இரவில் போர்நிறுத்தம்; வில்வத்துடனும், கங்கை நீருடனும் கிருஷ்ணன் செய்த சிவஸ்துதி; வில்வோதகேஷ்வரன் என்ற பெயரை ஏற்ற சிவன்; பாரியாத்ர மலை பெற்ற வரம்
வைஶம்பாயந உவாச
தமாருஹ்ய ரத²ம் க்ருஷ்ண꞉ பாரியாத்ரம் கி³ரிம் யயௌ |
யத்ரைராவதமாஸ்தா²ய ஸ்தி²த꞉ ஸுரபதி꞉ ப்ரபு⁴꞉ ||2-74-1
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “கிருஷ்ணன் தன் தேரில் ஏறிக் கொண்டு, ஐராவதத்தின் முதுகில் தேவர்களின் வலிமைமிக்கத் தலைவன் இருந்த பாரியாத்ர மலைக்குச் சென்றான்.
பாரியாத்ரோ கி³ரிஶ்ரேஷ்டோ² த்³ருஷ்ட்வா யாந்தம் ஜநார்த³நம் |
ஶாணபாத³ஸமோ பூ⁴த்வ ப்ரவிவேஶ வஸுந்த⁴ராம் ||2-74-2
ப்ரியார்த²ம் வாஸுதே³வஸ்ய ப்ரபா⁴வஜ்ஞோ மஹாத்மந꞉ |
தஸ்ய ப்ரீதோ ஹ்ருஷீகேஶ꞉ பர்வதஸ்ய ஜநாதி⁴ப ||2-74-3
வசுதேவனுடைய உயரான்ம மகனின் சக்திகளை அறிந்த மலைகளில் முதன்மையான பாரியாத்ரம், ஜனார்த்தனன் வருவதைக் கண்டு சந்தனத்தை அரைக்கப் பயன்படும் {உளுந்தளவுக்கு} சிறு கல்லைப் போன்றாகி பூமியில் நுழைந்தது. அப்போது, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ரிஷிகேசன் அந்த மலையிடம் பெரும் நிறைவடைந்தான்.(2,3)
தத꞉ ப்ரயாதம் யுத்³தா⁴ர்த²மச்யுதம் குருநந்த³ந |
ஸபாரிஜாதோ க³ருட³꞉ ப்ருஷ்ட²தோ(அ)நுயயௌ ததா³ ||2-74-4
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, கிருஷ்ணன் போரிடச் சென்றபோது, பாரிஜாதத்தை முதுகில் கொண்ட கருடனும் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.
ப்ரத்³யும்ந꞉ ஸாத்யகிஶ்சாபி க³ருட³ஸ்தௌ² மஹாப³லௌ |
க³தாவுபௌ⁴ ரக்ஷநார்த²ம் பாரிஜாதமரிம்த³மௌ ||2-74-5
கைவரை அடக்குபவர்களும், பெருஞ்சக்திவாய்ந்த இருவருமான சாத்யகியும், பிரத்யும்னனும் பாரிஜாத மரத்தைக் காப்பதற்காகக் கருடனின் முதுகில் ஏறிச் சென்றனர்.
ததஸ்த்வஸ்தம் க³த꞉ ஸூர்ய꞉ ப்ரவ்ருத்தா ரஜநீ ந்ருப |
உபஸ்தி²தம் புநர்யுத்³த⁴ம் ஶக்ரகேஶவயோரிஹ ||2-74-6
அந்நேரத்தில் சூரியன் அடிவானில் மறைந்து இரவு உண்டானது. ஆனால், ஓ! மன்னா, சக்ரனுக்கும், கேசவனுக்குமிடையில் மீண்டும் போர் தொடங்கியது.
ஸுப்ரஹாராஹதம் த்³ருஷ்ட்வா விஷ்ணுரைராவதம் க³ஜம் |
நாதிகல்பம் மஹாதேஜா தே³வராஜாநமப்³ரவீத் ||2-74-7
பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன், ஐராவத யானை கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் கண்டு, தேவர்களின் மன்னனிடம் இவ்வாறு பேசினான்
க³ருடா³பி⁴ஹத꞉ பூர்வம் நாதிகல்போ க³ஜோத்தம꞉ |
ஐராவதோ மஹாபா³ஹோ ராத்ரிஶ்ச ஸமுபோஹ்யதே ||2-74-8
{கிருஷ்ணன் இந்திரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, யானைகளில் முதன்மையான ஐராவதன் கருடனால் பெருங்காயம் அடைந்திருக்கிறான்; இரவும் வேகமாக வளர்கிறது.
ஶ்வ꞉ ப்ரபா⁴தே யதா²காமம் ப்ரவர்தஸ்வ யதே²ச்ச²ஸி |
ஏவமஸ்த்விதி க்ருஷ்ணம் து தே³வராஜோ(அ)ப்³ரவீத்ப்ரபு⁴꞉ ||2-74-9
நாம் (இப்போது) போரை நிறுத்துவோம். நாளை காலையில் நீ விரும்பும் செயலைச் செய்வாயாக” என்றான். அப்போது தேவர்களின் மன்னனும், “அப்படியே ஆகட்டும்” என்று அவனுக்கு மறுமொழிகூறினான்.
உவாஸ புஷ்கராப்⁴யாஶே தே³வராஜ꞉ புரந்த³ர꞉ |
வ்ரஜம் கி³ரிமயம் க்ருத்வா த⁴ர்மாத்மா ந்ருபஸத்தம ||2-74-10
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, சிறப்புமிக்க ஆன்மாவைக் கொண்ட தேவர்களின் மன்னன் புரந்தரன், கற்களால் ஒரு தற்காலிக கவிகையை அமைத்துக் கொண்டு புஷ்கரையின் அருகில் அவ்விரவு தங்கினான்
ப்³ரஹ்மா ததோ ஜகா³மாத² கஶ்யபஶ்ச மஹாந்ருஷி꞉ |
அதி³திஶ்சைவ ஸர்வே ச தே³வா முநய ஏவ ச ||2-74-11
அப்போது, பிரம்மன், பெரும் முனிவரான கசியபர், அதிதி ஆகியோரும், பிற தேவர்களும், முனிவர்களும் அவனிடம் வந்தனர்.
ஸாத்⁴யா விஶ்வே ச கௌரவ்ய நாஸத்யாவஶ்விநௌ ததா² |
ஆதி³த்யாஶ்சைவ ருத்³ராஶ்ச வஸவஶ்ச ஜநேஶ்வர ||2-74-12
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஓ! குரு வம்சத்தின் வழித்தோன்றலே, சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், அசுவினி குமாரர்கள், ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள் ஆகியோரும் அங்கே கூடினர்.
நாராயணஶ்ச புத்ரேண ஸத்யகேந ச பா⁴ரத |
ஸஹோவாஸ கி³ரௌ ரம்யே பாரியாத்ரே ப்ரஹ்ருஷ்டவத் ||2-74-13
மறுபுறம், ஓ! பாரதா {ஜனமேஜயா}, நாராயணனும் இனிமை நிறைந்த மலையான பாரியாத்ரத்தில் தன் மகனுடனும் {பிரத்யும்னனுடனும்}, சாத்யகியுடனும் தங்கினான்.
யத்ஸ ஶாணப்ரமாணோ(அ)ஸ்ய ப⁴க்த்யா ஸமப⁴வந்ந்ருப |
வரம் ப்ராதா³த்ததஸ்தஸ்ய பர்வதஸ்ய மஹ்த்³யுதி꞉ ||2-74-14
அப்போது, பெரும்பிரகாசம் கொண்ட அவன், சாணைக் கல்லின் வடிவத்தை ஏற்றிருந்த பாரியாத்ர மலைக்கு ஒரு வரத்தைக் கொடுத்தான்
ஶாணபாத³ இதி க்²யாதோ ப⁴விஷ்யஸி மஹாகி³ரே |
புண்யேநார்த்³தே⁴ந துல்யோ ஹி புண்யோ ஹிமவத꞉ ஶுப⁴꞉ ||2-74-15
கிருஷ்ணன்}, “ஓ! பெரும் மலையே, நீ சாணபாதம் {சரணபாதன்} என்றழைக்கப்படுவாய்; இமய மலையைப் போலவே நீயே மங்கலமும், புனிதமும் நிறைந்தவனாவாய்.
ஏவமேவ ச பூ⁴யிஷ்டோ² ப⁴வ பர்வதஸத்தம |
மேருணா ஸ்பர்த⁴மாநோ ஹி ப³ஹுசித்ரம்ருகை³ர்யுத꞉ |
ரமே த்வாம் பஶ்யமாநோ(அ)ஹம் ப³ஹுசித்ரநகா³யுதம் ||2-74-16
ஓ! மலைகளில் முதன்மையானவனே, இவ்வாறே நீ தலைசிறந்தவனாக இருப்பாய்; எண்ணற்ற வகை ரத்தினங்கள் நிறைந்தவனாகப் புகழ்பெற்ற மேரு மலையை விஞ்சியவனாக இருப்பாய். பல்வேறு வகையான மதிப்புமிக்க ரத்தினங்கள் நிறைந்த உன்னைக் கண்டு எப்போதும் நான் மகிழ்ந்திருப்பேன்” என்றான்.
ததா² த³த்த்வா வரம் தஸ்ய பர்வத்ஸ்ய து கேஶவ꞉ |
த³த்⁴யௌ க³ங்கா³ம் ஸரிச்ச்²ரேஷ்டா²ம் நம்ஸ்க்ருத்வா வ்ருஷத்⁴வஜம் ||2-74-17
இவ்வாறு அந்த மலைக்கு வரத்தை அளித்த கேசவன், காளையைச் சின்னமாகக் கொண்ட தேவனை {சிவனை} முறையாக வணங்கிவிட்டு, ஆறுகளில் முதன்மையான கங்கையை நினைவுகூர்ந்தான்
அதா²யயௌ விஷ்ணுபதீ³ ஸ்ம்ருதா க்ருஷ்ணேந பா⁴ரத |
ஸம்புஜ்ய தாம் தத꞉ க்ருஷ்ண꞉ க்ருத்வா ஸ்நாநமதோ⁴க்ஷஜ꞉ ||2-74-18
ஓ! பாரதா, இவ்வாறு கிருஷ்ணனால் நினைவுகூரப்பட்ட (விஷ்ணுவின் பாதத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட) அந்த விஷ்ணுபதி ஆறானவள் அங்கே வந்தாள். கிருஷ்ணன் அவளை வழிபட்டுவிட்டு, அவளது நீரில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தான்.
உத³கம் ச க்³ருஹாயாத² பி³ல்வம் ச ஹரிரவ்யய꞉ |
தே³வமாவாஹயாமாஸ ருத்³ரம் ஸர்வேஶ்வரேஶ்வரம்||2-74-19
நித்யனான அந்த ஹரி, புனித ஆறான கங்கையின் நீரையும், வில்வ இலைகளையும் எடுத்துக் கொண்டு, அனைத்துப் பொருட்களின் தலைவர்களாக இருக்கும் அனைவருக்கும் தலைவனான ருத்ரதேவனை இருப்புக்கு அழைத்தான் {ஆவாஹணம் செய்தான்}
தத꞉ ப்ராப்தோ மஹாதே³வ꞉ஸோம꞉ ஸப்ரவரோ விபு⁴꞉ |
தஸ்தா²வுபரி பி³ல்வஸ்ய ததா²க³ங்கோ³த³கஸ்ய ச ||2-74-20
அப்போது தேவனான மஹாதேவன், கங்கை நீரிலும், வில்வ இலைகளிலும் உமையுடனும், தன் தொண்டர்களான கணங்களுடனும் சேர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டான் {கங்கை நீருக்கும் வில்வதளத்துக்கும் மேல் நின்றான்}
தம் பாரிஜாதகுஸுமைரர்சயாமாஸ கேஶவ꞉ |
துஷ்டாவ வாக்³பி⁴ரீஶேஶம் ஸர்வகர்தாரமீஶ்வரம் ||2-74-21
கேசவன், பாரிஜாத மரத்தின் மலர்களைக் கொண்டு அவனை வழிபட்டான். பிறகு அந்த நாநயமிக்கவன் {கிருஷ்ணன்}, அனைத்தையும் படைத்தவனும், தலைவர்களுக்குத் தலைவனுமான அவனை {சிவனைத்} துதிக்கத் தொடங்கினான்.
ஶ்ரீக்ருஷ்ண உவாச
ருத்³ரோ தே³வஸ்த்வம் ருத³நாத்³ராவணாச்ச
ரோரூயமாணோ த்³ராவணாச்சாதிதே³வ꞉ |
ப⁴க்தம் ப⁴க்தாநாம் வத்ஸலம் வத்ஸலாநாம்
கீர்த்யா யுங்க்ஷ்வேஶாத்³ய ப்ரப⁴வாம்யந்தரேண ||2-74-22
மங்கலனான அந்தக் கிருஷ்ணன், “ஓ! தேவா, (உன் படைப்புகளான) உயிரினங்களை மாயையில் மறைக்கிறாய், அவற்றை அழிக்கவும் செய்கிறாய்; உயிரினங்கள் பிறக்கும்போதே அண்டத்தில் படர்ந்தூடுருவியிருக்கும் ஒலியின் மூலம் உன்னை அவற்றுக்கு {அந்த உயிரினங்களுக்கு} வெளிப்படுத்திக் கொள்ளும் காரணத்தால் நீ ருத்ரன் என்றழைக்கப்படுகிறாய்; ஓ! தலைவா, நீ தானாக வெளிப்படுகிறாய்; நலந்தரும் உன் பாதுகாப்பில் என்னை நான் முழுமையாக ஒப்படைக்கிறேன். உன் பக்தர்களிடம் அர்ப்பணிப்புள்ளவனும், உன் அன்பைப் பெற்றவர்களின் அன்புக்குரியவனுமான எனக்கு {வெற்றி எனும்} புகழால் மகுடம் சூட்டுவாயாக
க்³ராம்யாரண்யாநாம் த்வம் பதிஸ்த்வம் பஶூநாம்
க்²யாதோ தே³வ꞉ பஶுபதி꞉ ஸர்வகர்மா |
நாந்யஸ்த்வத்த꞉ பரமோ தே³வதே³வ
ஜக³த்பதி꞉ ஸுரவீராரிஹந்தா ||2-74-23
வாழ்வை பின்பற்றுவோரிடம் {வாழ்வின் இன்பங்களில்} பற்று கொண்டவர்களும் {கிருஹஸ்தர்களும்}, அவர்களை {அவற்றைத்} துறந்தவர்களுமாக {வானப்ரஸ்தர்களுமாக} இருக்கும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக இருப்பதால் நீ {உயிரினங்கள் அனைத்தின் தலைவன் என்ற பொருளில்} பசுபதி என்று அழைக்கப்படுகிறாய். செயல்கள் அனைத்தையும் செய்பவன் நீயே. ஓ! தேவர்களின் தேவா, தெய்வீக வீரர்களின் பகைவரைக் கொல்பவனான உன்னைக் காட்டிலும் மேலான எவனும் அண்டத்தில் இல்லை.
யஸ்மாதீ³ஶோ மஹதாமீஶ்வராணாம்
ப⁴வாநாத்³ய꞉ ப்ரீதித³꞉ ப்ராணத³ஶ்ச |
தஸ்மாத்³தி⁴ த்வாமீஶ்வரம் ப்ராஹுரீஶம்
ஸந்தோ வித்³வாம்ஸ꞉ ஸர்வஶாஸ்த்ரார்த²தஜ்ஜ்ஞா꞉ ||2-74-24
ஓ! தலைவா, தொடக்கமாகவும், உயிரைக் கொடுப்பவனாகவும், தெய்வீகப் பேராசான்கள் அனைவரின் மனநிறைவுக்கும் காரணனாகவும் இருப்பதால், சாத்திரங்கள் அனைத்தின் முக்கியப் பொருளை அறிந்த நல்லோராலும், கல்விமான்களாலும் நீ தேவர்களின் தேவன் என்று {ஈசன் என்றும் ஈஷ்வரன் என்றும்} அழைக்கப்படுகிறாய்.
பூ⁴தம் யஸ்மாஜ்ஜக³த³த்யந்ததீ⁴ர
த்வத்தோ(அ)வ்யக்தாத³க்ஷராத³க்ஷரேஶ |
தஸ்மாத்த்வாமாஹுர்ப⁴வ இத்யேவ பூ⁴தம்
ஸர்வேஶ்வராணாம் மஹதாமப்யுதா³ரம் ||2-74-25
ஓ! புத்தியின் பிறப்பிடமே, ஓ! வெளிப்பட்டிருக்கும் படைப்புகள் அனைத்தின் தலைவா, புலப்படும் உலகம் {யாவும்} படைப்பாளர்கள் அனைவரையும் படைத்து, நலந்தரும் வரங்களை அளிக்கும் சுயம்புவான உன்னால் பெறப்பட்டதால் (பிறந்திருப்பவற்றின் பிறப்பிடம் என்ற பொருளில்) நீ பவன் என்று அழைக்கப்படுகிறாய்.
யஸ்மாஜ்ஜிதைரபி⁴ஷிக்தோ(அ)ஸி ஸர்வை-
ர்தே³வாஸுரை꞉ ஸர்வபூ⁴தைஶ்ச தே³வ |
மஹேஶ்வரம் விஶ்வகர்மாணமாஹு-
ஸ்த்வாம் வை ஸர்வே தேந தே³வாதிதே³வ ||2-74-26
ஓ! தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவா, வெல்லப்பட்ட தேவாசுரர்கள் அனைவராலும், அனைத்து உயிரினங்களாலும் நீ {ஈசனாக} மகுடம் சூட்டப்பட்டதால் அண்டத்தைப் உண்டாக்கும் (மிக உயர்ந்த தேவனான) மஹேஸ்வரன் என நீ அழைக்கப்படுகிறாய்
பூஜ்யோ தே³வை꞉ பூஜ்யஸே நித்யதா³ வை
ஶஶ்வச்ச்²ரேய꞉ காங்க்ஷிபி⁴ர்வரதா³மேயவீர்ய |
தஸ்மாத்³விக்²யாதோ ப⁴க³வாந்தே³வதே³வ꞉
ஸதாமிஷ்ட꞉ ஸர்வபூ⁴தாத்மபா⁴வீ ||2-74-27
ஓ! வரங்களை அளிப்பவனே, ஓ! அளவில்லா ஆற்றல் கொண்டவனே, அனைவராலும் துதிக்கப்படுபவன் நீ என்பதாலே நலம்விரும்பும் தேவர் எப்போதும் உன்னை வழிபடுகிறார்கள், அதன் காரணமாகவே நல்லோரால் விரும்பப்படும் பகவான் என்ற பெயரால் நீ கொண்டாடப்படுகிறாய்; அனைத்து உயிரினங்களில் ஆன்மாவாக இருக்கும் உன் இருப்பையே அது குறிப்பிடுகிறது (அனைத்து உயிரினங்களிலும் ஈசனாக நீ இருக்கிறாய்}.
பூ⁴மித்ரயாணாம் தே³வ யஸ்மாத்ப்ரதிஷ்டா²
புநர்லோகாநாம் பா⁴வநாமேயகீர்தி꞉ |
த்ர்யம்ப³கேதி ப்ரத²மம் தேந நாம
தவாப்ரமேய த்ரிதி³ஶேஶநாத² ||2-74-28
ஓ! சொர்க்கத்தின் தலைவர்களில் முதன்மையானவனே, ஓ! எல்லையற்றவனே, ஓ! தேவா, உற்பத்திக்கும், (பூமி, வானம், வெளி, சூரியன், நெருப்பு, காற்று முதலிய) பதிமூன்று கூறுகளுக்கும் காரணனாக நீ இருப்பதால் அளவில்லா புகழ் கொண்ட திரியம்பகன் என்று முக்கியமாக நீ அழைக்கப்படுகிறாய்
ஶர்வ꞉ ஶத்ரூணாம் ஶாஸநாத³ப்ரமேய-
ஸ்ததா² பூ³ய꞉ ஶாஸநாச்சேஶ்வரேண |
ஸர்வவ்யாபித்வாச்சங்கரத்வாச்ச ஸத்³பி⁴꞉
ஶப்³த³ஸ்யேஶாந꞉ ஶ்ரீகரார்காக்³ர்யதேஜா꞉ ||2-74-29
பகைவரை அடக்குவதால் சர்வன் என்றும், எவராலும் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதால் அப்ரமேயன் என்றும் அழைக்கப்படுகிறாய். ராஜக் கோட்பாடுகள் முதலியவற்றால் அனைத்தையும் ஆள்வதால் நீ அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் {ஸர்வவியாபி} என்றழைக்கப்படுகிறாய்; இன்பத்தின் பிறப்பிடமாக இருப்பதால் நீ சங்கரன் என்றழைக்கப்படுகிறாய்; வேதமே உன் சொல்லாக இருப்பதால் ஒலியின் தலைவனாகவும், சூரியனைவிடப் பிரகாசமிக்கவனாக இருப்பதால் அர்காக்ரயதேஜனாகவும் நீ இருக்கிறாய்.
ஸம்ஸக்தாநாம் நித்யதா³ யத்கரோஷி
ஶமம் ப்⁴ராத்ருவ்யாந்யத்³வ்யநைஶீ꞉ ஸமஸ்தாந் |
தஸ்மாத்³தே³வ꞉ ஶங்கரோ(அ)ஸ்யப்ரமேய꞉
ஸத்³பி⁴ர்த⁴ர்மஜ்ஞை꞉ கத்²யஸே ஸர்வநாத²꞉ ||2-74-30
ஓ! அனைவரின் தலைவா, ஆனந்தத்தால் {பேரின்பத்தால்} உன் பக்தர்களுக்கு மகுடம் சூட்டுவதும், உன் பகைவரான அசுரர்களுக்கும் நன்மையைக் கற்பிப்பதுமான அண்டந்தழுவிய பேரின்ப அம்சத்திற்காக உன்னை எல்லையில்லா ஆற்றல் கொண்டவனும், தானே வெளிப்பட்டவனுமான {சுயம்புவுமான} சங்கரன் என்று அறத்தின் சாரமறிந்த நல்லோர் அழைக்கின்றனர்.
த³த்த꞉ ப்ரஹார꞉ குலிஶேந பூர்வம்
தவேஶாந ஸுரராக்ஷ்ஜ்ஞாதிவீர்ய |
கந்டே² நைல்யம் தேந தே யத்ப்ரவ்ருத்தம்
தஸ்மாத்க்²யாதஸ்த்வம் நீலகண்டே²தி கல்ப꞉ ||2-74-31
ஓ! அபரிமித ஆற்றல் கொண்ட ஈஷ்வரனே, பழங்காலத்தில் தேவர்களின் தலைவன் தன் வஜ்ரத்தால் உன் தொண்டையில் தாக்கினான்; அதற்குப் பதிலடி கொடுக்கும் திறனை கொண்டிருந்தாலும், அன்பினால் நீ தொண்டை நீலமாகப் பொறுத்துக் கொண்டாய்; இந்தக் காரணத்தால் நீ நீலகண்டன் என்ற பெயரால் கொண்டாடப்படுகிறாய்.
யல்லிங்கா³ங்கம் யச்ச லோகே ப⁴கா³ங்கம்
ஸர்வம் ஸோம த்வம் ஸ்தா²வரம் ஜங்க³மம் ச |
ப்ராஹுர்விப்ராஸ்த்வாம் கு³ணிநம் தத்த்வவிஜ்ஞா-
ஸ்ததா² த்⁴யேயாமம்பி³காம் லோகதா⁴த்ரீம் ||2-74-32
ஓ! சோமதேவா, அசையும் படைப்புகளிலும் {உயிரினங்களிலும்}, அசையாத படைப்புகளிலும் {உயிரற்ற பொருட்களிலும்} ஆண், பெண் குறியீடுகளாக இருப்பதால் பொருட்களில் சாரமறிந்த பிராமணர்கள், அண்டத்தைப் பாதுகாப்பவளும், எப்போதும் துதிக்கத்தக்கவளுமான அம்பிகை என்றும், (முழுமைக்கு எதிரான) தகுதிவாய்ந்த இருப்பின் பிறப்பிடம் {குணவான்} என்றும் உன்னை அழைக்கிறார்கள்.
வேதை³ர்கீ³தா ஸா ஹி தத்த்வம் ப்ரஸூதா
யஜ்ஞோ தீ³க்ஷாணாம் யோகி³நாம் சாதிரூப꞉ |
நாத்யத்³பு⁴தம் த்வத்ஸமம் தே³வ பூ⁴தம்
பூ⁴தம் ப⁴வ்யம் ப⁴வதே³வாய நாஸ்தி ||2-74-33
கருத்துடன் கூடிய உற்பத்தியாகவும், செயல்திறமிக்க சக்திகளாகவும் வேதங்களில் உள்ள மாயை என்றறியப்படும் புதிர்நிறைந்த சக்தியான மஹாதத்வம் நீயே. சடங்குகளில் தீக்ஷை பெற்றவர்களின் யஜ்ஞமும் {வேள்வியும்}, அவர்களின் முக்கிய ஆற்றலும், யோகிகளின் பேராத்மாவும் நீயே; எனவே, உன்னைப் போன்ற ஓர் இருப்பும் {இதுவரை} இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை, இருக்கவும் முடியாது.
அஹம் ப்³ரஹ்மா கபிலோ யோ(அ)ப்யநந்த꞉
புத்ரா꞉ ஸர்வே ப்³ரஹ்மணஶ்சாதிவீரா꞉ |
த்வத்த꞉ ஸர்வே தே³வதே³வ ப்ரஸூதா
ஏவம் ஸர்வேஶ꞉ காரணாத்மா த்வமீட்³ய꞉ ||2-74-34
ஓ! தேவர்களின் தேவா, நானும், பிரம்மனும், கபிலரும், அனந்ததேவனும் {ஆதிசேஷனும்}, பிரம்மனின் சிறப்புமிக்க மகன்கள் யாவரும் உன் அம்சங்களால் உண்டானோம்; அனைவரின் தலைவன் நீயே, அனைத்தின் முக்கியக் காரணன் நீயே, துதிக்கத் தகுந்த முழுமையானவன் நீயே” என்றான் {என்று துதித்தான் கிருஷ்ணன்}.
இதி ஸம்ஸ்தூயமாநஸ்து ப⁴க³வாந்கோ³வ்ருஷத்⁴வஜ꞉ |
ப்ரஸார்ய த³க்ஷிணம் ஹஸ்தம் நாராயணமதா²ப்³ரவீத் ||2-74-35
இவ்வாறு துதிக்கப்பட்டவனும், காளையைத் தன் சின்னமாகக் கொண்டவனுமான மஹாதேவன், தன் வலக்கரத்தை நீட்டி நாராயணனிடம் இவ்வாறு பேசினான்
மநீஷிதாநாமர்தா²நாம் ப்ராப்திஸ்தே ஸுரஸத்தம |
பாரிஜாதம் ச ஹர்தாஸி மா பூ⁴த்தே மநஸோ வ்யதா² ||2-74-36
{சிவன் கிருஷ்ணனிடம்}, “ஓ! தேவர்களில் சிறந்தவனே, நீ விரும்பிய பொருட்களை அடைவாய்; பாரிஜாத மரத்தை நீ கொண்டு செல்வாய்; உன் மனம் {ஏமாற்றத்தால்) கிஞ்சிற்றும் துன்புறாது.
யதா² மைநாகமாஶ்ரித்ய தபஸ்த்வமகரோ꞉ ப்ரபோ⁴ |
ததா² மம வரம் க்ருஷ்ண ஸம்ஸ்ம்ருத்ய ஸ்தை²ர்யமாப்நுஹி ||2-74-37
ஓ! வலிமைநிறைந்த கிருஷ்ணா, மைநாக மலையில் நீ செய்த தவங்களையும், அந்தச் சந்தர்ப்பத்தில் நான் உனக்களித்த வரத்தையும் நினைவுகூர்வாயாக.
அவத்⁴யஸ்த்வமஜேயஶ்ச மத்த꞉ ஶூரதரஸ்ததா² |
ப⁴விதாஸீத்யவோசம் யத்தத்ததா² ந தத³ந்யதா² || 2-74-38
“நீ கொல்லப்பட முடியாதவனாக இருப்பாய்”, “நீ வெல்லப்பட முடியாதவனாக இருப்பாய்”, “நீ என்னைவிட அதிகமாக வெல்லப்பட முடியாதவனாக {சூரனாக} இருப்பாய்” என்றெல்லாம் அப்போது நான் சொன்னவை அப்படியே ஆகும், மாறாக நடக்காது (நான் சொன்ன சொல் பிசகாமல் நடக்கும்)
யஶ்ச ஸ்தவேந மாம் ப⁴க்த்யா ஸ்தோஷ்யதே(அ)மரஸத்தம |
த்வயா க்ருதேந த⁴ர்மஜ்ஞ த⁴ர்மபா⁴க்ஸம்ப⁴விஷ்யதி |
ஸமரே ச ஜயம் விஷ்ணோ ப்ராப்ய பூஜாம் ததோ²த்தமாம் ||20-74-39
மேலும், ஓ! தேவர்களில் முதன்மையானவனே, அறம்சார்ந்தவனே, உன்னால் தொகுக்கப்பட்ட இந்தத் துதியால் என்னைத் துதிப்பவன் நிச்சயம் உயர்ந்த அறத்தையும், போரில் பகைவரிடம் வெற்றியையும், உயர்ந்த வகையிலான மதிப்பையும் அடைவான்
பி³ல்வோத³கேஶ்வரோ நாம ப⁴விதாஹமிஹாநக⁴ |
தே³வேஶ்வர த்வயாஸ்தா²பி தே³வஸித்³தோ⁴பயாசந꞉ ||2-74-40
ஓ! பாவமற்றவனே, ஓ! தேவர்களின் தலைவா, உன்னால் இங்கே வழிபடப்பட்ட நான் வில்வோதகேஷ்வரன் என்றழைக்கப்பட்டு, என்னை அணுகுவோர் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவேன்
இஹஸ்தோ²போஷிதோ வித்³வாந்ப⁴க்திமாந்மம கேஶவ |
த்ரிராத்ரமீப்ஸிதாம்ˮல்லோகாந்க³மிஷ்யதி ஜநார்த³ந ||2-74-41
ஓ! கேசவா, ஓ! ஜனார்த்தனா, கல்விமானும், வணக்கமுள்ளவனுமான எந்தப் பக்தன், நோன்பு நோற்று இங்கே மூன்று இரவுகளைக் கழிப்பானோ அவன் தான் விரும்பும் உலகங்களை அடைவான்.
அவிந்த்⁴யா நாம தே³ஶே(அ)ஸ்மிந்க³ங்கா³ சைவ ப⁴விஷ்யதி |
க³ங்கா³ஸ்நாநஸமம் ஸ்நாநம் மந்த்ரதோ ப⁴விதா ததா² ||2-74-42
(புனித ஆறான) கங்கையும் இங்கே அவிந்தியா {அவிந்தியை} என்றழைக்கப்படுவாள். உரிய மந்திரங்கள் சொல்லி அந்த நீரில் செய்யப்படும் தூய்மைச் சடங்குகள் கங்கையில் செய்த புண்ணியச் செயல்களுக்கு இணையானவையாக இருக்கும்.
ஷட்புரம் நாம நக³ரம் தா³நவாநாம் ஜநார்த³ந |
அத்ராந்தர்த்³த⁴ரணீதே³ஶே பராக்ரம்ய மஹாப³லா꞉ ||2-74-43
ஏதே தை³த்யா து³ராத்மாநோ ஜக³தோ தே³வகண்டகா꞉ |
ச²ந்நா வஸந்தி கோ³விந்த³ ஸாநாவஸ்ய மஹாகி³ரே꞉ ||2-74-44
ஓ! வலிமைமிக்க ஜனார்த்தனா, இந்த மலையின் உச்சியில் உள்ள குகையின் அடியில் ஷட்புரம் என்றழைக்கப்படும் தானவர்களின் நகரம் இருக்கிறது. தேவர்களின் வழிகளிலும், அண்டத்தின் பாதையிலும் முட்களாக இருப்பவர்களும், தீய ஆன்மா கொண்டவர்களுமான வலிமைமிக்க தானவர்கள் அந்தக் காட்டுக்குள் {பூமிக்கடியில்} மறைந்திருக்கின்றனர்.(43,44)
அவத்⁴யா தே³வதே³வாநாம் வரேண ப்³ரஹ்மணோ(அ)நக⁴ |
மாநுஷாந்தரிதஸ்தஸ்மாத்த்த்வமேதாஞ்ஜஹி கேஶவ ||2-74-45
ஓ! பாவமற்றவனே, ஓ! தேவா, பிரம்மன் அவர்களுக்கு அளித்த வரத்தின் மூலம் அவர்கள் தேவர்களால் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள்; எனவே, ஓ! கேசவா, இப்போது மனிதத் தோற்றத்தில் இருக்கும் நீ அவர்களைக் கொல்வாயாக” என்றான் {சிவன்}
ஏவமுக்த்வா மஹாதே³வஸ்தத்ரைவாந்தரதீ⁴யத |
பரிஷ்வஜ்ய மஹாத்மாநம் வாஸுதே³வம் ஜநாதி⁴ப ||2-74-46
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, இவ்வாறு சொல்லி வாசுதேவனை ஆரத்தழுவிய மஹாதேவன் அந்த இடத்திலேயே மறைந்து போனான்.
ததோ யாதே மஹாதே³வே ப்ரபா⁴தாயாம் நராதி⁴ப꞉ |
தஸ்யாம் நிஶாயாம் கோ³விந்த³꞉ ஸ்தூய பர்வதமப்³ரவீத் ||2-74-47
தவாத⁴꞉ பர்வதஶ்ரேஷ்ட²நிவஸந்தி மஹாஸுரா꞉ |
அவத்⁴யா தே³வதே³வாணாம் வரேண ப்³ரஹ்மண꞉ புரா |2-74-48
இவ்வாறு மஹாதேவன் சென்ற பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அந்த நாளின் விடியலில் கோவிந்தன் (பாரியாத்ர) மலையிடம்[பாரியாத்ர மலையானது, மஹாபாரதச் சபா பர்வத்தின் 10ம் அத்யாயம் 31ம் ஸ்லோகத்திலும், பீஷ்ம பர்வம் 9ம் அத்யாயத்திலும் குறிப்பிடப்படுகிறது. பாரியாத்ரம் என்ற இந்த மலை சாணபாதம் எனப் பெயர் மாற்றப்பட்டதாக இந்த அத்யாயத்தின் 15ம் ஸ்லோகம் குறிப்பிடுகிறது. அதற்கடியில் ஷட்புரம் என்ற காடு அல்லது தானவ நகரம் இருப்பதாகவும் இந்த அத்யாயத்தின் 43ம் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.], “ஓ! மலைகளில் முதன்மையானவனே, பிரம்மனால் கொடுக்கப்பட்ட வரத்தின் மூலம் தேவர்களாலும் கொல்லப்பட முடியாத வலிமைமிக்க அசுரர்கள் உனக்கடியில் வாழ்கிறார்கள்.(47,48)
நிர்க³மிஷ்யந்தி தே நைவ மயா ருத்³தா⁴ மஹாப³லா꞉ |
த்³வாரே நிருத்³தே⁴ அத்ரைவ விநங்க்ஷ்யந்தி மமாஜ்ஞயா ||2-74-49
அவர்கள் பெருஞ்சக்தி வாய்ந்தவர்களாக இருப்பினும், (உனக்கடியில் பூமிக்குள்) நான் அவர்களை அடைக்கும்போது அவர்களால் வெளியே வர இயலாது; இவ்வாறு வழிமுறைகள் துண்டிக்கப்படும் அவர்கள் அந்த இடத்திலேயே மடிவார்கள்.
த்வயி ஸந்நிஹிதஶ்சாஹம் ப⁴விஷ்யாமி மஹாகி³ரே |
அதி⁴ஷ்டா²ய மஹாகோ⁴ராந்நிவத்ஸ்யாமி ச பர்வத ||2-74-50
ஓ! பெரும் மலையே, நானும் உன்னில் பொதிந்திருப்பேன். ஓ! மலையே, பயங்கரம் நிறைந்த அந்த அசுரர்களைத் தடுத்துக் கொண்டு நான் உன்னில் வாழ்ந்திருப்பேன்.
ஆருஹ்ய மூர்த்⁴நி மத்³ரூபம் த்³ருஷ்ட்வா பர்வதஸத்தம |
கோ³ஸஹஸ்ரப்ரதா³நஸ்ய ப²லம் ப்ராப்ஸ்யதி ஶாஶ்வதம் ||2-74-51
ஓ! மலைகளில் முதன்மையானவனே, உன் சிகரத்தில் ஏறி என் வடிவைக் காணும் எவனும் ஆயிரம் பசுக்களைக் கொடையாக அளித்த தகுதியை {புண்ணியத்தை} அடைவான்.
த்வத்தோ(அ)ஶ்மபி⁴ஶ்ச ப்ரதிமாம் காரயித்வா ஹி ப⁴க்தித꞉ |
ஶுஶ்ரூஷயந்தி யே நித்யம் மம யாஸ்யந்தி தே க³திம் ||2-74-52
உன் கற்களைக் கொண்டு என் சின்னத்தை அமைத்து பக்தியுடன் தினமும் வழிபடுவோர், என்னையே {பரமபதத்தை} அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}
இதி தம் பர்வதம் க்ருஷ்ணோ வரதோ³(அ)நுக்³ருஹீதவாந் |
ததா³ப்ரப்⁴ருதி தே³வேஶஸ்தத்ர ஸந்நிஹிதோ(அ)ச்யுத꞉ ||2-74-53
இவ்வாறே வரமளிப்பவனான விஷ்ணு, அந்தத் தலைவனுக்கு வரமளித்தான். பிழைசெய்யாதவனான அந்தத் தேவன் அதுமுதல் அவ்விடத்தில் பொதிந்திருக்கிறான்.
பாஷாணை꞉ ப்ரதிமாம் தாத காரயித்வா ச கௌரவ |
ஶுஶ்ரூஷந்தி க்ருதாத்மாநோ விஷ்ணுலோகாபி⁴காங்க்ஷிண꞉ ||2-74-54
ஓ! குருக்களின் வழித்தோன்றலே, தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோர், விஷ்ணுவை அடையும் நோக்குடன் அந்த மலையின் கல்லால் ஒரு தோற்றத்தை அமைத்து அங்கே எப்போதும் அவனை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் {வைசம்பாயனர்}
இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶேவிஷ்நுபர்வணி
பாரிஜாதஹரணே க்ருஷ்ணக்ருதஶிவஸ்துதிர்நாம
சது꞉ஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply