ஸ்ரீ திரு மாலை-4-மொய்த்த வல் வினையுள் நின்று -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

இப்பாட்டு முதல், பதினான்காம் பாட்டளவும்
பகவத் விஷயத்திலே தம்மைப்போல் ஆழங்காற்படாமல் உடலுக்கே கரைந்து நைந்து திரியும்
ஸம்ஸாரிகளின் இழவைக்கண்டு பொறுக்கமாட்டாமல் தளர்ந்து
ஒரு பக்கத்தில் ஆச்சர்யப்பட்டும்,
ஒரு பக்கத்தில் வருத்தப்பட்டும்,
மற்றொரு பக்கத்தில் வெறுப்புற்றும்
இன்னொரு பக்கத்தில் நிந்தித்துக் கொண்டும் பேசுகிறார்.

பகவதநுபவத்திலே ஊன்றி உகப்பே யாய்ச் செல்லுமிவர் ஸம்ஸாரிப் பாவிகளைப் பற்றிக் கரைந்து வருந்துவானேன்?
என்னில்; இப்பாவிகள் அநியாயமாய் வகுத்த விஷயத்தை இழந்து படுகின்றனரே என்னும் துக்கம் பொறுக்கமாட்டாமையாலும்,
பகவத் விஷயம் பலர்கூடித் திரண்டு அநுபவிக்கவேண்டிய இனிய விஷயமாதலாலும்,
“ஏக; ஸ்வாது ந புஞ்ஜீத” (இன் கனி தனி யருந்தான்) என்றபடி இனிய விஷயத்தைத் தனியராய் அநுபவித்து
ஸாத்மிப்பித்துக்கொள்ள வல்ல தன்மையரல்லராதலாலும்
துணை கூட்டிக்கொள்ளத் தேடுகிறாரென்க.

‘கொடும்பாவிகளான எங்களுக்கு எம்பிரான் திருநாமங்களை உச்சரிப்பதற்கு யோக்யதை உண்டோ?
தேவனேசமான புரொடானத்திலே நாய் வாய் வைக்கக் கடவதோ?’ என்று சில ஸம்ஸாரிகள்
அயோக்யதாநுஸந்தானம்பண்ணி அகலப் பார்க்க,

அவர்களை நோக்கி,
‘ஆதர்காள்! நன்கு சொன்னீர்கள் க்ஷத்ரபந்து என்வனிற்காட்டிலும் வேறொரு கொடிய பாபிஷ்டன்
இவ்வுலகில் உளனென்று நீங்கள் கேட்டதுண்டோ!
அவனுடைய கொடுமையை நீங்கள் புராணத்திலே விரிவாகக் கேட்டிருக்கலாமோ
அப்படிப்பட்ட பாவியுமன்றோ கோவிந்த நாமத்தை உச்சரித்து நற்கதி நண்ணினன்.
அன்றியும், பொய்யான அன்பை அபநயித்துக் காட்டுவார் பக்கலிலும் பிச்சேறி மேல் விழுந்து
பற்றுவானாயிருந்தான் எம்பெருமான்
இவற்றையெல்லாம் நீங்கள் அறிந்து வைத்தும் படுகுழியில் வீழ்ந்துபடுவதே! இஃது என்ன கொடுமை!’ என வியக்கிறார்.

மொய்த்த வல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடியரானார்க் கிரங்கும் நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே.

பதவுரை

மொய்த்த–அடர்ந்து கிடக்கிற
வல் வினையுள் நின்று–கொடிய பாபராசியினுள்ளே நின்று
மூன்று எழுத்து உடையபேரால்–கோவிந்த நாமத்தாலே
கத்திரபந்தும் அன்றே–க்ஷத்ர பந்துவமன்றோ
பராங்கதி–சிறந்த பதவியை
கண்டு கொண்டான்–கண்டு அநுபவிக்கப் பெற்றான்;
இத்தனை அடியர் ஆனார்க்கு–இவ்வளவு ஆநுகூல்யம் உடையவர்கட்கும்
இரங்கும்–அருள் புரிகின்ற
நம் அரங்கன் ஆய பித்தனை–நம் அழகிய மணவாளனாகிற ஆஸ்ரித வியாமுக்தனை
பெற்றும் –சேஷியாகப் பெற்று வைத்தும்
பிறவியுள்–ஸம்ஸாரத்திலகப்பட்டு
பிணங்கும் ஆறே -வருந்துகிற விதம் என்னே!
அந்தோ –

விளக்க உரை

மொய்த்த வல்வினை –
பாபராசிகள் கோடிக்கணக்காகச் சேர்த்து ‘நான் முன்னே நான் முன்னே’ என்று மேல் விழுந்து
மொய்த்துக் கொண்டு கிடக்கிறபடி
தேன் கூட்டை ஈ மொய்த்துக் கொள்ளுமாபோலே
“நெய்க்குடத்தைப் பற்றி ஏறு மெறும்புகள்போல் நிருந்து, எங்குங்கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்” என்ற
பெரியாழ்வார் திருமொழியையும் நோக்குக.

மொய்த்த வல்வினையுள் நின்று –
மஹாபாபிஷ்டனாயிருந்து வைத்து என்றபடி.

மூன்றெழுத்துடைய பேரால்-
இன்ன திருநாமமென்னாதே ரஹஸ்யமாய்ச் சொல்லிற்று-
ருசி பிறந்த பின்பு ‘அந்தத் திருநாமம் ஏன்?’ என்று விரும்பிக் கேட்டால் அப்போதைக்கு உபதேசிப்போமென்றாம்.
“மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்” என்று பெரியாழ்வார் மறைத்தாற்போல.

கத்திரபந்து-
பிராமணர்களுள் அதமனை ‘ப்ரஹ்மபந்து’ என்கிறாப்போலே
க்ஷத்ரியர்களுள் அதமனை ‘க்ஷத்ரபந்து’ என்கிறது.
“நம்முதலிகள் கோஷ்டியில் ‘நாலூரான்’ என்றாற்போலே
ரிஷிகள் கோஷ்டியில் ‘க்ஷத்ரபந்து’ என்றால் செவிபுதைக்கும்படியாய்த்திருப்பது” என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
நாலூரானுடைய கொடுமை கூரத்தாழ்வான் சரிதத்தில் காணத்தகும்.

பராங்கதி-
பரகதி என்றவாறு
அதாவது
பரமபதப்ராப்தி.
கோவிந்தநாம ஸங்கீர்த்தநத்தால் பரபராசியில் நின்றும் விடுபட்டவளவேயன்றி,
ஐச்வர்யம் கைவல்யம் முதலிய க்ஷுத்ரபலங்களைப் பெற்றொழியாதவளவேயுமன்றி
நித்ய ஸூரிகளுடைய நித்யாநுபவத்தையன்றோ பெற்றது.

கத்திரபந்துமன்றே-
க்ஷத்ரபந்துவின் உபாக்கியானம் ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில் தொண்ணூற்றேழாவது அத்யாயத்தில் பரக்கக் கூறப்பட்டுள்ளது;
அதன் சுருக்கம் வருமாறு;-

மிகக் கொடிய நடத்தைகளையுடையவனாய், பல்வகைப் பாவங்களும் உருவெடுத்து வந்தனவென்னும்படி
மஹாபாபியான க்ஷத்ரபந்து என்பானொருவன் இருந்தான்;
அவன் தனது கொடுமையினால் தாய் தந்தை மக்கள் மித்திரர் அனைவராலும் கைவிடப்பட்டவனாய்
காட்டிலே திரிந்து கொண்டு ஜீவஹிம்ஸையினால் வயிறு வளர்த்து வந்தான்.
இங்ஙனம் நெடுநாள் சென்றவளவில், ஒருநாள் ஒரு மாமுனிவர்
கொடிய வெய்யில் வேளையில் வழி போகா நிற்கையில் வழிதப்பி,
இப்பாவி திரியுங் கானகத்திலே புகுந்து இவனது கண்ணுக்கு இலக்காயினர்.

அவரைக் கண்டதும் அவருடைய பரிதாபத்தைக் கண்ட இவனுக்குத் தன்னையுமறியாமல்
அம்முனிவர் விஷயத்திற் காருண்யமுண்டாகி,
‘மாமுனிவரே! இஃது உம்முடைய வழியன்றே, வழி தப்பிவந்தீர் போலும். உற்றுநோக்கிப் பாரும்’ என்று
முனிவரை நோக்கிக்கூற,
அவரும் உணர்ந்து, பொறுக்கமுடியாத தாஹத்தை யுடையராய் ஒரு தடாகத்தைத் தேடிச் செல்லுகையில்
அருகே ஒரு அழகிய பொய்கையைக் கணடு, தாப மிகுதியால் சடக்கென அக்குளத்திற்போய் விழுந்திட்டார்.
அப்போது அருகிருந்த க்ஷத்ரபந்து தனது கையிலிருந்த வில்லையும் அம்புகளையும் எறிந்துவிட்டு,
அம்முனிவரைப் பிடித்துத் தூக்கித் தேற்றித் தாமரைக் கிழங்குகளை உணவாகக் கொடுத்து விடாயைப்போக்கி மகிழ்வித்தான்.

பிறகு அவர் கரைமீதேறி ஒரு மரத்தடியில் உட்கார, அவரது கால்களின் நோவுதீர நன்றாகப்பிடித்து
உபசாரங்களைச் செய்த க்ஷத்ரபந்துவை நோக்கி அம்முனிவர்,
‘பேருபகாரம் புரிந்த பெரியோனே! யாருடைய சிறந்த குலத்திற் பிறந்தவன் நீ?
உனது வரலாறுகளைக் கேட்க விரும்புகிறேன்’ என்ன!

அது கேட்ட அவனும் ‘முனிவர் கோமானே! நான் ஸூர்யவம்ஸத்தில் விஸ்வரதன் என்பவற்கு மகனாய்த் தோன்றியவன்’
என்று தொடங்கித் தனது கொடுமைகளையெல்லாம் ஒன்றும் ஒளிக்காமல் உள்ளபடி சொல்ல
அவற்றைச் செவியுற்ற முனிவர் இவனை நல்வழியிற் செலுத்தவேணுமென்ற கருத்துகொண்டு
‘அப்பா! இத்தீய குணங்களையெல்லாம் விட்டிட்டு ஜூவ காருண்யத்தையே பரம தர்மமாகக் கடைபிடிக்க உன்னாலாகாதோ?’ என்று கேட்க

அதற்கு அவன் ‘காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் என்னும் தீக்குணங்கட்குப் பிறப்பிடமான
நான் அவற்றை விட்டுப்பிரிந்து ஒரு க்ஷணகாலமும் இருக்ககில்லேன்; என் மனம் என் வசமன்று;
இது தவிர வேறு நியமநமுண்டாகில் சிரமேற் கொள்ளக் காத்திருக்கிறேன்’ என்ன;

எப்படியாவது இவனை வழிபடுத்த வேணுமென்னும் பேரவாக்கொண்ட முனிவர்
‘இது மாட்டாயாகில், எப்போதும் கோவிந்த! கோவிந்த! என்று சொல்லிக்கொண்டிருக்கவாவது உன்னால் முடியுமோ?
இருமினாலும் தும்மினாலும் கோவிந்த! என்றே சொல்லிக்கொண்டிருப்பாயாகில் உனக்கு மிக்க நன்மையுண்டாம்’
என்று சொல்லிவிட்டுப்போயினர்;

அது முதலாக க்ஷத்ரபந்து கோவிந்த நாமத்தை இடைவிடாது ஸங்கீர்த்தநம் பண்ணிக் கொண்டிருந்தான்.
சிலகாலங் கழித்து அவன் மரணமடைந்து அந்தணர் குலத்தில் பூர்வஜந்ம ஸ்மரணத்துடன் பிறந்தான்.
உடனே அவனுக்கு இக்கொடிய ஸம்ஸாரத்தில் மிக்க நிர்வேதம் உண்டாயிற்று.
இப்படிப்பட்ட உத்தமோத்தமமான ப்ராஹ்மண குலத்தில் எனக்குப் பிறவிட நேர்ந்ததும்
பூர்வஜன்ம ஸ்மரணமுண்டானதும் நான் முன்பு பண்ணின கோவிந்தநாம ஸங்கீர்த்தகத்தின் பயனன்றோ?
ஆகவே எனக்கு மேலான நன்மையை விளைத்த அந்த கோவிந்தனையே நான் ஆராதனஞ்செய்து,
தீண்டாவழும்புஞ் செந்நீருஞ் சீயநரம்புஞ் செறிதசையும் வேண்டா நாற்றமிகு முடலைவிட்டு
மாயவன் சேற்றள்ளற் பொய்நிலத்தைக் கண்டது நலமந்தமில்லாதோர் நாடாகிய
பரமபதத்தை அடையக்கடவேன் என்பதாகத் துணிந்து
அங்ஙனமே செய்து பரமபாகவதனாகி விடுபெற்றனன் என்பதாம்.

இத்தனையடியரானார்க்கு –
க்ஷத்ரபந்துவைப்போல ஸ்வல்பம் ஆநுகூல்ய முடையவர்கட்கு என்றும்
ஈஸ்வரன் போ, நீ மேஷன் என்று ஒருவர் சொன்னால்
ஆ! அப்படியா!’ என்று மார்பு தட்டி மறுப்பதற்கு முன் வர மாட்டாத அத்வேஷமுடையார்க்கும் என்றும்
இரண்டுவகையாகப் பொருள் கூறுப.

பித்தன்-
இது செய்யத்தகும், இது செய்யத்தகாது என்ற விவேகமற்றவன் பேயனெனப் படுவான்
எம் பெருமானும் அடியார் திறத்திலுள்ள வ்யாமோஹாதிசயத்தினால் பரிமாறும் முறையில்
அடைவு கெட்டு முறைமாறுபவனாதலால் பித்தனெனப்பட்டது.

பகவத் விஷயத்திலே உங்மஸ்தமாக ஆழுமவர்களைப் பேயர் என்னுமா போலே,
பாகவத விஷயத்திலே உங்மஸ்தகமாகப் பரிமாறுபவனைப் பித்தனென்னக் குறையில்லையே.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading