ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —புள்ளின் வாய் கீண்டானை—

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
நம் கண் அழகு -போதரிக் கண்ணினாய் –உண்டாகில்-தானே வருகிறான்
என்று கிடக்கிறாள் ஒருத்தியை-எழுப்புகிறார்கள்-

(இதிலும் அடுத்த பாசுரத்தில்
போதரிக் கண்ணினாய் –ஞானம் -தனக்கு உஜ்ஜீவனம்
நா உடையாய் -எடுத்துச் சொல்லும் சாமர்த்தியம் -மற்றவர் உஜ்ஜீவிக்க
இரண்டும் ஆச்சார்யருக்கு வேண்டுமே
கள்ளம் தவிர்ந்து கலக்க வேண்டும் என்கிறார்
பாகவதர் கோஷ்ட்டியில் கலக்காமல் கண்ணனை அனுபவிக்காதே என்றவாறு –
ராவல் வர்ஸானா -சங்கேத்- ராதா தேவி பிறந்த இடம் என்பர் –
சங்கேத ஸ்தலம் -அதுவே இங்கு பாவைக்களம்
நன்னாளால் இதிலும் -முதல் பாட்டில் போல் )

தன் கண் அழகை நினைத்து –
இக் கண் அழகு உடைய நான் இருந்த இடத்தே எல்லாரும் வரும் அத்தனை அன்றோ
நானோ போவேன் என்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் —

மனத்துக்கு இனியானைப் பாடவும் என்று இவர்கள் சொன்ன பாசுரத்தை
அசல் திரு மாளிகையில் கேட்டுக் கிடப்பாள் ஒரு பெண் பிள்ளை –
நம் அபராதம் தீர –
இவர்களுக்கு வார்த்தை சொல்வோம் என்று
பெண்காள் இங்கே ராம விருத்தாந்தம் சொன்னார் உண்டோ என்ன –

ராம விருத்தாந்தமும் சொன்னோம் –
கிருஷ்ண விருத்தாந்தமும் சொன்னோம்
ஸ்ரீ ராமாயணமும்
ஸ்ரீ பாரதமும்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்படச் சொன்னோம் -என்கிறார்கள் –
(இத் திருப் பாவையில் இல்லாததே இல்லையே )

(ராம் காட் காத்யாயனி கோயில் இன்றும் சேவிக்கலாம் கோபிகளுடைய -நோன்பு நடந்த இடம்

விடிந்தமை அடையாளம் -6-7-8-13-14-பாசுரங்களில் உண்டு -)

(அடியார்களுக்கு தன்னைக் காட்டாமல் மறைந்து இருப்பது பகவத் கள்ளத்தனம்
பகவானை தனியாக அனுபவிப்பது பாகவதர்களது கள்ளத்தனம் )

(போதரிக் கண்ணாய் இந்தப் பெண்ணின் விழிச் சொல் -ஞான சீர்மை -போதரிக் கண்ணி-பூவை வெல்லும் -உலாவும் மான் போன்ற கண் -பூவிலே வண்டு இருந்தால் போலே- அடுத்த பாசுரம் – நாவுடையாய் -பேச்சு வன்மை – வாக்கு வன்மை – ஆச்சார்ய வைலக்ஷண்யங்கள் இவை இரண்டும்)

இவளை எழுப்புகிறது -அசலகத்தே கேட்டுக் கிடந்தாள் ஒருத்தி-
தன் அபராதத்தை தீர உணர்ந்தாளாய்-
பெண்காள் இங்கும் ராம வ்ருத்தாந்தம் சொல்லி எழுப்பினி கோளோ-என்ன
ராம வ்ருத்தாந்தமும் சொன்னோம் –
கிருஷ்ண வ்ருத்தாந்தமும் சொன்னோம் –
ஸ்ரீ இராமாயண மஹா பாரதங்கள் இரண்டும் சொன்னோம் –
என்று கண் அழகியாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

இப் பாட்டில்-
நமக்கு ஸ்வரூப ஞானமுண்டாகில்
அவன் தானே வருகிறான் என்று
நிர்ப்பரராய் இருக்கும்வரை
எழுப்புகிறார்கள் –

பகவத் அனுபவ ரூபமான ஞான பக்திகளால் பூர்ணராய் இருப்பார் இடத்திலும்
தாதர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

பகவத் குண ஞான நிஷ்டரையும் இதிஹாச யுக்தமான குண நாம சங்கீர்த்தனத்திலே
பிரவணர் ஆக்கும் படி சொல்லுகிறது –

போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே –
ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

எட்டாம் பாட்டில்
கீர்த்திமை பாடிப் போய் –
போதரிக் கண்ணினாய் –
பாவாய் –
கள்ளம் தவிர்ந்து
பகவத் குண ஞான நிஷ்டரையும் இதிஹாச யுக்தமான குண நாம சங்கீர்த்த நத்திலே
பிரவணராக்கும்படி சொல்லுகிறது
நம் கண் அழகு உண்டானால் தானே வருகிறான் -என்று
அவயவ சோபையை மதித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
இத்தால்
பகவத் அனுபவ பரிகாரமாக ஞான வைராக்ய பக்திகளால் பூர்ணராய் இருக்குமவர் நிறத்திலும்
ததர்த்தமாக
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

கண்ணபிரான் பிறந்து வளருமூரான் திருவாய்ப்பாடியிலே அவனையே பாட வேண்டியிருக்க
அவனை விட்டுத் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற இராமனைப் பாடுவதும்,
அவனை மனத்துக்கினியானென்பதும்
க்ருஷ்ண பக்தர்களுக்கு அஸஹ்யமாகையாலே ஒரு பெரிய கிளர்ச்சி தோன்றியது.
உடனே சில பெரியார்கள் புகுந்து கண்ணனும் இராமனும் ஒரு திருமூர்த்தியே யென்கிற தத்துவத்தை விளக்கி
ஸமாதானம் பண்ண, பிறகு ஒருவாறு தேறி அவ்விரண்டு திருமூர்த்திகளையும் சேர்த்து ஆனந்தமாகப் பாடுகிறார்கள்.

———–

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்

புள்ளின் வாய் கீண்டானை –
பள்ளத்தில் மேயும் -இத்யாதி -பகாசுரனைப் பிளந்தபடி –

புள்ளின் வாய் கீண்டானை
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )-
கள்ளச் சகடம் -என்னுமா போலே –
மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் –
பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –

புள்ளின் வாய் கீண்டானை
இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –
இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –
விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –

இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை
(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல
அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் )
கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் –
தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்-
அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு
அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –

கீழில் பாட்டிலும்
இப் பாட்டிலும் ராம விருத்தாந்தத்தைச் சொன்னால் –
ஒருகால் சொன்னதையே சொல்லா நின்றார்கள் என்று
நினைக்கக் கூடும் என்று
தங்கள் பாழியான கிருஷ்ண விருத்தாந்தத்தையும் கூட்டிச் சொல்கிறார்கள் –

தங்களுக்கு பள்ள மடையான கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லிற்றாகில் –
பின்னை ராம விருத்தாந்தம் என் என்னில்
தங்களோடு ஒரு கோவையான பிராட்டி பிரிவு பொறுக்க மாட்டாதவன்
விருத்தாந்தம் என்று சொல்கிறார்கள் –

புள்ளின் வாய் கீண்டானை –
கொக்கின் வடிவு கொண்டு வந்த பகாசூரனைப் பிளந்த படி -(பிருந்தாவனம் 12 காடுகளில் ஓன்று இது நடந்த இடம் )
பள்ளத்தின் மேயும் –

(பள்ளத்தில் மேயும்*  பறவை உருக் கொண்டு* 
கள்ள அசுரன்*  வருவானைத் தான் கண்டு* 
புள் இது என்று*  பொதுக்கோ வாய் கீண்டிட்ட* 
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!)

இத் தலைக்கு இசைவே இறே வேண்டுவது –
விரோதி போக்குகை அவன் படி என்று இருக்கை

நம்முடைய அநீதிகளுக்கு ஈஸ்வரன் பண்ணும் அனுமதி
வைஷம்ய நைர் க்ருண்யத்தில் புகாதாப் போலே இவ் வனுமதி உபாயத்தில் புகாது –
இருவர்க்கும் இரண்டு அனுமதிகளும் ஸ்வரூபத்திலே கிடக்கும் அத்தனை –

புள்ளின் வாய் கீண்டானை –
ஸ்வ ஆஸ்ரிதருக்கு
ஸ்வ அனுபவ விரோதியான
காமாதி தோஷ நிவர்தகனாய்

ஜடாயு ஆகிய புள்ளின் இனிய வாய் கீண்ட பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -இரண்டுமே ராமாவதாரம் -என்றுமாம்

————-

பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும்
உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி
முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி
அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே
அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –

பொல்லா அரக்கனைக்
உயிரையும் உடலையும் பிரித்தால் போலே
தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த
நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –

முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி
அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –
துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே

இத் தண்மையை பிராட்டியும் –
த்வன் நீச -என்றாள் இறே
(தாழ்ந்த முயல் போல் நீ எனது பெருமாள் யானை போல் என்றாள் பிராட்டி கூட )

பொல்லா அரக்கனை-
விபீஷணஸ் து தர்மாத்மா -என்று
நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே

பொல்லா அரக்கனை
ஜகத் ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் -என்ற நிலை மாறி
தண்ணிய பையல்கள் அளவிலே பர்யவசித்த படி

(கோபத்தால் ஜகத்தையும் மலைகளையும் இல்லையாம் படி அம்பின் நுனியால் முடிப்பேன்
என்று தண்டகாரண்யத்தில் சொன்ன நிலை
மாறி பொல்லா அரக்கனை -என்ற இடத்தில் பர்யவசிக்கிறது )

அரக்கனை-
மாயா மிருகத்தைக் காட்டுவார் –
மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய்
ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்

பொல்லா அரக்கனைக்
தாயையும் தமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்

(சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-)

பொல்லா
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து -இறே –

(முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –திருக் குறும் தாண்டகம்-15-)

பிராட்டி -த்வம் நீச சசவத் ஸ்ம்ருத-என்றாள் (குள்ள நரி-முயல் குட்டி போல் நீ யானை போல் ராமன் -ஸூந்தர -21-16)
இவள் தானும் -அன்று இன்னாதான செய் சிசுபாலன் (நாச்சியார் 4-7-)-என்றாள் –
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித – என்று நல்ல அரக்கனும் உண்டு என்கை

சீதாயாஸ் சரிதம் மஹத் -என்கிற பிராட்டி வ்ருத்தாந்தம் ஸ்ரீ ராமாயணம் ஆனபடி என் என்னில் -(பவ்லஸ்ய வதம் என்னும் பெயரும் வால்மீகி சூட்டுகிறார் )
குணவான் -என்றது அவனையும் அவளையும் கூட்டி வாழ நினைக்குமவர்களோடு பரிமாறின படி-(ஸுசீல்யன் என்றபடி )
வீர்ய வான் -என்றது பிரிக்க நினைத்தார் முடியும்படி
தர்மஞ்ஞ – என்றது அவர்கள் ஸ்வரூபம் உணர்ந்து இருக்கும் படி –

——————

கிள்ளிக் களைந்தானைக் –
திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக்
பொகடுமா போலே
தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

கிள்ளிக் களைந்தானைக்
வீர பத்னி யாகையாலே
கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –
கிள்ளி –என்கிறார்கள் –

திரு விளையாடு சூழலில் நோவு பட்ட இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே –
தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி

கிள்ளிக் களைந்தானைக்
மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி–
திரு விளையாடு சூழலில் புழுத்த இடம் கிள்ளிப் பொகடுமா போலே
ஆஸ்ரிதர் குடியில் தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –
பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான
அஹங்காரத்தை

அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹம் மம -என்றால்
ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும்
ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹந்காரத்துக்கு நன்மை யாவது –
தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது –

அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய

“கிள்ளிக் களைந்தானை”
என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.
ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க.

ஒரே வரியில் சொல்லும் படி ராமனும் கண்ணனும் ஒரே தத்வம் -நாராயணன் -தமிழை ஆண்டாள் -பகாசுரனையும் ராவணனையும் ஒரே வரியில்

புள்ளின் வாய் கீண்டானை -இனிய வாய் ஜடாயுவைக் கொன்றவன் -மந்த்ரம் சொன்னதும் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்– இருவரையும் சொல்லும்படி தர்மி ஐக்யம் உண்டே –

————

கீர்த்திமை –
எதிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை –
உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம்
உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –
ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான்
தங்கை அழகிலே கண் கலங்கினாள்
தம்பி சீலத்துக்கு இலக்கானான் –

கீர்த்திமை
எதிரிகள் நெஞ்சு உளுக்கும் படி இறே பெருமாள் பராக்ரமம் இருக்கும் படி
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய -என்னும்படியான வீர்யம் –
சத்ருக்களும் மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும் வீரம் –

க இதி ப்ரஹ்மணோ நாம -என்று பரரானவர்கள் (தஸ்மாத் கேசவ நாம என்று ருத்ரன் பார்வதிக்குச் சொன்னது )பகவத் பரத்வத்துக்கு மேல் எழுத்து இட்டுக்
கொடுக்குமா போலே ஆத்ம அபஹாரிகள் எதிர் அம்பு கோக்கை தவிர்ந்து –
நமோ நாராயணாய -என்று அவனுடைய சேஷத்வத்துக்கு மேல் எழுத்து இட்டுக் கொடுக்குமா போலே

(ராவணன் பெருமாள் இடம் மேல் எழுத்து -சிவன் கேசவன் இடம் மேல் எழுத்து -நாம் நாராயணன் இடம் மேல் எழுத்து)

ரஞ்ச நீயஸ்ய
தோளாலே நெருக்குண்ட பிராட்டிமார் சொல்லுமா போலே சொல்லுவதே –
உகவாதார் க்கும் விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்கு விட ஒண்ணாமைக்குச் சொல்ல வேணுமோ –

ராவணன் பெருமாள் வீரியத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகுக்கு இலக்கானாள்-
தம்பி ஸுசீல்யத்துக்கு இலக்கானான்
தங்கள் அபலைகள் ஆகையாலே தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –

கர்ம ஞான பக்திகள் உபாயமாம் இடத்தில் இவனும் கூட வேணும் -(பிரயத்தனம் சேதனன் செய்ய அவனே பல பிரதன் )
பரம சேதனன் இவன் தானே உபாயமாம் இடத்தில் -பாபிய சோ பீத்யாதி –த்வஜ் ஞான சக்தி கருணா ஸூ சாதீஷூ -என்று
ஞான சக்தி கிருபையே சஹகாரம் ஆகையாலே -அவற்றை அனுசந்தித்து
மார்விலே கை வைத்து உறங்குமவர்கள் இவர்கள் -(வாழும் சோம்பாராக கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க வேண்டும் )

(பாபிய சோ பீத்யாதி (சரணாகத சொன்ன என்னை நீ தள்ளுவது சரியில்லை ) –த்வஜ் ஞான சக்தி கருணா ஸூ சாதீஷூ
கர்மம் ஞானம் உதவும் பக்திக்குப் பத்தி உனது ஞானம் சக்தியால் வரும் கருணையே எனது பாபங்களை வெல்லும் -கூரத்தாழ்வான்)

————–

பாடிப் போய் –
இவர்களுக்கு பாதேயம் இருக்கிறபடி –
வழிக்கு தாரகம் இறே திரு நாமம்
தன் தாள் பாடி -என்னக் கடவது இறே –

————

கீர்த்திமை பாடிப்
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய ரஞ்சநீ யஸ்ய விக்ரமை -என்று
எதிரிகளும் மேல் எழுத்து இடும் படியான வீரம் இறே
உகவாதற்கும் விட ஒண்ணாத வீரம்
உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –

எதிர் அம்பு கோத்த சம்சாரிகள் –
நமோ நாராயணாய -என்று
தங்களுடைய தோல்விக்கும்
அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும்
மேல் எழுத்து இட்டுக் கொடுத்தால் போலே

ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகிலே கலங்கினாள் –
தம்பி சீலத்துக்கு இலக்கானான் –

விரஹ துர்ப் பலைகள் ஆனவர்கள் போன படி என் என்னில்

பாடிப் போய்
பாட்டே தாரகமாகப் போனார்கள் –
கால் நடை தருகைக்கு தாரகம் திரு நாமம் இறே
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம்
சாஷாத் பாதேயம் திரு நாம சங்கீர்த்தனம் —
தன் தாள் பாடி (திரு நெடும் தாண்டகம் -6-)-என்னக் கடவது இறே

பாடிப் போய் –
பகவதோ பலேன -என்கிறபடியே

புள்ளின் வாய் கிண்டிய கண்ணனின் கீர்த்திமையும் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைத்தானின் கீர்த்திமையும் பாடிப்போய் என்கிறார்கள்

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
நாம் சென்று எழுப்பிக் கொண்டு போக வேண்டும் படி பாலைகளான பெண்கள்
எல்லாரும் உணர்ந்து புறப்பட்டு
கிருஷ்ணன் பெண்களை மெய்க் காட்டுக் கொள்ளும் சங்கேத ஸ்தலத்தே ஏறப் போனார்கள் 

பாடிப் போய்
இவர்களுக்குக் கால் நடை தருகைக்கு மிடுக்குக் கால் (காலுக்கு மிடுக்கு கொடுக்கும் உபகரணம் )கொண்டு போகை
ஸூ குமாரரான பிள்ளைகள் உண்டு உண்டு வழி போய் என்னுமா போலே —
பரஸ்பரம் தத் குணவாத ஸீது பீயூஷா நிர்யாபி ததேஹ யாத்ரா -(கல்யாண குணாம்ருதம் சொல்லிக் கொண்டே போகும் )
பாதேயம் இத்யாதி –
போழ்து போக உள்ள நிற்கும் புன்மை இல்லாதவர்கள் இவர்கள் –
அவர்களுக்கு வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் அன்றோ -(9-1-8-)இவர்களுக்குச் சொல்ல வேணுமோ –

(வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8-)

கீர்த்திமை பாடிப் போய்-
கல்யாண குணங்களை
ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி
அதுவே தாரகமாய் போய் –

விரஹத்தாலே துர்ப்பலைகளான பெண்பிள்ளைகள் பகவத் குண கீர்த்தநத்தைப் பாதேயமாகக் கொண்டு
வழி கடந்தன ரென்றவாறு
“பாதேயம் புண்டரி காக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்” என்றது முணர்க. (பாதேயம் = வழிச்சோறு.)

——

பிள்ளைகள் எல்லோரும்
நாம் சென்று எழுப்ப வேண்டும் பாலைகளும்
உனக்கு முன்னே உணர்ந்து புறப்பட்டார்கள் –

பாவைக் களம் புக்கார்
கிருஷ்ணனும் தாங்களும் கழகமிடும்-ஓலக்கம் இடம் –
சங்கேத ஸ்தலம் புக்கார்கள் –
அவர்கள் போகைக்கு பொழுது விடிந்ததோ என்ன –

பாவைக் களம் என்று –
இந்திராணியை- ரதியை -நோற்கைக்கு பெண்கள் திரளும் இடம் –
திரளும் இடத்தை
நெற் களம்
போர்க்களம் என்னுமா போலே

பாலைகள் ஆகையால் அவர்கள் காலம் அறியாமே போகக் கூடும் –
அறிந்த நாம் அகாலத்தில் போக ஒண்ணாது இறே
சுக்ரன் உதித்தான் ஆகில் பாருங்கோள் என்ன

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்-
இன்னமும் உணர்ந்து உணராத சிறு பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு விடிந்தவாறே போகிறோம் -என்ன
அவர்கள் முன்னே உணர்ந்து கிருஷ்ணன் மெய்க் காட்டுக் கொள்ளும் இடம் (attendance)புக்கார்கள் -என்கிறார்கள் –

பாவைக் களம்-
போர்க் களம் -நெற் களம் -என்பாரைப் போலே

பிள்ளைகள் எல்லாரும்
எல்லாரும் நாம் சென்று எழுப்ப வேண்டும்படியான பாலைகளும்

பாவைக் களம்
சங்கேத ஸ்தலம் -அவர்கள் போனார்களாகிலும் அக் காலத்திலே போக ஒண்ணாது –
வெள்ளி எழுந்ததோ பாருங்கோள் என்ன –

பிள்ளைகள் எல்லோரும் –
நாம் சென்று எழுப்ப வேண்டிய அகில பாகவதரும் –

பாவைக் களம் புக்கார்-
அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான
சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் –
அதாவது காலஷேப கூடம்

———–

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
வெள்ளி உச்சிப் பட்டது
வியாழம் அஸ்தமித்தது
உங்களுக்கு நஷத்ரம் எல்லாம் வெள்ளியும் வியாழமுமாய் இறே இருப்பது என்ன
அதுவே யன்றி –

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
சுக்ர பகவானும் மத்யகதனானான்-
ப்ரஹஸ்பதியும் அஸ்தமித்தான் –

நீங்களும் அபி நிவிஷ்டைகள் ஆகையால் நக்ஷத்ர சாத்ருஸ்யத்தைக் கொண்டு
நக்ஷத்ரம் எல்லாம் சுக்ர ப்ருஹஸ்பதிகளாய் இறே தோற்றுவது-
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே (திருவாய் -4-4-4 ) என்னுமவர்கள் அன்றோ –
ஆகையால் இது விடிவுக்கு உடல் அன்று
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

நாங்கள் இத்தனை பேர் திரண்டு வந்தது அடையாளம் அன்றோ என்கிறார்கள் –

பிரிந்தார் திரளில் அன்றோ திரட்சி யாவது –
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -என்றும் ஒரு காலும் பிரிகிலேன் என்றும் திரியுமவர்கள் அன்றோ நீங்கள்
உங்கள் திரட்சி விடிவுக்கு உடல் அன்று –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
நீ நினைக்கிற அளவு தப்பி வெள்ளி யுச்சிப் பட்டு
வியாழனும் அஸ்தமித்தது -என்ன

நக்ஷத்திரங்கள் கண்டது எல்லாம் வெள்ளியையும் வியாழமாயும் அன்றே உங்களுக்குத் தோற்றுவது-
அவை புனர்பூசமும் பூசமுமாகக் கொள்ளீர்(திருவாதிரை பெரிய நக்ஷத்ரம் -சூரியனும் நக்ஷத்ரம் என்பர் -)

மற்ற அடையாளம் உண்டோ -என்ன
நாங்கள் திரண்டு தோன்றுமது அல்லவோ என்ன –

நீங்கள் பிரியில் அன்றோ திரள வேண்டுவது -மற்ற அடையாளம் உண்டோ என்ன

நீங்கள் “பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று திரியுமவர்களாகையால்
உங்கள் திரட்சி பொழுது விடிவுக்கு அடையாளமாகமாட்டாது; வேறுண்டாகிற் சொல்லுமின்’ என்ன;

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்-
பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய்
அஞ்ஞானம் தலை மடிந்தது –

—————

புள்ளும் சிலம்பின காண் –
புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே
இரை தேடி சிலம்பி போயிற்றன –

புள்ளும் சிலம்பின காண்
கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது –
அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று
இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –

திர்யக்குகளினுடைய விருத்தாந்தம் கொண்டோ கால நியதி பண்ணுவது
என்று அவள் பேசாதே கிடந்தாள்-

நாங்கள் சொன்ன வார்த்தைகளுக்கு எல்லாம் விபரீதம் சொல்லுகிறது
உன் கண் அழகை நினைத்து இறே

புள்ளும் சிலம்பின காண்
புள்ளும் சிதறிப் போந்தன
பண்டு ஒரு கால் புள்ளும் சிலம்பின் காண் -6-பாசுரத்தில் -என்றது –
அப்போது கூட்டிலே இருந்து சிலம்பிற்று–
இப்போது பறந்து போகத் தொடங்கிற்று -என்கை –

போதரிக் கண்ணினாய்
உங்கள் வார்த்தை பழகிறிலன்-என்று பேசாதே கிடக்க
இக் கண்ணுடைய எனக்கு ஓர் இடத்தே புறப்பட வேணுமோ என்ன –

என் காலிலே விழுகிறார்கள் -என்று கிடக்கிறாயோ

புள்ளும் சிலம்பின காண் –
மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –

————

போதரிக் கண்ணினாய் –
புஷ்பம் போலேயும்
மான் போலேயும்
இருந்துள்ள கண்
அரி என்று மான்
அன்றிக்கே பூவிலே வண்டு இருந்தாப் போலே என்றுமாம் -அரி என்று வண்டு
அன்றிக்கே
போதை ஹரிக்கிற கண் என்றுமாம்
பூவோடு சீ பாறு என்னும் கண் என்னவுமாம் –

போதரிக் கண்ணினாய்-
உபாஸ்யம் இருந்த இடத்தில் உபாசகன் வரும் அத்தனை அன்றோ –
அஸி தேஷணை–புண்டரீகாக்ஷன் இருந்த இடத்திலே போகக் கடவளோ-என்கிறார்கள் –

நெடும் கண் இள மான் அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் (6-7)-என்று
அவனுடைய விபூதியும் இவள் கண்ணில் பரப்பில் ஒரு மூலைக்கும் போராது என்றது இறே –

போது அரிக் கண்ணி
1-பூவும் மானும் போன்ற கண் –
2-பூவில் படிந்த வண்டு போன்ற கண் என்னவுமாம் –
3-பூவோடு சீறு பாறு என்ற கண் என்னவுமாம்
4-உலாவுகின்ற மான் போலே இருக்கிற கண் என்னவுமாம் –
5-அரி என்று -மான் -வண்டு -சத்ரு -என்னக் கடவது இறே

போது அரி
பூவும் மானும் போன்ற கண்
வண்டு-பூவிலே வண்டு இருந்தால் போலே என்றுமாம் –
பூவோடு சீறு பாறு என்றுமாம்–
அஸி தேஷ்ணை யாகையாலே புண்டரீ காக்ஷன் பக்கல் போக வேணுமோ -என்னும்

தான் – நெடும் கண் இள மான் –
அவன் அனைத்துலகமுடைய அரவிந்த லோசனன் –
அவனும் அவன் விபூதியும் (இவள் )கண்ணில் ஒரு மூலைக்குப் போராது-

(நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10)

போதரிக் கண்ணினாய் -இத்யாதி
இக் கண்ணாலே அவனைக் குமிழ் நீரூட்டி
அவன் கண்ணிலே நாம் குமிழ் நீருண்ணப் பாராய் -என்கை –

போதரிக் கண்ணினாய்-
ஸ்வச்சமாய்
ஸ்லாக்கியமாய்
சாராஹ்ராஹியான
ஞானத்தை உடையவரே –

இந்த ஸம்போதனைக்கு நால் வகைப்பொருள்கள் கூற இடமுண்டு; –
போது – உலாவுகின்ற, அரி கண்ணினாய் – மானினுடைய கண் போன்ற கண்ணையுடையவளே! என்பது ஒரு பொருள்;
(பல பொருளொரு சொல்லாகிய ஹரி என்ற வட சொல், அரி எனத் திரிந்தது.)

போது – என்று புஷ்பமாய், குவளைப் பூவையும் மான் கண்ணையுமொத்த கண்ணை யுடையவளே! என்கை இரண்டாம் பொருள்.

அரி என்று வண்டாய் பூவிற்படிந்த வண்டு போன்ற கண்ணுடையவளே!’ என்கை மூன்றாம் பொருள்.

அரி என்று சத்ருவாய், புஷ்பத்தின் அழகுக்குச் சத்ருவான கண்ணழகுடையவளே! என்கை நான்காம் பொருள்.

———–

குள்ளக் குளிரக் –
ஆதித்யத்து நீர் கொதிப்பதற்கு முன்னே –

குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணம் பட்டு கொதிப்பதுக்கு முன்னே ஆழ முழுகினாலும்
விரஹ தாபம் அங்கும் புகுந்து சுடும் என்னும் இடம் அறியார்கள்

குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணங்களாலே நீர் வெதும்புவதற்கு முன்னே புறப்பட்டு –
பெண்களும் புறப்பட்டு நீர் வெதும்புவதற்கு முன்னே என்னவுமாம்

———-

குடைந்து நீராடாதே
கிருஷ்ண விரஹ ஆற நீராடப் போகாதே
நமக்கு கிருஷ்ண விச்லேஷம் பிறவாமைக்கும்
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே

குடைந்து நீராடாதே
சரயூமவகாஹதே-என்னுமா போலே
(பரதன் ஊரார் வரும் முன் நீராட சரயு போவான் -பெருமாள் லஷ்மணன் பேசி –
கோதாவரியில் குள்ளக் குளிர பேசிக்கொண்டது –
தாபம் இல்லாம்நாள் லஷ்மணனுக்கு குளிரும் –
அவன் அத்யந்த ஸூ குமாரன் அபர ராத்திரியில் எப்படி நீராடுவானோ )
கிருஷ்ண விரஹ தாபம் அற நீராடப் போராதே-

1-நமக்குச் செல்லும் கிருஷ்ண விரஹ தாபம் சமிக்கைக்கும் –
2-இனி ஒருக்காலும் கிருஷ்ண விஸ்லேஷம் பிறவாமைக்கும்
கிருஷ்ண குணங்களை அவகாஹித்து அனுபவிக்கப் போராதே –

உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து அவன் கண்ணாலே குமிழ் நீர் உண்ணப் போராதே
இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே நாங்கள்-
உன்னுடைய ஸுந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அங்கனம் அன்றோ

குடைந்து நீராடாதே
தாங்கள் ஆகையாலே உள்ளே கிடந்தாலும் தங்கள் சம்பந்தத்தாலே (விரஹ தாபத்தால் )கொதிக்கும் என்று அறிகிறிலள்

குள்ளக் குளிரக் –
அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம்
நிஸ் சேஷமாய் போம்படி –

குடைந்து –
கால ஷேப கூடத்திலே பிரவேசித்து

நீராடாதே-
பகவத் அனுபவத்தைப் பண்ணாதே –

———–

போதரிக் கண்ணினாய்
உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து
அவன் கண்ணாலே குமிழி நீர் உண்ணப் பண்ணாதே
நெடுங்கண் இள மான் இவள்
அணைத்து உலகமுடைய அரவிந்த லோசனன் அவன்
இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே இவர்கள் –
உன்னுடைய சௌந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அங்கன் இன்றிக்கே இழவுக்கு உடலாகா நின்றதோ –

பள்ளிக் கிடத்தியோ –
கிருஷ்ண ஸ்பர்சம் உடையதோர் படுக்கையை
மோந்து கொடு கிடக்கிறாயோ
விளைந்து கிடக்க உதிர் நெல் பொறுக்குகிறாயோ –

பள்ளிக் கிடத்தியோ
நாமும் அவனுமாய் அவன் முழுக்கூட்ட அவனோடே ஜலக்ரீடை பண்ணி அவன் மடியிலே சாயக் கடவ –
அத்தை விட்டு –
அவன் ஒருக்கால் கிடந்த படுக்கை என்று அத்தை மோந்து கொண்டு கிடக்கிறாயோ —
தவாஙகே சமு பாவிசம்-
(சீதா வார்த்தை -ஜலக்ரீடை பண்ணி உனது மடியில் படுத்து இருந்தேனே -என்று நினைத்து வருந்திய இடம் )
பார்த்த பார்த்த இடம் எங்கும் விளைந்து கிடவா நிற்க உஞ்ச விருத்தி பண்ணி ஜீவிப்பாரைப் போலே

பள்ளிக் கிடத்தியோ
பிள்ளைகள் தாங்களும் படுக்கையை விட்டுப் போகா நிற்க நீ படுக்கையிலே கிடப்பதே
அவன் கிடந்தது போன படுக்க என்று மோந்து கொண்டு கிடக்கிறாயோ
பயிர் விளைந்து கிடக்க கதிர் பொருக்கி (உஞ்ச விருத்தி செய்து )ஜீவிக்கிறாயோ

——–

பாவாய் நீ –
தனிக் கிடை கிடக்க வல்லள் அல்லையே நீ –

பாவாய் நீ
கிருஷ்ணனுடைய கண்ணுக்கு இலக்காம் படியான நிருபாதிக ஸ்திரீத்வத்தை யுடைய நீ
தனிக்கிடை கிடக்க வில்லையோ

பள்ளிக் கிடத்தியோ –
தனித்து குணானுபவத்தைப் பண்ணுகிறாயோ

பாவாய் நீ –
தனித்து குணாநுபவம் பண்ண வல்லையோ நீ

————-

நன்னாளால் –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாரும் இசைந்து
அவனும் நாமுமாய் ஜலக்ரீடை பண்ணி
அவன் மடியிலே சாயலாம் காலத்தைப் பெற்று வைத்து
படுக்கையை மோந்து கொடு கிடப்பதே –

நன்னாளால் —
மேல் வருகிற நாள் ராவணாதிகளைப் போலே பிரிக்கிற நாள் இறே

நன்னாளால்
காலம் பரிணாமி -என்னும் இடம் அறி கிலையோ-
அநந்தரம்
வ்யோஸ்யா ஹயதி வர்த்ததே -என்று சோகிக்கும் படி யன்றோ இருப்பது
(சீதா பிரிந்தாளே –இவை எல்லாம் கவலை இல்லை –
பிரிந்த பத்து மாதங்களை மீண்டும் பெற முடியாதே என்று சோகித்த ராமன் வார்த்தை )
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் உள்ளவர்களும் ஆறி இரா நின்றார்களோ –

அன்றிக்கே
நன்னாளால்
இனி சற்று போது கழிந்தால் எங்களைத் தான் உன் வாசலில் நிற்க ஓட்டுவார்களோ
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்கிற நாட்டார் இசைந்து
கிருஷ்ணன் முகத்திலே விழிக்கப் புகுகிற நாள் அன்றோ -ஆறி இருக்கிறது என்

நன்னாளால்-
அடிக் கழஞ்சு பெற்ற இந் நாளிலே-
இந் நாலு நாளும் போனவாறே பெண்களும் கிருஷ்ணனும் என்று புகுகிறார்கள் கிடாய்
இந் நாலு நாளும் போனால் மேலில் நாள்கள் ராவணனைப் போலே பிரிக்கும் நாள்கள் –

ஆண்டாள் திரு ஏகாதசி பட்டினி விட்டு பட்டரை தீர்த்தம் தாரும் என்ன–
இப் பெரிய திரு நாளிலே இது ஒரு திரு ஏகாதசி
எங்கனே தேடி எடுத்துக் கொண்டி கோள்-என்று அருளிச் செய்தார்

நன்னாளால்-
சத்வோத்தரமான காலம் நேர்பட்ட படி என் தான் –

———-

கள்ளந் தவிர்ந்து கலந்து –
கள்ளமாவது -தனியே கிருஷ்ண குண செஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை
அத்தை தவிர்ந்து எங்களோடு கலந்து
எங்களுக்கு உன்னைக் காட்டாதே மறைக்கை யாகிற
ஆத்மா அபஹாரத்தை தவிர்ந்து எங்களோடு கல -என்றுமாம்
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை ஷமை கொள்ளலாம்
சேஷித்வத்தை அபஹரித்தால் பொறுத்தோம் என்பார் இல்லை –
குற்றம் நின்றே போம் இத்தனை –

கலந்து -குள்ளக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம்-

கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்
கள்ளமாவது (அடியார்கள் உடன் சேராமல் )தனியே கிருஷ்ணன் குண சேஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை –
அத்தைத் தவிர்ந்து எங்களோடு கலந்து

கள்ளம் தவிர்ந்து
அவனோடே கலந்து யுடம்பு காண உகக்குமவர்கள் அன்றோ நாங்கள் –
எங்களுக்கு மறைக்கிறது என்
அந்த ஆத்ம அபஹாரத்தைத் தவிர்ந்து எங்களோடு கலக்கப் பார்

சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ள இக் குற்றம் அவன் பொறுக்கத் தீரும்
சேஷித்வத்தை அபஹரித்தால் சேஷியுடைய குற்றம் பொறுத்தோம் என்பார் இல்லையே
குற்றம் நின்று அனுபவித்தே போம் அத்தனை

(இந்த பெண் தானே இவளுக்கு சேஷி
பெருமாள் பக்தாநாம் -இருப்பை விட்டு தன்னைக் காட்டாமல் இருப்பதே அவனுக்கு கள்ளத்தனம்
அதே போல் இவள் இவர்களுக்கு காட்டாமல் இருப்பது கள்ளத்தனம் ஆகுமே )

ஆன் பின்பு எங்களுடைய குற்றம் போல் அன்று காண்
அவனோடே கலந்த உடம்பைக் காட்டாத உன்னுடைய குற்றம் –

கள்ளம் தவிர்ந்து கலந்து -குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -பாவாய் நீ நன்னாளால் –
பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம் –

கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–
சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று தத் வஸ்துவிலும்
ததீய வஸ்துவை அபஹரிக்கை யன்றோ பெரும் களவு

என்னுடை நாயகனே (5-4)-என்னும்படியே ஸ்வாமித்வத்தைச் சொல்லி
சேஷ பூதனுக்கு சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ளலாம்
சேஷிக்குத் தன் சேஷித்வத்தை அபஹரித்தால் க்ஷமை கொள்ளுகைக்குப் பொறுத்தோம் என்பாரும் இல்லையே
குற்றம் நின்றே போம் அத்தனை(உள்ளே இருப்பவள் தானே சேஷி இவர்களுக்கு )

(எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் -5- 4-3 –)

கலந்து குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -என்று கிரியை-
தஸ்ய உபவந ஷண்டேஷூ -இத்யாதி –

(மந்தாகினியில் ஜல க்ரீடை செய்து பெருமாள் மடியில் சீதை சாய்ந்து இருந்தது போல் நாங்களும் உன் மடியில் கிடைக்க வேண்டாமோ)

கள்ளந்தவிர்ந்து –
உன்னை எங்களுக்கு காட்டாமல் இருக்கிற-களவை விட்டு

கலந்து –
எங்களோடு ஒரு நீராக கலந்து
எங்கள் சத்தையை உண்டாக்காய்-

இராமபிரான் தந்தை சொற்கொண்டு வநவாஸஞ் சென்ற பின்னர் நந்திக்ராமத்தில் ராஜ்ய காரியங்களை
நிர்வஹித்துப் போந்த பரதாழ்வான், நாம் பொழுது விடிந்த பின்னர் ஸரயுவில் முழுக்கிடச் சென்றால்
நம்மைக் கண்ணுறுவாரனைவரும் “அண்ணரைக் காடேறத் துரத்தின பாவி போகின்றான்” என
விரல் சுடுக்கி வைவர் கொல், என்றஞ்சி அபரராத்ரியிற்றானே சரயுவிற்சென்று நீராடி வருவதுபோல்,
இவ்வாய்ச்சிகளும் சிலர் கண்பட யமுனையிற்சென்று நீராடில் ‘உபாயாநுஷ்டாநம் பண்ணி
ஸ்வரூப நிறத்தைக் குலைத்துக்கொள்ளும் பாவிகள் போகின்றனர்’ என்று கண்டாரனை வரும் வைவர் என அச்சமுற்று,
ஒருவர் கண்ணிலும் படாதபடி நீராடி வரவேணுமென்பார்,
“குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ?” எனப் பொடிகின்றனர்.

——————————————

கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் — கழிந்தமை
கூறு மொரு நாலும் மூன்றும் இரண்டும் வான்
ஏற பரமனைப் போய்ப் பாடு.

அறம், பொருள், இன்பம், வீடு என்கிற புருஷார்த்த சதுஷ்டய கோஷ்டிக்கும்;
அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு , ஞானிகளாகிய கோஷ்டி திரயத்துக்கும்;
முனிவர்களும், யோகிகளுமாகிற நித்ய, முக்த உபய கோஷ்டிக்கும்;
உண்ணும் சோறு பருகு நீர் எல்லாம் கண்ணன் – என்று ஆழ்வாருக்கு
திருக்கோளூர் எம்பெருமானும் என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினானான் என்று
காட்கரையப்பனுக்கு ஆழ்வாருமாக அனன்ய சாபீஷ்ட்டா கோஷ்டிக்கும் உத்தேஸ்யம் இதுவேயாய்
இங்குத்தையார்க்கு பகவத் ஸன்னதிக்கு (திருப்பாவை ) பாடிப் போகையே பிரயோஜனம்.
அங்குத்தையார்க்கு பகவத் முக்கோலாசகர கைங்கர்யனுவர்தனமாகிற – போய் (சாமகானம்) பாடுகையே பிரயோஜனம்.

————–

ஸ்வாபதேசம்.)

எட்டாம் பாட்டிலே –
போதரிக் கண்ணினாய் -என்கிறது
திருப் பாண் ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –

தொண்டர் அடிப் பொடியாரோபாதி –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
எண் கண்ணின் உள்ளன -என்றும் –
கொண்டல் வண்ணன் கோவலனாய் என்று தொடங்கி -எண் அமுதினைக் கண்ட கண்கள் என்கையாலே
போதரிக் கண்ணினாய் -என்கிறது திருப் பாண் ஆழ்வாரை –

மெய்ம்மையை மிக உணர்ந்து -என்று ததீய சேஷத்வ பர்யந்தமான ஞானம் இறே ஞானமாவது

ததீயருக்கு உகப்பாகப் பண்ணும் பகவத் அனுபவம் இறே இவரது –

ஸ்த்ரீத்வ பாவனையில் யுண்டான பக்தி பத்தும் பத்தாக
அடி தொடங்கி முடி அளவுமாய் மேலாய் இருக்கும் –

இப் பாட்டில்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்றத்தை –
இவரும் -சதிர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்
தலை பத்து உத்திர ஓட்டியோர் வெங்கணை உய்த்தவன் -என்றார் இறே –

———

இது ஆண்டாளுக்கு அடுத்த தொண்டரடிப்பொடி யாழ்வாரை யுணர்த்தும் பாசுரம்.

(போது அரிக் கண்ணினாய்!)
புஷ்பங்களை ஹரிப்பதிலேயே திருஷ்டியைச் செலுத்துபவரே! என்றபடி. புஷ்ப கைங்கரிய பராpறே இவ்வாழ்வார்.
“துளபத் தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி”
“தொடை யொத்த துளவமுங் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றவை காண்க.

பாவய்! என்ற விளியும் இவர்க்கு நன்கு பொருந்தும். பதி வ்ரதா சிரோமணியைப் பாவை யென்பர்.
இவ்வாழ்வார் அரங்கனொருவ னுக்கே வாழ்க்கைப்பட்டு வேறொரு திருப்பதி யெம்பெருமானை
நெஞ்சிலும் நினையாதவராதலால் கற்புச் சிறப்பு குறிக் கொள்ளத்தக்கது.
திருவேங்கடமுடையா னெதிரே ஒருவர் “பதின்மர் பாடும் பெருமாள்!” என்று ஏத்த,
அதைக்கேட்ட பெரிய கேள்வி ஜீயர், ‘சோழியன் கெடுத்தான் காணும்;
அந்த ஏற்றம் நம் பெருமாளுக்கில்லையே; நம்பெருமாளொருவர்க்கே’ என்றார் என்ற ஐதிஹ்யமும் இங்கு நினைக்கத் தக்கது.

(நன்னாளால்)
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்ற திருவாக்கிலேயே இச்சொல்லும் வருகின்றது.
தொண்டடிப்பொடிகள் திருவவதரித்தது மார்கழித் திங்களே யாதலால் நன்னாளென்னத் தட்டுண்டோ?

(கள்ளந் தவிர்ந்து)
‘சூதனாய்க் கள்வனாகி’ என்றும்;
‘கள்ளமே காதல் செய்து’ என்றும்;
‘கள்ளத்தேனானுந் தொண்டாய்’ என்றும் பலகாலும் தமது கள்ளத்தைப் பேசிக்கொண்டாரிவ்வாழ்பார்.
இவரது சரிதையிலும் பொன் வட்டில் விஷயமான கள்ளம் அடிபட்டுக் கிடக்கிறது.
அது தவிர்ந்து பகவத் பாகவத கோஷ்டியில் கலந்த படியை ஈற்றடி தெரிவிக்கின்றது.

பெரியாழ்வார் போலவே இவ்வாழ்வாரும் பெரும்பாலும் பூம்பொழில்வாஸ முடையவராதலால்
அவ்விடத்து அடையாளமாகப் புள்ளும் சிலம்பினகான் என்பது இப்பாட்டிலும் புகுந்தது.

(குள்ளக் குளிரவித்யாதி.) நீராட்டம் முதலிய நித்ய கர்மாநுஷடானங்களையும் தவிர்த்து
சிலகாலம் பள்ளிக்கிடந்தமை இவ்வாழ்வாரது சரிதையிற்காணத்தக்கது.

புள்ளின்வாய் கீண்டானை யென்று தொடங்கிக் கண்ணபிரானுடையவும் இராமபிரானுடையவும்
கீர்த்திமை பாடினபடி சொல்லுகிறது. இவ்வாழ்வர் திருமாலையின் முடிவில்
‘வள வெழுந்தவளமாட மதுரைமா நகரந்தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலை’ என்று
கண்ணபிரானுடைய கீர்த்திமையையும்,
திருப்பள்ளி யெழுச்சியில் ‘மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறலயோத்தி யெம்மரசே யரங்கத்தம்மா!’ என்று
இராமபிரானுடைய கீர்த்தியையும் பாடினமையுணர்க.

‘பிள்ளைகளெல்லாரும்’ என்றது ஆண்டாள் தனக்கு முந்தின ஆழ்வார்களெல்லாரையும் சொன்னபடி.

———————————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading