பாண்டிநாட்டுத்திருப்பதிகள்–18-
41- திரு மால் இருஞ்சோலை —
பணிந்தேன் திருமாலை பாமாலை தாளில்
அணிந்தேன் அருள் தஞ்சமாகத் துணிந்தேன்
திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன் எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் –41–
(இ – ள்.) (நான்), – திருமாலிருஞ்சோலை – (அழகன் எழுந்தருளியுள்ள) திருமாலிருஞ்சோலை யென்னுந் திவ்வியதலத்தை,
சேர்ந்தேன் – அடைந்தேன்;
திருமாலை – ஸ்ரிய:பதியான அவ்வெம்பெருமானை,
பணிந்தேன் – வணங்கினேன்;
பா மாலை – தமிழ்ப்பாடலினாலாகிய மாலையை,
தாளில் – (அவனது) திருவடிகளில்,
அணிந்தேன் – சூட்டினேன்;
அருள் – (அவனது) திருவருளையே,
தஞ்சம் ஆக – பற்றுக்கோடாக,
துணிந்தேன் – நிச்சயித்தேன்; (அங்ஙனந் துணிந்ததனால், இனி), எனக்கு -,
இருஞ் சோதி வான் – பெரிய ஒளிவடிவமான பரமபதம்,
வரும் – கிடைக்கும்; (எ – று.) – ஆல் – ஈற்றசை; தேற்றமுமாம்.
திருமாலிருஞ்சோலைமலையைச் சேர்ந்து அங்கு எழுந்தருளியுள்ள அழகப்பிரானைச் சேவித்து அப்பிரான்
திருவடிகளிற் பாமாலைசூட்டி அவனது அருளையே தஞ்சமாகத் துணிந்திருத்தலால்,
அவனருளால் எனக்கு நற்பேறுவாய்த்தல் திண்ண மென்பதாம்.
“பணிந்தேன்திருமேனி பைங்கமலங் கையால், அணிந்தேன் உன்சேவடிமே லன்பாய்த் –
துணிந்தேன், புரிந்தேத்தி உன்னைப் புகலிடம்பார்த்து ஆங்கே, இருந்தேத்திவாழுமிது” என்ற பாசுரத்தை அடியொற்றியது, இச்செய்யுள்.
இறைவன் எழுந்தருளியிருக் கின்ற பரமபதம், முச்சுடர்களின் ஒளியினும் மிக்கபேரொளியுடைமையால், “இருஞ்சோதிவான்’ என்றார்.
வரும் மால் இருஞ்சோதி வான் என்று பிரித்து, திருமாலினது பரமபதம் கிடைக்குமென்றும் பொருள்கூறலாம்.
————
42-திருக் கோட்டியூர் –
வான்பார்க்கும் பைங்கூழ் போல் வாளா உனது அருளே
யான் பார்க்க நீ பார்த்து இரங்கினாய்-தேன் பார்ப்பின்
ஓசைத் திருக் கோட்டி யூரானே இன்னமும் என்
ஆசைத் திருக்கு ஒட்டி ஆள் –42-
(இ – ள்.) தேன் பார்ப்பின் ஓசை – இளவண்டுகளுடைய ரீங்காரவோசை மிகுந்த,
திருக்கோட்டியூரானே – திருக்கோட்டியூ ரென்னுந் திவ்விய தலத்தி லெழுந்தருளியிருக்குந் திருமாலே! –
வான் பார்க்கும் பைங்கூழ் போல் – வானத்துஎழுகின்ற மழையையே யெதிர்நோக்குகின்ற பசியபயிரைப்போல,
வாளா – சும்மா (எப்போதும்),
உனது அருளே – உன்னுடைய திருவருளையே,
யான் பார்க்க – நான் ஆதரத்தோடு எதிர்நோக்க,
நீ பார்த்து இரங்கினாய் – நீ (அதனைக்) கடாக்ஷித்து (என்மீது) அருள்புரிந்தாய்;
இன்னமும் – இனிமேலும்,
என் – எனது,
ஆசை திருக்கு – இவ்வுலகப் பற்றாகிய மாறுபாட்டை,
ஓட்டி – போக்கி,
ஆள் – (என்னை) ஆட்கொள்வாயாக; (எ – று.)
தாபத்தைத்தணித்துத் தன்னைக்காத்தற்குஉரிய மேகம் மழைபொழியாது நீட்டிக்க நீட்டிக்கப் பயிர் அதனை ஆவலோடு
எதிர்பார்க்குந் தன்மை மிகுதல்போல, பிறவித்துன்பத்தை யொழித்து என்னைப் பாதுகாத்தற்கு உரிய நீ
தண்ணளிசெய்யாது உபேக்ஷிக்க உபேக்ஷிக்க என்மனம் உன்பக்கலிலே ஒருகாலைக்கு ஒருகால் மிகவும்
அன்புகொண்டு ஆழ்ந்துநிற்க, அதனைக் கண்ட நீ வெகுகாலத்திற்குப் பின்பு என்னிடத்துத் திருவருட் பார்வையை
வைத்துள்ளாயாதலால், இனிப் பலவகைப்பற்றுக்களால் என்மனம் தீயவழிச்செல்லாதபடி அதன்மாறுபாட்டை நீக்கி
என்னை அடிமைகொள்ளவேண்டு மென்பதாம்.
பயிர் வானையே பார்த்திருத்தற்குக் காரணம் வேறொரு நீர்நிலத்தைத் தேடிப்போகமாட்டாமைபோலவே,
ஐயங்கார் இங்ஙனம் ஆதற்குக் காரணம் வேறொருபுகலிடத்தைப் பெறாமையென்க.
வாளாஎன்பதற்கு – உன் கருணையைப் பெறுவதற்குஉரிய உபாயம் என்னிடத்து இல்லாதிருக்கவும் என்று
கருத்துக் கொள்ளினும் அமையும். எம்பெருமான் திருவருளைப் பெற்றபிறகு ‘என்னாசைத்திருக்கோட்டியாள்’ என்று
பிரார்த்திப்பதற்குக் காரணம் என்னையோ வெனின், – “விண்ணுளார்பெருமாற்கடி மைசெய்வாரையுஞ் செறும் ஐம்புலனிவை,”
“இருள்தருமாஞாலம்” என்றபடி நிலத்தின்தன்மையாலும் ஐம்பொறிகளின்வலிமையாலும் ஒருகால் மீண்டும் அவனது
திருவருளுக்கு விலக்காய்ச் செல்லுமாறு நேர்ந்திடுமோ? என்று அதிசங்கை கொண்டமை யென்க.
ஆசை யென்பது – மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்ற மூன்றையும் குறிக்கும்.
இரணியாசுரன் மூவுலகத்தையும் ஆட்சிசெய்தகாலத்தில் தேவர்கள் அவ்வசுரனையொழித்தற்கு வேண்டும்
உபாயத்தை ஆலோசிப்பதற்கு ஏற்றதாய், அசுரரூபத்திரவமில்லாத இடத்தைத் தேடுகையில் கதம்ப முனிவரது சாபத்தால்
‘துஷ்டர்ஒருவரும் வரக்கூடாது’ என்று ஏற்பட்டிருந்த இந்தக்ஷேத்ரம் அவர்கள் கூட்டமாக இருந்து ஆலோசித்தற்கு ஏற்ற
இடமாயிருந்த காரணம்பற்றி, இத்தலத்திற்கு ‘கோஷ்டீபுரம்’ என்று வடமொழியிற் பெயர்;
அதுவே, ‘கோட்டியூர்’ எனத் தமிழில் வழங்குகின்றது.
இத்தலத்திற்கு ‘தேன்பார்ப்பினோசை’ என்று அடைமொழி கொடுத்துக் கூறியதனால், இத்தலம் வசித்தற்கு இனிய
சோலையைக்கொண்டுள்ளதாய் நீர்வளநிலவளங்களால் மிக்கிருக்கு மென்பது பெறப்படும்.
‘தேன்பார்ப்பின்ஓசைத்திருக்கோட்டியூர்’ என்பதற்கு – ‘வண்டுபோல் ஸாரக்ராஹியான எம்பெருமானார்
திருக்கோட்டியூர் நம்பியினிடத்துத் திருமந்திரத்தை உபதேசங்கொண்டருளி, விமானத்தின்மீது ஏறியிருந்து
பரமரஹஸ்யமான அந்தத்திருமந்த்ரத்தை எல்லாருங்கேட்டு உய்வுபெறுமாறு உரத்துவெளியிட்டதற்கு
இடமான திருக்கோட்டியூர்’ என்று ஸ்வாபதேசார்த்தங் கூறுவர்.
“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை” என்ற தொல்காப்பியத்தால், இளவண்டை “தேன்பார்ப்பு’ என்றார்.
தேன் – வண்டின் சாதிபேதம்.
————-
43-திரு மெய்யம்-பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறுதல் –
ஆள் ஆய் உனக்கு அன்பு ஆய் ஆசை ஆய் நாணிலி ஆய்
வாளா மனைவி என்று வாழ்வேனைக் கேளாய்
திரு மெய்ய மாயா சிலைகால் வளைத்து
வரும் எய்ய மாயா மதன் –43-
(இ – ள்.) திருமெய்யம் மாயா – திருமெய்யமென்னுந் தலத்தி லெழுந்தருளியுள்ள ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடையவனே! –
உனக்கு – உன்னிடத்தில்,
ஆள் ஆய் – அடிமைப்பட்டு,
அன்பு ஆய் – அன்புடையவளாய்,
ஆசை ஆய் – ஆசைகொண்டு,
நாண் இலி ஆய் – வெட்கமற்றவளாய்,
வாளா – வீணாக (பெயர்மாத்திரத்தால்),
மனைவி என்று வாழ்வேனை – மனைவியென்று வாழ்கின்ற என்னை,
கேளாய் – நீ கேளாமல் உபேக்ஷித்துவிட்டாய்;
மாயா மதன் – அழிந்தொழியாத மன்மதன்,
சிலை கால் வளைத்து – (தனது) கருப்புவில்லை (நாணேற்றி) நுனிப்புறங்களில் வளைத்துப் பிடித்துக்கொண்டு,
எய்ய – (என்மீது மலரம்புகளை) எய்துவருத்துமாறு,
வரும் – வருவானே! (என் செய்வேன்!!) (எ – று.)
தலைமகன் பரத்தையிற்பிரிவிற் பிரிந்தனனாக, அப்பிரிவுத்துயரை யாற்றாது வருந்துகின்ற தலைவி அவ்வாற்றாமையே
வாயிலாக உருவெளித்தோற்றத்தில் எதிரில் நிற்கின்ற தலைவனை முன்னிலைப்படுத்திக் கூறியது, இது.
காமநோய் மிகமுதிர்தற்கு உரிய காலத்தில் ஆற்றாமைமிகுதியால் தன்னுயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேறு
விரகு இல்லாமல் தலைமகள் தலைமகனைக் கருதி இவ்வாறு கூறி முறையிடுகின்றன ளென்க.
எனக்கு நீ அருள்புரியாயாயின் நினதுபிரிவுத்துயரை யாற்றாது இறந்துபடுவே னென்பது, குறிப்பு.
“பரத்தையிற்பிரிதல் ஓதற்குப்படர்தல், அருட்டகுகாவலொடு தூதிற்கு அகறல்,
உதவிக்குஏகல் நிதியிற்குஇகத்தல் என்று, உரைபெறுகற்பிற் பிரிவு அறுவகைத்தே” என்று கூறப்படுகின்ற அறுவகைப்பிரிவுகளுள்,
இது- ‘வாளாமனைவியென்றுவாழ்வேனை’ என்று புலந்துகூறுதலால், பரத்தையிற் பிரிவாதல் பெறப்படும்.
தலைமகள் தலைமகனிடத்துத் தான்பேரன்புவைத்து அவனையன்றி வேறொன்றை யறியாத கற்புடையா ளென்பாள்,
‘ஆளாய் உனக்கன்பாய் ஆசையாய் நாணிலியாய் வாளா மனைவியென்று வாழ்வேனை’ என்றாள்.
அன்பு என்பது – ஒரு பொருளினிடத்து முதலில்தோன்றுகின்ற விருப்ப மென்றும்,
ஆசை என்பது – அவ்வன்பு முதிர்ந்து அதை விட்டுப் பிரிந்தால் தரிக்கமுடியாத நிலையென்றும் வேறுபாடு உணரத்தக்கது.
தமது காமத்தின் தன்மையைத் தாமே சொல்வது குலமகளிர்க்கு அடுப்பதன்று;
ஆயினும், யான் அக்காமமிகுதியால் மரணவேதனையை யடையும் படியான நிலையைப் பெற்றதனால்,
யானே எனது காமத்தை இப்பொழுது வெளியிட்டுக்கூறுமாறு நேர்ந்த தன்மைக்கு இரங்குவே னென்பாள், ‘நாணிலியாய்’ என்றாள்.
மன்மதன் சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்பினால் இறந்ததாக உலகத்தார் கூறுகின்றனரே,
அது என்னளவில் இல்லையாயிற்றோ? என்ற கருத்தும்; கண்ணோட்டமின்றி உலகத்துஉயிர்களைக் கொள்ளைகொள்ளுகின்ற
யமன் இம்மன்மதனுயிரையுங் கொள்வானாயின் யான் உய்வேனே, இம்மன்மதனுக்கு அக்கூற்றுவனால் மாய்வு நேரவில்லையே!
இதுவும் என்வினையோ? என்ற கருத்தும் “வருமெய்யமாயாமதன்’ என்ற தொடரில் தோன்றும்.
கேளாய் என்பதை, உடன் பாட்டுமுற்றாகக் கொண்டு, என்சொல்லைக் கேட்டருளவேண்டு மென்றும் பொருளுரைக்கலாம்;
கேட்டால்தான் யான் வாழ்வுபெறுவே னென்பது, கருத்து.
ஐயங்கார் தமதுஞானக்கண்ணுக்குச் சிற்சிலசமயங்களில் எம்பெருமான் இலக்காகின்றபொழுதே அவனைக் கிட்டி
முத்தியின்பமனுபவிக்கும் படியான ஆசை கொள்ள, அவரை அப்பெருமான் அப்பொழுதே தன்பக்கல் சேர்த்துக்
கொள்ளாது காரியாந்தரங்களிற் கருத்தூன்றி மறைய, அதனாலுண்டான துயரமிகுதியினால் ஐயங்கார்
அவனையே இடைவிடாது சிந்தித்துக்கொண்டு மிகவருந்தி அவனை நொந்துகூறுவது, இதற்கு உள்ளுறைபொருள்.
தனது ஸ்வரூபத்திற்கு ஒவ்வாமையாலே உபேக்ஷித்தாலும் எதிராக உபேக்ஷியாமலும்,
வேறுகதியை நாடாமலும் முன்புள்ள அவனது சம்பந்தத்தையே நினைத்து மற்றும் அவனால் உதவியைப் பெற நாடி
அவன் காலிலேயே விழுந்துகிடக்குந்தன்மையை யுடையவர் ஐயங்கார் என்பது, இங்குப் பெறப்படும்.
ஸத்யதேவதைகள் திருமாலைநோக்கித் தவஞ்செய்த தலமாதல்பற்றி, அத்திருமலை ஸத்யகிரியென்றும்,
அங்குத்தோன்றிய திருமால் ஸத்யகிரிநாதனென்றும் பெயர்பெறுவர்;
சத்தியகிரியென்ற அச்சொல்லே திருமெய்யமலையென்றும், அத்திருப்பதி திருமெய்யமென்றும் வழங்கப்பெறும்.
————
44-திருப் புல்லாணி –
மத யானைக் கோள் விடுத்து மா முதலை கொன்ற
கதையால் இதயம் கரையும் முதல் ஆய
புல்லாணி மாலே புறத்தோர் புகழ் இருப்பு
வல் ஆணி என் செவிக்கு மாறு –44-
(இ – ள்.) முதல் ஆய – முழுமுதற்கடவுளாகிய,
புல்லாணி மாலே – திருப்புல்லாணியென்னுந் திவ்வியதலத்தில் எழுந்தருளியுள்ள திருமாலே! –
மதம் யானை கோள்விடுத்து – மதம்பெருகுந்தன்மையுள்ள கஜேந்திராழ்வானது (முதலை பற்றியதனாலாகிய) துன்பத்தைப் போக்கி,
மா முதலை கொன்ற – (அதனைப்பிடித்துவருத்திய) பெரிய அம்முதலையை
(அவ்யானை ஆதிமூலமே! என்றுகூவியபோது தன்சக்கராயுதத்தாற்) கொன்ற,
கதையால் – வரலாற்றினால்,
இதயம் கரையும் – (எனது) மனம் உருகும்; (அத்தகைய உனது புகழல்லாமல்),
புறத்தோர் புகழ் – தேவதாந்தரங்களினுடைய புகழ்,
என் செவிக்கு – எனது காதுகளுக்கு,
மாறு – விரோதமான,
இரும்பு வல் ஆணி – வலிய இருப்பாணிபோன்றதாம்; (எ – று.)
பரதேவதையான உனது புகழ் என்செவிக்கு இன்பந்தருமே யன்றி, தேவதாந்தரங்களினது புகழ் என்செவிகளுக்கு
இன்னாதாகு மென்பதாம். “செவிக்குஇனாத கீர்த்தியார்” என்ற ஆழ்வாரருளிச்செயலும்,
“த்ரஷ்டவ்ய ரல்லாதவோபாதிஸ்ரோதவ்யருமல்லர்; கேட்கவேண்டியிருந்திகோளேயாகிலும், பித்ருவதப்ரஹித்தியென்ன,
தத்பலமான பிக்ஷாடநசாரித்ரப்ரதையென்ன, அத்வரத்வம்ஸகதையென்ன, ஸ்வஸுரவதகதையென்ன இத்யாதி
ஸ்ரவணகடுகமான கீர்த்தியையுடையராயிருப்பர்.
ம்ருதனான புத்ரனை ஸாந்தீபநிக்கு மீட்டுக்கொடுத்தான்; புநராவ்ருத்தியில்லாத தேசத்தினின்றும் வைதிகன்
புத்ரர்களை மீட்டுக்கொடுத்தான் என்றும் இத்யாதிகளாலே ஸம்ஸ்ரவேமதுரமான கீர்த்தியனிறே” என்ற அதன்வ்யாக்யாநமும்,
‘புறத்தோர் புகழ் என்செவிக்கு மாறு’ என்றவிடத்துக் கருதத்தக்கன.
“மறந்தும் புறந்தொழாமாந்தர்,”
“சிந்தைமற்றொன்றின் றிறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும்” என்றபடி
முழுமுதற்கடவுளான திருமாலையன்றிப் பிறப்பு இறப்புத் துன்பமுடைய பிறிதொருதெய்வத்தைச் சிறிதும்
பொருள்செய்யாத நிறைவுடையவர் ஐயங்கா ரென்பது, இச்செய்யுளிற் போதரும்,
உயர்திணைப்பிறவியாதல் பகுத்தறிவாதல் நல்லொழுக்கமாதல் ஒன்றுமின்றிக்கே கேவலம் தன்னிடத்துப்
பக்திகொண்டு தனக்கு அடிமையான பிராணியினிடத்து அருளினால், அதற்குத் துன்பஞ்செய்த பிராணியின்
விஷயமாகப் பெருமான் தனதுகுளிர்ந்ததிருவுள்ளத்திலே கொடியசீற்றத்தைக் கொண்டு அரைகுலையத் தலைகுலைய
மடுக்கரைக்கே வந்துஉதவின மகாகுணத்தில் “இது என்னநீர்மையோ!’ என்று ஈடுபட்டு
“மாமுதலைகொன்ற கதையா விதயங்கரையும்’ என்றனர். தன்னிலமாகிய நீரிலே மலையொத்த யானையையும்
வெல்லவல்ல வலிமையுடைய தென்பார், “மாமுதலை’ என்றார்.
‘இருப்பு வல்லாணி’ என்றது, நாராசம்போலக் கொடியது என்ற கருத்தைப் புலப்படுத்தும்.
புல்லாணி – புல்லணை யென்பதன் மரூஉ; இது, சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லுதற்பொருட்டு
இராமபிரான் வானரசேனையுடனே புறப்பட்டுச் சென்று தென்கடற்கரையை யடைந்து கடல் கடக்க உபாயஞ்சொல்ல
வேண்டு மென்று அக்கடலரசனான வருணனைப் பிரார்த்தித்துத் தருப்பத்திற் படுத்து ஏழுநாளளவும்
பிராயோபவேசமாகக் கிடந்த தல மாதலால், இது வடமொழியில் தர்ப்பஸயநம் எனப்படும்;
புல்லணை என்பது – அதற்கு ஏற்ற தென்மொழி.
————
45-திருத் தண் காலூர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி இரங்கல் –
மாறு பட வாடை எனும் வன்கால் எனமுலை மேல்
ஊறு பட ஊர்ந்த உளைவு எல்லாம் மாற
திருத் தண் காலூரான் திருத் தண் துழாயின்
மருத் தண் கால் ஊராதோ வாய்ந்து –45–
(இ – ள்.) வாடை எனும் வல் கால் – வாடையென்கின்ற வலியகாற்றானது,
மாறுபட – (எனக்கு) விரோதமாக,
வந்து -, என் முலைமேல் – எனது தனங்களின்மீது,
ஊறுபட – தாபமுண்டாகும்படி,
ஊர்ந்த – தவழ்ந்துசென்றதனாலுண்டாகிய,
உளைவு எல்லாம் – வருத்தம்முழுதும்,
மாற – (அடியோடு) நீங்கும்படி, –
திருத்தண்காலூரான் – திருத்தண்கா லென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளியிருக்குந் தலைவனணிந்த,
திரு தண் துழாயின் – அழகிய குளிர்ந்த திருத்துழாயினது,
மரு – வாசனைபொருந்திய,
தண் கால் – குளிர்ந்த காற்றானது,
வாய்ந்து – இனிதாகப்பொருந்தி,
ஊராதோ – (என் மீது) தவழ்ந்துவீசாதோ? (எ – று.)
களவொழுக்கத்தால் தலைமகனோடு கூடிப்பிரிந்த தலைமகள் காமோத் தீபகப்பொருள்களுளொன்றான காற்றுத்
தன்மீது வீசிவருத்த அதற்குப் பொறாளாய், ‘இனித் தலைவனுடைய சம்பந்தம்பெற்ற பொருளினது தொடர்பினாலாவது
ஒருவாறு இந்நோய் தணியப்பெறலாம்’ என்று கருதி, தலைவனணிந்த திருத்துழாய்மீது பட்டு அந்நறுமணத்தோடு
வருகின்ற காற்றாவது தன்மேல் வீசப்பெறுமோ? என்று ஏங்கிக் கூறுகின்றன ளென்பதாம்.
கந்தவஹ னென்றும், கந்தவாஹனென்றும் பெயர்பெறுமாறு ஆங்காங்குள்ள மணத்தைக்கொண்டுவீசும் இயல்பினதும்,
பொதுப்பட எல்லாவுயிர்கட்குங் குளிர்ச்சியைச்செய்வதுமான காற்றானது தனதுதலைவர் சாத்திக்கொண்டுள்ள
திருத்துழாயின்மேற் பட்டு அதன்நறுமணத்தைக் கொண்டுவந்து தன்மேல் வீசும்போது அவரைப்பிரிந்து நிற்கின்ற
தனக்கு அமிருதம்போலுமென்று கருதி அக்காற்றைத் தலைவி வேண்டுகின்றன ளென்க.
ஒருபொருளே தலைவன் சம்பந்தத்தைப் பெற்றபோது, இனிமைதருதலும் பெறாதபோது துன்பம் விளைத்தலும் கருதத்தக்கன.
பிரிந்தாரை வருத்துதலில், துணைவேண்டாமல் அஸஹாயமான திறமையுள்ள தென்பார், ‘வாடையெனும்வன்கால்’ என்றார்.
ஐயங்கார், எம்பெருமானைச் சேராதபோது லௌகிகபதார்த்தங்கள் தம்மை வருத்த, அந்த எம்பெருமானது சாந்நித்தியம்
கிடையாவிடினும் பாகவதர்களுடைய சம்பந்தங் கிடைத்தாலும் அதுகொண்டு ஈடேறலாமென்று எதிர்பார்ப்பது,
இதற்கு உள்ளுறைபொருள். விவரம்உய்த்துணர்க.
————
46-திருமோகூர் -அன்னத்தைத் தூது விடுத்த தலைவி அதனைக் குறித்து ஐயுறுதல் —
வாயால் மலர் கோதி வாவி தொறும் மேயுமோ
மேயாமல் அப்பால் விரையுமோ மாயன்
திரு மோகூர் வாய் இன்று சேருமோ நாளை
வருமோ கூர் வாய் அன்னம் வாழ்ந்து –46-
(இ – ள்.) கூர் வாய் அன்னம் – கூர்மையுள்ள வாயையுடைய (என்னால் தூதுவிடுக்கப்பட்ட) அன்னப்பறவையானது, –
வாயால் – தன்வாயலகினால்,
மலர் கோதி – தாமரைமலரினிதழ்களைக் கோதிக்கொண்டு,
வாவிதொறும் – (இடைவழியிலுள்ள) தடாகங்கள்தோறும்,
மேயுமோ – மேய்ந்து கொண்டிருக்குமோ?
மேயாமல் – அவ்வாறு தன்காரியத்தைச்செய்யாமல்,
வாழ்ந்து – வாழ்ச்சிபெற்று,
அப்பால் – அப்புறம்,
விரையுமோ – (என்காரி யத்தைச் செய்வதாக) விரைந்துசெல்லுமோ?
மாயன் – ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடைய (எனதுதலைவனாகிய) திருமாலினது,
திருமோகூர்வாய் – திருமோகூரினிடத்து,
இன்று – இன்றைக்கு,
சேருமோ – சென்றுசேருமோ?
நாளை வருமோ – (எனது நிலைமைகளைத் தலைவன்பக்கற் சொல்லிவிட்டு) நாளைக்கு திரும்பிவருமோ? (எ – று.)
தலைவனைப்பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாது வருந்தும்போது அங்ஙனம் இரங்குமிடம் நெய்தனில மாதலால்,
திருமோகூரைச்சார்ந்த மருதநிலத்து வாழ்கின்ற அன்னப்பறவை அந்நெய்தனிலத்துக்கழிக்கரையில் இரைதேடுதற்கு வர,
அதனை நோக்கி, ‘எனதுநிலைமைகளை என்தலைவனான காளமேகப் பெருமான்பக்கல் சொல்லுதற்கு
எனக்குத் தூதாகவேண்டும்’ என்று வேண்டி விடுத்து, தனது ஆற்றாமைமிகுதியால்,
‘நான் தூதுவிடுத்த அன்னம் என்னை மறந்திட்டுத் தன்காரியத்தைச் செய்யுமோ? அன்றி, என்காரியத்தைச் செய்யுமோ?’ என்று
ஐயுற்றுக் கூறியது, இது,
“விதியினாற் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள்,”
“இடரில்போகம்மூழ்கி யிணைந் தாடும் மடவன்னங்காள்,”
“அலர்மேலசையு மன்னங்காள்,”
“தடம்புனல் வா யிரைதேர்ந்து, மிகவின்பம்பட மேவும் மென்னடைய வன்னங்காள்” என்றபடி அன்னப் பறவை சிரமம்
பொறாததும் மந்தகதியுடையதும் இனிய இடத்தில் வீற்றிருந்து கிடைத்த இரையை யுண்டு பிரிவுத்துயரறியாது
தானும் தன்துணையுங் கூடிவாழ்ந்து களித்திருப்பதும் தன்னலம்பேணுவது மாதலால், அது அந்தப்போகத்தை விட்டு
எனக்காக அவ்வளவுதூரம் வருந்திச்சென்று விரைவில் எனது நிலைமையைத் தலைவர்க்குச்சொல்லி
நேரில் மீண்டுவந்து அவர்சொல்லை எனக்குச் சொல்லுமோ? சொல்லாதோ? என்று ஐயுறவேண்டுவதாயிற் றென்க.
‘வாவிதொறும் மேயுமோ, அப்பால் விரையுமோ’ என்பன – தலைவியின் ஐயத்தையும்,
‘திருமோகூர்வாய் இன்றுசேருமோ, நாளைவருமோ’ என்பன – அன்னப்பறவை அவ்வாறு விரைந்து செல்வதானால்
இன்றுபோய்ச்சேர்ந்து நாளை மீண்டுவரக் கூடுமோ? என்று தலைவி மனோரதித்துநிற்பதையும் காட்டும்.
பிரிந்த தலைவன் வந்திடுவ னென்று ஆறியிருக்கவொண்ணாதே அதன்வரவுக்கு விரைந்து ஆள்விடும் படியாயிற்று ஆற்றாமைமிகுதி.
“இயம்புகின்றகாலத்து எகினம் மயில் கிள்ளை, பயன்பெறுமேகம் பூவை பாங்கி –
நயந்தகுயில், பேதைநெஞ்சம் தென்றல் பிரமர மீரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை” என்ற இரத்தினச் சுருக்கத்தால்
தூதிற்குஉரியவை இன்னவை யெனக் காண்க.
“மறக்குமோ, காவின் மதுவருந்தி யப்பாற்,
பறக்குமோ சந்நிதிமுன்பாமோ – சிறக்கத்,
தருவரங்கள் கேட்குமோ தாழ்க்குமோ நெஞ்சே,
திருவரங்கர்பாற் போனதேன்” என்ற திருவரங்கக் கலம்பகச் செய்யுளோடு ஒத்த வாய்பாடுடையது, இச்செய்யுள்.
“இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல், இவ்வளவிற் காதலியம்புங்கொல் –
இவ்வளவில், மீளுங்கொ லென்றுரையா விம்மினான்” என்ற புகழேந்திவாக்கு இங்குக் கருதத்தக்கது.
ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே அவனது நிரந்தராநுபவத்தைப் பெற விரும்பிய
ஐயங்கார் தமது நிலைமையை அப்பெருமான்சந்நிதியில் விண்ணப்பஞ்செய்யும்படி ஆசாரியர்களைப் பிரார்த்தித்து
அவர்கள் நமதுகாரியத்தைக் கைகூட்டுவிக்க வேண்டுமே யென்று கவலுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
வெண்ணிறமுடையதாய் இரண்டு இறகுகளுடன் கூடி, எங்குங் கவலையற்றுத்திரிந்து, தன்னையேயன்றித்
தனது பரிவாரத்தையும் பாதுகாப்பதாய், கருமமே கண்ணாயிருந்து உத்தேசித்த காரியத்தைச் சமயம் வாய்க்கும் போது
தவறாது செய்து முடித்துக் கொள்வதான அன்னப்பறவையை –
சுத்தசத்துவகுணமுடைமையால் உள்ளும்புறமும் ஒக்க நிர்மலஸ்வபாவராய், ஞானம் ஒழுக்கம் என்னும் இரண்டு
சாதனங்களுடன் கூடித் திவ்வியதேசங்களிலெல்லாம் கவலையற்று யாத்திரைசெய்பவராய்,
தம்மையே யன்றித் தம்மையடுத்தவர்களையும் பாதுகாப்பவராய், காரியமே கருத்தாயிருந்து அதனை உரிய
காலத்தில் தவறாதுசெய்து முடிக்கவல்ல ஆசாரியர் என்னத் தகும். விவரம் கேட்டுஉணர்க.
திருமோகூர் – வடமொழியில் ஸ்ரீமோஹநபுரம் எனப்படும்.
—————-
47-திருக் கூடல் –
வாழ்விப்பான் எண்ணமோ வல்வினையில் இன்னம் எனை
ஆழ்விப்பான் எண்ணமோ அஃது உரையாய் தாழ்வு இலாப்
பாடல் அழகு ஆர் புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும்
கூடல் அழகா நின் குறிப்பு –47–
(இ – ள்.) தாழ்வு இலா – இழிவில்லாத,
பாடல் – பாசுரங்களின்,
அழகு – அழகானது,
ஆர் – பொருந்திய,
புதுவை பட்டர்பிரான் – ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்த பெரியாழ்வார்,
கொண்டாடும் – புகழ்ந்துபாடிய,
கூடல் – திருக்கூடலென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளிய,
அழகா – அழகனென்னுந் திருநாமமுடையவனே! –
நின் குறிப்பு – உனது திரு வுள்ளக்கருத்து, –
என்னை – அடியேனை,
வாழ்விப்பான் – நல்வாழ்வுபெறும் படி,
எண்ணமோ – திருவுள்ளமோ? (அன்றி),
இன்னம் – இன்னமும்,
வல்வினையில் – கொடிய இருவினைகளில்,
ஆழ்விப்பான் – அழுந்தச்செய்யும்படி,
எண்ணமோ – திருவுள்ளமோ?
அஃது அறியேன் – அதனை இன்னதென்று தெரிந்திலேன்; (எ – று.)
‘அவனன்றி யோரணுவும் ‘அசையாது’ என்றபடி எல்லாம் உனது ஸங்கல்பத்தின்படியே யாகுமாதலால்,
நற்கதியிற்சேர்ப்பாயோ? அன்றி, இவ்வுல கத்தில் அலையவிடுவாயோ? என்னைக்குறித்து நீ கொண்டிருக்கின்ற
உனது திருவுள்ளம் இன்னதென்று அறியாது அடியேன் தியங்குகின்றே னென்பதாம்.
எம்பெருமானே ஆன்மாக்களை உஜ்ஜீவிப்பித்தற்கு ஏற்ற உபாய மாதலாலும், அப்பிராமன அடைதற்கு ஏற்ற உபாயங்களைச் செய்து
அவனைக் கூடுவோ மென்றற்கு ஸ்வரூபாநுரூபமாயும் ஸுகரமாயு முள்ள உபாயம் வேறொன்றும் இல்லாமையாலும்,
நன்மை தீமைகட்கு அப்பிரானது திரு வருளே ஏற்ற உபாயமா மென்பதை, இதனால் அறிவித்தன ரென்க.
“சதுமுகத்துத், தெய்வந் தொழுந் தெய்வமே யென்கொலோ வுன்திருவுளமே” என்றார் அழகரந்தாதியிலும்.
புதுவை – புத்தூர் என்பதன் மரூஉ. பெரியாழ்வார் மதுரைநகரின் அதிபதியான வல்லபதேவபாண்டியனது
வேண்டுகோளின்படி பரதத்வநிர் ணயஞ் செய்ய, அதுகண்ட அம்மன்னவன் மனமுவந்து இவரை யானையின் மேலேற்றிக்
கூடல்நகரை வலஞ்செய்வித்தபோது தன்புத்திரன்பவனி வருதலைப்பார்த்து ஆனந்தமடைகிற தாய்தந்தையர்போலத்
தன்பக்தன் உலாக் கொள்ளுதலை நோக்கி உவத்தற்குப் பிராட்டியுடனே பெருமாள் விண்ணவர் புடைசூழ வானத்தி லெழுந்தருள,
அக்காட்சியைக் கண்டு பாகவத சிரோமணியாகிய அப்பெரியாழ்வார் தாம் சிறிதும் இறுமாப்புக் கொள்ளாமல்,
அத்தேவாதிதேவனுடைய ஸர்வஜ்ஞத்வம் ஸர்வசக்தித்வம் முதலிய மங்களகுணங்களைக் கருதுதற்கு முன்னே
அக்கருடவாகனனது சௌந்தரி யத்திற் கண்செலுத்தி அதனையே சேவித்து அதில்ஈடுபட்டு ஆழ்ந்து பரவசராய்,
அதனால் தம்நிலையையும் எம்பெருமான் நிலையையும் மறந்து பயசங்கை கொண்டு
‘இத்திருமேனிக்கு எவ்வாற்றாலும் ஒருகுறைவாராதிருக்கவேணும்’ என்று வாழ்த்துபவராய்
யானைமணிகளையே தாளமாகக்கொண்டு ‘திருப் பல்லாண்டு’ என்னுந் திவ்வியப்பிரபந்தத்தைப் பாடியருளின ராதலால்,
“தாழ்விலாப் பாடலழகார் புதுவைப் பட்டர்பிரான் கொண்டாடுங் கூட லழகா’ என்றார்.
இவ்வாழ்வார்க்குச் சேவைசாதித்த அவ்வெம்பெருமான், “அஷ்டாங்கவிமானத்தின்மீது எழுந்தருளியிருக்கின்ற
‘வையந்தாயபெருமான்’ என்பர். கூடல் என்பது – தென்மதுரைக்கு ஓர்பெயர்.
—————-
48-ஸ்ரீ வில்லி புத்தூர் –
குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை
நிறத்த ஊர் விண்டு சித்தர் நீடு ஊர் பிறப்பு இலி ஊர்
தாழ்வு இல் இ புத்தூர் என்று ஐவர்க்குத் தான் இரந்தான்
வாழ் வில்லி புத்தூர் வளம் –48-
(இ – ள்.) கோதை நிறத்த ஊர் – ஆண்டாளின் திருவவதாரத்தால் மேம்பாடுபெற்ற ஊரும், –
விண்டுசித்தர் நீடு ஊர் – பெரியாழ்வார் வாழ்ந்த பெரியஊரும், –
பிறப்புஇலி – ஜநநமில்லாதவனும்,
தாழ்வு இல்லி புதுஊர் என்று ஐவர்க்கு தான் இரந்தான் – தாழ்வில்லாத (பெருஞ்சிறப்புடைய) துரியோதநனே!
புதியஊர்களை (க் கொடுப்பாயாக’) என்று பஞ்சபாண்ட வர்க்காகத் தான் தூதுசென்று இரந்தவனுமாகிய திருமால்,
வாழ் – எழுந்த ருளியிருக்கின்ற,
ஊர் – ஊருமான,
வில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூரினது,
வளம் – செழிப்பானது,
ஒருவர் குறித்து கொண்டாடும் கொள்கைத்தோ – ஒருவரால் நினைத்துப் பாராட்டுந் தன்மையுடையதோ? (அன்று என்றபடி).
பிரணவமானது அகார உகார மகாரங்களினால் பெருமாள் பிராட்டி சேதநன் என்னும் மூவரையும் தோற்றுவிப்பதுபோல,
வடபெருங்கோயிலு டையான் ஆண்டாள் பெரியாழ்வார் என்கிற மூவரையும் தன்னிடத்திற் கொண்டிருப்பதனால் மிகவும்
உத்தேசியமான ஸ்ரீவில்லிபுத்தூரினது பெருமையை எவராலுஞ் சொல்லமுடியா தென்பதாம்.
“பொன்னும் முத்தும் மாணிக்கமு மிட்டுச்செய்த ஆபரணம்போலே, நாச்சியாரும் பெரியாழ்வாரும்
வடபெருங்கோயிலுடையானு மான அலங்காரமுள்ள தேசமிறே” என்ற பெரியார்வாக்கு இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
“பிராட்டிக்கு ஸ்ரீமிதி லையும் திருவயோத்யையும் போலவும், நப்பின்னைப்பிராட்டிக்குக் கும்பகுலமும்
திருவாய்ப்பாடியும் போலவு மன்றிக்கே ஆண்டாளுக்குப் பிறவியும் புக்கவிடமும் ஓரூரிலேயான
ஏற்றம் இவ்வூர்க்கேயிறே உள்ளது” என்ப வாதலால், ‘கோதைநிறத்த வூர்’ என்றார்.
‘குறித்தொருவர்கொண்டாடுங் கொள்கைத்தோ’ என்ற வாக்கியத்தை, கோதை நிறத்தவூர், விண்டுசித்தர் நீடூர், பிறப்பிலியூர்
என்ற தொடர்கள் சமர்த்தித்துநிற்பது – தொடர்நிலைச்செய்யுட்குறியணியாம்.
இளமைதொடங்கி எப்பொழுதும் தமதுசித்தத்தை விஷ்ணுவினிடத்திலே செலுத்தி
“மார்வமென்பதோர் கோயிலமைத்து மாதவனென்னுந் தெய்வத்தை நாட்டி,
ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க் கரவதண்டத்தி லுய்யலுமாமே” என்னும்படி அப்பெருமானை மனத்திலே
நிலைநிறுத்தித் தியானித்து வந்ததனால், பெரியாழ்வார் ‘விஷ்ணுசித்தர்’ என்று பெயர்பெற்றனர்.
விண்டு = விஷ்ணு. ஏற்பவர் ஈபவரிடத்திற் சென்று அவரைப் புனைந்துகூறும் உலகவியல்புபற்றி,
பஞ்சவர்க்குத் தூதுவனாய்ச் சென்ற ஸ்ரீகிருஷ்ணன் துரியோதநனை நோக்கி ‘தாழ்வில்லி’ என்று புகழ்ந்துவிளித்தன னென்க:
இனி, இத்தொடர்க்கு – துரியோதனன் எவரையும் பணியாத இயல்பினனாதல்பற்றி, அவனை ‘வணங்காமுடிமன்னனே’ என்று
விளித்ததாகக் கொள்ளினுமாம். மூன்றாமடியில் ஏற்ற வினைமுற்று வருவித்து உரைக்கப்பட்டது.
அன்றி, தாழ்வுஇல் இ புத்தூர் என்று பிரித்து, இ என்பதை ‘ஈ’ என்ற ஏவல் வினைமுற்றின் குறுக்கலெனக் கொண்டு,
தாமதித்தலில்லாமல் புதியஊர்க ளைக்கொடு என்று பொருள் உரைப்பினுமாம்.
ஐவர் – தொகைக்குறிப்பு. ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவரி ரூபங்களாய்ப் பிறப்பது போலப்
பரமாத்துமா உபேந்த்ர மத்ஸ்ய கூர்மாதிஅவதாரங்கள் செய்வது கருமவசத்தினாலன்றித் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின் பொருட்டும்,
தருமத்தை நிலைநிறுத்துதற்பொருட்டும் அப்பெருமான்கொண்ட இச்சையினாலேயே யாகு மென்ற இவ்வுண்மையை யுணர்த்த,
‘பிறப்பிலி – தாழ்வில்லிபுத்தூரென்றைவர்க்குத்தான்இரந்தான்’ என்றார்;
இவ்வுண்மை யையுணர்தல் – அவதாரரஹஸ்யஜ்ஞாநம் எனப்படும்.
‘தாழ்வில்லிபுத்தூ ரென்றைவர்க்குத்தான் இரந்தான்’ என்ற தொடரில், பக்தபராதீநனாய் எம்பெருமான் தூதுசென்ற நீர்மையை விளக்கியபடி.
வில்லி கண்டர் என்பவர்களில் மூத்தவனான வில்லியென்பவனால் ஏற்படுத்தப்பட்ட புதியநகரமாகையால்,
இதற்கு, ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்று திருநாம மென்பர்.
————
49-திருக் குருகூர் –
வளம் தழைக்க உண்டால் என் வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என் சீ சீ குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள்
வண் குருகூர் என்னாத வாய் –49-
(இ – ள்.) ‘குளிர்ந்த பொழில் – (மரச்செறிவாற்) குளிர்ச்சி பொருந்திய சோலைகள்சூழ்ந்த,
குருகு ஊர் தண் வாவி – குருகுஎன்னும் நீர்வாழ்பறவைகள் வாழப்பெற்றுக் குளிர்ந்த நீர்நிலைகளையுடைய,
சடகோபன் ஊர் – நம்மாழ்வார் திருவவதரித்த தலமானது,
எங்கள் வள் குருகூர் – வளப்பம்பொ ருந்திய எங்கள்திருக்குருகூர்’
என்னாத – என்று ஒருதரமேனுஞ் சொல்லாத,
வாய் – வாயானது, –
வளம் தழைக்க – வளமாக,
உண்டால் என் – உணவுகளைப் புசித்தால் என்னபயனுண்டாகும்?
வாசம் மணந்தால் என் – முகவாசப்பொருள்களையுண்டு மணம் வீசினால் தான் என்ன பயன்?
தெளிந்த கலை கற்றால் என் – மனந்தெளிவடைதற்குஉரிய சாஸ்திரங்களைக் கற்றால் தான் என்னபயன்?
(ஒன்றினாலும் ஒருபயனும் உண்டாகாது என்றபடி); (எ – று.) – சீசீ – இகழ்ச்சிக்குறிப்பிடைச்சொல்.
சிலர் வாய்படைத்த பயன் வளப்பமானஉணவை உண்ணுதலே யென்பர்;
வேறுசிலர் முகவாசப் பொருள்களால் வாயை மணக்கச்செய்தலே வாய் படைத்தபயனென்பர்:
ஞானநூல்களைக் கற்றலே வாய்படைத்த பயனென்பர் மற்றுச்சிலர்: உண்மையிலோ இவையொன்றுமன்று:
திருத்துழாய் பரிமளத்தோடே அங்குரிக்குமாறுபோலத் திருவவதரிக்கும்போதே ஞானநலத்தோடு திருவவதரித்த
நம்மாழ்வாரது திருவவதாரஸ்தலம் திருக்குருகூரென்று ஒருதரமேனுஞ் சொல்லுதலே வாய்படைத்தபய னென்பதாம்.
அங்ஙனம் அவ்வூரின் திருநாமத்தை ஒருமுறைகூறினாலும் முத்தி சித்திக்கு மென்பது, போதரும்.
உயிர்கட்குக் கரணகளேபரங்களைக் கடவுள் அளித்ததற்குக் காரணம் – தன்னையும் தன்னடியாரையும் அடைந்து
ஈடேறுதற்பொருட்டே யாகு மென்ற நூற்கொள்கை இங்குக் கருதத்தக்கது.
வளந்தழைக்க உண்ணுதல் – அறுசுவையுணவை அமர்ந்துஉண்ணுதல். முகவாசப்பொருள்களாவன –
“தக்கோலந் தீம்பூத் தகைசாலிலவங்கங், கர்ப்பூரம் சாதியோ டைந்து”.
“கற்றதனாலாய பய னென்கொல் வாலறிவ, னற்றாடொழாஅ ரெனின்,”
“கற்ககசடறக்கற்பவை கற்றபின், நிற்க வதற்குத்தக” என்றவாறு நூற்பொருள்களைக் கற்றாலும்
அதற்குத்தக்க ஒழுக்க மில்லாவிடின் பயனில்லை யாதலால், ‘தெளிந்தகலை கற்றா லென் சீசீ என்றார்.
நூற்பொருளைக் கற்காவிடினும், “சடகோபனூற் – குரு கூர்” என்று சொல்லவே, வாய்படைத்த பயன் பெறுவரென்ற
கருத்து இங்குத் தொனிக்கும். கர்ப்பத்திலிருக்கிறபொழுது ஞானமுடையனவாயிருக்கின்ற குழந்தைகளைப் பிறந்தவுடனே
தனது ஸ்பரிசத்தால் அஜ்ஞாநத்துக்குஉள்ளாக்கி அழுதல் அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணிவிடுந் தன்மையதான
ஸடம் என்னும் வாயு இவ்வாழ்வார் திருவவதரித்தபொழுது இவரையுந் தொடுதற்குவர, அப்பொழுது இவர்
அதனை உங்காரத்தால் ஒறுத்து ஓட்டி ஒழித்ததனால், ‘சடகோபர்’ என்று இவர்க்குத் திருநாமமாயிற்று.
ஒருகால் பிரமன் எங்குத் தவஞ்செய்வது? என்று சிந்தைகொண்டிருக் கையில், “க – பிரமனே! குரு – (இங்குத் தவஞ்) செய்’ என்று
இத்தலத்தைச் சுட்டி ஆகாயவாணி மொழிந்ததனால் இதற்கு ‘குருகாபுரீ’ என்று பெயர்வந்த தென்பர்.
இத்தலம், நம்மாழ்வார்திருவவதரித்த தலமாதல்பற்றி, ‘ஆழ்வார் திருநகரி’ என்று பெயர்பெறும்.
—————
50-திருத் தொலைவில்லி மங்கலம் —
வாயும் மனைவியர் பூ மங்கையர்கள் எம்பிராற்கு
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம் படைகள் தூய
தொலை வில்லி மங்கலம் ஊர் தோள் புருவம் மேனி
மலை வில் இமம் கலந்த வான் –50–
(இ – ள்.) எம் பிராற்கு – எமது ஸ்வாமிக்கு, –
வாயும் மனைவியர் – பொருந்திய தேவிமார்,
பூமங்கையர்கள் – தாமரைமலரில் வாழ்கின்ற ஸ்ரீ தேவியும் பூதேவியு மாவர்;
ஆயுதங்கள் – படைக்கலங்கள்,
ஆழி முதல் ஐம்படைகள் – சக்கரம் முதலிய பஞ்சாயுதங்களாம்;
ஊர் – திவ்வியதலம்,
தூய தொலைவில்லிமங்கலம் – பரிசுத்தமாகிய தொலைவில்லிமங்கல மென்பதாம்;
தோள் – தோளும்,
புருவம் – புருவமும்,
மேனி – திருமேனிநிறமும், (முறையே),
மலை – பருவதமும்,
வில் – வில்லும்,
இமம் கலந்த வான் – குளிர்ச்சி பொருந்திய ஆகாசமும் போலும்; (எ – று.)
‘பூமங்கையர்’ என்பதில், இரட்டுறமொழிதலால், பூ என்பதைத் தமிழ்மொழியாகக் கொண்டு,
தாமரைமலரில்வாழ்கிற என்றும், ‘பூ’ என்ற வடமொழியின் திரிபாகக்கொண்டு பூமியாகிய என்றும்
இருவகைப் பொருளும் ஒருங்கே கொள்ளப்பட்டன;
“பங்கயமின்னொடு பார்மகள் தேவி,”
“பூமடந்தையும் நிலமடந்தையும் தேவியர்,”
“தேவிமாராவார் திருமகள் பூமி” என்பன காண்க. ‘தோள் – மலை, புருவம் – வில், மேனி – வான்’ என்று முறையே
சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
இமங்கலந்தவான் என்பதற்கு – பனிபொருந்திய விசும்பு எனவும், குளிர்ச்சி பொருந்திய காளமேகம் எனவும் பொருள்கூறினுமாம்.
————-
51-ஸ்ரீ வர மங்கை –
வானோர் முதலா மரம் அளவா எப்பிறப்பும்
ஆனேற்கு அவதியிடல் ஆகாதோ தேன் ஏயும்
பூவர மங்கை புவி மங்கை நாயகனே
சீ வர மங்கை அரை சே –51-
(இ – ள்.) தேன் ஏயும் பூ வர மங்கை – தேன்நிரம்பிய தாமரைமல ரில் வசிக்கின்ற சிறந்த பெரியபிராட்டியார்க்கும்,
புவிமங்கை – பூமிப்பிராட்டி யார்க்கும்,
நாயகனே – தலைவனே!
சீவரமங்கை அரசே – ஸ்ரீவரமங்கை யென்னுந் திவ்விய தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனே! –
வானோர் முதல் ஆ – தேவர்பிறவி முதலாக,
மரம் அளவு ஆ – தாவரப்பிறவி ஈறாக வுள்ள,
எ பிறப்பும் ஆனேற்கு – எல்லாப்பிறவிகளையும் எடுத்து வருந்திய எனக்கு,
அவதி இடல் ஆகாதோ – (இனி யாயினும்) ஒருமுடிவை யேற் படுத்துதல் கூடாதோ? (எ – று.)
தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவரங்களாகின்ற நால்வகையோனிகளிலும் பிறந்து பிறந்து வருந்தி உன்னை யடைக்கலம்
புகுதாது எய்த்த பாவியாகிய எனக்கு, இப்போது உன்னைச் சரணமாக அமர்ந்துபுகுந்து நிற்கின்ற நல்லறிவை நீ அருளியிருத்தலால்,
இனியாவது அப்பிறவித்துயரம் நேராதவாறு என்னைக் கடைக்கணித்துப் பாதுகாக்கவேண்டு மென்பதாம்.
வானோர்முதலா மரம் அளவா எப்பிறப்பு என்பதற்கு – தேவர் மனிதர் விலங்கு புள் ஊர்வன நீர்வாழ்வன தாவரம்
எனப்படுகின்ற ஏழுவகைப்பிறப்பு எனக் கூறுதலு முண்டு.
“முன்னம்பிறந்த பிறப்போ முடிவில்லை.
யின்னம் பிறப்பிக்க வெண்ணாதே – தென்னரங்கம்,
மேவிக்கிடந்தானே வீற்றிருக்க நின்பதத்தென்,
னாலிக் கிடந்தா னருள்’ என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.
சீவரமங்கையென்பது – அத்தலத்திற்கு, அங்குஎழுந்தருளியுள்ள நாச்சியாரின் திருநாமத்தால் வந்தது;
அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் திருநாமத்தைக்கொண்டு, இந்தத் திவ்வியதேசத்தை ‘வானமாமலை’ என்றும் வழங்குவர்;
அதற்கு ஏற்றவடமொழித்திருநாமம், “தோதாத்ரி’ என்பது.
—————
52-திருப்பேரை –
அரைசு ஆகி வையம் முழுது ஆண்டாலும் இன்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் முரைசு ஆரும்
தென் திரைப் பேரைப் பதியான் சீர் கேட்டு நாவில் அவன்
தன் திருப் பேரைப் பதியா தார் –52-
(இ – ள்.) முரைசு ஆகும் – பேரிகைவாத்தியம் முழங்கப்பெற்ற,
தென் திருப்பேரை பதியான் – தெற்கின்கணுள்ள திருப்பேரையென்னுந் திவ்விய தலத்தி லெழுந்தருளிய திருமாலினது,
சீர் – சிறப்பை,
கேட்டு – காதினாற் கேட்டு,
அவன்தன் திருப்பேரை – அப்பிரானது (மகரநெடுங்குழைக்காதன் என்னுந்) திருநாமத்தை,
நாவில் பதியாதார் – தமதுநாக்கினிடத்தில் திருத்தமாக உச்சரியாதவர்கள், –
அரைசு ஆகி – ஒருநாயகமாய்,
வையம் முழுது ஆண்டாலும் – நிலவுலகமுழுவதையும் அரசாட்சிசெய்தாலும்,
இன்பம் கரை சார மாட்டார்கள் – பேரின்பத்திற்குஎல்லைநிலமாகிய முத்தியுலகத்தை அடையமாட்டார்கள்; (எ – று.) –
கண்டீர் – முன்னிலையசை; தேற்றமுமாம்.
தென்திருப்பேரைத்திருமாலினது திருநாமத்தைச் செவியினாற்கேட் டாலும் நாவினாலுச்சரித்தலும் செய்தால்,
பேரின்பத்திற்குஇடமாகிய முத்தியுலகம் வாய்க்கு மென்பதாம். இம்மையிற் பெருஞ்செல்வம்பெற்றுப்
பெரு வாழ்வு வாழ்ந்தாலும் அது இம்மையிலேயே யொழிந்திடுவ தன்றி,
அதனால் மறுமையில் யாதொருநற்பயனுங் கைகூடா தென்க.
அரைசு = அரசு: முரைசு = முரசு: எதுகைநோக்கிய இடைப்போலிகள்.
முரசுஎன்பது – வெற்றிமுரசு கொடைமுரசு மங்கலமுரசு என்ற மூன்றையுங் குறிக்கு மென்றாவது,
சிறப்புப்பெயர் பொதுப்பொருளின்மேலதாய் மங்கலத்தின் பொருட்டு முழங்குகின்ற
வாச்சியங்களெல்லாவற்றையுங் குறிக்கு மென்றாவது கொள்க.
———–
53-ஸ்ரீ வைகுந்தம் –தலைவி இளமை கண்டு செவிலி இரங்குதல் –
தார் உடுத்துத் தூசு தலைக்கு அணியும் பேதை இவள்
நேர் உடுத்த சிந்தை நிலை அறியேன் போர் உடுத்த
பாவைகுந்தம் பண்டு ஒசித்தான் பச்சைத் துழாய் நாடும்
சீ வைகுந்தம் பாடும் தெளிந்து -53–
(இ – ள்.) தார் உடுத்து – (முடியிற்சூடவேண்டிய) பூமாலையை (அரையில்) உடுத்துக்கொண்டு,
தூசு தலைக்கு அணியும் – (அரையில் அணியவேண்டிய) ஆடையை முடியின்மீது தரித்துக்கொள்ளுகின்ற,
பேதை – அறிவு நிரம்பாப் பருவத்தளாகிய,
இவள் – இந்தப்பெண், –
தெளிந்து – மனத் தெளிவுகொண்டு,
போர் உடுத்த – போர்புரிதற்குச் சித்தமாய்நின்ற,
பாவை – பெண்ணாகிய தாடகையானவன் (தன்மீது எறிந்த),
குந்தம் – சூலாயுதத்தை,
பண்டு – முற்காலத்தில் (இராமாவதாரத்தில்)
ஒசித்தான் – (தனது வில்லம்பையேவி முறித்த) திருமாலினது,
பச்சை துழாய் – பசுமை யாகிய திருத்துழாய்மாலையை,
நாடும் – விரும்புவாள்;
சீவைகுந்தம் பாடும் – (அத்திருமாலெழுந்தருளியிருக்கிற) ஸ்ரீவைகுண்டமென்னுந் திவ்வியதலத் தைப்பற்றிப் பாடல்பாடுவாள்;
நேர் உடுத்த சிந்தை நிலை அறியேன் – நேர்மையாகச் சென்றுகொண்டிருந்த (இவளது) மனம்
(இவ்வாறு மாறிய) நிலையைப்பற்றி (யான்) அறியகில்லேன்; (எ – று.)
தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள் அவன் தன்னைப்பிரிந்ததனா லாற்றாது மிகவருந்தி,
மேனிமெலிந்து அப்பிரானது திருத் துழாய்மாலையைச் சூடுவது அப்பிரானது திவ்வியதலத்தைச் சொல்வது
முதலியன செய்து ஒருவாறு ஆறியிருக்கப் பார்க்க, அவ்வேறுபாடுகண்ட செவிலித்தாய்,
“மிக்கஇளமைப்பருவத்தளாகிய இவளுக்குப் பருவம்நிரம்பிய வர்க்கு வரக்கடவ தன்மை நேர்ந்தது என்னோ!’ என்று
இரங்கிக் கூறியது, இது. தலைமகளதுஇளமைப்பருவத்தை விளக்குவாள், இன்னஇடத்தில் ஆடையையுடுப்பது,
இன்னவிடத்தில் மாலையையணிவது என்னவும் தெரியாத பேதை என்றாள்:
“செய்யநூலின்சிற்றாடை செப்பனுடுக்கவும்வல்லளல்லள்,”
“பேசவுந்தெரியாத பெண்மையிற் பேதையேன் பேதை யிவர்” என்றார் பெரியாழ்வாரும்.
இவள் யௌவநபருவத்தையடைந்திருந்தும் இவள்தாய்மார்க்கு அன்புமிகுதியால் இவளது மிக்கஇளமையே தோற்றுவதென்க.
மகளிர்க்குஉரிய பருவம் ஏழனுள் முதலதாகிய பேதைப்பருவத்திலேயே இவளுக்கு இத்தன்மையதான வியாமோகம் உண்டானால்,
யாம் சொல்லத்தகுவது யாது? என்பதாம். பேதைப்பருவத்திற்கு வயதுஎல்லை – ஐந்துமுதல் ஏழளவும் என்பர்.
“பிஞ்சாப்பழுத்தாளையாண்டாளை” என்றாற் போல வேட்கைபிறவாப் பருவமே தொடங்கி இவள் வேட்கை விஞ்சின ளென்றவாறு.
பேதை இவள் தாருடுத்துத் தூசு தலைக்கு அணியும் என இயைத்து – பேதையாகிய இவள்
(தலைமகனிடத்துஈடுபாட்டினால்) தாரை அரையி லுடுப்பதும், தூசைத் தலையிலணிவதும் செய்கின்றாளெனப் பொரு ளுரைப்பினும் அமையும்:
இவ்வாறாகிய செய்கைமாறாட்டம், மந்மதாவஸ்தைகள் பத்தனுள் உந்மாதாவஸ்தையின் செயலாகும்.
பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத்துழாய்நாடும் சீவைகுந்தம்பாடும் –
“வெற்பென்று வேங்கடம்பாடும்வியன் துழாய்க், கற்பென்றுசூடுங் கருங்குழல்மேல்” என்பது பேயாழ்வார்பாசுரம்.
ஐயங்காரது ஆற்றாமையைக்கண்டஞானிகள் ‘எம்பெருமானைச் சேரப் பெறுதற்கு உபாயமான பக்திமுதலியன
பூர்ணமின்றியிருக்க, இவருக்கு உண்டாகிய விரைவு என்னோ?’ என்றுசொல்லும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
விசுவாமித்திரமுனிவரது வேண்டுகோளினால் தசரதசக்கரவர்த்தி ராம லக்ஷ்மணர்களை அவர்செய்யும்
யாகத்தைப் பாதுகாத்தற் பொருட்டாக அம்முனிவரின் பின்னே அனுப்பியபோது, அவர்பின்சென்ற இராமபிரான்
எதிர்த்துப்போர்செய்த தாடகையென்பாள் தன்மீது வீசியெறிந்த சூலாயுதத்தைத் தனதுவில்லினால் முறித்துத் தள்ளிய விவரத்தை,
“கங்கைத் தீம்புனனாடன் கருத்தையும், மங்கைத்தீயனையாளு மனக்கொளாச்,
செங் கைச்சூலவெந்தீயினைத் தீயதன், வெங்கட்டீயொடு மேற்செலவீசினாள்,”
“மாலு மக்கணம் வாளியைத்தொட்டதும், கோலவிற் கால்குனித்ததுங் கண்டிலர்,
காலனைப்பறித்தக்கடியாள்விட்ட, சூலமற்றனதுண்டங்கள் கண்டனர்” என்ற கம்பராமாயணத்தால் அறிக.
—————–
54-திருப் புளிங்குடி-தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல் –
தெளியும் பசும் பொற் சிறைக் காற்று வீச
விளியும் துயர் போய் விடுமே எளியேற்கு
அருளப் புளிங்குடி வாழ் அச்சுதனைக் கொண்டு
கருளப் புள் இங்கு வந்தக் கால் –54–
(இ – ள்.) எளியேற்கு ஏழையேனாகிய எனக்கு,
அருள – திருவருள் புரியுமாறு,
புளிங்குடி வாழ் – திருப்புளிங்குடியென்னுந் திவ்வியதலத்தில் வாழ்கின்ற,
அச்சுதனை – அழிவில்லாத கடவுளை,
கொண்டு (தனதுதோ ளின்மீது) எழுந்தருளப் பண்ணிக்கொண்டு,
கருளப்புள் – கருடாழ்வான்,
இங்கு வந்தக்கால் – (நான்வசிக்கின்ற) இவ்விடத்து வந்தால், –
(அப்போது), தெளியும் – தெளிந்த,
பசும் பொன் – பசிய பொன்மயமாகிய,
சிறை – (அப் பெரிய திருவடியின்) இறகுகளினின்று,
காற்று வீச – காற்று (என்மீது) வீசுதலாலே,
விளியும் துயர் – (இப்பொழுது எனக்குநேர்ந்துள்ள) மரணத்தை யுண்டாக்குவது போலும் பெருந்துயரமும், போய்விடும் -; (எ – று.)
தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள் அப்பிரிவுத் துயரை யாற்றி யடக்கும் வல்லமை யிலளாகித்
தன் நிலையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்தது இது.
இப்பொழுதே எனது தலைவனாகிய எம்பெருமான் கருடாரூடனாகவந்து என்னைச் சார்ந்தால்மாத் திரமே எனது உயிர் நிற்கும்;
இல்லாவிடின் இறந்துபடு மென்று தன்னிலையைத் தெரிவிக்கின்றன ளென்க.
அவன் இங்கு எழுந்தருளினால் அவனது முகத்தைக் கண்டு பிழைக்கலா மென்பதும்,
அவன் கண்ணோட்டத்தைப் பெற்று உய்யலா மென்பதும் அவள் உட்கோள், தான்விரும்பிய பொருளைக் கொண்டு
வருவதுபற்றி, ‘தெளியும்பசும்பொற்சிறை’ என்று புகழ்ந்துகூறு வாளாயினாள்.
அத்தலைவனது சம்பந்தம் பெற்ற பெரியதிருவடியினது சிறைக்காற்று எனதுநோய் தணித்தற்கு ஏற்ற அருமருந்தாம் என்றவாறு.
தூது விடுத்தபொழுது, ஆழ்வார் “அவராவி துவராமுன், அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாளென்று,
அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி, யருள் ஆழிவரிவண்டே” என்று கூறியது காண்க.
எம்பெருமானை இடையீடின்றிச் சேரப்பெறாது வருந்துகின்ற ஐயங்கார் தமதுநிலைமையை அன்பர்க்கு உரைத்தல்,
இதற்கு உள்ளுறைபொருள். நம்மாழ்வார் இத்திருப்பதியை மங்களாசாசனஞ்செய்கையில்,
“பளிங்குநீர்முகிலின் பவளம்போற் கனிவாய்சிவப்ப நீகாணவாராயே” என்பது முதலிய பாசுரங்களால்
அப்பிரானைத் தாம் உள்ளவிடத்தில் வருமாறு வேண்டுவது, இங்குக் கருதத்தக்கது.
————-
55-திருவர குண மங்கை -பாங்கி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல் –
காலமும் நோயும் கருதாத அன்னைமீர்
வேலன் வெறியை விலக்குமின்கள் மால் ஆம்
வரகுண மங்கையன் தாள் வண் துழாய் மேல் ஆ
தர குணம் மங்கை தனக்கு –55–
(இ – ள்.) காலமும் – (இவளது) பருவத்தையும்,
நோயும் – (இவளுக்கு இப்பொழுது நேர்ந்துள்ள) நோயின் தன்மையையும்,
கருதாத – ஆராய்ந்து (உண்மை) அறியமாட்டாத,
அன்னைமீர் – தாய்மார்களே! –
மங்கை தனக்கு – (உங்கள்) பெண்ணுக்கு, –
மால் ஆம் – திருமாலாகிய,
வரகுணமங்கையன் – திருவரகுணமங்கையென்னுந் தலத்தி லெழுந்தருளிய பெருமானது,
தாள் – திருவடிகளிற்சாத்திய,
வன் துழாய்மேல் – வளப்பமுள்ள திருத்துழாயின் மீது,
ஆதர குணம் – ஆசையாகிய குணம், (உளது): (ஆதலால்),
வேலன் வெறியை – வேன்மகனது வெறியாட்டை,
விலக்குமின்கள் – நீக்கிவிடுங்கள்; (எ – று.)
களவொழுக்கத்தால் தலைமகளைக் கூடிய தலைமகன் பின்பு அவளை வெளிப்படையாக மணஞ்செய்து
கொள்ளுதற்பொருட்டுப் பொருள்தேடிவருதற்காக அவளைப்பிரிந்துசென்று வரவுகுறித்தகாலத்தில் வாராது நீட்டிக்க,
அந்நிலையிற் பிரிவாற்றாது மிகவருந்திய தலைமகளைச் செவிலித்தாய்மார் எதிர்ப்பட்டு அவளது வடிவுவேறுபாட்டை நோக்கி
“இவள் இங்ஙனம் மெலிதற்குக் காரணம் என்னோ?’ என்று கவலையுற்றுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க,
அவளும் தன்மரபின்படி ஆராய்ந்து ‘இவளுக்கு முருகக்கடவுள் ஆவேசித்ததொழியப் பிறிது ஒன்றுமில்லை’ என்று கூற,
அதுகேட்ட செவிலித்தாயர் உடனே தலைமகள்பக்கல் தமக்குஉள்ள அன்பின்மிகுதியால்
‘ஏதேனும் ஒருதெய்வத்தை வழிபட்டாகிலும் இவளை உயிர்த்திருக்கப்பெறில் அதுவே நமக்கு ஆத்மலாபம்’ என்று
எண்ணி வழியல்லாவழியிலே யிழிந்து அதற்குப் பரிகாரமாக வேலனெனப்படுகிற வெறியாட்டாளனை
யழைப்பித்து அவனைக்கொண்டு ஆவேசமாடுவிக்க முயல, நோயொன்றும் மருந்தொன்று மாதலால்
தான் காதலித்த புருஷோத்தமனான தலைமகனது தகுதிக்கு ஏலாத அச்செயலை நோக்கித் தலைமகள் மேன்மேல் மிகவருந்த,
அவளது துன்பத்தின் உண்மைக்காரணத்தை யுணர்ந்த தோழி அச்சமயத்திற் செவிலியரை நோக்கி வெறிவிலக்குமாறு கூறி,
தலைவியினது துன்பத்தின் உண்மைக்காரணத்தை யுணர்த்துகின்ற துறை இது.
ஆழ்வார் திருவாய்மொழியில் “தீர்ப்பாரையாமினி” என்று தொடங்குகிற வெறிவிலக்குப்பதிகத்திலும்
“இதுகாண்மினன்னைமீரிக் கட்டுவிச்சிசொற்கொண்டுநீ,
ரெதுவானுஞ்செய்தங்கோர்கள்ளுமிறைச்சியுந் தூவேன்மின்,
மதுவார்துழாய்முடிமாயப் பிரான்கழல்வாழ்த்தினா,
லதுவே யிவளுற்றநோய்க்கு மருமருந்தாகுமே” என்று அருளிச்செய்தமை யறிக.
முருகக்கடவுளது வேலைத் தனக்குஅடையாளமாக ஏந்திக்கொண்டு நின்று ஆடுதலால், ‘வேலன்’ எனப்பட்டான்;
‘வேன்மகன்’ என்றும் இவனை வழங்குவர். ‘இவ்வகம் தேவதாந்தரசம்பந்தமுடையார் புகும் அகமன்றுகாண்’ என்று வெருட்டுபவளாய்
‘வேலன்வெறியை விலக்குமின்கள்’ என்றாள்;
“கூராராழிவெண்சங்கேந்தி” என்று சொல்லுகிறபடியே கையுந்திருவாழியுமாகக் காணவேண்டியிருக்கிறவிடத்தே
கையும் வேலுமாக இவன் வந்து தோற்றுவதே! என்று வெறுத்தவாறு.
அன்னைமீர் – உண்மைக்காரணம் உரைக்கப்படுதற்கு உரிமையையும் இவளியல்பிற்கு ஏற்றபடி நன்மை
செய்யும் வாற்சலியத்தையும் உடையவர்களே! என்றபடி. தலைவனது திருமேனி யழகிலும் திவ்யாத்ம
குணத்திலும் ஈடுபட்டனள் இம்மங்கை யென்பாள், ‘மாலாம்வரகுணமங்கையன்’ என்றாள்.
திருமாலாகிய தலைமகனால் நேர்ந்த நோய்க்கு அவனது தொடர்புடைய பொருளல்லது மாற்றுமருந்தில்லை யென்பது, தேர்ந்தபொருள்.
தமதுஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்தவளவிலே அவனதுபிரிவைப் பொறாமல் வருந்துகின்ற
ஐயங்காரது துயரத்தைக் கண்ட ஞானிகள், அவர்பக்கல் வைத்த பரிவா லுண்டான கலக்கத்தால் எம்பெருமான்
உபாயாந்தரங்களால் அடையத்தக்கவனல்ல னென்பதை மறந்து, தேவதாந்தரபஜநத்தாலாவது இவரது
ஆற்றாமையைத் தணிப்பிக்கலாமோ? என்று தொடங்கியநிலையில்,
ஐயங்காரதுதன்மையை யறிந்த அன்பர்கள் விலக்கிக்கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
“வேலன் வெறியை விலக்குமின்கள்’ என்றவிடத்து தேவதாந்தரசம்பந்தமுடையாரது சேர்க்கையும் மறந்தும்
புறந்தொழா மாந்தரான பாகவதர்க்குக் குறிக்கொண்டுவிலக்கத்தக்க தென்பது, பெறப்படும்.
ஞானிகள்தாம் அங்ஙனம் வழியல்லாவழியில் இழிவார்களோ என்னில்? – ஐயங்கார்பக்கல் தாம்கொண்ட பரிவின்மிகுதி
தம்மைக் கலங்கப்பண்ணுகையால், அமார்க்கங்களாலே யாகிலும் பரிகரிக்கப்போமோ வென்று முயன்றன ரென்க;
(இதனை, “அயோத்யாபுரியிலுள்ள ஜநங்களெல்லாரும் இராமபிரானுடைய க்ஷேமத்தின்பொருட்டு எல்லாத்
தேவர்களையும் வணங்கினர்’ என்றதனோடு ஒப்பிடுக.) அன்னைமீர் என்று விளித்ததனால், முதியரான நீர் இளையரான
எமது வார்த்தையை உபேக்ஷிக்கலாகா தென்று குறிப்பித்தபடி.
ஸேஷபூதர் இழியுந் துறை ஸேஷியின் திருவடிகளே யாதலால், ‘தாள்துழாய்மேலாதரம்’ என்றனர்.
———–
56-திருக்குளந்தை
தனக்கு உடலம் வேறான தன்மை உணரார்
மனக் கவலை தீர்ந்து உய்ய மாட்டார் நினைக்கில்
திருக் குளந்தை யார் உரைத்த சீர்க் கீதை பாடும்
தருக்கு உளம் தையாமல் இருந்தால் –56-
(இ – ள்.) நினைக்கில் – ஆராய்ந்துபார்க்குமிடத்து, –
திருக்குளந்தையார் உரைத்த – திருக்குளந்தையென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய திருமால் திருவாய்மலர்ந்தருளிய,
சீர் கீதை – சிறந்தபகவத்கீதையை,
பாடும் – படிப்பதனாலுண்டாகிய,
தருக்கு – மனக்களிப்பு,
உளம் – (ஒருவனது) மனத்தில்,
தையாமல் இருந்தால் – பதியாமலிருந்தால், – (அவன்),
தனக்கு – (ஆன்மாவாகிய) தன்னைக்காட்டிலும்,
உடலம் – உடம்பு,
வேறு ஆன – வேறுபட்டுள்ள,
தன்மை – நிலையை,
உணரான் – அறியமாட்டான்;
மனம் கவலை தீர்ந்து – (ஸம்ஸாரபாசத்தால்நேரும்) மனக்கவலை மாறி,
உய்யமாட்டான் – நற்கதியடையமாட்டான்; (எ – று.)
பாரதயுத்தத்து முதனாட்போரில் “உற்றாரையெல்லாம் உடன்கொன்று அரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்று
எண்ணி, ஸ்வதர்மத்தில் அதர்மபுத்தியால் போர்புரியேனென்று காண்டீவம் கைந்நெகிழத் தேர்த்தட்டின்மீதே
திகைத்துநின்ற அருச்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தத்துவோபதேசஞ்செய்து அவனது கலக்கத்தைப் போக்கிய
கீதையைப் படித்து அதன்பொருளை மனத்திற்கொண்டு ஆனந்தமடைபவரே “ஆத்மா வேறு, சரீரம் வேறு’ என்கிற
தேஹாத்மவிவேகம் பிறந்து, தத்துவவுணர்ச்சியால் மனக்கவலைதீர்ந்து வாழ்வ ரென்பதாம்.
ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் முதலிலே அர்ஜ்ஜுநனுக்கு தேஹாத்மவிவேகத்தைப் போதித்து அதன்மூலமாகக்
கர்மயோகம் புருஷோத்தமவித்யை அவதாரரஹஸ்யஜ்ஞாநம் விச்வரூபம் முதலியவற்றை உபதேசிக்க,
அர்ஜ்ஜுநன் அந்த எம்பெருமான் உபதேசித்த உபாயவிசேஷங்களைக் கேட்டு அவை செயற்கரியனவென்றும்
ஸ்வரூபவிரோதிகளென்றும் நினைத்துக் கலக்கமடைய, அவனுடைய கலக்கந் தீருமாறு எல்லாவுபாயங்களினும்
மேம்பட்ட பிரபத்தியுபாயத்தை உபதேசித்து, “அஹந்த்வாஸர்வபாபேப்யோமோக்ஷயிஷ்யாமிமாசுச:
(நீ என்னையே சரணமாகப்பற்றினால் நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிப்பேன்; கலங்கவேண்டா)” என்று
அவனது கலக்கத்தைப் போக்கியமை காண்க.
இங்கு, கீதையின் முதலிற் கூறிய தேஹாத்ம விவேகமும், இறுதியிற் கூறிய எம்பெருமானால் அபயமளிக்கப்
பெற்றுக் கலக்கம் நீங்குதலும் கீதையைப் படியாதார்க்கு உளவாகா வென்று கூறிய முகத்தால்,
அந்நூலின் இடையிற் கூறிய கர்மயோகம் முதலியவற்றைப்பற்றிய விஷயங்களையும் பெறவைத்தன ரென்க.
“அறிவினாற்குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய,
நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி” என்றபடி
ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன் தனது திருவாக்கினின்று உலகத்தார் நற்கதிபெறவேணுமென்ற கருத்தோடு
உபநிஷத்துக்களின் ஸாரமாக வெளியிட்ட தாதலின், இந்தக்கீதை, எல்லாநூல்களினுஞ் சிறந்த பிரமாணமாய்த்
தன்னை யுணர்ந்தார்க்குத் தத்துவஞானத்தைப் பிறப்பித்து நற்கதியளிக்குந் திறத்தது;
பதினெட்டு அத்தியாயங்களை யுடையது; ஸ்ரீமகாபாரதத்தில் பீஷ்மபர்வத்திலுள்ளது.
இந்தத்தலம் – பெரியகுளத்தையுடைய தாதலின், ‘பெருங்குளம்’ என்று வழங்குகின்றது;
ஆகவே, குளந்தை யென்பது மரூஉமொழிபோலும்.
————-
57-திருக் குறுங்குடி —
தாலத்து இழி குலத்துச் சண்டாளர் ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் மேன்மைத்தே -கோலக்
குறுங்குடி வாழ் மாயன் குறை கழற்கு ஆள் ஆகப்
பெறும் குடியாய் வாழ்வார் பிறப்பு –57-
(இ – ள்.) கோலம் – அழகிய,
குறுங்குடி – திருக்குறுங்குடி யென்னுந் திவ்வியதலத்தில்,
வாழ் – நித்தியவாசஞ்செய்கின்ற,
மாயன் – திருமாலினது,
குரை கழற்கு – ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகட்கு,
ஆள் ஆக பெறும் – அடிமையாகப்பெறுகின்ற,
குடி ஆய் – சந்ததியிற் பொருந்துபவராய்,
வாழ்வார் – வாழ்கின்றவர்களுடைய,
பிறப்பு – ஜந்மமானது, –
தாலத்து – இந்நிலவுலகில்,
இழி குலத்து – தாழ்ந்தசாதியைச்சேர்ந்த,
சண்டாளம் ஆனாலும் – சண்டாளஜந்மமேயானாலும், –
மேல் – உயர்குடிப்பிறப்பையுடைய,
அ தவர்அதனின் – அந்தமுனிவரது பிறவியைக்காட்டிலும்,
மேன்மைத்து – உயர்வையுடையதாம்; (எ – று.)
திருக்குறுங்குடியி லெழுந்தருளியுள்ள நம்பியென்னுந் திருமாலினது திருவடிகட்கு ஆட்பட்டார் சண்டாள
ஜந்மத்திற் பிறந்தாராயினும் உயர்குடிப்பிறந்த அந்தணாளரினும் மிகவும் மேம்பட்டவராவ ரென்பதாம்.
ஐயங்கார் இத்தலத்தைப் பாடுகையில் இவ்வாறுகூறியது – சண்டாள ஜந்மத்திற் பிறந்த நம்பாடுவான்
தன்னை யுண்ணுமாறு வந்த பிரமரக்ஷஸுக்கு முன்பு சபதஞ்செய்துகொடுத்து, இத்தலத்து எம்பெருமானைக்
குறித்துக் கைசிகமென்னும் பண்பாடி வழிபட்டு மீண்டு, முன்னர்ப் பிராமணனாகிக் கருமா நுஷ்டாநத்திற் கொத்தையினால்
பிரமரக்ஷஸான அவனை உய்விக்குமாறு அவனினும் மேம்பட்டா னென்ற சரிதத்தை உட்கொண்டுபோலும்.
ஒருவனுக்கு உயர்வு “ஆக்குமறிவானலது பிறப்பினால், மீக்கொளுயர்விழிவு வேண்டற்க” என்றபடி
தத்துவவுணர்ச்சியினாலேயன்றிப் பிறவியினாலன்று என்பது, இதன் கருத்து.
உயர்குடிப்பிறந்தோராயினும் தத்துவவுணர்ச்சியின்மையால் திருமாலை வழிபடாதவர்
சண்டாளரினும் தாழ்ந்தவராவ ரென்பது, இங்குப்போதரும்;
“அடிமையிற் குடிமையில்லா அயல்சதுப்பேதிமாரில்,
குடிமையிற்கடைமைப்பட்ட குக்கரிற் பிறப்பரேனும்,
முடியினிற் றுளபம்வைத்தாய் மொய்கழற்கன்புசெய்யும்,
அடியரை யுகத்திபோலும் அரங்கமாநகருளானே,”
“அமரவோரங்கமாறும் வேதமோர்நான்கு மோதித்,
தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும்,
நுமர்களைப்பழிப்பராகில் நொடிப்பதோரளவிலாங்கே,
அவர்கள்தாம் புலையர்போலும் அரங்கமாநகருளானே” என்ற திருமாலைப்பாசுரங்களும்,
“ப்ராஹ்மண்யம் விலைச்செல்லுகிறது – வேதாத்யயநாதி முகத்தாலே பகவல்லாபஹேதுவென்று;
அதுதானே இழவுக்கு உறுப்பாகில், த்யாஜ்றமாமியே, ஜந்மவ்ருத்தங்களினுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும் அப்ரயோஜகம்; ப்ரயோஜகம் – பகவத்ஸம்பந்தமும் ததஸம்பந்தமும்” என்பவை முதலிய
ஸ்ரீவசநபூஷணவாக்கியங்களும் இங்குக் காணத்தக்கன.
“பாதியாயழுகிய கால்கையரேனும் பழிதொழிலு மிழிகுலமும் படைத்தாரேனும்,
ஆதியாயரவணையாயென்பராகி லவரன்றோ யாம்வணங்குமடிகளாவார்,
சாதியாலொழுக்கத்தால் மிக்கோரேனும் சதுமறையால் வேள்வியால் தக்கோரேனும்,
போதில்நான்முகன் பணியப் பள்ளிகொள்வான் பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.
தாலம் – தலம் என்பதன் நீட்டல். ‘அத்தவர்’ என்பதில், அகரச்சுட்டு – பிரசித்திபற்றியது.
இனி, மேலத்தவர் என்பதை ஒருசொல்லாகக்கொண்டு, மேன்மையுள்ளவர் எனப் பொருள் கூறுவாரு முளர்;
இதில், அத்து அ – சாரியைகள்.
குறுகியவனான வாமனனது க்ஷேத்ர மாதலால், இத்தலத்திற்குக் குறுங்குடியென்று பெயர்வந்த தென்பர்.
இத்தலத்திலுள்ள எம்பெருமான்களுள் ஒரு எம்பெருமான் ஸ்ரீபாஷ்யகாரர்பக்கலிலே வேதாந்தார்த்தம் கேட்டு ஸிஷ்யனாய்
‘நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்’ என்கையாலே, அப்பெருமானுக்கு வைஷ்ணவநம்பியென்று திருநாமம்.
நம்மாழ்வார்திருவவதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தலத்துநம்பியே.
———-
58-திருக் கோளூர் –
பிறப்பு அற்று மூப்புப் பிணி அற்று நாளும்
இறப்பு அற்று வாழ இருப்பீர் புறப்பற்றுத்
தள்ளுங்கோள் ஊர் அரவில் தாமோதரன் பள்ளி
கொள்ளும் கோளூர் மருவுங்கோள் –58–
(இ – ள்.) பிறப்பு அற்று – பிறப்பு ஒழிந்து,
மூப்பு பிணி அற்று – கிழத்தனமும் வியாதியும் நீங்கி,
இறப்பு அற்று – மரணந் தவிர்ந்து,
நாளும் – எந்நாளும்,
வாழ – (முத்தியில் நிலைபெற்று) வாழும்படி,
இருப்பீர் – விருப்பங்கொண்டிருப்பவர்களே! – (நீங்கள்),
புறம் பற்று தள்ளுங்கோள் – மமகாரத்தை யொழியுங்கள்;
ஊர் அரவில் – மார்பினாலூர்ந்து செல்லுந்தன்மையதான சர்ப்பசாதியிற்சேர்ந்த திருவநந்தாழ்வான்மீது,
தாமோதரன் – திருமால்,
பள்ளிகொள்ளும் – சயனத்திருக்கோலமாகக் கண்வளர்ந்தருளுகின்ற,
கோளூர் – திருக்கோளூ ரென்னுந் திவ்வியதலத்தை,
மருவுங்கோள் – சென்று சேருங்கள்; (எ – று.)
திருவநந்தாழ்வானாகிய திருவணையின்மீது வைத்தமாநிதிப்பெருமாள் கண்வளர்ந்தருளப்பெற்ற திருக்கோளூரைச் சார்ந்தால்,
பிறப்பு இறப்பு முதலிய பிறவித்துன்பங்கள் யாவும் நீங்கி முத்திபெறலா மென்பதாம்.
புறப்பற்றைக் கூறியது – அகப்பற்றுக்கும் உபலக்ஷணம்.
அகப்பற்றாவது – தான் அல்லாத உடம்பை யானென்று கருதி அதனிடத்துப் பற்றுச் செய்வது.
புறப்பற்றாவது – தன்னோடு இயைபில்லாத உலகத்துப்பொருளை எனது என்று கருதி அதனிடத்துப் பற்றுச்செய்வது,
“யானெனதென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்தவுலகம் புகும்” என்ற திருக்குறளிலும்
இவ்விருவகைப் பற்றுக்களையும் அறுத்தவரே. உயர்கதிபுகுவ ரென்று கூறியிருத்தல் காண்க.
இருபற்றையுங் கெடுத்தலாவது – “தேசிகர்பாற்பெற்ற உறுதிமொழிகளாலேனும்,
யோகப்பயிற்சியாலேனும் அவை யான் எனது அன்மை தெளிந்து அவற்றின்கண் பற்றைவிடுதலாம்.’
“அற்றதுபற்றெனி லுற்றதுவீடுயிர்” என்பது – நம்மாழ்வார் பாசுரம்.
தள்ளுங்கோள், மருவுங்கோள் – தள்ளுங்கள், மருவுங்கள் என்பவை திரிந்துவந்தன.
நவநிதிகள் இங்கே ஒளித்துக்கொண்டிருக்கின்றன என்று அதருமம் குபேரனுக்குக் கோள்சொல்லிய இடமாதல்பற்றி,
இத்தலத்திற்குத் திருக்கோளூ ரென்று பெய ரென்பர்; பிஸுநக்ஷேத்ரம் என்று வடமொழியிற் பெயர்வழங்கும்;
மதுரகவியாழ்வார் திருவவதரித்த தலம் இது.
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.
—————
மலை நாட்டுத் திருப்பதிகள் -13-
59–திருவனந்த புரம் –
கோள் ஆர் பொறி ஐந்தும் குன்றி உடலம் பழுத்து
மாளா முன் நெஞ்சே வணங்குதியால் கேளார்
சினந்த புரம் சுட்டான் திசை முகத்தான் போற்றும்
அனந்த புரம் சேர்ந்தான் அடி –59–
(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
கோள் ஆர் பொறி ஐந்தும் – (விஷயங்களில் உன்னை) இழுத்துச் செல்லுந் தன்மை பொருந்திய ஐம்பொறிகளும்,
குன்றி – (தம்தமக்குஉரிய) வலிமையொடுங்கி,
உடலம் – உடம்பானது,
பழுத்து – (முதுமையினால்) தளர்ச்சியடைந்து,
மாளாமுன் – இறப்பதற்குமுன்னே, –
கேளார் – பகைவர்களாகிய அசுரர்கள்,
சினந்த – கோபித்துப்பொருதற்கு இடமாயிருந்த,
புரம் – திரிபுரங்களை,
சுட்டான் – (நெற்றிக்கண்ணினால்) எரித்தழித்தவனான சிவபெருமானும்,
திசைமுகத்தான் – நான்குதிசையையும் நோக்கிய நான்குமுகங்களையுடையவனான பிரமதேவனும்,
போற்றும் – துதித்துவணங்கப்பெற்ற,
அனந்தபுரம் சேர்ந்தான் – திருவனந்தபுரமென்னுந் திருப்பதியில் (சயனத்திருக்கோலமாக) எழுந்தருளியுள்ள பத்மநாபப்பெருமானுடைய,
அடி – திருவடிகளை,
வணங்குதி – வணங்குவாயாக; (எ – று.) – ஆல் – ஈற்றசை.
திரிமூர்த்திகளில் மற்றையிருமூர்த்திகளாலும் வணங்கப்பெற்ற திருமாலை மூப்பு முதிர்ந்து இறப்பு
நேர்தற்கு முன்னம் வணங்குவாயாக வென்று நெஞ்சைநோக்கி இதமுரைத்தவாறு;
“தடமுடைவயலனந்தபுரநகர் புகுதுமின்னே” என்றார் நம்மாழ்வாரும்.
திருவனந்தபுரத்துத் திருமாலின் திருவடியை வணங்குவதே ஆத்மாவுக்குப் பரமபிரயோஜந மென்க.
நினைத்தல் பேசுதல் தொழில்செய்தல் என்பன முறையே மனம்மொழி மெய் என்னுந் திரிகரணங்களின் செயலாதலால்,
அவற்றில் மெய்யின் செயலான வணங்குதலை மனத்தின்மேலேற்றி “நெஞ்சே வணங்குதி’ என்றது .
ஓருறுப்பின் வினையை மற்றோருறுப்பின்மேலேற்றிக் கூறும் ஒருவகையுபசாரவழக்காம்.
மெய்யினால் வணங்குதற்கும் மனத்தின் நினைப்பு இன்றியமையாது வேண்டுதலால், அத்தலைமைபற்றி,
இங்ஙனம் புறக்கரணத்தின்செயல் அகக்கரணத்தின்மே லேற்றப்பட்ட தென்க.
“நிலையாமையானவுடலு முயிரு நினைவுந்தம்மிற்,
கலையா மையானங்கலக்குமுன்னே கங்கைவைத்தசடைத்,
தலையாமையானனன் தாமரையான் தொழுந்தாளழகன்,
அலையாமையானவன் மாலிருஞ்சோலையடை நெஞ்சமே” என்ற அழகரந்தாதியோ டொத்த வாய்பாடுடையது, இச்செய்யுள்.
“குமரனார்தாதை துன்பந்துடைத்த கோவிந்தனார்” என்றபடி அங்குஎழுந்தருளிய எம்பெருமான் சிவபெருமானது
துயரத்தைப் போக்கினவ ராதலாலும், பிரமன் அப்பெருமானது நாபீகமலத்தில் தோன்றி எப்போதும் சேவித்துக் கொண்டிருத்தலாலும்,
‘கேளார் சினந்தபுரஞ்சுட்டான் திரைமுகத்தான் போற்றும் அனந்தபுரஞ்சேர்ந்தான்’ என்றார்.
————-
60-திரு வண் பரிசாரம் -பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கல்
அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள்
முடிகின்றாள் மூச்சு அடங்கு முன்னே கடிது ஓடி
பெண் பரிசு ஆர் அங்குப் பிறப்பித்து மீளுவார்
வண் பரிசாரம் சிறந்த மாற்கு –60-
(இ – ள்.) (தலைமகள்), – அடியும் குளிர்ந்தாள் – கால்களும் குளிரப் பெற்று,
அறிவும் குலைந்தாள் – அறிவும் அழியப்பெற்று,
முடிகின்றாள் – மரணமடையுந்தறுவாயி லிருக்கின்றாள்;
மூச்சு அடங்கும் முன்னே – (இவளது) சுவாசம் ஒடுங்குவதற்குமுன்னே (உயிரோடிருக்கையில்),
வண்பரிசாரம் கிடந்த மாற்கு – திருவண்பரிசாரமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியுள்ள திருவாழ்மார்பரென்னுந் திருமாலினிடத்தில்,
கடிது ஓடி – விரைந்துசென்று,
பெண் பரிசு – இப்பெண்ணின் தன்மையை,
பிறப்பித்து – விளங்கும் படி சொல்லித்தெரிவித்து,
மீளுவார் – திரும்ப வல்லவர், ஆர் – யாவர்? (எ – று.) – அங்கு – அசை; அவ்விடத்து எனினுமாம்.
தலைமகனோடு கூடிப்பிரிந்த தலைமகள் பிரிவாற்றாமையாற் படுகின்ற பெருந்துயரமுழுவதும் கண்டு
ஆற்றமாட்டாளான செவிலித்தாய், தன்னாற்றாமை மிகுதியால் தலைமகளினது நிலைமையைத் தலைமகனிடத்துச் சொல்லுதற்கு
ஏற்ற தூதுவர் இல்லாமை கண்டு இரங்கிக்கூறியது, இது.
மன்மதாவஸ்தை ஐந்தனுள் அயர்ப்பும் மயக்கமு முடைய மரணாவஸ்தை, இச்செய்யுளில் எடுத்துக்காட்டப்பட்ட தென்க.
அடிகுளிர்தல் – மரணத்திற்கு முற்குறி. மூச்சடங்குமுன்னே பிறப்பித்து மீளுவார் என இயையும்.
இவன் உயிரோடிருக்கையிலேயே இவளது செய்தியைத் தலைமகனிடத்துத் தெரிவித்துத் தலைமகனை இவளிடம் வந்து
சேருமாறு செய்தால்தான் இவள்உயிர்பெறுவளென்றாளாம்.
தலைமகனிடத்துச் சென்றுமீண்டுவருவதற்குச் சிறிது தாமதிக்குமாயின், இப்பெண்மகள் இறந்துபடுவளென்பாள்,
‘கடிது ஓடி மீளுவார் ஆர்’ என்றாள்.
வண்பரிசாரங்கிடந்தமாற்கு என்பதற்கு – திருவண்பரிசாரத்தில் சயனத் திருக்கோலமாகப் பள்ளிகொண்டிருக்கின்ற
திருமாலுக்கு எனப்பொருளுரைத்தல், சரியன்று;
“வண்பரிசாரத்திருந்தவென், திருவாழ்மார்பற்கு என்திறம்சொல்லார் செய்வதென்” என்ற நம்மாழ்வார் பாசுரத்தின்படி,
இத்திருப்பதியில் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலமாக எழுந்தருளியிருத்தலா லென்க.
“வண்பரிசாரம்மிகுந்தமாற்கு” எனப் பாடமோதுவாரு முளர்.
எம்பெருமானது பூர்ணாநுபவத்தைப் பெறாதபோது பலவாறுவருந்துகின்ற ஐயங்காரது நிலைமைகளை அவர்பக்கல்
பரிவுடையார் அறிந்து, அவரது நிலைமையை அப்போதே புருஷகாரமாகச்சென்று உரைப்பவர் இல்லாமை
நோக்கிப் பரிந்துகூறிய பாசுரம், இதற்கு உள்ளுறைபொருள்; பிறவும் உய்த்துஉணர்க.
———–
61-திருக் காட்கரை –
மாற்கமும் தாம் தாம் வழிபாடும் தெய்வமும்
ஏற்க உரைப்பார் சொல் எண்ணாதே தோற் குரம்பை
நாள் கரையா முன்னமே நல் நெஞ்சே நாரணன் ஆம்
காட்கரையார்க்கு ஆள் ஆகாய் காண் –61-
(இ – ள்.) நல் நெஞ்சே – (எனது) நல்லமனமே! –
தாம் தாம் – (உலகத்து மானுடரில்) அவரவர்கள்,
வழிபடும் – (கடவுளையடைதற்குக்) கைக்கொள்ளுகிற,
மார்க்கமும் – வழிகளும், (தாம் தாம் வழிபடும்) – அவரவர்கள் வணங்குகின்ற,
தெய்வமும் – தெய்வங்களும், (ஆகிய இவற்றிற்கு),
ஏற்க – பொருந்துமாறு,
உரைப்பார் – வலியுறுத்திப்பேசுகின்ற அந்நிய மதஸ்தரது,
சொல் – வார்த்தைகளை,
எண்ணாது – (நன்மைதருவனவாக) மதியாமல், –
தோல்குரம்பை நாள் கரையா முன்னமே – உயிர்வாழுதற்கென்று தோலினால் வேய்ந்த குடிசைபோன்ற
உடம்பின் வாழ்நாள் கழிதற்குமுன்னமே (இறப்பதற்குள்ளே),
நாரணன் ஆம் காட்கரையாற்கு – திருக்காட்கரை யென்னுந் திருப்பதியி லெழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நாராயணனுக்கு,
ஆள் ஆகாய் – அடிமைப்படுவாயாக; (எ – று.) – காண் – முன்னிலையசை; தேற்றமுமாம்.
புல்லோர் தமது ஆராய்ச்சிக்குறைவினால் பற்பல தேவதாந்தரங்களையும் அவரைப்பற்றிய பொய்ந்நூல்களையும்
உண்மையென்று பாராட்டிக் கூறுவதைச் சிறிதும்மதியாமல், திருக்காட்கரையப்பனே உபாயமும் உபேயமு மாவனென்னும்
உண்மையை யுணர்ந்து அவனுக்கு ஆட்படவேண்டுமென்று தமது நெஞ்சிற்கு அறிவுஉறுத்தியவாறு.
நெஞ்சே! நீ புல்லோர் வழியிற் புகுதாது நல்லோர்நெறியில் நிற்பா யென்று குறிப்பித்தபடி.
“வணங்குந் துறைகள்பலபலவாக்கி மதிவிகற்பாற்,
பிணங்குஞ்சமயம் பலபலவாக்கியவையவைதோ,
றணங்கும்பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பிவைத்தாய்” என்ற பாசுரம் இங்குக் கருதத்தக்கது.
“தெய்வம்பல வவர்நூலும் பல” என்றார் அழகரந்தாதியிலும்.
‘தாம்தாம்வழிபடும்’ என்பது, முன்னுள்ள ‘மார்க்கம்’ என்பதனோடும், பின்னுள்ள ‘தெய்வம்’ என்பதனோடும் கூட்டி யுரைக்கப்பட்டது;
இவ்வாறு வருவது – இடைநிலைத்தீவகம் எனப்படும்.
தாம்தாம் வழிபடும் மார்க்கம் – பக்தி ப்ரபத்தி முதலியனவாகக் கூறப்படுகின்ற பலவேறு சாதநங்கள்.
‘தாம்தாம்வழிபடுந்தெய்வம்’ என்றது – சிவன் குமாரன் கணபதி புத்தன் ஜிநன் முதலியனவாக உலகத்துப்
பலவேறுதெய்வங்கள் வழங்குதல்பற்றியாம். எண்ணாதே என்பதை ஏவலொருமைமுற்றாகக்கொண்டு உரைப்பினுமாம்.
————
62- திரு மூழிக் களம் –
காண்கின்ற ஐம் பூதங்கட்கும் இரு சுடர்க்கும்
சேண் கலந்த இந்திரற்கும் தேவர்க்கும் -மாண் கரிய
பாழிக் களத்தாற்கும் பங்கயத்து நான்முகற்கும்
மூழிக் களத்தான் முதல் –62-
(இ – ள்.) காண்கின்ற – கண்ணுக்குப் புலப்படுகின்ற,
ஐம்பூதங்கட்கும் – (பிருதிவி முதலிய) பஞ்சபூதங்களுக்கும்,
இருசுடர்க்கும் – சூரியசந்திரரென்னும் ஒளியுள்ள பொருளாகிய இருவர்க்கும்,
சேண் கலந்த – வானுலகத்தில் வாழ்கின்ற,
இந்திரற்கும் – தேவேந்திரனுக்கும்,
தேவர்க்கும் – (அவனுக்குக் கீழ்ப்பட்ட மற்றைத்) தேவர்கட்கும், –
மாண் – மாட்சிமையுடைய,
கரிய (விடமுண்டதனாற்) கறுத்த,
பாழி – வலிமைகொண்ட,
களத்தாற்கும் – கழுத்தையுடைய உருத்திரமூர்த்திக்கும்,
பங்கயத்து நான்முகற்கும் – தாமரை மலரில் வாழ்கின்ற நான்குமுகங்களையுடைய பிரமதேவனுக்கும், –
மூழிக்களத்தான் – திருமூழிக்களமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய திருமாலே,
முதல் – மூலகாரணமாவன்; (எ – று.)
மண்முதல் பிரமன் ஈறாகவுள்ள எல்லாப்பொருள்களையும் படைத்த முதற்கடவுள் திருமாலேயென்பதாம்.
“காண்கின்ற’ என்ற அடைமொழியை, மற்றைப்பொருள்கட்குங் கூட்டுக.
தேவர்க்கும் – இந்திரனினும்மேம்பட்ட பிருகஸ்பதி முதலிய கடவுளர்க்கும் எனினுமாம்.
————
63-திருப் புலியூர் -தலைவி தோழியற்கு அறத்தொடு நிற்றல்
முதல் வண்ணம் ஆமே முலை வண்ணம் முன்னை
விதி வண்ணம் நீங்கி விடுமே சதுரத்
திருப் புலியூர் நின்றான் திருத் தண் துழாயின்
மருப்புலி ஊர் தென்றல் வரின் –63-
(இ – ள்.) சதுரம் – அழகிய,
திருப்புலியூர் – திருப்புலியூரென்னுந் திவ்வியதலத்தில்,
நின்றான் – நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்றமாயப்பிரானது,
திரு தண் துழாயின் – குளிர்ந்த திருத்துழாய்மாலையினது,
மரு – நறுமணத்தை,
பு(ல்)லி – பொருந்தி,
ஊர் – தவழ்ந்துசெல்லுந்தன் மையுடைய,
தென்றல் – தென்றற்காற்றானது,
வரின் – வந்துவீசுமாயின், – (அப்பொழுது, எனக்கு),
முலை வண்ணம் – தனத்தின் நிறம், (காமவிகாரத்தால் ஏற்பட்ட பசலைநிறம் மாறி),
முதல் வண்ணம் ஆம் – முன்னைய நிறமே வந்து சேரும்;
முன்னே விதிவண்ணம் – முற்பிறப்பிற்செய்த தீவினையின் பயனாக நேர்ந்த பிரிவுத்துயர் முழுவதும்,
நீங்கிவிடும் – அடியோடு போய்விடும்; (எ – று.)
தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள் அப்பிரிவுத்துயரை யாற்றியடக்கும் வல்லமை யிலளாகி,
தனது நிலைமையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்து,
‘இனித் தலைமகனது திருத்துழாயின்நறுமணத்தைக் கொண்டுவந்து இளங்காற்று என்மீது வீசினால்தான்
யான் உயிர்பிழைத்து முன்னையநிலையைப் பெறுதல் கூடும்’ என்று தனது வேறுபாட்டைப் போக்குதற்கு
உரிய உபாயத்தைக் கூறி, அறத்தொடுநின்றது, இது. இதனை, தோழி செவிலியர்க்கு அறத்தொடுநிற்றலாகக் கொள்வாருமுளர்.
எம்பெருமானை இடையீடின்றிச் சேரப்பெறாத நிலையில் காலவிளம்பம் பொறுக்கமாட்டாமையாற் காலம் நீட்டித்ததாகத் தோன்ற,
வருந்துகின்ற ஐயங்கார் தமது அன்பர்களைநோக்கி எம்பெருமானது திருவருளைப் பெற்ற வளவிலே
யான் உய்வுபெறுவே னென்று கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
எம்பெருமான் திருவருள்புரிந்தால், நிலைகலங்குதலில்லாது பக்தி உறுதிப்படுமென்பது, முதலடியின் உள்ளுறை.
“போயபிழையும் புகுதருவானின் றனவும், தீயினிற்றூசாகும்” என்றபடி எம்பெருமானது திருவருளைப் பெற்றார்க்கு
முன்னையவினைகள்யாவும் அகலு மாதலால், “முன்விதிவண்ணம் நீங்கிவிடும்’ என்றன ரென்க.
விவரம் உய்த்துணர்க. “முன்னை, விதி வண்ணம்’ என்றும் பாடம் வழங்கும்.
————-
64-திருச் செங்குன்றூர் –
வர வேண்டும் கண்டாய் மதி கலங்கி விக்குள்
பொரவே உயிர் மாயும் போழ்து பரமேட்டி
செங்குன்றூர் மாலே சிறைப் பறவை மேல் கனகப்
பைங்குன்று ஊர் கார் போல் பறந்து –64-
(இ – ள்.) பரமேட்டி – பரமபதத்தில் வீற்றிருப்பவனே!
திரு செங்குன்றூர் மாலே – திருச்செங்குன்றூரென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருக்கிற திருமாலே! –
மதி கலங்கி – (எனது) அறிவு ஒடுங்கி,
விக்குள் பொர – விக்கலானது உபத்திரவிக்க,
உயிர் மாயும் போழ்து – (எனது) உயிர் நீங்கும் அந்திம காலத்தில்,
சிறைபறவை மேல் – இறகுகளையுடைய கருடாழ்வான்மீது,
பைங் கனகம் குன்று ஊர் கார்போல் – பசும்பொன் மயமான மலையின் மீது ஏறிவருகின்ற காளமேகம்போல,
பறந்து வரவேண்டும் – விரைந்துஎழுந்தருளிச் சேவைசாதிக்கவேண்டும்; (எ – று.) –
கண்டாய் – முன்னிலையசை;
நீ அந்திமகாலத்தி லெழுந்தருளிவந்து சேவைசாதித்தால்தான் எனக்கு நற்கதியுண்டு என்ற தேற்றப்பொருளை யுட்கொண்டதாம்.
இப்பிறப்பின் முடிவிலே, மறுபிறப்பில்லாதபடி என்னைக்காக்குமாறு நீ பெரிய திருவடியின்மே லெழுந்தருளிவந்து
காட்சிதரவேண்டு மென்பதாம்.
“சாமிடத் தென்னைக் குறிக்கொள்கண்டாய் சங்கொடுசக்கரமேந்தினானே,”
“உடலம்புயங்கத்துரிபோல்விடுமென்றுவணப்புள்ளி, னடலம்புயமிசைநீவர வேண்டும்” என்றபடி,
ஐம்பொறிகளுங் கலங்கி மரணநோய் நேர்கின்ற அப்போதையில் எம்பெருமானை நினைத்து வேண்டுதல் அரியதாகு மாதலால்
ஐம்பொறிகளும் தமதுநிலையில்நிற்க மனம் செம்மைப்பட்டிருக்கின்ற இப்போதே சொல்லிவைத்தன ரென்க.
பரமேட்டி = பரமேஷ்டீ; சிறந்ததானமாகிய பரமபதத்தில் நிலையாக வீற்றிருப்பவ னென்பது, அவயவப்பொருள்.
பெரிய திருவடிக்குப் பொற்குன்றும், அத்திருவடியின்மீது எழுந்தருளுந் திருமாலுக்குக் காளமேகமும் உவமையாம்;
“கருமுகில் தாமரைக்காடு பூத்து நீ, டிருசுட ரிருபுறத்தேந்தி யேடவிழ்,
திருவொடும் பொலியவோர்செம்பொற்குன்றின்மேல்,
வருவபோற் கலுழன்மேல்வந்து தோன்றினான்” என்ற கம்பராமாயணம் இங்குக் காணத்தக்கது.
பெரிய திருவடியினது தொழிலாகிய ‘பறந்து’ என்பதனை அதனையூருந் திருமாலின் மேலேற்றிப்
பறந்துவரவேண்டு மென்று கூறினார்போலும்.
————-
65-திருநாவாய் –
பறந்து திரிதரினும் பாவியேன் உள்ளம்
மறந்தும் பிறிது அறிய மாட்டா சிறந்த
திரு நாவாய் வாழ் கின்ற தேவனை அல்லால் என்
ஒரு நாவாய் வாழ்த்தாது உகந்து –65–
(இ – ள்.) பாவியேன் – தீவினையுடைய எனது,
உள்ளம் – மனமானது,
பறந்து திரிதரினும் – ஒருநிலையில்நில்லாது விரைந்து அலையுந்தன்மையதாயினும்,
மறந்தும் – மறந்தாயினும்,
பிறிது – திருமாலையன்றி வேறொருதெய்வத்தை,
அறியமாட்டா(து) – (தியானிக்கும்பொருளாக) மதியாது;
என் ஒரு நா வாய் – எனது ஒருபடிப்பட்ட நாக்கையுடைய வாயானது,
சிறந்த – மேம்பட்ட,
திருநாவாய் – திருநாவா யென்னுந் திவ்வியதலத்தில்,
வாழ்கின்ற – நித்திய வாசஞ்செய்கின்ற,
தேவனை அல்லால் – ஸ்ரீமந்நாராயணனையல்லாமல், (பிறிதொருதெய்வத்தை),
உகந்து வாழ்த்தாது – விரும்பித் துதியாது; (எ – று.)
“மறந்தும்புறந்தொழா மாந்தர்” ஆதலால், தேவதாந்தரங்களினிடத்தில் தமக்குஉள்ள உபேட்சையையும்
பரதேவதையினிடத்தில் தமக்குஉள்ள அபேட்சையையும் இங்ஙனம் கூறி வெளியிட்டனர்.
கணவனையே தெய்வமாகக்கொண்டொழுகுங் கற்புடைமகளிர்க்குப் பிறிதோராடவரது தொடர்பில்லாமலிருத்தல்
இன்றியமையாதவாறுபோல, எம்பெருமானைச் சரண
மடைந்து உய்யும் பிரபந்நர்க்குத் தேவதாந்நரபஜதஞ்செய்யாமை இன்றியமையாத தாகு மென்க.
ஒருநாவாய் தேவனையல்லால் வாழ்த்தாது என்ற தொடரில் – எனக்கு நாவொன்றாதலால்,
பரதேவதையாகி அடியார் துயரைப் போக்கிப் பாதுகாக்க வல்ல பரமபுருஷனொருவனைத் துதித்தலே அதற்கு ஏற்கு மென்பதும்,
சரணமடைபவர்களைச் சமயத்திலே கைவிடும் பிறதெய்வங்களைச் சிறிதும் பொருள்செய்யா தென்பதும், தொனிக்கும்.
“உனையன்றி நான் மறந்தும், தீதாக வந்தனைசெய்யேன் புறஞ்சிலதேவரையே” என்பர், அழகரந்தாதியிலும்.
ஒருகால் தேவதாந்தரங்களை யான் வாழ்த்தக் கருதினாலும் என்வாய் வாழ்த்தாது; அது எம்பெருமானையே வாழ்த்தப் பழகியதும்,
பிறதெய்வங்களை வாழ்த்தப் பழகாதது மாதலால் என்னுங் கருத்து அமைய
‘திருநாவாய்வாழ்கின்ற தேவனையல்லால் என்னொருநாவாய் வாழ்த்தா துகந்து’ என வாயின்மே லேற்றிக்கூறினா ரென்னலாம்.
“வாயவனையல்லது வாழ்த்தாது” என்றார் பெரியாரும்.
————–
66-திருவல்ல வாழ்
உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளனாய் உகவாது
இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலனாய் திகழ்ந்திட்டு
அருவல்ல வாழ் உருவம் அல்ல என நின்றான்
திருவல்ல வாழ் உறையும் தே–66-
(இ – ள்.) திருவல்லவாழ் உறையும் தே – திருவல்லவாழென்னுந் திவ்விய தலத்திலெழுந்தருளியுள்ள திருமால், –
உகந்தார்க்கு – (தன்னை) விரும்பின மெய்யடியார்கட்கு,
எ ஞான்றும் – எக்காலத்தும்,
உளன் ஆய் – உள்ளவனாகியும், –
உகவாது – தன்னைவிரும்பாமல்,
இகந்தார்க்கு – இல்லையென்று சொல்லும் நாஸ்திகர்க்கு,
எ ஞான்றும் – எக்காலத்தும்,
இலன் ஆய் – இல்லாத வனாகியும்,
திகழ்ந்திட்டு – விளங்கி, –
‘அரு அல்ல – அருவப்பொருளுமாகான்,
வாழ் உருவம் அல்ல – கண்களுக்குப்புலப்பட்டுத்தோன்றுகின்ற உருவப்பொருளு மாகான்’,
என – என்று கூறுமாறு, நின்றான் – இருக்கின்றான்; (எ – று.)
திருமால் – கடவுள் உண்டென்றுசொல்லும் ஆஸ்திகர்க்கு அவர்வேண்டியபடியே உளனென்று சொல்லுமாறு உருவப்பொருளாகியும்,
எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாததொரு பொருள் வழக்கில் வருதற்கே வழியில்லையாதலால்,
கடவுள் இல்லையென்றுசொல்லும் நாஸ்திகர்க்கும் கடவுளென்று எடுத்து அவனுடைய இன்மையைச் சாதிக்க
வேண்டிநிற்றலின் அப்போது அருவப்பொருளாகியும் தோன்றுவன்;
ஆதலால், உண்டென்பார்க்கு உருவப் பொருள்களிலெல்லாம் அந்தராத்மாவாகியும்,
இல்லையென்பார்க்கும் அவ்வருவப்பொருளாகியும் திருமால் எப்போதும் உளனேயாவ னென்பதாம்;
“உளனெனி லுள னவனுருவ மிவ்வுருவுகள்,
உளனலனெனி லலனவனருன மிவ்வருவுகள்,
உளனென விலனென விகைகுணமுடைமையில்,
உளனிருதகைமையொ டொழிவிலன் பரந்தே” என்ற அருளிச்செயலும்,
“சூந்யவாதியான உன்னைக் கேட்போம்; ஈஸ்வரனுடைய இல்லாமையைச் சாதிக்கிற நீ ஈஸ்வரனுளனென்றோ
இலனென்றோ ப்ரதிஜ்ஞைபண்ணுவது? இவையிரண்டு ப்ரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை ஸம்பவியாது;
எத்தாலே யென்னில்? – லோகத்தில் பாவ அபாவ (உண்டு இல்லை என்கிற) சப்தங்களும், பாவஅபாவப்ரதீதிகளும் (அறிவுகளும்)
வித்யமாந (இருக்கிற) வஸ்துவினுடைய அவஸ்தாவிஸேஷகோசரமாகக் காண்கையாலே,
ஆதலால், ஈஸ்வரன் உளனென்னில், அஸ்தித்வ தர்மவிஸிஷ்டனாய் இருக்குமென்று சொல்லிற்றாய்வரும்;
ஈஸ்வரன் உளனலனென்னில், நாஸ்தித்வதர்மவிஸிஷ்டனாயிருக்குமென்று சொல்லிற்றாய்வரும்.
இப்படி ஈஸ்வர வ்யதிரிக்தபதார்த்தங்களை உளவென்னில், அவையும் அஸ்தித்வதர்மவிஸிஷ்டங்களாய்க்கொண்டு
உளவென்று சொல்லிற்றாய்வரும்; தத்வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லையென்னிலும்,
அவை நாஸ்தித்வதர்மவிஸிஷ்டங்களென்று சொல்லிற்றாய்வரும். அந்த அஸ்திநாஸ்திரூபபதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாயிருக்கும்;
கீழ்ச்சொன்ன ப்ரமாணங்களாலே இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்களாகிற குணங்களையுடையனென்று சொல்லுகையாலே,
அஸ்தியென்னிலும் உளன், நாஸ்தியென்னிலும் உளன்; உளனாமிடத்து ஸர்வாந்தராத்மாவாய்க்கொண்டு உளனென்கிறார்” என்ற
வ்யாக்யாநமும் இங்கு உணரத்தக்கன. “சமயிகளாய்ந்தவண்ணம், உளவிலையா யருவா யருவாய வொருமுதலே” என்பர் அழகரந்தாதியிலும்.
புதியன புகுதலாக, இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொதுவாய் வரும் எதிர்மறைக்குறிப்புமுற்றான
“அல்ல’ என்னுஞ் சொல் இங்கு ஆண்பாலுக்கு வந்தது.
————-
67-திருவண் வண்டூர்-
தேவும் உலகும் உயிரும் திரிந்து நிற்கும்
யாவும் படைத்த இறை கண்டீர் பூவில்
திரு வண் வண்டூர் உறையும் தேவாதி தேவன்
மரு வண் வண்டு ஊர் துளவ மால் –67–
(இ – ள்.) பூவில் – இப்பூமியிலுள்ள,
திருவண்வண்டூர் – திருவண்வண்டூரென்னுந் திவ்வியதலத்தில்,
உறையும் – நித்தியவாசஞ்செய்கின்ற,
தேவாதி தேவன் – தேவர்கட்கெல்லாந் தேவனான, –
மரு – வாசனையுடையதும்,
வள் – வளப்பமுடையதும்,
வண்டு ஊர – வண்டுகள் மொய்க்கப் பெற்றதுமாகிய,
துளவம் – திருத்துழாய்மாலையை யணிந்த,
மால் – திருமால், –
தேவும் – (பிரமன் முதலிய) தேவர்களையும்,
உலகும் – உலகங்களையும்,
உயிரும் – (அவ்வுலகங்களிலுள்ள) பிராணிகளையும்,
திரிந்து நிற்கும் யாவும் – (கீழ்க்கூறிய பொருள்களைவிட) வேறாகநிற்கின்ற அசேதநப்பொருள்க ளெல்லாவற்றையும்
படைத்த – ஆதியிற்சிருட்டித்த,
இறை – கடவுளாவன்; (எ – று.) – கண் டீர் – முன்னிலையசை; தேற்றமுமாம்.
திருமாலே சேதநம் அசேதநம் என்னும் எல்லாப்பொருள்கட்கும் ஆதிகாரணனென்பதாம்.
“ஒன்றுந் தேவுமுலகு முயிரும் மற்றும்யாது மில்லா,
வன்று நான்முகன்றன்னொடு தேவருலகோ டுயிர்படைத்தான்,
குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள், நின்றவாதிப்பிரான்” என்றார் நம்மாழ்வாரும்.
நித்தியமான உயிர்களைப் படைத்தலாவது – அவற்றிற்குக் கரணகளேபரங்களைக் கொடுத்தல்.
இனி, தேவும் உலகும் உயிருமாகிய, திரிந்து நிற்கும் – ஜங்கமமாகியும் ஸ்தாவரமாகியு முள்ள, யாவும் எனப் பொருள்கூறுவாரு முளர்.
————
68–திருவாட்டாறு –
மாலை முடி நீத்து மலர்ப்பொன் அடி நோவப்
பாலை வனம் புகுந்தாய் பண்டு என்று -சாலவும் நான்
கேட்டால் துயிலேன் காண் கேசவனே பாம்பணை மேல்
வாட்டாற்றுக் கண் துயில் கொள்வாய் –68-
(இ – ள்.) கேசவனே – கேசவனென்னுந் திருநாமத்தையுடையவனே! –
‘மாலை முடி நீத்து – (அரசர்க்குஉரிய அடையாளப்பூ) மாலையையும் கிரீடத்தையும் (கைகேயியின்சொற்படியே பித்ருவாக்யபரிபாலநஞ் செய்யுமாறு) பூணாமல் துறந்து,
மலர்பொன் அடி நோவ – தாமரைமலர்போன்ற அழகிய (உனது) திருவடிகள் வருந்தும்படி,
பாலை வனம் – (தண்டகாரணியம் முதலிய) கொடுங்காட்டில்,
பண்டு – முற்காலத்தில் (ஸ்ரீராமாவதாரத்தில்), நீ -,
புகுந்தாய் – நடந்து சென்றாய்,’
என்று கேட்டால் – என்று (இதிஹாஸம் வல்லோர் சொல்லக்) கேட்டால்,
நான் -, சாலவும் துயிலேன் காண் – அடியோடு கண்டுயில்கொள்ளேன்; (அவ்வாறு இருக்க, நீயோ),
வாட்டாறு – திருவாட்டாறென்னுந் திவ்வியதலத்தில்,
பாம்பு அணைமேல் – ஆதிசேஷ சயனத்தின்மீது,
கண்துயில் கொள்வாய் – (கவலையின்றிக்) கண்ணுறங்குகின்றாய்; (எ – று.) – காண் – அசை.
நெடுநாள்முன்பு நடந்த ராமாவதாரத்தில் நீ காலினால்வருந்திக் கானகத்திற்சென்ற செய்தியை இப்போது
பிறர்சொல்லக்கேட்டாலும், கல்நெஞ்சனாகிய எனதுமனமும் நெகிழ்ந்து நெகிழ்ந்து கரைந்து உருக எனக்குத் தூக்கம் பிடிப்பதில்லை;
பதினான்கு வருடம் காலினாற் பாலைவனங்களிலெல்லாம் அலைந்து திரிந்து வருந்திய நீயோ சிறிதுங் கவலையின்றித்
திருவாட்டாற்றில் நெடுநாளாகக் கண்ணுறங்குகின்றாயே? இது என்ன வியப்பு? என்று எம்பெருமான் திறத்து ஈடுபட்டு
ஐயங்கார் கூறுகின்றன ரென்க. துயரமனுபவித்தவன் யாதொருகவலையுமின்றி நிச்சிந்தையாகத் துயிலத் துயரமனுபவியாதவன்
கவலையினாற் கண்ணுறங்குவதில்லை யென்று, காரணமில்லாத விடத்துக் காரியம் நிகழ்ந்ததாகக் கூறினமையால்,
இச்செய்யுள் – விபாவனையணியின் பாற்படும். கேசவன் என்பது – அத்தலத்து எம்பெருமான் திருநாமமென்பர். இத்தலம் – நதியாற் பெயர்பெற்றது.
————-
69-திரு வித்துவக் கோடு-
வாய்த்த கருமம் இனி மற்று இல்லை நெஞ்சமே
தோய்த்த தயிர் வெண்ணெய் தொட்டு உண்ட கூத்தன்
திரு வித்துவக் கோடு சேர்ந்தால் பிறவிக்
கருவின் துவக்கு ஓடும் காண் –69-
(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! – (கிருஷ்ணாவதாரத்திலே),
தோய்த்த தயிர் – தோய்த்தபடியேயுள்ள தயிரையும்,
வெண்ணெய் – வெண்ணையையும்,
தொட்டு உண்ட – களவுகண்டு புசித்த,
கூத்தன் – திருவிளையாட்டையுடைய திருமாலினது,
திருவிற்றுவக்கோடு – திருவிற்றுவக்கோடென்னுந் திவ்வியதலத்தை,
சேர்ந்தால் – சென்று சேர்ந்தமாத்திரத்தில், –
பிறவி – பிறப்புக்குக்காரணமான,
கருவின் துவக்கு – கர்ப்பத்தின் சம்பந்தம்,
ஓடும் – நீங்கும்; (ஆதலால்),
வாய்த்த கருமம் – நாம்செய்யக்கிடந்த தொழில்,
இனி மற்று இல்லை – இனிமேல் வேறொன்று மில்லை; (எ – று.) – காண் – அசை தேற்றமுமாம்.
மனமே! திருவிற்றுவக்கோடென்னுந் திவ்வியதலத்தைச் சேர்ந்தாயாயின், பிறப்புக்குக்காரணமான கரும சம்பந்தமெல்லாம்
ஒழிந்து நற்கதி பெறுவையென்பதாம். இவ்வாறு சுகரமான உபாயத்தாற் பெரும்பேறு பெறலாயிருக்க,
அதனைச் செய்யாது வீணேயுழல்வது என்னே! என்ற கருத்து இங்குத் தொனிக்கும்.
இங்குத் திருவிற்றுவக்கோடு என்றது – அத்திருப்பதியி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமானையுங் குறிக்கும்;
உபலக்ஷணம். ‘திருவித்துவக்கோடு’ என்றும் வழங்குவர்.
—————-
70-திருக் கடித்தானம் –
காண விரும்பும் என் கண் கையும் தொழ விரும்பும்
பூண விரும்பும் என் தன் புன் தலை தான் வாணன்
திருக்கு அடித்தான் நத்தான் திகிரியான் தண்டான்
திருக் கடித் தானத்தானைச் சென்று –70-
(இ – ள்.) வாணன் – பாணாசுரனது,
திருக்கு – மாறுபாட்டை,
அடித்தான் – ஒழித்தவனும்,
நத்தான் – சங்கத்தையுடையவனும்,
திகிரியான் – திருவாழியாழ்வானை யுடையவனும்,
தண்டான் – கதாயுதத்தையுடையவனுமாகிய,
திருக்கடித்தானத்தானை – திருக்கடித்தானமென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளிய திருமாலை,
சென்று – போய்க்கிட்டி, –
என் கண் – எனது கண்கள்,
காண – தரிசிப்பதற்கு,
விரும்பும் – ஆசைகொள்ளும்;
கையும் – (எனது) கைகளும்,
தொழ – கூப்பிவணங்குதற்கு, விரும்பும் -;
என்தன் – எனது,
புல் தலைதான் – இழிவான தலையும்,
பூண – (அப்பிரானது திருவடித்தாமரைகளைச்) சூடிக்கொள்வதற்கு, விரும்பும் -; (எ – று.)
பாணாசுரனது விருத்தாந்தத்தை அநுசந்தித்த ஐயங்கார், அதனால் எம்பெருமானே பரதத்துவப்பொருளாவ னென்ற
உண்மையை யுணர்ந்து தமது கண் முதலிய பொறிகள் வகுத்தவிஷயமான அவ்வெம்பெருமானிடத்தே சென்று
தத்தமக்கு உரிய திருத்தொண்டுபுரிய விரும்புவதை இதனால் தெரிவிக்கின்றன ரென்க.
“காண்காணென விரும்புங் கண்கள் கதிரிலகு, பூண்டாரகலத்தான் பொன்மேனி” என்றார் ஆன்றோரும்.
புன்றலை யென்றது – நைச்யாநுஸந்தாநம்.
————-
71–திரு வாறன் விளை –
சென்று புனல் மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்று புலன் அடக்கி விட்டாலும் இன் தமிழால்
மாறன் விளைத்த மறை ஒதார்க்கு இல்லையே
ஆறன் விளைத் திருமால் அன்பு –71–
(இ – ள்.) சென்று – தீர்த்தயாத்திரையாகச் சென்று,
புனல் மூழ்கி – புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நாநஞ்செய்து,
செய் தவங்கள் செய்தாலும் செய்தற்கு உரிய (சிறந்த) தவங்களைச் செய்தாலும்,
புலன் ஐந்து வென்று அடக்கி விட்டாலும் – தமது ஐம்பொறிகளையும் (தமக்குஉரிய ஐம்புலன்களிற் செல்லவொட்டாது) சயித்துஅடக்கினாலும்,
மாறன் – நம்மாழ்வார்,
இன் தமிழால் விளைத்த மறை – செவிக்கினிய தமிழ்ப்பாடலாகச் செய்தருளிய வேதத்தை,
ஓதார்க்கு – ஓதியுணராதவர்க்கு,
ஆறன்விளை திருமால் அன்பு – திருவாறன் விளையென்னுந் திருப்பதியி லெழுந்தருளிய எம்பெருமானது திருவருள்,
இல்லை – உண்டாகாது; (எ – று.)
நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திருவாய்மொழியை ஓதியுணர்ந்தவரிடத்துத் திருமால் எளிதில் எவ்வாறு திருவருள் புரிவானோ,
அவ்வாறாகப் புண்ணியதீர்த்தங்களில் ஸ்நாநஞ்செய்தல் உக்கிரமான தவங்களைச்செய்தல் ஐம்பொறிகளையடக்குதல்
முதலிய அரும்பெருந்தொழில்களைச் செய்பவரிடத்தும் திருவருள்செய்யா னென்பதாம்.
வேதத்தின் முற்பகுதியாகிய கர்மகாண்டத்தை முக்கியமாகக்கொண்டு அதன்படி தவம்முதலியன செய்தால்
அவை அழியுமியல்பினவான சுவர்க்கம் முதலிய காமியபயன்களைத் தருவனவாய் முத்திக்கே நேரே காரணமாகாமையால்
அவ்வாறாகிய அரிய தொழிலை மேற்கொள்பவரிடத்தில் திருமாலின் திருவருள் எளிதி லுண்டாகாது;
திருக்குருகூரில் அவதரித்து லோகோபகாரமாகப் பரப்பிரமசுவரூபத்தை உள்ளபடி உணர்ந்து யாவரும் அறியும்படி
“ஆரார்வானவர்கள் செவிக்கினியசெஞ்சொல்லே” என்றவாறு இனியசெஞ்சொற்களாக வெளியிட்டு
உயிர்களை இனிஒருபிறப்புமின்றி முத்திபெறுமாறு செய்த பொய்யில்புலவராகிய நம்மாழ்வாருடைய அருளிச்செயலைக்
கேட்டும் ஓதியும் உணர்ந்து நிற்பவரிடத்துத் திருமாலின் திருவருள் எளிதில் சித்திக்கு மென்க.
‘அராஜகமான தேசத்திலே பட்டத்துக்கு உரிய யானையைக் கண்ணைக்கட்டிவிட்டால் அது எடுத்துத் தன்கழுத்திலே
வைத்துக்கொள்ளப்பெற்றவன் அரசனாய்விடுமாறுபோல இவ்வுலகத்தில் வைதிகமரியாதை அழிந்துபோன
சமயத்திலே அதனை நிலைநிறுத்துதற்பொருட்டு எம்பெருமான் தனது நிரங்குசஸ்வாதந்த்ரியத்தால் பத்தாத்மாக்களிலொருவர்
பக்கல் விசேஷகடாக்ஷஞ்செய்ய, அதனால் அவர் மற்றையோரையும் சீர்திருத்தும்படி சிறப்புற்றனர்’ என்று ஆன்றோர் கூறுமாறு
எம்பெருமான் உலகத்தைத் திருத்துவதற்காகவே விசேஷகடாக்ஷஞ்செய்து நம்மாழ்வாரைத் திருவவதரிப்பித்தானாதலால்,
அவரது அருளிச்செயலை யோதினவரிடத்துத் திருமாலருள் சித்திக்கு மென்னலாம்.
“தவஞ்செய்வதும் தழல்வேள்விமுடிப்பதும் தம்மையொறுத்,
தெவன்செய்யு மெய்யன் குருகைப்பிரா னெம்மை யின்னமொரு,
பவஞ்செய்கைமாற்றிய பண்டிதன் வண்டமிழ்ப்பாவு முண்டே,
யவஞ்செய்கைமாற்றச் செவியுண்டு நாவுண் டறிவுமுண்டே” என்ற சடகோபரந்தாதி இங்குக் காணத்தக்கது.
இனி, பலவிஷயங்களையும்பற்றிக் கண்டபடி கூறுகின்ற வடமொழிவேதம்போலவன்றி, எம்பெருமானது
ஸ்வரூபரூபகுண விபூதிகளையே கூறிக்கொண்டுசெல்லுந் திருவாய்மொழியை யோதினோர்க்கே
திருமாலினிடத்துப் பக்தியுண்டாகு மென்று இச்செய்யுட்குப் பொருள் கூறினுமாம். ‘ஓதாதார்க்கு’ என்றும் பாடம்.
மலைநாட்டுத் திருப்பதிகள் முற்றும்.
———-
நடு நாட்டுத் திருப்பதிகள்–2-
72-திருவயிந்த புரம் –
அன்பு அணிந்த சிந்தையராய் ஆய்ந்த மலர் தூவி
முன் பணிந்து நீர் எமக்கு மூர்த்தியரே என்பர்
எம் ஐயிந்திர புரத்தார்க்கு இன் தொண்டர் ஆனார்
தமை இந்திர புரத்தார் தாம் –72-
(இ – ள்.) எம் – எமது,
ஐயிந்திரபுரத்தார்க்கு – திருவயிந்திரபுரமென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளிய தெய்வநாயகப்பெருமானுக்கு,
இன்தொண்டர் ஆனார்தமை – நல்லடியாரானவர்களை, –
இந்திரபுரத்தார்தாம் – தேவேந்திரனது அமராவதி நகரத்தில் வாழ்கின்ற தேவர்கள், –
அன்பு அணிந்த சிந்தையர் ஆய் – பக்திகொண்ட மனமுடையவராய்,
ஆய்ந்த மலர் தூவி – (அவர்கள் மீது) ஆராய்ந்துஎடுத்த (சிறந்த) கற்பகமரத்தின்மலர்களைச் சொரிந்து,
முன் பணிந்து – (அவர்கட்கு) முன்னே வந்து நமஸ்கரித்து,
நீர் எமக்கு மூர்த்தியரே என்பர் – “நீவிர் எங்கட்குக் கடவுளாவீர்கள்’ என்று கொண்டாடுவார்கள்; (எ – று.)
“மணியாழிவண்ணனுகந்தாரைத் தன்வடிவாக்குமென்றே, துணியாழியமறை சொல்லும்” என்றபடி எம்பெருமானுக்கு
அடிமைப்பட்ட மாத்திரத்தில் எம்பெருமானோடு பரமஸாம்யத்தைப் பெறுதலால், அப்படிப்பட்ட அடியார்களை,
நல்வினையொழிந்தமாத்திரத்தில் நசிக்குந் தன்மையுள்ள சாதாரணதேவர்கள் தாங்கள் நற்பேறுபெறுமாறு
வணங்குவ ரெனத் திருமாலடியார்களின் மேன்மையைக் கூறினார்.
தெய்வநாயகனுக்கு அடிமைப்பட்ட மாத்திரத்தில் அவ்வாறு அடிமைப்பட்டவர்களும் தெய்வநாயக ராவரெனச் சமத்காரந்தோன்றக் கூறியவாறு.
“வழிநின்று நின்னைத் தொழுவார் வழுவா, மொழிநின்ற மூர்த்தியரேயாவர்,”
“மாதவன்றமரென்று வாசலில்வானவர்,
போதுமினெமதிடம் புகுதுகவென்றலும்,
கீதங்கள்பாடினர் கின்னரர்கெருடர்கள்,
வேதநல்வாயவர் வேள்வியுள்மடுத்தே” என்பவை இங்குக் கருதத்தக்கன. தூவி – அருச்சித்து எனினுமாம்.
ஐயிந்திரபுரம் = அயிந்திரபுரம்; எதுகை பற்றியபோலிவிகாரம். அஹீந்த்ரனெனப்படுகிற திருவனந்தாழ்வான்
பூஜித்த தலமாதல் பற்றி, ‘அஹீந்த்ரபுரம்’ என்று இத்திருப்பதிக்குத் திருநாமம்.
———-
73-திருக் கோவலூர் –
தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
சேம உயிரும் செகம் அனைத்தும் பூ மடந்தைக்கு
ஆம் கோ அலாயுதன் பின்னா அவதரித்த
பூங்கோ வல் ஆயன் பொருள் –73–
(இ – ள்.) தாமரையான் ஆதி ஆய் – தாமரைமலரில்வாழ்கின்ற பிரமன் முதலாக,
தாவரங்கள் ஈறு ஆன – தாவரப்பொருள்கள் இறுதியாகவுள்ள,
சேமம் உயிரும் – உலகத்துவாழ்கின்ற ஜீவராசிகளும்,
செகம் அனைத்தும் – (அவற்றிற்கெல்லாம் இடமான) எல்லாவுலகங்களும், –
பூ மடந்தைக்கு ஆம் கோ – தாமரைமலரில்வசிக்கின்ற இலக்குமிக்கு உகந்த தலைவனும்,
அலாயுதன் பின்ஆ அவதரித்த – கலப்பையை ஆயுதமாகவுடைய பலராமனுக்குத் தம்பியாகத் திருவவதரித்தவனுமாகிய,
பூ கோவல் ஆயன் – அழகிய திருக்கோவலூரென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளிய ஆயனாரது,
பொருள் – படைப்புப்பொருள்களாம்; (எ – று.)
பிரமன்முதல் தாவரமீறான எல்லாப்பொருள்களும் திருமாலாற் படைக்கப்பெற்று அவனிட்டவழக்காயிருக்கு மென்பதாம்.
கோபாலன் எனப்படுகிற ஆயனார் எழுந்தருளியிருக்குந் திவ்விய தலமாதல் பற்றி, இதற்கு ‘திருக்கோவலூர்’ என்று திருநாமமாயிற்று;
வடமொழியில், இது, ‘கோபாலபுரம்’ எனப்படும்.
“பாவருந்தமிழாற் பேர்பெறுபனுவற்பாவலர்பாதிநாளிரவின்,
மூவரு நெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு” என்று புகழ்ந்து கூறும்படி
முதலாழ்வார்மூவரும் ஒருவரையொருவர் சந்தித்து அந்தாதிபாடின தலம். இது.
நடுநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிக—ளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply