ஸ்ரீ திருமாலிருஞ்சோலை —

ஸ்ரீ அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும்.
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால்
மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.

இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது.
கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார்.
உற்சவ மூர்த்தி ஸ்ரீஅழகர், அல்லது ஸ்ரீ சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்

பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.

மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள ஸ்ரீ சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன.
இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.
ஸ்ரீ கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது.
திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம்,
இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.

ஸ்ரீ கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.
சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.

அழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஆறாவதான பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது.
பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்த ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது.
புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது,
ஸ்ரீ கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என
விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.
ஸ்ரீ அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது.
இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் ஸ்ரீ அழகர் இருக்கிறார்.
வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று ஸ்ரீ அழகர் மலை திரும்புகிறார்.
திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று
மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், ஸ்ரீ கள்ளழகரை மதுரை
வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.

சித்திரைத் திருவிழாவின் போது ஸ்ரீ கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர் சேவை என்று கொண்டாடப்படுகிறது.
முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கள்ளழகருக்கு செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர்கள் தொன்று தொட்டு சீர்பாத சேவை செய்து வருகின்றனர்.

தேரோட்டம்
ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.

தலவரலாறு
சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட
துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர்
சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார்.
சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார்.
முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே ஸ்ரீ சுந்தரபாஹூ என்று வடமொழியிலும்
ஸ்ரீ அழகர், ஸ்ரீ மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.

சிலப்பதிகாரத்தில்
அவ்வழி படரீர் ஆயின்,இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால்
வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து
செல்குவிர் ஆயின் பெருமால் கெடுக்கும் பிலமுண்டு. என சிலப்பதிகாரத்தில்
இளங்கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

மேலும் விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம்,பவகாரணி யோடு இட்ட சித்தி எனும் பெயர்
போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார் .
ஆனால் நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை.
இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே ஆழகர் கோவில் அமைக்கப்பட்டது என தெரியவருகிறது.
ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ ஜ்வலா நரசிம்மர்
ஸ்ரீ ஜ்வால நரசிம்மர், ஸ்ரீ அழகர் கோவில்
கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ ஜ்வலா யோக நரசிம்மர் பிரசித்த பெற்றதாகும்.
இவர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தை தனிப்பதற்காக தினமும்
நூபுர கங்கை நீர், தயிர், வெண்நெய், தேன் முதலியவைகளால் திருமஞ்சனம் நடைபெறுகிறது .
ஸ்ரீ யோக நரசிம்மரின் கோபத்தை தனித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக
அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது.
மற்ற விஷ்ணு கோயிலில் நரசிம்மர் முலவரின் இடது ஓரத்தில் இருப்பார்.
இங்கு நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் உள்ளார்

தலத் தகவல்
மூலவர் – ஸ்ரீ அழகர் அல்லது அழகியத்தோளுடையான் (தமிழில்), ஸ்ரீ சுந்தரபாஹூ (வடமொழியில்)
தாயார் – ஸ்ரீ சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
காட்சி – சுதபமுனி, தர்மதேவன், மலையத்வஜ பாண்டியன்
திசை – கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் – ஸ்ரீ நூபுர கங்கை எனும் சிலம்பாறு
விமானம்- ஸ்ரீ சோமசுந்தர விமானம்
உற்சவர் – ஸ்ரீ கள்ளழகர்

மூலவர் சிறப்பு
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தரராஜபெருமாளுக்கு நடத்தப்படும் தைலப்பிரதிஷ்டை
மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாதக் காலத்துக்கு நடைபெறும்.
இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

நைவேத்தியம்
அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது.
அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.

பாடல்கள்
பெரியாழ்வார் – 24 பாடல்கள்
ஆண்டாள் – 11 பாடல்கள்
பேயாழ்வார் – 1 பாடல்
திருமங்கையாழ்வார் – 33 பாடல்கள்
பூதத்தாழ்வார் – 3 பாடல்கள்
நம்மாழ்வார் – 36 பாடல்கள்
ஆக மொத்தம் 108 பாடல்கள்

பரிபாடலில்
இக்காலத்தில் இம் மலையடி திருமாலை கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்த பரிபாடல் அடிகள்

கள்ளணி பசுந்துளவினவை– கருந்துளசி மாலை அணிந்தவன்
கருங்குன்று அனையவை — கருங்குன்றம் போன்றவன்
ஒள்ளொளியவை — ஒளிக்கு ஒளியானவன்
ஒரு குழையவை — ஒரு காதில் குழை அணிந்தவன்
புள்ளணி பொலங்கொடியவை– பொலிவுறும் கருடக்கொடி உடையவன்
வள்ளணி வளைநாஞ்சிலவை– மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்
சலம்புரி தண்டு ஏந்தினவை– சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்
வலம்புரி வய நேமியவை– சங்கும், சக்கரமும் கொண்டவன்
வரிசிலை வய அம்பினவை– வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்
புகர் இணர் சூழ் வட்டத்தவை– புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்
புகர் வாளவை — புள்ளி போட்ட வாள் ஏந்தியவன்

எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு ஸ்ரீ கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்
சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.
அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது.
பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும்
என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.

மூலவருக்கு அடுத்தபடியாக அதி முக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான்.
‘அபரஞ்சி’ என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர்.
‘அபரஞ்சி’ என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள்.
உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன.
ஒன்று – அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.

ஆகமத்தின்படி, திருமேனிகள் மூவகை. ஒன்று, கற்சிலைகள், அதாவது `சிலா பேரம்’ எனப்படும்.
பால், வெண்ணெய் உள்ளிட்டவற்றால் திருமஞ்சனம் செய்ய உகந்தது.
இரண்டாவது சுதைச் சிற்பம். அதை `சுதாபேரம்’ என்பர்.
இத்தகைய மூர்த்திகளுக்குத் தைலப்பிரதிஷ்டைகள் செய்யப்படுவது, வழக்கம்.
திருமாலிருஞ்சோலை, திருப்புல்லாணி, திருவரங்கம் காஞ்சிபுரம் பாண்டவ தூத பெருமாள் திருமேனி
தலங்களில் இவ்வகைத் திருமேனிகளே உள்ளன.
மூன்றாவது, `வர்ண கலாபம்.’ மூலிகைத் திருமேனி செய்து அதில் இயற்கை வர்ணம் பூசுதல். வடபத்ரசாயி திருமேனி இவ்வகையே!’’
இந்தத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
திருமஞ்சன சேவை உற்சவமூர்த்திகளுக்கே செய்யப்படுகின்றன.

மாறாக இந்த மூல விக்கிரகங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தைலக் காப்பு செய்யப்படும்.
அதிலும் சுந்தரராஜ பெருமாளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே தைலக்காப்பு உற்சவம் நடைபெறும்.
தைலக்காப்பு என்பது சந்தனத் தைலம், அகில், பச்சை கற்பூரம் உள்ளிட்ட எட்டு வாசனைத் திரவியங்கள் சேர்த்து
உருவாக்கப்படும் தைலம். இந்தத் தைலத்தைத் தயாரிக்க 20 நாள்கள் ஆகும்.
இதை மூலவர் திருமேனியில் சாற்றுவதே தைலக்காப்பு எனப்படுகிறது.
ஆண்டுதோறும் தை 2-ம் நாள் தாயாருக்கு கனு திருவிழா விசேஷமாக நடைபெறும்.
அழகர் கோயில் வளாகத்தில் இருந்து நூபுரகங்கைக்குச் செல்லும் மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ள
பெரிய திருக்குளமான `நாராயண வாவி’யில்தான் இந்த விழா நடைபெறும்.
இந்தத் திருக்குளத்தின் தீர்த்தத்தில்தான் கோயிலின் பரிவார தேவதைகளுக்கான அபிஷேகமும் நடைபெறும்.

ஸ்ரீ அழகர் கோயில் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சனத்துக்காக நாள்தோறும் மலைமீது அமைந்துள்ள
ஸ்ரீ நூபுர கங்கையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்படும். சித்திரைப் பெருவிழா நாள்களில் மதுரைக்கு வந்துவிட்டபோதும்
அழகர் ஸ்ரீ நூபுர கங்கை தீர்த்தத்திலேயே திருமஞ்சனம் கொள்வார். மலையின் வேறு தீர்த்தங்களில் திருமஞ்சனம் செய்தால்
ஸ்ரீ அழகர் உருவம் கறுப்பாகிவிடும் என்பது நம்பிக்கை.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் தைலப் பிரதிஷ்டை அல்லது தைலக்காப்பு தை அமாவாசை தொடங்கி
மூன்று நாள்களுக்கு நடைபெறுகின்றது. இந்தத் திருநாள்களில் மூலவர் சுந்தரராஜ பெருமாளின் திருமேனிக்குத் தைலம் சாற்றப்படும்.
இந்தத் தைலக்காப்போடே இறைவன் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு அருள் புரிவார்.

மூலவர்களாய் அமர்ந்து நலம் புரிகின்ற ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், விஸ்வக்சேனர், க்ஷேத்திரபாலகர்கள்,
கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகிய ஆறு விக்கிரகங்களுக்கும் தைலம் சாற்றப்படும்.
இந்தத் தைலக்காப்பு தரிசனம் ஆறு மாதங்கள் அதாவது ஆடி அமாவாசை வரை நீடிக்கும்.
அதுவரை, திருமாலிருஞ்சோலை பெருமாளின் திருமுகத்தையும் திருவடியையும் மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும்.
பற்றிக்கொண்டு சரணாகதி செய்ய வேண்டியது திருவடி. கண்டு இன்புற வேண்டியது இறைவனின் திருமுகம்.
இந்தக் கால கட்டத்தில் பக்தர்கள் மனம் ஒருமித்துத் திருவடி தரிசனம் செய்ய சகல நன்மைகளும் கிட்டும் என்பது ஐதிகம்.

திரு மால் இரும் சோலை மலை யென்னும் இப் பெயரே தனி இனிமை வாய்ந்தது –
அதன் மகிமை நாடு எங்கும் பரவியது -விரும்பும் பயனைத் தர வல்லது –
இதனைச் சொல்வது விரும்பிய பயனுக்கு விதைப்பதாகும் -விளைவை -பயனை -உடனே எதிர்பார்க்கலாம் என்கிறது பரி பாடல் –

சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவில்
சோலை யொடு தொடர் மொழி மாலிரும் குன்றம்
தாம் வீழ் காமம் வித்தி விளைக்கும்
நாமத் தன்மை நன் கனம்படி எழ
யாமத் தன்மையில் வையிரும் குன்றத்து – 15- 22-26 –
அழகு பொருந்திய திரு யென்னும் சொல்லோடும் சோலை யென்னும் சொல்லோடும்
மால் இரும் குன்றம் யென்னும் சொல் தொடர்ந்த மொழி யாகிய திரு மால் இரும் சோலை மலை யென்னும்
நாமத்தினது பெரும் தன்மை நன்றாக பூமியின் கண் பரக்க –
மகளிரும் மைந்தரும் தாம் வீழ் காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தியல்பை உடைய இவ்வையிரும் குன்றத்து எனக் கூட்டுக –
எனபது பரிமேல் அழகர் உரையாகும் .

பயன் கருதாது இப்பெயரை நம் ஆழ்வார் கூறினமையில் வீடு பேறு பெற்றனர் -என்பர் .’
பெயருக்கு உள்ள இத்தகைய பிரசித்தி தோற்ற –மால் இரும் சோலை -யென்னும் பொருப்பு என்று அருளிச் செய்தார் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading