ஸ்ரீ ஆர்த்தி ப்ரபந்தம்–பாசுரங்களின் அவதாரிகை

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*
தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*
மணவாள மாமுனிவன் வந்து–

வம்பவிழ் தார் வண்மை மணவாள மாமுனிகள்*
அம் புவியில் கால் பொருந்தா ஆர்த்தியினால்* – உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள் *
நண்ணி உரைத்தார் நமக்கு-

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்–பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்–அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே-வம்பவிழும் தாரான் -என்றும் –தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று

——–

முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –

(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:”

ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து,
எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி,
அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )

இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –

இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய
பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் —

பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்

ஜெயத்யதி பலோராமோ லஷ்மணச்ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலித-என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1-

———–

அடியிலே–தொழுது எழு மனனே -என்று அனுசந்தித்த ஸ்ரீ ஆழ்வார்
பஜன ஆலம்பனமான திரு நாமத்தை
இரண்டாம் திருவாய் மொழியிலே – வண் புகழ் நாரணன் -என்று வெளியிட்டால் போலே

இவரும்-இப் பாட்டில் அத்தோடு விகல்பிக்கலாம் படியான
ஸ்ரீ இராமானுசன் -என்கிற திரு நாமத்தை வெளி இடா நின்று கொண்டு

கீழில் பாட்டில்-
அந்வய முகத்தாலே சாதித்த அர்த்தத்தை
இதில் வ்யதிரேக முகத்தாலே வெளியிட்டு அருளி
இம் முகத்தாலும்
ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தை
எல்லை நிலத்து அளவும் பேசி அனுபவித்து அருளுகிறார் —

இராமானுசாய நம வென்று சிந்தித்து
இரா மானுசரோடு இறைப் போழ்து -இரா மாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு—2-

—————

கீழ் இரண்டு பாட்டாலும்
வாழி -என்றும்
நம -என்றும்
அத்தலையில் அதிசயங்களை உப பாதித்துக் கொண்டு

இனி
இப் பாட்டு தொடங்கி –
மேல் எல்லாம் ஸ்வ அபேஷிதங்களை விண்ணப்பம் செய்கிறார் –

இதில்
அடியேனுக்கு சர்வவித பந்துவும்–தேவரீராய் இருக்க
ஏதன் நிஷ்டைக்கு விரோதியான இத் தேஹத்தை சேதித்து அருளாததற்கு ஹேது ஏது-என்கிறார்-

தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம்
என் தனக்கு நீயே எதிராசா -இந்த நிலைக்கு
ஏராத இவ் வுடலை இன்றே அறுத்தருள
பாராதது என்னோ பகர்—-3-

——–

கீழே விரோதியாக அருளிச் செய்த தேஹம் தன்னையே
ஆத்மாவுக்கு சிறைக் கூடமாக அனுசந்தித்து –
தத் விமோசகரும் அவரே என்று அவர் பக்கலிலே அத்தை பிரார்த்தித்து அருளுகிறார் –

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யான் ஏகி
அந்தமில் பேரின்பத்துக்கு ஆளாகுவேன்-அந்தோ
இரங்காய் எதிராசா என்னை இனி உய்க்கை
பரம் காண் உனக்கு உணர்ந்து பார் –4-

————

கீழ்
உணர்ந்து பார் -என்கிற சம்பந்தம் தான் ஏது
நீர் அவர்ஜநீயர் ஆகைக்கு ஹேது ஏது என்று அவருக்குக் கருத்தாக
அத்தை நிதர்சன முகத்தாலே வெளியிடா நின்று கொண்டு
தேவர்க்கு அவர்ஜநீயன் – என்கிறார்-

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்
இன்புறுமோ தந்தைக்கு எதிராசா -உன் புதல்வன்
அன்றோ யான் உரையாய் யாதலால் உன் போகம்
நன்றோ எனை ஒழிந்த நாள் —-5-

———-

உன் போகம் நன்றோ எனை ஒழிந்த நாள் என்று நம் பேரிலே பழி இடா நின்றீர் –
கால க்ரமத்திலே அதுக்கீடான பாகம் விளைந்தவாறே
அப்படியே செய்கிறோம் என்று திரு உள்ளக் கருத்தாக

அது அனுகூலர்க்கு அன்றோ அப்படியாம்
பிரதிகூலனான எனக்கு
அரை ஷணம் தாழ்க்கிலும் பிராதிகூல்யமே கை விஞ்சி வரும்
ஆகையால் ஹேய குண வர்த்தகமான தேஹத்தை
தத் பூர்வமே போக்கும்படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகம் முற்றிச் செல்லும் கால் –ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா விவ் வுடலைத்
தீர்க்கவே யான வழி செய்—6-

———–

உம்முடைய தோஷத்தை ஏற்கவே முற்கோலி நாம் போக்குகைக்கு பிராப்தி ஏது –
நீர் தான் ஸ்வ கார்யத்தில் அஜ்ஞராய் அசக்தராய் இருந்தீரோ என்ன

ஸ்த நந்த்ய பிரஜை தன் கார்யத்துக்கு வேண்டுமவை தானே செய்து கொள்ளில் அன்றோ
தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யமான அடியேனும்
ஸ்வ காரியத்துக்கு ஷமனாய் செய்து கொள்வது -என்கிறார்-

அன்னை குடி நீர் அருந்தி முலை யுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ–என்னே
எனக்கா எதிராசா வெல்லா நீ செய்தால்
உனக்கு அது தாழ்வோ வுரை—7-

———

கீழ்
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமம் அன்றிக்கே இருக்கிற ஸ்த நந்த்ய பிரஜையை
மாதா ரஷிக்குமா போலே
உம்மையும் ரஷிக்க வேணும் என்று -பிராப்தி சொல்லா நின்றீர் –

பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமராய்
சத் கர்மங்களின் உடைய நிவ்ருத்தியிலும்
அசத் கர்மங்களின் உடைய பிரவ்ருத்தியிலும் நிரதராய்
ஸ்வ -விநாசத்தை-விளைத்துக் கொள்ளுகிற உம்மை நம்மால் ரஷிக்கப் போமோ -என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு திரு உள்ளமாக கருதி

அப்படியானாலும் அடியேனைக் காத்து ரஷியாது போது தேவர்க்கே அவத்யமாம் -என்னுமத்தை
ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்து இருக்கக் கண்டு இருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் -நன்கு உணரில்
என்னாலே என்னாகும் எதிராசா
உன்னாலே யாம் உறவை யோர் —–8-

————

நோற்றேன் பல் பிறவி -என்கிறபடியே
நீர் நும்முடைய துஷ் கர்மத்தாலே
இஜ் ஜன்மமே அன்றிக்கே இன்னம் பல ஜன்மமும் எடுக்க வேண்டும்படியாய்
இப்படி கை கழிந்து இருக்கிற யுமக்கு
ஸ்ரீ எம்பெருமானாராலே செய்து தலைக் கட்டலாவதே -என்று பார்ஸ்வஸ்தருக்கு கருத்தாக

அப்படி யானாலும்
அடியேனுக்காக இன்னமும் அவதரித்து ரஷித்து அருளுவர் என்கிறார் –

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —9-

————-

எம்பெருமானார் திருவடிகளை அகன்று அந்ய மனஸ்தராய் இருக்கையாலே
அன்றோ ஜென்மத்துக்கு அடியான கர்மம் புகுகிறது
இனி அந்தப் பிரசங்கம் இல்லாதபடி அவர் திருவடிகளை பொருந்தி வாழ்
என்று திரு உள்ளத்தை குறித்து அருளுகிறார்-

பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் -தே மலர்தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் ——10-

————–

நிழலும் அடிதாறும் ஆனோம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா என்றும் பேசும்படி அத்யந்த பரதந்த்ரராய் வாழும் அவர்கள்
பேற்றைப் பெற வேணும் என்று அபேஷியா நின்றீர் –
அது நமக்கு அத்யந்தம் அந்தரங்கரான ஸ்ரீ வடுக நம்பி போல்வாருக்கு அன்றோ சித்திப்பது
என்று திரு உள்ளக் கருத்தாக

அப்படியே த்வத்தந்ய தேவரான ஸ்ரீ வடுக நம்பி நிஷ்டையை அடியேனுக்கும் உண்டாக்கி
யாவதாத்மபாவி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி –தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந் நாளும்
உன் தனக்கே ஆட் கொள்ளு உகந்து—-11-

————-

நீர் சொல்லுகிற அரும் தேவைகள் எல்லாம் நாம் செய்கைக்கு அடியான உறவு உண்டோ
என்று அவருக்குக் கருத்தாக உண்டு என்று
ஸ்ரீ பிள்ளை திருவடிகளிலே சம்பந்தம் பெற்ற பிரகாரத்தை பிரகாசிப்பித்தது அருளுகிறார்-

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் ——12-

————–

தாம் நிர்பந்தித்த படிகள் எல்லாம் கொண்டருளும்படி ஸூலபரான ஸ்ரீ எம்பெருமானார் யுடைய
சௌந்தர்யாதிகளிலே தோற்றுத்
தாம் மங்களா சாசனம் பண்ணி

அவ்வளவில் நில்லாதே
சம்பந்த சம்பந்திகள் அளவும் சென்று அத்தாலே பெற்ற பேற்றை
அந்ய பரோக்தியாலே அருளிச் செய்கிறார் –

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று என்று ஏத்திச் -சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்—13-

———

தேசம் திகழும் -என்கிற பாட்டோடு இதுக்கு சங்கதி
நடுவில் பாட்டு -பிராசங்கிகம் –

உம்முடைய ஆச்சார்யர் நம் பக்கல் ஆஸ்ரயிப்பித்த அந்த ஆஸ்ரயணமே
உம்முடைய பேற்றுக்கு சாதனமாக சொல்லா நின்றீர்
அந்த ஆஸ்ரயண பலம் போருமோ –
ஏதேனும் பேற்றுக்கு உடலான அதிகார சம்பத்து உம் பக்கலிலே வேண்டாவோ என்று
மீளவும் ஸ்ரீ எம்பெருமானார்க்குத் திரு உள்ளக் கருத்தாக

அதுக்கு ஈடான அதிகாரம் யுண்டாகில் தேவரை அபேஷிக்க வேணுமோ –
அப்படிப் பட்ட யோக்யதை இல்லார்க்கு அன்றோ தேவரை அபேஷிக்க வேண்டுவது
ஆகையால் அதிகார ஸூந்யரான அகதிகளை தேவரீர் ரஷியா விடில்
வேறு புகல் உண்டோ என்கிறார் –

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் —14-

————

ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்னும்படி பரம தார்மிகராய் இருக்கிற அவரை
அடுத்து அடுத்து பழி இடா நின்றோம்
நாம் அவர் திருவடிகளை ஸ ஸ்நேஹமாக அனுசந்தித்தால்
அவர் தாமே எல்லாம் செய்து அருளுவார் ஆகையாலே
தத் விஷய ஸ்நேஹம் தான் யுண்டோ என்று ஆனவளவும் பார்த்து
அது தமக்கு அத்யாபி இல்லை என்று விஷண்ணர் ஆகிறார்-

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா யுரைக்கும் இத்தால் என் -அன்பு அவர் பால்
இப்போது அளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது யுன்டாவது இனி—–15-

————-

நம் பக்கல் ஆனுகூல்யமான பிரேம லேசமும் இல்லாவிடில்
பிராதிகூல்ய நிவ்ருத்தி தான் யுண்டோ -என்ன

அதுவும் இல்லை
அப்படிப்பட்ட அஜஞனான அடியேனுடைய தோஷத்தை போக்யமாகக் கொண்டு
அருளுகிற தேவரீர் திருவடிகளை என்று தான் பிராபிப்பேன் – என்கிறார் –

ஆகாதது ஈது என்று அறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வனாதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
என்று உன்னடி சேர்வன் யான் —16-

————

கீழ்
நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் -என்று அபேஷித்த இவருக்கு
அப்படியே–மரணமானால் -என்று சரீர வியோக சமயத்திலே
பரம் தாமம் என்கிற திவம் தருகிறோம் -என்று
ஸ்ரீ எம்பெருமனார்க்கு கருத்தாக எண்ணி இப்படித் தருகிறோம் என்கிற தேவரீர்
கடுகச் செய்து அருளாமல் தாழ்க்கைக்கு ஹேது எது என்கிறார் –

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஓன்று
இல்லா எனக்கும் எதிராசா -நல்லார்கள்
நண்ணும் திரு நாட்டை நான் தருவன் என்று நீ
தண் என்று இருக்கிறது என் தான் –17-

———-

இவருடைய அபேஷிதத்தை அவரும் செய்வாராக-அனுமதி பண்ணி இருக்க
அவன் அருள் பெரும் அளவு ஆவி நில்லாது -என்கிறபடியே
க்ராம ப்ராப்தி பற்றாமல் ஊரெல்லாம் துஞ்சியில் அவஸ்தையை பிராப்தராய்
என்னுடைய சம்சாரம் ஆகிற விடியா வெம் நரகமான காள ராத்ரிக்கு என்று
ஒரு நல் விடிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமானுஜ திவாகரான அவர் தம்மையே கேட்கிறார் –

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் -குன்றாமல்
இப்படியே இந்த வுயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு –18-

————

கீழ்
சம்சாரம் ஆகிற காள ராத்ரிக்கு அவதி கண்டு அருளிச் செய்ய வேணும் -என்றார் –
இதில் தத் கார்யமான தேக கிங்கிரிதை முதலான நிஹீன வியாபாரமும்
தேவர்க்கு அவத்யாஹமம் அன்றோ என்கிறார் –

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது என் தேசுக்கு தீங்கு அன்றோ -நல்லார்கள்
தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ
எந்தை எதிராசா இசை —19-

——–

இவர் இப்படி
நல்லார்கள் தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ -என்றவாறே
நல்லார் பரவும் ராமானுசனான -ஸ்ரீ எம்பெருமானார் இவர் இங்கனே சொல்லப் பெறுமோ என்று
அத்தை சஹியாமல்
நல்லார்கள் நண்ணும் திரு நாட்டிலே நல்ல அமரரோடே ஒரு கோவையாக்கி
அவர்கள் அனுபவ கைங்கர்யத்தை இவருக்கு உண்டாக்க வேணும் என்கிற
அபிசந்தியை (திரு உள்ளத்தை ) யுடையராய் இருக்கிற ஆகாரத்தைக் கண்டு

இனி
பேறு தப்பாது -என்று அத்யவசித்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்திலே ஏறப் போய்
பரமாத்ம சத்கார பர்யந்த்மான பல பரம்பரைகளை எண்ணி
அத்தை தாம் பெற்றதாக ஹ்ருஷ்டர் ஆகிறார் –
(ஆழ்வாரது சூழ் விசும்பு திருவாய் மொழி போல் பர ஞான தசையில் அருளிச் செய்கிறார் )

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை யாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சத் கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று
மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே—-20-

————-

எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அப்ராப்யமாய் இருக்கும் பேற்றை
நீர் பெற்றதாக பேசா நின்றீர்
அது நமக்கு ஸூலபமாய் இருந்ததோ என்று தம் திரு உள்ளக் கருத்தாக

நம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை
நிர்ஹேதுகமாக வுபகரித்து அருளின ஜ்ஞானத்தைக் கொண்டு
அவனுடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசித்து இரு –

பெறுதற்கு அரிய பேற்றை ஸ்ரீ எம்பெருமானாரே பண்ணி அருளுவர் –
ஆகையால் இது விஷயமாக –
நிர்ப் பயோ நிர்ப் பரோஸ்மி -என்று இருக்கும் நமக்கு என்ன பயம் என்கிறார் –

திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டு அவர் தம்மை யுத்தாரகராக வெண்ணி
யிரு மனமே அவர்க்காய் எதிராசர் எம்மைக் கடுகப்
பரம பதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே —21-

———–

என்ன பயம் நமக்கே -என்று நிர்பயரான இவர்
இதில்
அஸ்மத் குரு தாயாய தயதீந்தி ராங்கி க்ரியான்வய -என்கிறபடியே
ஸ்ரீ பிள்ளை யுடைய நிர்ஹேதுக கிருபையாலே ஸ்ரீ எம்பெருமானாருடைய அபிமான நாவா ரூடனாய்
சம்சார சாகரத்தைக் கடந்து ஸ்ரீ யபதியுடைய ஸ்ரீ பாத கூலத்தை பிராபிப்பேன் -என்று நிச்சயிக்கிறார் –

தீதற்ற ஞான திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தமபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே –22-

———–

கீழே இரண்டு பாட்டாலும்
ஸ்வ ஆச்சார்யகளான–பரம ஆச்சார்யகளான ஸ்ரீ பிள்ளை யுடையவும் ஸ்ரீ எம்பெருமானார் யுடையவும்
அபிமானத்தாலே பேறு தப்பாது என்று நிச்சயித்து
இப்படி நிச்சிதமான பின்பு
வடிவுடை மாதவன் -என்னும்படி
புதுக் கணிப்போடு சபரிகரனாய் -திவ்ய ஆஸ்தான மண்டபத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே திவ்ய மகிஷி பரிவ்ருதனாய் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான
ஸ்ரீ வைகுண்ட நாதனை கடுக அனுபவிக்கும்படி – எனக்கு நாதரான தேவர் பண்ணி யருள வேணும் – என்கிறார் –

அடியார்கள் குழாங்கள் அழகு ஓலக்கம் இருக்க
ஆனந்த மயமான மா மணி மண்டபத்து
படி யாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒலி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மா மலராள் வல வருகும் மற்றை
மண் மகளும் ஆய் மகளும் இட வருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை நல்கு எனக்கு எதிராசா —23-

———–

இதில் –
தேக விமோசகம் தொடங்கி-பலத்தின் எல்லையான
தேசிகரோடு ஒரு கோவையாய் இருக்கும் அளவாய் இருக்கிற
பேற்றை அபேஷித்து அருளுகிறார் –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ் வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–24–

———-

நீரோ உம்முடைய அபராதம் பாராமல் கனத்த அப் பேற்றை அபேஷியா நின்றீர் –
அதுக்கு நாம் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அடியேனை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் வர அடியேனுடைய அபராதங்களையும் பொறுத்து
உபேஷியாதே மோஷத்தையும் கொடுப்பாராக எண்ணி இருக்கிற தேவர் கால விளம்பம் பண்ணாமல்
அத்தைச் செய்து அருள வேணும் என்கிறார்-

என்று நிர்ஹேதுகமாக வென்னை யபிமாநித்து
யானும் அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்று அளவும் அநவரதம் பிழையே
அடுத்து அடுத்துச் செய்து அனுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திரு நாடும் எனக்கு அருள வெண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்து அருள வேண்டும் எதிராசா –25–

———-

இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை
ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ

இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை சமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்ன யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப் படுத்து விரைந்தே—-26-

———–

இவர்
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -என்ற அநந்தரம் -அவரும்
வானே தருவான் எனக்காய் –என்னும்படி
மோஷ பிரதானத்திலே சத்வராய் இருக்கிற படியை சாஷாத் கரித்து
இனி த்யாஜ்யமான இவ் விபூதியில் உண்டானது அடங்கலும்-அனுபாதேயமாய்
பிராப்யமான அவ் விவிபூதியில் உண்டானது அடங்கலும் உபாதேயமாய் அற்ற பின்பு
அவற்றின் விஸ்மரண அனுஸ்மரணங்களான க்ருத்ய அக்ருத்யங்களை
தமக்கு விதேயமான திரு உள்ளத்தைக் குறித்து விதித்து அருளுகிறார் –

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே
இரவு பகல் எதிராசர் எமக்கு இனி மேல் அருளும்
அவ் வுலகை யலர் மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் அதனை அவர்கள் அனுபவத்தை
இவ் வுயிரும் அதுக்கு இட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னுமத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ் வினையால் வந்த வுடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே—27-

————

செய்தது எல்லாம் செய்தும் இது நெடும் காலம் இல்லாத பிராப்ய ருசி இப்போது
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே உண்டாயிற்று என்று
அந்த லாபத்தைப் பேசி அனுபவிக்கிறார்

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல் கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-28-

———–

இனி
தம்முடைய பிராப்தி விரோதி நிரசன சீலரான ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ பாஷ்யாதிகளான ஸ்ரீ ஸூக்திகளாலே பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளின
விஜய பரம்பரைகளைச் சொல்லி அத்தால் யுண்டான வீர ஸ்ரீக்கு மங்களா சாசனம்
பண்ணி அருளுகிறார் –

சாறுவாக மதம் நீறு செய்து சமணச் செடிக் கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியர் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்து அறமிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறுமா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகி மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே—-29–

————

இனி
இதர நிரசனம் பண்ணி அருளின ஸ்ரமம் தீர ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ திருவாய் மொழி
முதலான பகவத் விஷயங்களை வ்யாக்யாநித்துக் கொண்டு எழுந்து அருளிய இருப்பு தமக்கு
ஆகர்ஷகமாய் இருக்கையாலே ஸ்ரீ பாதாதி கேசமாக அனுபவித்து இவை எல்லாம் தனித் தனியே
நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

சீராரும் எதிராசர் திரு வடிகள் வாழி
திரு வரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி
தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே–30-

———

அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் ஆகையாலே மீளவும் ஆதர அதிசயத்தாலே
பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளினமைக்கும்
மற்றும் லோக உபகாரகங்களாக செய்து அருளினவை எல்லாவற்றுக்கும்
மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார்

கீழ் பாட்டு விக்ரஹ பரம்
இப் பாட்டு ஸ்வரூப பரம் –

அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை யதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே —31-

———

கீழ்
நற் பெரும் பூதூர் அவதரித்தார் என்று பிரஸ்துதமான திரு வவதார திரு நஷத்ர வைபவத்தை
ப்ரீதியாலே பேசி அனுபவித்து அருளுகிறார்-

சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சது மறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி யிங்கினி வீறு நமக்கில்லை என்று மிகத் தளர் நாள்
மேதினி நஞ்சுமை யாறு மெனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மானிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும் பூதூர்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –32-

—————–

கீழே
ப்ராசங்கிகமாய் வந்த மங்களா சாசனத்திலே -மண்டி அனுபவித்து
ப்ரா சாங்கிகம் பரி சமாப்ய பிரகிருதம் அனுசரதி -என்கிறபடியே
மீளவும் பிரக்ருதத்திலே இறங்கி

சர்வ லோகத்தில் உண்டான சர்வ துரிதங்களும் போம்படி திரு வவதரித்து ரஷித்து அருளினால் போலே
அடியேனுடைய அஞ்ஞானத்தைப் போக்கி அடிமை கொண்ட ஸ்வாமி யானவரே

அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் யுண்டான தேக ஸ்திதி
தத் விமோசன காலாதி நியமங்களை எல்லாம் அறிந்து அருளும் சர்வஜ்ஞ்ஞரான தேவர்
அஜ்ஞ்ஞனான அடியேனை விலஷணமான தேசத்தில் ஆரோஹிப்பித்து அருள
திரு உள்ளமாகில் விஸ்மரித்து இருக்கிறதுக்கு ஹேது ஏது-என்று
அவர் தம்மையே கேட்கிறார்-

இன்னம் எத்தனை காலம் இந்த வுடம்புடன் யான் இருப்பேன்
இன்ன பொழுது உடம்பு விடும் இன்னபடி யது தான்
இன்ன விடத்தே எதுவும் என்னும் இவை எல்லாம்
எதிராசா நீ யறிதி யான் இவை யொன்று அறியேன்
என்னை இனி இவ் உடம்பை விடுவித்து உன் னருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினை வுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறது என் பேசாய்
பேதைமை தீர்த்து எனை யடிமை கொண்ட பெருமானே –33-

———

நமக்கு கிருபை யுண்டானாலும்-எத்தனை தயவான்களையும் நிர்க்ருணராம் படி பண்ணுவதான
உம்முடைய பிரபல பிரதி பந்தகங்கள் கிடந்தே என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு நினைவாக

சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -என்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் தேவர்க்கு விதேயன் அன்றோ –
ஆகையாலே த்வத் அனந்யனான நான் பாப பலன்களை புஜியாமல் முக்தனாம் படி பண்ண வேணும் -என்கிறார் –

முன்னை வினை பின்னை வினை பிராரத்தம் என்று
மூன்று வகையான வினைத் தொகை யனைத்தும் யானே
என்னை யடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா நீ இட்ட வழக்கன்றோ சொல்லாய்
உன்னை யல்லது அறியாத யான் இந்த வுடம்போடு
உழன்று வினைப்பயன் புசிக்க வேண்டுவது ஓன்று உண்டோ
என்னுடைய விரு வினையை இறைப் பொழுதின் மாற்றி
ஏராரும் வைகுந்தத்து ஏற்றி விடாய் நீயே —–34-

————–

அடியேனுடைய சகல பிரதிபந்தகங்களைப் போக்கி ரஷித்து அருளுகையில் யத்னம் பண்ணி அருளுகிற தேவர்
கிருபையாலே நித்ய கைங்கர்யம் கொண்டு அருள சங்கல்ப்பித்து இருக்க
அத்தையும் அதிகரித்துப் -அதிகிரமித்து -போவதான என்னுடைய
ருசி விரோதியாய் இருக்கிற இந்த்ரிய வியாபார வஸ்யதைக்கு அடியான பாபங்களைப் போக்கி
த்வத் ஏகம் அநாவாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

அருளாலே அடியேனை யபிமாநித்து அருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீ இருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன்
வல் வினையை மாற்றி யுன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத் தாழ்வானும் அவர் செல்வத்
திரு மகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளானது இத்தனையும் சேரவுள வென்னைத்
திருத்தி யுயக் கொள்ளும் வகை தேரும் எதிராசா—-35-

———-

மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன் வல் வினையை மாற்றி -என்ற பின்பு
அவை நடை யாடக் காண்கையாலே
அத்யந்த ஹேயமாய் இருக்கிற விஷய அனுபவ சுக வாஞ்சையானது
அடியேனுடைய மனசை பலாத்காரத்தோடே தான் மேலிடா நின்றது
அதுக்கு ஹேது வாசன கர்மங்கள் இன்னது என்று அறியேன் -என்கிறார்

வாசனையில் ஊற்றோமோ மாளாத வல்வினையோ
ஏது என்று அறியேன் எதிராசா -தீதாகும்
ஐம் புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து—36-

———–

நீர் இந்த்ரியங்கள் உடைய தோஷத்தை அனுசந்தித்து பதறுகிறீர்
நாம் தாமும் அவற்றின் கையில் காட்டிக் கொடோம் காணும்
இப்படி அஞ்சுகிற யும்மை சம்சாரத்திலே வைக்கிறது
ஆர்த்தி -அதிகார பூர்த்திக்கு என்னுமது முக்கியம் -என்கிறபடி

இத்தாலே நிறம் பெறுவதான ஆர்த்தி அதிகாரம் பிறக்கும் தனையும் காணும் ஆகையால்
அது பிறந்த பின்பு உம்முடைய அபேஷீதத்தை செய்து தலைக் கட்டுகிறோம் காணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு கருத்தாக

இவ்வளவாக இல்லாத அதிகாரம் இனி மேல் என்ன உண்டாகப் போகிறது
இந்த அதிகார சம்பத்தியும் உண்டாக்கி அபேஷித சம்விதானத்துக்கு விரோதியான பாப சமூஹத்தை சேதித்து
பிராப்ய தேசத்தை பிராப்பியாததுக்கு ஹேது ஏது என்கிறது-

இன்றளவும் இல்லாத வதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம் சொல்லாய் எதிராசா -குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்
தெனைக் கடுக வேற்றாதது என் —37-

————–

இன்று அளவும் இல்லாத அதிகாரம் -என்றத்தை
தார்கிக லௌகிக சப்த நியாயத்தாலே-தர்சிப்பியா நின்று கொண்டு
தத்தேது பூர்வமாக அத்தை அருளிச் செய்கிறார் –

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ எதிராசா -நெஞ்சம்
உன்ன தாள் ஒழிந்த வற்றியே யுகக்க இன்றும்
அனுதாபம் அற்று இருக்கையால் —38-

————

நீர் –
உன் தாள் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று அவர்க்கு அந்யமாய்
அப்ராப்தங்களாய் இருக்குமவற்றையே பற்றினால்
விரசமாய் இருக்கிற யும்மை அவர் எப்படி அங்கீ கரிக்கப் புகுகிறார் என்று
பார்ஸ்வச்தர்க்கு அபிப்பிராயமாக ஆஸ்ரயண தசையில் குண ஹீநனாய்
அத்தாலே விரசனாய் இருக்கிற என்னுடைய தோஷத்தை போக்யமாக விரும்பி
அங்கீ கரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார்
என்னை உபேஷித்து அருளார் என்றுமத்தை ஸ நிதர்சனமாக –அருளிச் செய்கிறார் —

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் பொகடாதே புசிக்கும் தன்மை போல் -தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழாரே எதிராசர்
அன்று அறிந்து அங்கீ கரிக்கையால்—-39-

————-

உம்முடைய தோஷம் பாராதே அங்கீ கரித்தோம் ஆகில்
மேல் உள்ளதும் நாமே க்ரமத்திலே செய்கிறோம் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
த்வத் அனுபவ யோக்யமான காலத்தை எல்லாம் வ்யர்த்தமே போக்கி அதுக்கு அசலான சம்சாரத்தில் இல்லாமல்
அனுபவத்துக்கு பாங்கான தேசத்தில் சேர்த்து அதுக்கு இடைச் சுவர் தள்ளிப் பொகட வேணும் என்கிறார்-

அவத்தே பொழுதை யடியேன் கழித்து இப்
பவத்தே இருக்குமது பண்போ -திவத்தே யான்
சேரும் வகை யருளாய் சீரார் எதிராசா
போரும் இனி இவ் வுடம்பைப் போக்கு–40-

———-

ஆனாலும் உம்முடைய தோஷ பூயஸ்வத்தைப் பாராதே அரும் தேவைகளைச் செய்யும்படி
சொல்லக் கூடும் இத்தனையோ-என்னில் –
அசத்ருச அபராதனான அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாக வரும்
அபராதங்கள் எல்லாம் பொறுத்து ரஷிக்குமவரான பின்பு
சகல ஜீவ லோக உஜ்ஜீவன அர்த்தமாக திரு வவதரித்த தேவர்
அதி சபலனான எனக்கு தயை பண்ணி ரஷிக்க வேணும் என்கிறார் –

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் வுண்டோ
உனைப் போல் பொறுக்க வல்லார் யுண்டோ -அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மா முனிவா
ஏழைக்கு இரங்காய் இனி –41-

———

இப்படி
ஆகிஞ்சன்ய-அநந்ய கதித்வங்களை ஆவிஷ் கரிக்கும் அதிகாரிகளைப் பெற்றோமே
என்று உகந்து எதிராச மா முனியான ஸ்ரீ எம்பெருமானார்
இவருக்கு-இனிப் பெற வேண்டும் பேறுகளை மனனம் பண்ணுவது
இவருடைய பிரேம ஸ்வபாவத்தைக் கடாஷித்துக் கொண்டு இருப்பதாக நிற்க –
அது பற்றாமல்
அவருக்கும் ரஷித்து அல்லாது நிற்க ஒண்ணாத படி –
உண்ணிலாவியில்-என்றபடி இந்த்ரிய பயக்ரோசமான பாசுரத்தாலே
தம்முடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார் –

ஐம்புலன்கள் மேலிட்டு அரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலமிட்டால்-பின்பவை தாம்
என்னை யடராமல் இரங்காய் எதிராசா
உன்னை யல்லாதார் எனக்கு உண்டோ—42-

———

இரங்காய் எதிராசா -என்று அவரை வெறுக்கிறது என் –
பிராப்ய பூமியில் பிராவண்யமும்-த்யாஜ்ய பூமியில் ஜூஹுப்ஸ்யையும்
அதிகாரிக்கு அவசியம் அபேஷையாய் இருந்தது –
அவை இரண்டும் இல்லாத நமக்கு
அசத்ருசமமான தேசத்தை அவர் எப்படி தந்து அருளுவர் என்று அதில் நின்றும் நிரசராகிறார்

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசை இல்லை -இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திரு நாடு உகந்து —43-

———-

இந்த வுலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த வுலகில் போகை ஆசை இல்லை -என்று அனுசந்தித்தவர்
நம் அளவில் இதுவே இருந்தது –
இனி லௌகிகர் அளவு என் என்றவர்கள் இடத்திலே கண் வைக்க
அவர்கள் படி சாலத் தண்ணியதாய் இருந்தவாறே
இப்படி இருப்பது
இவர்கள் பாபங்களைச் செய்யும் பிரகாரம் என்றதுக்கு நொந்து அருளிச் செய்கிறார் –

மா காந்த நாரணர் வைகும் வகை அறிந்தோருக்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை –மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயமற்று இருந்து
செய்வர் கடாம் பாவத்திறம்—44-

————-

கீழ்
மா காந்த நாரணர் வைகும் வகை -என்று வ்யாப்தியை பிரஸ்தாபித்து
இப்படி சர்வ வ்யாபகனான அவனோடு அநாதியாய் வருகிற சம்பந்தம் யுண்டாய் இருக்க
அத்தை அறியாதே
கீழ் சொன்ன மோஹாந்தரிலே-அந்ய தமராய் இருந்த நான்
ஆச்சார்ய சம்பந்தத்தால் அன்றோ உஜ்ஜீவித்தது என்று
ஸூவ லாபத்தை எப்போதும் அனுசந்தித்துப் போரு என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—45-

———-

கீழ் ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது –என்கிற
இத்தை விசேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார் –

திருவாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மைக்
குருவாகி வந்து உய்யக் கொண்டு -பொருவில்
மதி தான் அளித்து அருளும் வாழ்வு அன்றோ நெஞ்சே
எதிராசர்க்கு ஆளானோம் யாம்—46-

———

ஸ்ரீ எதிராசர்க்கு ஆளானோம் யாம் -என்ற ப்ரீதி யுத்ததியாலே
கீழே
மா கந்த நாரணானார் -என்றும்
நாராயணன் திருமால் -என்றும் ப்ரஸ்துதமான ஸ்ரீ நாராயண சப்தத்தோடு விகல்பிக்கும் படியாக
அதில்
சதுரையாய் இருப்பதான ஸ்ரீ ராமானுஜ -என்கிற திரு நாம வைபவத்தை வெளி இட வேண்டி அத்தை
வ்யதிரேக முகத்தாலே வெளி இட்டு அருளுகிறார் –

இராமானுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்து
இரா மானுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதும்
இரா மானுசர் அவர்க்கு எல்லா வடிமையும் செய்ய வெண்ணி
இரா மானுசர் தம்மை மானுசராக என் கொல் எண்ணுவதே—–47-

———-

கீழ்
எல்லா அடிமையும் செய்ய எண்ணி
ஸ்ரீ இராமானுசாயா -என்கிற பிரசங்கத்திலே
தம்முடைய வாகாதி கரணங்களை இப்படியே அவர்கள் விஷயத்தில் அனந்யார்ஹமாம்படி
ஸ்ரீ பெரிய பெருமாள் பண்ணி யருளின படியை ப்ரீதியாலே பேசி அருளுகிறார் –

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை யொன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகு அளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை யரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

———–

எதிராசன் அடி நண்ணாதவரை எண்ணாது -இத்யாதியாலே
தமக்கு சம்சாரிகள் இடத்தில் யுண்டான வைமுக்யத்தை தர்சிப்பித்து மீள
அவர்கள் அனர்த்தத்தைக் கண்டு ஆற்ற மாட்டாதே
அவர்களுக்கு மோஷ உபாயமாக
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஆஸ்ரயணாதிகளை விதிக்கிறார் –

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நா நிலத்தீர்
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றுமவன்
அந்தாதி தன்னை யனுசந்திக்குமவன் தொண்டருடன்
சிந்தாகுலம் கெடச் சேர்ந்திரு முத்தி பின் சித்திக்குமே–49-

———-

அவர்கள் ஆஸ்ரயிக்கிறோம் என்று ஆறி இருக்க மீளவும் அவர்களைக் குறித்து
ஏன் காலத்தை வ்யர்த்தமே போக்குகிறீர்கள்
அவர் திரு நாமத்தை ஸ்மரிக்க அதி துர்பலமான பலம் சித்திக்கும் என்கிறார் –

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி யறி வின்மையால் இப்
பவத்தே யுழல்கின்ற பாவியர்கள் பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்களுக்கும் எய்த ஒண்ணாத வந்தத்
திவத்தே யும்மை வைக்கும் சிந்தியும் நீ எதிராசர் என்றே—50-

———-

இனி
சம்சாரிகள் இழவைத் தான் சொல்ல வேணுமோ –
உம்முடைய நிலை இருந்தபடி என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அவர்களோபாதி அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போய் இருக்க
அதன் இழவு இன்றிக்கே இருக்கிற எனக்கு தேவர் உடைய கிருபை யுண்டான பின்பு
தத் அலாபக் க்லேசம் யுன்டாய்த்து என்று ஸ்வ லாபத்தைப் பேசி அருளுகிறார்–இழவு -அலாப க்லேசம் –

என்றும் உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக் காலம் எல்லாம்
அன்று அளவாகப் பழுதே கழிந்தது இரு வினையால்
என்று இழவு இன்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தபிக்கும் எதிராசா நீ அருள் செய்த பின்னே –51-

———-

அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –

கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற் கொண்டு -தனு விடும் போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-

———–

இப்படி ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு வந்து திரு முக பிரதானம்
பண்ணும்படியை அனுசந்தித்து
அதுக்கு இடைச் சுவராய் பாபஸ்பத தேகத்துடன் துஸ் சஹமான துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது
ஆகையால் ஹித பிரவர்த்தகரான தேவர் சகல துக்காஸ்பதமான சம்சாரத்தில் நின்றும்
அடியேனை சீக்கிரமாக உத்தரிப்பித்து அருள வேணும் -என்கிறார்

இதத்தாலே தென்னரங்கர் செய்கிறது என்று அறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆவோ வென்னும் இந்தப் பாவ வுடம்புடனே
பல நோவும் அனுபவித்து இப் பவத்து இருக்கப் போமோ
மதத்தாலே வல் வினையின் வழி யுழன்று திரிந்த
வல் வினையேன் தன்னை யுனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா என்னை
இனிக் கடுக இப் பவத்தின் நின்றும் எடுத்தருளே –53-

———-

இப்படி இவர் அபேஷித்த படியே
ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் அபேஷிதம் எல்லாம் செய்வாராக எண்ணி இருக்க
இவருக்கு அது பற்றாமல்-ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் மீளவும் அவர் தம்மைப் பார்த்து
சர்வவித பந்துவாய் இருக்கிற தேவர்
நான் இந்த தேஹத்தோடே இருந்து துக்கப் படாமல்
என்று தான் நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே சேரும்படி ஏற்றி அருளுவது என்கிறார் –

இன்னும் எத்தனை நாள் இவ் வுடம்புடனே
இருந்து நோவு படக் கடவேனையோ
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்று தான் திரு நாட்டில் ஏற்றுவீர்
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்து அருள் நாதனே
என் னிதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே—–54-

———–

செய்த அம்சத்தில் ‘க்ருதஞ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷிதையும்
அதிகாரிக்கு வேண்டுவது ஒன்றாகையாலே
அந்த கிருதஞ்ஞதா ஸூசகமாக ஸ்ரீ எம்பெருமானார் யுடைய பிரசாதத்தாலே
தாம் பெற்ற பேறுகளை அனுசந்தித்து -வித்தராய் – அருளுகிறார் –

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

———-

ஸ்ரீ மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -என்று
தம்முடைய நிலையை வெளி இடா நின்று கொண்டு
அதுக்கு அனுரூபமாக அவர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அபேஷிககிறார்-

உன் தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்து இருக்கச் செய்த நீ -அந்தோ
எதிராசா நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத் தாள் தா –56-

————

இப்படி நீர் சொல்லுகிற நிர்பந்தங்கள் எல்லாம் கேட்டு நாம் உம கார்யம் செய்கைக்கு
எந்த சம்பந்த பிராபல்யம் கொண்டு தொடருகிறீர்-என்ன
ஸ்ரீ பிள்ளை திருவடிகளை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே ஒரு வஸ்து என்று அபிமானித்து
அடியேனுடைய அபராதம் பாராத தேவர்
யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீ மன் கிருபயா பரயா தவ -என்கிறபடியே
அடியேனுடைய முக்த ஜல்பிதத்தை செவி தாழ்த்து கேட்டு அருள வேணும் என்கிறார் –

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன் பகர்வைக் கேளும் பொறுத்து—57-

————–

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த்தாள் அடைந்தது – என்கிற மாத்ரமேயோ
அவராலே லப்த ஞானனான எனக்கு-த்வத் சம்பந்த ஞானம் இல்லையோ -என்கிறார்-

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன் னருளால்
உன் தன உறவை உணர்த்திய பின் -இந்த யுயிர்க்கு
எல்லா வுறவும் நீ என்றே எதிராசா
நில்லாதது வுண்டோ என் நெஞ்சு —-58-

——–

இப்படி தேவர் திருவடிகளிலே சம்பந்த ஞானத்தை உடைய எனக்கு
ஹித பரரான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ பெரிய திருவடியை மேற்கொண்டு வந்து
முக தர்சனம் யுண்டாக்கி
தாமே மார்க்க சிந்தை பண்ணி
தேக விமோசனம் பண்ணும் கால அவதியை
அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த -சிந்தை செய்து இப்
பொல்லா வுடம்பு தனைப் போக்குவது எந் நாள் கொலோ
சொல்லாய் எதிராசா சூழ்ந்து —–59-

———

இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்ம தன்றோ நெஞ்சமே நற் றாதை சொம் புதல்வர்
தம்ம தன்றோ தாய முறை தான் —60-

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின பிராப்ய பிரார்த்தனை

அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading