ஸ்ரீ கம்ப ராமாயணம்-பால காண்டம்-மிகைப் பாடல்கள்-1-187- –

1-ஆற்றுப் படலம்

ஒன்றாய். இரண்டு சுடர் ஆய்.
ஒரு மூன்றும் ஆகி.
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு.
ஐம் பூதம் ஆகி.
அன்று ஆகி. அண்டத்து அகத்து ஆகி.
புறத்தும் ஆகி.
நின்றான் ஒருவன்; அவன் நீள் கழல்
நெஞ்சில் வைப்பாம்.–1-

ஒன்றாய் – பரம்பொருள் ஒன்றால்;
இருசுடர் – பரிதி. மதி என்று இருசுடர்;
ஒரு மூன்று – பிரமன்-திருமால்-சிவன்;
பொன்றாத வேதம் – அழியாத வேதம்;
அன்று – இல்லை;
நீள்கழல் – நெடிய பாதம்.

———–

நீலம் ஆம் கடல். நேமி அம் தடக் கை
மாலை மால் கெட. வணங்குதும் மகிழ்ந்தே.–2-

நீலம் ஆம் கடல் – கடல் போன்ற நீல நிறமும்;
நேமி அம் தடக்கை – திரு வாழி ஏந்திய நீண்ட கைகளையும் உடைய;
மாலை – திருமாலை;
மால்கெட – மயக்கம் நீங்க;
மகிழ்ந்து வணங்குதும் -மகிழ்ந்து வணங்குவோமாக.

————

காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை.
மேய நான்மறை தொழ. விழித்து உறங்கிய
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம்.–3-

கடு – நஞ்சு;
விழித்து உறங்கல்- அறிதுயில்;
ஆயிரம் பணா முடி
ஒப்பு பரிபாடல். ‘கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிறு’
முருகாற்றுப்படை; மாயன் – கரியன்; மாயம் வல்லவன்.

———–

மாதுளங் கனியை. சோதி
வயங்கு இரு நிதியை. வாசத்
தாது உகு நறு மென் செய்ய
தாமரைத் துணை மென் போதை.
மோது பாற்கடலின் முன்நாள்.
முளைத்த நால் கரத்தில் ஏந்தும்
போது தாயாகத் தோன்றும்
பொன் அடி போற்றிசெய்வாம்.–4-

மாதுளங்கனியை – மாதுளங்கனி போன்ற நிறத்தினளை;
சோதி -ஒளி;
வயங்குதல் – விளங்குதல்;
நிதி – செல்வம்;
தாது – மகரந்தம்;
உகு – சிந்தும்;
துணை – இரண்டு;
போது – மலர்;
தாய் – இலக்குமி.

———-

பராவ அரு மறை பயில் பரமன். பங்கயக்
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினான்.
அரா – அணைத் துயில் துறந்து அயோத்தி மேவிய
இராகவன். மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம்.–5-

பராவ அருமறை-போற்றுதற்கரிய வேதங்கள்;
பங்கயம் – தாமரை;
கராதலம் – கைகள்;
அராவனை – பாம்புப்படுக்கை;
இராகவன் -இராமன்;
இறைஞ்சி – வணங்கி.

———

கலங்கா மதியும். கதிரோன் புரவிப்
பொலன் கா மணித் தேரும். போகா இலங்கா
புரத்தானை. வானோர் புரத்து ஏறவிட்ட
சரத்தானை. நெஞ்வே! தரி.–6-

கலங்கா- கலங்காத;
மதி – சந்திரன்;
கதிரோன் – சூரியன்;
பொலன் – அழகிய;
இலங்காபுரத்தான் – இராவணன்;
சரம் – அம்பு;
சரத்தான் – இராமன்;
தரி – தரிக்கச் செய்

———-

‘நாராயணாய நம!’ என்னும் நல் நெஞ்சர்
பார் ஆளும் பாதம் பணிந்து. ஏத்துமாறு அறியேன்;
கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே.–7-

நல் நெஞ்சர்- நல்ல மனமுடைய சான்றோர்;
ஏத்துமாறு -போற்றும் வகை;
கார் – மேகம்;
கருணாகரன் – கருணை வடிவினன்;
மூர்த்தி – வடிவம்;
ஆராதனை – நிவேதனம்.

———–

பராவரும் இராமன். மாதோடு
இளவள் பின் படரக் கான் போய்.
விராதனை. கரனை. மானை.
கவந்தனை. வென்றிகொண்டு.
மராமரம். வாலி மார்பு.
துளைத்து. அணை வகுத்து. பின்னர்.
இராவணன் குலமும் பொன்ற
எய்து. உடன் அயோத்தி வந்தான்.–8-

பராவரும் – துதிப்பதற்கு அரிய;
மாது – சீதை;
இளவல் -இலக்குவன்;
பின்படர – பின்தொடர்ந்து வர;
கான் – காடு;
துளைத்து- துளைசெய்து;
அணை வகுத்து – அணை அமைத்து;
பொன்ற -அழிய;
எய்து – அம்பெய்து.

———–

தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன்தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட.
குருகை நாதன் குரை கழல் காப்பதே.–9-

தருகை – தருகின்ற கை (வினைத் தொகை) ; வேழம் – யானை;
திருகை வேலை – சூழ்ந்துள்ள கடல்; குருகைநாதன் – திருக்குருகை
நாதனான நம்மாழ்வார்; குரை – ஒலிக்கும்; கழல் – பாதங்கள்;
காப்பதே – காக்குமாக.

——–

அஞ்சிலே ஒன்று பெற்றான்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக.
ஆர் உயிர் காக்க ஏகி.
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்.
அவன் எம்மை அளித்துக் காப்பான்.–10-

அஞ்சிலே ஒன்று – காற்று; அஞ்சிலே ஒன்றை – கடலை;
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக – வான் வழியாக; ஆருயிர் –
சீதாபிராட்டியின் உயிர்; அஞ்சிலே ஒன்று பெற்ற – நிலமகள் பெற்ற;
அணங்கு – சீதை; அயலார் – பகைவர்; அஞ்சிலே ஒன்று – நெருப்பு.

———

எவ் இடத்தும். இராமன் சரிதை ஆம்
அவ் இடத்திலும். அஞ்சலி அத்தனாய்.
பவ்வ மிக்க புகழ்த் திருப் பாற்கடல்
தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம்அரோ.-11-

சரிதை- கதை; அஞ்சலி அத்தம் – கூப்பிய கை (அத்தம் – கை) ;
பவ்வமிக்க புகழ் – கடல் போல் திரண்ட புகழ்; தெய்வ தாசன் –
தெய்வத்தின் தொண்டன் (இங்கு அனுமன்).

——–

பொத்தகம். படிகமாலை. குண்டிகை.
பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங் கை
விமலையை. அமலைதன்னை.
மொய்த்த கொந்து அளக பார
முகிழ் முலைத் தவள மேனி
மைத் தகு கருங் கண் செவ் வாய்
அணங்கினை. வணங்கல் செய்வாம்.-12-

பொத்தகம் – ஏட்டுச்சுவடி; படிகமாலை – வெண் பளிங்கு மாலை;
குண்டிகை – கமண்டலம்; ஞான வித்தகம் – ஞானமுத்திரை; விமலை
– குற்றமற்றவள் (கலைமகள்); கொந்து – கொத்து; அளக பாரம் –
கூந்தல்; தவளமேனி – வெண்மைநிறமான உடம்பு; மைத்தரு – மை
போன்ற; அணங்கு – தெய்வ மகள்.

———-

தழை செவி. சிறு கண். தாழ் கைத்
தந்த சிந்துரமும். தாரை
மழை மதத் தறுகண் சித்ர
வாரண முகத்து வாழ்பவை.
இழைஇடைக் கலசக் கொங்கை
இமகிரி மடந்தை ஈன்ற
குழவியைத் தொழுவன். அன்பால் –
‘குறைவு அற நிறைக’ என்றே.–13-

தழை செவி- தழைத்த காது; சிறுகண் – சிறியகண்; தாழ்கை –
நீண்டகை; தாரை மழை மதம் – மழைத்தாரையாய்ப் பொழியும்
மதநீர்; தறுகண் – வலிமை; சித்ரவாரணம் – அழகிய யானை; இழை –
நூல்; கலசம் – குடம்; இமகிரிமடந்தை – இமயமலை யரசன் மகள்;
குழவி – குழந்தை (விநாயகன்); தொழுவன் – வணங்குவேன்; குறைவு
அற – குறைகள் நீங்க; நிறைக – நன்மை நிறைய.

——–

எக் கணக்கும் இறந்த பெருமையன்.
பொக்கணத்தன். புலி அதள் ஆடையன்.
முக்கண் அத்தன். வரம் பெற்ற மூப்பனை.
அக் கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம்.–14-

எக்கணக்கும் – எந்தக் கணக்கையும்; பொக்கணம் – ஒரு வகைப்
பை; புலிஅதள் – புலித் தோல்; முக்கண் அத்தன் – முக்கண் மூர்த்தி
(சிவபெருமான்); அப்பன் – தலைவன்; அக்கணத்தின் – அந்தக்
கணத்திலே.

———

நாரணன் விளையாட்டு எல்லாம்
நாரத முனிவன் கூற.
ஆரணக் கவிதை செய்தான்.
அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத்
திருவழுந்தூருள் வாழ்வோன்.
கார் அணி கொடையான். கம்பன்.
தமிழினால் கவிதை செய்தான்.–15-

நாரணன் விளையாட்டு- திருமாலின் திருவிளையாடல்; ஆரணம் –
வேதம்; சீர்அணி – சிறப்புடைய; திருவழுந்தூர்- தேரழுந்தூர்;
கார்அணி – மேகம் போன்ற; கொடை – ஈகை; கவிதை – செய்யுள்.

———-

அம்பிலே சிலையை நாட்டி
அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன. தானும்
தமிழிலே தாலை நாட்டி.
கம்ப நாடு உடைய வள்ளல்.
கவிச் சக்ரவர்த்தி. பார்மேல்
நம்பு பாமாலையாலே
நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான்.–16-

அம்பு – தண்ணீர் (இங்குப் பாற்கடல்); சிலை – மலை (மந்தர
மலை); அமரர் – தேவர்கள்; அமுதம் ஈந்த தம்பிரான் – திருமால்;
தால் – நாவு; நரர்க்கு – மானிடர்களுக்கு; ஈந்தான் – தந்தான்.

———–

வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச்
சடையப்பன் வாழ்த்துப் பெற.
தாழ்வார் உயர. புலவோர்
அகஇருள் தான் அகல
போழ் வார் கதிரின் உதித்த
தெய்வப் புலமைக் கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு
யாதும் அரியது அன்றே.–17-

வாழ்வு ஆர்தரு- நல்வாழ்வு பொருந்திய;அகஇருள் – உள் இருள்
(அகம் – மனம்); அகல – நீங்க; போழ்வார் கதிர் – காலத்தில் மிக்குப்
பொலியும் பரிதி; சிந்திப்பவர்க்கு – நினைப்பவர்களுக்கு; அரியது –
செய்தற்கரியசெயல்.

——–

அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
உம்பரால். முனிவரால். யோகரால். உயர்
இம்பரால். பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம்.–18-

அம்பு- நீர் (கங்கை); அரா – பாம்பு; அணி – அணிந்த; உம்பர் –
தேவர்; இம்பர் – இவ்வுலகத்தோர்; பிணிக்க – கட்ட; வேழம் –
யானை; கருத்து – உள்ளத்தில்; இருத்துவாம் – இருக்கச் செய்வோம்.

———-

சம்பு. அ(ந்)நாள். தன் உமை செவி சாற்று பூங்
கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர்
பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம்.–19-

சம்பு – சிவபிரான்; உமைசெவி – உமாதேவியின் காதுகளில்;
பூங்கொம்பு அன்னாள் – மலர்க் கொம்பு போன்றவள் (சீதை) ;
கொழுநன் – கணவன்; பாச்செய்த – பாக்களால் செய்த; பம்ப –
பொலிய.

———-

இம்பரும் உம்பர்தாமும்
ஏத்திய இராம காதை
தம்பமா முத்தி சேர்தல்
சத்தியம் சத்தியம்மே;
அம்பரம் தன்னில் மேவும்
ஆதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன் செங் கமல பாதம்
கருத்துற இருத்துவாமே.–20-

இம்பர் – இவ்வுலகத்தோர்; உம்பர் – விண்ணுலகத்தோர்; ஏத்திய –
போற்றிய; தம்பம் – பற்றுக்கோடு; ஞானக் கம்பன் -ஞானத்தை உடைய கம்பன்;
செங்கமலம் – செந்தாமரை; கருத்துற- உள்ளத்தில் பொருந்தி நிற்க;
ஆதித்தன் – கம்பனது தந்தையின் பெயர் என்பர்.

———

ஆதவன் புதல்வன். முத்தி
அறிவினை அளிக்கும் ஐயன்.
போதவன் இராம காதை
புகன்றருள் புனிதன். மண்மேல்
கோது அவம் சற்றும் இல்லான்.
கொண்டல் மால்தன்னை ஒப்பான்.
மா தவன் கம்பன் செம் பொன்
மலர்அடி தொழுது வாழ்வாம்.–21-

ஐயன் – தலைவன்; அளிக்கும் – கொடுக்கும்; போதவன் – அறிவு
மிக்கவன்; புகன்று – கூறி; புனிதன் – தூய்மையாளன்; கோது –
குற்றம்; அவம் – வீணான; கொண்டல்மால் – மேகம் போன்ற
திருமால்; செம்பொன் – செம்மையானபொன்.

———

ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து.
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு – மூவலூர்ச்
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
கார் ஆர் காகுத்தன் கதை.–22-

ஆவின் கொடை – ஆக்களைக் கொடையாக அளித்த;
திருவழுந்தூர் நல் நாட்டு மூவலூர்- திருவழுந்தூர் நாட்டைச் சேர்ந்த
மூவலூர்; குண ஆதித்தன் – நல்ல குணம் உள்ள ஆதித்தன்; சேய் –
பிள்ளை; கார்ஆர் – மேகம் போன்று நிறம்; காகுத்தன் – இராமன்.

——-

எண்ணி சகாத்தம் எண்ணூற்று
ஏழின்மேல். சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர்
தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை
பங்குனி அத்த நாளில்.
கண்ணிய அரங்கர் முன்னே.
கவி அரங்கேற்றினானே.-23-

சகாத்தம் – சாலிவாகன சகாப்தம் (807) ; பங்குனி அத்த நாள் –
பங்குனி மாதம் அஸ்தம நட்சத்திரத்தன்று; அரங்கர் முன்னே –
திருவரங்கப் பெருமான் முன்பு; அரங்கேறினான் – அரங்கேற்றம்
செய்தான்.

——–

கழுந்தராய் உன கழல் பணியாதவர்
கதிர்மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ!
அபிநவ கவிநாதன்
விழுந்த நாயிறுஅது எழுவதன்முன்.
மறை வேதியருடன் ஆராய்ந்து.
எழுந்த நாயிறு விழுவதன்முன்
கவி பாடியது எழுநூறே.–24-

கழுந்தராய் – கழுந்து போன்றவராய் (கழுந்து – உலக்கை); உன
கழல் – உனது பாதங்களை; வாளி – அம்பு; தொடு – எய்த; சிலை –
வில்; அபிநவம் – புதுமை; கவிநாதள் – கவிஞர்தலைவன்; நாயிறு –
சூரியன்.

———

கரை செறி காண்டம் ஏழு.
கதைகள் ஆயிரத்து எண்ணூறு.
பரவுறு சமரம் பத்து.
படலம் நூற்றிருபத்தெட்டே;
உரைசெயும் விருத்தம் பன்னீ
ராயிரத்து ஒருபத்தாறு;
வரம் மிகு கம்பன் சொன்ன
வண்ணமும் தொண்ணூற்றாறே.–25-

காண்டம் எழு ;கதைகள் ஆயிரத்து எண்ணூறு;போர்கள் பத்து;
படலம் நூற்று இருபத்தெட்டு; வண்ணம் (சந்தம்) தொண்ணூற்று ஆறு;
வரம் மிகு கம்பன் – வரபலம் மிகுந்த கம்பன்.

————-

தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே -இராவணன்மேல்
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி.-26-

தராதலம்- உலகம்;அரம் – இரும்பை ராவும் கருவி; அம்பு நாட்டு
ஆழ்வான் – அம்பை நாட்டி ஆழ்த்தியவன் (இராமன்); கம்ப
நாட்டாழ்வான் – கம்பன்.

———-

இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம்
எய்தி. அரசு ஆண்டு இருந்தாலும்.
உம்பர் நாட்டில் கற்பகக் கா
ஓங்கும் நீழல் இருந்தாலும்.
செம்பொன்மேரு அனைய புயத்
திறல் சேர் இராமன் திருக் கதையில்
கம்பநாடன் கவிதையில்போல்.
கற்றோர்க்கு இதயம் களியாதே.–27-

இம்பர் நாட்டின் – இவ்வுலகத்தின்; எய்தி- அடைந்து; அரசாண்டு
– ஆட்சி செய்து; உம்பர் நாட்டின் – விண்ணுலகத்தின்; கற்பகக் கா –
கற்பகச் சோலை; நீழல் – நிழல்; மேரு அனைய – மேரு மலை
போன்ற; புயம் – தோள்; திறல் – வலிமை; கவிதை – பாடல்; இதயம்
– மனம்; களியாது – மகிழாது.

———-

நாரதன் கருப்பஞ் சாறாய்.
நல்ல வான்மீகன் பாகாய்.
சீர் அணி போதன் வட்டாய்.
செய்தனன்; காளிதாசன்.
பார் அமுது அருந்தப் பஞ்ச –
தாரையாய்ச் செய்தான்; கம்பன்.
வாரம் ஆம் இராமகாதை
வளம் முறை திருத்தினானே.–28-

கருப்பஞ்சாறு – கரும்புச் சாறு; பாகு – சக்கரைப் பாகு; வட்டு –
வெல்லக்கட்டி; பஞ்சதாரை – சர்க்கரை; பார் அமுது அருந்த –
உலகம் அமுதாக உண்ண; வாரம் – அன்பு.

——–

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே-
இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்.–29-

நல்கும்- வழங்கும்; தின்மை – தீமை; தேயும் – தேய்ந்து போகும்;
சென்மம் – பிறப்பு;மரணம் – இறப்பு; இன்றி – இல்லாது; இம்மையே –
இவ்வுலகிலேயே;

———

ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே;
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே.
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே-
‘இராம’ என்று ஒரு மொழி இயம்பும்காலையே.-30-

மகம்- வேள்வி;உய்க்கும் – சேர்க்கும்; நராதிபர் – அரசர்; விராய்
– கலந்து; எணும் – எண்ணும்; பவம் – பிறப்பு; இயம்பும் காலை –
சொல்லும் போது; வேர் அறுக்கும் – வேருடன் அழிக்கும்.

——–

மற்று ஒரு தவமும் வேண்டா;
மணி மதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசயப் பாடல்
தெளிந்து. அதில் ஒன்றுதன்னைக்
கற்றவர். கேட்போர். நெஞ்சில்
கருதுவோர். இவர்கள் பார்மேல்
உற்று அரசு ஆள்வர்; பின்னும்
உம்பராய் வீட்டில் சேர்வார்.-31-

மணி மதில் -அழகிய மதில்; மூதூர் – பழமையான ஊர்; விசயம் –
வெற்றி; செற்றவன் – வென்றவன்; உம்பராய் – தேவராய்; வீட்டில் –
பேரின்ப வீட்டில்.

——–

வென்றி சேர் இலங்கையானை
வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில்
நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும்.
உரைத்திடக் கேட்டோர் தாமும்.
‘நன்று இது’ என்றோர் தாமும்.
நரகம்அது எய்திடாரே.–32-

வென்றி- வெற்றி; இலங்கையான் – இராவணன்; மால் – திருமால்;
ஓத – கூற; நின்ற – நிலைபெற்ற; நிகழ்ந்திடு- நடைபெறுகின்ற; நரகம்
அது எய்திடார் – நரகத்தை அடைய மாட்டார்கள்.

——–

இறு வரம்பில் ‘இராம’ என்றோர். உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால்.
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ?–33-

இறுவரம்பு – இறுதிக்காலம் (உயிர் விடும் போது); உம்பர் –
சுவர்க்கம்; நிறுவர் – நிலைப்பர்; மறு இல் – குற்றமில்லாத; மாக்கதை
– சிறந்த கதை; பெறுவர் – அடைவர்; பேசவும் – சொல்லவும்.

——–

அன்னதானம். அகில நல் தானங்கள்.
கன்னி தானம். கபிலையின் தானமே.
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்-
மன் இராம கதை மறவார்க்குஅரோ.–34-

அன்னம்- சோறு;அகிலம் – எல்லாம்; கபிலை- பசு; சொன்னம்
– பொன்; மன் – நிலைபெற்ற; மறவார்க்கு – மறக்காதவர்க்கு.

——–

வட கலை. தென் கலை. வடுகு. கன்னடம்.
இடம் உள பாடை யாது ஒன்றின்ஆயினும்.
திடம் உள ரகு குலத்து இராமன்தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே.-35-

வடகலை- வட மொழி; தென்கலை – தென் மொழி (தமிழ்); வடுகு
– தெலுங்கு; பாடைகள் – மொழிகள் (பாஷை) ; திடம் – வல்லமை;
ரகுகுலம் – சூரிய குலம்; அடைவுடன் – முறையாக; அமரர் –
விண்ணவர்.

———-

இத் தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து. ‘பரிவுடன் கேட்பரேல்.
புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
அத் தலத்தில் அவன் பதம் எய்துமே.–36-

இத்தலத்தின் – இவ்வுலகத்திலே; இராமாவதாரம் – இராமாயணம்;
பத்தி – பக்தி; பரிவுடன் – அன்புடன்; அத்தலம் – மறு உலகம்;
அவன்பதம் – பரமபதம்; எய்தும் – அடையும்.

———–

‘ஆதி “அரி ஓம் நம” நராயணர் திருக் கதை
அறிந்து. அனுதினம் பரவுவோர்.
நீதி அனுபோக நெறி நின்று. நெடுநாள் அதின்
இறந்து. சகதண்டம் முழுதுக்கு
ஆதிபர்களாய் அரசு செய்து. உளம் நினைத்தது
கிடைத்து. அருள் பொறுத்து. முடிவில்
சோதி வடிவு ஆய். அழிவு இல் முத்தி பெறுவார்’ என
உரைத்த. சுருதித் தொகைகளே.

நராயணர்- நாராயணர்; அனுதினம் – நாள்தோறும்; பரவுவோர் –
சொல்லுவோர்; சகதண்டம் – உலகம் முழுவதுக்கும்; ஆதிபர் –
அதிபர் (உரியவர்); சோதி வடிவு – ஒளி வடிவம்; சுருதித் தொகை –
நூல்களின் தொகை.

———–

இராகவன் கதையில். ஒரு கவிதன்னில்
ஏக பாதத்தினை உரைப்போர்.
பராவ அரும் மலரோன் உலகினி. அவனும்
பல் முறை வழுத்த. வீற்றிருந்து.
புராதன மறையும் அண்டர் பொன் பதமும்
பொன்றும் நாள் அதனினும். பொன்றா
அரா-அணை அமலன் உலகு எனும் பரம
பதத்தினை அடைகுவர் அன்றே.–38-

இராகவன் – இராமன்; ஏக பாதம் – ஒரு வரி; பராவரும் –
பரவுதற்கு அரிய; மலரோன் – பிரமன்; வழுத்த – துதிக்க; புராதன –
பழமையான; அண்டர் பொன்பதம் – தேவருலகம்; பொன்றும் –
அழியும்; அரா அணை – பாம்புப் படுக்கை; அமலன் – திருமால்.

————-

இனைய நல் காதை முற்றும்
எழுதினோர். வியந்தோர். கற்றோர்.
அனையதுதன்னைச் சொல்வோர்க்கு
அரும் பொருள் கொடுத்துக் கேட்டோர்.
கனை கடல் புடவி மீது
காவலர்க்கு அரசுஆய் வாழ்ந்து.
வினையம் அது அறுத்து. மேல் ஆம்
விண்ணவன் பதத்தில் சேர்வார்.–39-

இனைய – இத்தகைய; காதை – கதை; முற்றும் – முழுவதும்;
அரும்பொருள் – அரிய செல்வம்; கனைகடல் – ஒலிக்கும் கடல்;
புடவி மீது – உலகத்தின் மேல்; காவலர் – மன்னர்; வினையம் –
தீவினை; விண்ணவர் பதம் – பேரின்ப வீடு.

———–

நாடிய பொருள் கைகூடும்;
ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்;
வேரி அம் கமலை நோக்கும்;-
நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டு அழிய. வாகை
சூடிய சிலை இராமன்
தோள் வலி கூறுவோர்க்கே.–40-

நாடிய – விரும்பிய; ஞானம் – மெய்யறிவு; வீடு – பேரின்ப வீடு;
வேரி – மணம்; கமலை – மலர்மகள்; நீடிய – நீண்ட; நீறு – புழுதி;
வாகை – வெற்றிமாலை; சிலை – வில்.

———–

வான் வளம் சுரக்க! நீதி
மனு நெறிமுறை எந் நாளும்
தான் வளர்ந்திடுக! நல்லோர்
தம் கிளை தழைத்து வாழ்க!
தேன் வளர்ந்து அறாத மாலைத்
தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறிந்த பாடல்
இடையறாது ஒளிர்க. எங்கும்!–41-

வான் – வானம் (மழை); கிளை – சுற்றம்; அறாத – நீங்காத;
தெசரத ராமன் – தசரத ராமன் (மோனை கருதி ‘தெச’ என்றார்);
இடை அறாது – இடைவிடாமல்; ஒளிர்க – விளங்குக.

———–

எறிகடல் உலகம்தன்னுள்
இன்தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக
மொழிந்தனென்; மொழிந்த என்சொல்
சிறுமையும். சிலை இராமன்
கதைவழிச் செறிதல் தன்னால்.
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம்
அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே.–42-

எறிகடல் – ஒலிக்கும் கடல்; இன்றமிழ் – இனிய தமிழ்; முறுவல் –
புன்சிரிப்பு; மொழிந்த – கூறிய; சிறுமை – தாழ்வு; செறிந்த – சேர்ந்த;
அமிழ்தம் – அமுதம்; ஒத்து – போல

——–

2 நாட்டுப் படலம் –

காளையர் சேறுதன்னைக்
கலந்து. உடன் மிதித்து. நட்ட
தாள்களும் கழுநீர் நாறும்;
தடக் கையும் அதுவே நாறும்;
ஆளையும் சீறிப் பீறி.
அணி மலர்க் கமுகில் பாய்ந்த
வாளையும். பாளை நாறும்;
வயல்களும் அதுவே நாறும்.–43-

காளையர் – காளை போன்றவர் (மழவர்); கழுநீர் – செங்கழு நீர்
மலர்; தடம் கை – பெரிய கை; அணிமலர் கமுகு – அழகிய மலரை
உடைய கமுகு.

உழவர்கள் சேற்றை மிதிக்க அங்கு மலர்ந்துள்ள செங்கழுநீர்
மலரின் மணத்தால் தாள்களும் கைகளும் அந்த மலர்மணமே கமழும்.
வாளைமீன்கள் கமுகில் பாய்வதால் அந்த வாளை மீன்களும்
வயல்களும் கமுகம் பாலை மணம்கமழும்.

———–

3 நகரப் படலம்

எங்கும் பொலியும் பரஞ் சுடர் ஆகி.
எவ் உயிரும்
மங்கும் பிறவித் துயர் அற.
மாற்று நேசம்
தங்கும் தருமத்து உரு ஆகி.
தரணி மீது
பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து
யாம் எவன் புகல்வோம்?

பொலியும்- விளங்கும்; பரஞ்சுடர் – மேலான ஒளி; தரணி –
உலகம்; புத்தேள் – இறைவன்; தருமத்து உரு – அறத்தின் வடிவம்.

——–

வேதம்அதனுள் விளை பொருள்
விகற்பத்துள் அடங்காச்
சோதி மயமாய்த் துலங்கி.
தொல்உயிர்த் தொகை பலவாய்.
ஓது புவனம் உதரத்துள்
ஒடுக்கியே. பூக்கும்
ஆதி முதல்வன் அமர் இடம்
அயோத்தி மா நகரம்.–45-/74-2-

விளைபொருள்- விளைந்த பொருள்; விகற்பம் – வேறுபாடு;தொல்
உயிர் – பழைமையான உயிர்; புவனம் – உலகம்; உதரம் – வயிறு;
ஆதி முதல்வன் – ஆதியாகிய முதல் பொருள்; அமர் –
அமர்ந்திருக்கும்.

————

4 அரசியற் படலம்-

விரி கதிர் பரப்பி. மெய்ப் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில். பார்த்திவன்
இரகு. மற்று அவன் மகன் அயன் என்பான். அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே.–46 /

விரிகதிர் – விரிந்த கிரணங்கள்; பருகுறும் – உண்ணுகின்ற;
பார்த்திபன் – அரசன்; பெருகு – பெருகிய; தோன்றல் – மகன்
(தயரதன்).

———-

5 திரு அவதாரப் படலம்

‘பொறை இலா அறிவு. போகப்
புணர்ப்பு இலா இளமை. மேவத்
துறை இலா வனச வாவி.
தூசு இலார் போலித் தூய்மை.
நறை இலா மலரும். கல்வி
நலம் இலாப் புலமை. நன்னீர்ச்
சிறை இலா நகரும். போலும்.
சேய் இலாச் செல்வம்’ என்றான்.–47-/ 4-1-

பொறை – பொறுமை; போகப்புணர்வு – இன்ப நுகர்ச்சி; துறை –
இறங்குதுறை; வனசவாவி – தாமரைத் தடாகம்; நறை – மணம்; சேய் –
குழந்தை.

————

கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்
முறைமையின் கடன் முறை முற்றி. முண்டகத்து
இறைவனும். அவரொடும் இனிதின் ஏகினான்.–48 / 5-2-

கறை மிடறு- கறுத்த மிடறு; அண்ணல் – சிவபிரான்; மறை –
வேதம்; கிழவன் – பிரமன்; முண்டகம் – தாமரை; இனிதின் –
மகிழ்வுடன்.

——–

என்று இனையன பல இயம்பி. ‘எங்கணும்.
கன்றி. அவ் அரக்கரை அழித்துக் காத்தியேல்.
ஒன்றிய உயிர்களும். உலகு யாவையும்
இன்று நீ படைத்தி’ என்று இசைத்து. பின்னரும்.–49-/5-4-

இனையன – இத்தகைய; ஒன்றிய – நெருங்கிய; எங்கணும் –
எங்கும்; காத்தியேல் – காப்பாயானால்; இசைத்து – கூறி; பின்னரும் –
மறுபடியும்.

————-

ஆயவர் அயன் முதல் அமரர். ஈறு இலா
நாயகன் இரு பதம் நயந்து. சிந்தைமீது
ஓய்வு இலாது. அவன் அரு மறைகள் ஓதியே.
நேயமோடு இருந்து. இவை நிகழ்த்தல் மேயினார்.–50-/ 8-1-

ஆயவர் – அத்தகையோர்; ஈறு இலா – முடிவில்லாத; பதம் –
பாதம்; அருமறை – அரிய மறைகள்; ஓதி – கூறி; மேயினார் –
தொடங்கினர்.

————–

‘காத்தி நீ எமை; காக்கிலர் தம்மை யாம்
ஏத்தியே இளைத்தோம்; இறைவா! இடர்ப்
பார்த்தியோ? – திருப் பாற்கடற் பள்ளியின்
மூர்த்தியே! முதல்வா! முகில் மேனியாய்!–51 / 8-2-

காத்தி- காப்பாயாக; காக்கிலர் – காக்க இயலாதவர்கள்; இடர் –
துன்பம்; ஏத்தி – துதித்து; முகில் – மேகம்; மேனி – உடல்.

————-

‘அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்.
நொந்துளோம்! இறைவா! நொடிப் போதினில்
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்-
எந்தையே! கருணாகரனே!’ எனா.–52- / 8-3-

அந்தகாரம் – பேரிருட்டு; செய்தீமை – செய்த தீமை (வினைத்
தொகை) ; நொடிப் போதினில் – ஒரு நொடிப் பொழுதில் (விரைவாக)
எனா – என்று.

———

அறி துயில் எழுந்தனன். அமரர் கூப்பிடும்
மறை மொழித் துதி ஒலி வந்து இசைக்கவே;
நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை.
இறைவனும். திரு உளத்து அறிந்து. அங்கு எய்தவே.–53 .15-1-

அறிதுயில்-யோக நித்திரை; அமரர் – தேவர்கள்; மறை – வேதம்;
இசைக்க – கேட்க; இறைவன் – திருமால்; எய்த – அடைய.

———-

வானவர் அம் முறை வழங்க. மா மதித்
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
ஆனவர்தமைக் கரம் அமைத்து. அங்கு. ஐயனைத்
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான்.–54 / 9-1-
வானவர் – தேவர்கள்; இதழி – கொன்றை; தெரியல் – மாலை;
வேணி – சடைமுடி; சாற்றல் மேயினான் – சொல்லத் தொடங்கினான்.

——

எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை-
தனைச் சொல. தரணிபர்க்கு அரசன்தான் மகிழ்ந்து.
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய. தம்
மனத் துயர் அகன்றிட. வணங்கிக் கூறுவான்.-55 / 78-1

கலை மாமுகம் – மான்முகம்; தரணிபர் – அரசர்; உய்ய -வாழ.

——–

மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின். ஏகாதசர் நால்வர் உச்சரே.–56 / 106-1

ஓடை – நெற்றிப் பட்டம்; களிறு அனான் – யானை போன்றவன்
(இராமன்); உதயம் – இலக்கினம் (கடகம்); மதி மேடம் – திங்கள்
சித்திரை; மீன் – நட்சத்திரம்; கழை – புனர் பூசம்; மால் – புதன்; ஐ
– பத்தாமிடம்; கோள் – கிரகங்கள்; நால்வர் – செவ்வாய். குரு.
சுக்கிரன். சனி. ஜென்ம இலக்கினத்திலிருந்து பதினொன்று.
பதினொன்றுக்குரியவர் நால்வரும் தங்களது உச்ச வீடுகளான நான்கில்
இருந்தனர் என்பது கருத்து.

——-

என்றனர் சாதகம் ஈசற்கு; ஏனையர்
தம் தமக்கும் தகும் முறையில். தாம் தெரிந்து.
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்-
வன் திறல் சுரர்குரு வாழ்த்து எடுப்பவே.–57 / 106-2-

ஈசன் – இறைவனாகிய இராமன்; தகும் முறை – தகுந்த முறையில்;
தமனியம் – பொன்; ஓதினார் – படித்தார்கள்; சுரர்குரு –
வியாழன்.

———-

நோக்கினன் களிப்பு எழ; நுணங்கு கேள்வி நூல்
ஆக்கிய முனிவனை வணங்கி. ‘ஐய! என்
பாக்கியம் பலித்தது. இப் பாலர்’ என்று. பார்
காக்குறும் அரசனும். கழறல் மேயினான்.–58-/ 107-1-

நோக்கினன் – பார்த்தான்; பாக்கியம் – பேறு; பார்காக்குறும்
அரசன் – தயரதன்; கழறல் – கூறல்.

———

சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து. தையலார்
பந்தியில். சிவறியால் சிதற. பார்மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே.–59-/ 115-1-

சுந்தரப் பொடி- மணப் பொடி; பொற்சுண்ணம் – பரிமளப் பொடி;
தையலார் – பணிப் பெண்கள்; பந்தியில் – வரிசையில்; சிவிறி –
விசிறி; இந்திரவில் – வானவில்; பார்மிசை – தரை மேல்.

———–

அரு மறை நெறி வழி. அரசனும். அன்னப்
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி.
கரை அறு திரு நகர் விழவொடு களியா.
இருமையும் உதவுறு தானமும் ஈந்தான்.–60 / 120-1-

அன்னப் பிரசனம் – முதன் முதல் குழந்தைக்கு
உணவூட்டுதலாகும்; கரை அறு – அளவற்ற; களியா – களிப்படைய;
இருமை – இம்மை. மறுமை.

———

6- கையடைப் படலம்

அப் பெருந் திருவொடும் ‘அகில நாதன்’ என்று.
எப் பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே.
தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே.
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள்.–61-/ 1-1-

பெருந்திரு – பெருஞ் செல்வம்; அகில நாதன் – அகிலத்துக்குத்
தலைவன்; புவனம் – உலகம்; தப்ப அரும் – தப்ப அரிய; தயா –
கருணை; ஒப்புரவு – பரோபகாரம்; உவந்து – மகிழ்ந்து.

——-

அரி – அணைமிசைதனில். அழகு மன்றினில்.
புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள்
அரசர்கள் முடி படி அணைய. அம் பொனின்
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ.–62 / 1-2-

அரியணை – சிம்மாசனம்; மன்று – மன்றம் (அரசவை) ; நீடு –
நீண்ட; படி அணைய – நிலத்தில் பட; பொனின் – பொன்னின்; உரை- உரையும்.

———-

‘“இனைய சோலை மற்று யாவது?” என்று. மா
முனிவ! கூறு’ என முதல்வன் கூறலும்.
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்.
‘தனு வலாய்! இதன் தன்மை கேள்’ எனா.–63- / 24-1-

இனைய- இத்தகைய; முதல்வன் – இராமபிரான்; பனுவல் – நூல்;
பகரும் – சொல்லும்; தனுவல்லாய் – விற்போரில் வல்லவனே.

———

‘சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன்
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்.
வெம்பி. மற்று அவன் வெற்றி கொண்ட போது.
அம்பரம் இழந்து. அவனி வந்தனன்;–64-/ 24-2-

தானவன் – அரக்கன்; உம்பர் கோமகன் – தேவர்களுக்கு அரசன்;
அமர் – போர்; உடன்று – புரிந்து; அம்பரம்-விண்ணுலகம்.

———

‘அவனி வந்து. மன்னவர் இடம்தொறும்.
தவனன் என்னவே தான் உழன்று. அறிந்து.
“இவனில் வேறு மற்று இல்லை எற்கு” எனா.
உவன் விரும்பி வந்து. உந்தை நாடு உறா.–65-/24-3-

அவனி – மண்ணுலம்; தவனன் – சூரியன்; உழன்று – திரிந்து;
இவனில் – இவனை விட; எற்கு – எனக்கு; உந்தை – உனது தந்தை
(தயரதன்); எனா – என்று; உறா – உற்று; இரண்டும் செயா என்ற
வாய்ப்பாட்டு வினை எச்சங்களாகும்.

———–

‘இந்த இவ் இடத்து எய்தி. இந்திரன்.
“சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க” எனா. மன நினைப்பின்முன்.
முந்து வந்து மா முரல நின்றவால்.–66 / 24-4-

எய்தி – அடைந்து; சந்த – அழகிய; வார் – நீண்ட; தரு – மரம்
(கற்பகம் முதலிய ஐந்து); நினைப்பின் முன் – நினைக்கும் முன்;
மாமுரல – வண்டுகள் ரீங்கரிக்க.

———-

‘நின்ற சோலைவாய். நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு. அவன்
நன்றியால் இருந்து. அரசை நண்ணியே.
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான்.-67 / 24-5-

சோலைவாய்- சோலையிடம்; குன்றல் – குறைதல்;அரசை நண்ணி
– அரசை விரும்பி; துன்று சோலை – நெருங்கிய சோலை.

—-

‘உருவம் மாறி. வேறு உருமாகியே.
நிருப! நின் குடை நிழலின் நிற்றலும்.
பரிவின் நோக்கி. “நீ பகர்தியால்” எனத்
தருவின் நாயகன்தான் விளம்பினான்;–68 / 24-6-

உருவம் மாறி – வேறு வடிவம் கொண்டு; நிருப – அரச; பரிவு –
அன்பு; பகர்தியால் – கூறுக; தருவின்

———

‘“சதமகன்தனைச் சம்பரன் எனும்
மத மகன் துரந்து அரசு வவ்வினான்;
கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து. உன்னை மேவினேன்.”–69 /24-7-

சதமகன் – இந்திரன்; மதுமகன் – மதம் கொண்ட அரக்கன்
(சம்பரன்); துரந்து – வென்று; கதம் – கோபம்; மேவினேன் -அடைந்தேன்.

——

என்றபோது தன் இரதம் ஏறியே
சென்று. மற்று அவன் சேனையோடு உகக்
கொன்று. வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து. மீண்டு அயோத்தி மேவினான்.–70 / 24-8-

என்றபோது – எனக் கூறிய போது; உக – அழிய; வாசவன் –
இந்திரன்; கொள்ள – அடைய; அளித்து – ஈந்து; மேவினான் –
சேர்ந்தான்.

———

‘அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம். இச் சோலை’ என்றலும்.
மன்னர்மன்னவன் மதலை. ‘நன்று’ எனா.
பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார்.–71 / 24-9-

அவனி – பூமி; கா – சோலை; இன்ன நாமம் – இந்தப் பெயர்;
மன்னவர் மன்னவன் – தயரதன்; மதலை – மகன்; பின்னை -பிறகு.

————

7 தாடகை வதைப் படலம்

‘கல் நவில் தோளினாய்! கமலத்தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து.
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்:–72 / 20-1-

கல்நவில் தோள்- கல்லையும் வென்ற தோள்; கமலத்தோன் –
பிரமன்; வாய் மடுத்து – வாயில் பெய்து; கூற்றம் – எமன்; அறைய -கூற.

———-

‘இயக்கர்தம் குலத்துளான்.
உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான்.
எரியின் வெம்மையான்.
மயங்கு இல் சற்சரன். எனும்
வலத்தினான். அருள்
துயக்கு இலன் சுகேது என்று
உளன் ஒர் தூய்மையான்.–73-/20-2-

இயக்கர் – கந்தருவர்; மொய்ம்பு – வலிமை; வியக்குறும் –
வியப்படையும்; வெம்மை – வெப்பம்; துயக்கு – குற்றம் (சற்சரன் மகன் சுகேதுவாம்).

———–

‘அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்.
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி. நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான்.–74 / 20-3-

அன்னவன்- அந்த சுகேது; மகவு – குழந்தை; இலாது – இல்லாது;
வைகுறும் – தங்கும்; முதல்வன் – பிரமன்; வழுத்தி – வணங்கி;
பல்நெடும் பகல் – பல நாட்கள்; பயின்ற – செய்த; பான்மை -தன்மை.

————

‘முந்தினன் அரு மறைக்
கிழவன். “முற்றும் நின்
சிந்தனை என்?” என.
“சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க” என.
“நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இல்லை; ஒரு மகள்
உண்டாம்” என்றாள்.–75-/ 20-4-

முந்தினன் – முன் வந்தான்; அருமறை – அரிய மறை; கிழவன் –
தலைவன்; சிந்தனை – எண்ணம்; நுணங்கு கேள்வி – நுட்பமான
கேள்வியறிவு.

——–

“பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்.
ஏமுறு மதலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும் . தனயை தோன்றும்; நீ
போ” என. மலர் அயன் புகன்று போயினான்.–76 / 20-5-

பூ மட மயில்- அழகிய இளமையான மயில்; பொருவும் – ஒக்கும்;
பொற்பு – அழகு; மதமலை – மதங் கொண்ட யானை; ஈர்ஐந்நூறு –
ஆயிரம்; வலி – வலிமை; தனயை – மகள்; மலர் அயன் – பிரமன்.

——–

‘ஆயவன் அருள்வழி. அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு. “இவட்கு
ஆயவன் யார்கொல்?” என்று ஆய்ந்து. தன் கிளை
நாயகன். கந்தன் என்பவற்கு நல்கினான்.–77-/ 20-6–

ஆயவன் – அந்த பிரமன்; அலர்ந்த – மலர்ந்த; சேயவள் –
திருமகள்; செவ்வி – தன்மை; இவட்கு ஆயவன் – இவளுக்கு உரிய
கணவன்; நாயகன் – தலைவன்; என்பவற்கு – என்பவனுக்கு;
நல்கினான் – தந்தான்.

—–

‘ “காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம்” என. இயக்கனும் அணங்கு அனாளும். வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்.
தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார்.–78-/20.7 –

காமன் – மன்மதன்; இயக்கன் – சுந்தன்; அணங்கு – தெய்வ
மகள்;அனாளும் – அன்னாளும்; யாமம் – இரவு; ஈறு – முடிவு; சலதி
– கடல்; பெருங்களி – பெரும் களிப்பு; தாம் உறு – தாம் உற்ற.

———–

‘பற்பல நாள் செலீஇ. பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை. புவனம் ஏங்கிட.
வெற்பு அன புயத்து மாரீசனும். விறல்
மல் பொரு சுவாகுவும். வந்து தோன்றினார்.–79 / 20-8-

செலீஇ- சென்று; பதுமை – பாவை;போலிய – போன்ற; புவனம் –
உலகம்; வெற்பு – மலை; விறல் – வலிமை.

——-

மாயமும். வஞ்சமும். வரம்பும் இல் ஆற்றலும்.
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஒணாது.
ஆயவர் வளர்வுழி. அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும். களிப்பின் மேன்மையான்.–80 / 20-9

வரம்பு- எல்லை; இல் – இல்லாத; தேர்வு ஒணாது- தேர இயலாது;
வளர்வுழி – வளரும் போது; இயக்கன் – கந்தர்வனாகிய சுந்தன்.

———

தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர.
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மா தவன் உறைவிடம் அதனின் வந்து. நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்.–81 / 20-10

தீது உறும்- தீங்குடைய; அவுணர் – அரக்கர்; தீமை தீர்தர –
தீங்கு தீர; எலாம் – எல்லாம்;மாதவன் – அகத்தியன்; நீள் பாதவம் -பெரிய மரம் (மலையுமாம்.)

——

‘விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை. கலை. இரலையை உயிர் உண்டு. ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப. மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான்.–82 / 20-11-

விழைவு – விருப்பம்; உழை – பசு (மானுமாம்); கலை – கலைமான்;
இரலை – புல்வாய்; வழை – சுரபுன்னை; மரன் – மரம்; மடிப்ப –
அழிக்க; தழல் – நெருப்பு; என – என்னும்படி; விழித்தனன் -விழித்தான்.

——

‘மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு. வெங் கனலின் பொங்குறா.
‘முற்றுற முடிக்குவென் முனியை’ என்று எழா.
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.–83 / 20-12-

விளிந்தமை – இறந்ததனை; பொற்றொடி – பொன் வளையல்
அணிந்த தாடகை; கனல் – தீ; பொங்குறா – பொங்கி; முற்றுற –
அடியோடு (முழுதும்); எழா – எழுந்து; நற்றவன் – அகத்தியன்;
நண்ணினான் – அடைந்தான்.

———

‘இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட.
கடி கெட அமரர்கள். கதிரும் உட்கிட
தடியுடை முகில் குலம் சலிப்ப. அண்டமும்
வெடிபட. அதிர்த்து. எதிர் விளித்து. மண்டவே.–84 / 20-13-

வளி – காற்று; அடங்கலும் – எல்லாமும்; கடிகெட – மகிழ்ச்சி
நீங்க; கதிர் – சூரியன்; தடி உடை – மின்னலை உடைய; மண்ட – நெருங்க.

—-

தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக. உங்கரித்து
“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!” என உரைத்தனன். அசனி எஞ்சவே.–85 / 20-14

அளப்ப அரும் சலதி- அளக்க அரிய கடல்; தந்தவன் – தந்த
அகத்தியன்; கனல் உமிழ் – நெருப்பை உமிழ்கின்ற; உங்கரித்து –
ஊங்காரம் செய்து; இழிக – இழிந்தவர்களாகுக; அசனி – இடி.

——-

‘வெருக்கொள. உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி. எவ் உயிரும் உண்டு. உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர். அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர்.–86 / 20-15

வெருக்கொள – அஞ்ச; முருக்கி – அழித்து; உழலும் – திரியும்;
உருக்கிய செம்பு – உருக்கப்பட்ட செம்பு; உமிழ் கண் – உமிழ்கின்ற கண்.

———

‘ஆங்கு அவன். வெகுளியும். அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்.
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து. “நிற்கு யாம்
ஓங்கிய புதல்வர்” என்று. உறவு கூர்ந்தனர்.–87 / 20-16

வெகுளி- சினம்; அறைந்த – கூறிய; தருக்கு – வலிமை; நேர்ந்து
– அடைந்து; நிற்கு – உனக்கு; கூர்ந்தனர் – அணுகினர்.

———–

‘அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ.
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என. புடைத்து அழித்து. உலகம் எங்கணும்
பவனனின் திரிகுநர். பதகி மைந்தவர்கள்.–88 / 20-17

அநேக நாள் செலீஇ- பல நாட்கள் சென்று; தவன் – தவம்;
தசமுகன் – இராவணன்; மாதுலர் – மாமன்மார்; பவனன் – சூரியன்;
திரிகுநர் – திரிபவர்கள்; பதகி – பாதகி (தாடகை).

———

‘மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா.
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே.-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள். – அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள்.–89 / 20-18

மிகும் திறல்- மிகுந்த வலிமை;நீங்குறா – நீங்காத; சலம் – சினம்;
வகுந்துவின் – வழிவழியாக; வசுவரி – வசுக்களின் தலைவனான
இந்திரனது குற்றக் குறி; வதிந்தது – தங்கியது; அழல் – நெருப்பு.

———-

‘மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்.
முன் ஒர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது’
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான்.–90 / 39-1-

மன்னர் மன்னவன்- தயரதன்; மற்றும் ஒன்று – இன்னும் ஒன்று;
உரைக்கின்றது – சொல்லுவது; ஓதல் – கூறுதல்; ஈறுஇலான் – முடிவில்லாதவன்.

———

பிருகு என்னும் பெருந் தவன்தன் மனை
வரு கயல் கண் கியாதி. வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற. உறவாதலே
கருதி. ஆவி கவர்ந்தனன். நேமியான்.–91- / 39-2

பிருகு- பிருகு முனிவன்; கயல்கண் – கயல் போன்ற கண்; வல்
ஆசுரர்க்கு – வலிய அசுரர்களுக்கு; உறவாதல் – உறவு
உடையவதனால்; கருதி – எண்ணி; ஆவி – உயிர்; நேமியான் -ஆழிப்படையுடைய திருமால்.

———-

வானகத்தினில். மண்ணினில். மன்னுயிர்
போனகம் தனக்கு” என்று எணும் புந்திய
தானவள் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன்.–92-/ 39-3-

போனகம்- உணவு; எணும் – எண்ணும்; புந்தி – மனம்; ஊன்
ஒழித்தல் – கொல்லுதல்; வச்சிரத்து உம்பர்கோன் – இந்திரன்.

———–

‘ஆதலால். அரிக்கு. ஆகண்டலன்தனக்கு.
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால். இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!’–93 / 39-4

அரி- திருமால்; ஆகண்டலன் – இந்திரன்; கீர்த்தி – புகழ்; ஏதம்- குற்றம்; சொலாய் – சொல்லாய்;
தாது – மகரந்தம்; அடர்ந்து -செறிந்து; தயங்கிய – விளங்கிய; தார் – மாலை.

———-

ஏக்கமோடும் இமையவர் எங்கணும்.
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்.
மூக்கும் வார் செவியும் முறை போயிட.
தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான்.–94-/ 48-1-

வாக்கின்- பேச்சுக்கு; முந்துற – முன்னம்; மாயை – மாயைச்
செயல்; போயிட – போக; இளவல் – இலக்குவன்.

——–

விலக்கி நின்று. அவன் வெங் கணை
விரைவினில் விலக்கி.–95-

——–

கலக்கம் வானவர் தவிர்ந்திட.
காலனும் கலங்கத்
துலக்கி. வையகத்து இடுக்கணும்
முனிவர்தம் துயரும்
உலக்க. ஊழித் தீ ஒப்பது ஓர் கணை
தொடுத்து எய்தான்.–96-/ 48 -2 –

வெங்கணை – கொடிய அம்பு; காலன் – எமன்; இடுக்கண் –
துன்பம்; உலக்க – நீங்க; ஊழித்தீ – ஊழிக்காலத்துத் தீ; ஒப்பது – ஒத்தது.

————
8 வேள்விப் படலம்

‘குசன். குசநாபன். கோது இல்
குணத்தின் ஆதூர்த்தன். கொற்றத்து
இசை கெழு வசு. என்று ஓதும்
இவர் பெயர்; இவர்கள் தம்முள்
குசன் கவுசாம்பி. நாபன்
குளிர் மகோதயம். ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம். மற்றை
வசு கிரிவிரசம். வாழ்ந்தார்.–96-/ 4-1

கோது இல்- குற்றமில்லாத; இசை கெழு – புகழ் விளங்கும்; ஓதும்
– கூறும்; குளிர் – குளிர்ந்த; வசை இல் – குற்றமில்லாத.

———–

குறியவன் கையில் நீர் விழாமல். குண்டிகை
மறிபட. வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்.
செறிவது நீக்கிட. சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.–97 / 23-1

குறியவன்- வாமனன்; குண்டிகை – கமண்டலம்; மறிபட – தடுத்து
நிற்க; செறிவது – செறிந்து நிற்பது; உடைந்து – கெட்டு; உறுதுயர் -மிக்க துயர்.

——-

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்;
நாட்டம்அது அகத்துளான். சிலம்பின் நாமத்தான்.
ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ.
வாட்டம் இல் அந்தணன் மலர்க்கை நீட்டினான்.–98 / 23-2-

வேலை – சமயம்; சிலம்பின் நாமத்தன் – வெள்ளி; அந்தணர் –
வாமனன்; வாட்டம் இல் – வாட்டமில்லாத; மலர்க் கை – மலர் போன்ற கை.

——–

9 அகலிகைப் படலம்

‘இனைய சோலை மற்று யாது?’ என
இராகவன் வினவ.
வினை எலாம் அற நோற்றவன்
விளம்புவான்; ‘மேல்நாள்
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே.
காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள்.
இவண்’ என வலித்தான்.–99 /3-1-

வினை எலாம் அற நோற்றவன்- விசுவாமித்திரன்; வலித்தான் – தெளிவாகச் சொன்னான்.

காசிபன் மனைவி திதி என்பவள் தன் மக்களான அசுரர்கள்
தேவர்களால் அடியுண்டு மடிந்து போனதால் மிகத் துயரம் அடைந்து
இந்திரனைக் கொல்லவும். மூவுலகையும் ஆளவும் ஒரு மகனைப்
பெறுமாறு தன் கணவனிடம் அனுமதி பெற்றுப் பல காலம் தவம்
புரிந்த இடம் இது என்று விசுவாமித்திரன் கூறினான்.

——

‘அண்ட கோளகைக்கு அப்புறத்து.
என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி. ஓர்
விஞ்சையர் கோதை.
புண்டரீக மென் பதத்தியைப்
புகழ்ந்தனள்; புகழ.
வண்டு அறா மது மாலிகை
கொடுத்தனள் மகிழ்ந்து.–100-/ 3-2

நீள்பதம் – வைகுண்டம்.

ஒரு வித்தியாதரப் பெண். செந்தாமரையில் உள்ள திருமகளைப்
பாடித் துதித்தாள். அது கேட்டு மகிழ்ந்த இலக்குமி மனமுவந்து தனது
பூமாலையை அவள் கையில் கொடுத்தாள் என்பது.

——–

‘அன்ன மாலையை யாழிடைப்
பிணித்து. அயன் உலகம்.
கன்னி மீடலும். கசட்டுறு
முனி எதிர் காணா.
என்னை ஆளுடை நாயகிக்கு
இசை எடுப்பவள்” என்று.
அன்னள் தாள் இணை வணங்கிநின்று
ஏத்தலும். அனையாள்.–101 / 3-3

அந்த வித்தியாதரப்பெண் பூமாலையை யாழிலே கட்டிக்கொண்டு
பிரம்மலோகம் திரும்பினாள். அப்பொழுது துருவாச முனிவன்
அவளை எதிரே கண்டு அவளடிகளில் வீழ்ந்து வணங்கினான் என்பது.
இதனால் துருவாசரின் திருமால் பக்தி புலனாகிறது. இவன் பிறரைச்
சபிக்கச் சபிக்கத் தவம் வளரும் வரம் பெற்றவன். இவன் அத்திரி முனிவன் மகன்.

——–

‘ “உலகம் யாவையும் படைத்து. அளித்து.
உண்டு. உமிழ். ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து. உயிர்
யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில்
சூடிய தெரியல்.
அலகு இல் மா முனி! பெறுக” என
அளித்தனள் அளியால்.–102-/ 3-4 –

உலகம் யாவையும் படைத்து. அளித்து. உண்டு உமிழ் ஒருவன்-திருமாலின் முத்தொழில் பேசப்பெறுகின்றன.

அவ்வித்தியாதர மகள் தன் யாழில் கட்டிய அப் பூமாலையைத் துருவாச முனிவனுக்குக் கொடுத்தாள் என்பது.

——————-

‘ “தெய்வ நாயகி சென்னியில்
சூடிய தெரியல.
ஐய! யான் பெறப் புரிந்தது
எத் தவம்?” என ஆடி.
வெய்ய மா முனி சென்னியில்
சூடியே. வினை போய்
உய்யும் ஆறு இது
என்று உவந்து வந்து. உம்பர் நாடு அடைந்தான்.–103-/ 3-5-

வினை போய் உய்யுமாறு- கருமம் ஒழிந்து நற்கதி பெறும்விதம்
இதுவென்று; தெய்வ நாயகன் – திருமால்; தெய்வ நாயகி – திருமகள்.
தேவர்களின் தலைவியான திருமகளின் பூமாலையைத் தான்
பெறுவதற்கு என்ன மாதவம் செய்தேன் என மகிழ்ந்து அதைத்தன்
முடியிலே சூடிக்கொண்டு தெய்வலோகம் சென்றான் என்பது –

——

‘பெய்யும் மா முகில் வெள்ளிஅம்
பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம்
மலர்ந்து. செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய
முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு. அயிராவதக்
களிற்றின்மேல் விளங்க.–104 / 3-6-

யானைக்கு மலை உவமை – வலிமை. பெருமை. மதநீர்
அருவியுடைமை பற்றி; ஐராவதம் – இந்திரனது பட்டத்து யானை;
நான்கு தந்தங்களையுடையது; வெண்மை நிறமுடையது.

இந்திரன் ஐராவத யானைமேல் வீற்றுள்ள சிறப்பைச் சொல்வது
இப்பாடல். ஐராவதத்தின் மேல் வீற்றிருப்பதால் இந்தரனுக்குச் சிறப்பு;
இந்திரன் வீற்றிருப்பதால் ஐராவதத்திற்குச் சிறப்பு.

——–

‘அரம்பை. மேனகை. திலோத்தமை.
உருப்பசி. அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி
நூபுரம் தழைப்ப.
கரும்பையும் சுவை கைப்பித்த
குதலையர். விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர்.
வீதிகள் நெருங்க.–105 / 3 -7-

அரம்பை – நளகூபரனின் போகமடைந்தை; திலோத்தமை –
பிரமனால் படைக்கப்பட்டவள்; ஊர்வசி – நாராயண முனிவனது
தொடையிலிருந்து (ஊரு) தோன்றியவள்.

அரம்பை முதலான தேவதாசிகள் நால்வரும் பாடிக்கொண்டும்
ஆடிக்கொண்டும் தெருக்களில் சென்றார்கள் என்பது.

———

‘நீல மால் வரை தவழ்தரு
கதிர் நிலாக் கற்றை
போலவே. இரு புடையினும்.
சாமரை புரள.
கோல மா மதி குறைவு அற
நிறைந்து. ஒளி குலாவி.
மேல் உயர்ந்தென
வெள்ளி தம் தனிக் குடை விளங்க.–106 / 3-8-

நீல மலையின் இருப்பக்கத்தும் சஞ்சரிக்கும் நிலாக்கற்றைபோல
இந்திரனின் இரு பக்கங்களிலும் வெண் சாமரங்கள் அசையவும்.
வானத்தில் விளங்கும் முழுமதிபோல ஒற்றைக் குடை ஒளிரவும்
சென்றான் என்பது.

——-

‘தழங்கு பேரியும். குறட்டொடு
பாண்டிலும். சங்கும்.
வழங்கு கம்பலை மங்கல
கீதத்தை மறைப்ப.
முழங்கு நான்மறை. மூரி நீர்
முழக்கு என. உலகை
விழுங்க. மால் வரும் விழா அணி
கண்டு உளம் வியந்தான்.–107 / 3-9-

‘மங்கல கீதத்தை மறைப்ப’ – இந்திரனுக்கு இனிமேல்
வரவிருக்கின்ற துன்பத்தைக் குறிப்பாக உணர்த்துவது – அமங்கலம்.
பூமிக்கு முன்பு கடல் படைக்கப்பட்டது – அதனால் ‘மூரிநீர்’ என்றார்.

பேரிகை முதலான பலவகை வாத்தியங்கள் முழங்கும் ஓசை
ஓங்கவும் நான்மறை ஓசை ஒலிக்கவும் இந்திரன் உலாவரும் திருவிழாக்
காட்சியைக் கண்டு துருவாசன் வியந்து நின்றான் என்பது.

———

‘தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால்.
வாசவன்தன் கை
வனையும் மாலையை நீட்டலும்.
தோட்டியால் வாங்கி.
துனை வலத்து அயிராவதத்து
எருத்திடைத் தொடுத்தான்;
படை செய் கையினால் பறித்து
அடிப்படுத்தது. அப் பகடு.–108 / 3 -10-

வாசவன் – இந்திரன். அஷ்ட வசுக்களுக்குத் தலைவன். எல்லாச்
செல்வங்களும் உடையவன். ஐராவதத்தின் துதிக்கைக்குப் பனைமரம்
உவமை. (திரட்சி. உருட்சி. நீட்சி வடிகால்).
துருவாசன் அம் மாலையை இந்திரனுக்குக் கொடுக்க. அவன்
அங்குசத்தால் அதைப்பெற்று யானையின் தலைமேல் வைக்க. அந்த
யானை அதைக் காலால் தேய்த்தது என்பது

——

‘ “கண்ட மா முனி விழி வழி
ஒழுகு வெங் கனலால்.
அண்ட கூடமும் சாம்பராய்
ஒழியும்”என்று. அழியா.
விண்டு நீங்கினர் விண்ணவர்;
இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது;
சுழன்றது எவ் உலகும்.–109-/ 3-11-

அதைக்கண்ட துருவாசன் பெருங்கோபம் கொள்ள வானவர்
யாவரும் ஓடிப்போகத் திசைகள் எங்கும் இருண்டன என்பது. சந்திர
சூரியரும் தம் கதியிற் செல்லத் தடுமாறினர் என்றார்.

——–

‘புகை எழுந்தன. உயிர்த்தொறும்;
எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம்.
நல் நுதலில;
சிகை எழும் சுடர் விழியினன்.
அசனியும் திகைப்ப.
“மிகை எழுந்திடு சதமக!
கேள்” என வெகுண்டான்.—110 / 3-12-

சதமகன்- இந்திரன் – நூறு அசுவமேத வேள்விகளைச்செய்து
இந்திர பதவி பெற்றவன்; எயில் – பட்டணம் – ஆகுபெயர்.

கோபத்தால் துருவாச முனிவனின் மூச்சில் புகை கிளம்பியது;
சிரிப்பு எழுந்தது; புருவங்கள் நெற்றியில் ஏறின என்றார்.

——–

‘ “பூத நாயகன். புவிமகள்
நாயகன். பொரு இல்
வேத நாயகன். மார்பகத்து
இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு
தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென்.
முயன்ற மா தவத்தால்.–111-/ 3-13

பூத நாயகன் – பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றை
நியமிப்பவன்; ஆதி நாயகி – கலைமகள். மலைமகள். இந்திராணி
முதலான தேவியர்களுக்கு நாயகி என்றபடி.

துருவாச முனிவன் அந்த மலரைப்பெற்ற பாங்கினை எடுத்துரைப்பது இப்பாடல்

———

‘ “இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு.
உவகையின் ஈந்த
மன்றல்அம் தொடை இகழ்ந்தனை;
நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும்
உவரி புக்கு ஒளிப்ப.
குன்றி. நீ துயர் உறுக” என
உரைத்தனன். கொதித்தே.–112 / 3-14-

உவரி- உப்புச் சுவையுடையது; இங்கே பாற்கடலைக் குறித்தது;
குன்றி – பெருமை குறைதல். மனவேதனையால் உடல் குன்றுதல்.

‘உலா வருகின்ற உன் சிறப்பைக் கண்டு இம் மாலையை
உனக்குத் தந்தேன்; நீயோ அதனை இகழ்ந்தாய். ஆதலால். உன்
பெருநிதிகளும். செல்வங்களும் மறையட்டும்’ என்று துருவாசன்
இந்திரனை நோக்கிச் சபித்த செய்தி கூறுவது இப்பாடல்.

———

‘அரமடந்தையர். கற்பகம்.
நவ நிதி. அமிர்தம்.
சுரபி. வாம் பரி. மதமலை.
முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே
உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின. கண்ணன் வாழ்
வெண்ணெய் மேவாரின்.–113 / 3-15-

நவநிதி – மகா பதுமம். பதுமம். சங்கம். மகரம். கச்சபம். முகுந்தம்.
குந்தம். நீலம். வரம் என்பன;புதியனவாகிய சங்க நிதி. பதுமநிதி.

துருவாசன் சாபத்தால் இந்திரன் செல்வங்களான தேவ மாதர். கற்ப
மரங்கள். நவநிதிகள். பாலைக்கறக்கும் காமதேனு. வெண் குதிரை.
ஐராவத யானை ஆகியன பாற்கடலில் மறைந்தன என்பது.

——-

‘அந்த வேலையில். இந்திரன்
சிந்தை நொந்து அழிந்து.
வந்து. வானவ முனிவனை
வழிபட்டு வழுத்த.
“நந்தும் நின் பெருஞ் செல்வம் மால்
அருளினால். நயக்க
முந்தும்” என்று சாபத்தினின்
மோக்கமும் மொழிந்தான்.–114 / 3-16-

நந்துதல் – குறைதல். செழித்தல்.

இந்திரன் மனம் நொந்து துருவாசனை வழிபட்டு நிற்க. ‘தேய்ந்த
உன் செல்வம் திருமால் அருளால் உனக்குக் கிடைக்கும்’ என்று
அம்முனிவன் சாப விமோசனம் தருவது என்பது.

————

‘வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய. வானோரும்.
தையல் பாகனும். சதுமுகக் கடவுளும். கூடி.
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார்.–115 / 3 -17

மறு- திருமாலின் மார்பில் உள்ள உத்தமக்குறி. திருமகள் பிறர்
மார்பை மறுத்தற்குக் காரணமான மார்பு; தையல் பாகன் – சிவன்.

வானுலகு எங்கும் வறுமை நோய் வாட்டத் தேவர்களும். சிவனும்.
நான்முகனும் திருமாலை அடைந்து முறையிட்ட செய்தியைக் கூறுவது.
செல்வத்தை இழந்த தேவர்கள் அச்செல்வத்திற்குத் தலைவியான
திருமகளின் கணவனை அடைந்தனர் என்றார்.

———–

‘வெஞ் சொல் மா முனி வெகுளியால்
விளைந்தமை விளம்பி.
கஞ்ச நாள்மலர்க் கிழவனும்.
கடவுளர் பிறரும்.
“தஞ்சம் இல்லை; நின் சரணமே
சரண்” எனச் செப்ப.
“அஞ்சல். அஞ்சல்! என்று உரைத்தனன்.
உலகு எலாம் அளந்தோன்.–116 /3-18-

உலகெலாம் அளந்தோன்- மூவுலகங்களையும் தன் அடிகளால்
அளந்தவன் – திருமால்; தஞ்சம் – புகலிடம்.
தேவர்கள் துருவாச முனிவனது சாபத்தின் விளைவைத்
திருமாலிடம் எடுத்துச் சொல்ல. அத்திருமாலும். ‘அஞ்சாதீர்’ என்று
அவர்களுக்கு அபயம் தரும் பாங்கு இதில் கூறப்படுகிறது.

———-

“மத்து மந்தரம்; வாசுகி
கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர்
வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்;
ஓடதி கொடுத்து.
கத்து வாரிதி மறுகுற.
அமிழ்து எழக் கடைமின்;–117 / 3 -19-

மந்தர மலை- மத்து; வாசுகி என்னும் பாம்பு – கடை கயிறு;
சந்திரன் – அடை தூண்; தேவர். அசுரர் – இருபக்கமும் கயிற்றைப்
பிடித்துக் கடைபவர்; ஓடதி – ஓஷதி;அமிர்த வல்லி என்னும் மூலிகை.

இழந்த செல்வங்களைப் பெறும் பொருட்டுப் பாற்கடலைக்
கடையுமாறு அத்தேவர்களுக்குத் திருமால் கட்டளையிட்டான் என்பது.

——–

‘ “யாமும் அவ் வயின் வருதும்; நீர்
கதுமென எழுந்து
போமின்” என்று அருள்புரிதலும்.
இறைஞ்சினர் புகழ்ந்து.
“நாமம் இன்று” எனக் குனித்தனர்.
நல்குரவு ஒழிந்தது
ஆம் எனும் பெருங் களி துளக்
குறுதலால். அமரர்.–118 / 3-20-

நாமம் – அச்சம்; துளக்குறுதல் – ஆட்டுதல்; குனித்தனர் –
கூத்தாடினர்.

பாற்கடல் கடையுங்கால் தானும் துணை வருவதாகக் கூற.
அத்தேவர் மகிழ்ந்து இனித் தம் வறுமை அகலுமென்று துணிந்து
கூத்தாடினர் என்றார்.

———

மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்;
அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி
நிலை தளர்ந்திட. அனந்தனும் கீழுற நெளித்தான்.–119 / 3-21-

பயோததி – பயஸ் – பால்; உததி – கடல்;பாற்கடல்; அனந்தன் –
பிரளய காலத்தும் அழிவில்லாமல் என்றும் ஒரு தன்மையாக
நித்தியனாயிருப்பவன்; இவன் பூமியின் கீழ் இருந்து
ஆயிரந்தலைகளாலும் பூமியைத் தாங்குகின்றான் என்பது நூற்கொள்கை.

தேவர்களும் அசுரர்களும் கடல் கடையப் பூமி நிலைகுலைய
ஆதிசேடனாகிய பாம்பும் உடல் நெளித்தான் என்றார்.

—–

‘திறல் கொள் ஆமை ஆய்.
முதுகினில் மந்தரம் திரிய.
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள்
பரப்பி. மீ வலிப்ப.
மறன் நிலாம் முனி வெகுளியால்
மறைந்தன வரவே.
அறன் இலா மனத்து அடைகிலா
நெடுந் தகை அமைத்தான்.–120 / 3-22

மறன் இல் ஆம்- கோபத்துக்கு இடமான;மறன் நில்லா – கோபம்
மனத்தில் அடங்கி நிற்கப் பெறாத; மறன் நிலாம் – கோபம் உலாவி
விளங்குதற்கு இடமான.

திருமால் ஆமை வடிவெமடுத்துத் தன் முதுகின் மேல் மந்தர மலை
சுழலும்படி. மந்தர மலையை மேலே அழுத்தும்படி ஆயிரம்
கைகளைப் பரவச்செய்தும் நீங்கின பொருள்கள் மீண்டு வர உதவினான் என்பது.

———

‘இறந்து நீங்கின யாவையும்.
எம்பிரான் அருளால்.
பிறந்த; அவ்வயின் சுராசுரர்
தங்களில் பிணங்க.
சிறந்த மோகினி மடந்தையால்.
அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து
அமரர்கள் துய்த்தார்.–121 / 3-23

மோஹிநீ – மோகினி (தன்னைக்கண்டவரை); மதிமயங்கச்
செய்யும் அழகுடைய தெய்வமகள்.

கடலில் சென்று ஒளித்த தெய்வலோகப் பொருள்கள் யாவும்
மீண்டும் தோன்றின; அவ்வாறு தோன்றிய அமிர்தம் காரணமாகத்
தேவர் அசுரர்க்குப் பிணக்கு உண்டாகத் திருமால் சூழ்ச்சி செய்து
அவ் அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தான் என்பது.

——-

‘வெருவும் ஆலமும் பிறையும்
வெள் விடையவற்கு அளித்து.
தருவும் வேறு உள தகைமையும்
சதமகற்கு அருளி.
மருவு தொல் பெரு வளங்களும்
வேறு உற வழங்கி.
திருவும் ஆரமும் அணிந்தனன்.
சீதர மூர்த்தி.–122 / 3 -24 —

ஆலகாலம். பிறை நிலா- சிவனுக்கு பஞ்ச தருக்கள். தேவமாதர்.
நிதிகள். உச்சைச் சிரவம்; ஐராவதம். சிந்தாமணி – இந்திரனுக்கு;
புட்பகம் – குபேரனுக்கு; இலக்குமி. இரத்தினம் – திருமாலுக்கு; சீ –
இலக்குமி. ஒளி; பிறை – பிறப்பது (இளஞ்சந்திரனுக்கு) – காரணக்குறி.

பாற்கடலில் தோன்றிய பொருள்களைப் பங்கிட்ட வகை இதிற் கூறப்பெறுகிறது.

———

‘அந்த வேலையில் திதி பெருந்
துயர் உழந்து அழிவாள்.
வந்து காசிபன் மலரடி
வணங்கி. “என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால்
இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள். அவர்தமை
மடித்தலுக்கு” என்றாள்.–123 / 3 -25

வேலை – காலம்; காசிபன் – திதியின் கணவன்.

அசுரர்களைக் கொன்ற தேவர்களைப் பழிவாங்கும் பொருட்டு ஒரு
மகனைத் தரவேண்டும் என்று திதி என்பவள் தன் கணவனிடம்
கேட்டாள் என்பது.

———

‘என்று கூறலும். “மகவு உனக்கு
அளித்தனம்; இனி. நீ.
சென்று பாரிடை. பருவம்
ஓர் ஆயிரம் தீர.
நின்று. மா தவம் புரிதியேல்.
நினைவு முற்றுதி” என்று
அன்று கூறிட. புரிந்தனள்.
அருந் தவம். அனையாள்.–124 / 3 -26

திதி தவம் செய்த இடம் – குசப்லவம்.

காசிபன் தன் மனைவியான திதிக்குத் தவம் செய்து மகவு பெற
அனுமதி தந்தான்; அவளும் ஆயிரம் ஆண்டு கடுந்தவம் செய்தாள் என்பது.

———

‘கேட்ட வாசவன். அன்னவட்கு
அடிமையில் கிடைத்து.
வாட்டம் மா தவத்து உணர்ந்து.
அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்
திடுதலும். விம்மி.
நாட்டம் நீர் தர. “மருத்து” எனும்
நாமமும் நவின்றான்.–125 / 3 -27

மருத்து -வாயு.

திதி என்பவள் தன்னைக் கொல்லும் மகனைப் பெறத் தவம்
புரிகிறாள் என்பதையறிந்த இந்திரன் அவளுக்குப் பணியாளாக
அமைந்தான்; அவளது கருப்பத்தைப் பிளந்து சிதைத்தான்; அவள்
விருப்பப்படி அந்த ஏழு துண்டங்களுக்குச் சப்த மருத்துக்கள்
என்னும் பெயரிட்டான் என்பது.

———

‘ஆயது இவ் இடம்; அவ் இடம்
அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின்
தோன்றியே. தொல்லை
வாயுவும் புனல் கங்கையும்
பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம்
என்பதும் தெரித்தான்.’–126 / 3 -28

சரம் – நாணல்; வனம் – காடு; சரவணம் – நாணற்காடு.

சிவனுக்கு உமை வாயிலாகப் பிறந்த சுப்பிரமணியக்கடவுள் வளர்ந்த
சரவணக் காடு இது என்று விசுவாமித்திரன் கூறினான் என்பது.

——–

‘இந்த மா நதிக்கு உற்று உள
தகைமைய யாவும்.
எந்தை! கூறுக’ என்று இராகவன்
வினவுற. ‘எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான்.
அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன். சகரன்.
இம் மேதினி புரந்தான்.–127 / 5-1

சகரன் – நஞ்சோடு பிறந்தவன்; கரம் – விடம்;
மேதிநீ – திருமாலால் வதைக்கப்பட்ட மதுகைடபர்களின் மேதசால் (கொழுப்பு) நனைந்தது என்னும் பொருளது.

சூரிய குலத்தவன் அயோத்தியை ஆண்டவன் சகரன் என்பவன்.
விசுவாமித்திரன் கங்கையின் வரலாற்றை இராமனுக்குச் சொல்ல
முற்படுகையில் அச்சகரனைக் குறித்துக் கூறுகிறான் என்பது.

———

விறல் கொள் வேந்தனுக்கு உரியவர்
இருவரில். விதர்ப்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு
அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென்
சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதி
னாயிரர் வலத்தார்.–128 / 5-2-

சுமதி – காசிபனுக்கு விநதையிடம் தோன்றியவள்; சுமதி –
நல்லறிவுடையவள் என்பது பொருள்.

சகரனுக்கு இரு மனைவியர். முதல் மனைவியான கேசினிக்கு ஒரு
மகன் – அசமஞ்சன்;இளையவள் சுமதிக்கு அறுபதினாயிரவர்.

——–

திண் திறல் புனை சகரனும்.
தனையர் சேவகங்கள்
கண்டு. முற்றிய அய மகம்
புரிதலும். கனன்று.
வண்டு துற்று தார் வாசவற்கு
உணர்த்தினர். வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது
இடையினில் ஒளித்தான்.–129 / 5-3-

அசுவமேத யாகம் செய்யக் கருதிய சகரன் குதிரையை
அனுப்பினான்; அக்குதிரையை இந்திரன் மாயையால் கவர்ந்துசென்று
தவத்திலுள்ள கபில முனிவனுக்குப்பின்னே ஒரு மரத்தில்
கட்டிச்சென்றான் என்பது.

நூறு அசுவமேத யாகங்கள் செய்பவன் இந்திர பதவி அடைவான்.
அதனால் இந்திரனால் அந்த யாகத்தை ஏற்க முடியவில்லை.

————

‘வாவு வாசிபின் சென்றனன்
அஞ்சுமான் மறுகி.
பூவில் ஓர் இடம் இன்றியே
நாடினன் புகுந்து.
தேவர் கோமகன் கரந்தமை
அறிந்திலன். திகைத்து.
மேவு தாதைதன் தாதைபால்
உரைத்தனன். மீண்டு.–130 / 5-4-

வாசி – குதிரை; பூ – பூமி.

குதிரைக்குக் காவலாக இருந்த அம்சுமானுக்கு இந்திரனது வஞ்சகம்
தெரியவில்லை; காணாத குதிரையை அம்சுமான் பூமியெங்கும்
தேடியும் கிடைக்கவில்லை; தந்தை சகரனிடம் சொன்னான் என்பது.

———-

‘கேட்ட வேந்தனும். மதலையர்க்கு
அம் மொழி கிளத்த.
வாட்டம் மீக்கொள. சகரர்கள்
வடவையின் மறுகி.
நாட்டம் வெங் கனல் பொழிதர.
நானிலம் துருவி.
தோட்டு நுங்கினர் புவியினை.
பாதலம் தோன்ற.–131 / 5-5

வடவை – பெண்குதிரை (நெருப்பு) – இடவாகு பெயர். கடலிடையே
வாழும் ஒரு பெண் குதிரையின் முகத்திலே நெருப்பு எப்பொழுதும்
அவியாமல் உள்ளது என்றும். பிரளய காலத்தில் அது வெளிப்பட்டு
உலகை எரித்து அழிக்குமென்றும் கூறுவர்.

வேள்விக் குதிரை காணாதுபோன செய்தியைச் சகரன் தன்
மக்களிடம் கூறல் – அவர்கள் மிக்க கோபத்தோடு சென்று எங்கும்
தேடுதல் – காணாமையால் பூமியைத் தோண்டுதல் – என்பது.

——

‘நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர். என்பரால். வட குணதிசையின்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு. எரியின்
சீறி. வைதனர்; செருக்கினர். நெருக்கினர்; செறுத்தார்.–132 / 5-6

யோசனை – பேரளவு – சமணநூல் வழக்கு; குணக்கு – கிழக்கு.

சகர குமாரர் வடகிழக்குத் திசையிலே நூறு யோசனை அகலமும்
ஆழமும் அமையத் தோண்டினர்;கபிலன் பின் இருந்த குதிரையைப்
பார்த்தனர்; கோபத்தால் அம் முனிவனை ஏசினர் என்பது.

———-

‘மூளும் வெஞ் சினத்து அருந் தவன்
முனிந்து. எரி விழப்ப.
பூளைசூடிதன் நகையினில்
எயில் பொடிந்தனபோல்.
ஆளும் மைந்தர் ஆறு – அயுதரும்
சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு
உரைத்தனர். வேயர்.–133 / 5-7-

பூளை சூடி – சிவன்; பூளை – (மலர்) – முதலாகுபெயர். இதனை
உழிஞை என்பர்.

தவம் கலைந்த கபில முனிவன் கோபத்தால் சீறினான் – அவனது
சாபத்தால் அரச மைந்தர் அறுபதினாயிரவர் சாம்பரானார்கள் –
இச்செய்தி சகரனுக்கு எட்டியது என்பது.

——–

‘உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்;
உணர்வு ஒழியா.
அழைத்து மைந்தன்தன் மைந்தனை.
“அவர் கழிந்தனரேல்.
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?”
என. அவன் எழுந்து.
தழைத்த மா தவக் கபிலன் வாழ்
பாதலம் சார்ந்தான்.–134 / 5-8-

ஏல் – (என்னில்) எதிர்கால வினையெச்சத்திரிபு; அம்சுமான் –
சகரனுடைய மைந்தனுக்கு மைந்தன்.
தன் மைந்தர் அறுபதினாயிரவர் மாய்ந்தது கேட்டுச் சகரன்
வருந்தினான். அங்ஙனம் வருந்தினும் வேள்வியைச் செய்து முடிக்க
உறுதி கொண்டான் என்பது.

———–

‘விண்டு நீங்கினர் உடல் உகு
பிறங்கல் வெண் நீறு
கண்டு. துண்ணெனும் மனத்தினன்.
கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது
எழுந்தனன் புகழ.
“கொண்டு போக. நின் இவுளி!” என்று
உற்றதும் குறித்தான்.–135 / 5-9-

அம்சுமான் இறந்துவிட்ட தன் தந்தையரின் சாம்பல் மலைபோலக்
குவிந்து கிடப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். கபில முனிவனை
வணங்கிக் குதிரையைக் கொண்டுபோகக்கேட்டான். கபிலனும் உடன்
பட்டான் என்பது.

—–

பழுதிலாதவன் உரைத்த கொல்
கேட்டலும். பரிவால்
தொழுது. வாம் பரி கொணர்ந்து. அவி
சுரர்களுக்கு ஈயா.
முழுதும் வேள்வியை முற்றுவித்து.
அரசனும் முடிந்தான்-
எழுது கீர்த்தியாய்! – மைந்தனுக்கு
அரசியல் ஈந்து. –136 / 5-10

பழுது- காமம். வெகுளி. மயக்கம் என்பன; எழுது கீர்த்தி –
எழுதப்படுகின்ற புகழ்.

அம்சுமான் கொண்டுவந்த குதிரையை வைத்துச் சகரன் வேள்வியை
முடித்தான். தேவர்களுக்கு அவிசு தந்தான். பெயரனான
அம்சுமானுக்கு முடிசூட்டி இறந்தான் என்பது.

——–

‘சகரர் தொட்டலால். “சாகரம்”
எனப் பெயர் தழைப்ப.
மகர வாரிதி சிறந்தது;
மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்;
இவன் நெடு மரபில்.
பகிரதன் எனும் பார்த்திபன்
பருதி ஒத்து உதித்தான்.–137 / 5-11-

அக்கடல் சகரர் தோண்டியதால் சாகரம் எனப்பட்டது;அம்சுமான்
மரபிலே பகீரதன் என்பவன் தோன்றினான் என்பது.

அம்சுமான் மைந்தன் திலீபன்; திலீபன் மகன் பகீரதன்.

———-

‘உலகம் யாவையும் பொது அறத்
திகிரியை உருட்டி.
இலகும் மன்னவன் இருந்துழி.
இறந்தவர் சரிதம்.
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு
உரைத்திட. அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று.
ஒரு மொழி செப்பும்:–138 / 5 -12-

பொது அற – பல அரசர்க்குப் பொது என்னும் தன்மை நீங்கித் தனக்கே உரிமையாகும்படி.

பகீரதன் தன் குலகுருவான வசிட்டனிடம் தன் முன்னோர் வரலாறு கேட்டான் என்பது.

——

‘ “கொடிய மா முனி வெகுளியின்
மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில்
அழுந்திடு முறைமை
கடியுமாறு. எனக்கு அருந் தவம்
அமைகுறு கருமம்.
அடிகள்! சாற்றுக” என்றலும்.
அந்தணன் அறைவான்:–139 / 5-13

பகீரதன். தன் முன்னோர் நரகத்தில் அழுந்திடும் தன்மையை
நீக்கும் விதமே தனக்கு அருந்தவம் என்றும் அதற்கு இசைவான
செயலைச் சொல்லுக என்றும் வசிட்டனிடம் கூறினான் என்பது.

முனிவர்களின் சாபத்தால் இறக்கின்றவர்களுக்கு நற்கதியில்லை என்பது நூல் துணிபு.

———

‘ “வையம் ஆளுடை மன்னவர்
மன்னவ! மடிந்தோர்
உய்ய. நீள் தவம் ஒழிவு அறு
பகல் எலாம் ஒருங்கே.
செய்ய. நாள்மலர்க் கிழவனை
நோக்கி. நீ செய்தி;
நையல்!” என்று இனிது உரைத்தனன்.
நவை அறு முனிவன்.–140 / 5-14

மலர்க்கிழவன் – நான்முகன்; நவையறு முனிவன் – வசிட்டன்.

பிரமனை நோக்கி நீ தவம் செய்தால் உனது முன்னோர்
நற்கதியடைய வேண்டும் என்ற உனது எண்ணம் ஈடேறும் என்று
வசிட்டன் பகீரதனிடம் உரைத்தான் என்பது. 5

——

‘ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி.
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி.
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப.
மூல நான்மறைக் கிழவனும் வந்து. இவை மொழிவான்:–141 / 5-15

சுமந்திரன் – நல்ல ஆலோசனையுடையவன் என்பது பொருள்.

வசிட்டனது மொழிப்படி இமயமலைச் சாரலில் பதினாயிரம் ஆண்டு
பகீரதன் கடும் தவம் செய்தான்; அத் தவத்திற்கு மகிழ்ந்த பிரமனும்
அம் மன்னன்முன் தோன்றினான் என்பது.

———

‘ “நின் பெருந் தவம் வியந்தனம்;
நினது நீள் குரவர்.
முன்பு இறந்தனர். அருந் தவன்
முனிவின்; ஆதலினால்.
மன் பெரும் புவிஅதனில்.
வான் நதி கடிது அணுகி.
என்பு தோயுமேல். இருங் கதி
பெறுவர்” என்று இசைத்தான்.–142-/ 5-16

கதி – இறந்தபின் அடையும் பதவி; வான் நதி – ஆகாய கங்கை.

‘சாம்பரான சகரர் நற்கதியடைய வானகங்கை மண்ணுலகம் வந்து
அவ்வெலும்புகள் மேல் படிய வேண்டும் என்று பிரமன் பகீரதனிடம் கூறினான் என்பது.

———-

‘ “மாக மா நதி புவியிடை நடக்கின்.
மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு
அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி. நீ
அருந் தவம் தொடங்கு” என்று
ஏகினான். உலகு அனைத்தும் எவ்
உயிர்களும் ஈன்றான்.–143-/ 5-17

வேறு- (வேற்றோர்) – பண்பாகு பெயர்; கண்ணுதல் –
அன்மொழித்தொகை; தோகை பாகன் – சிவன்.

ஆகாய கங்கையைத் தாங்கும் வல்லமை பூமிக்கு இல்லை;
அவ்வல்லமை சிவனிடமே உள்ளது; அவனை நோக்கித் தவம்
செய்யுமாறு பகீரதனிடம் நான்முகன் கூறினான் என்பது.

————-

‘மங்கை பாகனை நோக்கி. முன்
மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும்.
தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து.”நின் கருத்தினை
முடித்தும்” என்று அகன்றான்;
கங்கையைத் தொழ. காலம்
ஐயாயிரம் கழித்தான்.–144 / 5-18

மங்கை பாகன் – சிவன்; தழல் நிறக் கடவுள் – சிவன்.

பகீரதன் சிவன் அருளை வேண்டிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம்
செய்தான்; சிவனும் அரசனின் கருத்துக்கு இசைந்தான்; பின்னர்க்
கங்கையை நோக்கி ஐயாயிரம் ஆண்டுகள் தவம் கிடந்தான் பகீரதன் என்பது.

——

‘ஒரு மடக் கொடி ஆகி வந்து.
“உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின். அவள்
வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்;
மற்று இன்றும் நீ அறிந்து.
பெருகு நல் தவம் புரிக!” என.
வர நதி பெயர்ந்தாள்.–145 / 5-19

அரன் – ஊழிக் காலத்தில் எல்லா உயிர்களையும் அழிப்பவன்;
எப்பொழுதும் தன்னைச் சரண் புகுந்தவர்களின் துயரை அழிப்பவன்;
வரநதி – சிறந்த நதியான கங்கா தேவி.

பகீரதனது வழிபாட்டை ஏற்றுக் கொண்ட கங்காதேவி இந்தக்
கங்கை மண்ணுலகம் வந்தால் அதன் வேகத்தைச் சிவனால் தாங்க
முடியுமா என்பதை அறியுமாறு கேட்டாள் என்பது.

— —–

கரந்தை. மத்தமோடு. எருக்குஅலர்.
கூவிளை. கடுக்கை.
நிரந்த பொற் சடை நின்மலக்
கொழுந்தினை நினையா.
அரந்தை உற்றவன். இரண்டரை
ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர.
வரை உறை புனிதன்.–146 / 5 -20

கரந்தை – ஒரு பூண்டு; கூவிளை – (இலை) – முதலாகு பெயர்
(வில்வம்); மத்தம் – உன்மத்தம். ஊமத்தம்: முதற்குறை: வரைமகள்
புனிதன்- பார்வதி கொழுநனான சிவன். கரந்தை. ஊமத்தம். எருக்கு.
வில்வம். கொன்றை ஆகியன சிவனுக்கு உரியவை.

கங்காதேவியின் மொழியைக் கேட்டுப் பகீரதன் மீண்டும் சிவனை
நோக்கிக் தவம் புரிந்தான் என்பதும் சிவன் அவன்முன் தோன்றிக்
காட்சி தந்தான் என்பதும் இதிற் சொல்லப்பெறுகின்றன.

———

‘எதிர்ந்து. “நின் நினைவு என்?” என.
இறைஞ்சி. “எம் பெரும!
அதிர்ந்து. கங்கை ஈது அறைந்தனள்”
என்றலும். “அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்”
என்று ஏகிய பின்றை.
முதிர்ந்த மா தவம் இரண்டரை
ஆயிரம் முடித்தான்.–147 / 5-21-

பிதிர்ந்திடாவகை- கங்கை நீர் சிந்தாதபடி; முதிர்ந்த மாதவம் –
சிறந்த பெருந்தவம்.

பகீரதன் முன் எழுந்தருளிய சிவன் கங்கையைத் தாங்குவதாகப்
பகீரதனுக்கு உறுதி தந்தான் என்பதும். மீண்டும் அவ் வரசன்
கங்கையை நோக்கித் தவமிருந்து தனது கருத்தை நிறைவு செய்தான் என்பதும்
இதிற் சொல்லப்பெறுகின்றன.

——–

‘பெருகும் நீரொடு. பூதியும்.
வாயுவும். பிறங்கு
சருகும். வெங் கதிர் ஒளியையும்.
துய்த்து. மற்று எதையும்
பருகல் இன்றியே. முப்பதி
னாயிரம் பருவம்.
உருகு காதலின் மன்னவன்
அருந் தவம் உழந்தான்.–148 / 5-22

பகீரதனின் தவச் சிறப்பு. சொல்லப்பெறுகிறது. அவன் பிரமனைக்
குறித்துப் பதினாயிரமும். கங்கையைக் குறித்து. ஏழாயிரத்தைந்நூறும்.
சிவனை நோக்கிப் பன்னீராயிரத்து ஐந்நூறும் ஆக முப்பதாயிரம்
ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான் என்பது.

அவன் சருகு. சாம்பல். நீர். காற்று. வெயில் ஆகியவற்றையே
உண்டும். இறுதியில் அவ் வெயிலையும் நுகராமலும் தவம் செய்தான் என்றார்.

———

‘உந்தி அம்புயத்து உதித்தவன்
உறைதரும் உலகும்.
இந்திராதியர் உலகமும்.
நடுக்குற இரைத்து.
வந்து தோன்றினள் வர நதி;
மலைமகள் கொழுநன்
சிந்திடாது. ஒரு சடையினில்
கரந்தனன் சேர.–149 / 5-23

அம்புயம்- நீரில் பிறப்பது; உந்தி அம்புயத்து உதித்தவன் –
பிரமன்.

கங்கா நதி சத்திய லோகமும். சொர்க்கலோகமும் நடுங்கும்படி
ஆரவாரித்துக்கொண்டு மண்ணுலகிற்கு வந்தது; அதனைச் சிவன்
தனது சடையில் சிறிதும் சிதறாமல் தாங்கினான் என்பது.

———-

புல் நுனித் தரு பனி என.
வர நதி. புனிதன்
சென்னியில் கரந்து ஒளித்தலும்.
வணங்கினன். திகைத்து.
மன்னன் நிற்றலும். “வருந்தல்; நம்
சடையள். வான் நதி இன்று”
என்ன விட்டனன். ஒரு சிறிது;
அவனி போந்து இழிந்தாள்.–150 / 5 -24

போந்து- புகுந்து – மருஉ மொழி; புல் நுனி தரு பனி என –
கங்கைக்கு உவமை.

கங்கை சிவனது சடையில் மறைந்துவிட்டதைப் பகீரதன் கண்டு
திகைத்தான். அச்சிவன் அவன் கலக்கத்தைப் போக்கிக் கங்கையில்
சிறிதுவிட அது பூமியில் பெருகியது என்பது.

——

இழிந்த கங்கைமுன். மன்னவன்
விரைவொடும் ஏக.
கழிந்த மன்னவர் கதி பெற
முடுகிய கதியால்.
அழுந்தும் மா தவச் சன்னுவின்
வேள்வியை அழிப்ப.
கொழுந்து விட்டு எரி வெகுளியன்.
குடங்கையில் கொள்ளா.–151 / 5 -25

பூவுலகில் இறங்கிய கங்கையின் பின்னே பகீரதன் விரைந்து
வந்தான்; அக் கங்கையின் வேகத்தால் சன்னு முனிவனின் தவம்
கலைந்தது; வெகுண்ட அம் முனி அந் நீரை உள்ளங் கையில்
மொண்டு கொண்டான் என்பது.

சன்னு முனிவன் பருகிக் காதுவழி வெளியிட்டதால் கங்கைக்குச் சானவி’ என்னும் பெயர் உண்டு

————

உண்டு உவந்தனன். மறை முனிக்
கணங்கள் கண்டு உவப்ப.
கண்ட வேந்தனும் வணங்கி. முன்
நிகழ்ந்தன கழற.
“கொண்டு போக!” என. செவிவழிக்
கொடுத்தனன்; குதித்து.
விண்டு நீங்கினர் உடல் உகு
பொடியில் மேவினளே.–152-/ 5 -26

சன்னு முனிவன் அக் கங்கை நீரைப் பருகினான். பகீரதனும்
அம்முனிவனை வணங்கிச் செய்திகளைச் சொல்ல இரங்கிய
முனிவனும் காது வழியாக அந்த நீரை விட்டான் என்பது.
மறைமுனிக் கணங்கள்- வேதங்களைத் தாம் ஓதுதலும். பிறர்க்கு
ஓதுவித்தலும். அவற்றின் விதிப்படி ஒழுகுதலையுமுடைய முனிவர்

——–

நிரையம் உற்று உழல் சகரர்கள்
நெடுங் கதி செல்ல.
விரை மலர் பொழிந்து ஆர்த்தன.
விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம்
முறை முறை முழங்க.
அரைசன் அப்பொழுது. அணி மதில்
அயோத்தி மீண்டு அடைந்தான்.–153 / 5-27

முறை முறை – அடுக்கு மிகுதிப் பொருள் பற்றியது.

நரகத்திற் புகுந்த சகரர் நற்கதி உற்றனர்; விண்ணவர் மகிழ்ந்து
மலர் சொரிந்தனர்; பல்லியங்கள் ஆர்த்தன; பகீரதனும் அயோத்தி அடைந்தான் என்பது.

——-

‘அண்ட கோளகைப் புறத்தது ஆய்.
அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடிப்
பிறந்து. பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய். பகிரதன்
தவத்தினால் கொணர.
மண்தலத்து வந்து அடைந்தது.
இம் மா நதி. மைந்த!–154 / 5-28

திருமால் உலகம் அளந்த காலத்தில் அப்பரமன் திருவடி
சத்தியலோகம் செல்லப் பிரமன் தன் கைக் கமண்டல நீர் கொண்டு
அத்திருவடியைக் கழுவினான். அந்தப் புனித நீரே கங்கையாகியது
என்பது அக் கங்கையைப் பகீரதன் தவத்தால் பூவுலகு கொணர்ந்தான்
என்றான் விசுவாமித்திரன்.

——–

‘சகரர்தம்பொருட்டு அருந் தவம்
பெரும் பகல் தள்ளி.
பகிரதன் கொணர்ந்திடுதலால்.
“பகிரதி” ஆகி.
மகிதலத்திடைச் சன்னுவின்
செவி வழி வரலால்.
நிகர் இல். “சானவி” எனப் பெயர்
படைத்தது. இந் நீத்தம்.–155 / 5 -29

பகல் – (நாள்) – ஆகு பெயர்.

கங்கை நதி பகீரதன் கொண்டு வந்ததால் ‘பாசீரதி’ என்னும்
பெயரைப் பெற்றது; பூவுலகிலே சன்னுவின் காது வழியாக
வெளிப்பட்டதால் ‘சானவி’ என்னும் பெயரை அடைந்தது என்பது

——–

என்று கூறலும். வியப்பினோடு
உவந்தனர். இறைஞ்சி.
சென்று தீர்ந்தனர் கங்கையை;
விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து.
அடி இணை குறுக.
நின்று. நல் உரை விளம்பி.
மற்று அவ் வயின் நீங்கா.–156 / 5-30

விசாலை – இட்சுவாகு – அலம்புசை மகனான விசாலன்
ஏற்படுத்தியது.

விசுவாமித்திரன் கங்கையின் வரலாற்றைக் கூறியபின். மூவரும்
கங்கையைக் கடந்து விசாலையை அடைந்தார் என்பது.

————-

மது மலைந்த வெண் தரளமும்.
(வயிரமும்). மணியும்.
கதிர் வளம் செயும் பவளமும்.
கழுத்திடைக் காட்டி.
எதிர் மலைந்த பைங் கூந்தலை
இன வண்டு (நணுக).
புது மணம் செயும் மடந்தையர்
போன்றன – பூகம்.–157 / 7-1

முத்தும். வயிரமும். மணியும் கழுத்தை அலங்கரிக்க. மது நிறைந்த
கூந்தலில் வண்டுகள் மொய்க்கப் புது மணத்தை எங்கும் பரப்பும்.
மடந்தையரைப் போன்றன கமுகுகள்.

———-

அந்த இந்திரனைக் கண்ட
அமரர்கள். பிரமன் முன்னா
வந்து. கோதமனை வேண்ட.
மற்று அவை தவிர்த்து. மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து.
சிறந்த ஆயிரம் கண் ஆக்க.
தம் தமது உலகு புக்கார்;
தையலும் கிடந்தாள். கல் ஆய்.–158 / 23 -1

இந்திரனுக்கு நேர்ந்த சாபத்தைப் போக்குமாறு தேவர்கள்
கௌதமனை வேண்டினர்; அக் கௌதம முனிவனும் ஆயிரம்
கண்களாகுமாறு அருளிச் சென்றான்; அகலிகை கல்லாய்க் கிடந்தாள் என்பது.

——–

‘வண்ண வார் குழலினாட்கும்
வானவர்தமக்கும் ஆகேன்;
எண்ணி நான் செய்த குற்றம்.
முனிவ! நீ பொறுத்தி’ என்ன.
‘பண்ணிய உறுப்பில் கோடல்
பத்து நூறு அவையும் போக.
அண்ணிய விண்ணில் ஆளிக்கு
ஆயிர நயனம்’ என்றான்.–159 -23 -2

இந்திரன் அகலிகையைச் சேர விருப்பமுடையவனாயினும்
பெருந்தவமுடைய கௌதமன் முன் தோற்றான்; தன்
தவற்றையுணர்ந்த. இந்திரனும் முனிவனிடம் மன்னிப்புக் கோரினான்;
ஆயிரம் கண்கள் பெற்றான்.

————

10 மிதிலைக் காட்சிப் படலம்

இன்ன பல் வளங்கள் எல்லாம்
இனிதுற நோக்கி. யார்க்கும்
முன்னவன் ஆய தேவும்.
முனிவனும். இளைய கோவும்.
பொன்னகர் இறையும் மற்றைப்
பூதலத்து அரசும் ஒவ்வா
மன்னவன் சனகன் கோயில்
மணி மதில் புறத்தைச் சேர்ந்தார்.–160-/ 20 -1

முன்னவன் ஆய தேவு – இராமன்; கோயில் – அரண்மனை.

வழியிலே மூவரும் பல காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
இராமனும். இலக்குவனும். விசுவாமித்திரனும் சிறந்த மன்னவனாகிய
சனகனின் அரண்மனையின் மதில்புறம் சேர்ந்தார்கள்.

——–

நங்கையர் விழிக்கு நல் விழவும் ஆய். அவர்
இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவும் ஆய்.
அங்கு அவர்க்கு அமுதும் ஆய். வந்த சானகி
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்கொலோ?–161 / 32 -1

சீதை பெண்களின் கண்களுக்குச் சிறந்த காட்சிப் பொருளாக.
அவர்கள் தொழுது வணங்கும் தெய்வமாக. அவர்களுக்கு அமுதமாக
ஆயவள் எங்கள் நாயகனான இராமனுக்கு இனி எவ்வகை அமைவாளோ என்பது.

——-

தீங்கு செய் அரக்கர்தம் வருக்கம் தீயவும்.
ஓங்கிய தவங்களும். உலகும். வேதமும்
தாங்கி மேல் வளரவும். தழைத்த சானகி
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள்.–162 / 52 -1

அரக்கரை அழிக்கவும். உயர் தவங்களும். உலகும். வேதமும்
மேன்மேல் வளரவும் தோன்றிய சீதை இராமனது திருமேனியைத் தன்
உள்ளத்தில் எண்ணினாள் என்பது. அரக்கரை அழிக்கவே சீதை பிறந்தாள்.

——-

அப் புறத்து அலை கடல் அர்ந்த தாமரை
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல்
வெப்புறு வெங் கதிர் பரப்ப. விண் எலாம்
கொப்புளங் கொண்டென. உடுக்கண் கூர்ந்தவே.–163 / 76-1

கடலிடத்து மலர்ந்த தாமரை போலத் தோன்றிய சந்திரனாகிய
நெருப்பு வெம்மைக் கதிர்களைப் பரப்பியது; வானம் எங்கும்
கொப்புளங்கள் ஏற்பட்டன போல விண்மீன்கள் பரவின என்றார்.

——–

நின்றனன் அரசன் என்றான்;
நீ எனைக் கொண்டு போகை
நன்று என மொழிந்து நின்றான்.
நல்கிய தாயை நோக்கி.
‘இன்று எனைக் கொடுத்தியோ?’ என்று
இறைஞ்சினன் கசிந்து நின்றான்;
தன் துணை மார்பில் சேர்த்துத்
தழுவலும். அவனை நோக்கி.–164 / 121-1-

நடுக் குமரனான சுனச்சேபன் தன்னைப் பலியிடக் கொண்டு
போகுமாறு மன்னனிடம் சொன்னான்; தன்னைப் பெற்ற தாயை
நொந்து கொண்டான்; வருந்திய தாயும் அவனைத் தழுவி உருகினாள்

————–

என்று கூறி. இமையவர் தங்கள்முன்
வன் தபோத வசிட்டன் வந்து. என்னையே
“நின்ற அந்தணனே” என நேர்ந்தவன்
வென்றி வெந் திறல் தேவர் வியப்புற.–165-135-1

தபோத வதிட்டன் – தவ வலிமை மிக்க வசிட்டன்.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற வசிட்டன் அவர்கள் முன்
விசுவாமித்திரனை நோக்கித் தவ முனிவரே! அந்தணரே என்று
தேவர்களும் வியப்புற அழைத்து வாழ்த்தினான் என்பது.

———-

காதலால் ஒருத்தியை நினைப்ப. கண் துயில்
மாதராள் அவன்திறம் மறுப்ப. கங்குல் மான்.
‘ஏதிலான் தமியன்’ என்று. ‘ஏகலேன்’ என.
ஆதலால் இருந்தனன்; அளியன் என் செய்வான்?–166-143-1

அன்பினால் அவளைத் தழுவக் கருதினான்;தூங்குகின்ற அவளோ
அவனது எண்ணத்தை மறுத்தாள்; இரவோ இவன் அயலான்.
தனித்துள்ளான். நான் அகலமாட்டேன் என்று கூறத் தலைவனும் காம
வேதனையோடு இருந்தான். அதைத் தவிர அவன் வேறு என்னதான்
செய்வான்! என்பது.

————

11 குலுமுறை கிளத்து படலம்

அந்தரத்தில் உருள்சேர.
அடு சனி வந்து உறும் அளவில்.
சிந்தை மகிழ் தசரதனும் சென்று அவன்மேல்
சரங்கள் தொடுத்து.
‘இந்த வழி போகு அரிது’ என்று
இயைந்தவனை எந்நாளும்
உந்தும் என உலகுதனக்கு
உறுதுயர் தீர்த்திடும் உரவோன்.–167-15-1

தசரதன் சனியை அம்புகளால் வதைத்து மக்களின் துயர் துடைப்பவன் என்பது.

——–

‘கோதமன் தன் மனைக்கிழத்திக்கு
உரைத்த கொடுஞ் சாபம் எனும்
ஓத அருங் கல் உருத் தவிர்த்து.
முன்னை உருக் கொடுத்தது இவன்
பாதமிசைத் துவண்டு எழுந்த
பசும் பொடி மற்று அது கண்டாய்;
ஈது இவன்தன் அருள் வடிவம்
வரலாறும்’ என உரைத்தான்.–166

‘கோதமன் தன் மனைவியான அகலிகையைக் கல்லாகச் சபித்தான்;
அக் கல்லுருவத்தை நீக்கி அவளது முன்னை உருவைத் தந்தவன்
இந்த இராமன்; அவனது பாத தூளிப்பட்டுச் சிதைந்து பொடியாகிக்
கிடப்பது அக்கல்; இது அவனது அருள் புலப்படுத்தும் வரலாறு’
என்று விசுவாமித்திரன் உரைத்தான் என்பது. அகலிகையின் சாபத்தை
நீக்கிப் பெண்ணுருத் தந்தவன் இராமன்.

————-

12 கார்முகப் படலம்

புக்கனர்; சனகர் கோன்.
‘பொரு இல் நீங்கள்தாம்
ஒக்கவே வில்லினை
உரத்து அடுத்து எடுத்து.
இக் கணத்து எய்துவீர்’
என்றனன்; என.
மிக்கவர் அவ் உரை
விளம்பினார் அரோ.–169 / 2-1

சனகன் இராம லக்குவரை நோக்கி. ‘நீங்கள் இவ்வில்லை எடுத்து
நாணேற்றி அம்பு எய்யுங்கள் என்று கூறினன் என்பது.

———-

புக்கனர். அவர்களைப் பொருந்த நோக்கி. ‘இம்
முக்கணன் வில்லினை மொய்ம்பின் ஆற்றலோடு
இக் கணத்து அளித்திர் என்று. எம்மை ஆளுடை.
மிக்குறு சனகனும் விளம்பினான்’ என்றார்.–170 / 2-2

உள்ளே புகுந்த இராமலக்குவரைப் பார்த்து ‘இச் சிவ தனுசை
உங்கள் ஆற்றலால் வளைத்திட வேண்டும். இது இந்நாட்டு மன்னன்
வேண்டுவது’ என்று சதானந்தன் உரைத்தான் என்பது.

———

என்று சாலவே வெதும்பி
இன்ன இன்னவாறெலாம்
ஒன்றலாது பன்னி ஆவி
ஊசலாட வாடுவாள்
மன்றல் நாறு மாலை மீளி
மான யானை போல முன்
சென்ற வீதியூடு பார்வை
செல்லநிற்கும் எல்லையே.–171 / 54-1

சீதை இவ்வாறு இராமனை நினைந்து பலவாறு சொல்லித் தன்
உயிர் ஊசலாட வருந்துவாள்; சிறந்த வீரனைப் போலவும் யானை
போலவும் வீதியிலே சென்ற வீரனைக் காணத் துடிக்கிறாள்
என்பது.

———–

என்று மாதராள் நினைந்து. இவ்
இடரின் மூழ்கு போதினில்.
குன்றுபோல் எழுந்த கொங்கை
மங்கை கொம்பை அன்னவள்.
வென்றி வீரன் இங்கு வந்து
வில் இறுத்த மேன்மையை
சென்று கூறுவோம்’ எனத்
தெளிந்து சிந்தை முந்துவாள்.–172-/ 55-1

சீதை அவ்வீரனை (இராமனை) நினைந்து வருந்துகையில் இராமன்
வில் இறுத்த செய்தியைக் கூறுவதற்காகத் தோழி விரைந்து
செல்கின்றாள் என்பது. 55-

———

13 எழுச்சிப் படலம்

‘ஓது நீதியின் கோசிக
மா முனி ஓலை
தாது சேர் தொடைத் தயரதன்
காண்க! தற் பிரிந்து
போது கானிடைத் தாடகை
பொருப்பு எனப் புகுந்து.
வாது செய்து நின்று. இராகவன்
வாளியால் மாண்டாள்.–173 /3-1

கோசிக முனிவன் தசரதனுக்குத் தூதுவர் மூலம் ஓலை
போக்குகிறான்; காட்டில் தாடகை என்னும் அரக்கி மலையென வந்து
போர் செய்து இராமனது அம்பினால் மடிந்தாள் என்பது.

———–

‘சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென்;
அதுதனைச் சிதைக்க.
இறந்த தாடகை புதல்வர் ஆம்
இருவர் வந்து எதிர்த்தார்;
அறம் கொள் மாலவன்
வாளியால் ஒருவன் தன் ஆவி
குறைந்து போயினன்; ஒருவன் போய்க்
குரை கடல் குளித்தான்.–174 /3-2

விசுவாமித்திரன் அமைத்த வேள்வியைச் சிதைக்க இறந்து போன
தாடகையின் மைந்தர் இருவர் வர. அவர்களுள் ஒருவன் இராமனது
கணையால் மடிய. மற்றவன் கடலில் சென்று ஒளிந்து கொண்டான்
என்பது. 3-

————

கூட மேவு போர் அரக்கரை
இளையவன் கொன்று.
நீடு வேள்வியும் குறை படாவகை
நின்று நிரப்பி.
பாடல் மா மறைக் கோதமன்
பன்னி சாபத்தை.
ஆடல் மா மலர்ச்சோலையில்.
இராகவன் அகற்றி.–175 / 3-3

எதிர்த்த அரக்கரை இலக்குவன் கொல்ல. வேள்வியும் இனிதாக
முற்றியது; கௌதமன் மனைவி அகலிகைக்கு நேர்ந்த சாபத்தை
இராமன் போக்கினான் என்பது.

————-

பொரு இல் மா மதில் மிதிலையில்
புகுந்து. போர் இராமன்
மருவு வார் சிலை முறித்தலின்.
சனகன் தன் மகளை.
“தருவென் யான்” என இசைந்தனன்;
தான் இங்கு விரைவின்
வருக’ என்பதாம் வாசகம்
கேட்டு. உளம் மகிழ்ந்தான்.–176 /3-4

பின்னர் மூவரும் மிதிலை சேர்தல்;அங்கே இராமன் சிவ தனுசை
முறித்தது; மகிழ்ந்த சனகன் தன் மகளான சீதையை இராமனுக்கு
மணமுடிக்க இசைந்தது; தசரதனை விரைந்து வருமாறு வேண்டியது
ஆகிய செய்திகளைக் கூறுவது இப் பாடல்.

————–

பன்னும் நான்மறை வசிட்டனாம்
பராவ அரு முனிக்கும்.
அன்னைமார்க்கும். தன் அமைச்சர்க்கும்.
சோபனம் அறிவித்து.
இன்ன வாசக ஓலை அங்கு
இட்ட தூதர்க்குச்
சொன்னம் ஆயிரம் கோடியும்
தூசுடன் கொடுத்தான்.–177 / 3-5-

சொன்னம் – பொன்; தூசு – ஆடை.

நான்மறை வசிட்டன். அரசியர் அமைச்சர் ஆகியோர்க்குத்
தசரதன் மங்கலச் செய்தி தெரிவித்தது;ஓலை தாங்கி வந்த தூதர்க்குப்
பொன்னும். பட்டாடையும் தந்தது – இச்செய்திகளை இப்பாடல்
எடுத்துரைக்கிறது.

————

மாண்ட பின்னரும் மந்திர வேள்வியும் இயற்றித்
தூண்டு அரும் பெரும்……… ……………… ……………….
……………. …………. ……………. ………….. ………………
……………. ………….. சனகனும் மகட்கொடை நேர்ந்தான்.–178/3-6

விசுவாமித்திரன் வேள்வியை நிறைவு செய்ததும். தசரதன் இராமன் –
சீதை மணத்தை ஏற்றுக் கொண்டதும் இப்பாடலால்
கூறப்பெறுகின்றன.

——-

மன்னன் அங்கு அவர் பெருமகம்
காணிய வருவான்
அன்ன வசிட்டன் அந்தணர்
அரசர் ஆபாலர்
இன்னர் இன்றியே வருக என
எழுதினன்; இச் சொல்
சொன்ன வாசகம் சொல்தொறும்
அமுது எனச் சொரிந்த.–179 /3-7

தசரதன் அவர்களின் திருமணத்தின் பொருட்டு வசிட்டன்.
அந்தணர். அரசர் ஆகியோரை உடனே புறப்படுமாறு ஓலை விடுத்த
செய்தி இதில் கூறப்படுகிறது. 3-7

——–

சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன்.
கோல் தொடி மகளிரும். கோல மைந்தரும்.
வேல் தரு குமரரும். வென்றி வேந்தரும்.
காற்று எறி கடல் எனக் களிப்பின் ஓங்கினார்.–180 / 8-1

மண முரசு முழங்கியது;கேட்ட மகளிர் ஆடவர். வேல் தாங்கிய
வீரர். அரசர் ஆகியோர் காற்றினால் பொங்கும் கடலென மகிழ்ந்தனர்
என்னும் செய்திகள் இதிற் சொல்லப் பெறுகின்றன.

———-

எதிர் கொண்டு ஏந்தி ஓர் ஏந்திழை கொங்கை பூண்
அதிர. மார்பம் அழுந்தத் தழுவினான்.
‘முதிரும் தோள் மலையோ முலைக் குன்றமோ
அதிகம் என்பது அறிக வந்தேன்’ என்றான்.–181 / 37-1

சேனைகள் மிதிலை செல்லும் காட்சி- வீரன் ஒருவன் தன்
மனைவியை மார்போடு தழுவிய செய்தி இப் பாடலால்
கூறப்பெறுகிறது.

———-

18 உண்டாட்டுப் படலம்–182 / 66-1

அரம்பையரினும். இவர் ஆடல் நன்று எனப்
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி. வான்
நிரம்பிய கண்களை முகிழ்ந்து. நீள் நகர்
கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே.

புரந்தரன் – இந்திரன்; உடு – தாரகைகள்; கரத்தல் – ஒளித்தல்.

——–

22 கடிமணப் படலம்

எரி கால் சுடர் ஏக. எழுந்த நிலா
வரும் ஈரமும். மா மயில் சானகிதன்
திருமேனியின்மீது சினந்து சுட.
தரியாது. உளம் நொந்து. தனித்து உறைவாள்.–183 / 2-1-

தரியாது – பொறாது.

——–

என்று. ஐயன் மனத்தொடும் எண்ணினன்; மற்று
அன்று அங்கு அவை நிற்க. அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம்.–184 / 18-1

துன்றும் – பொருந்தும் இது கவிக்கூற்று.

———–

கதிரவன் எழலோடும். கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல்போலும். மேல் உலகினும் இல்லாப்
புதுமையின் உறு. கோலம் புனைதலை முயல்வுற்றார்.–185 / 21 -1

கடி – காவல்; விதி – பிரமன்; முயல்வுறல் – முயற்சி
தலைப்படுதல்.

————

என்றும். நான்முகன் முதல் யாரும். யாவையும்.
நின்ற பேர் இருளினை நீக்கி. நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே.–186 / 48-1

நாமம் – பெயர். திருமண்; திருமண் இடல் சிறப்பு
உரைத்தவாறு.

———

23 பரசுராமப் படலம்

கயிலைக் கிரிதனை மூடிய அன்றிற்கிரி கந்தன்
அயிலைப் புக விடர்விட்டதுபோல் ஏழ் வழியாகச்
சயிலத் துளைபட எய்தனை. அயில் தெற்றிய அதனால்
முயலுற்றவர் நிருபக்குலம் மூ-ஏழ் முறை முடித்தான்.–187 / 14-1

அன்றில் கிரி- கிரௌஞ்சம்; அயில் – வேல்; சயிலம் – சைலம் –
சிலா – கல் – மலை; நிருபக்குலம் – மன்னர் மரபு.

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading