இனித் திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள்
பனி யரும்புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே.
பதவுரை
திரை திவலை–அலைகளிலுண்டான திவலைகளானவை
இனிதுமோத–இனிதாக அடிக்க (வீச)
எறியும்–கொந்தளிக்கிற
தண்–குளிர்ந்த
பரவை மீது–கடல் போன்ற திருக்காவேரியிலே
தனி கிடந்து–தனியே வந்து கண்வளர்ந்தருளி
அரசு செய்யும்–செங்கோல் செலுத்துகிற
தாமரை கண்ணன்–புண்டரீகாக்ஷனாய்
எம்மான் –எமக்கு தலைவனாய்
கனி இருந்தனைய செம் வாய் கண்ணனை –கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை யுடையனான கண்ணபிரானை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (எனது) கண்களில் நின்றும்
பனி அரும்பு–குளிர்ந்த கண்ண நீர்த் துளிகள்
உதிரும்–பெருகா நின்றன,
பாவியேன்–(கண்ணாரக் கண்டு களிக்கைக்குப்) பாக்கியமில்லாத நான்
என் செய்தேன்–ஏது செய்வேன்?
விளக்க உரை
எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றமைக்கு உகந்து உரைத்த ஆழ்வார் , கண்களினுடைய களிப்புக்குப் போக்கு வீடான
ஆநந்தக் கண்ணீர் பெருகப்பெற்று ஐயோ! இக்கண்ணீர் அரும்பரும்பாகத் துளித்துக் கண்களை மறைத்து
எம்பெருமானை இடைவிடாது ஸேவிக்க வொட்டாமல் துடைச் சுவராய்த் தடை செய்கின்றவே !
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதொழியும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான்
இந்த துக்கத்திற்கு எங்குபோய் முறையிட்டுக் கொள்வேன் என்று வெறுக்கிறார்.
பரவை என்று கடலுக்குப் பெயர் ;
திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிறவன் திருக்காவிரியிடையிலே வந்து கண்
வளர்ந்தருள்வதாக அதுஸந்திக்கிறர் என்னலாம்:
அன்றியே,
காவேரி தான் ஒரு பெருங்கடல் பெருகுமாபோலே பெருங்வெள்ளங் கோத்துப் புரளுகையாலே
காவேரியையே கடலாகச் சொல்லிற்றாகவுமாம் முற்றுவமை.
தனி கிடந்து -பிராட்டிமாருமில்லாமல் பரதேஸியாய்க் கிடக்கிறானென்றபடி யன்று;
நினைவறிந்து பரிமாறும் நித்யமுக்தாதிகளை ஒருநாடாகவுடையவன் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு,
ஸம்ஸாரிகள் பக்கல் நசையாலே “ஒருவனாகிலும் கிடைக்கக்கூடுமோ?” என்று வந்து கிடக்கும்படியைச் சொல்லுகிறது.
தனி-
ஒப்பில்லாதபடி என்றுமாம்.
அரசு செய்கையாவது –
விரோதி நிரஸநம் செய்கை
அதாவது –
‘அஹம்-யம’ என்றிருக்கும் ஸம்ஸாரிகளின் பாழான நிலைமையைக் குலைத்து ‘நம:’ என்னும்படி செய்து கொள்ளுகை.
“அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான்
தனது திருக்கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.
பெரியபெருமாளை ஸேவித்தால், அவதாரத்திற் பிற்பட்டவர்கட்கும் உதவுகைக்காகக் கண்ணபிரான் தான்
வந்து கண்வளர்ந்தருளுகிறானென்று ஸ்மரிக்கலாம்படி யிருக்குமாதலால் கண்ணனை என்கிறார்:
“ கோவலனாய் ப் வெண்ணெயுண்டவாயன்……….. அண்டர்கோ னணிய ரங்கன் திருப்பாணாழ்வாரும்.
இவ்விடத்திலே பட்டர் அருளிச்செய்யும்படி;
“யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கைவளரும்படி வளர்த்த மொசுமொசுப் பெல்லாம்
பெரிய பெருமாள் பக்கலில் தோற்றியிருக்கும்:
வஸிஷ்டாதிகளாலே ஸுஸிகத ராய் வார்ந்து வடிந்த விநயமெல்லாம் தோற்றும்படியான சக்ரவர்த்தி திருமகளை
ஸ்மரிக்கலாம் படியிருக்கும் – நம்பெருமானைக் கண்டால்” என்று.
இனிது + திரை-இனிதிரை; கடைக்குறை.
இருந்தனைய –இருந்தாலனைய;
இருந்தாற் போன்ற என்றபடி.
ஆல் ஓ – வியப்பிடைச் சொற்கள்;;
இரக்கமும்
கூப்பீடும் தோற்றுகிற குறிப்பிட்டைச் சொற்களுமாம்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply