திரு விருத்தத்தில் அகத்துறை

களவியல், பின்பு கற்பாகிய மணவினையின் மூலம் ஊரறிய இல்லறமாக மலர்தல், நன்மக்கட் பேறு என்பதில் கனிந்த பயன் அடைதல்.
தலைவனுக்கும், தலைவிக்கும் இடையில் ஏற்படும் அகநிலை சார்ந்த உணர்ச்சிகளும், அதன்வழீஇய ஒழுக்கங்களும்
அன்பு நிலை தவறாத ஐந்து விதங்களில் அமையக் கூடும்.

நெருக்கம், பிரிதல், நெருக்கத்திற்காகக் காத்து இருத்தல், பிரிவில் இரங்கி காத்திருத்தல்,
சேர்ந்த நிலையில் ஊடலுக்கான பல காரணங்களைக் கல்பித்துக் கொள்ளுதல்,
அவை தணிந்து பின் கூடுதல் ஆகிய இந்த அக ஒழுக்கங்களை அன்பின் ஐந்திணை
குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற நிலப் பெயர் குறியீட்டால் வழங்கினர்.
எந்த வித அன்பின் கேடும் கூற இயலாத இலட்சியக் காதல் வாழ்வு என்பதால் இதை அன்பின் நிலை வழாஅத ஐந்திணை என்று குறிப்பிட்டனர்.

இந்த இலட்சியக் காதல் சித்திரத்தையே, இதற்கான இலக்கணத்தையே சங்கப் புலவர்கள் தமிழின் சிறப்பாகக் கருதினர்.
அகத்திணை என்பதைத் தமிழ் என்று குறிக்கும் வழக்கமும் சங்கத்தைத் தொடர்ந்த காலத்திலும் நிலவியது.
‘இல்லது, இனியது, நல்லது’ என்று அகத்திணையை மீட்டுருவாக்கம் செய்த இறையனார் களவியல் காலத்தும்
தமிழ் என்பது அகத்திணை இலக்கணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

சங்கப் புலவரின் சாதனையான இலட்சியக் காதலைக் கடவுள்பால் கொண்ட காதலுக்கான பக்திமொழியாகவும்,
பக்திக்கான காதல் இலக்கணமாகவும் கையாண்டு வெற்றி கண்டவர் நம்மாழ்வாரும், அவரடியொற்றி வந்த பெருமக்களும்
வேதநம் என்றும், உபாஸநம் என்றும் உபநிஷத்துக்களில் சொல்லுகிற பக்தியை இவற்றில் காமமாகச் சொல்லுகிறது
உத்தம ஸ்த்ரீக்கு உத்தம நாயக விஷய அனுராகம் போலே, தமக்கு பகவத் ப்ராவண்ய அதிசய ஸூசனார்த்தமாக’ என்று கூறுகிறது.
அதாவது, ‘மிகச் சிறந்த தலைவிக்கு மிகச் சிறந்த தலைவனிடத்தில் இடையறாது பொங்கும் காதல் போன்றது
தமக்குப் பரம்பொருளிடத்தில் உண்டான ஈடுபாடும், இடையறாது பொங்கும் பக்தியும்

இந்தத் தோழி, தாய், மகள் இவர்கள் யார்? ஆழ்வாரேதான் தோழியும், தாயும், மகளும். எப்படி?
‘ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு’ (118) என்கிறது ஆசார்ய ஹ்ருதயம்.
ஆழ்வார் பக்தியால் உள்ளம் கலங்காது ஞானத் தெளிவோடு பேசும் பொழுது தாமான தன்மையில் பேசுகிறார்.
பக்தி நெகிழ்வால் உள்ளம் உடைகுலைப்பட்டு ஆற்றாமை விஞ்சக் கலங்கும் போது பெண்ணான தன்மையில் பேசுகிறார்
என்று கூறும் ஆசார்ய ஹ்ருதயம், யார் இந்தத் தோழி, தாய், மகள் என்று வரையறுத்துக் காட்டுகிறது.
தோழி என்பவள் தலைவி, தலைவன் இருவரையும் சேர்த்து வைப்பவள் அன்றோ?
தலைவி, தலைவனுக்கே உரியவள் என்று வாதாடி அறத்தொடு நிற்பவள் அல்லவா தோழி?
மற்றவருக்குப் பேச்சுப்படில், அதை விலக்கித் தலைவிக்கும், தலைவனுக்கும் உண்டான தொடர்பை வலியுறுத்தி
மணமுடித்தலாகிய கற்புக்குக் கொண்டு செல்பவள் அன்றோ?
இந்த உயிர் பரம்பொருளுக்கே உரியது, வேறொருவருக்கு உரியதன்று என்ற தொடர்பைப் பற்றிய ஞானம்
பிரக்ஞையில் இருக்கும் வரை இந்த உயிர் பரம்பொருளை மறவாது அதை நோக்கியே செல்லும் அல்லவா?
இந்தத் தொடர்பு பற்றிய ஞானத்தை (ஸம்பந்த ஞானத்தை) பிரக்ஞையின் அவஸ்தையாகக் கூறுகிறது ஆசார்ய ஹ்ருதயம்.
ஏனெனில் முக் காலத்திலும் இருப்பது பிரக்ஞை.
இந்த ஸம்பந்த ஞானமாகிய பிரக்ஞை அவஸ்தையைத் தோழி என்று எடுத்துக் காட்டுகிறது.
இந்த ஜீவனுக்கும், பரம்பொருளுக்கும் உண்டான ஸம்பந்தத்தைப் பற்றிய வேதாந்த ஞானம் தோழி.

இந்த உயிர் பரம்பொருளின் உடல். உடலைக் காப்பாற்ற, பேண உயிர் முனைகிறதா அல்லது உடலே தானே முனைகிறதா?
உடல் தானே முனைந்தால் அது நோய் அல்லவா?
அது போலவே உயிர் தன்னை ரட்சித்துக் கொள்ளத் தான் முனைவது சரியன்று.
தனக்கு உயிராய் இருக்கும் பரம்பொருள் தன்னைக் காக்க என்னேரமும் முனைந்த வண்ணம் இருக்கிறது என்று உணர்ந்து
அதன் உடல் தான் என்ற உணர்த்தியில் அகலா வண்ணம் இருப்பதுதான் உயிருக்கு அழகு.
இந்தத் தன்னுடைய மர்யாதையிலிருந்து உயிர் விலகும் பொழுதெல்லாம் அதைத் தெருட்டி,
அதன் இயல்பை நினைவு படுத்திக் கடவா வண்ணம் நியமிக்கும் வேதாந்த ஞானத்திற்குத் தாய் என்று பெயர்.
ஏன்? தாய் என்ன செய்வதாகக் கூறுகிறது அகத்திணை இலக்கணம்?
தலைவன் வந்து மணக்கும் வரை படிகடவாமல் ஆற்றியிருத்தலே இயல்புக்கும், குல மரியாதைக்கும்
ஏற்றது என்று அடக்கி நியமிப்பவள் என்றல்லவோ கூறுகிறது?

மகள் அல்லது தலைவி என்பவள் இயற்கைப் புணர்ச்சியில் தனிமையில் முதன் முன்னமே தலைவனுக்குத் தன்னை உரிமையாக்கிவிட்டவள்.
தன்னைப் பற்றியும், அவனைப் பற்றியும் நினைவு முதிர முதிர நாளுக்கு நாள் அவனை அடைந்தே தீருவது என்று
எல்லா மரியாதைகளையும் கடந்தும் சென்று அவனைச் சேர்ந்துவிட வேண்டும் என்றபடியான பதற்றம் மிக்கவள்.
ஸம்பந்தத்தை உணர்த்தும் தோழியிடமும்,
நியமிக்கும் தாயிடமும் தன் பதற்றம் பொங்க ஆற்றாமையைக் காட்டுபவள்.
இவள் சேர்த்து வைத்தாலல்லது முடிந்து படுவாளோ என்று தோழியும் தாயும் அஞ்சும் அளவிற்கு அவனை அடைவதில் பதற்றம் மிக்கவள்.

இந்த உயிருக்கு, தான் பரம்பொருளின் உடல் என்பது தெரிந்தாலும்,
தனக்காக என்னேரமும் பரம்பொருள் காப்பதில் மும்முரமாக உள்ளது என்று தெரிந்தாலும்,
தன்னைக் கடைத்தேற்றத் தான் முனைவதெல்லாம் கடைசியில் தனக்கு அநர்த்தமாக முடியும்,
அவன் வந்து கடைத்தேற்ற எதிர்நோக்கி ஆற்றியிருத்தலே, மஹா விசுவாசத்தில் ஊன்றி நிற்றலே உயிராகிய தனக்கு அழகு என்பது புரிந்தாலும்,
தன்னையும் அவனையும் பற்றிய நினைவு எழ எழ, ப்ராப்யத்தைப் பற்றிய (அடைவதைப் பற்றிய) பதற்றமும், அவசரமும் பெருகும்.
இவ்வாறு அடைய வேண்டும் என்ற உயிரின் பதற்றமுற்ற நிலையே மகள் அல்லது தலைவி எனப்படுவது.

இந்தத் தோழி, தாய், மகள் என்ற மூன்றும்
ஸம்பந்தத்தைப் பற்றிய உணர்த்தி,
உபாயத்தைப் பற்றிய துணிவு,
அடைவதில் பதற்றம் என்னும் பிரக்ஞையின் அவஸ்தைகள் எனலாம்.
ஆசார்ய ஹ்ருதயம், ‘ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி, துணிவு, பதற்றமாகிற
ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்’ (133) என்று சூர்ணை யிடுகிறது.

தொல்காப்பியம் அகத்திணையை ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது.

  • கைக்கிளை
  • குறிஞ்சித் திணை
  • பாலைத் திணை
  • முல்லைத் திணை
  • மருதத் திணை
  • நெய்தல் திணை
  • பெருந்திணை

முப்பொருள்

அகத்திணையில் இடம்பெறும் மூன்று வகையான பொருட்களான
முதற்பொருள்,
கருப்பொருள்,
உரிப்பொருள் என்பவை
முப்பொருள் என்று அழைக்கப்படுகின்றன.

முதற்பொருள்

முதன்மையும் அடிப்படையுமான பொருள் முதற்பொருள் எனப்பட்டது.

நிலம் (ஐவகை நிலம்),
பொழுது( காலம்) என்பன
முதற் பொருளுக்குள் அடங்குகின்றது.
இவற்றுள் பொழுதானது
பெரும்பொழுது,
சிறுபொழுது
என மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பொழுது

இது ஓர் ஆண்டின் உட்பிரிவு ஆகும். ஒவ்வொரு பெரும் பொழுதும் இரண்டு மாதங்கள் கால அளவுடையது.

  1. இளவேனில் (சித்திரை, வைகாசி மாதங்கள்-வசந்த ருது)
  2. முதுவேனில் (ஆனி, ஆடி மாதங்கள்-கிருஷ்ம ருது,)
  3. கார் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்-வர்ஷ ருது)
  4. கூதிர் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்-சரத் ருது)
  5. முன்பனி (மார்கழி, தை மாதங்கள்-ஹேமந்த ருது)
  6. பின்பனி (மாசி, பங்குனி மாதங்கள்-சிசிரருது)

சிறு பொழுது

இது ஒரு நாளின் சிறுபிரிவு ஆகும்.

  1. வைகறை (அதிகாலை நேரம்)
  2. காலை
  3. நண்பகல்
  4. எற்பாடு (ஞாயிறு மறையும் நேரம்)
  5. மாலை
  6. யாமம்
. சிறுபொழுது . நேரம்
       
(1) வைகறை இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
(2) காலை காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை
(3) நண்பகல் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
(4) எற்பாடு (ஞாயிறு மறையும் நேரம்)
பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
(5) மாலை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
(6) யாமம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை.

கருப்பொருள்

ஐவகை நிலங்களுடன் தொடர்புள்ள அவற்றைச் சார்ந்து வசிக்கும், விளங்கும், திகழும் பொருட்கள்
கருப்பொருள் என வரையறுக்கப்படுகின்றது.
கருப்பொருள்கள் எத்தனை என்பது தொல்காப்பியத்தில் தெளிவாக்க கொடுக்கப்படவில்லை.
எனினும் பிற்காலத்தில் அவை பதினான்கு எனச் சொல்லப்பட்டது.

  1. தெய்வம்
  2. ஊர்
  3. நீர்
  4. மரங்கள்
  5. பூ
  6. விலங்கு
  7. பறவை
  8. மக்கள்*
  9. உணவு
  10. தொழில்
  11. பண்
  12. யாழ்
  13. பறை

* இங்கு மக்கள் உயர்ந்தோர், அல்லோர் என மேலும் வகுக்கப்பட்டனர்.

————-

தொல்காப்பியர் கள ஒழுக்க உணர்வுகளை –களவு -1040
வேட்கை ஒரு தலை உள்ளுதல் மவ்தல்
ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போற்றல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று அச்
சிறப்புடை மரபின்னவை களவு என மொழி –என்று கூறி உள்ளார்

வெறி விலக்கு
ஆசை அறுதல்
அறத்தொடு நிற்றல்
உடன் போக்கு
கால மயக்கு
ஒரு தலை உள்ளுதல்
தலைவி மெலிதல்
காமம் மிக்க கழி படர்க் கிளவி
நெஞ்சொடு கிளத்தல்
இவ்வாறு அகப்பொருள் இலக்கணத்தில் எத்தனை துறைகள் உண்டோ அவை அனைத்துமே திரு விருத்தத்தில் அமைந்துள்ளன
தொல் காப்பிய சங்க மரபான மீட்சி இதில் காணப் படுகின்றது –

———

இது மண்டல அந்தாதி

இதில்
தலைவன் –
தலைவி
தோழி
செவிலி
நல் தாய்
கட்டுவிச்சி
பாங்கன் ஆகியோர்
நினைப்புகளாகவும் கூற்றுக்களாகவும் பாசுரங்கள் அமைந்துள்ளன

1-எம்பெருமானுடைய திரு நாமம் கூறப்பட்டு அவனையே கிளவித் தலைவனாகவும் கொண்ட பாசுரங்கள் –74
2-தலைவி கூற்றாக அமைந்த பாசுரங்கள் -56
3-தோழி கூற்றாக அமைந்த பாசுரங்கள் -21
4-தலைவன் கூற்றாக அமைந்த பாசுரங்கள் -14
5-செவிலி கூற்றாக அமைந்த பாசுரங்கள் -5

6-நல் தாய் கூற்றாக அமைந்த பாசுரம் எண் -37
7-கட்டுவிச்சி கூற்றாக அமைந்த பாசுரம் எண் -53-
8-பாங்கன் கூற்றாக அமைந்த பாசுரம் எண் –94
9-தலைவி இரங்கிக் கூறும் பாசுரம் எண் -37

10-தலைவி மகிழ்ந்து கூறும் பாசுரங்கள் -17-
11- தோழி இரங்கிக் கூடும் பாசுரங்கள் -8
12- செவிலி இரங்கிக் கூறும் பாசுரங்கள் –5
13-தோழி தலைவனைப் பற்றிக் கூறும் பாசுரங்கள் -9

14-கிளைவித் தலைவன் சுட்டப்பட்டு இருக்கும் அகப்பொருள் பாசுரங்கள் -26
அவற்றுள் களவுக் காலத்துக்கு உரியன பாசுரங்கள் -17
கற்புக் காலத்து உரியன பாசுரங்கள் -8
இரண்டு காலங்களுக்கும் பொது 1 பாசுரம்

களவுக் காலத்துக்கு உரியன
1-தலைவி எழில் நலம் கொண்டு வியந்த தலைவன் வார்த்தை -பாசுரம் எண் -6-
2-தலைவன் தலையை நலம் பாராட்டுதல் -பாசுரங்கள் 14-15-
3-தலைமகள் நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாங்கனோடு கூறுதல் -65 வது பாசுரம்
4-தலைவன் பாங்கனுக்கு தனது வலி அழிவு உணர்த்தல் -67 வது பாசுரம்
5-தலைவன் பாலகனுக்கு சுழற்று எதிர் மறுத்தல் -57-66- பாசுரங்கள்
6-மதி யுடம்படுக்க லுற்ற தலைவன் குறையுறவு உரைத்தல் -10-23-
7-தலைவன் தலைவி தோழியரை பதி வினாதல் -75 வது பாசுரம்
8-தோழி தலைவனை நகையாடுதல் -1 வது பாசுரம்
9-தோழி தலைவனது கருத்து அறிந்து உரைத்தல் -15 வது பாசுரம்
10-தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்பது 17 வது பாசுரம்
11-கடல் ஓசைக்கு ஆற்றாத தலைவி இரங்குதல் -51 வது பாசுரம்
12-தலைவி அன்னத்தை வெறுத்து உரைத்தல் -29 வது பாசுரம்
13-உடன் போக்கு நிகழ்த்திய தலைவன் தலைவிக்கு நகர் காட்டுதல் –26 வது பாசுரம்
14-நற்றாய் தன் மகள் சென்றது அறிந்து அருமை கூறி இரங்குதல் -37 வது பாசுரம்

கற்புக் காலத்துக்கு உரியன
15-தலைவன் பொருள் வயின் பிரிதலைக் குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு உரைத்தல் -8 வது பாசுரம்
16-தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -9 வது பாசுரம்
17-பிரிவு ஆற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் -11 வது பாசுரம்
18-இருளுக்கு ஆற்றாத தலைவி தோழிக்குக் கூறுதல் -49 வது பாசுரம்
19-கார் கண்டு நலிந்த தலைவியின் ஆற்றாமை கண்டு தோழி இரங்குதல் -18 வது பாசுரம்
20-கால மயக்கு -7-68- பாசுரங்கள்
21-தலைவன் மீண்டு வருகையில் பாங்கனோடு கூறல் –50 வது பாசுரம்

களவுக்கும் கற்புக்கும் பொது
22-தலைவனைப் பிரிந்த தலைவி பாக்கியை நோக்கி இருள் வியந்து உரைத்தல் -16 வது பாசுரம்

———-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1– –தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2- –தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் –கோவை வாயாள் -4-3-

குழற் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் –வெள்ளைச் சுரி சங்கு -7-3-

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே  —-4- –தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே —-5- –வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் ––மாயா வாமனனே -7-8-

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6 –தலைவியின் அழகை தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7 –கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி   தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8- –தலைவன் பொருள் வயிற் பிரிதல்-குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9- –தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10- –தலைவன் தோழியிடம் குறை கூறல் –மதி உடன்படுதல் -நெடுமாற்கு அடிமை -8-10–

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் –மாலுக்கு வையம் -6-6-

பேர்கின்றது மணியாமை  பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-தலைவன் பிரியப் பெற்ற தலைவி தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் –-மாசறு சோதி -5-3-

தனி வளர் செங்கோல்  நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல்  இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13- –தலைவி பிரிவு மேலிட இருளுக்கும் வாடைக்கும் இரங்கல் –மல்லிகை கமழ தென்றல் -9-9-

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14- –தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுதல் –நலம் பாராட்டு –துவளில் மா மணி மாடம் -6-5-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-தோழி தலைவன் எண்ணம் தெரிந்து அவனை நோக்கி உரைத்தல் –கண்ணன் கழலினை -10-5-

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16- –தலைவனைப் பிரிந்த தலைவி தோழியை நோக்கி இருள் வியந்து உரைத்தல் – பயிலும் சுடர் ஒளி -3-7-

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர்  கால்வது  போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17–தலைவி கடலை நோக்கித் தேர்க் கால் சுவடுகளை அழிக்காதே என்றல் –அணைவது அரவணை மேல் -2-8-

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18–கார் காலம் கண்டு வருந்திய தலைவியைப் பார்த்துத் தோழி இரங்கல் –-சூழ் விசும்பணி முகில் -10-9-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி  அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள்  ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-செவிலி பழிக்கு இரங்குதல் –-பாலனாய் ஏழு உலகு -4-2-

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20-துறையடைவு –வெறி விலக்கு -தீர்ப்பாரை யாமினி -4-6-

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21–எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-தோழி தலைவனைக் கேலி செய்தல் –நல் குரவும் செல்வமும் -6-3-

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-தலைவன் குறை யுற உரைத்தல் – கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல் வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே  –24–பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –-கரு மாணிக்க மலை -8-9-

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –-மாயக் கூத்தா வாமனா -8-5-

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் இளம் சோலை  அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே  —-26-நகர் காட்டல் –மாலை நண்ணி -9-10-

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே –27-தலைவி மாலை பெற்று மகிழ்தல் –எல்லியும் காலையும்–8-6-

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் – கங்குலும் பகலும் -7-2

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –பொன்னுலகு ஆளீரோ -6-8-

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –-அஞ்சிறைய மட நாராய் -1-4-

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –-எம் கானல் அகம் கழிவாய் -9-7-

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-துறை யடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –வைகல் பூம் கழிவாய் -6-1-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33 –தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-ஏறாளும் இறையோனும் -4-8-

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-கூடல் இழைத்து  வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –-மின்னிடை மடவார்கள் -6-2-

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு  நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே  –35-மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –-வாயும் திரையுகளும் -2-1-

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் – ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அரு வினையேன்
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –மண்ணை யிருந்து  துழாவி -4-4-

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய  பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –-சொன்னால் விரோதம் இது -3-9-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் – ஏழை யாராவி -7-7-

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம்  நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் – மானேய் நோக்கு -5-9-

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –நீராய் நிலனாய் -6-9-

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் – பொரு மா நீள் படை -1-10-

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-தலைவனின் வடிவழகு பற்றித் தலைவி கூறல் –-உயர்வற உயர் நலம் -1-1-

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு  அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-துறையடைவு –தலைவி தலைவன் பெருமை கூறுதல் –-பத்துடை அடியவர் -1-3-

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –ஊனில் வாழ் உயிரே -2-3-

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே -46-நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் –அருள் பெறுவார் அடியார் -10-6-

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் – நாங்கள் வரி வளை -8-2-

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –என்றைக்கும் என்னை -7-9–

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய  மண்ணேர் அன்ன  ஒண்ணுதலே -49 –தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –ஊரெல்லாம் துஞ்சி -5-4-

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ  கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –கிளரொளி இளைமை -2-10-

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை  கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –-நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர் வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால்  கொடியான் என்று வார்கின்றதே – 52-கால மயக்கு –அந்தாமத் தன்பு -2-5-

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்   கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –கட்டுவிச்சி கூறுதல்-வெறி விலக்கு துறையாகவுமாம் -வைகுந்தா மணி வண்ணனே -2-6-

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –வண்டு விடு தூது –கேசவன் தமர் -2-7-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55- நலம் பாராட்டுதல்-சார்வே தவ நெறி -10-4-

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –கண்கள் சிவந்து -8-8-

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே  – -57-தலைவன் தோழனிடம் எதிர்வார்த்தை பேசுதல் –முடியானே மூவுலகும் -3-8-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –திண்ணன் வீடு -2-2-

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன்   மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் – முந்நீர் ஞாலம் -3-2-

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –அறுக்கும் வினையாயின -9-8-

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –பிறந்தவாறும் -5-10-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –தேவிமார் ஆவார் -8-1-

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக் காலம் இருக்கின்றதே — 63-தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –இவையும் அவையும் -1-9-

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –-பாமுரு மூவுலகும் -7-6-

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –நோற்ற நோன்பு -5-7-

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –ஆராவமுதே -5-8-

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-தலைவன் தன்  வலி யழிவு  உரைத்தல் –உலகமுண்ட பெரு வாயா -6-10-

மலர்ந்தே யொழிந்தில   மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-கால மயக்கு காலம் இளையது என்றல் –கொண்ட பெண்டிர் -9-1-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை  புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் – கற்பார் இராம பிரானை -7-5-

வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –பிறவித் துயரற -1-7-

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம்  பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே  – – -71-செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –-எங்கனேயோ  அன்னைமீர்காள் -5-5-

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின்  கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72–இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் – சீலமில்லாச் சிறியன் -4-7-

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-துறையடைவுதலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் – வேய் மரு தோள் இணை -10 -3 –

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து  மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –துறையடைவு–தலைவி மகிழ்வுடன் சொல்லும் பாசுரம்-செய்ய தாமரை -3 -6 –

உலாகின்ற கெண்டை  யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –துறையடைவு-தலைவன் தலையின் வூரைப் பற்றி விசாரித்தல் –சன்மம் பல பல -3 -10 –

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – -76 ––துறையடைவு-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —-ஓராயிரமாய் -9 -3-

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு    புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –  -77-துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு  இரங்குதல்–தாள தாமரை -10-1-

நலியும் நரகனை வீட்டிற்றும்  வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல  மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – 78-துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –இன்பம் பயக்க-7-10-

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே – – -79–துறையடைவு-தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –-மொய்ம்மாம் பூம் பொழில் –3 -5-

சீரரசாண்டு  தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –துறையடைவு-பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு  இரங்குதல் – முடிச் சோதியாய் -3–1-

உறுகின்ற கன்மங்கள்  மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர்  மெய்ந்நொந்து  பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –-வீடுமின் முற்றவும் -1-2-

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போலே    எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82–துறையடைவு–தலைவி  தலைவனின்  கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —-உருகுமால் நெஞ்சு -9–6-

விளரிக் குரலன்றில் மென் பெடை மேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது  இத் தையலுக்கே – – -83 –துறையடைவு-அன்றிலின்  குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –-உண்ணிலாய ஐவரால் -7–1-

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84-துறையடைவு-தலைவி தலைவனைக் காண  விரைதல்– மையார் கருங்கண்ணி -9–4-

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  – – -85—துறையடைவு-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் ––எம்மா வீடு -2-9-

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86-துறையடைவு-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் – வள வேழ்வுலகு -1-5-

புலம்பும் கனகுரல்  போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87-துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் – பண்டை நாளாலே -9-2-

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88–துறையடைவு–போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –-புகழும் நல் ஒருவன் -3-4-

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று   தலைப் பெய்வனே – – 89-துறையடைவு-தலைவனது  கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் — அங்கும் இங்கும் -8-3-

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90-துறையடைவு–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது  உரைத்தல் – குரவை   ஆய்ச்சியர் -6–4–

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை  மாவலி மாட்டு
இருங்குறளாகி  இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல்  –-வார் கடா அருவி -8–4-

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் – ஆழி எழ -7–4-

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் — ஒரு நாயகமாய் -4–1-

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –இருத்தும் வியந்து -8-7–

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –-திருமாலிருஞ்சோலை   -10-8-

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க  நினைத்தல் – ஒன்றும் தேவும் -4-10-

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –பரிவதில் ஈசனை -1-6-

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் – கெடுமிடராய-10-2-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –செஞ்சொல் கவிகாள் -10-7-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-துறையடைவு தாமான நிலையில் அருளியது–முனியே நான்முகன் -10-10-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading