ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் வைபவம் –ஸ்ரீ சுஜாதா தேசிகன்–ஸ்வாமிகள்

ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும்
ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள்.
இயர் பெயர் ஸ்ரீ கிருஷ்ணன் என்று இருந்தால் பெரும்பாலும் அழைக்கும் பெயர் ஆச்சான்-ஆயத்தான் என்று இருக்கும்.
பெரிய ஆய்த்தான் பிள்ளை என்பதை தான் நாம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்கிறோம்.

———-

ஸ்ரீ எம்பெருமானார் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபதிகளில் ’ஆஸூரிப் பெருமாள்’ ஒருவர்.
இவர் ஸ்ரீராமானுஜரின் ஹாரீத வம்சம். இவருடைய வம்சத்தில் அவதரித்தவர் ஸ்ரீஸாநுதாஸர் என்ற தேவராஜன்.
இவரே ’திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்’ என்று பெயர் பெற்றார்.
செல்லப்பிள்ளை ‘நம் ஆய்(தாய்)’ எங்கே?’ என்று கேட்க ’ஆய்’ என்றும் ’ஜனந்யாச்சாரியார்’ என்றும் திருநாமம் உண்டாயிற்று.
(ஜனனி என்ற சொல்லிற்கு “பெற்றவள்” என்று பொருள் அதுவே ’ஜனந்யாச்சாரியார்’ ஆகியது).
திருநாராயணபுரத்தில் அவதரித்ததால் ’திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்’ என்று அழைக்கப்பட்டார்.
எதிராஜர் தம் திருக்கையாலே திருவாராதனம் செய்த எதிராஜ சம்பத் குமாரனான செல்வப்பிள்ளைக்கு
யசோதை போலப் பாலமுதும், பெரியாழ்வார் ஆண்டாள் போல மாலைக் கட்டி புஷ்ப கைங்கரியமும் செய்து வந்தார்.

ஐப்பசி பூராடம் ஆயி ஸ்வாமி திருநட்சத்திரம்.

ஆயிடம் மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதயகாலசேஷம் கேட்டு மனம் உகந்து, நன்றியாக அவருக்கு ஒரு தனியன் அருளினார்.
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஆசாரிய ஹ்ருதயத்தின் அர்த்தங்களை எல்லாம் அருளியவராய் ஸ்ரீஸாநுதாஸர், தேவராஜர் என்ற
திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்தாயை ஆச்ரயிக்கிறேன்.

இதைக் கேட்ட ஆயி ஸ்வாமி அதில் தமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறி
மாமுனிகளின் பெருமைகளை ஒரு பாசுரமாக அருளிச் செய்தார்.

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ?
பூங்கமழும் தாதாருமகிழ்மார்பன் தானிவனோ?
தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

திருநாராயணபுரத்தில் ஸ்ரீமணவாள மாமுனிகள் சந்நிதியில் ஆயியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தான் அவர் எழுந்தருளியிருந்தார்.
ஆயியின் திருவரசு திருநாராயண புரத்தில் கல்யாணி புஷ்கரணி அருகில் யோக நரசிம்மர் கோயிலுக்குப் போகும் வழியில் இருக்கிறது.
மேல்கோட்டையில் கொல்ல இடையர்கள், மைசூரில் உள்ளப் பதினெட்டு ஜாதி மக்கள், பல கிராமங்களில்
அறுபது குலங்களைச் சேர்ந்த சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஆயி வம்சப் பரம்பரை சிஷ்யர்கள்.

————-

நம்பிள்ளை என்றவுடன் நமக்குக் கூடவே நினைவுக்கு வருவது ‘ஈடு’ என்ற வார்த்தை தான்.
’ஈடு’ என்ற வார்த்தை எதனுடனாவது சேர்ந்து தான் வரும்.
உதாரணம் – காப்பீடு, குறியிடு, முறையீடு, முதலீடு, தலையீடு, வெளியீடு, இழப்பீடு.
நம்பிள்ளை ’ஈடு’ பகவத் விஷயமான திருவாய்மொழியுடன் எப்போதும் சேர்ந்தே வரும்.
ஈடு என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கிறது.
திருவாய்மொழிக்கு ஈடான உரை அதனால் ஈடு;
திருவாய்மொழியில் நம்மாழ்வார் ஈடு என்ற வார்த்தையைக் கவசம் என்ற பொருளில் உபயோகிக்கிறார்
அதனால் திருவாய்மொழிக்குக் கவசம் போன்றது என்பது இன்னொன்று விளக்கம்
கடைசியில் பெருமாளிடத்து நம்மை ஈடுபடச் செய்வது அதற்கு ‘ஈடு’
எது எப்படியோ, நம்பிள்ளை ஈட்டுக்கு ’ஈடு இணையில்லை’ !

———–

சிந்தனைக்கினியான்(விக்ரகம்) ஸ்ரீராமானுஜர் காலத்தில் திருக்குறுங்குடியிலிருந்து
திருவாலி-திருநகரியில் எழுந்தருளப்பட்டு, சிந்தனைக்கினியானின் திருவாரதனத்திற்கு நந்தவனமாக இருந்த பகுதி
இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

——-

பிரமாணம், பிரமேயம் பிரமாதா !
பிரமாணம் என்றால் ஆதாரம். பிரமாணப் பத்திரம் என்கிறோம் அது தான் ஆதாரம்.
அதில் சொல்லப்பட்ட இடமோ பொருளோ உங்கள் சொத்து என்பதற்கு இது ஆதாரம்.
பெருமாள் என்ற சொத்தை அறிந்து கொள்ள ஆதாரம் எது? வேதங்கள், ஆழ்வார் அருளிச்செயல்கள், ஸ்ரீபாஷ்யம் முதலானவை.
பிரமேயம் என்றால் சொல்லப்படும் பொருள். அதாவது சொத்து. மற்ற அவதாரங்களில் நாம் அவருக்குச் சொத்து
ஆனால் அர்ச்சாவதாரத்தில் அவர் நம் சொத்து.
பிரமாதா என்பவர் அந்த ஆதாரம் கொண்டு பொருளை அளந்தறிபவன் – பதிவாளர் ( registrar ) என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நமக்கு நம் சொத்தை ஆதாரம் கொண்டு காட்டிக்கொடுப்பவர்கள் ஆசாரியர்கள்.
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார், ஸ்ரீ வேதாந்த தேசிகன் – பிரமாதாக்கள் !
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் பிரமேயத்தைக் காத்துக் கொடுத்தார்;
ஸ்ரீ வேதாந்த தேசிகன் பிரமாணத்தைக் காத்துக் கொடுத்தார்;

———-

‘எம்பெருமானார் தரிசனம்’ என்று நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்த தரிசனத்தை உலகெங்கும்
பரவிட 74 சிம்மாசனாதிபதிகளை ஏற்படுத்தினார் ஸ்ரீராமானுஜர். அதில் ’திருக்கோவலூர் ஆழ்வான்’ ஸ்வாமிகள் ஒருவர்.
’சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்’ என்று பொய்கையாழ்வார் அருளியபடி
திருக்கோவலூர் சந்நிதி மற்றும் தர்சன நிர்வாகங்களைச் செய்து, பக்தி சிரத்தையுடன் ஆசாரிய பீடமாக விளங்கினார்.

திருக்கோவலூர் திருக்கோயிலில் உள்ளக் கல்வெட்டு இக்கோயிலை நிர்வாகம் செய்து வந்த திருக்கோவலூர் ஆழ்வான்
திருமாளிகை மடத்தைச் சேர்ந்த அடியார்களுக்கு உணவு அளிக்க ஒரு வேலி நிலம் விலைக்கு வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
பிறகு நடந்த சமய கலவரத்தில் பல மடங்கள் இடிக்கப்பட்டன. அதில் திருக்கோவலூர் மடமும் ஒன்று.
அந்தக் காலத்தில் அங்கே வசித்து வந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள் என்ற தகவலும் கல்வெட்டில் இருக்கிறது.

பிறகு திருவரங்கத்தில் பெரும் புகழுடன் விளங்கிய ஸ்ரீ வேத வியாச பட்டரை எழுந்தருளிச் செய்து,
சமயவாதிகளை வாதத்தில் வென்று, கோயிலை மீட்டு அவர் நிர்வாகத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கு நன்றியாகத் திருக்கோவலூர் வைணவர்களும், கோயில் பணியாளர்களும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை
ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் பெருமாளுக்கு வழிபாடு நடத்தவும், மாலை அணிவிக்கவும் பூந்தோட்டத்தை நிர்வகிக்கவும்
வழங்கினார்கள் என்று மற்றொரு ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

சில காலம் கழித்து அந்நாட்டை ஆண்ட சோழ மன்னன் சைவ மதத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு திருவிக்ரமப் பெருமாளின்
சந்நிதியை அபகரித்துக் கர்ப்பக் கிரஹத்தைக் கற்சுவரால் அடைத்தபோது பட்டர் பெரும் துயருற்று உண்ணாது உறங்காது தளர்வுற்று இருந்தார்.

ஒரு நாள் இரவு அவருக்குத் உலகளந்த பெருமாள் கனவில் தோன்றி ‘வருத்தம் வேண்டாம். ஜீயர் அவதரிக்கப் போகின்றார்.
அவரால் இத்தலம் மீண்டும் மேன்மை பெரும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.
பட்டரும் சந்தோஷத்துடன் திருவரங்கம் அடைந்து அரங்கனை மங்களாசாசனம் செய்து ஜீயருடைய திரு அவதாரத்தை எதிர் நோக்கி இருந்தார்.

திருவேங்கடத்தில் வடக்கே முல்குதிர் என்ற ஒரு கிராமத்தில் ‘கொண்டான் ஐய்யங்கார்’ தம்பதிக்குப் பிறந்த
ஆண் குழந்தைக்கு இராமானுஜன் என்று திருநாமம் சாற்றினார்கள்.
ஆசாரியரிடம் பயின்று வந்த இராமானுஜன் ஒரு நாள் நடுப்பகலில் சூரிய வெப்பம் அதிகமாக இருந்ததால்
ஆசாரியர் திருமாளிகைக்கு அடுத்த இல்லத்தின் இடைகழியில் கொஞ்சம் அயர்ந்துவிட்டார்.
பழைய இல்லம் ஆதலால் அதன் கூறை இடுக்கு வழியாகச் சூரிய ஒளி அவர் முகத்தில் பட
அதை ஒரு பாம்பு படம் எடுத்துத் தடுத்துக் கொண்டிருந்தது.

நெடுநேரமாகியும் இராமானுஜர் காலக்ஷேபம் வராமல் இருக்க ஆசாரியர் சீடர்களை அவரைத் தேடப் பணித்தார்.
சீடர்கள் தாங்கள் கண்ட ஆச்சரியத்தை ஆசாரியரிடம் சொல்ல ஆசாரியர் நேரில் சென்று பார்த்து வியப்புற்றார்.
திருப்பதி ஜீயர் திருநாடு அலங்கரிக்க, இவரை ஜீயராக நியமித்தார்கள்.

ஜீயரான சில வருடங்கள் கழித்து, இவர் கனவில் எம்பெருமான் தோன்றி திருக்கோவலூரை மீட்க வேண்டும் என்று நியமிக்க,
இவர் சைவர்களிடம் வாதாடி வென்றார். ஆனால் அவர்கள் அதற்கு இணங்காமல் இவரைக் கொதிக்கும்
சுண்ணாம்பு காளவாயில் இறங்க வேண்டும் என்று கூற, ஜீயரும் அதில் இறங்க
அது ‘குளிர் அருவி வேங்கடமாக’ அவரை ஒன்றும் செய்யவில்லை.
ஜீயர் பெருமையை உணர்ந்து, கற்திரையை திறந்தால்
திருவிக்கிரமன் காட்சியளிக்க அங்கே இருந்த விளக்கு எரிந்துகொண்டு இருந்தது!.

இவர் வம்சத்தவர் தான் இன்றும் ’எம்பெருமானார் ஜீயர்’ மடாதிபதிகளாக திருக்கோவலூர் கோயிலை நிர்வகிக்கிறார்கள்.

———

ஸ்ரீ ஏக நாதர் அவர்கள் அபங்கம் ஒன்றின் பொருள் இது:

“அணுவிலிருந்து பிரபஞ்சம் வரை நிறைந்துள்ளவனை நான் கண்டது ஒரு செங்கல் மீது ! பண்டரீயில் !
வேதங்களும் புராணங்களும் யாரைப் புகழ்ந்து பாடுகின்றனவே அவன் புண்டலீகனின் பின்புறம் காட்சியளிக்கிறான்.
யாரை அறிய முடியவில்லை என்று ஸ்ருதிகள் செல்கின்றனவோ அவன் எளிமையாக சந்திரபாகா நதிக்கரையில் விட்டலனாக நிற்கிறான்”

’விட்’ என்றால் மராத்திய மொழியில் செங்கல் என்று பொருள். ’விட்டலன்’ பெயர் காரணம் இது தான்.

இந்தக் காலத்தில் வைகுண்டத்தைவிட்டு நமக்காகச் செங்கல் மீது 28 யுகங்களாக இடுப்பில் கை வைத்துக் கொண்டு
காத்துக் கொண்டு இருக்கும் விட்டலன் தான் எத்தனை எளிமையானவன் !

நாமதேவரின் ஒரு அபங்கம் “நவ்ஹே மாஜே காஹீ நேணோ துஜவிண” என்பதற்கு அர்த்தம்
“எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையும் தெரியாது. நான் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும்
உன் திருப் பாதங்களை எனக்குக் காண்பித்து அருள்வாயாக”
இதையே ஆண்டாள் “எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்* உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்கிறாள்

————

சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில் வரும்
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி என்ற பாடலில்

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே

————

பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாக போற்றப்படுகிறது..
ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து,
புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.
புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.

உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பது தான்.
ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3 x 4 அளவில் 752 மண் அடுப்புகள் கொண்டது.

விரகு, மண் சட்டி பானைகள், எந்த விதமான யந்திரமோ உலோகமோ கிடையாது !
கிணற்றிலிருந்து நீரை இராட்டினம் இல்லாமல் கயிற்றால் 30 பேர் இடைவிடாமல் இழுத்துக் கொட்டுகிறார்கள்.
முழுவதும் ஈக்கோ ஃபிரண்டிலி! மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற காய்கறிகள் உபயோகிப்பதில்லை.

சுமார் 400 பேர் உணவைச் சமைக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக இன்னொரு 400 பேர் வேலை செய்கிறார்கள்.
இதைத் தவிர . காய்கறி திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளார்கள்.
தினமும் 7200 கிலோ பிரசாதம் தயாரிக்கிறார்கள். விஷேச நாட்களில் 9200 கிலோ!.
எப்போது சென்றாலும் 1000 பேர் சுலபமாக உணவு அருந்தலாம்.

எல்லாப் பிரசாதமும் பானையில் ஏறப்பட்டு மூங்கில் கம்புகளில் கட்டி சுமந்து சென்று பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது !
இதற்கு மட்டும் 60 பேர் வேலை செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் செய்யப்படுகிறது.
9 சித்ரான்னம், 14 வகை கறியமுது, 9 வகை பால் பாயசம், 11 வகை இனிப்பு. 13 வகை திருப்பணியாரங்கள்..

புரியில் பிரசாதத்தை உண்ண சில முறைகள் இருக்கிறது. பிரசாதத்தைப் பூமியில் அமர்ந்து தான் உண்ண வேண்டும்.
மேசை நாற்காலி கூடாது. விநியோகம் செய்ய கரண்டி முதலானவற்றை உபயோகப்படுத்தக்கூடாது.
உடைந்த சட்டிப்பானை சில்லு, அல்லது இலையை மடித்து வைத்துத் தான் பரிமாறுவார்கள்.

சாப்பிடும் போது ஜகன்ந்நாதரை நினைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்த பின் வாய் கொப்பளிக்கும் போது
முதல் வாய் தண்ணீரை துப்பாமல் விழுங்க வேண்டும். சாப்பிட்ட இடத்தை கைகளால் தான் சுத்தம் செய்ய வேண்டும்.
அந்த ஊரில் கல்யாணம், விழா என்றால் தனியாக சமையல் கிடையாது இங்கே தான் சாப்பாடு.

புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம்.
இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்‌ஷிக்கிறான்.
கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள்.
தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும்.
ஜகந்நாதரின் விமானக் கோபுரத்தின் உயரம் 214 அடி.
அதன் மீது நீலச் சக்கரம் என்று பெயர் பெற்ற சுதர்சனச் சக்கரம் எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது. 36 அடி சுற்றளவு,
அதன் மீது சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கொடிகள் தினமும் ஆற்றப்படுகிறது.
கருட சேவகர்கள் என்று அழைக்கப்படும் கைங்கரியம் செய்பவர்கள் இதைப் பரம்பரையாக செய்து வருகிறார்கள்.
சுமார் 15 நிமிடத்தில் இந்தக் கோபுரத்தை ஏறிவிடுவார்கள். பத்து நிமிடத்தில் கொடிகளை மாற்றி விடுவார்கள்.
என்ன விதமான சூறாவளி அடித்தாலும் கொடி கட்டப்படும். எட்டு வயதிலிருந்து பயிற்சி கொடுக்கப்படுகிறது.

—————-

ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஆண்டாள் மன்மதனை உபாசிக்கவில்லை, அவள் உபாசித்தது காமன் என்ற
வடிவத்தில் உள்ளக் கண்ணனை. அவன் பெயர் மதனகோபாலன்.

மதுரை கூடலழகர் சந்நிதிக்கு பக்கம் மதனகோபாலின் சந்நிதி இன்றும் இருக்கிறது.
வராக புராணத்தில் கண்ணனை அடைய வேண்டும் என்று விரும்பிய கோபிகைகளுக்கு நாரதர் மதனகோபாலனை உபாசிக்க சொல்லி
ஒரு வழிப்பாட்டைச் சொல்லிக் கொடுத்தார். கண்ணனைப் பெறக் கண்ணனே வழியாக மதனகோபாலனை வழிபட்டார்கள்.
மதன கோபாலனை வழிபட்டால் வேண்டிய பலனை உடனே கொடுத்து விடுவான் என்ற ஆசையினால் கோபியரைப் போல
ஆண்டாளும் மதன கோபாலனை மன்மதனாக எண்ணி வழிபடுகிறாள் என்றும் ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளம்.

———

மாறனேரி நம்பியின் தொழில் உழுவது. ஒரு நாள் இவர் உழுதுகொண்டு இருக்கும் போது இவருக்குப் பசித்தது.
கீழே இருந்த வயல் மண்ணை எடுத்து அதை நீரில் அலசி அலசி அம்மண்ணை உண்டார். அந்த வழியே
வந்த ஆளவந்தார் இவருடைய இந்தச் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தன் சிஷ்யர்களுடன் அவரிடம் சென்று “ஐயா நீங்கள் செய்யும் செயல் எங்களுக்குப் புரியவில்லையே!
சேற்றில் நின்று கொண்டு சேற்றை உண்ணுகிறீர்களே!” என்றார்.
மாறனேரி நம்பி “சாமி ! மண்ணுக்கு மண்ணை இடுகிறேன்!” என்று பதில் கூறினார்.

இதைக் கேட்ட ஆளவந்தார் இவருடைய ஞானத்தை வியந்து
“இவர் நம் மாறன் குருகூர் நம்பிக்கு ( சடகோபன் ) நிகரானவர்!” என்று இவருக்கு
மாறனுக்கு நிகரான நம்பி ( மாறனேர் நம்பி ) என்று பெயர் சூட்டி “நீர் என்னுடன் வாரும்!” என்றார்.
மாறனேரி நம்பி “தான் தாழ்ந்த குலம், ஒரு சண்டாளன்!” என்றார்.
அதற்கு ஆளவந்தார் “பெருமாள் நினைப்பில் இருக்கும் உன்னைப் போல ஒருவனுக்கு குல பேதம் எதுவும் கிடையாது!” என்று அழைத்தார்.
உடனே மாறனேரி நம்பி தன் தொழிலையும், ஏர்க்கலப்பையும், மாடுகளையும், வீட்டையும், உற்றார் உறவினர்களையும் விட்டு விட்டுக் கிளம்பினார்.

ஆளவந்தார் அவருக்குச் சங்கு சக்கர இலச்சினைகளைத் தோளில் பொறித்துத் தாழ்ந்த குலத்தவரான அவரை ’தொண்டர்குலம்’
என்ற உயர்ந்த வைணவ குலத்தில் சேர்த்துக்கொண்டார்.
ஆளவந்தாருடன் அவர் திருவரங்கத்தில் கோயில் பிராகாரத்திலேயே வாசம் செய்யத் தொடங்கினார்.
ஆளவந்தார் படித்துறை பக்கம் ஒரு சின்ன குடில் அமைத்து இரவு அங்கே உறங்குவார்.
குடிலில் ஆளவந்தாரைப் போல மண்ணில் ஒரு விக்ரகம் செய்து அதைத் தினமும் பூஜித்து வந்தார்.
பகல் வேளையில் ஆளவந்தாரின் காலட்சேப நல் உபதேசங்களைக் கேட்டுக்கொண்டு வந்தார்.
மாறனேரி நம்பி வந்த பிறகு ஆளவந்தார் காலட்சேபம் சொல்லும் போது உரத்த குரலில் தொண்டை புண்படும்படி
காலட்சேபம் செய்ய ஆரம்பித்தார். அருகில் இருந்த சிஷ்யர்கள் “நீங்கள் இப்படிச் சத்தமாகச் சொன்னால் உங்கள் தொண்டை புண்படுமே.
மெதுவாகப் பேசினாலே எங்களுக்குக் கேட்டும். ஏன் கஷ்டப்படுகிறீர்கள் ?” என்றார்கள்.
அதற்கு ஆளவந்தார் “நம் மாறனேரி நம்பி வெளியே நின்று கொண்டு இருக்கிறானே!” என்றார்.

தான் ஒரு தாழ்ந்த குலம் என்பதால் மாறனேரி நம்பி மற்றவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து கேட்க மாட்டார்.
வாசல் கதவுக்கு வெளியே நின்றுகொண்டு தான் கேட்பார்.

நாளடைவில் பலர் ஆளவந்தார் காலட்சேபங்களைக் கேட்ட தொடங்கினார்கள். காலட்சேபக் கூடம் நிரம்பி வழிந்தது.
இடம் போதவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு மூதாட்டியின் வீட்டைச் சேர்த்தால் பெரிதாக இருக்கும் என்று எண்ணினார்கள்.
அவளிடம் அந்த வீட்டைக் கேட்டுப் பெற்றார்கள். ஆளவந்தாரின் காலட்சேபக் கூடம் விரிவு படுத்தப்பட்டது.
ஆளவந்தார் ஒரு நல்ல நாள் பார்த்து புண்யாவசனம் செய்து புதுமனை புகுவிழா நடத்திட முடிவு செய்தார்கள்.
அவ்வேளையில் மாறனேரி நம்பி அங்கே இருந்த கட்டுமான பணியாளரிடம் “நாளை இங்கே புண்யாவாசனம்.
அந்தச் சடங்கிற்கு முன் இந்தக் கூடத்தை நான் பார்க்க விரும்புகிறேன்! புண்யாவாசனம் செய்த பிறகு
என் தடங்களால் இந்த இடத்தை அசுத்தம் செய்ய விரும்பவில்லை” என்றார்.
அந்தப் பணியாளரும் மாறனேரி நம்பியைக் கூடத்துக்குள் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார்.
மாறனேரி நம்பியும் மகிழ்ச்சியுடன் திரும்பினார்.
ஆளவந்தார் “மாறனேரி நம்பி காலடிப் பட்ட இடத்துக்கு புண்யாவாசனம் எதற்கு ? மாறனேரி நம்பியே ஒரு புனிதன்.
நம்பி காலடி பட்ட இடம் புனிதம் அடைந்து பிறகு மீண்டும் ஏன் புண்யாவாசனம் செய்ய வேண்டும் ?” என்றார்.
புண்யாவாசனச் சடங்குகள் நிறுத்தப்பட்டு, இப்போதே காலட்சேபத்தை ஆரம்பிக்கலாம். எல்லோரும் கூடத்தில் சென்று அமருங்கள் என்றார் ஆளவந்தார்.

காலப்போக்கில் ஆளவந்தாருக்கு இராஜ பிளவை என்ற நோய் பிடித்தது. அந்த நோயால் அவர் மிகுந்த அவதிப்பட்டார்.
முன் பிறவிகளின் வினைகளால் அவருக்கு வந்திருக்கும் நோயால் அவர் வாடுவதை அறிந்த சீடர்கள் வேதனையுடன் கண்ணீர் வடித்தனர்.
அப்போது மாறனேரி நம்பி ஆளவந்தாரை வணங்கி ”நீங்கள் எனக்கு பிரசாதம் வழங்க வேண்டும் !” என்றார்.
ஆளவந்தார் “என்ன பிரசாதம் வேண்டும்?” என்று கேட்க அதற்கு மாறனேரி நம்பி “உங்களுடைய இராஜ பிளவை நோயை
ஆசாரிய பிரசாதமாக வழங்க வேண்டும்!” என்றார். ஆளவந்தாரும் அருகில் இருந்த சீடர்களும் வெலவெலத்துப் போனார்கள்.
“இப்படியும் ஒரு சீடரா ?” என்று வியந்தார்கள்.

ஆளவந்தார் “மாறனேரி நம்பி இந்நோய் மிகக் கடுமையானது. கொடூரமானது. தாங்கிக்கொள்ள முடியாது!” என்றார்.
ஆனால் மாறனேரி நம்பி பிடிவாதமாக ”எனக்கு இதுவே மகா பிரசாதம் தாங்கிக்கொள்வேன்!” என்றார்.
ஆளவந்தாரும் “தந்தேன்!” என்று கூற மாறனேரி நம்பியை அந்த நோய் மெல்லப் பற்றிக்கொண்டது.

ஆளவந்தாரை விட்டு நோய் நீங்கினாலும், அவர் நாளடைவில் வயதின் காரணமாகத் தளர்ச்சி ஏற்பட்டு
கடைசி நாளை நெருங்கும் சமயம் “மாறனேரி நம்பி என் அபினான சிஷ்யன். அவன் என் நோயால் அவதிப்படுகிறான்.
என்னை எப்படிக் கவனித்துக்கொள்வீர்களோ அது போல அவனைக் கவனித்து பணிவிடை செய்ய வேண்டும்” என்று
வேண்டுகோள் விடுத்து பரமபதம் எய்தினார்.
(இந்தச் சமயத்தில் தான் இளையாழ்வார் என்ற ராமானுஜர் அங்கே வந்து ஆளவந்தாருக்குப் பிறகு வைஷ்ணவ ஆசாரிய பீடத்தை அலங்கரித்தார்)

மாறனேரி நம்பி தனியாக நோயில் வாடினார். தம் இல்லத்தில் அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் உடலில்
வலு இழந்து சமையல் செய்துகொண்டு இருந்த சமயம் ஒரு நாள் பெரிய நம்பிகள் அங்கே சென்றார்.
இவர் படும் கஷ்டங்களைக் கண்டு மிகவும் மன வேதனை அடைந்தர்.
”இதுவே குரு பக்தி! “ என்று ஸ்தாபித்து மாறனேரி நம்பியின் காலடியில் விழுந்தார்.

மாறனேரி நம்பி “நானோ தாழ்ந்த குலம்! ஆனால் நீங்களோ பிராமணக் குலம் இப்படிச் செய்யலாமா ?
எனக்கு அபசாரம் வருமே!” என்றார். பெரிய நம்பி “அப்படியில்லை! உங்கள் குருபக்தி எனக்கும் வரவேண்டும்!
என்று பிராத்திக்கிறேன்!” என்றார்.

அன்றுமுதல் மாறனேரி நம்பியைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பெரிய நம்பிகள் ஏற்றுக்கொண்டார்.
தினமும் அவர் தங்கியிருக்கும் குடிலுக்குச் சென்று மாறனேரி நம்பியைக் குளிக்கச் செய்து, ஆடைகள் உடுத்தி,
பன்னிரு திருநாமங்கள் சாத்தி, இல்லத்திலிருந்து கொண்டு வந்த உணவை அவருக்கு அளித்து வந்தார்.
இதே போல இரவும் அவருக்கு உணவு எடுத்துச் சென்று உணவு உண்ட பின் மாறனேரி நம்பியைப் படுக்கையில் படுக்க வைப்பார்.

ஒரு நாள் ராமானுஜர் பெரிய நம்பி தினமும் உணவுடன் எங்கே போகிறார், இரவுப் பொழுதில் தன் ஆசாரியனுக்கு
ஏதாவது தீங்கு நேரப் போகிறது என்ற பயத்தில் அவரை பின் தொடர்ந்தார்.
அங்கே அவர் கண்ட காட்சி அவரை மெய்சிலிர்க்க வைத்தது.
பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு எல்லா உபகாரங்களையும் செய்து, உணவு அளித்தார்.

ராமானுஜர் இந்தக் காட்சியைக் கண்டு கண்கலங்கினார். தம் குருவான பெரிய நம்பி அவருடைய குருவான ஆளவந்தாரின்
திருவடிகளைத் தியானித்து திருவரங்கனை நோக்கி “மாறனேரி நம்பிக்கு இந்த நோயின் வலியைப் போக்க வேண்டும்!”
என்று வேண்டிக்கொண்ட உடனே மாறனேரி நம்பியிடம் இருந்த நோய் மறைந்து விலகியது.

மாறனேரி நம்பி ஆச்சரியம் அடைந்து “பெரிய நம்பியே! மகா பிரசாதம் நீங்கிப் போய்விட்டது.
நீங்கள் கைங்கரியம் செய்வதால் அந்தப் பிரசாதத்தை அனுபவிக்கும் பாக்கியத்தை இழந்தேன்.
தாழ்ந்த குலத்தில் பிறந்த நான் என்ன அபராதம் செய்தேன்!” என்று புலம்பியவாறு கண்ணீர் விட்டபடி,
அருகில் இருக்கும் கல்லின் மீது தன் தலையை மோதப் போகும் போது,
மறைந்து இருந்த ராமானுஜர் “இதற்குக் காரணம் நான் தான்!” என்று கூறி உள்ளே நுழைந்தார்.
தான் ஆசாரியர்கள், பெரிய பெருமாளிடம் வேண்டிக்கொண்டதைக் கூறினார்.
மாறனேரி நம்பி வருத்தப்படுவதைக் கண்டு மீண்டும் ராமானுஜர் பெருமாளைப் பிராத்தனை செய்தவுடன்
மாறனேரி நம்பிக்கு அந்நோய் மீண்டும் வந்தது. கண்ணிழந்தவன் கண் பெற்றது போல மாறனேரி நம்பி ஆனந்தப்பட்டார்.

ஒரு நாள் பெரிய நம்பிகள் “மாறனேரி நம்பியே! இன்றிலிருந்து மூன்றாம் நாள் நீர் ஆளவந்தாரின் திருவடியை அடைவீர்” என்றார்.
அப்போது மாறனேரி நம்பி ”இந்தத் தேகம் ஆளவந்தார் சங்கு சக்கரம் சாற்றிய தேகம். அவருடைய மகா பிரசாதத்தை
ஏற்றுக்கொண்ட தேகம். அதனால் என்னுடைய இந்த உடலை வைணவர்கள் அல்லாத எனது உறவினர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள்” என்று
பெரியநம்பிகளிடம் வேண்டிக்கொண்டார். பெரிய நம்பிகள் “கவலைப் படாதீர் நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்றார்.

மாறனேரி நம்பி தன் குடிலில் இருக்கும் மண்ணால் ஆன ஆளவந்தாரைத் தியானித்தபடியே ஆசாரியன் திருவடியை அடைந்தார்.

“ஒரு பறவையைக் காட்டிலும் ராமர் எவ்வளவு பெரியவன் அப்படி இருக்க ராமர் செய்துள்ளார்!
நான் என்ன தர்மபுத்திரைகாட்டிலும் உயர்ந்தவனா ? அல்லது மாறனேரி நம்பி விதுரனைவிடத் தாழ்ந்தவனா ?
நான் என்ன ராமனைவிட உயர்ந்தவனா ? அல்லது மாறனேரி நம்பி ஜடாயுவை விடத் தாழ்ந்தவனா ?” என்றார்.

ஐந்து பாண்டவர்களில் மூத்தவனான தருமபுத்திரன் விதுரனுக்குச் செய்தார்.
தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் ராமர் அவர் ஜடாயுவிற்குச் செய்தார்.
ஆளவந்தாரின் மூன்று முக்கிய நம்பி என்ற பெயர் கொண்ட சிஷ்யர்கள் – பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி,
இந்த மூவரில் மூத்தவர் பெரிய நம்பி அவர் மாறனேரி நம்பிக்குச் செய்தார்!

ஸ்ரீ மாறனேர் நம்பியின் திருநட்சத்திரம் (ஆனி ஆயிலம் )

ஆனிதனில் ஆயிலியம்அவதரித்தான் வாழியே
ஆளவந்தார் திருவடிகள் ஆசிரயித்தோன் வாழியே
மாநிலம் எதிராசர் மனம் வாழ்வித்தோன் வாழியே
மதிளரங்கர் நகரமதில் வாழ்ந்தருள்வோன் வாழியே
தேனமரும் தென்மொழியின் சிறப்பறிந்தோன் வாழியே
திகழ்ஞான பத்திகளால் சேர்ந்திருப்போன் வாழியே
வானவரில் ஒருவரிங்கு மகிழ்ந்துவந்தோன் வாழியே
மாறனேரி நம்பியிணை மலரடிகள் வாழியே.

———–

ஈர் உலகைப் படைக்க எண்ணி இருந்தார் வந்தார்
எழில் மலரோன் தன்னை அன்றே ஈன்றார் வந்தார்
மாருதம் மண் நீர் ஆகும் மாயோர் வந்தார்
வானோடு எரி தாம் ஆகும் மறையோர் வந்தார்
சூரியர் தம்முடன் துலங்கு தூயோர் வந்தார்
சுரர்களுக்கு அன்று அமுது அருள் சுந்தரனார் வந்தார்
வாரிதி சூழ் வையகம் வாழ்வித்தார் வந்தார்
வண்மையுடன் வரம் தருவார் வந்தார்

அருமறையை ஊழி தனில் காத்தார் வந்தார்
அது தன்னை அன்று அயனுக்கு அளித்தார் வந்தார்
தரும வழி அழியாமல் காப்பார் வந்தார்
தாமரையாள் உடன் இலங்கும் தாதை வந்தார்
திரு உரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திரு அருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவலர்க்கு மயக்கு உரைக்கும் மாயோர் வந்தார்
வான் ஏற வழி தந்தார் வந்தார்

தாமே. அனைத்து உலகும் காக்கும் அருளாளர் வந்தார்
அனைத்துக்கும் அதிபதியாய் நிற்பார் வந்தார்
தினைத் தனையும் திருமகளை விடாதார் வந்தார்
தேசு ஒத்தார் மிக்காரும் இல்லார் வந்தார்
நினைக்க நமக்கு இன் அறிவு தந்தார் வந்தார்
நிலை நின்ற உயிர் தோன்ற நினைந்தார் வந்தார்
எனக்கு இவர் நான் இவர்க்கு என்ன இனியார் வந்தார்
எழுத்து ஒன்றில் திகழ நின்றார் வந்தார்

தாமே நாம் வணங்கத் தாம் இணங்கா நிற்பார் வந்தார்
நம்மை அடைக்கலம் கொள்ளும் நாதர் வந்தார்
நாம் எமக்கு ஆம் வழக்கு எல்லாம் அறுத்தார் வந்தார்
நமக்கு இது என்று உரையாமல் வைத்தார் வந்தார்
சேமம் எண்ணி எம்மை அன்பர்க்கு அடைத்தார் வந்தார்
செழும் தகவால் திண் சரண் ஆம் ஈசர் வந்தார்
தாம் அனைத்தும் தீவினையைத் தவிர்ப்பார் வந்தார்
தமக்கேயாய் எமைக் கொள்வார் வந்தார் தாமே

உலகு எல்லாம் உள்ளே வைத்து உமிழ்ந்தார் வந்தார்
உலகு உடம்பாய்த் தாம் உயிராய் நின்றார் வந்தார்
அலைகடலாய் ஆனந்தம் அடைந்தார் வந்தார்
அளவு இல்லா அருள் ஆழிப் பெருமாள் வந்தார்
திலகம் எனும் திருமேனிச் செல்வர் வந்தார்
செழும் குணங்கள் இருமூன்று உடையார் வந்தார்
இலகு சுடர் முழு நலம் ஆம் இனியார் வந்தார்
எல்லார்க்கும் கதி ஆனார் வந்தார் தாமே

அருளாலே விலங்கு இரண்டும் அழிப்பார் வந்தார்
அம் சிறையைக் கழித்து அருளும் அன்பர் வந்தார்
மருள் வாரா வகை நம்மைக் காப்பார் வந்தார்
வான் ஏற வழி நடத்தி வைப்பார் வந்தார்
தெருள் ஆரும் தெளி விசும்பு தருவார் வந்தார்
திண் கழல் கீழ் வாழ நமக்கு அருள்வார் வந்தார்
பெரு வானில் அடிமை நமைக் கொள்வார் வந்தார்
பிரியாமல் காத்து அளிப்பார் வந்தார் தாமே

அகலகிலாத் திருமகளார் அன்பர் வந்தார்
அடி இரண்டும் ஆறு ஆகத் தந்தார் வந்தார்
புகல் இல்லார் புகல் ஆகும் புனிதர் வந்தார்
பொன் உலகில் திரு உடனே திகழ்வார் வந்தார்
அகிலம் எலாம் ஆனந்தம் ஆனார் வந்தார்
அடி இணைக் கீழ் வைத்து அடிமை கொள்வார் வந்தார்
பகல் நடுவே இரவு அழைக்க வல்லார் வந்தார்
பகல் ஒன்றாய் இரவு அழித்தார் வந்தார் தாமே

தருமன் விடத் தாம் தூது போனார் வந்தார்
தரணி பொறாத் திண் பாரம் தவிர்த்தார் வந்தார்
அருமறையின் பொருள் அனைத்தும் விரித்தார் வந்தார்
அஞ்சின நீ என்னை அடை என்றார் வந்தார்
தருமம் எலாம் தாம் ஆகி நிற்பார் வந்தார்
தாமே நம் வினை அனைத்தும் தவிர்ப்பார் வந்தார்
பரம் எனது நீ புலம்பல் என்றார் வந்தார்
பார்த்தனுக்குத் தேர் ஊர்ந்தார் வந்தார் தாமே

வஞ்சனை செய் பூதனையை மாய்த்தார் வந்தார்
மல்லர் மதகரி மாள மலைந்தார் வந்தார்
கஞ்சனைப் போர் கடும் சினத்தால் கடிந்தார் வந்தார்
கண் நுதல் முன் வாணன் தோள் கழித்தார் வந்தார்
வெம் சொல் தர வீடு கொடுத்து உகந்தார் வந்தார்
விலக்கு இல்லா வழி நடத்த விரைந்தார் வந்தார்
பஞ்சவரைப் பல வகையும் காத்தார் வந்தார்
பாஞ்சாலி குழல் முடித்தார் வந்தார் தாமே

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்
மூலம் என ஓலம் இட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே

மறைத்தலையில் இசை எழுத்தில் வணங்கும் வாக்கில்
மந்திரத்தில் நாலு எழுத்தாம் திருநாமத்தில்
நிறைத்து இலகு வேற்றுமையில் இரண்டாம் ஒன்றில்
நெடுமால் தன் கீதை எலாம் நிறைந்த சொல்லில்
உறைத்தவர் கண்டு உரைத்த பொருள் ஆன எல்லாம்
உயர் விரத அருளாளப் பெருமாள் தேசின்
திறத்தில் இயை திருச்சின்னமாலை பத்தும்
செவிக்கு இனிது ஆம் சிற்றின்பம் இசையாதார்க்கே–‘திரு சின்ன மாலை’ ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியது.
இதற்கு எந்த அகராதியும் தேவை இல்லை !

வரதராஜப் பெருமாள் புறப்பாட்டின் போது இரண்டு திருச்சின்னம் ஊதுவது வழக்கம்,
ஆனால் காஞ்சியில் ஒன்று தான். காஞ்சியில் இந்தத் திருச்சின்னம் ஊதும்போது ஸ்ரீதேசிகனுக்கு
வரதனின் அழகு கண்ணில் தோன்றி திருச்சின்ன மாலை என்று ஒன்றை அருளினார்.
அதைச் செவியுற்ற வரதன், எனக்கு ஒரு திருச் சின்னம் போதும்,
இன்னொன்று தேசிகன் அருளியது இருக்கிறதே என்று சொன்னாராம்.

———

பெருமாளுக்கு ’ஆயிரம்’ திருநாமங்கள்!
திருவாய்மொழியில் ’ஆயிரம்’ ஒட்டிக்கொண்டு இருக்கிறது!
கண்ணிநுண் சிறுத்தாம்பில் ஆயிரம் இருக்கிறது!
நாதமுனிகள் பன்னிரண்டாயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு சேவித்த போது அதில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது !
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற வார்த்தையிலும் ஆயிரம் இருக்கிறது!

——–

“’பால் குடத்தை நோக்கிப் படை யெடுக்கும் எறும்புகளாய்
தோல் குடத்தைத் தொத்த வந்த தீவிர வியாதி யெலாம்
மால் படுத்த அரங்கன் மணி வண்ணன் பேர் சொல்ல
வால் சுருட்டிக் கொள்ளுமாமே பெருமாளே சரி தானே’- க்ரேசி மோகன் எழுதிச் சுஜாதாவிற்கு அனுப்பியது, விகடனில் வந்தது

——–

‘உயர்வு அற உயர் நலம் உடையவனாகிய’ ’ திருமகள் கேள்வனாகிய நாராயணனே அறப்பெரிய முதல்வன் முழுமுதல் (இறை நிலை);
‘மூவுலகுக்கும் நாயகன் தன் அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்’ என்று
ஆன்மாவிற்குச் சொரூபம் அடியேன் என்பதே (உயிர் நிலை);
‘அலர் மேல் மங்கை உறை மார்பா புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று
சரணாகதியே இறைவனைப் பெறுதற்குரிய வழி (தக்க நெறி);
‘பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்’ ஆகிய இவையே விரோதிகள்(தடை);
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதுவே’ குறிக்கோள் என்னும் பேற்றுநிலை-(வாழ்வு).

———–

சீரார்ந்த திருவரங்கம் பெரிய கோயில்
சிறந்த பிரணவமான திருவரங்கா
தாரார்ந்த திருவரங்கச் செல்வி புன்னைத்
திருசந்திர புட்கரிணி தகுந்தென் வாசல்
ஓரார்ந்த வீடணர் கொண்டிட்ட பொட்டத்
தகுந்த ஆனந்த சயனத்தில் இலங்கு சோதி
காரார்ந்த திருவுருவும் கமலக் கண்கள்
கண்டு அனு தினம் உள்ளத்தில் கருதுவேனே– திருப்பதிக்கோவை – (7)

————–

இவருடைய அறிவும் ஆற்றலும் கூரத்தாழ்வனுக்கு நிகராக இருப்பதைக் கண்ட உடையவர் பூரிப்புடன் “எங்கள் ஆழ்வானோ?” என்று
விளிக்க விஷ்ணுசித்தர் ”எங்கள் ஆழ்வான்” ஆனார். எங்கள் ஆழ்வான் உடையவரை விட 80 வயது சிறியவர் ( காலம் 1069-1169 )
உடையவர் இவரை திருகுருகைப்பிரான் பிள்ளானிடம் அனுப்பி அவரையே ஆசாரியராகக் கொள்ள செய்தார்.
“எங்கள் ஆழ்வானை” ”அம்மாள் ஆசாரியன்” என்றும் அழைப்பர்
ஸ்ரீராமானுஜர் நியமித்த முக்கியமான ஆசாரியர் நடாதூர் ஆழ்வான், இவருடைய பேரன் நடாதூர் அம்மாள்.

—————

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு–நம் கோதைக்கு ஆண்டாள் என்று சூட்டிய உய்யக்கொண்டார்–சித்திரை – கார்த்திகை–
நாதமுனிகளின் நேர் சிஷ்யர் உய்யக்கொண்டார் இவருடைய இயற்பெயர் புண்டரீகாக்ஷர் -உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்).
திருமங்கை ஆழ்வார் “தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்” என்கிறார்.
நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களிலேயே மூழ்கி நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து, அவருடைய பெருந்தன்மையை
“இந்த வையம் உய்யக்கொண்டீரோ?” என்றார். இதனால் அவருக்கு உய்யக்கொண்டார் என்ற பெயர்

பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின்-மீது ஓடிப் பெருகு காலம்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போய் இருக்க மற்று இங்கு ஓர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ- மாட்டாத தகவு அற்றீரே?

———-

“திவ்யப் பிர’பந்தம்’” என்ற வார்த்தையின் உள்ளே ‘பந்தம்’ அடங்கியிருக்கிறது. அந்தப் பந்தம் திவ்வியமாக இருக்கிறது.
கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல ’ஊர் எனப்படுவது உறையூர்’ என்பது சொல்வழக்கு.
உறையூர் நாச்சியார் பங்குனி ஆயில்யம். இந்நாளில் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு
உறையூருக்கு எழுந்தருளி அழகிய மணவாளனாக கமலவல்லி தாயாருடன் சேர்த்தி கண்டருள்வார்.

———-

ஸ்ரீபிள்ளை உறங்கா வில்லி தாஸர் திருநட்சத்திரம் மாசி ஆயில்யம்.
மாசி ஆயில்யத்தில் உதித்த தனுர்தாஸர் வாழியே !
பாண்பெருமாள் கண்ட கண்ணுக்கு மயங்கியோன் வாழியே !
இளையபெருமாள் போல் துயிலாது சேவை செய்தோன் வாழியே !
பண்புடனே அடியார்களைப் போற்றியோன் வாழியே !
மதில் அரங்கர் வீதி உலாவிற்கு வாள் பிடித்தோன் வாழியே !
அன்புடனே எதிராசனுக்கு கை கொடுத்தான் வாழியே !
சங்கிலித்தொடர் சரணாகதி உணர்த்தியோன் வாழியே !
சடகோபன் பொன்னடியை பற்றிய பொற்பதங்கள் வாழியே !

————-

ஸ்ரீரங்கத்தில் முதல் குலோத்துங்கன் ஆட்சியில் ( 1070-1112 ) ஒரு கல்வெட்டு இப்படி இருக்கிறது
”ஐப்பசி தேர்த்திருநாளிலும் பங்குனித் திருநாளிலும் தீர்த்தம் பிரசாதிதருளின அன்று இரா,
திருப்புன்னைக்கீழ் [ ஸ்ரீரங்கநாத பெருமாள் ] எழுந்தருளியிருந்து ‘தேட்டருந்திறல்’ கேட்டருளும்போது” என்று கூறப்பட்டுள்ளது.

——-

பூந்தண்மலி (தண் – குளிர்ந்த, பூ – மலர்கள், மலி – நிறைந்த இடம்) என்ற பெயர்தான் பிற்காலத்தில்
பூவிருந்தவல்லி. பூந்தமல்லி அல்லது பூனமல்லி
முதல் பராந்தகன் (907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’ என்ற சொற்றொடர்
இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன.
இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும்,
சேரன் இரவிவர்மன் (1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது.
1009 ஆண்டு தோன்றிய திருக்கச்சி நம்பிகள் 91 ஆண்டுகள் வாழ்ந்ததாக குருபரம்பரையில் குறிப்புகள் இருக்கின்றன.
சௌம்ய வருஷம் மாசித் திங்கள் (ஆங்கில மாதம் பிப்ரவரி) மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் வைசிய குலத்தில் (செட்டியார்) பிறந்தார்.
தந்தை பெயர் வீரராகவச் செட்டியார், தாயார் கமலையார். இவர்களுக்கு திருக்கச்சி நம்பிகள் நான்காவது குழந்தை.
இவருக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் – திருவேங்கடவர், அருள்கூரப்பன், மலைகுனிய நின்றார் என்று மூன்று அண்ணன்கள்.
திருக்கச்சி நம்பிகள் கஜேந்த்ரதாஸர் என்று காஞ்சிப் பெருமாள் இவருக்கு கொடுத்த பெயர்.

நம்பிகள் திருக்கோட்டியூர் நம்பியிடம் அவர் மடத்து மாடுகளை மேய்க்கும் கைங்கர்யத்தை மாறுவேடமிட்டுச் செய்கிறார்.
ஒரு நாள் இதைக் கண்டுபிடித்த திருக்கோட்டியூர் நம்பி இவரை ‘நம் பையல்’ என்று தழுவிக்கொண்டார் என்று கதை.
இன்றும் திருக்கச்சி நம்பிகள் உற்சவர் அருகே சில மாடுகள் இருப்பதைக் காணலாம்.

ஸ்ரீரங்கம் கோயியில் இராமானுஜர் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்க உற்சவத்தின் போது
நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் பெருமாள்) அமுது செய்தருளியபின் (படைத்த பின்) ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்.
அப்போது திருக்கச்சி நம்பிகளுக்கு நைவேத்தியம் பண்ணிய அமுது பிறகு இராமானுஜருக்கு சமர்ப்பிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
[ ஸ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள் சன்னதி ஆலிநாடன் திருச்சுற்றில் கருட மண்டபத்திற்குக் கிழக்கே உள்ளது. ]

———–

ஸ்ரீராமானுஜர் அவதரித்த அதே வருடம் ( 1017 ) வைகாசிக் கேட்டையில் ஸ்ரீ ஆளவந்தாரின் புத்திரனாகத்
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் அவதரித்தார். ஆளவந்தார் இவரைத் தன் ஆசாரியன் ஸ்ரீ மணக்கால் நம்பியை ஆச்ரயிக்கச் செய்தார்.
ஸ்ரீரங்கம் வந்த ராமானுஜருக்கு ஆளவந்தார் நியமனப்படி அவருக்கு ஆழ்வார்களின் அருளிச்செயல் ரகசியங்களை அருளினார்.
ஸ்ரீ ராமானுஜர் இவரிடம் ஆறு மாதம் கைங்கரியம் செய்து அர்த்தங்களைப் பெற்றார்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ நம்பெருமாளிடம் மோட்சம் அளிக்க வேண்டும் என்று பிராத்தித்தார். பெருமாளும் “தந்தோம்” என்றார்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் தன் இல்லத்துக்குச் செல்லவில்லை. பரஸ்தானமாகத் ஸ்ரீ திருவரங்க பெருமாள் இல்லத்திலேயே தங்கினார்.
அதாவது மோட்சம் போகும் திசையில் இவருடைய இல்லம் இருந்தது என்பதை ஸ்ரீ ஆழ்வான் அறிந்திருந்தார்.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading