பழைய சங்க நூல்களில் காட்டும் – ஸ்ரீ திரு வேங்கட மலை-

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!–மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)

———

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை! அந்த ஓங்கிய மலை உச்சியிலே…

விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!-ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…

மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, நல் நிற மேகம் நின்றது போல
கோடி = புதுத் துணி
குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;
கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி, தோளிலே வில்லேந்தி–
நல்ல கருப்பான மேகம்00மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல் நிற்கிறான் –

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி

பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!

நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய

அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய அன்றே காட்டும் இளங்கோ
பூலங்கி சேவை எவ்வளவு தொன்மையானது என்று இந்தப் பாடலின் மூலம் தெரிகிறது.

செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

செங் கண், நெடியோன்! திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!

ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம் நிலவு! நடுவிலே கரு மேகமாம்
அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவிலே கருத்த மாயோன்
உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!

————

இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!

பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த,
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம் பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!

வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்/ சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!

——————-

ஈன்று நாள் உலந்த மென்னடை மடப்பிடி,
கன்று பசி களைஇய, பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை–அகநானூறு 85 ஆம் பாடல்

வேங்கட நாட்டை ஆண்ட திரையன், வெற்றி தரும் வேலை உடைய மன்னன்!
அவன் காட்டில், முற்றாத மூங்கிலை/ பிஞ்சு மூங்கிலை, பசிக்கு ஊட்டி மகிழும் யானைகள்.. இதுவே பாடல்!
இப் பாட்டில் முருகனும் இல்லை! வேங்கடத்து இறைவனும் இல்லை!–

—————

வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே.—தொல்காப்பியரின் தொல்காப்பியம்-பனம்பாரனார் இயற்றியது

வடவேங்கடம் தென்குமரி அவ்இடை என்பது = வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரி மலையுமாகிய
அவ் இரண்டனையும் எல்லையாக உடைய நிலத்து வழங்குகின்ற என்றவாறு:

தமிழ் கூறும் நல்லுலகத்து என்பது = தமிழ்மொழியைக் கூறும் நல்லாசிரியரது என்றவாறு:

வழக்கும் செய்யுளும் அ இரு முதலின் என்பது = வழக்கும் செய்யுளும் ஆகிய அவ்இரண்டு இடத்துள்ள என்றவாறு:

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி என்பது = எழுத்தையும் சொல்லையும் பொருளையும் ஆராய்ந்து என்றவாறு:

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு என்பது = செந்தமிழ் இலக்கணம் முற்றும் நிரம்பிய தலைச்சங்கத்து வீற்றிருந்த புலவரொடு பயின்று என்றவாறு:

முந்து நூல் கண்டு என்பது = அகத்தியன் முதலாய முந்து நூல்களை ஐயமும் மருட்கையும் அற அவர்பால் கற்றுணர்ந்து என்றவாறு:

முறைப்பட எண்ணி என்பது = கற்று உணர்ந்தன முந்து நூலின்கண் முறை இன்றி விரவிக் கிடத்தலான் அவை முறையொடு பொருந்தி நிற்குமாறு கருதி என்றவாறு:

புலம் தொகுத்தோன் என்பது = முந்து நூலின்கண் உள்ள அவ்இலக்கணங்களைத் தன் நூலுள்ளே தொகுத்துக் கூறினான் என்றவாறு;

(அவன் யாவனோ எனின்) போக்கு அறு பனுவல் நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து என்பது = குற்றமற்ற நூலாராய்ச்சியினை
உடைய மாற்றாரது நிலத்தைத் தன்னை அடுத்தார்க்கு நல்கும் திருவினை உடைய பாண்டியன் மாகீர்த்தி என்பானது அவையின் கண்ணே என்றவாறு:

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு என்பது = அறமே கூறும் நாவினகத்து நான்மறையும் முற்றப் பயின்ற
அதங்கோடு என்னும் ஊரின் ஆசிரியனுக்கு என்றவாறு:

அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி என்பது = நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் அற விளங்கி ஒன்றனுள்
பிறிதொன்று கலவாத மரபினையுடைய தனதுநூல் முறையைக் காட்டி என்றவாறு:

மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தன்பெயர் தொல்காப்பியன் எனத் தோற்றி என்பது = அந்நூற் பெயரானே கடல் சூழ்ந்த
நில உலகத்தின்கண் ஐந்திர வியாகரண நிறைய உணர்ந்த தன்பெயரைத் தொல்காப்பியன் என்று தோன்றச் செய்து என்றவாறு:

பல்புகழ் நிறுத்த படிமையோன் என்பது = பல் புகழையும் ஆயாமை நிறுத்திய தவ ஒழுக்கத்தை உடையோன் என்றவாறு:
தொகுத்தோனே படிமையோனே என்பவற்று ஏகாரம் அசைநிலை என்பது.

திருவேங்கடத்தினை முதன்முதலில் குறிப்பிடுகின்ற சான்று தொல்காப்பியத்தில் காணப்படும்
பனம்பரனாரின் சிறப்புப்பாயிரச் செய்தியே ஆகும். இப்பாயிரம்,
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து’எனக் குறிப்பிடுகிறது.
இதில் குறிக்கப்படும் வேங்கடம் என்பது வேங்கடமலை என்னும் மலை குறித்த பதிவு மட்டும்தானா? என்ற ஐயம் எழுவது இயல்பானதே ஆகும்.
இத்தகைய ஐயத்திற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று தெளிவான விளக்கம் தருகின்றது.
புறநானூற்றின் 381 வது பாடலில் அரிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

இப்பாடலைப் பாடிய புலவர் கரும்பனூர்கிழான் என்பவனின் கொடைத் தன்மையைக் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய வள்ளலானவன் ஆற்றுத்துறை அம்பி போன்றவன். அதாவது ஆற்றில் செல்லும் ஓடமானது மக்களைக் கரையில் கொண்டு சேர்க்கும்.
இது ‘ஆற்றுத்துறை அம்பி’ என்று குறிக்கப்படும். ஆனால், கரும்பனூரனோ ‘அறத்துறை அம்பி’ எனப்படுவான்.
நாடிச் சென்றோருக்கு வாரி வழங்கும் வள்ளல்தன்மை கொண்டவன் என்பதால் இவன் ‘அறத்துறை அம்பி’ எனப்பட்டான்.
இவன் நாடானது வேங்கட நாட்டின் கரும்பனூர் என்பதாகும் எனக் குறிப்பிடுகின்றார்.
இதன் மூலமாக வேங்கட மலையினைச் சுற்றி வேங்கடநாடு என்னும் பகுதி இருந்தது என்பதும் பெறப்படுகிறது.

இதனை,
“சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை,
ஒலி வெள்அருவி வேங்கட நாடன்,
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று,
இருங் கோள் ஈராப் பூட்கை,
கரும்பனூரன் காதல் மகனே”–(புறம் 381 ) என்பதால் அறியலாம்.

சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் இவ்வேங்கட மலையினைப் பற்றிய குறிப்புகள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.
அகநானூற்றின் இருபத்தேழாவது பாடல் மதுரைக் கணக்காயனார் என்னும் புலவரால் பாடப்பட்டதாகும்.
இப்பாடலானது வடதிசைக்கண் வேங்கடமலைப் பக்கத்திலுள்ள அரசர் திறையாகக் கொடுத்த வெண்மையான தந்தங்களை
உடைய யானைகளைப் பெற்ற போரில் வல்ல பாண்டியர்கள் அறநெறி தவறாது கொற்கையைப் பாதுகாக்கின்றனர் என்ற செய்தியைத் தருகின்றது.

இதன் மூலம் வேங்கடம் என்னும் பகுதியானது பாண்டியரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது என்பதும்
அம்மலையில் யானைகள் நிறைந்து காணப்பட்டன என்ற செய்தியும் தெரியவருகின்றது. இத்தகைய செய்தியை,
“வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை
மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்குங்
கொற்கையம் பெருந்துறை” (அகம் – 27 ) என்ற பாடல் அடிகள் எடுத்துரைக்கின்றன.

அகநானூற்றின் அறுபத்தொன்றாம் பாடல் வேங்கடமலையினை ‘புல்லி’ என்னும் அரசன் ஆண்டான் என்னும் செய்தியைத் தருகின்றது.
மேலும் இப்பாடல் புல்லி மிகச் சிறப்புடன் ஆண்ட தன்மையையும் மழவர்களின் நாட்டினை இவ்வரசன் வென்ற சிறப்பினையும் வெளிப்படுத்துகின்றது.
மேலும் இப்பாடல் வேங்கட மலையானது தினந்தோறும் விழாக்களால் சிறப்புற்று விளங்கியது என்ற குறிப்பினையும் தருகின்றது.
இதன் மூலம் திருவேங்கடம் இன்று மட்டுமல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயும் விழாக்களால் சிறந்திருந்தது என்பதனை அறிய முடிகிறது.

“கழல் புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவ ராதலோ அரிதே”(அகம் – 61 )

அகநானூற்றின் எண்பத்து மூன்று மற்றும் இருநூற்று ஒன்பதாம் பாடல் போன்றனவும் வேங்கட மலை வேடர் குலத் தலைவனான
புல்லி என்பவனால் ஆளப்பெற்றது என்ற செய்தியையே தந்து நிற்கின்றன..இதனை,

“கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்றலை நன்னாட்டு வேங்கடங் கழியினும் ( அகம் – 83 )
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்;” ( அகம் -209 ) – என்ற அடிகளால் அறியலாம்.
மேலும் மேற்கண்ட அடிகள் வேங்கட மலையில் மூங்கில்கள் நிறைந்து காணப்பட்டன என்ற செய்தியையும் தருகின்றன.
அகநானூற்றின் நூற்று நாற்பத்து ஒன்றாவது பாடல் வேங்கடமலை பற்றிய கூடுதல் தகவல்களைத் தருகின்றது.
வேங்கட மலையில் உள்ள நரந்தம் என்னும் மரங்களானவை உடலில் பல புள்ளிகளை உடைய புலியின் நிறத்தினைப் பொருந்திய பூக்களை உதிர்த்தன.

அம்மரங்களின் பெரிய கிளைகளில் குரங்கினங்கள் விளையாடி மகிழ்ந்தன. வேங்கட மலையானது தேன்நிறைந்த
பல மலைச் சிகரங்களைத் தன்னுட் கொண்டதாய் அமைந்திருந்தது.

அதனைக் கடந்தே சங்கத் தமிழர் பொருள் தேடிச் சென்றனர் என்பதே அத்தகவல்கள் ஆகும்.
மேலும் இப்பாடலில் தமிழர்களின் கார்த்திகை விளக்கீடு பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.
“புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை
நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக்
கலைபாய்ந்து உகளுங் கல்சேர் வேங்கைத்
தேங்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே”.(அகம்141 )

அகநானூற்றின் இருநூற்றுப் பதினொன்றாம் பாடலில் வேங்கடமலை பற்றிய மேலும் சில குறிப்புகள் காணப்படுகின்றன.
வேங்கட மலையில் வெண் கடம்ப மரங்கள் மிகுந்து காணப்பட்டன. அம்மரங்களில் திண்மையான தந்தங்களை உடைய
யானைகள் தம் தினவு தீர்வதற்காக உரசும்.அப்பொழுது மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்.
இப்பூக்கள் பனிக்கட்டிகள் உதிர்வது போல் காணப்படும்.அவ்வாறு உதிர்ந்த பூக்கள் உழவர்கள் பாறைகளில்
உலர வைக்கும் வெந்நெல் விதைபோல உலர்ந்து கிடக்கும் என்பன போன்ற செய்திகளை,

“ வாலிய சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்
திண்ணிலை மருப்பின் வயக்களிறு
உரிஞ்தொறும்
தண்மழை ஆலியில் தாஅய் உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்” (அகம் 211 )

அகநானூற்றின் இருநூற்று அறுபத்து ஐந்தாம் பாடல் வேங்கட மலை குறித்தபிறிதோர் செய்தியைப் பதிவு செய்கின்றது.
வேங்கட மலையில் வாழும் கையில் வில்லினை ஏந்திய வேடர்கள் மலையின் உச்சியில் ஒரு காளையைக் கண்டு அதனைக் கொன்றனர்.
அதன் மாமிசத் துண்டுகளை நெருப்பில் சுட்டு உண்டனர். அவர்கள் உண்கின்ற காட்சியானது பேய்கள் உண்பது போல் காணப்பட்டது.

அதனை உண்டதும் அதனால் உண்டாகிய தாகத்தினைப் போக்க கள்ளினை அருந்தினர்.
அவர்கள் புலால் நாற்றம் வீசும் தம் கைகளையும் வாயினையும் கழுவவில்லை. இத்தகைய காட்சியினை உடையது வேங்கடமலை.
அங்கு யானைகள் மிகுதியாகக் காணப்படும். மறவர் வாழும் குடியிருப்புகளும் மிகுதியாக உண்டு என்று குறிப்பிடுகின்றது.

“இன்சிலை எழிலேறு கெண்டிப் புரைய
நிணம்பொதி விழுத்தடி நெருப்பின் வைத்தெடுத்து
அணங்கரு மரபிற் பேஎய் போல
விளரூன் தின்ற வேட்கை நீங்கத்
துகளற விளைந்த தோப்பி பருகிக்
குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர்
புலாஅற் கையர் பூசா வாயர்
ஒராஅ உருட்டுங் குடுமிக் குராலொடு
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்
செந்நுதல் யானை வேங்கடந் தழீஇ
வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே”( அகம்- 265 )

புறநானூற்றின் 385 ஆவது பாடலைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர் அம்பர்கிழான் அருவந்தை என்பவனை வாழ்த்தும் பொழுது
வேங்கட மலையின் மழைவளத்தினை உவமைப்படுத்துகின்றார். பொழுதானது புலர்ந்தது. பறவை இனங்கள் பாடின.
புலவர் தடாரிப் பறையை வேறொருவன் வாயிலில் முழக்கிக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட ஒருவன் அப்புலவர் பால்
இரக்கம் கொண்டு அவரது வறுமை நீங்குவதற்காக, அழுக்கால் நீலநிறம் பட்டுக் கிழிந்திருந்த அவர்களின் ஆடையை நீக்கிவிட்டு
வெண்ணிறப் புத்தாடை அணிவித்தான்.

இத்தகைய வள்ளல்தன்மை கொண்டவனின் ஊர் காவிரி பாய்ந்து நெல் விளையும் அம்பர் என்பதாகும். அருவந்தை அவன் பெயராகும்.
இத்தகைய சிறப்புடைய அருவந்தை, புல்லி அரசன் ஆளும் வேங்கட மலையில் பொழியும் மழைத்துளியின் எண்ணிக்கையை விட
அதிக நாள் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றார். இதன் மூலம் வேங்கட மலையின் மழைவளம் வெளிப்பட்டு நிற்கின்றது.
இதனை,
‘‘வாழியர்; புல்லிய வேங்கட விறல்வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே”(புறம் 385 )என்பதனால் அறியலாம்.

புறநானூற்றின் 389 ஆவது பாடல் வேங்கடத்தினை ஆண்ட ஆதனுங்கன் என்னும் மன்னனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
நுங்கு விளையும் காலத்தில், வேம்பு காய்க்கும் காலத்தில், குளம் நீர் குறைந்து களிமண் ஆகும் காலத்தில் நிலம் வறண்டுபோகும்.
அந்தக் காலத்தில் சிறுபிள்ளை போன்ற பொருநனாகிய புலவன் என்னை நினைப்பானோ! மாட்டானோ! என்று நினைத்துப் பார்த்து
முதியன் ஆதனுங்கன் முன்கூட்டியே மிகுந்த பொருள்களை வழங்கினான். ஒரு நாளில் சென்றடையும் வழித்தூரத்தில் அவன் இருப்பிடம் இல்லை.

சென்றால் காணமுடியாதவனும் அல்லன். பெண்யானை வருந்தும்படி அதன் கன்றுகளைப் பிடித்துவந்து ஊர் மன்றத்தில் கட்டும்
குன்றுகள் நிறைந்த அருவிகள் பாயும் ஊர்களைக் கொண்ட வேங்கட நாட்டு மன்னன் ஆதனுங்கன். அவன் புகழ் பெற்ற நெடுந்தகை.
முதியன் ஆதனுங்கன் என்பது அவன் பெயராகும். மன்னனே! நீயும் உன் முன்னோனாகிய ஆதனுங்கன் போல
எனக்குப் பெருமை மிக்க பொருள்களை வழங்கவேண்டும். என வேண்டி நிற்கின்றார் புலவர்.

புலவரின் இத்தகைய கூற்றிற்கு,
“புன்தலை மடப்பிடி இனையக், கன்றுதந்து,
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்,
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்”(புறம் -389 ) என்ற பாடல் அடிகள் சான்றாகும்.

புறநானூற்றின் 391 ஆவது பாடல் ஒரு அரிய செய்தியைப் பதிவு செய்கின்றது. இப்பாடலைப் பாடிய புலவரான கல்லாடனார்
வேங்கடமலையில் மேகங்கள் குளிர்ச்சி பொருந்தி மழைத்துளிகளைப் பெய்து குளிர்விக்கும்.
அங்கு வாழும் மக்கள் அரிசிச் சோற்றோடு இறைச்சித் துண்டங்களை வெட்டிப் போட்டு மகிழ்வோடு உண்பர்.
அத்தகைய சிறப்புடைய வேங்கட மலையானது வறட்சியுற்றது. எனவே நான் என் சுற்றத்தோடு உன்னைத் தேடி வந்து
இங்கிருக்கும் நிலையினை உடையவன் ஆனேன் என்று மன்னன் பொறையாற்றுக்கிழானைப் பாடினார்.

இதனை,
“வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்” (புறம் -391) என்ற பாடல் அடிகளால் அறியமுடிகிறது.

நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் வேங்கடத்தினைக் குறிக்கும் இடத்து
‘நிலம் கடந்த நெடுமுடி அண்ணலாகிய திருமால் உறையும் மலை’ என்பதாகத்தான் குறிப்புத் தருகின்றார்.
பாரதம் பாடிய பெருந்தேவனார் திருவேங்கடத்தைப் பாடியிருக்கிறார். இவர் பாரதத்தை வெண்பாச் செய்யுட்களாகப் பாடியுள்ளார்.
இவர் இதில் திருமலை, திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், காஞ்சி போன்ற தலங்களையும் பாடியுள்ளார்.
மேற்படி தலங்களின் பெயர்களைச் சொன்னவர்க்குத் துயர் உண்டோ, துயரில்லை என்னும் பொருள் அமையும்படிப் பாடியுள்ளார்.

இத்தகைய சிறப்புமிக்க பாடல்,
“தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்” என்பதாகும்.

‘சிந்துபூமகிழ் திருவேங்கடம்’ என நம்மாழ்வார் இதனைக் குறிப்பிடுகின்றார். திருமாலின் நின்ற கோலமும் கிடந்த
கோலமும் கூடச் சிலப்பதிகாரத்தில் காட்டப்படுகின்றன. சிலம்பின் காடுகாண் காதையில் மாமறையாளன் என்பவன்
தன் கண்கள் திருமாலின் நின்ற கோலத்தினையும் கிடந்த கோலத்தினையும் காட்டுக! என்று
உள்ளத்தினைக் கலக்கியமையால் காண வந்தேன் என்று குறிப்பிடுகின்றான்.

இதனை,
“திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கடமென்னும்
ஒங்குயர் மலையத்து உச்சி மீமிசை
செங்கணெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட்டுள்ளேன்.” (சிலம்பு ) என்பதனால் அறியலாம்.
திருவேங்கடம் தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்டே இருந்தது என்பதனை
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு”.( சிலம்பு ) என்பதனால் தெளிவாகத் தெரியவருகின்றது.

பரிபாடல் என்னும் பழந்தமிழ் இலக்கியம் திருமாலின் வராக அவதாரம் பற்றிக் குறிப்பிடுகிறது.
இதனை,

“உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் :
உந்து வளி கிளர்ந்த ஊழுள் ஊழியும்:
வெந்தீச் சுடரிய ஊழியும்: பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும்: அவையிற்று
உள்முறை வௌ;ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி”( பரிபாடல் ) என்ற அடிகளால் அறியலாம்..

திருமால் இத்தகைய வராக அவதாரம் எடுத்துப் பூமியை மீட்ட பிறகு சிறிது காலம் திருமலையில் உள்ள
பொய்கைக் கரையில் வசித்தார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய சிறப்புடைய வேங்கட மலையில்
மதங்கொண்ட ஆண்யானை ஒன்று செழித்து வளர்ந்தோங்கியுள்ள மூங்கில் கழைகளை கடிக்கின்றது.
அதைத் தனது துதிக்கையில் வைத்து அருகில் ஓடிக்கொண்டிருக்கும் தேன்போன்று இனிக்கும் தன்மையுடைய
ஓடையில் நனைத்து அதனைக் கலக்குகிறது.

*அவ்வாறு நன்றாகக் கலக்கி தனக்கு முன்னே நின்றுகொண்டிருக்கும் பெண் யானைக்கு ஊட்டுகிறது. இவ்வாறு
விலங்குகளிடத்தும் அன்பின் பிணைப்பினை உருவாக்கும் வேங்கடத்தின் சிறப்பினை,

“பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இருகணிழ மூங்கில் வாங்கி – அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான்கலந்த வண்ணன் வரை”00எனக் குறிப்பார் பூதத்தாழ்வார்.

விலங்குகளிடத்தும் அன்பினை உருவாக்கும் வேங்கடத்தில் உறையும் மாலவன் மக்களிடத்து கருணை கொண்டு
வரம் அருளும் வள்ளல்தன்மை உடையவர் ஆவார்.
அத்தகைய மாலவனின் மலர்ப்பாதம் போற்றி வரம்பிலா அருள் பெற்று உய்வோமாக!!

————-

ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருப்பதி கோயில், கடல் மட்டத்திலிருந்து 2,799 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
திருமலை நகரம் மட்டும் 26.75 கி.மீ பரப்பளவை கொண்டதாகும்.
சுயம்புவாக உருவான ஏழுமலையானுக்கு முதன்முதலில் தொண்டமான் சக்கரவர்த்தி தற்போதைய இடத்தில்
ஆனந்த நிலையம் எனப்படும் கற்ப கோயிலை நிறுவியுள்ளார். இவர் ஆகாச ராஜனின் சகோதரர் ஆவார்.
ஆகாச ராஜனின் மகள்தான் பத்மாவதி தாயார் என புராணங்கள் கூறுகின்றன.

கடந்த 1944-ம் ஆண்டு வரை, அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு, மாமண்டூரில் உள்ள அன்னமய்யா பாதை உட்பட 4 வழிகள்
மூலம் பக்தர்கள் திருமலைக்கு சென்றனர். இந்த வழிகளில் கொடிய மிருங்கள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை
தாண்டி நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.

1944-ல் திருப்பதி அலிபிரி மலையடிவாரத்தில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கப்பட்டது.
அதன் பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
இப்போது தினமும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
பிரம்மோற்சவ காலத்தில் இது மேலும் அதிகரிக்கிறது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பத்மாவதித் தாயார் சமேத ஸ்ரீ நிவாசன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading