ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

ஸ்ரீ மன் நாதமுனிகள் வகுத்து அருளினை அடைவிலே
மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் எட்டாவது பிரபந்தமாக அமைந்தது இது –

——————-

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன்

—————–

அவதாரிகை –

வென்றியே வேண்டி வீழ் பொருட்க்கு இரங்கி வேற் கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் -என்றும்
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன் -என்றும்
தாமே அருளிச் செய்தபடி
விஷய பிரவணராய் திரிந்து கொண்டு இருந்த இவ்வாழ்வார்

தம்மை எம்பெருமான் திருத்திப் பணி கொள்ளத் திரு உள்ளம் பற்றி விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை
சாஸ்த்ரங்களைக் காட்டித் திருத்த முடியாது –
நம் அழகைக் காட்டியே மீட்க வேணும் என்று கொண்டு தன் அழகைக் காட்டிக் கொடுக்க

ஆழ்வாரும் அதைக் கண்டு ஈடுபட்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -அடியேன் நான் பின்னும்
உன் சேவடி அன்றி நயவேன் -என்னும்படி அவகாஹித்தார் –

இவர் இப்படி தன் பக்கல் அவகாஹிக்கக் கண்ட எம்பெருமான் –
இப்போது இவருக்கு நம் இடத்து உண்டான பற்று
மற்ற விஷயங்களை போல் அல்லாமல் சம்பந்த உணர்ச்சியை முன்னிட்டுப் பிறந்ததாக வேணும் –
இல்லையேல் இப்பற்று இவருக்கு நிலை நிற்காது ஒழியினும் ஒழியும் என்று எண்ணி

எல்லா பொருள்களையும் விளக்குவதான திரு மந்திரத்தையும்
தனது ஸுசீல்யம் முதலிய திருக் குணங்களையும் திரு மந்த்ரார்த்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும்
ஆழ்வாருக்கு காட்டிக் கொடுக்க –

அவரும் வாடினேன் -வாடி -என்று தொடங்கி
எம்பெருமான் உகந்து அருளின இடமே பரம ப்ராப்யம் என்று அனுபவித்தார் –

இங்கனம் அனுபவித்த ஆழ்வாருக்கு இவ்வனுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக
இவரைத் திரு நாட்டில் கொண்டு போக வேணும்
எனக் கருதிய எம்பெருமான் இவர்க்கு ஜிஹாசை பிறக்கும்படி அதனுடைய தண்மையை அறிவிக்க

அறிந்தவர் அஞ்சி நடுங்கி -மாற்றம் உள -என்னும் திரு மொழியிலே –
இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல் -என்றும் –
வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போலே -என்றும்
தமது அச்சத்துக்கு பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிக் கதறினார் –

இப்படி இவர் கதறிக் கதறி –
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -என்றும்
அந்தோ அருளாய் அடியேற்கு உன் அருளே -என்றும் -சொல்லி வேண்டின இடத்தும்
சிறு குழந்தைகள் பசி பசி என்று கதறி அழுதாலும்
அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாம் அளவும்
சோறிடாத தாயைப் போலே எம்பெருமான் –
இவருக்கு முற்ற முதிர்ந்த பரம பக்தி பிறக்கும் அளவும் நாம் முகம் காட்டுவோம் அல்லோம்-
என்று உதாசீனனாய் இருக்க –

ஒரு க்ஷணமும் அவனைப் பிரிந்து இருக்க மாட்டாத ஆழ்வார் மிகுந்த தாஹம் கொண்டவர்கள்
நீரிலே விழுந்து -நீரைக் குடிப்பதும்
நீரை வாரி மேல் இறைத்துக் கொள்வதும் செய்யுமா போலே அவ்வெம்பெருமானை
வாயாலே பேசியும் –
தலையாலே வணங்கியும் –
நெஞ்சால் நினைத்தும் -தரிக்கப் பார்த்தார் –
திருக் குறும் தாண்டகம் என்னும் திவ்ய பிரபந்தத்தில் –

தாஹம் அளவற்றதாய் இருக்க சிறிது குடித்த தண்ணீர் திருப்தியை உண்டு பண்ணாமல்
மேலும் விஞ்சிய விடாயை பிறப்பிக்குமா போலே
இவர் திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம்
பழைய அபி நிவேசத்தை கிளப்பி பெரிய ஆர்த்தியை உண்டாக்கவே –
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ –என்று
ஆர்த்தராய் சரணம் புகுகிறார் –
இத் திரு வெழு கூற்று இருக்கை -என்னும் பிரபந்தத்தில் –

——————————————————–

ஆசு கவி –
அருமைப் பட்டு சொற்களை சேர்த்து மஹாப் பிரயாசமாகப் பாடுகை இன்றிக்கே –
பல நிபந்தனைகள் உடன் கூடிய பாடல்களையும் -விரைவில் பரவசமாக பாடுதல்-

மதுரகவி –
சொற்சுவை பொருள்சுவை விளங்க பல வகை அலங்காரம் பொலிய பாடுவது

விஸ்தார கவி –
கலி வெண்பா முதலியவற்றால் விஸ்தரித்து பாடுவது

சித்திர கவி –
சக்ர பந்தம் -பத்ம பந்தம் -முரஜ பந்தம் -நாக பந்தம் -ரத பந்தம் –

எழு கூற்று –
முதல் கூறு மூன்று அறைகள்
இரண்டாம் கூறு ஐந்து அறைகள்
மூன்றாம் கூறு ஏழு அறைகள்
நான்காம் கூறு ஒன்பது அறைகள்
ஐந்தாம் கூறு 11 அறைகள்
ஆறாம் கூறு 13 அறைகள்
ஏழாம் கூறு 13 அறைகள் –

இதே போலே மேலும் கீழும் இரண்டு பாகங்கள் கொண்டதே –

அர்த்த சக்தியாலும்
சப்த சக்தியாலும் நினைப்பூட்டும் சொற்கள் கொண்டு நிறைக்க வேணுமே

ஒரு பேர் உந்தி இருமலர்த் தவசில் -இரு -இரண்டு பெருமை என்ற பொருள்களில் –

ஒன்றிய -அஞ்சிறை -நால் வாய் -இரு நீர் -ஓன்று -ஆறு பொதி –போன்ற இடங்கள் போலே
அர்த்த சப்த சக்தியாலும் காட்டலாம் –

எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றை விசதமாக அனுபவித்து –
அவ்வனுபவம் உள் அடங்காமல் வழிந்து புறப்பட்ட ஸ்ரீ ஸூ க்திகளிலே –
இது போன்றவை அமைந்தவை –

ஸ்ரீ வால்மீகி பகவான் -வாயினின்றும் வெளி வந்த
மா நிஷாத ப்ரதிஷ்டாம் -நான் முகன் பிரசாதத்தால் லக்ஷணம் குறை இன்றி அமைந்தால் போலே –
இதுவும் ஸ்வ பிரயத்தன பூர்வகமான பிரபந்தம் இல்லாமல்
ஸ்ரீ யபதி திருவருளால் அவதரித்த பிரபந்தம் -என்றால் சொல்ல வேண்டாவே –

—————————————–——

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,

மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபெ ¡தி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,

குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே.

—————

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

 

பதவுரை

ஒரு

விலக்ஷணமாய்
பேர்

பெருமை பொருந்திய
உந்தி

திருநாபியிலுண்டான
இரு

பெரிதான
மலர்

(தாமரைப்) பூவாகிற
தவிசில்

ஆஸனத்தின் மீது
ஒருமுறை

ஒருகால்
அயனை

பிரமனை
ஈன்றனை

படைத்தருளினாய்

***- உலகங்களடங்கலும் பிரளயங் கொண்டபின் மீண்டும் உலகங்களைப் படைக்க எம்பெருமான் தனது திரு நாபிக் கமலத்தில் நான்முகக் கடவுளை படைத்து அவனுக்கு வேதங்களை பழையபடியே ஓதுவித்து அப் பிரமனைக் கொண்டு முன்போலவே எல்லா வுலகங்களையும் எடைப்பதாக நூல்கள் கூறும். “உய்ய வுலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை“ என்றார் பெரியாழ்வார்.

உத்பத்திக்கு ஹேதுவான நீயே ரக்ஷணமும் பண்ண வேண்டாவோ? என்கைக்காக ஆழ்வார் முதலிலே இதனை அருளிச் செய்தாரென்க. தவிசு – ஆசனம்.

———

கீழ் வாக்கியத்தில் உலகங்களைப் படைத்தமை சொன்னார், படைத்த உலகத்திற்குத் தீங்கு சேருங்காலத்தில் படாதனபட்டு ரக்ஷிக்கிறபடியைச் சொல்லுகிறார் இதில். குளவிக் கூடுபோலே ராக்ஷ்ஸர்களுக்குக் கூடாகிய இலங்கயை நீறுபடுத்தினபடியைச் சொல்லுகிறார்.

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,

பதவுரை

ஒரு முறை

ஸ்ரீராமனாய் அவதரித்த ஒரு காலத்தில்,
இரு சுடர்

சந்திர ஸூர்யர்கள்
மீதினில் இயங்கா

(அச்சத்தினால்) மேலே ஸஞ்சரிக்க வொண்ணாததும்
மும் மதிள்

நீர்க் கோட்டை, மலைக் கோட்டை வனக் கோட்டை என்கிற மூன்று துர்க்கங்களை யுடையதுமான
இலங்கை

லங்கா புரியை
இரு கால் வளைய

இரண்டு நுனியும்
ஒரு சிலை

ஒப்பற்ற சார்ங்க வில்லில்
ஒன்றிய ஈர் எயிறு

பொருந்தியதும் இரண்டு பற்களை யுடையதும்
அழல் வாய்

நெருப்பைக் கக்குகிற வாயை யுடையதுமான
வாளியின்

அம்பினால்
அட்டனை

நீறாக்கினாய்

தேவதைகள் அனைவரும் இராவணனுக்கு அஞ்சி நடுங்கி மறைந்து வாழ்ந்தனராதலால் ஸூர்ய சந்திரர்களும் இலங்கையின் மேலே ஸஞ்சரிக்க மாட்டார்களாம் ஆகவே, இருசுடர் மீதினிலியங்காத இலங்கையாயிற்று.

“பகலவன் மீதியங்காத இலங்கை“ என்றார் பெரிய திருமொழியிலும்.

இருசுடர் –இரண்டு சுடர்ப்பொருள்கள், அவையாவன சந்திர ஸூர்யர்கள்

மீதினில் – இலங்கையின்மீது, இயங்குதல் – ஸஞ்சாரம் செய்தல். இவ் விசேஷணத்தால், இராவணன் தேவர்களனைவர்க்கும் மிருத்யுவாயிருந்தானென்பது விளங்கும்.

மும்மதிள் – மலையரண் நீரரண் காட்டரண் என்னும் முக்கோட்டைகளை யுடையதாம் இலங்கை. இராவணனுடைய ஒப்புயர்வற்ற செல்வத்தைக்கண்டு அனுமானும் அளவற்ற ஆச்சரியமடைந்தானென்பர் வான்மீகி முனிவர்.

இப்படிப்பட்ட இலங்கையை வாளியின் அட்டனை என்று அந்வயம்

வாளியாவது அம்பு. அஃது எப்படிப்பட்டதெனில் அதன் கொடுமை தோற்ற மூன்று விசேஷணங்களிடுகிறார். இருகால் வளைய ஒரு சிலை யொன்றியதும், ஈரெயிற்றதும், அழல்வாயதுமாம் அவ்வாளி.

ஸ்ரீ சார்ங்கமென்னும் இராமபிரானதுவில் இரண்டு கோடியும் வளைந்து நிற்குமென்றது இயல்பு நவிற்சி, ஸ்வபாவோக்தி. அந்த சார்ங்கத்திலே தொடுக்கப்பட்டதாம்.

ஈரெயிறு – ஈர்கின்ற எயிற்றையுடையது என்றுமாம். ஈர்தல் – கொல்லுதல் அட்டனை – முன்னிலை யொருமை வினைமுற்று. அடுதல் – தஹித்தல்.

—————-

அம்பாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்தார் கீழ், அழகாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்கிறார் இதில்.

மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

 

பதவுரை

ஒரு முறை

ஒருகாலத்தில்
முப்புரி நூலொடு

யஜ்ஞோபவீதத்தோடு கூட
மான் உரி

க்ருஷ்ணாஜிநமும்
இலங்கு

விளங்கா நின்ற
மார்வினின்

திருமார்பையுடைய
இருபிறப்பு ஒரு மாண்ஆகி

ஒருப்ராஹ்மண ப்ரஹ்மசாரியாகி

(மாவிலியிடம் சென்று)

நானிலம்

பூமியிலே
மூ அடி

மூன்றடி நிலத்தை
வேண்டி

யாசித்து
ஈர் அடி

இரண்டு திருவடிகளாலே
மூ உலகு

மூன்று லோகங்களை
அளந்தனை

அளந்துகொண்டாய்

இந்திரனுடைய குறையை நீக்கவேண்டி எம்பெருமான் குறிய மாணுருவாகி மாவலிபக்கல் சென்று மூவடி வேண்டிப் பெற்று உலகங்களையெல்லாம் அளந்து மாவலியைப் பாதாளத்தில் அழுத்தின வரலாறு ப்ரஸித்தமேயாம்.

நானிலம் – நான்காகிய நிலங்களையுடையதெனப் பூமிக்குக் காரணப்பெயர், நால்வகை நிலங்களாவன – முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்பன. காடும் காடுசார்ந்த இடமும் முல்லையாம், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியாம், நாடும் நாடுசார்ந்த இடமும் மருதமாம், கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தலாம், மற்றொன்றாகிய பாலைநிலம் பிராணிஸஞ்சாரத்திற்கு உரியதன்றென்று இங்கே விலக்கப்பட்டது. அது நீரும் நிழலுமில்லாத கொடு நிலம். பாலைக்குத் தனியே நிலமில்லையென்பதும், நால்வகை நிலங்களும் தத்தம் தன்மை கெட்ட விடத்தே பாலையாமென்பதும் சில ஆசிரியர் கொள்கை.

முப்புரிநூல் –ப்ரஹ்மசாரிகள் பூணும் யஜ்ஞோபவீதம் மூன்று புரியை யுடையதாம். (அதாவது – மூன்று வடமுடையதாம்) மானுரி – அந்தப்பூணுநூலில் க்ருஷ்ணாஜினத்தை முடிந்து அணிதல் மரபு. “மான் கொண்ட தோல் மார்பின் மாணியாய்“ என்றார் பெரிய திருமொழியிலும். இருபிறப்பு – ‘த்விஜ‘ என்றும், ‘த்விஜந்மா என்றும், த்விஜாதி என்றும் வடமொழியில் பார்ப்பனர் வழங்கப்படுவர். “ஜந்மநா ஜாயதே சூத்ர, கர்மணா ஜாயதே த்விஜ“ (யோனிபிற்பிறப்பது ஒரு பிறவி, பிறகு வேத மோதுதல் முதலிய கருமங்களால் பிறப்பது இரண்டாம் பிறவி) என்று சொல்லப்பட்டுள்ளமை காண்க.

ஈரடி மூவுலகளந்தனை – நிலவுலகத்தையும் அதற்குக் கீழ்ப்பட்ட பாதாள லோகத்தையும் ஒரு திருவடியாலும் மேலுலகத்தை மற்றொரு திருவடியாலும் ஆக ஈரடியாலே மூவுலகளந்தானென்க

————

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை

ஒரு நாள்

ஒரு காலத்தில்
கால் திசை நடுங்க

எங்குமுள்ள ஜனங்களும் நடுங்கும்படியாக (மஹத்தான கோபவேசத்தை ஏறிட்டுக்கொண்டு)
நால் வாய்

தொங்குகின்ற வாயையும்
மும்மதம்

மூவிடங்களில் மத நீர்ப் பெருக்கையும்
இரு செவி

இரண்டு காதுகளையும் உடைய
அம் சிறை பறவை ஏறி

அழகிய சிறகையுடைய பெரிய திருவடியின்மீது ஏறிக் கொண்டு
இரு நீர் மடுவுள்

ஆழமான நீரை யுடைய மடுவின் (கரையிலே எழுந்தருளி)
ஒரு தனி வேழத்து

பரம விலக்ஷணனான கஜேந்திராழ்வானுடைய
அரந்தையை

துக்கத்தை
தீர்த்தனை

நீக்கி யருளினாய்

***- எம்பெருமானை ஆராதிப்பதற்காகத் தாமரைப் பூப் பறிக்கப் போன பொய்கையின் கண் முதலைவாயிலகப்பட்ட ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய கூக்குரலைக்கேட்டு எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தினின்று கருடாரூடனாய் ஓடிவந்து முதலையைக் கொன்று ஆனையைக் காத்தருளின கதை உலகப் பிரஸித்தம்.

கஜேந்திரன் ‘ஆதிமூலமே!‘ என்று பெருமிடறுசெய்து கூவினைக் கேட்டவுடனே ஸ்ரீவைகுண்ட நிலையனான எம்பெருமான் திடுக்கிட்டு, பிராட்டிமாரையும் கையுதறி அரைகுலையத் தலைகுலையப் பெரிய திருவடியின்மீதேறி மநோ வேகத்தினும் மிக்க வேகமாக ஓடிவந்த விசையைக் கண்டவர்களெல்லாரும் இன்ன செய்தியென்றறியாமல் ‘இன்று ஏதோ பிரளயம் விளையப்போகிறது‘ என்று அஞ்சி நடுங்கினரென்கிறார் நால்திசை நடுங்க என்பதனால்.

அம்சிறை-களுடன் எம்பெருமானது திருவுள்ளத்தை யறிந்து வெகுவேகந் தோன்றச் சிறகை துறைந்து கொண்டு வந்தமை பற்றி அஞ்சிறை என்று அந்தச் சிறகைப் பாராட்டிக் கூறுகின்றரென்க.

நால்வாய் – நாலுதல் – தொங்குதல், யானைக்கு வாய் தொங்குதல் இயல்பு. மும்மதம் – இரண்டு கன்னங்களிலும் குறியிலும் ஆக மூவிடங்களில் யானைக்கு மதப்புனல் சோரும். இருசெவி – இரு என்று பெருமையைச் சொல்லிற்றாய், பெரிய காதுகளையுடையது என்றுமாம். யானைக்கு வாய்தொங்குதலும் மத நீர் பெருகுதலும் காதுகள் பெரிதாயிருத்தலும் அதிசயமாக விஸயமன்றே,

இதைச்சொல்லி வருணிப்பதற்கு ப்ரயோஜனம் என்னெனில் – ஒரு குழந்தை கிணற்றில் விழுந்து போக, அதனையெடுத்துக் கரையிலேபோட்டவர்கள் “அந்தொ! இதொரு கையழகும் இதொரு தலையழகும் இதொரு முகவழகும் என்னே!“ என்று சொல்லி மாய்ந்து போவார்களன்றோ, அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின் அதனுடைய வாயும் செவியும் முதலிய அவயவங்களின் அழகிலே ஆழ்ந்து கரைந்தமைதோற்ற அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் ஆனையை வருணிக்கின்றாரென்க.

இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதை அனுபவிக்கத்தக்கது. – “நால்வாய் மும்மதத் திருசேவி… என்றாற் போலே சொல்லுவதுக்குக் கருத்டிதன்னென்னில், ப்ரஜை கிணற்றிலே விழுந்தால் ‘காதுங் கண்டவாளியும் காலும் தலையும் வடிவும் இருந்தபடி காண்!? என்பாரைப் போலே இடர்ப்பட்ட இதினுடைய அவயங்கள் அவனுக்கு ஆகர்ஷகமாம்படியாலே சொல்லுகிறது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க.

ஒரு தனி வேழம் – பகவத்பக்தியில் ஒப்பற்ற கஜராஜன். அரந்தை – துன்பம்

———–

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,

பதவுரை

முத் தீ

மூவகை அக்நிகளையும்
நால் மறை

நால்வகை வேதங்களையும்
ஐவகை வேள்வி

ஐவகை யஜ்ஞங்களையும்
அறு தொழில்

ஆறு வகைக் கருமங்களையும் உடையரான
அந்தணர் வணங்கும் தன்மையை

ப்ராஹ்மணர்களால் வணங்கப்படுந் தன்மையை உடையனாயிரா நின்றாய்

முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை த்ரேதாக்நிகளாம். நான் மறைகளாவன – ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. இவை வேத வ்யாஸரால் பிரிக்கப்பட்ட பிரிவின் பெயர்களாதலால், அதற்கு முன்னிருந்த தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் என்ற நான்கும் என்று கொள்ளுதல் தகும்.

ஐவகை வேள்வி –ப்ரஹ்மயஜ்ஞம் தேவயஜ்ஞம் பித்ருயஜ்ஞம் மநுஷ்யயஜ்ஞம் என்பன பஞ்சமஹாயஜ்ஞங்கள். ப்ரஹ்மயஜ்ஞமாவது – “ப்ரஹ்மயஜ்ஞப்ரசநம்“ என்று தினப்படியாக வேதத்தில் ஒவ்வொரு ப்ரச்நம் ஓதுவது. வேயஜ்ஞமாவது அக்நிஹோத்ரம்செய்வது பூதயஜ்ஞமென்பது பிராணிகட்குப்பலியிடுவது. பித்ருயஜ்ஞமென்பது பித்ருக்களை உத்தேசித்துத் தர்ப்பணம் விடுவது. மநுஷ்யயஜ்ஞமென்பது விருந்தாளிகளுக்கு உணவு முதலியன கொடுப்பது.

அறு தொழில் – தான் வேதமோதுதல், பிற்களுக்கு ஓதுவித்தல், தான் யாகஞ் செய்தல், பிறர்க்கு யாகஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம் வாங்கிக் கொள்ளுதல் என்பன ஆறு கருமங்களாம். ஆக. த்ரேதாக்நிகளையும் நான்கு வேதங்களையும் பஞ்ச மஹா யஜ்ஞங்களையும் ஷட்கருமங்களையும் நிரூபகங்களாகவுடைய வேதியர்களாலே ஸேவிக்கப்படுபவன் எம்பெருமான் என்றதாயிற்று

———–

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

பதவுரை

ஐம்புலன்

பஞ்சேந்திரியங்களை
அகத்தினுள் செறுத்து

(வெளியில் பட்டி மேயவொண்ணாதபடி) உள்ளேயடக்கி
நான்கு உடன் அடக்கி

உண்ணுதல், உறங்குதல், அஞ்சுதல், விஷய போகஞ்செய்தல் என்கிற நான்கையுங் கூட இல்லை செய்து
முக் குணத்து

ஸத்வம், ரஜஸ் தமஸ் என்கிற மூன்று குணங்களில்
இரண்டு அவை

ரஜஸ்ஸையும் தமஸ்ஸையும்
அகற்றி

விலக்கி
ஒன்றினில்

ஸத்வ குண மொன்றிலேயே
ஒன்றி நின்று

பொருந்தி யிருந்து
ஆங்கு

அப்படிப்பட்ட நிலைமையின் பலனாக
இரு பிறப்பு அறுப்போர்

நீண்ட ஸம்ஸார துக்கத்தை நீக்கிக் கொள்ள வல்ல மகான்களாலே
அறியும் தன்மையை

அறியத்தக்க ஸ்வபாவத்தை உடையையா யிராநின்றாய்.

ஜிதேந்திரியர்களாய் ஸாத்விகர்களான யோகிகளால் யோகமுறைமையில் ஸாக்ஷாத்கரிக்கத்தக்கவன் எம்பெருமான் என்கிறது. ஐம்புலன்களாவன – மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்கள், இவற்றை அகத்தினுள் செறுத்தலாவது – சப்தாதி விஷயங்களில் மூட்டாமல் அந்த ரங்கனான பகவானிடத்திலே மூட்டுகை.

நான்கு உடனடக்கி –“ஆஹா நித்ரா பய மைதுநாநி ஸாமாந்ய மேதத் பசுபிர் நராணாம்“ என்றபடி உணவு உட்கொள்ளுதல், கண்ணுறங்குதல், எந்த வேளையில் என்ன தீங்கு நேரிடுமோவென்று பயப்பட்டுக்கொண்டிருத்தல், விஷய போகங்களை யநுபவித்தல் என்கிற இந்நான்கும் நாற்கால் விலங்குகட்கும் பொதுவாகையாலே இவற்றைத் தள்ளி ஞானத்தையே கடைபிடித்து என்றதாயிற்று.

முக்குணத்து இரண்டவை அகற்றி – ஸ்தவகுணமென்றும் ரஜோகுணமென்றும் தமோகுணமென்றும் சொல்லப்படுகிற மூன்று குணங்களில் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் அந்யதாஜ்ஞான விபரீதஜ்ஞானங்களுக்குக் காரணமாதலால் அவற்றையொழித்து, தத்துவ ஞானத்துக்குக் காரணமாகிய ஸத்வகுணத்தைடையராகி என்றபடி.

ஆக இந்திரியங்களைப்பட்டி மேயாமலடக்கி, ஆஹார நித்ரா பய மைதுநங்களை விலக்கி ஸத்வகுண நிஷ்டராயிருந்து யோகுபுரிந்து அந்த யோகத்தின் பலனாக ஸம்ஸாரப் படுகுழியைப் புல் மூடச்செய்து நற்கதி நண்ணுகின்ற மஹா யோகிகளால் அறியக்கூடிய ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையவன் எம்பெருமான் என்றதாயிற்று

நான்குடனடக்கி என்பதற்கு – மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்ற நான்கையும் அடக்கி என்றும், பொய் சொல்லுதல் கோட்சொல்லுதல் கடுஞ்சொல் சொல்லுதல் பயனற்ற சொல் சொல்லுதல் என்ற நான்கு துர்பாஷணங்களையும் விலக்கி என்றும் பொருள் கொள்ளுதலும் ஒக்கும்.

இரு பிறப்பு என்றது – இருமை பெருமையாய் அநாதியாகையாலே நீண்டதாயுள்ள ஸம்ஸாரம் என்றபடி. அன்றியே, புண்யபாவங்களாகிற இருகருமங்களாலே வரும் ஸம்ஸாரம் என்றுமாம் தன்மையை – “தன்மையன்“ என்பன் முன்னிலை.

————–

முக் கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறு பொதி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

 

பதவுரை

முக்கண்

மூன்று கண்களையும்
நால் தோள்

நான்கு தோள்களையும்
ஐவாய் அரவோடு

ஐந்து வாயையுமுடைய பாம்பையும்
ஆறு பொதி சடையோன்

ஜடையையும் உடையனான ருத்ரனுக்கு
அறிவு அரு

அறியக் கூடாத
தன்மை

ஸ்வபாவத்தை யுடையனாயிருக்கையாகிற
பெருமையுள்

பெருமையிலே
நின்றனை

இரா நின்றாய்

எவ்வளவு மேன்மையுடையரா யிருந்தாலும் ஸ்வப்ரயத்நத்தாலே எம்பெருமனைக் கண்டுவிட வேணுமென்று முயன்றால் அவர்கட்கு பகவத் விஷயம் அறியக்கூடியதல்ல என்று சாஸ்த்ரங்கள் கூறும் பரமசிவன் “நாம் முக்கண்ணுடையோம், அரவம் பூண்டபெருமையுடையோம், கங்கைநீர் தரித்த வலிமையுடையோம்“ என்று மேனாணித்திருந்தாலும் “பெண்ணுவாஞ் சடையினானும் பிரமனு முன்னைக் காண்பான் எண்ணிலா வூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப“ (திருமாலை) என்றபடி அவனுக்கு பகவானுடைய ஸாக்ஷாத்காரம் வாய்க்கவில்லை.

ஐவாயரவோடு – ஒரு காலத்தில் சிவபிரான் தன்னை மதியாத தாருக வனத்து முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களது மனைவிமார்களின் கற்புநிலையைப் பரிசோதிக்கவும் கருதித் தான் ஒரு விடனாக வடிவங்கொண்டு அவரில்லந்தோறும் டிசன்று பிக்ஷாடநஞ் செய்து, தன்னை நோக்கிக் காதல் கொண்ட அம்முனி பத்நிகளின் கற்புநிலையைக் கெடச் செய்ய, அதுகண்டு பொறாமற் கோபம் மூண்ட அம்முனிவர்கள் அபிசாரயாகமொன்று செய்து அவ்வோமத்தீயினின்று எழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்கொண்டு வரும்படி ஏவ, சிவபெருமான். தன்மேற்பொங்கிவந்த நாகங்களை ஆபரணங்களாகவும் பூதங்களைத் தனது கணங்களாகவுங் கொண்டு மானைக் கையிலேந்திப் புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற் காலாலூன்றி வெண்டலையைக் கையாற் பற்றி சிரமே லணிந்து இங்ஙனமே அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டனன்  என்ற வரலாறு உணர்க. “நாகாபரணன்“ என்று சிவபிரானுக்கு ஒரு பெர் வழங்கிவருதலும் இவ்வரலாறு பற்றியேயென்க.

ஆறுபொதி சடையோன் என்றவிடத்து அறியவேண்டிய கதை. எம்பெருமான் உலகளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன்கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாச கங்கையை, ஸூர்யகுலத்துப் பகீரத சக்ரவர்த்தி கபிலமுனிவனது கண்ணின் கோபத்திற்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனது மூதாதையான ஸகரபுத்ரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலம் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொண்டு வருகையில், அவனது வேண்டுகோளாலும் சிவபிரான் தான் புனிதனாக வேண்டிய அபிநிவேத்தாலும் அந்நதியை முடியின்மேலேற்றுச் சிறிது சிறிதாகப் பூமியில் விட்டனன் என்பதாம்.

ஆக இவ்வகைகளாலே பெருமிடுக்கையுடையனாக ப்ரஸித்தனான சிவபிரானாலும் ஸ்வப்ரயத்நத்தாலே அறிய வொண்ணாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடையனாயிருப்பன் எம்பெருமான் என்றதாயிற்று.

தன்மைப் பெருமையுள் நின்றனை என்றது இப்படிப்பட்ட (சிவனாலுமறியப் போகாத தன்மையுடையனாயிருக்கையாகிற) பெருமை பெருந்தியவன் என்றவாறு நின்றனை – முன்னிலை பெருமை வினைமுற்று.

————-

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

பதவுரை

ஏழ் உலகு

உலகங்களையெல்லாம்
எயிற்றினில் கொண்டனை

(ஸ்ரீவராஹமாகிக் கோட்டில் எடுத்துக் கொண்டாய்,
கூறிய அறு சுவை பயனும் ஆயின

ஆறுவகை ரஸங்களாகிற ப்ரயோஜநமும் நீயே யாயிரா நின்றாய்
அம் கையுள்

அழகிய திருக்கையில்
சுடர் விடும் ஐ படை

ஒளிவிடா நின்ற பஞ்சாயுதங்களும்
அமர்ந்தனை

பொருந்தப் பெற்றாய்
சுந்தரம் நால் தோள்

அழகிய நான்கு திருத் தோள்களையுடையனாய்
முந்நீர் வண்ண

கடல் போன்ற வுடிவையுமுடைனான எம்பெருமானே!
நின் ஈர் அடி

உனது உபய பாதங்களை ஆழ்ந்த அன்புடன்
ஒன்றிய மனத்தால்

ஆழ்ந்த அன்புடன்
ஒருமதி முகத்து மங்கையர் இருவரும்

விலக்ஷணனான சந்திரன் போன்ற திரு முகத்தை யுடைய திருமடந்தை மண்மடந்தையிருவரும்
மலர் அன அம் கையின்

மலர்போல் ஸுகுமாரமான (தங்களது) அழகிய கைகளாலே
முப்பொழுதும்

எப்போதும்
வருட

பிடிக்க
அறி துயில் அமர்ந்தனை

(ஆநந்தமாக) யோக நித்திரையில் எழுந்தருளி யிராநின்றாய்

 

(ஏழுலகு இத்யாதி.) ஹிரண்யகசிபுவின் உடன் பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்ற போது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹா வராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது நோட்டினாற் குத்திக் கொன்று பாதாள லோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற் குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின்ன் என்ற வரலாறு இதில் அடங்கியது.

இப்பொழுது நடக்கிற ச்வேத வராஹ கல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளய ஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து ஸ்ரீவரஹாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தன்னென்ற வரலாறும் உண்டு. அதுவும் இங்கு அது ஸந்திக்கப்பட்டதாகலாம்.

ஏழுலகு என்றவிடத்துள்ள ஏழ் என்னுஞ் சொல் ஏழான எண்ணைக் குறிக்காமல் “ஸகலமான“ என்னும் பொருளைக் குறிக்கு மென்க. பூமண்டலம் முழுவதையும் என்றபடி. அன்றியே, ஸப்தத்வீபங் (ஏழு தீவு) களையுடைய பூமண்டலம் என்னவுமாம். அவையாவன – நாவலந்தீவு, இறலித்தீவு, குசையின்தீவு, கிரவுஞ்சதீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு, புட்கரத்தீவு என ஏழாம்.

கூறிய அறுசுவைப் பயனுமாயின – உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு என அறுசுவாயாம். இவை நிரம்பிய உணவு போலே பரம போக்யன் எம்பெருமான் என்றவாறு. “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன்“ என்று கொண்டிருப்பார்க்கு அநுபவ விஷயமாம் இது. “அச்சுவைக் கட்டி யென்கோ அறுசுவையடிசிலென்கோ“ என்றார் நம்மாழ்வாரும்.

முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூவகை நீரையும் உடையது கடல். கடல்வண்ணனே! என்றபடி.

(நன் ஈரடி…அமர்ந்தனை) வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி என்றும் “***“ (பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம்) என்றும் சொல்லுகிறபடியே – திங்கள்போல் முகத்தரான திருமடந்தை மணமடந்தை யிருவரும் தமது குஸும ஸுகுமாரமான திருக் கைகளாலே திருவடிகளைப் பிடிக்க, ஆனந்தமாக யோக நித்திரை செய்தருள பவனே! என்கை.

மலரன – மலரன்ன, மலர் போன்ற, அறிதுயில் – உறங்குவான் போல் யோகுசெய்யுந் துயில் அமர்ந்தனை – முன்னிலை வினைமுற்று.

———–

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,

பதவுரை

நெறிமுறை

சாஸ்திர முறைப்படியே யுள்ள
நால்வகை வருணமும் ஆயினை

நான்கு ஜாதிகளின் மரியாதைக்கும் நிர்வாஹகனாயிராநின்றாய்
மே தரும் ஐ பெரு பூதமும் நீயே

ஆன்மாக்கள் பொருந்தத் தக்க பஞ்ச மஹா பூதங்களுக்கும் ப்ரவர்த்தகனாயிரா நின்றாய்
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்

வண்டுகள் (மது பானத்திற்காக வந்து மொய்ந்து) ரீங்காரம் செய்யப்பெற்ற கூந்தலை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
ஏழ் விடை

ஏழு ரிஷபங்களையும்
அடங்க செற்றினை அறு வகை சமயமும் அறிவு அரு

வலியடக்கி நெரித்தாய், பாஹ்ய குத்ருஷ்டி மதஸ்தர்களாலே அறிந்துகொள்ளக்கூடாத
நிலையினை

நிலைமையை யுடையனாயிராநின்றாய்,
ஐம்பால் ஓதியை

மென்மை குளிர்த்தி நறுமணம் கருமை நெடுமை என்னும் ஐந்து லக்ஷணங்களமைந்த கூந்தலையுடையளான பிராட்டியை
ஆகத்து இருத்தினை

திருமார்பிலே தரித்துக் கொண்டிராநின்றாய்,
அறம் முதல் நான்கு அவை ஆய்

தருமம் முதலிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவனாய்
மூன்று மூர்த்தி ஆய்

த்ரிமூர்த்தி ஸ்வரூபியான் ஸுக துக்கங்களிரண்டுக்கும் நிர்வாஹகனாய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை

தான் ஒருவனாயிருந்தும் பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து நின்றாய்

நெறிமுறை… ஆயினை – பிராமணர் க்ஷத்ரியர் வைச்யர் சூத்நர் என வருணங்கள் நான்கு. விராட் புருஷனான எம்பெருமானுடைய திருமுகத்தினின்றும் பிராமணனும், புஜத்தினின்று க்ஷத்ரியனும், துடையினின்று வைசியனும், திருவடியினின்று சூத்ரனும் உண்டானதாக வேதங்கள் கூறுகின்றமையால் நால்வகை வருணமும் எம்பெருமான்றானேயாயினன். அன்றி, அந்தந்த ஜாதிகட்கு உரிய கருமங்களை சாஸ்திரமுகத்தாலே விதித்து அந்தந்த வருணங்களின் மரியாதை வழுவாமல் நடத்திக்கொண்டு போகிறவன் நீ என்றதாகவுமாம். இங்ஙனன்றியும், வர்ணாச்ரம வொழுக்கங்கள் வழுவாமல் இருக்கிற அவ்வவர்களாலே யதாயோக்யமாக ஆராதிக்கப்படுகின்றாய் என்றதாகவுமாம்.

வருணம் – வர்ணமென்ற வடசொல் விகாரம். முற்காலத்தில் ஒரு வரம்பிலே நின்று விவாஹாதிகள் நடந்து வந்தபோது உடல் நிறத்தைக் கொண்டே இன்னான் பிராமணன், இன்னான் க்ஷத்ரியன் என்றிப்டி அறியக்கூடிய நிலைமையிலிருந்தமையால் நிறமென்னும் பொருளதான வர்ண சப்தத்தையிட்டு ஜாதியை வ்யவஹரித்து வந்தனராம்.

மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே – நிலம் நீர் தீ கால் விசும்பு என்கிற பஞ்ச மஹா பூதங்களும் நீயிட்ட வழக்கு என்றபடி. மேதகும் என்றது – ஆத்மாக்கள் பொருந்தி வர்த்திப்பதற்குத் தகுதியான என்றபடி சரீரமற்ற ஆத்மாஸுக துக்காதிகளை அநுபவிக்க இயலாதாகையாலே ஆத்மாக்கள் விஷயாநுபவத்திலே மேவுவதற்குத் தகுதியாகவுள்ளவை பஞ்ச பூதங்களாம். ஆத்மாக்கள் புகும் சரீரங்கள் பஞ்சபூதமயங்களிறே. அவரவர்களுடைய கருமங்களுக்குத் தகுதியாக உண்டாகிற பாஞ்ச பௌதிக சரீரங்களுக்கு அந்தராத்மாளாயிரா நின்றாய் என்றதாகவுமாம்.

அறுபது முரலுங் கூந்தலை யுடையவள் என்னும் பொருளில்… கூந்தல் என்றது அன்மொழித்டிதாகை. செற்றினை – முன்னிலை யொருமை வினைமுற்று.

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை – சாக்யர், உலூக்யர், பௌத்தர், சார்வாகர், பாசுபதர், காணாதர் என்றிப்படி சொல்லப்படுகிற புறமதத்தவர்களாலே அறியக்கூடாத ஸ்வரூப ரூப குணவிபூதிகளையுடைய என்றபடி. எம்பெருமானுடைய நிர்ஹேதுக கிருபையைப்பெற்ற ஆழ்வார் போல்வர்க்கு அவை தெரியுமேயன்றி மற்றையோர்க்குத் தெரிய விரகில்லையிறே.

ஐம்பாலோதியை ஆகத் திருத்தினை – ஓதி யென்று கூந்தலுக்குப் பெயர். கூந்தலின் பான்மை ஐவகையதாம். மிருதுவாயிருத்தல், குளிர்ந்திருத்தல், நறுமணம் மிக்கிருத்தல், கறுத்திருத்தல், நீண்டிருத்தல் ஆகிய இவை உத்தமகேச லக்ஷணங்களாம். அத்தகைய சிறந்த கூந்தலையுடையளான திருமாமகளைத் திருமார்பிலே கொண்டுள்ளாய் என்றவாறு.

ஐம்பாலோதி – என்றவிதுவும் அன்மொழித்டிதாகை.

அறமுதல் நான்சுகையாய் –தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் நான்கு புருஷார்த்தங்களையும் அர்த்திகட்கு அளிப்பவன் என்கை.

மூர்த்தி மூன்றாய் – படைப்புத் தொழிலை நடத்துகைக்காக நான்முகனை ஆவேசித்தும் ஸம்ஹாரத்தொழிலை நடத்துகைக்காகச் சிவபிரானை ஆவேசித்தும் ரக்ஷணத் தொழிலை நடத்துகைக்குத் தனான தன்மையிலே இருந்தும் ஆகவிப்படி மூவுரு வினனாய் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாயிரா நின்றாய் என்கை.

இருவகைப் பயனாய் – சேதநர் செய்யுங் கருமங்களுக்கெல்லாம் ஸுகமாவது துக்கமாவது பயனாகத்தேறும். கருமம் வாயிலாக அந்த ஸுக துக்கங்களுக்கு ப்ரயோஜகன் நீ என்கை.

ஒன்றாய் விரிந்து நின்றனை – ஸூக்ஷ்ம சிதசித்விசிஷ்ட ப்ரஹ்மமான தானே ஸ்தூல சிதசித்விசிஷ்ட ப்ரஹ்மமாகக் காணப்படுகின்றமையைக் கூறியவாறு.

மாயா வாமனனே மது ஸூ தா நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாயத்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்ற வாறு இவை என்ன நியாயங்களே –

ஆக, இவ்வளவில் எழுகூற்றிருக்கை என்றதன் இலக்கணப்படி தொடுக்க வேண்டிய சொல் மாலைகள் முற்றுப்பெற்றன.

———-

இனிமேலுள்ள சில அடிகள் ஸ்தோத்ர ஸமாபநம்.

“ஒரு பேருந்தி“ என்று தொடங்கி “ஒன்றாய் விரிந்து நின்றனை“ என்னுமளவும், எம்பெருமான் ஆச்ரிதர்களைக் காத்தருள்வதற்காகச்செய்த செயல்களையும் மற்றும் அவனுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களையும் பரக்கப் பேசி மேற்கூறிய திருக்குணங்களெல்லாம் செவ்வனே விளங்கத் திருக்குடந்தையில் கிடக்கிற கிடையிலே ஈடுபட்டு அங்கே சரணாதி பண்ணித் தலைக்கட்டுகிறார்.

குன்றா மதுமலர்ச் சோலை வண் கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே. (2)

பதவுரை

குன்றா மது

குன்றாத (நிறைந்த) தேனையுடைய
மலர்சோலை

பூக்கள் நிறைந்த சோலைகளை யுடையதும்
வண் கொடி படப்பை

வெற்றிலைத் தோட்டங்களை யுடையதும்
வரு புணல்

எப்போதும் பெருகுகின்ற தீர்த்தத்தை யுடைய
பொன்னி

கோவேரியானது
மா மணி

சிறந்த ரத்னங்களை
அலைக்கும்

அலையெறிந்து கொழக்கப்பெற்றதும்
செந்நெல் ஒன் கழனி

செந்நெற் பயிர்களாலே அழகிய கழனிகளை யுடையதும்
திகழ் வனம் உடுத்த

விளங்குகின்ற வனங்களை நாற்புறங்களிலுமுடையதும்
கற்போர் புரி செய்

வித்வான்களுடைய நகரமாகச் செய்யப்பெற்றதும்
கனகம் மாளிகை நிமிர்

பொன்மயமான மாளிகைகளின்றும் மேல்முகமாய் ஓங்குகின்ற
கொடி

த்வஜங்களானவை
விசும்பில்

ஆகாயத்திலுள்ள
இள பிறை

பாலசந்திரனை
துவக்கும்

ஸ்பர்சிக்கப்பெற்றதும்
செல்வம் மல்கு

செல்வம் நிறைந்ததுமான
தென் திருகுடந்தை

தென் திருக்குடந்தையிலே
அந்தணர்

பிராமணர்கள்
மந்திரம் மொழியுடன் வணங்க

வேதவாக்குகளைச் சொல்லிக் கொண்டு வண“கும்படியாக
ஆடு அரவு அமளியில்

படமெடுத்தாடுகிற ஆதிசேஷனாகிற சயனத்தில்
அறி துயில் அமர்ந்த

யோக நித்திரை செய்வதில் ஆஸக்தனான
பரம

ஸர்வேச்வரனே!
வரும் இடர் அகல

இந்த ஸம்ஸாரத்தில் நேரக்கூடிய துக்கங்களை நீங்க
நின் அடி இணை பணிவன்

உன்னுடைய உபயபாதங்களை ஆச்ரயிக்கின்றேன்
வினை

ஸம்ஸாரத்துன்பங்களை
மாற்று

போக்கி யருளவேணும்

திருக்குடந்தையின் நீர்வளம் நிலவளம் முதலியவற்றைச் சில விசேஷணங்களால் சிறப்பித்துக் கூறுகின்றார். எப்போதும் வற்றாத தேன் வெள்ளங்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்ததும், பல பல ரத்னங்களைக் கொழித்துக்கொண்டு வருகிற காவிரி நீர் பாயப்பெற்றதும், அக்காவியின் நீர்வளத்தாலே செந் நெற்பயிர்கள் நன்றாக விளையப்பெற்ற கழனிகள் கண்ட விடமெங்கும் ஓங்கப் பெற்றதும், வித்வான்கள் வாழப்ப்பெற்றதும், சந்திரமண்டலம் வரையில் நீண்டு விளங்குகின்ற கனக மாளிகைகள் திகழப்பெற்றதும், பல்வகைச் செல்வமும் நிறையப் பெற்றதுமான திருக்குடந்தையிலே அந்தணர்கள் புருஷஸூக்தம் முதலிய வேதவாக்கியங்களை அநுஸந்திதுக்கொண்டு வந்து பணியும்படியாக சேஷசயனத்திலே திருக்கண் வளாந்தருளும் நெடுமாலே! எனது தாபமெல்லாம் தீரும்படி உன்றன் திருவடியிணைகளைப் பணிகின்றேன். இனியாகிலும் எனது ஸம்ஸார தாபங்கள் அருள் புரியவேணும் என்று ஆர்த்தராய்ச் சரணம் புகுந்து தலைக்கட்டினராயிற்று.

கற்போர் புரி செய் என்றவிடத்து இரண்டு வகையான பாடமும் அதற்கு ஏற்ப அர்த்த பேதமும் உண்டு, – புரி செய் என்பது ஒரு பாடம், புரிசை என்பது மற்றொரு பாடம்.

“வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாகப் புரி செய் என்ற பாடம் கொள்ளத்தக்கது, புரி என்ற வடசொல் நகரமெனப் பொருள்படும், கற்போர்களுடைய (வித்வான்களுடைய புரியாகச் செய்யப்பட்ட தென்க. மற்றொரு சிறிய வியாக்கியானத்திலே “தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிள்களையு முடையதாய்“ என்ற ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாக புரிசை என்ற பாடம் கொள்ளத்தக்கது.

“கற்பு ஓர் புரிசை“ என்று பிரித்து, நல்ல வேலைப்பாடுகளையுடைய திருமதில்களை யுடைத்தான என்று கொள்க. புரிசை என்ற ஒரு பாடத்திலேயே இரண்டு வகைப் பொருள்களையும் பொருந்தவிடலாமென்பாரு முளர் நிற்க.

கனக மாளிகைகளினின்றும் நிமிர்ந்த கொடியானது விசும்பி விளம்பிறையைத் துவக்குமென்ற அதிசயோக்தியினால் அவ்விடத்துத் திருமாளிகைகளின் ஓக்கம் தெரிவிக்கப்பட்டதாகும்.

ஆடு அரவு – எம்பெருமான் எப்போதும் தன்னோடு அணைந்திருக்கப் பெற்றதனால் மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் படமெடுத்தாடுவன் திருவனந்தாழ்வான். அமளி – படுகை. அறிதுயில் –ஜாகரணத்தோடு கூடிய நித்ரை, அதாவது யோக நித்ரை* உறங்குவான்போல் யோகு செய்யும் பெருமானிறே.

ஆக இப்பிரபந்தத்தால் – தம்முடைய ஆர்த்தி யெல்லாந் தோற்றத் திருவடிகளிலே தீர்க்க சரணாகதி பண்ணியும் இன்னும் இவரைக்கொண்டு சில திவ்யப்பந்தங்களை வெளியிடுவித்து உலகத்தை வாழ்விக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமான் இவ்வாழ்வார்க்கு வந்து முகங்காட்டா தொழியவே, இனி மடலூரைப் புகுகிறார் என்று – மேல் திருமடல் பிரபந்தத்தோடே இதற்கு ஸங்கதி கண்டு கொள்க.

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி பெறாமல் இருப்பதை-
ஆழ்வார் அனுசந்திப்பதாக ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading