ஸம்ஸாரிகர் படியில் மிக்க வெறுப்பு உண்டாகி,
அவர்களைக் காண்பதும் அவர்களோடு ஸஹவாஸஞ் செய்வதும் அஸஹ்யமான நிலைமை
தமக்குப் பிறந்தபடியை அருளிச் செய்கிறார்.
————
மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1-
பதவுரை
மெய்யில் வாழ்க்கையை–ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.
மெய் என கொள்ளும்–பாரமார்த்திகமாகக் கருதுகின்ற
இவ் வையம் தன்னோடும் –இவ்வுலகத்தாரோடு
யான் கூடுவது இல்லை–(இனி) நான் சேர்வதில்லை
ஐயனே–‘ஸ்வாமீ’
அரங்கா–‘ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்–என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்;
என் தன் மாலுக்கே–என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே
மையல் கொண்டொழிந்தேன்–வ்யாமோஹடைந்திட்டேன்.
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.
—————
நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..
பதவுரை
நூலின் நேர்–நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தி யிருக்கிற
ஞாலம் தன்னொடும்–(இந்த) ப்ராக்ருத மனிதரோடு
யான் கூடுவது இல்லை;-
ஆலியா–(காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி
அரங்கா என்று–‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு
அழையா–கூப்பிட்டு
என் தன் மாலுக்கே–என் மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே
மால் எழுந்தொழிந்தேன் – மோஹமுற்றேன்.
ஆலியா, அழையா=‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்த கால வினையெச்சம்,
ஆலித்து அழைத்து என்றபடி
———
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-
பதவுரை
மாரனார்–மன்மதனுடைய
வரி வெம் சிலைக்கு–அழகிய கொடிய வில்லுக்கு
ஆள் செய்யும்–ஆட் பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற
பாரினாரொடும்–(இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை-:
ஆரம் மார்வன்–முக்தாஹாரத்தைத் திரு மார்பிலே அணிந்துள்ளவனாய்
அனந்தன்–அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையவனாய்
நல் நாரணன்–ஸர்வ ஸ்வாமியாய்
நரக அந்தகன்–அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான
நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.
அரங்கன்–ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
பித்தன்–மோஹமுடையனாயிரா நின்றேன்.
———-
உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4-
பதவுரை
உண்டியே–ஆஹாரத்தையும்
உடையே–வஸ்திரத்தையுமே
உகந்து ஓடும்–விரும்பி (க் கண்ட விட மெங்கும்) ஓடித் திரிகிற
இ மண்டலத்தொடும்–இந்தப் பூமண்டலத்திலுள்ள பிராகிருதர்களோடு
யான் கூடுவது இல்லை
அண்டம் வாணன்–பரம பதத்திலே வாழ்பவனும்
வல் பேய் முலை உண்ட வாயன்–கல் நெஞ்சை யுடைய பூதனையின் முலையை அமுது செய்த வாயை யுடையனுமான
அரங்கன் தன்–ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
உன்மத்தன்–பைத்தியம் பிடித்தவனா யிரா நின்றேன்
‘ஸ்ரீராமாயணம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்? ஸ்ரீ பாகவதம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்?
பகவத்ஸேவை எங்கே கிடைக்கும்? பாகவதஸேவை எங்கே கிடைக்கும்? ’ என்று
காதும் கண்ணும் தினவெடுத்து ஓடிக் களிக்க வேண்டியது ஸ்வரூபமாயிருக்க,
அஃதொழிந்து ‘சோறு கொடுப்பது எங்கே? கூறை கிடைப்பது எங்கே?’ என்று வாய் வெருவிக் கொண்டு
பறந்தோடுகின்ற இப் பாவிகளோடு எனக்குப் பொருந்தாது.
விரோதிகளைப் போக்கித் தன்னை அருள்கின்ற எம்பெருமான் குணங்களையே நினைந்து
நைந்து உள்ளுரைந்து உருகுமவன் நான் என்கிறார்.
————–
தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5-
பதவுரை
தீது இல் நல் நெறி நிற்க–குற்றமற்ற நல் வழி இருக்கச் செய்தே
(அவ்வழியில் போகாமல்)
அல்லாது செய் நீதியாரொடும்–நல் வழிக்கு எதிர்த்தட்டான வற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு
யான் கூடுவது இல்லை
ஆதி–(உலகங்கட்கு) முதல்வனாய்
ஆயன்–ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வ ஸூலபனாய்
அம் தாமரை பேதை மா மணவாளன்–அழகிய தாமரைப் பூவில் அவதரித்த பிராட்டியின் வல்லபவனான
அரங்கன் தன்–ஸ்ரீரங்கநாதன் திறத்தில்
பித்தன்–மோஹங் கொண்டிரா நின்றேன்.
தேவதாந்தரங்களைப் பற்றுகை, தீயநெறி;
எம்பெருமானை ஸ்வயம் ப்ரயோஜநமாகப் பற்றுகை; நல்ல நெறி;
ஐச்வரியம் முதலிய க்ஷுத்ர புருஷார்த்தங்களை விரும்பி அவற்றுக்காக எம்பெருமானைப் பற்றுகை,
தீமையோடு கலசிய நல்ல நெறி-என்று கண்டுகொள்க.
அநந்ய ப்ரயோஜநமாக எம்பெருமானைப் பற்றுகையாகிற பரமசுத்த மார்க்கத்தை விட்டிட்டு,
ஸ்வரூப விருத்தமாக ஒழுகுகின்றவர்களோடு எனக்குப் பொருந்த மாட்டா தென்றாராயிற்று.
—————–
எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே–3-6-
பதவுரை
எம் பரத்தர் அல்லா ரொடும்–என்னைப் போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு;
கூடலன்–(நான்) கூட மாட்டேன்;
உம்பர் வாழ்வை–தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும்
ஒன்று ஆக–ஒரு புருஷார்த்தமாக
கருதலன்–எண்ண மாட்டேன்;
அமரர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
தம்பிரான்–ஸ்வாமியாய்
அரங்கம் நகர்–கோயிலிலே எழுந்தருளி யிருக்கிற
எம் பிரானுக்கு–பெரிய பெருமாள் விஷயத்தில்
த்ழுமையும்–எப்போதும்
பித்தன்–பித்தனாகா நின்றேன்.
ஸம்ஸாரத்தில் வெறுப்பும் கைங்கரியத்தில் விருப்பும் இல்லையாகில் ப்ரஹ்மாதிகளின் ஸம்பத்தேயாகிலும்
அதை நான் க்ருணமாகவே நினைப்பேன்;
நித்ய ஸூரிகளெல்லாம் அநுபவிக்குமாபோலே ஸம்ஸாரிகளும் இழவாமல் அநுபவிக்கும்படி
கோயிலிலே வந்து ஸூலபராகக் கண் வளர்ந்தருளுமவருடைய இந்த நீர்மையை நினைத்து
‘இது எத்திறம்!’ என்று மோஹிப்பதே எனக்குத் தொழிலாயிருக்கு மென்கிறார்.
—————–
எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—3-7-
பதவுரை
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான எம்பெருமான்
எத் திறத்திலும்–எந்த விஷயத்திலும்
யாரொடும்–கண்ட பேர்களோடே
கூடும் அச் சித்தம் தன்னை–சேர்ந்து கெட்டுப் போவதற்கு உறுப்பான நெஞ்சை
தவிர்த்தனன்–நீக்கி யருளினான்; (ஆதலால்)
அத்தனே–ஸ்வாமியே!
அரங்கா–ஸ்ரீரங்கநாதனே!
என்று அழைக்கின்றேன்–என்று கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன்-.
ஆழ்வீர்! அயலாரோடு பொருந்தாமைக் கடியான நன்மை உமக்கு வந்தபடி என்?’ என்று சிலர் கேட்க;
இது நானே ஸம்பாதித்துக் கொண்டதல்ல; ஸர்வேச்வரனது அருளடியாகக் கிடைத்ததென்கிறார்.
‘ஒரு அவைஷ்ணவனோடு பேசினால் ஸகல புருஷார்த்தங்களும் கொள்ளை கொள்ளையாகக் கிடைக்கும்’ என்று
ஒரு ஆப்தன் சொன்ன போதிலும் அப்போதும் அவர்களை த்ருணமாகக் கருதி,
ஸ்ரீரங்கநாதா! ஸ்ரீரங்கநாதா!’ என்றே எப்போதும் வாய் வெருவிக் கொண்டிருக்குமாறு எம்பெருமான்
எனக்கு அருள் புரிந்த பாக்கியம் மற்றையோர்க்குக் கிடைக்குமா என்கிறார்.
எம்பெருமான் என்னை ஒருதடவை குளிரக் கடாக்ஷித்த மாத்திரத்திலே
இந்த பாக்கியம் வாய்த்தது என்பார் “செங்கண்மால்.” என்கிறார்.
——–
பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-
பதவுரை
யாவரும்–இவ் வுலகத்தாரடங்கலும்
எனக்கு–என் வரைக்கும்
பேயரே–பைத்தியக்காரர்கள் தான்;
யானும்–(அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும்
எவர்க்கும்–எவர்களுக்கும்
ஓர் பேயனே–ஒரு பைத்தியக்காரன் தான்;
இது–இவ் விஷயத்தை
பேசி-(விரிவாகச்) சொல்வதனால்
என்–என்ன ப்ரயோஜநமுண்டு?
ஆயனே–‘ஸ்ரீகிருஷ்ணனே!
அரங்கா–ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்–என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன்-.
கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டுவானொருவன் பைத்தியக்காரன் போல் பரிஹஸிக்கத் தக்கவனாவன்)
என்ற பழமொழியின்படி-லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே!
என்று ஆழ்வாரை நோக்கிச் சிலர் கூற,
அவர்களுக்கு விடைகூறுகின்ற பாசுரமிது.
—————-
அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-
பதவுரை
அம் கை ஆழி–அழகிய திருக்கையிலே திருவாழி யாழ்வானை ஏந்தி யுள்ள
அரங்கன்-ஸ்ரீரங்கநாதனுடைய
அடி இணை–திருவடிகளில்
தங்கு சிந்தை–பொருந்திய மனமுடையவராய்
தனி பெரு பித்தன் ஆம்–லோக விலக்ஷணரான பெரிய பித்தராய்
கொங்கர் கோன்–சேர தேசத்தவர்களுக்குத் தலைவரான
குல சேகரன்–குலசேகராழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சொல்–இப் பாசுரங்களை
இங்கு–இவ் விபூதியிலே
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
ஏதம் ஒன்று இல்லை–(பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாக மாட்டாது.
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply