கீழில் திருமொழியில்
விண்ணுளாரிலும் சீரிய முமுஷுவானவன் தன்னையே இரண்டு கூறாக
அநேகதா பவதி -பண்ணி
அனுசந்திக்க வல்லன் என்னும் பிரகாரத்தைத்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் ஒருவருக்கு ஒருவர்
நந்தன் மதலையைக் காகுத்தனை -என்று
உந்தி பறந்த வ்யாஜத்தாலே அனுசந்தித்தார் –
இத் திரு மொழியில்
இந்த முமுஷுத்வத்துக்கு ஹேதுவான ஈஸ்வரன்
பூர்வமே கிருஷி பண்ணி விளைத்த பிரகாரத்தைத்
திருவடி தூது போய்
சங்கா நிவ்ருத்தி பண்ணித்
திருவாழி மோதிரம் கொடுத்த வ்யாஜத்தாலே அருளிச் செய்கிறார் –
அவன் தான் விஷயீ கரித்த பிரகாரம் தான் என் என்னில்
நாநாவான அஞ்ஞாத ஸூஹ்ருத்தளவு வன்றிக்கே –
பாப விமோசந ஸூஹ்ருத தர்மத்திலே நின்று புண்ய பாபங்கள் புஜித்து அறும் அளவன்றிக்கே
ஸ்வீகார விஸிஷ்ட த்யாகமாய்
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விடுகையும் அன்றிக்கே
(தியாகமே பிரதானம் -ஸ்வீ காரம் அப்ரதானம் -அஜீரணம் போவதே -பிரதானம் –
அவன் உபாயம் -எதிர் சூழல் புக்கு நம்மைப் பெற இருக்க
விட்டே பற்ற வேண்டும் –
இதுவும் இல்லை இங்கு -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )
முந்துற யுரைக்கேன் (9-8-1)-என்கிறபடியே
சம தமதாதிகளை யுடையவனுக்கு ஆச்சார்யன் ஸந்நிஹிதனாய்த்
தன்னுடைய ஞான அனுஷ்டானங்களாலே சங்கா நிவ்ருத்தியைப் பிறப்பித்து
(திருவடி தானே வந்து சங்கா நிவ்ருத்தி பிறப்பித்து )
இந்த ஞான அனுஷ்டானத்துக்கு வாசகமுமாய்
சம்பந்த பிரதானமுமான திருமந்திரத்தையும் உபதேசித்துத்
(பிரணவம் பிரதானம் -சம்பந்தம் சொல்லவே திருவடி வந்தார் )
தன்னோடே சேர்த்துக் கொள்ளும் என்றும்
கார்யப்பாடுகளாலே அல்பம் பிரிவு உண்டானாலும்
ஆச்சார்யனுடைய தாழ்ச்சியாலும் -(நீர்மையாலும் )
மந்திரத்தில் உண்டான கௌரவ அர்த்த பிரகாசாத்தாலும் மீண்டும் கூட்டிக் கொள்ளும்
என்றும் அளவு இறே திருவடி முகத்தால் காணலாவது –
பிராட்டிக்கு சம தமதாதிகள் நித்யமாகையாலும்
கார்யப்பட்டாலே வந்த பிரிவுக்குத் திருவடியை வர விட
(ராவண வதம் -தேவர்கள் கார்யப்பட்டாலே தானே பிரிவு )
அவரும் இவரை
வா நராணாம் நராணாஞ்ச கதம் ஆஸீத் ஸமா கத –என்று சங்கிக்க
(நீசனேன் -சர்வஞ்ஞன் சர்வேஸ்வரன் பொருந்துமோ நமது சங்கை
ஞானம் ஆனந்தம் சாம்யம் மனம் ஒற்றுமை )
ராம ஸூக்ரீவயோர் ஐக்யம் தேவ்யேவம் சம ஜாயதே -என்று
தம் பின் பிறந்த இளைய பெருமாள் அந்தப்புரக் கார்யத்துக்கு ஆளாவாரோ என்று
பூர்வ மேவ உண்டான சங்கை நடைக்கையாலே அவர் நிற்க
(தேவரீர் இளைய பெருமாள் மேல் பூர்வமே சங்கை கொண்டீரே
பெருமாள் திரு உள்ளத்தில் சங்கை நடக்கையாலே –
மீண்டும் தேவரீர் பாகவத அபசாரம் படக்கூடாதே என்று அன்றோ பெருமாள் திரு உள்ளம் )
தேவரீர் அளவிலே என்னை வரவிடும்படி இறே மஹா ராஜருக்கும் பெருமாளுக்கும் பிறந்த ஐக்யம்
அதுக்கு ஒரு ஹேது அறியேன் என்ன
இவன் ராக்ஷஸ கந்த ரஹிதன் -என்று விஸ்வஸித்துத்
திருவாழி மோதிரத்தையும் பெருமாள் திரு விரலின் சேர்த்தியையும்
நினைத்துக் கைக் கொண்டாள் இறே
இப்படித் தெளிவித்தான் இறே
ஆரேனாகிலும் தெளிவித்தவன் ஆச்சார்யனாகவும்
தெளிந்தவன் சிஷ்யனாகையும் இறே உள்ளது –
(சாரதி ரதிக்குத் தெளிவித்து கீதாச்சார்யன் அன்றோ
ரிதியான அர்ஜுனன் தன்னை சிஷ்யன் என்றே சொல்லிக் கொண்டானே
இங்கு திருவடி -சீதா பிராட்டி )
அவர் (பெருமாள் )தாமும்
வசிஷ்டாதிகளுக்கு சிஷ்யருமாய் இறே இருப்பது –
———-
இப் பாட்டு பிரதம விஷயீ காரமே பிடித்து அருளிச் செய்கிறார் –
(பிராட்டி திருவடியை பிரதம விஷயீ காரம்
பெருமாள் பிராட்டி பிரதம விஷயீ காரம் என்றுமாம் )
நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-
பதவுரை
நெறிந்த கருங்குழல்–நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும்
மடவாய்–மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ!
பிரானைப் பிரிந்து தனிமையில் துவண்டு இருப்பதையே மடப்பம் இங்கு
நின் அடியேன்–உமது அடியவனான என்னுடைய
விண்ணப்பம்–விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்):
செறிந்த–நெருங்கின
மணி–ரத்நங்களை யுடைய
முடி–கிரீடத்தை அணிந்த
சனகன்–ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின)
சிலை–ருத்ர தநுஸ்ஸை
இறுத்து–முறித்து
நினை–உம்மை (பிராட்டியை)
கொணர்ந்தது–மணம் புரிந்து கொண்டதை
அறிந்து–தெரிந்து கொண்டு
அரசு களை கட்ட–(துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த
அருந் தவத்தோன்–அரிய தவத்தை யுடைய பரசுராமன்
இடை–விலங்க
நடு வழியில் தடுக்க–செறிந்த சிலை கொடு
(தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு
தவத்தை–(அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை
சிதைத்ததும்–அழித்ததும்
ஓர் அடையாளம்–ஒரு அடையாளமாகும்–
அடியேன் ராம தூதன் தாசன் என்று தேவரீர் அறிய அடையாளம்
பெருமாளுடைய சர்வாதிகத்வத்துக்கு இது அடையாளம் –
நெறிந்த குழல் மடவாய் –
நெறி பிடித்து -மிகவும் இருண்டு தோன்றுகைக்குத் தகுதியான குழல் இறே கிடக்கிறது
பெருமாள் அருகே செல்வு தோன்ற மேநாணிப்போடே இருக்கக் கடவ இவள் ஓடுக்கைத்தைக் கண்டு
மடவாய் -என்கிறான்
நின்னடியேன் விண்ணப்பம்-
ஒரு வார்த்தை ஒப்பிக்கும் போது தாழ்ச்சி சொல்லி நின்றால் இறே சொல்லலாவது
இமவ் முனி சார்தூலவ் கிங்கரவ் ஸம் உபஸ்திதவ்—என்று
நான் உன் அடியான் -என்னை ஏவிக் காரியம் கொள்ள வேணும் என்பது –
லோக நாதம் புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி -என்பது –
இன்னார் தூதன் –என்றால் போலே
தன்னை விஸ்வசிப்பிக்கைக்காக அவன் தானும் சொன்னான் இறே
உனக்கு அடியானான நான் விண்ணப்பம் செய்யும் வார்த்தையைக் கேட்டு அருள வேணும் –
செறிந்த மணி முடிச் சனகன் சிலை யிறுத்து
அபிஷேகம் பொருந்தும் படி –
பிராப்தனான ஜனக ராஜனுடைய ரத்னம் செறிந்த அபிஷேகம் என்னவுமாம் –
வீர சுல்கமான வில்லை முறித்து
நினைக் கொணர்ந்த தறிந்து
இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ-என்னும்படி
பாணிக் கிரஹணம் செய்து கொண்டு போகிறது அறிந்து –
அரசு களை கட்ட அரும் தவத்தோன் இடை விலங்கச்
இருபத்தொரு படிகால் ஷத்ரிய வம்சத்தை நசிக்கும் படி சக்தனாம் படி செய்த தபஸ்ஸை யுடைய
பரசு ராமன் அத்யுத் கடமாகச் சில பருஷ பாஷணங்களைச் செய்து
வழி யிடையிலே போகாதே கொள் -என்று விலக்குகையாலே
அவன் தபஸ் பலம் புஜிக்காமல் நீங்கி -ஷிபாமி (ஸ்ரீ கீதை -16-19)-என்ற மாத்ரத்தாலே சிதைந்தது இறே
(பரசுராமன் தன்னுடைச்சோதி எழுந்து அருளுவது ஸ்ரீ மத் பாகவதம் சொல்லும்
அவ்வாறு பரசுராமனுக்கு இல்லையே
ஸ்வரூப ஆவிர்பாவம் அடையாமல் -தபஸ்ஸூ பலம் புஜிக்காமல் அனுபவிக்காமல் முடிந்ததே )
களை கட்டல் -கொலை
விலங்க-விலக்க என்றபடி
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்
ஸ்ரீ பஞ்சாயுத பரிகணநையிலே செறிந்தது இறே -இந்தச் சிலை
(சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் –8-1–
அடை மொழி இல்லாமல் சிலைக்கும் தண்டுக்கும் -அதில் முதல் சிலை தானே )
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் (பெரியாழ்வார் )-என்னக் கடவது இறே
இப்படி இருக்கிற வில்லாலே அவனுடைய தபஸ்ஸைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்
சோகம் நிவ்ருத்தமாம் அளவும் மாஸூச என்றால் போலே
சங்கை நிவ்ருத்தமாம் அளவும் அடையாளங்கள் சொல்ல வேண்டி வரும் இறே
(முதல் அத்யாயத்தில் அர்ஜுனன் விஷாத யோகம் –
16 அத்யாயத்தில் -தேவாசுர ஸ்ரவண ஜனித சோகம் —
18 அத்யாயத்தில் -பிராயச்சித்த தர்மம் செய்வதில் அருமை உணர்ந்த சோகம்
இப்படி மூன்று இடங்களில் சோக நிவ்ருத்தி உண்டே )
இத்தால்
அசாதாரண ஸந்நிதியில் சாதாரண ஸ்வரூப ஆவேச சக்தித்தினுடைய நில்லாது என்னும் இடம் தோன்ற
ஆவேச முகத்தாலே அத்யுத்கட பாபத்தையும்
ஆவேச கார்யம் தலைக் கட்டினவாறே தானே விளைத்து
தபஸ் சக்தியையும் வாங்கி
இவனுக்கு வெளிச் சிறப்பை யுண்டாக்கி
உபகார ஸ்ம்ருதியும் நடக்கும்படி பண்ணினான் என்கிறது –
இப்படி ஆசரித்துக் காட்டினால் இறே
அசாதாரணத்துக்கும் சாதாரண ஸ்வரூப ஆவேசத்துக்கும் வாசி தெரிவது —
———
இதுவும் அத்யந்த ரஹஸ்யமாய் இருபத்தொரு அடையாளம் –
அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-
பதவுரை
அல்லி–அகவிதழ்களை யுடைய
அம் பூ–அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட
மலர்க் கோதாய் பூமாலை போன்றவளே!
அடி பணிந்தேன்–(உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்–விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்–(உம்மிடத்தில்) சொல்லுவேன்;
துணை மலர் கண்–ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும்
மடம்–மடப்பத்தையு முடைய
மானே–மான் போன்றவளே!
கேட்டருளாய்–(அதைத்) திருச் செவி சாத்த வேணும்;
அம் எல்லி போது–அழகிய இராத்திரி வேளையில்
இனிது இருத்தல்–இனிமையான இருப்பாக
இருந்தது–இருந்ததான
ஒர் இடம் வகையில்–ஓரிடத்தில்
மல்லிகை–மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட
மா மாலை கொண்டு–சிறந்த மாலையினால்
ஆர்த்ததும்–(நீர் இராம பிரானைக்) கட்டியதும்
ஓர் அடையாளம்–
அல்லியம்பூ மலர்க் கோதாய்
அல்லி தோன்றும் படி சற்றே மலர்ந்து
அழகிய பூவாலே கட்டப்பட்ட மாலை போலே ஸுமநசம் தோன்றும் படி இருக்கையாலே
கோதாய் -என்கிறான் –
அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய்
என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக தேவர் திருவடிகளிலே பணிந்து –
என் தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன் –
வாய் படைத்த ப்ரயோஜனம் பெறும் படி
ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்கிறேன் -என்கிற அளவிலே
துணை மலர்க் கண் மடமானே
திரு உள்ளம் ப்ரஸன்னமாய்
புத்ரவத் கடாக்ஷித்ததாலே பவ்யமான மான் போலே இருக்கிறவளே
அன்றிக்கே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்
மடமான போலே கண்ணை யுடையவள் -என்னவுமாம்
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
நல்ல ராத்ரியிலே
போக யோக்யமான போதிலே
போக ப்ராவண்ய வர்த்தகமாக இருக்கைக்கு சமைந்த இடத்திலே
ஓர் பார்ஸ்வத்திலே நான் இருத்தலாலே தான் இருந்த
அத்விதீயமான படுக்கையிலே
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம்
தூராத் கந்தியான மல்லிகையாலே
தான் என்னைப் பந்திப்பது
நான் தன்னைப் பந்திப்பதாய்
ஒருவருக்கு ஒருவர் ஊமத்தங்காயாம் படி இறே படுக்கை வாய்ப்பும் தான் இருப்பது –
தானும் நானும் அறியுமது ஒழிய இளைய பெருமாளும் அறியாத அடையாளம் –
எங்கள் மாமனார் தண்ணீர் துரும்பு அறுத்துத் தரப்
(பரசு ராமன் தடை நீக்கியது பெருமாள் செய்து இருந்தாலும் மாமனார் காரியமாக அன்றோ இவள் திரு உள்ளம் )
பெருமாளோடே சிறிது காலம் (ஸமா த்வாதச தத்ராஹம்) ஒரு படுக்கையில் இருந்து
போந்தவள் அன்றோ நான் – என்று ஒரு தஸா விசேஷத்தில் தாமே அருளிச் செய்தார் இறே
இது தன்னை தமிழர் சொன்ன
ஒப்பணிதல் நேர் -என்னவுமாம் இறே –
——–
ராஜ்யத்துக்கு அபிஷேகம் செய்வதாக உபக்ரமித்துத்
திருக் காப்பும் நாணும் சாத்திக் குறை வற்ற காலத்திலே
வந்ததொரு விக்நம் சொல்லுகிறது —
கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-
பதவுரை
கைகேசி–கைகேயி யானவள்
கலக்கிய மா மனத்தனன் ஆய்–(மந்தாரையினாள்) கலக்கப் பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய்
வரம் வேண்ட–(தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக் கேட்க
மலக்கிய–(அக் கைகேயியின் வார்த்தையால்) கலக்க மடைந்த
மா மனத்தனன் ஆய்–சிறந்த மனத்தை யுடையவனாய்
மன்னவனும் – தசரத சக்ரவர்த்தியும்
மறாது–மறுத்துச் சொல்ல முடியாமல்
ஒழிய–வெறுமனே கிடக்க,
(அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயி யானவள்,)
குலம் குமரா–“உயர் குலத்திற் பிறந்த குமாரனே)
காடு உறைய–காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி
போ என்று–போய் வா” என்று சொல்லி
விடை கொடுப்ப–விடை கொடுத் தனுப்ப
அங்கு–அக் காட்டிலே
இலக்குமணன் தன்னொடும்–லக்ஷ்மணனோடு கூட
ஏகியது–(இராம பிரான்) சென்றடைந்ததும்
ஓர் அடையாளம்–
கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
கைகேயி யானவள் குப்ஜையாலே கலக்கப் பட்ட மனஸ்ஸை யுடையளாய்
எனக்குப் பண்டே தருவதாக அறுதியிட்ட வரம் இப்போது தர வேணும் என்று –
அது தன்னை -இன்னது இன்னது -என்று வியக்தமாகச் சொல்ல
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
அவன் இசையாது ஒழிய
அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் ஸத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ இன்று
அஸத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றால் போலே
சிலவற்றைச் சொல்லி விமுகையான வளவே அன்றிக்கே அபரி ஹார்யமான கோபத்தாலே
மலக்கப்பட்ட மனஸ்ஸை யுடையவனாய்
தர்ம சம்மூட சேதஸ்-(மனஸ்) வானால்
யஸ் ஸ்ரேயஸ் யான் நிஸ்சிதம் ப்ரூஹி -என்னவும் ஒருவரும் இன்றிக்கே
(அங்கு கீதாச்சார்யர் பேசி கலக்கம் போக்கினார் இங்கு ராமாச்சார்யன் பேச மாட்டானே )
நியாய நிஷ்டூரத்தை நியாயமாக நினைத்து மலங்கி
அந்த மலக்கத்திலே பெரிய விசாரத்தை யுடையவனாய்
நெடும் காலம் தர்ம தாரதம்யமும் -அதர்ம தாரதம்யமும் -தர்மாதர்ம தாரதம்யமும் எல்லாம் ஆராய்ந்து போந்து
போந்த நெஞ்சில் பரப்பு எல்லாம் கலக்கத்துக்கு உடலாய்
இவள் வார்த்தையும் மறுக்க மாட்டாது இருப்பதே –
பிள்ளாய்
ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்ய வசனத்தாலும் -பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனமான தெளிவு பிறந்தவர்கள்
நித்ய ஸம்ஸாரிகளாய்த் தெளிவிக்க அரிதானவர்களையும்
தங்களோட்டை தர்சன ஸ்பர்சன சம்பாஷண ஸஹ வாசாதிகளாலே
மிகவும் தெளிவிக்கிறாப் போலே
ப்ரத்யக்ஷமான பர ஸம்ருத்த் யஸஹ ப்ரயோஜனராய்
ஐம்புலன் கருதும் கருத்துளே பிறரைக் கேள்வி கொள்ளாமே திருத்திக் கொண்டவர்கள்
தாங்கள் கலங்குகிற அளவு அன்றிக்கே
தங்களுடைய தர்சன ஸ்பர்சன ஸம் பாஷாணாதி களாலே
கலங்காதவர்களையும் கலக்க வல்லவர்களாய்
கலங்கினவர்கள் அனுதாப பூர்வகமாகத் தெளிந்தார்களே ஆகிலும்
கலக்கினவர்கள் சரீர அவசானத்து அளவும்
தெளிய மாட்டார்கள் என்று தோன்றா நின்றது இறே –
குலக் குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்க —
அவ்வளவிலே
ரகு குல திலகரான பெருமாள் காலம் தாழ்த்தது என்று அந்தப்புரக் கட்டிலிலே புகுந்து
ஐயர் எங்கே -என்ன
உம்மை வன வாஸ ப்ராப்தராம் படி சொல்ல மாட்டாமையாலே எனக்கு முன்னே வர பிரதானம் செய்தவர்
அது எனக்குப் பலிக்கிற காலத்திலே சோகித்துக் கிடக்கிறார் -என்ன
எனக்கு அவர் வேணுமோ
நீர் அருளிச் செய்ததே போராதோ
ஐயரை எழுப்பிக் கண்டு போகலாமோ என்ன
அவரை நான் எழுப்பி சோகம் தீர்த்துக் கொள்ளுகிறேன்
நீர் இக் குலத்தை நோக்க ப்ராப்தருமாய் (குலக் குமரா)
எங்களுக்குப் பிள்ளை என்று இருந்தீராகில்
எங்கள் வசன பரிபாலனம் செய்ய வேணும் காணும்
அவர் விடை தந்தார்
நான் போ என்கிறேன் -என்று நினைத்து
வன வாச ப்ராப்தியில் சீக்கிரமாகப் போகையிலே ஒருப் படீர்-என்ன
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம்
லஷ்மனோ லஷ்மி வர்த்தன
ந சாஹம்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
முன் வழிப் பட்ட இளைய பெருமாளோடே எழுந்து அருளினதே
(கைங்கர்யம் செல்வன் -விட்டுப் பிரியாமல் இருபவன் –
அனைத்து கைங்கர்யங்களையும் செய்வேன் -என்பதற்கு மூன்று பிரமாணங்கள் )
ஓர் அடையாளம்
லோக ப்ரஸித்தமான அடையாளம்
ஏகுதல் -போகை –
———–
வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-
பதவுரை
வார் அணிந்த–கச்சை அணிந்த
முலை–முலையையும்
மடவாய்–மடப்பத்தை யுமுடைய பிராட்டீ!
வைதேவீ–விதேஹ வம்சத்திற் பிறந்தவனே!
விண்ணப்பம்–ஒரு விஜ்ஞாபகம்;
தேர் அணிந்த–தேர்களாலே அலங்காரமான
அயோத்தியர் கோன்–அயோத்தியி லுள்ளார்க்கு அரசனாதற்கு உரிய இராமபிரானது
பெருந்தேவீ–பெருமைக்குத் தகுந்த தேவியே!
கேட்டருளாய்–அவ் விண்ணப்பத்தைக் கேட்டருள வேணும்;
கூர் அணிந்த–கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய
குகனோடும்–குஹப் பெருமாளோடு கூட
கங்கை தன்னில்–கங்கை கரையிலே-சிங்கி பேர (மான் கொம்பு ) புரத்திலே –
சீர் அணிந்த தோழமை–சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தை
கொண்டதும்–பெற்றதும்
ஓர் அடையாளம்–
வாரணிந்த முலை மடவாய்
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில்
நாணும் கொங்கைத் தலம் (நாச்சியார் )-என்னுமா போலே
இப்போதும் கச்சுக்குள்ளே கிடக்கிற ஒடுக்கத்தோடே கிடக்கையாலே
வாரணிந்த முலை மடவாய் -என்கிறான்
வைதேவீ விண்ணப்பம்
விதேக ராஜன் பெண் பிள்ளை யாகையாலே இறே -இவ் விருப்பு இருக்கலாய்த்து
இப் பிறப்பு யுடையார் தேஹத்தை ஒன்றாக விரும்புவார்களோ –
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
பத்துத் திக்கிலும் தடையற வூர்ந்த தேர் இறே ( தச ரதன் அன்றோ ) இவ் வூருக்கு அலங்காரம் –
ஸத்ரு சங்கா பரிஹாரமான தேர்களும்
யாகாதிகளுக்குச் சமைந்த தேர்களும்
பிள்ளைகள் விளையாடும் தேர்களும்
அலங்காரமான திரு அயோத்யைக்கு நிர்வாஹகரான பெருமாளுக்கு
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்கிற அளவே அன்றிக்கே
தஞ்சேயம் அஸி தேஷணா –என்னும்படி
சிறுத் தேவி யல்லாத பெரும் தேவீ விண்ணப்பம் கேட்டு அருளாய்
(அவனுக்கு பெருமை கொடுக்கும் தேவி என்றவாறு
அவன் பெருமைக்குத் தக்க தேவி என்றுமாம் )
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
மிக்க கூர்மையை யுடைய வேல் வலவன்
ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ரு பக்ஷம் மண் உண்ணும்படி இறே
இவருடைய ஸுவ்ர்யமும் வேல் கூர்மையும் இருப்பது –
இப்படிக்கு ஒத்தவரோடே ஸ்ருங்கி பேர புரமான படை வீட்டிலே இவரோடு கூட வேணும் என்றே பிரார்த்தித்துச் சென்று
திரு அயோத்யையில் பிறந்த ஸ்ரமம் ஆறும்படி சென்று
குஹேந ஸஹி தோராமோ லஷ்மனே நச சீதயா -என்னும்படி சென்று
உன் தோழி என் தோழி உம்பி எம்பி -என்று
ஸீதா லஷ்மண சம்பந்தமும் அவரோடே ஆக்கின பின்பு இறே தம்மோடு உண்டாக்கிக் கொண்டது –
அதுக்கு அடி
அவருடைய நிலையிலே தவறாமை இறே
இப்படி செய்ய வேண்டினதுக்கு அடி அவ்வூரில் பிறப்பும் வாஸமும் இறே
இதனால் தான் அயோத்தியார் கோன் என்றது
பாகவத -ததீய -வைபவம் அறிய இங்கு அவதாரம்
நாய்ச்சி மாரையும் பிராதாக்களையும் இங்கனே திரு உள்ளம் பற்றினால்
மற்று உள்ளவர்களைச் சொல்ல வேண்டா இறே அவ்வூரில்
இப்படி திரு உள்ளம் பற்றுகை அவருக்குச் சேராதது ஆகிலும்
(சர்வேஸ்வர நிரங்குச ஸ்வா தந்த்ரத்துக்கு சேராதே தேவை இல்லை அன்றோ
இவள் அவனை அடைய ஆச்சார்யர் வேண்டும்
அவனுக்குத் தேவை இல்லை )
நம் ஆச்சார்யர்கள் திரு உள்ளம் பற்றுவது இப்படி இறே –
(இவன் முன்னிடுவர்களை அவன் முன்னிடுவது இருவர் குற்றங்களையும் சமிப்பிக்கைக்காக
பாணனார் திண்ணம் இருக்க நாணுமோ )
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
நான் உகந்த தோழன் நீ என்னுமது ஒழிய
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பார் (நாச்சியார் )-என்ன ஒண்ணாதே
ஆகை இறே -சீரணிந்த தோழமை-என்றது
சீர் -கல்யாண குணங்கள் –
————
மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-
பதவுரை
மான் அமரும்–மானை யொத்த
மென் நோக்கி–மென்மையான கண்களை யுடையவளான
பால் மொழியாய்–பால் போல் இனிய பேச்சை யுடையவளே!
விண்ணப்பம்;
கான் அமரும்–காட்டில் பொருந்திய
கல் அதர் போய்–கல் நிறைந்த வழியிலேயே
காடு உறைந்த காலத்து–காட்டில் வஸித்த போது
தேன் அமரும் பொழில்–வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
சாரல்–தாழ்வரையோடு கூடிய
சித்திர கூடத்து–சித்திர கூட பர்வதத்தில்
இருப்ப–நீங்கள் இருக்கையில்
பரதன் நம்பி–பரதாழ்வான்-பாரதந்தர்யத்தால் பூர்ணன்
பணிந்ததும்–வந்து வணங்கியதும்
ஓர் அடையாளம்–
மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
தன்மையிலே அமர்ந்த நோக்கை யுடைத்தான மான் போலே இருக்கிறவளே –
இக் கண்ணுக்கு இலக்காமவர் இலக்கானால் மான் பார்வை உபமானத்தால் வந்த மிகை அமரும்படி -என்னுதல்
மானை விட்டு இங்கே அமரும்படி இறே கண் அழகு தான் -என்னுதல்
(உபமானம் தாழ்ச்சியாகவே தோன்றுமே -ஏணி வைத்தாலும் எட்டாதே )
வைதேஹியை வேதேவி என்கிறது –
தேஹ நிபந்தமான த்யோதமாநாதி( பிரகாசம் -தேக காந்தி முதலியவை )குணங்களைப் பற்ற
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
அமரும் கல் கான் அதர் போய்
பொருந்தின கல் காட்டு வழி போய் வன வாஸம் செய்கிற காலத்திலே
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே
பான் மொழியாய்
பால் போலும் ரஸா வஹமான வார்த்தையை யுடையவளே
பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
மீண்டு எழுந்து அருள வேணும் என்று
பாரதந்தர்யத்தாலே பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து
பிரபத்தி செய்ததும் ஓர் அடையாளம் —
————-
சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-
பதவுரை
சித்ர கூடத்து சித்திரகூட பர்வதத்தில்
இருப்ப–நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில்
சிறு காக்கை–சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன்
முலை தீண்ட–(உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட
(அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்)
அத்திரமே கொண்டு–ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து
எறிய–பிரயோகிக்க,
(அக் காகம் அதற்குத் தப்புவதற்காக)
அனைத்து உலகும்–உலகங்களிலெல்லாம்
திரிந்து ஓடி–திரிந்து ஓடிப் போய்
(தப்ப முடியாமையால் மீண்டு இராம பிரானையே அடைந்து)
வித்தகனே–“ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
இராமா–ஸ்ரீ ராமனே!
ஓ–ஓ !!
நின் அபயம்–(யான்) உன்னுடைய அடைக்கலம்”
என்று அழைப்ப என்று கூப்பிட
அத்திரமே–(உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே
அதன் கண்ணை–அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம்
அறுத்ததும்–அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்–
சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அந்தச் சித்ர கூடம் தன்னிலே பெருமாள் மடியிலே கண் வளரா நிற்கச் செய்தே
இந்திரன் மகனான தமோ குண பிராஸுர்யத்தால்
அறிவால் சுருங்கி
சுருக்கம் உணரும்படி பேர் அளவில்லாத காக வேஷத்தை ஆஸ்த்தானம் செய்து
திரு முலைத் தடத்திலே நலியப் புக
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
பெருமாளும் இவ்வளவிலே உணர்ந்து
இவனைச் செருக்கு வாட்டுகைக்காகவும்
மாதா பிதாக்கள் தேவர்கள் ருஷிகள் மற்றும் ஆன்ரு சம்ஸயம் நோக்கி
மூன்று லோகத்திலும் ப்ரஸித்தராயும்
அப்ரசித்தராயும் உள்ளவர்களுடைய அளவு அறிகைக்காகவும்
ஸ பித்ரா ச பரித்யக்தா –
பிதாவும் கைவிட்டான் என்கையாலே ஸசீ தேவியும் மஞ்சள் கீறிப் புறப்பட்டு
பிதா கைக் கொள்ளிலும் ராம அபராதியை நான் கைக்கொள்ளேன் -என்றாள்
என்னும் இடம் தோற்றுகிறது
ஸூரைஸ் ச
மாதா பிதாக்கள் சிஷா ரூபத்தால் கைவிட்டார்கள் ஆகில் அவர்கள் கோபம் தீர்ந்தவாறே
காட்டிக் கொடுக்கிறோம் என்பார்களோ
நாம் ஆண்ட பரிகரம் அன்றோ என்று அங்கே ஒதுங்கப் பார்த்தான்
அவர்கள் கைக் கொள்ளோம் என்றார்கள்
ஸ மஹர்ஷிபி
ப்ரஹ்ம பாவனையில் ஊன்றினவர்கள் ஆகையாலே செல்ல-அவர்களும் கை விட்டார்கள்
த்ரீன் லோகான் ஸம் பரிக்ரம்ய
அறிந்தவர்களோடே அறியாதவர்களோடே வாசி யறத் திறந்து கிடந்த வாசல்கள் தோறும்
ஒரு கால் போலே ஒன்பதில் கால் சென்று இரந்த அளவிலும் கைக் கொள்ளாமல் தள்ளிக் கதவடைத்தார்கள் –
இப்படிச் செய்ய வேண்டுவது என் என்னில்
அத்திரமே கொண்டெறிய
கிடந்ததொரு துரும்பை ப்ரஹ்மாஸ்த்ரமாக்கி
மந்தகதி யாக்கி விட்ட அளவிலே
நின்றது இல்லை இறே இது
அனைத்துலகும் திரிந்தோடி
எல்லா லோகத்திலும்
சரணம் புகுவார் உண்டாகிலும்
சரண்யர் இல்லை என்னும் இடம் தோற்ற அனைத்துலகும் -என்கிறார்
அனைத்துலகும் திரிந்து மீண்டு ஓடி வந்து
வித்தகனே
சர்வத்துக்கும் காரண பூதனுமாய்
சமர்த்தனும் ஆனவனே
இராமா
ரஞ்ச யதீதி ராஜா
ரமய தீதி ராம
ஓ நின்னபயம் என்று அழைப்ப
உன்னை ஒழிய வேறே அபய பிரதானம் செய்வார் இல்லை என்று
உள் அழற்றியோடே வந்து
அஸ்திரம் நலியாமல் காக்க என்று திருவடிகளிலே விழ
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
இத்தை முன்பே செய்யாமையாலும்
இவன் பின்னே திரிந்த வேகத்தாலும்
பெருமாளைக் கேள்வி கொள்ளாமல் அஸ்திரம் தானே ஒரு கண் அழிவு செய்து விட்டது
அஸ்திரம் தானே செய்கைக்கு அடி இது தான் கண்டக பிரபத்தி யாகையாலே இறே
அதாவது
ரஷித்தான் ஆகில் ப்ராணனைப் பெறுகிறோம்
இல்லை யாகில் அவனுக்கு ஒரு தேஜோ வதத்தை யுண்டாக்குகிறோம் -என்றால் போலே இறே இதில் நினைவு
லகுர் தண்ட ப்ரபந்நஸ்ய -என்றும் உண்டு இறே
அன்றிக்கே
கார்யப்பாடு அறிந்தான் ஒரு திருப்பணி செய்வான் செய்தான் என்று
நம்பிள்ளை அருளிச் செய்தார் என்று ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர் –
(கருதும் இடம் பொருதும் சக்கரம் அம்சம் தானே )
———-
மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-
பதவுரை
மின் ஒத்த–மின்னலைப் போன்ற
நுண் இடையாய்–மெல்லிய இடையை யுடையவளே!
மெய் அடியேன்–உண்மையான பக்தனாகிய எனது
விண்ணப்பம்–விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;)
அடியேனுடைய மெய்யான விண்ணப்பம் என்றுமாம் –
பொன் ஒத்த–பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய)
மான் ஒன்று–(மாரீசனாகிய) ஒருமான்
புகுந்து–(பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து
இனிது விளையாட–அழகாக விளையாடா நிற்க,
(அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்)
நின் அன்பின் வழி நின்று–உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று
சிலை பிடித்து–வில்லை யெடுத்துக் கொண்டு
எம்பிரான்–இராமபிரான்
ஏக–அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள,
பின்னே–பிறகு
அங்கு–அவ் விடத்தில்
இலக்குமணன்–இளைய பெருமாளும்
பிரிந்ததும்–பிரிந்ததுவும் ஓர் அடையாளம்–
மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
மின் உபமானம் போராமையாலே -நுண்ணிடையாய்-என்கிறார் –
பாரதந்தர்ய பூர்த்தியாலே வந்த வைராக்யம் இறே –
(வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நீ ஸூய ரக்ஷணத்தில் கை வாங்கி உள்ளாய்
உம்மை ரக்ஷிக்கவே அஷ்ட புஜங்கள் கொண்டுள்ளேன் )
மெய்யடியேன் விண்ணப்பம்
இளைய பெருமாளுடைய துறையிலே
அவருடைய பிரியத்திலே வந்தவர் ஆகையாலே -மெய்யடியேன்-என்கிறார் –
(பாகவத சம்பந்தத்தால் சேஷ பூதன் மெய்யடியன் )
மெய்ம்மையை மிக யுணர்ந்து ஆம் பரிசு அறியாது ஒழிந்தாலும் (திருமாலை -38 )
ஸாத்விக புராண வாஸனையாலும்
திருவாழி மோதிரம் அவன் கையிலே இருக்கையாலும்
இந்த ஸந்நிதி விசேஷத்தாலும்
ப்ரஹ்ம பாவனை தலை எடுத்தால் இங்கனே சொல்லலாம் இறே
அடியேன் மெய் விண்ணப்பம் என்னில்
பல இடங்களிலும் காணலாம் இறே
இது தன்னை ஆழ்வார் அருளிச் செய்யவும் பெற்றது இறே
(திரு விருத்தத்தில் உண்டே
சத்யம் விஞ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் )
இவருடைய உறகல் உறகலுக்கு எது தான் சேராது
அவனையே பார்த்து பரிவர் தானே மெய்யடியான்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
ஸூ வர்ண ரத் நாதி களாலே -நாநா வர்ணமாய் இருப்ப தொரு மானின் வேஷத்தைக் கொண்டு
மாரீசனானவன் ஜாதி மிருகங்கள் நடுவே புகுந்து அவை விஸஜாதீயம் என்று வெறுத்துப் போகச் செய்தேயும்
இது ஒன்றும் தனியே நின்று இஷ்டத்திலே விளையாடுகிறதாகப் பாவித்து நிற்க
நின் அன்பின் வழி நின்று
தேவரீர் பக்கலில் உண்டான ஸ்நேஹத்தினுடைய வழியாக
மற்ற ஓன்று திரு உள்ளம் பற்றாமையாலே நிலை நின்று
சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
தமக்குச் சிலையும் கணையும் துணையாக
உமக்கு இளைய பெருமாள் துணையாக
எழுந்து அருள
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்-
க்ருத்ரிம ரூபமான ராக்ஷஸ யுக்தி விசேஷத்தாலே தேவரீர் திரு உள்ளம் கலங்கி
அங்கே சீக்ரமாகச் சென்று அறியீர் -என்று நியமிக்கவும்
அவர் மறுக்க மறுக்க –
அவரால் மறுக்க ஒண்ணாத படி அருளிச் செய்த பின்பாக
அத் தனி இடத்திலே பிரிந்தது என்னுதல்
பெருமாள் முன்னே பிரிகையாலே பின்னே பிரிந்தது என்னுதல் –
பெருமாள் பிரிந்த போது இளைய பெருமாள் உண்டு
இவர் பிரிந்தது இறே அரிதாயத் தோற்றுகிறது
ந ச ஸீதா த்வயா ஹீநா -என்னவும் பொருந்தாமையோடே கொண்டு போருவது
ஸ்ரீ குகப் பெருமாளோடே கூடின போது பாகவத லாபத்தாலே உருக் காண்பது
(பாகவத சம்ச்லேஷம் பெற்ற பின்பு அன்றோ இவருக்கு பொருந்திற்று)
அதனுடைய அலாபாமே ஸித்திக்கில் –
கிம் கார்யம் சீதையா மம -என்பது முதலாகக்
கார்யப்பாடு ஒழிய அறியாதவர்க்கும் (பெருமாளுக்கும் )
இவருடைய வசன பரிபாலனம் செய்கிறவருக்கும்
(இவள் வார்த்தை கேட்டு சென்ற இளைய பெருமாளுக்கும் )
இக் கலக்கம் பைத்ருகமாம் இத்தனை இறே
(கைகேயி சொல் கேட்டு கலங்கிய சக்ரவர்த்தி போல் இவர்களும்
வசன -பரிபாலனம் தந்தை வழி சொத்து அன்றோ )
————
நீ இவை எல்லாம் அறிந்தபடி என் -என்று அருளிச் செய்ய
அதுக்கு ஹேது இன்னது என்கிறது இப் பாட்டில்
மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-
பதவுரை
மை தகு–மைபோல் விளங்குகிற
மா மலர்–சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய
குழலாய்–கூந்தலை யுடையவளே!
வைதேவி–வைதேஹியே!
ஒத்த புகழ்–“பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியை யுடைய
வானரர் கோன் (இராமபிரானோடு) கூட இருந்து
நினை தேட–உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க)
அத் தகு சீர்–(பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள
அயோத்தியர் கோன்–அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள்
அடையாளம் இவை–இவ் வடையாளங்களை
மொழிந்தான்–(என்னிடத்திற்) சொல்லி யருளினான்;
(ஆதலால்)
அடையாளம்–(யான் சொன்ன) அடையாளங்கள்
இத் தகையால்–இவ்வழியால் (வந்தன);
இத்தகை-இவ்வண்ணம் -ஆல் -அசைச்சொல் (அன்றியும்)
ஈது–இதுவானது
அவன்– அவ்விராம பிரானுடைய
கை மோதிரம்–திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும்–
மைத்தகு மா மலர்க் குழலாய்
திருக்குழல் இருட்சிக்கு மை ஒரு புடைக்கு ஒப்பாக்கி
அதின் மேல் மலரையும் கூட்டுகையாலே
இப்போது கண்டது அன்றே
கீழே -நெறிந்த கரும் குழல் -என்கிறாப் போலே இப்பொழுது
பொலிவு இழந்து ஆர்ப்பேறிக் கிடக்கச் செய்தேயும்
இதுக்குப் ப்ராப்தமாகத் தகுவன தேடிச் சொல்லலாவும் இறே – நல் சரக்குக்கு வந்த அழுக்கு -ஆகையாலே –
இக் குழல் -மைத்தகு மா மலர்க் குழலாக வன்றோ புகுகிறது -என்று
மங்கள வாசகமாவுமாம்
வைதேவீ
இதுவும் (தேகத்தைப் பேணாமை )பைத்ருகம்
விண்ணப்பம்
முறைமை தோன்றச் சொல்லுகிறான்
ஒத்த புகழ்
ஸக்யராய் சோக ஹர்ஷங்கள் ஒத்து இருக்கையாலே
ஒத்த புகழ் -என்கிறது
வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
வானர ராஜன் சேர இருந்து தேவரீரைத் தேடிக் கொண்டு வருவதாக
அத் தகு சீர் அயோத்தியர் கோன்
இந்த சோகத்துக்குத் தகுதியான வந்த சோகத்தை யுடையவராய்
திரு அயோத்யைக்கு நிர்வாஹகராக ப்ராப்தரானவர்
அடையாளம் இவை மொழிந்தான்
அவன் மொழிந்த அடையாளங்கள் இவை
இத் தகையால் அடையாளம்
என்னால் விண்ணப்பம் செய்யலாம் அடையாளம் இவ்வளவு
அவர் அருளிச் செய்தவற்றில்
என்னால் தரிக்கலாவதும்
விண்ணப்பம் செய்யலாவதும்
இவ்வளவே
ஈது அவன் கை மோதிரமே
அவர் திரு விரலில் சாத்தின அறு காழி இது -என்று
அடையாளங்களில் சங்கை இல்லை
சங்கை உண்டாய்த்தாகிலும் தேவரீருக்குத் தெளிய வேண்டுவது எல்லாம் போரும் இது -என்று
திருவாழியாலே பிராண பிரதிஷ்டை பண்ணுகிறான் –
———-
திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-
பதவுரை
திக்கு–திக்குகளிலே
நிறை–நிறைந்த
புகழ் ஆனன்–கீர்த்தியை யுடையவனான ஜநக ராஜனுடைய
ராமன் ஜனகன் விசுவாமித்திரர் மூவருக்கும் இந்த விசேஷணம் ஒக்குமே
தீ வேள்வி-அக்நிகளைக் கொண்டு செய்யும் யாகததில்
சென்ற–(விஸ்வாமித்திரருடன்) போன
மிக்க பெரும் சபை நடுவே–மிகவும் பெரிய ஸபையின் நடுவில்
வில்லிறுத்தான்–ருத்ர தநுஸ்ஸை முறித்த இராம பிரானுடைய
மோதிரம்–மோதிரத்தை
கண்டு–பார்த்து
மலர் குழலாள்–பூச்சூடிய கூந்தலை யுடையவளான
சீதையும்–ஸுதாப் பிராட்டியும்,
அனுமான்–‘வாராய் ஹனுமானே!
அடையாளம் ?–(நீ சொன்ன) அடையாளங்களெல்லாம்
ஒக்கும்–ஒத்திரா நின்றுள்ளவையே
என்று–என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திரு வாழியை)
உச்சி மேல் வைத்துக் கொண்டு–தன் தலையின் மீது வைத்துக் கொண்டு
உகந்தான்–மகிழ்ந்தான்–
திக்கு நிறை புகழாளன்
திக்கு நிறைந்த புகழை யுடையவன் என்று விச்வாமித்ரனுக்குப் பேரான போது
பஞ்சா ஸத் கோடி விஸ்தீர்ணமான அண்ட நிர்வாஹகன் முதலானோர் அநு வர்த்திக்கும் படியாகவும்
ஒரு ரிஷியாலே ஒரு ராஜா சண்டாளனாக -அந்த சண்டாளம் தன்னையே வாரே உறுப்பாக யஜிப்பித்து
அந்த ஸரீரத்தோடே ஸ்வர்க்கம் ஏற்றி
த்வம்ஸ -என்கிற அளவிலும்
நில் -என்ன வல்லனாகையாலும்
ராஜ ரிஷியான தான் ப்ரஹ்ம ரிஷி யாகையாலும்
ஷத்ரியத்வம் பின்னாட்டாமை யாலும்
அண்டாந்தர கதமான இந்தத் திக்குக்குகள் எல்லாம் தபஸ் பலமாக நிறைந்த புகழை யுடையவன் -என்னவுமாம்
ஒரு ராஜாவை சண்டாளனாக்கி
ஒரு சண்டாளனை ப்ராஹ்மணன் ஆக்க வல்ல வனுடைய சாபத்தை இறே இவன் இப்படிச் செய்தது
ஆகையால் தபஸ்ஸூக்கள் ஓவ்பாதிகமானால் எல்லாம் செய்யலாம் இறே
(உபாதி அந்நிய பல இச்சா -உபாதிக்காக உள்ள தபஸ்ஸூக்கள் இப்படி ஆகும் )
அன்றிக்கே
பெருமாளான போது
அண்டாந்தர கதமாய் அன்றே புகழ் இருப்பது
அந்த விச்வாமித்ரனும் பெருமாளை
அஹம் வேத்மி–என்கிற போது
மஹாத்மா
ஸத்ய பராக்ரமா -என்று அறிவேன்
மஹா தேஜஸ்விகளான வசிஷ்டாதிகளும்
மற்ற ஓரோர் தபஸ்ஸூக்களில் நிலை நின்றவர்களும் அறிவார்கள் என்றான் இறே
தீ வேள்விச் சென்ற நாள்
யஜ்ஜத்தில்-அக்னி ஹோத்ர ரக்ஷண வ்யாஜமாக
விச்வாமித்ரன் பின்னே சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ப்ராஹ்மணரும் ஷத்ரியரும் திரண்ட பெரிய திரள் நடுவே சென்று
வில்லை முறித்து
பாணி கிரஹணம் செய்கிற போது
திருக் கண்களாலே ரூபமும்
திருக் கைகளாலே ஸ்பர்ஸமும் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே
நீ முன்பு சொன்ன அடையாளங்களும்
நான் பாணி கிரஹண காலத்தில் கண்டதும்
பர்த்ரு கர விபூஷணம் –
இது அவன் கை மோதிரம் என்று தந்த பின்பு
அனுமான் என்று ப்ரீதியோடே வாங்கித்
திருக் குழலிலே வைத்துக் கொண்டு
பெருமாளோடே ஒரு படுக்கையில் இருந்து
அவர் அலங்கரிக்க
பூ முடித்தால் போலே இருந்தாள்
மண்ணில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இறே வடிவு தான் இருப்பது –
மணம் தானே கந்த குணியாய் இறே இருப்பது
அபியாலே –
இருவரையும் காட்டுகிறது –
————
நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-
பதவுரை
வார் ஆரும்–கச்சு அணிந்திருக்கைக்கு உரிய
முலை–முலையையும்
மடலாள்–மடப்பத்தை யுமுடையவளான
வைதேவிதனை–ஸீதா பிராட்டியை
கண்டு–பார்த்து
சீர் ஆரும்–சக்தியை யுடையவனான
திறல்–சிறிய திருவடி
தெரிந்து–(பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு.
உரைந்து–(பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன
அடையாளம்–அடையாளங்களை (க் கூறுவதான)
பார் ஆளும் புகழ்–பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
பட்டர்பிரான் பாடல்–பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை
வல்லார்–ஓத வல்லார்கள்
ஏர் ஆரும் வைகுந்தத்து–வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில்
இமையவரோடு–நித்ய ஸூரிகளோடு
இருப்பார்–கோவையா யிருக்கப் பெறுவார்கள்–
வாராரும் முலை மடவாள்
முன்பு எல்லாம் நெகிழ்ந்து கிடந்த கச்சு
திருக் குழலிலே திருவாழி மோதிரம் சேர்ந்த பாவநா ப்ரகர்ஷத்தாலே
திரு முலைத் தடங்கள் விம்மி நிறைந்தது என்று தோற்றுகிறது
மடவாள்-என்று
முற்பட்ட ஒடுக்கமாதல்
ஸ்த்ரீத்வம் ஆதல்
வைதேவி தனைக் கண்டு
தேஹ நிபந்தநமான ஸ்தூல கார்ஸ்யங்களை மதியாத குடிப் பிறப்பை யுடையவள்
தனைக் கண்டு
அந்தப் புர கார்யம் தலைக் கட்டுகை யாகையாலே
ராம தாஸன் என்று தன்னையும் கண்டு என்னுதல்
இவளைக் கண்டால் அல்லது பெருமாளையும் காண ஒண்ணாமையாலே இருவரையும் கண்டு என்னுதல்
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
நச சங்குசித பந்தா யேந வாலி ஹதோ கதா -என்ன பயப்படுத்த வேண்டாத சீர்
நத்யஜேயம் கதஞ்சன தோஷோ யத் யபி தஸ்ய ஸ்யாத் ஸ்தா மேதத கர்ஹிதம் -என்றவர்க்குப்
பிராண பர்யந்தமாகப் பிரியாத சீர்
வத்யதாம் -என்ற பரிவருக்கும்
பெருமாள் தமக்கும்
பிராணனை யுண்டாக்கின சீர்
கிம் கோப மூலம் மனு ஜேந்த்ர புத்ரம் -என்று
இளைய பெருமாள் ஸந்நிதியில் நிற்கும்படி தம்பதிகளை சரணாகதம் ஆக்கின சீர்
ஆரும் –
நிறையும்
ஆஸ்ரயத்திலே சேருவதற்கு முன்னே -ஆர்ந்த – (ஆராய்ந்த )என்னலாய் இறே தோற்றுகிறது
திறல்
ஓவ்ஷத பர்வதங்கள் நிமித்தமாகச் செய்த ஸாமர்த்யங்கள் -என்னுதல்
வழியில் உண்டான விரோதி வர்க்கங்களை நீக்கிப் போந்த ஸாமர்த்யம் என்னுதல்
அனுமன்
வீரத் தழும்பு சுமக்க வல்லவன்
தெரிந்து உரைத்த அடையாளம்
பெருமாள் அருளிச் செய்தவற்றில்
தான் தரித்தவற்றில்
சொல்லலாமவற்றில்
சொல்ல வேண்டிய அடையாளம் தெரிந்து உரைத்ததும்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
உபய விபூதியும் நிறைந்த புகழையும்
திரு மாளிகையும்
பட்டர் பிரான் என்கிற திரு நாமத்தையும் யுடைய ஆழ்வார்
பட்டர் பிரான் பாடல் வல்லார்
பெருமாளுக்கும்
நாய்ச்சிமாருக்கும்
திருவடிக்கும்
உண்டான விசேஷ குணங்களைச் சேர்த்து அருளிச் செய்த
இப் பத்துப் பாட்டையும் ஸ அபிப்ராயமாக வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே
எல்லா நன்மைகளும் சேர்ந்த பரம பதத்தில் –
அடியாரோடு இருந்தமை -என்கிறபடியே
நிரந்தர பகவத் அனுபவ பரரான ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவர் –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply