ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்
1-ஸ்ரீ வஸூ தேவருடைய அநந்த விரதம் போலே
பல வியாப்தமாய் இருபத்தொரு தர்மம்-நோற்ற நோன்பு இலன் -பாசுர வியாக்யானத்தில்
2-சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-ஸ்ரீ பெரிய திருவந்தாதி –16–
நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )
மஹதா தபஸா ராம மஹதா ஸாபி கர்மணா -(ஆரண்ய -66)
சக்கரவர்த்தி தான் தேடின அர்த்தமும் பண்ணின தபஸ்ஸூம் அழிய மாறிப் பெற்றால் போலே யாதல்
ஸ்ரீ வஸூ தேவர் அநந்த வ்ரதம் அனுஷ்ட்டித்துப் பெற்றால் போலே யாதல் பிறந்தாலாகாதோ
————
ஸ்ரீ அநந்த விரதம்
புரட்டாசி மாதத்துச் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசியில் அநுட்டிக்கப்படுவது இந்த அநந்த விரதம்;
இதை அனந்த பத்மநாபன் விரதம் என்றும் சொல்வர்;
இதை பாண்டவர்கள், அவர்கள் வனவாசத்தில் இருந்தபோது கடைப்பிடித்தார்கள்;
இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும்படி கிருஷ்ணன் கூறியதால், பாண்டவர்கள் அதைச் செய்தார்கள்;
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் ஐசுவரியங்களைக் கொடுக்க வல்லதாம்;
கிருத யுகத்தில், வேத சாஸ்திரங்களில் கரை கண்டவரும் வசிஷ்ட கோத்திரத்தில் பிறந்தவருமான சுமந்தன்,
தன் மனைவி தீட்சா தேவியுடன் மனமொத்து நல்வாழ்வு நடத்தி வந்தார். அவர்களுக்கு சீலை என்ற மகள் இருந்தாள்.
சீலை பிறந்த கொஞ்ச நாள்களில் தீட்சா தேவி மரணமடைந்தாள்.
‘மனைவி இல்லாவிடில் நாம் செய்யும் தர்ம – கர்ம அனுஷ்டானங்களுக்குக் குறை வருமே!’ என்று எண்ணிய சுமந்தன்,
கர்க்கசை என்பவளை மறுமணம் செய்தார். கர்க்கசை கடினமான மனம் கொண்டவள்.
மூத்தாள் மகளான சீலையிடம், மறந்து போய்க்கூட அன்பு செலுத்தாதவள்.
ஆனால், சீலையோ பெயருக்குத் தகுந்தாற்போல, மிகுந்த சீலத்துடன் விளங்கினாள்.
சீலைக்குத் திருமணப் பருவம் வந்ததும் கௌண்டின்யர் என்பவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் சுமந்தன்.
கல்யாணம் முடிந்ததும் சுமந்தன், ‘மாப்பிள்ளைக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் கர்க்கசையிடம்,
‘‘மாப்பிள்ளைக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டார்.
அவளோ திடீரென்று எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டு,
‘‘இங்கு ஒன்றும் இல்லை. போங்கள்” என்று கத்தியவாறு கதவைச் சாத்திக் கொண்டாள்.
வேறு வழியற்ற நிலையில் சுமந்தன் கொஞ்சம் கோதுமை மாவை மாப்பிள்ளையிடம் தந்து,
“இது வழியில் உபயோகப்படும். வைத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி மணமக்களை வழியனுப்பி வைத்தார்.
கௌண்டியன்யர் சீலையுடன் தனது ஆசிரமத்துக்குக் கிளம்பினார். சூரிய உதய காலம். வழிப்பயணத்தைச் சற்று நிறுத்திய
கௌண்டின்யர் அங்கிருந்த ஒரு குளத்தில், சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களைச் செய்வதற்காகப் போனார்.
அன்று அனந்த விரத தினமானதால் பெண்கள் பலர், சிவப்பு நிற ஆடை அணிந்து, பய பக்தியுடன் தனித்தனியாக
அனந்த பத்மநாப ஸ்வாமியை பூஜை செய்து கொண்டிருந்தனர்.
மெள்ள அவர்களை நெருங்கிய சீலை, “நீங்கள் என்ன விரதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றாள்.
அந்தப் பெண்களும் அனந்த விரதம் குறித்த நியதிகளை வழிமுறைகளை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.
உடனே சீலை அங்கேயே நீராடி, தகப்பனார் தந்த கோதுமை மாவைப் பயன்படுத்தி, அங்கிருந்த பெண்களின் உதவியுடன்
விரதம் தொடங்கி நோன்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டு முறைப்படி விரதத்தை முடித்தான்.
அதன்பின் மனத்திருப்தியுடன் கணவருடன் அவரது ஆசிரமத்தை அடைந்தாள்.
அனந்த விரதம் அளவற்ற ஐஸ்வர்யங்களைச் சீலைக்கு அளித்தது. நவரத்தினங்களும் தங்கமும் அவள் உடலை அலங்கரித்தன.
வருடம் தவறாமல் சீலை, அனந்த விரதம் அனுஷ்டித்தாள். அனந்தமான பலன்களுடன் ஆனந்தமான வாழ்வை அனுபவித்தாள்.
செல்வ மயமான வாழ்வு கௌண்டியன்யரின் சிந்தனையை மாற்றியது போலும். ஒருநாள் சீலையின் கையில் கட்டப்பட்டு
இருந்த நோன்புக் கயிற்றைக் கண்ட கௌண்டியன்யர், அந்த நோன்புக் கயிற்றையும் அவளையும் அவமானப்படுத்தினார்.
சீலை பதறினாள். ‘‘ஸ்வாமி! இது கயிறு அல்ல. அனந்த பத்மநாப ஸ்வாமியையே நான் தரித்து இருக்கிறேன்.
அந்த ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் அல்லவா, இவ்வளவு செல்வங்களும் நமக்கு வாய்த்தன” என்றாள்.
ஆனால், அவள் சொன்னவற்றை கௌண்டின்யர் செவிமடுக்கவில்லை.
மிகுந்த கோபத்துடன், மனைவியின் கையிலிருந்த கயிற்றை இழுத்து அறுத்து, எரியும் தீயில் போட்டார்.
சீலை துடித்தாள். “அந்த சரடு (கயிறு) அனந்தனின் வடிவம் அல்லவா? அது எரிந்தால் நமது குலமும் வீடும் எரியுமே”
என்று கூவியபடி தீயில் இருந்த சரடை எடுத்து அது எரிவதற்குள் பாலில் போட்டாள்.
நாள்கள் கடந்தன. கௌண்டின்யரின் செல்வம் குறையத் தொடங்கியது. அவரிடம் இருந்த பசுக்களை யாரோ திருடிச் சென்றனர்.
அவரது வீடு தீப்பிடித்துச் சாம்பலானது.
உறவினர்களுடன் சண்டை ஏற்பட்டது. மற்ற எவரும் கௌண்டின்யரிடம் பேசாத ஒரு நிலை உண்டானது.
கௌண்டின்யர் துயரக் கடலில் மூழ்கினார். மனைவியை அலட்சியப்படுத்தி மாதவனை அவமதித்தால் வந்த வினை இது!
என்பதை உணர்ந்ததால், ‘`அனந்தா.. அனந்தா… எங்கே போனாய்? என்னை கைவிட்டு விடாதே” என்று கத்தியபடி காட்டுக்குள் ஓடினார்.
கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம், “அனந்தனைப் பார்த்தீர்களா?” எனக் கேட்டார்.
அவர் போகும் வழியில், பழங்கள் நிறைந்த மாமரம் ஒன்று இருந்தது. “மாமரமே! அனந்தனைப் பார்த்தாயா?” என்று கேட்டார்.
“இல்லை!” என்று பதில் வந்தது. கொஞ்ச தூரம் போனதும், ஒரு பசு மாட்டைப் பார்த்தார்.
ஏராளமாகப் புல் இருந்தும் அதை மேயாமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தது அந்த பசு.
அதனிடமும், “அனந்தனைப் பார்த்தாயா?” என கௌண்டின்யர் கேட்க, “இல்லை!” என்ற பதிலே வந்தது.
இதேபோல் தான் பார்த்த காளை, யானை ஆகியவற்றிடமும் இதே கேள்வி கேட்டு இதே பதில் பெற்றார் அவர்.
கௌண்டின்யரின் மனம் சோர்வுற்றது. உடல் தளர்ந்தது. நாக்கு உலர்ந்தது. “அனந்தா! அனந்தா!” என்று கதறினார்.
அப்போது அவர் முன்னால் தரிசனம் தந்த ஸ்வாமி ஐஸ்வர்யம், தர்ம புத்தி, வைகுண்ட பிராப்தி ஆகிய மூன்று வரங்கள் தந்தார்.
ஸ்வாமியைத் துதித்து வணங்கிய கௌண்டின்யர், தான் வழியில் கண்ட மாமரம் மற்றும் விலங்குகள் குறித்துக் கேட்டார்.
“நீ பார்த்த மாமரம், போன பிறவியில் சிறந்த ஒரு பிராமண வித்வான். மாணவர்கள் பலர் வேண்டிக்கேட்டும் கர்வம்பிடித்த அவர்,
தான் கற்ற கல்வியை எவருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால் மரம் ஆனார்.
அடுத்தது பசு, போன பிறவியில் அது நற்குலத்தில் உதித்த பணக்காரன். யாருக்கும் ஒரு பிடி அன்னம்கூட தானம் செய்யாததால்,
அவனே பசு மாடாகப் பிறந்துள்ளான். இந்தப் பிறப்பில் புல் இருந்தாலும் மேய முடியாமல் அலைகிறான்.
அடுத்தது காளை. அது போன பிறவியில் கர்வமுள்ள ஒரு அரசனாக இருந்தது.
விளையாத (களர்) பூமியை தானம் செய்த பாவத்தால், அவன் இப்போது காளையாகத் திரிகிறான்.
அடுத்தது யானை. அந்தணனாக இருந்த ஒருவன், தான் செய்த தர்மத்தை விலை பேசி விற்றுப் பணம் பெற்றதால்
இப்படி யானையாகப் பிறந்திருக்கிறான்!” என்று விவரித்த ஸ்வாமி அங்கிருந்து மறைந்தார்.
மனம் மாறிய கௌண்டின்யர் வீடு திரும்பினார். தன் மனைவி சீலையுடன் சேர்ந்து,
அனந்த விரதம் செய்து, இழந்த செல்வங்களைப் பெற்று மங்கல வாழ்வு வாழ்ந்தார்.
—————————————–
ஸ்ரீ பயோ விரதம்
வாமனாவதாரத்தைச் சொல்லத் துவங்கும் ஸ்ரீ நாராயண பட்டத்திரி, முதலில், பலியின் சரிதத்தைச் சொல்கிறார்.
எவ்வாறு அவன் பலம் மிகுந்தவனாக, அனைத்துலகத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டான் என்றும் சொல்கிறார்.
இந்திரனுடன் நிகழ்ந்த யுத்தத்தில், அசுர வேந்தனாகிய பலி கொல்லப்பட்டாலும், பின்னர்,
சுக்கிராச்சாரியாரின் சஞ்சீவினி வித்தையால் உயிர்ப்பிக்கப்பட்டான். விச்வஜித் என்னும் யாகத்தைச் செய்து,
அதனால் சக்தி மேலும் வளரப் பெற்ற அவன், மிகுந்த பராக்கிரமம் பொருந்தியவனான்.
பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சக்ராயுதத்துக்கும் அஞ்சாமல், மூவுலகையும் தன் வசப்படுத்திக் கொண்டான்.
தேவர்கள் ஓடி ஒளிந்தனர்.
தேவர்களின் தாயான அதிதி தேவி, தன் புதல்வர்களின் நிலை கண்டு, துன்பம் மிகக் கொண்டாள்.
தன் கணவரான, காச்யபரைச் சரணடைந்து, இந்த நிலை மாறுவதற்கான உபாயத்தைக் கூற வேண்டினாள்.
அவரும் பெருமை மிகுந்த ‘பயோ விரதத்தை’ உபதேசித்தார்.
அதிதி, பன்னிரண்டு நாட்கள்,பக்தியுடன் அந்த விரதத்தை அனுஷ்டித்தாள்..
இங்கு, ‘பயோ விரதம்’ பற்றி, சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
இது, எந்த மாதத்திலும், வளர்பிறை பிரதமை முதல், திரயோதசி வரை அனுஷ்டிக்க வேண்டிய விரதமாகும்..
ஒவ்வொரு நாளும் பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து, பாயச நிவேதனம் செய்ய வேண்டும்.
நிவேதன பாயசத்தை மட்டுமே உணவாக அருந்த வேண்டும்.
பன்னிரண்டு நாட்களும், பூஜைகள், ஹோமம், அதிதி (விருந்தினர்) போஜனம் முதலியவற்றை கிரமமாகச் செய்ய வேண்டும்.
இவ்விதமாக, பூஜித்து, பகவானிடமே மனம் லயித்திருந்த அதிதி தேவியின் முன்பாக, பகவான்
சியாமள வண்ணனாக, சங்கு சக்கரங்களுடன் கூடிய சதுர்புஜங்களுடன் தோன்றினார்.
‘நானே உனக்கு புத்திரனாகப் பிறக்கிறேன்!..என்னை நீ தரிசித்தது ரகசியமாக இருக்கட்டும்!’ என்று
திருவாய் மலர்ந்தருளினார். பின் மறைந்து விட்டார்.
தஸ்யாவதௌ த்வயி நிலீனமதேரமுஷ்யா:
ச்யாமச் சதுர்புஜ வபு: ஸ்வயமாவிராஸீ: |
நம்ராம்ʼ ச தாமிஹ பவத்தனயோ பவேயம்ʼ
கோ³ப்யம்ʼ மதீ³க்ஷணமிதி ப்ரலபன்னயாஸீ: (ஸ்ரீமந் நாராயணீயம்).
பிறகு, அதிதி தேவியின் கர்ப்பத்தில் பிரவேசித்த பகவானை, பிரம்ம தேவர் துதி செய்தார்.
அதிதி தேவி, சிரவண மாதம் துவாதசியுடன் கூடிய புண்ணிய தினத்தில், பகவானைத் தன் குழந்தையாகப் பெறும் பேறடைந்தாள்!.
சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-
கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ,
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,
கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே! (நம்மாழ்வார்).
பகவான், புண்ணியம் மிகுந்த அந்த ஆசிரமத்தில் அவதரித்ததும், தேவர்கள், ஆனந்தத்துடன் வாத்தியங்களை முழக்கினார்கள்!
பூமாரி பொழிந்தார்கள்!.. காசியபரும், அதிதி தேவியும், ஜய கோஷம் செய்தார்கள்!
இவ்விதம் இருக்க, பகவான், நொடியில், பிரம்மச்சாரியின் உருவத்தை எடுத்துக் கொண்டார்!!!!!..
காசியபர், தமது மைந்தனுக்கு, உடன் பிரம்மோபதேசம் செய்வித்தார்!!
மேகலை, தண்டம், கிருஷ்ணாஜினம் (மான் தோல்), அக்ஷ மாலை முதலானவைகளால் அலங்கரிக்கப்பட்ட
திருமேனியை உடையவராய், அக்னியை வளர்த்துச் செய்யப்படும் சடங்குகளை செய்து முடித்து விட்டு,
பலிச் சக்கரவர்த்தி அச்வமேத யாகம் செய்த இடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார் பகவான்.
அசுரர்களை தண்டிப்பதற்காக தண்டத்தையும், அவர்கள் தேவர்கள் மீது கொண்ட பகைமையின் வெப்பத்தை
மறைப்பது போல் குடையையும் எடுத்துக் கொண்டு, பகவான் நடந்து சென்றார்.
பின்னால் அவர் விஸ்வரூபம் எடுக்கப் போவதை முன்கூட்டியே அறிவிப்பது போல், அவரது நடையினால், பூமி அசைந்தது!!!
இவ்விதம் நடந்து சென்று, நர்மதா நதியின் வடகரையிலிருந்த அச்வமேத யாக சாலையை அடைந்தார் பகவான்.
பகவானின் திருமேனிப் பிரகாசத்தால் , யாகசாலையில் இருந்த சுக்ராச்சாரியார் முதலானவர்களுக்கு கண்கள் கூசின!!
அவர்கள் பகவானின் ரூபத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘இந்தப் பிரம்மச்சாரி, அக்னி பகவானா?, சூரியனா?
அல்லது சனத்குமார யோகீச்வரனா?…யார் இவர்?’ என்று சந்தேகித்தனர்!!!!..
சுக்ராச்சார்யார், பகவானை எதிர் கொண்டு வரவேற்று அழைத்து வந்தார்!!
மனதைக் கவரும் ரூபத்தை உடைய பகவானைக் கண்டு பலிச் சக்கரவர்த்தியின் மனம் பக்தியால் நிரம்பியது!
உடல் மெய் சிலிர்த்தது.. மஹா பக்தனான பிரகலாதனின் பேரனல்லவா பலி!!
பிரகலாதனின் மகன் விரோசனனின் புதல்வனே பலி!!..
பலிச் சக்கரவர்த்தி, பகவானை அணுகி, அவரை ஆசனத்தில் அமர்த்தி, அவரது திருவடிகளை நீரினால் அலம்பி,
அந்தத் தீர்த்தத்தை எடுத்து, பக்தியுடன் தலையில் தெளித்துக் கொண்டான்!!..
( ஆநீத – மாஸு² ப்ருʼகு³பிர் -மஹஸாபி பூதைஸ்
த்வாம்ʼ ரம்ய ரூப-மஸுர: புளகாவ்ருʼதாங்க³: |
பக்த்யா ஸமேத்ய ஸுக்ருʼதீ பரிநிஜ்ய பாதௌ³
தத்தோய -மன்வத்⁴ருʼத மூர்த்தனி தீர்த்த² தீர்த்த²ம் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
பிரகலாதனின் வம்சத்தில் தோன்றியதாலோ, அல்லது யாகங்கள் பலவற்றைச் செய்த புண்ணியத்தாலோ,
வேதம் ஓதியவர்களிடத்திலிருந்த பக்தியாலோ, பலிச் சக்கரவர்த்தி, பகவானின் பாத தீர்த்தத்தை அடைந்தான்!!!
அத்தகைய மகிமையுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன், தம்மை நோயிலிருந்து மீட்டு, காத்தருளப் பிரார்த்திக்கிறார் பட்டத்திரி!!..
அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. ( நம்மாழ்வார்)
பகவானை யாரென்று அறியாமலே, வரவேற்று பூஜித்த பலி, பின்னர் கரங்களைக் கூப்பிக் கொண்டு,
‘அந்தண குமாரா!, என்னிடமிருந்து நீ வேண்டுவது யாதாயினும் கூறு.. அன்னமோ, வீடோ, பூமியோ,
எதுவானாலும், அனைத்தையுமே நீ கேட்டாலும், நான் உனக்குத் தருவேன்!!’ என்று கூறினான்.
பகவான் இதைக் கேட்டு, கருணை மிகக் கொண்டார். பலியின் கர்வத்தை அடக்க விரும்பினார்.
ஆதலால், அசுர குலத்தை சற்று நேரம் புகழ்ந்து விட்டு, பின், தன் காலடியால் மூன்றடி மண் வேண்டுமென யாசித்தார்.
ஆணவம் ஆட்டிப் படைத்தது பலியை.. எதிரே பகவான் நின்றிருந்த போதிலும்!!!
‘உலகிற்கே அதிபதி நான்!. என்னிடம் ஏன் மூன்றடி மண்ணையே யாசிக்கிறாய்?!
கேள் பாலகா!.. பூமி முழுவதையும் நீ கேட்டாலும் தருவேன்!!’ என்றான் பலி!.
‘மூன்றடி மண்ணால் திருப்தி அடையாதவன், மூன்று உலகங்களைத் தந்தாலும் திருப்தி அடைய மாட்டான்!’ என்றார் பகவான்.
அதைக் கேட்ட பலி, பகவான் கேட்டவாறே தருவதற்கு ஒப்புக் கொண்டு, நீர் வார்த்து தானம் செய்ய முற்பட்ட பொழுது,
அசுர குருவான சுக்ராச்சாரியார் அவனைத் தடுத்து,’ வேண்டாம், தராதே, உன்னிடமிருந்து அனைத்தையும் அபகரிக்கும்
எண்ணத்துடன் வந்துள்ள ஸ்ரீவிஷ்ணுவே இவர்!!’ என்றார்.
அதைக் கேட்டும் பலிச் சக்கரவர்த்தி மனம் கலங்கவில்லை!!!!…’அப்படியாயின், என்னிடம் பகவானே யாசிக்க வந்துள்ளார்!
அவருக்கு தானம் அளித்தால், நான் என்னுடைய ஆசைகள் பூர்த்தி எய்தியவனாவேன்!
நான் கொடுக்கத் தான் போகிறேன்!!. என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.
அசுர குரு, , ‘அனைத்தையும் இழப்பாய்!’ என்று சபித்த பொழுதும் பலி, மனம் தளராமல்,
தன் மனைவி விந்த்யாவளி நீர் அர்ப்பிக்க, பகவான் கேட்டவாறே தானம் செய்தான்!!!..
தேவர்களும் ரிஷிகளும் அந்த வேளையில் பூ மழை பொழிந்தனர்!!!
பகவானுடைய வாமன ரூபம், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,
பிரம்மாண்டத்தின் எல்லை வரையிலும் மேலும் மேலும் வளர்ந்த வண்ணம் இருந்தது!!!..
( நிஸ்ஸந்தே³ஹம்ʼ தி³திகுலபதௌ த்வய்யஸே²ஷார்பணம்ʼ தத்³
வ்யாதன்வானே முமுசுர்ருʼஷய: ஸாமரா: புஷ்பவர்ஷம் |
தி³வ்யம்ʼ ரூபம்ʼ தவ ச ததி³த³ம்ʼ பச்யதாம்ʼ விச்வபாஜா
முச்சைருச்சைரவ்ருʼதத³வதீக்ருʼத்ய விஸ்வாண்ட³பாண்ட³ம் ||( ஸ்ரீமந் நாராயணீயம்)
காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக் கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்குறல் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த தேவ பிராற்கென் நிரைவினோடு, நாண்கொடுத்
தேனினி யென்கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.
என்ற நம்மாழ்வாரின் திருமொழிகளை, இங்கு பொருத்தி தியானிக்கலாம்!..
பகவானுடைய திவ்ய ரூபம், பிரம்மாண்டத்தையும் தாண்டி, மேலும் மேலும் வளர்ந்தது..
பகவான் த்ரிவிக்ரம ஸ்வரூபனாகி, மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்தருளினான்.
ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.–என்று, திருமங்கையாழ்வார்
எம்பெருமானைத் துதிக்கிறார்!!..
பிரம்ம தேவர், தம் சத்ய லோகத்தில் பகவானின் திருவடி நுனியினை தரிசித்து, பேரானந்தமடைந்தார்.
தம் கமண்டலத்தின் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அந்த தீர்த்தமே, ஆகாய கங்கையானது
மேலுலகங்களில் வசிப்பவர்கள், பகவானின் திருவடி தரிசனத்தால் மகிழ்ந்து, ஆன்ந்தமாக நாட்டியமாடினர்.
( த்வத்பாதா³க்ரம்ʼ நிஜபத³க³தம்ʼ புண்ட³ரீகோத்பவோ(அ)ஸௌ
குண்டீ³தோயைரஸிசத³புனாத்யஜ்ஜலம்ʼ விஸ்வலோகான் |
ஹர்ஷோத்கர்ஷாத் ஸுப³ஹு கே²சரைருத்ஸவே(அ)ஸ்மின்
பேரீம்ʼ நிக்னன்புவனமசரஜ்ஜாம்ப³வான் பக்திஸா²லீ ||( ஸ்ரீமந் நாராயணீயம்) ).
ஜாம்பவான், மகிழ்ச்சி மிக்கவராக, பேரிகையை முழக்கிக் கொண்டு உலகைப் பிரதக்ஷிணம் செய்தார்
ஸ்ரீமந் நாராயணீயம், ஜாம்பவானை, ‘ஜாம்பவான் பக்திசாலீ’ என்று போற்றுகிறது
ஜாம்பவான், வாமனாவதார காலத்திலேயே இருந்தாரா என்றால் ஆம்!!!!
வாமனாவதாரம், ஸ்ரீராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என்று மூன்று அவதாரங்களையும் தரிசிக்கும் பேறு பெற்ற பக்திமான் அவர்!!..
இவ்விதம், பகவானின் திரிவிக்ரமராக தோன்றியருளிய மஹோத்சவம் கொண்டாடப்படுகையில், அசுரர்கள்,
தம் தலைவனின் உத்தரவின்றி போர் துவக்கி, பகவானின் பணியாட்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்.
அப்போது மஹாபலி, ‘முன்பு யாரால் ஜெயிக்கப்பட்டோமோ, அந்த பகவானே நம் முன் நிற்கிறார்!!!
யுத்தம் செய்வதால் என்ன பயன்?!!’ என்று அசுரர்களைக் கேட்க,
அந்த வார்த்தைகளின் உண்மை புரிந்ததால், அசுரர்கள், பாதாளம் சென்று விட்டனர்.
கருடன், பாசக்கயிறுகளால் மஹாபலியைப் பிணைத்தார்!!!
மண்ணளந்து, விண்ணளந்து நின்ற திரிவிக்ரம மூர்த்தி, மஹாபலியைப் பார்த்து, உரத்த குரலில்,
‘நீ உலக நாயகனல்லவா?.. மூன்றாவது அடியை வைக்க இடம் காட்டு!!!’…என்று கேட்க,
மஹாபலி, சிறிதும் நடுக்கமின்றி, ‘என் தலையின் மீது தங்கள் திருவடியை வைத்தருளுங்கள்’ என்று பதிலுரைத்தான்!!..
பகவானின் சொல்லொணா கருணையும், பக்தனது விவரிக்க இயலாத பெருமையும் இங்கு ஒருங்கு விளங்குகிறது!!
பகவானுக்கு அனைவரும் குழந்தைகளே!.. அவருக்கு பேதங்களில்லை..
பலி, உத்தம குணங்கள் பலவற்றைக் கொண்டவனாயினும், அவனது ஆணவம்,
அவன் பகவானின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு தடையாக இருந்தது!
அதை அகற்றி, அவனுக்கு அருள் புரிய பகவான் திருவுளம் கொண்டான்.
வாமன ரூபத்தில் வந்து, உலகளந்த பெருமானாகி, எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன்,
அனைத்திற்கும் காரண கர்த்தா தானே என்பதை உணர்த்தினான்!!!
உலகனைத்தையும் படைத்து, காத்து அழித்தலை, சிறு பிள்ளை விளையாட்டுப் போல் சங்கல்ப மாத்திரத்தில்
எளிதில் செய்ய வல்ல எம்பெருமான் முன், ‘நானே உலக நாயகன்’ என்று சொன்ன பலியின் செயல் நகைப்புக்கு உரியதாயினும்,
அதுவே, அவனது அழியாத வாழ்வுக்கு காரணமாயிற்று. ஆணவம், வெறுப்பு, பகை முதலான எதிர்மறை உணர்வுகளும்,
பரம மங்களங்களைத் தரவல்ல பகவானை நோக்கித் திருப்பப்பட்டால் நலமே தரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்!!..
அசுரனாயினும் மஹாபலியின் பக்தி, போற்றுதலுக்குரியது!!
பிரஹலாதனின் பேரனல்லவா?!!.. உலகெல்லாம் இரண்டடிக்குப் போதாவிட்டாலும், பக்தனாகிய என் தலை,
மூன்றாவது அடிக்குப் போதுமானது என்ற பலியின் தீர்மானம்,
உறுதியான பக்தியால் விளைந்த உயர்ந்த சாதனையன்றி வேறென்ன?!!
பகவானின் சாந்நித்யமே, பலியின் ஆணவத்தை அகற்றி, அவனைப் புனிதனாக்கியது!!..
மஹாபலியின் சிரத்தில் பகவான் தன் திருவடியை வைத்தருளிய தருணத்தில், அவனது பாட்டனாரான பிரகலாதன்
அவ்விடத்தில் நேரில் தோன்றினார். பகவானை, பலவாறு போற்றித் துதி செய்தார்!!
‘புத்தியை மயக்கும் செல்வத்தை இவனிடமிருந்து பிரித்தது, இவனுக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம்’ என்று பகவானைப் போற்றினார்.
பின், தன் பேரனது பாக்கியத்தை எண்ணிப் பூரித்தார்!
‘இந்த அருளை, பிரம்மா, ருத்ரன், ஸ்ரீ லக்ஷ்மி தேவி முதலியோரும் அடையவில்லை’ என்று
பிரகலாதன் தன் துதியில் கூறியதை, ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
பகவான் மஹாபலியை, மன மகிழ்வுடன் ஆசீர்வதித்தார். ‘உன் ஆணவத்தைப் போக்கவே இவையெல்லாம் செய்யப்பட்டன.
இந்தப் புண்ணியச் செய்கையால், நீ சித்தனாக ஆகி விட்டாய். ஸ்வர்க்கத்துக்கும் மேலான உலகம், உனக்கு உரியதானது.
நீ (சிறிது காலத்திற்கு) பிறகு, இந்திரப் பதவியையும், பின் என்னிடம் சாயுஜ்ய முக்தியையும் அடைவாயாக!’ என்று வரமருளினார்.
பின், பலியின் யாகத்தை, அங்கிருந்த வேதோத்தமர்களைக் கொண்டு பூர்த்தி செய்வித்தருளினார்.
இத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீகுருவாயூரப்பன், தம் நோய்களை நீக்கியருளக் கோருகிறார் பட்டத்திரி.
த³ர்போச்சி²த்த்யை விஹிதமகி²லம்ʼ தை³த்ய ஸித்³தோ⁴(அ)ஸி புண்யை
ர்லோகஸ்தே(அ)ஸ்து த்ரிதி³வவிஜயீ வாஸவத்வம்ʼ ச பஸ்²சாத் |
மத்ஸாயுஜ்யம்ʼ ப⁴ஜ ச புனரித்யன்வக்³ருʼஹ்ணா ப³லிம்ʼ தம்ʼ
விப்ரைஸ்ஸந்தானிதமக²வர: பாஹி வாதாலயேஸ² || ( ஸ்ரீமந் நாராயணீயம்).
அசுரனான மஹாபலி, பாதாள லோகத்தை அடைந்தான்.
ஸ்ரீமத் பாகவதம், மஹாபலி, பாதாள லோகத்தை அடைந்ததற்குப் பின் வந்த நிகழ்வுகளையும் விவரிக்கிறது
தேவலோகம், இந்திரனுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறாக, அதிதி தேவியின் வேண்டுதல் பூர்த்தி செய்யப்பட்டது.
பகவான், தேவலோகத்தில் உபேந்திரனாக அருள் செய்தார்.
இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, பின் வரும் கதை கூறப்படுவதுண்டு. மஹாபலியிடம் தானம் பெற்றார் என்பதால்,
பகவான் தன்னை அவனுக்குக் கடமைப்பட்டவனாக எண்ணிக் கொண்டு, பலியே அறியாமல்,
அவனது அரண்மனை வாயிலில் காவல் பணி செய்தாராம்!!
வைகுண்டத்தில், அவதார காரியம் முடிந்தும், இன்னும் பகவான் எழுந்தருளாதது கண்டு,
ஸ்ரீலக்ஷ்மி தேவி கவலையடைந்த போது, நாரதர் அங்கு தோன்றி, பகவான், பலியின் அரண்மனை வாயிலில்
காவல் பணி செய்வதை எடுத்துரைக்க, தேவி, ஒரு சாதாரண பெண்ணின் வடிவெடுத்து,
பலியின் அரண்மனை வாயிலை அடைந்து, தான் பலியின் சகோதரி என்றும்,
ஒரு காரியமாக அவனை நாடி வந்ததாகவும் அறிவித்தாளாம்!.
செய்தியறிந்த பலி, ஆச்சரியம் கொண்டு, ‘அது யார் நானே அறியாத என் சகோதரி?!
அவளை உடன் என் முன் கொண்டு வாருங்கள்!!’ என்று உத்தரவிட்டானாம்.
தேவியை பணிவுடன் வரவேற்று உபசரித்து, ‘அம்மா, நீ என் சகோதரி என்று சொன்னாயாம்–அப்படியே ஆகட்டும்-
என்னால் உனக்கு ஆக வேண்டியது என்ன?’ என்று வினயமுடன் கேட்க,
தேவியும், தான் யார் என்பதைக் கூறி, தன் பதியை தன்னோடு அனுப்ப வேண்டினாளாம்-
பகவான் தன் அரண்மனை வாயிலில் இருப்பதை அறிந்த பலி ஓடோடியும் வந்து, அவரை வணங்கி,
ஸ்ரீலக்ஷ்மி தேவியோடு அவரை வைகுண்டம் எழுந்தருளப் பிரார்த்தித்தானாம்!..
பலி, பாதாள லோகம் செல்லும் வேளையில், வருடத்திற்கொரு நாள் பூலோகம் வந்து,
தன் மக்கள் சுகமாக இருப்பதைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்று வரம் கோரியதாகவும்,
பகவானும் அதற்கு அருளியதாகவும் சில புராணங்கள் கூறுகின்றன.
இதையொட்டியே, பரசுராம க்ஷேத்ரமாகிய கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையும்,
-பரிவர்த்தன ஏகாதசி. வாமன ஜயந்தி.; ஓணம்; சிரவண த்வாதசி.பயோ விரதம்–
தீபாவளி அமாவாசைக்கு மறு நாள், ‘பலி பாட்டிமை, பலி பிரதிமா, பலி பாத்யமி’ என்றும் கொண்டாடப்படுகின்றன.
குறிப்பாக வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில், இந்தப் பண்டிகை மிக முக்கியத்துவம் பெறுகிறது.
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, – தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள். (பேயாழ்வார்).
——————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்திரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply