ஸ்ரீ பெருமாள் திருமொழி -2–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

பதவுரை

தேட்டரும்–(தன் முயற்சியால்) தேடிப் பெறுதற்கு அருமை யானவனும்
திறல்–(தன்னை முற்ற அநுபவிப்பதற்கு உறுப்பான) வலிவைக் கொடுப்பவனும்
தேனினை–தேன் போல் பரம போக்யனும்
தென் அரங்கனை–தென் திருவரங்கத்தில் வாழ்பவனும்
திரு மாது வாழ் வாட்டம் இல் வன மாலை மார்பனை–பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் செய்தற்கிடமாய்
வாடாமல் செவ்வி பெற்றிருக்கிற வன மாலையை அணிந்துள்ள திரு மார்வை யுடையனுமான ஸ்ரீரங்கநாதனை
மால் கொள் சிந்தையர் ஆய்–(அவன் திறத்தில்) மோஹங்கொண்ட மனதை யுடையராய்
ஆட்டம் மேவி–(அந்த மோஹத்தாலே நின்ற விடத்தில் நிற்க மாட்டாமல்) ஆடுவதிலே ஒருப்பட்டு
அலர்ந்து அழைத்து–(பகவந்நாமங்களை) வாய் விட்டுக் கதறி கூப்பிட்டு
அயர்வு எய்தும்–இளைப்படைகின்ற
மெய் அடியார்கள் தம்–உண்மையான அன்புடைய பாகவதர்களின்
ஈட்டம்–கோஷ்டியை
கண்டிட கூடும் ஏல்–ஸேவிக்கப் பெறுவோமாகில்
அது காணும் கண் பயன் ஆவது -கண் படைத்ததற்குப் பயன் அதுவே யன்றோ!

பூணா மார்பனைப் புள்ளுரும் பொன் மலையைக் காணாதரா; கண்ணென்றுங் கண்ணல்ல கண்டோமே” என்று
‘எம்பெருமாளைக் காண்பதே கண்படைத்ததற்கு ப்ரயோஜநம்’ என்கிற ஸித்தாந்தம் ஸாமாந்யமானதென்றும்
‘பாகவதர்களுடைய கோஷ்டியை ஸேவித்தாலன்றிக் கண்களுக்கு ஸாபல்யம் கிடையா’ தென்பதே விசேஷ ஸித்தாந்தமென்றும்
ஸாரமாகக் கண்டறிந்தவர்களுள் இவ்வாழ்வார் தலைவர் என்னுமிடம் இப்பாட்டில் விளங்கும்.

அடியவர்கட்குப் பரம யோக்யனான ஸ்ரீ ய:பதியை வாயாரத் துதித்து அவனிடத்திலே மிக்க மோஹங்கொண்டு
அதனால் உடம்பு நின்ற விடத்தில் நில்லாது கூத்தாடி,
‘ஸ்ரீ ய:பதியே! -ஸ்ரீ மந்நாராயணனே!’ என்றிப்படி பல திரு நாமங்களைக் கூறி யழைத்து,
அவ் வளவில் எம்பெருமான் கண்ணெதிரே வந்து ளேவை தந்தருளக் காணாமையாலே வருந்தி ஏங்குகின்ற
பாரமார்த்திக பாகவதர்களின் கோஷ்டியை ஸேவிக்கப் பெறுவதே கண்களுக்கு ப்ரயோஜநமாமென்கிறார்.

மேவி = மேவுதல்-விரும்புதல்:
“நம்பும் மேவும் நசையாகுமே.”
“கண்டிடக் கூடு மேல்” என்றது-இத்தகைய மெய்யடியார்களை இந் நிலவுலகத்தில்
காணப் பெறுவதின் அருமையை விளக்கும்.

———–

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

பதவுரை

தோடு உலாம் மலர் மங்கை–இதழ்கள் மிக்கிருந்துள்ள தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியினது
தோள் இணை தோய்ந்ததும்–திருத் தோள்களோடு அணைய வமுக்கிக் கட்டிக் கொண்டதும்
சுடர் வாளியால்–புகரை யுடைய அம்பினால்
நீடு மா மரம் செற்றதும்–நீண்ட ஸப்த ஸால வருக்ஷங்களைத் துளை செய்து தள்ளியதும்
நிரை மேய்த்ததும்–இப்படிப் பட்ட பகவச் சரிதங்களையே அநுஸந்தித்து
ஆடி–சரீர விகாரம் பெற்று
பாடி–(காதலுக்குப் போக்கு வீடாக வாய் விட்டுப்) பாடி
ஓ! அரங்க!! என்று–‘ஓ அரங்கனே!’ என்று (அவன் திரு நாமங்களைச் சொல்லி
அழைக்கும்–கூப்பிடுகிற
தொண்டர்–கைங்கரியத்தையே நிரூபகமாக வுடைய பாகவதர்களின்
அடி பொடி–திருவடித் தூள்களிலே
நாம் ஆட பெறில்–நாம் அவகாஹிக்கப் பெற்றால் (பிறகு)
கங்கை நீர்–கங்கா ஜலத்திலே
குடைந்து ஆடும் வேட்கை–அவகாஹித்து நீராட வேணுமென்கிற ஆசையானது
என் ஆவது–ஏதுக்கு?

“ பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பை பூண்டு, உண்டிராக் கிடக்கும் போது முடலுக்கே கரைந்து நைந்து” என்றபடி
அல்லும் பகலும் ஸம்ஸாரிக சிந்தனைகளே நிகழும் லௌகிகர்படி யில்லாமல்
எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களையே மாறி மாறி அநுஸந்தித்து, அவ் வநுஸந்தாநத்தாற் பிறந்த உகப்பு உள்ளடங்காமல்
பகந்நாமங்களை வாய்விட்டுக் கதறுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்ரீபாத தூளிகளில் அவகாஹிக்கப் பெற்றால்,
பிறகு ‘கங்கையில் நீராட வேணும்’ என்கிற விருப்பமும் வியர்த்தமேயாம் என்கிறார்.

————

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

பதவுரை

ஏறு அடர்த்ததும்–(நப்பின்னைக்காக) ஏழு ரிஷபங்களை வலியடக்கியதும்
ஏனம் ஆய் நிலம் கிண்டதும்–வராஹ ரூபியாய் பூமியைக் கோட்டாற் குத்தி யெடுத்ததும்
முன் இராமன் ஆய்–முன்பு சக்ரவர்த்தி திருமகனாய்ப் பிறந்து
மாறு அடர்த்ததும்–சத்ரு ராக்ஷஸர்களைக் கிழங்கெடுத்ததும்
மண் அளந்ததும்–(த்ரிவிக்ரமனாய்) உலகளந்ததும்
(ஆகிய இந்த சரிதங்களை)
சொல்லி பாடி–வாயாற் சொல்லி வாய் விட்டுப் பாடி
வண் பேர் பொன்னி ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு–ஔதார்யத்தையும் பெருமையை யுடைய
காவிரி யாறு போல் பெருகுகின்ற ஆநந்த பாஷ்பங்களாலே
அரங்கன் கோயில் திரு முற்றம்–நம் பெருமாள் ஸந்நதி உள் திரு முற்றத்தை
சேறு செய் தொண்டர்–சேறாக்குகிற பாகவதர்களின்
சே அடி செழு சேறு–திருவடிகளால் துகை யுண்ட அழகிய சேற்றை
என் சென்னிக்கு அணிவன்–என்னுடைய நெற்றிக்கு திலகமாகக் கொள்வேன்

எம்பெருமானுடைய பல அவதார சரித்திரங்களையே அநவரதம் வாயாரப் பாடிக் கொண்டு அன்பு மிகுதியால்
கண்களின்று பெரிய நதி போலப் பரவசமாகப் பெருகுகின்ற ஆநந்த புஷ்பங்களாலே ஸ்ரீரங்கநாதன்
ஸந்நிதித் திரு முற்றத்தைச் சேறாக்குகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளால் தொகை யுண்ட சேற்றை
எனது தலைக்கு அலங்காரமாகக் கொள்வேன் என்கிறார்.
கண்ண நீர் எவ்வளவு அடக்கினாலும நில்லாமல் பெரு வெள்ளமிடுதற்குப் பொருத்தமான த்ருஷ்டாந்தம் காவிரியேயாம்.
கண்ண நீர் -ஆறாம் வேற்றுமை யுருபு
கண்களினுடைய நீர் என்றபடி.

—————

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

பதவுரை

தோய்த்த தண் தயிர்–தோய்த்த தண் தயிர்
வெண்ணெய்–வெண்ணையையும்
பால்–பாலையும்
உடன் உண்டலும்–ஒரே காலத்திலே அமுது செய்தவளவில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி யானவள்
கண்டு உடன்று–(அந்த களவு தன்னைப்) பார்த்து கோபித்து
ஆர்த்த–(பிறகு அவளாலே) பிடித்துக் கட்டப்பட்ட
தோள் உடை–தோள்களை யுடைய
எம்பிரான்–எமக்குத் தலைவனான
என் அரங்கனுக்கு–என் ரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆய்–ஆட்பட்டவர்களாய்
நா தழும்ப எழ–நாக்குத் தடிக்கும்படி
நாரணா என்று அழைத்து–நாராயணா! என்று கூப்பிட்டு
மெய் தழும்ப தொழுது–சரீரம் காய்ப்பேறும்படி ஸேவித்து
ஏத்தி–தோத்திரம் பண்ணி
இன்புறும்–ஆனந்தமடைகின்ற
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
சே அடி–திருவடிகளை
என் நெஞ்சம்–என் மனமானது
ஏத்தி வாழ்த்தும்–துதித்து (அவர்களுக்கே) பல்லாண்டு பாடும்

“எத்திறம்! உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே!” என்று நம்மாழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடக்கும்படி
மயக்க வல்ல கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ட அபதாநத்தை அநுஸந்தித்து,
“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்-அணியரங்கன்” என்றபடி
ஸ்ரீரங்கநாதனை அக் கண்ண பிரானாகப் பாவித்துப் பணி செய்யும்
ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்டிருப்பேன் நான் என்கிறார்.

————–

பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-

பதவுரை

பொய்–க்ருத்ரிமமாய்
சிலை குரல்–கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான
ஏறு–(ஏழு) ரிஷபங்களின்
எருத்தம் இறுத்து–முசுப்புகளை முறித்தவனாய்
போர் அரவு ஈர்த்த கோன்–போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்த ஸ்வாமியாய்,
சிலை செய்–கல்லினால் செய்யப்பட்டு
சுடர் ஒளி–மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய்
திண்ணம்–த்ருடமாயிருக்குந் தன்மையையும் உடைத்தாய்
மா–பெரிதான
மதிள் சூழ்–மதிகளாலே சூழப்பட்ட
தென் அரங்கன் ஆம்–தென்னரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான ரங்கநாதனாகிய
மெய் சிலை கரு மேகம் ஒன்று–சரீரத்தில் வில்லோடு கூடிய ஒரு காள மேகமானது
தன் நெஞ்சுள் நின்று திகழப் போய்–தங்கள் மனதில் நிலைத்து விளங்கப் பெற்ற
மெய் சிலிர்ப்பவர் தம்மையே–மயிர்க் கூச் செறியும் சரீரமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே
என் மனம் நினைந்து–என் நெஞ்சானது அநுஸந்தித்து
மெய் சிலிர்க்கும்–மயிர்க் கூச்செறியப் பெற்றது.

அடியார்களை ஆட் கொள்வதற்காக அருமையான செயல்களைச் செய்தருளின எம் பெருமானாகிற
காள மேகத்தை ஹ்ருதயத்திலே வஹிக்கப் பெற்று எப்போதும் மயிர்க் கூச்செறியும் திருமேனியை
யுடையரா யிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை அநுஸந்தித்து,
அவர்கள் பாடும் பாட்டை என்னெஞ்சு படாநின்ற தென்கிறார்.

“திகழப்போய்” என்ற விடத்து, போய்-வார்த்தைப்பாடு.

“மனம் மெய் சிலிர்க்கும்” என்றது-மனம் விகாரப்படா நின்ற தென்றபடி.

—————

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

பதவுரை

ஆதி–ஜகத் காரண பூதனாய்
அந்தம்–ப்ரளய காலத்திலும் வாழ்பவனாய்
அநந்தம்–ஸர்வ வ்யாபியாய்
அற்புதம் ஆன–ஆச்சரிய பூதனாய்
வானவர் தம்பிரான்–அமரர்க்கதிபதியான ரங்கநாதனுடைய
மா மலர் பாதம்–சிறந்த மலர் போன்ற திருவடிகளை
சூடும் பத்தி இலாத–சிரஸா வஹிப்பதற் குறுப்பான அன்பு இல்லாத
பாவிகள் உய்ந்திட–பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி
எங்கும் திரிந்து–ஸர்வ தேசங்களிலும் ஸஞ்சாரஞ் செய்து
தீது இல்–குற்றமற்ற
நல் நெறி–நல் வழிகளை
காட்டி–(தமது அநுஷ்டாநமுகத்தாலே) வெளிப்படுத்திக் கொண்டு
எம்மான்–நமக்குத் தலைவனான
அரங்கனுக்கே–ஸ்ரீரங்கநாதனுக்கே
காதல் செய்–பக்தி பூண்டிருக்கின்ற
தொண்டர்க்கு–பாகவதர்கள் விஷயத்தில்
என் நெஞ்சம்–எனது மனமானது
எப் பிறப்பிலும்–எந்த ஜன்மத்திலும்
காதல் செய்யும்–அன்பு பூண்டிருக்கும்.

ஸகல ஜகத்காரண பூதனாய் ஸர்வ வ்யாபகனான எம்பெருமானிடத்து அன்பு இல்லாதவர்களான பாவிகளும்
அவ் வன்பைப் பெற்று உஜ்ஜீவிக்குமாறு தேச தேசாந்தரங்களெங்கும் ஸஞ்சரித்து
ஸ்வரூபாநுரூபமான அர்த்த விசேஷங்களை ஆங்காங்கு உபந்யாஸ முகேந உபதேசித்து வரும்
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே நான் பிறவி தோறும் அன்பு பாராட்டுவேன் என்கிறார்.

“எப் பிறப்பிலும்” என்ற சொற்போக்கால்,
அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் பக்தி பண்ணுவதற்காக இன்னும் பல ஜந்மங்களைத்
தாம் பெற விரும்பியிருக்குமாறு விளங்கும்.

—————-

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-

பதவுரை

கார் இனம் புரை–மேகங்களின் திரளை ஒத்த
மேனி–திருமேனியையும்
நல் கதிர்–அழகிய லாவண்யத்தையும்
முத்தம் வெண் நகை செய்ய வாய்– முத்துக்கள் போல் வெளுத்த புன் சிரிப்பை யுடைய சிவந்த திருப் பவளத்தையும்
ஆரம் மார்வன்–முக்தாஹாரமணிந்த மார்வையுமுடையனான
அரங்கன் என்னும்–ஸ்ரீரங்கநாதனாகிற
அரும் பெரும் சுடர் ஒன்றினை–அருமை பெருமை யுள்ள விலக்ஷணமான தொரு தேஜஸ்ஸை
சேரும் நெஞ்சினர் ஆகி–கிட்டி அநுபவிக்க வேணுமென்கிற சிந்தையை யுடையவராய்
சேர்ந்து–(அங்ஙனமே) சேர்ந்து
கசிந்து இழிந்த–(பக்தி பாரவச்யத்தாலே) சுரந்து பெருகின
கண் நீர்கள்–ஆநந்த பாஷ்பங்கள்
வார நிற்பவர்–வெள்ளமிட்டொழுகும்படி நிற்குமவர்களுடைய
தாள் இணைக்கு–இரண்டு திருவடிகள் விஷயத்தில்
என் நெஞ்சம்–என் மனமானது
ஒரு வாரம் ஆகும்–ஒப்பற்ற அன்பையுடையதாகும்.

பல காள மேகங்கள் திரண்டாற்போன்று விளங்குகின்ற திருமேனியையும்,
அத் திருமேனியில் ஓடுகின்ற விலக்ஷணமான லாவண்யத்தையும்,
முத்து வரிசை போன்ற புன் முறுவலையுமுடைய திருவதரத்தையும்,
முத்துமாலை யணிந்த திருமார்பையுமுடையனான ஸ்ரீரங்கநாதனென்கிற ஒரு பரஞ்சோதியை அடி பணிந்து
கண்ணுங் கண்ணீருமாய் நிற்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே என் நெஞ்சமானது
அநந்யப்ரயோஜநமாய் ஆட்பட்ட தென்கிறார்.

—————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

பதவுரை

மாலை உற்ற கடல்–(தன் திருமேனி ஸ்பர்சத்தாலே) அலை யெறிகிற திருப்பாற்கடலில்
கிடந்தவன்–பள்ளிகொள்பவனும்
வண்டு கிண்டு நறு துழாய் மாலை உற்ற–(தேனுக்காக) வண்டுகள் குடையா நின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்த
வரை பெரு திருமார்பினை–மலைபோற் பெருமை தங்கிய திருமார்பை யுடையவனும்
மலர் கண்ணனை–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவனுமான ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
மாலை உற்று–வ்யாமோஹத்தை அடைந்து
எழுந்து ஆடி–(இருந்தவிடத்திலிராமல்) எழுந்து கூத்தாடி
பாடி–(வாயாரப்) பாடி
திரிந்து–(திவ்ய தேசங்கள் தோறும்) ஸஞ்சரித்து
அரங்கன் எம்மானுக்கே–எமக்கு ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
மாலை உற்றிடும்–பித்தேறித் திரிகின்ற
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
வாழ்வுக்கு–ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கு
என் நெஞ்சம் மாலை உற்றது– என் மனம் மயங்கிக் கிடக்கின்றது.

திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனும் நறுந்தேன் மிக்க செவ்வித் துழாய் மாலையை யணிந்த
பெருந் திருமார்பை யுடையவனும் புண்டரீகாக்ஷனுமாகிய ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே மையல் கொண்டு
இருந்த விடத்திலிருக்க வொட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் விகாரப் படுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
அந்த ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கே என் நெஞ்சு பித்தேறா நின்ற தென்கிறார்.
அப்படிப்பட்ட நிலைமை நமக்கு வாய்க்குமோ? என்று ஆசை கொள்ளா நின்றதென்றபடி.

இரண்டாமடியில் மாத்திரம் மாலை என்பது நாதா என்ற வடசொல் விகாரம்.
மற்ற மூன்றடிகளிலுள்ள மாலை-மோஹம் என்னும் பொருளதான் மால் என்னுஞ் சொல்
இரண்டாம் வேற்றுமை யுருபேற்றது.

——————

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

பதவுரை

கண் பனி–ஆநந்த பாஷ்பமானது
மொய்த்து சோர–இடைவிடாமல் சொரியவும்
மெய்கள் சிலிர்ப்ப–உடல் மயிர்க் கூச்செறியவும் உடல்
ஏங்கி இளைத்து நின்று–நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய்
எய்த்து–நிலை தளர்ந்து
கும்பிடு நட்டம் இட்டு–மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி
எழுந்து ஆடி பாடி இறைஞ்சி–நின்ற விடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி,
என் அத்தன்–எனக்குத் தந்தையாய்
அச்சன்–ஸ்வாமியான
அரங்கனுக்கு–ஸ்ரீரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆகி–அடியவர்களாய்
அவனுக்கே–அந்த ரங்கநாதன் விஷயத்திலேயே
பித்தர் ஆமவர்–பித்தேறித் திரிகிறவர்கள்
பித்தர் அல்லர்கள்–பைத்தியக்காரர்களல்லர்;
மற்றயார் முற்றும்–(பத்தி கார்யமான இந்த வ்யா மோஹமில்லாத) மற்ற பேர்களெல்லாம்
பித்தரே–பைத்தியக்காரர்கள் தான்.

———–

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

பதவுரை

அல்லி மாமலர் மங்கை நாதன்–அக விதழ்களை யுடைய சிறந்த (தாமரை) மலரில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான
அரங்கன்–ஸ்ரீரங்கநாதனுடைய
மெய் அடியார்கள் தம்–உண்மையான பக்தர்களுடைய
என்றும் மேவு மனத்தன் ஆம்–எப்போதும் பொருந்திய திரு வுள்ளத்தை யுடையவரும்
கொல்லி காவலன்–கொல்லி நகர்க்கு அரசரும்
கூடல் நாயகன்–மதுரைக்கு அரசரும்
கோழி கோன்–உறையூருக்கு அரசருமான
குல சேகரன்–குலசேகராழ்வருடைய
சொல்லின்–ஸ்ரீஸூக்திளாலே அமைந்த
இன் தமிழ் மாலை வல்லவர்–இனிய தமிழ்ப் பாசுரங்களை ஒத வல்லவர்கள்
தொண்டர் தொண்டர்கள் ஆவர்–தாஸாநுதாஸராகப் பெறுவர்

எல்லையி லடிமைத் திறமாவது-
“அடியாரடியார் தம் மடியாரடியார் தமக்கடியார் தம் அடியாரடியோங்களே” என்கிற சேஷத்வ காஷ்டை.

அடிவரவு: தேட்டு தோடேறு தோய்த்த பொய் ஆதி காரினம் மாலை மொய்த்து அல்லி மெய்.

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading