ஸ்ரீ ஆர்த்தி ப்ரபந்தம்–

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*
தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*
மணவாள மாமுனிவன் வந்து–

மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரின் தேன் பெருகும் திருவடி மேலே
பரமபக்தி என்று சொல்லப்படும் அளவிறந்த அன்பால், அந்த எம்பெருமானாரைப் பிரிந்து வாடும் வாட்டத்தை
வெளியிட்டுக் கொண்டு, அறிவில் குறைந்தவர்களின் ஆத்மாவுக்கு அந்த எம்பெருமானாரிடத்தில்
பக்தியை வளர்க்கும் உணவாக, அழகிய தமிழ் ப்ரபந்தமாக இந்த ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செய்துள்ளார்.

———–

வம்பவிழ்தார் வண்மை மணவாள மாமுனிகள்*
அம்புவியில் கால் பொருந்தா ஆர்த்தியினால்* – உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள் *
நண்ணி உரைத்தார் நமக்கு-

தேன் பெருகும் மாலையை அணிந்து, வள்ளல் தன்மையுடன் இருக்கும் மணவாள மாமுனிகள்
யதிராஜரான எம்பெருமானாரைப் பிரிந்து இந்த நிலவுலகில் வாழ முடியாத ஆற்றாமையினால்,
நித்யஸூரிகள் நித்யமாக எம்பெருமானைத் தொழும் பரமபதத்தில் உள்ள எம்பெருமானாரின் திருவடிகளை
விரைந்து சென்றடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதை நம்மைப் பார்த்து உபதேசிக்கிறார்.

———–

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்–பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்–அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே-வம்பவிழும் தாரான் -என்றும் –தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று
——————

மெய் கொள் காண வேணும் -என்கிற அபி நிவேச அதிசயத்தால் மெய் வெளுத்து-தத் கார்யமான பிராப்தி தசையை பிராப்தராய்
இப்படி கரை புரண்ட ஆற்றாமையை யுடையராய் இருக்கிற தாம்-ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தாலே
தமக்குப் பிறந்த பரம பக்தி தசையைப் பேசி அனுபவித்து அருளுகிற முகத்தாலே-சரம பர்வ நிஷ்டராய் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
பிராவண்யத்தை யுடையராய் இருக்கும் சரம அதிகாரிகள் எல்லாருக்கும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி
இப் பிரபந்த முகேன அவற்றை வெளி இட்டு அருளுகிறார்

முடிந்த அவா -என்னும்படியும்-சொல்லும் படியான பரம பக்தியை பிராப்தராய்
அந்த தசையைப் பேசின பாசுரம் ஆகையாலே ஆர்த்தி -என்று இதுக்கு நிரூபக திரு நாமமே இருப்பது

தம் அபி நிவேசம் எல்லாம் தோற்ற –பராங்குச பாத பத்தாம் -என்றும்
சடகோபன் தேன் மலர் தாட்கே ஏய்ந்து இனிய பாதகமாம் எந்தை இராமானுசன் -என்றும்
முடிந்த நிலமாகச் சொல்லப்படுகிற சரம பர்வமே சரமாவதி என்று
இச் சரம அர்த்தத்தை =சரம காலத்தில் -சரம பிரபந்த ரூபேண இதிலே யாய்த்து வெளி இட்டு அருளிற்று –

அதில்
ஸ்ரீ யதிராஜ விம்சதி-ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று தொடங்கி
தஸ்மாத் அநந்ய சரணோ பவ தீதிமத்வா -என்று தலைக் கட்டுகையாலே-பிராபக பரமாய் இருக்கும்

இங்கு -வாழி எதிராசா -என்று தொடங்கி -இந்த அரங்கத்து இனிது இரு நீ -என்று தலைக் கட்டுகையாலே
இது பிராப்ய பரமாய் இருக்கும்

இவருக்கு இப்பிரபந்தத்தில் ஓடுகிற தசை தான் அநேக பாவ வ்ருத்திகளை யுடைத்தாய்
இது தான் ஒரு சந்தஸ்சில் அடங்காமல்-பல சந்தஸ் ஸூக்களிலும்-அவற்றை அருளிச் செய்கிறார் –

—————-

எப்படிப் பெரியாழ்வார் பாசுரம் பாடத் தொடங்கும்போதே எம்பெருமான் விஷயத்திலும்
அவன் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடினாரோ,
அப்படி மணவாள மாமுனிகளும், எம்பெருமானார் விஷயத்திலும்
அவர் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடுகிறார்

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழியென
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை–1-

யார் எப்பொழுதும் “வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!” என்று
எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ,
அப்படிப்பட்ட எம்பெருமானார் அடியார்களுக்கு யார் மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ,
அப்படிப்பட்ட (முன் சொன்ன) அடியார்களுக்கு யார் மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ,
அப்படிப்பட்ட (முன் சொன்ன) அடியார்களுடைய திருவடிகளில் யார் வணங்கி இருக்கிறார்களோ,
அவர்கள், நித்ய ஸூரிகளுக்குத் தலைவர்களாக விளங்குவார்கள்.

விண்ணோர் தலை –நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –அன்றிக்கே -அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

————-

நம்மாழ்வார் எப்படி திருவாய்மொழியின் முதல் பதிகத்தில் “தொழுதெழு என் மனனே” என்று சொல்லி,
தொழுகைக்கு விஷயமான எம்பெருமானைக் காட்டும் மந்த்ரத்தை அடுத்த பதிகத்தில்
“வண் புகழ் நாரணன்” என்று காட்டினாரோ, அதே போல,
மணவாள மாமுனிகளும், இப் பாட்டில் எம்பெருமானார் விஷயமான மந்த்ரத்தை வெளியிடுகிறார்.

இராமாநுசாய நம என்று சிந்தித்திரா
மாநுசரோடு இறைப் போழ்து இராமாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு–2-

யாரெல்லாம் “ராமாநுஜாய நம:” என்று சிந்திக்காமல் உளரோ அவர்களோடு
ஒரு க்ஷணப் பொழுதும் பழகாமல் இருக்கப் பார்ப்பவர்களுடைய இரண்டு திருவடிகளில்
சேர்ந்திருப்பவர்களுடைய இரண்டு திருவடிகளை வணங்குபவர்கள்
நித்ய ஸூரிகளுக்கு எப்பொழுதும் இருக்கும் செல்வமாக இருப்பார்கள்.

கீழில் பாட்டில்–அந்வய முகத்தாலே சாதித்த அர்த்தத்தை-இதில் வ்யதிரேக முகத்தாலே வெளியிட்டு அருளி
இம் முகத்தாலும்-ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தை-எல்லை நிலத்து அளவும் பேசி அனுபவித்து அருளுகிறார் —

——-

எம்பெருமானாரைப் பார்த்து “அடியேனுக்கு எல்லா உறவும் தேவரீராக இருக்க,
அந்த நிலைக்கு தடையாக இருக்கும் என் உடம்பை ஏன் இன்னம் அறுத்து அருள வில்லை?” என்கிறார்.

தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம்*
என் தனக்கு நீயே எதிராசா!* இந்நிலைக்கு
ஏராத இவ்வுடலை இன்றே அறுத்தருளப்*
பாராதது என்னோ? பகர்–3-

எதிராசரே! தேவரீரே அடியேனைப் போன்றவர்களுக்குத்
தந்தை, அன்புடைய தாய், மனைவி, பிள்ளைகள் மற்றும் பெரிய செல்வம்.
இந்த நிலைக்குப் பொருந்தாத என்னுடைய இந்த உடம்பை இப்போதே அறுத்து அருளாதது
என்ன காரணத்தினாலேயோ? அதைச் சொல்லி அருள வேண்டும்.

சர்வஞ்ஞரான தேவரே அருளிச் செய்ய வேணும்
அது வருத்தமாய் இருந்ததோ –அதுக்கும் ஒரு கால் சிந்தனை செய்யும் அத்தனை அன்றோ உள்ளது –

நல் -என்கிற இத்தை எல்லாத்திலும் கூட்டிக் கொள்ளவுமாம்

—————–

கீழ்ப் பாசுரத்தில் விரோதியாகச் சொன்ன உடம்பையே தனக்கு (ஆத்மாவுக்கு) சிறைக் கூடமாக நினைத்து,
எம்பெருமானாரே தன்னை இந்தச் சிறையிலிருந்து விடுவிக்கக் கூடியவர் என்று கொண்டு
அதை அவரிடத்தில் ப்ரார்த்திக்கிறார்.

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யானேகி*
அந்தமில் பேரின்பத்துள் ஆகுவேன்* – அந்தோ
இரங்காய் எதிராசா! என்னை இனி உய்க்கை*
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்–4-

இந்த உடல் என்னும் சிறையில் இருந்து விடுதலை பெற்று எப்பொழுது அடியேன்
அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று முடிவு இல்லாத பேரின்பத்தை உடைய பரம பதத்துக்குள் இருக்கப் பெறுவேன்?
யதிகட்கு இறைவரே! கருணையைப் பொழிய வேண்டும்.
அடியேனை ரக்ஷிப்பது தேவரீருடைய பொறுப்பன்றோ? ஆலோசித்துப் பார்த்தருளவும்.

ஸ்ரீ ஈஸ்வரனும் கூட -ஷிபாமி -என்று கை விட்டவரை-சிறையான அடியேனை-இனி உஜ்ஜீவிப்பித்து ரஷிக்கை
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் அவதரித்த தேவர்க்கே பரம் காணும்-இவ்வர்த்தத்தை திரு உள்ளம் பற்றிப் பார்த்து அருளீர் –

————

எம்பெருமானாராலே தன்னைக் கை விட முடியாது என்பதை ஒரு உதாரணத்தைக் கொண்டு உணர்த்துகிறார்.

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்*
இன்புறுமோ? தந்தை எதிராசா! * – உன் புதல்வன்
அன்றோ உரையாய் யான் ஆதலால்* உன் போகம்
நன்றோ? எனை ஒழிந்த நாள்–5-

தன்னுடைய பிள்ளை அருகில் இல்லாத போது தான் அனுபவிக்கும் செல்வம் முதலியவை தந்தைக்கு இன்பத்தைக் கொடுக்குமோ?
யதிகட்குத் தலைவரே! அடியேன் தேவரீரின் புத்ரன் அல்லவோ?
தேவரீரே இதைச் சொல்லி அருள வேண்டும்.
ஆகையாலே, அடியேனைப் பிரிந்து இருக்கும் நிலையில் தேவரீருடைய இன்பம் நன்றாக இருக்குமோ?
“அது இன்பமாக இருக்காது என்பதால் அடியேனையும் தேவரீரிடத்தில் அழைத்துக் கொள்ள வேண்டும்” என்று கருத்து

அடியேனும் தேவர்க்கும் அவர்ஜநீயனான புத்திரன் அன்றோ –-இதில் சந்தேஹம் இல்லை என்பதை தேவரீரே அருளிச் செய்து அருளீர்

——————-

தேவரீர் விஷயத்தில் அனுகூலமாய் இருப்பவர்களுக்கு தேவரீர் தக்க ஸமயத்தில் நன்மையைச் செய்யலாம்.
அடியேன் ப்ரதிகூலனாக இருப்பதால் மேலும் மேலும் தவறுகளே செய்வேன்.
ஆகையால் அதற்கு முன்பு என்னுடைய தேஹத்தைப் போக்கி யருள வேண்டும் என்கிறார்.

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகமுற்றிச் செல்லுங்கால் ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா! இவ் வுடலைத்
தீர்க்கவே ஆன வழி செய்–6-

எப்படி வேப்ப மரம் முற்ற முற்ற, அதின் கசப்பு அதிகம் ஆகுமோ, அதே போல
க்ரூரமான கர்மங்களை உடைய நான், உடம்பு முற்ற முற்ற, மேலும் மேலும் தவறுகளையே செய்வேன்.
ஆகையால், யதிகளுக்கு நாதரானவரே! அடியேனுடைய ஸ்வரூபம் நிலைத்து இருப்பதற்காக,
தேவரீர் முற்பட்டுச் சிந்தித்து அடியேனுடைய இந்த உடலை முடிப்பதற்கான வழியைச் செய்தருள வேண்டும்.

ஆம் பரிசால் -ஸ்வரூப சத்தை  யுண்டாம் பிரகாரத்திலே-முற்கோலிச் சிந்தித்து –எதிகளுக்கு நாதரானவரே
இந்த ஹேய சமுதாயமான தேஹத்தை முடிக்கைக்கேயான உபாயம் செய்து அருள வேணும் –

பிரதிகூலனான எனக்கு அரை ஷணம் தாழ்க்கிலும் பிராதிகூல்யமே கை விஞ்சி வரும்
ஆகையால் ஹேய குண வர்த்தகமான தேஹத்தை தத் பூர்வமே போக்கும்படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

——————

உம்முடைய கார்யம் நாம் ஏன் பண்ண வேண்டும் என்று எம்பெருமானார் கேட்பதாகக் கொண்டு,
மணவாள மாமுனிகள் “பால் குடிக்கும் குழந்தை என்று தன் கார்யத்தைத் தானே செய்து கொள்ளுமோ
அன்று தான் தேவரீரையே நம்பி இருக்கும் அடியேனும் அடியேன் கார்யத்தைச் செய்து கொள்வேன்” என்கிறார்.

அன்னை குடி நீர் அருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ? என்னே
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்
உனக்கது தாழ்வோ? உரை–7-

தன் குழந்தையிடத்திலே மிகவும் அன்பு கொண்ட தாயானவள் அக்குழந்தைக்கு ஏதேனும் நோய் வந்தால்
தான் நீர் முதலியவற்றை அந்த நோயை வளர்க்காத விதத்தில் பருகி, தன்னால் ஊட்டப்படும் குழந்தையின் நோயைப் போக்காளோ?
என்ன ஆச்சர்யம்! அடியேனிடத்தில் தாயன்பு கொண்டிருக்கும் எதிராசரே!
அடியேன் பண்ண வேண்டிய அனுஷ்டானங்களை அடியேனுக்குப் பதிலாக தேவரீர் அனுஷ்டித்தால்
அடியேனுக்கு நன்மையை ஏற்படுத்தினால், அது தேவரீருக்குக் கெடுதலோ?-இதைத் தேவரீரே அருளிச் செய்யலாமே.

ஸ்த நந்த்ய பிரஜை தன் கார்யத்துக்கு வேண்டுமவை தானே செய்து கொள்ளில் அன்றோ
தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யமான அடியேனும்-ஸ்வ காரியத்துக்கு ஷமனாய் செய்து கொள்வது -என்கிறார்-

ஆச்சார்ய அபிமானம் ஆவது-இவை ஒன்றுக்கும் சக்தி இன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து
இவனுடைய இழவையும்-இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டாகும் பிரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே

இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான-மகா பாகவத அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று சொல்லுகிறபடியே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்கு ஆக்குகை-என்னும் அளவாக
அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை யாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது

——————

எம்பெருமானார் “நாம் தாயைப் போலே உம்மை ரக்ஷிக்க வேண்டும் என்று சொன்னீர்.
ஆனால் நீரே நல்ல மற்று தீய செயல்களைச் செய்கிறீரே. நாம் எப்படி உம்மை ரக்ஷிப்பது?”
என்று கேட்பதாகக் கொண்டு, மணவாள மாமுனிகள் “அடியேனை தேவரீர் ரக்ஷிக்கவில்லை என்றால்
அது தேவரீருக்கே அவப் பெயரைக் கொடுக்கும்” என்கிறார்.

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்திருக்கக் கண்டிருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் நன்குணரில்
என்னாலே என்னாசமேலும் எதிராசா!
உன்னாலே ஆமுறவையோர்–8-

தாயானவள், தன்னுடைய குழந்தை பெரிய கிணற்றுக்கு அருகில் சேர்ந்து இருக்க,
அதைத் தடுக்காமல் இருந்தாள் என்பதையே தனக்கு அவப்பெயராகப் பெறுகின்றாள்.
எதிராசரே! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் பாபாமாகிற படுகுழியைக் கிட்டின என்னாலே
என்னுடைய நாசத்தை விளைத்துக் கொள்ளப்பட்டது என்றாலும் தேவரீரிடத்தில்
அடியேனுக்கு இருக்கும் ஸம்பந்தத்தை ஆராய்ந்து பார்க்கவும்.

பாபங்கள் ஆகிற படு குழியை கிட்டி நின்ற என்னாலே-ஸ்வ விநாசத்தை விளைத்துக் கொள்ளப் பார்த்தேனே யாகிலும்
அத்தை நிஷேதித்து ரஷிக்க வேணும்படி-எதிகளுக்கு நாதரான தேவராலே யுண்டாம் சம்பந்தத்தை திரு உள்ளம் பற்ற வேணும் –

இத்தால்-சம்பந்தம் அடியாக சர்வ தசையிலும் ரஷிக்க வேணும் -என்று கருத்து –
இதத்தாய் இராமானுசன் -என்கிற திவ்ய ஸூக்தியையும்
பிரஜையை கிணற்றின் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால்
தாயே தள்ளினாள் என்னக் கடவது – இறே -என்கிற திவ்ய ஸூக்தியும்-ஆயத்து இதுக்காகும் –

——————

அருகில் இருப்பவர்களுக்கு “நீர் பாபங்களே செய்து இன்னம் பல பிறவிகள் எடுக்கவேண்டும்படி இருந்தால்
எம்பெருமானாராலே என்ன செய்ய முடியும்” என்பது கருத்தாகக் கொண்டு
“அப்படியானாலும், அடியேனுக்காக அவரும் அவதாரம் செய்து அடியேனை ரக்ஷித்து அருளுவார்” என்கிறார்.

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் பாபத்தால்
யான் பிறப்பேனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா–9-

கிணற்றில் விழும் குழந்தையோடே குதித்து அவ்வாபத்தை நீக்கும் தாயைப்போலே
அடியேன் பண்ணிய பாபத்தாலே அடியேன் இன்னும் சில பிறவிகளை எடுத்தாலும் அடியேனுக்குத் தந்தையாகிய எதிராசர்,
அடியேனைக் கை தூக்கி விடுவதற்காக தாமும் அவதரித்து அருளுவார்.

நான் பிறந்த ஜென்மத்துக்கு ஈடாக தாமும் என்னை உத்தரிப்பதாக-எதிர் சூழல் புக்கு அவதரித்து அருளுவார் –

உடைமைக்கு ஒரு முழுக்கு-உடையவனுக்கு உடமை பெறும் தனையும் -முழுக்க வேண்டி இறே இருப்பது –

—————

எம்பெருமானார் திருவடிகளை விட்டு விலகி, மனது வேறு விஷயங்களில் ஈடுபடுவதனாலேயே
கர்மமும் அதன் மூலம் ஜன்மமும் கிடைக்கிறது.
இனி அப்பேச்சுக்கே இடம் இல்லாதபடி அவர் திருவடிகளைப் பொருந்தி வாழ்
என்று தன் திருவுள்ளத்தைக் குறித்து அருளுகிறார்.

பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமாநுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே! வாழ்–10-

எனக்கு பவ்யமான நெஞ்சே!
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -இத்யாதிப் படியே–மலர்மகளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான
பெரிய பெருமாளுடைய-பூவார் கழல்களுக்கு –திருவடித் தாமரைகளுக்குப் பாதுகைகளாய்–
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று ஸ்ரீ சடகோபனாய்- அத்தாலே தாம் ஆனந்தப்படும் செல்வமான நம்மாழ்வாருடைய-

தேன் பெருகும் மலர் போன்ற திருவடிகளுக்குப் பொருந்திய, ப்ரியமான திருவடி நிலைகளாய்,
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளுக்கு ஸ்வரூப பிராப்தமாய் இருக்கையாலே அனுரூபமாய்
மேவினேன் அவன் பொன்னடி -என்னும்படி பொருந்தி-அத்யந்த அபிமதமான திருவடி நிலைகளாய்-
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி நெஞ்சே வாழ -என்கிறபடி அடியேனுக்குத் தந்தையாய் இருக்கும்
ராமானுஜர் என்னும் எம்பெருமானாரைச் சரணடைந்து வாழ்.

இத்தால்-ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யத்துக்கு எல்லை நிலம் இவர் ஆகையாலே
அவர் திருவடி நிலைகளுக்கும்-ஸ்ரீ யதீந்திர பிரவணர் என்று நிரூபக மாக வேணும் இறே-

———–

எம்பெருமானார் “நீர் நாமே எல்லாம் என்றிருக்கும் வடுகநம்பி போன்றோர்
பெற்ற பேற்றை ஆசைப் படுகிறீர்” என்று சொல்ல,
மணவாள மாமுனிகள் “தேவரீரே அந்நிலையை அடியேனுக்கு உண்டாக்கி,
அடியேனை எப்பொழுதும் அடிமை கொண்டு அருள வேண்டும்” என்கிறார்.

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா! எந் நாளும்
உன் தனக்கே ஆட்கொள் உகந்து–11-

எம்பெருமானாரே! தேவரீரைத் தவிர எம்பெருமானைக் கூட தெய்வமாக அறியாத,
பொருந்திய புகழை உடைய வடுகநம்பி யுடைய சரம பர்வ நிஷ்டையை தேவரீர் தந்தருளி
எக் காலத்திலும் தேவரீருக்கே அடியேனை அடிமையாகக் கொள்ள வேண்டும்.

எனக்கே ஆட் செய் எக் காலத்தும் -என்கிறபடியே -தேவர்க்கே ரசவஹமாம்படி
சர்வ காலத்திலும் உகப்போடே அடிமை கொண்டு அருள வேணும்
அங்கே போகிலும் அவர் உகந்த அடிமையேயாக வேணும் என்று கருத்து –

மன்னு நிலை சேர் வடுக நம்பி என்று பாடமான போது-நிழலும் அடிதாறும் ஆனோம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா என்றும் பேசும்படி அத்யந்த பரதந்த்ரராய் -பொருந்தி இருக்கிற சரம பர்வ நிஷ்டை வேணும் என்று கருத்து –

————————

எம்பெருமானார் “இப்படி நீர் சொல்வதைச் செய்வதற்கு நமக்குள் என்ன உறவு உள்ளது” என்று
கேட்பதாகக் கொண்டு தனக்குத் திருவாய்மொழிப் பிள்ளையுடன் உள்ள உறவை
எடுத்துரைக்கிறார் மணவாள மாமுனிகள்.

தேசந் திகழும் திருவாய்மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா!
அப்படியே நீ செய்தருள்–12-

எம்பெருமானாரே!
எல்லா இடங்களிலும் ப்ரகாசிக்கும் வைபவத்தை உடையராய் திருவாய்மொழியில் உள்ள ஈடுபாட்டாலே
திருவாய்மொழிப் பிள்ளை என்றே அழைக்கப் படுபவரான, தன்னிடத்தில் தானே ஆசார்யத்வத்தை ஏறிட்டுக் கொள்கை
முதலான குற்றங்கள் இல்லாத திருமலை ஆழ்வார், தம்முடைய தயைக்குப் பாத்ரமான அடியேனை
“இவன் எப்படி மாறினால் உஜ்ஜீவனத்தை அடைவான்?” என்று ஆராய்ந்து
தேவரீர் திருவடிகளிலே சேர்த்தருளினாரோ, அவ்வழியிலேயே
தேவரீர் அடியேனை உஜ்ஜீவனம் அடையச் செய்ய வேண்டும்.

ஸ்ரீ சைல நாதன்-தம்முடைய தயா பாத்ரமான அடியேனை -கருணா பரிணாம ரூப ஸ்நேஹத்தாலே
இவன் எப்படி யானால் ஜீவிக்கும் என்று விசாரித்து-பிராப்த சேஷியான தேவர் திருவடிகளிலே சேர்த்து அருளினார்

அப்படியே தேவரும் திரு உள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் –

—————

தாம் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கக் கூடிய எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் பண்ணி
அவர் திருவடிகளில் பரம்பரையாக ஸம்பந்தம் பெற்றவர்கள் பெறும் பேற்றை அருளிச் செய்கிறார்.

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று ஏத்திச் சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்–13-

“யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”, “யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”,
“யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக” என்று பல முறை சொல்லி, ஸ்தோத்ரம் பண்ணி,
ஸாமர்த்யமாக வாழ்பவர்களுடைய திருவடிகளின் கீழே வாழ்பவர்கள்
ஆழ்வார்களுடைய அருளை முழுவதுமாகப் பெறுவர்கள்.

இத்தால்–இவர்களுக்கு சரம அவதி தாஸ்யம் நிலை நிற்கும்படி கடாஷிப்பார்கள் -என்றபடி

முதல் பாட்டிலே-மங்களா சாசன பரருடைய சம்பந்த சம்பந்திகளை-அயர்வறும் அமரர்கள் ஆதரிப்பார் என்றார்

இதில்-அவர்களை மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆதரிக்கும் படியை-அருளிச் செய்கிறார் –

—————————–

“தேசம் திகழும்” என்னும் பாசுரத்தோடு இப்பாசுரத்துக்குத் தொடர்பு.
நடுவில் வந்த பாசுரம், எம்பெருமானார் வைபவத்தை நினைத்து சொல்லப்பட்டது.
எம்பெருமானார் “திருவாய்மொழிப் பிள்ளை உம்மை நம்மிடத்திலே சேர்த்ததைச் சொன்னீர்.
நீர் அதற்கு மேலே எதுவும் அதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு,
மணவாள மாமுனிகள் “அதிகாரம் இருந்தால் தேவரீரிடத்தில் வரவேண்டிய அவச்யம் இல்லையே என்கிறார்”.

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!–14-

எம்பெருமானாரே! ஞானம் மற்றும் அநுஷ்டானங்களில் பூர்த்தியோடு இருக்கும் அதிகாரம் இருந்தால்
பெரிய பெருமாளே தன் அருளைக் கொடுக்க மாட்டாரோ?
அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாதவர்களுக்காகத் தானே தேவரீர் அருள் புரிந்து ரக்ஷிக்க வேண்டுவது?
தேவரீரும் அதிகாரிகளுக்கே அருள் புரிவேன் என்று சொன்னால் அடியேனைப் போன்ற
அதிகாரமில்லாதவர்கள் என் செய்து உஜ்ஜீவனத்தை அடையப் போகிறோம்?

அகதிகளுக்கே கதியாக இருக்கிற ஈத்ருச ஸ்வ பாவரான தேவரும் அதிகார சம்பத்தை உடையவர்களுக்கே கிருபை பண்ணி ரஷிக்கில்
அநாதிகாரிகளாய் இருக்கிற அஸ்மதாதிகள் எந்த யோக்யதையை உப பாதித்து கொண்டு உஜ்ஜீவிக்கப் புகுகிறோம்
அநாதி காலத்தோபாதி இழந்தே போம் அத்தனை அன்றோ-

——————-

பரம தார்மிகரான எம்பெருமானாரை மீண்டும் மீண்டும் குற்றம் சொல்கிறோம்.
அவர் திருவடிகளை அன்போடு நினைத்தால் அவரே நமக்கு எல்லா நன்மைகளையும் செய்வார்.
இப்படியிருக்க, அவரிடத்திலே நமக்கு உண்மையான அன்பு இல்லையே என்று வருந்துகிறார்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா உரைக்கும் இத்தால் என்? அன்பவர் பால்
இப்போதளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது உண்டாவது இனி?--15

“எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று சொல்லப்படும் இந்த வாசகத்தையே
அடியேனுடைய நாக்கு அன்பில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும்.
இதனால் என்ன பயன்?
இந்த க்ஷணம் வரை அவர் விஷயத்தில் ஒரு அன்பையும் என்னிடத்தில் பார்க்கவில்லை.
இது வரை வாராத அது இனி எப்பொழுது வர போகிறது?

ஸ்ரீ பிள்ளை கொல்லி காவல் தாசருக்கு ஸ்வரூப உஜ்ஜீவனமாயும்
ஸ்ரீ சோமாசி ஆண்டானுக்கு நித்ய பிராப்யமுமாய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று சொல்லப் படுகிற இந்த வாசகத்தையே
அஹ்ருதயமாக என் நாவானது சொல்லா நிற்கும் –

அடியிலே-ஸ்ரீ இராமானுசாய நம -என்று உத்தர வாக்ய தாத்பர்யத்தையும்
இதில் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சரணம் -என்று பூர்வ வாக்கியம் தாத்பர்யத்தையும்-வெளியிட்டு அருளுகிறார் –
(ஸ்ரீ ராமானுஜ த்வயமே சரம பர்வ நிஷ்டர்க்கு ஸதா வக்த்தவ்யம்-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -மதுர கவி ஆழ்வார் -அனுபவ தசையில் )

————————

எம்பெருமானார் “நம்மிடத்தில் உமக்குச் சிறிதளவும் அன்பில்லை என்றாலும்,
விரோதமாகவாவது செய்யாமல் இருக்கிறீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு,
மணவாள மாமுனிகள் “அதுவும் இல்லை. அறிவிலியான அடியேனுடைய குற்றத்தை
போகமாகக் கொள்ளும் தேவரீர் திருவடிகளை என்று நான் அடைவேன்?” என்கிறார்.

ஆகாதது ஈது என்றறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வன் ஆதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா!
என்று உன் அடி சேர்வன் யான்?–16-

யதிராஜரே! நல்லோர்களால் கைவிடப்படுபவன எது என்று நன்கறிந்தும்,
அதை மற்றவர்களுக்கு உபதேசித்தும்
அப்படிப்பட்ட செயல்களையே எப்பொழுதும் செய்வேன்.
இப்படி இருப்பதால், -மோகாந்தன் – மோஹத்தால் அந்தகன்-மயக்கத்தால் குருடன்-என்று
திருவுள்ளத்திலே கொண்டு, அடியேனைத் தள்ளி விட வேண்டாம்.
எப்போது அடியேன் தேவரீர் திருவடிகளை அடையக் கடவேன்?

இப்படி மோஹாந்தனாய் முன்னடி தோன்றாதே இருக்கிற அடியேனுக்குத் தளப்பம் தீரும்படி
சர்வஞ்ஞரான தேவரீர் ஒரு நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம்-

—————————

கீழே “எப்பொழுது தேவரீரை அடைவேன்?” என்று கேட்ட இவருக்கு எம்பெருமானார்
“சரீர வியோகத்தில் கொடுக்கிறோம்” என்று சொன்னதாகக் கொண்டு
“உடனே கொடுக்காமல் காலம் தாழ்த்துவதன் காரணம் ஏதோ?” என்கிறார்.

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஒன்று
இல்லா எனக்கும் எதிராசா! நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவேன் என்ற நீ
தண் என்றிருக்கிறது என் தான்?–17-

யதிராஜரே! தீய செயல்கள் எல்லாவற்றையும் பதித்துக் கொண்டு,
நல்ல செயல்கள் ஒன்றும் இல்லாத அடியேனுக்கு,
ஸத் புருஷர்கள் அடையத் தகுந்த பரமபதத்தை நாமே தருகிறோம் என்று அருளிச்செய்த தேவரீர்
கால் தாமதம் செய்வதன் காரணம் என்ன?–உடனே தந்தருள வேண்டும் என்று கருத்து-

வேறு சிலர் ரஷகர் யுண்டோ–தானே சாதன அனுஷ்டானம் பண்ணி வருகிறான் என்றோ –-எத்தாலே தான் தாழ்க்கிறது-

அநந்ய கதியாய் அகிஞ்சனனாய் இருக்கும் அடியேனுக்கு–சீக்ரமாக பிராப்ய தேசத்தை பிராபித்து அருள வேணும் -என்று கருத்து-

———————

எம்பெருமானார் இவர் ஆசைப்பட்டதைச் செய்து தருவதாக இருக்க,
அது கிடைக்கும் வரை பொறுக்க முடியாமல், இந்த ஸம்ஸாரமாகிற இருட்டு
அடியேனுக்கு எப்போது முடியும் என்று அவரையே கேட்கிறார்.

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா!
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் குன்றாமல்
இப்படியே இந்த உயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு–18-

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே!
குறையாமல் இப்படியே இந்த ஆத்மாவுக்கு அறியாமை என்னும் இருட்டை விளைக்கும் இந்த ஸம்ஸாரமாகிற
காள ராத்ரியில் (கருப்பு இரவு) அகப்பட்டு வழி தெரியாமல் திகைக்கும் அடியேனுக்கு
எப்போது தேவரீரை அடைவதான நல் விடிவு ஏற்படும்?
இவ்விஷயத்தில் அடியேன் ஒன்றும் அறியாமல் இருக்கிறேன்.
எல்லாம் அறிந்த தேவரீர் இதற்கு ஒரு நல்ல விடிவை அருள வேண்டும்.

என்னுடைய சம்சாரம் ஆகிற விடியா வெம் நரகமான காள ராத்ரிக்கு என்று
ஒரு நல் விடிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமானுஜ திவாகரான அவர் தம்மையே கேட்கிறார் –

—————–

எம்பெருமானாரின் கை பார்த்திருக்கும் தான் இப்படி உடம்புக்கு வசப்பட்டிருப்பது
அவருக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்குகிறார்

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்குத் தீங்கன்றோ? நல்லார்கள்
தந்தனயர் நீசர்க்கு ஆட்செய்யச் சகிப்பரோ?
எந்தை எதிராசா! இசை–19-

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே! இரவும் பகலும் அடியேன் இந்த உடம்பின் வழி
சென்று ஈடுபட்டிருப்பது தேவரீருடைய பெருமைக்கு ஒரு கேடன்றோ?
ப்ரஹ்ம ஞானத்தை உடைய நல்லார்கள் தங்கள் புதல்வர்கள் தாழ்ந்தவர்களுக்கு
தாழ்ந்த தொண்டுகளைச் செய்து கொண்டிருப்பதைப் பொறுப்பார்களோ?
இதைத் தேவரீரே அருளிச் செய்ய வேண்டும்

அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே தேக கிங்கரனாய்-அதுவே யாத்ரையாய்த் திரிகிறது –
உனக்குப் பணி செய்து இருக்கும்-(பெரியாழ்வார் ) இத்யாதிப் படியே தேவர்க்கு தேஜோ ஹானி அன்றோ

ஆகையால் அத்தைத் தவிர்த்து இவ் வாத்மாவுக்கு சேஷியான தேவரே அநவரதம் அடிமை கொண்டு அருள வேணும் என்று கருத்து –

——————-

எம்பெருமானார் தனக்கு அர்ச்சிராதி கதியில் சென்று பரமபதத்தை அடையும் பேற்றைச்
செய்து கொடுக்க இருக்கிறார் என்பதை உணர்ந்து இனி நமக்குப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பி,
அர்ச்சிராதி கதியில் போவது தொடங்கி பரமாத்மாவுக்குத் தொண்டு செய்வது முடிய
எல்லாவற்றையும் தாம் பெற்றதாக நினைத்து ஆனந்தம் அடைகிறார்.

ஆழ்வாரது சூழ் விசும்பு திருவாய் மொழி போல் பர ஞான தசையில் அருளிச் செய்கிறார்

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை ஆற்றில்
நாம் மூழ்கி மலம் அற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலந்திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று
மாமலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே–20-

கள்வன் கொல் ஸ்ரீ பிராட்டியைப் போலே-அவன் முன்னே வழி நடத்த பின்னே
பரம பதத்தை அடைவதை விடப் போகும் வழியே சிறந்தது என்று சொல்லும்படியான
அர்ச்சிராதி கதியில் போகும் இன்பம் எல்லாம் அனுபவித்து,
அம்ருத மயமான விரஜா நதியிலே நாம் நம்முடைய வருத்தம் எல்லாம் தீரும்படித் தீர்த்தமாடி,
எல்லா தோஷங்களும் நீங்கப் பெற்று, பரிசுத்தமான பரமபதத்தை அடைந்து,
குணங்களெல்லாம் திகழும், சுத்த ஸத்வ மயமான திவ்ய உடம்பைப் பெற்று,
நித்யஸூரிகள் எதிர் கொண்டு அழைத்து, ப்ரஹ்மாலங்காரத்தைப் பண்ணி
ஸத் காரங்கள் செய்து, அவர்களுடன் திரு மா மணி மண்டபத்திலே சென்று
ஸ்ரீ ய:பதியான ஸ்ரீமந்நாராயணன் தன் மடியிலே நம்மை வைத்து மகிழும் செல்வம்,
யதிராஜர் இதில் ஆசையுடைய நமக்கு அருளும் செல்வமே.

இதிலே அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே
இது ஒரு பேறு இருந்தபடியே-

———————–

மணவாள மாமுனிகள் தம் நெஞ்சைக் குறித்து
“நம் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளை அருளின ஞானத்தைக் கொண்டு
அவருடைய அபிமானமே நமக்கு உத்தாரகம் (ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது) என்று இரு.
எம்பெருமானாரே நமக்கு அதைச் செய்து கொடுப்பார். ஆகையால் இது விஷயமாக –
நிர்ப் பயோ நிர்ப் பரோஸ்மி -என்று இருக்கும் நமக்கு என்ன பயம் என்கிறார் –

திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டவர் தம்மை உத்தாரகராக எண்ணி
இரு மனமே! அவர்க்கா எதிராசர் எமைக் கடுகப்
பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே?–21-

மனமே! ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமத்தையுடைய திருவாய்மொழிப் பிள்ளை
தம்முடைய இயற்கையான கருணையாலே அருளும் ஞானத்தைக் கொண்டு,
இவரையே நம்மை ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பவராகக் கொண்டு, உறுதியோடு இரு!
நம் ஆசார்யருக்காக யதிராஜர் “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்றிருக்கிற நம்மை
விரைவில் பரமபதத்தில் ஏற்றி அருளுவார்.-மனமே நையல் மேவுதற்கே -என்கிறபடி
ஏதத் விஷயமாக நமக்கு என்ன பயம் ஒரு பயமும் வேண்டா –மார்பிலே கை வைத்து உறங்கும் அத்தனை அன்றோ -என்ற கருத்து

—————-

திருவாய் மொழிப் பிள்ளை யுடைய இயற்கையான கருணையால்,
எம்பெருமானாருடைய அபிமானத்தால் ஸம்ஸாரத்தைக் கடந்து
ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை அடைவேன் என்கிறார்.

தீதற்ற ஞானத் திருவாய்மொழிப் பிள்ளை சீரருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தம் அபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே–22-

குற்றமற்ற ஆத்ம ஜ்ஞான குணங்களை யுடைய திருவாய் மொழிப் பிள்ளை யுடைய இயற்கையான கருணையாலே,
காமம் முதலிய தோஷங்களைப் போக்கும் யதிராஜருடைய அபிமானம் (கருணை) என்கிற கப்பலில் ஏறி
ஸம்ஸாரமாகிற பெருங்கடலைக் கடந்து குற்றங்களுக்கு எதிர்த் தட்டாயிருக்கும்
ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகள் என்னும் கரையை அடைவேன்.

வேறு ஒரு பிரப்யாந்தரத்தை அபேஷிக்கும்படியான கோது இன்றிக்கே
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகள் ஆகிற தீரத்தை கிட்டப் பெறுவன்-இது நிச்சயம் –

கோதற்ற மாதவன் -என்று கோது அறுகையாவது அவனுக்கு விசேஷணம் ஆன போது
ஸ்ரீ பிராட்டியோடு கூடி இருக்கையாலே-திருவில்லாத கோது அற்றவன் – ஸ்ரீ யபதி இறே நித்ய பிராப்யன் ஆவான் –

—————-

கீழ் இரண்டு பாசுரங்களில்
தம்முடைய ஆசார்யரான பிள்ளை, பரமாசார்யரான எம்பெருமானார் ஆகியோருடைய அபிமானத்தாலே
தமக்கு பேறு உறுதியாகக் கிட்டும் என்றவர், இப்படி-வடிவுடை மாதவன் -என்னும்படி புதுக் கணிப்போடு சபரிகரனாய் –
ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிமார்களோடு எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நிலையை
விரைவில் அனுபவிக்கும்படி தேவரீர் பண்ணி யருள வேண்டும் என்று
எம்பெருமானாரிடம் ப்ரார்த்திக்கிறார்.

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க
ஆனந்த மயமான மாமணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகும் மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அநுபவிக்கும் வகை நல்கென் எதிராசா!–23

அடியேனுக்கு நாதரான யதிராஜரே!
நித்யர்கள் முக்தர்கள் என்கிற –அந்தமில் பேரின்பத்து அடியவர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அனந்த-ஸ்ரீ கருட-ஸ்ரீ விஷ்வக்சேன-பிரமுகரான நித்ய வர்க்கமும்
ஸ்ரீ பராங்குச-ஸ்ரீ பரகால-ஸ்ரீ யதிவராதிகள் தொடக்கமான முக்த வர்க்கமும்
மணி முத்தாதிகளை நிறைத்தால் போலே அழகு ஓலக்கமாக வரிசை அடைவே
சேவித்து இருக்கிற உயர்ந்த ஆனந்தத்தைக் கொடுக்கும் திரு மா மணி மண்டபத்திலே,
ஒப்பற்ற திவ்யமான படுக்கையாயிருக்கும் ஆதி சேஷனுடைய பணா மணிகளின் ஒளி வட்டத்துக்குள்ளே
மிக்க அழகையும் மென்மைத் தன்மையும் உடைய பெரிய பிராட்டியார் வலது பக்கத்திலும்,
அவளைப் போன்ற பூமிப் பிராட்டியும் நீளா தேவியும் இடது பக்கத்திலும் ஸேவித்திருக்க,
இவர்களுக்கு நடுவே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமந் நாராயணனை, –
வீற்று இருந்து ஏழ் உலகம் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற
வாழ் புகழ் நாரணனான ஸ்ரீ வைகுண்ட நாதனை கால விளம்பம் இன்றிக்கே
கடுக நான் அனுபவிக்கும் பிரகாரம் -வகையை அருள வேண்டும்.

———————-

இதில் தேஹத்தில் இருந்து விடுதலை பெறுவது தொடங்கி
பரமபதத்தில் அடியார் குழாங்களை அடைந்து
தேசிகரோடு ஒரு கோவையாய் இருக்கும் அளவாய் இருக்கிற பேற்றைப் ப்ரார்த்திக்கிறார்.

இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மாமண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!--24-

அடியேனுக்கு நாதரான யதிராஜரே!
இம் மாய வாக்கை -என்னுமா போலே அத்யந்தம் ஹேய சமுதமாய் இருக்கிற
இந்த ஸ்தூல சரீரத்தை உபேஷையோடே மங்க ஒட்டு -என்று த்யஜித்து –,
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன் நடுவுள் அன்ன தோர் இல்லியினூடு போய் -என்கிறபடியே
ஸூர்ய மண்டலத்தைக் கீண்டு அதற்கும் மேலே போய்,
இந்த ப்ரஹ்மாண்டத்தையும் கடந்து, நடுவிலுள்ள ஏழு ஆவரணங்களையும் கடந்து,
முடிவில்லாத மூல ப்ரக்ருதியைக் கடந்து, மிகவும் அழகாக இருக்கிற விரஜா நதியில் குளித்து,
அங்கே அமாநவனுடைய கர ஸ்பர்சத்தைப் பெற்று, ஒளிபடைத்த திவ்யமான தேஹத்தையும் பெற்று,
நித்ய ஸூரிகள் எதிர் கொண்டு வரவேற்று, பகவானை அலங்கரிப்பதைப் போலே அலங்கரித்து,
ஸ்தோத்ரம் பண்ணி, நல்ல வழியிலே சென்று, வைகுந்த மாநகரத்தை அடைந்து, உள்ளே சென்று,
திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி, நமக்கு ஸ்வாமிகளாகவும்
ஸ்ரீமந் நாராயணனுக்கு அடியார்களுமான குழாங்களுடன் கூடும் நாளானது
குறுக்கும் வகை யுண்டு கொலோ -என்கிறபடியே அத்தை அபேஷிக்கிற
அடியேனுக்கு அருகே ஏற்படும் வழியை நன்றாக ப்ரகாசிக்கும்படிச் செய்ய வேண்டும்.

————————

எம்பெருமானார் “நீரோ உம்முடைய அபராதத்தைப் பார்க்காமல் பெரிய பேற்றை ஆசைப்படுகிறீர்.
அதற்கு நாம் செய்வது என்?” என்று நினைப்பதாகக் கொண்டு, முதலில் இருந்து
அடியேனுடைய அபராதங்களைப் பொறுத்து, மோக்ஷத்தையும் கொடுக்கிறேன் என்று
எண்ணி யிருக்கும் தேவரீர், கால விளம்பம் பண்ணாமல்அத்தைச் செய்து அருள வேணும் என்கிறார்-

என்று நிரேதுகமாக என்னை அபிமானித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்றளவும் அநவரதம் பிழையே
அடுத்தடுத்துச் செய்வது அநுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்தருள வேண்டும் எதிராசா!–25-

யதிராஜரே! என்று ஒரு காரணமும் இல்லாமல் அடியேனை “இவன் நம்முடையவன்” என்று அபிமானித்து அருளி,
என்று அடியேனும் அந்தக் கருணையை அறிந்து தேவரீருக்கே அடிமையாய் இருக்கும்படி செய்தருளினீரோ,
அன்று முதல் இன்று வரை தவறுகளையே செய்து விட்டு, அத் தவறுகளுக்கு அனுதாபப்படுவது,
இனி மேல் செய்ய மாட்டேன் என்று தேவரீரிடத்தில் ப்ரார்த்திப்பது ஆகிற அடியேனுடைய
கொடும் செயல்களைக் கண்டும், அடியேனை இகழாமல், தேவரீர் திருவடிகளில் எப்போதும் கைங்கர்யம் கொண்டு அருளினீர்.
இவ்வளவோடு நிறுத்தாமல் இன்று அடியேனுக்கு சத்துக்களுக்கு கந்தவ்ய பூமியான
ஸ்ரீ திரு நாட்டையும் யோக்யதை இல்லாத எனக்கு பிரசாதிப்பதாக இச்சித்து திருவுள்ளத்தில் நினைக்கிறீர்.
காலக் கழிவு செய்யாமல் கடுக செய்து அருள வேணும்-

———————–

தம்மை ஒழிய வேறு யாரும் இவரை ரக்ஷிக்க முடியாது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளக் கருத்தை
“தேவரீரே அடியேனை ரக்ஷித்து, அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் உண்டாக்கி,
ப்ராப்ய தேசத்தை அடையும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ?
சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ?
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ?
மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ?
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்?
எதிராசா! உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே–26-

எம்பெருமானாரே! அடியேனுடைய அபராதங்களை மன்னிக்க, பெரிய பெருமாளுக்கு முடியுமோ?
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –
பெரிய பிராட்டியார் தொடக்கமான எம்பெருமானின் தேவிமார்களுக்கு முடியுமோ?
ஸேனை முதலியார் முதலான நித்யஸூரிகளுக்கு முடியுமோ?
நித்யமாயிருக்கும் திருக் கல்யாண குணங்களை உடைய நம்மாழ்வார்,
அடியார்கள் விஷயத்தில் அருள் புரியும் திருமங்கை ஆழ்வார் முதலானவர்களுக்கு முடியுமோ?
மற்றுமுண்டான நம் ஆசார்யர்களுக்கு முடியுமோ?
ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ
என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ள யாருக்கு முடியும்?
தேவரீரைத் தவிர வேறு யாருக்கும் அடிமை இல்லாத அடியேனுக்கு,
தேவரீர் க்ருபையால் ருசியையும் உண்டாக்கி, மிகவும் ஒளி படைத்த பரமபதத்தில்
அடியேனை விரைவில் சேர்த்து அருள வேண்டும்.

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே-பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்-தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி-ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு இல் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே–39- என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

——————

எம்பெருமானார் தனக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதில் ஆர்வத்துடன் இருப்பதைக் கண்ட மணவாள மாமுனிகள்
ஸம்ஸாரத்தில் எல்லாம் கைவிட வேண்டியதாகவும், பரமபதத்தில் எல்லாம் கைக்கொள்ள வேண்டியதாகவும்
ஆன பின்பு அவ்வவற்றை மறப்பது மற்றும் நினைப்பது ஆகியவற்றை தனக்கு அடங்கிய
மனதுக்கு அருளிச் செய்கிறார்.

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே!
இரவு பகல் எதிராசர் எமக்கு இனிமேல் அருளும்
அவ்வுலகை அலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அநுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கிட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னும் அத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த உடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே–27-

நெஞ்சே! இந்த உலகத்தில் இனி ஒன்றையும் சிந்தியாதே, இரவும் பகலும் எம்பெருமானார்
நமக்கு அருளும் பரம பதத்தையும், மலர் மகளான பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமான்
அங்கே திவ்ய ஸிம்ஹாஸனத்தில் இருக்கும் இருப்பையும், நித்யர்கள் மற்றும் முக்தர்கள் குழாங்களையும்,
அவர்கள் அனுபவத்தை அதற்காக இட்டுப் பிறந்தும் இந்த ஆத்மா இழந்து கிடந்தது என்பதையும்,
எக் காலமும் அந்த அனுபவத்துக்குத் தடையாய் இருக்கும் நம்முடைய க்ரூர கர்மங்களால் வந்த இந்த உடலில் இருந்து
விடுதலை பெறும் காலத்தையும், இந்த தேஹத்தை விட்ட பிறகு கிடைக்கும் பேரின்பத்தையும்,
இவை எல்லாவற்றையும் இடை விடாமல் சிந்தித்திரு.

இப்படி உக்தங்களாய்-ஸ்வரூப அனுரூபங்களாய் உள்ளவை எல்லாவற்றையும் -திவா ராத்திரி விபாகம் அற
இடைவிடாமல் ஒருப்பட்டு இருந்து சிந்தித்துப் போரு-

அன்றிக்கே-உக்தங்களான அவற்றில் ஒன்றும் விடாமல் ஒருப் பட்டு இருந்து சிந்தித்து – என்னவுமாம் –

இவ்வுலகினில் இனி ஒன்றும் எண்ணாதே -என்ற இதுக்கு-மருள் ஒழி நீ -என்று சொல்லுகிற
அந்திம தசா விரோதியான அர்ச்சாவதார பிராவண்யம் ஆகவுமாம்-

——————

அநாதி காலமில்லாத ப்ராப்ய ருசி (பகவானை அடைவதில் உள்ள ருசி) இப்போது
எம்பெருமானார் க்ருபையால் உண்டானது என்று அந்த லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.

பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதி அவை கற்றிருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவொன்றும் இன்றிப் பொருந்தி இங்கேயிருந்தேன்
எண் திசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பே அன்றி இப்போது என் மனம் எண்ணாதே–28–

முற்காலத்தில் ஆத்மாவை உஜ்ஜீவனம் அடையச் செய்வதிலே நோக்காக இருக்கும்
நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த உலகத்தில் இருப்போர் அனைவரும் உஜ்ஜீவனம்
அடைய வேண்டும் என்பதற்காக இவர்களிடத்தில் உள்ள அன்பினாலே அருளிச் செய்த
பல ப்ரபந்தங்களைப் பார்த்ததெல்லாம் எழுதி, அவற்றை ஆசார்யன் மூலமாகக் கற்று,
மற்றவர்களுக்கு அன்புடனே கற்பித்தும் காலத்தைப் போக்கினேன்;
மலர்மகளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற
பரம பதத்துக்குப் போகவேண்டும் என்கிற நினைவு சிறிதும் இல்லாமல் இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி வாழ்ந்தேன்;
திசை அனைத்தும் ஏறும் குணன் ஆகையாலே–எட்டுத் திக்கில் உள்ளோரும்
ஸ்தோத்ரம் பண்ணும்படியான பெருமையை உடைய யதிராஜரின் க்ருபையாலே
சிறந்ததான பரம பதத்தைத் தவிர என் மனமானது வேறொன்றை இப்போது எண்ணாது.

தெரித்து எழுதி -வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -ஸ்ரீ நான் முகன் -63– இத்யாதிப் படியே–

இது ஒரு கிருபா விசேஷம் இருந்தபடி என் –என்று கருத்து –இவ்விடத்தில் ஏகாரம் தேற்றத்தில்

———————

தம்முடைய தடைகளைப் போக்கி எம்பெருமானை அடையும்படிச் செய்யும் எம்பெருமானார்,
ஸ்ரீபாஷ்யம் முதலான் க்ரந்தங்கள் மூலம் பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதத்தவர்களை ஜயித்து அருளினவற்றைச் சொல்லி,
அவருடைய வீரஸ்ரீக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சாருவாக மதம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்தற மிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறும் மாகுரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதம் அவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகிய மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே–29-

கண்ணால் காண்பது மட்டுமே உண்மை என்று சொல்லக்கூடிய சாருவாக மதத்தை பஸ்மமாகும்படிச் செய்து,
சமண மதம் என்கிற செடியை எரித்து,
சாக்கிய (பௌத்த) மதம் என்கிற கடலை வற்றிப்போகும்படிச் செய்து,
பெருத்திருந்த ஸாங்க்ய மதம் என்கிற மலையைத் தகர்த்து,
எதிர் வாதம் செய்யும் கணாத மதத்தவர்கள் [கணபதியை வழிபடுபவர்கள்] வாக்கை உடைத்தெறிந்து,
மிகவும் எதிரிட்டு வந்த பாசுபத மதத்தைச் சேர்ந்தவர்கள் சிதறி ஓடும்படி வாது செய்தார் யதிராஜர்;
பின்பு அவரே பெரிய பிதற்றலான ப்ரபாகர மதத்தோடு
பாட்ட மதத்தின் மேல் தன்னுடைய வெல்வதற்கரிய தர்க்க பாணங்களை விட்டார்;
பின்பு மாயா வாதியரை வென்று அதற்கு மேலே மிகவும் வாதித்து வரும் பாஸ்கர மதம்
என்கிற வேர்க் கொடிகள் நெருக்க அவற்றை வெட்டி வீழ்த்தினார்;
பின்பு மிகுத்திருந்த யாதவ ப்ரகாச மதத்தை அழித்த பெரிய வீரரான யதிராஜர்
எப்பொழுதும் வளர்ந்து வரும் மங்களத்தை உடையவராக வேண்டும்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய இதர தர்சன நிரசனத்தாலே வந்த மகா வீரம் நாள் தோறும் அபி விருத்தமாய் வாழ வேணும் –

————-

இனி, இப்படி அனைத்து பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதங்களை ஜயித்த பிறகு,
எம்பெருமானார் பகவத் விஷயமான திருவாய்மொழிக்கு விளக்கங்கள் அளித்துக் கொண்டு இருப்பது
தம்மை மிகவும் ஈர்க்க, அவருடைய திருவடிகள் முதல் திருமுடிவரை அனுபவித்து
அவை நித்யமாகச் செல்ல வேண்டும் என்று மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே–30-

திருக் கல்யாண குணங்கள் நிறைந்திருக்கும் யதிராஜருடைய திருவடித் தாமரைகள்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
இடுப்பிலே சாற்றியிருக்கும் காஷாய வஸ்த்ரமானது எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
அழகு மிக்கிருக்கும் சிவந்த திருமேனி எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
திரு மார்பில் விளங்கிக் கொண்டிருக்கும் யஜ்ஞோபவீதம் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
பொருத்தமான மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட இரண்டு திருத்தோள்கள்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
எப்பொழுதும் சுருங்காத, தூய்மையான, சிறந்ததான முகத்தின் ஒளி
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; அடியார்களை ரக்ஷிப்பதால் வரும் ஆனந்தத்தை
வெளியிடும் புன்முறுவல் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
அடியார்களின் அமலங்களைப் போக்கும் இரண்டு தாமரை போன்ற கண்கள்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
சிவந்த திருமேனியில் அணிந்திருக்கும் பன்னிரு திருநாமங்கள் அணிந்திருக்கும் அழகு
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
பத்மாஸ்தனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதார்த்த பிரகாசகமாய் இருக்கிற
பரதத்வ போத  ஜ்ஞான முத்தரை யானது காதாசித்கம் அன்றிக்கே   நித்ய மங்களமாய்- சதா தர்சன யோக்யதாம் படி வாழக் கடவதாக வேணும்

——————

ஆசையின் மிகுதியாலே எம்பெருமானார் பண்ணிய உபகாரங்களுக்கு மீண்டும் மங்களாசாஸனம் செய்து அருளுகிறார்.

கீழ் பாட்டு விக்ரஹ பரம்-இப் பாட்டு ஸ்வரூப பரம் –

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே–31-

பௌத்த, நையாயிக, வைசேஷிக, ஜைன, ஸாங்க்ய, யோக மதங்களாகிற ஆறு பாஹ்ய மதங்களான
செடிகளை அறுத்துத் தள்ளியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
கூட்டமாய் கூடி வருகிற வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லும் குத்ருஷ்டி மதத்தவர்கள்
முழுவதுமாகத் துறத்தியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
இவற்றுக்குக் காரணமாய், நிறைந்து வருகிற கலியைச் சிறிதும் இல்லாதபடி போக்கடித்தவர்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
ஸ்ரீ மன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அனுபத்ரவா அனுதினம் சம்வர்த்தயா-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திருச் செல்வம் எல்லாம் கட்டளைப் படும்படி பண்ணி அருளினவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
வேதத்தில் காட்டப்படும் எல்லா அர்த்தங்களையும் தன்னுடைய க்ரந்தங்களான
ஸ்ரீபாஷ்யம் முதலியவை மூலமாக அருளிச்செய்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதங்களை நன்கு வளர்த்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
அந்தத் தமிழ் ப்ரபந்தங்களுடைய தாத்பர்யமான சரணாகதி தர்மம் இவ்வுலகில் நன்கு பரவ-வளர்த்த இதத் தாய் -என்னும்படி
சிறந்ததான ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
அழகு முதலியவைகளால் பூர்த்தியை யுடைய எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.

அற மிகு நல் பெரும் பூதூர் -என்றும் பாடம் சொல்வார்
அப்போது -ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்கிற தர்மத்தை அதிகமாக உடைத்து என்னவுமாம்

—————-

எம்பெருமானாரின் திருநக்ஷத்ர தினமான திருவாதிரைத் திருநாளைக் கொண்டாடுகிறார்.

சங்கர பாற்கர யாதவ பாட்ட பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கு இனி வீறு நமக்கிலை என்று மிகத் தளர்நாள்
மேதினி நம் சுமையாறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே–32-

சங்கரனின் மதம் (அத்வைதம்), பாஸ்கரனின் மதம் (பேதாபேதம்),
யாதவ ப்ரகாசனின் மதம் (பேதாபேதம்), குமாரில பட்டன் மற்றும் ப்ரபாகரனின் மதங்கள் (மீமாம்ஸா)
நாசம் அடைவதால், வாதம் செய்யும் அவ்வவ மதஸ்தர்கள் ஐயமின்றி நாசம் அடைவார்கள் என்று
நான்கு வேதங்களும் நன்றாக வளரும் நாள்.-கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று
க்ரூரமான கலியும் “இனி நம்மால் இங்கு ஆட்சி செய்ய முடியாது” என்று மிகவும் தளர்ந்து போகும் நாள்.
தவம் தாரணி பெற்றது -என்றும் சொல்லுகிறபடியே-பூமியும் “நம் தலைச் சுமை கழியும்” என்று துக்கத்தை விட்டு நன்றாக ப்ரகாசிக்கும் நாள்.
திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் மற்றும் பூர்வாசார்யர்களுடைய் வாழ்வு நன்றாக முளைக்கும் நாள்.
பொருந்தி இருக்கும் அழகிய திருவரங்கம், திருமலை மற்றும் ஏனைய திவ்யதேசங்களும் ஆனந்தம் அடையும் நாள்.
இதெல்லாம் நடக்கும் நாள் எந்நாள் என்றால் சிவந்து அழகாய் இருக்கும் மீன்களையுடைய தடாகங்களால் சூழப்பட்டுள்ள
சிறந்ததாய் இருக்கும் ஸ்ரீபெரும்பூதூரை திருவவதார ஸ்தலமாக உடைய கைங்கர்ய ஸ்ரீயை உடைய
இளையாழ்வார் என்ற திருநாமத்தை உடைய எம்பெருமானார் வந்தருளிய நாளான திருவாதிரைத் திருநாளே.

இதுவும் ஒரு நாளே-ஸ்ரீ மன் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர —

உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்க என்கிறபடியே
இவருக்கு தத் வாசகமான திரு நாமங்கள் தான் அனுபாவ்யமாய் இருக்கையாலே

ஸ்ரீ எதிராசன் என்றும்
ஸ்ரீ இராமானுசன் என்றும்
ஸ்ரீ எம்பெருமானார் என்றும்
ஸ்ரீ இளையாழ்வார் என்றும்–அனுசந்தித்து அருளினார்-

—————–

எம்பெருமானாருக்குச் சில பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்த பிறகு மீண்டும்
முன்பு சொன்ன விஷயத்தையே சொல்ல நினைத்து
“அடியேனுடைய நிலையை நன்கறிந்திருந்தும்
அடியேனைப் பரமபதத்தில் சேர்க்கத் திருவுள்ளம் பற்றியும்,
ஏன் காலம் தாமதம் செய்கிறீர்?” என்கிறார்.

இன்னம் எத்தனை காலம் இந்த உடம்புடன் யான் இருப்பேன்?
இன்ன பொழுது உடம்பு விடும் இன்ன படியதுதான்
இன்ன இடத்தே அதுவும் என்னும் இவையெல்லாம்
எதிராசா! நீயறிதி யான் இவை ஒன்று அறியேன்
என்னை இனி இவ்வுடம்பை விடுவித்து உன் அருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறதென்? பேசாய்
பேதைமை தீர்த்து எனை அடிமை கொண்ட பெருமானே!–33-

யதிராஜரே! இன்னமும் எவ்வளவு காலம் கைவிட வேண்டிய இந்த தேஹத்தோடே
இதில் பொருத்தமற்றிருக்கிற அடியேன் இருப்பேன்?
எப்பொழுது இந்த தேஹம் கீழே விழும்?
அதுதான் எந்த விதத்திலே எந்த இடத்திலே நடக்கும்?
இவ்வாறு சொல்லப்படும் விஷயங்களையெல்லாம் தேவரீர் அறிவீர்.
அஜ்ஞனான அடியேன் இவை ஒன்றும் அறியேன்.
ஆன பின்பு, இப்படி அடியேனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி அடியேனை அடிமை கொண்ட பெருமானே!
இனி, இவ் வுலகில் பொருத்தமற்றிருக்கிற அடியேனை தேவரீர் க்ருபையாலே விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -என்கிறபடியே
இவ் வுடம்பிலிருந்து விடுவித்து அழகு மிகுந்த பரமபதத்திலே ஏற்றத் திருவுள்ளமாகில்,
பின் விரைந்து செய்யாமல் மறந்திருப்பதற்குக் காரணம் என்ன?
அதை அருளிச் செய்ய வேண்டும்.

——————-

எம்பெருமானார் “நாம் உமக்கு உதவ நினைத்தாலும் உம்முடைய பாபங்கள் கிடக்க நாம் எப்படிச் செய்வது”
என்று நினைப்பதாகக் கொண்டு, “எல்லாப் பாபங்களையும் போக்கக் கூடிய எம்பெருமானே
தேவரீருக்கு அடங்கி இருப்பதால், தேவரீரையே எல்லாமாகக் கொண்டிருக்கும் அடியேனை
முக்தனாக ஆக்க வேண்டும்” என்கிறார்.

முன்னை வினை பின்னை வினை ஆரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை அனைத்தும் யானே
என்னை அடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா! நீ இட்ட வழக்கன்றோ? சொல்லாய்
உன்னை அல்லது அறியாத யான் இந்த உடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஒன்று உண்டோ?
என்னுடைய இருவினையை இறைப் பொழுதில் மாற்றி
ஏராரும் வைகுந்தத்தேற்றிவிடாய் நீயே–34-

யதிராஜரே!
பூர்வாகம் (சரணாகதிக்கு முன்பு பண்ணிய கர்மங்கள்),
உத்தராகம் (சரணாகதிக்குப் பின்பு பண்ணும் கர்மங்கள்),
ப்ராரப்தம் (பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மங்கள்) என்று சொல்லப்படும்
மூன்று வகையான கர்மங்களின் கூட்டங்கள் எல்லாவற்றையும்
ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தித்வம் போன்ற குணங்களை உடைய நானே
வாத்ஸல்யம் போன்ற குணங்கள் நிறைந்த என்னையே தஞ்சம் என்று பற்றியவர்களுக்கு கழிப்பேன்
என்று அருளிச் செய்த ஸ்ரீரங்கநாதனான பெரிய பெருமாள் தேவரீர் இட்ட வழக்கன்றோ?
இப்படிப்பட்ட தேவரீரை அல்லது வேறொரு ரக்ஷகரை அறியாத அடியேன் இந்த உடம்போடு பொருந்தி இருந்து
இவ்வுடம்பின் பலனான கர்ம பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று கட்டாயமோ?
தேவரீரே அடியேனுடைய கர்ம பலன்களை –கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -என்கிறபடியே-
க்ஷண காலத்தில் போக்கி அழகு நிறைந்துள்ள ஸ்ரீ வைகுந்தத்தில் ஏற்றி விட்டு அருள வேண்டும்.

——————

அடியேனை ரக்ஷிக்க முயலும் தேவரீர் அடியேனுக்கு நித்ய கைங்கர்யத்தைக் கொடுக்க நினைக்க,
அதையும் மீறி அடியேன் செய்யும் பாபங்களைப் போக்கி தேவரீரையே-த்வத் ஏகம் அநாவாம் படி பண்ணி 
நினைக்கும்படிப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

அருளாலே அடியேனை அபிமானித்தருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீயிருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செய்யும் என்றன்
வல்வினையை மாற்றி உன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத்தாழ்வானும் அவர் செல்வத்
திருமகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளான அத்தனையும் சேர உள்ள என்னைத்
திருத்தி உய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா!–35–

யதிராஜரே! அருளாலே அடியேன் விஷயத்தில் கருணையைக் காட்டி, நிரந்தரமாக
நித்ய கைங்கர்யம் கொண்டருளுவதாக தேவரீர் இருக்க,
அதை அறிய விடாத அஜ்ஞானத்தாலே புலன்களுடைய விஷயமான இன்பங்களை ஆசைப்படுகிற
அடியேனுடைய வலிமை பொருந்திய கர்மங்களை மாற்றி தேவரீர் விஷயத்தில் மனதை வைக்கும்படிப் பண்ணி யருள வேண்டும்.
ஞானம் நிறைந்திருக்கும் ஸ்ரீ கூரத்தாழ்வானும், அவர் திருக் குமாரராக இருக்கும் செல்வத்தை யுடைய பராசர பட்டரும்
தங்கள் விஷயத்தில் தாழ்வுகளாகச் சொல்லிக் கொண்ட பாபக் கூட்டங்கள் எல்லாவற்றையும் ஒரு சேர
உண்டான அடியேனை நன்றாகத் திருத்தி உஜ்ஜீவனம் அடைவிக்கும் வழியை தேவரீரே சிந்தித்தருளும்.

இந்தரிய பரிச்சின்னங்களான விஷய போகங்களில் வாஞ்சையைப் பண்ணும்
என்னுடைய வநிவர்த்யமான பிரபல கர்மங்களை அதில் நின்றும் முகம் மாறப் பண்ணி
தன் பால் மனம் வைக்கத் திருத்தி -என்கிறபடியே
பிராப்த சேஷியானதேவர் விஷயத்தில் மனசை வைக்கும்படி பண்ணி அருள வேணும்

———————-

உலக விஷயங்களில் தனக்கிருக்கும் ஆசையானது தன் மனதை மூடுவதற்குக் காரணம் வாஸனையும் கர்மங்களும் என்கிறார்.

வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?*
ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து–36–

யதிராஜரே! இவ்வாத்மாவுக்குத் தீயதாக இருக்கும் ஐங்கருவி கண்ட இன்பம் -என்னும்படி-ஐம்புலன்களுக்கு விஷயமான
உலக இன்பங்களில் ஆசையானது பலாத்காரத்தோடே என் மனதின் மேலே வந்து விழுந்து மூடுகிறது.
என்னை அந்த இன்பங்களில் தள்ளுகிறது.
இதற்குக் காரணம் அநாதி பாப வாஸனையில் இருக்கும் உறுதியான பிடிப்போ அல்லது
அனுபவித்தோ அல்லது  ப்ராயச்சித்தம் பண்ணியோ தீராத
வலிமையான என்னுடைய பாபங்களோ அறியேன்.

அருளாலே–வாசனை–என்கிற இரண்டு பாட்டாலும் ஐம்புலன் என்று விஷயங்களைச் சொல்லுகிறது –

——————

எம்பெருமானார் “உம்முடைய கஷ்டம் எமக்குப் புரிகிறது; உம்முடைய பக்தியை வளர்த்து-உமக்கு அதிகாரத்தை ஏற்படுத்தி-
ஆர்த்தி -அதிகார பூர்த்தி உண்டாக்கி உமக்கு பேற்றைக் கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு
“இப்பொழுதில்லாத அதிகாரம் எப்பொழுது ஏற்படப் போகிறது.
ஆகையால் அந்த அதிகாரம் ஏற்படுவதுற்குத் தடையானவற்றை அழித்து
அடியேனுக்கு பேற்றைக் கொடுக்காமல் இருப்பது ஏன்?” என்கிறார்.

இன்றளவும் இல்லா அதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம்? சொல்லாய் எதிராசா! – குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்து
எனைக் கடுக ஏற்றாதது என்?–37-

யதிராஜரே! இதுவரை இல்லாத அதிகாரம் இனிமேல் அடியேனுக்கு எப்பொழுது உண்டாகும்?
இதை தேவரீரே அருளிச்செய்ய வேண்டும்.-தொன் மா வல்வினைத் தொடர் -என்னும்படியான
எத்தாலும் அழியாமல் இருக்கும் பாபக் கூட்டங்களின் தொடர்ச்சியை வெட்டி விட்டு,-மேலை வைகுந்தத்து இருத்தும் -என்கிறபடி
மிக உயர்ந்ததான பரம பதத்தில் அடியேனை உடனே ஏற்றாமல் இருப்பதற்கு என்ன காரணமோ?

——————

தர்க்க ரீதியாக தனக்கு அதிகாரம் ஏற்படாது என்பதை தார்கிக லௌகிக சப்த நியாயத்தாலே-தர்சிப்பியா நின்று கொண்டு  உரைக்கிறார்.

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ? எதிராசா! – நெஞ்சம்
உனதாள் ஒழிந்தவற்றையே உகக்க இன்றும்
அநுதாபம் அற்று இருக்கையால்–38-

யதிராஜரே! தாழ்ந்த விஷயங்களில் மூழ்கியிருக்கும் அடியேனது மனதானது அடியேனுக்குத் தகுந்த
தலைவரான தேவரீருடைய மிக இனிமையான திருவடித் தாமரைகளுக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களையே
மகிழ்ந்து அனுபவிக்க, அதற்கு மேலே “இப்பொழுதும் இப்படித் தகாத விஷயங்களை விரும்புகிறதே” என்கிற
பச்சாதாபமும் இல்லாமல் இருப்பதினாலே, உலகில் சொல்லப்படும்
“ஞானம் துளிர்க்கும் ஐந்து வயதில் அறியாதவர்கள் ஐம்பது வயதிலும் அறியமாட்டார்கள்” என்கிற
வார்த்தை என் விஷயமாகவே சொல்லப்பட்டதோ?–

நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று பாடமான போது
அஞ்சில் அறியாதாரை ஐம்பதிலும் அறியாதார் என் சொல் எனக்கோ -எதிராசா
இன்று அனுதாபம் அற்று இருக்கையாலே நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே யுகக்கும் -என்றும்-இப்படி யோஜிக்கக் கடவது –

—————-

அருகிலிருப்பவர்களுக்கு “நீர் எம்பெருமானார் திருவடிகளுக்கு வெளிப்பட்ட விஷயத்தையே விரும்பினீர் என்றால்
அவர் எப்படி உம்மைக் கைக் கொள்வார்?” என்று கருத்தாக
“அவரைத் தஞ்சம் என்று பற்றும் போது தோஷங்களோடு இருந்த அடியேனை விரும்பி ஏற்றுக் கொண்டவர்
அடியேனைக் கை விட மாட்டார்” என்று  ஸ நிதர்சனமாக -மணவாள மாமுனிகள் அருளுகிறார்.

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் புகடாதே புசிக்கும் தன்மை போல் தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழார் எதிராசர்
அன்று அறிந்து அங்கீகரிக்கையால்–39-

வேப்பிலையைக் கறியமுதாக விரும்புமவர்கள் அது கசக்கிறது என்று தள்ளாமல் உண்கிற ஸ்வபாவம் போலே,
எம்பெருமானார் அடியேனை ஏற்றுக் கொண்ட ஸமயத்தில் “இவன் துஷ்டன்” என்று ஆராய்ந்து
அந்த தோஷத்தையே போக்யமாகக் கொண்டு அடியேனை ஏற்றுக் கொண்டார்.
ஆகையாலே அவர் அடியேனைக் கை விடார்.

நத்யஜேயம் -என்னும்படி இது ஓர் அங்கீகார த்ராட்யம் இருந்த படி என் என்று கருத்து-

——————

எம்பெருமானார் “உம்மை தோஷத்துடனே ஏற்றுக் கொண்ட நாம், தக்க காலத்தில் உமக்குப் பேற்றைச் செய்து
கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு, “அக்காலம் வரை அடியேனுடைய பொழுதை வீணாகக் கழிப்பேன்,
ஆகையால் உடனே அடியேனைப் பரம பதத்தில் சேர்த்தருள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

அவத்தே பொழுதை அடியேன் கழித்து இப்
பவத்தே இருக்கும் அது பண்போ? திவத்தே யான்
சேரும் வகை அருளாய் சீரார் எதிராசா!
போரும் இனி இவ்வுடம்பைப் போக்கு–40-

திருக் கல்யாண குணங்களால் நிறைந்த யதிராஜரே!
தேவரீருக்கு அடியவனான நான் தேவரீர் அனுபவ கைங்கர்யங்களுக்கு ஏற்பட்ட பொழுதை வீணாகப் போக்கி
இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி இருப்பது தேவரீரின் கருணைத் தன்மைக்குப் பொருத்தமானதோ?
அடியேன் பரம பதத்தை அடையும் வகைய க்ருபை செய்தருள வேண்டும்!
ஸம்ஸாரத்தில் கஷ்டப்பட்டது போதும். இனி, இவ்வுடம்பைப் போக்கி யருள வேண்டும்.

பகவத் ஸ்வரூப திரோதா நகரியாய் விபரீத ஜ்ஞ்ஞாந ஜனனியாய்
ஆத்மாவோடு பொருந்தி இருக்கிற இந்த தேஹத்தை போக்கி அருள வேணும்-இதுவே புருஷார்த்தம் –

பண்பு -ஸ்வ பாவம்
அடியேன் இப் பவத்தோடே இருக்குமது பண்போ -என்று கீழோடு கூட்டவுமாம் –

—————-

எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு,
“உலகம் எல்லாம் வாழப் பிறந்தவறான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார்.

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?
உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
ஏழைக்கு இரங்காய் இனி–41-

யதிராஜரே! நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு -என்கிறபடியே-அடியேனைப் போலே தவறு செய்பவர்கள் இந்த உலகம் எங்கும் தேடினால் கிடைப்பார்களோ?
அருளுக்கும் அக்தே புகல் -என்கிறபடியே-தேவரீரைப்போலே மற்றவர் தவறுகளைப் பொறுத்துக்கொள்பவர் உபய விபூதியிலும் உண்டோ?
எல்லா உலகங்களும் உஜ்ஜீவித்து வாழ்வதற்கு அவதரித்தருளின வணங்கத் தகுந்த மஹா முனிவரே!
சபலானாயிருக்கும் அடியேனுக்குக் கருணையைக் காட்ட வேண்டும்.

——————

எம்பெருமானார் இவருடைய தன்மைகளைக் கண்டு இவருக்குப் பேற்றை அளிப்பதாக நினைத்து
இவரை ஆசையோடே கடாக்ஷிக்க அதைக் கண்டு இவ்வுலகில் தான் படும்
துன்பங்களை அறிவித்துத் தனக்கு விரைவில் பேறு வேண்டும் என்கிறார்.

அவருக்கும் ரஷித்து அல்லாது நிற்க ஒண்ணாத படி –
உண்ணிலாவியில்-என்றபடி இந்த்ரிய பயக்ரோசமான பாசுரத்தாலே
தம்முடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார் –

ஐம்புலன்கள் மேல் இட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலம் இட்டால் பின்பவைதாம்
என்னை அடராமல் இரங்காய் எதிராசா!
உன்னை அல்லால் எனக்கு உண்டோ?–42-

யதிராஜரே! கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி -இத்யாதிப் படியே=ஐம்புலன்கள் என்னை ஆக்ரமித்துத் துன்புறுத்தும் போது தேவரீரின் அடியவனான நான்
தேவரீருடைய திருவடிகளை நினைத்து “ராமானுசரே!” என்று ஓலமிட்டால் அதற்குப் பிறகு
அவை என்னைத் துன்புறுத்தாமல் க்ருபை செய்து அருள வேண்டும்!
தேவரீரைத் தவிர அடியேனுக்கு வேறு ரக்ஷகர் உண்டோ?

உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்-என்னவுமாம் –

—————–

எம்பெருமானார் கருணை காட்டவில்லை என்று நினைத்து என்ன பயன்,
பரமபதத்தில் ஆசையும் இவ்வுலகில் வெறுப்பும் இருந்தால் தானே அவர் அதைத் தந்தருள்வார்.
நமக்கு அவை இல்லா விடுகிறார்.

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசையில்லை இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திருநாடு உகந்து–43–

கொடு வுலகம் காட்டேல் -என்னும்படியான இந்த த்யாஜ்ய பூமியில் அடிக் கொதிப்பு அல்பமும் இல்லை –
வான் உலகம் தெளிந்தே என்று எய்வது -என்னும்படியான
அந்த பிராப்ய பூமியை பிராபிக்க வேணும் என்கிற பிராவண்யமும் இல்லை –
இப்படிப்பட்ட நமக்குத் தந்தையான யதிராஜர் ஒப்பில்லாத வைபவத்தையுடைய பரம பதத்தை எப்படி மகிழ்ந்து அளிப்பார்?

—————-

தன்னிலையை யோஜித்த பிறகு, உலகத்தவர்களைப் பார்க்க, அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாக இருக்க,
இவர்கள் பாபத்தினாலேயே இப்படி இருக்கிறார்கள் என்று நொந் கொள்கிறார்

மாகாந்த நாரணனார் வைகும் வகை யறிந்தோர்க்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயம் அற்றிருந்து
செய்வார்கள் தாம் பாவத்திறம்–44-

நாராயண பரோஜ்யோதி என்றும்
அவன் என் இருள் தான் அற வீற்று இருந்தான் -என்றும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்றும்-சொல்லுகிறபடியே

செல்வ நாரணன் -என்கிறபடியே-ஸ்ரீ லக்ஷ்மீ வல்லபனான ஸர்வேஸ்வரன் ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களையும் வ்யாபித்திருக்கும்
என்பதை அறிந்தோர்க்குத் தனிமையும் இல்லை இருட்டும் இல்லை;
மோஹத்துக்கு வசப்பட்டிருப்பவர்கள் இவ்விடம் தனிமையாக உள்ளது,
இவ்விடம் இருட்டாக இருக்கிறது என்று கொண்டு, அறிவிலிகளாக இருந்து கொண்டு,
பயம் இல்லாமல் பாபக் கூட்டங்களைச் செய்வார்கள்..

வைகல் -சொல்லலும் -இருத்தலும்
திறம் -சமூஹம்
இப் பாட்டுக்கு அடி உக்த்ய அனுஷ்டங்களாய் இருக்கும்-

—————–

தம் நெஞ்சைக் குறித்து “அஜ்ஞரான நாமும் ஆசார்ய ஸம்பந்தத்தினாலே அன்றோ நம் உஜ்ஜீவனத்தைப் பெற்றது;
ஆகையால் எப்பொழுதும் அதையே சிந்தித்திரு” என்று அருளிச் செய்கிறார்.

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு
ஆராயில் நெஞ்சே! அநாதி அன்றோ? சீராரும்
ஆசாரியனாலே அன்றோ? நாம் உய்ந்தது என்று
கூசாமல் எப்பொழுதும் கூறு–45-

நெஞ்சே! “ஸ்ரீ ய:பதியான நாராயணன் ஆத்மாக்களை உடையவன்; நாம் நார சப்தத்துக்குள் அடக்கம்” என்கிற
இந்த ஸம்பந்தத்தை ஆராய்ந்து பார்த்தால் இது அநாதி யன்றோ?-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்கிறபடியே-
(ஆரம்பம் அற்றது – எப்பொழுதும் இருப்பது). “இந்த ஸம்பந்தத்தை நமக்கு உணர்த்திய ஆசார்யனாலே
யன்றோ நாம் உஜ்ஜீவனத்தைப் பெறுகிறோம்?” என்று –பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் -என்கிறபடியே-எப்பொழுதும் வெட்கம், கர்வம் இவற்றை விட்டு நன்றாக நினைத்துக் கொண்டு இரு.

—————–

கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை
குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில்
மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே!
எதிராசர்க்கு ஆளானோம் யாம்–46-

நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே திருவாய்மொழிப் பிள்ளை
என்ற திருநாமத்தைப் பெற்றவர் ஆசார்யராக எழுந்தருளியிருந்து கொடுவினைகளை உடைய
நம்மைத் தேடி வந்து நாம் உஜ்ஜீவனத்தைப் பெறும்படி நம்மை ஏற்றுக்கொண்டு ஒப்பற்றதான ஞானத்தைத்
தாம் அளித்தருளிய செல்வத்தாலன்றோ நம் யதிராஜருக்கு அடிமை யானோம்?

சாஸ்திர ஜ்ஞாநாதிகள் போல் அன்றிக்கே
உபமான ரஹிதமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிறக்குமதான ஜ்ஞானத்தை யுபகரித்து அருளும் சம்பத் அன்றோ

பத த்ரய அர்த்த நிஷ்டை தான்-ததீய பர்யந்தமாய் அல்லாது இராது-என்று கருத்து –

(சடகோபர் தாசர் என்றே இன்றும் அருளப்பாடு உண்டே இவர் வம்சத்தாருக்கு )

————————–

“நாராயண” என்ற திருநாமத்துக்கு ஸமமான வைபவம் கொண்ட “ராமானுஜ” என்ற
திரு நாமத்தின் வைபவத்தை எதிர் மறையான பொருள் கொண்டு விளக்குகிறார்.

இராமாநுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்திரா
மாநுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதுமிரா
மாநுசர் அவர்க்கு எல்லா அடிமையும் செய்ய எண்ணி
இரா மாநுசர் தம்மை மாநுசராக என் கொல் எண்ணுவதே?–47-

ராமானுஜர் விஷயத்தில் “நம:” என்று இரவும் பகலும் நினைத்து இராத மனுஷ்யர்களுடைய இருப்பிடத்தில்
க்ஷண காலமும் வாழாத ஆழ்வான் போன்ற பெரியோர்களுக்கு எல்லா விதமான கைங்கர்யங்களையும்
செய்ய எண்ணி அவற்றைச் செய்யாமல் இருக்கிற அறிவற்ற மனுஷ்யர்களை எப்படி மனுஷ்யர்களாக எண்ணுவது?

சாஸ்திர வச்யரான மனுஷ்ய ஜன்மாக்களுக்கு-எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் -என்கிறபடியும்
சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய எண்ணி இருக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாதே இருக்கிற க்ருதக்ன மனுஷ்யர்தங்களை-மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேன் -என்கிறபடியே
பசு சமரான அவர்களை மனுஷ்யராக எப்படி எண்ணுவது-பஸூபிஸ் சமான -என்னும் இத்தனை –

—————–

தம்முடைய வாக்கு, மனம், காயம் ஆகிய மூன்று கரணங்களையும் இப்படி இராமானுசனடியார்கள்
விஷயத்தில் பெரிய பெருமாள் ஆக்கியருளினபடியை நினைத்து மகிழ்கிறார்.

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை ஒன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை அரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் -என்கிறபடியே-கலியுகத்தில் இருக்கும் ஆத்மாக்கள் துன்பப்படாதபடி உலகத்தை ரக்ஷித்தவரான் எம்பெருமானாருடைய
திருவடிகளை அடையாதவர்களை அடியேனுடைய நெஞ்சானது நினைக்காது; நாக்கானது கொண்டாடாது;
தலையானது வணங்காது; கண்களானவை இவை எதையும் காணாது;
இப்படி இருக்கும்படி இக்கரணங்களை நமக்களித்த ஸ்ரீரங்கராஜனான பெரிய பெருமாள் நமக்குச் செய்த நன்மையே.

கலியார் -என்கிறது–ஏவினார் கலியார் -என்கிறபடியே-பாதகத்வித்தின் உறைப்பை பற்ற வாய்த்து –

காணல் உறுகின்றேன் -(நான்முகன்-41 )-என்கிற இடத்துக்கு-காண ஆசைப் படுகிறேன் என்று இறே அருளிச் செய்தது –

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -(நான்முகன் -41)-

காணல் உறுகின்றேன் – – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க-வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –

———————-

ஸம்ஸாரிகளுடைய துன்பத்தைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அவர்களுக்கு
மோக்ஷத்துக்கு உபாயமாக எம்பெருமானாரைச் சரணடைவதைக் காட்டுகிறார்.

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்!
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றும் அவன்
அந்தாதி தன்னை அனுசந்தியும் அவன் தொண்டருடன்
சிந்தா குலம் கெடச் சேர்ந்திரும் முத்தி பின் சித்திக்குமே–49–

நான்கு விதமான நிலங்களை உடைய பூமியில் உள்ளவர்களே!
அனுபவித்துத் தீர்க்க அழியாத ஸம்ஸாரம் என்கிற நரகத்திலே அழுந்த வேண்டாம் என்று இருப்பீர்களாகில்
அடியேனுக்குத் தந்தையான யதிராஜரைச் சரணடையுங்கோள்!
எல்லாக் காலத்திலும் அவர் விஷயமான இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தானம் பண்ணுங்கோள்;
அவர் திருவடிகளில் அன்புடன் இருப்பவர்களுடன் மனோ துக்கங்களெல்லாம் தீரும்படி பொருந்தி யிருங்கோள்;
இப்படிச் செய்தால் மோக்ஷமானது உறுதியாகக் கிடைக்கும்,

இத்தால்
இவருடைய ஆஸ்ரயணாதிகளுக்கு தானே
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியைப் பண்ணும்-என்று கருத்து –

—————-

அவர்கள் அப்படியே செய்கிறோம் என்று ஆறி யிருக்க மீண்டும் அவர்களைக் குறித்து
“இப்படி ஏன் காலத்தை வீணாக்குகிறீர்கள்;
அவர் திருநாமத்தை நினைக்க மிக அரிதான பலம் ஸித்திக்கும்” என்கிறார்.

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி அறிவின்மையால் இப்
பவத்தே உழல்கின்ற பாவியர்காள்! பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்கட்கும் எய்த ஒண்ணாத அந்தத்
திவத்தே உம்மை வைக்கும் சிந்தியும் நீர் எதிராசன் என்றே–50-

திருநாமத்தை சொல்லுவதற்குப் பொருத்தமான காலத்தை வீணாகப் போக்கி, அஜ்ஞானத்தால் இந்த ஸம்ஸாரத்தில்
உழல்கின்ற பாபத்தை உடையவர்களே! எல்லாக் காலத்திலும் ஒரு நிலையில் நின்று தவம் செய்தவர்களுக்கும்
அடைய முடியாத பரமபதத்திலே நித்ய ஸம்ஸாரிகளான் உங்களைக் கொண்டு வைப்பார் எம்பெருமானார்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது “யதிராஜரே” என்று சிந்திப்பது மட்டுமே.-நேர்த்தி-யத்னம் -அல்பம் -பலம் -அதிகம் –

—————–

ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான
பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார்

என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவின்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தவிக்கும் எதிராசா! நீ அருள் செய்த பின்னே–51-

யதிராஜரே! எல்லாரையும் ஆளும் எம்பெருமான் எப்படி எப்பொழுதும் இருக்கிறானோ அதே போல
அவனாலே ஆளப்படும் ஆத்மாக்களும் எப்பொழுதும் இருக்கிறார்கள்.
இப்படி அநாதி காலம் தொடங்கி இன்று வரை, புண்ய பாப ரூபமான கர்மங்களால் வீணாகவே கழிந்தது என்று
இந்த இழவையும் நினைக்காமல் இருந்த அடியேனுடைய மனது தேவரீர் அருளிய பின்பு
இதிலே இரவும் பகலும் நின்று பரிதபிக்கும் (மிகவும் அனுதாபப்படும்)..-இழவு -அலாப க்லேசம் –

இருவினை –பெரிய வினைகள் என்றும் – புண்ய பாபங்கள் என்றும் ஆகவுமாம்-

——————-

தன்னுடைய நிலையை நினைத்து அனுதாபப்படவே எம்பெருமானாருக்காகப் பெரிய பெருமாள்
கருட வாஹனத்தில் எழுந்தருளி வந்து கொடுக்கும் பேற்றின் பெருமையை நினைக்கிறார்.

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-

பொன்மயமான மேரு மலையின் மேலே படிந்திருக்கிற கார் மேகம் போலே வினதையின் பிள்ளையான பெரிய திருவடியை
வாஹநமாகக் கொண்டு அழகு நிறைந்தவரான பெரிய பெருமாள் யதிராஜருக்காக
அடியேனுடைய சரீரம் கீழே விழும்போது அடியேன் இருந்த இடத்தே வந்து மகிழ்ச்சியோடே அடியேன் முன்னே நிற்பார்.

விநதை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு-தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் – என்பது நிச்சயம் -என்று கருத்து –

—————-

இப்படிப்பட்ட ஸம்ஸாரத்தில் துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது என்பதால்
விரைவில் தேவரீர் அடியேனை இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிறார்.

இதத்தாலே தென்னரங்கர் செய்கின்றது என்றறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆ ஓ என்னும் இந்தப் பாவ உடம்புடனே
பல நோவும் அநுபவித்து இப்பவத்து இருக்கப் போமோ?
மதத்தாலே crவல்வினையின் வழி உழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா! என்னை
இனிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே–53-

அடியேனுக்கு நன்மை வேண்டும் என்கிற ஹித புத்தியாலே பெரிய பெருமாள் அடியேனைத் துன்பப்படும்படி
செய்கிறான் என்பதை அறிந்திருந்தும், அவ்வவ காலங்களில் ஏற்படும் வேதனையின் மிகுதியால் துடித்து,
அதை வெளிப்படுத்தும் வகையில் “ஆ! ஓ!” என்ற ஓசைகளை எழுப்பும் இந்தப் பாவ உடம்போடே
பல துன்பங்களை அனுபவித்து இந்த ஸம்ஸாரத்தில் இருக்க முடியுமோ?
தேஹத்தின் மதத்தாலே, வலிமை பொருந்திய கர்மத்தின் வழியே திரிந்த மஹாபாபியான அடியேனை
தேவரீருக்கு அடிமையாக்கிக் கொண்டு அருளின நன்மையைச் செய்யும் தாயாகவும் தந்தையாகவும்
இருக்கிற யதிராஜரே! இனி, விரைவில் அடியேனை இந்த ஸம்ஸாரத்திலிருந்து எடுத்து
பரம பதத்தில் சேர்த்தருள வேண்டும்,

மாதாவும் பிதாவுமாய் இருக்கிற தேவர் சம்பந்தத்தை அறிந்த பின்பு அடியேனை சீக்கிரமாக இந்த சம்சாரத்தில் நின்றும்
மாந்தாரய -என்னும்படி எடுத்துக் கரை ஏற்றி அருள வேணும் –அவர்ஜ நீய சம்பந்தம் அடியாக இறே உத்தரிப்பித்து அருளுவர்-என்று கருத்து –

—————–

இப்படிக் கேட்டவுடன் எம்பெருமானார் அதை செய்து தருவதாக நினைத்திருக்க,
“கால தாமதம் பண்ணாமல் உடனே அடியேனைப் பரமபதத்தில் ஏற்றியருள வேண்டும்” என்கிறார்.

இன்னம் எத்தனை நாள் இவ்வுடம்புடன்
இருந்து நோவு படக் கடவேன் ஐயோ!
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்றுதான் திருநாட்டினுள் ஏற்றுவீர்?
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்தருள் நாதனே!
என் இதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே!–54-

அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் -என்கிறபடியே-
நமக்குப் பிடித்ததைச் செய்யும் தாயும், நன்மையைச் செய்யும் தந்தையும், மற்றும் உள்ள உறவினர்களும் ஆகி
அடியேனை ரக்ஷித்தருளுகிற ஸ்வாமீ! அடியேனுடைய விருப்பத்தை இரவு பகல் என்றில்லாமல்
என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -என்கிறபடியே-
ஒரே நிலையில் சிந்திக்கிற யதிராஜராகிய வள்ளலே!
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்கிறபடியே-
தேவரீருக்கு அடிமைப் பட்டும்  இன்னம் எத்தனை காலம் இந்த உடம்பில் இருந்து துன்பப்படுவேன்!
ஐயோ! அடியேனை இந்த உடம்பிலிருந்து விடுவித்து தேவரீர் எப்பொழுது
பரம பதத்திலே ஏற்றி யருளப் போகிறீர்?-அந்நாளும் ஒரு நாள் ஆமோ

—————–

எம்பெருமானார் க்ருபையால் தனக்குக் கிடைத்த நன்மைகளை நன்றி யுணர்வுடன் உரைக்கிறார்.

செய்த அம்சத்தில் ‘க்ருதஞ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷிதையும்
அதிகாரிக்கு வேண்டுவது ஒன்றாகையாலே
அந்த கிருதஞ்ஞதா ஸூசகமாக ஸ்ரீ எம்பெருமானார் யுடைய பிரசாதத்தாலே
தாம் பெற்ற பேறுகளை அனுசந்தித்து -வித்தராய் – அருளுகிறார் –

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

திருவரங்கம் பெரிய கோயிலில் பள்ளிகொண்டருளும் பெரிய பெருமாளின் நிர்ஹேதுக க்ருபைக்கு (காரணமில்லாத அருளுக்கு) விஷயமானோம்.
நம் ஸம்ப்ரதாயத்துக்கு வேர் பற்றான திருவரங்கம் திருப்பதியே நம் வசிக்கும் இடமாகப் பெற்றோம்.
நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங்களே நமக்கு எப்பொழுதும் அனுபவிக்கும் உணவாகப் பெற்றோம்.
மதுரகவி ஆழ்வாரின் “தேவு மற்றறியேன்” வார்த்தைகளின் படியே–வடுக நம்பியைப் போலே எம்பெருமானாரே எல்லாம் என்கிற நிலையைப் பெற்றோம்.-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலைமை-என்று
நாமும் நம்முடையாரும் பேசும் படியான சரம பர்வ நிஷ்டையே நிஷ்டையாகப் பெற்றோம் –
நம்முடைய பூர்வாசார்யர்களின் திவ்ய ஸூக்திகளான வ்யாக்யானங்கள், ஸ்தோத்ரங்கள்,
ரஹஸ்ய க்ரந்தங்கள் ஆகியவற்றையே எப்பொழுதும் நினைக்கப் பெற்றோம்.
அவையே நமக்கு எப்பொழுதும் பொழுது போக்காக அமையப் பெற்றோம்.
இதற்குப் பிறகு மனது வேறெதிலும் புகாமல் இருக்கப் பெற்றோம்.
இது எல்லாம் ஒரு தட்டும் -தான் ஒரு தட்டுமாய் இருக்குமதாய்-இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஏற்றம் அறிந்து இருக்கையும் -என்னும்படி அரிதாய் இருப்பதான பர உச்சாராயம் கண்டால்
அசஹிஷ்ணுதை இல்லாத மஹாத்மத்தையும் லபிததோமே-இது ஒரு மகா லாபம் இருந்தபடியே —இதென்ன ஆச்சர்யம்!

————————

மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம் நிலையைச் சொன்ன பிறகு,
அதற்குப் பொருத்தமாக எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யத்தைக் கேட்கிறார்.

உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ!
எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத்தாள் தா–56-

யதிராஜரே! தேவரீருடைய அபிமானமே (கருணையே) இவ்வாத்மாவுக்கு உத்தாரகம் (ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பது).
அடியேன் மனத் தெளிவோடே இருக்கும்படிச் செய்த தேவரீர், ஐயோ! வேதனைகளால்
அடியேனைத் துன்புறுத்தாமல் ஸாமர்த்யமாக-உன் பாத யுகமாமேர் கொண்ட வீடு -என்கிறபடியே தேவர் திருவடிகளையே பிரசாதித்து அருள வேணும் –

——————

எம்பெருமானார் “எந்த உறவைக் கொண்டு இப்படிக் கேட்கிறீர்” என்பதாகக் கொண்டு
“திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளில் ஆஸ்ரயித்த காரணத்தால் ராஜ குல மகாத்ம்யத்தாலே
ஒரு வஸ்து என்று அபிமானித்து-அடியேனுடைய அபராதங்களைப் பாராமல்
ஏற்றுக் கொண்ட தேவரீர் அடியேனுடைய புன் சொற்களையும் கேட்டருள வேண்டும்” என்கிறார்.

தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப் பிள்ளை
வாசமலர்த் தாள் அடைந்த வத்துவென்னும் நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசரே! அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து–57-

யதிராஜரே! -செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான
மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான
திருவடிகளை ஆஸ்ரயித்துச் சரணடைந்த அடியவன் என்கிற அன்பினாலே
அடியேனை ஏற்றுக் கொண்ட தேவரீர் அடியேனுடைய அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும் –

—————-

“திருவாய்மொழிப் பிள்ளையுடைய வாச மலர் தாள் அடைந்தது – என்கிற மாத்ரமேயோ
அவரிடத்திலே ஞானத்தைப் பெற்ற அடியேனுக்கு தேவரீரிடத்தில் ஒரு ஸம்பந்தம் இல்லையோ?” என்கிறார்.

எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்
உந்தன் உறவை உணர்த்தியபின் இந்த உயிர்க்கு
எல்லா உறவும் நீ என்றே எதிராசா!
நில்லாதது உண்டோ என் நெஞ்சு?–58-

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையுடைய நிர்ஹேதுக க்ருபையாலே
தேவரீர் திருவடிகளில் அடியேனுக்கு இருக்கும் எல்லாவிதமான உறவுகளையும் உணர்த்தியபின்
இப்படிப்பட்ட இந்த ஆத்மாவுக்கு திருமந்த்ரத்தில் காட்டப்படும் ஒன்பது விதமான உறவுகளும்
தேவரீரென்றே அடியேனுடைய மனது நிலை நில்லாமல் இருக்குமோ?
தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே -என்றும்
அல்லாச் சுற்றமுமாகி -என்றும் அன்றோ இருப்பது-

—————-

“இப்படி தேவரீரிடத்திலே அன்பு பூண்ட அடியேனை திருவரங்க நாதனான பெரிய பெருமாள்
பரம பதத்துக்கு அழைத்துச் செல்லப் போவது எந் நாளோ?” என்கிறார்.

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த சிந்தை செய்து இப்
பொல்லா உடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ?
சொல்லாய் எதிராசா! சூழ்ந்து–59-

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையும் தாயுமான திருவரங்கநாதனான பெரிய பெருமாள்
அழகு நிறைந்த பெரிய திருவடியின் மேல் எழுந்தருளி
சரீர வியோக சமயத்திலே-எனக்கு அபேஷிதமான கஸ்தூரி திரு நாமத்தையும்
நல் கதிர் முத்தம் வெண்ணகை செவ்வாய் -என்று முறுவலை யுடைத்தான
ஒளி மதி சேர் திரு முகத்தையும் காட்டி அனுபவிப்பித்து
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-என்னும்படியே
நயாமி -யில் படியே -அர்ச்சிராதி கதியிலே வழி நடத்த மனனம் பண்ணி –
அதுக்கு அந்தர பாவியாக வந்த ஹேயமான தேஹம் தன்னை தேவர்க்காகப் போக்கி அருளுவது எந்நாள்
அத்தை நான் தேறி இருக்கும்படி விசாரித்து அருளிச் செய்து அருளுவீர்

சூழ்ந்து -என்கிறது-ஸ்ரீ பெரிய பெருமாள் அவா அறச் சூழ்ந்தபடி யாகவுமாம்–
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –என்னும் இடத்துக்கு –விசாரித்து -என்று இறே வியாக்யானம் பண்ணி அருளினார்கள்-

—————–

இனி நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே
சம்பந்தம் உடைய நமக்கு தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-

நெஞ்சே! பெரிய பெருமாள் “இந்தக் கோயிலிலே (திருவரங்கம்) நீர் ஸுகமாக இரும்” என்று
அடியேனுடைய தந்தையான யதிராஜருக்கு கொடுத்தருளின வரத்தை ஆராய்ந்து பார்த்தால்
அது நம்மதன்றோ? அது எப்படி என்றால் நல்ல தந்தையின் இயற்கையான சொத்துக்கள் தந்தை வழி உறவு என்ற வழியாலே
புத்ரனுக்காகத் தானே இருப்பது? ஆகையால் நம் ப்ராப்திக்கு நாம் முயல வேண்டாம்,
எம்பெருமானார் க்ருபையால் தானே கிடைக்கும் என்று கருத்து.

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின பிராப்ய பிரார்த்தனை
அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள் என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது-எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading