கீழில் திரு மொழியில்
ஆதியான் அடியாரையும் -அடிமை இன்றித் திரிவாரையும் -என்று
சம்சாரிகள் பொல்லாங்கும்-ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றமும் -இறே சொல்லிற்று
சம்சாரிகளுக்கும் பகவத் சம்பந்தம் ஒத்து இருக்க -அவர்களை கழிக்கைக்கு அடி –
சம்பந்த ஞானம் இல்லாமை -இறே
வணக்கொடு மாள்வது வலமே -என்று
சரம சமயத்திலே (ஆகிலும் )பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகை ஸ்ரேஷ்டம்
ஆகையால் -சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்-
இத் திரு மொழியில்-
————
திரு நாமங்களை சொல்லுமவர்கள் பெரும் பேறு என்னால் சொல்லப் போகாது -என்கிறார்-
ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-
பதவுரை
ஆசை வாய்–(தனக்கு) ஆசையுள்ள விதத்திலே
சென்ற–போர்ப் பாரத்த
சிந்தையார் ஆகி–நெஞ்சை யுடையாராய் கொண்டு
என் அன்னை–என்னுடைய தாய்
என் அத்தன்–என்னுடைய தகப்பன்
என் புத்திரர் என்னுடைய பிள்ளைகள்
என் பூமி–என்னுடைய நிலம்
வாச வார்–பரிமளம் வீசுகின்ற
என் குழளான–கூந்தலை யுடையவளான என் மனைவியான
என்று–என்று சொல்லிக் கொண்டு
மயங்கி–(அவர்கள் பக்கத்தில்) மோஹமடைந்து
(பழூதே பல பகலும் போக்கினாலும்)
மாளும் எல்லைக் கண்–சரம ஸமயத்தில்
வாய் திறவாதே–வாய் திறந்து(அவர்கள் பேச்சை) சொல்லி யழையாமல்
கேசவா என்றும்
கேசவனே என்றும்
புருடோத்தமா என்றும்–புருடோத்தமனே என்றும்
கேழல் ஆகிய கேடு இலீ என்றும்–‘வராஹ ரூபியாய் அவதரித்தவனும் அழிவில்லாதவனுமான எம்பெருமானே! என்றும்
பேசுவார் அவர்–சொல்லுவார்கள்
எய்திய–அடையக் கூடிய
பெருமை–பெருமைகளே
பேசுவான் புகில்–பேசப் புக்கால்
நம் பரம் அன்று–நம்மால் பேசித் தலை கட்டப் போவது-
ஆசை -இத்யாதி
சிநேகம் இருந்த இடத்திலே கை கழிந்த மனசை உடையராய்
அன்னை-என்று தொடங்கி -வாசவார் குழலாள் அளவும் ஆசை இருக்கும் இடம் மயங்கி
இவர்கள் பேரும் சொல்ல மாட்டாதே மயங்கி
மாளும் எல்லைக் கண்-
வைத்த நாள் வரை எல்லை குறுகி -என்கிற படியே சரம காலத்தில்
வாய் திறவாதே
அவ்வளவிலே கீழ் சொன்னவர்கள் பேரை சொல்லி அழையாதே-
அவர்கள் பேர் சொல்ல ஒண்ணாதாகில் பின்னை யார் பேரை சொல்லுவது என்னில்
கேசவா
உங்கள் மரண வேதனை போக வேணும் ஆகில் –
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே
புருடோத்தமா-
ஒவ்தார்யம்
அதாவது-
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை
என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
இவர்கள் கேடு போனால் தன் கேடு போச்சுதாக நினைத்து இருக்கை
பேசுவார் அவர் எய்தும் பெருமை-
அவர்கள் ஏற்றத்துக்கு பாசுரம் இடப் போகாது
அவர் -என்னும் இத்தனை இறே
அவர்கள் பேரும் பேற்றை நம்மால் பேசப் போகாது
பேசுவான் புகில்-
பேசப் புக்கோம் ஆகில்
நம் பரம் அன்றே-
நம்மால் பேசித் தலைக் கட்டப் போகாது- கொடுக்கிறவன் தான் அறியும் இத்தனை
அதாவது
இதர சங்கம் குலைய பெறுவதாம்
சரம காலத்தில் அவர்களை அழையாது ஒழிய பெறுவதாம்
நம்முடைய பேச்சுக்களை சொல்லப் பெறுவதாம்
இது என்ன ஏற்றம் இது என்ன ஏற்றம் -என்று இதன் ஏற்றம் அறிந்து ஈடுபடுவான் அவன் இறே
—————–
சீயினால் சிறந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பிருந்து எங்கும்
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்
வாயினால் நமோ நாரணா என்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக ஒட்டாரே -4= 5-2 –
பதவுரை
சீயினால்–சீயாலே
செறிந்து எறிய–மிகவும் நிறைந்த
புண் மேல்–புண்ணின் மேல்
செற்றல் ஏறி–ஈ இருந்து முட்டை யிட்டு
குழம்பிருந்து–அலை புழுத்து சீயாய்ப் பாயுமளவில்
எங்கும்–உடல் முழுதும்
ஈயினால்–ஈயாலே
அரிப்புண்டு–அரிக்கப்பட்டு
மயங்கி–(வேதனை பொறுக்க முடியாமல்) மூர்ச்சை யடைத்து
எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்–சரம காலத்தைக் கிட்டுவதற்கு முன்னே
வாயினால்–வாயாலே
நமோ நாராணா என்று–‘நமோ நாராயணாய்’ என்று சொல்லிக் கொண்டு
மத்தகத்திடை–உச்சியிலே
கைகளைக் கூப்பி–அஞ்ஜலி பண்ணி
(சரீர வியோகமான பின்பு)
போயினால்–(பரம பதம்) போய்ச் சேர்ந்தால்
பின்னை–பிறகு
பிணைக் கொடுக்கிலும்–(நித்ய முக்தர்கள்) ‘நாங்கள் உத்தர வாதம் பண்ணுகிறோம்’ என்றாலும்.
என்றும்–ஒருகாலும்
போக ஒட்டார்–(இந்த முக்தர்களைப்) போக வொட்டார்கள்–
சீயினால் சிறந்து ஏறிய புண் மேல்-
சீயானது விஞ்சி புடைபட்ட புண் மேல்
செற்றல் ஏறி-
ஈயிலில் இருந்து முட்டை இட்டு
குழம்பிருந்து-
அவை புழுத்து நீராய் பாயும் அளவிலே
ஈயினால் அரிப்புண்டு மயங்கி –
அது பொறுக்க மாட்டாமல் மூர்ச்சித்து
எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம் –
சரம காலத்தை சென்று கிட்டுவதற்கு முன்னே
வாயினால் நமோ நாரணா என்று-
வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி -எனக்கு நான் உரியேன் அல்லேன் –
உனக்கு உரியேன் -என்று சொல்லுகை இறே வாய் படைத்ததுக்கு பிரயோஜனம்-
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி –
தலை படைத்த பிரயோஜனம் பெற்று-
போயினால் –
இப்படி செய்து போனால்-
போயினால் என்றது வழிப் போக்கு தானே பிரயோஜனம் -என்கை-
இவன் ஒருகால் தொழுதால் இதுக்குப் பலம் வழிப் போக்கில்-
மற்று எல்லாம் கை தொழப் போய் -என்றும்
தொழுதனர் உலகர்கள்-என்றும்-
சொல்லுகிறபடியே இவன் பார்த்த பார்த்த இடம் எல்லாம் அஞ்சலிக் காடாய் இறே இருப்பது –
அங்கு புக்காலும்-
பத்தாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்றது இறே பலம்-
இவன் ஒருக்கால் ஆத்ம சமர்ப்பணம் பண்ண-
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் -என்று த்ரிபாத் விபூதியாக சமர்பிப்பர்கள்-
ஒருக்கால் நம என்ன- கால தத்வம் உள்ளதனையும் நமோ நாராயணா என்று-சூழ்ந்திருந்து ஏத்துகை இறே பலம் –
பின்னை இத்திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக ஒட்டாரே –
நித்ய முக்தரை பிணை இடிலும் போக ஒட்டார்கள்-அதுக்கடி-
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் தேசம் ஆகையாலே-
அவன் தானும் -ஏற்றி வைத்து ஏணி வாங்கும் அவனிரே-
இத்தால் கர்மம் அடியாக மீட்சி இல்லை என்றபடி –
———–
ஆத்மா சமர்ப்பணம் பண்ணினார்க்கு யம வச்யதை இல்லை என்கிறார்-
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-
பதவுரை
சோர்வினால்–களவு வழியாலே-புத்தி மறதியால்
பொருள் வைத்தது–(எங்கேனும் ஏதாவதொரு) பொருள் வைக்கப் பட்டிருக்குமாகில்
சொல்லு சொல் என்று–(அதைச்) செல்லு, சொல்லு என்று
சுற்றும் இருந்து–சூழ்ந்து கொண்டு
ஆர் வினவிலும்–எப்படிப்பட்ட அன்பர்கள் (வேட்ட இளையாள் ) கேட்டாலும்
வாய் திறவாதே–(அவர்களுக்கு மறு மாற்றம் சொல்லுகைக்கும்) வாயைத் திறக்க மாட்டாதபடி.
அந்தக் காலம்–மரண காலமானது
அடைவதன் மூலம்–வந்து கிட்டுவதற்கு முன்னே;
மார்வம் என்பது–‘ஹ்ருதயம்’ என்கிற
ஓர் கோயில்–ஒரு-அத்விதீயமான – ஸந்நிதியை
அமைத்து–ஏற்படுத்தி (அந்த ஸந்நிதியில்)
மாதவன் என்னும்–‘திருமால்’ என்கிற
தெய்வத்தை–தேவதையை
நாட்டி–எழுந்தருளப் பண்ணி (அத் தெய்வத்தைக் குறித்து)
ஆர்வம் மென்பது–பக்தி என்கிற
ஓர் பூ–ஒரு புஷ்பத்தை
இட வல்லார்க்கு–ஸமர்பிக்க வல்லவர்களுக்கு
அரவ தண்டத்தின்–யம படர்களால் வரும் துன்பத்தில் நின்றும்
உய்யலும் ஆம்–தப்பிப் பிழைக்கலாகும்–
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்-
முன்பு இவன் கையில் கண்டவை அடைய -அட்டைகள் போல் சுவைப்பர் -என்கிறபடியே
இவன் கையில் உள்ளவை நிச் சேஷமாக வாங்கி கொள்ளுவார்கள் -இவர்களைக் காணாமல் வைத்தது உண்டாகில்
சொல்லு சொல்லு என்று –
ஒரு கால் சொன்னால் போல் ஒன்பதின் கால் சொல்லி –
சுற்றும் இருந்து –
இவன் ஒருத்தரை ஒருத்தர் அறியாமல் -கொடுக்கில் செய்வது என்-
என்று விடாதே சுற்றும் இருப்பர்கள்-
ஆத்ம பந்துக்கள் ஆகில் இறே-
திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்பது –
துஞ்சும் போது அழைமின் -இத்யாதி
ஆர் வினவிலும் வாய் திறவாதே –
பகவத் பாகவத விஷயங்களையும் -ஆசார்யனையும் -பிரகிருதி பந்துக்களையும் –
மறைத்து வைத்த அர்த்தம் கொடுத்த வேட்ட இளையாள் வினவிலும் வாய் திறவாதே –
இவர்களுக்கும் இவளுக்கும் -இவனை இழக்க புகுகிறோம் என்ற பயம் அன்று –
இவன் வைத்த அர்த்தம் ஒருவரும் அறியாமல் மண் தின்று போகில் செய்வது என் -என்கிற பயம் –
இவ் அர்த்தத்தை நச்சி வரும் போதும் –
அக் காலத்திலே அவன் முகத்திலே விழிக்க வருகிறோமே -என்று இறே வருவது
அந்த காலம் அடைவதன் முன் –
சரம காலம் வருவதற்கு முன்னே
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து-
ஹ்ருதயம் என்று பிரசித்தமாய் -அத்விதீயமான ஸ்த்தானத்தை உண்டாக்கி –
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
ஸ்ரீ யபதி -என்று பிரசித்தமாய் -அத்விதீயமான வஸ்துவை பிரதிஷ்டிப்பித்து –
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் -என்று
இவர் அஹ்ருதயமாக சொன்னதை சஹ்ருதயமாக கொண்டு வந்து புகுந்தான் –
இவர் இப்போதே -அஹ்ருதயமாக சொன்னேன் -என்னவும் வல்லர்-
அதுக்கு முன்பு இவர் நெஞ்சில் இடம் அற புகுந்து கொள்ளும் கிடீர் என்று பிராட்டியும் கூடக் கொண்டு புகுந்தான் –
இவர் நெஞ்சு திருந்துவதற்கு முன்பு இறே -அல்லாத இடங்களில் நிற்பது –
நின்றது எந்தை ஊரகத்து -இத்யாதி-
உகந்து அருளின நிலங்களில் கண்டு அனுபவிக்குமா போலே
இவர் திரு உள்ளத்தில் இருப்பதும் கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இவர்க்கு –
சல சயனத்து உள்ளும் எனது உள்ளத்து உள்ளும் உறைவாரை உள்ளீரே -என்னக் கடவது இறே –
வந்தாய் என் மனம் புகுந்தாய் -என்று இறே புகுந்தது –
வந்து வந்து என் மனத்து இருந்து -என்கிறபடியே இவர் இசையாமல் -தட்டின நாளைக்கு ஓர் அவதி இல்லை இறே
அடியார் மனத்தாயோ-
வெள்ளத்தான் வேம்கடத்தான் ஏலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் -என்று
உகந்து அருளின நிலங்களோடு ஒக்கும் -இறே இவர் திரு உள்ளமும் –
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –
(பக்தி என்னும் பூ
பக்தியையும் பூவையும் -இரண்டு நிர்வாகங்கள் )
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் -என்று
தேக பந்துக்களையும் -ஆத்ம பந்துக்களையும் மறைத்து வைத்த பொருளை இட்டு
கோவில் சமைத்து
திரு நந்தவனத்தையும் உண்டாக்கி
திருப் பள்ளித் தாமத்தையும்
தேடு என்று -இவனை அரிய தேவைகளை இடான் இறே –
நாடாத மலர் நாடி நாள் தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -இறே
இவனை அடியிலே-திருவடியிலே என்றும் -ஆதியிலே -என்றும் – சிருஷ்டித்தது –
இப்படி பூவோடு பூவை சேர்க்க வல்லார்க்கு –
அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே-
யம படரால் வரும் கிலேசம் –
அதாவது –
வெம் சொல் ஆளர்கள் நமன் தமர் அடியர் கொடிய செய்யன உள-என்னக் கடவது இறே –
நெடும் சொல்லால் மறுத்ததற்கு பலம் கடும் சொல் கேட்கை இறே-
உய்யலும் ஆமே-
ப்ராப்யத்திலும் இது (யம படரால் வரும் கிலேசம்) போகை இறே பிரதானம் -என்கிறார் –
———-
பிரணவ அர்த்தம் நெஞ்சில் பட்டவர்கள்-அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவர் -என்கிறார் –
மேல் எழுந்தது ஒரு வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறி கண் உறக்கம் அது ஆவது முன்
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ணகத்தினில் மேவலும் ஆம் – 4-5-4-
பதவுரை
மேல் எழுந்தது ஓர் வாயு–ஊர்த்துவ ஸ்வாஸமானது
கிளர்ந்து–மேலெழுந்ததனால்
மேல் மிடறு–நெஞ்சானது
உள் எழ வாங்கி–கீழே இடிந்து விழப் பெற்று
காலும் கையும்–கால்களும் கைகளும்
விதிர் விதிர்த்து ஏறி–பதைபதைக்கப் பெற்று
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்–தீர்க்க நித்திரையாகிய மரணம் ஸம்பவிப்பதற்கு முன்னே,
மூலமாகிய ஒற்றை எழுத்தை–(ஸகல வேதங்களுக்கும்) காரணமாகிய ‘ஓம்’ என்ற பிரணவத்தை
மூன்று மாத்திரைகள் உள் எழ வாங்கி–உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்து
வேலை வண்ணனை–கடல் போன்ற நிறத்தை யுடையவனான எம்பெருமானை
மேவுதிர் ஆகில்–ஆஸ்ரயித்தீர்களாகில்
விண் அகத்தினில்–ஸ்ரீவைகுண்டத்தில்
மேவலும் ஆம்–அடியார்கள் குழாங்களை) உடன் கூடவும் பெறலாம்–
மேல் எழுந்தது ஒரு வாயு கிளர்ந்து –
மேல் மூச்சு எறிந்து –
மேல் மிடற்றினை உள் எழ வாங்கி –
நெஞ்சு கீழே இடிந்து விழுந்து
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறி –
பிராண வாயு மேல் நோக்கின வாறே -காலும் கையும் பதை பதிக்க தொடங்கிற்று
கண் உறக்கம் அது ஆவது முன் –
தீர்க்க யாத்ரை கொள்வதற்கு முன்னே
மூலமாகிய ஒற்றை எழுத்தை -மூன்று மாத்திரை உள்ளே வாங்கி –
சகல வேதங்களுக்கும் காரணமான -திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தை -உச்சாரண க்ரமம் தப்பாமல் உச்சரித்து –
வேலை வண்ணனை மேவுதிர் ஆகில்-
ஸ்ரீ வைகுண்ட நாதனை கிட்ட வல்லி கோள் ஆகில்
விண்ணகத்தினில் மேவலும் ஆம் –
அடியார்கள் குழாங்கள் உடன் கூடலாம் -என்கிறார் –
————-
விரோதி நிரசன சீலனை ஏத்து வார்க்கு முன்பு கிலேசப் பட்டது போலே –
இனி போக வேண்டாம் என்கிறார் ( இந்த்ரியங்களே விரோதி )
மடி வழி வந்து நீர் புனல் சோர வாயில் அட்டிய கஞ்சியு மீண்டே
கடை வழி வாரக் கண்ட மடைப்ப கண்ணுறக்கம் ஆவது முன்
துடை வழி நும்மை நாய்கள் கவரா – சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார்
இடை வழி யினீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – 4-5- 5-
பதவுரை
மடி புலன் வழி வந்து–லிங்கத்தின் வழியாக வந்து
நீர் சோர–மூத்திர நீர் பெருகவும்
வாயில்–வாயிலே
அட்டிய–பெய்த
கஞ்சியும்–பொரிக் கஞ்சியும்
கண்டம் அடைப்ப–கழுத்தை அடைக்கவும்
மீண்டும்–மறுபடியும்
கடை வழி–கடை வாய் வழியாலே
வார–(அந்தப் பொறிக் கஞ்சி வழியா நிற்கவும்
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்
இருடீகேசன் என்று–(ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி)
ஏத்த வல்லீர்–ஸ்தோத்திரம் பண்ண வல்லவர்களே!
நாய்கள்–(யம லோகத்திலுள்ள) செந்நாய்களானவை
உம்பை–உங்களை
கவரா–கவர மாட்டா;
(யம கிங்கரர்களும் )
உம்மை–உங்களை
சூலத்தால்–சூலாயுதத்தால்
பாய்வதும் செய்யார்–கத்தவும் மாட்டார்கள்;
நீர்–நீங்கள்
இடை வழியில்–நடு வழியில்
கூறையும்–வஸ்திரத்தையும்
இழவீர்–இழக்க மாட்டீர்கள்
மடி வழி வந்து நீர் புனல் சோர-
யம படரை கண்ட பயத்தால் -ஓர் இந்திரிய விசேஷத்தாலே ஜலம் பிரவஹிக்க
வாயில் அட்டிய கஞ்சியு மீண்டே கடை வழி வாரக் கண்ட மடைப்ப-
பொரிக் கஞ்சியை கொடுத்தால் -கண்டம் அடைக்கையாலே -உள்ளுப் புகாதே
மீண்டும் கடைவழியே வழியா நிற்கும்
கண்ணுறக்கம் ஆவது முன்
தீர்க்க நித்திரை கொள்ளுவதர்க்கு முன்
துடை வழி நும்மை நாய்கள் கவரா –
நாயினத்தொடும் திளைத்திட்டு ஓடியும் உழன்றும் -என்றதற்கு பலம்
சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார்
உயிர்களைக் கொன்றேன் -என்று ஆயுதத்தாலே நலிந்ததுக்கு பலம்
இடை வழி யினீர் கூறையும் இழவீர் –
வழியில் நின்று சீரை உரிந்ததுக்கு பலம்
என்று என்று சொல்லி இறே அவர்கள் நலிவது –
இது தப்ப வேண்டி இருந்தீர்களோ ஆகில்
இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே –
இந்திரியங்களை நியமிக்க வல்லவன் என்று -ப்ரீதியோடே கூட
ஸ்தோத்ரம் பண்ணினால் இவை வாரா
யம வச்யதைக்கு அடி இந்திரிய வச்யதை இறே
இதுக்கு சாதனமாக இறே பர ஹிம்சாதிகள் பண்ணுவது
அத்தைக் குலைக்கும் அவன் -என்கிறார்
————
இப்பாட்டில் ஒருக்கால் உபாய வரணம் பண்ணினார்க்கு
சதா பச்யந்தி பண்ணலாம் -என்கிறார் –(ஓர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே)
(ரக்ஷகத்வம் போக்யத்வம் -திரு நாம வைபவம் அருளிச் செய்யும் பிரகாரணம் )
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்
வங்கம் விட்டு வுலவும் கடல் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து
ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே -4 -5-6 –
பதவுரை
அவை ஐந்தும்–பஞ்ச பிராணன்களும்
அங்கம் விட்டு–உடலை விட்டு
அகற்றி–அகன்று போக
மூக்கினில்–மூக்கில் (கையை வைத்து)
ஆவி சோதித்த பின்னை–‘பிராணன் இருக்கிறதா இல்லையா’ என்று சோதித்துப் பார்த்து, இல்லை யென்றிந்த பின்பு
சங்கம் விட்டு–(அவருடைய உயிரில்) ஆசையை விட்டு,
(அங்குள்ளாரை நோக்கி, இப்போதை நிலைமை என்? என்று வந்தவர்கள் கேட்க; (அவர்களுக்குப் பதிலாக)
கையை மறித்து–கையை விரித்துக் காட்டி
பைய–மெள்ள மெள்ள
தலை சாய்ப்பதன் முன்னம்–(தங்கள்) தலையைத் தொங்க விட்டுக் கொள்வதற்கு முன்னே,
வங்கம்–கப்பல்களானவை
விட்டு உலவும்–இடை விடாமல் திரியப் பெற்ற
கடல்–கடலில்
பள்ளி–பள்ளி கொள்பவனும்
மாயனை–ஆச்சரிய சக்தி யுத்தனும்
மது சூதனை–மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானை
மார்பில்–ஹ்ருதயத்தில்
தங்க விட்டு வைத்து–அமைத்து,
ஆவது ஓர் கருமம்–ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததொரு (உபாய வரணமாகிற காரியத்தை)
சாதிப்பார்க்கு–ஸாதிக்குமவர்களுக்கு
என்றும்–எந்நாளும்
சாதிக்கலாம்–பலாநுபவம் பண்ணப் பெறலாம்.
அகன்று -என்னுமது அகற்றி என்று கிடக்கிறது
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி-
பஞ்ச வ்ர்த்தி பிராணன் சரீரத்தை விட்டு அகன்று
ஆவி மூக்கினில் சோதித்த பின்னை –
இவனுக்கு பிராணன் இல்லை என்று அறிந்த பின்பு
சங்கம் விட்டு –
1-இனி இவன் பிழைக்கும் என்னும் ஆசையை விட்டு –
சங்கம் விட்டு -என்று
அன்றிக்கே –
2-சொல்லு சொல்லு என்று சுற்றும் இருக்கிற திரள் குலைந்தது -என்னுதல்
அன்றிக்கே –
3-இவன் பக்கல் சில கிடைக்கும் என்கிற ஆசையை விட்டு -என்னுதல்
அவர் கையை மறித்து-
அங்கு இருந்தவர்களை -அவன் செய்தது என் -என்று வந்தவர்கள் கேட்க –
கையை மறித்து
பையவே தலை சாய்ப்பதன் முன் –
மெள்ள இவன் அருகும் நின்று எழுந்து இருந்து விடப் போய் –
இவனை இழந்த இழவு தோற்ற -கவிழ்தலை இட்டு கிடப்பார்கள் ஆய்த்து
வங்கம் விட்டு வுலவும் கடல் பள்ளி மாயனை-
மரக்கலம் உலவா நின்றுள்ள -கடலில் கண் வளர்ந்து அருளுகிற -ஆச்சர்ய பூதனை –
அன்றிக்கே –
மாயனை -என்றது -ஞானமாய் –
தன் இச்சையால் கண் வளர்ந்து அருளுகிறவன்-என்றபடி
குரை கடல் மேல் அரவணை மேல் குலவரை போல் பள்ளி கொண்டு -என்னக் கடவது இறே
மது சூதனை-
மதுவை நிரசித்தால் போலே ஆஸ்ரித விரோதியைப் போக்குமவனே
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் (8-10 )-என்னக் கடவது இறே
மார்பில் தங்க விட்டு வைத்து –
தங்க விடுகை யாவது ஓர் இடத்திலே இருத்துகை
ஆவதோர் கருமம் –
ஸூகரமுமாய்
ப்ராப்தமுமான
ஆத்ம சமர்ப்பணம் –
நம வென்னலாம் கடமை (3-3 )-என்னக் கடவது இறே
சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே-
உபாயம் ஸக்ருத் கர்தவ்யம்
உபேயம் சதா ப்ராப்தவ்யம்
ஆவத்தனம் -என்று ஸக்ருத் சேவித்து இருக்கும் -என்று சதா
(ஸக்ருத்தும் சதாவும்
சாதிப்பாருக்கு ஆத்ம சமர்பணம் செய்பவர்
என்றும் சாதிக்கலாம் -நித்ய கைங்கர்யம்
கீழே 4-2-6 பாசுரம் பார்த்தோம் ஆபத்துக்கு நிதானம் -சேவித்து இருக்கும் வர்த்தமானம் பலம் கிட்டும் )
————
இப்பாட்டில் -விரோதி நிரசன சீலனை அனுசந்திப்ப நித்ய ஸூரிகள் கார்யத்துக்கும்
ஸ்ரீ வைகுண்ட நாதனோடு மன்றாடுவர்கள் என்கிறார் –
தென்னவன் தமர் செப்பமில்லாதார் சேவதக்குவார் போலப் புகுந்து
பின்னும் வன் கயிற்றில் பிணித் தெற்றிப் பின் முன்னாக விழுவதன் முன்
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருளற நோக்கி
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – 4-5 -7-
பதவுரை
செப்பம் இலாதார்–ருஜுவான செய்கை இல்லாதவர்களான
தென்னவன்–தமர் யம கிங்கரர்கள்
சே அதக்குவார் போல–எருதுகளை அடக்கி ஓட்டுபவர்கள் போல
புகுந்து–வந்து,
பின்னும்–அதற்கு மேல்
வல் கயிற்றால்–வலிவுள்ள பாசங்களினால்
பிணித்து–கட்டி
எற்றி–அடித்து
பின் முன் ஆக–தலை கீழாக
இழுப்பதன் முன்னம்–(யம லோகத்துக்கு) இழுத்துக் கொண்டு போவதற்கு முன்னே
மன்னவன் (அந்தத் தென்னவனுக்கும்) மன்னவனான எம்பெருமான்
இன்னவன் இனையான் என்று சொல்லி–இப்படிப்பட்ட ஸ்வரூபத்தையுடையவன், இப்படிப் பட்ட ஸ்பாவத்தையுடையவன் என்று
(அவனுடைய ஸ்ரூப ஸ்வபாவங்களைச் சொல்லி-ஏகாந்த கல்யாண குணங்களை அனுசந்தித்து )
எண்ணி–(அவற்றை) நெஞ்சாலும் மநநம் பண்ணி
உள்ளத்து இருள் அற–ஹ்ருதயத்திலுள்ள (அஜ்ஞாநமாகிற) அந்தாரம் நீங்கும்படி
நோக்கி–(எம் பெருமானை) ஸாஷாத்கரித்து,
மதுசூதனன் என்பார்–(தேஹமுள்ளதனையும்) ‘மதுஸூதநனே’ என்று அவன் திரு நாமங்களையே சொல்லிக் கொண்டிருக்குமவர்கள்
வான் அகத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
மன்றாடிகள் தாம்–(எம்பெருமானோடே நித்ய ஸூரிகளின் கைங்கரியத்துக்காக) மன்றாடப் பெறுவர்கள்–
தென்னவன் தமர் –
தெற்கு திக்குக்கு கடவனான யமனுடைய சேஷ பூதர்
செப்பமில்லாதார் –
செவ்வை இல்லாதார்
கரண த்ரயமும் அடைவு கெட்டு இருக்கும் அவர்கள்
சேவதக்குவார் போலப் புகுந்து –
எருதுகள் தங்கள் வசப் படுக்கைக்கு -இவற்றின் செருக்கை குலைக்கும்
நீச ஜாதிகளைப் போலே புகுந்து துக்க அனுபவம் பண்ணுவிக்கை
பின்னும் வன் கயிற்றில் பிணித்து
சேவதக்குவார் அடக்கும் பிரகாரம் –
துக்க அனுபவத்துக்கு தங்கள் தர்சன மாத்ரமே அமைந்து இருக்க
பின்னையும் எம படர் -பாசங்களாலே -ஸூரியிலே வரிவாரைப் போலே வரிந்து
எற்றி –
நமன் தமர் செய்யும் வேதனை -என்கிறபடியே
எற்றி
பின் முன்னாக விழுவதன் முன் –
மூக்கும் முகமும் உதடும் பல்லும் தகரும்படி -முகம் கீழ்பட யமபுரத்தளவும் இழுப்பதற்கு முன்னே
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி-
அவன் இன்னான் என்னும் அதுக்கு ஏகாந்தமான குணங்களை அனுசந்தித்து
உள்ளத்து இருளற நோக்கி
நெஞ்சில் அஞ்ஞான அந்தகாரம் போக பார்த்து
மன்னவன்
தென்னவனுக்கும் மன்னவன் ஆனவன்
மதுசூதனன் என்பார்-
ஆஸ்ரித விரோதிகளை போக்கும் அவன் என்று சொல்லுவார்கள்
வானகத்து மன்றாடிகள்
பரம பதத்தில் நித்ய ஸூரிகள் கார்யத்துக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதனோடே
மன்றாடுவார்கள் இவர்கள் இறே –
தாமே-
வேறு சஹகாரிகள் இல்லை –
———
மூன்று எழுத்தை உச்சரிப்பார் ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி
அவனுக்கு ஆதரணீயர் என்கிறார்
கூடிக் கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து
பாடிப் பாடி யோர் பாடையில் இட்டு நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌதத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி யாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே-4 -5-8 —
பதவுரை
(மரணமான பின்பு)
உற்றார்கள்–பந்துக்களானவர்கள்
கூடி கூடி இருந்து–திரள் திரளாகக் கூடியிருந்து கொண்டு
குற்றம் நிற்க–(செத்தவன் செய்த) குற்றங்கள் (பல) கிடக்க (அவற்றை யெல்லாம் விட்டு விட்டு)
நற்றங்கள்–(சிறிது) நன்மையாகத் தோன்றும் படியான கூற்றை
பறைந்து–சொல்லி,
பாடிப் பாடி–(அழுகைப் பாட்டுக்களைப்) பலகால் பாடி
ஓர் பாடையில் இட்டு–ஒரு பாடையிலே படுக்க வைத்து
கோடி மூடி–வஸ்திரத்தை யிட்டு மூடி
நரிப் படைக்கு ஒரு பாகுடம் போல–நரிக் கூட்டத்துக்கு ஒரு பாகுக் குடத்தைப் பச்சையாகக் கொடுப்பதுபோல (இப் பிணத்தைப் கொடுக்கைக்காக,)
எடுப்பதன் முன்னம்–(சுடுகாட்டுக்குக் கொண்டு போவதாக) எடுப்பதற்கு முன்னே,
கௌத்துவம்–கௌஸ்துபத்தை
உடை–(திரு மார்பிலே) உடைய
கோவிந்தனோடு–சர்வ ஸூ லபனான எம்பெருமமான் பக்கலில்
கூடி ஆடிய–சேர்ந்து அவகாஹித்த
உள்ளத்தர் ஆனால்–நெஞ்சை யுடையவர்களாக ஆனால்,
குறிப்பு இடம்–அனுபவித்தே விநாசமாக்கும் யம லோகத்தை
கடந்து–(அதிக்ரமித்து,(பரம பதம் போய்ச் சேர்ந்து)
உய்யலும் ஆம்–உஜ்ஜீவிக்கப் பெறலாம்–
கூடிக் கூடி உற்றார்கள் இருந்து –
இவனுக்கு சரம காலம் வந்தவாறே -பந்துக்கள் எல்லாரும் திரண்டு திரள் திரளாக இருந்து
குற்ற நிற்க நற்றங்கள் பறைந்து-
இவன் பண்ணின பிரதி கூலங்கள் கிடக்க –
அல்ப அனுகூல்யங்கள் ஆனவற்றை சொல்லா நிற்பர்கள் –
மகா ராஜர் வாலி பட்ட அளவிலே அவன் முன்பு பண்ணின பிரதி கூல்யங்களை மறந்து
நான் முற்பட அகப்பட்ட போதே என்னைக் கொல்லலாய் இருக்க கொல்லாதே விட்டவனை இறே
நான் கொல்லுவித்தேன் -என்று அழுதான் இறே –
அத்தைக் கண்டு பெருமாளும் சோகித்தார் இறே
பெருமாள் ராவணன் -பூசல் தலையில் -யுத்த அரங்கத்தில் -நிராயுதனாய் நின்ற படியைக் கண்டு
கொல்லாதே -இன்று போய் நாளை வா -என்றார் இறே
ஸ்ரீ கிருஷ்ணன் கம்சனை நிரசித்த அநந்தரம்-அவன் ஸ்திரீகள் படும் க்லேசத்தை கண்டு –
நான் என்ன கார்யம் செய்தேன் -என்று வெறுத்தான் -இறே
இப்படி எல்லாருக்கும் கிருபை ஜனிக்கும் படி இறே
அத் தசை இருப்பது
பாடி பாடி –
இவர்கள் பிரலாபிக்கும் போது -ஒரு பிரபந்தம் பாடினால் போலே ஆய்த்து இருப்பது
யோர் பாடையில் இட்டு-
ஓர் ஆசந்தியிலே இவனை இட்டு
நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே –
நரிப்படை -நரிக் கூட்டம்
பாகுடம் -பாகு குடம்
கோடி மூடி எடுப்பதன் முன்னம்-
கோடிப் புடைவை இட்டு மூடி எடுத்து என்னுதல்
அன்றிக்கே
ஆசந்தியை கோடித்து என்னுதல்
இப்படி செய்வதற்கு முன்னே
கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு –
இவ் ஆத்ம வர்க்கத்தை தரித்தது -நிரூபகமாய் உடையவன் -சர்வ ஸூலபன்-ஸ்ரீ கிருஷ்ணன் உடன்
கூடி யாடிய உள்ளத்தர் ஆனால்-
ஈஸ்வரனும் சேதனனும் ஓர் நினைவாய் -(சேஷ பூதன் என்று ஒத்துக் கொண்டு -தாஸோஹம் )
அவன் குணங்களில் அவஹாகித்த நெஞ்சை உடையரானால்
குறிப்பிடம் கடந்து-
அவஸ்ய மநுபோக்தவ்யம்-என்கிறபடியே அனுபவ விநாச்யமான தேசத்தைக் கடந்து
உய்யலுமாமே–
உயிரும் தருமனையே நோக்கும் (முதல் திருவந்தாதி)-என்கிற தேசத்து ஏறப் போக பெறுவார்கள் -என்கிறார்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் (4-9-11 )-என்னக் கடவது இறே
———–
இப்பாட்டில்
சர்வ வித பந்துவாக அவனைப் பற்றினால்
பின்னை யம வச்யதை இல்லை என்கிறார்
வாயோரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழிக் கண்கள் மிழற்ற
தாயொரு பக்கம் தந்தை யொரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலத்த
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலோடும் சிக்கென சுற்ற
மாயொருபக்க நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே -4- 5-9 –
பதவுரை
வாய்–வாயானது
ஒரு பக்கம் வாங்கி வலிப்ப–(வாயுவினாலே) ஒருக்கடுத்து வலிக்கவும்
வார்ந்த நீர்–பெருகா நின்ற நீரை யுடையதும்
குழி–உள்ளே இடிய இழிந்ததுமான
கண்கள்–கண்ணானது
மிழற்ற–அலமந்து நிற்கவும்,
ஒரு பக்கம்–ஒரு பக்கத்தில்
தந்தை–தகப்பானரும்
தாரமும்–மனைவியும் (இருந்து கொண்டு)
அலற்ற–கதறி அழவும்
ஒரு பக்கம்–மற்றொரு பக்கத்திலே
தீ–நெருப்பானது
சேர்வதன் முன்னம்–(மார்லில வந்து) சேர்வதற்கு முன்னே
செம் கண் மாலொடும்–புண்டரீகரக்ஷனான எம்பெருமானை
சிக்கன சுற்றம் ஆய்–நிருபாதிக பந்துவாகக் கொண்டு
ஒரு பக்கம்–சம்சார பந்து கலசாமல் -அவனொருவனிடத்திலேயே பக்ஷ பாதமாய்
நிற்க வல்லாருக்கு–நிலைத்து நிற்ப வல்லவர் களுக்கு
அரவ தண்டத்தில்–யம தண்டனையில் நின்றும்
உய்யலும் ஆம்–தப்பிப் பிழைக்கப் பெறலாம்–
வாயோருபக்கம் வாங்கி வலிப்ப-
வாத விகாரத்தாலே -வாயானது ஒருக்கடுத்து வலிக்க
வார்ந்த நீர் குழிக் கண்கள் மிழற்ற –
பந்துக்களை விட்டுப் போகிறேன் -என்று இவர்கள் பக்கல் சங்கத்தாலே சிநேகத்தால் அழுகிற அளவிலே –
யம படரைக் கண்டவாறே பயத்தின் கனத்தாலே -கண் உள்ளே இடிய இழிந்து அலமரா (அலமாவா ) நிற்கும்
தாயொரு பக்கம் -இத்யாதி –
தன்னை உண்டாக்கினவர்களும்-தான் உண்டாக்கினவர்களும் -ஓர் ஓர் அருகாக இருந்து கதற –
அநந்தரம் –
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் –
ஸம்ஸ்கரிப்பதற்கு முன்னே
செங்கண் மாலோடும் –
வாத்சல்யத்தையும் வ்யாமோகத்தையும் உடைய சர்வேஸ்வரனை
சிக்கென சுற்றமாய்-
நிருபாதிக -சர்வ வித பந்துவாக பற்ற வல்லாருமாய்
ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு –
சம்சாரிகளோடு உறவை கலசாதே அவனே யாக பற்றி நிற்க வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே –
யம படரையும் -அவர்கள் குரூரமான தண்டங்களையும் தப்பி –
உஜ்ஜீவிக்கப் போகலாம்
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவன் (திரு விருத்தம் )-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையரும் அவரே –என்றும்
பற்றுவாருக்கு உஜ்ஜீவித்து போகலாம் என்கிறார்
————-
நிகமத்தில் இத் திருமொழி அப்யசித்தவர்கள் ஸ்ரீ யபதி பக்கலிலே
ஸ்ரீ பெரியாழ்வார் பெற்ற வரிசைகளை பெறுவர்-என்கிறார் –
செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவ பிரான் மேல்
பத்தராய் இறந்தார் பெரும் பேற்றை பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர் கோன்
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே -4- 5-10 –
பதவுரை
செத்துப் போவது ஓர் போது–இறந்து போகுங் காலத்திலே
செய்கைகள்–(கடுஞ்) செயல்களை
நினைத்து–நினைத்து
தேவ பிரான் மேல்–தேவ பிரான் பக்கலில்
பத்தர் ஆய்–அன்பு பூண்டவர்களாய் இருந்து
இறந்தார்–(பின்பு) இறந்தவர்கள்
பெறும் பேற்றை–அடையக் கூடிய பலன்களைக் குறித்து,
பாழி தோள்–(ஸம்ஸாரத்தை வென்ற) மிடுக்கை யுடைய தோள்களை யுடையவரும்
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–தலைவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
செய்யும்–(யம படர்களால்) செய்யப் படுகிற
சித்தம்–(தம்முடைய) நெஞ்சை
திருமாலை–திருமால் திறத்தில்
நன்கு–நன்றாக
ஒருங்கி–ஒருபடுத்தி
செய்த–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
இவை பத்தும்–இப் பத்துப் பாட்டுகளையும்
வல்லவர்–ஓத வல்லவர்கள்,
சித்தம் நன்கு ஒருங்கி–(ஆழ்வார்க்குப் போல்) நெஞ்சு ஒருபடிப் படப் பெற்று
திருமால் மேல்–திருமால் பக்கலிலே
சென்ற–குடி கொண்ட
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–உடையராவர்–
செத்துப் போவதோர் போது- செய்யும் செய்கைகள்-நினைந்து-
சரீர அவசான சமயத்தில் -யம படர் செய்கைகளை நினைத்து
தேவ பிரான் மேல் -பத்தராய்
அயர்வறும் அமரர்கள் அதிபதி பக்கலிலே பிரேமத்தைப் பண்ணி
இறந்தார் பெரும் பேற்றை-
பின்பு இறந்தார் பெரும் பேற்றை
பாழித் தோள் விட்டு சித்தன் –
சம்சாரத்தை வென்ற மிடுக்கை உடைய -தோள்களை உடைய ஸ்ரீ ஆழ்வார்
புத்தூர் கோன்-
சரம காலத்தில் இவர்களைப் போலே பக்தி உண்டாகை அன்றிக்கே –
சதா மநோரதம் பண்ணும் நித்ய ஸூரிகளைப் போலே இருக்கிற ஸ்ரீ ஆழ்வாரை
ஸ்வாமியாக பற்றி இருக்கும் -ஸ்ரீ வில்லிபுத்தூரையும் உடையர் ஆனவர்
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் –
ஆசைவாய் சென்ற சிந்தையராகி -என்கிறபடியே
கரண த்ரயமும் –
புறம்பு போதல் -கலந்து இருத்தல் செய்யாதே
ஸ்ரீ யபதி விஷயமாக செய்த இப் பத்துப் பாட்டையும் அப்யசித்தவர்கள்
சித்த நன்கு ஒருங்கி திருமால் சென்ற சிந்தை பெறுவர் தாமே –
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே –
கரண த்ரயமும் ஒரு படிப்பட உடையராய்
ஸ்ரீ யபதி பக்கல் சென்ற மனசை உடையர் ஆவார்கள்
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply