ஸ்ரீ பரகாலர் திரு வைபவ மாலை –ஸ்ரீமான் கண்ணபிரான் முதலியார் —

வள மலியும் கலி யுகத்தில் வாய்ந்த நள வருஷம்
மன்னு முயர் கார்த்திகையில் குரு வாரம் தன்னில்
கிளர் ஒளி சேர் பவுர்ணமியில் கிருத்திகை நக்ஷத்ரம்
கெழுமிய தோர் சுப தினத்தில் விழுமியர் கொண்டாடத்
தளர்வறு சீர் கள்ளர் குலம் தனை யாளும் கோமான்
சாந்த மிகு நீலன் எனும் தந்தை மகிழ்ந்து உடலம்
புளகமுறபி புவியில் வரும் பொரு வறு சார்ங்க அம்ச
பூதன் எனும் கலி கன்றீ புங்கவர் பெம்மானே –1-

ஆர் கலி சூழ் உலகு உய்ய அவதரித்த பெருமாள்
அமுத மொழிக் குமுத வலிக்கு அன்புடைய பெருமாள்
சீர் கொள் திரு மணக்கொல்லை சேர்ந்து உறையும் பெருமாள்
திரு அரசத் தரு நிழலில் சென்று அமரும் பெருமாள்
ஏர் கொள் வயலாலி மணவாளனைக் காண் பெருமாள்
எதிர்த்து அவன் நற் காலின் விரலைக் கடித்த பெருமாள்
பார் கொள் சுமை தூக்க அரிதாய்ப் பரிவடைந்த பெருமாள்
பங்கய நாபன் கருணைப் பரிசு பெறும் பெருமாள் –2-

வட்ட உலகங்கள் அருள் மந்திரம் கொள் பெருமாள்
வாசவன் ஈசன் பரவு மந்திரம் கொள் பெருமாள்
சிட்டர் பலர் முனிவர் எனும் மந்திரம் கொள் பெருமாள்
திரு வட்டாஷரம் எனும் மந்திரம் கொள் பெருமாள்
கட்டெழில் சேர் வயலாலி மணவாளப் பெருமாள்
கருணை புரிந்து உபதேசம் செய்ய மகிழ் பெருமாள்
இட்டமுடன் கலியன் எனத் திருப் பெயர் கொள் பெருமாள்
எமை யாள வந்துதித்த நாலு கவிப் பெருமாள் –3-

பேர் அழகால் நீலன் எனப் பேர் அடையும் பெருமாள்
பேச அரிய கலை கள் எல்லாம் பெற்று உணரும் பெருமாள்
ஸூரரனை வரும் நிதமும் தொழுது ஏத்தும் பெருமாள்
சோழ நிருபன் புகழத் தொழுது ஏத்தும் பெருமாள்
சீர் அணவும் திருவாளன் மா வூரும் பெருமாள்
திவ்ய தேசங்கள் வலம் செய்து வரும் பெருமாள்
தார் அணவும் தாடாளன் தயை கூறும் பெருமாள்
சம்பந்தன் கை வேலைத் தான் பறித்த பெருமாள் –4-

நேச மிகு நீரில் நடப்பான் நிழலில் மறைவான
நெருங்கிய தோலா வழக்கன் உயரத் தொங்கிடுவான்
ஏசறு தாளூதிடடுவான் சாயை பிடிப்பான் என்று
ஏற்றமுறு தோள் துணைவர் நால்வரையும் கொண்டான்
ஆசு மதுரத்துடன் விஸ்தாரம் அரும் சித்ரமாகும்
ஒரு நாற் கவியும் அணி பெறவே சொல்வான்
வீசு புகழ் சேனையர் கோன் மெல்லடி மேல் விடுவான்
வீறுறு சிந்தனைக்கு இனியான் மெய்யருள் சேர் பெருமான் –5-

கலியன் அருள் மாரி கலி கன்றி கலி த்வம்ஸன்
கவி லோக திவாகரன் நற் பரகாலன் நீலன்
நலனுறு ஷட் பிரபந்தக் கவி யாலி நாடன்
நாலு கவிப்பெருமாள் நா வீறுடைய பெருமாள்
வலி கொள் கலி வைரி யடையார் சீயம் வையம்
மதி யரட்ட முக்கி சதுஷ் கவி மங்கை மன்னன்
குலவு நறும் கொங்கு மலர்க் குழலியர் வேள் எனும்
கொற்ற வேலுற்ற திருமங்கை யாழ்வாரே — 6-

————-

நேரிசை வெண்பா

திருவாலி நாடன் திருக் கலியன் மால் பால்
ஒரு வாள் வலியோச்சி ஒண் மந்திரமாகும்
எட்டெழுத்தும் கொண்ட இணையில் பரகாலன்
கட்டழகில் ஆழும் என் கண் –1-

கண்ணார் கடல் வண்ணக் காரணனார் தான் களிக்கத்
திண்ணார் மணக்கொல்லை சேர்ந்து இருந்து
மண்ணார் இழி பிறவி நீங்க எதிர் உறுவார் தம்மை
வழி பறித்த வேல் வேந்தே வா –2-

வாடினேன் வாடி வருந்தினேன் என்று எடுத்துத்
தேடிப் பெரிய திருமொழியைப் பாடி
நெடு பிறவி நஞ்சுக்கு நீள் அமுதமாக
இடும் கருணையார்க்கு உண்டு இவண்–3-

வாழ்த்தும் மலர் வாயும் வாண் முகமும் வண் பொருட்காத்
தாழ்த்து வலச் செவியும் தார் மார்பும் ஆழ்த்தும் அருள்
கண்ணும் கலியன் கழல் காலும் கை வேலும்
எண்ணும் தினம் எனதுளமே –4-

ஆலி நாடு ஈதோ வரசீது ஈதோ சீர்
ஏலும் மணக்கொல்லை ஈதோ தான் நீலனார்
நே மாற்றும் மாலை நெருக்கியவன் எட்டு எழுத்தை
ஏமாற்றிப் பெற்ற இடம் –5-

———

அடியார்கள் ஈடுபாடு

எச்சரிக்கை –பராக் –ஸ்வாமி பராக்
தாரக போஷக போக்ய அநு குணாதி தேவா மோதா
தராதலோத் தாரணா வதாரா சார்ங்க அம்ச பூதா
ஸமான அதிக ரஹித ஸுந்தர அங்க விநோதா
ஸர்வ துன்மத கர்வ நிவாரணா நந்த போதா
ஸர்வ அபீஷ்ட பிரத உபாய தனி மந்த்ரம் எய்து நீ தா

சடகோப வாங்மய தமிழ் மறைக்கு அமுது என ஆறு அங்கம் உதவு மதீ தா
ஸுசீல நெடு வேல பரகால மிகு கோல தனி நீலனாம் ப்ரக்யாதா
தாதோடு வண்டலம்பும் தண் மங்கை நாதா தமிழ் சொலாம் ஸஹஸ்ர வேதா
நல்லிசைக் குமுத வல்லி சமேதா நற் குணாதீதா
நளின மலர்ப்பாதா நாரணனார் உடனாடிய விவாதா

ஏ மங்கை வேந்தே
கண்டல் வேலி மங்கை வேந்தே
காரார் புறவின் மங்கை வேந்தே
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தே
கலி கெழு மாட வீதி வயல் மங்கை வேந்தே

கொங்கு மலர்க குழலியர் வேள் மங்கை வேந்தே
வண்டு பாடும் பைம் புறவின் மங்கை வேந்தே
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தே
வல்லி பொதும்பில் குயில் கூவு மங்கை வேந்தே
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கை வேந்தே

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கை வேந்தே
புல மங்கைக் குல வேந்தே
மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கை வேந்தே
கற்றார் பரவும் மங்கை வேந்தே
பார் மலி மங்கை வேந்தே
சுரும்பார் பொழில் மங்கை வேந்தே

ஜய ஜய எச்சரிக்கை

ஸ்வாமீ -ஸ்ரீ யபதியால் தேவரீருக்கு இடப்பட்ட திரு நாமத்தை கலியன் என்கோ
கல்லின் மலி தோள் கலியன் என்கோ
கல்லின் மன்னு தோள் கலியன் என்கோ
கலங்கல் இல்லாப் புகழார் கலியன் என்கோ
கலையார் பனுவல் வல்ல கலியன் என்கோ

கறை வளரும் வேல் வல்ல கலியன் என்கோ
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை கலியன் என்கோ
காமக் கதிர் வேல் கலியன் என்கோ
கை இலங்கு வேல் கலியன் என்கோ
காய் சின வேல் கலியன் என்கோ

கூரார்ந்த வேல் கலியன் என்கோ
பார் அணிந்த தொல் புகழ்க் கலியன் என்கோ
கூர் கொள் நல்ல வேல் கலியன் என்கோ
மான வேல் கலியன் என்கோ
ஊனார் வேல் கலியன் என்கோ

ஏ மங்கையர் தலைவா
மன்னு மா மாட மங்கையர் தலைவா
கன்னி நன் மாட மங்கையர் தலைவா
மலை குலா மாட மங்கையர் தலைவா

கலி கன்றீ
வாள் கலி கன்றீ
கற்ற நூல் கலி கன்றீ
ஏந்து எழில் தோள் கலி கன்றீ
காமரு சீர்க் கலி கன்றீ
வடி கொள் நெடு வேல் வல்ல கலி கன்றீ
பராக் பராக் எச்சரிக்கை –

————

திருப் பாதாதி கேச வர்ணனம்

நாயந்தே
ஜய விஜயீ பவ
நாயந்தே

1-திருவடி
குளிர்ந்து மிளிர்ந்து
நீரில் பிறந்து கொழுத்துச் செழித்துத் தழைத்துப் பழுத்துக்
குண திசைச் சிகரத்து அணை தருகின்ற ஆதித்தியனுடைய சோதிக் கிரணத்தால் விகசித்து
சிவந்த இதழ்களை யுடைத்தாய்
உவமிக்கத் தன்னிலும் உயர்வாகக் கிடைப்பது வேறே ஓன்று இன்றி விளங்கி
நிறத்தில் பவளத்தையம் குவளை யாக்கத் தக்க
தேவரீரது திருப் பாத கமலங்களின் போக்ய அதிசயத்துக்கு ஓர் போலியாய் அமைந்துள்ள கந்தமே
யரவிந்தப் பூவை அதன் ஸர்வ கர்வ பங்க அர்த்தமாக
உமது இணைத் தாள்களின் கீழ் ஒதுக்கி
அதன் சிரஸ்ஸின் மீது வெற்றி குலவப் பற்றி நிலவும்
திருக் கழல் களின் அழகும்

2- திருப் பாத விரல்
விற்பனர் பரவும் அற்புதம் வாய்ந்த கற்பகப்பூவின் பொற்புறும் அரும்பினுடையவும்
ஈரம் நிறைந்த நீரில் உறைந்து துவளும் பவளக் கவினார் கொடியினுடையவும்
ஒருமித்த காந்தியை மாந்தி துதி யுறும் கதிரவன் விதி இளம் சுடரினை நிகர்த்து
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்தித் பதித்துத் தலை பெய்தால் போன்று
ஒத்திட்டுள்ள திருப்பாத விரல்களின் அழகும்

3-திருப் பாத திரு நகம்
அந்தியம் போதினில் அந்தரத்து இருந்து சுந்தரச் சுடர் தரும் சந்த்ரன்
வடிவில் சிறுத்தும் பெருத்தும் நிற்பதோடு
என்றும் ஒன்றானதன்றிப் பத்தாக இராமையாலும்
உவமைக்கு இவ்விரண்டிலும் சுதீரியது ஓன்று எளிதில் அகப்படாமையாலும்
இவற்றையே ஒருவாறு ஒத்து ஒளிரும் திருவடி விரல்களின் திரு நக அழகும்

4-திருப்புற வடிகள்
முழுது உலகத்தும் பழுதற நிலவத் தொழுதகையாளர் நூல் எழுது புத்தகத்தை
ஏய்ந்து செம்மை வாய்ந்து விளங்கும் புறவடியின் அழகும்

5-திருக் கணைக் கால்
வம்பர் தம்முயிரை யும்பர் நாட்டுய்த்து அவர் வெம்பு மெய்யதனைப் பம்புநாய்
நரிக்கிடும் அம்பறாத் துணியை ஒருவிதம் மருவிடும்
தீங்கு அணையாத பூங்கணைக் காலின் அழகும்

6-திருத்தொடை
உவரி சூழ் தரும் அவனி முழுமையும் தவறுறா வகை தாங்கி நிற்கும்
இசைக்கு உரித்தாகிய திசைக்கரி துதிக்கையை
விதியிலாது எதிர்த்து வதி தரும் செய்ய திருத்தொடை அழகும்

7-திரு உந்தி
வலம் சுழித்தோடு நீர்ப் பொலம் சுழி அதனையும்
புகழறா மணம் கமழ் மகிழ மா மலரையும்
சிறிது நேர் எனக் கருத இலங்கும் திரு உந்தி அழகும்

8-திரு மார்பு
பாரொடு வானும் பேரொலி யார்த்திதன் நேரிலை எனப் புகழ் சீரினைப் பெற்ற
மேரு மால் வரையும் என்னே என்னே என்னலாம் படி
நன்னயப் பொன்னணி மின்னிற்றுன்னப் பரந்து சிறந்து தெண் திரைப்பூமியாம் பெண்டு
நாண் கொண்டிட விளங்கும் திரு மார்பின் அழகும்

9-திருக் கரம்
செயிரிலாக் குண திசை ஐரா வதத்தின் அந்த மிகுந்த தந்த நடுவில் தங்கி
மாண்பொடு தொங்கி நெடும் கரத்துடன் போரிட்டுப் பொலிவுற்றுக்
கெழு முறு முழம் தாளின் கீழும் நீண்டு ஒளிர்ந்து
மாமேகம் என்பதைக் காட்டுவது போல்
நெஞ்சுக்குச் சரியாகச் சிறிது சாய்த்து அஞ்சலித்த திருக்கையின் அழகும்

10-திருக் கை நகங்கள்
சிந்தா வளனுறு செந்தாமரைப் பூவின் பக்குவ மொக்குகளை ஓக்கினும் ஒக்கும் என்று
இக் குவலயம் தொழும் திருக்கை விரலின் திரு நக அழகும்

11-திருப்புயம்
மிகை மிக முந்தப் புகை விழி யுந்த வகை வகை பந்தத் தொகை கொடு வந்த பகைவர்களின் வலி சிந்த
நகை புரிந்து அவர் தம் சொந்த உயிர் தனைத் தந்த வீரம் பொருந்தி
அத்துணை உயர்ச்சியும் அமை தரு திரட்சியும் தனக்கு இன்மையால்
விரிந்து ஓங்குகின்ற பொன் மலையும் ஈடு அன்று என மனம் சரிந்து
ஓங்கிக் குன்றப் பொலிந்து உருண்டு திரண்டு விளங்கும் திருப்புய அழகும்

12-திருக்கண்டம்
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து போய்
ஊழி யான் கைத்தலத் திடரில் குடியேறித் தீய அசுரர் நடலைப் பட முழங்கும்
தோற்றத்து ஏற்றம் வாய்ந்த ஸ்ரீ பாஞ்ச சன் யாழ்வான் இருக்கப்
பிறிது ஒரு சங்கும் தெரி தரும் கமுகும் சரியென முன் வரச்
சரி தரும் பொலிவினை யுடைய திருக்கண்டத்தின் அழகும்

13-திரு முகம்
கூம்பிய ஆம்பலும் சோம்பற மேம்படத் தெளி விட்ட ஒளி வட்டம் சூழ்ந்து
தறை இருள் நீக்கும் நிறை கதிர் மதியும்
கறை யுண்டு கரும் பாம்பால் குறை யுண்டு சிறிது நாள் வளர்வுண்டு சிறிது நாள் தளர்வுண்டு
நின்றமையாலே தாழ்ச்சி எய்த
மாட்சி எய்தி அப்பொழுது அலர்ந்த அரவிந்தத்தையும் எப்படி ஒக்கும் என்று எவரும் இசைக்க நிவர்ந்து
எதிர் யுறுவோரை மயலில் இருத்தும் பேர் அருள் பொழியும் திரு முக அழகும் –

14-திருச்செவி
அலை யுறும் புலை மனம் நிலை பெறும் வலை எனச் சுருண்டு உருண்டு நீண்டு மநோ கரமாய்
விதி சிவாதியர் எவரும் துதி கொளாதி மறை ஒரு நான்கும் உணர்தற்கு அரிய
உணர்வு எனும் பெரும் பதப்பொருளைப்
பேர் அறிவு ஐந்தையும் ஓர் அறிவாக்கி யுணர்ந்து கொண்ட பெரு மிதத் திருச்செவி அழகும்

15-திருவாய்
சீருண்ட நீருண்டு நிவந்து நிவந்தாலும் பன்னுலகு அனைத்தையும் தன்னகப் படுத்தும்
மன்னமுதூறும் இன்னுரை இயம்பும் பேர் ஆற்றலும்
சரி செயும் தந்த வரிசையோடு அந்த வெள்ளென வெளுத்த ஒள்ளிய திரு முறுவலும்
தான் எய்தப் பெறாமையால் மா மலரான தாமரையே தலை நாணுமாயின்
நிவரும் பவளமோ நேர் எனப் போரிட வல்லது என்று பொலிந்து நின்ற திருவாயின் அழகும்

16-திரு மந்தஸ்மிதம்
அண்டி வரும் தொண்டக் குழாங்களை அன்புடன் நோக்கும் ஆனந்த விளைவால்
அர்ச்சாவதார நிலையை அதிக்ரமித்து விம்மி வெளி விழும் அவ்யக்த மதுர மந்த ஹாஸத்தின் அழகும்

17-திருக் கபோலம்
துளங்கும் பளிங்கு மண்டலங்கள் இரண்டைத் துகளறக் கடைந்து
துலக்கித் துடைத்துச் சேர்த்து வைத்தது போலே
பள பள என்று ஒளிரும் திருக் கபோல அழகும்

18-திரு மூக்கு
பண்பொடு தொங்கும் சண்பக மலர் என முனை மலர்ந்து உயர்ந்து அடி மிக ஒடுங்கி
உபய துவார சோபிதமாய் நிலவி
இந்த்ர நீலக் கொழுந்தையும் மரகதச் சோதியையும் புறக்கணி நிறத்ததோ இது எனக் கருதி
ப்ராந்தி ஏந்தி ஓந்தியானது இந்த்ரகோபத்தின் மேலே தாவி மேவி
நீண்டு வந்து நிமிர்ந்து இருக்கிற தோற்றத்தையும் மாற்றத் தக்க ஏற்றம் பெற்ற
கோல நீள் கொடி மூக்கின் அழகும்

19-திருப்புருவம்
குன்று எடுத்து ஆயர் மாதர் குரவை கொண்டு
ஒரு விளாவில் கன்று எடுத்து எறிந்து
வெய்ய காளியற்கு இரு தாள் நல்கிய
கோவலர் சேவகனார் நன்று எடுத்த
வைதேகியார் தம் மன்று எடுத்து ஒடித்த வில்லும்
வழியில் நின்று எடுத்து ஒசித்த வில்லும்
கம்சன் விழாவில் சென்று எடுத்து இறுத்த வில்லும்
சதுரர்கள் புகழும் விதுரன் கை வில்லும்
கனஞ்செறிந்துள்ள தனஞ்சயன் வில்லும்
பெரு வலி பெற்ற வுரு விலி வில்லும்
புல்லெனச் சொல்லும் வல்லமை ஆர்ந்து
அல் ஒக்கும் நிறத்தவளது வயிரக் குன்றக் கல் ஒக்கும்
நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று
கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயதும்
வைதவையின் மராமரம் ஏழும் தொளை எய்தச் செய்ததும்
மற்றும் பற்பல கொற்ற வசடரை முற்றும் செற்று உயர் வெற்றி உற்றதும்
வெள்ளெருக்க மலர் முடியான் வெற்பு எடுத்த திரள் தோளின் மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ எனும்படி
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியைக் கடும் சிறையில் வைத்த காதலானது
இராவணனுடைய உள்ளிருக்கும் எனக்கருதி அவன் உடல் பிளந்து தடவியதுமான
சுடு சாரம் கொண்ட நெடிய கோதண்டத்தை ஒன்றி நின்ற
திருப்புருவத்து அழகும் –

20-திரு நெற்றி
மறுவும் வெருவும் பொலிவும் நலிவும் பிறப்பும் இறப்பும் இன்றிக்கே
என்றும் ஒரு தன்மையதாய் நிலவெறிக்கும் இஷ்டமிக்குதவும் அஷ்டமிப்பிறை ஓன்று இருந்தால்
அதனைப் பொருந்தா நின்று
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரும் நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல் ஆகிய
ஆழியான் அளவினாமம் நெய் சுடர் விளக்கில் என்றப் பெற்று விளங்கும்
திரு நெற்றி அழகும்

21- திரு முடி
நீண்டு குழன்று நெய் திரண்டு நெறிந்து செறிந்து
நெடு நீலம் பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு
புகையும் நறும் பூவும் வேண்டும் அல்ல எனத் தெய்வ வெறியே கமழும்
திருச்சிகையோடு பொன்னு மணியும் பொழிந்து ஓங்கி மின்னி
மலர்ந்து உயர்ந்த திருமுடி அழகும்

சம்பூர்ணமாக அறிந்து ஏத்த
வென்றியே வேண்டி வீழ் பொருளுக்கு இரங்கி வேல் கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடைய அடியோங்கள் அறியோம் அறியோம்
தேவரீர் நித்தியமான இந்த ஸுந்தர்யத்துடன் நீடூழி வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே
ஜய விஜயீ பவ

—————–

பங்குனி உத்திர இரவில்.ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 35வது திவ்ய தேசம் திருவாலி – திருநகரி.

இது இரண்டும் ஐந்து கிலோ மீட்டர் இடைவெளியில் இருந்தாலும்,
ஒரே திவ்யதேசமாகவே கருதப்படும் ஆழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்து, ஞானம் கொடுத்து ,
மாற்றமும் தந்த அற்புத நிகழ்வு இந்தத் தலத்தில்தான் நடைபெற்றது.
குலசேகர ஆழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடியிருக்கும் இத்தலம் மிக சிறப்பு வாய்ந்தது.
ஆதி காலத்தில் பில்வாரண்யம், ஸ்ரீபூரி, ஆலிங்கனபுரி என்றெல்லாம் பெயர்.
மூலவருக்கு வேதராஜன், வயலாலி மணவாளன் என்று பெயர்.வீற்றிந்த கோலத்தில் காட்சி தருவார்.

உற்சவருக்கு கல்யாண ரங்கநாதப் பெருமாள் என்று பெயர். தாயாருக்கு அமிர்தவல்லி என்ற திருநாமம்.

திருமங்கையாழ்வார் தம்முடைய கடைசிக் காலத்தில் திருக்குறுங்குடியில் இருந்தார்.
அப்போது தம்மைப் போலவே தங்கத்தினால் ஒரு சிலையை வடிக்கச் செய்து,
அதன் எதிரில் தான் நின்று கொண்டு, ‘‘வா” என்று அழைத்தார்.
அந்த சிலையும் திருமங்கையாழ்வார் அருகில் நடந்து வந்தது. அதனை ஆழ்வார் கட்டித் தழுவினார்.
ஆழ்வாரின் சக்தி முழுக்க அந்த சிலையில் இறங்கியது. பிறகு ஆழ்வார் பரம பதம் அடைந்தார்.
அந்த உற்சவமூர்த்தி தான் இன்றைக்கும் நாம் திருநகரியில் தரிசிக்கிறோம்.

ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்சன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி சிகாமணி, ஷட் பிரபந்தக் கவி,
கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன்,
ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன்,
கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்கள் உண்டு.

பிரஜாபதிக்கு மோட்சம் பெருமாள் கொடுக்கவில்லை. இது நடந்தது முதல் யுகமான கிருதயுகத்தில்.

அடுத்த திரேதாயுகத்தில் அந்த பிரஜாபதி உபரிசரவசு என்கிற மன்னனாகப் பிறந்தான்.
ஞானத்தைத் தேடி இந்தத் தலத்திற்கு தன்னுடைய புஷ்பக விமானத்தில் வந்தான்.
இத்தலத்தில் பறக்க முயன்றபொழுது அந்த விமானமானது மேற்கொண்டு பறக்காமல் நின்று விட்டது.
எனவே இத்தலத்தில் ஏதோ ஒரு புண்ணியம் இருக்கிறது என்று நினைத்து இறங்கி பெருமாளை நோக்கி மறுபடியும் தவம் செய்தான்..

இந்த யுகத்திலும் அவனுக்கு வீடுபேறு கிடைக்காததால், அடுத்த யுகமான துவாபர யுகத்தில்
சங்கபாலன் என்ற பெயரில், ஒரு மன்னனுக்கு மந்திரியாக இருந்தான் . அப்பொழுதும் தவம் செய்தான்.
பெருமாள் சொன்னார்.“உனக்கு அடுத்த பிறவி ஒன்று உண்டு. நீ கலியுகத்தில் இதே இடத்தில் பிறப்பாய்.
அப்பொழுது நாம் உமக்கு திருமந்திர உபதேசம் செய்து மோட்சம் தருவோம். உம்மால் இந்த உலகம் நன்மை அடையும்” என்று சொன்னார் .

அதைப் போலவே கலியுகத்தில் நீலன் என்கிற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாகப் பிறந்தார்.
திருவெள்ளக் குளம் என்கிற தலத்தில் அவதரித்த குமுதவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்ய விரும்பினார்.
ஆனால் குமுதவல்லி நாச்சியார், ‘‘ஓராண்டுக்கு தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு உணவு படைத்து வணங்கினால்,
உங்களுக்கு மனைவியாவேன்” என்கிற நிபந்தனை விதித்தார்.

நிபந்தனையை ஏற்றுக்கொண்ட நீலன், தன்னிடம் இருக்கின்ற பணத்தைக் கொண்டு,
வைணவர்களுக்கு உணவு படைக்கும் உத்தமமான தொண்டை நடத்திவந்தார்.
தினம் ஆயிரம் பேருக்கு உணவு படைக்கும் தொண்டைச் செய்ததால் கைப்பணம் கரைந்தது.
சோழ மன்னனுக்குச் செலுத்த வேண்டிய திறைப் பணத்தையும் செலவிட்டார். அப்பொழுதும் இந்த நிபந்தனை நிறைவேறவில்லை.

இனி பொருள் ஈட்ட வழி இல்லாத நிலையில், தனவந்தர்களிடம் பொருளைக் கவர்ந்து, நல்ல காரியத்திற்குப் பயன்படுத்த வேண்டும்
என்கிற உறுதிகொண்டு, வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்.
ஏற்கனவே இவருக்கு வீடுபேறு தரவில்லை என்று வருந்திய மகாலட்சுமித் தாயார், இந்த பிறவியிலாவது அவசியம்
திருமந்திர உபதேசம் செய்து மோட்சம் தர வேண்டும் என்று சொல்ல, அதனை ஏற்றுக் கொண்ட பெருமாள்,
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருவாலியில் திருமணத்தை முடித்துக் கொண்டு,
தம்பதியாக தம்மை மாற்றிக்கொண்டு, திருநகரிக்குச் செல்லும் வழியில் வேதராஜபுரம் என்ற இடத்தில் தங்கினார்.

அடுத்த நாள் அடியார்களுக்கு உணவளிக்க பொருள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த திருமங்கை ஆழ்வார்,
தம்முடைய பரிவாரத்தோடு, திருமணத் தம்பதியரின் நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்.
உடனே தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரையில் புறப்பட்டார். திருநகரிக்குத் திரும்பிக் கொண்டிருந்த தெய்வத் தம்பதியரை,
இரவு நேரத்தில் வழிமறித்தார்.தன்னுடைய வாளைக் காட்டி அவர்களைப் பயமுறுத்தி, நகைகளை எல்லாம் கொள்ளை அடித்தார்.

கடைசியில் எம்பெருமான் காலில் அணிந்திருந்த மெட்டியை அவரால் கழற்ற முடியவில்லை.
அதை விட்டுவிட்டுச் செல்வதா என்று நினைத்த நீலன், தன்னுடைய வலிமையான பற்களால் அந்த மெட்டியைக் கடித்து இழுத்தார்.
பாதத்தின் தொடுவுணர்ச்சி பரவசம் தந்தது. எம்பெருமான் புன்னகை பூத்தார். அவருடைய வலது செவியில் திருமந்திரத்தை ஓதினார்.

இந்த எட்டு எழுத்து மந்திரம் காதிலே விழுந்ததும், அதுவரை இருந்த உலகியல் சிந்தனைகள் எல்லாம் மறைந்தன.
நீலன் என்பவர் மறைந்தார். இப்போது புதியதாக ஒருவர் பிறந்தார். ஆழ்வாராக மாறினார்.
அவருடைய திரு நாவிலிருந்து பெரிய திருமொழி பாசுரத்தின் முதல் பாசுரம் வீறு கொண்டு எழுந்தது.திருமந்திரத்தின் சுருக்கம் பிரணவம்.

அதில் மூன்று எழுத்துக்கள் உண்டு. அ, உ, ம என்கிற மூன்று எழுத்துக்களின் தொகுப்பு தான் இந்த உற்சவத்தில் நடைபெறுகிறது.
அதில் “அ” என்கிற எழுத்து கல்யாண ரங்கநாதரைக் குறிக்கும்.
“உ” என்ற எழுத்து அந்த கல்யாண ரங்கநாதரின் பக்கத்தில் இருக்கக்கூடிய மகாலட்சுமியான தாயாரைக் குறிக்கும்.
‘‘ம’’ என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய திருமங்கையாழ்வாரைக் குறிக்கும்.

இந்த மூன்று அட்சரச் சேர்க்கைதான் பங்குனி உத்திர இரவிலே நடக்கிறது.அ, உ, ம -இவை மூன்றும் இணைந்தது
தான் “ஓம்” என்கிற ப்ரணவ சப்தம். அந்த சப்தத்தின் விரிவுதான் எட் டெழுத்து மந்திரம்.
அந்த எட்டெழுத்து மந்திரத்தின் விரிவுதான் இரண்டாவது மந்திரமாகிய த்வய மகா மந்திரம்.
அந்த மந்திரத்தின் விரிவானது சரம ஸ்லோகம். இவை மூன்றின் விரிவுதான் சகல உபநிடதங்கள் .
அந்த உபநிடதங்களின் விரிவுதான் சகல வேதங்கள்.

அதனால் தான் மணவாள மாமுனிகள், இந்த இடத்தில் நடந்த அந்த அதிசயத்தை சொல்லுகின்ற பொழுது,
தேவர்களின் ராஜாவான வேதராஜன்,
மந்திரங்களின் ராஜாவான திரு எட்டெழுத்து மந்திரத்தை,
அரசர்களின் அரசனான திருமங்கை ஆழ்வாருக்கு, மரங்களுக்கு
அரசனான ஒரு அரசமரத்தடியில், உபதேசித்தார் என்பதால்
இந்த தலத்திற்கு வேதராஜபுரம் என்று வியந்து பாடுகிறார்.

ஈதோ திருவரசு!
ஈதோ மணங்கொல்லைஈதோ எழிலாலி என்னுமூர் –
ஈதோதான்வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்எட்டெழுத்தும் பெற்ற இடம்.

இந்த நிகழ்ச்சிதான் திரு வேடுபறி உற்சவமாக, ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில்,
இரவு 12 மணியளவில் இத்தலத்தில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் அந்த உற்சவத்தைக் காண்கின்றனர்.

சாதாரண மனித எண்ணங்களும், ஆசைகளும் கூடி, உலகியல் சுகபோகத்தில் இருந்த நீலன் என்கிற ஒரு மனிதன்,
எம்பெருமானால், திரு எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப் பெற்று, ஆழ்வாராக – சாதாரண பிறப்பிலிருந்து
புதிய பிறப்பிற்கு மாறிய காட்சிதான்- கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக, இந்த பங்குனி உத்திர நன்னாளில்,
திருவாலி திருநகரியில் நடைபெற்று வருகிறது.

இந்த உற்சவத்தைக் காணுகின்ற நமக்கும் அந்த ஞானம் பிறக்கும் என்பதால் அடியார்கள் எல்லாம் இந்த உற்சவத்தைக் காண்கிறார்கள்.
உற்சவத்தைக் கண்டு களிக்க நமக்கு இயலாவிட்டாலும், இந்தக் கதையையும் இந்தக் கதையின் சாரத்தையும்
தெரிந்து கொள்வதன் மூலம், நமக்கும் எம்பெருமானுடைய அருளும் ஆழ்வாரின் அருளும் கிடைக்கும்.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீமான் கண்ணபிரான் முதலியார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading