ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திரு அழகரந்தாதி –81-100-

பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை குறித்துத் தோழி இரங்குதல் –

சீர் அரி தாழ் பொழில் மாலிருஞ்சோலை யில் செல்வர் செங்கட்
போர் அரி தாள் புனை தார் அரிது ஆகில் தண் பூந்துளவின்
தார் அரி தாவும் தழை அரிது ஆகில் தழை தொடுத்த
நார் அரிது ஆகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்று நுதற்கே –81–

(இ – ள்.) சீர் அரி – சிறந்த ஹரியென்னும் ஒருதிருநாமமுடையவரும்,
செம் கண் போர் அரி – (கோபத்தாற்) சிவந்த கண்களையுடைய போர்த் தொழில்வல்ல நரசிங்கமூர்த்தியானவரு மாகிய,
தாழ் பொழில் மாலிருஞ் சோலையில் செல்வர் – (கிளைகள் தழைத்துத்) தாழ்ந்துள்ள சோலைகளை யுடைய
திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற எல்லாச்செல்வங்கட்குந் தலைவரான அழகப்பிரானது,
தாள் – திருவடிகளில்,
புனை – தரித்த,
தார் – மாலை,
அரிது ஆகில் – (கிடைப்பது) அரியதானால், –
தண் பூ துளவின் தார் – குளிர்ச்சியான மலர்களையுடைய அத்திருத்துழாய்மாலையில் இடையிடையே தொடுக்கப்பட்டுள்ள,
அரி தாவும் தழை – (நறுமணத்தால்) வண்டுகள் மேல்விழுந்துமொய்க்கப்பெற்ற தழையும்,
அரிது ஆகில் – (கிடைப்பது) அரியதானால்,
தழை தொடுத்த நார் அரிது ஆகில் – அத்தழை தொடுக்கப்பெற்றுள்ள நாரும் (கிடைப்பது) அரியதானால், –
எங்கள் நல்நுதற்கு பிழைப்பு அரிது ஆம் – அழகியநெற்றியையுடையளான எங்கள் மங்கைக்கு உயிர்வாழ்க்கை அரியதாம்; (எ – று.)

“வானோர்தலைமகனாஞ்,சீராயினதெய்வநன்னோயிது தெய்வத்தண்ணந் துழாய்த்,
தாராயினுந் தழையாயினுந் தண்கொம்பதாயினுங் கீழ், வேராயினும் நின்றமண்ணாயினுங் கொண்டுவீசுமினே” என்றபடி,
தலைவி தலைவனைப்பிரிந்து விரகதாபத்தால் மரணவேதனைப்படுகின்றநிலையிலே அவனது மாலைகிடைக்கப்பெற்றால்
அதுகொண்டு ஒருவாறு ஆறி உயிர்வைத்திருக்கக் கூடும்; அம்மாலைமுழுதுங் கிடையாவிடின்,
அதில்தொடுக்கப்பட்ட தழையாயினும் கிடைத்தால் அதுகொண்டு தணிந்து பிழைத்திருக்கலாம்;
அத்தழையும் கிடையாவிடின், அதுதொடுத்த நாராயினும் கிடைத்தால் அதுகொண்டாயினும் ஆறி உயிர்த்திருத்தல் கூடும்;
அதுவும் கிடையாவிடின், இவள் பிழைத்திருக்கமாட்டாள்; அவ்வேதனைமிகுதியால் இறந்துபடுவள் என்பதாம்.
தலைவனோடு சம்பந்தம்பெற்ற பொருள் யாதாயினும்இந்நோய்க்குப் பரிகாரமா மென்பது, இதனாற் போந்த பொருள்.

சீர்அரி – ஸ்ரீஹரி: திருமால். தன்னைச்சரணமடைந்தவர்களுடைய துன்பங்களையெல்லாந் தீர்ப்பவனாதலால்,
ஹரியென்று திருநாமம்; ஹரித்தல் – அழித்தல்.
ஹரிஎன்ற சொல் – சிங்கத்தைக்குறிக்கும்போது யானை முதலிய பெருவிலங்குகளையும் அழிக்கவல்லது என்றும்,
வண்டைக்குறிக்கும்போது மலர்களினின்று தேனைக் கவர்வது என்றும் காரணப்பொருள்பெறும்.
மற்றும் அரியென்ற சொல்லுக்குப் பலபொருளுள்ளதனால்,
‘சீரரிதாழ்பொழில்’என்பதற்கு – சிறந்த சூரியன் (அல்லது சந்திரன்) தாழ்ந்து செல்லும்படியான (மிகவுயர்ந்த) சோலை யென்றும்,
சிறந்த இந்திரனும் விரும்பும்படியான சோலையென்றும், அழகிய கிளிகள் தங்கப்பெற்ற சோலை யென்றும் பொருளுரைக்கவும் படும்.
தாழ்தல் – கவிந்திருத்தல், கீழ்ப்படுதல், விரும்புதல், தங்குதல்.
செல்வர் – இம்மைமறுமைவீடுகளில் உயிர்கள்நுகருஞ் செல்வங்கட்கெல்லாம் உடையவர்.
நன்னுதல் – பண்புத்தொகையன்மொழி. “எங்கள்” என்றது, மற்றைப்பாங்கியரையுங் கூட்டி;
படர்க்கையை உளப்படுத்திய தன்மைப்பன்மை.
இனி, இதனை, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடுநிற்றலாகக் கொள்ளினும் இழுக்காது.

ஐயங்கார் எம்பெருமானைப் பிரிந்து வருந்துகின்ற நிலைமையைக் கண்ட அன்பர்கள், எம்பெருமானது சம்பந்தம்
பெற்ற பொருள் யாதாயினுமொன்றை அவனது பிரஸாதமாகப் பெற்றாலன்றி இனி இவர்
தரித்திரா ரென்று சொல்லும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
“எந்தைபிரான் தனக்கு, அடியாரடியார்தம்மடியாரடியார்தமக், கடியாரடியார் தம்மடியாரடியோங்களே” என்றபடி
எம்பெருமானது சம்பந்தத்தை நேரிலேனும் பரம்பரையாக வேனும் பெற்ற பாகவதரது சம்பந்தம்
இவ்வாற்றாமைக்குப் பரிகாரமாமென்று ஸ்வாபதேசங்கொள்ளவும் அமையும்.

————

நன்னுதலைப் பணி பூண் மார்பில் வைத்து விண் நாட்டு இருப்பார்
மின்னுதலைப் பணி மேல் துயில்வார் விடைவெற்பில் நிற்பார்
மன்னுதலைப் பணி அன்பரை வைக்கும் மலர் அடிக் கீழ்த்
துன்னுதலைப் பணி செய்வது எஞ்ஞான்று என் துயர் தொலைந்தே –82–

(இ – ள்.) பணி பூண் மார்பில் – ஆபரணங்களைத் தரிக்கின்ற திருமார்பிலே,
நல்நுதலை வைத்து – அழகிய நெற்றியையுடையவளான திருமகளை வைத்துக்கொண்டு,
விண் நாடு இருப்பார் – பரமபதத்தில் வீற்றிருக்கின்றவரும், –
மின்னு தலை – (மாணிக்கத்தால்) விளங்குகின்ற தலைகளையுடைய,
பணிமேல் – (ஆதிசேஷனென்னும்) பாம்பின்மீது,
துயில்வார் – யோகநித்திரைசெய்கின்றவரும், –
விடை வெற்பில் நிற்பார் – திருமாலிருஞ்சோலை மலையில் நின்றதிருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்றவருமான அழகரது, –
பணி அன்பரை மன்னு தலை வைக்கும் மலர் அடிக்கீழ் – (தம்மை) வணங்குகின்ற அடியார்களை (எந்நாளும் அழிவின்றி)
நிலைபெற்றஇடமாகிய பரமபதத்திலே வைத்தருள்கிற தாமரைமலர்போன்ற திருவடிகளின்கீழ், –
என் துயர் தொலைந்து துன்னு தலை பணி செய்வது – (யான்) எனது துன்பங்கள்நீங்கிப் பொருந்திய தலைமையான திருத்தொண்டுகளைச் செய்வது,
எஞ் ஞான்று – எந்நாளோ? (எ – று.)

அழகப்பிரானுக்குக் கைங்கரியஞ்செய்து பேறுபெறுதலில் உள்ள அவாவினால் இங்ஙனங் கூறினார்.

நிற்பார்அடிக்கீழ் எனவும், அடிக்கீழ்ப்பணிசெய்வதுஎனவும்இயையும். துயர் – கவலை.
துயர்தொலைந்து பணிசெய்வது – பணிசெய்து துயர்தொலைவது என விகுதிபிரித்துக்கூட்டினுமாம்;
துயர் – பிறவித்துன்பம். நின்றான் இருந்தான் கிடந்தான் என்ற மூன்றுபடிகளும் எம்பெருமானுக்கு இருத்தலை, முதலிரண்டடியிற் காட்டினார்.
செய்யுளாதலின், இருப்பார் துயில்வார் நிற்பார் என முறைபிறழக்கூறப்பட்டது;
பரத்வம் வ்யூஹம் அர்ச்சை என்ற நிலைகளின் முறைமைபற்றிக் கூறியதாகவுங் கொள்ளலாம்.
பணி பூண் மார்பு – கௌஸ்துபமென்னுந் திவ்வியரத்தினமாகிய ஆபரணத்தைத் தரித்த மார்புஎன்று உரைப்பாருமுளர்.
“உறுகால்கிளர்பூதமெலாமுகினும், மறுகாநெறி” என்றபடி பரமபதம் அழிவின்றி என்றும்ஒரு படிப்பட இருப்பதாதலால்,
‘மன்னு தலை’ எனப்பட்டது. தலை – இடம்; தலம் என்ற வடசொல் தலைஎன விகாரப்பட்ட தென்னலாம்:
வதம் – வதை என்பது போல. இனி, பணி என்பதைப் பண்ணியென்பதன் தொகுத்தலாகவும்,
மன்னுதலை, என்பதைத் தொழிற்பெயரின்மேல் வந்த இரண்டாம்வேற்றுமை விரியாகவுங் கொண்டு,
அன்பர்களை நிலைபெறுதலைப்பண்ணி வைக்கும் என்று உரைப்பர் ஒருசாரார். பணிமேல் துயிலுதல், திருப்பாற்கடலில்.

———

தொலைந்து ஆனை ஓதும் தொலையானை அன்னை சொல்லால் மகுடம்
கலைந்தானை ஞானக் கலையானை ஆய்ச்சி கலைத் தொட்டிலோடு
அலைந்தானை பாலின் அலையானை வாணன் கை அற்று விழ
மலைந்தானை சோலை மலையானை வாழ்த்து என் மட நெஞ்சமே –83—

(இ – ள்.) என் மடம் நெஞ்சமே – அறியாமையையுடைய எனது மனமே! –
ஆனை தொலைந்து ஓதும் – கஜேந்திராழ்வான் வலிமைகுன்றி அழைக்கப்பெற்ற,
தொலையானை (தொல்லையானை) – பழமையானவனும், –
அன்னை சொல்லால் மகுடம் கலைந்தானை – சிறியதாயான கைகேயியின் வார்த்தையாற் பட்டாபிஷேகோத்ஸவங் கலைந்துவிடப் பெற்றவனும், –
ஞானம் கலையானை – நல்லுணர்வைத்தருகின்ற சாஸ்திரங்களாற் கொண்டாடப்படுகிறவனும், –
ஆய்ச்சி கலை தொட்டிலோடு அலைந்தானை – இடைச்சியாகிய யசோதையினால் அமைக்கப்பட்ட துணித்தொட்டிலோடு அசைந்தவனும், –
பாலின் அலையானை – திருப்பாற்கடலைத் தான்வாழுமிடமாக வுடையவனும், –
வாணன் கை அற்று விழ மலைந்தானை – பாணாசுரனுடைய கைகள் துணிபட்டுவிழும்படி போர்செய்தவனும் ஆகிய,
சோலைமலையானை – திருமாலிருஞ்சோலை அழகப்பிரானை,
வாழ்த்து – வாழ்த்துவாய்; (எ – று.)

தொலையான் – தொன்றுதொட்டுள்ளவன்; ஆதிமூலம் தொல்லையென்னும் ‘ஐ’ விகுதிபெற்ற பண்புப்பெயரின்மேல்
வந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும்பெயராகிய தொல்லையானென்பது, தொலையா னெனத் தொகுத்தல்விகாரப்பட்டது.
இனி, தொலையானை என்பதற்கு – நெடுந்தூரமாகிய பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனை யென்று உரைப்பர் ஒரு சாரார்;
தொலை – தூரம். கூனியாகிய மந்தரை கலகஞ்செய்து கலைத்தற்கு முன்னம் கைகேயிக்கு இராமபிரானிடம்
இயல்பாகவுள்ள புத்திரவாத்ஸல்யத்தையும், இராமபிரானுக்கு அவளிடம் எப்பொழுதும் உள்ள மாத்ருவிசுவாசத்தையுங் கருதி,
சிற்றன்னை யென்னாது, “அன்னை” என்றார்;
இராமபிரானுக்குக் கௌஸல்யையோடு கைகேயியோடு பேதமில்லாதபடியும், கைகேயிக்குப் பரதனோடு இராமனோடு
பேதமில்லாதபடியும் இருந்ததென்பதை இராமாயணத்து அயோத்தியாகாண்டத்தில் விளங்கக்காணலாம்.
ஞானக் கலையானை என்பதற்கு – ஞானநூலாகிய ஸ்ரீகீதையை வெளியிட்டவனை யென்று உரைப்பாரு முளர்.
ஆய்ச்சி – ஆய னென்பதன் பெண்பால்.

இச்செய்யுளின் அடிகளில், தொலைந்தானை தொலையானை, கலைந்தானை கலையானை, அலைந்தானை அலையானை,
மலைந்தானை மலையானை என்பவை உடன்பாடும் எதிர்மறையுமாய் ஒன்றுக்குஒன்று மாறுபடுவதாக மேல்நோக்கில்தோன்றி,
பொருளையுணருமிடத்து வேறுவகைப்பொருள்பட்டு மாறுபாடின்றிமுடிதலால், முரண்விளைந்தழிவணி;
வடநூலார் விரோதாபாஸாலங்கார மென்பர். இது, சொல்லால்வந்த முரண்தொடை;
“சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே என்றது காண்க.
திருவேங்கடத்தந்தாதியின் 83 – ஆஞ்செய்யுளும் இத்தன்மையதாம்; அது வருமாறு;-
“பேரானைக்கோட்டினைப்பேர்த்தானை வேங்கடம்பேணுந்துழாய்த்,
தாரானைப்போதனைத்தந்தானை யெந்தையைச் சாடிறப்பாய்ந்,
தூரானைமேய்த்துப்புள்ளூர்ந் தானைப் பஞ்சவர்க்குய்த்துநின்ற,
தேரானை நான்மறைதேர்ந்தானை தேருநுந்தீதறுமே,”
“மாத்துளவத், தாரானை வேட்கையெலாந்தந்தானைத் மும்மதமும்,
வாரானையன்றழைக்க வந்தானைக் –
காரான, மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால்,
செய்யானை வேலையணை செய்தானை – வையமெலாம்,
பெற்றானைக் காணப்பெறாதானைக் கன்மழைக்குக்,
கற்றானைக் காத்ததொரு கல்லானை – யற்றார்க்கு,
வாய்ந்தானைச் செம்பவளவாயானை – மாமுடியப்,
பாய்ந்தானை யாடரவப் பாயானை” என்ற திருநறையூர்நம்பிமேகவிடுதூதினடிகளையுங் காண்க.

————–

தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்

நெஞ்சில் அம்பு ஆற்ற முடியாது வேள் எய்து நீள் இரவும்
துஞ்சிலம் பால் துளியும் நஞ்சம் ஆம் சொரி கல் மழையை
அஞ்சிலம் பால் தடுத்தார் அலங்காரர் அடி விளக்கும்
நெஞ்சிலம் பாற்று அருகே கிடத்தீர் உயிர் தேற்றுதற்கே –84–

(இ – ள்.) நெஞ்சில் – (எமது) நெஞ்சிலே,
அம்பு – பாணங்களை,
ஆற்றமுடியாது – பொறுக்கமுடியாதபடி,
வேள் எய்து – மன்மதன் பிரயோகித்தலால்,
நீள் இரவும் – நெடிய இராக்காலமுழுவதிலும்,
துஞ்சிலம் – உறக்கங்கொள்ளுகின்றோமில்லை;
பால் துளியும் நஞ்சம் ஆம் – பாலின் துளியும் (எமக்கு) விஷம்போன்றதாம் (மிகக்கைக்கும் என்றபடி);
(ஆதலால்), – சொரிகல் மழையை – பொழிந்த சிலாவருஷத்தை,
சிலம்பால் தடுத்தார் – அழகிய (கோவர்த்தன) மலையைக் கொண்டு தடுத்திட்டவராகிய,
அலங்காரர் – அழகரது,
அடி – திருவடிகளை,
விளக்கும் – (பிரமன் தன்கைக்கமண்டல தீர்த்தங்கொண்டு) கழுவியதனால் வருகிற,
செம் சிலம்பு ஆறு – சிறந்தசிலம்பாற்றினது,
அருகே – சமீபத்திலே,
உயிர் தேற்றுதற்கு கிடத்தீர் – (எம்மை) உயிர்பிழைக்கச்செய்தற்காகக் கொண்டுபோய்ப்படுக்கவையுங்கள்; (எ – று.)

தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைமகள், அப்பிரிவுத் துயரை ஆற்றியடக்கும் வல்லமையிலளாகி,
தனது நிலைமையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாகவுரைத்து
“இனி நான் பிழைத்திருக்கவேண்டில், என்னை நீங்கள் அத்தலைவன்முன்னிலையிற் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்”
என்று வேண்டுகின்றா ளென்க. தலைவன் தானாகவருமளவும் பார்த்து ஆறியிருக்கின்ற இயல்பை இழந்து,
அவனுள்ள இடத்தேசென்று அவன் முகத்தைக்கண்டு பிழைக்கலாமென்றும் அவன்கண்ணெதிரிற்சென்று நின்றால்
அவன் கண்ணோட்டத்தைப் பெறலா மென்றுங் கருதி விரைவில் அங்குச்செல்ல விரும்பிய தலைவி,
தனக்குக்கால்நடைதாராதபடி வலியழிவுமிக்கதனால் தான் அங்குச்சென்று சேரமாட்டாது,
தன்கண்வட்டத்திலே நின்று தன்நிலையைப்பார்த்துக் கால்நடைதளராத தோழியரை நோக்கித்
தன்னை அங்குக்கொண்டுபோய் விடுமாறு வேண்டுகின்றன ளென்க.
(“இங்குத்தை வாழ்வையொழியவேபோய் யமுனைக்கரைக் கென்னையுய்த்திடுமின்,”
“நீர்க்கரைநின்றகடம்பையேறிக் காளியனுச்சியில் நட்டம்பாய்ந்து,
போர்க்களமாக நிருத்தஞ்செய்த பொய்கைக்கரைக்கென்னை யுய்த்திடுமின்”,
“மதுரைப்புறத் தென்னை யுய்த்திடுமின்”,
“ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டி லாய்ப்பாடிக்கே யென்னையுய்த்திடுமின்” என்பவை முதலாகிய அருளிச்செயல்களைக் காண்க.)

எம்பெருமானை இடையீடின்றிச் சேரப்பெறாத நிலையிலே காலவிளம்பம் பொறுக்கமாட்டாமையாற் காலம்
நீட்டித்ததாகத் தோன்றி வருந்துகிற ஐயங்கார், தமது அன்பர்களை நோக்கி
“இனி யான் எம்பெருமானது நிரந்தராநுபவம் பெற்று உய்யுமாறு என்னை நீங்கள் அவனுகந்தருளின
இடத்திற் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்” என்று வேண்டுதல், இதற்கு உள்ளுறை பொருள்.
“நீளிரவு” என்றது – ஸ்வாபதேசத்தில், பொறுக்கவொண்ணாத காலவிளம்பத்றையாம்.
அவ்விளம்பகாலத்தில் மிகக்கவலைகொண் டுள்ளோமென்பது, “நீளிரவுந் துஞ்சிலம்” என்றதன் உட்கிடை.
அப்பிரிவுக்காலத்தில் லௌகிகபதார்த்தங்கள் வருத்தந்தருவனவாதலை,
“நெஞ்சிலம்பு ஆற்றமுடியாதுவேளெய்து”,
“பாற்றுளியும் நஞ்சமாம்” என்றவற்றாற் குறிப்பித்தவாறாம்.
திருமாலினது திருவடியின் சம்பந்தமுள்ள திவ்வியதீர்த்தத்தின் சமீபத்தில் வசித்தலும்
உயிர் ஈடேறுதற்கு ஏதுவா மென்பது, பின்னிரண்டடிகளால் நன்கு விளங்கும்.

முடியாது – எதிர்மறைவினையெச்சம். முடியாது என்பதை முற்றாகக் கொண்டு, நெஞ்சில் தைக்கிற
அம்பு பொறுக்கமுடியாது எனத் தனிவாக்கிய மாக்கி, வேள் எய்தும் என எடுத்து மன்மதன் வருகின்ற
என்று பொருள் கொண்டு இரவுக்கு அடைமொழியாக்கி யுரைப்பாரு முளர்.
“ஊழிபலவோ ரிரவாயிற்றோ வென்னும்,”
“ஊழியிற்பெரிதால் நாழிகையென்னும் ஒண்சுடர்துயின்றதாலென்னும்”,
“இது ஓர்கங்கு லாயிரமூழிகளே” என்றபடி,
கூடியநிலையில் ஒருகணமாகக்கழிகிற இரவு பிரிந்த நிலையில் அநேகயுககாலமாக நீட்டித்துத்
தோன்றுகின்றமைபற்றி, “நீளிரவு” எனப்பட்டது.
துஞ்சிலம் – இங்கே, தனித்தன்மைப்பன்மை. பாற்றுளியுந்நஞ்சமாம் –
“உண்டமருந்துகைக்கும்” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும். உம்மை – உயர்வு சிறப்பு;
இங்கு, நகரவொற்று – விரித்தல்விகாரம். “பால்துளியும் நஞ்சமாம்” என்றது, மன்மத பாணத்தின் செயல்களி லொன்றான
துய்ப்பனதெவிட்டல் என்னுஞ் சோகவகை கூறியதாம்.
“பால்துளி” எனக் கூறியதனால், அப்பாலும் நன்றாக உள்ளிறங்காமல் “பஞ்சொழுக்கிய பால்” என்றபடி
பிறர் துளிதுளியாகப் பாலைத் தன்வாயில் துளிக்கும்படியான நிலைமையை அடைந்தன ளென்பது தோன்றும்.
செம்மை – செவ்வை; சிலம்பாற்றுக்குச் செம்மையாவது – தன்னில் ஒரு கால் நீராடியவர்க்கும் அருவினை
யனைத்தையுந் தொலைத்து உயர்பதமளித்தல். கிடத்தீர் – பிறவினை ஏவற்பன்மைமுற்று.

———–

தேற்றுவித்தால் புனல் தேற்று நர் போல் திரு எட்டு எழுத்தால்
மாற்று வித்தான் என் மயக்கம் எல்லாம் மண்ணும் விண்ணும் உய்யப்
போற்று வித்தாரப் புயல் அலங்காரன் பொன் மேருவைப் போல்
தோற்று விதார் அணியும் சுந்தரத் திருத் தோள் அண்ணலே –85-

(இ – ள்.) மண்ணும் – நிலவுலகத்தாரும்,
விண்ணும் – வானுலகத்தாரும்,
உய்ய – (தாம்தாம்) உய்வுபெறுதற்காக,
போற்று – வணங்கப்பெற்ற,
வித்தாரம் புயல் – பெரிய மேகம்போன்றவனும், –
பொன் மேருவை போல் தோற்று – பொன்மயமான மேருமலைபோல விளங்குகின்ற,
விதார் அணியும் சுந்தரம் திரு தோள் – வண்டுகள் மொய்க்கும் மாலையைத் தரித்த அழகிய தோள்களையுடைய,
அண்ணல் – பெரியோனுமாகிய,
அலங்காரன் – அழகப்பிரான், –
தேற்று வித்தால் புனல் தேற்றுநர் போல் – தேற்றாங்கொட்டையைக்கொண்டு நீரை (க்கலக்கம்மாற்றி)த் தெளியச்செய்பவர்போல,
திருஎட்டு எழுத்தால் என்மயக்கம் எல்லாம் மாற்றுவித்தான் – அஷ்டாக்ஷரமகாமந்திரத்தைக்கொண்டு என்
மதிமயக்கத்தையெல்லாம் மாற்றி மனந் தெளியச்செய்தருளினான்; (எ – று.)

ஞானம் அநுட்டாநம் இவை நன்றாகவேயுடையனான நல்லாசிரியன் நேர்ந்து திருமந்திரோபதேசஞ்செய்து
மனத்தைத் தெளிவித்தல் எம்பெருமான துதிருவருளின்வாய்ப்பினாலன்றி அமையாதாதலின்
அதனை அப்பெருமான்மேல் ஏற்றியும்,
“எயிற்றிடைமண்கொண்டை வெந்தை யிராப்பகலோ துவிந்தென்னைப், பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்,”
“ஏதங்களாயின வெல்லா மிறங்கலிடுவித் தென்னுள்ளே,
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து,
போதிற்கமலவன்னெஞ்சம் புகுந்து மென்சென்னித்திடரிற்,
பாதவிலச்சினைவைத்தார்” என்றபடி. எம்பெருமானே ஆசாரியனாய் நிற்றல்பற்றியும்,
“அறவோர்க்கு அடிகளே தெய்வம்” என்றபடி குருவைத் தெய்வமாகப் பாவிக்கவேண்டுதலாலும்,
மண்கலந்தநீரைத் தேற்றாங்கொட்டையைக் கொண்டு தெளிவித்தல்போல மயங்கியமனத்தைப்
பெரிய திருமந்திரத்தைக்கொண்டு தெளிவித்தவ னென்றார்;
“சாலுறையும், மண்மயக்கந் தேற்றுவித்தான் மாற்றுதல்போ லாரியனா, லுண்மயக்கந் தேற்றுவித்தான்” என்றார் திருவேங்கடமாலையிலும்,
உயிர்கட்கு ஆவனசெய்தல், இறைவன் செயலென்க. தேற்றாமரத்தின்விதையைத் தேய்த்து அத்தேய்வையைக்
குழம்பியநீரிற்கரைத்தால் அந்நீர் கலக்கந்தெளிதல் இயல்பு.
குழம்பிய நீர் – மனக்கலக்கத்துக்கும், தேற்றாம்வித்து – திருமந்திரத்துக்கும் உவமை. மயக்கம் – விபரீதஞானம்.

மண், விண் – இடவாகு பெயர்கள். விஸ்தாரம் – வடசொல். புயல் – உவமையாகு பெயர்.
சுந்தரத்திருத்தோளுக்குப் பொன்மேரு – பருத்தோங்கியவடிவிலும் வலிமையிலும் ஒளியிலும் உவமம்.
பறவைப்பொதுப் பெயராகிய “வி” என்ற வடசொல், இங்குச் சிறப்பாய் வண்டை உணர்த்திற்று;
இனி, வி என்பதை “வீ” என்பதன் குறுக்கலெனக் கொண்டு, வித் தார் – மலர்களாலாகிய மாலையென்றலு மொன்று.
அண்ணல் – பெருமையிற் சிறந்தவன்; ஆண்பாற்சிறப்புப்பெயர். போற்று – அன்போடு பாதுகாக்கிற எனினுமாம்.

————-

அண்ணலை வான் மதி தோய் சோலை மா மலை அச்சுதனை
தண் அலை வானவனை தெய்வ நாதனை தாள் அடைவான்
எண்ணலை வான் பகை ஆம் ஐவரோடு இசைந்து இன்னம் உடல்
புண் அலை வான் எண்ணினாய் மனமே உன் புலமை நன்றே –86–

(இ – ள்.) மனமே -! – அண்ணலை – பெருமையிற்சிறந்தவனும்,
தண் அலை வானவனை – குளிர்ச்சியான திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டருளுகின்ற கடவுளும்,
தெய்வம் நாதனை – தேவர்கட்கெல்லாந் தலைவனுமாகிய,
வால் மதி தோய் சோலை மா மலை அச்சுதனை – சுத்தமான சந்திரன் படியப் பெற்ற திருமாலிருஞ்சோலைமலையில்
அருளியிருக்கின்ற அச்சுதனென்னும் ஒருதிருநாமமுடையவனான எம்பிரானை,
தாள் அடைவான் – திருவடிகளில் ஆசிரயிக்கும்படி,
எண்ணாமல் – நீ நினைக்கின்றாயில்லை;
வான்பகை ஆம் ஐவரோடு இசைந்து – பெரும்பகைவராகிய பஞ்சேந்திரியங்களோடு கூடி,
இன்னம் உடல் புண் அலைவான் – இன்னமும் உடம்பாகிய புண்ணினால் வருந்துமாறு,
எண்ணினாய் – நினைத்தாய்;
உன் புலமை நன்று – உனது அறிவுத்தேர்ச்சி நன்றாயிருந்தது! (எ – று.) – ஈற்றுஏகாரம் – இகழ்ச்சிப்பொருளைக் காட்டும்.

“உன்புலமை நன்று” என்றது – “கல்லைக்கடிக்க நன்றாய்ச்சமைத்தாய்” என்றாற்போல, இகழ்ச்சிக் குறிப்பாகிய
எதிர்மறையிலக்கணையால், நினது விவேகம் சிறிதும் நன்றாயில்லை யென்று இகழ்ந்தவாறாம்.
செய்வனதவிர்வன உணராது உட்பகையான ஐம்பொறிகட்கு இணங்கி ஐம்புலநுகர்ச்சியில் அவாக்கொண்டு
அப்புலன்களில் ஆழ்ந்து இதுவரை மாறிமாறிப்பலபிறப்பும் பிறந்து அலைந்ததுபோதாமல்
இன்னும் பிறப்பெடுத்தலையுமாறு தீவினைதேடுவதாகி, எம்பெருமானைச் சரணமடைந்து
பிறவிநோய்தீரக்கருதாமையால், மனம் இங்ஙனம் இகழப்பட்டது.

வால் – வெண்மை. மதிதோய் என்ற அடைமொழி, உயர்வுநவிற்சி வகையால், அம்மலையின் மிக்கஉயர்வைக் காட்டும்.
அச்யுதன் என்ற வடமொழித் திருநாமம் – அழிவில்லாதவ னென்றும், (தன்னைச்சரணமடைந்தவர்களை) நழுவ
விடாதவ னென்றுங் காரணப்பொருள்படும்.
உடம்பு தசை நிறைந்ததும், அசுத்தமாய் அருவருக்கத்தக்கதும், துன்பத்துக்கு இடமு மாதலால், “உடற்புண்” எனப்பட்டது. வால் – ஒளியுமாம்.

————-

புலமையிலே நிமிர்ந்து அற்பரைப் போற்றி பொது மகளை
குல மையிலே குயிலே கொடியே என்றும் கூர் விழி ஆம்
பல ஐயிலே என்றும் பாடாமல் பாடுமின் பாவலர்காள்
நல் அமையில் ஏய் முத்தம் ஆர் சோலை மா மலை நம்பனையே –87–

(இ – ள்.) பாவலர்காள் – கவிபாடவல்ல புலவர்களே! –
(நீங்கள்), புல மையிலே நிமிர்ந்து – கல்வித்தேர்ச்சியிலே சிறந்து,
அற்பரை போற்றி – இழிவான மனிதர்களைத் துதித்து,
பொதுமகளை – வேசையை ,
குலம் மையிலே குயிலே கொடியே என்றும் – சிறந்த மயிலே குயிலே பூங்கொடியே என்றும்,
கூர் விழி பலம் ஐயிலே ஆம் என்றும் – (அவளது) கூரியகண்கள் வலியவேலாயுதம்போலும் என்றும்,
பாடாமல் – கவிபாடாமல், –
நல் அமையில் ஏய் முத்தம் ஆர் – சிறந்த மூங்கில்களிற் பொருந்திய முத்துக்கள் நிறைந்த,
சோலை மாமலை – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற,
நம்பனை – சிறந்தகடவுளான அழகனை,
பாடுமின் – கவிபாடித் துதியுங்கள். (எ – று.)

இழிவான பொருளின்பங்களிற் பற்றுவைத்து அதனால் அற்பமனிதர்களைத் துதித்தும், விலைமகளிரைப்
புகழ்ந்தும் கவிபாடித் திரியாது, இம்மை மறுமைவீடுகளில் மேன்மைபெறுமாறு என் அழகனைக் கவிபாடித்
துதித்து உய்யுங்கள் என்று, நரஸ்துதிசெய்யும் பாவலர்க்கு நல்லறிவுகூறினார்.

புலமை – பலவேறுவகைப்பட்ட நூலுணர்ச்சிகளை ஒருங்கே கொண்ட பேரறிவுடைமை; பாண்டித்தியம். நிமிர்தல் – உயர்தல்,
பலரினும் மேம் படுதல். பொதுமகள் – பொருள்கொடுப்பவர்க்கெல்லாம் பொதுவாகின்ற பெண்.
மயில் – சாயலிலும், குயில் – இன்குரலிலும், பூங்கொடி – மெல்லிதாய் ஒல்கியொசியும் அழகியவடிவிலும் மகளிர்க்கு உவமைகூறப்படும்.
அவர்கண்கட்கு வேல் – கூரியவடிவிலும், ஆடவரைத்தாக்கி வருத்துதலிலும் உவம மென்க.
இரண்டாமடியில் – மயில் = மையில், மூன்றாமடியில் – அயில் = ஐயில் என்பவை – திரிபுநயம் நோக்கிய முதற்போலிகள்.
முத்துப்பிறக்கு மிடங்களுள் மூங்கிலும் ஒன்றாதலால், “நல்அமையில் ஏய் முத்தம்” எனப்பட்டது;
(அவ்விடங்கள் இன்னவை யென்பதை, “தந்தி வராகமருப்பு இப்பி பூகம் தழைகதலி,
நந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினம் மின்னார்,
கந்தரம் சாலி கழை கன்னல் ஆவின்பல் கட்செவி கார்,
இந்து உடும்பு கரா முத்தமீனு மிருபதுமே” என்பதனால் அறிக.)
“நலமையிலேய் முத்தமார் சோலைமாமலை நம்பன்” என்றது, வேய்தந்த முத்தராகிய சிவ பிரான்வந்து வணங்குந்
திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமா னென்ற குறிப்பை உட்கொண்ட தென்பர்,
இந்நூலைச் சம்பிரதாயமாக உணர்ந்தோர்.
நல்லமை யென்பது நலமையெனத் தொக்கது, திரிபுநயத்துக்காக. முத்தம் – முக்தா என்ற வடசொல் விகாரப்பட்டது.
நம்பன் – (யாவரும்) நம்பிச் சரணமடையத் தக்கவன்; நமது தலைவனென்றும் பொருள்கொள்ளலாம்.

————-

நம்பி நின்றேன் நின் சரணார விந்தத்தை நல் நெஞ்சு என்னும்
செம்பின் இன்றே பொறித்தேன் உனக்கு ஆள் என்று தெய்வக் குழாம்
பம்பி நின் தேசு எறிக்கும் பதம் காணப் பதறுகின்றேன்
கொம்பின் இன்தேன் சொரியும் சோலை மா மலைக் கொற்றவனே –88–

(இ – ள்.) கொம்பின் – பூங்கொடிகளினின்று,
இன் தேன் சொரியும் – இனிமையான தேன் பெருகப்பெற்ற,
சோலை மா மலை – திருமாலி ருஞ்சோலைமலையி லெழுந்தருளியிருக்கின்ற,
கொற்றவனே – (யாவர்க்குந்) தலைவனே! –
உன் சரண அரவிந்தத்தை – நினது திருவடித்தாமரையையே,
நம்பி நின்றேன் – (கதியாக) நம்பிநின்றேன்;
உனக்கு ஆள் என்று “உனக்கு (நான்) அடிமை” என்று,
நல் நெஞ்சு என்னும் செம்பின் இன்றே பொறித்தேன் – (எனது) அநுகூலமான மனமாகிய செப்பேட்டில் இன்றைக்கே எழுதிவைத்துக்கொண்டேன்;
தெய்வம் குழாம் பம்பி – நித்தியசூரிகளுடைய கூட்டம் நெருங்கப்பெற்று,
நின் தேசு எறிக்கும் – நினதுஒளி விளங்கப்பெற்ற,
பதம் – பரமபதத்தை,
காண – அடைவதற்கு,
பதறுகின்றேன் – விரைகின்றேன்; (எ – று.)

சரணாரவிந்தம் – தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; பின்முன்னா கத்தொக்க உவமத்தொகை.
தான்நல்வழிப்படுதற்கு இணங்கிவந்தமைபற்றி, “நல்நெஞ்சு” என்று கொண்டாடப்பட்டது.
‘நெஞ்சென்னுஞ் செம்பினின் றேபொறித்தேன்’ என்றது, உருவகம்; மாறாதபடி என்மனத்தில் நன்றாகப் பதிய
வைத்துக்கொண்டேன் என்றவாறு: செம்பிற்பொறித்தல், தாமிரசாஸநம்.
திருவாய்மொழியில் “அயர்வறுமமரர்களதிபதி” என்ற இடத்தில் ‘அமரர்’ என்றது போல,
இங்கு ‘தெய்வக்குழாம்’ என்றது – பரமபதத்தில்வாழ்கின்ற நித்தியமுக்தர்களைக் குறித்தது.
‘நின்’ என்றது, ‘பதம்’ என்பதனோடும் இயைத்தற்கு உரியது. தேசு – தேஜஸ் என்ற வடசொல்லின் சிதைவு.
கொம்பின், இன் – ஐந்தனுருபு: நீக்கம். மரக்கொம்புகளிற் பூத்த மலர்களினின்று பெருகுந் தேன் அக்கொம்புகளின்
வழியாய்ச் சொரிதல்பற்றி, ‘கொம்பின் இன்தேன்சொரியும்’ எனப்பட்டது;
மரக்கொம்புகளிற் கட்டிய தேன் கூடுகளினின்று இனியதேன் சொரியு மெனவும் அமையும்.

இரண்டாமடியிலும், நான்காமடியிலும், னகரம் நகரமாகக் கொள்ளப் பட்டது, திரிபிலக்கணத்தின்பொருட்டு.

————-

கொற்ற இராவணன் பொன் முடி வீழ கொடும் கண் துஞ்சல்
உற்ற இராவணன் மாள எய்தான் ஒண் பரதனுக்குச்
சொல் தவிரா அவுணன் மாலிருஞ்சோலை தொழுது வினை
முற்ற இராவணம் நல் தமிழ் மாலை மொழிந்தனனே –89–

(இ – ள்.) கொற்றம் – வெற்றியையுடைய,
இராவணன் – (ராக்ஷசராசனான) இராவணனது,
பொன் முடி – ஸ்வர்ணமயமான கிரீடங்கள் (அல்லதுஅழகிய தலைகள்),
வீழ – கீழேவிழும்படியும்,
கொடுங் கண் துஞ்சல் உற்ற – பயங்கரமான கண்களை மூடித்தூங்குதல் மிக்க,
இரா வணன் – இருள்போன்ற (கரு) நிறத்தை யுடையவனான கும்பகர்ணன்,
மாள – இறக்கும்படியும்,
எய்தோன் – அம்பெய்தவனும், –
ஒள் பரதனுக்கு – (நற்குணங்களால்) விளங்குகின்ற பரதாழ்வானுக்கு,
சொல் தவிரா – (முன்பு வாக்குதத்தஞ்செய்த) சொல்தவறாதபடி மீண்டுவந்தருளிய,
அணன் – தமையனுமான அழகப்பிரா னுடைய,
மாலிருஞ்சோலை – திருமாலிருஞ் சோலைமலையை,
தொழுது – (யான்) வணங்கி,
வினை முற்ற இராவணன் – (என்) கருமம்முழுவதும் இராத விதமாக,
நல் தமிழ் மாலை மொழிந்தனன் – சிறந்த தமிழ்ப்பாமாலையை (அந்தஎம்பெருமான்மீது) சொன்னேன்; (எ – று.)

இராவணன் திக்விஜயயாத்திரைசெய்து ஆங்காங்கு அனைவரோடும் பொருது தேவர்முதலிய பலரையும்
வென்றுவந்தவ னாதலால், “கொற்ற விராவணன்” எனப்பட்டான்.
ராவணன் என்ற வடமொழிப்பெயர் – கூச்சலிடுபவ னென்றும், கூச்சலிடச் செய்பவ னென்றும் பொருள்படும்;
சிவபிரானது கைலாசகிரியைப் பெயர்க்கத்தொடங்கி அதன்கீழ்த் தன்கைகள் அகப் பட்டு நசுங்குண்டபோது பேரிரைச்சலிட்டதனாலும்,
தனது கொடியசெய் கைகளால் உலகத்தைக் கதறச்செய்ததனாலும், இவனுக்கு இப்பெயர்; இது, சிவபிரான் இட்டது.
இனி, விசிரவமுனிவனது புதல்வ னென்று பொருள் படுந் தத்திதாந்தநாமமெனக் கொள்ளுதலு மொன்று.
இவன், பிரமபுத்திர ரான புலஸ்தியமகாமுனிவரது குமாரராகிய விசிரவமுனிவர்க்குக் கேகசி யென்னும்
ராக்ஷஸஸ்திரீயினிடத்திற் பிறந்தவன்.
“பொன்முடி” என்பது – பொன்னினாலாகிய கிரீடத்தைத் தரித்த தலை யென்றும் பொருள்படும்;
மூன்றாம்வேற்றுமை யுருபும்பயனுமுடன்தொக்கதொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
வீழ, மாள என்ற செயவெனச்சங்களில் எண்ணும்மை தொக்கது, வினைச்செவ்வெண்.

கும்பகர்ணன் – இராவணனது தம்பி; இவன் இளமையில் மிக்க தவஞ்செய்கையில், இவனுக்கு வேண்டிய
வரங்கொடுத்தற்குப் பிரமதேவன் பிரதியக்ஷமாக, அக்கடவுளினிடத்து “யான் என்றும் அழியாது நித்தியனா யிருக்க வேண்டும்” என்று
வரங்கேட்கத் தொடங்கிய இவன், தேவர்கள் விருப்பத்தின்படி தன்நாவில்வந்துநின்று ஸரஸ்வதீதேவியின் சூழ்ச்சியால்
‘யான் என்றும் நித்திரையுள்ளவனாயிருக்கவேண்டும்’ என்று வரம்வேண்ட,
“அங்ஙனமே ஆகுக” என்று அக்கடவுள் அநுக்கிரகித்ததனால், எப்பொழுதும் பெருந்தூக்கமுடையவனாய்விட்டன னாதலால்,
‘கண் துஞ்சலுற்ற இராவணன்’ என்றார். இரா வணன் – இராவண்ணன்: தொகுத்தல்.
இராத்திரி யைக்குறிக்கிற இராவென்பது – இங்குக் காலவாகுபெயராய், அப்பொழுது நிறைந்துகாணப்படுகிற இருளைக் குறித்தது.
கும்பகர்ணன் பயங்கரமான கண்களையும் கருநிறத்தையு முடையவனாதலால், ‘கொடுங்க ணிரா வணன்’ எனப்பட்டான்.
இவன் வழக்கப்படி பெருந்துயில்கொண்டிருக்கிறபோது, இராவணன் பற்பலஏவலாளரைக்கொண்டு வெகுசிரமப்பட்டு
இவனை வலியஎழுப்பிப் போர்க்குச் செலுத்த, அங்ஙனஞ்சென்று பலவாநரங்களைச் சின்ன பின்னஞ்செய்து
எதிர்த்துப் பொருகையில், ஸ்ரீராமபிரானாற் கொல்லப் பட்டான்.

பரதன் என்ற பெயர் – இராச்சியபாரத்தை நிர்வகிக்கவல்லவ னென்று உறுப்புப்பொருள்படும்;
இராமன் வநவாசஞ்செல்ல, தசரதன் சுவர்க்கம் புக, அரசனில்லாததாகும்இராச்சியத்தை இவன் பாதுகாக்கும்படி
நேரிடுவதை முன்னமே ஞானக்கண்ணினாலறிந்து வசிஷ்டமுனிவர் இவனுக்கு இத்திருநாமமிட்டன ரென்று அறிக.
நற்குணநற்செய்கைகளில் இவன் மிகச்சிறந்தவ னாதலால், “ஒண்பரதன்” என்றார்;
அத்தன்மையை, “ஆயிர மிராமர் நின் கேளாவரோ அறியி லம்மா” என்று குகன் பரதனைக்கொண் டாடியதுகொண்டு உணரலாம்.
கைகேயியின்சொற்படி இராமபிரான் வனவாசஞ்சென்று சித்திரகூடபருவதத்தில் வசிக்கையில் அயோத்தியிலே
தசரதசக்கரவர்த்தி இறந்தனனாக, அதற்குமுன்பு தன்மாமனுடனே கேகய தேசஞ்சென்றிருந்த பரதன் தானும் சத்துருக்கினனுமாக
அயோத்திக்கு வந்து அங்கு நிகழ்ந்ததை யறிந்து இராமன்வனம்புக்கமைக்கு மிகவருந்தித் தந்தைக்குஉரிய
அந்திமகிரியைகளைச் செய்துமுடித்து இராமனை யழைத்து வந்து முடிசூடுவிக்கக்கருதித் தான் அரசியலைத் துறந்து
மரவுரிபுனைந்து தாய்மார் முதலியவரோடு சேனைசூழ வனம்புகுந்து சித்திரகூடத்தில் ஸ்ரீராம னைக் கண்டு
திருவடிதொழுது செய்தியைக் கூற, இராமமூர்த்தி தந்தை திருநாடலங்கரித்ததை அறிந்து சோகித்துச் செய்ய
வேண்டியகிரியைகளைச் செய்துமுடித்தபின்னர், அயோத்திக்கு வந்து முடிசூடிக் கொள்ளவேண்டுமென்று
தன்னைமிகப்பிரார்த்தித்த பரதனுக்குப் பதினான்குவருடங் கழித்தவுடன் வருவதாகக் கூறி அதுவரை அரசாளுமாறு
நியமித்துப் பாதுகையை அளித்தனுப்ப, பரதாழ்வான் பதினான்குவருடங் கழிந்தவுடன் இராமன் வாராவிடின்
அக்கினிப்பிரவேசஞ்செய்து உயிர்நீப்பே னென்று பிரதிஜ்ஞை செய்து மீண்டு சென்று இராசாங்க காரியங்களைப் பார்த்துவர,
பிறகு இராவணசங்காரஞ் செய்தவுடனே இராமபிரான் முன்பு பரதனுக்குத் தான்வாக்கு அளித்ததைத் திருவுள்ளத்திற் கொண்டு
அதுதவறாதபடி வருவதற்காகப் புஷ்பகவிமானத்திலேறி வெகுவிரைவில் திருவயோத்திசேர்ந்து அங்குத் தீக்குதிக்கச்
சித்தனாய்த் தன்வரவை எதிர்பார்த்திருந்த பரதனால் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு அழைக்கப்பட்டன னாதலால்,
“பரதனுக்குச் சொல்தவிரா அணன்” என்றார். அணன் – அண்ணன்: தொகுத்தல்; அணல் என எடுத்து,
அண்ணலென்பதன் தொகுத்தலெனக் கொண்டு,பெரியோனென்று உரைத்தலும் அமையும்.

வினை முற்ற இராவணம் – கருமங்களெல்லாம் அழியும்படி. வணம் – வண்ணம்: தொகுத்தல்.
இராவணன், இராவணம் என்பன இப்பொருள் களில்வருதலை
“இராவண னிராவண னிராவண மறுத்தோர்” என அழகர் கலம்பகத்துங் காண்க.
பகவத்விஷயமாகத் தாம் விண்ணப்பஞ்செய்த, பிரபந்த மாதலால், அவ்விஷயவைலக்ஷண்யம் தோன்ற,
“நல்தமிழ்மாலைமொழிந் தனன்” என்று கொண்டாடிக்கூறினார்; ஆதலால், இது தற்புகழ்ச்சிக்குற்றத்தின்பாற்படாது.
“வினைமுற்ற இராவணம் நல்தமிழ்மாலை மொழிந்தனன்” என்றதனால், இந்நூலிற்குப் பயனுங் கூறியவாறாம்.
மொழிந்தனன் என்பதில், ‘அன்’ விகுதி – தன்மையொருமைக்கு வந்தது.

நான்காமடியில் நகரம் னகரமாக் கொள்ளப்பட்டது, திரிபுநயத்திற்காக.

———

மொழித்தத்தை கொஞ்சும் மலை அலங்காரன் முன் நூற்றுவரை
அழித்து அத்தை மைந்தர்க்கு அரசு அளித்தான் அடி நாள் தொடர்ந்து என்
உழித்தத்தைச் செய்து அன்றிப் போகா வினையை ஒரு நொடியில்
கழித்தத்தை என் சொல்லுகேன் தனக்கு ஆட்பட்ட காலத்திலே -90-

(இ – ள்.) மொழி – சொல்லழகிற்சிறந்த,
தத்தை – கிளிகள்,
கொஞ்சும் – கொஞ்சிப்பேசுதற்குஇடமான,
மலை – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந் தருளியிருக்கின்ற,
அலங்காரன் – அழகனும், –
முன் – முன்பு (கிருஷ்ணவ தாரத்தில்),
நூற்றுவரை அழித்து – துரியோதனாதியர்நூறுபேரையும் (வீமசேனனைக்கொண்டு) நாசஞ்செய்து,
அத்தை மைந்தர்க்கு அரசு அளித்தோன் – (தனது) அத்தையான குந்தியின் குமாரர்களாகிய பாண்டவர்கட்கு அரசாட்சியைக் கொடுத்தருளியவனுமாகிய எம்பெருமான், –
அடி நாள் தொடர்ந்து என்உழி தத்தை செய்து அன்றி போகா வினையை – ஆதிகாலந்தொடங்கி என்னிடத்தில் துன்பத்தைச் செய்தல்லது ஒழியாத என்கருமங்களை,
தனக்கு ஆள்பட்ட காலத்திலே ஒரு நொடியில் கழித்தத்தை – அவனுக்கு (நான்) அடிமைப்பட்டபொழுதே ஒரு மாத்திரைப் பொழுதில் ஒழித்தருளிய திறத்தை,
என் சொல்லுகேன் – என்னவென்று சொல்வேன்! (எ – று.)

பிறப்பு அநாதியாய்வருதலின் தமது உயிரால் அளவின்றிஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இதுவரை
அனுபவித்தவை போக இனி அனுபவிக் கக்கடவனவாய் நின்ற கருமங்களெல்லாம் தாம் எம்பெருமானுக்கு
அடிமைப் பட்டமாத்திரத்தில் உடனே அவனருளால் காட்டுத்தீமுன்னர்ப் பஞ்சுத்துய்போல இருந்தது
தெரியாதபடி அழிந்த திறத்தைக் கொண்டாடிக் கூறினார்.

கொஞ்சுதல் – மழலைச்சொற்பட இனிமையாகப் பேசுதல். தத்தை – கிளிகள், மொழி – சொற்களை,
கொஞ்சும் – கொஞ்சிப்பேசுகிற என்று பதவுரை கூறினும் அமையும்.
நூற்றுவர் – தொகைக்குறிப்பு. குந்தி, கண்ணனதுதந்தையான வசுதேவனது உடன்பிறந்தவ ளாதலால், அத்தையெனப் பட்டனள்.
பாண்டவர்கட்குத் துரியோதனாதியர் வஞ்சனையால் நேர்ந்த பற்பல துன்பங்கட்கெல்லாம் கண்ணபிரான் ஏற்ற மாறு
செய்து பாண்டவர்க்குப் பலவாறு உதவிபுரிந்து, அவர்கள் துரியோதனாதியரைத் தொலைத்தற்கும் அரசு
பெற்றுவாழ்வதற்கும் அவனே மூலகாரணமானதனால், “முன் நூற்றுவரையழித்து அத்தமைந்தர்க்கு அரசளித்தோன்” என்றார்;
(“சென்றவனத்து அத்தைமைந்தரை வாழ்வித்துத் தீயமன்னர், பொன்ற அனத்தந்தைச்செய்த பிரான்” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.)
என்னுழி, உழி – ஏழனுருபு. தத்து – ஆபத்து. அடிநாள் தொடர்ந்து – அநாதிகாலமாய் என்உயிரைத் தொடர்ந்து.
தத்தைச்செய்தன்றிப்போகா வினை – துன்பங்களைச்செய்துவிட்டே கழியக்கடவனவான கருமங்கள்.
நொடி – கைந்நொடிப்பொழுது; மனிதர் இயல்பிலே ஒருகால் கைந்நொடித்தற்குக் கொள்ளும்பொழுது.
கழித்தத்தை – கழித்தது என்ற இறந்தகாலத் தொழிற்பெயரின் இரண்டாம் வேற்றுமைவிரியாகிய கழித்ததை யென்பது
விரித்தல் விகாரம்பெற்றது. சொல்லுகேன் – நகரவொற்று இடைநிலை, எதிர்காலங்காட்டிற்று.

————

கால் அம் அலைக்கும் புவனங்களைக் கரந்தாய் உதிரம்
கால மலைக் குமைத்தாய் அழகா கமலத்துப் பஞ்சு ஆர்
கால் அமலைக்கும் புவிக்கும் அன்பா உயிர் காயம் விடும்
காலம் மலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து என்னைக் காத்தருளே –91–

(இ – ள்.) கால் – ஊழிக்காற்றின்உதவியால்,
அம் அலைக்கும் – கடல் நீர் அலைவீசிப் பொங்கி மேல்வரப்பெற்ற,
புவனங்களை – உலகங்களை,
கரந்தாய் – திருவயிற்றில் ஒளித்துவைத்துப் பாதுகாத்தருளியவனே!
உதிரம் கால – இரத்தத்தைக் கக்கும்படி,
மலை குமைத்தாய் – மல்லர்களை நசுக்கி யழித்தவனே! –
அழகா -! கமலத்து – செந்தாமரைமலரில் வீற்றிருக்கின்ற,
பஞ்சு ஆர் கால் அமலைக்கும் – செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பெற்ற திருவடிகளையுடைய குற்றமற்றவளான திருமகளுக்கும்,
புவிக்கும் – பூமிதேவிக்கும்,
அன்பா – அன்புள்ள கணவனே! –
உயிர் காயம் விடும் காலம் – (எனது) உயிர் (எனது) உடம்பை விட்டு நீங்குங்காலத்தில்,
மலைக்கும் கடுங் கூற்றை காய்ந்து என்னை காத்தருள் – எதிர்த்துப்பொருதுநலியவருங் கொடிய யமனைச் சினந்து
விலக்கி என்உயிரை (நற்கதியிற்சேர்த்து)ப் பாதுகாத்தருள்வாய்; (எ – று.)

“நன்றுங்கொடியநமன்தமர்கள்நலிந்துவலிந்தென்னைப்பற்றும்போது,
அன்றங்கு நீ யென்னைக்காக்கவேண்டும்” என்றார் பெரியாழ்வாரும்.

பிரளயகாலத்திற் பெருங்காற்றுவீசக் கடல்பொங்கி உலகங்களை மேற்கொண்டு அழித்தல் இயல்பு.
அந்த ஆபத்துக்காலத்தில் உலகங்களை அவற்றிலுள்ள சராசரங்களுட்பட வயிற்றில்வைத்துப் பாதுகாத்தவனே யென்பார்,
‘கால் அம் அலைக்கும் புவனங்களைக் கரந்தாய்’ என்றார்.
(“பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் நெடுங்கடலேயானகாலம்,
இனிக்களைகணிவர்க் கில்லையென் றுலகமேழினையு மூழில்வாங்கி,
முனித்தலைவன் முழங்கொளி சேர்திருவயிற்றில் வைத் தும்மை யுய்யக்கொண்ட,
கனிக்களவத்திருவுருவத் தொருவன்” என்றார் திருமங்கையாழ்வாரும்.)
வேறுபுகலிடமில்லாத படி உலகமுழுவதுக்கும் நேர்ந்த கொடிய அத்துன்பக்காலத்தில் அவ்வுலகங்களை
அந்தப் பிரளயப்பெருவெள்ளத்துக்கு உள்ளாய் அழிந்திடாதபடி பாதுகாத்ததுபோல, நின்னை யன்றி வேறு
கதியற்றவனான என்னை அந்திமகரலத்திலே கொடியயமனுக்கு இலக்காகாதபடி ஆட்கொண்டருள்வை யென்பார், இதுகூறி விளித்தார்,
மலைக்குங்கடுங்கூற்றைக் காயவல்ல திறம் நினக்கு உளதென்பது, “உதிரங்காலமல்லைக்குமைத்தாய்” என்று விளித்ததன் குறிப்பு.
ஜீவகோடிகளிற் சிலர் நின்னை என்றும்விட்டுப்பிரியாது உடனுறையும்படி நீ அருள்செய்ததுபோல,
அடியேனிடத்தும் அருள்செய்யவேண்டாவோ? என்பது, “கமலத்து அமலைக்கும் புவிக்கும் அன்பா” என்று அழைத்ததன் தாற்பரியம்.
உதிரம் – ருதிர மென்ற வடசொல்லின் விகாரம். காலுதல் – கக்குதல். மலை – மல்லை என்பதன் விகாரம்.
கமலத்து அமலை என இயையும். அமலா என்ற வடசொல், ஆவீறு ஐயாயிற்று.

இச்செய்யுளில் அடிதோறும் முதலெழுத்துக்கள் சில ஒன்றிநின்று வெவ்வேறுபொருள் தருதல்,
இடையிட்டுவந்த முதல்முற்றுமடக்கு எனப்படும் யமகமாம்;
மேல் 9 4 – ஆஞ் செய்யுளிலும் இது காண்க.
இந்நூலில் இவ்விரண்டு யமகச்செய்யுள்தவிர மற்றையெல்லாம் திரிபுஉடைய செய்யுள்.

————-

அருளக் கொடி இடைப் பூ மாதும் நீயும் வந்து ஆளினும் ஆம்
இருள் அக்கொடிய நமன்வரும் காலத்து இகழினும் ஆம்
கருளக் கொடி அழகா அலங்கார வன் கஞ்சன் நெஞ்சத்து
உருள் அக்கு ஓடிய உதைத்தாய் எனது உயிர் உன் உயிரே –92-

(இ – ள்.) கருளன் கொடி – கருடனதுவடிவ மெழுதிய துவசத்தையுடைய,
அழகா – அழகனே!
அலங்கார – அலங்காரனே!
வல்கஞ்சன் நெஞ்சத்து – கொடிய கம்சனது நெஞ்சிலுள்ள,
உருள் அக்கு – திரண்ட எலும்பு,
ஒடிய – முறியும்படி,
உதைத்தாய் – உதைத்தவனே! –
எனது உயிர் உன் உயிரே – என்னுடைய உயிர் உனக்கு அடிமைப்பட்ட உயிரேயாம்;
(இனி), இருள் அ கொடிய நமன் வரும் காலத்து – இருள்நிறமுள்ள (மிகக்கரிய) அந்தக் கொடுமையுடைய யமன் வரும் அந்திமகாலத்திலே,
கொடி இடை பூ மாதும் நீயும் – பூங்கொடிபோலும் மெல்லிய இடையையுடைய தாமரைமலரில்வாழும் பெரியபிராட்டியும் நீயுமாக,
அருள வந்து ஆளினும் ஆம் – நற்கதியருளுமாறு எழுந்தருளி (அவ்வுயிரை) ஆட்கொண்டாலும் சரி,
இகழினும் ஆம் – (அன்றி யமன்கொண்டுபோம்படி) உபேக்ஷை செய்துவிட்டாலும் சரி; (எ – று.)

என்உயிரை உனக்கு அடிமையாக்கிவிட்டேன்; அங்ஙனம் உன்வசப்பட்ட உயிரை அணைக்கவும் அடிக்கவும்
உனக்கு ஸ்வாதந்திரியமுண்டு; நீ எதுசெய்வதானாலும் அதுகுறித்து எனக்கு ஒன்றும்பாரமில்லை யாதலால்,
நான் இனிக் கவலைகொள்ளவேண்டுவதில்லை, என் கடமையை யான்செய்தாய் விட்டது என்பதுகருத்து.
“நானந்தவைகுந்தநாடெய்திவாழிலென்ஞாலத்தன்றி,
ஈனந்தவாதநிரயத்துவீழிலென் யானடைந்தேன்,
கோனந்தன்மைந்தனை நான்முகன்தந்தையைக் கோயிலச்சு,
தானந்தனையெனக்காராவமுதையரங் கனையே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.

புதல்வர்செய்த பிழைகளைப் பிழைகளென்றுகொள்ளாமல் தான்பொறுப்பதேயன்றி அவற்றிற்காகத்தந்தை
சீற்றங்கொள்ளுமிடத்தும் பொறுத்தருளுமாறு சொல்லிச் செய்விக்கிற தாய்போல,
அடியார்கள் செய்தகுற்றங்களைக் குற்றமென்றுகொள்ளாது தான்பொறுத்தருளுதலேயன்றி
அவற்றிற்காக எம்பெருமான் சீற்றங்கொள்ளுமிடத்தும் பொறுத்தருளுமாறு சொல்லிப் புருஷகாரமாகிற
பெரிய பிராட்டியார் உடனுறைதல் இன்றியமையாதென்றுகொண்டு, ‘பூமாதும் நீயும் அருளவந்து ஆளின்’ என்றார்.

‘கருளக்கொடியழகா’ என்றது, “கருளக்கொடியுடைப்புண்ணியன்” என்றபடி
துன்புற்றவரைப் பாதுகாத்தற்குக் கொடிகட்டியுள்ளவனே! என்றவாறு.

‘அந்நமன்’ என்றது, உலகறிசுட்டு. கருளன் – கருடனென்ற வடசொல்லின் விகாரம். கருளன் + கொடி = கருளக்கொடி:
“சிலவிகாரமாம் உயர்திணை.” (கருடன் பறவைக்கரசாயினும், நித்தியசூரிகளில் ஒருவனாய்ப் பரமசேதநனாதலால்,
அவனை உயர்திணையென்னத் தட்டில்லை.)

————

பிரிவாற்றாத தலைவி தனது நிலைமையைக் கூறுதல்

உயிர்க்கும் படிக்கும் உன் ஆயிரம் பேர் என்று ஒறுத்து அன்னைமார்
செயிர்க்கும் படிக்கு நின்றேன் என் செய்கேன் செழும் தேவர்களும்
அயிர்க்கும் படிக்குறள் ஆம் அழகா அலங்காரா நெய்க்கும்
தயிர்க்கும் படிக்கும் செவ்வாய் மலர்ந்தாய் நின்னைத் தாள் பணிந்தே –93–

(இ – ள்.) செழுந் தேவர்களும் அயிர்க்கும்படி – ஞானவள முடைய தேவர்களும் (இதுஎன்! என்று) சங்கிக்கும்படி,
குறள் ஆம் – குறுகிய வடிவமாகிய (வாமநாவதாரஞ்செய்த),
அழகா – அழகனே!
அலங்கார – அலங்காரனே!
நெய்க்கும் தயிர்க்கும் படிக்கும் செம்வாய் மலர்ந்தாய் – (கிருஷ்ணாவதாரத்திலே) வெண்ணெயையும் தயிரையும் அமுது
செய்தற்காகவும் (பிரளயகாலத்திலே) உலகத்தை உட்கொள்ளுதற்காகவும் சிவந்த திருவாய் மலரைத் திறந்தருளியவனே! –
நின்னை தாள்பணிந்து – (நான்) உன்னைத் திருவடிவணங்கி (நான் உன்னைக் காதலித்ததனாலே என்றபடி), –
உயிர்க்கும் உன் ஆயிரம் பேர் படிக்கும் என்று அன்னைமார் ஒறுத்து செயிர்க்கும் படிக்கு நின்றேன் – (என்னைக்குறித்து) இவள்
பெருமூச்செறிகின்றாள் நினது ஆயிரம்பெயர்களையும் (எப்பொழுதும்) சொல்லிக்கொண்டிருக்கிறாள் என்ற காரணத்தால்
என்தாய்மார் வெறுப்புக்கொண்டு கோபிக்கும் நிலையிலே நின்றிட்டேன்;
என் செய்கேன் – யாது செய்யக்கடவேன்! (எ – று.)

தலைவன் ஒருவழித்தணந்துநின்ற சமயத்திலே பிரிவாற்றாது பலவாறு வருந்துந் தலைவியின் நிலைமையை
நோக்கிய செவிலியர் வெகுண்டு அவளைப் பலபடிசொல்ல, அவ்வெஞ்சொற்களைக் கேட்டு மிகத் துன்புறுகின்ற அத்தலைவி,
தனது நினைப்புமிகுதியால் தலைவனை எதிரில்நிற்கின்றவாறுபோலப் பாவித்து அங்ஙனம் உருவெளித்தோற்றத்திலே
வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப்படுத்திக் கூறியது, இது.
உயிர்த்தல் – “வெய்துயிர்த்திரங்கல்” என்னும் மன்மதாவத்தை;
(“வெவ்வுயிர்த்துயிர்த்துருகும்,” “ஆவியனல வெவ்வுயிர்க்கும்” என்பன – திருவாய்மொழியில் தாயார்வார்த்தை.)
உன் ஆயிரம்பேர்படிக்கும் – “மொழிபலபிதற்றல்” என்னும் மன்மதாவத்தையின் பாற்படும்.
(“முகில்வண்ணன்பேர் கிளரிக்கிளரிப்பிதற்றும்” என்பது, திருவிருத்தத்தில் தாயார்வார்த்தை.)

இரண்டாமடியில், படிக்கு என்பது – படியில் என்ற பொருளில் வந்ததனால், உருபுமயக்கம்.
மனிதரினும் தேவர் அறிவிற்சிறத்தலால், ‘செழுந்தேவர்’ என்றார்.
அவர்களும் வாமநமூர்த்தியின் சொரூபத்தை உள்ளபடி உணரமாட்டாமற்போயின ரென, அதன் விசித்திரங் கூறியவாறு.
உம்மை – உயர்வுசிறப்பு. படி – பூமி; இங்குச் சிறப்புப்பெயர் பொதுப்பொருளதாய், உலகங்களென்றமாத்திரமாய் நின்றது.
“உயிர்க்கும் படிக்கும் உன் ஆயிரம் பேர்” என்றது – தன்னைப் படர்க்கையாக் கூறியது.

தியானநிலையில் நின்ற ஐயங்காரது அகக்கண்ணுக்கு எம்பெருமான் புலனாகி மறைந்தவளவிலே அப்பெருமானது
ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து அது உடனே கிடையாமையால் ஆற்றாமைமிக்குப் பெருமூச்சுவிட்டுக்கொண்டும்
எம்பெருமான் திருநாமங்களை வாய்மாறாமல் எடுத்துக்கூறிக்கொண்டும் வருந்துகின்ற அவரது துயரத்தை நோக்கிப் பரிவர்கள்
‘பொறுமைபூணாது இங்ஙனமும் ஓர் ஆற்றாமையுண்டோ?’ என்று குறைகூற,
அதுகேட்டு மிகத்துயருற்ற ஐயங்கார், அங்ஙனம் தமக்குஉண்டான தடுமாற்றத்தை அப்பெருமானைக்
குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள். விவரம் நோக்கிக்கொள்க.

————-

பணிபதி வாட நின்று ஆடின நூற்றுவர் பால் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின பாப் பதின்மர்
பணிபதி எங்கும் உவந்தன பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் பொன் திருப் பாதங்களே –94-

(இ – ள்.) பங்கயம் பாவையுடன் – செந்தாமரைமலரில் வீற்றிருக்கின்ற சித்திரப்பாவைபோ லழகியவளான திருமகளுடனே,
பணி – (கௌஸ்துபமென்னும்) ஆபரணமும்,
பதி – நீங்காதுபொருந்தப்பெற்ற,
மார்பன் – திருமார்பையுடையவனான,
அலங்காரன் – அழகப்பிரானுடைய,
பொன் திரு பாதங்கள் – பொன்மயமான ஆபரணங்களை யணிந்த திருவடிகள், –
பணி பதி வாட நின்று ஆடின – ஸர்ப்பசிரேஷ்டனான காளியன் வலிமை தளரும்படி (அவன்முடிகளின்மேல்) நின்று நர்த்தநஞ்செய்தன;
நூற்றுவர் பால் சென்றன – துரியோதனாதியரிடத்துச் சென்றன;
பணி பதினாலு புவனமும் தாயின – (இயல்பிலே தமக்குக்) கீழ்ப்படிந்தனவான பதினான்கு உலகங்களையும் தாவியளந்தன;
பதின்மர் பா பணி – பத்து ஆழ்வார்களாலும் பாசுரம்பாடித் துதிக்கப்பெற்ற,
பதி எங்கும் – (திவ்விய) தேசங்களிலெல்லாம், உவந்தன – விரும்பிஎழுந்தருளியிருந்தன; (எ – று.)

இது, இந்நூலின் 26 – ஆஞ் செய்யுள்போன்ற பாதவகுப்பு.
எம்பெருமான் திருவடிகளினிடத்துத் தமக்குஉள்ள ஆராதஅன்பினால் மீண்டும் இது கூறினார்.
திருவேங்கடத்தந்தாதியிலும் பாதவகுப்புச் செய்யுள்கள் இரண்டு வந்துள்ளன.
பணிபதி – வடமொழித்தொடர்; நாகராஜன், நூற்றுவர்பாற் சென்றது, கண்ணன் பாண்டவதூதனாய்
உபப் பிலாவியத்தினின்று அஸ்திநாபுரிக்கு எழுந்தருளியபொழு தென்க.
பதினாலு புவனம் – பூலோகம் புவர்லோகம் ஸுவர்லோகம் மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம் என்ற மேலேழுலகங்களும்,
அதலம் விதலம் ஸுதலம் தராதலம் ரஸாதலம் மகாதலம் பாதாளம் என்ற கீழேழுலகங்களுமாம்.
பூலோகத்தை யளந்ததில் அதன் கீழுலகங்களேழும், மேலுலகத்தையளந்ததில் புவர்லோகம் முதலிய ஆறும் அடங்குதலால்,
‘பதினாலுபுவனமுந்தாயின’ என்றார்; உம்மை – முற்றுப்பொருளது:
(“புடவிகடத்தலையீரேழளந்தன” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.)
உலகங்களெல்லாம் இயல்பிலே தமது திருவடிகட்குக் கீழ்ப்பட்டன வென்பது காட்டி எல்லாவுயிர்களையும் ஆட்கொண்டருளுதற்கு,
உலகமளக்கிறதென்கிற வியாஜத்தால் எல்லாவுயிர்களின் முடியிலும் தன்திருவடிகளை வைத்தனன் என்ற கருத்துத் தொனிக்குமாறு,
“பணிபதினாலுபுவனமுந் தாயின” என்றார். தாயின – தாவு என்ற பகுதி, தொகுத்தல் விகாரப்பட்டுத் தாஎன நின்றது.
‘பதின்மர்பாப்பணி பதி’ என்றது, நூற்றெட்டுத் திருப்பதிகளை, உவத்தலாகிய எம்பெருமானது செயலை
அவனது திருவடிகளின்மேல் ஏற்றிக்கூறியது, உபசாரவழக்கு;
(திருவேங்கடத்தந்தாதியில் “அடவிகடத்தலை வேட்டன” என்றதனோடு இதனை ஒப்பிடுக.) பொன் – ஆகுபெயர்.

இது, யமகச்செய்யுள்.

———–

பாதகர் அத்தனை பேரும் கனகனும் பல் நகத்தா
லே தகரத் தனையேற்கு அருள் ஆளியை எட்டு எழுத்துள்
ஒது அகரத்தனை சுந்தரத் தோள் உடையானை நவ
நீத கரத்தனை சேர்ந்தார்க்குத் தேவரும் நேர் அல்லரோ –95-

(இ – ள்.) பாதகர் அத்தனை பேரும் – தீவினையுடையரான அசுரர்களவ்வளவு பேரும்,
கனகனும் – இரணியனும்,
பல் நகத்தாலே தகர – கைந்நகங்கள்பலவற்றாற் பிளந்தழிய,
தனையற்கு அருள் – (அவ்விரணியனது) குமாரனான பிரகலாதாழ்வானுக்குக் கருணைசெய்த,
ஆளியை – (நர)சிங்க மூர்த்தியும், –
எட்டு எழுத்துள் ஓது அகரத்தனை – அஷ்டாக்ஷரமந்திரத்தில் (முதலிலே) சொல்லப்படுகிற அகரமென்னும் உயிரெழுத்தின் பொருளாயுள்ளவனும்,
சுந்தரம் தோள் உடையானை – அழகிய திருத்தோள்களை யுடையவனும்,
நவநீத கரத்தனை – (கிருஷ்ணாவதாரத்திலே) வெண்ணெயை யேந்திய கையையுடையவனுமாகிய அழகப்பிரானை,
சேர்ந்தார்க்கு – சரணமடைந்தவர்கட்கு,
தேவரும் நேர் அல்லர் – (புண்ணியப்பயனையே அனுபவிப்பவரான) தேவர்களும் சமானராகார்; (எ – று.)
என்று பாகவதமகிமை கூறியவாறாம்.

புண்ணியப் பயனுள்ளவளவும் சிற்றின்பம் நுகர்ந்து அஃது ஒழிந்தவளவிலே மீண்டும் இவ்வுலகிற் பிறந்து
வருந்தக்கடவரான தேவர்கள், எம்பிரானருளால் இருவினையும் அற்று இனிப்பிறப்பின்றி நித்தியமான
முத்தி பெறக்கடவராகி ஜீவந்முக்தி நிலையில் நின்று பிரமாநந்தமனுபவிக்கின்ற பாகவதர்க்குச் சிறிதும் நிகராகா ரென்க.

“பாதக ரத்தனைபேரும்” என்றது, இரணியனது பரிவாரங்களான மிகப்பல அசுரர்களை.
இரணியனுக்குப்பரிந்து நரசிங்கமூர்த்தியை எதிர்த்ததனால், இவர்களும் அப்பெருமானாற் கொல்லப்பட்டனர்;
இதனை, “அறியி னரங்கர் முன்னாளரியாகிய வப்பொழுது,
கொறியி னவுணர்தம் வெள்ளங்கள் கோடியுங் கொன்றதிலோ,
தறியின்வயிற்றிற் றகுவனெஞ்சுஞ் சரபத்துடலும்,
நெறியின் வகிர்ந்தபினன்றோ தணிந்தது நீள்சினமே” என்ற திருவரங்கத்து மாலையினாலும் உணர்க.
இவர்களும் இரணியனோ டொப்ப எம்பெருமான்பக்கல் பகைமையுடைமையால், “பாதகர்” எனப்பட்டனர்.
இப்படி தன்பக்கல் துவேஷங்கொண்ட அசுரர்களையெல்லாம் அப்பெருமான் அழிக்கின்றபோதே, தனக்கு அடிமை
பூண்ட பிரகலாதன் பக்கல் அநுக்கிரகமுடையனா யிருந்தன னாதலால்,
‘பாதகரத்தனைபேருங் கனகனும் பல்நகத்தாலே தகரத் தனையற்கரு ளாளி’ என்றார்;
அத்தன்மையை, “தாழ்குமரன்மேற் கனகவஞ்சகன்மே லோர்முகத்தே,
சூழ்கருணையும் முனிவுந் தோன்றியவால்” என்று நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியில் நன்கு விளக்குவர்.
இரணியன்முதலிய அசுரர்கள் பலரைக்கொன்ற நரசிங்கமூர்த்தியின் உக்கிரத்தைக்கண்டு அஞ்சித் திருமகளும் அருகிற்
செல்லமாட்டாளாக, பிரமன்முதலிய தேவர்கள்பலரும் பலவாறு துதிக்கவும் அச்சீற்றம் அடங்காதிருந்த அந்நிலையிலே,
பிரகலாதன்செய்த துதிமொழிக்குச் சிங்கப்பிரான் திருவுள்ளமுகந்து அவன்முதுகைத்தடவி
“நீ விரும்பிய வரத்தைக் கொடுப்பேன்; வேண்டுக” என்று சொன்னதற்கு, அந்தப் பரமபாகவதன்
‘நின்னை வழிபடும் அன்பேயன்றி யான் வேண்டுவதொரு வரமும் உண்டோ!’ என்றுசொல்லித் தொழுது
பலவாறுதுதித்து ‘இங்ஙனம் உற்ற சீற்றந்தணிந்து திருவுள்ள முவந்தருளவேணும்’ என்று பிரார்த்தித்தவளவிலே,
அப்பெருமான் சினந்தணிந்தன னென்ற விவரத்தைப் புராணங்களிற் காணலாம்.
தகர என்ற செயவெனெச்சம் – உடனிகழ்ச்சிப் பொருளதாய், நிகழ்காலங் காட்டும்.

இரணியனென்ற பெயர் பொன்னிறமானவனென்று பொருள்படுதலால், அதன் பரியாயநாமமாக, “கனகன்” என்றார்.
இரணியம், கநகம் என்பன – பொன்னின் பெயர்கள். திருவேங்கடத்தந்தாதியில், “செம்பொற்றானவன்” என்றதும் இத்தன்மையதே.
“பல் நகத்தாலே” என்பதற்கு – பற்களினாலும் நகங்களினாலும் என்று உரைப்பாரு முளர்.
தநயன் என்ற வடசொல்லின் விகாரமாகிய தனயன் என்றது, திரிபுநயத்துக்காக, தனையன் என இடைப்போலிபெற்றது. ஆளி – சிங்கம்.

‘எட்டெழுத்துள் ஓது அகரம்’ என்றது, அப் பெரியதிருமந்திரத்தின் முதலிலுள்ள பிரணவத்திலடங்கிய அகாரத்தை.
“அகாரார்த்தோவிஷ்ணு:” என்றபடி அதன்பொருள் திருமாலாதலால், ‘அகரத்தன்’ என்றார்.
‘அகரம் எல்லாச் சொற்களுக்கும் மூலமாதலாலும், பிரஹ்மம் எல்லாப்பொருள்களுக்கும் மூலமாதலாலும்,
‘அ’ என்று பரப்பிரஹ்மத்துக்குப் பெயர்’ என வாமநபுராணம் கூறும்.
அகரம், எல்லா வெழுத்துக்களிலுங் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும்;
கடவுள் எல்லாச் சராசரப் பொருள்களிலுங் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்பன்:
அகரம், எல்லா வெழுத்துக்கும் முதல்; பகவான், எல்லாவுலகிற்கும் முதல்: அகரம்,
அவிகாரமான நாதம்; பகவான், விகாரமில்லாத இயற்கைப்பொருள்: இவ்வாறு பல கண்டுகொள்க.
ஸ்ரீ கீதையிலே கண்ணன் ‘எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே’ என்று அருளிச்செய்ததும் உணர்க.
அகரம் என்பதில், கரம் – சாரியை.

நவநீதகரம் – வடமொழித்தொடர். நவநீதமென்ற சொல் – புதியதயிரிலிருந்து எடுக்கப்பட்டதென்று காரணப்பொருள்பெறும்.
தேவரும், உம் – உயர்வுசிறப்பு. இதனால், பிறர் நேரல்லரென்பது தானே போதரும்.

————-

அல்லல் அங்கு ஆரையும் சேர்விக்கும் ஐம்புல ஆசை என்றும்
பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும் பற்று அறாது கண்டாய்
மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து வணங்கு நெஞ்சே
தொல் அலங்காரனைத் தென் திருமால் இருஞ்சோலையிலே -96-

(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
ஆரையும் அல்லல் சேர்விக்கும் – எவரையுந் துன்பமடைவிக்கின்ற,
ஐம் புலம் ஆசை – ஐந்துபுலன்களிற் செல்லுகின்ற ஆசையானது,
என்றும் – எந்நாளும்,
பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும் – பற்கள் அசையப் பெற்று உடல்தளர்ந்து (நடக்க வலியில்லாமற்) கோலை யூன்றும்படியானாலும்,
பற்று அறாது – தொடர்ச்சி நீங்காது; (ஆதலால்),
மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து – அழகுவளமுள்ள மாதர்கள் பக்க லுண்டாகிற மோகம் நீங்கி,
தொல் அலங்காரனை தென்திருமாலிருஞ் சோலையிலே வணங்கு – அநாதியான அழகனை அழகிய
திருமாலிருஞ் சோலைமலையிலே வணங்குவாய்; (எ – று.) –
கண்டாய் – தேற்றம்.
அங்கு – அசை;
அவ்விடத்தி லெனக்கொண்டு, மறுமையி லென்றலு மொன்று.

ஐம்பொறிகளின் வழியாக ஐம்புலன்களை யனுபவிப்பதி லுண்டாகின்ற ஆசையானது,
மிக்க கிழத்தனத்திலுமுட்பட எப்பொழுதும் நீங்காது; ஆதலால், அதற்கு முடிவில்லை: ஆகவே,
அதில் விருப்பம் வைத்துப் பெண்ணாசை கொண்டு மயங்குதலின்றித் திருமாலிருஞ்சோலையழகனை
வணங்கி உய்யும் வழியை நாடுவாய் என்று, தம்நெஞ்சத்துக்கு நல்லறிவுணர்த்தியவாறாம்.

“கருது நெஞ்சே” என்னாது “வணங்குநெஞ்சே” என மெய்யின்வினையை மனத்தின்மேலேற்றிக் கூறியது,
புறக்கரணமாகிய அம்மெய்யின் வணக்கத்துக்கு அந்தக்கரணமாகிய மனத்தின் உடன்பாடு இன்றியமையாதாதலால்.
இதனை, முதற்செய்யுளில் “உரைநெஞ்சமே” என்றதனோடு ஒப்பிடுக.
இத்தன்மைபற்றியே, பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் மனமே காரண மென்ப.
இது, ஒருவகை உபசாரவழக்கு. அன்றி, தியானமென்னும் மனவணக்கத்தைக் குறித்ததுமாம்.

ஆரையும் – யாரையும் என்பதன் மரூஉ; எவ்வளவுநெஞ்சுறுதியுள்ளவர் களையும் என்றபடி.
அலங்கா – உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; அலங்குதல் – அசைதல்.
“பல்லலங்கா நைந்து கோலூன்றி” என்றவிடத்து, சினைவினை முதல்வினை கொண்டது;
அலங்குதல் – பல்லின் வினையாதலும், நைந்து கோலூன்றுதல் – அப்பல்லுடையானது வினையாதலுங் காண்க.
பல்லலங்கா நைந்து கோலூன்றியும் – முற்றமூத்தும் என்றபடி; உம் – இழிவு சிறப்பு. மல்லல் – வளப்பமுணர்த்தும் உரிச்சொல்.
காரிகை – அழகு; அதனையுடையவர், காரிகையார். மருள் – காமமயக்கம்.

————

பிரிவாற்றாத தலைவி நிலையைக் குறித்துப் பாங்கி இரத்தல் –

சோலை இல்லாமையில் சேர் திருமால் இருஞ்சோலை நின்றான்
வேலையில் ஆமையின் வேடம் கொண்டான் புயம் மேவப் பெறாச்
சேல் ஐ யில் ஆம்மை இலங்கு கண்ணாள் அவன் தெய்வத் துழாய்
மாலை இல்லாமையில் மாலை உற்றாள் அந்தி மாலையிலே –97-

(இ – ள்.) சோலை இல் ஆ – சோலைகளை(த் தமக்கு) இருப்பிடமாக (க்கொண்டு),
மையில் சேர் – மயில்கள் தங்கிவசிக்கப்பெற்ற,
திருமாலிருஞ்சோலை – திருமாலிருஞ்சோலைமலையில்,
நின்றான் – நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருக்கின்றவனும், –
வேலையில் ஆமையில் வேடம் கொண்டான் – (திருப்பாற்) கடலிலே ஆமைபோல வடிவங்கொண்டு அவதரித்தவனுமான அழகப்பிரானுடைய,
புயம் – தோள்களை,
மேவ பெறா – தழுவப் பெறாத,
சேல் ஐயில் ஆம் மை இலங்கு கண்ணாள் – சேல்மீனும் வேலாயுதமும் போன்ற மையிடப்பெற்று விளங்குங் கண்களை யுடையவளான இம்மங்கை,
அவன் தெய்வம் துழாய் மாலை இலாமையில் – அத்தலைமகனது தெய்வத்தன்மைபொருந்திய திருத்துழாய்மாலை கிடைக்கப்பெறாமையால்,
அந்தி மாலையிலே – அந்திமாலைப்பொழுதிலே,
மாலை உற்றாள் – மயக்கத்தை யடைந்தாள்; (எ – று.)

இல் – இடம். ஆ – ஆக என்பதன் விகாரம். மையில் = மயில்: முதற் போலி.
அங்குள்ள சோலைகள், மயில்கள் விரும்பித் தமக்குஉரிய வாசஸ்தாந மாகக்கொண்டு நித்தியவாசஞ்
செய்யும்படியான வளமுடையன வென்க. மேவப்பெறாக் கண்ணாள் என இயையும்.
சேல் – மீனின் சாதிபேதங்களிலொன்று; இது, மகளிர்கண்ணுக்குப் பிறழ்ச்சியிலும் வடிவிலும் உவமம்.
ஐயல் = அயில்: முதற்போலி. ஆம் – உவமவுருபு. இலாமையில், இல் – ஐந்தனுருபு, ஏது,
மால் – மயக்கம். அதனையுறுதல், மோகமென்னும் மன்மதாவத்தை. அந்திமாலை – ஒருபொருட்பன்மொழி;
அந்தியென்ற பொதுப்பெயர் மாலை யென்ற சிறப்புப்பெயரோடு கூடி ஒருபொருளையுணர்த்திய தென்னலாம்:
இதனை, இருபெயரொட்டென்றலு முண்டு. “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலைமலரு மிந்நோய்” என்றபடி,
கலவிக்குரியகால மான இரவின் தொடக்கத்திலே, தம்தம் துணையைக் கருதி வந்துசேரும் விலங்குகளையும்
மக்களையுங் கண்டு தலைவி விரகவேதனைமிகுதலால், “அந்திமாலையிலே மாலையுற்றாள்” என்றார்.
நான்காமடியில், வெவ்வேறு பொருள் பட “மாலை” என்ற சொல் பலமுறை வந்தது, சொற்பின்வருநிலையணி.

ஞானக்கண்ணுக்கு இலக்காகி மறைந்த எம்பெருமானது பிரிவினால் வருந்துகின்ற ஐயங்காரது வியாமோகத்தைக்
கண்ணுற்ற அன்பர்கள் இரங்கிக் கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
முதலிரண்டடி – அடியார்கட்கு அருளுதற்கென்று வளப்பமுள்ள திவ்வியதேசத்தில் வந்து நித்தியவாசஞ்செய்பவனும்
சமயமறிந்து உதவுபவனு மான எம்பெருமானுடைய திருத்தோளழகி லீடுபட்டு அவனது நிரந்தராநுபவத்தைப் பெறாத என்றவாறு.
அயில் ஆம் கண்ணாள் – எப்பொருளிலும் நுட்பமாகநுழைந்து செல்லுங் கூரிய ஞானவைலக்ஷண்யத்தை யுடைய ஐயங்கா ரென்றபடி.
சேல்ஆம்கண்ணாள் – எம்பெருமானைப்பிரிந்த கலக்கத்தால் இப்பொழுது இவர்அறிவை ஓரிடத்திலேஒடுக்கி
நிறுத்துந் தியானநிலைகுலைந்து பலபொருள்களிற்செலுத்தும் அறிவுடையராயின ரென்க.
மைஇலங்குகண்ணாள் – அஞ்சனவண்ணனாகிய பெருமானை இலக்காக்கொள்ளும் உணர்வுடையவ ரென்றவாறு.
அவன்தெய்வத்துழாய்மாலையிலாமையில் – அப்பெருமானது திவ்வியமான இனிமை அனுபவிக்கக் கிடையாமையால்,
மாலை உற்றாள் – வியாமோகத்தையடைந்தனர், அந்திமாலையிலே – பேராநந்தமனுபவிக்கக் கடவதான காலத்திலே யென்க.
சோலை இல்ஆ மயில்சேர் திருமாலிருஞ் சோலை – அழகாகவிரிந்துகாட்டுந் தோகைக்கண்கள்பலவற்றை யுடையன வாய்க்
கார்வரவுகண்டுகளித்துக்கூத்தாடும் மயில்கள் போல,
பொலிவுறப் பலபடியாகவிசாலிக்கிற ஞானக்கண்களையுடையராய்க் காளமேகவண்ணனான எம்பெருமானது
தரிசனத்தாற் களித்துக் கூத்தாடும் பாகவதர்கள் தங்கட்கு உரிய வாசஸ்தாநமாகக் கொண்டு
நித்தியவாசஞ்செய்யப்பெற்ற திவ்வியதேச மென்னலாம்.
சேலாங் கண் – எம்பெருமானது மத்ஸ்யாவதாரத்திலே ஈடுபட்டுத் தந்மயமான ஞான மென்றலுமாம்

————–

பிரிவாற்றாத தலைவி நிலையைக் குறித்துப் பாங்கி இரத்தல் –

மாலைக்கு அரும்பு சிறு கால் துகைக்க வருந்தும் எங்கள்
ஆலைக் கரும்பு தன் ஆசை எல்லாம் சொல்லில் ஆயிரம் தோட்டு
ஓலைக்கு அரும்பு ண் தொடமுடம் ஆம் மதி ஊர் குடுமிச்
சோலைக் கரும் புயலே அருள்வாய் உன் துளவினையே –98-

(இ – ள்.) தொட முடம் ஆ (க) – (அடியில்) உராய்தலாலே அடிதேய்ந் திடுமாறு,
மதிஊர் – சந்திரமண்டலம் தவழ்ந்துசெல்லப்பெற்ற,
குடுமி – சிகரத்தையுடைய,
சோலை – திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற,
கரும் புயலே – காளமேகம்போன்றவனே! –
மாலைக்கு – மாலைப் பொழுதிலே,
அரும்பு சிறு கால் துகைக்க – மந்தமாகவீசுகின்ற இளந்தென்றற்காற்று வருத்துதலால்,
வருந்தும் – வருந்துகிற,
எங்கள் ஆலை கரும்பு தன் – ஆலையிலகப்பட்டகரும்புபோன்றவளான எங்கள் தலைவியினது,
ஆசை எல்லாம் -ஆசைமுழுவதையும்,
சொல்லில் – சொல்லிவருவதானால்,
ஆயிரம் தோடு ஓலைக்கு அரும் புண் – (அதனைஎழுதுமிடத்து) ஆயிரம்பனையோலைக்கு (எழுதுதலால்) அரியபுண்ணாகும்;
(இங்ஙனமிருத்தலால்), உன் துளவினை அருளாய் – நினது திருத்துழாய்மாலையை (இவட்கு)த் தந்தருள்வாய்.

ஒருவழித்தணந்த தலைவன் வந்து சிறைப்புறமாக, அதனையுணர்ந்த தோழி சென்று அவனைச்சந்தித்து,
தலைவியின் வேட்கைநோய்மிகுதியைக் கூறியது, இது. “நீங்கியணைந்தவர்க்குப் பாங்கி பகர்ந்தது;
இது, “வருத்த மிகுதிகூறல்” எனப்படும். இதன்பயன், விரைவில் இவளை வரைந்துகொள்க வென வற்புறுத்துதல்.

தலைவரைப்பிரியாத தலைவியர்க்குத் தம்வரவினால் மகிழ்ச்சியை விளைவிப்பனவான மாலைப்பொழுதும் மந்தமாருதமும்,
பிரிந்ததலைவியர்க்குக் காமோத்தீபகமாய் விரகவேதனையைவளர்த்து வருத்துதலால்,
‘மாலைக்கு அரும்பு சிறுகால் துகைக்க வருந்தும்’ எனப்பட்டது.
இரசமுள்ள கரும்பு போல இனிமைமிக்கவளான இவள், அது ஆலையிலகப்பட்டு நொருங்கிச் சிதையுமாறுபோல
இங்ஙனம் இவ்விரண்டுக்கும் இலக்காகி வருந்துகின்றன ளென்பாள், ‘துகைக்க வருந்தும் ஆலைக்கரும்பு’ என்றாள்.
ஒருபால் காதல்நோயினாலும் மற்றொருபால் காமோத்தீபகப்பொருள்களினாலும் நெருக்கி வருத்தப் பெறுமவ ளென்றவாறுமாம்.
‘மாலைக்கு அரும்பு சிறுகால் துகைக்க’ என்ற சொற்போக்கு, துணையிழந்து தனிப்பட்டுநின்ற சமயம் பார்த்து
இருட்பொழுதிலே இழிவான கால்கொண்டு உதைக்க என் ற ஒருபொருளைத் தொனிப்பிக்கும்.
இவளது ஆசைநிலைகளை யெல்லாஞ் சொல்வதா னால், ‘துகைக்க வருந்தும்’ எனப்பட்டது.
இரசமுள்ள கரும்பு போல இனிமைிக்கவளான இவள், அது ஆலையிலகப்பட்டு நொருங்கிச் சிதையுமாறுபோல
இங்ஙனம் இவ்விரண்டுக்கும் இலக்காகி வருந்துகின்றன னென்பாள், அவற்றை ஒருவர் எழுதிவருமிடத்து
ஆயிரம் ஓலைக்கு எழுதக்காணு மென்பது, ‘ஆசையெல்லாஞ்சொல்லி லாயிரந்தோட்டோலைக்கரும்புண்’ என்றதன் கருத்து;
இதனை “பன்னியுரைக்குங்காற் பாரதமாம்” என்றாற்போலக்கொள்க.
கூரியஎழுத்தாணிகொண்டு ஓலையிற்பதியும்படியெழுதுதலால், அதற்குப் பொறுத்தற்கு அரிய புண்ணாகு மென்று கற்பித்து,
‘ஓலைக்கு அரும்புண்’ எனப்பட்டது;
எழுதியஓலையை “செல்லரித்தஓலை” என்று திருவரங்கக்கலம்பகத்திற் சொல்லியதனோடு இதனை ஒப்பிடுக.

“தொடமுடமாமதியூர்குடுமி” என்றது – அதிசயோக்தி வகையால், அம் மலையின் மிக்க உயர்வை எடுத்துக்காட்டும்.
வானத்திலே சந்திரன் செல்லும் வீதியளவும் அம்மலைச்சிகரம் உயர்ந்திருத்தலால், சந்திரன் அச் சிகரத்தில் அடி
யுராய்ந்து சென்றுசென்று அவ்வடிப்புறம் தேய்வதாயிற் றென்க. ‘முடமா’ என்பதில், ஆ என்பது – ஆக என்பதன் விகாரம்.
நாமைகதேசே நாமக்ரஹணத்தால், சோலைமலை, “சோலை” எனப்பட்டது. புயல் – உவமவாகுபெயர். மாலைக்கு – உருபுமயக்கம்.
அன்றி, நினது திருத்துழாய்மாலைக் காக எனினுமாம்; அப்பொருளில், ‘வருந்தும்’ என்பதனோடு இயையும். தோட்டோலை – ஒருபொருட்பன்மொழி.

எம்பெருமானைப்பிரிந்து வருந்தும் ஐயங்காரது நிலைமையை அன்பர்கள் அப்பெருமான் சந்நிதியில் விண்ணப்பஞ்செய்தல்,
இதற்கு உள்ளுறை பொருள். மாலைக்கு அரும்பு சிறுகால் துகைக்க வருந்தும் – உரியகாலத்திலே பேறுகிடையாமையால்,
உலகத்துப்பொருள்கள்மேலிடுதல்பற்றி வருந்துகின்றனர் இவரென்க.
ஆலைக்கரும்பு – இக்கு அரையந்திரத்துட்பட்ட தென்ன இருவினையுட்புக்கு அரைமாநொடியுந்தரியாதுழல்
புன்பிறப்பைக் குறித்து வருந்துபவர் இவர் என்க.
உன் துளவினை அருளாய் – நினது இனிமையை இவர்க்கு அருள்செய்வாய் என்றவாறு. பிறவும காண்டுகொள்க.
இம்மலையின் உயர்வை மதியாது வருபவர் துன்புறுவரென்பது, ‘தொடமுடமா மதியூர்குடுமி’ என்ற அடைமொழியாற் போதரும்.

‘ஓலைக்கரும்புண் தொட முடமாம்’ என்பதற்கு வேறு உரை கூறுவரே னும், பொருந்துவதை ஆய்ந்துகொள்க; பிறஇடங்களிலும் இவ்வாறே.

————-

துளவ இலை ஆர் பொன் அடி முடி சூட்டி தொண்டு ஆக்கி என்னை
வளவிலையாக் கொண்ட நீ கை விடேல் மங்கல குணங்கள்
அளவு இல் ஐயா அலங்கார சமயிகள் ஆய்ந்த வண்ணம்
உள இலை ஆய் உரு ஆய் அருவு ஆய ஒரு முதலே –99-

(இ – ள்.) மங்கலகுணங்கள் அளவு இல் ஐயா – திருக்கலியாண குணங்கள் அளவின்றி மிகப்பெற்ற ஸ்வாமீ!
அலங்கார – அழகனே!
சமயிகள் ஆய்ந்த வண்ணம் – பற்பலசமயத்தார் (தம்தமதுநூல்களைக்கொண்டும் புத்தி சக்திகளைக்கொண்டும்
( ஆராய்ந்தவாறு, உள இலை ஆய் உரு ஆய் அரு ஆய் – (அவர்களால்) உள்ளனவென்று கூறப்படும் பொருள்களும் இல்லை
யெனப் படும் பொருள்களும் உருவப்பொருளும் அருவப்பொருளும் ஆகின்ற,
ஒரு முதலே – ஒப்பற்ற முதற்பொருளே! –
துளவு இலை ஆர் பொன் அடி முடி சூட்டி – துளஸீதளங்கள் பொருந்திய (நினது) திருவடிகளை (என்) சிரமேல் வைத்து,
என்னை -, தொண்டு ஆக்கி – அடிமையாக்கி,
வளம் விலை ஆ கொண்ட – நல்ல விக்கிரயப் பொருளாகக் கொண்ட,
நீ -, கைவிடேல் – கை விடாதே; (எ – று.)

என்முடியில் அடிவைத்து என்னை அடிமையாகக்கொண்டு விலைக்குவாங்கிய பொருளைப்போல அங்கீகரித்தருளிய, நீ,
அங்ஙனம் அடிமையான என்னைக் கைவிடாது காத்தருளக்கடவை யென்பதாம்.

துளவுஇலை – அடியார்கள் எம்பெருமான் திருவடிகளில் அருச்சித்தவை நின்திருவடி என்முடிக்கு
அலங்காரமென்பது பட, “பொன்னடிமுடி சூட்டி” என்றார்.
இம்முடியில் அடிசூட்டுதல், இதற்குக் கிரீடாபிஷேகஞ் செய்தாற்போல மேன்மையை விளைக்கு மென்க.
“கோலமா மென்சென் னிக்கு உன் கமலமன்ன குரைகழலே,”
“மாலடிமுடிமேற் கோலமாங் குலசேகரன்” எனப் பெரியாரும் பணித்தார்.
மற்றும், “முடிசூட்டி” என்றதன் ஆற்றலால், திருவடி மல ரென்றவாறுமாம்.
வளவிலையாக் கொண்ட – ஒன்றுக்கு இரண்டாக மிக்கவிலைகொடுத்துப் பிரியத்துடன்வாங்கிய பொருளாக
ஏற்றுக்கொண்ட என்றபடி.
மங்கலகுணங்கள் – யாவர்க்கும் சுபகரமான ஸௌந்தர்யம் ஸௌசீல்யம் ஸௌலப்யம் வாத்ஸல்யம் ஸ்வாமித்வம் முதலியன.
எம்பெருமான் அநந்த கல்யாணகுண பரிபூர்ண னாதலால், மங்கல குணங்கட்கு ஓரளவில்லாத ஐயனே யென்றார்.

“வணங்குந்துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பாற்,
பிணங்குஞ்சமயம் பலபலவாக்கியவையவைதோறு,
அணங்கும்பலபலவாக்கி நின்மூர்த்திபரப்பி வைத்தாய்” என்றபடி, ரஜோகுண தமோகுணங்களால் மிக்கவர்க்கு ஏற்ப,
ஒன்றோடொன்றுமாறுபடுகிற பலபலமதக்கோட்பாடுகளையும், பலபலதெய் வங்களையும், பலபல உபாசனைவகைகளையும்
எம்பெருமான் அமைத்துவைத் தன னாதலால், அவரவர்கூறும் வண்ணம் உள்ளபொருளும் இல்லாதபொருளும்
உருவப்பொருளும் அருவப்பொருளும் ஆகுவன் அவனென்க.
‘பிரமாணமுமில்லை பிரமேயமுமில்லை, ஸர்வமும் சூந்யம்; ஆகையாலே, வேதமும் ஈஸ்வரனும் ஜகத்தும் இல்லை’ என்று
ஸர்வசூந்யவாதிகள் சொன்னால், அவரால் இல்லையெனப்படுகிற அபாவபதார்த்தமும் பகவானதுசொரூபமேயாம் என்பது சித்தாந்தம்.
உரு – ஸ்தூலரூபவஸ்து. அரு – நாமரூபங்களில் லாத சூக்ஷ்மரூபவஸ்து,
“உளனெனி லுள னவனுருவ மிவ்வுருவுக, ளுளனலனெனி லவனருவ மிவ்வருவுக,
ளுளனென விலனென விவைகுண முடைமையி, லுள னிருதகைமையொ டொழிவிலன் பரந்தே” என்ற
திருவாய் மொழிப்பாசுரத்தின் சம்பிரதாயார்த்தம் இங்குக் கொள்ளத்தக்கது.

———-

ஒரு பால் அமரர் ஒரு பால் முனிவர் உடன் இருந்து என்
இரு பார்வையும் உவப்பது என்றோ இடபக் கிரிக்கும்
பொரு பாற் கடற்கும் அயோத்திக்கும் பொன் துவரா பதிக்கும்
நிருபா வைகுந்தமும் நீ வீற்று இருக்கின்ற நீர்மையுமே -100-

(இ – ள்.) இடபக்கிரிக்கும் – திருமாலிருஞ்சோலைமலைக்கும்,
பொருபால் கடற்கும் – (அலைகள்) மோதப்பெற்ற திருப்பாற்கடலுக்கும்,
அயோத்திக்கும் – திருவயோத்திக்கும்,
பொன் துவராபதிக்கும் – அழகிய திருத் துவாரகைக்கும்,
நிருபா – தலைவனே! –
வைகுந்தமும் – ஸ்ரீவைகுண்டத்தையும்,
நீ வீற்றிருக்கின்ற நீர்மையும் – (அதில்) நீ எழுந்தருளியிருக்கின்ற அழகையும்,
ஒரு பால் அமரர் ஒரு பால் முனிவருடன் இருந்து என் இரு பார்வையும் கொண்டு உவப்பது – ஒருபக்கத்தில் நித்யசூரிகளுடனும்
மற்றொரு பக்கத்தில் முக்தர்களுடனும் (யான்) கூடியிருந்து எனது இரண்டுகண்களை யுங்கொண்டு (சேவித்துப்) பரமாநந்தமடைவது,
என்றோ – எந்நாளோ!

இங்ஙனம் தமது ஆதரத்தைக் கூறியதனால், விரைவில் எனக்குப் பரமபதம் அளித்தருளவேணுமென்று பிரார்த்தித்தவாறாம்.
இருவினைப் பாசபந்தத்தினுட்பட்டு இப்பொழுது பத்தாத்மாவாயிருக்கிற யான் அந்தப் பந்தம் ஒழிந்து வீடுபெற்று முக்தனாகி
அங்கு நித்யமுக்தர்களின் கோஷ்டிநடுவே யிருந்து ஸ்ரீவைகுண்டநாதனைத் தரிசித்துக் கிருதார்த்தனாவது எப்பொழுதோ? என்றார்.
இது இப்பிரபந்தத்தின் ஈற்றுச்செய்யு ளாதலால், இதில், தமது முக்கியமான பிரார்த்தனையை வெளியிட்டு,
அவ்வளவோடு இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.

மரணமில்லாதவ ரென்று பொருள்படும் “அமரர்” என்ற வடசொல், இங்கு, நித்யசூரிகளைக் குறித்தது;
திருவாய்மொழியில் “அயர்வறு மமரர்கள்” என்றவிடத்துப் போல:
அவராவார் – பிறப்பு இறப்பு இல்லாமல் எம்பெருமான்போலவே என்றும் ஒருநிலையாகப் பரமபதத்தில் வாழ்கிற
அநந்தகருட விஷ்வக்ஸேநர் முதலியோர்; இவர்கள் முற்காலத்தும் நிரந்தரமான பகவ தநுபவத்தை யுடையவர்கள்.
மநநசீலர் (அதாவது கடவுளை எப்பொழுதுந் தியானிப்பவர்) என்று பொருள்படுகிற “முனிவர்” என்ற சொல், இங்கு முக்தர்களைக் குறித்தது;
அவராவார் – இவ்வுலகங்களிற் கருமவசத்தராயிருந்து பின்பு கடவுளருளாற் பிறப்பையொழித்து முத்திபெற்றவர்.
இவ்விருதிறத்து அடியவருமே பரமபதத்திலுள்ளார்.

எம்பெருமானது ஐவகைநிலைகளுள், அர்ச்சை, வியூகம், விபவம் என்ற வற்றை உட்கொண்டு
‘இடபக்கிரிக்கும் பாற்கடற்கும் அயோத்திக்கும் துவ ராபதிக்கும் நிருபா’ என்று விளித்தார்.
இவற்றில், அர்ச்சை – விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல்;
அங்ஙனம் எழுந்தருளியிருக்குந் திவ்வியதேசங்கள் பலவற்றுள்ளும் இங்குத் தலைமைபற்றி, இடபகிரி எடுத்துக் கூறப்பட்டது.
வ்யூஹமாவது – வாசுதேவ சங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்கு ரூபத்துடன் திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை.
விபவமாவது – மத்ஸ்யாவதாரம் முதலிய அவதாரங்கள்; அவை பலவற்றுள்ளும், தலைமை பற்றி, இராமகிருஷ்ணாவதாரங்கள் இங்குக் கூறப்பட்டன;
“மாநீரயோத்தி வணபூந்துவரை” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
அயோத்தி – அயோத்யா என்ற வடசொல்லின் விகாரம்; அது, (பகைவராற்) போர்செய்து வெல்லமுடியாததென்று காரணப்பொருள்பெறும்.
துவராபதி – த்வாரவதீ என்ற வடசொல்லின் விகாரம்.

———-

தற் சிறப்புப் பாசுரம் –

அலங்கார ருக்குப் பரமச் சுவாமிக்கு அழகருக்குக்
கலங்காப் பெரு நகரம் காட்டு வார்க்குக் கருத்தன்பினால்
நலங்காத சொல் தொடை யந்தாதியைப் பற்ப நாபப் பட்டன்
விலங்காத கீர்த்தி மணவாள தாசன் விளம்பினனே –

(இ – ள்.) அலங்காரருக்கு பரமச்சுவாமிக்கு அழகருக்கு – அலங்கார ரென்றும் பரமஸ்வாமியென்றும் அழகரென்றும் திருநாமங்களை யுடையவ ரும்,
கலங்கா பெரு நகரம் காட்டுவார்க்கு – அழிவில்லாத பெருமையுடைய ஸ்ரீவைகுண்ட நகரத்தை(த் தமது
அடியவர்கட்கு வாழுமிடமாக)க் காண் பித்தருள்பவருமாகிய எம்பெருமான் விஷயமாக, –
கருத்து அன்பினால் – மனத்திற்கொண்ட மெய்யன்பினால், –
நலங்காத சொல் தொடை அந்தாதியை – (காலபேதத்தால்) வாடுதலில்லாத சொன்மாலையாகிய இந்த அந்தா திப்பிரபந்தத்தை,
பற்பநாபப்பட்டன் விலங்காத கீர்த்தி மணவாளதாசன் – ஸ்ரீமந்நாராயணனது திருவவதாரமான பெரியபட்டரை (ஆசிரயித்து அவரைவிட்டு)
நீங்காதிருத்தலாகிய புகழையுடைய அழகியமணவாளதாசன்,
விளம்பினன் – விண்ணப்பஞ்செய்தான்; (எ – று.)

பரமச்சுவாமியென்பது அழகர்க்கு ஒருதிருநாமமாதலை, “நேமியம்பரம சாமிவாழி,” “பிரமர்போற்றிய பரமசாமி” என்ற
அழகர்கலம்பகத்தாலும் அறிக. பரமஸ்வாமீ என்ற வடமொழிப்பெயர், சிறந்த தலைவனென்று பொருள்படும்:
தலைவராவார்யாவர்க்கும் மேம்பட்ட தலைவனென்க.
‘கலங்காப் பெருநகரங்காட்டுவான்’ என்ற தொடர், மூன்றாந்திருவந்தாதியில் வந்துள்ளது;
ஒருகலக்கமுமில்லாதிருக்கிற பெரிய இராசதானியான பரமபதத்தை
“வானவர் நாட்டையும் நீகண்டுகொள்ளென்று வீடுந்தரும் நின்றுநின்றே” என்றபடி அடியார்க்குத் தந்தருள்பவரென்க.
கருத்தன்பினால் விளம்பினன் என இயையும். சொல்தொடை – சொற்கள்கொண்டு தொடுத்த பாமாலை.
சிறிதுபொழுது கழிந்தவளவிலே வாடுமியல்பினதான பூமாலையினும் பாமாலைக்கு உள்ள சிறப்புத் தோன்ற,
அதற்கு ‘நலங்காத’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
மற்றும் இந்த அடைமொழியினால், இப்பிரபந்தம், அழகரருளால், சொல்வழு பொருள்வழு இல்லாது
“சொன்னோக்கும் பொருணோக்குந் தொடைநோக்கு நடைநோக்குந் துறையினோக்கோடு, எந்நோக்குங் காண இலக்கிய” மாய்
அமைந்ததென்று கொண்டாடிக் கூறியதுமாம்.

பத்மநாபன் என்ற வடமொழி, பற்பநாபனெனச் சிதைந்தது; தாமரை மலரை நாபியிலுடையவ னென்பது, இதன் பொருள்.
இது, திருமாலின் திருநாமங்களில் ஒன்று. ஸ்ரீரங்கநாதனே திருவருளினாற் கூரத்தாழ்வான் குமாரராய்த் திருவவதரித்தமைபற்றி,
அப்புதல்வர்க்கு ஸ்ரீரங்கராஜபட்டரென்றும், திருவரங்கப்பெருமாள்பட்டரென்றும் திருநாமங்கள் வழங்கும்;
அப்பெயரின் பரியாயநாமமாக ‘பற்பநாபப்பட்டன்’ என்றார். “நிழலின் நீங்கான்” என்றபடி ஆசாரியனைவிட்டுப்பிரியாது
உடனிருந்து வழிபடுதல் சீடனுக்கு இன்றியமையாத தாதலால், அங்ஙனம் தாம் பட்டரை விட்டு நீங்காதவ ரென்பார்,
பற்பநாபப்பட்டன் விலங்காத கீர்த்தி மணவாள தாசன்’ என்றார்;
“ஆசார்யன்செய்த வபகாரமானவது, தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் –
தேசாந், தரத்தி லிருக்க மனந்தான் பொருந்த மாட்டாது, இருத்தலினி யேதறியோம் யாம்,”
“தன்னாரியனுக்குத் தானடிமை செய்வத வன், இந்நாடுள்தன்னி லிருக்கும்நாதன் –
அந்நே, ரறிந்து மதிலா சையின்றி யாசாரியனைப், பிரிந்திருப்பாரார் மனமே பேசு” என்றார் பெரியாரும்.
பட்டர் – எம்பாருடைய சிஷ்யர்: பண்டிதர்க்கு வழங்குகின்ற பட்டரென்ற பெயர், இவர்க்குச் சிறப்பாக வழங்கும்;
இவர், ஸ்ரீபாஷ்யகாரரால் நாமகரணஞ்செய்தருளப்பெற்றவர்.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப் பிறன்போலும் பாயிரங் கூறியது. (பிரயோகவிவேகநூலார்
“இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது,” “வடநூலார் தாமே பதிகமும் உரையுஞ் செய்வார்”,
“இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதிணென் கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப் பின்னாகப்
பதிகங்கூறுவதுங் காண்க” என்றவை கருதத்தக்கன), இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.அழகரந்தாதி முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading