ஸ்ரீ திருக்குறளும் ஸநாதன தர்மமும் –ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் –/திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம் வழங்கியவர்: தயாள கோவிந்த தாஸ்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று ‘அ’வில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர். எழுத்துக்கு எல்லாம் எப்படி ’அ’ முதலோ அது போல
நாராயணன் எல்லாவற்றிற்கும் மூலம் என்கிறார். பகவான் என்று தானே கூறுகிறார்
இங்கே நாராயணன் இல்லையே என்று யோசிக்கலாம்.

கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம் மாதிரி பகவான் என்றால் அது ஸ்ரீமந் நாராயணனையே குறிக்கும்.
கீதையில் ‘கிருஷ்ணர் சொன்னார் என்று சொல்லாமல் ‘ஸ்ரீ பகவான் உவாச’ என்று பகவான் சப்தம்
இங்கே கண்ணனான நாராயணனையே குறிக்கிறது. கண்ணன் சம்பந்தப்பட்டதால் ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்று கூறுகிறோம்.
கண்ணின் பக்தர்களை ’பாகவதர்கள்’ என்கிறோம். இன்று பல பகவான்கள் முளைத்துவிட்டபடியால் மக்கள் குழம்பிவிடுவார்கள்
அதனால் ’ஆதி பகவன்’ என்கிறார் வள்ளுவர்.

செய்யக்கூடிய செயல்களைச் செய்வது தான் அறம் என்கிறார் வள்ளுவர்.
பரிமேலழகர் ’இம்மை மறுமை வீடு’ என்னும் மூன்றுக்கும் பயன் தருவது அறன் என்கிறார்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

ஒருவனுக்குச் செய்யக்கூடிய செயல்களே அறம்; செய்யக் கூடாத செயல்கள் பழியே.
எது செய்யக் கூடிய செயல்கள் நம் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதைக் கடைப்பிடிப்பதே அறம்
( மேலையார் செய்வனகள் என்று ஆண்டாள் 26ஆம் பாசுரத்தில் கூறுகிறாள்).

வள்ளுவர் இந்த அறவழிக்கு அறத்துப்பால் என்ற பகுதியையே ஒதுக்கி,
அதில் ’அறன் வலியுறுத்தல்’ என்று ஓர் அதிகாரமே தந்துள்ளார்.
அதில் அறம் என்றால் என்ன பல விதங்களில் கூறியுள்ளார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற

மனதில் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் ; அறம் அவ்வளவு தான். மற்றவை ஆரவாரம் என்கிறார்.

இன்னொரு குறளில்

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும்
இடங்கொடுக்காமல் வாழ்வதே அறமாகும் என்கிறார்.

‘தீக்குறளை சென்று ஓதோம்’ என்பதற்கு வள்ளுவர் ‘புறங்கூறாமை’ என்று ஒரு முழு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளார்.
ஒருவன் அறநெறியை விட்டுவிட்டு பாவங்களையே செய்துகொண்டு இருந்தாலும்,
அவன் புறம் பேசாமல் இருந்தாலே போதும். புறம் பேசுதல் எல்லாப் பாவங்களைவிடக் கொடியது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

புறம் பேசாமல் இறந்தால், மறுபிறப்பில் அறநெறியில் வாழ்ந்தவர் பெறும் பலனைப் பெறுவார்.
மாசு படிந்த மனம் தான் கோள் சொல்லும், நண்பர்களை இழப்பார்கள் என்று அடுக்கிக்கொண்டு போகும் வள்ளுவர்

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

புறம் கூறுபவர்களை இந்தப் பூமி ’இவனை எல்லாம் சுமக்க வேண்டியிருக்கிறதே’ என்று
தன் தர்மத்தைக் காக்கவே சுமக்கிறது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

அதாவது பற்றில்லாதவனாகிய பெருமாளின் பற்றை மட்டுமே பற்றிக் கொள்ள வேண்டும்;
மற்ற பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.
பற்றற்றான் என்பது பகவானைக் குறிக்கும். நம்மாழ்வார் ‘பற்றிலன் ஈசன்’ என்கிறார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

இல்லறத்தில் வாழ்பவன் அறவழியில் தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவருக்கும்
அவர்களுக்கு ஏற்ற உதவிகளை செய்து துணையாக இருப்பான்

திருவள்ளுவமாலையில் ‘பரணர்’ என்ற புலவர் பாடிய பாடல் இது.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுவதும் நயந்தளத்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தார் ஒர்ந்து.

திருமால் குறளாய் தோன்றி இரு பேரடியால் உலகனைத்தையும் அளந்தான்;
திருவள்ளுவர் தம் குறளின் இரு சிற்றடியால் மக்களின் எண்ணங்கள் எல்லாவற்றையும் அளந்தார் என்கிறார் புலவர்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை இடைவிடாது சிந்திப்பவர்களுக்கு
எந்தக் காலத்திலும் துன்பம் இல்லை

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும்
சோம்பல் இல்லாத அரசன் அடைவான் என்கிறார். நல்லாட்சி செய்தால் அவனுக்கு
மூவுலகங்களையும் அளந்த திருமால் போன்ற எல்லாம் கிடைக்கும்.

ஆனால் நல்லாட்சி புரியவில்லை என்றால் ? வள்ளுவர் இப்படி விவரிக்கிறார்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவ மழை பொய்க்கும்
என்று கூறிவிட்டு இன்னொரு குறளில்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் குறையும்.
அந்தணர்கள் அறநூலாகிய வேதங்களை மறந்துவிடுவார்கள் என்கிறார்.

——–

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

மேகம் கடலிலிருந்து முகந்த நீரை மீண்டும் கடலிலே பெய்யாமல் போனால், நீண்ட பெரிய கடலும்
தன் வளம் குன்றிப் போகும் என்கிறார் வள்ளுவர். அதாவது திருப்பதிக்கே லட்டு என்பது போல கடலுக்கே மழை தேவை என்கிறார்.
அதுவும் அந்த மழை ‘தடிந்தெழிலி’ பொழிய வேண்டும் என்கிறார் முனிவர்.

’தடிந்தெழிலி’ – தடிந்து எழிலி என்றால் மேகமானது மின் வெட்டி இடி இடித்துப் பெருமழை பெய்வது குறிக்கும்.
மின்னலும் இடியுமாக ‘cloud-burst’ மழை பெய்ய வேண்டும் என்பதைத் தான் ‘ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்’ என்கிறாள். வள்ளுவர் இதை ‘தடிந்து எழிலி’ என்கிறார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு,
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள் நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாமல் இருந்தால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று
உயிர்களை வருத்தும் என்கிறார்.

இந்த அதிகாரத்தின் சுருக்கம் – விவசாயம் செய்ய, குடிக்க, பசிக் கொடுமை போக்க மழை அவசியம்.
அதுவே அமுதம். தானம், தவம், கோயில் பூஜை, எல்லாம் மழை இல்லை என்றால் நின்று போகும்.
மழை இல்லை என்றால் பசும் புல்லைக் கூடப் பார்க்க முடியாது
மொத்தத்தில் மழை இல்லை என்றால் உலக வாழ்க்கை நடைபெறாது என்கிறார்.
இதைத் தான் ஆண்டாள் ‘வாழ உலகினில் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்திடாய்’ என்று
‘நல்ல மழையை’ வேண்டும் என்று பிராந்தனைச் செய்கிறாள்..

வள்ளுவர் நல்ல மழை, கெட்ட மழை என்று இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாதும் மிகுதியாகப் பெய்தும் மக்களை கெடுப்பதும், அளவாய்ப் பெய்து வாழ வைக்க செய்ய வல்லமையுடையது மழை.

அந்த ’கெட்ட மழை’ தான் கண்ணன் ‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தான்!’

———

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

பார்வைக்கு எளிமை, சொல்லுக்கு இனிமை உடைய மன்னனை நாடு புகழும்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற

அதாவது ஒருவன் தன் மனத்தில் மாசு இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே;
மனத்தூய்மை இல்லாத மற்றவை வெறும் ஆரவாரம் என்கிறார்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல்
அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

புற நிர்ப்பந்தங்களில் உண்டாகும் சுத்தம் கற்பாகாது; தன் உள்ளத் தூய்மையால் அடையும் சுத்தமே கற்பு.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அறக்கடலாக விளங்கும் பெருமாளின் திருவடியை நினைந்தாலன்றிப் பாவக்கடலைக் கடக்கமுடியாது என்கிறார்.

செவியை ஒரு ஹோமம் செய்யும் குண்டமாக வைத்து அக்கினியில் சொரியும் அவியைப் போன்றது,
பெரியோர் சீடர்களுக்கு அவர்களுடைய செவி மூலம் தரும் அறிவு என்கிறார் வள்ளுவர்

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

ஆசாரியன் ஒரு பெரிய வேள்வியைச் செய்யும் பயனை அடைவான்;
அவியப் பெற்றுத் திருப்தியடையும் தேவர்களைப் போல் ஆவான் அறிவை பெறும் சீடன்.

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று

தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன்
பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

தனக்குக் கிடைத்ததை காக்கை மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்;
இப்படிப்பட்ட இயல்புடையவருக்கே செல்வம் பெருகும் என்கிறார்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

உலகம் கூறும் உண்மையை மறுப்பவன் பேயாகக் கருதப் படுவான் என்கிறார்-

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

கேள்வி அறிவால் துளைக்கப்படாத செவிகள் ஓசையைக் கேட்டு என்ன பிரயோஜனம் ? என்று என்கிறார் வள்ளுவர்.

அருள் என்றால் என்ன ?
வள்ளுவர் அருளுடைமை என்று ஓர் அதிகாரத்தையே இதற்கு ஒதுக்கியுள்ளார்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளால் வரும் செல்வம்.
மற்ற செல்வங்கள் சிறப்பு இல்லை என்கிறார் வள்ளுவர்

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லை என்பது போலப் போல அருளில்லாதார்க்கு அவ்வுலகம் இல்லை.

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து

நோயின்மை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் இவை ஐந்தும் நாட்டுக்கு அணிகலங்கள் என்கிறார்.
இங்கே ஏமம் = காவல்.

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது.
ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று என்கிறார்.
இந்தச் செல்வம் அனுமாரிடம் இருந்தால் தான் அனுமாருக்குச் சொல்லின் செல்வர் என்ற திருநாமம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

உருளும் பெரிய தேர்க்கு அச்சிலிருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர்.
அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது என்கிறார்.

ஸ்ரீராம தூதன் என்ற பெயரும் அனுமாருக்கு உண்டு. ஒரு தூதுவன் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு
இன்றியமையாத மூன்று பண்புகளாகும் என்கிறார் வள்ளுவர்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

ஏழைகளுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை
எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், நோக்கம் அதுவே என்கிறார்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல. சான்றோர்க்கு அகத்தின் இருளைப் போக்கும்
பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார்.

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்

கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், அதைப் பொறுத்துக் கொள்ளும்
பெண்மையினும் மேம்பட்டது வேறொன்றும் இல்லை என்கிறார்.

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

செருக்கும் சினமும் சிறுமையும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில்
காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும் என்கிறார். இன்னொரு குறளில்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

பணிவும் இன்சொல்லுமே அணிகலனாகும், மற்றைய அணிகலங்கள் ஆகாது என்கிறார்.

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

`எனக்கு அறிவு இருக்கிறது` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

பணிவுடன் இருந்தால் எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுக்கு மற்றொரு செல்வம் போன்றதாகும்.

உயர்ந்த குலம் என்பதற்கு வள்ளுவர் கூறும் definition கீழே உள்ள குறள்

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும்; குலப்பெருமை வேண்டுமானால்
யார்க்கும் பணிவு விரும்புக என்பது குறளின் பொருள். பணிவே ஒருவனுக்கு அணிகலன் என்கிறார்.

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

படை, குடிமக்கள், பொருள், அமைச்சரவை, நட்பு நாடுகள், பாதுகாவல் என்ற
ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என்கிறார்.

ஆண் சிங்கத்தின் நடை அழகை வள்ளுவர் இப்படிக் கூறுகிறார்

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

அதாவது புகழைக் காக்க விரும்பும் மனைவியைப் பெற்றவருக்கு இகழ்ந்து பேசும் பகைவர் முன்
ஆண்சிங்கம் போல் பெருமிதத்துடன் நடக்க முடியும் என்கிறார்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு

சிந்தித்துத் தெளிந்து மெய்ப்பொருளை உள்ளம் உணர்ந்து கொண்டால்,
உறுதியாக, மனிதப் பிறப்பின் இயல்பை மீண்டும் ஆராயவேண்டியதில்லை என்கிறார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

எவ்வகையாலும் ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடையறாது நினைப்பவர்க்கு
மனக்கவலையை இல்லை என்கிறார் வள்ளுவர்.

பெரியவர்கள் யார் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியர்;
அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர் என்கிறார்

பெரியர் என்பவர்கள் செயல்களை உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர்கள் என்று
இன்னொரு குறளில் அதற்கு விளக்கம் தருகிறார்.

வள்ளுவர் மேலும் ஒரு குறளில்

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

பெரியவர்கள் கண்கள் போன்றவர்கள். அரசனும் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்

தப்பு செய்தால் இடித்து அறிவுரை கூறும் பெரியவர்களின் துணை கொண்டவர்களை யாரும் தப்பான வழியில்
போகும்படி கெடுக்க முடியாது என்று கூறிய வள்ளுவர் இன்னொரு குறளில்

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை

வியாபாரத்தில் முதல் இல்லாமல் லாபம் பார்க்க முடியாது.
அது போலப் பெரியவர்களின் துணை இல்லாமல் நல்ல நிலைக்குச் செல்ல முடியாது என்கிறார்.

நாம் பித்ருக்களுக்கு மறவாமல் சடங்குகள் செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர்

தென் புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென் புலத்தார் என்பது பித்ருக்கள். இறந்தவர்களை மறவாமல் சில சடங்குகள் செய்து
நினைவில் வைத்துக்கொள்வது நலம் என்கிறார்.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை–வள்ளுவர் ஒரு குறளில்–

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய
கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

இந்தக் குறள் கடவுள் வாழ்த்தில் ஒன்பதாவது குறள்.
இதற்கு முன் எட்டுக் குறளில் வள்ளுவர் கூறும் பெருமாளின் எட்டுக் குணங்கள் இவை.

1. ஆதி பகவன் – அவனே எல்லாவற்றிற்கும் முதலானவன்
2. வாலறிவன் – தூய்மையாகிய அறிவுடையவன்
3. மலர்மிசை ஏகினான் – மலரின் கண்ணே
4. வேண்டுதல் வேண்டாமை இலான் – விருப்பு/வெறுப்பு அற்றவன்
5. இரு வினையும் சேரா இறைவன் – பாவ புண்ணியம் அற்றவன்.
6. பொறி வாயில் ஐந்தவித்தான் – புலன்களை வென்றவன் – இருடிகேசன்
7. தனக்குவமை இல்லாதான் – ஒப்புமை இல்லாதவன்
8. அறவாழி அந்தணன் – அவனே அறக்கடல்

பெருமாளுக்கு உள்ள எட்டுக் குணங்களைக் குலசேகர ஆழ்வார் தனது முகுந்த மாலையில் இப்படிக் கூறுகிறார்.

ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
ப்க்த ப்ரியேதி பவலுண்டன கோவிதேதி
நாதேதி நாக சயனேதி ஜகன் நிவாஸே
த்யாலாபினம் ப்ரதிபதம் குரு மே முகுந்த

1. ஸ்ரீ வல்லபேதி(திருமகள் நாயகனே)
2. வரதேதி ( வரமளிப்பவனே)
3. தயாபரேதி (கருணைமிக்கவனே)
4. பக்த பரியோதி(பக்தர்களின் அன்பனே)
5. பவலுண்டன கோவிதேதி (பிறவித் தொடரை களைந்து காக்கும்)
6. நாதேதி(வல்லவனே)
7. நாக சயனேதி(பாம்பணையில் துயில்பவனே)
8. ஜகன் நிவாஸே( எங்கும் நிறைந்தவனே)

ராமா நீ
1. அளவிடமுடியாத தன்மை உடையவர்.
2. யாராலும் வீழ்த்த முடியாதவன்
3. புலன்களை வென்றவர்
4. நீயே தர்மம்
5. பெருமைமிக்கவன்
6. முக்காலமும் அறிந்தவர்
7. பொறுமைமிக்கவர்
8. செந்தாமரைக் கண்ணழகை உடையவன்.
தாரை கூறும் எட்டுக் குணங்கள் இவை.

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

எனக்கு அறிவு இருக்கிறது` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும் என்று
கூறிய வள்ளுவர் செருக்கு இல்லாமல் இல்லாமல் இருந்தாலே பெரிய செல்வம் என்கிறார்

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை
மட்டும் ஆடையால் மறைத்து என்ன பயன் ?

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

நிலையில்லாதவற்றை நிலையானது என்று நினைப்பது தான் அற்பத்திலும் அற்பம் என்கிறார்.

நம் உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு முட்டை உடைந்து பறவை பறந்து போவது போல என்பதைக்

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு

என்று கூறும் வள்ளுவர் இந்த உடலுக்கு ஏற்ற இடம் பற்றி இப்படிக் கூறுகிறார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு,
நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ?

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

கடவுளின் திருவடியை இடைவிடாது நினைப்பவர் மோட்சம் பெறுவார். இன்னொரு குறளில்

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

இறைவனுடைய திருவடிகளை நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்;
மற்றவர் கடக்க முடியாது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.–

இக் குறள் அப்படியே கீதையின் சரம ஸ்லோகம்!
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள;
உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.

பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொறி வாயில் ஐந்து அவித்தான் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தையும்
தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்று பொருள் –
அதனால் தான் பெருமாளை ‘ரிஷிகேசன்’ என்கிறோம்.. தமிழில் இருடீகேசன்.
பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் -. பொய்த்தல் என்றால் மறைத்தல் என்று பொருள்.
இங்கே ஒரு நெறியை மறைக்காமல் காட்டியிருக்கிறார். அந்த ரிஷிகேசன் ஓர் ஒழுக்க நெறியை மறைக்காமல் காட்டியிருக்கிறான்.
நீடு வாழ்வார் – அந்த நெறியை பின் பற்றியவர்கள் பிறப்பு இன்றி எக்காலத்தும் வாழ்வார் என்கிறார் வள்ளுவர்.
அந்த நெறி தான் சரம ஸ்லோகம்!

வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் வெளியே வலிமையான தோற்றம் பெற்றிருந்தாலும்,
புலித்தோல் போர்த்தி மேயும் பசுக்கள் போல என்கிறார்.

———–

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ

“பழைய ஆடைகளைப் புறக்கணித்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே,
பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.” (பகவத்கீதை 2.22)

பகவத் கீதையின் இதே கருத்து வள்ளுவரால் “நிலையாமை” என்னும் அதிகாரத்தில் உரைக்கப்படுகிறது.
உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவினை முட்டை என்னும் கூட்டினை தனியேவிட்டு விட்டு
வேறிடத்திற்கு பறக்கும் பறவையுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு–(திருக்குறள் 338)

கீழ்காணும் குறளில், இந்த உயிரானது பல உடம்பினுள் மீண்டும்மீண்டும் புகும் என்பதைச் சுட்டிக்காட்டும் வள்ளுவர்,
துச்சமான அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் இருக்கும் உயிருக்கு நிலையான
வீடு அமையவில்லையா என்று கேட்கின்றார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு–(திருக்குறள் 340)

உடலைக் கண்டு வருத்தம் கூடாது–தான் ஓர் ஆத்மா என்பதை உணர்ந்து நிலையான இடம் தேடுதல் முக்கியம் என்றும்,
நிலையற்ற உடம்பு அழிவதைக் கண்டு வருந்தக்கூடாது என்றும் வள்ளுவர் கீழ்காணும் குறளில் கூறுகிறார்:

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்–(திருக்குறள் 627)

உடம்பு என்பது துன்பத்திற்கு இலக்காகக் கூடியது என்பதை உணர்ந்த அறிவிற் சிறந்த மேலோர் தன் உடலுக்கு
ஏற்படும் துன்பத்தை ஒருபோதும் துன்பமாகக் கருத மாட்டார்கள் என்றுகூறுகின்றார்.

தேஹினோ யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி

“உடல் பெற்ற ஆத்மா சிறுவயதிலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும்மாறுவதைப் போலவே,
மரணத்தின்போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னைஉணர்ந்த ஆத்மா (தீரன்)
இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” (பகவத் கீதை 2.13)

பரமாத்மா நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை
பகவத் கீதையின் பதிமூன்று, பதினைந்தாவது அத்தியாயங்கள் உறுதி செய்கின்றன.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்–(திருக்குறள் 3)

“இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும்
மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.”
எல்லா உலகங்களுக்கும் அவற்றிலுள்ள உயிர்களுக்கும் காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளாகிய ஆதிபகவன்
இதயத்திலிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார்.
அந்தர்யாமியாக இருக்கும் இறைவனை “பரமாத்மா” என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன.
இங்கே “வீடு” என்பது நிலையான அழிவற்ற உலகமாகிய வைகுண்டத்தைக் குறிக்கிறது.

உபத்ரஷ்டானு மந்தா சபர்தா போக்தா மஹேஷ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோதேஹே ’ஸ்மின் புருஷ: பர:–பகவத் கீதை (13.23)

“இந்த உடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன்,
பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்கு பவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.”

ஜடத்தளையில் இருக்கும் ஜீவாத்மா, இவ்வுலக நம்பிக்கைகள், இன்பங்களை விடுத்து பரமாத்மாவிடம் திரும்புவானாகில்,
அவன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அவர் வழிவகுக்கிறார். இந்த உண்மையை வள்ளுவர் மேலே சொன்ன குறளில் விளக்கியுள்ளார்.
தனிப்பட்ட ஜீவாத்மா மற்றோர் உடலுக்கு மாற்றமடைவது, அவனுடைய எண்ணம், விருப்பம் மற்றும் செயல்களாலும்,
பரமாத்மாவின் கருணையாலும் சாத்தியமாகிறது. கீழ்க்காணும் ஸ்லோகம் அதனை உறுதி செய்கின்றது.

கர்மணா தைவ-நேத்ரேணஜந்துர் தேஹோபபத்தயே
ஸ்த்ரியா: ப்ரவிஷ்ட உதரம்பும்ஸோ-ரேத: கணாஷ்ரய:

“தன்னுடைய செயல்களின் விளைவினாலும் முழுமுதற் கடவுளின் பார்வையாலும், ஜீவனானவன் ஒரு தாயின் கருப்பையில்
அடைக்கப்பட்டு உடம்பெடுக்கிறான். ஓர் ஆணின் விந்துவின் வாயிலாக ஜீவன் கருப்பையை அடைகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1)

வேதாந்த சூத்திரத்தில் ஸ்ரீல வியாஸதேவர், ஜன்மாத்யஸ்ய யத:, எவரிடமிருந்து எல்லாம் தோன்றுகின்றனவோ,
அவரே முழுமுதற் கடவுள் என்று கூறுகிறார். மேலும் அதனை அவரே விளக்கமான முறையில்
ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஸ்லோகத்தில் (1.1.1.), வஸுதேவரின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும்
அவர் தனது நிலையான உலகத்தில் வீற்றுள்ளார் என்றும் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும் அவரை தான் தியானிக்கிறேன் என்றும் கூறுகின்றார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு–(திருக்குறள் 1)

“எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதைப் போல், உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.”

எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்ட முதல்வனே ஆதிபகவன். இந்த ஆதிபகவன் எப்படிப்பட்டவன் என்பதை வள்ளுவர் ஏழாவது குறளில்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது–(திருக்குறள் 7)

“தனக்கு நிகரில்லாதவனுடைய தாளைச் சேர்ந்தவருக் கல்லாது மற்ற எவருக்கும் மனத்தின்கண் உருவாகும் துன்பங்களை நீக்குதல் அரிது.”
தனக்குவமை இல்லாதான் என்று வள்ளுவர் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. அவருக்கு மேல் யாரும் இல்லை என்பதே இதன் பொருள்.

இதையே பகவத் கீதையில் (7.7) கிருஷ்ணர்,
மத்த: பரதரம் நான்யத்கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய
மயி ஸர்வம் இதம் ப்ரோக்தம்ஸூத்ரே மணி-கணா இவ

“செல்வத்தை வெல்வோனே, என்னை விட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல,
அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.” என்று கூறுகிறார்.

மேலும், புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (திருக்குறள் 1103)

“தாமரைக் கண்ணனுடைய உலகம், தான் விரும்பும் காதலியின் தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ?”

ஜடவுலகம், இதன் அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை, நிலையற்றவை என்று வேத இலக்கியங்களும் திருக்குறளும் கூறுகின்றன.
நிலையாமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

“நேற்று இருந்தவன் இன்றில்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையை மட்டுமே
பெருமையாக உடையது இவ்வுலகம்.” (திருக்குறள் 336) எனில், உயிர்வாழியான மனிதனுக்கு என்ன பெருமை?

இதே நிலையாமையை நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் (1.2.2) மிகவும் சுருக்கமாகப் பின்வருமாறு கூறுகிறார்:

மின்னின் நிலையில – மன்னுயிராக்கைகள்,
என்னுமிடத்து, இறை – உன்னுமின் நீரே

பகவத் கீதையில் (8.15) ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

மாம் உபேத்ய புனர்ஜன்மது:காலயம் அஷாஷ்வதம்
நாப்னுவந்தி மஹாத்மான:ஸம்ஸித்திம் பரமாம் கதா:

வள்ளுவர் ஊழ் எனப்படும் அதிகாரத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

“ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்.
தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகாது.” (திருக்குறள் 376)

ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்

“ஊழைவிட மிக்க வலிமையுள்ளது வேறு என்ன இருக்க முடியும்? ஊழை விலக்கும்பொருட்டு மற்றொரு வழியை
ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன்வந்து நிற்கும்.” (திருக்குறள் 380)

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

“ஒருவன் செய்ய வேண்டாதவற்றை செய்வதும் கேடாகும், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விடுவதும் கேடாகும்.” (திருக்குறள் 466)

ந கர்மணாம் அனாரம்பான் நைஷ்கர்ம்யம் புருஷோ ‘ஷ்னுதே
ந ச ஸன்ன்யஸனாத் ஏவ ஸித்திம் ஸமதிகச்சதி–(பகவத் கீதை 3.4)

செயலிலிருந்து விலகிக்கொள்வதால் விளைவுகளிலிருந்து விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாதது.
அதனால், அறிவில் முதிர்ந்தவர்கள் செயல்களின் விளைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு நிற்க விரும்புகின்றனர்.
பிறப்பு, இறப்பு எனும் சுழலிலிருந்து ஒருவனை விடுவிக்கும் செயல்கள் அகர்ம எனப்படும்.
இந்த மூன்று வகையான செயல்களில், அறிவாளிகள், கர்ம பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்கும் செயல்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள்.

பகவத் கீதை 3.9 கூறுவதன்படி, “விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் (அகர்ம, உன்னதமான செயல்) நிறைவேற்றப்படலாம்,
மற்ற செயல்கள் (கர்ம, விகர்ம ஆகிய இரண்டும்) இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை.
எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச் செய்.
இவ்விதமாக, நீ எப்பொழுதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.”

மேலும், ஸ்ரீ பிரம்ம சம்ஹிதை (ஸ்லோகம் 54) கூறுகிறது, கர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம்,
“பகவான் கோவிந்தர், தனது பக்தர்களின் கர்ம வினைகளைச் சுட்டெரித்து அழிக்கிறார். மற்றவர்கள் அனைவரையும்
(அற்ப பூச்சியிலிருந்து இந்திரன் வரை) தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு செய்கிறார்.”

இறையருள் அல்லது இறையன்பு என்பதுதான் மனித வாழ்வின் உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும்.

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

“செல்வங்களுள் சிறந்த செல்வம் அருளாகிய செல்வமே. பொருளாகிய செல்வங்கள் இழிந்தவர்களிடத்திலும் உள்ளன.” (திருக்குறள் 241)

அருளுடைமையின் முக்கியத்துவத்தை வள்ளுவர்,

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

“அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் வாழும் வாழ்க்கை அருள் பொருந்திய நெஞ்சம் உடையோருக்கு இல்லை.” (திருக்குறள் 243)

இங்கே, “துன்பமான இருள் பொருந்திய உலகம்” என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் காண்க.
இதிலிருந்து ஒளிபொருந்திய இன்பமான உலகம் மற்றொன்று இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
பகவான் சைதன்ய மஹாபிரபுவின் நோக்கமும் நம்மை ஒளி மிகுந்த இனிய உலகமான கிருஷ்ண உலகிற்கு அல்லது
கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்வதுதான்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

“பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு சிறப்பாகக் கருதப்படுகின்ற செம்பொருளாகிய
உண்மைப் பொருளை (இறைவனை) காண்பதே அறிவாகும்.” (திருக்குறள் 358)

வள்ளுவரின் இந்தக் கூற்றினை, பகவத் கீதையின் (4.9) கீழ்க்காணும் கூற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ’ர்ஜுன

“எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட
பின் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.”

மேலும், அறிவு என்பது, இயற்கையையும் அதை அறிபவர்களான ஆத்மாவையும் இறைவனையும் அறிவதே என்று
பகவத் கீதையில் (13.3) கிருஷ்ணர் கூறுகின்றார். இதுவே உண்மையான பகுத்தறிவாகும்.

வள்ளுவர், நிலையாமை என்ற அதிகாரத்தில்,

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

“அறிவில்லாதவர்கள் ஒருபோதும் தாங்கள் எதற்காக வாழ்கிறோம் என்பதை ஆராய்வதே இல்லை,
ஆயினும், அவர்களது இதர ஆய்வுகள் கோடிக்கணக்கில் உள்ளன.” (திருக்குறள் 337)

பகவத் கீதையில் (2.41) கிருஷ்ணர் இதே கருத்தைக் கூறுகிறார்:

வ்யவஸாயாத்மிகா புத்திர்ஏகேஹ குரு-நந்தன
பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் சபுத்தயோ

“இவ்வழியில் உள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர். இவர்களது இலட்சியம் ஒன்றே.
குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.”

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

“துச்சமான அறியாமையின் மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் வாழும் உயிருக்கு நிலையாக குடிகொள்வதற்கு
இன்னும் ஒரு வீடு அமையவில்லையோ.” (திருக்குறள் 340) .
பகவத் கீதையில் (15.7) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதுபோலவே வருத்தப்படுகின்றார்:

மமைவாம்ஷோ ஜீவ-லோகேஜீவ-பூத ஸனாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணிப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

“இந்தக் கட்டுண்ட உலகிலிருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால்,
மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.”

திருவாய்மொழியில் (1.2.1) நம்மாழ்வார் கூறுகிறார்:

வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே

“எல்லாவற்றையும் விட்டு விடுங்கள், விட்டுவிட்டு உங்கள் உயிரை வீடு தரும் தலைவனிடம் அளித்து விடுங்கள்.”

முழுமுதற் கடவுளான ஆதிபகவானுக்கு அன்புத் தொண்டாற்றவில்லை எனில், அவை எல்லாம் வீண் என்பதை
இரண்டாவது குறளில் வள்ளுவர் காட்டுகின்றார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

எல்லாம் அறிந்தவரான முழுமுதற் கடவுளின் நல்ல பாதங்களைத் தொழுதல் ஒன்பது வகையான பக்தித் தொண்டில் ஒன்றாகும்.
தன்னை உணர்வதும் இறைவனை உணர்வதும் அந்த உணர்வில் இறைவனுக்கு அன்புத் தொண்டாற்றுவதும் முக்கிய போதனைகளாகும்.
இதனை வாழ்வின் குறிக்கோளாக ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஏற்றுக் கொண்டால், கவலை என்பது இல்லை.

வேத வழி வந்த திருக்குறள்

திருக்குறள் முழுவதும் வர்ணாஷ்ரம நெறிகள், குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான கடமைகள், கர்ம விதிகள், மறுபிறவி, மறுவுலகம்,
ஸ்வர்கம், நரகம், மோக்ஷம், பஞ்ச-மகா யாகங்கள், பித்ரு கர்மங்கள் முதலிய பல்வேறு விஷயங்கள் காணக்கிடக்கின்றன.
இவை நிச்சயம் வேத புராணங்களின் தாக்கமே. ஸ்வர்க வாழ்வைக் காட்டிலும் வீடுபேறு உயர்ந்தது,
அது மாற்றமில்லா வாழ்க்கை, ஆசையை ஒழித்தவரால் அதனை அடைய முடியும் போன்ற கூற்றுகளும் குறள்களில் ஒலிக்கின்றன.

“என்பர்” என்று முடியும் குறள்கள் ஏராளம். அதாவது, வள்ளுவர் தனது பூர்விக மாமனிதர்களை இங்கே சுட்டிக்காட்டி,
தனது நூல் அவர்களுடைய கூற்றுகளிலிருந்து பெறப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

இதை அடிப்படையாக வைத்து, திருவையாறு கல்லூரியின் முன்னாள் தலைமை பேராசிரியரும் சமஸ்கிருதம், தமிழ் என
இரு மொழியிலும் புலமை பெற்றவருமான திரு சுப்ரமணிய சாஸ்திரிகள், “பாலர் உரை” என்ற தலைப்பில்
திருக்குறளின் அறத்துப்பாலிற்கு விளக்கமளித்துள்ளார்.
அங்கே அவர் ஒவ்வொரு குறளிற்கும், அதற்கு சமமான ஸ்லோகத்தினை மஹாபாரதம், உபநிஷதங்கள், மனு ஸ்மிருதி
ஆகியவற்றிலிருந்து எடுத்துரைத்து திருக்குறளிற்கும் அதற்குமுள்ள சிறந்த ஒற்றுமைகளை பறைசாற்றியுள்ளார்.

திரு இராமசந்திர தீட்சிதர் அவர்கள் எல்லா குறளிற்கும் சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்கமளித்துள்ளார்:
முதல் பகுதி (அறத்துப்பால்) ரிக் வேதம், இராமாயணம், மஹாபாரதம், பராசர சம்ஹிதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்தும்,
இரண்டாம் பகுதி (பொருட்பால்) கமந்தக நீதி, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், சுக்ர நீதி, போத்யாயன ஸ்மிருதி ஆகியவற்றிலிருந்தும்,
மூன்றாம் பகுதி (காமத்துப்பால்) காம சூத்திரத்திலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது.

திருவாய்மொழியையும் திருக்குறளையும் ஒப்பிட்டு பல நூல்களும் கட்டுரைகளும்கூட பலரால் வடிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் ஆழ்வார்களின் பாசுரங்களை உபயோகித்துள்ளார் என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

வெளிப்புறமாக புலன்களைக் கட்டுப்படுத்துவோரை கிருஷ்ணர் கீதையில் (3.6) பின்வருமாறு கண்டிக்கிறார்:

கர்மேந்திரியாணி ஸம்யம்யய ஆஸ்தே மனஸா ஸ்மரன்
இந்த்ரியார்தான் விமூடாத்மாமித்யாசார: ஸ உச்யதே

புலன்களையும் புலனுறுப்புகளையும் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனுகர்ச்சிப் பொருட்களில் மனதைச் செலுத்திக்
கொண்டிருப்பவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.”

கிருஷ்ணரின் இதே கூற்றினை திருவள்ளுவர் தமது வார்த்தைகளில் பின்வருமாறு கூறுகிறார்:

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்

மனதில் ஆசைகளை நீக்காமல், ஆனால் ஆசைகளே இல்லாத துறவிகளைப் போல வஞ்சித்து வாழ்கின்றவர்களைப் போல்
கொடியவர்கள் வேறு யாரும் இல்லை.” (திருக்குறள் 276)

ஒருவன் தன் மனதில் மாசற்றவனாக இருக்க வேண்டும், அதுவே அறம். மனத் தூய்மை இல்லாதவை அனைத்தும்
ஆரவாரத்தன்மை உடையவை என்ற பொருளில் வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற (திருக்குறள் 34)

மனமாசை அகற்றச் சிறந்த வழி தகுந்த பயிற்சியால் கிருஷ்ண உணர்வைப் பெறுவதே.
கிருஷ்ண உணர்வைப் பெற்றவர்களுக்குப் புலனின்பம் துச்சம், இதற்கான நடைமுறை உதாரணம்,
மிகச் சிறந்த சாதுவும் கிருஷ்ண பக்தருமான ஸ்ரீயாமுனாசாரியர். அவர் பின்வருமாறு கூறுகிறார்:

யத்-அவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தே
நவ-நவ-ரஸ-தாமன்யுத்யதம் ரந்தும் ஆஸீத்
தத்-அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே
பவதி முக-விகார: ஸுஷ்டு நிஷ்டீவனம் ச

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதக் கமலங்களின் தொண்டில் என் மனம் ஈடுபட்டிருப்பதால், என்றும் புதுமையாகத் திகழும்
தெய்வீக இன்பத்தை நான் அனுபவித்துக் கொண்டுள்ளேன். பெண்களுடனான பாலுறவு வாழ்வினை நான் எப்போதாவது எண்ணினால்,
உடனே என் முகத்தை அதிலிருந்து திருப்பி, அவ்வெண்ணத்தின் மீது காறி உமிழ்கிறேன்!” :

பச்சைமா மலைபோல் மேனிபவளவாய் கமலச் செங்கண்,
அச்சுதா! அமர ரேறே!ஆயர்தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான்போய்இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்அரங்கமா நகரு ளானே!

பக்தியின் இத்தகு நிலையினால் பெறப்படுவதே உண்மையான இன்பம் என்பதை வள்ளுவரும் பின்வருமாறு கூறுகிறார்:

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (திருக்குறள் 39)

அந்த ஆன்மீக உலகைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் (10.14.58) பின்வருமாறு கூறுகின்றது:

ஸமாஷ்ரிதா யே பத-பல்லவ-ப்லவம்
மஹத்-பதம் புண்ய-யஷோ முராரே:
பவாம்புதிர் வத்ஸ-பதம் பரம் பதம்
பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம்

முக்தியை அளிப்பவரும், முகுந்தன் என்னும் பெயர் பெற்றவரும், பிரபஞ்சத் தோற்றத்தின் அடைக்கலமுமான பகவானின்
பாத கமலங்கள் என்னும் படகை ஏற்றுக் கொண்டவனுக்கு பௌதிக உலகம் என்னும் பெருங்கடல், கன்றின் குளம்பில்
தேங்கிய நீரைப் போன்றதாகும். அவனது நோக்கம் பௌதிகத் துன்பங்களற்ற வைகுண்டமே (பரமபதமே) –
ஒவ்வோர் அடியிலும் அபாயம் இருக்கக்கூடிய இந்த உலகமல்ல.

அங்கு எவ்வாறு செல்வது என்பதைப் பற்றி பகவத் கீதையில் (12.7) ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

தேஷாம் அஹம் ஸமுத்தர்தா
ம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத்
பவாமி ந சிராத் பார்த
மய்யாவேஷித-சேதஸாம்

மனதை என்னில் நிறுத்தி எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருதாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு,
என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.”

அந்த ஆன்மீக உலகத்தையும் பௌதிக உலகத்தையும் ஒப்பிட்டு கிருஷ்ணர் மேலும் கூறுகிறார் (பகவத் கீதை 8.16):

ஆப்ரஹ்ம புவனால் லோகா:புனர் ஆவர்தினோ
மாம் உபேத்ய து கௌந்தேயபுனர் ஜன்ம ந வித்யதே

ஜடவுலகின் மிகவுயர்ந்த பிரம்ம லோகத்திலிருந்து தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி
நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே, ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தையடைந்தவர் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை,”

அந்த மறுபிறவியில்லா உலகிற்குச் செல்வதே வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும், இதை மேலும் பற்பல இடங்களில் பகவத் கீதை எடுத்துரைக்கிறது.

இதே கருத்தினை திருவள்ளுவரும் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”

இறைவனுடைய திருவடிகளைப் அடைந்தவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும், மற்றவர்களால் அதனைக் கடக்க முடியாது.” (திருக்குறள் 10)

பிறனில் விழையாமை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்களுக்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.” (திருக்குறள் 148)

புலால் மறுத்தல்

துறவறவியலில், அருளுடைமையின் பின் இந்த அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

தன் உடம்பைப் பெருக்குவதற்காக மற்றோர் உயிரின் உடம்பைத் திண்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?” (திருக்குறள் 251)

சூது

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

சூது, உள்ள பொருளை அழித்து பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.” (திருக்குறள் 938)

கள்ளுண்ணாமை

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்

கள் (மது) அருந்துதல் கூடாது, சான்றோரிடம் நற்பெயர் பெற விரும்பாதவர் வேண்டுமானால் கள்ளை அருந்தலாம்.”(திருக்குறள் 922)

சான்றோர் என்பவர் அன்பு, நாணம், கண்ணோட்டம் (அருள்), ஒப்புரவு (உலக ஒழுக்கம்), வாய்மை ஆகிய ஐந்தையும்
தாங்கியவர் என்று சான்றாண்மை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்.

பேச்சின் தவங்கள்

அனுத்வேக-கரம் வாக்யம்ஸத்யம் ப்ரிய-ஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸனம் சைவவாங்-மயம் தப உச்யதே

உண்மையான பேச்சு, இனிமையான பேச்சு, நன்மையளிக்கும் பேச்சு, பிறரது மனதை துன்புறுத்தாத பேச்சு,
வேத இலக்கியங்களை முறையாக உச்சரித்தல் ஆகியவை பேச்சின் தவங்களாகும்.” (பகவத் கீதை 17.15)

இதே போன்ற கருத்தினை வள்ளுவர் தமது குறளில் பின்வருமாறு விளக்குகிறார்:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.” (திருக்குறள் 97)

மனதின் தவங்கள்

ஆன்மீக முன்னேற்றத்திற்கு மனதின் பங்கு முக்கியமானது என்பதை வள்ளுவர், சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து

மனதின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.” (திருக்குறள் 459)

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் (உடல்) என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள்
எல்லாம் அவருடைய பெருமையை உணர்ந்து தொழும்.” (திருக்குறள் 268)

தவத்தின் முக்கியத்துவம்

தவத்தின் முக்கியத்துவத்தை பகவத் கீதை (2.58) கூறுகிறது, ஆமை தன் உறுப்புக்களைக் கூட்டிற்குள் இழுத்துக்கொள்வதைப் போல,
புலன்களை அவற்றின் நோக்கப் பொருட்களிலிருந்து விலக்கிக்கொள்பவனே உண்மையான அறிவில் நிலைபெற்றவன்.”

இதனை வள்ளுவரும் உணர்த்துகிறார்:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பிறப்பில் ஆமையைப் போல ஐந்து பொறிகளையும் அடக்கி வாழ்ந்தால், அஃது அவனுக்கு
ஏழு பிறவிக்கும் சிறந்த பாதுகாப்பாக அமையும்.” (திருக்குறள் 126)

இத்தகைய தவங்களின் மகிமைகளை வள்ளுவர் மேலும் உணர்த்துகிறார்:

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவார். அவர் அல்லாத மற்றவர் பொருள் ஆசை வலையில்
அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.” (திருக்குறள் 266)

ஸ்ரீமத் பாகவதம் (12.3.51) கூறுகின்றது.

கலேர் தோஷ நிதே ராஜன்
அஸ்தி ஹ்யேகோ மஹான் குண:
கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய
முக்த ஸங்க: பரம் வ்ரஜேத்

கிருஷ்ணருடைய நாமத்தையும் புகழையும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்று,
யோகத்தில் பூரணத்துவம் அடைவதால், அவர்களுக்கு பிறப்பு இறப்பென்னும் துன்பம் அகன்று விடுகிறது.
ப்ருஹன்-நாரதீய புராணத்தில் கூறப்பட்டுள்ளது, கலி யுகத்தில் மக்கள் குறைந்த ஆயுளை உடையவர்கள்,
ஆன்மீகத்தில் மந்தம் இருக்கும், எப்பொழுதும் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு துன்புறுபவர்களாக இருப்பார்கள்.
ஆதலின், இவற்றிற்கு நிவாரணம், ஹரியின் திருநாமத்தைச் சொல்வதுதான்.”

ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ
நாஸ்த்யேவ கதிர் அன்யதா

ஹரி நாம ஸங்கீர்த்தனம் செய்ய எளிய மந்திரம்:

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

இறைவனுடைய திருப்புகழைப் பாடுவதுகுறித்து வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவனுடைய மெய்மை சேர்ந்த புகழைச் சொல்லிக் கொண்டிருப்பவனிடத்து,
அறியாமையாகிய இருளைச் சேர்க்கின்ற இருவகை வினையும் சேராது.” (திருக்குறள் 5)

அதாவது, ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் நாம் ஈடுபட்டால், நல்வினை, தீவினை என்னும் இரு வினைகளிலிருந்தும்
நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த இருவகையான வினைகளே அறியாமை என்னும் ஜட வாழ்வினை நமக்குக் கொடுக்கின்றன.

———

திருவாய்மொழிப் பேருரையான ஈட்டில் திருக்குறளே பேரளவாக இடம்பெறுகிறது.
ஐந்து இடங்களில் முழுக்குறளையும் காட்டுகிறார். 6 இடங்களில் திருக்குறள் தொடர்களை மேற்கோளாக எடுக்கிறார்;
ஓரிடத்தில் குறட்சொல்லை ஏற்கிறார். ஈரிடங்களில் குறளை உரைநடைப்படுத்தியாளுகிறார் என்கிறார்.

நம்பிள்ளை திருவிருத்தத்தில் ‘இறையருள் வாய்க்கப் பெற்றதும் ’பிறப்பற்றுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகை’ என்று
நிலை ஏற்பட்டது என்பதை விளக்குகிறார். இது திருக்குறள் 345 உடன் அப்படியே ஒத்துப் போகிறது.

திருவள்ளுவர் 542ல் இப்படி சொல்லுகிறார்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய
செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். இதே கருத்தைக் குலசேகர ஆழ்வார் இப்படிச் சொல்லுகிறார்

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே

மீன்கள் நீர்வளம் சூழ்ந்த இடத்தைப் பார்ப்பதுபோலே, திருவித்துவக்கோட்டு பெருமானே என்மீது நீ அருள் செய்தாலும்,
செய்யாவிட்டாலும், உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறு ஒருவரைச் சரணம் புகமாட்டேன்.
மோசமான அரசனாக இருந்தாலும் அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழ்கிற குடி மக்கள்போல நான் உன்னையே சரணடைந்து இருப்பேன்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய பாசுரங்களுக்கு ‘திருமாலை’ என்று பெயர்.
வடமொழியில் அமைந்த விஷ்ணு தர்மம் என்ற நூலில் சாரம் திருமாலை என்று கூறுவர்.
அதனால் தான் ‘திருமாலையறியாதவன் பெருமாளையறியாதவன்’ என்பார்கள்.
நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்த இந்த ஆழ்வார் பூமாலை மட்டும் இல்லை சொல்மாலையையும் அவனுக்குச் சூட்டினார்.

பெரியாழ்வாரின் ‘மாதவத்தோன்’ என்று தொடங்கும் திருமொழியை ’திருவரங்கத் தமிழ்மாலை’ என்பார்கள்.

கோதை தன் திருப்பாவையை ‘சங்கத் தமிழ்மாலை’ என்று கூறுகிறாள்..

திருக்கோனேரி தாஸ்யை என்பவள், திருவாய்மொழிக்கு இயற்றிய நூலுக்கு ‘திருவாய்மொழி வாசகமாலை’ என்று பெயர் சூட்டினாள்.

இதே போல பின்பழகிய பெருமாள் ஜீயர் வார்த்தா மாலை என்று அளித்துள்ளார்.

ஸ்ரீவேதாந்த தேசிகன் ஆழ்வர் பாசுரங்களை ‘செய்யதமிழ் மாலைகள் நாம்தெளியவோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே’ என்கிறார்.

திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக அமைந்த நூலின் பெயர் ‘நுண்பொருள் வாசகமாலை’ பல வைணவ நூல்கள் மாலை என்ற பெயர் கொண்டவையே.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திரு வள்ளுவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading