ஸ்ரீ பெருமாள் திருமொழி -4–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-

பதவுரை

ஆன் ஏறு ஏழ் வென்றான்–நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு
அடிமை திறம் அல்லால்–கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல்
ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி–நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தை யுடைய இம் மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை
யான் வேண்டேன்–(விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்ப மாட்டேன்;
(அன்றியும்,)
கூன் ஏறு சங்கம்–வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை
இடத்தான் தன்–இடத் திருக் கையிலே யுடையனான எம்பெருமானுடைய
வேங்கடத்து–திருவேங்கட மலையில்
கோனேரி வாழும்–திருக் கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற
குருகு ஆய் பிறப்பேன்–நாரை யாகவாவது பிறக்கக் கடவேன்.

திருவேங்கடமலையில் வாழ்ச்சி கிடைக்கப் பெற்றால், விவேகமற்றதொரு திர்யக் ஜாதியாகப் பிறப்பதும்,
அடியேனுக்குப் பரமோத்தேச்யமாகும்.
அத் திருமலை வாழ்ச்சிக்கு விரோதியான இம்மானிட வுடற் பிறவி எனக்கு ஒரு நாளும் வேண்டா, என்கிறார்.

அடிமைத் திறமாவது – திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப்
பல படியாலும் ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்யும் வகை.

கோன் ஏரி – ஸ்வாமி புஷ்கரிணி.
இப் பெயர் ஸர்வ லோக நிர்வாஹகனான எம்பெருமானுக்கு மிகவும் பிரியமான தடாகமெனப் பொருள்படும்.
அன்றி,
எல்லாத் தீர்த்தங்களிலும் தலைமை பெற்ற தீர்த்தமென்றும் பொருளாகலாம்.
இந்த ஸ்வாமி புஷ்கரிணியின் சிறப்பு. வராஹ புராணம் முதலியவற்றின் பாக்கக் காணத் தக்கது.
திருமலையில் ஸந்நிதிக்கு அருகிலுள்ள பிரதானமாக திவ்ய தீர்த்தம் இது.

உடல் பிறவி யான் வேண்டேன் ” என்று பிறவியை இகழ்ந்தவர் தாமே,
” குருகாய்ப் பிறப்பேனே “ என்று பிறவியை விரும்பினமையால்,
அங்கே பிறப்பது பிறப்பன்று, அது விரஜாநதியைச் சேர்ந்து வைகுண்டத்தில் வாழ்வதொக்குமென்று கருதினர் என்பது விளங்கும்.

ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன் – சாரியை,
குருகு என்ற சொல் – அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர் வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும்.
பறவைப் பொதுப் பெயராகவும் வழங்கும்.

————-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-

பதவுரை

ஆனாத செல்வத்து–அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தை யுடைய
அரம்பையர்கள்–அப்ஸரஸ் ஸ்த்ரீகள்
தன் சூழ–தன்னைச் சூழ்ந்து நிற்க
வான் ஆளும் செல்வமும–மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும்
மண் அரசும்–இப் பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும்
யான் வேண்டேன்–(வருத்தமின்றிக் கிடைப்பதாயினும்) யான் விரும்ப மாட்டேன்
தேன் ஆர் பூ சோலை–தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளை யுடைய
திருவேங்கடம்–திருவேங்கட மலையிலிருக்கின்ற
சுனையில்–சுனைகளிலே
மீன் ஆய் பிறக்கும்–ஒரு மீனாகப் பிறக்கத் தக்க
விதி–வாக்கியத்தை
உடையேன் ஆவேன்–உடையவனாகக் கடவேன்.

இந்திரன் முதலிய தேவாதி தேவர்களின் பதவிகளும்
இவ் வுலகத்து அரசாட்சியுமாகிய இரண்டு ஒருங்கு கிடைத்தாலும் வேண்டா என்று விலக்குகின்றார்.

அரம்பையர்கள் – ரம்பை முதலியோர்.
இரண்டாமடியிலுள்ள சொற்போக்கினால், இவை எனக்கு ஏக காலத்திலே கிடைத்தாலும் வேண்டா வென்பதும்,
இவற்றை யான் வேண்டாமைக்குக் காரணம் இவை கிடையாமையன்று,
இவற்றில் எனக்கு விருப்பமில்லாமையே என்பதும் தோன்றும்.

முக்தியின் ம்ஹாநந்தத்தை நோக்குங்கால், இவ்விரண்டும் சிற்றின்பமேயாதலும்,
சாச்வதமான அந்தஸ்தாநத்தை நோக்குங்கள் இவை அழிவுள்ளனவேயாதலும்,
ஆத்மாவைக் கரும பந்தங்களினின்று விடுவிக்கின்ற அவ் வீட்டு நிலை போலவன்றி
இவை பந்தங்களை உறுதிப்படுத்துதலில் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தம்முள் ஒப்பனவே யாதலும் கருதத்தக்கன.

தேன் ஆர் – வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம்.
சுனை – மலையில் நீரூற்றுள்ள குணம்.

கீழ் ” குருகாய்ப் பிறப்பேனே ” என்றவர்,
அதற்கு இறகுகள் இருப்பதால் அது அத் திருமலையை விட்டுப் பறந்து வேற்றிடத்திற்குச் சென்றிடக் கூடுமெனக் கருதி,
அங்ஙனமன்றி அத்திருமலையிலேயே பிறப்பு வாழ்ச்சி இறப்புகளை யுடைய மீனாய்ப் பிறப்பேனாகவென்று இப் பாட்டில் வேண்டுகின்றார்.
குருகாய்ப் பிறத்தலோடு அதற்கு இரையாகின்ற மீனாய்ப் பிறத்தலோடு இவர்க்கு வாசியில்லை,
திருமலையில் ஏதேனும் ஒரு ஜன்மத்தையே அபேக்ஷிப்பவராதலால்,
” எம் பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே ” என்பர் பின்னும்.

————

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3-

பதவுரை

பின்னிட்ட சடையானும்–திரித்து விட்ட சடையை யுடையவனான சிவனும்
பிரமனும்–சதுர்முகனும்
இந்திரனும்–தேவேந்திரனும்
துன்னிட்டு–நெருக்கி
புகல் அரிய–உள்ளே புகுவதற்கு ஸாத்யமில்லாமலிருக்கின்ற
வைகுந்தம் நீள் வாசல்–பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே
மின் வட்டம் சுடர் ஆழி–மின்னலை வளைத்தாற்போல சோதி மயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தை யுடைய
வேங்கடம் கோன் தான்–திருவேங்கடமுடையான்
உமிழும்–வாய்நீருமிழ்கின்ற
பொன் வட்டில்–தங்க வட்டிலை
பிடித்து–கையிலேந்திக் கொண்டு
உடனே புக பெறுவேன் ஆவேனே–அந்தரங்க பரிஜநங்களுடனே நானும் உள்ளே புகும் பாக்கியத்தைப் பெறக் கடவேன்.

எம்பெருமானுக்கு அந்தரங்க கைங்கரியம் செய்யப் பெறுவதுண்டானால்
மனுஷ்ய ஜன்மமே யாகிலும் அமையும் என வேண்டுகின்றார்.
பிரமன் சிவன் இந்திரன் முதலிய தலைமைத் தேவர்கள் திருவேங்கடமுடையானைச் சேவித்தலில் விருப்பத்தால்
அங்கு வந்து அக்கருத்தினாலேயே மிகுதியாகக் கூடியுள்ள அடியார்களின் பெருங்கூட்டத்தின் நடுவில் சிக்கி
நெருக்குண்டு உள்ளே புக முடியாமல் தடுமாறப் பெற்ற அத்திருமலையின்
கோயில் வாயிலில் யான் அப்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரனாய்
அவன் வாய்நீருமிழும் பொற்காளாஞ்சியை ஏந்திக் கொண்டு செல்லுமளவில், இவர் அந்தரங்க கைங்கரியபரர் என்று
அனைவரும் விலகி, வழிவிட, அர்ச்சக பரிசாரங்களுடனே யானும் தடையின்றி எளிதில் இனிது உள்ளே புக்கு
கர்ப்ப க்ருஹத்திற் சேர்ந்து அருகில் நின்று கைங்கரியம் பண்ணப் பெறுவேனாக வென்று பிரார்த்திக்கின்றார்.

பின்னிட்ட – பின்னிய; இடு – துணைவினை.
பின் இட்ட என்று பிரித்து, பின்னே தொங்கவிட்ட சடையையுடையவன் என்றலுமாம்.
இங்ஙனம் ‘ பின்னிட்ட’ என்றதைச் சடைக்கு விசேஷணமாக்காமல் சடையானுக்கு விசேஷணமாக்கி.
தந்தையான நான்முகன் முன்னே போகப் பின்னே செல்கின்றவன் புத்திரனான ருத்ரன் என்று உரைத்தலு முண்டு.

கீழ், ” மீனாய்ப் பிறக்கும் விதி யுடையேனாவேன் என்றவர்,
மீனானது நீர் நிலையைப் பற்றியே உயிர் தரிக்க வேண்டி வருமே யென்று
ஒரு கைங்கரியபரனாகப் பிறக்க வேணுமென்று அபேக்ஷித்தார்.
வட்டில் – இங்கே, படிக்கம்.
உடனே – சீக்கிரமாக எனினுமாம்.
‘வாசல் புகப் பெறுவேன்’ என்று அந்வயம்.

————

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

பதவுரை

ஒண் பவளம் வேலை உலவு–ஒளியுள்ள பவழக் கொடிகளைக் கரையிலே கொணர்ந்து கொழித்து (அலைகள்) உலாவுகிற
தண் பாற்கடலுள்–குளிர்ந்த திருப்பாற்கடலிலே
கண் துயிலும்–யோக நித்திரை செய்தருள்கின்ற
மாயோன்–ஆச்சரிய சக்தி யுக்தனான எம் பெருமானுடைய
கழல் இணைகள்–இரண்டு திருவடிகளை
காண்பதற்கு–ஸேவிக்கும் படியாக
பண் பகரும் வண்டு இனங்கள்–இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள்
பண் பாடும் வேங்கடத்து–பண்ணிசை பாடப் பெற்ற திருமலையிலே
செண்பகம் ஆய் நிற்கும் திரு உடையேன் ஆவேன்–சண்பக மரமாய் நிற்கும் பாக்கிய முடையேனாகக் கடவேன்.

ஜங்கமமானதொரு பிறப்பு வேண்டுமென்பதில்லை;
திருவேங்கடமலையில் இருப்பு சேரும்படியாக அங்கு நிற்பதொரு ஸ்தாவரமாகவாயினும்
நான் ஆக வேண்டுமென்று அபேக்ஷிக்கின்றார்.

“வானவர் வானவர்கோனெடுஞ் சிந்து பூமகிழும் திருவேங்கடம்” என்றபடி
பரமபதத்திலுள்ளார் புஷ்பவர்ஷம் வர்ஷிக்கின்ற இடமாதல் பற்றிப் புஷ்பமண்டப மெனப்படுகின்ற திருமலையிலே
எம்பெருமானுக்குப் புஷ்பகைங்கரியஞ் செய்வது விசேஷமாதலால்
அக்கைங்கரியத்துக்கு உபயோகப்படுவதொரு மரமாதலை வேண்டினரென்க.

பலவகைப் புஷ்பங்களுள் சண்பக மலர் எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மிகவும் உகப்பாதலைப் பெரியாழ்வார்
பூச்சூட்டல் திருமொழியில் ” தேனிலினிய பிரானே! செண்பகப்பூச் சூட்டவாராய் ” என்று இதனை முதலிற் கூறியதனாலும் உணர்க.

கீழ்ப் பாட்டில் விரும்பின கைங்கரியம் கிடைத்தால் வட்டிலைக் களவு செய்ய ஆசை தோன்றிச் சிறையிருக்க நேரிடும்
என நினைத்து சண்பகமரமாய்ப் பிறக்க வேணுமென்று அபேஷித்தபடி.

——————-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-

பதவுரை

கம்பம்–தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற
மதம் யானை–மதங்கொண்ட யானையினது
கழுத்து அகத்தின் மேல் இருந்து–கழுத்தின் மீது வீற்றிருந்து
இன்பு அமரும்–நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான
செல்வமும்–ஐசுவர்யத்தையும்
இவ் அரசம்–அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும்
யான் வேண்டேன்–நான் விரும்ப மாட்டேன்:
எம்பெருமான்–எமது தலைவனும்
ஈசன்–(எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய
எழில் வேங்கடம் மலை மேல்–அழகிய திருமலையிலே
தம்பகம் ஆய் நிற்கும்–புதராய் நிற்கும்படியான
எழில் வேங்கடம்
தவம் பாக்கியத்தை
உடையேன் ஆவேன் -உடையவனாகக் கடவேன்.

செண்பக மரமாய்ப் பிறந்தால் திருமலைக்கு வருகிற மஹா ப்ரபுக்கள் யாராவது இதனை விரும்பித்
தம் வீட்டிற்கொண்டு போய் நாட்டக் கருதிப் பெயர்த்துக் கொண்டு போகக்கூடும். அப்படி உண்டோவெனில்,
” கற்பகக்காவுகருதிய காதலிக்கு இப்பொழுது ஈவனென்று இந்திரன் காவினில், நிற்பன செய்து
நிலாத்திகழ் முற்றத்துள், உய்த்தவன் ” என்றபடி –
ஸத்யபாமைப் பிராட்டியின் விருப்பத்திற்கிணங்கிய கண்ணபிரான், ஸ்வர்க்க லோகத்தில் இந்திரனது நந்தவனத்திலிருந்த
கற்பகத் தருவை ஸத்ய பாமையின மாளிகைத் திரு முற்றத்திலே கொணர்ந்து நட்டானே.
அவ்வாறு யாரேனுமொருவர் சண்பக மரத்தையும் பெயர்த்துக் கொண்டு போனால்
திருமலையில் வாழ்ச்சி இழந்ததாமே எனக் கருதி,
அங்ஙனம் மஹாப்ரபுக்களின் விருப்பத்திற்குக் காரணமாகக் கூடாததொரு தம்பகமாய் நிற்க விரும்புகிறார் இப்பாட்டில்.

கம்பம் – வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை.
அன்றி, மதங்கொண்டதாதலால் வெளியே விட வொண்ணாதபடி கம்பத்திலேயே கட்டப்பட்டு நிற்கின்ற யானை யென்றும்,
அசையுமியல்பையுடைய மதயானை என்றும் பொருளாம்.

தம்பகமாய் – புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர் – ஸ்தம்பம் எனப்படும்.
அது விகாரம் பெற்று ஸ்தம்பகம் என நிற்கும். அவ் வடசொல் தம்பகம் என விகாரப்பட்டது.
இனி தம்பகமாவது இலை காய் கனி நிழல் ஒன்றுக்கு முதவாததொரு பென்பாரு முளர்.

———————

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-

பதவுரை

மின் அனைய நுண் இடையார்–மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய
உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம்–ஊர்வசியும் மேனகையும் போலழகியவர்களான ஸ்த்ரீகளின்
பாடலொடும் ஆடல் அவை–பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை
ஆதரியேன்–யான் விரும்ப வில்லை
வண்டு இனங்கள்–வண்டுகளின் கூட்டம்
தென்ன என பண் பாடும்–” தென தென ” என்று ஆளத்தி வைத்து இசை பாடப் பெற்ற
வேங்கடத்துள்–திருமலையிலே
அன்னனைய பொன் குவடு ஆம்–அப்படிப்பட்ட பொன் மயமான சிகரமாவதற்கு உரிய
அரு தவத்தன் ஆவேன்–அருமையான தவத்தை யுடையவனாகக் கடவேன்.

“தம்பகமாய் நிற்குந் தவமுடையேனாவேன்” என்றவர் சிறிது யோசித்த வளவில்,
அரசாங்கத்தார், மலையிலுள்ள செடி செட்டுகளை அடிக்கடி சோதிப்பவராதலால் திடீரென்று அவர்கள்
தம்பகத்தைக் களைத்தெறிந்திடக் கூடுமெனவும், அது தானே விரைவில் தீந் தொழியக்கூடுமெனவும் நினைத்து,
அங்ஙனன்றி என்றும் ஒரு படியா யிருக்கும்படி அத்திருமலையில்
ஒரு பாகமாகக் கடவேனென்று அபேக்ஷிக்கின்றார்.
முன்னிரண்டடிகளால் தேவலோக போகத்தில் தமக்கு எள்ளளவும் நசை யில்லாமையை வெளியிட்டார்.

————–

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-

பதவுரை

பிறை ஏறு சடையானும்–இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையை யுடைய சிவனும்
பிரமனும்–ப்ரஹ்மாவும்
இந்திரனும்–தேவேந்திரனும்
முறை ஆய–தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற
பெரு வேள்வி–பெரிய பாகங்களின் பயனாக
குறை முடிப்பான்–(அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும்
மறை ஆனான்–வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய
வெறி ஆர் தண் சோலை–பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை யுடைய
திருவேங்கடம் மலை மேல்
நெறி ஆய் கிடக்கும்–(போகிற) வழியாய்க் கிடக்கின்ற
நிலை–நிலையை
உடையேன் ஆவேன்–உடையவனாகக் கடவேன்.

கீழ்ப்பாட்டில் ” கானாறாய்ப்பாயுங் கருத்துடையேனாவேனே ” என்று பாரித்தவர் சற்று ஆராய்ந்ததில்
அது தன்னிலும் ஓர் குறையுணர்ந்தார்; ஆறு எப்போதும் ப்ரலஹிக்கக் கூடியதல்ல. சில காலங்களில் வற்றிப்போம்;
அப்போது திருமலை வாழ்ச்சி இழந்ததாம் என நினைத்தார். அங்ஙனமன்றி எப்போதும் ஒரு தன்மையாகத்
திருவேங்கட முடையானை ஸேவிக்க வருகின்ற பாகவதர்களின் ஸ்ரீபாததூளி படும்படி வழியாய்க் கிடக்கும் நிலைமை
தமக்கு வாய்க்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார் இதில்.

குறை முடிப்பான்-இது இரட்டுற மொழிதலாய்,
குறையைத் தீர்ப்பவன், வேண்டுகோளைப் பூர்த்தி செய்பவன் எனப் பொருள் தரும்.
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட ப்ராப்தியும் செய்பவன் என்கை

—————

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

பதவுரை

செடி ஆய–செடி போல் அடர்ந்துள்ள
வல் வினைகள்-கொடிய கருமங்களை
தீர்க்கும்–(ஆச்ரிதர்க்குப்) போக்கி யருள்கிற
திருமாலே–ஸ்ரீய:பதியான பெருமானே!
நெடியானே–பெரியோனே!
வேங்கடவா–திருவேங்கட முடையானே!
நின் கோயிலின் வாசல்–உனது ஸந்நிதியின் உள் வாசலிலே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படி ஆய் கிடந்து–பாகவதர்களும் மற்றைத் தேவர்களும்
அப்ஸரஸ் ஸ்த்ரீகளும் இடைவிடாது ஸஞ்சரிக்கப் பெற்ற படியாய்ப் பொருந்தி
உன் பவளம் வாய் காண்பேன்–உனது பவழம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாகக் கடவேன்.

கீழ்ப்பாட்டில் “ நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேனாவேனே “ என்று
திருமலைக்கு வழியாகத் தானாக வேணுமென்று அபேக்ஷித்தவர் சிறிது ஆராய்ந்ததில் அது தன்னிலும் ஓர் குறை கண்டார்;

வழி யென்பது அவரவர்களுடைய ஸௌகரியத்துக்குத் தக்கபடி மாறுபடும் கீழ்த் திருப்பதியிலிருந்து
திருமலைக்குப் போகும் வழி மிக வருத்தமா யிருக்கிற தென்று யாத்திரிகள் சந்த்ரகிரி வழியாகப் போகக்கூடும்;
ஓரிடத்திற்கு ஒன்று தான் வழியென்று சொல்ல முடியாதாகையாலும்,
வழியானது விலகி நிற்பதாகையாலும்,

வழியாக வேணுமென்று விரும்புவதிற் காட்டிலும் எம்பெருமானது திருவருள் நோக்கம் பதியுமாறு
அவன் கண் முகப்பிலே மெய்யடியாரோடு பிறரோடு வாசியற எல்லாரும் இடைவிடாது ஸஞ்சரிக்கும்படியான
ஓர் அசேதநப் பொருளாகி, அதிலே உன் பவளவாய் காணும்படியானதொரு சைதந்யத்தையும் பெறக் கடவே னென்று
தமது விசேஷமான விருப்பத்தை விண்ணப்பஞ் செய்கிறார் இதில்.

இப்பாசுரத்தை அடியொற்றியே விஷ்ணுவாலயங்களிற் கோயிலினுள் வாசற்படி “ குலசேகரப்படி “ என்று
இவர் பெயரையிட்டு வழங்கப்படும் என்பது ஸம்ப்ரதாயம்.

————–

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–

பதவுரை

உம்பரு உலகு–மேலுலகங்களை யெல்லாம்
ஒரு குடை கீழ்–ஒரு கொற்றக் குடையின் நிழலிலே
ஆண்டு–அரசாண்டு
உருப்பசி தன்–ஊர்வசியினுடைய
அம்–அழகிய
பொன் கலை அல் குல்–பீதாம்பர மணிந்த அல்குலை
பெற்றாலும்–அடையப் பெறினும்
ஆதரியேன்–(அதனை) விரும்ப மாட்டேன்;
செம் பவளம் வாயான்–சிவந்த பவழம் போன்ற வாயை யுடையனான
எம்பெருமான்–எனது அப்பனுடைய
திருவேங்கடம் என்னும் பொன் மலை மேல்–திருவேங்கட மென்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல்
ஏதேனும் ஆவேன்–ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன்

கீழ்ப்பாட்டில் படியாகக் கிடக்க வேணுமென்று பிரார்த்தித்தது எம்பெருமானுடைய பவளவாய் காண்பதற்காக;
அப் புருஷார்த்தம் கிடையாதொழியினு மொழியும்; ஏனெனில்;
திருமலையில் ஸந்நிதிக்குள் கருங்கல் படியிருப்பது திருவேங்கட முடையானுடைய செல்வத்திற்குத் தகாது என்று
மஹா ப்ரபுக்கள் வந்து அப்படியை ஸ்வர்ண கவசத்தால் ஆவரிக்கக் கூடும்.
அப்போது நாம் அப்பன் திருமுகமண்டல ஸேவையை இழந்தோமாவோம்;
ஆகையால் படியாய்க் கிடப்பதும் பாங்கல்ல என்று அறுதியிட்டார்.

பின்னை எந்தப் பிறவியைப் பிரார்த்திக்கலாமென்று யோசித்தார்.
கீழ் நிகழ்ந்த மாதிரி ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு அநுபபத்தி தோன்றிக் கொண்டேயிருந்தது.
கடைசியாக ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பாதவராய்
“ எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே” என்கிறார்.

—————-

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-

பதவுரை

கொல் நவிலும்–(பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற
கூர் வேல்–கூர்மையான வேலாயுதத்தை யுடைய
குல சேகரன்-குல சேகராழ்வார்
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்– நிலை பெற்ற குளிர்ச்சி யுள்ள சாரல்களை யுடைய
வட வேங்கட மலையில் எழுந்தருளி யிருக்கிற பெருமானது
பொன் இயலும் சே அடிகள்–பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை
காண்பான்–ஸேவிப்பதற்கு
புரிந்து–ஆசைப்பட்டு
இறைஞ்சி–வணங்கி
சொன்ன–அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ்–ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பதிகத்தை
வல்லார்–கற்று வல்லவர்
பாங்கு ஆய பத்தர்கள்–அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்

அடிவரவு – ஊன் ஆனாத பின் ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய தரு.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading