இறைவனையோ, இறைவனை ஒத்த சிறப்புடைய மானிடரையோ சிறு குழந்தையாய் பாவித்து
அவர்கள் மேல் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகும்.
குழந்தையும் அழகு, தமிழும் அழகு; அழகான குழந்தையை அழகியத் தமிழில் பாடப்படும்
இந்த பிள்ளைத் தமிழ் இலக்கியம் பேரழகு மிக்கது.
அதைப் படிக்கும் போது நமக்குள்ளேயே தாய்மைப் பொங்கிவருவதை உணராது இருக்க முடியாது.
பிள்ளைத் தமிழ் இலக்கியமானது –
1. ஆண்பால் பிள்ளைத் தமிழ்;
2.பெண்பால் பிள்ளைத தமிழ் என இரண்டு வகைப்படும்.
ஆண்பால் பிள்ளைத் தமிழ்:
1. காப்பு
2. செங்கீரை
3. தால்
4. சப்பாணி
5. முத்தம்
6. வாரானை
7. அம்புலி
8. சிற்றில்
9. சிறுபறை
10. சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களையுடையது.
பெண்பால் பிள்ளைத் தமிழ்:
காப்புப் பருவம் முதல் அம்புலி பருவம் ஈறாக உள்ள ஆறு பருவங்களும் இருபாலார்க்கும் பொதுவானது;
ஆண்பால் பிள்ளத் தமிழில் கடைசியாக உள்ள
சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் மூன்று பருவங்களுக்குப் பதிலாக
8. கழங்கு
9. அம்மானை
10. ஊசல் ஆகிய மூன்று பருவங்களும் பெண்பால் பிள்ளைத் தமிழில் வரும்.
விளக்கம்:
1. காப்புப் பருவம் –
இது குழந்தையின் இரண்டாவது மாதத்தில் பாடுவது.
எந்த குழந்தையாயினும் முதலில் அதற்கு எந்த தீங்கும் நேர்ந்திடா வண்ணம்,
சிவன், பார்வதி, விநாயகர், திருமால், முருகன் என்று பலத் தெய்வங்களும் குழந்தையைக் காக்க வேண்டி,
அவர்கள் மீது பாடல்கள் பாடி, குழந்தைக்குக் காப்பிட வேண்டும்.
2. செங்கீரைப் பருவம் –
இது குழந்தையின் ஐந்தாம் மாதத்தில் பாடுவது. இந்த பருவத்தில், குழந்தை ஓரளவு தவழவும் முயற்சிக்கும். அதாவது,
குழந்தை தன் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலையை நிமிர்த்தி முகமாட்டும் பருவம்.
குழந்தை இவ்வாறு செய்யும் போது, அது செங்கீரைக் காற்றில் ஆடுவது போன்று மிகவும் அழகாக, மனமும் அதோடு சேர்ந்து ஆடுற மாதிரி இருக்கும்.
3. தாலாட்டுப் பருவம் –
இது குழந்தையின் ஏழாம் மாதத்தில் பாடுவது. தால் நாக்கு. தாய் தன் தாலை ஆட்டிப் பாடும் போது,
நாக்கின் அசைவுகளைக் குழந்தைகள் கவனித்துக் கேட்கும். (தாலாட்டுப் பாடும் பருவம்)
4. சப்பாணிப் பருவம் –
இது ஒன்பதாம் மாதம் பாடப்படும். சப்பாணி என்றால் – கைகளைத் தட்டுதல்;
குழந்தைத் தன் இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தட்டி ஆடும் பருவம்.
5. முத்தப் பருவம் –
இது குழந்தையின் பதினோறாம் மாதத்தில் பாடுவது.
பெற்றோர், தங்களுக்கு முத்தம் தருமாறு குழந்தையிடம் கெஞ்சும் பருவம்.
6. வாரானைப் பருவம் (வருகை) –
இது குழந்தையின் 13ம் மாதத்தில் பாடுவது. குழந்தை தன் ஒரு வருட காலத்தின் நிறைவில்
அவர்கள் செய்யும் சாகசம், தளிர் நடைப் போடுதல். ஓரளவு நடக்கத் தெரிந்த தன் குழந்தையை, தாய் தன்
இரு கைகளையும் முன்னே நீட்டி, தன்னிடம் நடந்து வருமாறு அழைக்கும் பருவம்.
7. அம்புலிப் பருவம் –
இது குழந்தையின் பதினைந்தாம் மாதத்தில் நிகழ்வது. அம்புலி என்றால் நிலா. நிலவை நோக்கிக் கை நீட்டி,
தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம்.
8. சிற்றில் பருவம் –
இது குழந்தையின் பதினெட்டாம் மாதத்தில் பாடப்படுவது.
ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் வேறுபடுவது இந்த பருவத்தில் இருந்து தான்.
9. சிறு பறைப் பருவம் –
இது குழந்தையின் பத்தொன்பதாம் மாதத்தில் பாடப்படும்.
ஒரு சிறிய பறையையும் குச்சியையும் வைத்து பறை கொட்டி விளையாடும் பருவம்.
10. சிறு தேர் பருவம் –
இது குழந்தையின் இருபத்தி ஒன்றாம் மாதத்தில் பாடப்படுவது. தேர் பொம்மைத் தேரை உருட்டி விளையாடும் பருவம்.
பெண்பால் பிள்ளைத் தமிழ்:
கழங்காடல் –
அதாவது, தாயக்கட்டை மாதிரி ஒன்ன வெச்சுக்கிட்டு உருட்டி விளையாடுவது.
அம்மானை ஆடல் – அம்மானை ன்னா பந்து. பெண் பிள்ளைகள் ஒரு பாட்டு பாடிக் கொண்டே பந்து விளையாடுவாங்க.
அப்பொழுது பாடும் பாட்டு ‘அம்மானைப் பாட்டு’.
ஊசலாடும் பருவம் – ஊஞ்சல் ஆடி விளையாடும் பருவம்.
அதுமட்டுமல்லாது, நீராடல் பருவம் என்றும் ஒரு பருவம் உண்டு.
இவை அனைத்தும் ஒரு பொதுவான பருவம் தான் என்றாலும், அவ்வப் பொழுது வெவ்வேறு பருவங்களும் சேர்த்து,
வெவ்வேறு பருவ காலத்தில் பிள்ளைத் தமிழ் பாடுவர்.
எப்படி இருந்தாலும், குழந்தையின் இரண்டாம் மாதம் முதல் இருபத்தி ஒன்றாம் மாதம் வரை உள்ள
இந்த பத்துப் பருவங்களும் பிள்ளைத்தமிழ் பாடும் பருவங்களாகும்.
பெரியாழ்வார் தன்னை யசோதையாகவும், இறைவனைக் குழந்தையாகவும் பாவித்துப் பாடிய பாடல்கள் தான் பெரியாழ்வார் திருமொழி!
பெரியாழ்வார் திருமொழியில் ஒரு தாயின் மனநிலையை அப்படியே அச்சு அசலாகப் பாடலாய்ப் பாடியுள்ளார்.
இவர் திருமொழியில் ஆண்பாற் பிள்ளைத் தமிழை எவ்வாறு பாடியிருக்கிறார் என்றால், இவர் பாடிய இந்த திருமொழியில்
மேலே சொன்ன பத்துப் பருவங்களிலும் அல்லாத மேலும் சில பருவங்களையும் பாடியுள்ளார்.
ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியின் தலைப்புகளும்,
அதில் அவர் பாடிய பிள்ளைப் பருவங்களும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் திருமொழி: 105 பாசுரங்கள்
முதலாம் பத்து – வண்ணமாடங்கள் – கண்ணன் திருவவதாரச் சிறப்பு – 10 பாசுரங்கள்
இரண்டாம் பத்து – சீதக்கடல் – கண்ணனது திருமேனி அழகைப் பாதாதிகேசமாக அனுபவித்தல் – 21 பாசுரங்கள்
மூன்றாம் பத்து – மாணிக்கங்கட்டி – தாலப்பருவம் – கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் – 10 பாசுரங்கள்
நான்காம் பத்து – தன்முகத்து – அம்புலிப் பருவம் – சந்திரனை அழைத்தல் – 10 பாசுரங்கள்
ஐந்தாம் பத்து – உய்யவுலகு – செங்கீரைப் பருவம் – தலையை நிமிர்த்தி முகத்தை அசைத்து ஆடுதல் – 11 பாசுரங்கள்
ஆறாம் பத்து – மாணிக்கக் கிண் கிணி – சப்பாணிப் பருவம் – கைக்கொட்டி விளையாடுதல் – 11 பாசுரங்கள்
ஏழாம் பத்து – தொடர் சங்கிலிகை – தளர்நடைப் பருவம் – தளர் நடை நடத்தல் – 11 பாசுரங்கள்
எட்டாம் பத்து – பொன்னியல் – அச்சோப் பருவம் – அணைத்துக் கொள்ள அழைத்தல் – 11 பாசுரங்கள்
ஒன்பதாம் பத்து – வட்டுநடுவே – தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல் – 10 பாசுரங்கள்
———–
இரண்டாம் திருமொழி: 105 பாசுரங்கள்
முதலாம் பத்து – மெச்சூது – பூச்சி காட்டி விளையாடுதல் – 10 பாசுரங்கள்
இரண்டாம் பத்து – அரவணையாய் – கண்ணனை முலையுண்ண அழைத்தல் – 11 பாசுரங்கள்
மூன்றாம் பத்து – போய்ப்பாடு – பன்னிரு நாமம்: காது குத்துதல் – 13 பாசுரங்கள்
நான்காம் பத்து – வெண்ணெயளைந்த – கண்ணனை நீராட அழைத்தல் – 10 பாசுரங்கள்
ஐந்தாம் பத்து – பின்னை மணாளனை – கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல் – 10 பாசுரங்கள்
ஆறாம் பத்து – வேலிக்கோல் – காக்கையைக் கண்ணனுக்குக் கோல் கொண்டுவர விளம்புதல் – 10 பாசுரங்கள்
ஏழாம் பத்து – ஆனிரை – கண்ணனைப் பூச்சூட அழைத்தல் – 10 பாசுரங்கள்
எட்டாம் பத்து – இந்திரனோடு – கண்ணனை திருஷ்டி தோஷம் வாராதபடி திருவந்திக் காப்பிட அழைத்தல் – 10 பாசுரங்கள்
ஒன்பதாம் பத்து – வெண்ணெய் விழுங்கி – வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம் – 11 பாசுரங்கள்
பத்தாம் பத்து – ஆற்றிலிருந்து – ஆயர்மங்கையர் யசோதையிடம் கண்ணன் தீம்புகளைக் கூறி முறையிடுதல் – 10 பாசுரங்கள்
———-
மூன்றாம் திருமொழி: 105 பாசுரங்கள்
முதலாம் பத்து – தன்னேராயிரம் – யசோதைப் பிராட்டி கண்ணனது குறும்புகளைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல் – 11 பாசுரங்கள்
இரண்டாம் பத்து – அஞ்சனவண்ணனை – யசோதைப் பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி கவலையுறுதல் – 10 பாசுரங்கள்
மூன்றாம் பத்து – சீலைக்குதம்பை – கண்ணன் கன்றுகள் மேய்த்து வரக் கண்டு யசோதை களிப்புறல் – 10 பாசுரங்கள்
நான்காம் பத்து – தழைகளும் – பசுக்கூட்டம் காலிப் பின்னேவரும் கண்ணனைக் கண்டு இடைக்கன்னியர் காமுறுதல் – 10 பாசுரங்கள்
ஐந்தாம் பத்து – அட்டுக்குவி – கண்ணன் கோவர்த்தனகிரியைக் குடையாகக் கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல் – 11 பாசுரங்கள்
ஆறாம் பத்து – நாவலம் – கண்ணன் புல்லாங்குழலூதற் சிறப்பு – 11 பாசுரங்கள்
ஏழாம் பத்து – ஐயபுழுதி – திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம் – 11 பாசுரங்கள்
எட்டாம் பத்து – நல்லதோர் தாமரை – தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்துத் தாய் பலபடி வருந்திக் கூறும் பாசுரம் – 10 பாசுரங்கள்
ஒன்பதாம் பத்து – என்னாதன் – கிருஷ்ணாவதார இராமா அவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இரண்டு தோழியர்
எதிரெதிராகக் கூறி உந்திப்பறத்தல் {உந்திபறத்தல்- பெண்கள் பாடியும் குதித்தும் விளையாடும் ஒரு வகை விளையாட்டு – 11 பாசுரங்கள்
பத்தாம் பத்து – நெறிந்தகருங்குழல் – இலங்கைக்குத் தூது சென்ற திருவடி{அனுமன்}, பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித் திருமகன்
கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழி கொடுத்துக் களிப்பித்தல் – 10 பாசுரங்கள்
————–
நான்காம் திருமொழி: 105 பாசுரங்கள்
முதலாம் பத்து – கதிராயிரம் – இறைவனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல் – 10 பாசுரங்கள்
இரண்டாம் பத்து – அலம்பாவெருட்டா – திருமாலிருஞ்சோலை மலைச் சிறப்பு – 11 பாசுரங்கள்
மூன்றாம் பத்து – உருப்பிணிநங்கை – திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பு – 11 பாசுரங்கள்
நான்காம் பத்து – நாவகாரியம் – மனம், மெய், வாக்கு ஆகிய முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும்,
அவ்வாறு அனுபவியாதாரை இழித்தும் கூறுதல் – 11 பாசுரங்கள்
ஐந்தாம் பத்து – ஆசைவாய் – இறைவனிடத்தில் ஈடுபடாமல் இருக்கும் சம்சாரிகளுக்கு நற்போதனை – ஹிதோபதேசம் செய்தல் – 10 பாசுரங்கள்
ஆறாம் பத்து – காசுங் கறையுடை – பெற்றபிள்ளைகளுக்கு இறைவனின் திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம் திருந்தாதார்க்கு உபதேசித்தல் – 10 பாசுரங்கள்
ஏழாம் பத்து – தங்கையை மூக்கும் – தேவப்ரயாகை என்று வழங்கப்படும் திருக்கண்டங்கடிநகர் என்னும் திருப்பதி திவ்யதேசத்தின் பெருமை – 11 பாசுரங்கள்
எட்டாம் பத்து – மாதவத்தோன் – திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1 – 10 பாசுரங்கள்
ஒன்பதாம் பத்து – மரவடியை – திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2 – 11 பாசுரங்கள்
பத்தாம் பத்து – துப்புடையாரை – அந்திமகாலத்தில் கடாஷிக்கும் படி அப்பொழுது வேண்டுவதற்குப் பதில் இப்பொழுதே
பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல் – 10 பாசுரங்கள்
———-
ஐந்தாம் திருமொழி: 41 பாசுரங்கள்
முதலாம் பத்து – வாக்குத் தூய்மை – நைச்யாநுஸந்தாநம், நைச்சியானுசந்தானம் – தன்னைத் தாழ்த்திக் கூறுதல் – 10 பாசுரங்கள்
இரண்டாம் பத்து – நெய்க்குடத்தை – தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளைப் போல் விரும்பிப் புகுந்ததனால்,
நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல். தன் தேகத்தையே, இறைவனின் ஒரு திவ்யதேசமாய் அவர் கருதுகிறார் – 10 பாசுரங்கள்
மூன்றாம் பத்து – துக்கச்சுழலையை – திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவிடமாட்டேனென்று தடுத்தல் – 10 பாசுரங்கள்
நான்காம் பத்து – சென்னியோங்கு – எம்பெருமான் தமது திருவுள்ளதில் புகுந்ததனால் ஆழ்வார் தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல் – 11 பாசுரங்கள்
————-
பெரியாழ்வார் வாழித் திருநாமம்
நல்ல திருப்பல்லாண்டு நான் மூன்றோன் வாழியே!
நானூற்றி அறுபத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே!
சொல்லரிய ஆனி தனில் சோதி வந்தான் வாழியே!
தொடை சூடிக் கொடுத்தாள் தம் தொழுந்தமப்பன் வாழியே!
செல்வ நம்பி தன்னைப் போல் சிறப்புற்றான் வாழியே!
சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே!
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே!
வேதியர் கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே!
———
நம்பிள்ளையின் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில்
யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், ழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்)
உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார்.
ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார்.
அதனாலேயே, இவருக்கு கிருஷ்ணர் என்னும் திருநாமத்தைச் பெற்றார்.
இவர் இல்லை என்றால் இன்று ஸ்ரீவைஷ்ணவம் இப்படி வளர்ந்திருக்காது என்பது நிதர்சனம்.
பெரிய பெருமாள், பெரியாழ்வார், பெரியவாச்சான் பிள்ளை, பெரியஜீயர் என்று அழைக்கப்பட்ட நால்வரும் அவரவர் பெருமையால்
‘பெரிய’ என்ற பட்டத்தை அடைந்து புகழப்பட்டிருக்கிறார்கள்.
பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ரகசியம்
“மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய
கண்ணா நின்தனக்குக் குறிப்பாகில்,
கற்கலாம் கவியின் பொருள்தானே”
[ திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திருக்கண்ணமங்கை 7-10-10 ]
என்று திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கைக் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்துகொள்ள வேண்டும்மென்று
ஆசைப்படுவதை அறிந்து “நீ என்னிடமிருந்து கவியின் பெருளைக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறியதை கேட்ட கண்ணனும் அவசியம்
கற்றுக்கொள்கிறேன் என்று அவதார ரஹஸ்யத்தை கூறினார்.
“உமது அவதாரத் திருநட்சத்திரத்தில் கார்த்திகையில் கார்த்திகை நாளிலேயே உமது திருநாமமான ’திருக்கலிகன்றி தாஸர்’என்ற
திருநாமத்துடன் இந்த சோழநாட்டில் அவதரிக்கப் போகிறீர்.
அப்போது அதே சோழநாட்டில் என் அவதார திருநட்சத்திரமான ஆவணி ரோஹிணியில் கண்ணன் என்னும் பெயருடன்
அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டு அருளிச் செயல்களின் பெருள்களையும் உம்மிடமிருந்தே கற்றறிந்து
இவ்வுலகுக்கு வெளிப்படுத்துவேன்” என்று அருளிச் செய்தான்.
அதன்படியே கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய நம்பிள்ளையாகவும்,
கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியார் கூறுவர்.
சங்கநல்லூரில் இவரைப் பற்றின சரித்திரம் அதிகம் இல்லை. கோயில் சுவற்றில் அவரை பற்றிய கதை ஒன்று இருக்கிறது.
மனைவியுடன் திருமலைக்கு செல்கிறோம் என்று அவர் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.
பிறகு திருமலையிலிருந்து பிரிய மனம் இல்லாமல் அங்கேயே தங்க முடிவு செய்த பொது
பெருமாள் பிரம்மசாரியாக தோன்றி சாளக்ராமத்தை தந்து ஊருக்கு செல்ல பணித்தார்.
கொள்ளிடக்கரையில் சாளக்கிராமத்தை வைத்துவிட்டு குளிக்கும் போது, சாளக்ராமம் மறைந்துவிடுகிறது. மனம் வருந்துகிறார்.
பெருமாள் கனவில் தோன்றி தான் கொள்ளிட மணலில் பதிந்து கிடப்பதை தெரிவிக்கிறார்.
அவ்விக்ரஹத்தைச் சேங்கனூரில் பிரதிஷ்டை செய்தாரென்றும் அவ்வூரில் வரலாறு வழங்குகிறது.
தமது தாய் தந்தையர் ஆச்சாரியன் திருவடியை அடைந்த பின் திருவரங்கத்துக்கு வந்து
நம்பிள்ளையின் திருவடிகளை ஆசரியத்து பல உரைகளை நமக்கு தந்தருளினார்.
இவர் திரும்ப சேங்கனூருக்கு திரும்பினதே இல்லை என்று கொள்ளலாம்.
ஸ்ரீரங்கத்தில் இவர் வாழ்ந்த காலம் ஸ்ரீவைஷ்ணவத்துக்கு பொற்கலமாக அமைந்தது என்று சொல்லலாம்.
இவருக்கு முன் வாழ்ந்த எம்பெருமானார், பட்டர் காலத்திலும் அரசர்களின் உபத்ரவம், அரசியல் கலகங்கள் இருந்தன.
இவருக்கு பின் பிள்ளை லோகாசார்யர்,வேதாந்த தேசிகன் காலத்தில் துருஷ்கர்களால் பேராபத்துகள் விளைந்தன.
ஆனால் பெரியவாச்சான் பிள்ளை காலத்தில் இத்தகைய எந்த இடையூறும் இல்லாமல் ஸ்ரீவைஷ்ணவர்கள் நிம்மதியாக
ஆழ்வார், பூர்வாசாரியகளின் விளக்கங்களை கேட்டு நீண்ட உரை எழுதினார்கள்.
அதனால் ஸ்ரீவைஷ்ணவ வளர்ச்சிக்கு இந்த காலம் பொற்காலம் என்று கூறினால் அது மிகையாகாது.
’வியாக்கியான சக்ரவர்த்தி’ என்று போற்றப்பட்ட பெரியவாச்சான் பிள்ளை நாலாயிர திவ்வியப்பிரபந்தம் முழுமைக்கும்
வியாக்கியானம் மட்டும் இல்லாமல், சமிஸ்க்ருத ஸ்தோத்திரங்கள், ராமாயணம், ரகசிய கிரந்தங்கள் என்று செய்துள்ளார்.
வேத வேதாந்தங்களை பற்றி நாம் அறியாத பொருட்களை எல்லாம் தமிழ் பிரபந்தத்தாலே அறிந்து கொள்கிறோம் என்று
வேதாந்த தேசிகன். பிரபந்தம் மட்டுமே இருந்திருந்தால், அதன் உட்பொருளை யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது.
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் – இன்பா
வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது
இருபத்திநாலாயிரம்” என்று உபதேச இரத்தினமாலையில் மனவாள மாமுனிகள் போற்றியுள்ளார்.
இதில் ’ஏவியிட’ என்ற வார்த்தையை நம்பிள்ளை ஆச்சாரிய அனுகிரகத்துடன் எழுதினார் என்று பொருள்கொள்ள வேண்டும்.
இவருடைய சிஷ்யரான வாதி கேசரி ஜீயர் இவரால் உயர்வு பெற்ற கதையை பார்க்கலாம்.
வாதி கேசரி ஜீயர் ஆரமத்தில் பெரியவாச்சான்பிள்ளைக்குத் திருமடைப்பள்ளி(தளிகை) கைங்கரியம் செய்து வந்தார்.
அவ்வளவாக கல்வி ஞானம் பெற்றிருக்கவில்லை. பெரியவாச்சான் பிள்ளையை சேவிக்க வந்திருந்த சில பண்டிதர்கள்
அவர் திருமாளிகையில் ஏதோ கிரந்தங்களை பற்றி ஆராய்ந்துக்கொண்டு இருந்தார்கள்.
வாதி கேசரி ஜீயர் அது என்ன என்று கேட்க இவருடைய கல்வி அறிவின்மையை சுட்டிக்காட்ட ( முஸலகிஸலயம் ) “உலக்கை கொழுந்து”
என்றார்கள். இவர் அந்த கிரந்தத்தின் பெயர் தான் அது என்று நினைத்து பெரியவாச்சான் பிள்ளையிடம்
அந்த வித்வான்கள் சொன்னதை சொல்லி அந்த கிரந்தம் யார் அருளிச்செய்தது ? என்று கேட்டார்.
பெரியவாச்சான் பிள்ளை உண்மையை உணர்ந்து “அப்படி ஒரு கிரந்தம் இல்லை – உன் புத்தி உலக்கை கொழுந்து போன்றுள்ளது”
என்று பரிஹஸித்திருக்கிறார்கள் என்று வருத்ததுடன் சொன்னார்.
இதைக்கேட்ட அழகிய மணவாளர் பெரியவாச்சான் பிள்ளையின் திருவடிகளை பிடித்துக்கொண்டு
“அடியேனை எப்படியாவது வித்வானாக்கி விடவேணும்” என்று பிராத்தித்தார்.
அன்று முதல் பெரியவாச்சான் பிள்ளை இவருக்கு பாடம் சொல்லி வடமொழியிலும், தமிழ்மொழியிலும் இலக்கண இலக்கியங்களைக்
கரை கண்டவராக ஆக்கினார். தன்னை பரிஹசித்த வித்வான்களை வெட்கப்படும் படி, இவர் திருவாய்மொழிக்கு
“பன்னீராயிரப்படி” வியாக்யானம் ருளிச்செய்தார். கூடவே‘முஸலகிஸலயம்’ என்றொரு கிரந்தமும் செய்தார்.
இவர் செய்த கிரந்தத்தின் தொடக்கத்தில் – ஒன்றுமறியாத விலங்குபோல் இருந்த அடியேன் எவருடைய கடாஷத்தால்
பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமைபெற்ற அபயப்ரதர் என்னும் திருநாமுடைய
நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன் என்று கூறுகிறார்.
பெரியவாச்சான் பிள்ளைக்கு “பரம காருணிகர்” மற்றும் “அபார கருணாம்ருத சாகரர்” என்ற இரண்டு உயர்ந்த
பெயர்களை வைணவ உலகம் சூட்டியது மகிழ்ந்தது.
திருவரங்கநாதன் “அபயப்ரதராஜர்” என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான்.
இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், “இராமாயணப் பெருக்கர்” என்றும் இவருக்கு ஒரு பெயர் உண்டு.
‘பாசுரப்படி இராமாயணம்’ இவர் நமக்கு அளித்த பொக்கிஷங்களுள் ஒன்று!
இவர் செய்த நாலாயிரதிவ்ய பிரபந்த வியாக்கியனங்களில் பெரியாழ்வார் திருமொழியில் நானூறு பாசுரங்களின் வியாக்கியானம்
லுப்தமாகிப்போக அதற்கு மணவாளமாமுனிகள் பலருடைய பிராத்தனைக் கிணங்கி அக்குறையைத் நீக்கியருளினார்.
பெரியவச்சான் பிள்ளை 95 வயது வாழ்ந்து, கிபி 1262ல் ஆசாரியன் திருவடிகளை அடைந்தார்.
பெரியவாச்சான் பிள்ளைக்குக் குமாரர் (மகன்) இல்லை;
ஆகவே, இவர் தனது சகோதரியின் மகனான “நாயனாச்சான் பிள்ளை” என்பவரை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு,
தான் நம்பிள்ளையிடமிருந்து பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார்.
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானச் சிறப்பு–ஆழ்வார் திருநகரி ஸ்ரீ.அழகர் இராஜகோபாலன் ஸ்வாமி
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
எவருடைய கடாக்ஷத்திற்கு இலக்கானவர்களுக்கு ஸ்ரீதரன் எப்போதும் கிடைப்பதற்கு எளியவனோ, அத்தகையவராய்,
யாமுநாசார்யரின் பிள்ளையாய், ஸ்ரீமத் க்ருஷ்ணன் என்னும் பெயரையுடையவரான பெரியவாச்சான்பிள்ளையை வணங்குகிறேன்.
வைஷ்ணவ ஸம்ப்ரதாயதிற்கு தம் பரந்த உரைகளாலே மிகவும் உபகாரம் செய்தவரான பெரியவாச்சான்பிள்ளை என்னும்
இப்பரம ஆச்சாரியர் ஆங்கிலம் 1167ம் வருடத்திற்குச் சேர ஸர்வஜித் வருஷ, ஆவணி க்ருஷ்ண அஷ்டமி, ரோகிணி நட்சத்திரத்தில்
யாமுனாசார்யருக்கும், நாச்சியாரம்மாளுக்கும், திருவெள்ளீயங்குடி அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் சேங்கனூரில்
ஸ்ரீ க்ருஷ்ணனுடைய அம்ஸமாகவே அவதரித்தருளினார். நாலாயிர திவ்யப்ப்ரபந்தளுக்கும் வியாக்யானம் என்னும்
தமிழும் வடமொழியும் கலந்த மணிப்ப்ரவாளம் என்னும் உயர்ந்த நடையில் உரைகள் எழுதி ‘வியாக்யானச் சக்கரவர்த்தி’ என்றும்
போற்றப்படும் இவரது வைபவம் பலராலும் பரக்கப் பேசியிருக்கிற படியால்
இவரது வியாக்யான பங்த்திகளில் இருந்து சில அற்புதமான பகுதிகளை சிறிது அநுபவிக்க ஒரு சிறு முயற்சி.
இதில் குறைகள் இருந்தால் அவை அடியேனின் மந்த மதியே காரணம்.
ரஸமான அநுபவங்களுக்கு இம்மகாசார்யரின் மேதாவிசாலமும், நுண்ணறிவுமே காரணம்.
இவரின் பாசுர அணுகு முறையும், நுண்பொருள் விளக்கமும், எளியநடையும் இருமொழிகளின் ஆளுமையும் அநுபவித்து அதிசயக்கத் தக்கது.
திருப்பல்லாண்டில் பகவானை பெரியாழ்வார் ’அடியோமோடும் நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’
என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். ஏன் அடியோமோடும் என்று தனக்கும் பல்லாண்டு இங்கு?
பகவானும் நித்யமாக பல்லாண்டு எழுந்தருளியிருக்க வேண்டும்; அது போல் அவனுக்குப் பல்லாண்டு பாட
தானும் நித்யமாக இருக்க வேண்டும் என்ற பாரிப்பே ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி’ என்பதற்கு
தாத்பர்யம் என்பது பெரியவாச்சான்பிள்ளையின் உரை. மேலும் ’என்னோடும்’ என்னாதே ’அடியோமோடும்’ என்பதற்குக் காரணம்,
ஜீவாத்மா எம்பெருமானுக்கு சேஷத்வம் என்னும் ஆத்மகுணம் அறிந்தவர் பெரியாழ்வார் ஆகையாலே
இவ்வாறு கூறுகிறார் என்பார் பெரியவாச்சான்பிள்ளை.
பொங்கும் பரிவு மிக்கவராகையால் பெரியாழ்வார் ‘படைபோர் புக்கு முழங்கும்’ பாஞ்சசன்யத்தின் ஒலி எம்பெருமானின்
பகைவர்களுக்கு அவனைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று அஞ்சுகிறார்.
ஒரு தாய் தன் குழந்தைக்கு அலங்காரம் செய்து அந்த அலங்காரத்தைப் பார்த்தால் தன் கண் கூடப் பட்டுவிடுமோ என்று அஞ்சி
முகம் திருப்புமா போலே, பாஞ்சசன்யமும், பகவானும் சேர்ந்திருக்கும் அழகினை பார்க்க அஞ்சி எதிரில் இருக்கும்
பாஞ்சன்யத்தை ’அப்பாஞ்சசன்யம்’ என்று படர்க்கையாகக் குறிப்பிடுகிறார் என்பது பெரியவாச்சான்பிள்ளையின் வியாக்யானம்.
நாச்சியார் திருமொழியில், அநுகாரம் முற்றி இடை நடையும், இடைப் பேச்சும், முடை நாற்றமும் தன்னடையே வந்து சேர்ந்த
ஆண்டாளின் கோபிகா பாவனியில் ‘தோழியும் நானும் தொழுதோம்’ என்னுமிடத்தில் யமுனையாற்றில் நீராட வந்த
பெண்களின் சேலைகளை பறித்துக் கொண்டு ஒரு குருந்த மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் கண்ணன்
இந்தப் பெண்களை கைகூப்பி வணங்கச் சொல்கிறான். மானத்தை மறைக்க வேண்டியிருந்ததாலும்,
ஒரு கையால் வணங்குதல் கூடாது என்பதாலும், இந்த கோபிகையின் ஒரு கையையும் தோழியின்
ஒரு கையையும் சேர்த்து வணங்கினாள் என்னும் பெரியவாச்சான்பிள்ளையின் உரை ரஸிக்கத்தக்கது.
’மாதலி தேர் முன்பு செல்ல’ என்னும் நாச்சியார் திருமொழிப் பாசுரத்திற்கு உரையிட்ட மகாசார்யரான பெரியவாச்சன்பிள்ளை,
தேர் முன்புதானே செல்லும்; ஏன் ’மாதலி தேர் முன்பு செல்ல’ என்கிறாள் ஆண்டாள் என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு
அவரே இவ்வாறு பதில் அளிக்கிறார். இந்திரனின் சாரதியான மாதலி,இந்திரன் போர் புரியும் பொழுது எல்லாம்
அவன் தோற்றோடுவதனால் தேரை பின்புறம் செலுத்தியே பழகியவன். முதன் முதலில் இந்திரனால் அனுப்பப்பட்டு
இராமனுக்கு இராவணனுடன் போர் புரியும் பொழுது தேர் ஓட்டிய பொழுதுதான் அவனது தேர் முன்பு சென்றது.
அதனால்தான் ஆண்டாள் ’மாதலி தேர் முன்பு செல்ல’ என்று பாடியதாக இவரது வியாக்யானம்.
“வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும்”என்பது நாலடியார்.
அறம், பொருள், இன்பம் என்னும்மூன்றினுள்ளும், நடுவில் இருக்கும் பொருள் கிடைத்தால் இருபுறமும் இருக்கும்
அறமும் செய்ய முடியும் இன்பமும் அனுபவிக்கலாம் என்பது பொருள்.
திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடலில்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே – அம் மூன்றும்
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார்
சீரார் இரு கலையும் எய்துவர்
என்று மேற்கூறிய கருத்தையே கூறுவது போல் உள்ளது. ஆனால் இந்த திருமடல் பகவானை அடையும் ஆசையில்
எழுந்த பாசுரமாகையால் இந்த இடத்தில் இந்தப் பொருள் பொருந்தாது என்று பெரியவாச்சான்பிள்ளை வார்த்தைகளைச் சிறிது மாற்றி,
ஆரார் இவற்றின் இடை, அதனை எய்துவார் என்று பிரித்து, அறம் பொருள் இன்பம் என்ற மூன்றினுள்ளும் இன்பம் என்னும்
அதனை எய்துவார் மற்ற இரு கலையும் அதாவது அறத்தையும் பொருளையும் அடைவர் என்று பொருள் கொண்டு உரையிடுகிறார்.
மற்றவை இரண்டும் எவ்வாறு அடைந்ததாகக் கருதப்படும் என்பதற்கு ‘ஒருவன் இரண்டு இடங்களுக்கப்பால் உள்ள
இடத்தை அடைந்தான் என்றால் அவன் மற்ற இரண்டு இடங்களையும் வழியில் கடந்துதானே வந்திருக்க வேண்டும்?
எனவே மூன்றாவதாக உள்ள இன்பத்தை அடைந்து விட்டான் என்றால் மற்றவை இரண்டும் அவனால் அடையப்பட்டு விட்டது
என்று பொருள் கொள்ளலாம் என்கிறார். அல்லது பகவானை ஆசையுடன் அடைந்து விட்டவனுக்கு அதுவே
அறமும் பொருளும் ஆகி விடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
பெரியவாச்சான் பிள்ளை வாழித் திருநாமம் :
“தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்த பிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே.”
——————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply