ஸ்ரீ திரு மாலை-15-மெய்யர்க்கே மெய்யன் ஆகும் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

தம் உபதேசத்தை மதியாத ஸம்ஸாரிகளைக் குறித்து ஹிதம் கூறுவதில் நின்றும் கால்வாங்கின ஆழ்வார் -‘
இந்த ஸம்ஸாரிகளுக்குள்ளே ஒருவனான என்னைப் பரோபதேசம் பண்ண வல்லேனாம்படி
எம்பெருமான் தன் விஷயத்தில் படிப்படியாகப் பரம பக்தியளவான ஊற்றத்தைப் பிறப்பித்து
இப்படி நிர்ஹேதுகமாகக் கடாக்ஷித்தவாறு என்னே!’ என்று
தமது நன்றி யறிவு தோன்றக் கொண்டாடுகிறார்;
இதுவன்றோ அறிவுடையாருடைய செயல்.

‘தெய்வம் உண்டு’ என்று ஆதரவோடு அங்கீகரியாவிடினும்
‘தெய்வம் உண்டு’ என்று ஒருவன் சொன்னால் அதில்
ஆக்ஷேபாதிகளாலே பகைமை பாராட்டாதிருக்கும் நிலை – அத்வேஸ் மெனப்படும்:
இதுவே பரமபக்திக்கு முதற்படி எனப்படும்.
ஒரு வஸ்துவில் ஒருவனுக்கு த்வேஷம் குடி கொண்டிருந்தால் அவன் அவ் வஸ்துவைப்பற்றிச் சிந்திக்கவே முடியாது:
அன்றி, ‘நேசமுமில்லை, த்வேசமுமில்லை’ என்கிற நிலைமையிலிருந்தால் அவன் நாளடைவில்
அவ்வஸ்து விடத்தில் பரமபக்தி பர்யந்தமான அன்பைப் பெற்றுவிடக்கூடும் என்பது அனைவர்க்கு அநுபவம் ஸித்தமான விஷயம்.
ஆனது பற்றியே அத்வேஷமென்பது பரம ப்ரீதிக்கு முதற்படியாகக் கொள்ளப்புட்டிருக்கின்றதென்க.

இத்தகைய அத்வேஷமுடையார்க்குத்
தனது ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்தும்,
அவ்வாறன்றிப் பகைமை கொண்டிருக்கும் நாஸ்திகர்க்குத்
தனது ஸ்வருபத்தைக் காட்டித்தராமலும் இருப்பவனான எம்பெருமான்,
‘தெய்வம் ஒன்று உண்டு’ என்று மாத்திரம் கருதுபவரான அந்த ஆஸ்திகர்க்கு
‘நாம் அடைய வேண்டிய அக் கடவுள்தான் யாவன்?
அக் கடவுளை நாம் அடையுமிடத்து நமக்கு நேரக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்போன் யாவன்?’ என்று
இவை முதலாகத் தோன்றுகிற ஸந்தேககங்களையெல்லாம் தனது வடிவழகு முதலியவற்றால் போக்குவான்:
அப்படிப்பட்டவன் நித்யவாஸம் செய்யுமிடம் திருவரங்கம் என்பது இப்பாட்டின் கருத்து.

எம்பெருமானுடைய இத்தகைய தன்மையை இவர் தம் அநுபவத்தாலே உணர்ந்து கூறினராதலால்
தம்முடைய குருதஜ்ஞதையை வெளியிடுவது இப்பாட்டு என உரைக்கப்பட்டதென்க.

மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட் கொடி யுடைய கோமான்
உய்யப் போ முணர்வினார் கட் கொருவனென் றுணர்ந்த பின்னை
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே.

பதவுரை

புள் கொடி உடைய கோமான்–கருடனைக் கொடியாக வுடைய ஸ்வாமியான திருமால்
விதி இலா என்னை போல–(நெடுங்காலம் எம்பெருமானது அருளைப் பெறுதற்கு ஏற்ற) நல்வினை இல்லாதிருந்த என்னைப் போல
மெய்யர்க்கு–அத்வேஷ மாத்திரமுடையவர்க்கு
மெய்யன் ஆகும்–(தன் ஸ்வரூபத்தை) உள்ளபடி காட்டித் தருவன்;
பொய்யர்க்கு–(எம்பெருமான் விஷயத்தில்) அத்வேஷத்தைப் பெற்றிராதவர்க்கு
(எம்பெருமான் விஷயத்திலே பகைமை கொண்டிருப்பவர்க்கு)
பொய்யன் ஆகும் –(தனது ஸ்வரூபத்தைக் காட்டித் தராமல் தானும்) பொய்யனாயிருப்பன்;
உய்யப்போம் உணர்வினார்கட்கு–உஜ்ஜீவிப்பதற்கு உரிய நல்லறிவு உடையவர்க்கு (கீழ்க்கூறிய மெய்யர்க்கு)
ஒருவன் என்று உணர்ந்த பின்னை –‘கடவுள் ஒருவன் உண்டு’ என்று நல்லறிவு பிறந்த பின்பு
ஐயப்பாடு அறுத்து–பின்னும் வரக்கூடிய ஸந்தேகங்களைப் போக்கி
தோன்றும்–ஸேவை ஸாதிக்கிற
அழகன்–அழகை யுடைய அந்த எம்பெருமானது
ஊர்–இருப்பிடம்
அரங்கம்–திருவரங்கமாகும்;
(அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்)

விளக்க உரை

‘மெய்யர்க்கு’ என்பதற்கு
‘தத்வஜ்ஞானமுடையவர்கட்கு’ என்று பொருள் கூற வேண்டியதாயிருக்க
அங்ஙன் கூறாது ‘அத்வேஷமுடையார்க்கு ‘என்று கூறியது எங்ஙனே?
இது ஸப்தார்த்தமாகுமோ? என்று ஸங்கிக்கக்கூடும்; கேண்மின்;-
‘தத்துவ ஞானிகட்கு எம்பெருமான்தான் மெய்யனாவான்;’ என்று கூறினால்
அதனால் எம்பெருமானுக்கு ஒரு சிறப்புத் தோன்றாதாகையாலும்,
எம்பெருமானது சிறப்பைக் கூற வேண்டியது இங்கு அவசியமாகையாலும்
இங்ஙனே பொருள் கூறவேண்டியதாயிற்று.

மெய்யாவது –
ஆஸ்திகபுத்தி,

பொய்யாவது –
நாஸ்திகபுத்தி;
அதாவது –
‘கடவுளுண்டு’ என்பதை அங்கீகரியாமல் தாம் கண்ணாற் காண்கின்ற பொருளையே நம்புகின்ற ஞானம்;
ஆகவே இப்பாட்டில் மெய்யர் என்பது ஆஸ்திகரையும்,
பொய்யர் என்பது நாஸ்திகரையும் குறிக்குமென்க.

விதியிலா வென்னைப் போல என்பது மத்திமதீபமாக
(மத்திமதீபமாவது – ஒரு மாளிகையின் நடுவிலே வைக்கப்பட்ட விளக்கு முன்னும் பின்னும் வெளிச்சம் தருவதுபோல,
நடுநின்ற சொல்லாவது சொற்றொடராவது முன்னும் பின்னும் சென்று இயைவது.)
மெய்யர்க்கு மெய்யனாவதற்கும் பொய்யார்க்குப் பொய்யனாவதற்கும் உவமையாம்.
எங்ஙனேயெனில்;
நான் நாஸ்திக புத்திகொண்டு கடவுளின் உண்மையை மறுத்து உலகத்துப் பொருள்களிடத்துப் பற்றுக் கொண்டு
திரிந்த கீழ்நாள்களிலெல்லாம் அவ்வெம்பெருமானும் என்னைக் கிட்டாமல்,
தான் ஒருவன் உளன் என்றும் தோன்றாதபடி உபேக்ஷித்திருந்தான்;

எனக்கு ஆஸ்தீக புத்தியால் தான் எம்பெருமானிடத்து அத்வேசம் தோன்றிய இப்போதோ
அவ்வெம்பெருமான் தனது ஸ்வரூபமெல்லாம் நன்கு தோன்றுமாறு
விசேஷ ஜ்ஞானத்தைப் பிறப்பித்தானெனக் காண்க.

ஞானம் பிறந்த பின்பு இவ்வாழ்வார் தம்மைக்குறித்து
“ விதியிலாவென்னை” என்று வெறுத்துக்கூறுவது –
முன்னமே எம்பெருமானைக் கிட்டித்தாம் ஈடேற வேண்டியிருக்க
அங்ஙனமில்லாமல் நெடுநாள் அவனை யிழந்துகிடந்த தமது தெளர்ப்பாக்யத்தை நினைப்பதனாலாம்.
“பழுதேபலபகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்றார் பொய்கையாழ்வாரும்.

இப்படி ஆஸ்திக புத்தி மாத்திரத்தையே வியாஜமாகக் கொண்டு
தத்வ ஜ்ஞானம் நிரம்பாத உயிர்களையும் எம்பெருமான் காத்தருள்வதற்குக் காரணம் –
அவர்கட்கெல்லாம் தாம் ஸ்வாமியாயிருப்பதே என்பது தோன்றக்
கோமான் என்றார்.

“ ஸம்பந்நராயிருக்குமவர்களேயாகிலும் ஒரு காசு விழுந்தவிடத்தே போய்த் தேடா நிற்பந்தங்களாய்
தந்தாம் வஸ்துவை விடமாட்டாமையாலே” என்ற வியாக்யாந ஸூக்தியை நோக்குக.

ஒருவனென்றுணர்ந்தபின்னை-
கேவலம் தேகமே அன்று உள்ளது ;
தேஹாதிரிக்தமாயிருப்பதொரு ஆத்மா உண்டு;
அவனுக்கு ஸ்வாமியாயிருப்பானொரு எம்பெருமானுமுண்டு, என்னும் அறிவு பிறந்தபின்பு என்றபடி.

ஐயப்பாடு-ஐயம், படு என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து ஒருசொல் தன்மைப்பட்டு
ஐயப்படு என்று முதனிலையாகி
அது ஐயப்பாடு எனத் திரிந்தது; முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading