ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–76–சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)–

அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)

செயற்கரிய செய்த வீரனான ராமர், ம்ருதுவாக கேட்கவும்,
ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்ற சம்பூகன் மெதுவாக விவரித்தான். என் பெயர் சம்பூகன். பிறப்பால் சூத்ரன்.
இந்த சரீரத்தோடு தேவத்வம் பெற விரும்பி, தவம் செய்கிறேன். தேவலோக ஆசை தான். வேறு எதுவும் இல்லை.
உக்ரமான தவத்தில் ஈடுபட்டேன்.

இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் கூரிய வாளை எடுத்து ராமர் அவன் தலையைக் கொய்தார்.
அந்த தாபஸன் இறந்து விழுந்ததும், தேவர்கள் சாது, சாது என்று பூமாரி பொழிந்தனர்.
ராமன் சத்ய பராக்ரமன் என்று மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

இதுவும் ஒரு தேவகார்யமே, உன்னால் இன்று நிறைவேறியது என்றனர். என்ன வரம் வேண்டுமோ கேள்,
இந்த சூத்ரனுக்கு ஸ்வர்க பதவி அருகதை இல்லை,
ஆனால், உன் கையால் வதம் செய்யப்பட்ட காரணமாக அவன் சுவர்கம் போவான் என்றனர்.

ராமர் உடனே, நீங்கள் திருப்தி அடைந்தது உண்மையானால், இறந்த குழந்தை உயிர் பிழைக்கட்டும் என்று வேண்டினார்.
அகால மரணம் என் ராஜ்யத்தில் தோன்றுவது, என் தவறே என்று உலகத்தார் குற்றம் சொல்வார்கள்.
நானும் குழந்தையை இழந்த அந்த தந்தைக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்.

தேவர்களும் இதைக் கேட்டு, கவலையை விடு, காகுத்ஸா, நீ இந்த தாபஸனை வதைத்த நிமிஷமே
அச்சிறுவன் உயிர் பெற்று விட்டான். பந்துக்களுடன் சேர்ந்து விட்டான். உனக்கும் மங்களங்கள் உண்டாகட்டும்,
நாங்கள் கிளம்புகிறோம். அகஸ்தியர் ஆசிரமம் செல்கிறோம்,
பன்னிரண்டு வருஷமாக தீஷையில் இருந்து இப்பொழுது தான் விரதத்தை முடித்திருக்கிறார். நீயும் வா,
அந்த முனிவரை தரிசனம் செய்து விட்டுப் போகலாம் என்று அழைத்தனர். ராமரும் சம்மதித்தார்.

தேவர்கள் பலவிதமாக தங்கள் வாகனங்களில் சென்றனர். பின் தொடர்ந்து வந்த ராமரும், தன் புஷ்பக விமானத்தில் சென்றார்.
வெகு விரைவில் கும்பயோனி என்று புகழ் பெற்ற அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்தனர்.
தபோதனரான அவரும் தேவர்களை மகிழ்ச்சியுடன், வரவேற்று உபசரித்தார்.
அவர்களும் சிறிது நேரத்தில் கிளம்பி தேவ லோகம் சென்றனர்.

நராதிபனான ராமர், தேவர்கள் சென்றபின் அகஸ்தியர் அருகில் வந்த பணிந்து வணங்கி அவர் கொடுத்த விருந்தையும் ஏற்றுக் கொண்டார்.
ராகவா, ஸ்வாகதம், நல்ல வேளை வந்து சேர்ந்தாய். என் மனதில் எப்பொழுதும் நல்ல மதிப்பைப் பெற்றவன்,
அதிதியாக வந்தது மிக்க மகிழ்ச்சி. தவம் செய்த சூத்ரனை வதைக்க நீ வந்திருப்பதாக சொன்னார்கள்.
இறந்த சிறுவனையும் உயிர்ப்பித்து விட்டாய். இன்று இரவு இங்கேயே இரு.

நாளைக்காலை புஷ்பக விமானத்தில் உன் நகரம் செல்வாய்.
நீ தான் நாராயணன். உன்னிடம் தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. நீ தான் உலகனைத்துக்கும் தலைவன்.
எல்லா பூதங்களாகவும் இருப்பவனும் நீயே. அழிவற்ற சனாதனனாக இருப்பவனும் நீ தான்.

இதோ இந்த ஆபரணம் விஸ்வகர்மா செய்தது. இதை எடுத்துக் கொள். உன் அழகுக்கு அழகு சேர்க்கட்டும்.
அணிந்து கொள். எனக்குத் திருப்தியாக இருக்கும்.
தானம் பெற்ற பொருளை திரும்ப தானம் செய்வது விசேஷமாக சொல்லப் படுகிறது.
இதை பாதுகாத்து வைத்துக் கொள்வதும் உன்னால் தான் முடியும்.
பிரகாஸமாக சூரிய கிரணம் போல விளங்கும் இந்த ஆபரணத்தை வாங்கிக் கொள் என்று கொடுத்தார்.
இக்ஷ்வாகு அரசனான ராமர், தன் க்ஷத்திரிய தர்மத்தை மனதில் கொண்டு, பதில் சொன்னார்.

இது போல தானம் வாங்கிக் கொள்வது பிராம்மணர்களுக்கு விதிக்கப் பட்டது.
பெரியவரே, நான் க்ஷத்திரியனாக இருந்து இதை எப்படி வாங்கிக் கொள்வேன்.
விஷயம் அறிந்த பெரியவர் நீங்கள் தான் இது சரியா என்று சொல்ல வேண்டும் என்றார்.

அகஸ்தியர் சொன்னார். ராமா, முன்பு க்ருதயுகத்தில் எங்கும் பிராம்மணர்களே நிறைந்திருந்தனர்.
அரசன் என்று ஒரு சமூகமே கிடையாது. இந்திரன் ஓருவன்தான் தேவர்கள் தலைவனாக இருந்தான்.
பின் பிரஜைகள், அரசனை வேண்டினர்.
தேவர்கள் தலைவனாக சதக்ரது- நூறு யாகங்கள் செய்பவன் இந்த பதவிக்கு ஏற்றவன் என்று விதித்தாய்.

பின் பூவுலகத்திலும் இப்படி ஒரு தலைவன், அரசன் வேண்டும் என்ற வேண்டு கோள் எழுந்தது.
பிரஜைகள் தீவிரமாக இருப்பதையறிந்து, ப்ரும்மாவும் லோக பாலர்கள், அந்தணர்கள், வாஸவன் முதலியவர்களையும் வரவழைத்தார்.

அவரவர் தேஜஸிலிருந்து ஒரு பாகம் தாருங்கள் என்று கேட்டு வாங்கி, காப்பாற்றும் சக்தி வாய்ந்தவன்
ந்ருபன்-ராஜா, அரசன் என்று ஸ்ருஷ்டி செய்தார். லோக பாலர்களும், மற்றவர்களும் இதற்கு சம்மதித்தனர்.

பின் ப்ரும்மா, லோகபாலர்க ளின் விசேஷ சக்தியையும் அவர்களுக்கு கொடுத்து,
அரசன் என்பவன் பிரஜைகளுக்கு ஈஸ்வரன், தலைவனாக இருப்பான் என்று நியமித்தார்.

அவன், இந்திரனுடைய சக்தியால், கட்டளையிடும் சக்தியைப் பெற்றான்.
வருணனுடைய பங்கால், தன் உடலை உறுதியாக வைத்திருக்கிறான்.
குபேரனுடைய பங்கினால், செல்வ செழிப்பைப் பெற்றான். அந்தந்த தேவதைகளின் தன்மை கைவரப் பெற்றான்.
அதனால் இந்திரன் பங்கான இதை ஏற்றுக் கொள். இதனால் எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் உண்டாகும் என்றார்.

ராமரும், முனிவரின் தர்மார்த்தமான வார்த்தைகளைக் கேட்டு சம்மதித்து, அவர் கொடுத்த ஆபரணத்தை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின், இந்த ஆபரணம் உங்கள் கைக்கு எப்படி வந்தது என்று வினவினார்.
அத்புதமாக இருக்கிறது இந்த ஆபரணம், உடலோடு ஒட்டி, அழகாக தெரிகிறது என்று வியந்தார்.

எப்படி, எங்கிருந்து என் கைக்கு வந்து சேர்ந்தது என்பதைச் சொல்கிறேன் கேள் என்று ஆரம்பித்தார்.
முன் த்ரேதாயுகத்தில் இதே ஆசிரமத்தில், என் கைக்கு வந்தது. எனக்கு தானமாக இது கிடைத்ததே ஒரு வியத்தகு சம்பவம் தான் என்றார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading