ஆக்குமாறு அயனாம்; முதல் ஆக்கிய உலகம்
காக்குமாறு செங் கண் நிறை கருணைஅம் கடலாம்;
வீக்குமாறு அரனாம்; அவை வீந்த நாள், மீளப்
பூக்கும் மா முதல் எவன்? அவன் பொன் அடி போற்றி!–முதற் கடவுளின் வாழ்த்து
எவன்-, ஆக்கும் ஆறு – படைக்கும்படி, அயன் ஆம் –
பிரமனாவனோ: முதல் ஆக்கிய உலகம் – முதலிற் படைக்கப்பட்ட அவ்வுலகத்துப்
பிராணிகளை; காக்கும் ஆறு – பாதுகாக்கும்படி, செங்கண் நிறை கருணை –
(செந்தாமரை மலர்போன்று) செந்நிறமான கண்களிலே நிறைந்த கருணையாகிய,
அம் -நீரைக்கொண்ட, கடல் ஆம் – கடல் போன்ற திருமாலாவனோ: வீக்கும்
ஆறு – (காப்பாற்றப்பட்ட உயிர்களை) அழிக்குமாறு, அரன் ஆம் – சிவனாவனோ:
அவை வீந்த நாள் – அவைஅழிந்த காலத்தில், மீள பூக்கும் – மீண்டும்
படைக்கின்ற, மா முதல் (ஆம்)- சிறப்புற்றமுதற்கடவுள் ஆவனோ: அவன் – அந்த
முதற்கடவுளின், பொன் அடி – அழகியதிருவடிகள், போற்றி – வாழ்க; (எ – று.)
‘எவன்’ என்பது- ‘அயனாம்’ முதலிய நான்கனோடும் இயையும் அம் –
அழகியஎனினுமாம். “அவை வீந்த நாளுந்திப்பூக்குமா முதல்” என்றும்
பாடமுண்டு. போற்றி -போற்றிய என்ற வியங்கோளின் ஈற்றுயிர்மெய் சென்றது.
இதுமுதல் ஆறுகவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும் மற்றை
மூன்றும் விளச்சீர்களுமாகி வந்த கலிநிலைத்துறைகள். மேல் குருகுலச்சருக்கத்து
முதல்முப்பத்திரண்டு கவிகளும், இந்தக் கலிநிலைத்துறையேயாகும்.
ஏழ் பெருங் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே
சூழ்க! வண் தமிழ் ஓங்குக! தேங்குக, சுருதி!
வீழ்க, பைம் புயல்! விளங்குக, வளம் கெழு மனு நூல்!
வாழ்க, அன்புடை அடியவர் மன்னு மா தவமே!–அறம் முதலியவற்றின் வாழ்த்து
ஏழ் பெருங் கடல் மா நிலம் எங்குஉம் – ஏழு பெரிய கட்டலாற்
சூழப்பட்ட பெரிய பூமி முழுவதும், நல் அறம் ஏ சூழ்க – சிறந்த தருமமே
பரவியிருக்கட்டும்: வள் தமிழ் ஓங்குக – வளப்பம் பொருந்திய தமிழ்மொழி
யோங்கிநிற்கட்டும்: சுருதி – வேதங்கள், தேங்குக – (எங்கும்) நிறைந்திருக்கட்டும்:
பைம்புயல் – கரியமேகம், வீழ்க – (வானத்தினின்று மழைநீரைப்)
பொழியட்டும்; வளம் கெழுமனு நூல் – பல விஷயங்களும் நன்கு விளங்குகின்ற
மனுதருமசாத்திரம், விளங்குக -(அதனிற் கூறப்பட்டுள்ள தருமங்கள் நடத்தப்
பெறுதலால்) விளக்க முறட்டும்:அன்புஉடை – (கடவுளிடத்து) மெய்யன்புடைய,
அடியவர் – அடியார்கள், மன்னு -மேற்கொண்டுள்ள, மா தவம் – சிறந்த தவம்,
வாழ்க – வாழட்டும்; (எ -று.)
கடவுள் வாழ்த்துக் கூறிய கவி, இதனால், அறம் முதலியவற்றைச் செழிக்க
வாழ்த்துகின்றார். உலகத்துக்கு நல்ல நெறியைப் போதித்தலே காவியத்துக்குப்
பயனாதலால், அக்கருத்துத் தோன்ற ‘எங்கும் நல்லறமே சூழ்க’ என்பது
முதலாகக்கூறினா ரென்னலாம்.
கன்ன பாகம் மெய் களிப்பது ஓர் அளப்பு இல் தொல் கதை முன்
சொன்ன பாவலன், துகள் அறு சுகன் திருத் தாதை!
அன்ன பாரதம்தன்னை, ஓர் அறிவிலேன் உரைப்பது
என்ன பாவம்! மற்று என்னை இன்று என் சொலாது, உலகே!—அவையடக்கம்
அவையடக்கமாவது – அவையோர்க்குத் தான் அடங்கியிருக்கை:
அவையத்தார்க்கு மனவெறுப்புமுதலியனதோன்றாமல் அன்னாரை அடங்குமாறு
செய்தலெனினுமாம்: அங்ஙன் அவையடக்கத்தைத் தெரிவிக்கும் பாடல்,
அவையடக்கமெனப்படும்.
கன்னபாகம் – காதின் பகுதி, மெய் களிப்பது – உண்மையான
மகிழ்ச்சியை யடைதற்குக் காரணமான, அளப்பு இல் – அளவில்லாத (மிக்க), ஓர்
தொல் கதை – ஒரு பழமையான கதையை, முன் – முன்னே, சொன்ன-, பாவலன் –
கவி, துகள் அறு சுகன் திருத்தாதை – குற்றமற்ற சுகனுடைய சிறப்புற்ற தந்தையான
வியாசனாவன்; அன்ன பாரதம் தன்னை – அந்தப் பாரதத்தை, ஓர் அறிவுஇலேன்
உரைப்பது – சிறிது அறிவும் இல்லாத நான் சொல்லுவது,- என்ன பாவம் – என்ன
தீச்செயல்! இன்று – இப்போது, உலகு – உலகோர், என்னை – (தகாத செயலில்
மூண்டுள்ள) என்னை, என் சொலாது – என்ன சொல்லமாட்டார்? ( எ -று.)
கன்னபாகம் = கர்ணபாகம்: வடசொற்றொடர். மெய் – உடலுமாம். பாவம் –
பாபம் என்ற வடசொல்லின் திரிபு: பாவம் என்ற வடசொல்லின் திரிபு
எனக்கொண்டு,என்ன அபிப்பிராயம் என்றுமாம். மற்று -அசை.
மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண் இலா நெடுங் காதையை யான் அறிந்து இயம்பல்,
விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை, ஊமன்,
கண் இலாதவன், கேட்டலும் காண்டலும் கடுக்கும்.–அவையடக்கம்
மண்ணில் – பூமியிலே, ‘ஆரணம் – வேதத்துக்கு, நிகர் – ஒப்பு
ஆகும், ‘ என – என்னுமாறு, வியாதனார் – வியாச முனிவர், வகுத்த – விரிவாகச்
சொல்லியருளிய, எண் இலா – அளவில்லாத (மிகப் பெரிய), நெடுங் காதையை –
நீண்ட(பரந்த) கதையை, யான் அறிந்து இயம்பல் – யான் தெரிந்துகொண்டு
சொல்லுதல்,- விண்ணில் – ஆகாயத்திலே, ஆதவன் – சூரியன், விளங்கு –
விளங்குகின்ற, நீடுஎல்லையை – நீண்டவரம்பை, ஊமன் கேட்டல்உம் –
ஊமையானவன் வினவியறிதலையும், கண் இலாதவன் – குருடன், காண்டல்உம் –
கண்டறிதலையும், கடுக்கும் – ஒத்திருக்கும்; (எ – று.)
ஊமன் கண்ணிலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும்-
முறைநிரனிறைப்பொருள்கோள்.
முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன்-
தன் சொலாகிய மாப் பெருங்காப்பியம்தன்னைத்
தென்சொலால் உரைசெய்தலின், செழுஞ் சுவை இல்லாப்
புன்சொல்ஆயினும், பொறுத்து அருள்புரிவரே, புலவோர்.–அவையடக்கம்
முன் சொல் ஆகிய சொல் எலாம் – முற்பட்ட சொல்லாகிய
வேதம்முழுவதையும், முழுதுஉணர் – ஒன்றுவிடாமல் நன்கு அறிந்த,
முனிவன்தன் -வியாசமகரிஷியின், சொல்ஆகிய – வாக்காகிய, மாபெருங்
காப்பியந்தன்னை – சிறந்தபெரிய காப்பியமாகிய பாரதத்தை, தென் சொலால் –
தமிழ்மொழியினால், உரைசெய்தலின் – சொல்லுதலினால், செழுஞ்சுவை இல்லா
புல் சொல் ஆயின்உம்-(என்னுடைய சொல்) மிக்க சுவையில்லாத இழிவாகிய
சொல்லாயிருப்பினும், புலவோர் -வித்துவான்கள், பொறுத்து அருள்புரிவர் –
பொறுமைகொண்டு கருணை செய்வார்கள்;(எ – று.)
நித்தியமாதலால், வேதம் ‘முன்சொல்’ எனப்பட்டது. என்சொல்
இழிவானதேயானாலும் வடமொழியிலுள்ள மாப்பெருங்கதை தமிழிலெழுதப்
படுவதென்றகாரணங்கொண்டு, சொல்லப்படும் பொருளின் மேன்மையால்
பொறுத்துப் புலவர்என்மீது அன்பு கொள்ளுவ ரென்று அவையோர்க்கு
அடக்கங் கூறியவாறு.
——–
முன்னும் மா மறை முனிவரும், தேவரும், பிறரும்,
பன்னும் மா மொழிப் பாரதப் பெருமையும் பாரேன்;
மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும்
என்னும் ஆசையால், யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன். —பாடலுற்ற காரணம்
முன்னும் மாமறை – நினைத்து ஓதப்படும் சிறந்த வேதங்களில்
வல்ல,முனிவர்உம் தேவர்உம் பிறர்உம் – முனிவர்களும் தேவர்களும்
மற்றையோரும்.பன்னும் – ஆராய்கின்ற, மா மொழி – சிறந்த மொழிகளைக்
கொண்ட, பாரதம்பெருமைஉம் – பாரதத்தின் சிறப்பையும், பாரேன் –
ஆலோசிக்கமாட்டேன்: ‘மன்னும் -பெருமை பொருந்திய, மா தவன் – திருமகள்
கொழுநனான திருமாலின்[ஸ்ரீக்ருஷ்ணபகவானின்], சரிதம் உம் – சரித்திரமும்,
இடைஇடை – இந்நூலின்நடுநடுவே, வழங்கும் – வழங்காநிற்கும்’, என்னும் –
என்கின்ற, ஆசையால் -விருப்பத்தினால், யான்உம்- (ஏற்ற திறமையில்லாத)
நானும், ஈது – இந்தச் சரிதத்தை,இயம்புதற்கு – (தமிழ்ப்பாடலாற்) சொல்லுதற்கு,
இசைந்தேன் – சம்மதித்தேன்; (எ – று.)
“நாராயணகதாமிமாம்” என்றார், வேதவியாசரும். ஆசை பற்றிக்
கூறியதாதலால்,என் குற்றம் பொறுக்கத்தக்கது என்ற அவையடக்கமும் இதில்
தோன்றும்.
——
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதயத்
திங்கள் மா மரபினில் பிறந்து, இசையுடன் சிறந்தோர்,
அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி; அவ் அரசர்-
தங்கள் மாக் கதை, யான் அறி அளவையின், சமைக்கேன்.–திங்கள் மரபில் சிறந்தோர் கதை
எங்கள் மா தவன் – எமது இலக்குமிக்குத் தலைவனாகிய
திருமாலின்,இதயம் – நெஞ்சமாகிய, மா மலர் – சிறந்த தாமரை மலரினின்று,
வரும் – தோன்றிய,உதயம் – தோற்றத்தையுடைய, திங்கள் – சந்திரனுடைய,
மாமரபினில் – சிறந்தவமிசத்திலே, பிறந்து -, அம் கண் மாநிலத்து – அழகிய
இடம் பொருந்திய (இந்தப்)பெரு நிலத்திலே, இசையுடன் சிறந்தோர் –
கீர்த்தியோடு மேம்பட்டவராகிய, அரசர்-,பல்கோடி – பலகோடிக்
கணக்கினராவர்: அ அரசர் தங்கள் மா கதை -அவ்வரசர்களின் சிறந்த
கதையை, யான் அறி அளவையின் – யான் அறிந்தஅளவினால், சமைக்கேன் –
அமைத்துக் கூறவேன்; (எ – று.)
இதனால், சந்திரகுலத்துத்தோன்றிய அரசர் பலரின் சிறந்த கதையைப்
பாரதமென்று பேர்கொண்ட இந்நூன்முகத்தாற் கூறுவே னென்பதாம். “சந்த்ரமா
மநஸோ ஜாத:” என்று சந்திரன் திருமாலின் மனத்தினின்று தோன்றியவனெனக்
கூறியிருத்தல் காண்க. தமது வழிபடுகடவுளிடத்துக்கொண்ட ஈடுபாடு தோன்ற,
‘எங்கண் மாதவன்’ என்றார். மாதவன் – மா -இலக்குமிக்கு, தவன் – கணவனென்று
உறுப்புப்பொருள். கோடி – இங்குஎண்ணலளவை யாகுபெயர்: பெயர்ப்பயனிலை.
———-
பொருந்த வான் உறை நாள்களை நாள்தொறும் புணர்வோன்,
அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன்,
திருந்து அ(வ்) வானவர்க்கு அரியவன் செஞ் சடை முடிமேல்
இருந்த வானவன்,-பெருமையை யார்கொலோ, இசைப்பார்?
வான் – ஆகாயத்திலே, பொருந்த-, உறை – தங்குகின்ற,
நாள்களை -(அசுவினி முதலிய) நட்சத்திரங்களை, நாள் தொறு உம் –
தினந்தோறும், புணர்வோன்- சேர்பவனும்,- வானவர்க்கு – தேவர்கட்கு,
அருந்த – உண்ணுமாறு, ஆர் அமுது -அருமையான அமிருதத்தை,
அன்புடன் – அன்போடு, அளிப்போன் – தருபவனுமாகி,திருந்து அ வானவர்க்கு
அரியவன் – செம்மை பெற்ற அந்தத் தேவர்கட்குள்ளேஅருமைப்பாட்டை
யுடையவனாகிய சிவபெருமானது, செஞ்சடை முடிமேல் -செந்நிறமுள்ள
ஜடையைக்கொண்ட திருமுடிமேலே, இருந்த – தங்கியிருக்குந்தன்மைவாய்ந்த,
வானவன் – கடவுட் சந்திரனது, பெருமையை-, இசைப்பார் – அறிந்துசொல்ல
வல்லவர், யார்கொல்ஓ – யாவர் கொலோ? (எ – று.)
சந்திரன் அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களில் முறையே எந்த
எந்தநட்சத்திரத்துடனிருக்கின்றானோ, அந்தந்த நட்சத்திரநாளாக அத்தினம்
வழங்கப்படுவதுகாண்க: சந்திரன் தன்னுடைய அமுதகலைகளை இரவி முதலிய
தேவர்களுக்குத் தினம்ஒரு கலைவீதம் கொடுக்கின்றானென்பதும், அதனால்தான்
தேய்பிறையில் தினமானம்ஒவ்வொரு கலை குறைந்து வருகின்ற தென்பதும்,
சிவபெருமானுடைய சடைமுடிமேல்பிறைச் சந்திரன் எப்போதும்
தங்கிநிற்கின்றானென்பதும் நூற்கொள்கை. சிவபெருமான்முடிமேல் தங்குதல் தன்
கலைகளைத் தேவர்க்கு உணவாகக் கொடுத்தல் முதலியமேம்பாடு உடைமையால்,
சந்திரன் பெருமையை முழுதும் அறிந்து இசைக்கமுடியாதென்றார். திருந்த
என்று எடுத்து, திருந்த இருந்த என்றுஇயைப்பினுமாம்.
——–
மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி,
மண்டு அலம் பொர வருந்திய பெருந் துயர் மாற,
மண்தலம்தனை நிழல் எனும் மரபினால், தனது
மண்டலம் பொழி அமிழ்தின், மெய் குளிரவே வைத்தோன்;
அன்றியும் அந்தச் சந்திரன்), – மண்டலம் பயில் –
மண்டலகதியாகச்செல்லுகின்ற, உரகர் – பாம்புகளின், பேர்உயிர்ப்பினால் –
பெருமூச்சினோடு, மயங்கி – கலந்து, மண்டு அலம் பொர- மிக்க விஷமானது
மோதுவதனால், வருந்திய – வருத்தமடைந்த, பெருந்துயர் – மிக்கதுன்பம், மாற –
நீங்கும்படி – மண் தலந்தனை- மண்மயமாயமைந்த இந்தப்பூமியை, நிழல் எனும்
மரபினால்- (தனது) சாயையென்கின்ற [நிலாவெனப்படுகின்ற]முறைமையினாலும்,
தனது மண்டலம் பொழி அமிழ்தின் – தன்வட்டவடிவமானஉருவம்பொழிகின்ற
அமிருதத்தினாலும், மெய் குளிர – உடல் குளிரும்படி, வைத்தோன் -வைத்தவன்;
(எ -று.)
பாம்புகளின் நெட்டுயிர்ப்போடு விஷமும் கலக்கப்பெற்றதனால், இந்தப் பூமி
மிக்கவெதுப்பையடைய, அவ்வெம்மையைத் தனது நிலவினாலும்
தன்அமுதகலைகளினாலும்போக்கிக் குளிர்ச்சி யடையச் செய்பவன் சந்திரனென்க,
யமகவணி. மண்டு அலம்பொர மயங்கி வருந்திய பெருந்துயர் எனக் கொண்டு
கூட்டி யுரைப்பாரு முளர். அலம் =ஹாலம்.
———
பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு,
உம்பர்-ஆனவர் தானவருடன் கடைந்திடவே,
தம்பம் ஆனதும் அன்றி, அத் தழல் விடம் தணிய,
அம்புராசியின் ஆர் அமுதுடன் அவதரித்தோன்;
(அன்றியும் அந்தச்சந்திரன்),- பைம் பொன் மால் வரை
மத்தினில் -பசும்பொன்மயமான பெரியமலையாகிய மந்தரகிரி யென்னும்
மத்திலே, பணிவடம் -ஆதிசேஷனாகிய கடைகயிற்றை, பிணித்திட்டு-கட்டி,
உம்பர் ஆனவர் – தேவர்கள்,தானவருடன் – அசுரருடனே (கூடி), கடைந்திட –
கடையாநிற்க,- (அப்போது), தம்பம்ஆனதுஉம் அன்றி -(தயிர்கடையும்) மத்துக்கு
அடை தூணாக அமைந்ததல்லாமல், அதழல் விடம் தணிய – அங்குத் தோன்றிய
தழல்போன்ற [மிகவெப்பமான] விடத்தின்கொடுமை தணியும்படி, அம்புராசியின்-
அந்தத் திருப்பாற்கடலிலே, ஆர் அமுதுடன்- அருமையான அமிருதத்துடனே,
அவதரித்தோன் – தோன்றியவன்;(எ – று.)
தேவர்கள் தாம் இழந்தசெல்வத்தை மீண்டும் பெறும் பொருட்டு
விட்டுணுவின்மொழிப்படியே திருப்பாற்கடலில் மந்தர கிரியை மத்தாகநாட்டி
வாசுகியென்னும் நாகத்தைக்கடைகயிறாகப் பூட்டிக் கடையும்போது அந்தச்சந்திரன்
அந்தமந்தரகிரியாகிய மத்துக்கு அடைதூணாக அமைந்தான்: அன்றியும்
கடைகின்றபோது முதன்முதலில் அந்தக் கடலிலிருந்து நஞ்சுதோன்ற
அந்தவெப்பத்தைத் தணிக்குமாறு அமிருதத்துடனே அந்தச்சந்திரனுந் தோன்றின
னென்பதாம். மேரு மந்தரம் இமயம் என்ற இந்தமலைகளை அபேதமாகக்கூறுவது
கவிசமயமாதலால், மந்தரமலையை இங்கு ‘பொன்மால்வரை ‘ என்றார். பணி – பணீ:
வடசொல்:படத்தை யுடையதென்பது அவயவப்பொருள்.அம்புராசி – ஜலத்தின்
திரளையுடைய தெனக் கடலுக்குக் காரணப்பெயர்; பாற்கடலுக்கு இலக்கணை.
————
பத்து இரட்டியில் ஈர்-இரண்டு ஒழிந்த பல் கலையோன்;
மித்திரற்கு அவை கொடுத்து முன், மீளவும் கவர்வோன்;
அத்திரிப் பெயர் அந்தணன் அம்பகம்தனிலும்,
சித்திரக் கனல் முகத்தினும், பிறந்து, ஒளி சிறந்தோன்.
அன்றியும் அவன்),- பத்து இரட்டியில் – இருபது என்னும்
எண்ணில்,ஈர் இரண்டு ஒழிந்த – நான்குகுறைந்த[பதினாறாகிய], பல்கலையோன்-
பலவானகலைகளை யுடையவன்: மித்திரற்கு – சூரியனுக்கு, அவை – அந்தப்
பதினாறுகலைகளையும், முன்-, கொடுத்து-, மீளஉம் – மறுபடியும், கவர்வோன் –
பெற்றுக்கொள்பவன்: அத்திரி பெயர் அந்தணன் – அத்திரியென்ற பெயரைக்
கொண்டஅந்தணாளனுடைய, அம்பகந்தனில்உம் – கண்ணிலும், சித்திரம் கனல்
முகத்தின்உம் -விசித்திரமான (கிரணங்களையுடைய) அக்கினியின் முகத்திலும்,
பிறந்து-, ஒளிசிறந்தோன் – ஒளிவிஞ்சியிருப்பவன்; (எ – று.)
சந்திரன் தனது கலைகளைத் தேய்பிறையில் தினம்ஒவ்வொன்றாகச்
சூரியனுக்குக்கொடுத்து, அமாவாசையில் அக்கடவுளோடு ஒன்றியிருந்தது,
வளர்பிறையில் தினம்ஒவ்வொன்றாக அக்கலைகளைக் கொள்கின்றானென்பது
ஒருசார் நூற்கொள்கை.அத்திரிமுனிவரின் விழியினிற் சந்திரன் தோன்றிய
வரலாறு:- உபப்பிரமராகியஅத்திரி முனிவர் இந்திரியநிக்கிரகஞ் செய்து
மூவாயிரம்வருடம் தவம்புரிகையில்,தேஜோரூபியாகிய அவருடைய
கண்களிலிருந்து பத்துத்திக்குக்களிலும் பேரொளிவீசிக்கொண்டு நீர் பெருகவே,
அந்தக் கருப்பத்தைத் திக்தேவிகள் பதின்மரும்வகிக்கத்தொடங்கிப் பின்பு
தங்களாற் பொறுக்கமுடியாமல் சந்திரரூபமான அந்தக்கருப்பத்தோடு பூமியில்
விழ, அப்பால் நான்முகக்கடவுள் அந்தச் சந்திரனைவேதமயமான தேரின்மீது
ஏற்ற, ஸப்தரிஷிகள் வேதவாக்கியங்களைக் கொண்டுதுதித்ததனால் அச்சந்திரன்
மிக்க ஒளிபெற்று உலகத்துக்குப் பேரொளியைத்தருபவனாயின னென்பதாம்.
இங்குக்கூறிய சந்திரன்பிறப்பினுள் நெருப்பினின்றுதோன்றிய வரலாறு
தெரியவில்லை: வந்தவிடத்துக் கண்டுகொள்க. சித்திரக்கனல்முகத்து என்பதற்கு –
ஒருசார் விசித்திரமான சோதியையுடைய சூரியனிடத்து என்றுகூறுவாராயினும்,
“மித்திரற்கவைகொடுத்து முன் மீளவும் கவர்வோன்” என்றதையேகுறிப்பதாகு
மாதலாற் கூறியதுகூறலாம். மித்திரர்க்கு என்று பாடமாயின், நண்பராகிய
தேவர்கட்கு என்று பொருளாம்.
———–
அந்தி ஆரண மந்திரத்து, அன்புடன் இவனை
வந்தியாதவர் மண்ணினும் வானினும் இல்லை.
புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால்
தந்து, யாவரும் களிப்புற, இருக்கும் நாள்தன்னில்,–புதன் பிறப்பு
அந்தி – மாலைப்போதில், ஆரணம்மந்திரத்து –
வேதமந்திரத்தால்,அன்புடன் – அன்போடு, இவனை – இந்தச்சந்திரனை,
வந்தியாதவர் – வணங்காதவர், மண்ணின்உம் – இந்தநிலவுலகத்திலும், வானின்உம்
-மேலுலகத்திலும், இல்லை-: (இப்படிப்பட்டசந்திரன்),- புந்தியால் உயர் –
புத்தியினான்மேம்பட்ட, புதன்எனும் புதல்வனை – புதனென்னும்
பேரையுடையபுத்திரனை, மகிழ்வால் தந்து – மகிழ்ச்சியோடு (தாரையினிடமாகப்)
பெற்று, யாவர்உம்களிப்புஉற – (அந்தப் புதனுடைய நுண்ணறிவைக்கண்டு)
எல்லாரும் மகிழ்ச்சியடைய, இருக்கும் நாள் தன்னில்-, -(எ-று.)-
மநுவருண்மைந்தன்… … இளையெனும் பெயர்மடவரலாயினனென்ப” என்று
அடுத்த கவியோடு தொடர்ந்துமுடியும்.
வியாழனென்னுந் தேவகுருவின் பத்தினியான தாரையைச் சந்திரன் கண்டு
காதல்கொண்டு அன்னாளோடுகூடிப் புதனென்ற புதல்வனைப் பெற்றானென்க.
தந்தியாவரும் – குற்றியலிகரம்.” உந்தியாரழகுடைய பேருரோகிணிவயிற்றிற்,
புந்தியாலுயர் புதனையப் புண்ணியன் பயந்தான்” என்று சிறுபான்மையாகக்
காணப்படும் பாடம், புராணகதையோடு மாறுபடுதலாற் கொள்ளத்தக்கதன்று.
மாலைச்சந்தியைத்தொழுவதைச் சந்திரனைத்தொழுவதாகக்கொண்டு கூறினார்
போலும்.
————
வளை நெடுஞ் சிலைக் கரத்தினன் மநு அருள் மைந்தன்,
உளை எழும் பரித் தேரினன், உறு
விளை அருந் தவ விபினம் உற்று, அம்பிகை விதியால்,
இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப.–மநு மகன் இளை என்னும் மடவரலாதல்
வளை நெடுஞ் சிலை கரத்தினன் – வளைந்துள்ள
நீண்டவில்லைக்கையிலேந்தியவனான, மநு – மனுவென்றஅரசன், அருள் –
பெற்ற, மைந்தன் -புதல்வனான இளனென்பவன், உளை எழும் பரி தேரினன் –
பிடரிமயிர்ஓங்கிவளரப்பெற்ற குதிரையைப்பூட்டிய தேரின்மீது ஏறிச்செல்பவனாய்,
உறுவது-(அங்குச் சென்றால் தனக்கு) நேரிடக் கூடிய தீங்கை, ஒன்று – சிறிதும்,
உணரான் -அறியாதவனாகி,- விளை அரு தவம் விபினம் உற்று – முதிர்ந்த
அருமையானதவத்திற்குரிய காட்டையடைந்து, அம்பிகை விதியால் – உமாதேவி
கட்டளையிட்டிருந்ததனால், இளை எனும் பெயர் மடவரல் – இளையென்று
பெயர்கொண்ட ஒருபெண்ணாக, ஆயினன்-, என்ப – என்று கூறுவார்; (எ – று.)
மநுபுத்திரனான இளனென்பான் ஒருகால் தேரின்மீது ஏறிக்கொண்டு
காடுசென்றவன், ‘இங்குவருபவர் பெண்ணாய்விடுக’ என்று பார்வதிதேவி
ஏற்படுத்தியிருந்த ஓரிடத்து அதனை யறியாமையாற் சென்றுசார, அந்தப்
பார்வதிதேவியின் ஏற்பாட்டின்படியே பெண்ணுருவம் அந்த இளனைச் சேர,
அவன்இளையென்று யாவரும் பேரிட்டழைக்கும் பெண்ணாயினனென்பதாம்.
அம்பிகை=அம்பிகா.மடவரல் – மடமைக்குணம் வருதலையுடையவள். இளையை
வைவஸ்வதமநுவின் மகவாக மகாபாரதத்திற் கூறியிருக்கின்றது. (பாலபாரதத்திலோ
கர்த்தமரிஷியின் மகவாகக் கூறியுள்ளது.)
————
மார காகளம் எழுவது ஓர் மது மலர்க் காவில்,
தாரகாபதி புதல்வன் அத் தையலைக் காணா,
வீர காம பாணங்களின் மெலிவுற, மயங்கி,
தீர காமமும் செவ்வியும் மிகும்படி, திளைத்தான்–புதனும் இளையும்
மாரன்காகளம் – மன்மதனதுவெற்றிச்சின்னமாகிய குயிலின் ஓசை,
எழுவது- (தன்னிடத்து) ஓக்கம்பெற்றிருப்பதாகிய, ஓர் மதுமலர் காவில் –
ஒப்பற்றதேன்நிறைந்த மலர்களைக்கொண்ட சோலையிலே, தாரகாபதி புதல்வன் –
சந்திரனுக்குப்புத்திரனாகிய புதனென்பவன், அ தையலை காணா – அந்த
இளையென்றபெண்ணைக்கண்டு, வீரம்காமம்பாணங்களின் – வீரத்
தன்மையையுடைய காமபாணங்களினாலே, மெலிவுஉற – (தன்உடம்பு)
மெலிவடைய,- மயங்கி – புத்தியில்மோகங்கொண்டு, தீரம் காமம்உம் – மிக்க
காமமும், செவ்விஉம் – அழகும், மிகும்படி- (அத்தையலுக்கு) மிகுமாறு,
திளைத்தான்- (அவளைக்) கூடினான்; (எ -று.)
காகளம் – ஒருவகையூதுகருவி: குயில் மன்மதனுக்குக் காகள மெனப்படும்:
இங்கு அச்சொல் – மன்மதனது ஊதுகருவியாகக்கொள்ளப்படும் குயிலைக்காட்டி,
ஆகுபெயராய், அந்தக்குயிலினோசையைக் காட்டிற்று.
———–
புதனும், அந்த மென் பூவையும், புரூரவாவினைத் தம்
சுதன் எனும்படி தோற்றுவித்தனர். அவன் தோன்றி,
இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி,
மதனனும் கலை முருகனும் எனும்படி, வளர்ந்தான்.
புதனும்-, அந்த மெல் பூவைஉம்- அந்தமெல்லிய பூவைபோன்ற
இளையும், புரூரவாவினை – புரூரவஸ்என்பவனை, தம் சுதன் எனும்படி –
தம்முடையபுதல்வனென்று (யாவரும்) சொல்லும்படி, தோற்றுவித்தனர் –
உண்டாக்கினார்கள்:அவன் – அந்தப்புரூரவசு, தோன்றி – பிறந்து, இதம் –
நன்மைக்குணத்துடனே,நலம்பெறும் அழகின்உம் – சிறப்புப்பொருந்திய அழகிலும்,
திறலின்உம் -வலிமையிலும், இலங்கி – விளங்கி, மதனன்உம் – மன்மதனும்,
கலை முருகன்உம் -போர்க்கலையில்வல்ல முருகக்கடவுளும், எனும்படி – என்று
(கண்டோர்) கூறும்படி,வளர்ந்தான்-; (எ – று.)
அழகிற்கு மன்மதனும், அழகு திறல் என்ற இரண்டிற்கும் முருகக்கடவுளும்
உவமையாவர்: இனி, மெல்லிய மலர்களைக்கொண்டு மூவுலகத்து
ஆடவர் மகளிரையெல்லாம் வெல்லும் வல்லமை பெற்றுள்ளான் மன்மதனென்ற
காரணத்தால், அழகு திறல் என்ற இருதன்மையிலுமே இருவரும்
உவமையாவரென்றலும் ஒன்று. பின்னிரண்டடியை முறைநிரனிறையாகக்
கொள்வாருமுளர். பூவை – நாகணவாய்ப்புள்: அதுபோல் இன்குரலையுடைய
பெண்ணுக்கு, உவமவாகுபெயர்.
மதனனும் கலை முருகனும் எனும்படி, வளர்ந்தான்.–புரூரவா தோன்றுதல்
பொருப்பினைச் சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள்
உருப்பசிப் பெயர் ஒண்டொடி, உருவினின் சிறந்தாள்,
தருப் பொழில் பயில் காலையில், தானவர் காணா,
விருப்பு உறக் கவர்ந்து ஏகினர், அவளுடன் விசும்பில்.புரூரவா உருப்பசியை மணத்தல்
இதுமுதல் மூன்றுகவிகள் – அசுரர்கவர்ந்துசென்ற உருப்பசியைப்
புரூரவா மீட்டு, இந்திரன் தூதினாற் பூமியில் மணந்திருந்தமை கூறும்.
பொருப்பினை சிறகு அரிந்தவன் – மலைகளின் சிறகை
(வச்சிராயுதத்தினால்) அரிந்திட்டவனான தேவேந்திரனுடைய, புரத்து –
அமராவதிபட்டணத்திலே வாழ்கின்ற, மங்கையருள் – அப்ஸரஸ்
ஸ்திரீகளுக்குள்ளே,உருவினில் சிறந்தாள்-வடிவழகினால் மேம்பட்டவளான
உருப்பசி பெயர்ஒள் தொடி – உருப்பசியென்று பேர்பெற்ற
அழகிய தொடியினைப்பூண்டவளாகிய பெண், தரு பொழில் பயில் காலையில் –
மரங்களைக்கொண்டசோலையிலே சஞ்சரிக்கும்போது, தானவர் காணா – சில
அசுரர்கள் (அவளைக்)கண்டு, விருப்பு உற – (அவளிடத்து)
விருப்பந்தோன்றியதனால், கவர்ந்து- (அவளைக்)கவர்ந்துகொண்டு, விசும்பில் –
ஆகாயவழியே, அவளுடன் ஏகினர்-அவளுடன்சென்றார்கள்; (எ-று.)
முற்காலத்தில் மலைகளெல்லாம் சிறகுடையனவாயிருந்து, ஊர்களின்
மேலிருந்துஅழித்துவருதல்கண்டு முனிவர் முதலியோர் முறையிட, இந்திரன் தன்
வச்சிராயுதத்தால்அவற்றின் சிறகுகளை யறுத்திட்டானென்ற கதைபற்றி,
‘பொருப்பினைச் சிறகரிந்தவன்’ என்றது. உருப்பசி உருவாற் சிறந்திருந்தது,
அன்னாளை அசுரர் கவர்தற்கு ஏதுவாயிற்றென்க. உருப்பசி – ஊர்வசீயென்ற
வடசொல்லின் திரிபு. பதரிகாச்சிரமத்தில் திருமால்நாராயணரூபியாயிருந்து
தவஞ்செய்ய அத்தவத்தைக் கெடுக்கும்படி மேனைமுதலியதேவமாதர் வர,
நாராயணமுனிவர் தமது ஊருவினின்றும் [தொடையினின்றும்] ஓர்
கட்டழகியைப் படைத்தனுப்ப, அங்ஙனம் படைக்கப்பட்ட அம்மாதின்
கட்டழகைக்கண்டு அத்தேவமாத ரெல்லாம் வெள்கிப் பின் அவளைத் தம்முடன்
சேர்த்துக்கொண்டன ரென்பது வரலாறு. அங்ஙனம் நாராயண முனிவரின்
உருவினின்று தோன்றிய காரணம்பற்றி, அம்மாது ஊர்வசி யென்று பேர்பெற்றாள்.
மித்திரனென்ற சூரியனது சாபத்தால் இவள் பூமியில் புரூரவஸோடு வசிக்குமாறு
நேர்ந்ததென்ப. ஒண்டொடி – பண்புத்தொகையன்மொழி. தானவர் –
கசியபமுனிவர்மனைவியருள் தனு என்பாளிடம் தோன்றியவர்.
கொண்டு போதலும், ‘அபயம்!’ என்று உருப்பசி கூவ,
அண்டர் யாவரும் அஞ்சினர், அவருடன் அடு போர்.
வண்டு சூழ் குழல் அணங்கை, இம் மதிமகன் மகனும்
கண்டு, தேர் நனி கடவினன், அசுரர் மெய் கலங்க.
கொண்டு போதலும் – (அசுரர்கள் உருப்பசியை அவ்வாறு)
கொண்டுபோனவளவிலே, உருப்பசி – உருப்பசியென்ற அந்தத் தெய்வமங்கை,
அபயம்என்று-, கூவ – கதற,- (அதுகேட்டு), அண்டர்யாவர்உம் – தேவர்க
ளெல்லாரும், (அந்த ஊர்வசியை மீட்கும் பொருட்டு),அவருடன் – அந்த
அசுரர்களுடனே, அடு போர் – (உயிரைக்) கொல்லவல்லபோரைச்செய்வதற்கு,
அஞ்சினர் – பயந்தார்கள்: வண்டு சூழ் குழல் அணங்கை -வண்டுகள் மொய்க்கப்
பெற்ற கூந்தலையுடைய தெய்வமகளாகிய அந்த ஊர்வசியை, இமதி மகன் மகன்உம்
– இந்தச்சந்திரனுடைய புத்திரனாகியபுதனுக்கு மகனானபுரூரவசும், கண்டு- (அசுரர்
கவர்ந்து செல்வதைப்) பார்த்து, அசுரர் மெய் கலங்க -(தான் வருகின்ற நிலையைக்
கண்டே) அந்த அசுரர்கள் உடல் நடுங்கும்படி, தேர் -(தன்னுடைய) இரதத்தை, நனி
கடவினன் – மிகவும் வேகமாகத் தூண்டி(அசுரர்செல்லுமிடத்து)ச் செலுத்தினான்;
(எ -று.)
அபயம் என்ற வடசொல் – அச்சமில்லாமற் காக்கவேண்டிய பொருளாவேன்
யான் என்பதைக் குறிப்பிக்கும். போதலும் – உம் மீற்று வினையெச்சம்.
தனிகடவினனென்றும் பாடமுண்டு
நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி, வாள் அவுணர்
புறந்தரும்படி புரிந்தபின், புரந்தரன் தூதால்
மறம் தரும் கழல் மன்னவன் மண்மிசை அணைந்து,
சிறந்த அன்பொடு அத் தெரிவையை நலம் பெறச் சேர்ந்தான்.-
நிறம் தரும் – ஒளிபொருந்திய, குழல் அரிவையை –
கூந்தலழகியளாகிய அந்த உருப்பசியை, நிறுத்தி – (அசுரர் கொண்டு
போகமுடியாதபடி)தடுத்து,- வாள் அவுணர் – வாள்போற் கொடியவரான அந்த
அசுரர்கள், புறம்தரும்படி – முதுகுகொடுத்து ஓடும்படி, புரிந்தபின் – செய்தபின்,
புரந்தரன் தூதால் -இந்திரனுடைய தூதுவனால், மறம் தரும் கழல் மன்னவன் –
(தன்)வீரத்தைக்காட்டியவனான வீரக்கழலையணிந்த அந்தப்புரூரவமன்னவன்,
மண்மிசைஅணைந்து – பூமியின்மீது சேர்ந்து, சிறந்த அன்பொடு –
மிக்ககாதலோடு, அதெரிவையை – அந்த உருப்பசி நங்கையை, நலம் பெற –
இன்பமுண்டாக, சேர்ந்தான்-(அன்னாளோடு) கூடி யிருந்தான்.
ஊர்வசியைப் புரூரவாமீட்டதனையறிந்த இந்திரன், ஒரு தூதுவனை அந்தப்
புரூரவசினிடம் அனுப்பி அவளைமணந்து சிலகாலம் பூமியில் வாழ்ந்திருக்குமாறு
பணிக்க, அந்தப்பணியின்படியே அந்த ஊர்வசியை அம்மன்னவன் மணந்து
சுகித்திருந்தன னென்க. நலம் – ஆகுபெயரால், நல்ல இன்பத்தைக் காட்டிற்று
மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில்
ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான்.
தேயுவும் பல தேவரும் மகிழ, மற்று இவனே
மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன்.–புரூவரசுக்கு அந்த ஊர்வசியினிடம் ஆயுவென்பவன்
பிறத்தல்
அ மகன் – அந்த புரூரவசு,- மாயன் ஊருவின் வந்தருள் அந்த
மான்வயிற்றில் – மாயைக்குணமுடையவனாகிய திருமாலின் தொடையினின்று
தோன்றியஅந்த மான்போன்ற (பார்வையையுடையவளான) உருப்பசியின் வயிற்றிலே,
ஆயு என்றஒரு செம்மலை – ஆயுவென்று பேர்படைத்த செம்மைக்குணமுடைய ஒரு
புத்திரனை, அளித்தான் – தந்தான்: வண் புகழ் மேய வேந்தரில்- சிறந்த புகழ்
பொருந்திய அரசர்களுக்குள், இவன்ஏ – இந்தஆயுவே, தேயுஉம் – அக்கினிதேவனும்,
பல தேவர்உம் – பல தேவர்களும், மகிழ – உவகைகொள்ளுமாறு, வேள்வியால்
மிக்கோன் – யாகத்தினால்மேம்பட்டவன்; (எ-று.) – மற்று – அசை.
வேள்வியை இந்தப் புரூரவன் புத்திரனான ஆயுவென்பவன் மிகுதியாகச்
செய்தானாதலால், தமக்கு அவியுணா மிகுதியாகக் கிடைப்பதுபற்றித் தேவரும்,
வேள்வியில் தலைமையிருத்தலால் அந்த அனற்கடவுளும் மகிழ்வாராயினர்.
மான் -உவமையாகுபெயர். ஊரு – தொடை: தற்சம வடசொல்.
முகுடமும், பெருஞ் சேனையும், தரணியும், முற்றும்
சகுட நீர் எனச் சத மகம் புரி அருந் தவத்தோன்,
நகுடன், நாம வேல் நராதிபன், நாகருக்கு அரசாய்
மகுடம் ஏந்திய குரிசில், ஆயுவின் திரு மைந்தன்.-ஆயுவின்மைந்தன் நகுட னென்பவன்.
முகுடம் உம் -(தான் அணிந்திருந்த) கிரீடமும், பெருஞ்
சேனைஉம் -(ஆளுவதற்குக் கருவியான) மிக்கசேனையும், தரணிஉம் –
(ஆளப்படும்) உலகமும்,முற்றுஉம் – (ஆகிய) யாவற்றிலும், சகுடம் நீர் என –
சேம்பினிலையில் நீர்போல,(பற்றற்றவனாய்), – சதமகம்புரி- நூறு அசுவமேத
யாகங்களைச் செய்த, அருந்தவத்தோன் – அருமையான
நோன்பினையுடையவனாகிய, நகுடன் நாமம் வேல்நராதிபன் –
நகுடனென்றுபேர்பெற்ற வேற்படையையுடைய மன்னவனாகி, நாகருக்கு
அரசு ஆய் – தேவலோகத்தார்க்கும் அரசனாகி, மகுடம் ஏந்திய குரிசில் –
தேவேந்திரன் முடியைத்தரித்த சிறந்தோன்,- ஆயுவின் திரு மைந்தன் – அந்த
ஆயுவின் சிறந்த புதல்வனாவன்; (எ -று.)
ஆயுவின் புத்திரன் நஹுஷன் இவன் பற்றற்றுநின்று தவத்தைச்செய்து நூறு
அசுவமேதயாகமுஞ் செய்த முற்றியதனால், தேவேந்திரபதவி பெற்று
வானவர்க்கரசனுமாயினா னென்பதாம். சேம்பிலையில் நீர் இருந்தும் சேம்பு அதில்
ஒட்டின்றியிருப்பது போல இந்நகுஷனிடத்து முகுடம் சேனை முதலியன இருந்தும்
அவற்றிற் பற்றுவையாதிருந்தமை முன்னிரண்டடிகளில் விளக்கப்பட்டது. முகுடம்-
கிரீடத்தினோருறுப்பு. அது – ஆகுபெயரால், கிரீடத்தைக் காட்டிற்று.சகுடம் –
சேம்பு:அதன் இலைக்கு முதலாகுபெயர். நராதிபன் – தீர்க்கசந்திபெற்ற
வடமொழித்தொடர்.
புரந்தரன் பதம் பெற்றபின், புலோமசை முயக்கிற்கு
இரந்து, மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி,
வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு,
நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும், அந் நிருபன்.-நகுடன் அகத்தியசாபத்தாற் சர்ப்பமாதல்.
புரந்தரன் பதம் – இந்திரபதவியை, பெற்ற பின் – (அந்த நகுடன்)
பெற்றபின்பு. புலோமசை முயக்கிற்கு – இந்திராணியைத் தழுவுதலை, இரந்து –
வேண்டி, மற்று – பிறகு, அவள் ஏவலின் – அந்த இந்திராணியின்
கட்டளைப்படியே,யானம் – பல்லக்கை, உற்று – பொருந்தி, ஏறி-, வரம் தரும் –
வரங்கொடுக்கவல்ல,குறு முனி – அகத்தியமுனிவன், முனி – சினந்துகூறிய,
வாய்மையால் – (வெகுளிச்) சொல்லால், மருண்டு – மனமயக்கங்கொண்டு,
நிரந்தரம் – நிலையாக, பெரும் புயங்கம்ஆனவன்உம் – பெரிய சர்ப்பமானவனும்,
அ நிருபன் – அந்த நகுடமன்னவன்; (எ -று.)
புரந்தரன் – பகைவரின் புரத்தை[உடலை அல்லது பட்டணத்தை]ப்
பிளப்பவனென்று அவயவப்பொருள்படும். புலோமஜா என்ற வடசொல் –
புலோமனென்றஅசுரனிடத்தின்று பிறந்தவளென்று பொருள்படும்: இது,
இந்திராணியின் பெயராகும்.புஜங்கமென்ற வடசொல் – மார்பினாற்
செல்வதென்றேனும், வக்கிரமாகச்செல்வதென்றேனும் உறுப்புப்பொருள்படும்.
சந்திரகுலத்தவனான நகுடனென்றஇவன் நூறு அசுவமேதயாகஞ்செய்து
இந்திரபதவிபெற்றுச் சிவிகையேறிச் செல்கின்றகாலத்து இந்திராணிமேல் வைத்த
காதல்மிகுதியால் தன் சிவிகையைத் தாங்கிச்செல்கின்றஏழுமுனிவர்களுள்
குறுமுனிவராதலால் மெதுவாய்நடந்த அகத்தியரைநோக்கி,விரைவிற்செல்க
என்பான் ‘ஸர்ப்ப ஸர்ப்ப’ [ஓடு ஓடு] என்று கூறினானாக, அகஸ்தியர்
வெகுண்டு ‘நீ சர்ப்பமாகுதி’ என்று சபிக்க, அவன் அவ்விந்திரபதவியிழந்து
உடனேபாம்பாகி நிலத்திற்கிடந்தா னென்பது வரலாறு.
மற்று அவன் திரு மைந்தன், வில் மைந்தினால் உயர்ந்த
கொற்றவன், திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன்,
முற்ற வன் பகை முகம் கெட முகம்தொறும் திசையில்
செற்றவன், பெருஞ் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன்,-நகுடன்புதல்வன் யயாதி.
அவன் திரு மைந்தன் – அந்த நகுடனது சிறந்த புத்திரன்,- வில்
மைந்தினால்உயர்ந்த கொற்றவன் – வில் வலிமையினால் மிக்க
வெற்றியையுடையவன்:திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன் –
வலிமைக்கு உரிய தேவதையாகியவீரலட்சுமிக்கு (த்தன்னுடைய) இரண்டு
தோள்களையும் வாழுமிடமாகக் கொடுத்தவன்:வல் பகை முற்ற – (தன்னுடைய)
வலிய பகைவர்யாரையும், திசையில் முகந்தொறுஉம்முகம் கெட – எல்லாத்
திக்குக்களினிடங்களிலும் சிதைந்தோடும்படி, செற்றவன் -அழித்தவன்:
பெருஞ்செற்றம் இல் குணங்களில் சிறந்தோன் – (கொடுமை) மிக்க சின
மென்ற துர்க்குணத்தைப் பெறாமல் நற்குணங்களினால் மிக்கவன்: (எ-று.)- இவன்
பெயர் யயாதிஎன்பது, மேற்செய்யுளிற் பெறப்படும்.
கொற்றவை – வெற்றிக்குரியதேவதை ஆதலால், அவளை வீரர்களின்
புயத்தில்வாழ்பவளெனக் கவிஞர் கூறுவர். பகை – ஆகுபெயர்.
வேன்மைந்தினிலுயர்ந்துஎன்றும் பாடம்.
யயாதி’ என்று கொண்டு, இவனையே எவரினும் சிறக்க
வியாதனும் புகழ்ந்து உரைத்தது. மற்று இவன், மேல்நாள்,
புயாசலங்களுக்கு இசையவே, புகரவன் புதல்வி
குயாசலம் தழீஇ, இருவர் வெங் குமரரை அளித்தான்.-யயாதி சுக்கிராசாரியரின் மகள் தேவயானையை
மணந்து, இரு குமரரைத் தருதல்
இவனைஏ – இந்த நகுடனது புத்திரனையே, யயாதி
என்றுகொண்டு -யயாதியென்றுபாராட்டிக்கொண்டு, எவரின்உம் சிறக்க –
யாவரினும்மேன்மைபெறும்படி, வியாதன்உம் – வியாசமகரிஷியும், புகழ்ந்து
உரைத்தது – புகழ்ந்துகூறியது: மேல்நாள் – முற்காலத்தில், இவன் – இந்தயயாதி,
புய அசலங்களுக்குஇசைய – (தன்னுடைய) மலைபோன்ற புஜங்களுக்குஏற்க,
புகரவன் புதல்வி -சுக்கிராசார்யருடைய புத்திரியின், – குய அசலம் தழீஇ –
மலைபோன்ற தனங்களைத்தழுவி, வெம் குமரர் இருவரை – கொடுங்குணமுடைய
இரண்டு புத்திரர்களை,அளித்தான்-; (எ -று.)
புயாசலங்களுக்குஇசையக் குயாசலந் தழுவினா னென்று நயம் காண்க:
மலையோடு மலை சேர்த லியல்பாதல் அறிக. யயாதியின் உபாக்கியானம்
வியாசபாரதத்து விரிவாகக் கூறப்பட்டிருத்தலால், யயாதியென்றுகொண்டு
வியாதனும்புகழ்ந்துரைத்தது இவனையே யென்றார். புகரவன் புதல்வியின் பெயர்,
தேவயாநீயென்பது. இருவர்குமரர் – யது துருவசுஎனப்படுவர்.
வெங்குமரரென்றது- இவர்கள்தந்தைசொல்லைக்கேளாதவராதலால்; இத்தன்மை,
மேல் இருபத்துமூன்றாங் கவியில்விளங்கும். மற்று – அசை
அன்ன காலையில், இவள்தனது ஆர் உயிர்த் துணையாய்,
முன் இசைந்த பேர் இசைவினால், ஏவலின் முயல்வாள்,
நல் நலம் திகழ் கவிதனக்கு உரைகெழு நண்பாம்
மன்னவன் தரு மடவரல், இவனுழை வந்தாள்.-இதுவும் அடுத்த கவியும் – தேவயானைக்குப் பணிப்பெண்ணும்
விடபன்மனென்னும் அசுரமன்னன்மகளுமான சன்மிட்டையை, யயாதி,
கந்தருவமணத்தாற் சேர்ந்தமை கூறும்.
அன்ன காலையில் – அக்காலத்தில், இவள் தனது – இந்தத்
தேவயானையின், ஆர்உயிர்துணை ஆய் – அரியஉயிர்த்தோழியாய், முன்
இசைந்தபேர் இசைவினால் ஏவலின் முயல்வாள் – முன்னம் உடன்பட்ட மிக்க
உடன்பாட்டின்படியே (அந்தத்தேவயானையின்) ஏவலைமுயன்றுசெய்பவளான, நல்
நலம் திகழ் கவி தனக்கு உரை கெழு நண்பு ஆம் மன்னவன் தரும் மடவரல் –
மிக்கநற்குணத்தால் விளங்குகின்ற சுக்கிராசாரியனுக்குப் புகழ்ந்து கூறப்படும்
நண்பனான(வ்ருஷபர்வனென்ற) அசுரமன்னவன் பெற்ற பெண், இவனுழை –
இந்தயயாதியினிடத்து, வந்தாள்-; (எ – று.)
சன்மிட்டையென்பவள் – அசுரகுருவான சுக்கிராசார்யர்க்கு நண்பனான
வ்ருஷபர்வன்மகள்: சுக்கிராசார்யரின்புத்திரி தேவயானையும் விடபன்மன்மகளான
சன்மிட்டையும் உயிர்ப்பாங்கியராயிருந்தனர். ஒருகால்சன்மிட்டை தன்னைச்
சினந்துபழித்த தேவ யானையைக் கிணற்றில் தள்ளினளாக,அதனையறிந்த
விடபன்மன் தன்மகளைத் தேவயானையின் விருப்பிற்கு ஏற்ப அன்னாளுக்குப்
பணிப்பெண்ணாக்கினான்: சன்மிட்டையும் தன்தந்தைகூறியபடிஅந்தத்தேவயானைக்கு
ஏவல்செய்தொழுகுபவளாயினாளென்ற விஷயம்,முன்னிரண்டடிகளில் அறியத்தக்கது.
கவியென்பது சுக்கிராசார்யரின் பெயர்களுள்ஒன்று.
ஆழி மன்னன், அவ் அணங்கினை அணங்கு எனக் கண்டு,
பாழி வன் புயம் வலம் துடித்து, உடல் உறப் பரிந்து,
வாழி தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம்,
யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான்.
ஆழி மன்னன் – ஆஜ்ஞாசக்கரத்தையுடைய யயாதியரசன், அ
அணங்கினை – அந்த அழகிய சன்மிட்டையை, அணங்கு என கண்டு –
தெய்வப்பெண்போற் கட்டழகியாளாகப்பார்த்து, பாழி வல் புயம் வலம் துடித்து –
மிக்கவலிமைபொருந்திய தோள்களில் வலத்தோள் துடிக்கப்பெற்று, உடல் உற
பரிந்து -(அவளுடைய) உடம்பைச் சேர மனத்திற்கருதி, தன் மனை மடவரல்
அறிவுறாவண்ணம் – தன்மனைவியாகிய தேவயானை அறியாதபடி, யாழினோர்
பெரும்புணர்ச்சியின் – கந்தருவர்களின் பெருமை பெற்ற மணத்தினால், இதயம்
ஒத்துஇசைந்தான்- மனமொத்து மணந்தான்; (எ -று.)- வாழி – அசை.
மிக்க கட்டழகியான அந்தச் சன்மிட்டையை ஒருகால் யயாதி மன்னவன்
கண்டுகாதல்கொண்டு, தன்மனைவியறியாதபடி அவளை மணக்கவேண்டுமென்ற
கருத்தினால்காந்தர்வவிவாகத்தினால் மணந்துகொண்டானென்பதாம்.
சுக்கிராசார்யன்தேவயானையை யயாதிக்கு மணஞ்செய்து கொடுக்கும்போது
அவளுக்குத்தோழியும்பணிப்பெண்ணுமான சர்மிஷ்டையையும் போஷிக்குமாறும்,
ஆனால்மணக்கக்கூடாதென்றும் சொல்லிக்கொடுத்தானென்று வியாசபாரதத்தி
லுள்ளது.”அறநிலையொப்பே பொருள்கோடெய்வம், யாழோர்கூட்ட
மரும்பொருள் வினையே,யிராக்கதம்பேய்நிலை யென்றிக்கூறிய, மறையோர்
மன்றலெட்டிவை” என்பதனால்,எண் வகைமணம் இன்ன வென்றும், அவற்றுள்
யாழோர் கூட்டமென்பதொன்றுஎன்றும் அறியலாம்: இவ்வெண்வகை மணத்துள்
யாழோர்கூட்டமாவது -ஆணும்பெண்ணுமாகிய இருவர் ஒத்தார் தாமே கூடுங்
கூட்டம்: இது,காந்தர்வவிவாஹமெனச் சிறப்பித்துச் சொல்லப்படும்.
வலம்புயம்துடித்தல்,அண்மைக்காலத்தில் நிகழ விருக்குஞ் சுபத்தைத் தெரிவிக்கும்
முற்குறியாகியநன்னிமித்தம்.
சாரும் அன்பினின், கற்பினின், சிறந்த சன்மிட்டை,
சேரும் மைந்தினும், உயர்வினும், தேசினும், சிறந்து,
‘மேரு’ என்றிட, மேதினி யாவையும் தரிப்பான்,
பூரு என்று ஒரு புண்ணியப் புதல்வனைப் பயந்தாள்.-சன்மிட்டை பூருவைப் பெறுதல்
சாரும் – பொருந்தியுள்ள, அன்பினின் – அன்பினாலும்,
கற்பினின் -கற்பினாலும், சிறந்த – மேம்பட்டிருந்த, சன்மிட்டை – சர்மிஷ்டா
என்பவள்,- சேரும்மைந்தின்உம் உயர்வின்உம் தேசின்உம் சிறந்து –
(தன்னிடத்துப்) பொருந்தியவலிமையினாலும் மேன்மையினாலும் ஒளியினாலும்
மேம்பட்டவனாய், மேரு என்றிடமேதினி யாவைஉம் தரிப்பான் – மேருமலை
யென்று சொல்லுமாறு பூமிமுழுவதையும்தாங்குபவனான, பூரு என்ற ஒரு
புண்ணியப் புதல்வனை – பூருவென்று பேர்கொண்டஒப்பற்ற
புண்ணியசாலியானபுத்திரனை, பயந்தாள் – பெற்றாள்; (எ -று.)
மலைகள் பூமியின்மீதிருந்து பூமியைத் தாங்குவதனால், ‘பூதரம்’ எனப்
பெயர்பெறும்: அங்ஙன் அதனைத்தாங்கும் மலைகளுள் மிக மேம்பட்டதாகிப்
பூமியின்நடுவிலிருப்பதான மேருவெனப்படும் மலை, பூமியைத்தாங்குபவற்றில்
தலைமைபெற்றதென்பது சொல்லாமலே விளங்கும். யயாதியின் புதல்வனான
இந்தப்பூரு, தன் தோள்வலிமையாற் பூமிமுழுவதுந் தாங்குவதால், அவனை
‘மேரு வென்றிடமேதினியாவையுந்தரிப்பான்’ என்றது. மேரு வென்றிட என்றே
பிரிப்பினுமாம்.தகப்பனாரின் சொல்லை மீறாது நடப்பவனாதல் பற்றி
‘புண்ணியப்புதல்வன்’ என்றது.இவன் மூத்தவனல்லாதவனாயினும்,
தந்தைக்குக்கீழ்ப்படிந்து அவனருள்பெற்றுஇராச்சியத்துக்கு உரியனாயினானென்ற
பொருள் இங்குப்புலப்படும்.
மருவு இளங் கொடி அனைய மென் மருங்குலாள், பின்னும்
இருவர் மைந்தரைப் பயந்தனள். இறை மனை காணா,
‘உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள்மேல்
திருவுளம்கொல்?’ என்று அழன்று, தன் தாதை இல் சென்றாள்.–சன்மிட்டையின் புதல்வரால் அன்னாளைத்தன்கணவன்
காதலியாகக்கொண்டதை யூகித்துச் சீறித் தந்தையில்லத்தைத் தேவயானை சார்தல்.
மருவு இளங் கொடிஅனைய மெல் மருங்குலாள்- பொருந்திய
இளங்கொடியையொத்த மெல்லிய இடையையுடையவளாகிய சன்மிட்டை,
பின்னும் -பூருவைத்தவிர, இருவர் மைந்தரை பயந்தனள் – இரண்டு புதல்வரைப்
பெற்றாள்: இறைமனை அரசன் தேவியாகிய தேவயானை, காணா –
(அந்தப்புதல்வரைப்) பார்த்து,(அவர்கள் தன்கணவனது சாயையுடையவரா
யிருந்ததனால்), உரு விளங்கிய உலகுஉடை நிருபனுக்கு – வடிவத்தினால்
விளங்குபவனாகி உலகங்களையெல்லாம்தன்னதாகக்கொண்ட அரசனுக்கு
[யயாதிக்கு], இவள்மேல் திருவுளம் கொல் – இந்தச்சன்மிட்டையின்மீது
கருத்துப்போலும், என்று – என்றுகருதி, அழன்று – (யயாதிமன்னவனைச்)
சினந்து, தன் தாதை இல் சென்றாள் – தன்னுடைய தந்தையாகிய
சுக்கிராசாரியரின் வீட்டினையடைந்தாள்; (எ – று.)
பூருவைத்தவிர இன்னும் இரண்டுபுத்திரரைச் சன்மிட்டை பெற, அந்தப்
புதல்வரிடத்துத் தன் கணவனது சாயையைக் கண்டு, இந்தச்சன்மிட்டைமீது
நம்கணவன்காதல்கொண்டு இப்புத்திரரைப் பெற்றான்போலு மென்று
ஊகித்துணர்ந்துதேறி, தான் இருக்கையில் வேறோருத்தியை மணந்த காரணத்தினால்
மன்னவனிடத்துச் சினந்து தன்தந்தையுன் வீட்டைத் தேவயானை
சேர்ந்தனளென்பதாம். பூருவைத் தவிர,சன்மிட்டையின் மற்றை யிருபுதல்வர் –
த்ருஹ்யு அனு என்பவர். பூரு – சன்மிட்டையின்ஈற்றுப் புதல்வனாவனென்பது
வியாசபாரதத்துப் பெறப்படும் இறைமனை -இறைவனுக்கு மனைவி: நான்காம்
வேற்றுமைத்தொகை: முறைப்பொருளது, மனை -மனைவிக்குஇடவாகுபெயர்
சென்று, தாதையைப் பணிந்து, இது செப்பலும், சின வேல்
வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான்.
அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி,
‘இன்று நூறு’ என, நரை முதிர் யாக்கையோடு இருந்தான்.-தேவயானை தன்தந்தையினிடம் யயாதி மன்னவ
னொழுக்கத்தைச்சொல்ல, அந்தச்சுக்கிரனுடைய சாபத்தால் யயாதி முதுமை யடைதல்.
தேவயானை), சென்று – (தாதையின்வீட்டைச்) சேர்ந்து,
தாதையைபணிந்து – (தன்) தந்தையான சுக்கிரனை வணங்கி, இது செப்பலும்-
(தன்கணவன்சன்மிட்டையைமணந்த) இதைச் சொல்லுதலும்,- சினம் வேல் வென்றி
மன்னனை -சினத்தைக்கொண்ட வேற்படைதாங்கிய வெற்றியையுடைய
யயாதியரசனை, விருத்தன்ஆம் வகை – முதுமையுடையோனாகுமாறு, அவன் –
அந்தச் சுக்கிராசாரியன்,விதித்தான் – கட்டடையிட்டான்[சபித்தான்]:
அன்றுதொட்டு (சுக்கிரன் சபித்த)அந்தநாள்முதல், இவன்- இந்த யயாதி
மன்னவன், ஐ முதல் பிணியினால் – சிலேட்டுமத்தைத் தலைமையாகக்கொண்ட
நோயினால், அழுங்கி – வருந்தி, இன்று நூறு என -இப்போது (இவனுக்கு)
நூறுவயசு (ஆய்விட்டது) என்று (இவன் முதுமைகண்டுயாவரும்) சொல்லும்படி,
நரை முதிர் யாக்கையோடு – கிழத்தனத்தினால் முதிர்ந்தசரீரத்துடனே,
இருந்தான்-; (எ – று.)
அந்த மன்னவன் மைந்தரை அழைத்து, ‘எனக்கு உசனார்
தந்த மூப்பை நீர் கொண்மின், நும் இளமை தந்து’ என்ன,
மைந்தர் யாவரும் மறுத்திட, பூரு, மற்று அவன்தன்
இந்த மூப்பினைக் கவர்ந்து, தன் இளமையும் ஈந்தான்–யயாதி தன் மைந்தர்களொவ்வொருவரையும்
இளமையைத் தந்து தன் முதுமையைப் பெறுமாறுகேட்க, பூருவே இசைதல்.
அந்த மன்னவன் – அந்தயயாதியரசன், மைந்தரை – (தன்)
புத்திரரானயதுமுதலியோர்களை, அழைத்து-, ‘எனக்கு-, உசனார் –
சுக்கிராசார்யர், தந்த -(சாபமூலமாகக்) கொடுத்த, மூப்பை – முதுமையை, நும்
இளமை தந்து – உங்களுடையஇளமையைக் கொடுத்திட்டு, நீர் கொண்மின் – நீங்கள்
கைக்கொள்ளுங்கள், ‘ என்ன – என்றுவேண்ட,- மைந்தர் யாவர்உம் மறுத்திட-
(பூருவை யொழிந்த மற்றைப்) புதல்வர்யாவரும் (அவ்வேண்டுகோட்கு இசையாது)
மறுத்துவிட,- பூரு – பூருவென்பவன், அவன்தன் – அந்த யயாதியினுடைய,
இந்தமூப்பினை – இந்த முதுமைப்பருவத்தை, கவர்ந்து – பெற்றுக்கொண்டு, தன்
இளமைஉம் ஈந்தான் – தன்இளமைப் பருவத்தையும் (அந்தத் தந்தைக்குக்)
கொடுத்தான்; (எ -று.)
சுக்கிராசாரியர் சபித்தபோது யயாதிமன்னவன் சாபவிமோசனங்கேட்க,
அவர்வேண்டுமானால், இந்த ஜரையை[மூப்பை] அயலார்க்குப்
பண்டமாற்றுப்போற்கொடுக்குமாறு அருள்புரிந்தா ரென்று வியாசபாரதத்திற்
கூறியுள்ளது. உசனார் – ‘ஆர்’ உயர்த்தற் கண்வந்தது: சபித்திட்டமைபற்றிய
வெகுளியினால் இழித்தற்கண் வந்த தென்பாருமுளர். உசன் = உசநஸ்.
விந்தை, பூமகள், முதலிய மடந்தையர் விரும்ப,
முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி,
சிந்தை ஆதரம் தணிந்தபின், சிந்தனை இன்றி,
தந்தை, மீளவும் இளமை தன் தனயனுக்கு அளித்தான்.-பூருவினிளமைகொண்ட யயாதி, மனஞ்சலிக்கக் காமவின்ப
நுகர்ந்து பின் அந்தப்பூருவுக்கு இளமையைத் தந்திடுதல்
விந்தை – வீரலட்சுமியும்,பூமகள் – பூமிதேவியும், முதலிய-,
மடந்தையர்- பெண்டிரும், விரும்ப – விருப்பங்கொள்ள, (இளமையைப்பெற்று),
தந்தை – (பூருவின்)தகப்பனான அந்த யயாதி, முந்தை மா மணம் யாவைஉம் –
பழமையான(வாத்ஸ்யாயநம் என்ற நூலிற் கூறிய) சிறந்த
கரணங்களெல்லாவற்றையும், பல பகல்முற்றி – பல தினங்களில் நுகர்ந்து
திருத்தியடைந்து, சிந்தை ஆதரம் தணிந்த பின் -மனத்திலிருந்த இச்சை
அடங்கிய பின்பு, சிந்தனை இன்றி- (காமவின்பத்தில்) நசையற்று,
மீளஉம் – மீண்டும், இளமை – (தான் பூருவினிடத்துப்பெற்ற) இளமையை, தன்
தனயனுக்கு அளித்தான் – தன்புத்திரனாகிய அந்தப் பூருவுக்கே கொடுத்திட்டான்;
(எ-று)
இளமைப்பருவம் வந்ததற்கு ஏற்ப, வீரம் முதலியனவும் உடம்பில்
தோன்றியதனால்,வீரத்துக்குஉரிய தேவதையாகிய வீரலட்சுமியும்,
வீரத்தினாற்காக்கப்படுபவளாகியபூமிதேவியும் ஆகிய இம்மடந்தையரும்
சன்மிட்டைபோலவே இந்த யயாதியினிடத்து.விருப்பங் கொள்ளலானார்களென்பது
முதலடியின் பொருள். வீரலட்சுமிவிந்தியமலையில் வசிப்பவளென்ற
காரணத்தினால் “விந்த்யவாஸிநீ” என்று ஒரு பெயர்பெறுவள்: அச்சொல் ‘விந்தை’
என்று சிதைந்து வந்தது. மணமென்பது – மகளிரோடுகூடும் கல்வி வகைகளை:
அவை கரணங்க ளெனப்படும்
இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி, அன்று இவற்கே
முடியும், மாலையும், முத்த வெண் கவிகையும், முரசும்,
படியும், யாவையும் வழங்கி, ‘எம் பனி மதி மரபிற்கு
அடியும் நீ, இனி’ என மகிழ்ந்து, அளியுடன் அளித்தான்.–பின்பு அரசவுரிமை முதலியவற்றை யயாதி பூருவுக்கே அளித்தல்.
இடிஉம் ஆறு கொள் நெடுமொழி – இடியும் தணியும்
கம்பீரத்தொனிகொண்ட சொற்களையுடைய, யயாதி-, அன்று – (இளமையைத்
திருப்பிப்கொடுத்த) அப்போது, (அந்தப் பூருவை நோக்கி), ‘எம் பனி மதி
மரபிற்கு -எம்முடையதான குளிர்ந்த சந்திரனிடத்துவந்த (இந்த) வமிசத்துக்கு,
அடிஉம் -காரணமா யிருப்பவனும், இனி, – நீ-; என – என்று சொல்லி,
மகிழ்ந்து – உவகைகொண்டு,- ‘இவற்கு ஏ- இந்தப் பூருவுக்கே, முடிஉம் –
(பரம்பரையாக வந்த)அரசகிரீடமும், மாலைஉம் – (தன் மரபினர்க்குரிய)
அடையாளப் பூமாலையும், வெள்முத்தம் கவிகைஉம் – வெள்ளிய
முத்துக்குடையும். முரசும்-, படிஉம்- பூமியும்,யாவைஉம் -(ஆகிய) எல்லாமும்,
(உரியன என்று),’ வழங்கி – சொல்லி, அளியுடன் -அன்போடு, அளித்தான் –
கொடுத்தான்; (எ -று.)
அரசர்க்குஉரிய தசாங்கத்தில் ஈண்டுக்கூறியன ஒழிந்த மற்றவை ‘யாவையும்’
என்பதனாற் குறிக்கப்பட்டன. தன் முதுமையைக்கொண்டு இளமையைத் தன்
விருப்பின்படி தந்து மன விருப்பத்தை நிறைவேற்றியதனால் மனமுவந்த தந்தை
‘சன்மிட்டையின் குமாரனான பூருவுக்கும் அவன் சந்ததியார்க்குமே இராச்சியம்
உரியதாகுக’ என்று சொல்லி, தன்னுடைய அரசாட்சியை அந்தப் பூருவுக்கே
கொடுத்தனனென்க.
விரதம் மிஞ்சிய வேள்வியால் கேள்வியால் மிக்கான்,
சுரத மங்கையர் முலைக் குவடு அணை வரைத் தோளான்,
பரதன் என்று ஒரு பார்த்திவன், பரதமும் இசையும்
சரதம் இன்புற, அக் குலம்தனில் அவதரித்தான்.–பூருவின் குலத்திலே பரதன் என்று ஒரு மன்னவன் தோன்றுதல்.-பரதன் தோற்றமும் ஏற்றமும்
விரதம் மிஞ்சிய – விரதத்தை மிகுதியாகக்கொண்ட,
வேள்வியால் -யாகத்தினாலும், கேள்வியால் – கேள்வியினாலும், மிக்கான் –
மேம்பட்டவனும், சுரதம்மங்கையர் – சுரதத்திற்கு உரிய மகளிரின், முலை குவடு
அணை – முலையினுச்சிஅணையப்பெற்ற, வரை தோளான் – மலைபோன்ற
தோளையுடையவனுமான, பரதன்என்ற ஒரு பார்த்திவன் – பரதனென்று
பேர்பூண்ட ஓரரசன், பரதம்உம் – நாட்டியசாஸ்திரமும், இசைஉம் – சங்கீத
சாஸ்திரமும், சரதம் இன்புற – இனிதி னின்பமடைய,அ குலம் தனில் – அந்தப்
பூருவின் குலத்திலே, அவதரித்தான் – பிறந்தான்;(எ-று.)
பூருவின் வமிசத்தில் தோன்றிய பரதன் வேள்வி கேள்விகளில் மிக்கவனாக
இருந்ததுபோலவே, சங்கீதம் நாட்டியம் என்னும் இவற்றிலும் மிக்கவனாகியிருந்தா
னென்க. இந்தப் பரதன் துஷ்யந்த மகாராசனுக்குச் சகுந்தலையினிடம்
தோன்றியவன்.கேள்வி – ச்ருதி யென்ற வடசொல்லின் பொருளது எனினுமாம்.
பார்த்திவன் -பிருதிவிக்குத்தலைவனென்று பொருள்படும்
சுர சமூகமும் சுராரிகள் சமூகமும் சூழ,
விரசு பூசலின் வாசவன் நடுங்கி, வெந்நிடு நாள்,
அரசர் யாவரும் அறுமுகக் கடவுள் என்று அயிர்ப்ப,
புரசை நாகம் முன் கடவினன், நாகமும் புரந்தோன்.-பரதமன்னவன் சிறப்பு.
சுர சமூகம்உம் – தேவர்களின் கூட்டமும், சுர அரிகள்
சமூகம்உம்-தேவர்களின்பகைஞரான அசுரருடைய கூட்டமும், சூழ – சுற்றிநிற்க,
விரசு -(ஒருவரோடொருவர்) நெருங்கிச்செய்த, பூசலின் – பெரும்போரிலே,
வாசவன் -இந்திரன், நடுங்கி-, வெந் இடும் நாள் – புறங்கொடுத்தோடினபோது,-
அரசர் யாவரும்-,அறுமுகக்கடவுள் என்று அயிர்ப்ப – தேவசேனாபதியாகிய
சண்முகமூர்த்தியோ என்றுஎண்ணிச் சந்தேகிப்ப, புரசை நாகம் முன் கடவினன் –
கழுத்திடுகயிற்றையுடையயானையை முன்னே தூண்டிச் செலுத்தினவனாகி,
நாகம்உம் புரந்தோன்-தேவலோகத்தையும் பாதுகாத்தான், (அந்தப்பரதன்);(எ-று.)
இவன் இங்ஙன் வீரனாக இருந்ததனால்தான் இவன் வமிசத்தவர்
பாரதரென்றும்,அவர்கள் செய்த போர் பாரதப்போர் என்றும் கூறப்படும்.
அசுரரை வென்று, சுரரைத்தேலோகத்தில் நிலைநாட்டியதனால், இவனுக்கு
அறுமுகக்கடவுள் ஒப்பாவன்.
முக் குலத்தினும் மதிக் குலம் முதன்மை பெற்றது’ என்று,
எக் குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச,
மைக் குலத்தினில் புட்கலாவர்த்தமாம் எனவே,
அக் குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான்.–அத்தியின் பிறப்பும், அத்தினாபுரி அமைப்பும்
முக் குலத்தின்உம் – (சூரிய சந்திர அக்கினியர் என்னும்)
மூவரிடத்தினின்று தோன்றிய அரசவமிசம் மூன்றுக்குள்ளும், மதி குலம் – சந்திர
குலமானது, முதன்மை பெற்றது – தலைமையை யடைந்தது, என்று-, எ
குலத்தினில்அரசுஉம் – எந்தக் குலத்திலுதித்த அரசரும், வந்து-, இணை அடி –
(தன்னுடைய)இரு தாள்களில், இறைஞ்ச – வணங்கிநிற்க,- மைகுலத்தினில்
புட்கலாவர்த்தம் ஆம்எனஏ – மேகக்கூட்டங்களுள் புட்கலாவர்த்தம் சிறந்து
தோன்றுவதுபோல, அகுலத்தினில் – அந்தப்பரதகுலத்திலே, அத்தி என்பவன் –
ஹஸ்தியென்ற அரசன்,அவதரித்தான்- தோன்றினான்; (எ -று.)
அத்தி =ஹஸ்தீ: இவன் ஸு ஹோத்ர னென்பானுடைய புத்திரன்.
புட்கலாவர்த்தம்மேகங்களுள் பொன்மழைபொழிவதென்ப.
கொண்டல்வாகனும் குபேரனும் நிகர் எனக் குறித்து,
புண்டரீகன் முன் படைத்த அப் புரவலன் அமைத்தது,
எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும்,
அண்டர் தானமும், உவமை கூர் அத்தினாபுரியே.
கொண்டல் வாகன்உம் – மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனும்,
குபேரனும்-, நிகர்- (இவனுக்கு) ஒப்பாவார்,’ என – என்று, குறித்து- எண்ணி,-
புண்டரீகன் – தாமரையில் வாழ்பவனாகிய பிரமதேவன், முன்-, படைத்த –
சிருஷ்டித்த, அ புரவலன் – அந்த அத்தியென்ற அரசன், அமைத்தது- (தனக்கு)
இராசதானியாகப்படைத்த நகரம்,- எண்திசா முகத்து – எட்டுத்திக்கிலும், எழுது –
எழுதிய,சீர் – கீர்த்தியையுடைய, இயக்கர் – இயக்கரின், மா நகர்உம் – சிறந்த
நகரமும்[அளகையும்], அண்டர் தானம்உம் – தேவர்கள் வாழிடமான
அமராவதிநகரமும்,உவமை கூர் – உவமையாக மிகப்பெற்ற, அத்தினாபுரி –
அத்தினாபுரியென்றபட்டணமாகும்;
செல்வத்தினால் யட்சராஜனான குபேரனது ராஜதானியாகிய அளகாபுரியும்,
அழகினால் தேவேந்திரராஜதானியான அமராவதியும் போலும் அத்தினாபுரியென்க.
அத்தியென்பவனாலேற்படுத்தப்பட்டதுபற்றி, இந்நகரம் அத்தினாபுரியெனப்
பெயர்பெற்றது: இனி, யானைச்சேனையை மிகுதியாக வுடையதாக
இவ்விராசதானியையமைத்தனாதல் வந்த பெயருமாம்.
[மீனம் ஆகிய விண்ணவன், விநதை முன் பயந்த
யானமீது எழுந்தருளி வந்து, இரு பதம் வழங்க,
கான நாள் மலர்க் கயத்திடைக் கயமும், வெங் கராமும்,
ஆன மானவர் இருவரும் அக் குலத்தவரே.]—கஜேந்திரனும் முதலையுமானவரும் இக்குலத்து உதித்தவரே.
மீனம் ஆகிய – மச்சாவதாரஞ்செய்த, விண்ணவன் –
திருமாலாகிய தேவன், விநதை முன் பயந்த யானம்மீது – விநதை யென்பவள்
முன்புபெற்ற(கருடனாகிய) வாகனத்தின்மேல், எழுந்தருளிவந்து-, இருபதம்
வழங்க – (தன்னுடைய)தாளிணைகளைக் காட்சிகொடுக்குமாறு, கானம் நாள் மலர்
கயத்திடை – நறுமணம்பொருந்தி யன்றுமலர்ந்த தாமரைமலரைக்கொண்ட
பொய்கையிலேயிருந்த, கயம்உம் -யானையும், வெம் கராம்உம் – கொடிய
முதலையும், ஆன-, மானவர் இருவர்உம்-பெருமையுள்ளோரிருவரும்,
அகுலத்தவர்ஏ – அந்தக் குலத்திற்பிறந்தவரே யாவர்;(எ-று.)
யானையானவனை இந்திரத்யும்நனென்றும், முதலையானவனை அநுரு
என்றும்கூறுப. இந்தக் குருகுலச்சருக்கத்து இந்த ஓரிடந்தவிரச்
சந்திரன்முதல்விசித்திரவீரியனென்ற அரசன்வரையில் பாலபாரதத்திற் கூறிய
முறையும் இந்நூலிற்கூறியமுறையும் ஒத்திருக்கின்றன: அத்தியென்ற அரசனைக்
கூறியபின் குருஎன்ற அரசனே பாலபாரதத்திற் கூறப்பட்டுள்ளான்: கயமும்
முதலையும் ஆனஅரசரைப்பற்றி, அந்தப் பாலபாரதத்திற் கூறப்பட்டிலது.
ஒருகுலத்தின் சிறப்புத்தோன்றப்பொறுக்கிக் கூறுமிடத்து அந்தக்குலத்தினில்
தவறுசெய்து சாபமடைந்தவரைப்பற்றிச்சொல்லுவது சிறவாதாதலாலும், இங்ஙன்
சாபமடைந்தவராகக் கூறப்படுவார் இந்தக்குலத்தவரேயென்று நிச்சயமாகக்
கூறுதற்கு ஏற்ற மேற்கோள் கிடையாமையாலும்,ஒருகால் இந்தப்பாடல்
இடைச்செருகலாயிருக்குமோ என்றுதோன்றுகின்றது
பொரு பெரும் படைத் தொழில் வயப் புரவி, தேர், மதமா,
மருவ அருந் தொழில் மன்னர் நீதியின் தொழில், வளம் கூர்
சுருதியின் தொழில், முதலிய தொழில் அனைத்தினுக்கும்
குரு எனும் புகழ்க் குருவும், அக் குலத்தில் அங்குரித்தான்.–குருவும் குருகுலமும்-அந்தக்குலத்து உதித்தவனே ‘குரு’ என்பவன்.
பொரு – போர்செய்யும், பெரும் படைத்தொழில் – மிக்க
சேனைகளின் தொழில்களிலேவல்லனவான, வயம் புரவி – வெற்றி பொருந்திய
குதிரையும், தேர் – இரதமும், மதம் மா – மதம் பொருந்திய யானையும், (ஆகிய
இவற்றுடனே), மருவுஅரு தொழில் மன்னர் நீதியின் தொழில் – கிட்டுதற்கு அரிய
போர்த்தொழிலிலே வல்ல அரசருடைய நீதியின் தொழின்முறையிலும், வளர் கூர்-
வளமைமிக்கவனாகி,- சுருதியின் தொழில் முதலிய தொழில் அனைத்தினுக்குஉம் –
வேதத்திற்கூறிய தொழில்முதலிய எல்லாத் தொழில்கட்கும், குரு – (இவன்)
குருவாவன்,எனும் – என்று சொல்லத்தக்க, புகழ் – புகழையுடைய, குருஉம்-குரு
என்றஅரசனும், அ குலத்தில்- அந்தக் குலத்திலே, அங்குரித்தான்-
தோன்றினான்; (எ -று.)
அரசநீதித்துறையிலும் வேள்வித்துறையிலும் குருஎன்று சொல்லுமாறு
மிகச்சிறந்துநின்றனன், இந்தக்குரு என்ற சந்திரகுலத்தரச னென்க. சுருதியின்தொழில்
-வேதத்தில்விதித்திருக்கிற தொழில்: அஃதாவது – யாகஞ்செய்தல். குருஎன்று
அம்மன்னவன் பெயர்படைத்ததற்கு ஒருகாரணங் கற்பித்துக் கூறுவார் போன்று,
‘மன்னர்நீதியின்றொழில் ‘சுருதியின்றொழில் முதலிய தொழிலனைத்தினுக்குங்
குருவெனும்புகழ்க்குருவும்’ என்றார். இவன் பிதா சவ்வருணன், வசிட்டமுனிவனருளால்இவனைப் பெற்றானென்ப.
வரு குலத்தவர் எவரையும், வரிசையால், இன்றும்
குருகுலத்தவர் எனும்படி, பேர் இசை கொண்டான்;
இரு குலத்தினும், மாசு அறு தேசினால், இவனுக்கு
ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ?–குருமன்னவன் சிறப்பு.
இவன்),- வரு- (தனக்குப்பின்னே) தோன்றிய, குலத்தவர் –
குலத்திலுள்ளவரான, எவரையும்-, வரிசையால் – சிறப்பாக, இன்றுஉம் –
இப்போதும்,குருகுலத்தவர் – குருகுலத்திலேபிறந்தவர், எனும்படி –
என்றுசொல்லும்படி, பேர் இசைகொண்டான் – மிக்ககீர்த்திபெற்றவன்: இரு
குலத்தின்உம்- (இந்தச்சந்திரகுலந்தவிரமற்றைச் சூரியகுலம் அக்கினிகுலம் என்ற
இந்த) இரண்டுகுலங்களிலேனும்,ஒருகுலத்தின்உம்- வேறுள்ள எந்த
ஒருகுலத்திலேனும், மாசு அறு தேசினால்-குற்றமற்ற தேஜசினால், இவனுக்கு-,
உவமை உரைப்பதற்கு – உவமையாகச்சொல்வதற்கு, வேறு உண்டுஓ –
வேறொருவர் உளரோ?
இவன் தனக்குத் தானே ஒப்பாவனன்றி, இவனுக்கு உவமையாகச்
சொல்லத்தக்கவர் வேறு எந்தக்குலத்திலும் இல்லையென்பதாம். இருகுலம் – தாய்
தந்தையர்குலம் என்றும் கொள்ளலாம். ஒரு குலத்தின்உம் என்பதற்கு –
சிற்றரசர்தோன்றிய எந்த ஒரு குலத்திலும் என்று உரைத்தாருமுளர்
அந்த நல் மரபினில், அமுத வெண் திரைச்
சிந்துவின்மிசை வரு திங்கள் ஆம் என,
சந்தனு எனும் பெயர்த் தரணி காவலன்
வந்தனன்; அவன் செயல் வகுத்துக் கூறுவாம்:—கவிக்கூற்று: குருகுலத்தில் சந்தனு என்று ஒருவன் தோன்றினான்:
இனி, அவன் செயலைக் கூறுவேனெனல்.
அந்த நல் மரபினில்- சிறந்த அந்தக் குருவமிசத்தில், அமுதம் –
பால்மயமானதாய், வெள் திரை சிந்துவின் மிசை – வெண்மையான
அலைகளையுடையபாற்கடலின்மீது, வரு – தோன்றுகின்ற, திங்கள் ஆம் என –
சந்திரனொப்பாவானென்று சொல்லும்படி, சந்தனு எனும் பெயர் தரணிகாவலன் –
சந்தனுஎன்று பேர் கொண்டபூமியைக் காப்பவனான அரசன், வந்தனன் –
தோன்றினான்; அவன் செயல் -அவனுடைய செய்தியை, வகுத்து கூறுவாம்-
விவரித்துச் சொல்லுவோம்; (எ -று.)
ப்ரதீபனென்ற அரசன் சிபிவமிசத்தில் தோன்றிய சுகந்தீ யென்பவளை
மணக்க,அவர்களுக்குத் தேவாபி சந்தனு பாஹ்லிகன் என்று மூன்றுகுமாரர்
தோன்றினர்.முதல்வன் இளையனாயிருக்கும்போதே கானகஞ் சென்றிட்டான்.
அதனால், இந்தச்சந்தனு குருகுலத்துப்பிரதானனானான்: இவன்
வயதுமுதிர்ந்த எவரெவரைக்கையால்தொடுகின்றானோ அவர் யாவரும் யௌவன
மடைபவரும்,சுகமனுபவிப்பவருமாயினர்: இதனால் இவனுக்குச் சந்தனு
எனப்பெயரென்று முதனூல்கூறும். குருகுலத்திற்குப் பாற்கடலும், அக்குலத்திலே
தோன்றிய சந்தனுவுக்கு ஆங்குத்தோன்றிய சந்திரனும் உவமை. மகிழ்ந்து
கேண்மினோ என்றும் பாடம்.
இதுமுதல் நாற்பத்தாறு கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும்,மற்றையவை விளச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள்.
வேனிலான் இவன்’ என, விளங்கு காலையில்,
கானக வேட்டை போய் இளைத்த காவலன்,
ஆன மென் குளிர் புனல் ஆசையால், மணித்
தூ நிறக் கங்கையாள் சூழல் எய்தினான்.—வேட்டையாடி யிளைப்புற்ற சந்தனு கங்கைக்கரை சேர்தல்.
இவன்-, வேனிலான்- மன்மதனேயாவன்,’ என – என்று (கண்டவர்)
நினைக்கும்படி, விளங்கு காலையில் – (மிக்க அழகோடு) விளக்கமுற்றிருந்த
காலத்தில்,கானகம் வேட்டை போய் – காட்டிற் செய்யப்படும்
வேட்டைக்குச்சென்று, இளைத்த -சோர்வடைந்த, காவலன் – அந்தச்
சந்தனுராசன்,- குளிர். ஆன மெல் புனல் ஆசையால் – குளிர்ச்சி பொருந்திய
மெல்லிய நீரில் விருப்பத்தினால், மணி தூ நிறம் கங்கையாள் – அழகிய
வெண்மைநிறம் பொருந்தியகங்காநதியின், சூழல் – கரையிலே, எய்தினான் – போய்ச்
சேர்ந்தான்; (எ – று.)
வேட்டையாடி யிளைத்ததனால், தண்ணீரில் விருப்புக் கொண்ட
சந்தனுராசன்கங்கைக்கரையை யடைந்தா னென்க. காமவின்பத்தை மிகுவித்தற்கு
ஏற்றவேனிற்காலத்திற்கு உரியவ னாதலால், மன்மதன் ‘வேனிலான்’
எனப்படுவன்.மணி -முத்துமாம். ஆனமெய் குளிர் புனல் என்றும் பாடம்
மரு வரும் குழல், விழி, வதனம், வார் குழை,
இரு தனம், தோள், கழுத்து, இதழொடு இன் நகை,
புருவம், வண் புறவடி, பொற்ப, பாவையர்
உருவு கொண்டனள், தனது உடைமை தோன்றவே.-அப்போது கங்காநதி அங்குப் பெண்வடிவு கொண்டிருத்தல்.
(அப்போது கங்காநதி),- மரு வரும் குழல்- நறுமணம்
வெளிவருகின்றகூந்தலும், விழி – கண்களும், வதனம் – முகமும், வார் குழை –
நீண்டகாதும், இருதனம் – இரண்டுமுலைகளும், (இரு) தோள்- (இரண்டு)
தோள்களும், கழுத்து -கழுத்தும், இதழொடு – வாயிதழும், இன் நகை – இனிய
பற்களும், புருவம் -புருவங்களும், வள் புறம் அடி – வளப்பமுள்ள புறவடிகளும்,
(ஆகியஇவ்வுறுப்புக்கள்), பொற்ப – அழகு பெற்றிருக்க, தனது உடைமை
தோன்ற – தான்பெண்வடிவ முடையவளாயிருப்பது தெரியும்படி, பாவையர்
உருவு – பெண்களின்வடிவத்தை, கொண்டனள்- ; (எ-று.)
குழையென்பது – ஒருவகைக் காதணியையே யன்றி, காது என்னும்
பொருளைக் காட்டுவதை “மணித்தோடுங் குழையி லாட” என்ற இடத்துங் காண்க:
குழைந்திருப்பதுகுழை எனக் காதுக்குக் காரணவிடுகுறி.
கங்கையின் வெள்ளம்மேல் கருத்து மாறி, இம்
மங்கைதன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே,
தங்கிய சோகமும் தாபமும் கெட,
பங்கய விழிகளால் பருகினான் அரோ.-கங்கையின் பெண்தெய்வம் தோன்றியதைச் சந்தனு காணுதல்.
கங்கையின் வெள்ளம் மேல் – கங்காநதியின் வெள்ளத்தின் மீது
(சென்ற), கருத்து- (தன்) மனம், மாறி – மாறப்பெற்று, இ மங்கை தன் – இந்தக்
கங்காநதியின் பெண்தெய்வத்தின், பேர் ஒளி வனப்பின் வெள்ளம்ஏ – மிக்க
ஒளியைக்கொண்டுள்ள அழகின் பெருக்கையே, தங்கிய சோகமும் தாபமும் கெட-
(தன்) மனத்துப் பொருந்திய சோகதாபங்கள் கெட்டொழிய, பங்கயம் விழிகளால்-
தாமரை மலர்போன்ற கண்களினால், (சந்தனு), பருகினான்-; (எ -று.)
நீர் பருகவேணுமென்ற எண்ணத்தோடு வந்த சந்தனுவின் கருத்து
அங்குத்தோன்றிய கங்காநதியின் பெண் தெய்வத்தின் அழகுவெள்ளத்திற்
செல்லவே,அவனுடைய சோகதாபங்கள் அகன்றனவென்க.
‘வையகமடந்தைகொல்! வரைமடந்தைகொல்!
செய்ய பங்கயமலர்த் திருமடந்தைகொல்!
துய்ய வண் கலைவிதச் சொல்மடந்தைகொல்!
ஐயமுற்றனன், ‘இவள் ஆர்கொல்!’ என்னவே.–கங்கையைக் காட்சியிற் கண்ட சந்தனுவின் ஐயம்.
வையகம் மடந்தை கொல் – (இவள்)பூமிதேவிதானோ? வரை
மடந்தைகொல் – மலைமகளோ? செய்ய பங்கயம் மலர் திருமடந்தை கொல் –
செந்நிறமுள்ளதாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகள்தானோ? துய்ய வள் விதம்
கலை சொல்மடந்தை கொல் – வெண்ணிறமுள்ள செழிப்பான பலவகைப்பட்ட
கலைகளுக்கும்உரிமை பூண்ட சொல்லுக்குஉரிய தெய்வமான சரசுவதிதானோ?
(அல்லது), இவள்ஆர் கொல் – இவள் வேறு எவளா யிருப்பாளோ? என்ன –
என்ற, (அந்தக்கங்கையின் பெண் தெய்வமான மகளைக்குறித்து), ஐயம்
உற்றனன்- (சந்தனு)சந்தேகித்தான்; (எ-று.)
மிக்க பொறுமையுடையாள் போலுதலால் ‘வையகமடந்தை கொல்’ என்றும்,
கற்புடையாள்போலத் தோன்றுதலால் ‘வரை மடந்தைகொல்’ என்றும்,
பேரழகுபெற்றுப்பாக்கியவதியாயிருத்தலால் ‘திருமடந்தைகொல்’ என்றும்,
பேரறிவுடையாள்போலத்தோன்றுதலால், ‘சொல்மடந்தைகொல்’ என்றும் ஐயுற்று,
அன்னார் இங்கு வருவதற்குக்காரணந் தெரியாமையால், ‘ஆர்கொலோ’ என்று
துணிவுபிறவாது கூறினான்சந்தனுவென்க. அகத்திணைக் கோவைகளில் முதலில்
காட்சியும் பின்னர் ஐயமும்கூறப்படுவது போலவே, இங்கும் கீழ்ச் செய்யுளாற்
காட்சியும், இச்செய்யுளால் ஐயமும்கூறப்பட்டன.
கண் இமைத்து, இரு நிலம் காலும் தோய்தலால்,
பெண் இவள் மானுடப் பிறப்பினாள்’ என
எண்ணம் உற்று, அவள் அருகு எய்தி, ‘யாவர் செய்
புண்ணியம் நீ? எனப் புகழ்ந்து போற்றினான்.–தெளிந்து போற்றுதல்-தெளிவும் வினாவுதலும்.
கண் இமைத்து – கண்கள் இமைக்கப்பெற்று கால் உம் –
பாதங்களும்,இரு நிலம் தோய்தலால் – பெரியபூமியிற் படிதலால், பெண்இவள் –
பெண்ணாகியஇவள், மானுடம் பிறப்பினாள் – மனிதப் பிறவியைச் சேர்ந்தவள்,
என – என்று, (கண்டமாதின் திறத்தில்), எண்ணம் உற்று- (ஐயவறிவு நீங்கித்
தெளிவான)எண்ணத்தையடைந்து, அவள் அருகு எய்தி – அவளுடைய சமீபத்திற்
போய், நீ-,யாவர் செய் புண்ணியம் – யார் செய்த புண்ணியப் பயனாகத்
தோன்றியவள்?” என -என்று, புகழ்ந்து போற்றினான்-;
கண்ணிமைத்தல், பாதங்கள்பூமியிற்படிதல், அணிந்த மலர் மாலை வாடுதல்
என்ற இன்னோரன்னவை, தேவரினும் மானிடர்க்குள்ள வேறுபாடுகளென்றறிக.
‘தெய்வமகளோ?’ என்று ஐயுற அவ்வளவு பேரழகு பெற்ற ஒருத்தி ஒருத்தற்கு
மகளாகவாய்ப்பது புண்ணியப் பயனே யாதலால், ‘யாவர்செய் புண்ணியம் நீ’
என்றான்,
போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே,
ஏற்றிய விழியினள், இளகு நெஞ்சினள்,
‘சாற்றிய மலர் அயன் சாபம் இவ் வழித்
தோற்றியது’ என, உறு துயரம் நீங்கினாள்.–அந்தக் கங்கா நதிப்பெண் சந்தனுவைக்கண்டு தன் துயர் நீங்குதல்.
போற்றிய – (அந்தக்கங்காநதிப்பெண்ணைப்) புகழ்ந்து கூறின,
குரிசில்- ஆண்களிற்சிறந்தவனான சந்தனுராசனுடைய, மெய் – உடம்பானது,
புளகம் எய்த -மயிர்க்கூச்சையடைய, ஏற்றிய- செலுத்திய, விழியினள் –
கண்களையுடையவளும்,இளகும் நெஞ்சினள்- (அந்தச்சந்தனுராசனிடத்துக்)
குழைந்தநெஞ்சையுடையவளுமாகி,- மலர் அயன் சாற்றிய சாபம்- (திருமாலின்
உந்திக்)கமலத்தில் வீற்றிருக்கின்ற பிரமதேவன் கூறிய சாபமொழி, இவ்வழி –
இவ்விடத்து,தோற்றியது – காண்கின்றது, என – என்று, உறு துயரம் – (தான்)
கொண்டதுயரத்தை,நீங்கினாள்-; (எ -று.)
வருணதேவனே பிரமனது சாபத்தினால் சந்தனுவாய்ப் பிறந்தானென்றும்,
தான் மணக்கவேண்டியவன் இவன்தான் என்றும் கங்காநதியின் பெண்தெய்வம்
உணர்ந்தாளாதலால், அவனைக் கண்டதும் ஒருவாறு துயரம் நீங்கப்
பெற்றாளென்க. சாபவரலாறுமேல் 56- ஆம் பாடல்முதல் கூறப்படும். அன்பு
கொண்டு பார்த்தபார்வைபட்டதனால், மெய், புளகம் எய்துவதாயிற்று. மேற்புளக
மெய்தவே என்றும்பாடம்.
பொங்கிய மதர் விழிப் புரிவும், ஆதரம்
தங்கிய முகிழ் முலைத் தடமும், நோக்கியே,
‘இங்கித முறைமை நன்று` என்று, வேந்தனும்,
அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே,–சந்தனு அன்பு கூர்ந்து அவள் எண்ணம் வினாதல்-சந்தனுவும் அவளிடத்து ஆதரங் கூர்தல்.
பொங்கிய – மிக்க, மதர் – களிப்பினையுடைய, விழி புரிவுஉம் –
கண்ணின் செயலாகிய குறிப்புநோக்கமும், ஆதரம் தங்கிய – விருப்பந்தங்கப்பெற்ற,
முகிழ் முலை தடம்உம் – (தாமரை) மொட்டையொத்த கொங்கைத் தலமும்
[கொங்கைபூரித்தலையும்], நோக்கி – பார்த்து,- இங்கிதம் முறைமை நன்று –
(என்விஷயத்து இவளுடைய) குறிப்புச்செயலின் முறை இனிதாக வுள்ளது, என்று-
,வேந்தன்உம்- சந்தனுராசனும், அங்கு – அப்போது, இதமுடன் – இதமாக,
அவட்கு -அந்தக்கங்கையாள் திறத்தில், அன்பு கூர – அன்பு மிக,- (எ -று.)
“உசாவினான்” எனஅடுத்த கவியோடு முடியும். இங்கிதம் – குறிப்பால் நிகழும்
உறுப்பின் தொழில்.
கன்னியேயாம் எனில், கடி கொள் பான்மையை;
என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை, மண்ணின்மேல்;
உன் நினைவு உரை’ என உசாவினான் — இகல்
மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே.-சந்தனு, ‘நீ கன்னிகையாயின் என்னை மணக்கவிருப்ப முண்டோ,’ என்று கங்கையாளைக் கேட்டல்.
இகல் – போர்க்குஉரியதும், மின் இலை – மின்னல் போன்ற
இலையைக்கொண்டதும், வடி கொள் – கூர்மையைக் கொண்டதுமான, வேல் –
வேற்படையையுடைய, வேந்தர் வேந்தன் – அரசர்க்கரசனான சந்தனு, (கங்கையின்
பெண்தெய்வத்தை நோக்கி),- ‘கன்னிஏ எனில் – (நீ) கன்னிகையேயானால்,
கடிகொள்பான்மையை – விவாகஞ்செய்து கொள்ளுதற்கு உரிமையுடையாய்:
மண்ணின்மேல் -பூமியின்மீது, என்னில்- என்னைக்காட்டிலும், உயர்ந்தவர் –
சிறந்தவர், இல்லை-:(என்னை மணந்துகொள்ளும் விஷயத்தில்), உன் நினைவு –
உனது எண்ணத்தை, உரை – சொல்லுவாய், ‘என – என்று, உசாவினான் –
வினாவினான்; (எ-று.) -பான்மையை – முன்னிலை யொருமைக்குறிப்புமுற்று
நாணினளாம் என, நதிமடந்தையும்,
பூண் உறு முலைமுகம் பொருந்த நோக்கினள்,
சேண் உறு தனது மெய்த் தேசுபோல் நகை
வாள் நிலவு எழ, சில வாய்மை கூறுவாள்—கங்கையின் நிபந்தனை-அந்தக் கங்கை நாணமுற்றிருந்து பிறகு பேசலுறுதல்.
நதி மடந்தைஉம் – நதியின் பெண்தெய்வமான கங்கையும்,
நாணினள்என – வெட்கமடைந்தவள்போல, பூண் உறு – ஆபரணங்கள்
பொருந்திய, முலைமுகம் – தனங்களின்முகத்தை, பொருந்த-, நோக்கினள் –
பார்த்தவளாய்[தலைகவிழ்ந்தவண்ணம் இருந்துகொண்டு என்றபடி], சேண்உறு –
தூரத்தேவிளங்குகின்ற, தனது மெய் தேசு போல் – தனது உடம்பினொளிபோல,
நகை- (தன்) சிரிப்பினின்று, வாள் நிலவு எழ – ஒளி பொருந்திய நிலவு
[வெள்ளொளி]தோன்ற, சில வாய்மை – சில வார்த்தைகளை, கூறுவாள் –
சொல்பவளானாள்; (எ-று.)- அவற்றை மேலே காண்க.
தலையைக் கவிழ்த்துக்கொண்டிருத்தல் நாணங் கொண்டுள்ளாளென்பதைக்
குறிப்பிக்கும் ஆதலால், ‘நாணினளாமென முலை முகம்பொருந்த நோக்கினள்’
என்றது. கங்கை வெண்ணிறத் தவளென்பது, பிரசித்தம்.சேண் – ஆகாயமுமாம்.
சிரிக்கும்பற்களிலிருந்து வெள்ளொளி வெளிப்படுதலால், ‘மெய்த்தேசுபோல் நகை
வாணிலவெழ’ என்றது. ஆம் – அசை. நாணின ளொடுங் கினணதி மடந்தையும்
என்றுபிரதிபேதம்.
இரிந்து மெய்ந் நடுங்கிட, யாது யாது நான்
புரிந்தது, பொறுத்தியேல், புணர்வல் உன் புயம்;
பரிந்து எனை மறுத்தியேல், பரிவொடு அன்று உனைப்
பிரிந்து அகன்றிடுவன், இப் பிறப்பு மாற்றியே.—இதுவும் அடுத்தகவியும்- ஒரு தொடர்: கங்கை
‘நான்என்னசெய்யினும் கேட்பதில்லையென்றால் மணப்பேன்’ என்ன, மன்னவனும் உடன்படுதல்.
இரிந்து – அஞ்சி, மெய் நடுங்கிட – உடல்நடுங்கும்படி, நான்
புரிந்ததுயாது யாது- நான்செய்வது எது எதுவோ, (அவற்றையெல்லாம்),
பொறுத்திஏல் -பொறுப்பாயென்றால், உன் புயம் புணர்வல் – உனது தோளைச்
சேர்வேன் [உன்னை மணந்துகொள்வேன்] பரிந்து- இரக்கங்கொண்டு, எனை –
என்செயலை, மறுத்தி ஏல் – மறுப்பாயானால், அன்று -(என்றைக்கு மறுக்கின்றாயோ)
அன்றைக்கு, பரிவொடு – மனவருத்தத்தோடு, இ பிறப்புமாற்றி – இந்தப் பிறவியை
மாற்றிக்கொண்டு, உனை – உன்னை, பிரிந்து -, அகன்றிடுவன்- நீங்கிவிடுவேன்;
(எ-று.) – புரிந்ததுஎன்பது – இயல்பினால் வந்த காலவழுவமைதி.
மெய் தரு விதியினேன் விரதம் மற்று இவை
எய்த அரிது ஒருவரால்; எய்த வல்லையேல்,
கைதருக!’ என, பெருங் காதலாளனும்,
‘உய்வு அரிது!’ என இசைந்து உடன்படுத்தினான்.
மெய் தரு விதியினேன் – உண்மையாகப் பொருந்திய
நியமத்தையுடைய எனது, விரதம் – கொள்கைகளாகிய, இவை – இவைகள்,
ஒருவரால்- ஒருத்தரால், எய்த – செய்தல், அரிது – அருமையானது: எய்த
வல்லைஏல் -(இதனைச்) செய்ய வல்லமை யுடையையே யானால், கை தருக –
பாணிக்கிரகணஞ்செய்துகொள்க,’ என – என்று (அந்தக்கங்காநதியன்
பெண்தெய்வம்)கூற,- பெருங்காதலாளன் உம் – (அம்மங்கையினிடத்து)
மிக்ககாதல் கொண்டவனானசந்தனுவும், ‘உய்வுஅரிது- (இவள் கூறும்
நிபந்தனைக்கு இசைந்தாவது இவளைமணம்புரியவேண்டும்: இல்லாவிட்டால்)
உயிர் பிழைத்தல் முடியாது, ‘ என – என்றுகருதியதனால், இசைந்து –
(அவளுடைய நிபந்தனைகட்கு) உடன்பட்டு, உடன்படுத்தினான் – (தனக்கு
மனைவியாகுமாறு அவளை) இசைவித்தான்; (எ -று.)
விவாகமென்பது – வடமொழியில் பாணிக்கிரகணமென்று பெயர் பெறுதலால்,
மணக்கஎன்ற பொருளில், ‘கை தருக’ எனப்பட்டது; ஒன்றை நிச்சயிப்பவர்
கையறைந்து தருதல் இயற்கை யாதலால், கங்கையாள் என்நிபந்தனைக்கு நீ
உடன்பட்டமைவிளங்குமாறு கையெறிந்து தருக என்றபொருளில், ‘கை தருக’
என்றாளென்றலும்ஒன்று. இங்குச் சந்தனுவைப் பெருங்காதலாளன் என்ற பெயராற்
குறித்தது-பெருங்காதலையுடையவனா யிருந்ததனால்தான் அந்தக் கங்கைகூறிய
கடியநிபந்தனைக்கு உட்பட்டு அவளை மணந்தானென்ற கருத்தைப் புலப்படுத்தும்.
எனது உயிர், அரசு, வாழ்வு, என்ப யாவையும்
நினது; நின் ஏவலின் நிற்பன் யான்’ என,
வனிதையை மருட்டினான் -மன்றல் எண்ணியே,
தனதனும் நிகர் இலாத் தன மகீபனே.-தன்னை மணத்தற்குக் கங்கையாளை உடன்படுமாறு
சந்தனு கூறுதல்.
தன தன்உம் நிகர் இலா தனம் மகீபன் – குபேரனும்
ஒப்பாதலில்லாதபெருஞ்செல்வத்தையுடைய சந்தனுராசன்,- வனிதையை –
அந்தக்கங்கையின்பெண்தெய்வத்தை, மன்றல் எண்ணி- விவாகஞ்செய்து
கொள்ளவேணுமென்பதைநினைந்து,- ‘எனது உயிர் – என்னுடைய உயிரும், அரசு –
இராச்சியமும், வாழ்வு- வாழ்வும், என்ப – என்றுசொல்லப்படுபவையான,
யாவைஉம் -எல்லாமும், நினது – உன்னுடையது: யான்-, நின் ஏவலில் நிற்பன்-
உன்னுடைய கட்டளையின்கீழ் அடங்கிநிற்பேன்,’ என – என்று சொல்லி,
மருட்டினான் -(தன்திறத்தில்) மனம் மயங்கச் செய்தான்; (எ -று.)
சந்தனுவின் பணிமொழியால் கங்கையாள் அந்த அரசனிடத்து
விருப்பங்கொண்டன ளென்றவாறு. என்ப – பலவின்பாற்பெயர். என்பயாவையும்
நினது- ஒருமைப்பன்மைமயக்கம். தநதன்= செல்வத்தைத் (தன்னிடத்துத்)
தாங்குபவன்.
அரு மறை முறையினால், அங்கி சான்று என,
திருமணம் புரிந்து, உளம் திகழ வைகினான்-
‘இரதியும் மதனனும் அல்லது இல்லை, மற்று
ஒருவரும் உவமை’ என்று, உலகு கூறவே.சந்தனுவும் கங்கையும் அக்கினிசாட்சியாக மணம் புரிந்து மகிழ்தல்.
அரு மறை முறையினால் – (அறிதற்கு) அரியவேதத்திற் கூறிய
முறைப்படி,அங்கி சான்று என – அக்கினிதேவன் சாட்சியாக அமைய, திருமணம்
புரிந்து-விவாகஞ்செய்து கொண்டு, இரதி உம் மதனன்உம்-இரதிதேவியும்
மன்மதனும், அல்லது- அல்லாமல், மற்று ஒருவர்உம் உவமை இல்லை வேறு
ஒருவரும் உவமையில்லை,என்று-, உலகு- உலகத்தவர், கூற-,- உளம் திகழ –
மனம்மகிழ, வைகினான் – (சந்தனு)இருந்தான்; (எ -று.)
மருவுறச் சில பகல் மணந்து, ‘மான்விழி
கரு உயிர்த்தனள்’ எனக் களி கொள் காலையில்,
பருவம் உற்று, அன்புடன் பயந்த மைந்தனைப்
பொரு புனல் புதைத்தனள், புவனம் காணவே.-கங்கையாள் கருக்கொண்டு பெற்றமைந்தனைக் கங்கை நீரிலெறிதல்.
சில பகல் – சிலநாள்கள்,- மருவு உற மணந்து –
பொருந்தக்கூடியிருந்து, ‘மான் விழி – மான்போன்ற கண்பார்வையையுடைய
கங்கையென்பாள், கருஉயிர்த்தனள் – (கருப்பம் கொண்டிருந்து) ஈன்றாள்,’ என –
என்று, (சந்தனுமகாராசன்), களிகொள் காலையில் – மனம் மகிழும்போது,-
(அம்மகிழ்ச்சிகெட),- பருவம் உற்றுஅன்புடன் பயந்த மைந்தனை – கரு
முதிரும்பருவத்தையடைந்து[பத்துமாதம்வயிற்றிற்கொண்டிருந்தபின்] அன்போடு
பெற்ற குமாரனை, புவனம் காண -உலகத்தவர் பார்த்துக்கொண்டிருக்கையில்
தானே, பொரு புனல் – அலைமோதுகின்றநதியின் நீரில், புதைத்தனள் – வீசி
யெறிந்தாள், (அந்தக்கங்கையாள்); (எ -று.)
புனலில் புதைத்தல் – நீரில் மறைந்திடும்படி வீசி யெறிந்திடுதல். மான்விழி-
உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
கண்டு உளம் வெருவி, முன் கதித்த வாசகம்
கொண்டு உரையெடுத்திலன், கொண்ட காதலான்;
ஒண்டொடியுடன் மணந்து உருகி வைகினன்,
பண்டையின் எழு மடி பரிவு கூரவே.–வருந்தினானாயினும், சந்தனு பெருங்காதலால் ஒன்றும் பேசாது,
முன்னிலும் அவளிடம் அன்புகொண்டிருத்தல்.
கண்டு – (தன் மனைவியின் கொடுஞ்செயலைப்) பார்த்து
(முதலில்),உளம் வெருவி – மனத்தில் வெறுப்புக்கொண்டு நின்று (பிறகு), முன்
கதித்தவாசகங்கொண்டு – மணந்தபோது (நிபந்தனையாகக்) கூறிய வாசகத்தினால்,
உரைஎடுத்திலன் – (அவள் பெற்ற குழந்தையைக் கங்கையாற்றில் எறிந்தது
குறித்து) ஒருபேச்சும் தெரிவியாதவனாய்,- கொண்ட காதலான் – (அந்தக்
கங்கையாளிடத்துப்)பெருங்காதல்கொண்ட சந்தனு,- பண்டையின்- முன்பு
இருந்ததைவிட, எழு மடி பரிவுகூர – ஏழுமடங்கு அன்பு மிக, ஒள் தொடியுடன்-
ஒள்ளிய தொடியென்னும்அணிபூண்டவளான அந்தக் கங்காதேவியுடன், மணந்து-
கூடி, உருகி – மனம்கரைந்து, வைகினன் – தங்கியிருந்தான்; (எ -று.)
கொண்ட காதலான் – கருத்துடையடைகொளியணி. கதித்த என்ற
பெயரெச்சத்தில் ‘கத்’ என்பது – வடமொழியான வினையடி.
பின்னரும் அறுவரை, பெற்ற தாய், மனம்
முன்னரின் மும் மடி முரண்டு மாய்க்கவே,
மன்னவன் அவற்றினும் வாய் திறந்திலன்,
நல் நகர்ச் சனம் எலாம் நடுநடுங்கவே.–பின்னும் ஆறு குழந்தைகளை ஆற்றில் எறிதல்
பின்னர்உம் – பின்னும், அறுவரை – ஆறு மக்களை, பெற்ற –
ஈன்ற,தாய் – (கங்காதேவியாகிய) தாயானவள், முன்னரின்-
முன்பிருந்ததைக்காட்டிலும்,மனம்-, மும்மடி முரண்டு – மூன்று மடங்கு மாறுபட்டு,
மாய்க்க – (குழந்தைகளைப்பெற்றபோதே கங்கை நீரிலெறிந்து) உயிர்போக்கவும்,
(அச்செயலைக்கண்டு), நல் நகர்சனம் எலாம் – சிறந்த நகரத்துச் சனங்களெல்லாம்,
நடுநங்க- நடுங்காநிற்கவும்,மன்னவன் – சந்தனுராசன், அவற்றின்உம் –
அவ்வக்காலங்களிலெல்லாம், வாய்திறந்திலன் – (அந்தக் கங்கையாளிடத்து
அவள் செய்யுங் கடுஞ்செயலைக் குறித்து)வாய் திறந்து பேசினானில்லை; (எ-று.)
முன்னரின் – ஐந்தாம் வேற்றுமைப்பொருள் தந்ததோரிடைச்சொல்:
இவ்வாறுவருவதனை வடநூலார் விபக்திப்ரதிரூபகம் அவ்யயம் என்பர்
வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர்
எழுவரை முருக்கினள், ஈன்ற தாய்!’ என,
பழுது அறு மகப் பல பயந்த மங்கையர்
அழுதனர், கண் புனல் ஆறு பாயவே.-கங்கையின் செயல் குறித்து மங்கையர் அழுதல்
‘வழு அறு – குற்றமற்ற, குருகுலம் மன்னன் – குருகுலத்தில்
தோன்றிய அரசனான சந்தனுவின், மைந்தர் ஓர் எழுவரை ஏழுமைந்தரை, ஈன்ற
தாய்- பெற்ற தாய், முருக்கினள்- (ஆற்றுவெள்ளத்தில் வீசியெறிந்து) கொன்றாள்,’
என – என்று சொல்லி,- பழுது அறு -குற்றமற்ற, பல மக – பல பிள்ளைகளை,
பயந்த – பெற்ற, மங்கையர் – கண் -(தம்முடைய) கண்களிலிருந்து, புனல் –
சோகக்கண்ணீர், ஆறு பாய – நதிவெள்ளம்போற் பெருக, அழுதனர் –
புலம்பினார்கள்; ( எ -று.)
‘வழுவறு’ என்று குருகுலமன்னவனுக்கு அடைமொழி கொடுத்ததனால்,
‘பெற்றபிள்ளையைக் கொல்லும் பெரும்பாதகியை மனைவியாகக்கொண்டிருக்கின்றா
னென்ற பெரும்பழி இவனுக்கு நேருமே!’ என்று அன்னார் இரக்கங்கொண்டு
கருதலாயின ரென்பது, தோன்றும். வழுவறுஎன்பதை மைந்தர் என்பதனோடு
இயைத்து – உறுப்புக்குறைமுதலிய குற்றமில்லாத [பேரழகையுடைய] மைந்தரென்று
உரைப்பினுமாம்: “நிறை மகவுடையவர் நெறிசெலைம்பொறிக், குறைமகக்குறையினும்
கொடுப்பராமுயிர்” என்றவாறு பலபுதல்வரை யுடையோரும் தமது மகவுள்
பொறிக்குறையையுடைய ஒருமகவு உயிர்நீங்கினும் தம்முயிரை மாய்ப்பது
இயல்பாயிருக்க, பெற்ற தாயான இவள் தான்பெற்ற புதல்வர் குற்றமற்ற
பேரழகரெனக்கண்டும் ஒருவரிருவரல்ல எழுவரைச் சிறிதும் அருளின்றி
வதைத்தனளே! என்று புலம்பினரென்பார், ‘வழுவறு மைந்தர் ஓரெழுவரை
முருக்கினளீன்றதாயென ‘மங்கையர் அழுதனர்’ என்றார்.
கங்கை என்று உலகு எலாம் கைதொழத் தகும்
மங்கை, அங்கு அனந்தரம், வயிறு வாய்த்துழி,
வெங் கய கட கரி வேந்தன் மா மனப்
பங்கயம் துறந்தது, பழைய இன்பமே.–கங்கை எட்டாம் முறை கருக்கொள்ளல்
கங்கை என்று – கங்கைகங்கைஎன்று சொல்லிக் கொண்டு,
உலகுஎலாம் – உலகத்தவரெல்லாராலும், கைதொழதகும் – கைகூப்பித்
தொழுதற்குத்தக்க, மங்கை – (கங்கைநதியின் தெய்வமான) பெண்,- அனந்தரம்-
பிறகு, வயிறுவாய்த்த உழி-கருக்கொண்டபோது, வெம் கய கடகரி –
உக்கிரத்தைக்கொண்டு பெருமைபெற்ற மதயானையைக்கொண்ட, வேந்தன் –
சந்தனுமன்னவனுடைய, மாமனம் பங்கயம் – பெருமைபெற்ற மனத்தாமரை,
பழைய இன்பம் துறந்தது -முன்னையனுபவித்துவந்த இன்பத்தை வெறுத்திட்டது;
(எ -று.) – அங்கு – அசை.
மன்னவன்மனம், முன்போலச் சிற்றின்பத்திற் பெருவிருப்புக் கொள்ளாது
சிறிதுவெறுப்புக் கொண்ட தென்க. பங்கயம்= பங்கஜம்: சேற்றில் முளைப்பது எனப்
பொருள்படும் வடசொல்திரிபு. கய – பெருமை: உரிச்சொல். கடம் –
யானையின்கன்னம்: அங்கு நின்றுபெருகும் மதநீருக்கு ஆகுபெயர். கரி = கரீ:
கையையுடைய விலங்கு என யானைக்குக் காரணக்குறி
மதலையைப் பயந்தனள், மடந்தை’ என்றலும்,
கதுமெனச் சென்று, தாய் கைப்படாவகை
இதம் உறப் பரிவுடன் எடுத்து, மற்று அவள்
பதயுகத் தாமரை பணிந்து, பேசுவான்:-சந்தனு மைந்தனை எடுத்துக்கொண்டு கங்கையை வேண்டல்
மடந்தை – கங்காதேவியென்னும்பெண், மதலையை பயந்தனன் –
ஓராண்மகவை யீன்றாள்,’ என்றலும் – என்று (பணியாளர் தன்னிடம்வந்து)
கூறியவுடனே, (சந்தனுமன்னவன்),- கதுமென சென்று- விரைந்துபோய் (பிறந்த
அக்குழந்தை), தாய் கை படாவகை-(பெற்ற) தாயின் கையில் அகப்படாதபடி,
இதம் உற- (அந்தக்குழந்தைக்கு) நன்மையுண்டாகுமாறு, பரிவுடன் – அன்போடு,
எடுத்து-, மற்றுஅவள் – மாறுபட்ட [பெற்ற குழந்தையைக் கங்கையில்
வீசிமாய்க்குங் குணமுடைய]அந்தத்தேவியின், பத யுகம் தாமரை – தாமரை
மலர்போன்ற உபயபாதங்களில்,பணிந்து – வணங்கி, பேசுவான் –
சொல்வானானான்; (எ – று.) – பேசுவதை மேலேகாண்க.
தன்தேவியைத் தன்கருத்துக்கு இசைவிக்கவேணுமென்று எண்ணிப்
பேசுவதனால், மன்னவன் பேசும்போது, தன்தேவியின் பதயுகத்தாமரையிற்
பணிவானாயினான். குழந்தையைப் பெற்றவுடன் விரைவுடன்சென்று எடுத்தது,
முன்னைய குழந்தைகளைப் போலவே இந்தக் குழந்தையையும் கங்கையில்
எறியாமலிருக்கும் பொருட்டு.
நிறுத்துக, மரபினை நிலைபெறும்படி!
வெறுத்து எனை முனியினும், வேண்டுமால் இது;
‘மறுத்தனன் யான்’ என மனம் செயாது, இனிப்
பொறுத்து அருள்புரிக, இப் புதல்வன்தன்னையே!‘-அந்தப்புதல்வனைக் கொன்றிடாதிருக்குமாறு
மன்னவன் தேவியை வேண்டுதல்.-மூன்று கவிகள்- ஒருதொடர்
மரபினை – வமிசத்தை, நிலைபெறும்படி – (அழியாது)
நிலைபெற்றிருக்கும்படி, நிறுத்துக – நிற்கச்செய்வாய்: வெறுத்து எனை
முனியின்உம் -வெறுப்புக்கொண்டு என்மீதுகோபித்தாலும், இது வேண்டும் –
இச்செய்கை செய்தேதீரவேண்டும்: யான் மறுத்தனன் என –
(உன்மனப்போக்கின்படி செய்யமுடியாதவாறு)நான் தடுத்தேனென்று, மனம்
செயாது – மனத்திற் (கொடுமை) கொள்ளாது, இனி -இப்போது, பொறுத்து –
பொறுமைகொண்டு, இ புதல்வன்தன்னை – இந்தஆண்மகவை, அருள்புரிக –
கருணைசெய்க;
கருணைபுரிகஎன்றது – ஆற்றுவெள்ளத்தில் வீசியெறிந்து மரித்திடச்
செய்யாமல்புதல்வனுக்கு உயிர்ப்பிச்சை தரவேணுமென்றுவேண்டியபடி.
இப்புதல்வனை அருள்புரிகஎன்று மன்னவன் வேண்டினானாயினும், நீ
உடன்படாவிடினும் நான் இம்முறைநதிப்புனலிலே ஈன்ற மகவை யெறிதற்கு
ஒருப்படேனென்ற தன் மனவுறுதியைத் தெரியப்படுத்த, ‘வெறுத்தெனை முனியினும்
இதுவேண்டும்’ என்கின்றானென்க. ஆல் – அசை.
என்று பற்பல மொழி இவன் இயம்பவே,
‘நன்று நன்று, அவனிப! நவின்ற வாசகம்!
இன்று நின்று இரங்கினை; எழுவர் மைந்தரைக்
கொன்ற அன்று என் செய்தாய்? கொடியை!’ என்னவே,-கங்கை சந்தனுவைக் கண்டித்தல்
என்று-, பல் பல மொழி – பலபடியான வார்த்தைகளை, இவன் –
இந்தச்சந்தனுராசன், இயம்ப – சொல்ல,- (அது கேட்ட கங்காதேவி மன்னவனை
நோக்கி),-‘அவனிப – மன்னவனே! நவின்ற – (நீ) கூறிய, வாசகம் – சொல், நன்று
நன்று – மிகநன்றாயிருந்தது: இன்று-, நின்று – மனத்திலுறுதிகொண்டிருந்து,
இரங்கினை- (பிள்ளை யிறப்பதற்கு) இரக்கமுற்றாய்: எழுவர் மைந்தரை கொன்ற
அன்று-ஏழுபுத்திரர்களை (நதிப்புனலிலே வீசியெறிந்து) கொன்ற அவ்வப்போது,
என் செய்தாய்- என்னசெய்தாய்? கொடியை – கொடுமையையுடையாய்,’ என்ன –
என்றுபழித்துக்கூற,- (எ-று.) “அரசனுமுணர்ந்து” என மேற்கவியோடு குளகமாகத்
தொடரும்.
எழுவர்மைந்தரைக் கொன்றஅன்று என்செய்தாய் என்றது – இப்போது
எட்டாவது குழந்தைக்காகக்கொண்ட இரக்கம் அப்போது எல்லாம்
எங்கே போய்விட்டது? என்றவாறு. அரசன் கங்கையைப் பழித்தாற்போலக்
கூற,அன்னாள் மறித்துப்பழித்தாளென்க. நன்று நன்று – இகழ்ச்சிக்குறிப்பு: அடுக்கு,
வெகுளிபற்றியது.
அரசனும் உணர்ந்து, ‘நீ யார்கொல்? பாலரைத்
திரை செறி புனலிடைச் செற்றது என்கொலாம்?
உரைசெயவேண்டும்’ என்று உரைப்ப, வஞ்சியும்
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள்:-சந்தனு கங்கையின் வரலாறு வினாதல்
அரசன்உம் – சந்தனுவும், உணர்ந்து -உணர்ச்சியடைந்து
[மனத்திடையாராய்ச்சி தோன்றப்பெற்று என்றபடி], ‘நீ யார் கொல்-?
பாலரை – (பெற்ற) புதல்வரை, திரை செறி புனலிடை – அலைநெருங்கிய
வெள்ளநீரிலே, செற்றது – உயிர்நீங்குமாறு எறிந்தது, என் கொல் ஆம் –
என்னகாரணம்பற்றியாகும்? உரை செய வேண்டும் – (இவ்விஷயங்களைக்)
கூறவேண்டும்’ என்று உரைப்ப – என்று கூற, வஞ்சிஉம்- வஞ்சிக்கொடிபோன்ற
கங்காதேவியும், வரிசையின் உயர்ந்த – பெருமையினால் மேம்பட்ட, தன் –
தன்னுடைய, வரவு – (இவ்வுலகத்து) வந்துபிறந்த சரிதையை, கூறுவாள் –
சொல்பவளானாள்; (எ -று.)
வரவு – தொழிலாகுபெயரால், வருதலைக்கொண்ட சரிதையையுணர்த்தும்
வால் முக மதியமும், புதிய மாலிகைக்
கான் முக இதழியும், கமழும் கங்கையாள்
தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை
நான்முகன் பேர் அவை நண்ணினாள்அரோ.-இதுமுதற் பதினெட்டுக்கவிகள் – ஒருதொடர்: கங்காதேவி
தன்சாபவரலாறு முதலியவற்றைச் சந்தனுவிடம் கூறுதலைத்தெரிவிக்கும்.
வால் – வெள்ளிய, முகம் மதியம்உம் – ஆரம்பமான
(ஒற்றைக்கலைப்பிறையான) சந்திரனும், புதிய மாலிகை கான் முகம் இதழிஉம் –
புதிய மாலையாகக்கட்டப்படுகின்ற நறுமணத்தைத் தன்னிடத்தேயுடைய
கொன்றையும், கமழும் -நறுமணம்வீசுகின்ற, கங்கையாள் – கங்காதேவி,-
தேன்முகம் பொழிதரு – தேனை (த்தன்) வாயினின்று பெருக்குகின்ற, செய்ய
தாமரை – செந்தாமரை மலரில்(வீற்றிருப்பவனான), நான்முகன் –
பிரமதேவனுடைய, பேர் அவை – பெருமைபெற்றசபையை, (ஒருகாலத்து),
நண்ணினாள் – கிட்டினாள்;(எ-று.)- இச்செய்யுள் கங்காதேவியின் பெண்தெய்வம்
சத்திய லோகத்திலே பிரமனதுசபையிலே சென்றமை கூறியது.
சிவபெருமானது சடைமுடியில் கங்கை உறைபவளாதலால், அவளிடத்து
மதியமும் இதழியும் கமழுமென்க. கங்கையாள், முன் நிகழ்ந்த சரித்திரம் கூறத்
தன்னைப் படர்க்கையாகவைத்துப் பேசுகின்றாள். இதழிகமழுங்கங்கையாள் என்பது
ஏற்குமாயினும், ‘மதியங் கமழும் கங்கையாள்’ என்றது – உபசாரவழக்காகும். முக
மதியம் – முகத்துக்கு உவமையாகுஞ் சந்திரனென்றும், வான் – வானத்திலுள்ள
என்றும் உரைப்பாருமுளர். அரோ – ஈற்றசை.
இருங் கலை இமையவர், எதிர் இறைஞ்சுவாள்
மருங்கு, அலை மதியினை மதிக்குமாறுபோல்,
அருங் கலை அயல் உற அதிர்ந்து வீசினான்,
பொருங் கலை எனும் இகல் புரவி வீரனே.
பொரும் – போர்செய்யவல்ல, கலை எனும் – கலைமானென்கிற,
இகல்புரவி – வலிமையுள்ள வாகனத்தைக் கொண்ட, வீரன் – வீரனாகிய
வாயுதேவன், இருகலை இமையவர் – மிக்க கல்வியையுடைய தேவர்களின்,
அலை மதியினை -சஞ்சலமான புத்தியை, மதிக்கும் ஆறுபோல் – அளவிட்டு
அறியுந் தன்மைபோல,-எதிர்- பிரம தேவனெதிரிலே, இறைஞ்சுவாள் –
வணங்குபவளான கங்கையினுடைய,மருங்கு – இடையிலே தரித்துள்ள, அருகலை-
அருமையான ஆடையை, அயல்உற- (உள் அவயவந்தெரியும்படி) அப்பாற்
செல்ல [சிறிதுவிலக] அதிர்ந்து -ஒலிசெய்துகொண்டு, வீசினான்-; (எ -று.)
தேவர்களின் புத்தி எவ்வாறாயுள்ளது என்று மதித்து அறிதற்கு
அந்தக்கங்காதேவியின் உடுத்த ஆடையை வாயுதேவன் விலகச்செய்வது
காரணமாகுமாதலால், இமையவர் மதியினைமதிக்கு மாறுபோலென்று
பயன்தற்குறிப்பேற்றவணியாகக் கூறினார். மூன்றாமடியில், கலை – வஸ்திரம்.
மானத்தைக் காத்து நிற்பதாதலால், ‘அருங்கலை’ எனப்பட்டது. வாயுதேவனுக்குக்
கலைமான் வாகனமாதலால், அவனை ‘கலையெனுமிகற்புரவிவீரன்’ என்றார். குதிரை
யென்ற சிறப்புப்பொருளையுடைய புரவி என்ற சொல் – ஊர்தியென்னும் பொதுப்
பொருளைத்தந்தது. இச்செய்யுளில், முதலெழுத்து வேறுபட்டிருக்க இரண்டு
முதலிய சிலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறுபட்டது திரிபு
என்னுஞ்சொல்லணி. இரண்டாமடியில் மருங்கலை அலையினை மறிக்குமாறுபோல்
என்றும் பாடம்.மாறுபோல் என்று பதம்பிரித்தால், இரண்டாமடி முற்றுமோனையாம்.
மாறுவிதமென்னும் பொருளதாதலை “விளங்கக்கேட்டமாறுகொல்” (புறம் – 50)
என்றவிடத்துங் காண்க.
திருத் தகும் அவயவம் திகழ்ந்து தோன்றவே,
கருத்துடன் அவைக்கணோர் கண் புதைக்கவும்,
மருத்தினை மனனுற மகிழ்ந்து, காதல் கூர்
உருத் தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான்.
திரு தகும் அவயவம் – அழகுவிளங்குகின்ற உள் அவயவம்,
(அப்போது), திகழ்ந்து தோன்ற – விளக்கித் தோன்றியதனால், அவைக்கணோர் –
சபையிலிருந்தவரான தேவர்கள்யாவரும், கருத்துடன் – நல்லெண்ணத்துடன், கண்
புதைக்கஉம் – (தம்) கண்ணைமூடிக்கொள்ளாநிற்கவும்,- மருத்தினை
மனன்உறமகிழ்ந்து- (கங்கையாளின் ஆடையைவிலகுமாறுசெய்த) வாயுதேவனை
மனப்பூர்வமாகக்கொண்டாடி, காதல் கூர்உரு – ஆசைமிகுதற்குக் காரணமான
அந்தஅவயவத்தை, தகும் உரிமையோடு – பார்த்தல் தகுமென்ற உரிமையோடு,
ஒருவன்-,நோக்கினான்-; (எ-று.) நோக்கிய ஒருவன் இன்னா னென்பது அடுத்த
செய்யுளில்விளங்கும்.
நோக்கிய வருணனை, நுவலும் நான்மறை
ஆக்கிய முனி உருத்து அழன்று, ‘பார்மகள்
பாக்கியம் என்ன உற்பவிக்க, நீ!’ என,
தாக்கிய உரும் எனச் சபித்த காலையே,
நோக்கிய – (ஆடைவிலகியதும் கங்காதேவியின் உள்
அவயவத்தைப்)பார்த்த, வருணனை – நீர்க்கடவுளை,- நுவலும் – (மூன்று
வருணத்தவரும்) ஓதுதற்குஉரிய, நால் மறை ஆக்கிய முனி –
நான்குவேதங்களையும் (பரம்பொருளினிடம் கற்று) வெளியாக்கிய முனிவனாகிய
பிரமதேவன், உருத்து அழன்று – மிகக் கோபித்து, ‘நீ-,பார்மகள் பாக்கியம்
என்ன – பூமிதேவிசெய்த நல்வினைப்பயன் என்று (கண்டவர்)கருதுமாறு,
உற்பவிக்க – (பூமியிற் சிறப்புடன்) தோன்றுவாய்,’ என – என்று, – தாக்கியஉரும்
என – (மேல்) மோதிய இடிபோல (பெருவருத்தமுண்டாகும்படி), சபித்த காலை-
சபித்தபோது,-(எ – று.)- “வானிடைநதியையும் தந்தை யேவினான்” என்க.
இட்சுவாகு வமிசத்தவனான மஹாபிஷக் என்ற அரசனே தான் செய்த
தவவேள்விகளால் சத்தியலோகத்தைச் சேர்ந்திருந்தானாக, அவனே கங்கையின்
அவயவத்தைக் கண்டதனாற் சபிக்கப்பட்டா னென்று வியாசபாரதத்து உள்ளது:
பாலபாரதத்திலும் அங்ஙனமேயுள்ளது.
‘கோனிடம் நினைவொடு குறுகி, நீயும், நல்
மானிட மடந்தையாய், மணந்து மீள்க!’ என,
வானிடை நதியையும், வழுவினால், அவள்-
தான் இடர் உறும்வகை, தந்தை ஏவினான்
‘நீஉம்-, கோன் இடம் – அரசனாகப்பிறக்கும் வருணனிடம்,
நினைவொடு – (அன்புகொண்ட) மனத்தொடு, நல் மானிடம் மடந்தை ஆய் –
அழகியமானிடமகளாய். குறுகி- கிட்டி, மணந்து – (அவனைக்) கூடி (ச்சில
காலந்தங்கியிருந்து),மீள்க – மீண்டு (உன்சுய) வடிவத்தையடைவாய், ‘ என –
என்று, வானிடை நதியைஉம்- ஆகாயத்திற் செல்லும் கங்கைநதியின்
பெண்தெய்வத்தையும், வழுவினால் – (அவள்செய்த) தவற்றினால், அவள் இடர்
உறும் வகை – அக்கங்கை மனத்துயரமடையும்படி,தந்தை – படைத்தற் கடவுளான
அந்தப்பிரமன், ஏவினான் – (சாபமிட்டு) அனுப்பினான்;(எ – று.)
வானிடைநதியின் வழு – தன்னைக் காதல்கொண்டுநோக்கின வருணனைப்
பிரமசபையிற் காதலோடு தானும் பார்த்தது. நினைவொடு குறுகி என்பதற்கு –
முற்பிறப்புணர்ச்சியோடு கிட்டி என்று உரைத்தலும் ஏற்கும். தந்தை –
யாவற்றையும்தந்தவன் என்ற காரணத்தினாற் படைத்தற்கடவுளைக் காட்டிற்று.
தான் – அசை,
‘பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு’ என்று, அவள்
ஈரம் உற்று இழிதரும் எல்லை, வானகத்து
ஓர் இடை, உடன்விழும் உற்கைபோல், முக
வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார்.–கங்கை வழியிடை வசுக்களைக் கண்டமை
பாரின் உம் – பூமியிலும், நமக்கு-, ஒரு பதம் – ஒரு ஸ்நாதம்,
உண்டு- இருக்கின்றது,’ என்று-, அவள் – அந்தக்கங்கா தேவி, ஈரம்உற்று –
கசிவுகொண்டு.இழிதரும் -(பூலோகத்தை நோக்கி) இறங்குகின்ற, எல்லை –
போதினில்,- வானகத்து -ஆகாயத்திலே, ஓரிடை – ஓரிடத்திலே, உடன் விழும்
உற்கை போல் -ஒருசேரவிழுகின்ற கொள்ளிக்கட்டைபோல, முகம் வார்ஒளி
மழுங்கினர் -முகத்தினுடைய மிக்கவொளி மழுங்கினராகி, வசுக்கள் –
வசுக்களென்னும்தேவகணங்கள், தோன்றினார் – காணப்பட்டார்;
இது, கங்கை பூமியிலிறங்கும்போது, வானகத்திலே ஓரிடத்திலே வீழும் பல
விண்வீழ்கொள்ளிபோல முகவொளி மழுங்கி வானத்திலிருந்து இறங்கும் வசுக்கள்
அந்தக் கங்காதேவியாற் காணப்பட்டமை கூறுகின்றது.ஆகாசகங்கையா
யிருந்தவளுக்குப் பூமியிலும் பகீரதனாற்கொணரப்பட்டு இருக்குமிடம்
ஏற்பட்டதனால், ‘பாரினும் நமக்கு ஒருபதமுண்டு’ எனக்கருதினாள்;
அங்ஙனங்கருதியதனால் மனத்திற் சிறிது தேறுதலுண்டாயிற் றென்க.
என்னை இங்கு இழிந்த ஆறு, எங்கள் மா நதி
அன்னை?’ என்று, அவள் அடி, அவர் வணங்கலும்,
தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள்.
பின்னை, அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார்:
‘மாநதி – சிறந்தநதியாகிய, எங்கள் – எங்களுடைய, அன்னை –
தாயே!இங்கு – இங்கே, இழிந்த ஆறு – இறங்கிய காரணம், என்னை – யாதோ?’
என்று-,அவள் அடி – அந்தக்கங்காநதியின் பெண்தெய்வத்தின் பாதங்களிலே,
அவர் -அந்தவசுக்கள், வணங்கலும் – தொழுதவளவில்,- (அந்தக் கங்காதேவி),
தன்னை -தனக்கு, அங்கு – பிரமலோகத்தில், அயன் இடு – பிரமதேவனிட்ட,
சாபம் – சாபத்தை,கூறினாள் – சொல்லினாள்: பின்னை – பின்பு, அவர்உம் –
அந்தவசுக்களும், அங்கு -அப்போது, தம்பெற்றி – தம்முடைய நிகழ்ச்சியை,
பேசுவார் – சொல்பவரானார்கள்; (எ- று.)- வசுக்கள் தம் பெற்றி பேசுவதை
மேல் ஆறுகவிகளிற் காண்க.
இது, வசுக்கள் வினவவே, கங்காதேவி தன் சாபத்தைத் தெரிவித்தமை
கூறியது.அன்னை – அண்மைவிளி: இயல்பு. அயன் – அஜன்: ஸ்வயம்பூ
என்றதன்பொருளையுடைய வடசொல்: இனி, அகாரவாச்சியனான
திருமாலினிடத்தினின்றுதோன்றியவனென உரைத்தலு முண்டு.
உற்று உறை எங்களுள் ஒருவன், தன் மனைப்
பொற்றொடிக்கு அழிந்து, அவள் புன்மை வாய்மையால்,
சற்றும் மெய் உணர்வு அறத் தகாது ஒன்று எண்ணினான்;
மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம்.-வசுக்களின் சாப வரலாறு்
உற்று – (வானத்துப்) பொருந்தி, உறை – வசிக்கின்றவரான,
எங்களுள்-,ஒருவன் – ஒருத்தன் [பிரபாசனென்பவன்], தன் மனை –
தன்னுடைய மனைவியாகிய,பொன் தொடிக்கு – பொன்னாலாகிய வளைய
யணிந்தவள்திறத்தில், அழிந்து -(மனவுறுதி) தப்பி, அவள் புன்மை வாய்மையால்
– அவள்கூறிய இழிவை யுடையபேச்சினால், சற்றுஉம் – சிறிதும், மெய்உணர்வுஅற
– மெய்யுணர்வென்பதுஇல்லாதுநீங்க, தகாது ஒன்று – தகாததொருசெயலை,
எண்ணினான் – (செய்யக்)கருதினான்: மற்று எழுவர்உம்- மற்றைஏழுபேரும்,
அவன் வயத்தர் ஆயினேம் -(தகாதஇச்செயலைச் செய்தல் வேண்டாஎன்று
தடுக்காமல்) அந்தப்பிரபாசனுக்குஉடந்தையராக ஆயினோம்; (எ-று.)-
ஆறுகவிகள் – ஒரு தொடர்: வசுக்களின்சாபவரலாறு.
பொற்றொடி -வேற்றுமைத்தொகையன்மொழி. எழுவராவார் – அனலன்
அனிலன் ஆபன் சோமன் தரன் துருவன் ப்ரத்யூஷன் என்பவர்.
தூநகை மொழிப்படி சோரர் ஆகியே,
வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனைத்
தேனுவை, இரவினில் சென்று, கைக்கொளா,
மீன் நெறி கரந்தென, மீள ஏகினோம்.
தூ நகை – வெள்ளியசிரிப்பையுடைய (பிரபாசனென்றவசுவினுடைய)
மனைவியின், மொழிப்படி – பேச்சின்படி, சோரர் ஆகி – திருடராகி, – வானவர்
வணங்கு தாள் வசிட்டன் வாழ் – தேவர்களும் வணங்குகின்ற
பாதங்களையுடையனானவசிஷ்டமுனி வன்வாழ்கின்ற, மனை – மனையிலேயுள்ள,
தேனுவை – பசுவை,இரவினில் சென்று – இராத்திரியிற்போய், கைக்கொளா –
கவர்ந்து கொண்டு, மீன் நெறிகரந்து என – மீன்சென்றவழி ஒளித்ததுபோல (ச்
சென்ற அடிச்சுவடும் தெரியாதபடி), மீள ஏகினோம் – மீண்டு (எம்மிடத்துக்குச்)
சென்றிட்டோம்; (எ -று.)
நீரிற் சஞ்சரிக்கும்போது மீன் சென்று மீண்ட இடம் தெரியாமற்போவதனால்,
அவ்வாறுசென்றுமீண்ட தம்நெறிக்கு மீனின் நெறியை உவமை கூறினார். தூநகை
-பண்புத்தொகையன்மொழி. தேநு – வடசொல். வானவர் – வானத்திலுறைபவர்:
தேவர்.வசிட்டன் – இந்திரியத்தை வென்றவன்: தேஜசுள்ளவனென்றுமாம்.
‘மீனெறிகவர்ந்தென ‘எனவும்பாடம்.
‘பசுக் கவர்ந்தனர்’ என, பயிலும் மா தவ
முசுக் குலம் அனைய மெய்ம் முனிவர் கூறலும்,
‘சிசுக்களின் அறிவு இலாச் சிந்தை செய்தவர்,
வசுக்கள்’ என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான்.
பயிலும் மாதவம் – பழகுகின்ற பெருந்தவத்தையுடையரான, முசு
குலம்அனைய – முசுவென்னும்வானரசாதியை யொத்த மெய் – உடம்பையுடைய,
முனிவர் -முனிவர்கள், ‘பசு கவர்ந்தனர் – பசுவை (யாவரோ) திருடிக்கொண்டு
போய்விட்டார்கள்,’ என – என்று, கூறலும் – சொன்னவளவில்,- அருந்ததி
மகிழ்நன்-அருந்ததிக்குக்கணவனான வசிஷ்டமாமுனிவன், ‘சிசுக்களின் – சிறு
குழந்தைகள்போல, அறிவுஇலா- ஆராய்ச்சியில்லாமல், சிந்தை செய்தவர் –
(திருடுமாறு) எண்ணியவர், வசுக்கள் – வசுக்களாவர்,’ என்று-, எண்ணினான் –
ஞானதிருஷ்டியினாலறிந்தான்;(எ-று.)
மயிர்வளர்ந்திருத்தலும் உடம்பு ஒட்டியிருத்தலும்பற்றியும், குந்தியிருக்கும்
தன்மைபற்றியும், முசுக்குலம், முனிவர்க்கு உவமை. முனிவர்கள்மீதுள்ள
வெகுளியால் ‘முசுக்குலமனைய ‘ என்றனர். முசு – குரங்கன்சாதிபேதம். இலா –
இல்லாமல்: ஈறுகெட்ட எதிர்மறைக் குறிப்புவினையெச்சம்: இது சிந்தைசெய்தவர்
என்ற விடத்திலுள்ளசெய்தவரென்பதில் செய்என்ற வினையுடன் தொடரும்.
அருந்ததி -வசிஷ்டமுனிவரின்மனைவி
உம் பதம் இழந்து, நீர் உததி மண் உளோர்-
தம் பதம் பெறுக!” எனச் சாபம் கூறலும்,
“எம் பதம் பெறுவது என்று, இனி?” எனா, அவன்
செம் பதம் எமது பூஞ் சென்னி ஏந்தினேம்.
தனது ஞானதிருஷ்டியினால் வசுக்கள் தேனுவைக் களவாடியதை
யறிந்த வசிட்டமுனிவன்),- ‘நீர்-, உம்பதம் – உமது பதவியை
[வசுக்களாயிருப்பதை], இழந்து-, உததி மண் உளோர் தம் – சமுத்திரத்தினாற்
சூழப்பட்ட பூமியிலேயிருப்பவருடைய, பதம் – நிலையை, பெறுக – அடைவீராக,’
என-, சாபம் கூறலும்-,- ‘எம்பதம் – எமக்குஉரிய பதவியை
[வசுக்களாயிருப்பதை], பெறுவது – (நாங்கள்)மீண்டும் அடைவது, இனி – இனி
மேல், என்று – எப்போது? ‘ எனா – என்றுவினவி,அவன் செம் பதம் –
அந்தவசிஷ்ட முனிவனின் அழகிய திருவடிகளை, எமது பூ சென்னி ஏந்தினோம் –
எமது மலரை முடித்தற்குஉரிய சென்னியில் தாங்கினேம்; (எ – று.)
எமதுசாபத்திற்கு ஒருவிமோசனம் ஏற்படுமாறு திருவருள் புரியவேணுமென்று
வசிஷ்டமுனிவன் பாதங்களில் வணங்கினோ மென்றவாறு. உததி – நீரையுடையது:
கடல்: வடசொல்.
அன்புடை முனி முனிவு ஆறி, ‘மானுடப்
புன் பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர்;
மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ, அவண்
இன்பம் அற்று, அநேக நாள் இருத்தி’ என்னவே,
அன்புஉடை – கருணையையுடைய, முனி – அவ்வசிட்ட
முனிவன்,முனிவு ஆறி – கோபந்தணிந்து, “எழுவர்உம் – (தேனுவைக் கவர்தற்கு
உடந்தையாயிருந்த) ஏழுபேரும், புல் மானுடம் பிறப்பு புரிந்து மீளுதிர் –
புல்லியமானிடப்பிறவியையெடுத்து (உடனே உமது பதவிக்கு) வந்துவிடுங்கள்: மின்
புரை தெரிவை சொல் விழைந்த – மின்னலைப் போன்ற [பேரொளிபடைத்த]
மனைவியின் சொல்லை விரும்பிக் கேட்டுக் களவைப் பிரதானனாகஇருந்து
செய்த, ‘நீ-, அவண் – அந்தப்பூமியில், இன்பம் அற்று – பெண்ணின்பத்தை நீங்கி,
அநேகம்நாள் இருத்தி – வெகுகாலம் இருப்பாயாக”, என்ன – என்றுகூற,
-(எ-று.) – “செல்வமும்…எண்மருமிழந்தனம்…என” என்று அடுத்த கவியோடு
தொடரும்.
தெரிவையின்சொல்லை விழைந்து களவாடிய பிரபாசனுக்கு மானுடனாகித்
தெரிவையின்பம்நீங்கி மண்ணுலகிற் பலநாளிருந்து பிறகு தன்
பதவியையடையுமாறும், அவனுக்கு உடந்தையாயிருந்த மற்றையெழுவர்க்கும்
பூமியில் மானுடப்பிறவி யெடுத்துஉடனே மீளுமாறும் சாபவிடை தந்தனன்
வசிட்ட முனிவனென்க.
விண் வரு செல்வமும், விழைவும், மேன்மையும்,
எண்மரும் இழந்தனம்; என்செய்வேம்!” என,
மண் வரு தையலை வணங்க, தையலும்,
பண் வரு மொழி சில பகர்ந்து, தேற்றினாள்:
இங்ஙனம் வசிட்டமுனிவன் சபித்ததனால்), எண்மர் உம் –
(வசுக்களாகிய நாங்கள்) எட்டுப்பேரும்,- விண் வரு செல்வம்உம் –
சுவர்க்கலோகத்துப்பெறுமாறுவருகின்ற ஐசுவரியத்தையும், விழைவு உம்-
போகத்தையும், மேன்மைஉம் -சிறப்பையும், இழந்தனம்- இழந்திட்டேம்:
என்செய்வேம்- (இனி) என்செய்யமாட்டுவேம்? என – என்று, மண் வரு
தையலை வணங்க – பூமியிலிழிகின்றகங்காதேவியை வணங்க, தையல்உம் –
அந்தத் தேவியும், பண் வருமொழிசில -இராகத்தையொத்த சிலசொற்களை,
பகர்ந்து – சொல்லி, தேற்றினாள்- (அவர்களுடையமனவருத்தத்தைச் சிறிது)
ஆறச் செய்தாள்; (எ -று.) – கங்கையாள் தேற்றுவதைமேலிரண்டு செய்யுள்களிற்
காண்க.
வலத்து உயர் தடம் புய வருணனும் குரு-
குலத்தினில் அயன் வரம்கொண்டு தோன்றுமால்;
நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில்,
நிலத்திடை என்வயின் நீரும் தோன்றுவீர்.-கங்கை வசுக்களைத் தேற்றினமை
வலத்து – வலிமையினால், உயர் – மிக்க, தட புயம் – பெருமை
பெற்ற தோளையுடைய, வருணன்உம்-, குருகுலத்தினில் – குருகுலத்திலே, அயன்
வரங்கொண்டு – அயனுடைய விருப்பத்தினால் [பிரமசாபத்தினால்], தோன்றும் –
உதிப்பான்: (யான்), நலத்துடன் – சிறப்புடனே, அவன் மனை – அவனுடைய
மனைவியாக, நண்ணும் எல்லையில் – (அவனைச்) சேரும்போது, நீரும்-, நிலத்திடை-நிலவுலகத்திலே, என்வயின் – என்னிடத்து, தோன்றுவீர் –
புத்திரராகப் பிறப்பீராக; (எ-று.)- இதுவும், அடுத்தகவியும் – கங்கையாள்
வசுக்களைத் தேற்றியதைத்தெரிவிக்கும். வரம் – விருப்பம். அயன் வரம் –
பிறமனிட்டசாப மென்க.
‘அஞ்சன்மின்; உம்மை நான் அவனி தோயும் முன்
எஞ்ச வீட்டிடுவன்; இவ் இறைவன்தன்னையும்
நெஞ்சு உறத் தந்தைபால் நிறுத்தி, நானும் அவ்
வஞ்சகப் பிறப்பினை மாற்றுவேன்’ என்றாள்.
அஞ்சன்மின் – (பூமியில் எவ்வாறு வசிப்பதென்று)
அஞ்சவேண்டா:நான்-, உம்மை-, அவனி தோயும் முன் – பூமியில் படுவதற்கு
முன்னமே [பூமியில் நீர்பிறந்தவுடனே], எஞ்ச – உயிரொடுங்கும்படி, வீட்டிடுவன்
– இறக்கச்செய்வேன்: இஇறைவன் தன்னைஉம் – பிரபாசனென்கிற தலைமைபெற்ற
இவனையும், நெஞ்சு உற -(பிதாவின்) மனத்திற்குப் பொருந்துமாறிருக்க,
தந்தைபால் – தந்தையினிடத்தில், நிறுத்தி- நிற்கச்செய்து,- நான்உம்-, அ
வஞ்சகம் பிறப்பினை – தீமையால்விளைந்த அந்த(என்னுடைய)
மானுடப்பிறவியை, மாற்றுவேன் – போக்கிடுவேன், என்றாள் – என்று
கூறினாள்; (எ – று.)
எஞ்ச – சாபங் கழியும்படி யெனினுமாம். அஞ்சன்மின் – ஏவற் பன்மை
வினைமுற்று. அவனி = அவநீ: காத்தற்கு உரியது: பூமி.
நால்-இரு வசுக்களும் நதிமடந்தை சொல்-
பால் இரு செவிப்பட, படாத நல் தவம்
சால் இரு நிலத்து இழி தாயை, அன்புடன்,
கால் இரு கரத்தினால் கசிந்து, போற்றினார்.-வசுக்கள் கங்கையை வணங்கினமை
நால் இரு வசுக்கள்உம் – வசுக்கள் எண்மரும், நதி மடந்தை –
கங்காதேவியின், சொல் பால் – சொல்லமுதம், இரு செவி பட – (தமது)
இரண்டுகாதிலே விழ, படாத நல்தவம் சால் – அழியாத சிறந்த தவப்பயன்
பொருந்திய,இருநிலத்து இழி – பெரிய பூமியிலே யிழிகின்ற, தாயை –
கங்கையாளை, கசிந்து -மனமுருகி, அன்புடன் – அன்போடு, கால் –
பாதங்களிலே, இரு கரத்தினால் – (தமது)இரண்டு கைகளினாலும், போற்றினார் –
வணங்கினார்கள்;(எ-று.)
எப்படிப்பட்டவரும் தவப்பயனைப் பெறுதற்குரிய புண்ணிய பூமி
பூதலமே யாதலால், ‘படாத நற்றவஞ்சா லிருநிலம்’ என்றது. ‘படர்ந்தநல்லறம்’
என்றும்பாடம். போற்றுதல் – வணங்குதல்: “வந்தித்தல்போற்றல்வணங்கலாகும்”
என்றது, பிங்கலந்தை.
சதைய மீன் கடவுளும், சசிகுலத்து நல்
விதை என மேதினிமீது தோன்றினான்;
துதை அளி செறி குழல் தோகை ஆயினாள்,
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே.-வருணனும் கங்கையும் மண்ணில் தோன்றினமை
சதையம் மீன் கடவுள்உம் – சதயமென்ற நட்சத்திரத்துக்கு உரிய
கடவுளான வருணதேவனும், சசிகுலத்து – சந்திரகுலத்திலே, நல்விதை என –
சிறந்தவித்துப்போல, மேதினிமீது – பூமியின்மேல், தோன்றினான் – பிறந்தான்;
இதையம்உற்று – நன்மனம் பொருந்தி, உயர் – மேன்மைபெற்ற, நதி என்னும் –
நதியென்கிற,மின் உம் – மின்னல்போன்ற பெண்ணும், துதை – நெருங்கிய,
அளி – வண்டுகள்,செறி – நெருங்கிய, குழல் – கூந்தலையுடைய, தோகை
ஆயினாள் -மானுடப்பெண்ணானாள்; (எ – று.)
இது, வருணன் பூமியில் குருகுலத்திற் பிறக்க, கங்கையாளும்
மானுடமகளாதலைக் கூறும். பிரதீபமன்னனுக்குப் பிறந்தகுமாரருள் சந்தனு,
இரண்டாமவனாயிருந்தும் முதல்வனான தேவாபிபோல இளமையிலேயே
கானகஞ்செல்லாது இல்லறத்தைப் பூண்டு ஒழுகியதனால் வீடுமன் முதலியோர்
தோன்றிக் குருகுலம் பெருக்கியமையின், ‘சசிகுலத்து நல்விதை யென’ என்று
கூறியதென்பர். சசி = சசீ: முயலை (முயல்போன்றகறையை) யுடையது:
காரணப்பெயர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையுண்டு : சதய
நட்சத்திரத்திற்கு வருணன் தேவதை : ஆதலால், வருணனை ‘சதையமீன்கடவுள்’
என்றார். மேதினி = மேதிநீ: மதுகைடபர்களின் மேதசினால்[உடற்கொழுப்பினால்]
நனையப்பெற்ற தென்று அவயவப்பொருள். வண்டுகள்மொய்த்தல் தேவமாதர்க்கன்றி,
மானுடமகளுக்கே யுரியதாதலால், ‘துதையளி செறிகுழல்தோகை’ என்றதனால்
மானிட மகளென்பது பெறப்படும். தோகை, மின் – ஆகுபெயர்கள்
தவம் உறக் குட திசைத் தலைவன் தாரமாம்
அவள் வயிற்று உதித்தனர், அந்த எண்மரும்;
உவகையின், பெரும! நீ உணர்ந்துகொள்க!’ என,
இவள் திருக் கணவனும் இன்ன கூறுவான்:-கங்கையின் வயிற்றில் வசுக்கள் பிறந்தமை
தவம் உற – நல்வினை பொருந்துதலால், குடதிசை தலைவன்
தாரம்ஆம் – மேற்குத்திக்குக்குத் தலைவனான வருணதேவனுக்கு மனைவியான,
அவள்வயிற்று – அந்தக் கங்காதேவியின் வயிற்றிலே, அந்த எண்மர்உம்
உதித்தனர் – அந்தஅஷ்ட வசுக்களும் (முறையே) பிறந்தார்கள்: பெரும-
பெருமையுடையோனை! நீ-,உவகையின் – மகிழ்வோடு, உணர்ந்துகொள்க-
(இச்செய்தியை) அறிந்துகொள்க, என -என்று (கங்கையாள்) கூறி நிற்க,- இவள்
திரு கணவன்உம் – இந்தக் கங்கையாளின்சிறந்த கணவனான சந்தனுவும்,
இன்ன – இவ்வாறான வார்த்தைகளை, கூறுவான் -சொல்பவனானான்; (எ-று.) –
கணவன் கூறுவன மேற் செய்யுளிற் காணப்படும்.
வருணன் மனைவியான கங்கையாளிடத்து வசுக்களெண்மரும்
தோன்றினாரென்று கங்கையாள் தான் கூறிய வரலாற்றினை முடிக்க, பின்பு சந்தனு
கூறத்தொடங்கினா னென்பதைத் தெரிவிப்பது, இது. கங்கையாள்தன் பழஞ் சரித்திரங்
கூறிய முகத்தால், சந்தனுவை இன்னானென்றும், தன்னாற்கொல்லப்பட்ட குழந்தைகள்
எழுவரும் வசுக்களென்றும், ஈற்று மகவு பிரபாசனென்றவசு என்றும், மன்னவன்
இத்துணைநாள்பெற்ற குழந்தைகளைக் கொன்றதற்குஇரங்காது இப்போது
இரங்கித்தடுத்ததற்குக் காரணமும் கூறியவாறு காண்க.
அறப் பயன் என்னுமாறு, அறிவு இலா எமைப்
பிறப்பு உணர்த்தினை, மகப்பேறு செய்து நீ;
இறப்பவர் எழுவரோடு ஏகலா உயர்
சிறப்புடை இனையவன் செய்வது என்?’ என்றான்.-எட்டாம் மகன் தன்மை-பிறப்பு உணர்த்தியமைக்குக் கொண்டாடி,சந்தனு கங்கையாளை இச்சிறுவன்செய்வதென்னென்று வினாவுதல்.
அறம்பயன் என்னும் ஆறு – தருமத்தின் பயனென்று கருதுமாறு
(வந்து), நீ-, மகப்பேறு செய்து – புத்திரப்பேற்றை (எனக்கு) உண்டாக்கி, அறிவு
இலாஎமை – பிறப்புணர்ச்சியற்றிருந்த எங்களை, பிறப்பு உணர்த்தினை –
(எங்கள்)பிறப்பையும் அறிவித்தாய்: இறப்பவர் எழுவரோடு –
இறந்துபடுதலையுடையரான ஏழுவசுக்களுடனே, ஏகலா – (தன்பதவிக்குச்)
செல்லுதற்கு உரியவனல்லாத, உயர் சிறப்புஉடை – மிக்க சிறப்பினையுடைய,
இனையவன் – இந்தக் குமாரன், செய்வது -செய்யவேண்டுவது, என் – யாது?’
என்றான் – என்று வினாவினான்; (எ-று.) -புதல்வனையும் உளப்படுத்தி ‘எமை’
என்றது.
முக் குலத்து அரசினும் முதன்மையால் உயர்
இக் குலத்து, இவன் அலாது இல்லை மா மகார்;
அக் குலத் தவ முனி அருளினால், இவன்
மெய்க் குலத் தந்தையாம் விழைவும் இல்’ என்றாள்.–கங்கையாள் எட்டாங்குழந்தையின் தன்மையைப்பற்றி மன்னவனிடங்கூறுதல்.
முக்குலத்து அரசின்உம் – (சூரியன் சந்திரன் அக்கினி என்ற)
மூன்றுக்ஷத்திரியகுலங்களி னரசருள்ளும், முதன்மையால் உயர் – முதல் தரமான
தன்மையைக்கொண்டு மேம்பாடுபெற்ற, இ குலத்து – இந்தக் குலத்திலேபிறந்த,
இவன்அலாது – இவனையல்லாமல், மா மகார் – பெருமைபெற்ற புதல்வர்,
இல்லைவேறொருவரும் இல்லை: அ – அந்த [பிரசித்தமான], குலம் –
சிறப்புள்ள, தவம் முனிஅருளினால் – தவத்தைக்கொண்ட வசிட்ட முனிவனது
கருணையினால், இவன் -இந்தக் குமாரன், மெய் குலம் தந்தை ஆம் விழைவுஉம்
– உண்மையையுடையகுலத்திலே தந்தையாதற்கு ஏற்ற விருப்பமும், இல் –
உடையவனாகான், ‘என்றாள் -என்று (அந்தக் குமாரன் செய்தியைக் கங்கையாள்)
தெரிவித்தாள்; (எ -று.)
தேனுவைக்கவர்ந்த பிரபாசனென்ற வசுவைப் பெண்ணின்ப மற்றிருக்கும்படி
வசிட்டமுனிவன் சபித்தா னாதலால், ‘தந்தை யாம் விழைவும்
குலத்தவமுனியருளினால்இவனுக்கு இல்’ என்றாள். சாபத்தை ‘அருள்’ என்றது-
இங்ஙன்சாபம் தராவிடில்அந்தத் தீவினைப்பயனை வேறு வகையாக நுகரவேண்டி
வருமாதலாலும், அங்ஙன்இல்லாதபடி செய்ததனாலுமாம்.
‘அக்குலத்தவமுனியருளினால்’ என்றது – முன்னும்பின்னும் இயைதலால்,
மத்திமதீபம். ‘தந்தையால்’ எனவும்பாடம்
மன்னவர் தொழு கழல் மன்னன், ‘மைந்தனோடு
இன்னமும் ஒருவனை இனிது அளித்து, நாம்
பன்னக நெடு முடிப் பார் களிக்கவே,
பொன்னகர் இருவரும் போதும்’ என்னவே,–மன்னவன் விருப்பம்–இன்னமொரு புதல்வனைப்பெற்றபின் விண்ணுலகு சேரலாம்’ என்று
மன்னவன் கங்கையாளிடம் கூறுதல்.-மூன்று கவிகள் – ஒருதொடர்.
மன்னவர் தொழு கழல் மன்னன் – அரசர்கள் வந்து
வணங்குகின்றபாதங்களையுடைய சந்தனுராசன், ‘மைந்தனோடு –
இந்தப்புதல்வனுடனே, பன்னகம்நெடு முடி பார் களிக்க – ஆதி சேஷனுடைய
நெடிய தலைமீதிருக்கும் பூமிகளிக்கும்படி, இன்னமும்-, ஒருவனை –
ஒருபுத்திரனை, இனிது அளித்து – இனிதுதந்து, (பிறகு), நாம்-, இருவரும்-,
பொன் நகர் – தேவலோகத்துக்கு, போதும் -போவோம்,’ என்ன – என்று (தன்
கருத்தைத்) தெரிவிக்க-; (எ -று.) இச்செய்யுளில்,என்ன என்பது மேல் 78 ஆம்
கவியில் வரும் ‘எனா’ என்பதோனோடு இயைய, அது ‘தழீஇ ஏகினாள்’ என்று
தொடர்ந்து முடியும்.
இப்போது பிறந்துள்ளபுதல்வன் பெண்ணின்பமற்று வைராக்கியசாலியாக
இருத்தற்கு உரியவனாதலால், சந்ததி விருத்தி செய்பவனாய்ப் பூமியை யாளுதற்கு
ஏற்றமற்றொருபுதல்வனைப் பெற்றபின் இருவரும் விண்ணுலகஞ் செல்வோமென்று
கங்கையாளிடம் சந்தனு தன் கருத்தினைத் தெரிவித்தானென்க. ‘அளித்தும்’ என்று
எடுப்பின், தன்மைப்பன்மை வினைமுற்றாம். ஆதிசேஷன் உலகின் கீழிலிருந்து
தாங்குகின்றானென்ற ஒருசார் நூற்கொள்கைபற்றி, ‘பன்னகநெடுமுடிப்பார்’ என்றது.
போய் இருந்து என் பயன்? போகம் பல்வகை-
ஆய் இருந்தன எலாம் அருந்தி, இன்னமும்
மா இருந் தரணியில் மன்னு சில் பகல்
நீ இருந்து, அரசியல் நிறுத்தி, மீளுவாய்.-கங்கையின் அறிவுரை
நீ-, போய் – (விரைவிலே விண்ணுலகத்திற்குச்) சென்று, இருந்து –
அங்கேயிருந்து, என் பயன் – யாதுபயன்? [யாதொருபயனுமில்லை]: பல் வகை
ஆய்இருந்தன போகம் எலாம் அருந்தி – பலவகையாயிருந்த
போகங்களையெல்லாம்அனுபவித்து, இன்னமும்-, மா இரு தரணியில் –
மிகப்பெரிய பூமியிலே, மன்னு சில்பகல் இருந்து – பொருந்திய சிலநாள்
தங்கியிருந்து, அரசியல்நிறுத்தி – அரசாட்சியைநிலைநிறுத்தி, மீளுவாய் –
(பின்பு) திரும்பிவருவாய்; (எ -று.)
இந்தச்சந்தனுவுக்கு இப்போதே இவ்வுலகத்தை விட்டிடும்படி மனத்தில்
விழைவுஅறாமையால், ‘போயிருந்தென்பயன்’ என்றாள்: இதனால், தான்
இப்போதேசெல்வதைக் குறிப்பித்தாளாயிற்று. (எ – று.)
இப் புதல்வனும் இனி என்னொடு ஏகியே,
மெய்ப் படு காளையாம் பதத்து, மீள நின்
கைப்படுத்துவல்’ என, கணவனைத் தழீஇ,
அப் பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள்.–பெற்ற மகனோடு கங்கை பிரிந்து செல்லுதல்
இ புதல்வன்உம் – இந்தப்புத்திரனும், இனி என்னோடு ஏகி –
இப்போதுஎன்னுடன் வந்து, மெய்படு காளை ஆம் பதத்து – உடம்பிற்
காணப்படுகின்றகாளைப்பருவத்தில், மீள – (உன்னிடம்) திரும்பி வருமாறு, நின்
கை படுத்துவல் – உன்கையிற் சேரச்செய்வேன், எனா – என்று சொல்லி,-
கணவனை தழீஇ- (தன்)கணவனைத் தழுவிக்கொண்டு, அ பெரு புதல்வனோடு –
பெருமைபெற்றஅந்தப்புத்திரனோடு, அவள்உம் – அந்தக் கங்கையாளும்,
ஏகினாள் – சென்றாள்; (எ- று.)
அன்று தொட்டு இவனும் அகன்ற பூங்கொடியை அழகுற எழுதி
முன் வைத்தும்,
ஒன்றுபட்டு உவமைப் பொருள்களால் கண்டும், உரைத்தவை
எடுத்து எடுத்து உரைத்தும்,
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர்
வதனமும் நோக்கான்,
‘என்று இனிக் கிடைப்பது?’ என்று உளம் வருந்தி, எண்ணும் நாள்
எல்லை ஆண்டு இருந்தான்.காவலன் வருந்தி வைகுதல்
அன்று தொட்டு – அன்று முதல், இவண்உம் – இந்தச்
சந்தனுவும்,அகன்ற – (தான்) பிரிந்த, பூங் கொடியை – பூங்கொடி போன்ற
கங்கையாளை, அழகுஉற எழுதி – அழகுபொருந்த (ப்படத்திலே) எழுதி,
முன்வைத்துஉம் – (தன் ) முன்னேவைத்துக்கொண்டு தரிசித்தும், ஒன்றுபட்டு-
(மனம்) ஒருமித்து, உவமை பொருள்களால்- உபமானமாதற்கு உரிய
பொருள்களாலே, கண்டுஉம் – (அவளை) ஒருவாறுகண்டும்,உரைத்தவை –
(அவள் தன்னுடன்) கூறியபேச்சுக்களை, எடுத்துஎடுத்து உரைத்துஉம் –
பலமுறையெடுத்துச் சொல்லியும், தலைநாள் விழைவொடுஉம் மன்றலில் மணந்த
மடந்தையர்வதனம்உம் நோக்கான் – முற்காலத்திலே விரும்பிக்
கலியாணஞ்செய்துகொண்டுமணந்த பெண்களின் முகத்தையும் கண்ணெடுத்துப்
பாராதவனாய்,- என்று கிடைப்பதுஇனி என்று- ‘(அந்தக்கங்கையாளின் தரிசனம்)
இனிக்கிடைப்பது எப்போதோ?’ என்றுநினைந்து, உளம் வருந்தி – மனம்
வருத்தமடைந்து, எண்ணும்நாள் எல்லை -எண்ணுதற்கு உரிய கால
வெல்லையிலே, ஆண்டு – அரசுபுரிந்து, (தன்நகரில்),இருந்தான்-; (எ -று.)
முன்மணந்த மடந்தையரைக் கண்ணெடுத்துப்பார்த்தலும் செய்யாது,
கங்கையாளின் எண்ணமே மனத்துநிற்கத் தன்நாளை வருத்தத்துடன்
கழித்துவருவானாயினன் சந்தனுவென்க. உவமைப் பொருள்களால் காணுதல் –
மின்னல்மயில் வஞ்சிக்கொடி என்று இன்னோரன்ன பொருளைக் கண்டு
அந்தக்கங்கையாளைக் கண்டாற்போன்று சிறிதுமனந்தேறுதல். கங்கையாள்
‘காளையாம் பதத்து மீள நின் கைப்படுத்துவல்’ என்று கூறிச்
சென்றிட்டாளாதலால்,அதையே மன்னவன் மனத்தில் எண்ணிக்
கொண்டிருத்தலால், அந்தக்காலவெல்லையை ‘எண்ணுநாளெல்லை’ என்றது.
இருபத்தாறியாண்டுகள் சென்றபின், வீடுமனைக் கூடினானென்று பாலபாரதத்திற்
கூறப்பட்டுள்ளது.
இது முதலிருபத்தெட்டுக்கவிகள் – இரண்டு நான்கு ஏழாஞ் சீர்கள்
மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிவந்த எழுசீராசிரியவிருத்தங்கள்.
பின் ஒரு தினத்தில், அமைச்சரும், பிறரும், பெரும் படைத்
தலைவரும், சூழ;
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன்
முயன்று போய், முற்றி;
மின் ஒரு வடிவு கொண்டெனச் சிறந்த மெல்லியல், மீண்டு
உறை மறையும்
தன் ஒரு மதலை, ஆக்கமும் கருதி; சானவித் தடங் கரை
அடைந்தான்.சந்தனு கங்கைக் கரையை அடைதல்
பின்பு ஒரு தினத்தில் – பின்பு ஒரு நாள், அமைச்சர்உம்
பெரும்படைத்தலைவர்உம், பிறர்உம் சூழ – மந்திரிமார்களும் சேனாபதிகளும்
மற்றையோரும் சூழ்ந்துவர, முன் ஒரு தினத்தின் – முன்பு ஒரு தினத்தில்
(வந்ததுபோல), வனத்து – காட்டில், மா வேட்டை – மிருக வேட்டையை,
முன்னினன்- செய்யக் கருதியவனாய், (அதன் பொருட்டு), முயன்று போய்-,
முற்றி- (வேட்டையை)முடித்திட்டு, (பிறகு), மின் ஒரு வடிவுகொண்டு என சிறந்த
மெல்லியல் – மின்னல்ஒருவடிவத்தைக் கொண்டாற்போலச் சிறந்தமடவாளையும்,
மீண்டு -(தன்னிடத்தினின்ற)நீங்கி, உறை மறையும் – நீரினுள்ளே மறைந்து
சென்ற, தன் ஒரு மதலை -தன்னுடைய ஒப்பற்ற புதல்வனுடைய, ஆக்கம்உம் –
வளர்ச்சியையும், கருதி – நினைந்து, சானவி தட கரை – கங்கையின் பெரிய
கரையிலே, அடைந்தான் – போய்ச்சேர்ந்தான்;
முன்பு ஒருமுறை வேட்டையாடச் சென்றதுபோலவே இப்போதும் அமைச்சர்
முதலியோர் சூழ வேட்டையாடி அத்தொழிலை முற்றிய சந்தனு தன்மனைவியையும்,
குமாரன் இப்போது எவ்வாறு வளர்ந்துள்ளான்என்பதையும் காணக்கருதி, மீண்டும்
கங்கைக் கரையை அடைந்தன னென்க. ‘கங்கைக்கரையைச் சேர்ந்தால் ஒருகால்
கங்கையாளையும் வளர்ந்த தன்புதல்வனையும் காண நேருங்கொல்லோ? என்று
அங்கு மன்னவன் சென்றானென்றவாறு. சானவி-ஜாஹ்நவீயென்ற வடசொல்லின்
திரிபு: பகீரதசக்கரவர்த்தியின்பின்னேசென்ற கங்கை வழியிடையே ஜஹ்நுமுனிவரின்
வேள்வியை யழிக்க,அவர்பருகி அந்தப்பகீரதனது வேண்டுகோளினால் தமது
காதியின்வழியாகவிட்டதனால், கங்கைக்குச் சானவியென்று பெயர். அமைச்சர் –
அமாத்யரென்றவடசொல்லின் திரிபென்பர்.
பண்டு, தான் அவளை எதிர்ப்படும் கனகப் பைங் கொடிப் பந்தர் வான் நிழலும்,
வண்டு அறா நறைப் பூஞ்சோலையும், தடமும், மருங்கு அலை மலய மாருதமும்
புண்டரீகமும் செங் காவியும் கமழும் புளினமும், புள் இன மென் துறையும்,
கண்டு, ‘காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ!’ என,மனம் கசிந்தான்.
பண்டு – முன்பு, தான்-, அவளை – அந்தக் கங்கையாளை,
எதிர்ப்படும் – எதிர்ப்பட்ட, கனகம் பைங்கொடி பந்தர் வான் நிழல் உம் –
பொன்போலருமையான பசிய பூங்கொடிப் பந்தரின் சிறந்த நிழலும், வண்டு
அறா நறைபூஞ் சோலைஉம் – வண்டுகள் நீங்காத வாசனையுள்ள
பூஞ்சோலையும், தடம்உம் -கங்கைக்கரையும், மருங்கு அலை மலயமாருதம்உம்
பக்கத்திலே வீசுகின்ற தென்றற்காற்றும், புண்டரீகம்உம் செங் காவிஉம் கமழும்
புளினம்உம் – தாமரையும்செந்நிறக்காவியும் நறுமணம்வீசுகின்ற மணற்குன்றும்,
புள் இனம் மெல் துறைஉம் -பறவைக்கூட்டங்கள் தங்குகின்ற மெல்லிய
நீர்த்துறையும், கண்டு-, காரிகையை -பெண்ணை, இம்மையில் – இப்பிறப்பில்,
இன்னும் காண்கும் ஓ என – இன்னும்காண்போமா! என்று, மனம் கசிந்தான் –
மனமுருகினான்; (எ-று.)
இதனால், மன்னவன் வேறொன்றிலும் மனஞ்செல்லாது
கங்கையாளிடத்துத்தானேமனம்பற்றியிருந்தமை வெளியாம். மலயமாருதம் –
மலய மலையினின்று வீசுங்காற்று:தென்றல். ‘எதிர்ப்படும்’ என்றது –
இயல்பினால்வந்த காலவழுவமைதி. செங்காவி -செங்கழு நீர் மலர்
பிரிந்த நாள் எண்ணி, பகீரதிப் பெருக்கைப் பேதுறும் குறிப்பொடு நோக்கி,
கரிந்த பாதவம்போல் நின்ற அப் பொழுதில், கால் பொரக் குனித்தகார்முகமும்,
தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும், சிலம்பு எனத் திரண்ட தோள் இணையும்,
விரிந்த நூல் மார்பும், ஆகி முன் நடந்தான், விழி களித்திட, ஒரு வீரன்.சந்தனு தேவவிரதனைக் கண்டு வியத்தல்
பிரிந்த நாள் எண்ணி – (கங்கையாளைப்) பிரிந்த நாளைக்
கணக்கிட்டு,- பகீரதி பெருக்கை – கங்கையின் வெள்ளத்தை, பேதுறும் குறிப்பொடு
– கலக்கமுற்ற எண்ணத்தோடு, நோக்கி – பார்த்து, (சந்தனுமன்னவன்), கரிந்த
பாதவம்போல் – தீய்ந்த மரம்போல, நின்ற – வாடிநின்ற, அ பொழுதில்-, -கால்
பொர குனித்த கார் முகம்உம் – (இரண்டு) முனையும் பொருந்த வளைத்தவில்லும்,
தெரிந்து – ஆராய்ந்து எடுத்து, மென்மேலும்-, தொடுத்த – பிரயோகித்த,சாயகம்உம்
– அம்பும், சிலம்பு என திரண்ட தோள் இணைஉம் – மலைபோலத்திரண்டுள்ள
தோள்கள் இரண்டும், விரிந்த – பரந்த, நூல் மார்புஉம் – பூணூலைப்பூண்ட மார்பும்,
ஆகி – உடையவனாகி, விழி களித்திட – (தன்) கண்கள் களிப்ப, ஒருவீரன்-, முன்
நடந்தான் – எதிரே வந்தான்; (எ -று.)
சந்தனு மனக்கலக்கத்தோடு அந்தக்கங்கைப்பெருக்கைப் பார்த்துக் கொண்டு
வாட்டமுற்று நின்ற சமயத்தில், அங்கு ஒரு வீரன் அவ்வரசன் கண்களிக்கும்படி
எதிரேவந்தன னென்க. பகீரதி = பாகீரதி: பகீரதனாற் பூமியிற் கொணரப்பட்டவள்.
கார்முகம் – போர்த் தொழிலிற் சிறப்பது. பகீரதிநோக்கிப் பெருந்தகை
பெருந்திகைப்பெய்தி என்றும் பாடம்.
வியந்திட வரும் அக் குரிசிலை, ‘இவனே விடையவன் குமரன்!’
என்று அயிர்க்கும்;
‘வயந்தனில் உலவும் மதன்கொலோ!’ என்னும்; ‘வாசவன் மதலை!’
என்று எண்ணும்;
‘உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும்
உலகின்மேல்!’ என்னும்;
பயந்த தன் வடிவின் படி எனத் திகழும் பான்மையை நினைந்திலன்,
பயந்தோன்!
பயந்தோன்- (அந்தக் குமாரனைப்) பெற்ற மன்னவன், பயந்த –
பெற்ற, தன் – தன்னுடைய, வடிவின்படி என – வடிவத்தின் மாதிரிவடிவம் என்று,
திகழும் – விளங்குகின்ற, பான்மையை – தன்மையை, நினைந்திலன் –
நினையாதவனாகி, – வியந்திட – கொண்டாடும்படி, வரும் – வருகின்ற, அ
குரிசிலை -அந்த வீரனைப்பற்றி, ‘இவன்-, விடையவன் குமரன் ஏ –
விருஷபத்தைவாகனமாகவுடைய சிவபெருமானுடைய குமரன் தானோ?’ என்று-,
அயிர்க்கும் -சந்தேகிப்பான்: ‘வயந்தனின் – வசந்த காலத்திலே, உலவும் –
சஞ்சரிக்கின்ற, மதன்கொல்ஓ – மன்மதனோ? என்னும் – என்பான்: வாசவன்
மதலை (கொல்) என்றுஎண்ணும் – ‘இந்திரகுமாரன்தானோ?’ என்று எண்ணுவான்:
‘வின்மையின் – வில்தொழிலில், இவனின் உயர்ந்தவர் – இவனைக்காட்டிலும்
மேம்பட்டவர், உலகின்மேல் – இவ்வுலகில், ஒருவரும்-, இல்லை-,’ என்னும் –
என்பான்; (எ – று.)
குமரன் = குமாரன்; மன்மதனையும் குற்சிதனாக [இழிந்தவனாக] (த்
தன்வடிவழகினாற்) செய்பவனென்பது, உறுப்புப்பொருள்: இவ்வடசொல் – முதலில்
முருகக்கடவுளுக்குஆகி, பிறகு அவன் போல் அழகுஆற்றல்களையுடையபுத்
திரனைக்காட்டும். வயந்தன் = வஸந்தன். வயந்தம் – சித்திரை
வைகாசிமாதங்கள். வயந்தனின் உலவுமதன்கொலோஎன்பதற்கு – தென்றலாகிய
தேரிலே யுலாவுகின்ற மன்மதனோ? என்ற பொருள்கொள்ளினுமாம்; இவ்வுரைக்கு,
வயந்தன் – தென்றல். மதன் – மன்மதன்என்பதன் நாமைகதேசம்: இனி,
மதன் – மதத்தை [காமக்களிப்பை] யுண்டாக்குபவனுமாம். வாசவன் –
வசுக்களுக்குத்தலைவன்: இந்திரன்: வசு – ஒருதேவசாதி இவன்
விடையவன்குமரனே என்றுஏகாரத்தைமாற்றி வினாப்பொருளாக உரைக்க
தந்தை என்று இவனை உணர்கிலா மதியால், சராசனம் தழுவுற
வளைத்து,
மைந்தனும், ஒரு போர் மோகனக் கணையால் மறையுடன் மார்பு
உற எழுதி,
இந்திர தனுவோடு இந்திரன் எழிலி- இடை மறைந்தனன் என,
புடையே
சிந்திய திவலைச் சிந்துவின் மறைந்தான்; அரசனும் மகிதலம்
சேர்ந்தான்.-மகன் கணையால் மன்னன் மயங்கி வீழ்தல்
மைந்தன்உம் – அந்தக்குமாரனும்;- இவனை – இந்தச் சந்தனு
மன்னவனை, தந்தைஎன்று – தகப்பனென்று, உணர்கிலா – அறியமாட்டாத,
மதியால் -புத்தியினால் [மன்னவனைத் தன் தந்தையென
அறியமாட்டாமையினால்], சராசனம் -வில்லை, தழுவுற – (இரண்டுமுனையும்)
தழுவுதல்பொருந்த, வளைத்து-, ஒரு -ஒப்பற்ற, போர் – போருக்குஉரிய,
மோகனம்கணையால் – மோகத்தையுண்டாக்கவல்லஅம்பை
[மோகனாஸ்திரத்தினால்], மறையுடன் – (அதற்கு உரிய) மந்திரத்துடனே,
மார்புஉற எழுதி – (அம்மன்னவனுடைய) மார்பிலே அழுந்தித்தைக்குமாறு
தொடுத்து,(பிறகு) இந்திரதனுவோடு இந்திரன்எழிலியிடைமறைந்தனன்என –
இந்திரதனுசுடனேஇந்திரன் மேகத்திலே மறைந்தனன்போலுமென்னும்படி,
புடையே சிந்தியதிவலை -பக்கத்திற்சிந்துகின்ற நீர்த்திவலைகளையுடைய,
சிந்துவின் – கங்காநதியிலே,மறைந்தான்-; அரசன்உம் – (மோகனக்கணையால்
தீண்டப்பட்ட) அரசனும், மகிதலம்சேர்ந்தான் – பூமியிலே சேர்ந்தான்
[மூச்சொடுங்கித் தரையிலே விழுந்திட்டானென்றபடி]; (எ -று.)
மோகனக்கணையை மன்னவனது மார்பிலே யழுந்தித்தைக்க எய்திட்டு,
அக்குமாரன் யாற்றுநீர்ப்பெருக்கிலே மறைந்தானாக. மன்னவன் தன்னிலை தப்பிப்
பூமியில் விழுந்தன னென்க.
காதலன் அயர்வும், திருமகன் புனலில் கரந்ததும், கண்டு,
உளம் உருகி,
மேதகு வடிவு கொண்டு, மற்று அந்த வெஞ் சிலை
விநோதனும் தானும்,
ஓத வெண்திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர்க் கொடி என ஓடி,
தூதுளங்கனிவாய் மலர்ந்து, இனிது அழைத்து, சூடகச் செங் கையால்
எடுத்தாள்.–கங்கை காவலனைத் தெளிவித்தல்
காதலன் அயர்வு உம்-(தனது) அன்பிற்கு உரியனான சந்தனு
மூர்ச்சித்திருத்தலையும், திருமகன் புனலில் கரந்ததுஉம் – சிறந்தபுத்திரன் தன்
வெள்ளநீரிலே மறைந்ததையும், கண்டு -, (கங்கையாளும்), உளம் உருகி –
மனங்கரைந்து, மற்று – பிறகு, மேதகு வடிவுகொண்டு – மேன்மைதக்க
வடிவத்தையெடுத்துக்கொண்டு, அந்த வெம் சிலை வினோதன்உம் – அந்தவெவ்விய
சிலையைக் கொண்டு விளையாடுபவனாகிய புத்திரனும், தான்உம்-,- ஓ தம்
வெள்திரையின் மதியுடன் உதித்தஒள் மலர் கொடி என – பெருக்கைக் கொண்ட
வெண்ணிறமுள்ள அலைகளையுடையபாற்கடலினின்று சந்திரனுடனேயுதித்த அழகிய
மலரைக் கொண்ட கொடிபோன்றஇலக்குமிபோல், ஓடி – விரைந்துவந்து, தூதுளைகனி
வாய் மலர்ந்து -தூதுளங்கனியையொத்த [செந்நிறமான] வாயைத் திறந்து, இனிது
அழைத்து -இனிமையாகக் கூப்பிட்டு, (அந்தச்சந்தனுவை), சூடகம் செம் கையால்
– சூடகமென்றவளையலை யணிந்த (தன்னுடைய) அழகிய கைகளால்,
எடுத்தாள்-; (எ -று.)
ஓதவெண்டிரை – பாற்கடலுக்கு அன்மொழித்தொகைப் பன்மொழித்தொடர்:
ஒண்மலர்க்கொடி யென்பதும்அவ்வாறே. வெண்ணிறமுள்ள கங்கைநீர்
வெள்ளத்தினின்றுகலைகள்நிரம்பிய புத்திரனுடனே கங்கையாள் வந்தது –
பாற்கடலினின்றுபதினாறுகலைகளும் நிரம்பிய சந்திரனுடனே இலக்குமி
வெளிவந்ததுபோலுமென விரித்துப் பொருள் காணலாம். “நிதிநேவலக்ஷ்மீ:” என்று
பாலபாரதத்திலிருப்பதற்குஏற்ப, ‘நிதியுடனுதித்த வொண்மலர்க்கொடி’ எனப்
பாடமிருப்பினுமாம். இனி,சிலைவினோதனும் தானும் எடுத்தாள் – பால் விரவிச்
சிறப்பினால் ஒருமுடிபைப்பெற்றது.
வாடிய தருவில் மழை பொழிவதுபோல் மடவரல் கருணைநீர் பொழிய,
கூடிய உணர்வோடு எழுந்த காவலனைக் கொங்கை மார்புறத்
தழீஇக்கொண்டு,
‘நாடிய கருமம் வாய்த்தது!’ என்று உவகை நலம் பெற, தந்தை
பைங் கழற் கால்
சூடிய மகவைக் கைக் கொடுத்து, இவளும் தோன்றலோடு இவை
இவை சொன்னாள்:–மகனை மன்னனிடம் கொடுத்துக் கங்கை மறைதல்
வாடிய தருவில் – (வெயிலின் வெப்பத்தினால்) வாட்ட
மடைந்தமரத்தினிடத்து, மழைபொழிவதுபோல்-, (மூர்ச்சித்துக் கிடக்கும்
மன்னவன்மீது),மடவரல் – கங்காதேவியாகிய பெண், கருணை நீர் பொழிய –
(தான்)கருணைநீரைச்சொரிய, கூடிய – மீண்டு வந்து சேரப்பெற்ற. உணர்வோடு –
உணர்ச்சியுடனே, எழுந்த-, காவலனை – அந்தச்சந்தனுமன்னவனை, கொங்கை
மார்புறதழீஇக் கொண்டு – ஸ்தநங்களோடுகூடிய மார்பிலே கட்டி யணைத்துக்
கொண்டு, ‘நாடிய கருமம் வாய்த்தது – (நாம்) கருதிய காரியம் சித்தித்தது,’
என்று-, உவகை -மகிழ்ச்சியோடு, நலம்பெற – அழகு பொருந்த, தந்தை பைங்
கழல் கால் சூடிய மகவை- தந்தையின் பசும்பொன்னாலியன்ற
வீரக்கழலையணிந்த பாதங்களைச்சூடியஅந்தவீரனாகிய புத்திரனை, கைக்கொடுத்து
– (தந்தையின்) கையிலே ஒப்பித்துவிட்டு,அவள்உம் – அந்தக் கங்கையாளும்,
தோன்றலோடு – ஆண்களிற்சிறந்தோனாகியசந்தனுமகாராசாவினிடத்தில், இவை
இவை – இவ்விவ்வார்த்தைகளை, சொன்னாள்-:(எ-று.)- இவை யிவைஎன்று
சுட்டியவற்றை, மேலிரண்டுகவிகளிற் காண்க. காவலனைஎன்றவிடத்துக் காதலனை
என்றும் பாடம்.
82-ஆம் பாடலில், ‘கரிந்தபாதவம்போல்’ என்று கூறியதை யொட்டி,
‘வாடிய தருவில் மழைபொழிவதுபோல்’ என்றார்: உவமையணி. புத்திரனைச்
சேர்ப்பிக்கவேண்டுதலாகிய தான் நாடிய கருமம் மன்னவனைத் தேடிக்கொண்டு
போகவேண்டிய பணியில்லாமல் அம்மன்னவனே தன்னருகுவந்ததனால்,
நாடியகருமம்வாய்த்தது என்று உவகையோடு மகவைக் கைக்கொடுத்தனள்
கங்கையாள் என்க.இனி, ‘கங்கையாளை இம்மையிற் காண்குமோ?’ என்று நாடிய
மன்னவனுக்குஅன்னாள் போந்து மகனைக் காட்டித்தந்ததனால், மன்னவன் தான்
நாடியகருமம்வாய்த்ததென்று உவகை கொண்டு நலம்பெற்றிருந்தானென்று
கூறினும் ஆம். தரு -தற்சம வடசொல்.
வேந்த! கேள்: இவன் உன் மதலையே; தேவ விரதன் என்று
இவன் பெயர்; பல்லோர்
ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு, அருந்ததிபதி
திருவருளால்; பூந் துழாய்
மாலைப் போர் மழுப் படையோன் பொன்னடி பொலிவுற வணங்கி,
ஏந்து நீள் சிலையும், பல கணை மறையும், ஏனைய படைகளும்,
பயின்றான்.
வேந்த – அரசனே! கேள் – கேட்பாயாக: இவன்-, உன் மதலை
ஏ -உன்புத்திரனே: தேவவிரதன்என்று – தேவவிரதனென்பது, இவன்பெயர்-:
அருந்ததிபதிதிருஅருளால் – அருந்ததிக்குக் கணவரான வசிஷ்டமுனிவருடைய
திருவருளினால்,பல்லோர் ஆய்ந்த – பல பெரியோர்களும் ஆராய்ந்துள்ள, நூல்
வெள்ளம் -நூல்களாகிய வெள்ளத்தின், கரைகண்டு – அக்கரையைக்கண்டு,
கடந்தனன் -கடந்துள்ளான் [சாஸ்திரங்களை யெல்லாம் முற்றக்
கற்றுள்ளானென்றபடி]: (அன்றியும்), பூந் துழாய் மாலை – பூவையுடைய
திருத்துழாய் மாலையைப் பூண்டவனும், போர்மழு படையோன் – போரில்வல்ல
மழுப்படையைத் தாங்கியவனுமான பரசுராமனுடைய,பொன் அடி – அழகிய
திருவடிகளை, பொலிவு உற – விளக்க முண்டாம்படி, வணங்கி- பணிந்து, ஏந்து
நீள் சிலைஉம் – கையிலேந்திய நீண்டவில்வித்தையையும், பலகணை மறைஉம் –
பலவகைப்பட்ட அஸ்திரங்களின் மந்திரங்களையும், ஏனையபடைகள்உம் –
மற்றுமுள்ள ஆயுதங்களையும், பயின்றான் – கற்றுள்ளான்;
தேவவ்ரதனென்ற பேர் இவனுக்குக் கங்கையாளிட்டது. பரசுராமன்
திருமாலின்ஏழாமவதாரமாதலால், அன்னான் ‘பூந்துழாய் மாலைப்
போர்மழுப்படையோன்’ எனப்பட்டான். பெரு வீரனாகச் சிறப்படையும்
வீடுமன்வீழ்ந்து வணங்குவதால்பரசுராமனுடைய பொன்னடி
பொலிவுறுவதாயிற்று.
மகப் பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும், வாழ்வும்,
மெய் வலியும்,
மிகப் பெறும் தவம் நீ புரிந்தனை; நின்னை வேறு இனி வெல்ல
வல்லவர் ஆர்?
உகப்புற இவனோடு அவனி ஆளுக!’ என்று, ஓர் அடிக்கு ஓர்
அடி புரிந்து,
தகப் பெறு மயிலும், தலைவன்மேல் உள்ளம் தகைவுற, தடம்
புனல் புகுந்தாள்.
மக பெறுமவரில் – பிள்ளையைப் பெற்றாரில், ஒருவர் உம்
பெறாத -எவரும் (இதுவரையிற்) பெற்றிராத, மகிழ்ச்சிஉம் – சந்தோஷமும்,
வாழ்வுஉம் -உயிர்வாழ்ச்சியும், மெய்வலிஉம் – உடல் வலிமையும், மிக பெறும் –
மிகுதியாக அடைகின்ற, தவம் – தவத்தை, நீ புரிந்தனை – நீ செய்துள்ளாய்;
இனி-, நின்னைவெல்ல வல்லவர்-, வேறு ஆர் – வேறுயாவர்? உகப்பு உற –
மனத்தி லுற்சாகம் மிக, இவனோடு – இவனுடனே, அவனி ஆளுக – (நீ) பூமியை
யாட்சிபுரிவாய், என்று – என்று சொல்லி,- தக பெறு மயில்உம் –
நற்குணம்பெறுதலுள்ள மயில்போன்றசாயலுடைய கங்கையாளும், ஓர் அடிக்கு
ஓர் அடி புரிந்து – (பிரிவாற்றாமையால்) ஓரடி மீது ஓரடியை வைத்தல்செய்து
[மெல்ல மெல்ல அடிவைத்து நடந்து], தலைவன்மேல் உள்ளம் தகைவுஉற –
தலைவனான மன்னவன்மீது (தன் மனம்) தடைப்பட்டுநிற்க, தட புனல் புகுந்தாள்-
பெரிய கங்கைநீர் வெள்ளத்திலே புகுந்துமறைந்தாள்; (எ-று.) – மயில் –
உவமையாகுபெயர்.
மனைவியைக் கண்டு மீளவும் பிரிந்த வருத்தம், மெய்த்
திருத்தகு கேள்வித்
தனையனைக் கண்ட மகிழ்ச்சியால், அருக்கன்-தன் எதிர்
இருள் எனத் தணப்ப,
நினைவினில் சிறந்த தேர்மிசை, புதனும் நிறை கலை
மதியுமே நிகர்ப்ப,
புனை மணிக் கழலான் அவனொடும் தனது புரம் எதிர்
கைதொழ, புகுந்தான்.–சந்தனு மைந்தனோடு நகரடைதல்
மனைவியை-, கண்டு-, மீளஉம் – மறுபடியும், பிரிந்த –
பிரிந்ததனால்தோன்றிய, வருத்தம் – துன்பம், மெய் திரு தகு கேள்வி –
உண்மையான சிறப்புக்கொண்டு விளங்குகின்ற நூற் கேள்வியையுடைய,
தனையனை- புத்திரனை,கண்ட – காணப்பெற்றதனாலுண்டான, மகிழ்ச்சியால்-,
அருக்கன் தன் எதிர் இருள்என – சூரியனுக்கு எதிரே இருட்டுப்போல, தணப்ப
– (இருந்த அடையாளமும்தெரியாது) நீங்க, நினைவினில் சிறந்த தேர்மிசை –
மனத்தினைக்காட்டிலுஞ் சிறந்த[மனோவேகத்தினும் விரைவாகச்செல்லவல்ல]
தேரின்மேல், புதன்உம் -புதனென்பவனையும், நிறை கலை மதிஉம் ஏ – நிறைந்த
[பதினாறான] கிரணங்களையுடைய சந்திரனையுமே, நிகர்ப்ப – ஒப்பாகும்படி,
மணி புனை கழலான் -மணிகளழுத்திய வீரக்கழலையணிந்த மன்னவன்,
அவனொடுஉம் -அந்தப்புத்திரனுடனே, தனது புரம் – தன்னுடைய பட்டணத்தில்
[அஸ்தினாபுரியில்] உள்ளவர், எதிர் கைதொழ – எதிர்ந்து கைகூப்பி வணங்க,
புகுந்தான் -பிரவேசித்தான்; (எ-று.)
தண்ணளிநிரம்பியிருத்தலால் மன்னவனுக்கு மதியையும் பல கலைகளையும்
முற்றவுணர்ந்த புலவனாயிருத்தலால் மைந்தனுக்குப் புதனையும் உவமை கூறினார்.
மனைவியைப்பிரிந்த துயரம் மகனை யடைந்த மகிழ்ச்சியின்முன்னே
தலையெடுக்காமற்போனதை, அருக்கன்றன்னெதிரிருளெனத்தணப்ப என்று
தொழிலுவமைகொண்டுவிளக்கினார்.
தானும் அம் மகனும் தரியலர் வணங்கத் தங்கு நல் நாளில்
அங்கு ஒரு நாள்,
தேன் உறும் தொடையல் இளவரசனைத் தன் திகழ்
அரியாசனத்து இருத்தி,
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால், காற்று எனக்
கூற்று என நடந்து,
பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன்,
விறல் படையோன்.-சந்தனு ஒரு நாள் வேட்டைக்குச் செல்லல்
தான் உம் – சந்தனுவும், அ மகன் உம் – (தேவவிரத னென்ற)
அந்த(க் கங்கையின்) புத்திரனும், தரியலர் வணங்க – பகைவர்கள் (அஞ்சி)
வணங்குமாறு,அங்கு – அந்நகரிலே, (பெருமதிப்போடு), தங்கும் – தங்கியிருக்கப்
பெற்ற, நல் நாளில்- சிறந்த நாள்களுள், ஒருநாள்-, தேன் உறுந் தொடையல்
இள அரசனை – தேன்பொருந்திய மாலையையணிந்த இளவரசனாகிய
தேவவிரதனை, தன் திகழ் அரிஆசனத்து இருத்தி – தன்னுடைய விளங்குகின்ற
சிங்காசனத்திருக்கச்செய்து,- கான்உறு விலங்கின் உயிர் கவர் நசையால் –
காட்டில் தங்குகின்ற மிருகங்களின் உயிரைக்கவரவேணுமென்ற விருப்பினால்,
விறல் படையோன் – வலிமையுள்ள(வேட்டைக்குரிய) பரிவாரங்களோடு
கூடியவனாகி,-காற்று என கூற்று என நடந்து-(இவன்) காற்றும் யமனும்
(போல்வான்) என்று சொல்லுமாறு (விரைவாகவும் கொடுமைதோன்றவும் )
நடந்துபோய்,- பானுவின் மகள் ஆம் காளிந்தி நதியின் -சூரியபுத்திரியான
யமுனாநதியின், பாரம் – கரையில், எய்தினன் – (அடைந்து அங்குஅமைந்த
பாசறையிற்) சேர்ந்தான்; (எ-று.) – தங்குநாடன்னில், இளவரசென என்றும்
பாடம்.
சந்தனு காளிந்திக்கரையில் அமைத்த பாசறையிற்சேர்ந்திருந்தமை,
மேற்கவியிற்பெறப்படும். கானுறுவிலங்கினுயிர் கவர் நசை – வேட்டை விருப்பம்.
காளிந்திநதிக்குஉரிய பெண்தெய்வம், சூரியனுடைய புத்திரியாவள்
பாசறை முழுதும் ஒரு பெருங் கடவுள் பரிமளம் ஒல்லெனப் பரப்ப,
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி,
தாசர்தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை, தரணிபர்க்கு எல்லாம்
ஈசனும், உருகிக் கண்டு, உளம் களியா, ‘இலங்கிழை! யார்கொல் நீ?’ என்றான்.-சந்தனு சத்தியவதியைக் கண்டு காதல் கொள்ளல்
(அங்ஙன் கானகஞ்சேர்ந்து பாசறையில் தங்கியிருக்கையில்), பாசறை
முழுதுஉம் – (தங்கியிருந்த) படைவீடுமுழுவதும், ஒரு பெருங் கடவுள் பரிமளம் –
ஒப்பற்ற மிக்கதெய்வத்தன்மையுள்ள நறுமணத்தை, ஒல்லென பரப்பி –
விரைவாகப்பரப்பிக்கொண்டு, யோசனை அளவுஉம் – யோசனைதூரமும், கரை
இருமருங்குஉம் -(அந்த யமுனாநதியின்) கரையினிருபக்கங்களிலும், உயிர்க்கும் –
வீசுகின்ற, மெல்உயிர்ப்பு – மெல்லியகாற்றுக்கு, எதிர் ஓடி – எதிர்முகமாக
விரைந்துசென்று,-தரணிபர்க்கு எல்லாம் ஈசன்உம் – அரசர்க்கு அதிபதியான அந்தச்சந்தனுமன்னவனும், தாசர் தம்குலத்துக்கு அதிபதி அளித்த
தையலை- வலைஞர்குலத்துக்கு அதிபதியான வலைஞன் தந்த அந்தப்பெண்ணை,
கண்டு-பார்த்து, உளம் உருகி களியா – மனம் நைந்துமகிழ்ந்து, (அவளை
நோக்கி), ‘இலங்குஇழை – விளங்குகின்ற ஆபரணங்களையணிந்துள்ள மாதராய்!
நீ-, யார்கொல் -யாவள்?’ என்றான் – என்று வினாவினான்; (எ-று.)
தாசர்குலபதியின் மகளின்மேனி யோசனைதூரங் கமழுந் தன்மைய
தாதலால்,அவள்மேனியின் நறுமணம் கந்தவகனான காற்றின்மூலம்
யோசனைதூரம்செலுத்தப்பெற, அந்த நறுமணக் காற்றுக்கு எதிராக ஓடி
மன்னவன்அந்தயோசனகந்தியைக் கண்டன னென்க. தாசர் என்ற வடசொல்,
தாசர் என்றுதிரிந்தது. தாசர் தங்குலம் – வலைஞர்குலம்: இவன்பெயர்
‘உச்சைச்ச்ரவஸ் ‘ என்று பாலபாரதத்தும் வியாசபாரதத்தும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாசனால் வளர்க்கப்பட்டகன்னிகை முதலில்மச்சகந்தியா யிருந்து பிறகு
பாராசரபகவானருளால் யோசனைதூரம்நறுமணம் வீசும் உடம்பைப்
பெற்றாளாதலால், யோஐநகந்தி என்று பெயர்பெறுவாளானாள்: இவள்
காளியென்றும், ஸத்யவதீயென்றும், வாஸவீயென்றும்வழங்கப்பட்டுள்ளாள்.
ஒல்லெனப் பரப்ப என்றும் பாடம்.
நிருபனது உரை கேட்டு, அஞ்சினள், ஒதுங்கி நின்று, கை நினைவு
உறக் குவியா,
‘இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல், எந்தை ஏவலின்’
என்று,
உரைசெயும் அளவில், வேட்கையால் உள்ளம் உருகி, மெய்ம்
மெலிந்து, ஒளி கருகி,
அரிவையை அளித்தோன் பக்கம் -அது அடைந்தான்; அவனும்
வந்து, அடிமலர் பணிந்தான்.
நிருபனது – சந்தனுவரசனுடைய, உரை – வார்த்தையை, கேட்டு -,
அஞ்சினள் – அச்சங்கொண்டவளாய், ஒதுங்கி நின்று-, நினைவுஉற –
(பெரியோரைக்கண்டால் வணங்கவேண்டு மென்ற) எண்ணந்தோன்ற, கைகுவியா-
கைகூப்பிவணங்கி,- ‘இரு துறை நெறியில் வருநரை – பெரிய நீர்த்துறைநெறியைக்
கடக்குங் கருதத்தோடு இங்கு வருபவரை, எந்தை ஏவலின் – என் தந்தையாரின்
கட்டளையினால், நாவாய் ஏற்றுவல் – மரக்கலத்திலேற்றுவேன்,’ என்று-, உரை
செயும்அளவில் – சொல்லும்போது,- (மன்னவன்), வேட்கையால் –
காமவிச்சையால், உள்ளம்உருகி-, மெய் மெலிந்து – உடல் தளர்ந்து, ஒளி
கருகி -, அரிவையை அளித்தோன்-யோசன கந்தி யென்ற
அந்தமடந்தையைப்பெற்ற வலைஞனுடைய, பக்கம் அது -இருக்குமிடத்தை,
அடைந்தான்-: அவன்உம் – அந்தவலைஞனும், வந்து-, அடிமலர்
பணிந்தான்- (மன்னவனுடைய) திருவடித் தாமரையை வணங்கினான்; (எ-று.)
வேட்கையாலென்பது உள்ளமுருகுதற்கேயன்றி, மெய்ம்மெலிதலுக்கும்
ஒளிகருகுதற்கும் ஏது ஆகும். பக்கமது, அது – பகுதிப் பொருள்விகுதி
பாகனை அரசன் குறிப்பினால் ஏவ, பாகனும் பரதவர் பதியை
ஓகையோடு இருத்தி, ‘நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான்;
தோகை செய் தவமோ, நின் பெருந் தவமோ, தொல் குலத்தவர்
புரி தவமோ,
ஆகும் இவ் வாழ்வு!’ என்று உரைத்தனன். அவனும் ஆகுமாறு
அவனுடன் உரைப்பான்;
அரசன் – சந்தனு, பாகனை – (தன்னுடைய) தேர்ப்பாகனை,
குறிப்பினால் ஏவ – சாடைகாட்டி (மணம்பேசுமாறு) தூண்ட, பாகனும்-, பரதவர்
பதியை- வலைஞர் தலைவனை, ஓகையோடு – மிக்க மகிழ்ச்சியோடு, இருத்தி –
இருக்கச்செய்து,- ‘உலகு உடைநாயகன் – உலகுக்குத் தலைவனாகிய சந்தனுராசன்,
நின்னுழை – உன்னிடத்து, வதுவைநயந்தான் – மணத்தை விரும்பினான்
[உன்மகளைமணந்துகொள்ளுமாறு எம்முடைய சந்தனு மன்னவன்
விரும்பியுள்ளான்]: இ வாழ்வு – இங்கனம் (அரசன் வதுவைவிரும்பிய) இந்த
வாழ்ச்சி, தோகை செய்தவம் ஓ – (உன்னுடைய மகளான) மயில்போலுஞ்
சாயலையுடையாள் செய்துள்ளதவப்பயனாலோ, நின் பெருந்தவம் ஓ – நீ
செய்துள்ள மிக்கதவத்தினாலோ, தொல்குலத்தவர் புரி தவம் ஓ – பழமையான
பரதகுலத்தவர்செய்த தவத்தினாலோ, ஆகும் -உண்டானதாகும், ‘ என்று-,
உரைத்தனன் – சொன்னான்: அவன்உம் – அந்தப்பரதவர்பதியும், ஆகும் ஆறு –
(அந்த அரசன்நினைவு) முற்றுதற்குரியவகையை, அவனுடன்- அந்தப்பாகனோடு,
உரைப்பான் – சொல்பவனானான்;
பரதவர்பதிகூறுவதை மேற்செய்யுளிற் காண்க. மன்னவன் பரதவர்பதியிடத்து
மகளை நேரேகேட்கநாணிப் பாகன் மூலமாகக் கேட்டானென்க
‘பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல மகள்
குயம் பொருந்தல்,
மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும்! மேல் இனி இவை
புகன்று என்கொல்?
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன்;
இவள் பயந்த
சீருடை மகன் மற்று என் செய்வான்? இசைமின், செய்கைதான்
திருவுளம் குறித்தே’–பரதர் தலைவன் மறுமொழி்
பூருவின் மரபில் – பூருவின்வமிசத்திலே, பிறந்த – தோன்றிய,
கோமகன் – இராசகுமாரன், என் புன்குலம் மகள் குயம் பொருந்தல் –
என்னுடையதாழ்மையான குலத்திற்பிறந்தபெண்ணின் தனங்களைத் தழுவுதல்
[என் பெண்ணைமணந்துகொள்ளுதல்], மேருஉம் அணுஉம் நிறுக்கும்
ஆறுஒக்கும் – மேருவை ஒருதட்டிலும் அணுவை மற்றொருதட்டிலும் வைத்து
நிறுக்கின்ற தன்மைக்குச்சமானமாகும்: மேல் இனி இவை புகன்று என் கொல் –
இப்போது இவற்றைப்பற்றிப்பேசி என்னபயன்? பகீரதி மகன் – கங்காதேவியின்
புத்திரனான தேவவிரதன், பார் -(சந்தனுவின்) அரசை, உவகையினால் –
மனமகிழ்ச்சியோடு, ஆளுதற்கு – ஆட்சி புரிதற்கு,இருந்தான் – சித்தனாக
இருக்கிறான்; மற்று – பிறகு, இவள் பயந்த சீர் உடை மகன் -இந்த என்பெண்
பெறப் போகின்ற சிறப்புள்ள புதல்வன், என்செய்வான் -என்னசெய்யக்கூடியவன்?
செய்கை – (அவன் செய்யவேண்டிய) செயலை, திரு உளம்குறித்து – உம்முடைய
மனத்தினால் ஆலோசித்து, இசை மின் – சொல்லுங்கள்; ‘ (எ-று.)-“என்ன” என்று
அடுத்த கவியோடு தொடரும்.
“பகீரதிமைந்த னாளுதற்கிருந்தான்; இவள் பயந்த சீருடை மகன்
மற்றென்செய்வா னிசைமின் செய்கை திருவுளங்குறித்தே” என்று வலைஞர்பதி
கூறியபேச்சில், ‘இவள்வயிற்றிற்பிறக்கும் மகனுக்கே அரசுதருவதாக உடன்பட்டால்
இவளைவதுவைசெய்து கொடுக்க இசைவேன்’ என்ற குறிப்புத் தோன்றுதல்
காண்க. பயந்த – இயல்பினால் எதிர்காலம் இறந்தகாலமாயிற்று.
என்ன முன் இறைஞ்சி, இவன் மொழி கொடுஞ் சொல் இறையவன்
கேட்டலும், இரண்டு
கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து, இதயம் கருகி, வேறு
ஒன்றையும் கழறான்,
‘முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது!’ என்று
ஆகுலம்முற்றி, அன்னமும்
குயிலும் பயிலும் நீள் படப்பை அத்தினாபுரியை மீண்டு
அடைந்தான்.-சந்தனு வருத்தத்தோடு மீளல்
என்ன – என்று, முன் – (தன்) முன்னிலையிலே, இறைஞ்சி –
வணங்கி, இவன் மொழி கொடுஞ் சொல் – இந்தப்பரதவர்பதி சொல்லிய
கொடுஞ்சொல்லை, இறையவன் – சந்தனுமன்னவன், கேட்டலும் –
கேட்டவுடனே,-இரண்டு கன்னம் உம் – (தன்னுடைய) இரண்டுகாதிலும்,
அழல்கோல் -கொள்ளிக்கட்டை, வைத்தது – வைக்கப்பட்டதை, ஒத்து-, இதயம்
கருகி – நெஞ்சுவெந்து, வேறு ஒன்றை உம் கழறான் – வேறொரு வார்த்தையுஞ்
சொல்லாதவனாய்,-முன்னம் – முன்பு, உன்மதத்தால் – கோபமயக்கத்தினால்,
முனி – வசிட்டமுனிவன்,இடு – இட்ட, சாபம் – சாபமே, முடிந்தது –
பயனைவிளைக்க வந்திட்டதுபோலும்,என்று-, ஆகுலம் முற்றி – வருத்தம்மிகுந்து,
அன்னம்உம் குயில்உம் பயிலும்நீள்படப்பை அத்தினாபுரியை – அன்னப்
பறவையும் குயிற்பறவையும் பழகப் பெற்றநீண்டசோலையையுடைய
அத்தினாபுரியென்ற (தன்) நகரை, மீண்டு – (அங்குநின்று)திரும்பி,
அடைந்தான் – சேர்ந்தான்;
வசிட்டமுனிவன்இட்ட சாபத்தின்பயனே இந்தவலைஞர் பதியை இவ்வாறு
சொல்விப்பதுபோலும் என்று கருதி, ஆகுலமுற்றான் சந்தனுவென்க.
கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில், களிந்தவெற்பு
அளித்த
மங்கையாம் என்ன நின்ற பூங்கொடிமேல் வைத்த பேர்
ஆதரம் மலிய,
பங்கயானனம்தான் முறை முறை குறையும் பால்மதி என
அழகு அழிந்த
சங்கையால், மைந்தன் வினவலும், நிகழ்ந்த தன்மையைச் சாரதி
புகன்றான்.-தேவ விரதன் நிகழ்ந்தமை அறிதல்
கங்கையாளிடத்தில்-, ஆதரம் – விருப்பம், மெலிந்த – குறைவுபட்ட,
காலையில் – சமயத்திலே, களிந்தவெற்பு அளித்த மங்கை ஆம் என்ன நின்ற பூங்
கொடிமேல் – களிந்தமலைபெற்ற யமுனாநதியின் பெண்தெய்வமாவாள்போலும்
என்றுகருதுமாறு (யமுனைக்கரையிலிருந்த) பூங்கொடிபோன்ற
யோசனகந்தியினிடத்து,வைத்த-, பேர் ஆதரம் – மிக்கவிருப்பம், மலிய – மிக,-
பங்கய ஆனனம் -தாமரைமலர்போன்ற (அரசன்) முகம், முறை முறை குறையும்
பால் மதி என அழகுஅழிந்த – நாடோறும் முறையே கலை தேயப்பெற்ற
வெண்மை நிறமுள்ளசந்திரன்போல அழகுகெட்டதனாலான, சங்கையால் –
சங்கையினால், மைந்தன் -குமாரனான தேவவிரதன், வினவலும் – ( ‘இங்ஙனம்
என் தந்தை முகம் அழகுகெடக்காரணம் யாது?’ என்று) வினவவே, சாரதி-,
நிகழ்ந்த தன்மையை-, புகன்றான் -கூறினான்; (எ -று.)
யமுனைக்கரையில் கருநிறமுடையவளாயிருந்த யோசனகந்தி யமுனையின்
பெண்தெய்வமேபோல்வ ளென்று தற்குறிப்பேற்றவணி படக் கூறினார். காலையில்
வேலையிற் பிறந்த என்ற பிரதிபேதம்.
கேட்ட அக் கணத்தில், கடற் புறத்து அரசைக் கேண்மையோடு
அடைந்து, இளவரசும்,
‘பாட்டன் நீ எனக்கு; பெற்ற தாய்தானும் பகீரதி அல்லள்;
நின் மகளே;
நாட்டம் இன்று உனக்கு யாது? அது நிலை; இந்த ஞாலமும்
எம்பியர் ஞாலம்;
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய், நீதி கூர்
நிருபனுக்கு’ என்றான்.-விரதம் கூறி வீடுமன் எனும் பெயர் பெறுதல்
கேட்ட-, அ கணத்தில் – அந்த க்ஷணத்தில் தானே, இள
அரசுஉம் -இளவரசனான வீடுமனும்,- கடல்புறத்துஅரசை – கடலைச்சார்ந்த
நெய்தல்நிலத்துக்குஉரியவனான வலைஞாபதியை. அடைந்து – சேர்ந்து,
கேண்மையோடு -உறவுமுறைபாராட்டுதலுடனே, ‘நீ எனக்கு பாட்டன்-: (எனக்கு),
பெற்ற தாய்தான் உம்-, பகீரதி அல்லள் – கங்காதேவியல்லள்: நின் மகள் ஏ –
உன்னுடைய புதல்வியே:இன்று – இப்போது, உனக்கு -, நாட்டம் யாது –
விருப்பம் எதன்மீதோ, அது-, நிலை- நிச்சயமாகப்பெறக்கூடிய பொருளேயாகும்:
இந்த ஞாலம்உம் – இந்தப்பூமியும், எம்பியர் ஞாலம் – என்னுடைய தம்பிமார்
ஆட்சிபுரிதற்கு உரிய பூமியேயாகும்: நீட்டம்அற்று – தாமதித்தலில்லாமல், இன்று
ஏ – இப்போதே, நீதி கூர் நிருபனுக்கு -நீதிமுறைமிக்க அரசனாகிய
என்தந்தைக்கு, திருமணம் நேர்வாய்- (உன்மகளை) மணஞ்செய்துகொடுத்தற்கு
இசைவாய்,’ என்றான்-; (எ-று.)
கேண்மையோடு என்றான் என இயையும். பாட்டனீயெனக்கு முதலியவற்றில்,
கேண்மைதோன்றுதல் காண்க.
விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்மின்: மெய் உயிர் வீடும்
அன்று அளவும்,
சரதம் முற்றிய மெய்த் தாதுவும் மூலத் தழலுடன் மீது எழும்
தகைத்தே;
‘இரதம் முற்றிய சொல் மகப் பெறாதவருக்கு இல்லை’ என்று
இயம்பும் நல் கதியும்
சுரதம் முற்றிய என் தந்தைதன் பொருட்டால் பெறுவல்’ என்று,
இன்னதும் சொன்னான்.
இங்ஙன் தேவவிரதன் கூறியதைக்கேட்ட வலைஞர்பதி வியப்புக் கொண்டு
மீண்டும் கங்கையாள் மகனைநோக்கி ‘செம்மலே! நீ உன் தந்தையினிடத்து
உறுதியானஅன்பினால்இராச்சியத்தைவிட்டிட்டாய்: இந்த இராச்சியத்தை உன்புத்திரன்
பெறற்குரியனாவனே; அப்போதும் என்கருத்துப் பழுதுபடுமே!’ என்று
கருதக்கூடுமெனக் கொண்டு, வீடுமன் பின்வருமாறுகூறலுற்றான்:-
‘(யான்), விரதம் – நோன்பை, முற்றியஆறு – (இப்போது)
தீர்மானித்துக்கொண்டவகையை, அனைவர்உம் கேண்மின் – யாவரும் கேளுங்கள்:
மெய் உயிர் வீடும் அன்று அளவுஉம் – உடலை விட்டு உயிர்போகும்வரையில்,
சரதம்- திண்ணமாக, மெய் முற்றிய – (என்) உடம்பில் மிகுந்துள்ள, தாதுஉம் –
சுக்கிலமும்,மூலம் தழலுடன் – மூலாக்கினியுடனே, மீதுஎழும் தகைத்து –
மேற்புறமாகநோக்கியிருக்கும் தன்மையையுடையது: இரதம் முற்றிய – இனிமை
மிகுந்த, சொல் -குதலைச்சொற்களையுடைய, மக- குழந்தைகளை, பெறாதவருக்கு-,
இல்லை என்று-,இயம்பு – சொல்லப்படுகின்ற, நல்கதிஉம், சுரதம் முற்றிய என்
தந்தைதன்பொருட்டால் -புணர்ச்சியின்பம் முதிரப்பெற்ற என் தந்தையின்
நிமித்தமாக [என்தந்தையை மணக்குமாறு செய்ததன் பயனாக], பெறுவல் –
(யான்) அடைவேன்,’ என்று-, இன்னதுஉம் – இந்தச்சொல்லையும், சொன்னான்-;
(எ -று.)
குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான்கிதழ்த்தாமரை போலிருக்கிற
சக்கரம்,மூலம் எனப்படும். தாது கீழ்நோக்காது மேலெழுந்தன்மையுடைய
பெரியோர், ஊர்த்வரேதஸ்கர் எனப்படுவர். மூலாக்கினி மேலெழந்தன்மையும்
தவசியர்க்கேயுரியதென்ப. இரதம்= ரஸம். மகப்பெறாதார் நற்கதியடையாரென்றும்,
புத்தென்றநரகத்திற் சேர்வரென்றும் நூல்கள் கூறும். தந்தைக்குமணஞ்
செய்வித்ததன் பயனாகத்தனக்க மகப்பெற்றோர்பெறும் நற்கதியும்
உண்டாகுமென்றா னென்க.
இவன் மொழி நயந்து கேட்டுழி, அவையின் இருந்த தொல்
மனிதரே அன்றி,
தவ முனிவரரும், தேவரும், ககனம் தங்கும் மா மங்கையர் பலரும்,
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் உரைசெய்து, ஒளி கெழு
பூமழை பொழிந்தார்-
அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள்
நிலை அறிந்தே.- அவையிலிருந்தோர் முதலியோர் தேவவிரதனுக்கு
வீடுமனென்றபெயரைச் சூட்டலும் பூமழைபொழிதலும்.
இவன் – இந்தத்தேவவிரதன், மொழி – (கூறிய) சபதவார்த்தையை,
நயந்து கேட்டஉழி – விரும்பிச்செவியேற்றபோது, அவையின் இருந்த –
சபையிலேயிருந்த, தொல் மனிதர்ஏ அன்றி – பழமையான மனிதரே யல்லாமல்,
தவம்முனிவரர்உம் – தவத்தையுடைய சிறந்த இருடியரும், தேவர்உம் – தேவர்களும்,
ககனம் தங்கும் மா மங்கையர்பலர்உம் – வானுலகத்தில் வாழ்கின்ற சிறந்த தேவ
மங்கையர் பலரும்,- அவனியில் -பூமியிலே, நிருபர் – அரசர், வெருவரும் –
அஞ்சுகின்ற, திறலான் – மனவலிமைபற்றிவந்த, அரிய சொல் – அருமையான
அந்தவீடுமனென்ற சொல்லின், பொருள்நிலை -அர்த்தத்தின் நிலைமையை,
அறிந்து – தெரிந்து, – உவகையோடு – மகிழ்ச்சியுடனே,இவனுக்கு ஏற்ற –
இவனுக்குத் தக்க, பேர் – நாமதேயமாக, (வீடுமன் என்பதை),உரைசெய்து –
சொல்லி, ஒளிகெழு – ஒளிபெறுதற்குக் காரணமான, பூமழை மலர்மாரியையும்,
பொழிந்தார்-;
நிருபர்வெருவருந்திறல் – தேகவலியேயன்றி மனவலியையும் காட்டும்.
வீடுமனென்ற சொல் இவனுக்குவந்தது மனத்திறலினாலாகுமென்பார்
‘திறலானரியசொல்’ என்றார்; இங்கே, ஆன் – மூன்றுனுருபு. திறலான் –
திறலையுடையவனென,ஆண்பால்விகுதி யென்பாருமுளர். உரைசெய்த பேர்,
‘பீஷ்மன்’ என்பது: இது -பயங்கரமானவனென்று பொருள்படும்: பயங்கரமான
விரதத்தை மேற் கொண்டமனவலிமைபற்றியது, இந்த வீடுமனென்ற பெயரென்க.
இந்தவீடுமன் விரதங்கொண்டதுதாசபூபதியின் முன்னிலையிலேயாகவும்,
அதனைக் கேள்வியுற்ற சபையோர்முதலியோர் வீடுமனென்ற பெயரை இவனுக்குத்
தந்து மலர்மாரியும் பொழிந்தனரென்பதாம்.
மெய்ம் மகிழ் கடவுள் பூமழையுடனே வீடுமன் எனும்
பெயர் எய்தி,
கைம் மகிழ் வரி வில் தாசபூபதியும், கன்னிகை காளியும்,
தானும்,
மொய்ம் மணம் கமழும் மன்றல் வேனிலின்வாய், முனிவரும்
கிளைஞரும் சூழ,
செய்ம் மகிழ் பழனக் குருநிலம் உடையான் திருமனை விரைவுடன்
சேர்ந்தான்.–வீடுமனென்றபேரைப்பெற்ற தேவவிரதன் தாசபூபதியை
மகளுடனேயழைத்துக் கொண்டு, அரண்மனையை யடைதல்.
மெய் மகிழ் – உண்மையான மகிழ்ச்சியைக்கொண்ட, கடவுள்-
தேவர்களின், பூமழையுடனே -, வீடுமன் எனும் பெயர் – வீடுமனென்ற
பெயரையும்,எய்தி – அடைந்து, (தேவவிரதன்),- மகிழ் வரிவில் கை தாசபூபதிஉம்
கன்னிகைகாளிஉம் தான்உம் – மகிழ்ச்சி யடைந்தவனான கட்டமைந்த வில்லைக்
கையிலேந்தியவலைஞர் தலைவனும் (அவனுடைய) கன்னிகையான காளியும்
தானுமாக,- மொய்மணம் கமழும்மன்றல் வேனிலின்வாய் – நெருங்கியமணம்
வீசப்பெற்றமணஞ்செய்தற்குஉரிய வசந்தகாலத்தில், முனிவர்உம்
கிளைஞர்உம் சூழ -முனிவர்களும் சுற்றத்தார்களும் சூழ்ந்துவர, செய் மகிழ்
பழனம் குருநிலம் உடையான்திரு மனை – வயலைக்கண்டு மகிழ்வதற்குக்
காரணமான நிலவள நீர்வளமுள்ளகுருநிலத்தையுடையவனான சந்தனு
மன்னவனுடைய அழகிய இல்லத்தை, விரைவுடன்சேர்ந்தான்-; (எ -று.)
பூபதியும்காளியும் தானும் …. சேர்ந்தான் – சிறப்பினால்
உயர்திணையாண்பாலான்முடிந்த பால்வழுவமைதி. விவாகத்துக்கு வசந்தருதுவே
சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதனால், அதனை ‘மன்றல்வேனில்’ என்றார். வலைஞர்
பெண்ணாய் வளர்ந்த ஸத்யவதிக்குக் காளி என்ற பெயர்நிறம்பற்றிவந்தது போலும்.
மூன்றாமடியில் மெய்ம் மகிழ்கமழும் என்றும் பாடம்.
பரிமள வடிவப் பாவையை அரசன் -பாலள் என்று ஒருபுடை நிறுத்தி,
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுறத் தழுவி,
தரு மணம் கமழும் சென்னிமேல் வதனம் தாழ்ந்து, மோந்து, உருகி,
‘முன் தந்தைக்கு
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன்’
என்று உரைத்தான் –சந்தனு மகனைப் பாராட்டி வரம் அளித்தல்
பரிமளம் வடிவம் பாவையை – பரிமளமே ஒருவடிவு படைத்து
வந்திருப்பதுபோன்ற அந்தக்காளியை, அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி –
அரசனுக்கு உரியவளென்று ஒருபுறத்திலே நிறுத்தி, இரு பதம் தொழுதுநின்ற மா
மகனை – இரண்டு பாதங்களையும் தொழுதுகொண்டுநின்ற (தன்) சிறந்த
புதல்வனை,(சந்தனுமன்னவன்), இதயமோடு இறுகுற தழுவி – மார்போடு
அழுந்தக்கட்டிக்கொண்டு,தரு மணம் கமழும் சென்னி மேல் – கற்பகமலரின்
நறுமணம் வீசுகின்ற(அந்தப்புதல்வனுடைய) சிரசின்மீது, வதனம் தாழ்ந்து
மோந்து – (தன்) முகத்தைத்தாழ்ந்து (உச்சி) மோந்து, உருகி- (அன்பினால்)
மனங் கசிந்து, ‘முன் தந்தைக்கு உரியபேர் இளமை கொடுத்த கோமகன்உம் –
முன்பு (தன்) தந்தைக்கு (த் தனக்கு) உரியமிக்க இளமையைக் கொடுத்த பூரு
என்ற ராஜகுமாரனும், உனக்கு எதிர் அல்லன்-, ‘என்று-, உரைத்தான் –
சொன்னான்; (எ-று.)
‘தரு’ என்ற மரப்பொதுப்பெயர் – சிறப்பாய்க் கற்பகத்தைக் காட்டி,
முதலாகுபெயரால், அதன்மலரைக் காட்டிற்று. கீழ் வானவர்பூமழை
பொழிந்தாரென்றதற்கு ஏற்ப, இங்கே ‘தருமணங்கமழுஞ் சென்னி’ என்றார்.
நான்காமடியில், உரியதன்னிளமை என்றும், அல்லவென்றுவந்தான் என்றும்
பாடம்.
‘தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்குச் சத மடங்கு
உதவினை; உனக்கு
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம்
செய்திலேன் உதவ;
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணிச் செல்லும்
அன்று அல்லது, உன் உயிர்மேல்
முந்துறக் காலன் வரப்பெறான்’ என்றே முடிவு இலா ஒரு
வரம் மொழிந்தான்.–சந்தனு வீடுமனிடத்துக் கூறும் முகமன்.
எனக்கு-,தந்தையர்க்கு உதவும் உதவியின் – (பெற்ற மகன்)
தன்னுடைய தந்தையார்திறத்தி லுதவுகின்ற உதவியைக்காட்டிலும், சதம் மடங்கு –
நூறுமடங்கு (மிக), உதவினை – உதவிபுரிந்தாய்: உனக்கு-, மைந்தருக்கு உதவும்
உதவியின்- (தந்தை தன்) புதல்வருக்கு உதவுகின்ற உதவியைப்போல, உதவ –
உதவும்படி,சிறிதும்உம் – கொஞ்சமும், மா தவம் செய்திலேன் – சிறந்த
தவத்தைச்செய்தேனில்லை: சிந்தையில் – (உன்) மனத்தில், ‘துறக்கம் வேண்டும் –
சுவர்க்கத்துக்குப்போகவேண்டும்,’ என்று-, எண்ணி-, செல்லும்- (நீயே) போகின்ற,
அன்று அல்லது – அன்றைக்கு அல்லாமல், உன் உயிர்மேல்-, காலன் – யமன்,
முந்துற – (நீ சுவர்க்கத்துக்குச் செல்லவேணுமென்றுகருதுவதற்கு) முன்பாக,
வரப்பெறான்-, ‘என்று-, முடிவுஇலா – (விருப்பமின்றி) இறத்தலில்லாமையாகிய, ஒரு
வரம் – ஒப்பற்றவரத்தையும், மொழிந்தான்- (சந்தனு வீடுமன்பொருட்டு) வாய்விட்டுச்
சொன்னான்: (எ-று.)
இங்ஙனம் வேண்டும்போது இறத்தல் ‘ஸ்வச்சந்தமரணம்’ எனப்படும்
அம் புவி அரசன் மாமனும், அரசன் அடி பணிந்து,
அவயவத்து அழகால்
உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி, ஒடுங்கினன்,
வாய் புதைத்து, உரைத்தான்:
‘எம் பெருமான்! நீ கேட்டருள்: உனக்கே இசைந்த மெய்த்
தவம் புரி இவளை,
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி, வலைஞர்
மா மகள் எனக் கருதேல்.-பரதவர் தலைவன் மகளின் வரலாறு கூறல்
இதுமுதல் நான்குகவிகள் – வலைஞர் தலைவன் யோசன கந்தியை
முன்நிறுத்திப் பணிவுடன் அவள்வரலாற்றினைத் தெரிவித்தலைக்கூறும்-ஐந்துகவிகள் – ஒருதொடர்
(இ-ள்.) அம் புவி அரசன் மாமன்உம் – அழகியபூமிக்குத்தலைவனான
சந்தனுவுக்கு மாமனாராகியவலைஞர் தலைவனும், அரசன் அடிபணிந்து –
மன்னவனுடைய பாதங்களில் வணங்கி,- அவயவத்து அழகால் –
உடம்பினழகினால்,உம்பர்உம் – தேவர்களும், வியக்கும் – அதிசயிக்கின்ற,
கிளியை – கிளிபோன்றபெண்ணை, முன் – (அவ்வரசனுக்கு) முன்னே, நிறுத்தி –
நிற்கவைத்து,- ஒடுங்கினன் -ஒடுக்கத்தைக் காட்டியவண்ணம், வாய்புதைத்து –
வாயை(க் கையினால்) மூடிக்கொண்டு, உரைத்தான் – (பின்வருமாறு)
சொல்பவனானான்: எம்பெருமான் – எமதுபெருமானே! நீ கேட்டருள் – நீ
கேட்டருள்வாய்: உனக்கு ஏ இசைந்தமெய் தவம் புரிஇவளை – உனக்கே
(மனைவியாகப்) பொருந்திய உண்மைத்தவம்புரிந்துள்ளஇந்தப்பெண்ணை, வம்பு
அவிழ் மலர் மாது என்பது ஏ அன்றி – நறுமணம்வீசுகின்றமலரில் தங்கும்
திருமகள் போல்வா ளென்பதல்லாமல், வலைஞர் மா மகள் என -வலைஞர்
குலத்துத் தோன்றிய சிறந்த பெண்ணென்று, கருதேல் – எண்ணாதே: (எ-று.)
– இச்செய்யுளில ‘எம்பெருமான்’ (103) என்பது தொடங்கி “காவலர்
குலத்திடைக்கலந்தாள்” (106) என்பது வரையில், வலைஞர் தலைவனுரைத்த
உரையாகும்.
அவயவம் அங்கம் என்பன பரியாய மாதலாலும், உடம்பை அங்கமென்று
வழங்கியிருத்தலாலும், இங்கு உடம்பை அவயவமென்றார்.
‘வாசவன் அளித்த விமானமீது ஒருவன், வசு எனும்
சேதி மா மரபோன்,
கேசரன் எனப் போம் விசும்பிடை, மனையாள் கிரிகையை
நினைந்து, உடல் கெழுமி,
நேசமொடு இதயம் உருகும் அக் கணத்தில், நினைவு அற
விழுந்த வீரியம், மெய்த்
தேசவன் அளித்த நதியிடைத் தரளத் திரள் எனச் சிந்தியது,
ஒருபால்.
வாசவன் அளித்த விமானமீது – இந்திரன் தந்த
விமானத்தின்மேல், சேதிமா மரபோன் வசு எனும்ஒருவன் – சேதி வமிசத்தில்
தோன்றியவனான வசுவென்றஒருவன், கேசரன் என – ஆகாசத்திற் சஞ்சரிக்கின்ற
தேவசாதியான்போல, போம் -செல்லுகின்ற, விசும்பிடை – ஆகாயத்தினிடத்தே,
மனையாள் கிரிகையை நினைந்து -மனையாளாகிய கிரிகையென்பாளை எண்ணி,
உடல் கெழுமி – உடம்பிற்காமவிகாரங்கொண்டு, நேசமொடு – அன்புடனே,
இதயம் உருகும்அ கணத்தில் – நெஞ்சம் உருகுகின்ற அந்த க்ஷனத்திலே,
நினைவு-, அற -இன்றிக்கேயிருக்க, [தன்னடைவே], விழுந்த-, வீரியம் –
சுக்கிலமானது, மேய் தேசவன்- தேஜோமயமான மேனியைப் படைத்த சூரியன்,
அளித்த – தந்த, நதியிடை -யமுனாநதியிலே, ஒரு பால் – ஒருபுறத்திலே, திரள்
தரளம் என – திரண்டவடிவுள்ளமுத்துப் போல, சிந்தியது-; (எ-று.)
சேதிபனான வசுவென்பவன் நோன்பால் வானத்திற்செல்ல வல்ல
விமானத்தைத்தேவேந்திரனருளாற் பெற்றான்: அன்னான் வானத்திற்
சஞ்சரிக்கையில் ஒருகால்தன்மனைவியை நினைந்து காமவிகாரங்கொண்டதனாற்
சுக்கிலம்தோன்ற, அதனைஒருமரத்தின் இலையிலேந்தி ஒரு சியேனமென்னும்
பறவையை யழைத்துக் கொடுத்துக்கிரிகையினிடத்துச் சேர்ப்பிக்குமாறு
சொன்னான்: சொல்லவும், வேறொருசியேனப்பறவை அதனை இரையென்று
கருதிப்பொர, அந்தச்சுக்கிலம் யமுனைநதியின்புனலில் முத்தின் திரள் போல
விழுந்திட்டதென விளக்கங் காண்க.மற்றொருமனையாள் கிரீடையையென்றும்
பாடம்.
ஒரு முனி முனிவால், அரமகள் ஒருத்தி, மீனமாய்
உற்பவித்து உழல்வாள்,
இரை என அதனை விழுங்கும்முன் கருக் கொண்டு, ஈன்
முதிர் காலையில், அதனைப்
பரதவர் வலையின் அகப்படுத்து, அரிய, பாலகன் ஒருவனும்
இவளும்,
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார், யமுனையும் யமனும்
நேர் எனவே.
ஒருமுனிமுனிவால் – ஒருமுனிவனுடைய வெகுளியினால், அரமகள்
ஒருத்தி – ஒருதேவமாது, மீனம் ஆய் உற்பவித்து உழல்வாள் – மீனாகித்தோன்றி
யலைபவளாய்,- அதனை – (யமுனையின் ஒருபாற் சிந்திய) அந்த (வசுவின்)
வீரியத்தை, இரை என – (தனக்கு உரிய) உணவென்று, விழுங்குமுன் –
உட்கொள்வதற்குமுன்னமே [உட்கொண்டவுடனே யென்றபடி], கரு கொண்டு –
கருப்பமடைந்து, ஈன்முதிர் காலையில் – (அந்தக்கருப்பம்) ஈனுமாறு முதிர்ச்சி
யடைந்ததருணத்தில்,- அதனை – கருக்கொண்ட அந்த மீனை, பரதவர் –
வலைஞர், வலையின்அகப்படுத்து – வலையில் அகப்படுமாறு செய்து, அரிய –
அரிந்துபார்க்க, – பாலகன்ஒருவன்உம் – ஒரு குமாரனும், இவள் உம் –
இந்தக்குமாரியும், இருவர் உம் -(ஆகிய) இருவர்களும், யமுனை உம் யமன் உம்
நேர் என-, இந்த மீன் வயிற்றுஇருந்தார்-:
சூரியபுத்திரியாகிய யமுனைநதியின் மீன்வயிற்றிலே தோன்றிய குமார
குமாரிகட்கு, சூரியனுக்குப் புதல்வனும் புதல்வியுமான யமனையும் யமுனையையும்
உவமைகூறினார். ப்ருஹ்மசாபத்தினால் அத்திரிகையென்ற தேவமாது
மீனமாயினாளென்று கூறப்படும்: ஆகவே, ஒருமுனி யென்றது – பிரமதேவனைக்
காட்டும்.
‘மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உறக் காட்டலும்,
மகனை,
‘மீனவன்’ எனப் பேர் கொடுத்தனன், கொண்டு, மெல்லியல்
இவளை மீண்டு அளித்தான்;
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால்
இனிமையின் வளர்த்தேன்;
கான மென் குயில்போல் வந்து, மீளவும், தன் காவலர்
குலத்திடைக் கலந்தாள்.’
மானவர் பதி ஆம் – மானுடர்க்குத் தலைவனாகிய, வசுவினுக்கு-,
இவரை – இந்த மக்களை, மகிழ்வு உற – மகிழ்ச்சிபொருந்த, காட்டலும் – (நான்)
காட்டியபோது,-(அந்தவசுமன்னவன்), மகனை-, மீனவன் எனபேர்கொடுத்தனன்
கொண்டு – மீனவனென்று பேரிட்டு(த் தன்னுடன்) வைத்துக்கொண்டு, மெல்லியல்
இவளை – இந்தப்பெண்ணை, மீண்டு-, அளித்தான் கொடுத்திட்டான்: யான் உம்-,
இன்று அளவுஉம் – இன்றுவரையிலும், என் மகள் என்னும் இயற்கையால் –
என்மகளென்று சொல்லக்கூடிய தன்மையினால், இனிமையின் வளர்த்தேன் –
இனிதாகவளர்த்து வந்தேன்: (இவள்), கானம் மெல் குயில்போல் –
இன்னிசையையுடைய மெல்லிய குயில் போல், வந்து – வளர்ந்துவந்து, மீளஉம் -,
தன்காவலர் குலத்திடை – தனக்குரிய அரசர்குலத்திலேயே, கலந்தாள் –
சேர்ந்திட்டாள்; (எ-று.)
என்று கூறி விடுத்தனன்; ஏந்தலும்,
அன்று அவைக்கண் அவன் மொழி கேட்டு, உவந்து,
‘இன்று நல் தினம்’ என்று, இளந் தோகையை
மன்றல் எய்தினன், மா நிலம் வாழ்த்தவே.-சந்தனு சத்தியவதியை மணந்து வாழ்தல்
என்று கூறி விடுத்தனன் – என்றுசொல்லி (அந்தப் பெண்ணை)க்
கொடுத்தான்: ஏந்தல்உம் – சந்தனு மன்னவனும்,- அன்று-, அவைக்கண் –
சபையிலே(கூறிய), அவன் மொழி – அவ்வலைஞர்பதியின் வார்த்தையை,கேட்டு,-,
உவந்து -மனம்மகிழ்ந்து,- இன்று நல் தினம் என்று-, ‘இந்நாள் மணஞ்செய்து
கொள்ளுதற்குஏற்ற நன்னாளாகும்’ என்றுசொல்லி, இளந்தோகையை – இளமயில்
போலுஞ்சாயலையுடைய அந்தப்பெண்ணை, மாநிலம் வாழ்த்த –
பெரியநிலவுலகத்தார்வாழ்த்துக்கூற, மன்றல் எய்தினன் – விவாகஞ்
செய்துகொண்டான்; (எ-று.)
தான் விரும்பிவளைச் சிறப்புற்ற வசுவின் பெண்ணென்று அறிந்தமையால்,
சந்தனு உவந்தானென்க. இது முதல் இருபத்துநான்கு கவிகள் – பெரும்பாலும்முதற்சீர்
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.
காளி வந்து, கலந்தனள்; கங்கை வேய்த்
தோளியும் புயம் தோய்ந்தனள் முன்னமே;-
வாளி வெம் பரி மா நெடுந் தேருடை
மீளிதானும் விடையவன் ஆதலால்.
வாளி வெம் பரி மா நெடுந்தேர் உடை மீளி தான்உம் –
நேரேசெல்லும் கதி வாய்ந்த வெவ்விய குதிரை பூண்ட நெடிய தேரையுடைய
வீரனாகிய சந்தனுவும்,- விடையவன் ஆதலால்-, காளி வந்து கலந்தனள்-; கங்கை
வேய் தோளிஉம் – கங்கையென்ற மூங்கில்போலுந் தோளையுடையாளும்,
முன்னமே,புயம்தோய்ந்தனள் – (அந்தமன்னவனை) மணந்தாள்; (எ -று.)
விடையவன் – விடையைவாகனமாகவுடையவ னென்றும், விடை
போல்பவனென்றும்சிலேடைவகையால் இருபொருள்படும். விருஷப வாகனனாகிய
சிவபிரானைக் காளி மணத்தலும், கங்காதேவி கூடியிருத்தலும் இயல்பேயென்ற
கருத்துஇதில்விளங்குதல் காண்க. “ஸ்வீக் ருத்யகாளீம் கிரிஜாமிவேச:” என்றது,
பாலபாரதம்.காளியென்பது, யோஜநகந்திக்கு வழங்கும் பெயர்; இச்சொல்
பார்வதியினமிசமானபத்திரகாளியையும் காட்டும். விடையவன் என்பது,
இடபக்குறியையுடைய வருணனதுஅமிசமானவன் என்று சந்தனுவைக்
காட்டுமென்றாரு முளர்.
கங்கையின் கரைக் கண்ணுறு காரிகை
கொங்கை இன்பம் குலைந்தபின், மற்று அவள்
எங்கை என்ன யமுனையின்பால் வரும்
மங்கை இன்பம் மகிழ்ந்தனன், மன்னனே.-சந்தனு காளியின் இன்பத்தில் மகிழ்தல்.
கங்கையின் கரை – கங்கையின்கரையிலே, கண்ணுறு-
காணப்பெற்ற,காரிகை – கங்கையின் பெண்தெய்வத்தின், கொங்கை இன்பம்-
தனங்களைத்தழுவுவதனாலான இன்பம், குலைந்தபின் – அழிவுற்ற பின்பு,-
மற்றவள் எங்கை என்ன- அந்தக்கங்காதேவியின் தங்கையென்னுமாறு,
யமுனையின்பால் வரும் மங்கை -யமுனாநதியின் கரையிலே வந்த பெண்ணின்,
இன்பம் – இன்பத்தை, மன்னன் -சந்தனுராசன், மகிழ்ந்தனன்-; (எ-று.)
வீடுமன் கழல் வேந்தர் வணங்கிட,
நாடும் நல் நெறி நாளும் நடத்திட,
நீடு மன்னனும் நேரிழைமேல், மலர்த்
தோடு மன்னு சுரும்பு என வீழவே,
இரண்டுகவிகள் – குளகம்: வீடுமன் அரசமுறையை நடாத்த,
மன்னவன் அந்தக்காளியினிடத்துப் புதல்வரைப் பெறுதலைக் கூறும்.
வீடுமன்-,-கழல்வேந்தர் வணங்கிட – வீரக்கழலை யணிந்த
மன்னவர்வணங்காநிற்க, நாடும் நல் நெறி – ஆராய்ந்து செய்தற்கு உரிய நல்ல
செங்கோல்முறையை, நாள்உம் நடத்திட – நாடோறும் நடத்தாநிற்க,- நீடு
மன்னன்உம் -பெருமைமிக்க சந்தனுவரசனும், நேரிழைமேல் – அழகிய
ஆபரணங்களையணிந்தபெண்ணினிடத்து, மலர் தோடு மன்னு சுரும்புஎன வீழ –
மலரிதழில் மொய்க்கின்றவண்டுபோல விரும்பி வீழாநிற்க,- (எ-று.)
-“செங்கண்ணி- மைந்தரிருவரையீன்றனள்” எனத் தொடரும்.
மன்னனுக்கு வண்டும், காளிக்கு மலரிதழும், போகத்துக்குத் தேனும்
உவமையாம். இளவரசனாகிய வீடுமனிடத்து அரசப் பொறுப்பைச் சந்தனுமன்னன்
ஒப்பித்துப் பெண்ணின்பத்தை விரும்பிநின்றா னென்க.
அன்ன நாளில், அருக்கனும் திங்களும்
என்ன, மைந்தர் இருவரை ஈன்றனள்,
மன்னன் ஆவி வடிவு கொண்டன்ன மெய்க்
கன்னபூரம் கலந்த செங் கண்ணியே.–சத்தியவதி மைந்தர் இருவரைப் பெறுதல்
மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய் கன்னபூரம் கலந்த
செங் கண்ணி – சந்தனுமன்னவனுடைய உயிரே ஒரு வடிவுபடைத்தாற்போன்ற
உடலையுடையவளாய்க் காதணிவரையில் நீண்ட செவ்வரிபரந்த கண்களையுடையளானகாளியானவள், அன்ன நாளில் – அந்தக்காலத்திலே,
அருக்கன்உம் திங்கள்உம் என்ன- சூரியனும் சந்திரனும் என்னும்படி, மைந்தர்
இருவரை ஈன்றனள் – இரண்டுபுத்திரரைப் பெற்றாள்;(எ-று.)
தேஜோவான்களென்பதை விளக்கச் சூரியசந்திரரை உவமை கூறியது.
கன்னபூரம் = கர்ணபூரம்: காதைநிரப்பவதென்ற காரணம் பற்றிக் காதணியைக்
காட்டும்வடசொல்.
சித்திராங்கதன், செப்பு நலனுடை
மெய்த்த சீர்த்தி விசித்திரவீரியன்,
இத் திறத்தர் இருவரும், தம்முனால்
ஒத்த கல்வியர் ஆயினர், உண்மையே.-பிறந்தபுத்திரரை வீடுமன் உரியகாலத்திற் கல்வி பயிற்றுவித்தல்.
சித்திராங்கதன் – சித்திராங்கதனும், செப்பு நலன் உடை மெய்த்த
சீர்த்தி – (யாவராலும்) பாராட்டிச்சொல்லுதற்கு உரிய அழகமைந்து உண்மையான
மிகுபுகழைப் பெற்ற, விசித்திரவீரியன் – விசித்திரவீரியனும், இ திறத்தர்
இருவர்உம் -இப்படிபட்டவரான இரண்டுமைந்தரும், தம்முனால் – தமது
அண்ணனான வீடுமனால்,ஒத்த கல்வியர் ஆயினர் – ஒத்தகல்விமான்களாயினர்:
உண்மை ஏ-;
இச்செய்யுள், சிலபிரதிகளில் “சித்திராங்கதன் சித்திரவீரனென், றித்தராதிபன்
மைந்தரிருவரும், தத்தமன்பொடுதம்முன் பதந்தழீஇ, யொத்த
கல்வியராயினருண்மையால்” என்று காணப்படுகின்றதென்ப. சித்திராங்கதன்
இறந்துபட,விசித்திரவீரியனே இராசங்கத்துக்கு உரியவனானதால், அவனுக்கு
‘மெய்த்தசீர்த்தி’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
மதி நெடுங் குல மன்னனை நண்பினால்,
விதி, அனந்தரம், விண்ணுலகு ஏற்றினான்;
நதியின் மைந்தனும், ‘நம் புவிக்கு எம்பியே
அதிபன்’ என்று, அரியாசனத்து ஏற்றினான்.-சந்தனுவுக்குப் பின் சித்திராங்கதன் அரசனாதல்-சந்தனு விண்ணுலகடைய, வீடுமன் சித்திராங்க
தனைச் சிங்காசனத்தேற்றுதல்.
அனந்தரம் – பின்பு, மதி நெடுங் குலம் மன்னன்- சந்திரனுடைய
பெருமைபெற்ற குலத்துத் தோன்றிய அரசனை, விதி – ஊழ்வினைக்குரியகடவுள்,
நரையினால் – கிழத்தனத்தினால், விண் உலகு ஏற்றினான் – வானுலகமேறச்
செய்தான்:நதியின் மைந்தன்உம் – கங்காநதிக்குப்புதல்வனாகிய வீடுமனும், ‘நம்
புவிக்கு -நம்முடைய பூமிக்கு, எம்பிஏ – என்தம்பியே, அதிபன் –
தலைவனாவன், ‘என்று -என்றுசொல்லி, அரி ஆசனத்து ஏற்றினான் –
சிங்காதனத்திலேறச் செய்தான்; (எ -று.)
வயசுமுதிர்ந்ததனால் சந்தனுமன்னன் வானுலகடைய, சித்திராங்கதனை
வீடுமன்அரசனாக்கினனென்பதாம். நரைகாரணமாகவிதி சந்தனுவை வானுலகேற்ற,
வீடுமனும்தம்பியை அரியாசனத்தேற்றினான் என்று சமத்காரமாகக்கூறினார். இங்கு
‘மன்னனைநண்பினால்’ என்றபாடம், பொருள் சிறவாமை காண்க;
‘மன்னனரையினால்’ என்பதைப்படிக்கத் தெரியாமையால் நேர்ந்த
தவறாயிருக்கலாம்; “ததோவிதிர்விஸ்ரஸயோபகூடம் – நரேந்த்ரம்
ஆரோஹயதிஸ்ம நாகம் – பீஷ்மோபிசஸ்த்ராஸ்த்ரவிதம் குமாரம் – சித்ராங்க
தம் பௌரவரராஜ்யபீடம்” என்றபாலபாரதமும் காண்க: இந்த ச்லோகத்தில்;
விஸ்ரஸயா – நரையினாலென்றுபொருளாம்
எங்கள் நாமம் இவன் கவர்ந்தான்’ என,
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன்,
தொங்கல் மா முடி சூடிய வேந்தனை
அம் கையால் மலைந்து, ஆர் உயிர் கொள்ளவே,-சித்திராங்கதன் கந்தருவனால் கொலையுண்டு இறத்தல்-சித்திராங்கதன் அப்பெயர்கொண்ட கந்தருவனால் இறத்தல்.–இரண்டுகவிகள் – குளகம்.
(இ-ள்.) ‘எங்கள் நாமம் – எம்முடையபேராகிய சித்திராங்கத னென்பதை,
இவன்கவர்ந்தான் – இவன் திருடிக்கொண்டான்,’ என – என்று வெகுண்டு, ஒரு
கந்தருவஅதிபன் – (சித்திராங்கதனென்று பேர்பூண்ட) ஒரு கந்தருவராசன்,
கங்குல் வந்து -இராப்போதில் வந்து, தொங்கல் மா முடி சூடிய வேந்தனை –
அரசாங்கத்துக்குரியமாலையுடனே கிரீடமும் தரித்துள்ள
அந்தச்சித்திராங்கதமன்னனை, அம் கையால்மலைந்து – (தன்னுடைய)
அழகியகையினாற் பொருது, ஆர் உயிர் கொள்ள -அருமையான
உயிரைக்கவர்ந்துகொண்டிட, (எ-று.)- “முடிசூட்டினான்” (115) என்றுஇயையும்.
வீடுமனிடத்து அச்சத்தினால் பகலில் வராமல் இரவில்வந்து கவர்ந்து சித்திராங்க
தமன்னனைக் கொன்றிட்டனன், அப்பெயர் பூண்ட கந்தருவனென்க.
பேரைக்கொண்டிருத்தலை, நாமம் கவர்ந்தனென்றது. அஸந்நிதௌ ஸிந்துபுவ:
ஸ்வநாம்நா கந்தர்வவர்யேண ரணே நிஜக்நே [கங்காபுத்திரரான வீடுமருடைய
அஸந்நிதானத்தில் போரிலே தன்பேரைக்கொண்ட கந்தருவனால் சித்திராங்கதன்
கொல்லப்பட்டான்] என்று பாலபாரதத்திலுள்ளது. வியாசபாரதத்தில் “சித்திராங்கதன்
தன் வீரத்தினால்பூலோகத்து அரசர்களைவென்று அவர்களை ஒருபொருட்டாக
நினையாமல் தேவர்களையும் எதிர்த்தானாக, பலவானான சித்திராங்கதனென்ற
கந்தருவன் ‘நீ என்பேர் கொண்டிருப்பதை மாற்றி வேறொரு பெயராவது கொள்க:
இல்லாவிடின் என்னோடாவது பொருக’ என்ன, இந்த மன்னவன்
அந்தக்கந்தருவனோடு பொருதற்கு இசைய, இருவர்க்கும் மூன்று வருஷங்கள்
ஹிரண்யவதீயென்ற நதியின்கரையில் போர் நடக்க, முடிவில் மிக்கமாயையில்வல்ல
சித்திராங்கத கந்தருவன் இவனைக் கொன்றிட்டான்” என்று உள்ளது.
எம் முன் அன்றி இறந்தனன்’ என்று, தாய்
விம்மு நெஞ்சின் மிகு துனி மாறவே,
தெம் முன் வல்ல விசித்திரவீரனைத்
தம்முன் மீளத் தனி முடி சூட்டினான்.-தாயின் மனவருத்தம் நீங்க, விசித்திரவீரியனுக்கு
வீடுமன் முடிசூட்டுதல்.
எம்முன் அன்றி – எம்முடைய கண்ணெதிரிலேயல்லாமல்,
இறந்தனன் -(சித்திராங்கதன்) இறந்திட்டான்,’ என்று-, விம்மு – துயரப்படுகின்ற,
தாய் – தாயின், நெஞ்சின் – மனத்திலுள்ள, மிகுதுனி – மிக்க வருத்தம், மாற –
நீங்குமாறு,- தெம் முன்வல்ல -(தம்) பகைவர் முன்னிலையில்
வல்லமைகாட்டற்குரியனான, விசித்திர வீரனை -விசித்திரவீரியனென்பானை,
தம்முன் – அண்ணனாகிய வீடுமன், மீள – மறுபடியும், தனி முடி சூட்டினான் –
ஒப்பற்ற முடியைத் தரிப்பித்தான்; (எ-று.)
சித்திராங்கதன் தம்பியாகிய விசித்திரவீரியனுக்கே வீடுமன் இராச்சிய
பட்டாபிஷேகஞ்செய்தா னென்க. மூன்றாமடி, 112 – ஆம் பாடலின்
பாடபேதத்திற்குஏற்ப “தெம்முன்வென்ற நற்சித்திர வீரனை” என்று சில
பிரதிகளிற் காணப்படுகின்றது.
சிற்பொருள் பரமான பொருட்கு எதிர்
உற்பவிக்கும் உபாயம்-அது என்னவே,
வில் படைத் திறல் வீடுமன் வாய்மையால்,
பொற்பு உற, புவி பூபதி ஆளும் நாள்,-விசித்திரவீரியன் அரசுபுரிதல்.
சித் பொருள் – சித்தாயிருக்கின்ற ஆன்மா, பரம் ஆன பொருட்கு-
பரம்பொருளுக்கு, எதிர் – எதிரிலே, உற்பவிக்கும் – தோன்றுகின்ற, உபாயம்
அது என்ன – தன்மைபோல,- வில் படை திறல் – வில்லென்றஆயுதத்தின்
வலிமையையுடைய, வீடுமன் – வீடுமனுடைய, வாய்மையால் -மொழியினால், பூபதி –
விசித்திரிவீரியராசன், பொற்புஉற – அழகுபொருந்த, புவிஆளும் நாள் – அரசாட்சி
புரியுங்காலத்தில்,- (எ -று.)- “ஆள்விட” என்று தொடரும்.
“அநேநஜீவேந ஆத்மநாநுப்ரவிச்யநாமரூபேவ்யாகரவாணி [இந்த
ஜீவன்மூலமாகநான் எதிலும் உட்புகுந்து நாமரூபங்களை யுண்டாக்கக் கடவேன்]”
என்றுபரம்பொருள் சங்கற்பித்துக் கொள்ள அதனால் இந்தச் சராசரம்
தொழிற்படுதல்போலவே, வீடுமன் மொழிப்படியே விசித்திரவீரியன் புவியை
அரசாட்சிபுரிந்தானென்பதாம். சிற்பொருட்பரமான பொருட்கு என்ற பாடத்தில்,
ஞானப்பொருளாகிய பரம்பொருளுக்கு என்று உரைத்து, உற்பவிக்கும் என்பதற்கு
எழுவாய் வருவிக்க.
காசி மன்னவன், ‘கன்னியர் மூவரும்
தேசின் மிக்கவர்ச் சேர்வர்’ என்று ஆள் விட,
மாசு இல் தொல் குல மன்னவர் ஈண்டினார்,
மூசி வண்டுஇனம் மொய்ப்பது போலவே.-காசி மன்னன் மகளிர் சுயம்வரம்
காசிமன்னவன்-, ‘கன்னியர் மூவர்உம் – (தன்) புத்திரியரான
மூன்றுகன்னிகைகளும், தேசில் மிக்கவர்ச்சேர்வர் – வலிமையினால்
மேம்பட்டவரைக் (க்கணவராக) அடைவர்,’ என்று-, ஆள் விட – தூதுவரை
(எங்கும்) அனுப்ப,- வண்டுஇனம் மூசி மொய்ப்பதுபோல- வண்டுகளின் கூட்டம்
நெருங்கி மொய்த்துக்கொள்ளுவது போல, (அக்கன்னிகையரின் மணமாலையை
வேண்டி), மாசுஇல் தொல்குலம் மன்னவர் – குற்றமற்ற பழமையான குலத்துத்
தோன்றிய அரசர்கள், ஈண்டினார்- (அந்தக் காசிநகரில்) நெருங்கினார்கள்;
வரித்த மன்னர் மறம் கெட, வன்பினால்
திரித்தும் எம்பியைச் சேர்த்துவல், யான்’ எனா,
தரித்த வில்லொடும், தன் இளவேந்தொடும்,
விரித்த வெண்குடை வீடுமன் ஏகினான்.-அந்தக்கன்னியரைத் தன்தம்பிக்கு மணம்புரிவிக்கு
மாறு வீடுமன் ஆண்டுச் செல்லுதல்.
வரித்த – (மங்கையரால்) விரும்பப்பட்ட, மன்னர் –
அரசரின்,மறம் – வலிமை, கெட – அழியுமாறு, வன்பினால் – (என்)
வலிமையினால், திரித்துஉம்- (அவர்களை) ஓடச்செய்தாவது, எம்பியை –
என்தம்பியை, சேர்த்துவல் -(அக்கன்னியரைச்) சேருமாறு செய்வேன், ‘ எனா –
என்று கருதி,- விரித்த வெண்குடை வீடுமன் – மலர்த்திய வெண்கொற்றக்
குடையையுடைய வீடுமன்,- தரித்தவில்லொடுஉம் – தாங்கிய வில்லுடனும், தன்
இளவேந்தொடுஉம் – தன் (தம்பியாகிய)இளைஞனான அரசனொடும், ஏகினான் –
சென்றான்;
திரித்தும், உம்மை – உயர்வுசிறப்பு. தம்பியோடுசென்றதாகப்
பாலபாரதத்திலாவது,வியாசபாரதத்திலாவது இல்லை. தம்பியோடு சென்றதாகக்
கூறுவதில், யாதொரு நயமும்காணப்படவில்லை. இனி, தன்னிளவேந்தொடும் –
தன்னிளவேந்தினிடத்தில், ‘வரித்தமன்னர் மறங்கெட வன்பினால் திரித்தும்
எம்பியைச் சேர்த்துவல்யான் ‘ என்று சொல்லி,தரித்தவில்லொடும் வீடுமனேகினான்
என்று இங்குப் பொருள் கூறிவிடலாம்:ஆயினும், 120-ஆஞ் செய்யுளில்
“வெஞ்சராசனவீரனும் தம்பியும், மஞ்சமேறிமணித்தவிசேறினார்” என்றும், 124-
ஆஞ்செய்யுளில் “யானையென்னவிளவலொடேகினான்” என்றும், 126-இல்
‘மைந்தர்தங்கள் வளநகர் மன்னினார்’ என்றும் வருவதனால், அங்ஙன்
கூறமுடியவில்லை: இனி, அந்தச்செய்யுள்களில், “வெஞ்சராசன வீரனுமேகியே,
மஞ்சமேறிமணித்தவிசேறினான்,” “யானையென்னவிரைவினொடேகினான்”,
“மைத்தன்றன்ன வளநகரெய்தினான்” என்றாற்போன்றுபாடமிருப்பின் நலம்
அரவ மா நதி அன்னையும், தன் மகன்
வரவு அறிந்து, வழி இளைப்பு ஆற்றினாள்,-
பரவி வந்து, பனி மலர்த் தென்றலை
விரவு நுண் துளி மீது எறி ஊதையால்.-இடைவழியில் வீடுமன் இளைப்பாறுதல்.
அரவம் மா நதி அன்னைஉம் – பேரொலிபடைத்த சிறந்த
நதியாகிய(கங்காநதியென்ற) தாயும்,- தன் மகன் வரவு அறிந்து – தன்
புதல்வனாகியவீடுமன்வருவதை யறிந்து, பரவிவந்து-, பனி மலர் தென்றலை
விரவு – குளிர்ந்தமலர்மணத்தோடுவருகின்ற தென்றலோடு கலந்துள்ள, நுண்
துளி – நுண்ணியநீர்த்திவலையை, மீது எறி – மேலே வீசுகின்ற, ஊதையால் –
காற்றினால், வழிஇளைப்பு- (அவ்வீடுமனது) வழிகடந்துவந்ததனாலான களப்பை,
ஆற்றினாள் -போக்கினாள்; (எ-று.)
நறுமலர்மணங்கூடிய நீர்த்திவலைகள் கலக்கப்பெற்றுப் பரவி வந்து
மீதெறிகின்றதென்றற்காற்றின்மூலமாய்க் கங்கையாள் வீடுமனுடைய
வழியிளைப்பை மாற்றினளென்க.தென்றலாய் என்றும் பாடம்.
கஞ்ச வாவி கலை மதி கண்டென,
நெஞ்சு அழிந்து நிருபர் குழாம் தொழ,
வெஞ் சராசன வீரனும் தம்பியும்,
மஞ்சம் ஏறி, மணித் தவிசு ஏறினார்.-நிருபர்குழாம் நெஞ்சழிந்துதொழ,வீடுமன்
தம்பியோடு மஞ்சத்தின்மீது மணித்தவிசு ஏறுதல்.
கஞ்சம் வாவி – தாமரைத்தடாகம், கலை மதி -பதினாறு
கலைகளையும்படைத்த சந்திரனை, கண்டுஎன – கண்டாற்போல
[மதியைக்கண்டதடாகத்திலுள்ள கமலமலர்கள் போல], நிருபர்குழாம் – மன்னவரின்
கூட்டம், நெஞ்சு அழிந்து – மனம்முரிந்து, தொழ- வணங்காநிற்க,- வெம் சராசனம்
வீரன்உம் தம்பிஉம் – கொடியவிற் படையில் வல்லவீரனாகிய வீடுமனும் (அவனது)
தம்பியாகிய விசித்திரவீரியனும், மஞ்சம் ஏறி -(அரசர்கள் தங்குமாறு
அமைக்கப்பட்டுள்ள) கட்டிலின்மீதுஏறி, மணி தவிசு ஏறினார் –
(அம்மஞ்சத்திலிட்டிருந்த) அழகிய ஆசனத்தின்மேலே யேறினார்கள்;
(எ-று.)- ‘மதிகண்டென ‘ என்ற உவமைக்கேற்ப ‘வெஞ்சராசனவீரனுமேகியே’
என்றாற்போன்றபாடமே சிறத்தல் காண்க.
‘குருத்தலம்தனில் கூறிய வஞ்சினம்,
ஒருத்தர் அன்று, அறிவார் உலகோர் பலர்;
விருத்தன் வந்தனன்; மேல் இனி ஏது இவன்
கருத்து?’ எனா, மனம் காளையர் கன்றினார்..-அது கண்டு, அரச குமாரர்கள் மன வாட்டமுறுதல்-வீடுமன் மஞ்சத்தவிசிலிருப்பது கண்டு, அரசக் காளையர் மனங் கன்றுதல்.
குருத்தலந்தனில் – குருக்ஷேத்திரத்திலே, கூறிய – (வீடுமன்)
சொன்ன,வஞ்சினம் – (தான் மணப்பதில்லையென்ற) சபதமொழியை, அறிவார் –
அறிபவர்,ஒருத்தர் அன்று – ஒருவர் அல்லர்: உலகோர் பலர் – உலகத்தவர்
பலரும்(அறிபவரே): (அப்படியிருக்கவும்), விருத்தன் – கிழவனாகிய வீடுமன்,
வந்தனன் -(மணமாலைபெற வேண்டிஇவ்விடம்) வந்துள்ளான்: இனிமேல் இவன்
கருத்துஏது -இனிமேலே இவன்எண்ணம் என்னவோ!, எனா – என்று, காளையர்
-காளைப்பருவமுள்ள (வராய்ச் சுயம்வர மணமாலைபெறும் பொருட்டு வந்த)
அரசகுமாரர்கள், மனம் கன்றினார் – மனம் வாட்டமுற்றார்கள்;
மணப்பதில்லையென்று முன்னமே வஞ்சினங்கூறிக் கிழவனுமாய்விட்ட
இவன் இப்போது கன்னியர் மணமாலைசூட்டும் இவ்விடத்தில் வந்ததன்
நோக்கமென்னையோ? ‘ என்று அவன் வந்த காரணந்தெரியாமையால்
மனம்வாடினர்அரசகுமார ரென்பதாம். இதனாலும், தம்பியுடன் வீடுமன் சென்றில
னென்பது குறிப்பிக்கப்படுதல் காண்க. யமுனைக்கரையில் வசித்த தாசபூபதியின்
மனந் தெளியஅங்கு அவையத்தோர் கேட்குமாறு மணஞ்செய்வதில்லை யென்று
சபதஞ்செய்ததாகவந்துள்ளதனாலும், இங்கு ‘குருத்தலந்தனிற் கூறியவஞ்சினம்’
என்றுவருதலாலும்அவன் சபதஞ்செய்த அந்த இடமும் குருக்ஷேத்திரத்திற்
சேர்ந்ததென்றுகொள்ளவேணும். முதனூலில் “வீடுமன் மணமாலைபெறுமிடத்து
வந்திருந்ததுகண்டசபையிலுள்ள அரசகுமாரர் ‘கங்கா நதியின் புத்திரனான
இந்தக்கிழவன்பிரதிஜ்ஞைதவற இங்கு ஏன் வந்தான்?’ என்று சொல்பவர்களாய்க்
கைகொட்டிச்சிரித்தார்கள்” என்று உள்ளது
இருந்த மன்னர், ‘இவர் இவர்’ என்று, உளம்
பொருந்த, மற்று அவர் பொற்புடைத் தேசு எலாம்
திருந்த நின்று, செவிலியர் கூறவே,
முருந்த வாள் நகை மூவரும் தோன்றினார்.-மாலையுடன் நெருங்கிய கன்னியர் வீடுமனது நிலை கண்டு ஐயுறுதல்-கன்னியர்மூவரும் வர, செவிலியர் சுயம்வரமண்டபத்து வந்திருந்த மன்னவரைக் காட்டி இன்னாரின்னாரென்று அறிவித்தல்.
செவிலியர் – செவிலித்தாய்மார், நின்று- (எதிரே) நின்று,-
இருந்தமன்னர் – (சுயம்வரத்தின்பொருட்டு அந்தமண்டபத்து) வந்திருந்த
அரசர்களை, ‘இவர்இவர் – இவ்வரசர் இத்தன்மையர்,’ என்று-, உளம் பொருந்த-
மனத்திற்படுமாறு, அவர் பொற்பு உடை தேசு எலாம் – அம்மன்னவரின்
அழகுபொருந்தியபராக்கிரமங்களையெல்லாம், திருந்த கூற – செவ்வனே
கூறும்படி, முருந்தம் வாள்நகைமூவர்உம் – மயிலிறகினடிபோன்றஒளிபொருந்திய
பற்களையுடைய அந்தக்காசிமன்னவன்கன்னியர்மூவரும், தோன்றினார் –
(அம்மண்டபத்து) வந்தார்கள்; (எ-று.)
மணமாலைசூட்டவருங் கன்னிமார்க்கு அரசருடையசரித்திரங்
களையுணர்ந்தமகளிர் இவர் இன்னரென்றுகூறுதல், மரபு. முருந்தம், அம் –
சாரியை.முருந்து அ எனவும் பிரிக்கலாம். மற்று – அசை.
கையில் மாலை இவற்கு’ எனக் கன்னியர்
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்,
வைய மன்னன் வய நிலை நோக்கியே,
ஐயம் உற்றனர், அன்புறு காதலார்.–மாலைசூட்டவந்தகன்னியர் வீடுமன்நிலையைக்கண்டு ஐயுறுதல்.
கையில் மாலை – கையிலுள்ளமாலையானது, இவற்கு- இந்த
மன்னவனுக்கு (ச் சூட்டுவது), என – என்று, வெய்ய – விரும்பிய, நெஞ்சொடு –
மனத்துடனே, மின் என வந்தவர் கன்னியர் – மின்னல் போல ஒல்கியொசியுந்
தன்மையுடன் வந்த அந்தக் கன்னியர், அன்பு உறுகாதலார் – அன்புற்ற
காதலையுடையராக (இருந்தும்), வையம் மன்னன் வயநிலை நோக்கி –
உலகத்துக்குஅரசனாகிய வீடுமனது வயசின் நிலைமையைநோக்கி, ஐயம்
உற்றனர் -(கிழவனாயிருக்கிற இவனுக்கு மாலைசூட்டுவது எப்படி? என்று)
சங்கைகொண்டுபின்வாங்கினார்கள்; (எ-று.)
செவிலியர் மன்னரைப்பற்றிக் கூறியதுகேட்ட கன்னிமார், வீடுமனுக்கு
மாலைசூட்டுவது என்று விரும்பிவந்தவராய், அவன் கிழவனாயிருப்பது கண்டு
பின்வாங்கின ரென்றவாறு. “ஆத்மாநம் ஆலோக்யஜராஸமேதம் – அந்யத்ர
யாந்தீ;” என்று பாலபாரதத்து வருவதுங் காண்க: வியாசபாரதத்தும் இவ்வாறே
வருகின்றது.வயஸ் நிலை என்ற இரண்டுசொற்கள் சேர்ந்து வயநிலையென்று
திரிந்துவந்ததென்க.இனி இதனைத் தென்மொழித் தொடராகக்
கொண்டுவீரநிலையென்றுபொருளுரைத்து, தாம் எவனோ ஒரு ராஜகுமாரனுக்கு
மாலைசூட்டலாமென்றுஉத்தேசித்து விருப்புள்ள நெஞ்சோடுவந்த அக்கன்னிமார்,
இடையிலேவீரநிலையோடுநிற்கும் வீடுமனைக்கண்டு ‘நாம் பிறனுக்கு
மாலைசூட்டினால் இவன்என்ன செய்வானோ? என்று ஐயமுற்றா ரென்று இச்
செய்யுளுக்கு வலிந்து பொருள்கூறுவர், பலர்.
ஏனை வேந்தர் எதிர், இவரைப் பெருந்
தானை சூழ் மணிச் சந்தனத்து ஏற்றியே,
சோனை மா மதம் சோரும் கட தட
யானை என்ன இளவலொடு ஏகினான்.-வீடுமன் மகளிரைக் கவர்ந்துகொண்டு செல்லுதல்-அப்போது மன்னவர்பார்த்துநிற்க, அந்தக்கன்னி
யரைத் தேர்மீது ஏற்றித் தம்பியோடு வீடுமன் தன்நகர் நோக்கிச் செல்லுதல்.
(காசிராசன்கன்னியர் மனத்துச் சங்கைகொண்டு மாலை சூட்டப்
பின்வாங்குகையில்), ஏனை வேந்தர் எதிர் – மற்றை யரசரெதிரில்தானே,
இவரை -இந்தக்கன்னிமார்மூவரையும், பெருந்தானை சூழ் – பெருஞ் சேனையாற்
சூழப்பெற்ற,மணி சந்தனத்து ஏற்றி – அழகிய தேரின்மீது ஏற்றிக்கொண்டு,-
சோனை மா மதம்சோரும்- விடாப்பெருமழைபோல மிக்கமதம் பெருகப்பெற்ற,
கடதடம் – மதம்பெருகும் கபோலத்தையுடைய, யானை என்ன – யானை போல,
(வெகுவிரைவாக), இளவலொடு – தம்பியுடனே, ஏகினான்-;
முறையினால் அன்றி, மொய்ம்பின் கவர்வது எக்
குறையினால்?’ என, கோக்குலம் கூடி வந்து,
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை,
பிறைமுகக் கணையால் பிளந்து, ஓட்டினான்.-எதிர்ந்த மன்னரை ஓட்டி, வீடுமன் தன் நகரை அடைதல
முறையினால்அன்றி, – முறைமையினாலல்லாமல், மொய்ம்பின் –
வலிமையினால், கவர்வது – பறித்துக்கொண்டுசெல்வது, எ குறைவினால் –
(நம்மிடத்துள்ள) எந்தக்குறைவினால்?’ என – என்று சொல்லிக்கொண்டு,
கோகுலம் -அரசரின்திரள், கூடிவந்து – ஒன்று சேர்ந்துவந்து, இறைவனோடு –
வீடுமனோடு, எதிர்எற்ற – எதிராகப் பொராநிற்க,- (அப்போதுவீடுமன்),- அ
வீரரை- (தன்னை யெதிர்த்த)வீரரான அம் மன்னவர்களை, பிறைமுகம்
கணையால் – அர்த்தசந்திரபாணங்களால்,பிளந்து – காயப்படுத்தி, ஓட்டினான்-
ஓடச்செய்தான்; (எ -று.)
நாம் வலிமையாற் குறைவற்றவராக இருக்கையில் நம்முன் இக்கன்னியரைக்
கவர்ந்துசெல்வது தக்கதன்று என்ற கருத்தினால் ‘மொய்ம்பிற்கவர்வ
தெக்குறையினால்’ என்றனர். ‘ஏற்றவவ்வீரரை, ஏற்றவில்வீரரை’ என்றும் பாடம்
முந்துறப் பெறும் மூவரொடு, ஆடு அமர்
விந்தைதன்னையும் வேந்தர் கொடுத்தலால்,
சந்தனுப் பெயர்த் தார் முடி மன்னவன்
மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார்.-வீடுமன் வெற்றிபெற்றுக் கன்னிமாரைக் உடன் கொண்டு தன் நகர் சார்தல்.
முந்துற பெறும் – முன்னமே பெற்ற, மூவரொடு –
(அந்தக்கன்னிமார்).மூவருடனே, ஆடு அமர் விந்தைதன்னைஉம் – (பகையைக்)
கொல்லுதலையுடையபோர்க்குஉரியவீரலட்சுமியையும், வேந்தர் – (எதிர்த்த)
மன்னவர், கொடுத்தலால்-, -சந்தனு பெயர் தார் முடி மன்னவன் மைந்தர் –
சந்தனு வென்ற பெயரொடுமாலையையும் கிரீடத்தையும் அணிந்தவனான
மன்னவனுடைய புதல்வராகிய வீடுமனும் விசித்திரவீரியனும், தங்கள் வளம் நகர்
மன்னினார் – தங்களுடைய வளப்பமுள்ள நகரத்தைச் சேர்ந்தார்கள்; (எ-று.)
விந்தியமலையில் வசிப்பவளாதலால் வீரலட்சுமிக்கு ‘விந்த்யவாஸிநீ’ என்று
பெயர்: அச்சொல், விந்தையெனவரும்.
சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
‘எமர்களுக்கு இஃது இயற்கை அன்று’ என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான்.-போரிற் சற்று முந்திய சாலுவனிடத்து மனஞ்சென்ற தறிந்து, அம்பையை வீடுமன் அவனிடத்துப் போக்குதல்.
சமரில் – (எதிர்த்துப்பொருதபோது) அந்தப்போரில், முந்திய –
(சற்று)முற்பட்டவனான, சாலுவன்மேல்-, (அம்பை யென்பவள்,) மனம் – (தன்)
நெஞ்சம்,அமர நின்றது – பொருந்த நின்றதை, அறிந்த உழி – (வீடுமன்)
அறிந்தபோது,-அம்பையை- (அந்த) அம்பையை (நோக்கி, ‘எமர்களுக்கு –
எம்மைச்சேர்ந்தோர்க்கு,இஃது -(பிறர்மீது மனஞ்செல்லுங்கன்னிகையைக்
கொள்ளுகின்ற) இது, இயற்கை அன்று- தகுதியன்று,’ என்ன – என்றுசொல்லி,
அமர் அழிந்த அவனுழை போக்கினான் -போரில் தோற்ற அந்தச்சாலுவனிடமே
(அவளை) அனுப்பினான்; (எ-று.)
சாலுவன் – சாலுவதேசத்து ராசன்: இவன்பெயர் பிரமதத்தனென்பது: இவன்
வீடுமனுடன் எதிர்ப்போரில் வலிமையிற்சற்று முந்தினா னென்க.
அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பதி
எம்பியே, எழிலால்!’ என்று, இசைவுற,
தம்பிதன்னைத் தனஞ்சயன்தன் எதிர்
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான்.-அம்பிகை அம்பாலிகைகளைத் தன் தம்பிக்கு வீடுமன்
மணம்புரிவித்தல்.
‘எழிலால்- அழகினாலேற்ற, எம்பி ஏ – என்
தம்பிவிசித்திரவீரியனே, அம்பிகைக்குஉம்-, அம்பாலிகைக்குஉம்-, பதி –
கணவனாவான்,’ என்று-என்றுசொல்லி, இசைவுஉற – (அவர்கள்)
மனஞ்சம்மதிக்க,தம்பிதன்னை-, தனஞ்சயன்தன் எதிர் – அக்கினிக்கு எதிரே,
வம்பினால் மிகு – நறுமணத்தினால்மிக்க, மா மணம்- சிறந்த கலியாணத்தை,
சேர்த்தினான் – நடப்பித்தான்; (எ-று.)
சென்ற அம்பையைத் தீ மதிச் சாலுவன்,
‘வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்’
என்று இகப்ப, இவனுழை மீளவும்,
மன்றல் வேண்டினள், மன்றல் அம் கோதையாள்.-சாலுவன், பகைஞன் கவர்ந்த உன்னைக் கொள்ளே னென்றிட,
அம்பை மீண்டு வீடுமனைச் சார்தல்.
சென்ற அம்பையை – (தன்னிடம்) வந்துசேர்ந்த அம்பை
யென்பாளை,தீ மதி சாலுவன் – கெடுமதியையுடைய சாலுவனென்பவன், ‘வென்று
தெவ்வர் கவர்ந்தநின் – ஜயித்துப் பகைவர் கவர்ந்துபோன நினது, மெய் –
உடலை, தொடேன் -தீண்டேன்,’ என்று-, இகப்ப – (அங்கீகரியாது) புறக்கணிக்க,-
இவனுழை – இந்தவீடுமனிடத்தே, மீளஉம் – மறுபடியும், மன்றல்
அம்கோதையாள் – நறுமணமுள்ளஅழகிய மாலையையணிந்த அந்த அம்பை,
மன்றல் வேண்டினள் -மணஞ்செய்துகொள்ள இரந்தாள்; (எ-று.)- கற்பால்
வந்தவளைக் கடிதலால் ‘தீமதிச்சாலுவன்’ என்றது.
கங்கை மைந்தன், கடிமணம், காதல் கூர்
மங்கைதன்னை மறுத்தபின், மங்கையும்
செங் கண் நீர் எழ, சிந்தை செந் தீ எழ,
சங்கையோடு தன் தாதையை நண்ணினாள்.-வீடுமன் மணம்மறுக்க, அம்பை சங்கையோடு தன் தந்தையைச் சார்தல்.
காதல்கூர்- (விவாகஞ்செய்துகொள்ள வேணுமென்று) விருப்பம்
மிகுந்த,மங்கைதன்னை – (அம்பையென்ற) பெண்ணைநோக்கி, கங்கைமைந்தன் –
கங்கையின்புத்திரனான வீடுமன், கடி மணம்மறுத்த பின் – கடியென்று
ஒருபேர்கொண்ட மணத்தை (உடன்படாது) மறுத்திட்டபின்பு,- மங்கைஉம் – அந்த
அம்பையும்,- செங் கண் நீர் எழ – (வெகுளியாற்) சிவந்த (தன்) கண்களினின்று
கண்ணீர்பெருகவும், சிந்தை செந் தீ எழ – (தன்) மனத்திலே வெகுளித்தீச்
சொலிக்கவும், சங்கையோடு – (என்னசொல்லுவானோ) என்ற சங்கையுடனே, தன்
தாதையை – தன் தகப்பனை, நண்ணினாள் – சேர்ந்தாள்;
‘அம்பை வீடுமனால் நிராகரிக்கப்பட்டபின்பு தவத்தில் மன மூன்றியவளாய்க்
காட்டிற்குச்சென்றாள்’ என்ற இவ்வளவே பால பாரதத்திலுள்ளது: அன்னாள்
சிகண்டியான சரித்திரம் அங்குஇல்லை.
தாதை தாளினில் விழுந்து, சந்தனுவின் மைந்தன் இன்னல்
உரை தந்ததும்,
கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த
கோமகன் மறுத்ததும்,
பேதை கூற, மனம் நொந்து, இரங்கியவன், மிக்க
நண்பினொடு பின்னையும்,
தூதை ஏவி, மணம் உற்று இரந்தனன், விசும்பு உலாவு
நதி சுதனையே.-அம்பை நிகழ்ந்தவற்றைத் தந்தையிடஞ் சொல்ல, அன்னான்
மணந்துகொள்ளுமாறு வீடுமனிடத்துத் தூதரை யேவுதல்.
(நண்ணிய அம்பை), – தாதை தாளினில் விழுந்து – (தன்)
தந்தையின்பாதங்களிலே விழுந்து, சந்தனுவின் மைந்தன்- சந்தனுவின் குமாரனான
வீடுமன்,இன்னல் உரை – துன்பந்தரும் வார்த்தைகளை, தந்ததுஉம் –
சொன்னதையும்,கோதையால் – மணமாலைமூலமாக, உறவுகொண்டு கைதரல் –
சம்பந்தஞ்செய்துகொண்டு பாணிக்கிரகணஞ்செய்தலை, குறித்த – எண்ணிய,
கோமகன்-சாலுவ மகாராசன், மறுத்ததுஉம் – மணஞ்செய்துகொள்ள
உடன்படாததையும், பேதை கூற (தன்) பெண் சொல்ல,-(அது கேட்டு), மனம்
நொந்து-,இரங்கியவன் – இரக்கங்கொண்டவனான அப்பெண்ணின் தந்தை,
மிக்கநண்பினொடு -மிக்கசினேகத்தோடு, பின்னைஉம் – பின்னும், தூதை ஏவி –
தூதுவரை அனுப்பி,(அத்தூதன்மூலமாக), விசும்பு உலாவு நதி சுதனை –
ஆகாயத்திலுலாவுகின்ற நதியாகியகங்கையாளின் மகனாகிய வீடுமனை, உற்று-
அடைந்து, மணம் இரந்தனன் – (தன்மகளை) மணஞ்செய்து கொள்ளுமாறு
வேண்டினான்; (எ -று.)
கோதையால் – மணமாலைமூலமாக என்றபடி: கோதைபா லென்று
பாடமாயின்,தன்னைப் படர்க்கையாகக் கூறியதாகக் கொள்க. பின்னையும் என்ற
உம்மை, முன்புஅம்பை சென்றமையையும் தழுவும்.
இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினேழுகவிகள் – பெரும்பாலும்
ஒன்றுமூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும் ஈற்றுச்சீரொன்று விளச்சீரும்,
மற்றைமூன்றும்காய்ச்சீருமாகிவந்த எழுசீராசிரியவிருத்தங்கள்
போன தூதுவர் வணங்கி, இம் மொழி புகன்ற போது,
மொழி பொய்யுறா, மீனகேதனனை
வென்று, தன் கொடிய விரதமே புரியும் வீடுமன்,
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல்
வன்பொடு மறுத்தலால்,
ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை
தந்தைதனது அருளினால்,-தூதுவர் புகலவும் வீடுமன் மணம்மறுத்தல்.-இதுமுதல் நான்குகவிகள் – ஒருதொடர்.
போன தூதுவர் – (அங்குநின்று) சென்ற தூதுர்கள், (வீடுமனை
யடைந்து), வணங்கி-, இ மொழி புகன்ற போது – இந்த வார்த்தையைச்
சொன்னபோது,- மொழி பொய் உறா – (தான்) சொன்ன சொல் தவறாமல்,
மீனகேதனனை வென்று தன் கொடிய விரதம்ஏ புரியும் – மன்மதனைச்
செயித்துத்தன்னுடைய கொடிய விரதத்தையே நடத்துகின்ற, வீடுமன்-, – மானம்
வேல் நிருபன்மகள் குறித்த திரு மன்றல் – பெருமைபெற்ற வேற்படையைக்
கொண்டகாசிராசன்மகள் எண்ணிய சிறந்த விவாகத்தை, வன்பொடு மறுத்தலான்-
கடுமையாகமறுத்திட்டதனால், – அம்பை தந்தை – அந்த அம்பையின் தகப்பனான
காசிராசன்,-ஆன ஆதரவொடு – (தன்மகள் திருமணத்தைப்பற்றிக்) கொண்ட
விருப்புடனே,ஆகுலம் பெருக – துன்பம் மிக,- தனது அருளினால்,– (எ -று.)-
என்று (கூறினான்),என்று – மேல் 134 – ஆங் கவியோடு இயையும்.
மீனகேதனனைவென்று -காமவிகாரமில்லாமல் என்றபடி. மீனகேதனன் –
மீன்வடிவத்தைக் கொடியிலுடையவன்.
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன
சொல் மறுக்கினும்,
பரசுராமன் அருள் மொழி மறான்; அவனது இரு
பதத்திடை பணிந்து நீ
உரைசெய்தால், அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி
வந்து, நினை உவகையால்
விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து,
மீளவும் விளம்புமேல்,-தந்தையின் உரைப்படி அம்பை, உதவி
வேண்டிப் பரசுராமனைச் சார்தல்
வரிசையால் – சிறப்பினால், உயர் – மேம்பட்ட, அநேகம் மண்டலம்
மகீபர் – பல மண்டலிகரான அரசர்கள், சொன்ன-, சொல் – சொல்லை,
மறுக்கின்உம்- மறுத்தாலும், பரசுராமன்-, அருள்- கூறுகின்ற, மொழி-பேச்சை,
மறான்- (வீடுமன்)மறுக்கமாட்டான்: (ஆகையால்), -நீ-, அவனது இருபதத்திடை
பணிந்து – அந்தப்பரசுராமனுடைய உபயபாதங்களிலே நமஸ்கரித்து,
உரைசெய்தால் (உன் குறையைச்)சொன்னால், அவன் உரைத்த சொல்லின் வழி –
அந்தப் பரசுராமன் கூறியபேச்சின்வழியே, ஒழுகிவந்து – நடந்துவந்து, நினை –
உன்னை, உவகையால் -மகிழ்ச்சியோடு, விரை செய் மாலை புனையாது –
நறுமணங்கமழ்கின்ற மணமாலைசூட்டாது, வீடுமன்-, மீளஉம் – மீண்டும், மறுத்து
விளம்பும் ஏல் – மறுத்துக்கூறுவானானால்,- (எ-று.)- விளம்புமேல் என்பது,
அடுத்த செய்யுளில் “பெருந்தவம்புரிதி” என்பதனோடு இயையும்.
குரு ஆதலால் பரசுராமன் மொழியை வீடுமன் மறுக்க மாட்டா னென்று
காசிராசன் கருதினான்.
பின்னை எண்ணிய பெருந் தவம் புரிதி’ என்று
கூறிய பிதாவையும்,
அன்னைதன்னையும், வணங்கி, நீடு சது-ரந்தயானமிசை
அம்புயப்
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள், இரு புறத்து
மாதர் பலர் பொலிவுடன்
தன்னை வந்து புடைசூழ, ஏகி, யம-தங்கி மைந்தன்
நகர் சாரவே,
பின்னை- பிறகு, எண்ணிய – (நீ) நினைத்துள்ள, பெருந்தவம் –
மிக்கதவத்தை, புரிதி – செய்வாய், என்று-, (கூறினான்); கூறிய – (அங்ஙனம்)
சொன்ன,பிதாவைஉம் – தகப்பனையும், அன்னை தன்னைஉம் – தாயையும்,
வணங்கி-, நீடு -நீண்டுள்ள, சதுரந்தயானம் மிசை – பல்லக்கின்மீது, அம்புயம்
பொன்னை வென்று ஒளிகொள் சாயலாள்- தாமரைமலரில் வாழ்பவளான
இலக்குமியைச் சயித்துஒளியைக்கொண்ட மெல்லியலான அம்பை, மாதர்பலர் –
பலமங்கைமார், தன்னை-,வந்து- அடைந்து, இருபுறத்துஉம்-, பொலிவுடன்-
அழகாக, புடைசூழ – சூழ்ந்திருக்க,ஏகி – (அங்கு நின்றும்) போய், யம தங்கி
மைந்தன் – சமதக்கினிமுனிவனுடையகுமாரனாகிய பரசுராமன், நகர் –
இருக்குமிடத்தை, சார – போய்ச்சேர,- (எ-று.) ‘புகல”(135) என இயையும்.
132- ஆம் கவியில்வந்த “தந்தை” என்பதற்கு முடிக்குஞ் சொல் வேண்டி,
‘என்று’ என்பதன்பின் ‘கூறினான்’ என்று வருவிக்கப்பட்டது. இங்ஙன்
முடிக்காவிடின்இச்செய்யுளில் ‘பிதாவை’ என வருவதனால் அந்தச்செய்யுளில்
நின்ற ‘தந்தை’ என்பதுபயனின்றா யொழியும். யமதங்கி = ஜமதக்நி
காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி’ என்று
கடை காவலோர்,
வாச நாறு துளவோனுடன் புகல, ‘வருக!’ என்றபின்,
மடந்தை போய்,
ஆசினால் உரைவகுத்து, முன்செயல் அனைத்தும், அண்ணல்
அடி தொழுது, பின்
பேசினாள்; அவனும், ‘யாம் முடிக்குவம் இது’ என்று
மெய்ம்மையொடு பேசினான்.-அம்பை பரசுராமனை யடைந்து தன்குறையைத் தெரிவிக்க,
அவனும் அவள்குறையை முடிப்பதாக உறுதிகூறல்.
கடை காவலோர் – வாயிற்காவலர், வாசம் நூறு துளவோனுடன் –
நறுமணம் வீசுகின்ற திருத்துழாய்மாலையை யணிந்த பரசுராமனிடத்து, காசிராசன்
மகள்என்று ஓர் கன்னி வந்தனள் என்று புகல – காசிராசன் பெண்ணென்று
ஒருகன்னிகைவந்துள்ளாளென்றுசொல்ல,- (அந்தப்பரசுராமன்), வருக என்று பின்-
‘வருவாயாக’ என்று சொன்ன பின்பு, மடந்தை – இந்தப் பெண், போய்-
(பரசுராமனிருக்குமிடஞ்)சென்று, முன் ஆசினால் உரை வகுத்து – முதலில்
வாழ்த்தினால் பேசி [வாழ்த்தி], பின்- பிறகு, அண்ணல் அடிதொழுது –
பெருமையிற் சிறந்தோனாகியஅந்தப்பரசுராமனுடைய பாதங்களில் வணங்கி,
செயல் அனைத்துஉம் பேசினாள் -(முன்னே) நிகழ்ந்த செய்திகளையெல்லாஞ்
சொன்னாள்; அவன்உம் -அந்தப்பரசுராமனும், இது – இந்தஉன்கருத்தை, யாம்-,
முடிக்குவம் -நிறைவோற்றுவோம், என்று-, மெய்ம்மையொடு – உறுதியாக,
பேசினான்-சொன்னான்;
முன்நிகழ்ந்தது – மணமாலையைச் சாலுவனுக்குச் சூட்டக் கருதியது
முதலியன. ஆசினால் – விரைவோடுஎன்பாருமுளர்.
வரதன், வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற
மலைந்த கோன்,
இரதமீது அவளுடன் கணப் பொழுதின் ஏறி, ஐ-இரு
தினத்தினில்,
விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின்
மேவலும், சரதமாக எதிர்கொண்டு,
அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான்.-பரசுராமன் அவளது குறை முடிக்க உடன்பட்டு,
அவளுடன் வீடுமனிடம் வந்து, அவளை மணம்புரியுமாறு உரைத்தல்
வரதன் – (வேண்டுவார்க்கு வேண்டிய) வரத்தைக் கொடுப்பவனும்,
வீரம்மழுவால் அநேக குலம் மன்னர் வேர் அறமலைந்த கோன் –
வீரத்தோடுகூடியமழுப்படையால் பலகுலத்தில் தோன்றிய அரசரும்
வமிசநாசமாகுமாறு பொருததலைவனுமாகிய அந்தப்பரசுராமன், கணம் பொழுதின்
– ஒருகணப்போதிற்குள்ளே,இரதம்மீது – (தன்) தேரின்மீது, அவளுடன் – அந்த
அம்பையுடனே, ஏறி-,- ஐ இருதினத்தினில் – பத்துத்தினங்களில், விரதம்
ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் -விரதத்தையே ஆபரணமாகப் பூண்ட
வலிமையுள்ள வீடுமனுடைய, பதியின் -பட்டணத்திலே [அஸ்திநாபுரியிலே],
மேவலும் – சேர்ந்தவுடனே,- சரதம் ஆக -(மனத்தில்) அன்புதோன்ற,
எதிர் கொண்டு-, அவன் – அவ்வீடுமன், சிரம் – (தன்)சிரசை, இவன்
பதத்தினிடை – இந்தப் பரசுராமன் பாதத்திலே, சாத்தினான் -சேர்த்தினான்;
(எ-று.)
சரதம் – உண்மையென்பாருமுளர்; மூன்னையபொருளில், ஸரஸ மென்ற
வடசொல்லின் விகாரம்.
தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனியத்
தவிசில் வைத்து, ‘நீ
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா!’
என, இருந்தபின்,
‘கனக்கும் வெண் தரள வட முலைப் பெரிய கரிய
கண்ணி இவள், காதலால்
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக!’ என உவகையோடு
அவன் உரைக்கவே,-வீடுமன் பரசுராமனை யுபசரித்தபின், பரசுராமன்
அம்பையை மணந்துகொள்ளுமாறு வீடுமனிடம் கூறுதல்.-நான்குகவிகள் – ஒருதொடர்.
தனக்கு-, வின்மை – வில்லின்நிலைமையை, நிலையிட்ட –
நிலையாகவுணர்த்திய, கோவை – உபாத்தியாயனான பரசுராமனை, ஒரு தமனியம்
தவிசில் வைத்து – ஒரு பொற்பீடத்திலிருக்கச்சொல்லி, ‘நீ-, எனக்கு-, நன்மை
தர -மிக்க மேன்மையைத் தருமாறு, வந்த – (இங்கு) எழுந்தருளிய, நல் தவம் –
(என்னுடைய) சிறந்த தவம், இருந்த ஆ இருந்தவகை (என்னே!)’, என – என்று
(வீடுமன்) முகமன்கூற, இருந்தபின் – (பரசுராமன் அந்தத்தமனியத் தவிசில் தங்கி)
இருந்தபின்பு,- ‘வெள் தரளம் வடம் கனக்கும் முலை பெரிய கரிய கண்ணி
இவள் -வெண்ணிறமுள்ள முத்துவட மணிந்த பருத்த தனங்களையும்
பெரியனவும்கரியனவுமான கண்களையுமுடைய இந்த அம்பை யென்பவள்,
காதலால் -ஆசையோடு, உனக்கு-, மன்றல்பெற – மணந்துகொள்ளுதற்கு, உரியள்
ஆகுக-, என- என்று, உவகையோடு – மனமகிழ்ச்சியோடு, அவன் – அந்தப்
பரசுராமன், உரைக்க- சொல்ல,-(எ-று.)- ஆகுகென – தொகுத்தல்.
பெரியகரியகண் – ஈரடை
இன் சொலால் அவனி கொண்ட எந்தை, முதல், இன்ப
மன்றல் இனிது எய்த, நான்
வன் சொலால், ‘இரத மணம் உறேன்’ என மனத்தினால்
விரதம் மன்னினேன்;
‘நின் சொல் யாவரும் மறார்’ எனக் கருதி, நீ உரைப்பினும்,
நிகழ்ந்த இப்
புன் சொலானது, இனி மா தவத்தின் மிகு புனித! என்
செவி பொறுக்குமோ?–இதுவும் அடுத்தகவியும் – வீடுமன் தன்விரதத்தைத்
தெரிவித்துப் பரசுராமனிடம் அம்பையை மணந்துகொள்ள மறுத்ததைத்தெரிவிக்கும்.
இன்சொலால் – இனிய சொல்லினால், அவனி – உலகத்தாரை,
கொண்ட- (தன்) வசமாக்கிக்கொண்ட, எந்தை – என் தந்தை, முதல் – முன்பு,
இன்பம் மன்றல்- இன்பத்தை யனுபவிதற்குஉரிய விவாகத்தை, இனிது எய்த-
இனிதுபெறுமாறு, வன் சொல்-சபத வார்த்தைகளால், ‘நான்-, இரதம் மணம் –
இன்பமனுபவித்தற்குரியவிவாகத்தை, உறேன் – பெறாமலிருப்பேன்,’ என –
என்று, மனத்தினால் -மனப்பூர்வமாக, விரதம் – ஒருவிரதத்தை, மன்னினேன் –
பொருந்தினேன்: நின்சொல்யாவர்உம் மறார் என கருதி நீ உரைப்பின்உம் –
உன்னுடைய சொல்லை எவரும்மறுத்துச் சொல்லாரென்று கருதி நீ
(என்னைமணந்துகொள்ளுமாறு) கூறினாயானாலும்,மாதவத்தின் மிகு புனித –
பெருந்தவத்தினால் மிக்க பரிசுத்த மூர்த்தியே! நிகழ்ந்த இபுன்சொல் ஆனது –
(உன்னிடத்தினின்று) வந்த இந்த அற்பமான சொல்லாகியதை,இனி – இப்போது,-
என் செவி பொறுக்கும் ஓ – என்செவி யேற்று நிற்குமோ? (எ -று.)
குருவின்மொழி தள்ளத்தகாத தென்றலும், விரதம்பூண்ட எனக்கு இது
புன்மொழியாகுதலால், இதனைக் கேளேனென்றான். இரதம் = ரதம்: புணர்ச்சி
‘களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக
வினோத! கேள்:
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை
அன்றி இலை, உண்மையே;
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர்
பொருட்டினால்,
விளம்பும் இந்த மொழி ஒழிக! என்தன் உயிர் வேண்டும்
என்னினும் வழங்குவேன்.’
களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முகம் வினோத –
போர்க்களத்தில் புகுந்தாரை மீண்டுபோகுமாறு இடங்கொடுக்காத
[எதிர்த்தாரைக்கொன்றேதீர்க்கின்ற] விற்றொழில் வினோதனே! கேள்-: உளம்
புகுந்துஇனிது இருக்கும் நல் கடவுள்- (என்) மனத்திற்புகுந்து வாழுஞ் சிறந்த
கடவுள்,உன்னை அன்றி இலை- உண்மை ஏ – (இது) சத்தியமேயாம்: வளம்
புனைந்தஅநுராகம் போகம் மிகு மாதர் மங்கையர்பொருட்டினால் –
வளப்பம்பொருந்திய [மிக்க]ஆசையினால் நிகழும் இன்பநுகர்ச்சிக்கு உரிய சிறந்த
அழகிய மகளிரின்பொருட்டாக,விளம்பும் – சொல்லுகின்ற, இந்தமொழி –
இந்தப்பேச்சை, ஒழிக – தவிர்க: என்றன்உயிர் வேண்டும் என்னின்உம் –
என்னுடைய உயிரே வேண்டுமென்றா யெனினும்,வழங்குவேன் – தந்திடுவேன்;
(எ -று.)
குருபேச்சுத் தட்டக்கூடாது: எனினும், விரதமும் தவிரக்கூடாது: ஆதலால்,
விரதபங்கஞ் செய்யாமல் நான் இருக்க நீ எது கேட்டாலுந் தருவேனென்றனன்
வீடுமனென்க. களம்… வினோத – நீ போர்புரிவாயானாலும் நான் அஞ்சி
என்கொள்கையைவிடே னென்ற குறிப்பினது. மாதர்-அழகு.
மறுத்து இவன் புகல, வீரியன் புயம் ஒர் ஆயிரம்
துணிசெய் மழுவினான்,
வெறுத்து, அனந்தரம், எழுந்திருந்து, கரை அழியும் வேலை
நிகர் வெகுளியன்,
கறுத்த நெஞ்சினன், வெளுத்த மேனியன், உறச் சிவந்த
இரு கண்ணினன்,
பொறுத்த வில்லினன், விரைந்து, தேர்மிசை புகுந்தனன், பெரிது
போர் செய்வான்.-வெகுளி பொங்கப் பரசுராமன் போருக்கு
எழவே, வீடுமனும் எதிர் பொருது அவனை வெல்லுதல்
இவன் – இந்தவீடுமன், மறுத்து புகல – (குருவின் வாசகத்தை)
மறுத்துச்சொல்ல, வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணி செய் மழுவினான் –
கார்த்தவீரியனுடைய ஓராயிரம் புஜத்தைத் துண்டித்த மழுப்படையை யுடையனான
பரசுராமன், அனந்தரம் – பிறகு, வெறுத்து- (வீடுமனிடத்தில்) வெறுப்புக்கொண்டு,
எழுந்திருந்து-, கரை அழியும் வேலை நிகர் வெகுளியன் – கரைமீறிச் செல்லுங்
கடலையொத்த சினத்தையுடையவனாகி,- கறுத்த நெஞ்சினன் – கோபங்கொண்ட
நெஞ்சையுடையவனும், வெளுத்த மேனியன்- (அதனால்) வெண்மையடைந்த
உடலையுடையவனும், உற சிவந்த இரு கண்ணினன்- மிகச் சிவந்த இரண்டு
கண்களையுடையவனும், பொறுத்த வில்லினன் – (கையிற்) கொண்ட
வில்லையுடையவனுமாகி,- பெரிது போர் செய்வான்- பெரும்போர் செய்யும்
எண்ணங்கொண்டு, விரைந்து-, தேர்மிசை புகுந்தனன் – தேரின் மீது ஏறினான்;
(எ-று.)
சுரையழியும் வேலைநிகர் வெகுளியன் – அளவிடமுடியாத கோபத்தை
யடைந்தவன். வெகுளிச்சுவை இச்செய்யுளிற் காணத்தக்கது. வீரியன் – கார்த்தவீரிய
னென்பதன் நாமைகதேசம். மூன்றாமடியில் முரண்தொடை காண்க. கார்த்தவீரியன்
தன்பிதாவைக் கொன்றதனால் அவனைப் பரசுராமன் கொன்றானென்பது, சரிதம்.
வெருவுடன் தொழுது, கங்கை மைந்தன் அடி வீழவும்,
சினம் மிகுத்தலால்,
‘உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி, நான்
நரகம் உறுவதின்,
குருவுடன் பொருது மடிதல் நன்று’ என நினைந்து, தாலம்
உயர் கொடியினன்,
செரு உடன்றிடுதல் உன்னி, ஏறினன், அமைந்து நின்றது
ஒரு தேரின்மேல்.-விரதந்தவறுவதைவிடக் குருவுடன்பொருது
மாண்டாலும் நன்று’ என்று வீடுமனும் பொருமாறு தேரிலேறுதல்.
கங்கைமைந்தன் – கங்காதேவியின்குமாரனான வீடுமன்,
வெருவுடன் -அச்சத்துடனே, தொழுது – வணங்கி, அடிவீழஉம் – (தன்)
பாதத்தில் வீழ்ந்துவேண்டவும்,- (பரசுராமன்), சினம் – (தன்) வெகுளியை,
மிகுத்தலால் – மிகுதியாகக்கொண்டிருந்ததனால்,- ‘உருவுடன் – (பிறருக்கு)
அச்சந்தோன்றும் நிலையுடனே, தனிஇருக்கும் – ஒப்பற்றுள்ள, நீள் – சிறந்த,
விரதம் – நோன்பை, நான்-, வழுவி- தவறி,நரகம் உறுவதின் – நரகத்தை
யடைவதைக் காட்டிலும், குருவுடன் பொருது மடிதல்நன்று – (என்)
ஆசிரியனோடு போர்செய்து இறந்திடுதல் சிறந்ததாகும், ‘ என – என்று,
தாலம் உயர் கொடியினன் – பனைமரத்தை யெடுத்து (த் தூக்கி)க்கட்டிய
கொடியையுடையவனாகிய அந்த வீடுமன், நினைந்து-, செரு உடன்றிடுதல்
உன்னி -போரினால் மாறுபடுதலைக் கருத்துட்கொண்டு, அமைந்து நின்றது ஒரு
தேரின்மேல் -சித்தமாகஇருந்ததொரு தேரின்மேலே, ஏறினன்-; (எ-று.)-
“உருவுட்காகும்” என்பது,தொல்காப்பியம்.
அவ் இராமனும், மறுத்த மன்னவனும், ஐ-இரண்டு
தினம், இகலுடன்,
வெவ் இராவும் ஒழியாது, வெஞ் சமர் விளைத்த
காலை, அடல் வீடுமன்
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து, முன்
தளர்வு கண்ட போர்
அவ் இராமன் நிகர் என்னுமாறு, இவனை அஞ்சி நின்று,
எதிர் அடர்க்கவே,–இதுவும் அடுத்த கவியும் – ஒருதொடர்: பரசுராமனை
வீடுமன் வென்றிட, அவ்விருவருந் தம்மிருப்பிடஞ்சேர்
தலையும், அம்பை தவவனமடைந்தமையையும் கூறும்.
அ இராமன்உம் – (அம்பையை மணந்துகொள்ளுமாறு கூறிய)
அந்தப்பரசுராமனும், மறுத்த மன்னவன்உம் – (அச்சொல்லை) மறுத்துக்கூறிய
க்ஷத்திரியனான வீடுமனும், ஐ இரண்டு தினம் – பத்துநாள், இகலுடன் –
மாறுபாட்டினுடனே, வெவ் இரா உம் ஒழியாது – கொடிய இரவிலுங்கூட
நீங்காமல்[இரவும் பகலுமாக], வெம்சமர் – கொடியபோரை, விளைத்தகாலை-,-
அடல் வீடுமன் -வலிமை பொருந்திய வீடுமன், முன் – முன்பு, கை விராய
சிலையோடு – கையிற்பொருந்திய வில்லின்மூலமாக, மெய் வலி கவர்ந்து –
(அந்தப் பரசுராமனுடைய)உடல்வலிமையைப் பறித்துக் கொண்டு, தளர்வுகண்ட –
தளர்ச்சியையுண்டாக்கிய, போர்- போரில்வல்ல, அ இராமன் நிகர் –
அந்தத்தசரதராமன் நிகராவான், என்னும் ஆறு- என்று (கண்டவர்) சொல்லுமாறு,
(அப்பரசுராமன் வலிமையைக் கவர்ந்திடப்பிறகுஅவ்விராமன்),- இவனை- இந்த
வீடுமனை, எதிர் அடர்க்க அஞ்சிநின்று – எதிர்த்துப்பொருதற்கு அச்சமடைந்து
நின்று,-(எ-று.) “ஓடி… ஊர்புகுந்தனன்” (143) என்று தொடரும்.
தசரதராமன் சிவதனுசையொடித்துச் சீதையை மணந்து கொண்டு
அயோத்திக்குவரும் நெறியிலே பரசுராமன் எதிர்ப்பட்டு அவ்விராமபிரானை
வலுவிற்போருக்குஅழைக்க, அவன் அந்தப் பரசுராமனை வில்லின்மூலமாக
வலிமையைக்கவர்ந்துதளர்வுறச் செய்தமை இராமாயணத்திற் பிரசித்தம்
ஓடி, மீள, மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன்;
உவந்து, பல்
கோடி பேர் அரசர் துதி எடுக்க, நதி-குமரனும் தன்
நகர் குறுகினான்.
நாடி, மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும்
இடை நவ்வியும்,
வாடி வாடி, ‘இனி அமையும்’ என்று, தவ வனம்
அடைந்தனள், மடங்கியே.
ஓடி- (புறங்கொடுத்து) விரைந்துசென்று, மீள – மீண்டும்,
மழுமேவு பாணி – பரசுபொருந்தியகையையுடைய பரசுராமன், தனது ஊர்
புகுந்தனன்-:நதிகுமரன்உம்- கங்காநதியின் குமாரனிகிய வீடுமனும்,- பல் கோடி
பேர் அரசர்-,உவந்து – மன மகிழ்ந்து, துதி எடுக்க – தோத்திரஞ் செய்ய, தன்
நகர் குறுகினான் -தன்இருப்பிடஞ்சேர்ந்தான்: நாடி – விரும்பி, மாலைஇட –
மணமாலையைச் சூட்டுமாறு,வந்த-, காசிபதி நல்கும் ஒல்கும் இடை நவ்வி உம் –
காசியரசன்பெற்றதளர்ந்துமெலியும் இடையையுடைய மான் போன்றவளான
அம்பையென்பவளும், வாடிவாடி – மிகவும் மனந் தளர்ந்து, இனி அமையும் –
இனி (த் தவஞ்செய்தலே எனக்கு)அடுக்கும், என்று-, மடங்கி- (மணஞ்செய்து
கொள்ளும் முயற்சியினின்று) மீண்டு, தவவனம் அடைந்தனள் – தபோவனத்தைச்
சேர்ந்தாள்; (எ-று.)
அமையும் – மணஞ்செய்துகொள்ள முயல்வது போலும் எனினுமாம்.
வாடிவாடி- மிகுதிப்பொருளது, மழுமேவுபாணி -அன்மொழித்தொகை.
வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன்
என, வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன்
ஆகுவன் யான்’ எனா,
வம்பை மோது முலை, வம்பை வீசு குழல், வம்பை மன்னும்
எழில், வரி கொள் கூர்
அம்பை மானும் விழி, அம்பை என்பவளும் அரிய
மா தவம் இயற்றினாள்.-இந்தவீடுமனை வெல்லுஞ் சூரனாவேனென்று உறுதி கொண்டு
அந்த அம்பை பெருந்தவமியற்றுதல்.
வெம் பை ஆடு அரவம் – கொடியபடத்தையெடுத்து ஆடுகின்ற
சர்ப்பம், மாய – ஒடுங்கும்படி, வென்றிடு – சயிக்கின்ற, விகங்கராசன் என –
பட்சிகட்குஅரசனான கருடன்ஒப்புஆகுமாறு, தும்பை ஆடு அமரின் வீடுமன்
மாய -தும்பைமாலைசூடிக்கொண்டு செய்யப்படுகின்ற போரிலே வீடுமன்
உயிரிறக்கும்படி,வெல்ல வல – வெல்லும் வல்லமைபெற்ற, சூரன் ஆகுவன்
யான் – சூரனாவேன்யான், எனா என்றுசொல்லி,- வம்பை மோதுமுலை – கச்சை
மோதுகின்றதனங்களையும், வம்பை வீசு குழல் – வாசனை வீசுகின்ற
கூந்தலையும், வம்பைமன்னும் எழில் – புதுமைபொருந்திய அழகையும், வரிகொள்
கூர் அம்பை மானும் விழி – செவ்வரிபரந்த கூரிய அம்பையொத்த
கண்களையுமுடையவளான, அம்பை என்பவளும்-, அரிய மாதவம் – அருமையான
பெருந்தவத்தை, இயற்றினாள் – செய்தாள்; (எ-று.)
விஹங்கராஜன் – வடசொற்றொடர். வம்புஎன்பது வெவ்வேறு பொருளில்
வந்தது- சொற்பின்வருநிலை. அரவம்வீடுமனுக்கும், விகங்கராசன் அம்பைக்கும்
உவமை.தும்பை – பொரச்செல்வோர் தரிக்கும் மாலை
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி, ஒரு தாளில் வைத்து,
அமை சமைத்த பொன்
தோள் இரண்டினையும் மீது எடுத்து, நனி தொழுது, இயக்கி
துணை அடியிலே
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி, நிறை வாவி நீரினிடை,
வான் உளோர்
நாள் இரண்டு-அதனொடு ஐ-இரண்டும் ஒரு நாள்
எனும்படி நடக்கவே,-அம்பையின் பெருந்தவம்.இரண்டுகவிகள் – ஒருதொடர்
(இ – ள்.) தாள் இரண்டினில் – இரண்டுபாதங்களுள், ஒர் தாள் மடக்கி –
ஒருதாளைமடக்கி, ஒரு தாளில் வைத்து – மற்றொருதாளின் மேல்
வைத்துக்கொண்டு,அமை சமைத்த பொன் தோள் இரண்டினைஉம் –
மூங்கிலையொத்த அழகியதோள்கள்இரண்டையும், மீது எடுத்து –
மேலேதூக்கியவண்ணம். நனிதொழுது- நன்குகுவித்து,இயக்கி துணை அடியிலே –
தருமதேவதைபோன்ற தன் இரண்டு பாதங்களிலே, வாள்இரண்டு அனைய விழி
மலர்த்தி – இரண்டு வாட்படை போன்ற (தன்) இரண்டுகண்களையும் மலரவைத்து,
நிறை வாவிநீரின் இடை – நிறைந்துள்ள வாவியின் நீரிலே,வான் உளோர்
இரண்டு நாள் அதனொடு ஐ இரண்டுஉம் – தேவர்களின்பன்னிரண்டுநாள்கள்
[பன்னிரண்டுவருஷங்கள்], ஒருநாள் எனும்படி நடக்க -ஒருநாள்போலக் கழிய,-
(எ-று.)- “அருந்தவ முயன்றபின்” (146) என்றுதொடரும்
அம்பை தவஞ்செய்து அத்தவத்தின்பயனால் வீடுமனைக் கொல்லுமாறு
அந்தவடிவத்தை நீங்கிச் சிகண்டி யென்ற பேர் பெற்றுத் தேவசேனாபதியான
அறுமுகக்கடவுளுக்கு ஒப்பான பராக்கிரமச் செயலுடனே துருபதனிடத்துத்
தோன்றினளென்க. யாகசேனன் – துருபதன். முயல் – முயல்வடிவாகத்
தோன்றுங் களங்கத்துக்கு,ஆகுபெயர். முயலிலாமதி, புயலிலாத மினல் –
இல்பொருளுவமை.வீடுமன்பரசுராமனோடுபோர்புரிந்ததுமுதலியஇந்தச் சரித்திரம்
பாலபாரதத்து இல்லை:வியாசபாரதத்திலும் உத்தியோக பருவத்திலுள்ளது.
மயலிலாடனது என்றும்பாடம்.
முயல் இலா மதி முகத்தினாள், ஒருவர் முயல் அருந் தவம் முயன்ற பின்,
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி
இயக்கிதனது அருளினால்,
மயில் அனாள் தனது வடிவு அகற்றி, இகல் யாகசேனனது
வயினிடைச்
செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி
ஆயினள் சிறக்கவே!—அம்பை சிகண்டியாதல்.
ஒருவர் முயல் அருந் தவம் – ஒருத்தர் முயன்று செய்வதற்கு
அருமையான பெருந்தவத்தை, முயன்றபின் – முயற்சியோடு செய்தபின்பு, – முயல்
இலா மதிமுகத்தினாள் – முயற்கறை யில்லாத சந்திரன் போன்ற முகத்தையுடைய,
மயில் அனாள் – மயில் போன்ற சாயலையுடைய அம்பை,- புயல் இலாத மினல்
ஒத்த மெய்யில் – மேகத்திலிராத [தனிப்பட்டுள்ள] மின்னலையொத்த உடம்பில்,
ஒளி புரி – ஒளிமிக்க,இயக்கி தனது – தருமதேவதையின், அருளினான் –
கருணையினால், தனது வடிவுஅகற்றி – தன்னுடைய அந்தவடிவத்தை யொழித்து,
இகல் யாகசேனனது வயினிடை -வலிமையையுடைய யாகசேனனுடைய இடத்திலே,
செயலில்- (தன்னுடைய)வீரச்செய்கையினால், ஆறுமுகன் நிகர் என தகு – அறு
முகக்கடவுள் ஒப்பாவனென்றுசொல்லத்தகுமாறு, சிறக்க – சிறப்புற்றிருக்க, சிகண்டி
ஆயினள் – சிகண்டியானாள்; (எ-று.)
அம்பை தவஞ்செய்து அத்தவத்தின்பயனால் வீடுமனைக் கொல்லுமாறு
அந்தவடிவத்தை நீங்கிச் சிகண்டி யென்ற பேர் பெற்றுத் தேவசேனாபதியான
அறுமுகக்கடவுளுக்கு ஒப்பான பராக்கிரமச் செயலுடனே துருபதனிடத்துத்
தோன்றினளென்க. யாகசேனன் – துருபதன். முயல் – முயல்வடிவாகத்
தோன்றுங் களங்கத்துக்கு,ஆகுபெயர். முயலிலாமதி, புயலிலாத மினல் –
இல்பொருளுவமை.வீடுமன்பரசுராமனோடுபோர்புரிந்ததுமுதலியஇந்தச் சரித்திரம்
பாலபாரதத்து இல்லை:வியாசபாரதத்திலும் உத்தியோக பருவத்திலுள்ளது.
மயலிலாடனது என்றும்பாடம்.
மணி முடிக்கு உரிய நிருபனும், கடி கொள் மாதர்தங்களை
மகிழ்ச்சியால்
அணி பெறத் தழுவி, இன்ப வேலையின் அழுந்தி, நாள்
பல கழிந்தபின்,
பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து, ‘வாழ்வு
இனி நணித்து’ என,
பணி முடிப் புவி இரங்க, வைகி, ஒரு பற்று இலாத
நெறி பற்றினான்.–விசித்திரவீரியன் இன்பமனுபவித்து,
க்ஷயரோகத்தால் விண்ணுலகடைந்தமை.
மணி முடிக்கு உரிய நிருபன்உம் – அழகிய கிரீடத்துக்கு
உரியவனானவிசித்திரவீரியனும், கடிகொள் – விவாகத்திற் கொண்ட, மாதர்
தங்களை – (அம்பிகைஅம்பாலிகை என்ற) மகளிரை, மகிழ்ச்சியால் –
மனமகிழ்ச்சியோடு, அணி பெற தழுவி- அழகுபொருந்த ஆலிங்கனஞ்
செய்துகொண்டு, இன்பம் வேலையின அழுந்தி -இன்ப சமுத்திரத்திலே முழுகி,
பலநாள் கழிந்த பின் – பலநாள் நீங்கினபின்,பிணிகளுக்கு அரசு எனும் –
நோய்களுக்கு அரசனென்று சொல்லத்தக்க, பெரும் பிணி- கொடிய
வியாதியினால், பிணித்து – கொள்ளப்பெற்று, இனி வாழ்வு நணித்துஎன –
இனி மேலுலகவாழ்க்கை சமீபித்திட்டது என்று கருதி, பணி முடி புவிஇரங்க –
ஆதிசேஷனது சிரசிலே யுள்ள பூமியிலுள்ளார் இரக்கங்கொள்ள, வைகி –
தங்கியிருந்து, ஒரு பற்று இலாத நெறி – பற்றைவிட்டு அடையப்படும் இடமான
வானுலகத்தை, பற்றினான் – அடைந்திட்டான்; ( எ-று.)
ராஜயக்ஷ்மா என்ற க்ஷயரோகம் மிகுபோகத்தால் விசித்திர வீரியனுக்குத்
தோன்ற, அதனாலே யிறந்து வானுலகடைந்தனன் அந்த அரச னென்க
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply