ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–மூன்றாம் பத்து விவரணம்-

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடிச் சோதியிலே
அத்தேகத்தோடே சம்பந்தித்து நின்று அழகரோடே போக்யதையை அனுபவித்தார்

கீழே
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் -என்று
அவன் கல்யாண குண விஷயமாக அஞ்ஞானம் இல்லை என்கிறார் –
அந்த குணாதிக்ய விஷயத்திலே அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற படி சொல்லுகிறார் இதில் –

—-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

உயர்வற என்கிற பாட்டை -மாசூணாச் சுடருடம்பா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஹேய சரீரங்களாலே
எடுத்த தேவாதிகளாகப் பிரித்தால்
அது மிஸ்ர சத்வம் ஆகையால் மாசாயே இருக்கும்

இது அங்கன் அன்றிக்கே
ஸ்வரூப ரூப குணங்களாலும்
ஹேய ப்ரத்யநீக ஸூத்த ஸத்வமாய் -நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையையாய்
யுவா குமாரா
அரும்பினை அலரை –என்கிறபடியே
ஏக காலத்திலேயே இரண்டு அவஸ்தையையும் சொல்லலாய் இருக்குமவன் யாவன் ஒருவன்
அவன் மயர்வற மதிநலம் அருளினான்

மாசூணா ஞானமாய்
ஸாஸ்த்ர ஜன்ய ஞானங்களுக்கும் -ஸ்வ யத்ன சா பேஷமான மாசு உண்டு
அந்த மயர்வற பக்தி ரூபா பன்ன ஞானத்தை நிர்ஹேதுகமாக அருளுகையாலே
மாசூணா ஞானமாயிற்று –

ஸ ஹேதுகமாக அருளுமாகில் ஞானத்துக்கு மாசு இறே
ஆகையால் உபயருடைய ஞானத்துக்கும் மாசு அற்றது
ஸம்ஸாரிகளைப் போலே ஸ்வரூப அந்யதா பாவம் இல்லை

அவன் திருமேனிக்கும்
ஞானத்துக்கும்
மாசு இல்லாமையைச் சொல்லிற்று

முழுதுமாய் முழுதியன்றாய்
அனுக்தமான குணங்களை யுடையனாய்
வரம்பு இன்றி முழுதியன்றாய்

இப்படி எல்லாவற்றையும் நிர்வஹிக்கிறவன் எவன் அவன்
அமரர்கள் அதிபதி
ப்ரஹ்மாதிகளைப் போலே ஸ்வா தந்தர்யம் இல்லாத நித்ய ஸூ ரிகள் ஸேவ்யனானவனை

மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
கேவலம் ப்ரஹ்ம பாவனை யாகிற கோலத்தமரர் கோனை உண்டாக்கினாலும்
அவனும் மாசூணாமல் ஏத்தினால் அவத்யமாம் அத்தனை அல்லது
உன்னுடைய உயர் நலத்தைக் கரை காண வல்லனோ –

உன் துயர் அறு சுடர் அடி
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–
ஹேய ப்ரதிபடமாய் பரஞ்சோதியான யுன் பாதம் விகஸிதமான தேஜஸ்ஸூ மழுங்காதோ
அப்ராப்யா மனஸா ஸஹ -என்று வேதமே மீண்ட விஷயத்தை
இவன் ஏத்தின அளவாய் மட்டுப்பட்டதாம் இறே

ஆகையால் அவன் நிரவதிகமான பரஞ்சோதியை நம்மாலே ஏத்தலாய் இருந்ததோ
என்று கை வாங்காதே
என் மனமே
வல்லதோர் வண்ணம் சொன்னால்
அதுவே உனக்காம் வண்ணம் என்று தொழுது
த்ரிவித கரணங்களாலும் வந்த சம்சயம் அற்று வர்த்தித்து வாழ்வாய் என்கிறார் –

——–

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

முன்னீர் ஞாலத்தில்
அழகருடைய போக்யதையை அனுபவிக்கப் புக்க இடத்திலே பரிச்சேதித்து அனுபவிக்க ஒண்ணாமையாலே
கலங்கி
விஷய துர்பலத்தாலே வந்தது என்று அறியாதே
தம் கரண சங்கோசத்தினால் வந்தது என்று அனுசந்தித்து
அதுக்கு அடியான
ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேணும் என்று கூப்பிட்டார் –

——

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

உயர்வற என்கிற பாட்டை -கிற்பன் கில்லேன்-என்கிற பாட்டை விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கிற்பன் கில்லேன்-
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ராப்ய ப்ராபகங்கள் எல்லாம்
அநித்யம் என்று விட்டு இதர விஷயங்களில் ஸாதனம் மஹா ஆயாஸம் –
பலமும் அல்ப அஸ்த்ரங்களாய் இருக்கும் –

இது பகவத் விஷயத்தில் வந்தால் -இச்சைக்கு மேற்பட்டது ஓர் ஆயாஸம் அன்றிக்கே
பேற்றில் வந்தால் உயர் நலம் உடையவன் யாவன் ஒருவன்
அவனதாய் புனரா வ்ருத்தி இல்லாத விலக்ஷண மோக்ஷமாய் இருக்கும்

அதுக்கு ஈடாக ஒன்றைச் செய்ய வல்லீரோ என்ன
அது செய்கிறோம் என்று இலம்

அல்ப அஸ்திரமான இதர விஷயத்தைத் தவிர வல்லீரோ என்ன
அதுவும் தவிர்க்கிறேன் என்று இலம்

கிற்பன் கில்லேன்-என்கிறவன் எவன்
முன நாளால் அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தவன்

இப்படி விஹிதத்தைச் செய்யாமையும்
அவிஹிதத்தைச் செய்கையும் என்று தொடங்கி
என்றவன் கேழ்க்க

முன நாளால்
கால தத்வம் உள்ளதனையும் இதுவே அன்றோ எனக்கு யாத்திரை

புறம்பே நம்மை ஒழியவும் துவக்க வற்றதாகவும் உண்டோ என்ன
அல்ப சாரங்கள் அவை
உன் பக்கல் வராதபடி தகைய வேண்டுவது உண்டு
அவற்றின் பக்கல் உள்ளது முள்ளிப் பூ ரஸம் போலே அற்பமாய்
பல பல விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து ஸர்வ சக்தியான தேவரை அகன்று ஒழிந்தேன்

இப்படி நீர் கை கழிந்ததாகில் நம்மைச் செய்யச் சொல்வது என் என்ன
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ மயர்வற மதி நலம் அருளினபின்பு
தத் வியதிரிக்த போகங்கள் எல்லாம் அல்ப அஸ்த்ரங்களாய்த் தோற்றிற்று

அபர்யாப்த்த அம்ருதாசிகளான -நித்ய ஸூ ரிகள் ஸேவ்யனான நீ
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா
உயிர் செய்கையாவது
சேதனருக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
ஸ்திதி கமன சயனாதிகளுக்கு யோக்யமாம் படி பதார்த்தங்களை யுண்டாக்குகை

இத்தைச் செய்தான் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி
நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே
உபய விபூதி நாதனான உன்னுடைய
ஹேய பிரதிபடமாய்
அனவதிக தேஜோ ரூபமாய்
அத்யந்தம் ஸ்ப்ருஹணீயமான
திருவடிகளை நானும் என் மனமும் இசைந்து வந்து பற்றித் தொழுது வர்த்திப்பது என்று கொலோ
இதுக்கு ஒரு குணாதிக்யம் உண்டாக்கி உன்னைக் கிட்டுக்கைக்கு அவதி நாள் இட்டுத் தர வேணும் என்கிறார் –

————

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

ஒழிவு இல் காலத்தில்
நீர் கரண சங்கோசத்தை அனுசந்தித்து ஈடுபட வேண்டா
இது விஷய ஸ்வ பாவம் காணும்
நித்ய ஸூரிகளும் நம்மை அனுபவிக்கப் புக்கால் இப்படியே காணும் படுவது –

ஆனபின்பு இவ்வுடம்போடே உம்மை அடிமை கொள்ளுகைக்கு திருமலையில் வந்து நின்றோமே
என்று அங்கே நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
அங்கே அடிமை செய்யப் பாரித்தார்

உயர்வற என்கிற பாட்டை -ஒழிவு இல் காலம் -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில் –

திருமந்திரத்தில் சரம சதுர்த்தியில் சொன்ன புருஷார்த்தத்தை
திருவாய் மொழியிலே முதல் பாட்டாலே விவரிக்கிறார்
அந்த அர்த்தத்தை ஒழிவில் காலம் என்கிற பாட்டாலே விவரிக்கிறார்
எங்கனே என்னில்

உயர்வற -ஒழி வில்
உயர்வானது மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
கலா காஷ்டாதி ரூபமாக அநேக கல்ப அவசானமான பூத பவிஷ்யத் வர்த்தமான
காலங்கள் எல்லாம் என்றபடி

உயர்வற ஒழிவில் காலம்
ஒருவரைப் பார்க்க ஒருவர் உயர்வதும் தாழ்வதுமாகையாலே காலமும் அதுக்கு அனுரூபமாய்
கலா காஷ்டாதிகளுமாய் உயர்வது மாறுவதுமாய்

காலமும் அற -இல் -என்கிறது
இல்லாமையைச் சொல்கிறது

உயர் நலம் -ஒழிவில் காலம்
அகால கால்யமான -நலம் அந்தம் இல்லதோர் நாடாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியினுடைய பரம ஆனந்தத்தைச் சொல்கிறது

உடையவன்
உபய விபூதியை யுடையனாய் யாவன் ஒருவன் அவன்
உடனாய்
உபய விபூதி நாதனை உடனாய் மன்னி
யவன் அவன்
திவ்யாத்ம ஸ்வரூப ப்ரகாசகமான
கல்யாண குண விசிஷ்டமான
திவ்ய மங்கள விக்ரஹத்தோடே கூடி இருக்கிற
ஸ்வாமியோடே கூட
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -என்கிற
பிராட்டியைப் போலே உடனாய் மன்னி

காலம் எல்லாம் -என்று
சர்வ காலமும் என்றது

மன்னி -என்றது
ஸர்வ அவஸ்தையிலும் என்றபடி

விண் மீது இருப்பாய் -இத்யாதிப்படியே
பரத்வாதிகள் ஐந்திலும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் –

அவன் ப்ராப்ய அதிகாரி
அவன் ப்ராப்யமான திரு வேங்கடமுடையான் –

மற்றும் இப்படி நீர் அறிந்தபடி என் என்னில்
மயர்வற வழு விலா அடிமை
ப்ராப்யத்தில் மதி மயங்காமல் -ஒன்றும் நழுவாமல்
அற -இல்லா
ப்ராப்யாந்தரத்தில் ருசி இல்லாமல் அறுத்து மதி நலம் அருளினான் –

அடிமை செய்கைக்கு உறுப்பாக -ஞான சக்தி ப்ரேமங்களாய்க் கொண்டு
ஸர்வ வித கைங்கர்யங்களும் செய்யும் படிக்கு அருளினான்

அடிமை செய்யும் வேண்டும் நாமே
யவன் -கிருபா பாத்ர பூதனான நாம்
அவன் அருளினவன்

ஆர்ஜித்து வந்தது அன்று
அர்த்தித்து வந்தது அன்று
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமுமே பற்றாசாக அருளின பக்தியை யுடையவன் –

அவன் கிருபா ப்ரவாஹமுடையவனான அயர்வறும் அமரர்கள் அதிபதி
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து எழில் கொள் சோதி

அயர் -அசர்வு
அசராமல் ப்ராப்ய அனுபவம் பண்ணுமவர்கள்
தெழி குரல் அருவி
நாரங்களாய் நித்ய ஸூரிகள் அடிமை செய்கிறபடி
அருவிகள் ப்ரீதி பிரேரிதராய்க் கொண்டு வாசா கைங்கர்யமான ஸாம கானமான
செஞ்சொல் கவி பாட வாருங்கோள் என்று அழைப்பாரைப் போலே
தெழி குரல் அருவி சோரா நின்றது

தெள்ளருவி கொழிக்கும் திரு வேங்கட மா மலை இறே
அதிபதி -எழில் கொள் சோதி
காலோசிதமாக அடிமை கொள்ளுமவன் எவன் அவன்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தவனை
க்ரியதாம் இதி மாம் வத -என்று ஏவிக் கொள்ளுமவன்

திருவேங்கடத்து எழில் கொள் சோதி -துயர் அறு சுடர் அடி
இப்படிப்பட்ட அதிகாரிக்குத் துயராவது
ருண த்ரயமும் -தேவ ரிஷி பித்ரு கடன்கள் –
அபசார த்ரயமும் -பகவத் பாகவத் அஸஹ்ய அபசாரங்கள்
வேங்கடங்கள் என்கையாலே
மெய்ம்மேல் வினை முற்றவும் வேம்

வேங்கடத்து எழில் கொள் சோதி சுடர் அடி தொழுது எழு
வானார் சோதி
நீராழிச் சோதி
தம் தாமமே மேவிய சோதி
ஞானச் சுடர் விளக்கு -என்கிற ஜோதிகளில் வ்யாவ்ருத்தி

வானார் சோதி -பகல் விளக்குப் பட்டு இருக்கும்
நீராழிச் சோதி -நீர் பட்ட விளக்காய் இருக்கும்
நீராழிச் சோதி தம் தாமமே மேவிய சோதி -அணையும் விளக்காய் இருக்கும்
ஞானச் சுடர் விளக்கு -குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும்
வேங்கடத்து எழில் கொள் சோதி -குன்றில் இட்ட விளக்காய் இருக்கும்

எந்தை தந்தை தந்தைக்கே
இப்படிப்பட்ட ஸ்வாமி யானவன்
சுடர் அடி தொழுது எழு என் மனனே
எந்தை தந்தை தந்தைக்கே
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று மனஸ்ஸை ஸம்போதிக்கிறார்

நான் கரணியும்
நீ காரணமும்
ஆனால்போலே
நமக்கு அவன்
ஸ்வாமியுமாய் -ஸர்வ வித பந்துவுமானவன்
அவனுக்கு வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று
ப்ராப்யத்தைத் அர்த்தித்துப் பெறுகிறார் –

———-

புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

புகழும் நல் ஒருவனில்
இவர் பாரிப்புக்கு ஈடாகத்
தன்னையும்
தன் விபூதியையும்
தன் ஸர்வாத்ம பாவத்தையும் காட்டிக் கொடுக்கக்
கண்டு ஹ்ருஷ்டராய் பாரித்த படியே வாசகமாக அடிமை செய்து தலைக்கட்டினார்

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.–3-4-10-

உயர்வற -என்கிற பாட்டை -யாவையும் எவரும் தானாய்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற யாவையும் எவரும் -என்று
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
பூதங்கள் பவ் கிதங்கள் -ஸ்லாக்யமான ரத்நாதிகள் -ரஸவத் பதார்த்தங்கள் -கானாதிகள்
பகவத் ஸ்வரூப குணங்களாய் உள்ள யாவை -யவரும் -தானாய் நிற்கையாலே
ஒன்றுக்கு ஓன்று உயர்வும் தாழ்வுமாய் இருக்கையாலே

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
சேதன அசேதனங்களில் வியாபித்து நீ நின்றால்
தத் கத தோஷைர் அஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கும்
சேதன அசேதனங்கள் அடங்க தானே என்ற சொல்லுக்குள்ளேயாய்
பிரகாரப் பிரகாரியாய் இருக்கும் அத்தனை –

சேதனருடைய ஸூ கித்வ துக்கித்வங்கள்
அசேதனங்களுடைய பரிணாமாதிகள் தட்டாது இருக்கிற படி

அவர் அவர் சமயந் தோறும் தோய்வு இலன்;
சேதன அசேதனங்களை தானே என்னும் சொல்லுக்குள் அடங்கும்படி அவற்றோடு கலந்து நீ நிற்கச் செய்தேயும்
அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கலில் தட்டாத படி நிற்கும் –

சேதனனுக்கு அசித் கதமான பரிணாமாதிகள் இல்லையே யாகிலும் அந்த அசித் சம்சாரக்கத்தாலே
ஸூக துக்கங்கள் உண்டாகா நின்றது இறே
அப்படியே இவனுக்கும் தட்டாது என்னத் தட்டாது -ப்ரவேஸ அனுகுணத்தாலே

இப்படி என் கொண்டு அறிந்தீர் என்ன
விபூதிமானாய் இருக்கிறவன் யாவன் ஒருவன் மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்தேன்
பகவத் நிர்ஹேதுக கிருபையால் பிரகாசித்தது

தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்;
இந்த்ரியங்களாலும் அறியப் போகாதவன்

யாவன் ஒருவன் -அவன் அமரர்கள் அதிபதி
சற்றும் விஸ்ம்ருதி அற்று அனுபவிக்கிற நித்ய முக்தருக்கும்
உணர்வின் மூர்த்தி;
ஞான ஆனந்தங்களாலே ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் யுடையவன்

யவன் அவன் -ஆவி சேர் உயிரின் உள்ளான் -யாதுமோர் பற்று இல்லாதான்
ஆவி யுண்டு
பிராண ஆஸ்ரயமான சரீரம் -அத்தோடு சேர்ந்த உயிர் உண்டு -ஆத்மா
அதுக்கு அசித் ஸம்பந்தத்தாலே பால்யாதிகள் உண்டாகிறது போல்
பரமாத்மாவுக்கு தத்கத தோஷங்கள் தட்டாவோ என்னில்
ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில்,
அவன் பக்கல் பக்தி உண்டாகில்
அவனையும் கூட லாமே.–என் மனனே -தொழுது எழு
என்று நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கையில்
அவனுடைய சவுந்தர்யாதிகளில் ஈடுபட்டு இருக்குமவர்களைக் கொண்டாடியும்
அது இல்லாதாரை நிந்தித்து
முகமை தலை மத்திடை இட்டுச் சொல்லுகிறார் –

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

உயர்வற என்கிற பாட்டை கருமமும் கரும பலனும்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கருமமும் கரும பலனும் ஆகிறது
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
கர்ம ஞானங்களாலும் -தத் சாதன பலன்களாலும் உயர்வும் தாழ்வும் ஆயிற்று –

அதில் விஞ்சின கைவல்யமாகிற படு குழியிலே விழாமல் ரக்ஷிக்கிறவன் யவன் அவன்
கருமமும் கரும பலனும் ஆகிய காரண மாணவன் எவன் ஒருவன்
அவன் மயர்வற மதி நலம் அருளினான்

மயர்வாவது
அவித்யாதிகளால் வரும் காம்ய பலன்களைப் போக்கித் தன்னையே ப்ராப்ய பிராபகங்களாக அறியும் படி
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே அருளினவன் யாவன் ஒருவன்
அவன் கருமமும் கரும பலனாக காரணனும்
அனுஷ்டாதாகவும் நியாமகனும் பல ப்ரதனும் அவன்

ஆகையாலே
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
இப்படி உபாசகருக்கு பல ப்ரதானவன்
ஸ்ரீ யபதியாய்
காந்தி மிக்கு இருந்துள்ள நீல ரத்னம் போன்ற திரு மேனியையும்
அகவாயில் வாத்சல்யம் தோன்றும் திருக்கண்கள்
கருணை அம்ருதம் பொழிகிற செங்கண் மாலினை

தேவர்களுக்கு உபகாரகனான -அயர்வறும் அமரர்கள் அதிபதியை –
அநிமிஷரான நித்யருக்கு அதிபதி யானவனை

ஒருமை மனத்தினுள் வைத்து
நித்ய ஸூரிகளைப் போலே என்னையும் மனனும் இவனும் ஸதா அனுபவம் பண்ணும்படி
அனுபவிப்பித்து எனக்கும் உபகாரகன் ஆனவனை

ஒருமை மனத்தினுள் வைத்து துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–
ஹேயபிரதிபடமான சுடர் அடியைத் தொழுது
ஒரு பிரயோஜனத்துக்காக இன்றிக்கே
நெஞ்சிலே ஒருமிக்க வைத்து
அத்தாலே சிதிலமாய்
இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே ஆடிப்
பெருமையையும் லஜ்ஜையையும் விட்டு அடைவு கெட ஏத்துங்கோள்
அதுவே உங்களுக்குத் புருஷார்த்தம் என்று நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும்
உபதேசித்து அனுபவிக்கிறார் –

———

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

செய்ய தாமரைக்கண்ணனில்
பகவத் குண ஞானம் இல்லாமையாலே ஈஸ்வரனுடைய விஷயீ காரத்துக்கு உறுப்பாகி
அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்ய காஷ்டையை ஸம்சாரிகளுக்கு உபதேஸிக்கிறார் –

——

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

உயர்வற என்கிற பாட்டை -தஞ்சமாகிய -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவதாந்த்ர பஜனத்தால் உயர்வு அற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன்
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய்
அங்கன் அன்றிக்கே
உயர்வற உயர் நலம் உடையவன் என்று
விண் மீது இத்யாதிப்படியே பரத்வமே பிடித்து அவதாரத்து குணத்து அளவும் உபதேசித்தார்
அத்தாலே உயர்வு அற்றார்கள்

பரத்வம் வாஸா மகோசரமாய் எட்டா நிலமாய் இருந்தது
அவதாரத்துக்குப் பிற்பாடாரானோம்
நாங்கள் எங்கே யாரை ஆஸ்ரயிப்போம் என்ன

நீங்கள் உகந்தபடியே உகந்தவற்றைத் திருமேனியாகக் கொண்டு இருக்க
நீங்களும் அவற்றை திவ்ய ஸம்ஸ்தாபனாக விரும்பி ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

உயர்வற உயர் நலமுடையவன் -தஞ்சமாகிய தந்தை தாய் இத்யாதி
லோகத்திலே ஒருவரை ஒருவர் தாய் தகப்பனாகக் கொண்டு
உயர்வும் தாழ்வுமாய் இருக்குமா போலே அன்று இறே
உயர்வற உயர் நலமுடையவன் தஞ்சமாகிய தந்தை தாயோடு தானும் ஆனான் –

அவர்கள் இவனுக்கு ஓர் இடர்கள் வந்தால் விட்டுப் போவார்கள்
இவர்களோடு உண்டான பந்தம் தான் கர்மம் அடியாக வந்ததாகையாலே கர்மம் க்ஷயிக்க க்ஷயிக்கும்

இங்கன் அன்றிக்கே பூதாநாம் யோவ்யய பிதா -சத்தா யோகீ -ஸகல பதார்த்தங்களும் பிதாவாய் இருக்கும்

யவன் அவன் தானு மாய்
மாதா பிதாக்கள் பொகட்டுப் போனாலும் நாம் ஜீவிக்க வேணும் என்று இறே
தனக்கு நன்மை பார்ப்பது

அவை அல்லனுமாய்
கீழ்ச் சொன்னவர்கள் அல்லனுமாய்
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ -என்கிறபடியே
ஸர்வ வித பந்து மாத்ரம் அன்றிக்கே
ஞான ப்ரதனனான ஆச்சார்யனாய் மயர்வற மதி நலம் அருளினான் –

சரீரமேவ மாதா பிதரவ் ஜநயத-என்கிறவர்கள் அல்லர்

ஸஹி வித்யாதஸ் தஞ்ஜநயதி– ஸ்ரேஷ்டம் ஜன்ம –என்கிறபடியே
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ஸர்வ பந்துவும் தானே -என்கிற மதிநலம் அருளினான் –

எவன் அவன் -அடர்வரும் அமரர்கள் அதிபதி -எஞ்சல் இல் அமரர் குல முதல்-
இப்படி இருக்கிறவன் யார் என்னில்
நித்ய ஸூரிகளுக்கு உஜ்ஜீவன ஹேது வானவன்
எஞ்சல் -சுருக்கம் -அயர்வும் அப்படியே
இரண்டாலும் பகவத் அனுபவத்தில் ஸங்கோசம் இல்லாத அமரர் குலம் உண்டு -நித்ய ஸூரிகள் திரள்

அதற்கு நிர்வாஹகன் யாவன் ஒருவன் அவன் -மூவர் தம் உள்ளும் ஆதியை
த்யேய வஸ்துவை -காரணந்து த்யேய -இறே

அன்றியே
ப்ரஹ்ம ருத் ராதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை

அன்றியே
மூவர் தம் உள்ளும் ஆதியை-என்று
அநந்த கருட விஷ்வக் சேனர்கள் -முதலானவர்களுக்கு
த்யேயா நாராயணஸ் ஸதா -என்று அவர்கள் தியானத்துக்கு ஆதியான காரணனை

ஆக
ஸர்வ காரணன் என்றபடி

அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
கீழ்ச் சொன்னவை எல்லாம் அச்சத்துக்கு உடல் இறே

ஜகத் காரண பூதனாய்
நித்ய முக்த அனுபாவ்யனாய்
ப்ரம்ம ருத்ராதிகளுக்கு நியாந்தாவானவன்
விபூதி த்வயத்தில் உள்ளார் எல்லாருக்கும் ஓக்க ஸர்வ பந்துவானவனை
நம்மாலே கிட்டப் போமோ -என்று இங்கனே
அஞ்சி நீர் உலகத்தில் உள்ளீர்கள்
லௌகிகரான நீங்கள்
அஞ்சி அவன் இவன் என்று கூழேன்மின்;

அவன் ஆகிறான்
தேச கால வஸ்துக்களால் அபரிச்சின்னனாய்
உயர்வற உயர்நலம் உடையவனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் –

தேவதாந்த்ர பிரதிபத்தி யாகிற மயர்வற மதி நலம் அருளி
பரத்வாதிகளிலே அருமையை நினைத்து அஞ்சின அச்சம் தீர நாம் உகந்ததொரு
த்ரவ்யத்தைத் திருமேனியாகக் கொண்டு
இவன் என்று
ஸுலப்யம் தோற்ற நம் புத்தி அதீனமாய் இருப்பான் ஒருவன் ஆனபின்பு
அவன் அபரிச்சின்னன்
இவன் பரிச்சின்னன் -என்றும்
இங்கனே சம்சயியாதே மாந்தராகாதே கொள்ளுங்கோள்

நீள்கடல் வண்ணனே.
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
பராத்பரனே -அர்ச்சாவதார ஸூ லபனாய் இருக்க சம்சயித்துப் பயப்பட வேண்டா

சுடர் அடி -பரஞ்சோதி நீ பரமாய் -என்று குண பூர்த்தி உள்ளது –
அர்ச்சாவதாரத்திலே ஆகையாலே
அவன் இவன் என்று கூழேன்மின்;
அர்ச்சாவதாரத்தினுடைய திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள் –

பரத்வாதிகளைப் போலே கிட்ட அரிதே என்கிற ஹேயமும் இல்லை
அர்ச்சாவதார ஸர்வ ஸூலபமுமாய் -ஸர்வ ஸமாஸ்ரயணீயுமாய் -இருக்கிற
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்

இவ்விடத்தை நித்ய விபூதியிலும் அதிசயமாகக் கொண்டு இருக்கிறவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தன் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும்
உபதேசித்து உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பயிலும் சுடர் ஒளியில்
இப்படி உபதேசிக்கச் செய்தேயும் நெஞ்சு நெகிழ்ச்சி அன்றிக்கே இருந்த
ஸம்ஸாரிகளைக் கண்டு நோவு பட
நீர் ஏன் இவற்றில் நோவு படுகிறீர் -திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பாரீர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய்
அவர்கள் எனக்கு நாதர்
அவர்களுடைய சேஷத்வத்தினுடைய எல்லை நிலமாக வேணும் என்கிறார் –

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

உயர்வற என்கிற பாட்டை -சன்ம சன்மாந்தரம் காத்து-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஜன்ம ஜன்மாந்தரமாவது –
பஞ்சாக்கினி வித்யையில் -சொல்லுகிறபடி ஜீவனானவன் மேகத்திலே புக்கு
வர்ஷ ரூபத்தாலே பூ கதமாய் வ்ரீஹியிலே புக்கு அன்ன ரூபத்தாலே புருஷன் பக்கலிலே புக்கு
பின்பு பஞ்சமியான ஆஹுதியிலே புக்க பின்பு இறே கர்ப்பமாவது –

இப்படி வருகிற ஜென்ம பரம்பரைகள் ஆகிற உயர்வற்று வேர் அறுத்து
வர்த்தமான ஜன்மத்திலே யாக்கி
காத்து
பின்பு ஒரு தேகத்திலே புகாதபடி பண்ணி
உயர்நலம் உடையவன் எவன் அவன்
அடியார்களைக் கொண்டு போய்
ஆனந்தாதி கல்யாண குண பூர்ண னானவன் தன்னிடத்திலே ஸர்வ பர
ந்யாஸம் பண்ணி இருக்கிற அடியார்களை

நலமுடையவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பாரதந்தர்ய ஸ்வரூபரான அடியார்களை

மதிநலம் அருளினவன் யவன் அவன் வேதைக சமதி கம்யனாகையாலே நிர்ஹேதுகமான
அனுக்ரஹத்தாலே கொண்டு போய்
மரண சமயத்து அளவும் பார்த்திருந்து பக்தியும் அந்திம ஸ்ம்ருதியும் தேவையாக்காதே
அஹம் ஸ்மாரமி என்று தான் நினைத்து இருந்தபடியே
ப்ரம்மந்த்ரம் வழி தெரியாதே இருக்கிற இவனுக்கு சதாதிகையான நாடியாலே
ஹார்த்த அநுக்ரூஹித -என்கிறபடியே தான் கூடக்கொண்டு புறப்பட்டு
இவனுக்கு இளைப்புத்தீர பரம ப்ரவேசத்தைப் பண்ணுவித்து
மேல் வழி போகைக்கும் தரிப்பு உண்டாகும் படி பண்ணி

உயிர் கொண்டு உடல் ஒழிய -இத்யாதிப்படியே
கர்ம சம்பந்தம் அறச் செய்தேயும் வித்யா மஹாத்ம்யத்தாலே விரஜை அளவும்
ஸூஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி

அர்ச்சிராதி கணங்களோடே ஓக்க ஆள் இட்டு இராதே -நயாமி -என்கிறபடியே
மாதவன் தன் துணையா நடந்தான் -என்கிறபடியே
வழியில் உள்ளார் சிரஸா வஹித்துக் கொண்டு பரமபதத்திலே கொண்டு போய்
அயர்வறும் அமரர்கள் உடன் கூட்டின அதிபதி யானவன்
தன்மை பெறுத்தி
ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -என்கிறபடியே
ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்க –

அயர்வற்ற நித்யரைப் போலே யன்றிக்கே பின்னையும் அதிசயிதமான பாத உபதானமாகத்
தன் தாளிணைக் கீழ் கொண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணி
இவன் துயரான சரீர சம்பந்தம் அற்ற அளவிலே துயர் அற்ற அடியாயிற்று –

இது தான் இவனுக்கு உபகரித்தானாக அன்றிக்கே
தன் பேறாக -நினைத்து இருக்கும் மஹா உபகாரகனை
ஸா யுஜ்யம் ப்ரதி பன்னாய -என்கிறபடியே
தன்மை பெறுத்திய அப்பனை
இப்படிச் செய்த உபகாரகனைத் தொன்மை பிதற்ற வல்லார்
ஸ்வா பாவிகமான ஒவ்தார்ய குணத்திலே ஈடுபட்டு அக்ரமமாகப் புகழுமவர்களை

பிதற்றுமவர் கண்டீர் –பயிலும் திருவுடையார்–நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.
பகவத் சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வ சம்பந்தத்தை யுண்டாக்கி —
நமக்கு அவன் திருவடிகளிலே கைங்கர்யத்தை யாவதாத்ம பாவி நடத்தக்கடவ விஸ்வசனீயன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
ததீய சேஷத்வ பிரதிபத்தி உடையதாய்க் கொண்டு வர்த்தி என்கிறார் –

——————–

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர்
அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

முடியானே யில்
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்கள் -என்று
இவர் ஆசைப்பட்ட படியே கிடையாமையாலும்
ஸ்மாரக ஸந்நிதியாலும் ஆற்றாமை மீதூர்ந்து
தாமும் தம்முடைய கரண க்ராமங்களும் பெரு விடாய்ப்பட்டு அவற்றின் உடனே கூப்பிடுகிறார் –

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம்
நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள் விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன்
ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

உயர்வற என்கிற பாட்டை -வாசகமே ஏத்த -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
முடியானேயில்
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் -என்று விடாய்த்த இவருக்கு
நிழலும் அடிதாறுமான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காட்டிக் கொடுக்கக் கொண்டு அனுபவித்து
அவர்கள் எனக்கு நாதர் என்று திருவடிகளிலே -விழுந்தார்

பாகவத விஷயம் பகவத் விஷயத்திலே மூட்டிற்று
அத்தாலே அபி நிவேசம் தலையெடுத்துக் கரை புரண்டு
என்று கொல் கண்கள் காண்பது என்னும் அளவு அன்றிக்கே
மற்ற இந்திரியங்களும் விடாய்த்து
ஒன்றின் விருத்தியை ஓன்று ஆசைப்பட்டு
எல்லா இந்திரியங்களின் விருத்தியைத் தாம் ஆசைப்பட்டுத் தன் கரணங்களும் தாமுமாகக் கூப்பிடுகிறார் –

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அவரவர் கரணங்கள் அந்நியமாய்ப் போகையாலே உயர்வு அற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் -வாசகமே ஏற்ற அருள் செய்யும்
ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனானவன் யாவன் ஒருவன் -மயர்வற மதி நலம் அருளினவத்தால்
வாசகமே ஏத்த அருள் செய்தார் –
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
மன பூர்வோ வாக் உத்தர -என்கிறபடியே
மனஸ்ஸூ அனுபவிக்க -அந்த அனுபவத்தை வாக்கு ஸ்துதித்து அனுபவிக்கையும்
மனத்தைப் போலே ஸ்மரிக்கவும் வாய் வந்தால் போலே ஸ்துதிக்கவும்
தத் தத் விரோதியான ஆலிங்கனம் பண்ணும் படியும் ஆசைப்பட்டு
இவ்வாசகமே ஏத்திப் போவதோ — நானும் ஒருக்கால் ஸ்மரித்து ஏத்தல் ஆகாதோ -என்னா நின்றது
விபந் யவ -என்று
நித்ய ஸூரிகள் ஏத்த இருக்கிற வுனக்கு நானும் ஒருக்கால் ஏத்தினால் ஆகாதோ –

அயர்வறும் அமரர்கள் -நம இத்யேவ வாதிந -நமஸ் ஸப்தம் ப்ரயுஞ்ஐதே -என்பாராய்
ஆக -அயர்வற்ற
வானவர் தம் நாயகனே –
ஸ்வாமியான நீ என்னையும் வாசகமே ஏத்தப் பண்ணினால் ஆகாதோ என்று
கை -தன் விருத்தியையும் செய்ய ஆசைப்பட்டு வாக்கு விருத்தியையும் ஆசைப்படா நின்றது

நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட
ஆன் ஆயர் தாயவனே!என்று தடவும் என் கைகளே
வேயகம் -மூங்கில் அகம்
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு இருட்டு அரை ஆகையாலே
பசு வெண்ணெய் களவு காணப்புக்கு தடவிக்கொண்டு வரா நிற்கச் செய்தே
கையிலே உரி தாக்கினவாறே ஸ்மிதம் பண்ணினான்
அதுவே கை விளக்காக அரை இருட்டும் தன் உடம்பு இருளும் குழல் இருளும் நீங்கிற்று –

அப்போது ஆழ்வார் தம் அபேக்ஷிதம் பெறுகைக்காக அவன் பின்னோடே நுழைந்து சென்று
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் துயர் அறு சுடர் அடி தொழுது
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்று தடவும் என் கைகள்
என்று தடவிப் பிடித்துக் கொண்டு அர்த்திக்கிறார்

எம் மநோ வாக் காயங்கள் உனக்கு ஏதேனும் பச்சை இட்டது உண்டோ -இல்லையே
மநோ விருத்தியான நினைவும்
வாக்கின் விருத்தியான ஸ்துதியும்
கையின் விருத்தியான ஆலிங்கனமும்
உண்டாக வேணும் என்று தடவா நின்றது

ஆனாயர் தாயவனே
ஆனாயருக்குத் தாய் போலே பரிவனான வனே என்று தடவும் என் கைகளே

அயர்வறும் அமரர்கள் அதிபதியை
அப்ராப்ய மனஸா சஹ -என்று வேதத்தாலே எட்டாதவனை
படலை படைத்து உள்ளே புக்குக் கொண்டியிலே பிடிக்கக் காணும் தேடுகிறது

நவநீத சவுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்தவாறே அத்தாலே வந்த ப்ரேமத்தாலே
இரண்டு கைகளுக்கு கண் தோற்றுகிறது இல்லை இறே
கைகள் ஆரத் தொழுது என்றதை மறந்தார்
ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே-என்று ஈடுபடுகிறார் –

—————————

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதத்திலே
ஊனில் வாழ் உயிரிலே அனுபவித்ததற்குத் துணைத் தேட்டமான வோபாதி
இழவுக்கும் துணை யார் யுண்டோ என்று பார்த்த இடத்தே
அவர்கள் புறம்பே அந்நிய பரராய் இருக்க
அவர்களை அதிலே நின்று மீட்கலாமோ என்று பார்த்து உபதேசித்த இடத்து
அவர்கள் அதில் நின்றும் மீளாமையாலே அவர்களை போல் அன்றிக்கே
நான் அநந்யார்ஹ கரணன் ஆகப்பெற்றேன் என்று உகந்தார் –

——

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

உயர்வற என்கிற பாட்டை -வாய் கொண்டு மானிடம் பாட வந்த -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
உயர்வும் தாழ்வுமாய் இருக்கிறவர்களை
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;

விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதம் என்று இருக்கிற
கரணங்களைக் கொண்டு பாட வல்லேனோ
அதில் ப்ரதானமான மநோ வாக் காயங்களைக் கொண்டு ஷூத்ரரைக்
கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன் –

ஸ்ருஷ்டத்வம் வனவாஸாய -என்றால் போலெ இறே என் வாயும் பிறந்தபடி –
நான் பிறரைக் கவி பாடினால் என்னை அவன் ஸ்ருஷ்டித்ததற்கு பிரயோஜனம்
அவன் பெற்றானாம் படி எங்கனே
உயர் நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன் பராத்பரன் –
அவனைப் பாட வந்த கவி என்கிறார் –

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்
ஆய் கொண்ட சீர் வள்ளல்
நீர் அவனைக்கவி பாடக் கடவோம் என்று இருந்தாலும்
வேதங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீளுகிற விஷயத்தைக்
கவி பாடப் போமோ உம்மால் என்ன

மயர்வற மதிநலம் அருளினன்
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
எவன் அவன்
பக்தானாம் என்கிறபடியே தன்னை எனக்காக்கி வைத்தால் எனக்கு கவி பாடக் குறை யுண்டோ
மயர்வாகிற மதி மயக்கத்தை அறுத்து மதி நலம் அருளினன்
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுகமான கிருபையால் அருளின
ஆய் கொண்ட சீர் வள்ளல்
ஹேய ப்ரதிபடமான கல்யாண குணங்களை யுடையவன் யாவன் ஒருவன்

அவன் வள்ளல் தனமாவது ஒவ் கார்யம் -யவன் -ஆழி
அத்யந்தம் சேஷ பூதனானவன் -அவன் பிரான் – சேஷியான உபகாரகன் –

எனக்கே யுளன்
என் பக்கலிலே விசேஷ கடாக்ஷம் பண்ணினவன்
கையும் திருவாழியுமான சேர்த்தி அழகைக் காட்டிக் கவிக்கு விஷயமாக்கிப் பாடுவித்துக் கொண்டபடி

யவன் அவன் -சாய் கொண்ட இம்மையும் சாதித்து –
இம்மையிலேயே மோக்ஷ ஸூகத்தையும் தந்து
சாய் -சாயல் -அதாவது பரமானந்தமான உயர் நலம்
அந்த பரமானந்த ஸூகத்தை இம்மையிலேயே சாதித்து

அதிலும் இது அத்யந்த ஸூகமாம் படி அருளி
தானே உபாய உபேயமாம் படி
யாவதாத்ம பாவியாய் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணி

அயர்வரும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் -அவன்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
அயர்வில்லாமல் ஆராவமுத தர்ஸிகள் தனக்கும் அபர்யாப்த்த அம்ருதம் ஆனவன்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று கொடுக்கும் படி
வான் இளவரசு வைகுந்தக்குட்டன் வாஸூ தேவன் ஆகையாலே

அதிலே தம்மோடு இருப்பாம் அத்தனை
அத்தேசம் நித்ய ஸூரிகளதாய் இருக்கும்
பவத் விஷய வாஸிந என்றதும் அவன் தன் பக்கலிலேயதாய் இருக்கிறது
யவன் முமுஷுவானவன் -அவன் -வீடு தருமவன்

வீடும் தரும் -என்று அபி ஸப்தத்தாலே
இம்மையில் சாய் கொண்ட ஸாம்ய போகமும்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் –

க்ருதன் தச குணம் மயா -என்று பெருமாள் மீண்டு எழுந்து அருளின போது
ஸ்ரீ பரதாழ்வான் பண்டாரத்தை வளர்த்து பதின்மடங்காக காட்டி ஒப்பினால் போலே இவனும்
பூர்வே ஸாத்யாளோடு இவர் தம்மோடும் வாசி இல்லை காணும் இவனுக்கு

அன்று ஈன்ற கன்றின் மேல் தாய் இரங்குமா போலே
த்வயி கிஞ்சித் ஸமா பன்னே கிம் கார்யம் சீதயா மம என்றபடியே
நீயும் அத்தைக் கண்டு கொண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் அறு சுடர் அடி -ஹேய ப்ரத்ய நீகம் -என்றபடி
இவனைப் பரிசுத்தனாக்கித் தான் சுத்தமான படி

வீடும் தரும் நின்று நின்று
இப்படிக் கொடுத்து இருக்கச் செய்தேயும்
ஒன்றுமே கொடுத்திலேனாகக் கடன் பட்டவன் போலே இரா நின்றான்

அன்றிக்கே
நின்று நின்றே தரும்
அதாவது
முதல் தன்னிலே ஐஹிகத்திலே அனுபவிப்பித்துப்
பின்பு ஒரு தேச விசேஷத்திலே ஏறக் கொண்டு போய் வைத்துப்
பின் கைங்கர்ய ஸூகத்தைக் கொடுக்கும் –
ஆக
சாத் மிக்க சாத் மிக்கத் தரும் –தொழுது எழு என் மனனே

ஆக
அந்நிய ஸ்தோத்ரத்தையும்
அஸேவ்ய சேவையையும் விட்டு
ப்ராப்த விஷயத்தைத் தொழுது ஆடிப்பாடி வர்த்தி என்று
தன் திரு உள்ளத்தோடு லௌகிகரோடு வாசி யற உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் ஆயிற்று –

———-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

சன்மம் பல பல வில்
இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணனான மாத்ரமேயோ
பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹ கரணனாகவும் பெற்றேன் என்று உகக்கிறார் –

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

உயர்வற –இடர் இன்றியே
விபூதியில் ஈஸ்வரன் ஆஸ்ரிதருடைய அபீஷ்ட பிரதானத்தின் ஒரு வகையை அருளிச் செய்கிறார்
அவை எவை என்னில்
வைதிக புத்ர ஆ நயனத்தை அனுசந்தித்து இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் உண்டோ –
இல்லை என்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -இடர் இன்றியே -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக
உயர்வு -வருத்தம் –
எல்லாருக்கும் வருத்தம் உண்டாய் உயர வேணும் –
அற
உயர்வு இன்றியே -ப்ரயாஸம் இன்றியே
இடர் இன்றியே -இடர் -துக்கம்
ப்ரயாஸம் இன்றியே உயர் நலம் உடையவன் -உயரா நிற்கிற நலம் யுடையவன் –

கிருஷ்ணனானவான் -ஒரு நாள் ஒரு பொழுதில் -ஏகாஹம் -என்கிற க்ரதுவில் தீஷித்து இருக்கும் போது
ப்ராதஸ் ஸ்வனம் தலைக்கட்டி மாத்யந்தின ஸ்வனத்துக்கு
தக்ஷிண சமயத்தில் ஒரு வைதிகர் வந்து ஸ்துதித்து –
நாலாம் புத்ரன் இது -முன்பு மூன்று புத்ரனை இழந்தேன் –
நாலாம் புத்ரனை யாகிலும் ரக்ஷித்துத் தர வேணும் என்ன

மேலே ஓலைச் சுவடி முறிந்து போனதால் எழுத்துக்கள் தெரியவில்லையாம்

எவன் அவன்
எல்லா உலகும் கழியப் படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
எல்லா உலகும் கழிய
மனுஷ்ய லோகம் தொடங்கி ப்ரஹ்ம லோகம் கடந்த அப்பாலே தேரை நடத்தி
எனக்கு மயர்வற மதிநலம் அருளினவன்

அவர்களுக்கும் மயர்வற மதி நலம் அருளின கிருஷ்ணனும் -படர்ப் புகழ் பார்த்தனும் வைதிகனும்
உடன் ஏறினவர்களுக்கு
மயர்வற
அவர்கள் துக்கம் தீர

திண் தேர் கடவி
மதி நலமான -ஞான பக்தியை -அருளிச் செய்து கொண்டு –
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருத் சைவ ஜனார்த்தன
என்று கீதா உபநிஷத் வாக்கியங்களையும்
மாம் ஏகம் -என்கிற வாக்கியங்களையும்
உசாவிக்கொண்டு
திண் தேர் கடவி–
எவன் அவன் வைதிகனுக்குப் பிரியம் தரும் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –

எவன் அவன் -கிருஷ்ணனாய் அவதரித்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
புகும் போது படர்ப் புகழ் பார்த்தனுக்கு அபகீர்த்தி வாராமல்
தமஸ் அளவிலே அவர்களை நிறுத்தி ஸகல ஸாஸ்த்ர வித்தமனான வைதிகன்
புத்ரார்த்தியாய் வந்தவனுக்கு புத்ர லாபம் உண்டாம்படிக்கும்
கலக்க ஏழ் கடல் ஏழ்-இத்யாதிப்படியே சமபூமியிலே நடக்குமா போல் நடத்தி
காரணமான மூல ப்ரக்ருதியில் செல்லாமல் அவ்வளவும் அவர் காரியமாக தேரோடே அவர்களை நிறுத்தி
தேருக்கும் இவர்களுக்கும் திண்மையைக் கொடுத்து நிறுத்தி –

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
நிரவதிக தேஜோ ரூபமாய் நின்ற -நித்தியமாய் –
தேஜோ ரூபமாய் நின்ற தன்னுடைச் ஜோதி -தனக்கு அசாதாரணமான ஜோதி

அத்யர்க்க அநல தீப்தன் தத் தானம் விஷ்ணோர் மஹாத் மன -என்று
ஆயிரம் கோடி ஸூர்ய அக்னிகளுடைய தேஜஸ்ஸை ஓட வைத்த தொரு தேஜஸ்ஸாக
வகுத்தால் போலே இருக்கையாலே இவர்களுக்கு கண் கொண்டு காண ஒண்ணாது
ஆகையாலே தமஸ்ஸிலே நிறுத்தி -தன்னுடைச் சோதி ஆகையாலே தானே போய்ப் புக்கான்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
தொழுது எழு என் மனனே

உடலோடும் கொணர்ந்து கொடுத்தபடி யாவது
நாச்சியார் கிருஷ்ண அவதாரம் சேவிக்க வேண்டி பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்கள்
அந்தப்படியே கொணர்ந்து கொடுத்தவன்

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் அறுகை யாவது
வைதிகன் துக்கம் தீரத் தன் திருவடிகள் துயரம் தீர்ந்து சுடர் ஒளியாயிற்று

வைதிகனுக்குப் புத்ர சோகம்
அர்ஜுனனுக்கு அபவாதம்
நீக்க சாமர்த்தியம் எல்லாம் தானாயிற்று
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
இப்படிப்போன பிள்ளைகளை மீட்டுக் கொடுத்த கிருஷ்ணன் திருவடிகளை பற்றின
எனக்கு துயரம் உண்டோ என்று இனியராகிறார் –

———–

மூன்றாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading