவித்து-முடிய உபதேசித்து,
வினை அறுத்த-(எனது) கருமத்தை ஒழித்த, செம்மலே-பெருமையிற் சிறந்தவனே!
எந்தை ஆக-என் தந்தையாயினும் ஆகுக; துணைவர் ஆக-(எனது)
உடன்பிறந்தவராயினும் ஆகுக; தனயர் ஆக-பிள்ளைகளாயினும் ஆகுக;
எந்தைதன் தந்தை ஆக-எனது பாட்டனாயினும் ஆகுக; யாரைஉம்-(வந்து
எதிர்ப்பவர்) எல்லோரையும், நீ-, உரைக்கில்-அழிக்கச்சொன்னால், யான் தறிப்பன்-
நான் அழித்திடுவேன்; (எ-று.)
கீழ், சுற்றத்தாரிடத்துப் பாசபந்தத்தால் ”யான்மலைவுறேனினி” என்றவன்,
பின்பு கீதோபதேசத்தால் பற்றற்றுப் பகவானது கட்டளையையே
பிரதானமாகக்கொண்டு இங்ஙனம் கூறினான். உற்றஉறவினரையும் ஒரு பொருளாகக்
கொள்ளாமல் எம் பெருமானையே உறுதுணையாகக்கொண்ட உறுதி இதில்
விளங்கும். ஆரணங்களுக்கு முடிவில் நின்ற பொருளை மனம்நிரம்ப விளைவித்தல்
என்றது, வேதாந்தசாரார்த்தமான கீதையைத் தனக்கு உபதேசித்தருளியதை. ஆக-
வியங்கோள்.
என்ற போது, உவந்து, தேவவிரதன் நின்ற எல்லையில்
குன்றம் அன்ன தேர் கடாவி, அருகு அணைந்த
கொற்றவர்
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய்,
நின்ற சேனை நிருபன்மேல் நிரைத்து வாளி தூவவே,11.-சேனையோடு வீடுமன்வந்துநிற்க, அருச்சுனனைச் சார்ந்துநின்ற
மன்னர் அவன்மீது அம்புகளைத் தூவுதல்.
என்றபோது-என்று (அருச்சுனன்கண்ணனிடம்) சொன்ன பொழுது,-
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் யாவர்உம்-
மலையையொத்த (தம்தம்) தேரைச் செலுத்திக்கொண்டு அருச்சுனனருகில் வந்த
அரசர்களெல்லோரும், ஒன்று பட்ட சேனையோடு-தம்முடன்
கூடியசேனைகளுடனே, தேவவிரதன் வந்து நின்ற எல்லையில்-பீஷ்மன்
(போர்க்களத்தில்) வந்துநின்ற இடத்திலே, உடன்று போய்-பகைமை கொண்டு
சென்று, நின்ற சேனை நிருபன்மேல்-(எதிரில்) நின்ற சேனைத்தலைவனான
அவ்வீடுமன்மேல், வாளி நிரைத்து தூவ-அம்புகளை வரிசையாகச் செலுத்த,-
(எ-று.)- “பலரும் எய்தவாளி மெய்படப்பட” என அடுத்த கவியோடு தொடரும்.
யாவரும் முடன்று-விரித்தல்.
பலரும் எய்த வாளி மெய் படப் படப் பனித்து, நாப்
புலர நொந்து, கங்கை மைந்தன் இதயமும் புழுங்கினான்,-
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து, சால மாழ்கி, நீடு
அலரும் அந்த நிறம் அழிந்த அம்புசாதம் என்னவே.12.-அப்போது வீடுமன் தளர்ச்சியுறுதல்.
பலர்உம்-(அவ்வரசர்கள்) அநேகரும், எய்த-பிரயோகித்த, வாளி-
அம்புகள்,மெய் பட பட-(தன்) உடம்பிலே மிகுதியாகத் தைக்க, கங்கை மைந்தன்-
வீடுமன்,பனித்து-வருந்தி, நாபுலர-(அவ்வருத்த மிகுதியால்) நாக்கு உலர,
நொந்து-,-மலருகின்ற வார் பனிக்கு உடைந்து-பரவுகிற மிகுந்த பனிக்கு வருந்தி,
சால மாழ்கி-மிகுதியாக வாடி, நீடு அலரும் அந்த நிறம் அழிந்த-பெரிதாக
மலர்ந்துவிளங்குகிறதனக்குரிய நிறம் கெட்ட, அம்பு சாதம் என்ன- தாமரை
போல. (உடம்பு மெலிந்து),இதயமஉம் புழுங்கினான் – மனமுந் தவித்தான்; (எ-று.)
எப்பொழுதும் மிக அழகிதாக விளங்குந்தன்மையதான தாமரை
பனிக்காலத்தில் வாடுதல்போல, எப்பொழுதும் பலபராக்கிரமங்களையுடைய
வீடுமன் அப்பொழுது பகைவர் எய்த அம்புகளால் மெலிந்தனனென்பதாம்.
காலவித்தியாசத்தாலாகும் தீங்கை நன்கு விளக்குவது, இவ்வுவமை.
இதயம்=ஹ்ருதயம். அம்புஜாதம் – நீரிற் பிறப்பது; வடசொல். மலருகின்ற
வார்பனி-மூடுபனி. நீடு-பகுதியே வினையெச்சப்பொருள்பட்டது.
துன்னிமித்தமும் பல தொடர்ந்து செய்ய, வெய்ய ஆம்
அந் நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து,
உன்னி, மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன்,
வில் நிமித்த வாளியால், அவ் வாளிகள் விலக்கினான்.13.-வீடுமன் மன்னரெய்த அம்புகளை விலக்குதல்.
(அச்சமயத்தில்), துன்னிமித்தம்உம் பல – அநேக துர்நிமித்தங்களும்,
தொடர்ந்து செய்ய- தொடர்ச்சியாக உண்டாக, (அதுகண்டு), மித்திரர்க்கு நாள்உம்
உதவி செய்யும்உறுதியோன் – சினேகிதர்களுக்கு எந்நாளிலும் உபகாரஞ்செய்யும்
உறுதிக்குணத்தையுடைய வீடுமன், வெய்ய ஆம் அ நிமித்தம் நல்நிமித்தம் ஆகும்
என்று உன்னி – கொடியனவாகிய அந்தத்தீ நிமித்தங்களை
நல்லநிமித்தங்களாகுமென்று கருதி, அகம் தெளிந்து-மனம்தெளிவடைந்து, வில்
நிமித்தம் வாளியால் – வில்லைக் கருவியாகவுடைய (தான்) எய்யும் அம்புகளால்,
அ வாளிகள் விலக்கினான் – (பகைவரது) அந்த அம்புகளை விலகச்செய்தான்;
(எ-று.)
நிமித்தம் – பின்வரும்பயனை முன்னே தெரிவிக்குங் குறி: அது –
துர்நிமித்தமென்றும், சந்நிமித்த மென்றும் இருவகைப்படும். துர்நிமித்தம் –
தீநிமித்தம்;பின்வருந்தீமையைத் தெரிவிக்குங் குறி. சந்நிமித்தம்- நல்நிமித்தம்;
பின்வரும்நன்மையைத் தெரிவிக்குங் குறி. துர்நிமித்தம் – ஆடவர்க்கு இடக்கண்
இடத்தோள் இவை துடித்தல் முதலியன. தனக்கு விரைவில் நேரும் அபாயத்தை
முன்னர்த் தெரிவிக்கிற தீநிமித்தங்களைச் சுபநிமித்தங்களாக வீடுமன் கருதியது,
உலகவாழ்க்கையில் பற்றுஅற்றதனாலும், உயர்ந்த மறுமைக்கதியை அடையும்
உவப்பினாலும், நீதி நெறிதவறாத பாண்டவர்வெற்றிபெறுதல் நியாய மென்ற
கருத்தினாலு மென்க. அம்புதொடுத்தற்கு வில் கருவி யாதலால், ‘வில் நிமித்தவாளி’
எனப்பட்டது. மித்ரன் என்னும் வடசொல்லுக்கு-அளவறிந்து காப்பவனென்று
காரணப்பொருள் உரைப்பர்.
துருபதேயர், மகத நாடர், வெங் குலிங்கர், சோனகர்,
கருநடேசர், சிங்களர், கடார பூபர், கௌசலர்,
தருமராசன் மதலை சேனை முதுகிட, சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர்மேலும் உருவ, எய்து
உறுக்கினான்14.-மாற்றரசர் வென்னிட வீடுமன் எய்தல்.
தருமராசன் மதலை சேனை – தருமபுத்திரனது சேனையிலே,
துருபதேயர் – துருபதநாட்டரசர்களும், மகதநாடர்-மகததேசத்தரசர்களும், வெம்
குலிங்கர் – கொடிய குலிங்கதேசத்தரசர்களும், சோனகர் – சோனகநாட்டரசர்களும்,
கருநட ஈசர் – கர்ணாடகதேசத்தரசர்களும், சிங்களர்-சிங்களதேசத்தரசர்களும்,
கடார பூபர் – கடாரதேசத்தரசர்களும், கௌசலர்-கோசலதேசத்தரசர்களும், முதுகு
இட – புறங்கொடுக்கும்படி, ஒருவர் போல அனைவர் மேல்உம் சரங்கள் போய்
உருவ-ஒருத்தர்மேற் போலவே எல்லார்மேலும் அம்புகள் சென்று ஊடுருவும்படி,
எய்து-உறுக்கினான் – தொடுத்துக் கோபித்தான், (வீடுமன்); (எ-று.)
வெய்து உறுக்கினான் எனப் பிரித்து, கடுமையாகச் சினங்கொண்டான்
எனினுமாம். துருபதேயர், கௌசலர் – தத்திதாந்த நாமம். கருநடம், சிங்களம் –
கர்ணாடம், ஸிம்ஹளம் என்னும் வட சொற்களின் திரிபுகள். பி-ம்: மச்சநாடர்
வெங்கலிங்கர். கருநடேசர் சிஞ்சியர்.
முடி துணிந்து பின்பு வீழ, முன் நடந்து உடற்றுவார்
அடி துணிந்து விழ, இருந்து அலங்கல் வில் வணக்குவார்,
கொடி துணிந்து, வில் துணிந்து, கோல் தொடுத்த கையுடன்
தொடி துணிந்து, சோரி வெள்ள நதியினூடு சுழலுவார்.15.-இதுவும் அடுத்த கவியும் – வீடுமனாலெய்யப்பட்ட
மன்னவ ரடைந்த நிலைமையைக் கூறும்.
தருமன்சேனைவீரர்கள் வீடுமனம்புகளால்), முடி துணிந்து பின்பு
வீழ-(தம்) தலை அறுபட்டுப் பின்னே விழுந்திட, முன் நடந்து உடற்றுவார்-
முன்னேசென்று போர்செய்பவர்களும், அடி துணிந்து விழ-(தம்)கால்கள்
அறுந்துவிழ,இருந்து-கீழிருந்து கொண்டு, அலங்கல் வில்வணக்குவார் –
போர்மாலையைச் சூடிய (தம்) வில்லை வளைப்பவர்களும், கொடி துணிந்து –
(தம்)துவசம் அறுபட்டு, வில் துணிந்து – வில் அறுபட்டு, கோல் தொடுத்த கை
தொடியுடன் துணிந்து – அம்பையெய்கிற கை தொடியென்னும் வளையோடு
துணிபட்டு, சோரி வெள்ளம் நதியினூடு சோருவார்-இரத்தப்பெருக்காகிய ஆற்றிலே
தளர்ந்துவிழுபவர்களும் ஆனார்கள்: (எ-று.)
முன் இரண்டடிகள், தலையும் கால்களும் அறுபட்டபின்பும் முண்டங்கள்
முன்தொடர்ச்சியால் சிறிதுபொழுது தொழில்செய்தலைக் கூறி அம்முகமாக
அவர்களது வீராவேசத்தை விளக்கும். கொடிதுணிந்து வில்துணிந்து கைதுணிந்து
சோருவார்-சினைவினை முதல்கொண்டது. கையுடன் தொடிதுணிந்து – உருபு
பிரித்துக் கூட்டப்பட்டது. வில்லையுங் கோல்தொடுத்த கையையும் உடன்
கூறியதற்குஏற்ப, கொடி – கொடிபோல மெல்லிதாய் நீண்டுள்ள வில் நாணி
என்றலும்பொருந்தும்; மேல் 22 – ஆம் கவியில் ”கைவரிவிலற்று நெடுநாணி
நடுவற்றுவளர்கைத் தலமுமற்று விழவே” என்பதைக் காண்க. (பி – ம்:)
நதியினூடு சுழலுவார்.
மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார்;
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார்;
ஒருத்தர் ஓட, ‘என் இது!’ என்று, அநேகர் அஞ்சி ஓடுவார்;-
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும்
இசையுமோ?
(இன்னும் தருமன்சேனையார்), மருத்து எறிந்த பூழி என்ன-
காற்றினால் வீசியெறியப்பட்ட புழுதிபோல, வந்த ஆ மடங்குவார் – வந்த வழியே
திரும்புவார்கள்; உருத்து எறிந்த-உக்கிரமாய் இடித்த, உருமின் – இடியினால்,
நொந்த – வருந்திய, உரகம் என்ன – பாம்புகள்போல, உட்குவார் – அஞ்சி
ஒடுங்குவார்கள்; ஒருத்தர் ஓட – (முன்பு) ஒருவர் பயந்து ஓட, அநேகர் – (மற்றும்)
பலர், இது என் என்று – இது என்ன அபாயகாரணமென்று கருதி, அஞ்சி ஓடுவார்
– பயந்து ஓடுவார்கள்; (இங்ஙனம் ஆகும் படி), விருத்தன வில் வளைத்த ஆண்மை
– (யாவரினும்) மூத்தவனான வீடுமன் வில்லைவளைத்துப் போர்செய்த பராக்கிரமம்,
விசயனுக்குஉம் இசையும்ஓ – அருச்சுனனுக்கும் பொருந்துமோ? [பொருந்தாது];
( எ – று.)
வில்லின்திறத்தில் அனைவரினும் பேர்பெற்ற அருச்சுனனும் செய்யமுடியாத
விற்போரை வயோவிருத்தனான வீடுமன் அப்பொழுது செய்தன னென்பதாம்.
காற்றினால் மேலெழுப்பப்பட்ட புழுதிகள் மீண்டும் பூமியிலே அடங்குதல்போல,
மிகவிசையாக மேல் வந்த வீரர்கள் வீடுமனிடம் தோற்று வந்தவழியே மீண்டன
ரென்பது, முதலடியின் கருத்து. வருத்தன் – வடசொல்; கிழவன்
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய
வீடுமனை, நீடு முனைவாய்,
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம்
என வந்து, அணுகினார்-
செம்பியனும், மா கிருபனும், செறி துரோணனொடு,
சேயொடு, செயத்திரதனும்,
தம்பியரும், மாமனும், சயிந்தரொடு, வெய்ய பகதத்தனொடு,
சல்லியனுமே.17.-சோழராசனும் கிருபன் முதலியோரும் வீடுமனுக்கு உதவியாக
வருதல்.
அப்பொழுது), நீடு முனைவாய் – பெரிய அப்போர்க்களத்திலே,
செம்பியன்உம் – சோழனும், மா – சிறந்த, கிருபன்உம் – கிருபாசாரியனும் செறி –
வலிமைமிகுந்த, துரோணனொடு-துரோணாசாரியனும் சேயொடு-அவன்மகனான
அசுவத்தாமனும், செயத்திரதன்உம் – சைந்தவனும், தம்பியர்உம்-(துரியோதனன்)
தம்பிமார்களும், மாமன்உம் – (அவர்கள்) மாமனான சகுனியும், சயிந்தரொடு –
சிந்துதேசத்தரசர்களும், வெய்ய- கொடிய, பகதத்தனொடு – பகதத்தனும்,
சல்லியனும் -, (என்னும் இவர்கள்), – அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடி
வரும் அணிலம் என – மேகம் வானத்திலெழும்பி மழைபொழிகிற இடத்திலே
(அதற்கு உதவியாக) ஓடி வருகிற காற்றுபோல, வெம் புயம் விசாலம் வட மேரு
ஓர் இரண்டு உடைய வீடுமனை – வலிய தோள்களாகிய பெரியவடதிசையிலுள்ள
மேருமலைகளிரண்டையுடைய பீஷ்மனை, வந்து அணுகினார் – வந்து
சேர்ந்தார்கள்; (எ – று.)
மழையோடு பல திசைக்காற்றுங் சேர்ந்து உலகத்தைவருத்தத்
தொடங்கினாற்போல, வீடுமனோடு பல அரசர்கள் கூட எதிர்ச் சேனையை
அழிக்கத் தொடங்கினரென்பதாம். மேரு இரண்டு – இல்பொருளுவமை. மேரு
எவ்விடத்திலுள்ள தென்றால், நமக்கு வடக்கிலுள்ள தென வேண்டுதலின், அதனை
‘வடமேரு’ என விளங்கக் கூறினார். அம்புதம் – நீரைக்கொடுப்பது; வடசொல்.
முன்னே சயத்திரதன் என வந்ததனால், பின்னே சயிந்தர் என்றது, அவன் ஒழிந்த
சிந்துநாட்டரசர்களை : சயிந்தர் = ஸைந்தவர்.
இதுமுதல் இருபத்தொருகவிகள் – பெரும்பாலும் முதலைந்து சீரும்
விளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது புளிமாச்சீரும் ஆகிய
கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.
மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன்
வளைந்து பலரும்,
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து, எதிர்
சரங்களும் உகைத்து, அமர் செய்தார்;
கனம் சலதி மொண்டுகொடு எழுந்தனைய வண்ணன்,
ஒரு கார்முகம் வணக்கி, ஒரு நூறு
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி, அவர் ஏவு சரம்
யாவும் எதிரே விலகினான்.18.-வீடுமனுக்குத் துணையாக வந்தவரெய்த அம்புகளை அருச்சுனன்
விலக்குதல்.
பலர்உம் – (இவ்வாறு) பலஅரசர்களும், மனம் செய்வலி கூர்-
மனத்திற்பொருந்திய வலிமை [தைரியம்] மிகுந்த, கச துரங்கம பதாதி இரதத்துடன்-
மிகுந்த யானை குதிரை காலாள் தேர் என்னும் நால்வகைச் சேனைகளுடனே,
வளைத்து – சூழ்ந்து கொண்டு, தனஞ்சய(ன்) மடங்கல்எதிர்-அருச்சுனனாகிய
சிங்கத்தி னெதிரே, சாபம்உம் வளைத்து – வில்லையும் வளைத்து, எதிர்
சரங்கள்உம் உகைத்து – அவன்மேல் அம்புகளையும் செலுத்தி, அமர்செய்தார் –
போரைச் செய்தார்கள்; (அப்பொழுது), கனம் சலதி மொண்டு கொடு எழுந்து
அனைய வண்ணன் – மேகம் கடல்நீரை முகந்துகொண்டு எழுந்தாற்போன்ற
கருநிறத்தையுடைய அருச்சுனன், ஒருகார் முகம் வணங்கி – (காண்டீவமென்னும்
தனது) ஒருவில்லை வளைத்து, ஒரு நூறு இனம் சரம் ஒர் ஓர் தொடையில் ஏவி –
ஒவ்வொரு நூறுதொகுதியான அம்புகளை ஒவ்வொருதொடுக்குந்தரத்திலும்
பிரயோகித்து-(அந்த அம்புகளால்), அவர் ஏவுசரம் யாஉம் எதிர்ஏ விலகினான் –
அப்பகைவர்கள் (தன்மேல்) ஏவிய அம்புகளையெல்லாம் எதிரிலே
விலகச்செய்தான்; (எ-று.)
விலக்கினான் என்ற பிறவினை, சந்தவின்பத்திற்கேற்ப, தொகுத்தல் பெற்றது.
‘மனஞ்செய்வலிகூர்’ என்ற அடைமொழி இரதத்துக்குப்பொருந்தாதாதலின்,
சதுரங்கசேனையில் இரதத்தை இறுதியில் வைத்தார். சலதி-நீர் தங்குமிடம். பி-ம்:
தனஞ்சயன் மடங்கவெதிர்
தேர் உதய பானு என நின்ற விசயன்தன் எதிர் தெவ்வர்
பனி என்ன அகல,
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற, தனது தண்டு
தனி கொண்டு குதியா,
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து,
முதுகிட்டு உடையவே,
மாருத சகாயன் என, மாருதன் என, கடவுள் மாருத
சுதன் கடுகினான்.19.-ஒருபக்கத்தில் அருச்சுனன் பகைவெல்ல,
மற்றொருசார் வீமன் தண்டு கொண்டு விரைதல்.
தேர் உதய பானு என நின்ற-தேரோடுஉதித்தலையுடைய
சூரியன்போல விளங்கிநின்ற, விசயன் தன்-அருச்சுனனது, எதிர் –
எதிரிலே, தெவ்வர்-பகைவர்கள், பனி என்ன-மூடுபனி போல, அகல-(இருந்த
இடந்தெரியாது) நீங்க,-(மற்றொருபக்கத்தில்) கடவுள் மாருத சுதன் – வாயுதேவனது
குமாரனான வீமசேனன், தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற-
முன்னணிச்சேனையிலே விளங்கித்தோன்றுதலையுடைய அரசர்களாகிய
கடல்வற்றும்படி, தனது தண்டு கொண்டு தனிகுதியா – தன்னுடைய
கதாயுதத்தை எடுத்துக் கொண்டு தனியே[ஒப்பில்லாமல் அல்லது வேறு
உதவியில்லாமல்] (தேரினின்று) குதித்து, அவர்-அப்பகைவர்கள், ஓர்உதவி
இன்றி-(தம்மைக்காத்தற்குத்) துணைவருபவர் ஒருவரும்இல்லாமல், முடியோடு
சிரங்கள்உம் உடைந்து – கீரிடங்களோடு தலைகளும்உடைபட்டு, முதுகுஇட்டு-
புறங்கொடுத்து, உடைய-அழியும்படி, மாருத சகாயன்என-காற்றைத்
துணைவனாகவுடைய அக்கினி போலவும், மாருதன் என -காற்றுப்போலவும்,
கடுகினான்-விரைந்து வந்தான்; (எ-று.)
அக்கினியை உவமைகூறுதற்கேற்பக் கடல்வற்றுதலும், வாயுவை உவமை
கூறுதற்கேற்பக் கடுகிவருதலுங் கூறினார். மேல் 21-ஆம் கவியில் ‘முந்துபடைவீரர்’
என வருதலை நோக்கி, தார் என்பதற்கு – முற்சேனையென்று
பொருளுரைக்கப்பட்டது. இனி, தார் உதயம் மா எனப் பிரித்து, போர்மாலையோடு
எதிரிலே தோன்றுதலையுடையசிறந்த நிருப ரெனினுமாம். மாருதசகாயன்- பஹு
வ்ரீஹிஸமாஸம்பெற்ற வடசொல்தொடர். மாருதசுதன் ஓருதவியின்றிக்
கடுகினான்என்று இயைத்து உரைப்பினுமாம்.
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும், சிலரை; இரு
பணைகள் பற்றி, இறுகச்
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும், சிலரை;
ஐந்து கதியும் சிவணவே
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும், சிலரை;-
வஞ்சினமும் வெஞ் சினமுடன்
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர
துரங்கம் விழவே.20.-வீமனுடைய வீரச்செயல்.
(வீமன்), வெம் சினமுடன் – கடுங்கோபத்தோடு, வஞ்சினம்உம் கூறி
வரும்-வீரவாதங்களையுஞ் சொல்லிவருகிற, வாள் அரசர் – கொடியபகையரசர்கள்,
ஏறி-,அணி நின்ற-ஒழுங்காக நின்ற, ரதகுஞ்சர துரங்கம்-தேர் யானை குதிரைகள்,
விழ-கீழ் விழும்படி, ஏறிவருதேருடன் எடுத்துசிலரை எறி தரும்-ஏறிவருகிற
தேரோடு கையால்தூக்கிச் சில அரசரை எறிவான்; இரு பணைகள் இறுக பற்றி-
இரண்டுதந்தங்களையும் (தன்கைகளால்) உறுதியாகப்பிடித்து, சீறி வரும்
யானையொடு எடுத்து சிலரை எறிதரும்-கோபித்துவருகிற யானையோடுதூக்கிச்
சில அரசரைஎறிவான்; ஐந்து கதிஉம் சிவண – ஐவகை நடைகளும்பொருந்த,
மாறிவரு-எதிர்ப்பட்டுவருகிற, வாசியொடு-குதிரையுடனே, எடுத்து-தூக்கி, சிலரை
எறிதரும்-சிலஅரசரை எறிவான்; (எ-று.)
இனி, ‘வஞ்சினமும்……..விழ’ என்பதை அடுத்தகவியில் ‘நொந்து’என்பதோடு
இயைப்பினும் அமையும். வஞ்சினம்-சபதம். ஐந்துகதி-நான்காம் போர்ச்சருக்கம்,
30-ஆம் பாடலினுரையிற் காண்க.
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர்
முதுகிடுதல் கண்டு, முனியா,
ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர், வின்மையில்
அருச்சுனனை ஒத்த அடலோர்,
உந்து உரக கேதனன் உரைப்ப, முகில் ஏழும் உடன்
ஊழி இறுதிப் பொழிவபோல்,
வந்து, வடி வாளி மழை சிந்தினர், பராக்கிரம வாசி,
இபம், மா இரதரே.1.-தன்சேனை வீமனுக்குப் புறங்கொடுத்தது கண்ட
துரியோதனன்கட்டளையால் ஐந்துலட்சம்வீரர் வீமனை யெதிர்த்தல்.
முந்து படை வீரர்-(போருக்கு)முற்பட்டுவந்த சேனை வீரர்கள், கதை
வீமன் எதிர்-(சந்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தையுடைய வீமசேனனது எதிரிலே,
மிக நொந்து-மிகுதியாக வருந்தி, முதுகு இடுதல்-புறங்கொடுத்தலை, கண்டு –
பார்த்து, உந்து உரக கேதனன்-உயர்ந்தபாம்புக்கொடியையுடைய துரியோதனன்,
முனியா – கோபங்கொண்டு, உரைப்ப – (அவ்வீம அருச்சுனரை எதிர்க்கும்படி
கட்டளை) கூற,-ஐந்து உறழும் நூறு படி ஆயிரவர்-ஐந்தினாற்பெருக்கப்பட்ட
நூறென்னும் அளவையுடையஆயிரமென்னுந்தொகையுடையவர்களும்
[ஐந்துலக்ஷம்பேரும்], வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் – விற்போர்
வல்லமையில் அருச்சுனனைப்போன்றவலிமையையுடையவர்களுமாகிய,
பராக்கிரமம் வாசி இபம் மா இரதர்-பகைவெல்லும்ஆற்றலையுடையகுதிரை யானை
பெருந்தேர் என்பவற்றில் ஏறிய வீரர்கள்,-முகில் ஏழ்உம்-ஏழுமேகங்களும், உடன்-
ஒருசேர, ஊழி இறுதி-கால்பாந்தகாலத்தில் பொழிவ போல் – (வந்து) மழை
பொழிவனபோல, வந்து-(திரண்டு எதிர்த்து) வந்து, வடி வாளி மழை சிந்தினர் –
கூர்மையான அம்பின்மழையைப் பொழிந்தார்கள்; (எ-று.)
பராக்கிரமம்-பர ஆக்கிரமம் எனப் பிரியும்; பரர்-பகைவர், (அவர்களை)
ஆக்கிரமித்தல்-வென்றுவசப்படுத்தல்; இது-வீரர்க்கு அடைமொழி. உறழ்தல்-
பெருக்கல். உந்துதல்-உயர்தல், ஏறுதல். ஊழி-பிரமனாயுள்; அல்லது, பிரமனது
தினம். பிரமனதுநாள் ஒவ்வொன்றன் பகலிறுதியிலும் பிராமனாயுளிறுதியிலும்,
ஏழுமேகங்களும் விரைந்து ஒருங்கு எழுந்து அளவிறந்த மழைபொழிந்து
உலகங்களை யழிக்கு மென்பது நூற்கொள்கை. பொழிவ=பொழிவது: விவகாரம்.
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும்,
அவ் வில்லொடு எதிர் போய்,
அவ் அவர் தொடுத்து விடும் அம்புகள் எனைப் பலவும் அவ்
அவை தொடுத்து விலகி,
கை வரி வில் அற்று, நெடு நாணின் நடு அற்று, வளர்
கைத்தலமும் அற்று விழவே,
வை வரி வடிக் கணைகள் ஏவினன், மணித் திகிரி வலவன்
விடு தேரில் வருவோன்.22.-அருச்சுனன் சென்று எதிரிகள் பொழியும் அம்புமழையை
விலக்குதல்.
மணி – அழகிய, திகிரி – சக்கராயுதத்தையுடைய, வலவன்-பாகனாகிய
கண்ணபிரான், விடு – விசையாகச் செலுத்துகிற, தேரில்-இரதத்திலே, வருவோன் –
வருபவனும், வெம்வனம்-கொடியகாண்டவவனத்தை, எரி கடவுள் உண்டிட –
அக்கினிதேவன் புசிக்க, வணக்கும் – (தான்) வளைத்த, ஒரு வில்லிஉம்-
ஒப்பற்றவில்லையுடையவனுமான அருச்சுனனனும், அ வில்லொடு-
(காண்டீவமென்னும்) அந்த வில்லுடனே, எதிர்போய்-எதிரிற்சென்று, அ அவர்
தொடுத்து விடும் அம்புகள் எனை பலஉம்-அந்தந்தப் பகைவீரர்கள் (வில்லில்)
தொடுத்து விடுகிற அம்புகள் எல்லாவற்றையும், அ வகை தொடுத்து-அவர்கள்
தொடுக்கும் வகையாகவே எதிரம்பு தொடுத்து, விலகி-விலக்கி, (அவர்கள்), கை
வரி வில் நடு அற்று – கையிற்பிடித்த கட்டமைந்த விற்கள் நடுவில் துணிபட்டு,
நாணின் நடு அற்று – வில்நாணியின் நடுவிடமும் துணிபட்டு, வளர் கை தலம்உம்
அற்று – வளர்ந்துள்ள கைகளினிடங்களும் துணிபட்டு, விழ – கீழ்விழும்படி, வை
வரி வடி கணைகள் – கூர்மையான நீண்ட வடிக்கப்படுதலையையுடைய அம்புகளை,
ஏவினன் – (அவர்கள்மேல்) செலுத்தினான்; (எ-று.)
அருச்சுனன் பகைவரெய்த அம்புமழையை விலக்கி மற்றும் பல
பாணங்களைச் செலுத்தி அவர்களது வில்லையும் வில்நாணியையும் கைகளையும்
அறுத்துத்தள்ளின னென்பதாம். மிகப் பசித்து அந்தணவடிவத்தோடுவந்த அக்கினி
பகவானுக்கு அருச்சுனன் காண்டவவனத்தை அதிலுள்ளசராசரங்களுடனே
விருந்தளித்தபொழுது, அந்த அக்கினியினிடத்தினின்று காண்டீவமென்னும்
வில்லைப் பெற்று, அதினின்று தொடுத்த அம்புகளால், அப்பூஞ்சோலையிலுள்ள
பிராணிகள் தப்பி வெளியிற்செல்லாதபடி அவற்றையெல்லாம் கொன்று தள்ளியும்,
அவ்வனத்துக்குஉரிய இந்திரனால் ஏவப்பட்டுவந்து ஏழுமேகங்களும் பொழிந்த
அடைமழையைச் சரக்கூடுகட்டித்தடுத்தும் பின்னும் தேவேந்திரன்
பெருங்கோபங்கொண்டு தேவர்களுடன்வந்து எதிர்க்க அவர்களை விற்போரில்
வென்றும் அருச்சுனன் திறங்காட்டின னென்பது, கீழ்க் காண்டவதகனச்சருக்கத்து
வரலாறாம். விலகி-விகாரம்.
தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும்!’ என்று,
துச்சாதனனொடு ஐவர் இளையோர்
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது,
புகன்ற நரபாலர் எவரும்
பரும மத மா புரவி தேர்கொடு பறந்தனர், படாதவர்-
கெடாத கதையும்,
செரு முனை சராசனமும், உடைய இருவோரும் நனி சீறி,
அமர் செய்த பொழுதே,23.-வீமார்ச்சுனர்பொர, யாவரும் பறந்துபோதல்.
கெடாத – அழியாத, கதைஉம் – (சத்துருகாதினியென்னும்)
கதாயுதத்தையும், செரு முனை – போரை உக்கிரமாகச் செய்கின்ற, சராசனம் உம் –
காண்டீவவில்லையும், உடைய-,இருவோர்உம் – (வீம அருச்சுனர்) இரண்டுபேரும்,
நனி சீறி – மிகக்கோபித்து, அமர் செய்த பொழுது – போர் செய்த அச்சமயத்தில்,-
தருமன் முதல் ஐவரைஉம் வென்றிடுதும் என்று – தருமபுத்திரன் முதலிய
பஞ்சபாண்டவரையும் சயித்திடுவோமென்று (வீரவாதங்) கூறி, பொரு முனையின் –
போர்செய்யுமிடத்திலே, வீடுமன் முன் – பீஷ்மனுக்குமுன்னே, துச்சாதனனொடு
நின்றவர்கள் – துச்சாதனனுடன் வந்து நின்றவர்களாகிய, ஐவர் இளையோர்
அல்லது – அவன் தம்பிமார் ஐந்து பேர்மாத்திரமேயல்லாமல், புகன்ற நரபாலர்
எவர்உம்-(மற்றும் வீரவாதம்) கூறிய அரசர்களெல்லோரும், படாதவர் –
இறவாதவர்களாய், பருமம் மதம் மா புரவி தேர்கொடு – அலங்காரத்தையுடைய
மதயானைகளும் குதிரைகளும் தேர்களு மாகிய (தங்கள்) வாகனங்களைக்
கொண்டு, பறந்தனர் – (அஞ்சி) ஓடினார்கள்; (எ-று.)-யாவரும் பயந்து ஓடிப்
பிழைத்தனரென்பதாம். புகன்ற-சிறப்பித்துக்கூறப்பட்ட எனினுமாம். பருவம் –
பருமையுமாம்.
விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர, விறல்
வீடுமன் விருப்பினுடனே,
கண் இணை நெருப்பு எழ உடன்று, ‘இனி நமக்கும் இது
காலம்!’ என, மாலை புனையும்
வண்ண வரி வில் தலை வணக்கி,விதமான பல வாளிகள்
தெரிந்து, தருமற்கு
எண்ணும் இரதத் தலைவர் அனைவரையும் விட்டிலன்,
இமைப்பொழுதின் எய்தனன் அரோ.24.-வீடுமன் தருமபுத்திரனுக்குத் துணையானதேர்வீரர்களைக்
கடுமையாக எதிர்த்தல்.
(அப்பொழுது), விறல் வீடுமன் – பராக்கிரமத்தையுடைய பீஷ்மன்,
விண்ணவரில் எழுவர் உற்று கண்டு களி கூர (-) (போர்காணும்) தேவர்களில்
ஏழுவசுக்கள்(அவர்களினத்தவனான – தனது போர்த்திறத்தைக்)
கவனித்துப்பார்த்துக் களிப்புமிகும்படி, விருப்பினுடன்-போர் விருப்பத்தோடு, கண்
இணை நெருப்பு எழ உடன்று – இரண்டுகண்களிலும் தீப்பொறி கிளம்பப்
பெருங்கோபங்கொண்டு, இனி நமக்குஉம் இது காலம் என – இனிமேல் நமக்கும்
(போர்முடித்தற்குக்) காலம் இதுவே யென்றுகருதி,மாலை புனையும் வண்ணம் வரி
வில் தலை வணக்கி – போர்மாலையைத்தரித்த அழகியகட்டமைந்த
வில்லின்கோடியை வளைத்து, விதம் ஆன பல வாளிகள் தெரிந்து –
பலவகைப்பட்ட அநேக அம்புகளை ஆராய்ந்து எடுத்து, தருமற்கு எண்ணும்
இரதம்தலைவர் அனைவரைஉம்-தருமபுத்திரனுக்கு (த் துணைவராக) மதிக்கப்பட்ட
தேர் வீரர்களெல்லாரையும், விட்டிலன் – (ஒருவரையும்) விடாதவனாய், இமை
பொழுதின் எய்தனன் – ஒருகணப்பொழுதிலே அம்பு செலுத்தி யெதிர்த்தான்; (எ-
று.) -அரோ – ஈற்றசை,
அஷ்டவசுக்களுள் பிரபாசன் வீடுமனாதலால், அவனொழிந்தோரை ‘எழுவர்’
என்றது. தனக்கு அழிவுகாலம் அருகிலிருத்தலால், அதற்குமுன் தனது போர்த்திறம்
முழுவதையும் காட்டக்கருதின னென்பார், ‘இனி நமக்கும் இதுகாலமென’ என்றார்.
எத்தனை முடித் தலைகள், எத்தனை புயக் கிரிகள், எத்தனை
கரக் கமலம், வேறு
எத்தனை உடற் சுமைகள், எத்தனை உறுப்பின் நிணம்,
எத்தனை கொடிக் குடர்களோடு
எத்தனை நிணத் தடிகள், எத்தனை நரப்பு வகை, எத்தனை
எலுப்பு நிரை, மேல்
எத்தனை மணித் தொடைகள், எத்தனை மலர்க் கழல்கள்,-
இற்றன களத்தினிடையே!25.-மூன்றுகவிகள்-வீடுமன்செய்த கடும்போரினால் அரசர்கள்
அங்கமற்று இறந்தமை கூறும்.
(அவ்வாறு வீடுமன் உக்கிரமாகப் போர்செய்த பொழுது), களத்தின்
இடை-போர்க்களத்திலே, இற்றன – துணிபட்டனவான, முடி தலைகள்-
கிரீடத்தையுடைய தலைகள், எதனை-எவ்வளவு! புயம் கிரிகள்-மலைபோலுந்
தோள்கள், எத்தனை-! கரம் கமலம்-தாமரைமலர்போலும் கைகள், எத்தனை-!
வேறு- இன்னும் உடல் சுமைகள்-பருத்த உடம்புகள், எத்தனை-!உறுப்பின்
நிணம் – உடம்பிலுள்ளகொழுப்புகள், எத்தனை-! கொடி குடர்கள்உம்-
கொடிபோலச்சுற்றிய குடல்களும், எத்தனை-! நிணம் தடிகள்-கொழுத்துள்ள
தசைத்திரள்கள், எத்தனை-! நரம்புவகை-நரம்புகளின்வகைகள், எத்தனை-! எலும்பு
நிரை-எலும்புகளின் வரிசைகள், எத்தனை-! மேல் இன்னும், மணிதொடைகள்-
அழகியதுடையென்னும் உறுப்புகள், எத்தனை-! மலர் கழல்கள்-தாமரைமலர்போன்ற
கால்கள், எத்தனை-! (எ-று.)
மிகப்பல வீரர்கள் தலைமுதலியன சின்னபின்னப்பட்டு அழிந்தன
ரென்பதாம்.தொடையெனினும், துடையெனினும் ஒக்கும். நரம்புவகை, எலுப்பு
நிரை-மென்றொடர் வன்றொடராயின. பி. ம்: குடல்களோடு.
விரிந்தன, உரங்களும்; வெகுண்டன, மனங்களும்;
விழுந்தன, பசுங் குருதிநீர்;
நெரிந்தன, எலும்புகள்; அழிந்தன, கொழுந் தசை;
நிமிர்ந்தன, நரம்பின் விசியும்;
சரிந்தன, பெருங் குடர்; துணிந்தன, சிரம்; கடை
தவழ்ந்தன, நெடும் புருவமும்;
எரிந்தன, முகங்களும்; எழுந்தன சிரங்களும்; இறந்தனர்,
கடுங் கண் இளையோர்.
(மற்றும் வலவீரர்களது), உரங்கள்உம்-மார்புகளும், விரிந்தன-
பிளந்தன; மனங்களும்-, வெகுண்டன – கோபங்கொண்டன; பசு குருதி நீர்-புதிய
இரத்தப்பெருக்குகள், விழுந்தன-கீழ்ப்பாய்ந்தன; எலும்புகள்-, நெரிந்தன-
நொருங்கின; கொழு தசை-கொழுத்த சதைகள், அழிந்தன-; நரம்பின் விசிஉம்-
நரம்புகளின் கட்டுக்களும், நிமிர்ந்தன – நெக்கு விட்டன; பெரு குடர் – பெரிய
குடல்கள், சரிந்தன-; சிரம்-தலைகள், துணிந்தன – அறுபட்டன; நெடு புருவம்உம்-
நீண்ட புருவங்களும், கடை தவழ்ந்தன – நுனி நெறித்தன; முகங்களும்-, எரிந்தன-
தீந்துபோயின; சிரங்கள்உம்- தலைகளும், எழுந்தன-(உடலினின்று துணிபட்டு)
மேலெழுந்தன; (இவ்வாறு போரில் வீடுமனம்புகளால்), கடுங் கண் இளையோர்-
பயங்கரமான கண்களையுடைய வீரர்கள், இறந்தனர்-; (எ-று.)
வெகுண்டனமனங்களும், கடைதவழ்ந்தனநெடும்புருவமும் என்ற இரண்டும்-
அவர்கள்கொண்ட கோபத்தையும், மற்றவை அவர்கள் பலவகையாக அழிந்ததையும்
விளக்கும். எரிந்தனமுகங்களும் என்பதற்கு-முகங்கள் கோபாக்கினியாற் கொதித்தன
எனினும் அமையும். கடுங்கண் என்றது, கோபக்கண்களை; இனி, கடுமையான
தன்மையுமாம். பி-ம்: முகங்களுமிடிந்தனமனங்களும்.
சோமகரில், மச்சரில், தென்னரில், துளுவரில், துருபதேயரில்,
வளவரில்,
தே மருவு அலங்கல் குலிங்கரில், சேரரில், சிஞ்சியரில்,
வெஞ் சமர் விடா
மா மகுடவர்த்தனரில், மண்டலிகரில், பட்டவர்த்தனரில்,
மற்று இவ் உரவோன்
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம்
மன்னர் என்று மொழிவாம்?
சோமகரில் – சோமககுலத்தவரிலும், மச்சரில்-மத்ஸ்ய தேசத்தவரிலும்,
தென்னரில் – பாண்டியநாட்டவரிலும், துளுவரில்-துளுவதேசத்தவரிலும்,
துருபதேயரில்-துருபதேசத்தவரிலும், வளவரில்-சோழநாட்டவரிலும், தேன் மருவு
அலங்கல்- தேன்பொருந்தின போர்மாலையையுடைய, குலிங்கரில் – குலிங்க
தேசத்தவரிலும், சேரரில்-சேரநாட்டவரிலும், சிஞ்சியரில் – சிஞ்சி நாட்டவரிலும்,
வெம் சமர் விடா- கொடிய போரை நீங்காத, மா மகுடவர்த்தனரில் –
பெரியமகுடவர்த்தனர்களிலும், மண்டலிகரில்-மண்டலீகர்களிலும், பட்டவர்த்தனரில்
பட்டவர்த்தனர்களிலும், இ உரவோன் ஏமருகணைக்கு இலக்கு ஆகாத
மன்னவர்கள்-(வீடுமனாகிய) இவ்வீரன் மிகுந்தகளிப்போடுஎய்த அம்புகளுக்குக்
குறியாகாமல் தப்பின அரசர்கள், எ மன்னர் என்று மொழிவாம்-எந்த அரசரென்று
(யாம்) கூறுவோம்? (எ-று.)-மற்று- அசை.
எனவே, ஒருவரும் தவறாமல் எல்லாரும் வீடுமனம்புக்கு
இலக்காயினரென்பதாம். ஏமருதல்-மிகுகளிப்புறுதல்; ஏமா என்னும் பகுதி
விகாரப்பட்டு வினைத்தொகையில்வந்தது. இனி, ஏமரு-(காண்பவர்) திகைத்தற்குக்
காரணமான என்றுங் கொள்ளலாம்: ஏ மரு-எய்யுந்தொழில் மருவுகின்ற என்றலும்
ஒன்று. பின்னே துருபதேயர் என வருதலால், முன்னே சோமகர் என்றது –
அக்குலத்தவருள் துருபததேசத்தவரொழிந்தவரையே குறிக்கும்; இனி, துருபதேயர்
என்பதை-த்ரௌபதேயர் என்பதன் விகாரமாகக்கொண்டு, திரௌபதீபுத்திரரான
உபபாண்டவர் ஐவரென உரைத்தல், முன்னும் பின்னும்வந்த நாட்டவரினத்தோடு
பொருந்தாதாம். கீழ் இச்சருக்கத்தின் பதினான்காங் கவியையுங் காண்க. முன்வந்த
பல நாடுகளின் சேர்த்தியால், சிஞ்சியென்பது – ஒருநாடென்று கொள்ளப்பட்டது.
தென்னர்-தென்னாட்டவர்.
இது-கீழ்க்கூறிய விருத்தவகையில் சிறிது ஓசைவேறுபட்டது.
வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய
வீடுமனை, நீடு முனைவாய்,
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம்
என வந்து, அணுகினார்-
செம்பியனும், மா கிருபனும், செறி துரோணனொடு,
சேயொடு, செயத்திரதனும்,
தம்பியரும், மாமனும், சயிந்தரொடு, வெய்ய பகதத்தனொடு,
சல்லியனுமே28.-அதுகண்டு ஸ்ரீக்ருஷ்ணன் சொல்ல, அருச்சுனன்
வீடுமனுடன் பொர வில்வளைத்தல்.
(இவ்வாறு), நீடு கங்கைமைந்தன்-பெரிய வீடுமன், மேல் எழுந்து –
மேன்மேற் கிளர்ந்துவந்து, தம் படையை அடு – தம்பக்கத்துச்
சேனையைஅழிக்கிற, மேன்மை-சிறப்பை, கண்டு-, மன்றல் கமழ் கார் முகுந்தன் –
(திருமேனியில்) திவ்வியபரிமளம் வீசப்பெற்ற கருநிறமுடைய கண்ணபிரான், இரங்கி
– மனமிரங்கி, வெகுளா – கோபங்கொண்டு,-ஞாலம் உண்ட செம் பவளம் வாய்
மலர்ந்து – (பிரளயகாலத்தில்) உலகங்களை அமுதுசெய்கிற சிவந்த
பவழம்போன்ற(தன்) திருவாய்மலரைத் திறந்து,இவனைகொண்டு நாம் முரண்
தொடங்க இதுஏ காலம் என்று – இச்சிகண்டியை எதிர்கொண்டு நாம் போரைத்
தொடங்குதற்கு இதுவே சமயமென்று சொல்லி, வெம் புரவி கால் கொள் சந்தனம்
கடவ – வேகமானகுதிரைகளையும் சக்கரங்களையும் கொண்ட தேரை
(வீடுமனெதிரில்) செலுத்த,- தனஞ்சயன்உம்-அருச்சுனனும், கோலம் வெம் சரங்கள்
அடைவுஏ தெரிந்து கொண்டு-அழகியகொடிய அம்புகளை முறையே
ஆராய்ந்தெடுத்தது, சிலை கோலினன்-(போர் செய்ய) வில்வளைத்தான் (எ-று.)
பிரளயகாலத்தில் திருமால் உலகங்களைத் திருவயிற்றில் வைத்துக் கொண்டு
பாதுகாக்கின்றமைபற்றி. ‘ஞாலமுண்டவாய்’ என்றார். சந்தனம்=ஸ்யந்தநம்.
இவனைக்கொண்டு – கதையை உட்கொண்டுவந்த சுட்டு.
இதுமுதற் பத்துக்கவிகள் – இச்சருக்கத்து 17-ஆம் கவி போன்ற
விருத்தவகையிற் சேர்ந்தனவேயாகும்.
ஓதம் வந்து எழுந்தது என, மேகம் நின்று அதிர்ந்தது என,
ஊழியும் பெயர்ந்தது எனவே,
மாதிரங்களும் செவிடுபோய், அகண்டமும் பொதுளி,
வாய் பிளந்தது அண்ட முகடும்-
சீதரன், செழுந் துளப மாதவன், தயங்கு அருண சீத
பங்கயம் கொள் திருவின்
நாதன், வெஞ் சமம் கருதி, ஊதுகின்ற சங்கின் முழு நாதம்
வந்து எழுந்த பொழுதே.29.-ஸ்ரீக்ருஷ்ணணுடைய பாஞ்சசன்னியமுழக்கம்.
சீதரன் – ஸ்ரீதரனென்னும் ஒருதிருநாமமுடையவனும், செழு
துளபம்- சிறந்த திருத்துழாய்மாலையையணிந்த, மாதவன்-மாதவனென்னும்
ஒருதிருநாமமுடையவனும், தயங்கு – விளங்குகிற, அருணம்-செந்நிறமுடைய, சீதம்-
குளிர்ந்த, பங்கயம்-தாமரைமலரை, கொள்-(இடமாகக்) கொண்ட திருவின்-
இலக்குமியினது, நாதன் – கணவனும் ஆகிய கண்ணபிரான், வெம் சமம் கருதி –
கொடியபோரை உத்தேசித்து, ஊதுகின்ற-(அப்பொழுது தன் திருவாய்மலரில்வைத்து)
ஊதின, சங்கின்-(பாஞ்சசன்னிய மென்னுந் திவ்விய) சங்கத்தினது, முழு நாதம் –
போரொலிமுழுவதும், வந்து எழுந்த பொழுது – வெளிப்பட்டு மிகுந்தபொழுது,
ஓதம் வந்து எழுந்தது என – கடல்கள் பொங்கிவந்ததென்று சொல்லவும், மேகம்
நின்று அதிர்ந்தது என – மேகங்கள் நிலை பெற்று இடிமுழங்கிற்று என்று
சொல்லவும், ஊழிஉம்பெயர்ந்தது என-கல்பகாலம் மாறிற் றென்று சொல்லவும்,
மாதிரங்கள்உம் செவிடு போய் – எல்லாத்திசையிலுள்ளவர்களும் செவிடுபட்டு,
அகண்டம்உம் பொதுளி-எல்லாவுலகங்களும் தாக்கி, அண்டம் முகடுஉம் வாய்
பிளந்தது-அண்டகோளத்தின் மேல்முகடும் (அதிர்ச்சியால்) வெடித்தது; (எ-று.)
மாதிரம் – ஆகுபெயர். ஸ்ரீதரன்-திருமகளைத் திருமார்பில் தரிப்பவன்:
மாதவன்-திருமகள்கணவன். பின்னே ‘திருவின் நாதன்’ என வந்ததனால், மாதவன்
என்னும் பெயர் – இடுகுறி மாத்திரமாய் நின்றது; இனி, (வாமனாவதாரத்தில்)
பெருந்தவமுடையா னெனினுமாம். அருணசீதபங்பஜம் – வடமொழித்தொடர்
தூரியம் கறங்க, நரபாலர் சங்கு இனங்கள் அணிதோறும்
நின்று நின்று குமுற,
தேர்களும் துரங்கமொடு வேழமும், கலந்து வருசேனை
மண்டலங்களுடனே,
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு, ‘உலகு
பேரும் அன்றும் இன்றுகொல்?` என,
போர் தொடங்கி, வென்றி புனை வீடுமன் தடங் கண்
எதிர் போயினன், தனஞ்சயனுமே.30.-அருச்சுனன் சிகண்டியை முன்னிட்டுக்கொண்டு போர் தொடங்கி
வீடுமனெதிரிற் போதல்.
தூரியம் கறங்க – வாத்தியங்கள் முழங்கவும், நரபாலர் சங்கு
இனங்கள் – அரசர்களது சங்கங்களின் கூட்டங்கள், அணி தோறுஉம்-
அப்படைவகுப்பினிடந்தோறும், நின்று நின்று குமுற – மிகுதியாகப் பொருந்தி
ஆரவாரிக்கவும், தேர்கள்உம் துரங்கமொடு வேழம்உம் கலந்து வரு சேனை
மண்டலங்களுடனே – இரதங்களும் குதிரைகளும் யானைகளும் கூடிவருகிற
சேனைக்கூட்டங்களுடனே, தனஞ்சயன்உம் – அருச்சுனனும், பேர்பெறும் சிகண்டி
தலை ஆக முன்பு கொண்டு – பிரசித்திபெற்ற சிகிண்டியைத் தலைமையாக
முன்னேநிறுத்தி, உலகு பேரும் அன்றுஉம் இன்றுகொல் என – ‘உலகங்கள்
அழியும் அந்த உகாந்தகாலமும் இன்றைக்கோ?’ என்று (யாவரும்) அஞ்சும்படி,
போர் தொடங்கி – யுத்தத்தைச் செய்யத்தொடங்கி, வென்றி புனை வீடுமன் தட
கண் எதிர்போயினன் – சயத்தைக்கொண்ட பீஷ்மனது பெரிய கண்களி னெதிரிற்
சென்றான்; (எ-று.)-பேர்பெறும் – வீடுமனைக் கொல்லப் பிறந்தவனென்று
புகழ்பெற்ற என்க.
காதி வெங் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை
காணலும், குனிந்து நகையா,
‘ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது!’ என்று, தனது
ஆயுதம் துறந்து, விரை தேர்-
மீது கங்கை மைந்தன் ஒருதான் வெறுங் கை நின்றளவில்,
மேல் நடந்து சென்று பொரு துச்-
சாதனன் சரங்கள் பல தூவினன், பரிந்து, எதிரி
சாபமும் துணிந்து விழவே.31.-சிகண்டியைக்கண்டதும் ஆயுதத்தைப்போகட்டு வீடுமன் நிற்க,
எதிரிசாபம்முதலியன துணியும்படி துச்சாதனன் அம்புதூவுதல்.
காதி-எதிர்த்து, வெம் கொடு பகழிஏவு திண்சிகண்டி-மிகக்கொடிய
அம்புகளைச் செலுத்துகிற வலிமையையுடைய சிகண்டியினது, தலை-முகத்தை,
காணலும்-பார்த்தமாத்திரத்திலே,-கங்கை மைந்தன்-வீடுமன்,-குனிந்து-(இயற்கையில்
ஆண்மையில்லாத அவனோடு போர் செய்ய நாணித்) தலைகுணிந்து, நகையா-
சிரித்து, ‘ஆதி அம்பை பகை-முன்பு அம்பையினாலாகிய பகைமை, இன்று மூள
வந்தது-இப்பொழுது பலிக்கவந்தது’, என்று – என்று எண்ணி, தனது ஆயுதம்
துறந்து-தன்னுடைய ஆயுதங்களைக் கீழேபோகட்டு, விரை தேர் மீது-
துரிதமாகச்செல்லும் (தனது) தேரின்மேல், ஒரு தான்-தான் தனியாய், வெறு கை
நின்ற அளவில்-வெறுங்கையோடு நின்றபொழுதில்,-பொரு துச்சாசனன்-போர்
செய்யவல்ல துச்சாதனன், பரிந்து-(வீடுமனுக்காகப்) பரிவு கொண்டு, மேல் நடந்து
சென்று – அச்சிகண்டியின்மேல் எதிர்த்துப்போய், எதிரி சாபம்உம் துணிந்து விழ-
அப்பகைவனது வில்லும் அறுபட்டுவிழ, பல சரங்கள் தூவினன் –
அநேகபாணங்களைப் பிரயோகித்தான்; (எ-று.)
சாபமும் என்ற எச்சவும்மையால், அவனது இதயமும்தேரும் பிளத்தல்
விளங்கும்; அடுத்த கவியிலுங் காண்க. சிகண்டி தலை காணலும்-சிகண்டியை
எதிரிற் கண்டவுடனே என்றுமாம். ஒரு தான்-ஒப்பில்லாத தான் என்றுமாம்.
எதிரி-எதிர்ப்பவன். (பி-ம்:) பகழிமோது. மீளவந்தது.
சாக நின்றிலன் துருபதேயன், நெஞ்சம் இன்றி, வரி சாபம்
இன்றி, வண் கொடி கொள் தேர்
வாகம் இன்றி, வந்த வழி மீள, நின்ற சந்தனு குமாரனும்
சரங்கள் விடவே,
யூகமும் பிளந்து, சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற
செங் கண் நெடுமால்,
மேகமும் கருங் கடலும் நீலமும் கலந்த, திரு மேனியும்
சிவந்தது அறவே.32.-சிகண்டி வந்தவழி மீள,
வீடுமன் ஸ்ரீக்ருஷ்ணனது திருமேனியும் புண்படச் சரம்விடுதல்.
(அப்பொழுது) துருபதேயன்-துருபதராச குமாரனானசிகண்டி,
நெஞ்சம் இன்றி-மனமழிந்து, வரி சாபம் இன்றி-கட்டமைந்த வில் இல்லாமல், வண்
கொடி கொள் தேர் வாகம் இன்றி-அழகியகொடியைக்கொண்ட தேராகிய வாகன
மில்லாமல், சாகநின்றிலன்-இறக்க நிற்காதவனாய், வந்த வழி மீள-வந்தவழியே
திரும்பிச்செல்ல, (பின்பு), நின்ற-, சந்தனுகுமாரன்உம்-சந்தனுராசபுத்திரனான
வீடுமனும், சரங்கள்விட-அம்புகளைச்செலுத்த,-யூகம்உம்-(பாண்டவரது)
படைவகுப்பும், பிளந்து-முறிபட்டு, சுரராசன் மைந்தன் முந்தி ரதம் ஊருகின்ற
செம்கண் நெடுமால் – தேவேந்திரகுமாரனான அருச்சுனனுக்கு
முன்நின்றுதேர்செலுத்துகிற சிவந்தகண்களையுடைய சிறந்த கண்ணபிரானது,
மேகம்உம் கரு கடல்உம் நீலம்உம் கலந்த திரு மேனிஉம்-மேகத்தின் தன்மையும்
கரியகடலின்தன்மையும்நீலரத்தினத்தின் தன்மையும் பொருந்தின அழகிய
வடிவமும், அறசிவந்தது-மிகச் செந்நிறம் பெற்றது;
அங்ஙனமானது, வீடுமன் விசையாக விட்ட அம்புமழைபட்டு
இரத்தங்குழம்பியதனா லென்க. பிளந்து-பிளக்க எனத் திரிக்க. சாகநின்றிலன்
என்றது, இன்னும் சிறிதுபொழுது சிகண்டி அங்கு நின்றிருந்தால் துச்சாதனனாற்
கொல்லப்பட்டேயிருப்பானென்பதை நன்குவிளக்கும். துருபதேயன்-வடமொழித்
தத்திதாந்தநாமம். தேர்வாகம்-தேர்க்கு திரையுமாம்.
போன திண் சிகண்டிதனை மீளவும் கொணர்ந்து, ‘பல
பூசலும் கடந்து இரதம்மேல்
நீ நில்; அஞ்சல்; நின் கணையும் ஏவுக!’ என்று, வெஞ்
சமரில் நேர் நடந்து சென்று, விசயன்,
கூனல் அங்கி தந்த சிலை கோலி, அம்பொடு அம்பு பல
கூட நெஞ்சு அழன்று உதையினான்,
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன்
வரை மேனி எங்கணும் புதையவே.33.-அருச்சுனன் சிகண்டியையிட்டுவந்துமுன்னேநிறுத்தி,
அவனம்புகளோடு
தன் அம்புகளை வீடுமன் மேனியிற் செலுத்துதல்.
(அப்பொழுது), விசயன்-அருச்சுனன், போன திண் சிகண்டிதனை-
(அவ்வாறு) புறங்கொடுத்துச்சென்ற வலிய சிகண்டியை, மீளஉம் கொணர்ந்து –
மறுபடியும் அழைத்துக்கொண்டு வந்து, (அவனை நோக்கி), ‘நீ-,அஞ்சல்-
பயப்படாதே; பொரு பூசல் உம் கடந்து-செய்தற்குரிய போரையும் மிகுதியாகச்
செய்யக்கருதி, இரதம்மேல்-தேரின்மேலே, நில் – (தைரியங்கொண்டு) எதிர்த்து நில்;
கணைஉம் ஏவுக-உனது அம்புகளையும்செத்துவாயாக’, என்று-என்றுசொல்லி,
(அவனை முன் நிறுத்தி), வெம் சமரில்-கொடிய அப்போரிலே, நேர் நடந்து
சென்று-(தானும் வீடுமனை) எதிர்த்துப் போய், அங்கி தந்த கூன் நல் சிலை கோலி
– அக்கினி கொடுத்த வளைத்தற்குரிய அழகிய (தனது காண்டீவ) வில்லை
வளைத்து, அம்பொடு அம்பு பல கூட-(சிகண்டிவிடும்) அம்புகளுடனே (தனது பல)
அம்புகளும் சேர,-வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் –
வசந்தகாலத்துக்குரிய (மன்மதனது) பாணங்கள் முன்பு ஒரு பொழுதும்
பதியப்பெறாமல்விளங்குகிற, அம் பொன் வரை மேனி எங்கண் உம்-அழகிய
பொன்மயமான மேருமலை போன்ற (வீடுமனது சிவந்த) உடம்புமுழுவதிலும்,
புதைய-தைத்து அழுந்தும்படி, நெஞ்சு அழன்று உதையினான்-மனத்திற்
கோபங்கொண்டு செலுத்தினான்; (எ-று.)
துரியோதனாதியர்மேலுள்ள கோபம், அவர்கள்சேனைத்தலைவனான
வீடுமன்மேலும் சென்ற தென்க. இங்கே, திண்சிகண்டியென்றது-இகழ்ச்சி. ஈற்றடி –
வீடுமன் எப்பொழுதும் சிறிதும் காமவசப்படாதவ னென்பதை விளங்கும். வேனில்
என்பதைக் காலவாகுபெயராய், அக்காலத்துக்குரிய மன்மதனுக்குக் கொள்ளினும்
அமையும். பி – ம்: பலபூசலும். உகையினான்.
தோளும், நெஞ்சமும், சிரமும், மார்பமும், தொடங்கி
நிலைதோறும் வந்து வந்து உருவவே,
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம்
கை கொண்டு பிடியா,
‘நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று;
முதல் நாமமும் சிகண்டி; இவன் எய்
வாளி ஒன்றும் இங்கு எமை உறா; தனஞ்சயன் செய் பெரு
வாழ்வு இது!’ என்று அறிந்து மகிழா,34.-வீடுமன் தன்னுடலிற்புதைந்தவை
அருச்சுனனம்பின் வலிமையாலென்று தெரிந்து மகிழ்தல்.
இதுவும், மேற்கவியும் – குளகம்.
(இ-ள்.) தோள்உம் நெஞ்சம்உம் சிரம்உம் மார்பம்உம்-, தொடங்கி – (என்னும்
இவ்வுறுப்புக்கள்) முதலாக, நிலை தோறுஉம் – உயிர்நிலைகளிலெல்லாம், வந்து
வந்து உருவ – (அம்புகள்) மிகுதியாக வந்து ஊடுருவிச்செல்ல, சாளரம் கொள் –
(முழுவதும் பலதுளைபட்டுப்) பலகணியின் தன்மையை அடைந்த, அங்கம்வழி-(தன்)
உடம்புவழியாக, ஓடுகின்ற-(அப்பாற்) செல்லுகிற, இந்து முகம் சாயகம் –
சந்திரன்போன்ற வடிவமுள்ள [அர்த்த சந்திர] பாணங்களை, கை கொண்டு பிடியா
– (தன்) கைகளாற் பிடித்து, (அவற்றில் பதிந்துள்ள அருச்சுனன்பெயரைப் பார்த்து),
‘நாள் அறிந்து – (நாம் முன்புசொன்ன பத்தாம்போர்) நாளையறிந்து,
எதிர்ந்து பொருவோன்உம் – நம்மை எதிரிட்டுப் போர்செய்பவனும், மைந்தன்-
(நமது வமிச) புத்திரனான அருச்சுனனே; நன்று-(இவன்கையால் நாம் அழிவது)
நல்லதே; (ஆனால்), முதல் நாமம்உம் சிகண்டி தலைமையான
பேர்மாத்திரத்துக்குமே சிகண்டி (எதிரில் உள்ளான்); இவன் எய் வாளி ஒன்றுஉம்
இங்கு எமை உறா – இச் சிகண்டி தொடுக்கிற அம்புக ளொன்றும் இங்கு எம்மைச்
சேரமாட்டா; இது தனஞ்சயன் செய் பெரு வாழ்வு – இவ்வாறு என்னுடம்பை
ஊடுருவும்படி அம்புதொடுத்தல் அருச்சுனன் செய்யும் பெருஞ்சிறப்பேயாம்’ என்று
அறிந்து -,மகிழா – மகிழ்ச்சிகொண்டு, (எ-று.)- “கூறினன்” என அடுத்த கவியோடு
முடியும்.
‘இவனெய்வாளியொன்றும் இங்கு எமை உறா’ என்றதனால், வீடுமனைக்
கொல்லுதற்கு வியாஜமாக நிற்பதுமாத்திரம் சிகண்டிக்கு உண்டேயொழிய, அவனது
அம்புகளுக்கு வீடுமனது தெய்வயாக்கையைத்துளைக்கும்
ஆற்றலில்லையெனவிளங்குகிறது. கீழ் முதற்போர்ச்சருக்கத்தின் பதினோராங்கவியை
இங்கே காண்க. பொருவோன்உம் மைந்தன் அன்றுஎனஎடுத்து-போர் செய்பவனும்
இயற்கையாண்மை யுடையவனல்லனென்றும், முதல்நாமம்உம் சிகண்டி-என்
உடம்பிற்பதியும் பாணங்களில் முதற்பெயரே சிகண்டி [அவற்றின்மேல்
அருச்சுனன்பெயரும் பின் உள்ளது] என்றும் உரைப்பினுமாம்
‘நாம வெங் கொடுங் கணையின் நாமும் நொந்தனம், சமரம்;
நாளும் இன்று; முந்த இனி நீர்
போம், அடங்க, நும் தமையன் நீள் பதம் பொருந்தி, உறு
போர் அறிந்துகொண்டு பொருவீர்!
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று;
அருகு சேர் தனி ஆண்மை பொன்றல்!’ என்று,
அருகு சேர் கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு
கூறினன், பனங்கொடியனே.35.-வீடுமன் துரியோதனன்தம்பிமாரை ‘உங்களாலொன்றும் இங்குச்
செய்யலாகாது: மேல்ஆகவேண்டுவதை ஆய்க’ என்று கூறுதல்.
(அப்பொழுது), பனங்கொடியன் – பனைக்கொடியையுடைய
வீடுமன்,அருகு சேர் – (தன்) அருகிற் பொருந்திய, கோமடங்கல் தம்பியர்கள்
ஆகி நின்றமைந்தரொடு- இராசசிங்கமாகிய துரியோதனனது தம்பிமார்களாய்ப்
பொருந்தியவீரர்களுடனே, ‘நாமம் வெம் கொடு கணையின் – அச்சத்தைத்தருகிற
மிகவுங்கொடிய அம்புகளால் நாம்உம் சமரம் நொந்தனம் – நாமும்போரில்
வருந்தினோம்; நாள்உம் இன்று-(நமக்கு அபாயத்தை விளைக்கிற) தினமும்
இன்றைக்கே; இனி – இனி மேல், நீர் அடங்க – நீங்களெல்லோரும், முந்த போம் –
விரைவாகச் செல்லுங்கள்; நும் தமையன் நீள் பதம் பொருந்தி – உங்கள்
தமையனான துரியோதனனது சிறந்த இடத்தை யடைந்து, உறு போர் அறிந்து
கொண்டு-இனிச்செய்யவேண்டும் போரைத்தெரிந்துகொண்டு, பொருவீர் –
போர்செய்யுங்கள்; அது ஆம் அன்றி – அங்ஙனஞ் செய்வது தகுதியாகுமே
யல்லாமல், என் செயின்உம் ஆவது ஒன்றுஉம் இன்று – (நீங்கள்) என்ன முயற்சி
செய்தாலும் (எனதுஅபாயத்தைத் தடுப்பதற்குத்) தக்கவழி ஓன்றும் இல்லை;
(ஆதலால்), தனி ஆண்மை பொன்றல் – தனியே உங்கள் பராக்கிரமம்
அழிவடையவேண்டாம்’, என்று கூறினன்-; (எ-று.)
வீடுமனுக்கு உதவியாகப் போர்செய்யவந்த துரியோதனன் தம்பிமாரை நோக்கி
வீடுமன் ‘இனி நீங்கள் எனக்கு உதவிசெய்து பொருதலிற் பயனில்லை; நான் இன்று
அழிவது நிச்சயம்; இனிச்செய்ய வேண்டுவதைப்பற்றி உங்கள் தமையனோடு
ஆலோசித்துச் செய்யுங்கள்; இப்பொழுது அருச்சுனனையெதிர்த்து
வீணாய்வலிமைகெடாதிர்’ என்று அறிவுகூறினான். தனது சேனைத்தலைமை
யொழிந்ததை ‘நாளுமின்று’ என்றதனாலும், ‘தனி’ என்றதனாலும், வீடுமன்
விளக்கினான். பதம்-பாதமென்றலுமாம். பொன்றல் – எதிர்மறைவியங்கோள்.
கோமடங்கல் – அரசரிற்சிறந்தவன்; பகையை எளிதில் ஒழிப்பவன். பனை + கொடி=
பனங்கொடி; [நன், உயிர், 53.] நாளும் இன்று என்பதற்கு – (நாம்வாழும்) நாளும்
(இனி) இல்லை எனினும் அமையும்.
கோடு கொண்ட செம் பவள நாதம் வந்து வந்து செவி கூட,
முன்பு நின்ற நிலையே
நாடி, நெஞ்சு அழிந்து, திருநாமம் அன்புடன் தனது நா
குழன்று கொண்டு நவிலா,
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர
நின்ற அம்பு ஓர் அணையா,
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள்; மேல்
விழுந்தது, அம் பொன் மலரே.36,-அம்பாகிய அணையில் வீடுமன்சாயத்
தேவர்கள் கற்பகமலர்மாரிபொழிதல்.
செம் பவளம் – சிவந்தபவழம்போன்ற (கண்ணபிரானது)
திருவாய்மலரிலே, கொண்ட – வைத்து ஊதப்பட்ட, கோடு –
(பாஞ்சசன்னியமென்னும்) சங்கத்தினது, நாதம்-ஒலி, வந்து வந்து செவி கூட –
மிகுதியாகவந்து (தனது) காதுகளிலே பொருந்த,-வீடுமன்-,-முன்பு நின்ற நிலைஏ
நாடி – எதிரில் [அருச்சுனனது தேரின் முன்னே] (கண்ணபிரான்) எழுந்தருளி
நின்ற நிலைமையையே நெஞ்சிற்கொண்டு [தியானித்து], நெஞ்சு அழிந்து –
மனமுருகி, திருநாமம் – (அக்கண்ணபிராணது) திருப்பெயர்களை, அன்புடன் –
பக்தியோடு, தனது நா குழன்று நவிலா கொண்டு – தனது நாக்குத் தழுதழுக்கச்
சொல்லிக்கொண்டு, ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற
அம்பு ஓர் அணை ஆ – (ஊடுருவி அப்பால்) ஓடுகிற அம்புகள் ஒழிய(த் தனது)
நீண்ட உடம்புமுழுவதிலும் ஒருமுனை பொருந்த நின்ற அம்புகளையே
ஒருபடுக்கையாகக்கொண்டு, கிடந்த – (அந்த அம்பாகிய அணையில்)
விழுந்துகிடந்த, கிடை – கிடக்கையை, தேவர் கண்டு – தேவர்கள் பார்த்து,
உவந்தனர்கள் – மகிழ்ந்தார்கள்; அம் பொன் மலர் – (அங்ஙனம் மகிழ்ந்த
தேவர்களாற் சொரியப்பட்ட) அழகிய பொன்மயமான (கற்பக) மலர்த்தொகுதி,
மேல்விழுந்தது; – (அந்த வீடுமன்) மேல் விழுந்தது; (எ-று.)
தன் உடம்பை ஊடுருவி நீங்கின அம்புகள் ஒழிய, மார்பில்தைத்து
முதுகின்வழி புறப்பட்டு நிற்கும் அம்புகளின்மேல் விழுந்திட்டனனென்பது,
மூன்றாமடியின் கருத்து. பக்திமிகுதியாலும், சோர்வினாலும், நாக்குழறும், அம்பு
அணை – ஸரதல்பம். முன்பு நின்றநிலை – யோகநிலையென்பாருமுளர். கிடை –
கிடைக்கும் நிலை. குழன்று – குழல என்னும் எச்சத்திரிபு; குழல் – பகுதி. கோடு –
வளைந்துள்ளது. முனை – நுனி.
‘போரில் எஞ்சினன் குருகுலேசன்!’ என்று கண்ட புருகூதன்
மைந்தனும், புனை துழாய்
வீரனும், துனைந்து வரு தேரினின்று இழிந்து, இரு கண்
வீழும் அம்பினில் முழுகினார்;
சேர வந்து இரண்டு வகை ஆகி வெங் களம் குறுகு
சேனையும் திரண்டு அலறவே,
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள்; யாரும் நொந்து நைந்தனர்கள்;
யாரும் நின்று இரங்கினர்களே.37- போரிலே வீடுமன் எஞ்சியதுகண்டு யாவரும் வருந்துதல்.
‘குருகுல ஈசன் – குருகுலத்தலைவனான வீடுமன், போரில் எஞ்சினன்
– யுத்தத்தில் அழிந்தான்’, என்று-, கண்ட-பார்த்தறிந்த, புருகூதன் மைந்தன்உம் –
இந்திரகுமாரனான அருச்சுனனும் புனை துழாய் வீரன்உம் – தரித்த
திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானும், துனைந்து வரு தேரினின்று இழிந்து
– விரைந்து வருகிற தேரினின்று இறங்கிவந்து, இரு கண் வீழும் அம்பினில்
முழுகினார் – (தமது) இரண்டு கண்களினின்றும் விழுகிற நீரில் மூழ்கினார்கள்
[மிகக்கண்ணீர்விட்டார்கள்]; இரண்டு வகை ஆகி வெம் களம் குறுகு சேனைஉம் –
இரண்டுபகுப்பாய்க் கொடிய போர்க்களத்தையடைந்துள்ள சேனைகளும், சேர
திரண்டு வந்து – ஒருசேரக் கூடி (வீடுமன் விழுந்தவிடத்து) வந்து, அலற – அழுது
கதற, யார்உம் – (இருதிறத்திலும்) எல்லோரும், நெஞ்சு அழிந்தனர்கள்-மனம்
அழிந்தார்கள்; யார்உம்-,நொந்து நைந்தனர்கள் – வருந்தி மெலிந்தார்கள்; யார்உம்-
,நின்று இரங்கினார்கள் – (திகைத்துநின்று) விசனமுற்றார்கள்; (எ-று.)
அழிந்தவனாகிய வீடுமன் அம்பினில் மூழ்கியதுபோலவே, அழித்தவராகிய
கிருஷ்ண அருச்சுனரும் அம்பினில் மூழ்கினாரென ஒரு சமத்காரம் தோன்றக்
கவிகூறினார். பாண்டவதுரியோதனாதியரென்னும் இருவகையார்க்கும் வீடுமன்
மூத்தபாட்டனாதலால், இவனழிவுக்கு எல்லோரும் இரங்குவாராயினர். புருஹு தன் –
வடசொல்; புரு – மிகுதியாக, ஹூதன் – (யாகங்களில்) அழைக்கப்படுபவன்
என்றும்; புரு-புரு என்னும் அசுரனை, ஹூதன் – கொன்றவன் என்றும்
பொருள்படும். பி-ம்: அம்பினால். திரண்டுவரவே
ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணைமேல் வீழ்வான்
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி,
‘மாகம் சூழும் பரிதி வடபால் எய்தும் அளவும்
நாகம் காணேன்’ என்ன, ஞானத்தோடே வைக,38.-வீடுமன் உத்தராயணகாலம் வருமளவும் உயிர்விடேனென
யோகத்தாலுயிரை வைத்துக்கொண்டிருத்தல்.
இதுவும், மேற்கவியும் – குளகம்.
(இ-ள்.) ஆகம்எங்கும் தங்கும் – (தன்) உடம்பு முழுவதிலும் பொருந்திய,
அம்பின் – அம்புகளாகிய, அணை மேல்-படுக்கையின் மேல் வீழ்வான் –
விழுபவனாகிய வீடுமன, ‘மாகம் சூழும் பரிதி – வானத்தை வலம் வருகிற சூரியன்,
வடபால் எய்தும் அளவுஉம் – வடபுறத்தை அடையுமளவும் [உத்தராயணம்
வருமளவும்], நாகம் காணேன் – மேலுலகத்தை அடையமாட்டேன்’, என்ன –
என்று எண்ணி உயிரை ஓடா வண்ணம் யோகம் கொண்டு நிறுவி – தன் உயிரை
(உடம்பைவிட்டு) நீங்காதபடி யோகவலிமையால் நிறுத்தி, ஞானத்தோடே வைக-
நல்லறிவோடு தங்க,-(எ-று.)-”எவரும்,…அன்னான்பாதஞ்
சென்னிமேற்கொண்டழுதார்” என வருங்கவியோடு முடியும்.
ஆடிமாசம்முதல் மார்கழிமாசம்வரையிலும் தக்ஷிணாயமாகிய ஆறு மாசம்
தேவர்களுக்கு இரவு: தைமாசம் முதல் ஆனிமாசம் வரையிலும் உத்தராயணமாகிய
ஆறுமாசம் அவர்களுக்குப் பகல்; ஆக, மனிதமானத்தால் ஒரு வருஷம்
தேவமானத்தால் ஒருநாளாம்: தேவர்களுக்கு இரவாகிய தக்ஷிணாயநத்தில்
இறந்தவர்களுக்கு நற்கதியில்லை யென்றும், உயர்கதிபெறுபவர் உத்தராயணத்திலே
இறப்பரென்றும் நூற்கொள்கை யாதலால் வீடுமன், தக்ஷிணாயநத்தில் உயிர்விடாமல்
உத்தராயணத்தை எதிர்நோக்கி உயிர்த்திருப்பவனானான். சூரியன் வடபுறமாக
ஒதுங்கிச் சஞ்சரிக்குங்காலம் உத்தராயணம்; தென்புறமாகச் சஞ்சரிக்குங் காலம்
தக்ஷிணாயநம். யோகமாவது-இயமம் முதலிய எட்டு இலக்கணங்களோடு நின்று
செய்யுந் தவம். யோகம் வல்லார்க்கு வேண்டின பொழுது உயிரைவிடும்
உறுதிநிலைகைகூடுதலால், ‘யோகங்கொண்டே உயிரை நிறுவி’ என்றார்.
வேண்டியபொழுதுஉயிர் விடும்படி வீடுமனுக்குத் தந்தையால் வரம்
கொடுக்கப்பட்டிருந்ததென்றும்நூல்கள் கூறும்: மேல் 43-ஆம்பாட்டில் “வரத்தின்
பயனுலுயிரைநிறுத்தும்மன்னன்” என்று இந்நூலாசிரியருங் கூறுவர். பி.ம்: இரவி.
இதுமுதற் பதினாறுகவிகள்-எல்லாச்சீரும் மாச்சீராகிய கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.
இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும்,
அங்கும் துரியோதனனை ஆதியான அரசர்,
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே
சிங்கம் அன்னான் பாதம் சென்னிமேல் கொண்டு அழுதார்.39.-தருமன் முதலானாரும் துரியோதனன் முதலானாரும்
வீடுமன்பாதத்தைச் சென்னியிற்கொண்டுஅழுதல்.
இங்குஉம்-இந்தப்பக்கத்திலும், தருமன் முதல் ஆ உள்ள மன்னர்
எவர்உம்-யுதிட்டிரன் முதலாகவுள்ள அரசர்களெல்லோரும், அங்குஉம்-
எதிர்ப்பக்கத்திலும், துரியோதனனை ஆதி ஆன அரசர்- துரியோதனனை
முதலாகவுடைய அரசர்களும், பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று
போல-பொங்குகின்ற கடலினால் உலகங்களழியும் அந்தயுகாந்த காலத்திற்
(பிராணிகள் வருந்துவது) போல, சிங்கம் அன்னான் பாதம்சென்னி மேல்கொண்டு
அழுதார்-சிங்கத்தை யொத்தவனான வீடுமனது திருவடிகளைத் தலைமேல்
வைத்துக்கொண்டு புலம்பினார்கள்; (எ-று.)
பாதம் சென்னிற்மேற் கொண்டு – திருவடிமீது முடிபடும்படி சாஷ்டாங்கமாக
விழுந்து தண்டனிட்டு என்க. நற்குணநற்செய்கைகளையுடைய பாண்டவர் பக்கல்
அபிமானத்தால் ‘இங்கும்’ என்றும், தீக்குணம் தீச்செய்கைகளையுடைய எதிரிகள்
பக்கல் வெறுப்பால் ‘அங்கும்’ என்றும் கவி கூறினார். பி – ம்: பொங்குங்கனலால்
மறமும், வாகு வலியும், வல் வில் முதல் எப் படையின்
திறமும், தேசும், வாழ்வும், சீரும், கேள்விச் செலவும்,
நிறமும், உண்மை அறிவும், நெறியும், புகழும், திகழ் பேர்
அறமும், பொன்றும் நின்னோடு, ஐயா! அந்தோ, அந்தோ!40. இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்; இருதிறத்தாரும் புலம்பல்.
ஐயா-தலைவனே! மறம்உம்-பராக்கிரமமும், வாகுவலிஉம் –
தோள்வலிமையும், வல் வில் முதல் எ படையின் திறம்உம்-வலியவில் முதலிய
எல்லா ஆயுதங்களின் வல்லமையும், தேசுஉம்-ஒளியும்,வாழ்வுஉம்-(மதிப்போடு)
வாழ்தலும,்சீர்உம்-சிறப்பும், கேள்வி செலவுஉம் – நூற்கேள்விகளின்படி ஒழுகும்
ஒழுக்கமும், நிறம்உம்- பெருமையும், உண்மை அறிவுஉம்-தத்துவஞானமும்,
நெறிஉம்-நீதிவழியும், புகழ்உம்-கீர்த்தியும், திகழ் பேர் அறம்உம்- விளங்குகிற
சிறந்ததருமமும், (என்னும் இவையெல்லாம்), நின்னோடு பொன்றும்-(உலகத்தில்)
உன்னுடனே அழியும்; அந்தோ அந்தோ-! (எ-று.)
உன்போலப் பராக்கிரமம் முதலியன உடையார் ஒருவரும் இனி
உலகத்திலில்லை யென்பதாம், தேசு-க்ஷத்திரியதேஜஸ். அந்தோ அந்தோ,
அடுக்கு-இரக்கம். நிறம்-நற்குணமுமாம்.
தந்தை இன்பம் எய்த, தவமே இன்பமாகச்
சிந்தை தெளியும் ஞானச் செல்வா! செஞ் சேவகனே!
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா! ஞாலம் முழுதும்,
எந்தை! ஆள வைப்பார் இனி யார்? கோவே!’ என்றார்.
தந்தை இன்பம் எய்த-பிதாவாகிய சந்தனு (இரண்டாவது மணஞ்
செய்து) இன்பமடையும்பொருட்டு, தவம்ஏ இன்பம் ஆக சிந்தை தெளியும்-
துறவறவொழுக்கத்தையே உலகவின்பமாகக்கருதி மனந்தெளிந்த, ஞானம் செல்வா-
தத்துவஞானமாகிய செல்வத்தையுடையவனே! செம் சேவகனே-நீதிதவறாத வீரனே!
முந்தை – பழமையான, மரபுக்கு எல்லாம் – குருகுலத்திற்பிறந்த எங்கள்
எல்லோர்க்கும், முதல்வா-மூத்தவனே!எந்தை-எமது வமிச பிதாவே!
கோவே-தலைவனே! ஞாலம் முழுது உம் ஆள வைப்பார் இனி யார்-
பூமிமுழுவதையும் (எங்களை) அரசாளும்படி (முடிசூட்டி) வைப்பவர் இனி
வேறுயாவர் உளர்? என்றார்-என்றுசொல்லி (இருதிறத்தாரும்) புலம்பினார்கள்;(எ-று.)
“போகமுந்தரும மேயானமெய்ப்புனிதன்” என்றார், ஆறாம் போர்ச்சருக்கத்தும்.
எந்தை-அண்மைவிளி; அன்புபற்றிவந்த மரபுவழுவமைதி.
சரத்தின் சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது; என்
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய்; திண் தோள் விசயா!’ என்ன,
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ,
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான்.43.-அருச்சுனன் வீடுமன்சொற்படி அம்புகளால் அவன் முடியைத்
தாழாது உயரும்படி செய்தல்.
(பின்பு அருச்சுனனை நோக்கி), வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும்
மன்னன்-(தந்தைகொடுத்த) வரத்தின் பலத்தால் உயிரை (உடம்பு விட்டு நீங்காதபடி
யோகங்கொண்டு) நிறுத்தியுள்ள பீஷ்மராசன், ‘திண்தோள் விசையா –
வலியதோள்களையுடைய அருச்சுனனே! சரத்தின் சயனம்-(உனது) அம்புகளாலாகிய
படுக்கை, பஞ்ச சயனங்களின்உம் இனிது – ஐவகைப் பொருள்களால் அமைந்த
மெத்தையினும் (எனக்கு) இனிமையாகவுள்ளது; என் சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் –
எனதுதலை தாழ்ந்திருத்தலை நீக்குவாய்[தலைக்கு உயரஞ்செய்வாய்]’, என்ன-என்று
சொல்ல,-(உடனே அருச்சுனன்), மகிழ-(அவ்வீடுமன்) மகிழும்படி, உரத்தின்
அம்பால்- வலிமையையுடைய (தனது)அம்புகளால், முடியை உயரும் வண்ணம்
உயர்த்தான்- (அவ்வீடுமனது) சிரசைஉயர்ந்திருக்கும்படி தலையணை செய்தான்;
(எ-று.)
மீண்டும் மூன்று அம்புகளைத் தொடுத்து வீடுமன்தலையை அருச்சுனன்
உயர்த்தினா னென முதனூல் கூறும். சுத்தவீரர்கள் போரிற்பட்டபுண்ணைப்
பொருளாகக் கருதா ராதலாலும், வீடுமன் துன்பத்தையே இன்பமாக நினைக்கும்
இயல்புடையவனாதலாலும், ‘சரத்தின் சயனம் பஞ்சசயனங்களிலும் இனிது’ என்றான்.
சொரியும் கண்ணீர் துடைத்து, துரியோதனனை நோக்கி,
‘வரியும் சாபக் கன்னன், மன்னர்க்கு உரும்ஏறு அன்னான்,
தெரியும் காலத்தவனைச் சேனைத் தலைவன் ஆக்கி,
புரியும் போரும் நாளைப் புரிமின்’ என்று புகன்றான்.44.-வீடுமன் துரியோதனனுடைய கண்ணீரைத் துடைத்துக்
கன்னனைச் சேனாபதியாக்கிப் பொரக் கூறுதல்.
(பின்புவீடுமன்), சொரியும் கண் நீர் துடைத்து – (துரியோதனனது)
கண்களினின்று பெருகுகிற நீரைப் போக்கி [சமாதானப்படுத்தி], துரியோதனனை
நோக்கி-, ‘மன்னர்க்கு உரும் ஏறு அன்னான் – பகையரசர்களுக்குப்
பேரிடியையொத்தவனும் [தவறாது அழிவுசெய்பவனும்], தெரியும் காலத்தவன் –
ஆராய்கிறகாலத்தையுடையவனும் ஆகிய, வரியும் சாபம் கன்னனை – கட்டமைந்த
வில்லையுடைய கர்ணனை, சேனை தலைவன் ஆக்கி – (இனிச்)
சேனாபதியாகவைத்துக் கொண்டு, புரியும்போர்உம்-செய்யவேண்டிய யுத்தத்தையும்,
நாளை புரிமின் – நாளைமுதல் செய்யுங்கள்’,என்று புகன்றான் – என்றுசொன்னான்;
(எ-று.)
ஒன்பதாநாளிரவில் துரியோதனாதியர் கூடிய பொழுது கர்ணன் சொன்னதை,
துச்சாதனன் தமையன்சொற்படி வீடுமனிடம் தெரிவிக்க, அப்போது ”ஒருநாளுநீவிர்
பொறுமின்களும்மை யுலகாளுவிக்கவருவோர், வருநாடொடங்கியமர்செய்து
தெவ்வைமடிவிப்பர்…… வாழ்திர்” என்று கூறியதற்கு ஏற்ப, வீடுமன் இங்ஙன்
கூறுகின்றானென்க. தெரியுங்காலத்தவன் என்பதற்கு – தான்வந்து
போர்செய்யும்பொருட்டு எனது அழிவு காலத்தை எதிர்நோக்கியிருப்பவ னென்றும்,
பகைவெல்லும் அரசர்க்கு அவசியம் அறியவேண்டிய காலநிலைமையை
அறியுந்தன்மைய னென்றுங் கருத்துக் கொள்ளலாம். இது பரிகாசமாகக்
கூறியதென்னலாம். வீடுமன் இவ்வார்த்தை சொல்லும்பொழுது பத்தாநாள்
சூரியாஸ்தமனகாலம் சமீபத்தி லிருந்ததனால், ‘நாளைப்புரிமின்’ என்றான்.
கோயில் தருமன் செய்ய, கூர் வெஞ் சரமே அணையா,
நோய் இல் அயர்வும் மெய்யில் நுழைய, காலம் நோக்கி,
‘வீயின், முத்தி இல்லை’ என்ன இருந்தான்-விருந்தா,
சேயின் முனிவர் கேள்வித் தெள் ஆர் அமுதம், நுகர்வான்.45.-யுதிட்டிரன் வீடுமனுக்குத் தங்குமிடம் அமைக்க, அங்கு அவன்
உத்தராயணகாலத்தை நோக்கியிருத்தல்
சேயின் – முருகக்கடவுள்போல், முதிய கேள்வி தெள் ஆர் அமுதம்
– பழமையானநூற்கேள்வியாகிய தெளிவான அரிய அமிருதத்தை, விருந்து ஆய
நுகர்வான் – புதிதுபுதிதாக அமுதுசெய்பவனாகிய வீடுமன்,-தருமன் கோயில்
செய்ய-(தனக்குத்) தங்குமிடத்தை யுதிட்டிரன் ஒழுங்காக அமைக்க, கூர் வெம்சரம்ஏ
அணைஆ – கூர்மையானகொடிய அம்புகளையே படுக்கையாகக்கொண்டு, நோய்
இல் அயர்வுஉம் மெய்யில் நுழைய-பிணியில்லாமலே தளர்ச்சியும் உடம்பில்தோன்ற,
வீயின் முத்திஇல்லை என்ன – (தக்ஷிணாயநமாகிய இப்பொழுது) இறந்தால்
முத்திகிடையாதென்று கருதி, காலம் நோக்கி – (உத்தராயணம்வருங்) காலத்தை
எதிர்நோக்கி, இருந்தான் – பிழைத்திருந்தான்; (எ-று.)
சுப்பிரமணியமூர்த்தி கல்வி கேள்விகளில் மிகச்சிறந்தவரென்பது பிரசித்தம்
நோயில்யாவும் என்றும் படிக்கலாம்: அங்ஙனம் படிப்பின், நோய் இல் –
துன்பந்தராமல், யாவும் – அம்புகளெல்லாம் மெய்யினுழைய என்க: சுத்தவீரனும்
பற்றற்றவனுமான வீடுமன், தன் உடம்பில் அம்புகள் பதிந்த வருத்தத்தைப்
பொருளாகக் கருதாமல், அப்புண்களை ஆற்றும் பொருட்டு நல்லவைத்தியர்கள்
சிறந்தமருந்து முதலியவற்றோடு வந்ததையும் மறுத்து, அத்துன்பத்தையே
இன்பமாகப் பாவித்த மனத்தூய்மை தோன்ற, ‘நோயில் யாவுமெய்யினுழைய’
என்றார்; இத்தன்மை முதனூலால் நன்குவிளங்கும்: இதற்கு, நோயில் என்பதில்,
இல்என்னும் பகுதியே வினையெச்சத்தன்மை பட்ட தென்றாவது, இன்றி என்பது
இல்என விகாரப்பட்டதென்றாவது இலக்கணமறிக: திருமாலையில் “காவலில்
புலனைவைத்து” என்றவிடத்து, இல் என்பதற்கு-இல்லாதபடி யென்று
ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான மிட்டருளி யிருத்தல்காண்க. அமிருதம்
நாவுக்கு இனிமை தருதல்போல, நூற்கேள்வி செவிக்கு இனிமை தருதலால்,
‘கேள்வித் தெள்ளா ரமுதம்” என்றது.
இன்று உன் மைந்தன் பட்டான்’ என்று தந்தைக்கு
இசைப்பான்
சென்று, பரிதி மேலைத் திக்கின் எல்லை சேர்ந்தான்;
அன்று அவ் வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய்
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும், செக்கர் வானம்.46.-சூரியாஸ்தமன வருணனை.
இன்று உன் மைந்தன் பட்டான் என்று-இன்றைக்கு உனது மகன்
அழிந்தா னென்று, தந்தைக்கு இசைப்பான் – (வீடுமனது) தந்தையாகிய
வருணனுக்குக் கூறும்பொருட்டு, பரிதி- சூரியன், சென்று-போய், மேலை திக்கின்
எல்லை சேர்ந்தான் – மேற்குத்திக்கின் இடத்தை யடைந்தான் [அஸ்தமித்தான்];
(அப்பொழுது), செக்கர் வானம் – (அத்திசையில் காணப்படும்) செவ்வானம், அன்று
வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறு ஆய் எங்கு உம் பரந்தது ஒக்கும்-
அப்பொழுது அவ்வருணன் (மகனிடத்து) அன்பினால் அழுத சிவந்த கண்ணீர்
ஆறாகி எவ்விடத்தும் பரவியதை யொக்கும்; (எ-று.)-மன்ற-தெளிவையுணர்த்துவதோர்
இடைச்சொல்; ஐயச்சொற்களும், உவமைச்சொற்களும், துணிபுச்சொற்களும்
கூட்டிச்சொல்லுதலும் தற்குறிப்பேற்றவணியின் இலக்கண மாதலால், ‘மன்ற’ என்ற
துணிபுச் சொல்லைக் கொடுத்தார்: தற்குறிப்பேற்றவணி.
வீடுமனது தந்தையானசந்தனு வருணனது அவதார மென்பது, முன்
கூறப்பட்டது. அதிகசோகத்தால் உடம்பிலுள்ள இரத்தமே கண்ணீராகப் பெருகிய
தென்பார், ‘அன்பாலழுத செந்நீர்’ என்றார்போலும். ‘தங்கண், உள்ளநீரெல்லாமாறி
யுதிரநீரொழுக நின்றான்’ என்றார் கம்பரும் கும்பகருணன் வதைப்படலத்து. இனி,
புதுநீர் வெள்ளம் செந்நிறமுடைத்தாயிருக்குந் தன்மைபற்றி அச்செம்மையை
வருணன் கண்ணற்புதிதாய்வருகிற நீர்ப்பெருக்குக்கு ஏற்றிக் கூறிய தெனினும்
அமையும்.
பாண்டு மன்னன் புதல்வர் படையும் பாடி புக்கது;
ஆண்டு பாடி புக்கது, அரவத் துவசன் படையும்;
‘ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரைமின்’ என்று,
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான்.47.-இருசேனையும் பாசறைபுக, வீடுமனிறந்ததைச் சஞ்சயன்மூலமாகத்
துரியோதனன் தன்தந்தைக்குத் தெரிவித்தல்.
ஆண்டு-அப்பொழுது, பாண்டு மன்னன் புதல்வர் படைஉம்-
பாண்டவர்களது சேனையும், பாடி புக்கது-படைவீட்டை யடைந்தது; அரவம்
துவசன் படைஉம்-துரியோதனன்சேனையும், பாடி புக்கது-படைவீட்டை யடைந்தது;
(அப்பொழுது), தாண்டுமான் தேர் மைந்தன்-தாவிப் பாயுங்குதிரைகளைப்பூட்டிய
தேரையுடைய குமாரனான துரியோதனன், ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு
உரைமின் என்று-இப்பொழுது நமதுகுலத்துப் பெரியவனான வீடுமன் அழிந்ததை
என்தந்தைக்கு [திருதராஷ்டிரனுக்கு]ச் சொல்லு மென்று, சஞ்சயனை விடுத்தான் –
சஞ்சயமுனிவனை அனுப்பினான்; (எ-று.)
ஸஞ்சயன்-வடசொல்; இவன் கவல்கணனென்பவனது குமாரன்; ஆதலால்,
இவனுக்குக் காவல்கணி யென்று ஒருபெயரும் வடமொழியில் வழங்கும்; இவன்,
திருதராஷ்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன்; இவன் அவனுக்குச்
சிலசமயங்களில் தேர் செலுத்துதலும் உண்டு. இவன் நாள்தோறும் பகலில் போரில்
நடக்கிறசெய்தியை அறிந்துபோய் இரவில் திருதராட்டிரனுக்குச் சொல்லிவந்தான்.
முனியும் நகரில் சென்று, முகுரானனனுக்கு உரைப்ப,
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகிச் சொரிய,
‘இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை!’ என்று என்று ஏங்கி,
பனி வெண் மதியம் கண்ட பங்கயம்போல் ஆனான்.48.-அதுகேட்ட திருதராஷ்டிரன் கண்ணீர்வடியவாடுதல்.
(அவ்வாறே), முனிஉம்-சஞ்சயனும், நகரில் சென்று-அஸ்தினபுரத்திற்
போய், முகுரானனனுக்கு உரைப்ப-திருதராட்டிரனுக்குச் செய்திசொல்ல,
(அதுகேட்டவுடனே அவன்), கனியும் அன்பின்-(வீடுமனிடத்து) நெஞ்சுருகிய
அன்பினால், கண்ணீர் வெள்ளம் ஆகி சொரிய-, இனி என் மைந்தர்க்கு உறுதி
இல்லை என்று என்று – இனிமேல் என்பிள்ளைகளுக்கு வலிமையில்லையென்று
பலமுறைசொல்லி, ஏங்கி-விசனப்பட்டு, பனிவெண் மதியம் கண்ட பங்கயம்போல்
ஆனான்-குளிர்ந்த வெண்ணிறமான சந்திரனைப் பார்த்த தாமரைமலர்போ
லாயினான் [வாடி மெலிந்தான்];
முகுராநநன் என்ற வடமொழிப்பெயர்க்கு-கண்ணாடிபோன்ற முகமுடையவ
னென்று பொருள். முகுரம்-கண்ணாடி, ஆநநம்-முகம். கண்ணாடி தான்
பிறராற்காணப்பட்டுப் பிறரைத் தான் காணும் உணர்ச்சி யில்லாதது போல, தான்
பிறராற் காணப்பட்டுப் பிறவிக்குருடனாதலாற் பிறரைத் தான் காணாத
முகத்தையுடையவனென்றவாறு; இனி, கண்ணாடி போல விளக்கமுடைய
முகமுடையனென்றுமாம். ”வயக்குறு மண்டிலம் வடமொழிப்பெயர் பெற்ற,
முகத்தவன்” என்றார் கலித்தொகையிலும். பி-ம்: என்றென்றிரங்கி
மண்மேல் விழுந்தான்; எழுந்தான்; ‘மானம் போனது!’ என்றான்;
கண்மேல் எற்றி, ‘இன்றே கண்ணும் இழந்தேன்!’ என்றான்;
‘விண்மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது!’ என்றான்;
புண்மேல் அயில் உற்றென்னப் புலந்தான்,
முதல்வன் புதல்வன்.49.-திருதராஷ்டிரன் பெருஞ்சோகமடைந்து கதறுதல்.
(பின்பு), முதல்வன் புதல்வன் – (குருகுலத்துப்)
பெரியவனானவீடுமனுக்கு(த்தம்பி) மகனான திருதராஷ்டிரன், மண்மேல் விழுந்தான்-
தரையிலே விழுந்திட்டான்; எழுந்தான்-; மானம் போனது என்றான் – (எனது)
பெருமையழிந்தது என்று சொன்னான்; கண்மேல் ஏற்றி-(தன்) கண்மேல் (கையால்)
மோதிக்கொண்டு, இன்றுஏ கண்உம் இழந்தேன் என்றான்-இன்றைக்கே (நான்)
கண்ணையுமிழந்தே னென்று கூறினான்; விண்மேல் உள்ளோர் செல்வம் –
தேவலோகத்திலுள்ளோரது ஐசுவரியம், வீறுபெற்றது – (வீடுமன் இனி
அனுபவிக்கப்பெறுதலால்) சிறப்புப்பெற்றது, என்றான் – என்றுஞ் சொன்னான்;
புண்மேல் அனல் உற்று என்ன புலர்ந்தான்-புண்ணின் மேல் நெருப்புப்பட்டாற்
போல மிகவருந்தினான்; (எ-று.)
முன்னமே தன்மக்கள்சிலர் இறந்ததனால் மனம்வருந்திய திருதராட்டிரன்
இப்பொழுது குலத்தலைவனும் சேனாபதியும் தன்னைவளர்த்த தந்தையுமான
வீடுமனும் அழிந்த செய்தியைக் கேட்டு அவ்வருத்தத்தின்மேல்
மிக்கவருத்தமுற்றானென்பதாம். நான்காமடி – துன்பத்தின்மேல் துன்பமடைதற்கு
உவமை; ”புண்ணிலாம்பெரும்புழையிற் கனல்நுழைந்தாலென” எனக் கம்பர்
கூறியதுங் காண்க. இனி, முதல்வன் புதல்வன் என்பதற்கு – யாவர்க்கும்
முதல்வனாகிய திருமாலினது அவதாரமான வியாசமுனிவனுக்கு மகனாகிய
திருதராட்டிர னென உரைத்தலுமொன்று. இரண்டாமடியால், வீடுமனைத்
திருதராட்டிரன் தனக்குக் கண்ணாகக் கருதியிருந்தமை விளங்கும். பி-ம்:
அயலுற்றென்ன.
செங் கண் அரவக் கொடியோன், ‘சேனாபதியாய் நாளை
இங்கு முனையில் நிற்பார் யார்?’ என்று எண்ணும் எல்லை,
அங்கர் பூபன், ‘யானே அமரில் தலைவன் ஆகி,
கங்கை மைந்தன் சொன்ன பரிசே காப்பன்’ என்றான்.50.-இனிச்சேனாபதியாகுபவர் யாரென்று துரியோதனன் எண்ணுகையில்,
கர்ணன் தான் சேனாபதியாவே னெனல்.
செம் கண் அரவம் கொடியோன் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடைய துரியோதனன், ‘இங்கு – இப்பக்கத்தில், சேனாபதி ஆய் –
சேனைத்தலைவனாய், நாளை – நாளைக்கு, முனையில்-போர்க்களத்தில், நிற்பார்-
நிற்கவல்லவர்,யார்?’என்றுஎண்ணும் எல்லை – என்று ஆலோசிக்கும் பொழுது,-
அங்கர் பூபன் – அங்க நாட்டாரரசனான கர்ணன், ‘யானே-,அமரார் வானத்து
அமர-பகைவர்கள் மேலுலகத்துச் செல்லும்படி, கங்கை மைந்தன் சொன்ன பரிசுஏ –
வீடுமன்சொன்னபடியே, காப்பன் – (சேனைத்தலைவனாய் நம்சேனையைக்)
காப்பேன்,’ என்றான்-என்றுசொன்னான்; (எ-று.)
கங்கைமைந்தன் சொன்னதை, கீழ் நாற்பத்துநான்காங்கவியிற் காண்க.
கர்ணன்வீடுமனிடஞ் சென்று அவனைக் கண்டு பேசித் தான் சேனாபதியாகும்படி
அவனிடம் விடைபெற்றுவந்தானென இங்கே முதனூல் கூறும். அமரார் – (தம்மை)
விரும்பிச் சேராதவர். பி – ம்: அமரிற்றலைவனாகி.
தானாதிகனே! நீ வெஞ் சமரில் சேனைத் தலைவன்
ஆனால், அரசாய் நிற்பார் யார்?’ என்று அவனை விலக்கி,
‘மீன் ஆர் கொடியோன்தன்னை வென்ற வேதக் கொடியோய்!
சேனாபதியாக!’ என்றான், தீ வாய் நாகக் கொடியோன்.51.-தனக்குத் துணையாக நிற்பவர் ஒருவருமில்லையென்று
அக்கர்ணனைத்துரியோதனன்
விலக்கித் துரோணனைச் சேனாபதியாகெனல்.
(அதுகேட்டு), தீ வாய் நாகம் கொடியோன்- விஷாக்கினியை உமிழும்
வாயையுடைய பாம்பைக் கொடியிலுடைய துரியோதனன், (கர்ணணை நோக்கி),
‘தான அதிகனே – ஈகையால் மேம்பட்டவனே! நீ-, வெம்சமரில் –
கொடியயுத்தத்தில், சேனை தலைவன் ஆனால்-சேனாதிபதியாய் விட்டால், அரசு
ஆய் நிற்பார் யார் – (என்னுடன் பிரதான) அரசனாய்நிற்பவர் வேறுயாவர்?
[எவருமில்லையே என்றபடி],’ என்று-என்றுசொல்லி, அவனை விலக்கி –
அக்கர்ணனை (ச்சேனைத்தலைமை பூணுதலினின்றி) விலக்கி (துரோணனை
நோக்கி), ‘மீன் ஆர் கொடியோன்தன்னை-மீன்பொருந்தின கொடியையுடைய
மன்மதனையும், வென்ற-(போர்த்திறத்தில்) சயித்த, வேதம் கொடியோய்-
வேதமெழுதிய கொடியை யுடையவனே! சேனாபதி ஆக-(நீ)
சேனைத்தலைவனாகுக,’ என்றான்-என்று பிரார்த்தித்தான்; (எ-று.)
காமமுதலிய குற்றங்களை ஒழித்தவனென்றும், மன்மதனை வென்ற
சிவபிரானோ டொத்தவனென்றும் மூன்றாமடிக்குக் கருத்துக்கொள்ளல் சாலும்.
உயர்ந்த சாதியில் சிறந்தகுலத்திற்பிறந்த வனாதலாலும், பிராய அறிவு
ஒழுக்கங்களில்முதிர்ச்சியுடையவனாதலாலும், அஸ்திரசஸ்திர வித்தைகளில் சிறந்த
அநேகர்க்கும்ஆசிரிய னாதலாலும், துரோணன்சேனைத்தலைவனாக்கப்பட்டான்.
சிலை ஆசிரியன் வேந்தர் வேந்தன் சேனைக்கு எல்லாம்
தலையாய், மன்னர் யாரும் தன்னை வந்து சூழ,
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்தோறும் கோத்து,
தொலையா வெம் போர் தொலைக்கத் துணிந்தான்;
எவரும் துயின்றார்.52.-துரோணன் சேனாபதியாயிருத்தற்கு உடம்பட, யாவருந் துயிலுதல்.
சிலை ஆசிரியன்-வில்லாசிரியனாகிய துரோணன், வேந்தர்
வேந்தன்சேனை தனக்கு தலைஆய்-துரியோதனனதுசேனைக்குத் தலைவனாய்,
மன்னர்யார்உம் தன்னை வந்து சூழ – அரசர்களெல்லோரும் தன்னை
வந்துசூழ்ந்திட,-கொலை ஆர்-கொல்லுதல் தொழில் மிக்க, பகழி வெள்ளம் –
பாண வருஷத்தை,மார்பம் தோறுஉம்-(பகைவீரர்களது) மார்பிலெல்லாம், கோத்து-
தொடுத்து,தொலையாவெம் போர்-நீங்காத கொடிய போரை, தொலைக்க-
செய்துமுடிக்க, துணிந்தான்-நிச்சயித்தான்; (பின்பு அவ்விரவில்), எவர்உம்
துயின்றார்-எல்லோரும்உறங்கினார்கள்; (எ-று.)-பி-ம்: சேனைக்கெல்லாம்
வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து, மீளத்
தருண மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப,
இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னே ஓட,
அருணன் பொன்-தேர் தூண்ட, அருக்கன் குணபால்
அடைந்தான்.53.-சூரியோதய வருணனை.
அருக்கன் – சூரியன், வருணன் மைந்தன் பாடு வருணற்கு
உரைத்து-வருணனுக்குக்குமாரனானவீடுமன் அழிந்ததை (முந்தினநாள்மாலையில்)
வருணனுக்குச் சொல்லி, மீள – பின்பு, தருணம் மைந்தன் விசயம் சதமகத்தோன்
கேட்ப – இளமையையுடைய மகனான அருச்சுனனது வெற்றியை (அவன்
தந்தையான) இந்திரன் கேட்க(ச்சொல்லும்படி), இருள் நிறைந்த கங்குல் ஏங்கி
முன்னேஓட)-இருட்டு நிறைந்த இராத்திரி பயந்து முன்னே ஓட பொன் தேர்
அருணன் தூண்ட-(தனது) அழகியதேரை அருணன் செலுத்த, குணபால்
அடைந்தான் – கீழ்திசையைச்சேர்ந்தான்; (எ-று.)
தற்குறிப்பேற்றவணி. கீழ் நாற்பத்தாறாங்கவியிற் கூறியதை இப்பாட்டின்
முதலில் அனுவதித்தார். சதமகத்தோன்-நூறு (அசுவமேத) யாகங்களைச் செய்தவன்.
கேட்ப, ஓட, தூண்ட, அடைந்தான் என்க.
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply