ஸ்ரீ “காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயாஶ்சரிதம் மஹத்”– வால்மீகி ராமாயணம், பாலகாண்டம் 4-7.
ஸ்ரீ வால்மீகி முனிவர், தனது ராமாயண காவியத்திற்கு ஸீதையின் மஹாசரித்ரம் என்றும் பெயரிட்டார்.
வால்மீகி ராமாயணமானது – ஸீதையை ராவணன் அபகரித்தது, அவளை ராமர் சந்தேகித்தது,
அவளை அக்நி பரீக்ஷை செய்வித்தது, ஒரு வண்ணான் சொன்ன அபவாதம் கேட்டு அவளை காட்டுக்கு அனுப்பியது,
இறுதியில் அவள் பூமி ப்ரவேசம் செய்தது முடிய இவ்வாறாக தொடர்ந்து ஸீதையின் துயரங்களை சொல்லும்
ஒரு காவிய நூல் என்று தத்துவம் அறியாமல் சிலர் சொல்கின்றனர்.
ஸ்ரீராமரையும் ஆணாதிக்கவாதி என்று சாடுகின்றனர். மேற்படி அபத்தங்களை மறுத்து, அவற்றை
ஸ் ரீவைஷ்ணவ பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளின் படியே விளக்கி, அவள் சரித்திரமே
திருவஷ்டாக்ஷரத்தின் தத்துவ விளக்கம் என்பதை அறுதியிடவே இந்த வ்யாஸம் எழுதப்பட்டது.
ஸ்ரீ ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம் என்னும் நூலிலிருந்து சில ஸ்ரீஸூக்தி ப்ரமாணங்கள்.
ஸ்ரீஸூக்தி #5:
இதிஹாஸ ஶ்ரேஷ்டமான ஶ்ரீராமாயணத்தாலே சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது.
பாரதத்தாலே தூதுபோனவன் ஏற்றம் சொல்லுகிறது.
ஸ்ரீஸூக்தி #6:
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும், உபாய வைபவமும் சொல்லிற்றாயிற்று.
ஸ்ரீஸூக்தி #7:
புருஷகாரமாம் போது க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும்.
ஸ்ரீஸூக்தி #8:
பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக,
நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக,
அநந்தரம் பிரிந்தது அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.
முன்னுரை:
யத்யபி ஏஷ பவேத் பர்த்தா மமார்யே வ்ருத்த வர்ஜித: |
அத்வைத முபசர்தவ்யஸ் ததாப்யேஷ மயா பவேத் ||– அயோத்யா காண்டம் 117 ஆம் ஸர்கம்.
எனது கணவர் ஸ்ரீராமரான இவர் ,ஒரு கொடுங்கோலன் (SADIST/PSYCHO) ஆக இருப்பாரே ஆனாலும்கூட,
என் மனத்தில் எவ்வித சஞ்சலமும் இன்றி,நான் அவருக்கு பணிவிடை கொண்டுதானிருப்பேன்.
கிம் புநர்யோ குணஶ்லாக்ய: ஸாநுக்ரோஶோ ஜிதேந்த்ரிய: |
ஸ்திராநுராகோ தர்மாத்மா மாத்ருவத் பித்ருவத் ப்ரிய: ||
ஆனால் இவரோ எல்லோராலும் புகழத்தக்க குணங்கள் உடையவர் ! கருணைமிக்கவர்! புலன்களை வென்றவர் !
என்மீது நிலையான அன்பு வைத்திருப்பவர் ! தர்மாத்மா ! ஒரு தாயைப் போலும்,ஒரு தந்தையைப் போலும்
என்மீது மனப்பூர்வமான நேசமுள்ளவர்.
எனவே இப்படிப்பட்ட உத்தம புருஷருக்கு நான் பணிவிடை செய்வதிலும்,அவரை அனுசரித்துப் போவதிலும்
(காட்டிற்கு உடன் வந்ததிலும்) ஆச்சரியம் தான் என்ன?
இவ்வாறு ஸீதையின் ஏக்கமானது “என் கணவர் ஸ்ரீராமர் சகல கல்யாண குணங்கள் நிரம்பியவர்.
உலகம் நிறைந்த புகழாளர். அதனால் தான், நான் என்னதான் கற்புக்கரசியாய் இருப்பினும்,
எவ்வளவு தான் தர்மங்கள் அனுஷ்டித்தாலும் எனக்கு என்று ஒரு தனிப்புகழ் கிட்டுவதில்லை.
என் கீர்த்தியானது குடத்திலிட்ட விளக்கு போலுள்ளது. எனவே ஒரு கொடூரனுக்கு வாழ்க்கைப்பட்டு,
இதேபோல் தர்மங்கள் அனுஷ்டித்து, கற்புக்கரசியாய் இருந்தால் தான் என்னுடைய க்யாதியும்
குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிக்கும். ஆனால் ராமரோவெனில் மிகவும் நல்லவர்.
எனவே இப்பிறவியில் நான் விரும்பும் இந்த வாய்ப்பு கிட்டாது” என்று இருந்தது.
இனி வ்யாசத்திற்கு வருவோம்.
அயோத்தியா காண்டத்தின் இறுதி சர்க்கங்களில் தான் ஸீதையின் சரிதம் தொடங்குகின்றது. 117ஆம் சர்க்கத்தில்
ஸீதையும் அநசூயையும் உரையாடுகின்றனர். அப்பொழுது மஹரிஷி அத்ரியானவர் கூறுகிறார்:
தஶ வர்ஷஸஹஸ்ராணி யயா தப்தம் மஹத் தப: |
அநஸூயா வ்ரதை: ஸ்நாத்வா ப்ரத்யூஹாஶ்ச நிவர்திதா: ||
தாம் இமாம் ஸர்வபூதாநாம் நமஸ்கார்யாம் தபஸ்விநீம் |
அநஸூயேதி யா லோகே கர்மபி: க்யாதிமாகதா: ||– அயோத்யா காண்டம் -117, 11 &13
அநஸூயை என்னும் இவள் பத்தாயிரம் ஆண்டுகள் தவம் இயற்றியிருக்கின்றாள். எல்லாவித இடையூறுகளையும் விலக்கி,
வ்ரதங்களை முழுமையாக செய்து முடித்தவள். எல்லா பிராணிகளாலும் வணங்கத்தக்கவள்.
கீர்த்தி பெற்றவள்! முதியவள்! கோபம் என்பதே ஒருபொழுதும் அறியாதவள் !
தன் அன்பு நிறைந்த நற்கர்மங்களால் “அநஸூயா” என்று உலகில் புகழ் பெற்றவள்.
இவ்வாறு தன் மனைவியை பலவாறு புகழ்கின்றார். அநஸூயை என்றால் பொறாமை இல்லாதவள் என்று ஒரு பொருளுண்டு.
பிறரால் பொறாமைப்படக் கூட முடியாத இடத்தை அடைந்தவள் என்று மற்றோரு பொருளும் உண்டு.
ஸீதை “தாயே! நானும் உன்னைப் போல் புகழ்பெற விரும்புகின்றேன்” என்றாள்.
அப்பொழுது அநஸூயை, “பேரழகியும், குணவதியும், சௌபாக்யவதியுமானயான ஸீதா!
புகழ்பெற்ற ராமனால்,சுயம்வரத்தில் நீ அடையப்பட்டாய் என்று கேள்விப்பட்டேன். எது,எப்படி நிகழ்ந்ததோ,
அவற்றை அப்படியே விஸ்தாரமாக கூறுவாய்” என்று பூர்வ வ்ருத்தாந்தங்களை கேட்கின்றார்.
ஸீதையும் தனது அயோநிஜ பிறப்பு தொடக்கமான வ்ருத்தாந்தங்களை ரஸமாக சொல்கின்றார்.
கலப்பை உழுத மண்ணில், புழுதியும் தூசுகளும் பட தன்னை ஜனகர் கண்டெடுத்தது
(பாம்ஸு குண்டித ஸர்வாங்கீம் ஜநகோ விஸ்மய: அபவத்). “இவள் உன்திருமகள் ! சாதாரண மானுட பெண்ணன்று ”
என்ற அசரீரி வாக்கினை கேட்டு ஜனகர் மகிழ்ந்தது, தாய் ஸுநயநா அரவணைப்பில்,
தர்ம சூக்ஷ்மமான நல்லுரைகளுடன் வளர்ந்தது, சாவித்திரி – சத்தியவான், அத்ரி – அநஸூயா, ரோஹிணீ – சந்திரன்,
அருந்ததி – வசிஷ்டர் போன்ற உதாரண தம்பதியர் பற்றிய கதைகள் கேட்டது, பின்பு திருமணம் நடந்தது,
வனவாஸம் செல்லும் முன்னர் மாமியார் கூறிய அறிவுரைகள் என்று விஸ்தரித்து வர்ணனம் செய்கிறாள்.
முடிவில் அநசூயை சீதையைப் பாராட்டுகின்றார். தன்னுடைய திவ்யமான மாலை, என்றுமே கசங்காத / அழுக்கடையாத வஸ்த்ரம்,
வாசனை த்ரவ்யம், அணிகலன் இவற்றை ஆசீர்வாதமாகக் கொடுக்கின்றார்.
ஸீதையை அணிகலன்களால் பலவிதமாக அலங்காரம் செய்கின்றார். வாசனைத் திரவியங்களை பூசி,
“ஸீதா ! நீ உற்றார் உறவினர்களையும், கௌரவத்தையும், சுக போகங்களையும் துறந்து உன் கணவனுடன்
வனவாஸம் செய்ய வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. கற்புக்கரசிகள் இப்படித்தான் நடக்க வேண்டும்”.
அதற்கு ஸீதை -“தாயே! என் தந்தை ஜனகர், எனக்கு சிவ தனுஸை கன்யா சுல்கமாக வைத்தார்.
எந்த வீரன் சிவ தனுஸை வளைத்து நாண் ஏற்றுகிறானோ, அவனுக்கே என் பெண் மாலை இடுவாள் என்று அறிவித்திருந்தார்.
ராமனும் சிவ தனுஸை வளைத்து நாண் ஏற்றினார். இதனால் மகிழ்ந்து போன என் தந்தை
என்னைத் கன்யாதானம் கொடுக்க சித்தமானார். ராமரோ என் தந்தையின் உத்திரவின்றி நான் எதுவுமே செய்வதில்லை
என்று மறுத்துவிட்டார். பிறகு தூதுவர்கள் சென்று தசரதரை அழைத்து வந்து, அவர் சம்மதித்த பிறகே என்னை மணந்தார்.
தீயமாநம் ந து ததா ப்ரதிஜக்ராஹ ராகவ: |
அவிக்ஞாய பிது: சந்தம் அயோத்யாதிபதே: ப்ரபோ: ||– அயோத்யா காண்டம்- 118-51
தன் தந்தையார் பார்த்து நிச்சயித்த பெண்ணான என்னை மணந்தார். “என் அழகில் மயங்காமல்,
பித்ரு வாக்ய பரிபாலனம் என்னும் தர்மத்தை அனுஷ்டித்தார்.
எனக்கு காதல் திருமணத்தில் விருப்பமில்லை. தர்மத்தில்தான் பெரு விருப்பம். ஏனெனில் இன்று ஒரு அழகியை விரும்புபவன்,
நாளை அவளினும் அழகியாக தன் பார்வைக்கு படும் வேறு ஒருத்தியை விரும்பலாம்.
எனவே இது அவர் மீது இருந்த அன்பினை இருமடங்கு பெருக்கியது.
ப்ரியா து ஸீதா ராமஸ்ய தாரா: பித்ருக்ருதா இதி |
குணாத் ரூபகுணஶ்சாபி ப்ரீதிர் பூயோ அப்யவர்ததா ||
தஸ்யாஶ்ச பர்தா த்விகுணம் ஹ்ருதயே பரிவர்ததே |– பாலகாண்டம்-77-28
எனது ராமர் – பித்ரு வாக்ய பரிபாலனம், மாத்ரு பக்தி,ஏக பத்னி வ்ரதம், சரணாகத ரக்ஷணம்,
ப்ராத்ரு ஸ்நேஹம் போன்ற தர்மங்களும், தயை, க்ஷமை, பக்தி, தவம், த்யானம், ஸத்யம், இந்திரிய நிக்ரஹம்
போன்ற ஆத்ம குணங்களும், தன் அன்பர்கள் மீது வாத்சல்யம்,ஸௌசீலம், ஸௌலப்யம், ஆர்ஜவம் போன்ற குணங்களும்,
சிறந்த லாவண்யம், சவுந்தர்யம், ப்ரம்ம தேஜஸ் என்னும் ரூப லக்ஷணங்களும்,
புகழும், விஷ்ணுவுக்கு நிகரான வீரதீர பராக்கிரமங்களும், த்ரிலோக ஐச்வர்யமும் (வ்யாப்தா, நியந்தா) ,
குபேரனுக்கு நிகரான செல்வமும், ப்ருஹஸ்பதியைப் போன்று சகல சாஸ்திர நிபுணத்வமும் ,வாய்மை,
பெரியோர்கள் / அன்பர் சொல் கேட்டல் என்னும் பல குணங்களும் கூடியவர்.
எனவே இப்படிப்பட்ட உத்தம புருஷருக்கு நான் பணிவிடை செய்வதிலும், அவரை அனுசரித்துப் போவதிலும் ஆச்சரியம் என்ன?
இத்துணை கல்யாண குணங்கள் படைத்த ராமனை வேறு எந்தப் பெண் மணந்திருந்தாலும் இப்படித்தான்,
சந்திரனைப் பிரியாத ரோஹிணியை போன்று கூடவே இருப்பாள்.
என்றிவ்வாறெல்லாம் ஓடிய அவளது உள்ளக்கிடக்கை தனை பெருமாளும் அறிந்தான்.
“உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடனிருந்து அறியும்” பெருமாள்,
அவளுடைய குணாதிசயங்களை வெளியிட சங்கல்பித்தார்.
—————-
பிராட்டியானவள் நாமெல்லாம் பெருமாளை அடைய புருஷகாரம் ஆகின்றாள் (சிபாரிசு).
இதனை தர்க்க பூர்வமாக நிறுவுவோம்.
(உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்பன தர்க்க பாஷையின் அங்கங்கள் அதாவது உறுப்புக்கள் ஆகும்.
எனவே நீங்களும் என்னுடன் கொஞ்சம் தர்க்கம் (அ) ந்யாயம் பயிலுங்கள்).
உத்தேசம்: (பெயரிடல்)
அதற்கு அவளிடம் 1)க்ருபை, 2)பாரதந்த்ர்யம், 3)அநந்யார்ஹத்வம் என்னும் மூன்று குணங்கள் வேண்டும்.
லக்ஷணம்: (விளக்குதல்)
1) க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக்
கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும்.
2) பாரதந்தர்யமாவது பரமபுருஷனுக்கு உரிமைப் படுகை. ஸ்வதந்த்ரனான அவனை அனுவர்த்தித்து
(அவன் சொன்னபடியெல்லாம் நடந்து) அவனை வசப்படுத்த வேண்டியிருப்பதால் பாரதந்தர்யம் வேணும்.
3) அநந்யார்ஹ சேஷத்வமாவது அவனுக்கன்றி மற்றவனுக்கு உரிமைப் படாதொழிகை.
பிராட்டி எம்பெருமானிடத்தில் சென்று “இந்த ஜீவனை நீ அங்கீகரிக்க வேணும்!” என்றால்
“இவள் நம்மைத் தவிர வேறொரு விஷயத்திற்கு சேஷப்படாமல் (அடிமைப்படாமல்) நமக்கே
அதிசயத்தை (நன்மை) விளைவிக்குமவள் ஆகையாலே நம்முடைய காரியத்தையன்றோ இவள் சொல்லுகிறாள்”
என்று பரமன் நினைத்து, அவள் சொன்னபடி செய்கைக்கு உறுப்பாக அநந்யார்ஹத்வமும் வேணும்.
பரீக்ஷை: (சரிபார்த்தல்)
அவளுக்கு இம்மூன்று லக்ஷணங்களும் இருக்கும் படியை நாம் எங்ஙனே அறியலாம் என்னில் –
பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப் பெருமாளை மூன்று தரம் பிரிந்து இம் மூன்று குணங்களை
வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம். எப்பிரிவில் எக்குணம் வெளியாயிற்று என்னில்:
ராவணன் பிரித்தான் என்னும் சாக்கிலே முதலில் பெருமாளைப் பிரிந்து இலங்கைக்கு எழுந்தருளின சமயத்தில்
“க்ருபா குணம்” வெளியாயிற்று.
முற்பட பிரிவு – க்ருபையை காட்டியது (க்ருபை – பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை).
தேவமாதர்களின் சிறையை விடுவிக்கைக்காகத் தான் சிறையிருந்தமையாலும்;
அச்சிறையிலே தன்னை இரவும் பகலும் ஹிம்சித்த ராக்ஷஸிகள், ஒருநாள் திரிஜடையின் கனவு வ்ருத்தாந்தம் கேட்டார்கள்.
அக்கனவிலே ராவணன் தோல்வியுற்று, தெற்கு – எம திக்கிலே கழுதைமீது, அழைத்துச் செல்லப்பட்டதாகவும் (மாண்டுபோதல்),
பெருமாள் வெற்றிபெற்று அயோத்தியில் ஸீதையுடன் முடிசூடியதாகவும் கண்டமை கேட்டு மிகவுமஞ்சி நடுங்கினார்கள்.
பிராட்டி அவர்களை நோக்கி “நானிருக்க நீங்கள் அஞ்சுவதென் ? அஞ்சவேண்டா !! என்று அபய ப்ரதானம் செய்தமையாலும்;
இந்த அபயப்ரதானம், வெறும் வாய்ச் சொல்லாய் ஒழியாமல் ,ராவண சம்ஹாரத்திற்குப் பின் தனக்கு
ஸோபனம் (நற்செய்தி) சொல்லவந்த அனுமன், அந்த ராக்ஷஸிகளை சித்திரவதை (கொடியமுறையில் கொலை) செய்ய எத்தனித்தார்.
அப்பொழுது அவரோடே மன்றாடி, பிறர் படும் ஹிம்ஸையைக் கண்டு பொறுத்திருக்கும் படியான மனக்கொடுமை எனக்கில்லை
என்று அறிவுறுத்தியும், அவ்வரக்கிகளின் குற்றங்களை நற்றங்களாக உபபாதித்தும் அவர்களைக் காத்து அருளியமையாலும்,
க்ருபா குணம் விளங்கிற்று.
இக்குணம் வெளியிடுவதற்கேயாம் பிராட்டிக்கு நேர்ந்த முதற் பிரிவு.
பிராட்டியே எல்லா ஜீவாத்மாக்களுக்கும் அன்னையாதலால், தாய் ஸ்தானத்தில் நின்று ராவணனுக்கு சொன்ன
உபதேசங்களுள் சிலவற்றை இங்கே காணலாம்.
ஸுந்தரகாண்டம் 21ஆம் சர்கம்:
இஹ ஸந்தோ ந வா ஸந்தி ஸதோ வா நாநுவர்தஸே ||
இங்கே,இலங்கையில் சான்றோர்கள் யாரும் இருக்கவில்லையா? அல்லது அவர்கள் இருந்தும்,
நீ அவர்களை பின்பற்றவில்லையா? ஏன் இப்படி அதர்ம வழியில் இழிந்து அழிவைத் தேடுகின்றாய் ?
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம: ஸ்தானம் பரீப்ஸதா
வதே ச அநிச்சதா கோரம் த்வயாஸௌ புருஷர்ஷப ||
உனக்கு கோரமான அழிவு வேண்டாம் என்று எண்ணினால், புருஷ ச்ரேஷ்டரான ஸ்ரீராமனுடன் நட்புக்கொள்
(காலைப் பிடிக்கத் தேவை இல்லை, கையையாவது பிடி. அதாவது நட்புறவு கொள்வதே போதுமானது)
விதித ஸ ஹி தர்மக்ஞ: ஶரணாகதி வத்ஸல:
தேந மைத்ரீ பவத் தே யதி ஜீவிதும் இச்சஸி ||
அறம் அறிந்த ராமர் சரணடைந்தவர்களிடம் பேரன்பு கொண்டவர். நீ உயிருடன் இருக்க விரும்பினால்
அவருடன் நட்புக்கொள். அவர் நீ செய்த அனைத்து அபசாரங்களையும் மன்னிப்பார்.
ஆயினும் ராவணன் திருந்தவில்லை. அநாதி துர்வாசனையினால், எவ்வளவு உபதேசித்தும் இவன் திருந்தவில்லையே
என்று பரிதபித்தாள். ஐயோ ! இவனுடைய துர்புத்தி நீங்கி அனுகூலபுத்தி உண்டாக வேணும் என்று
ஜீவாத்மா திறத்தில் தான் செய்யும் பரமகிருபையாலே அவனை தீமனங்கெடுத்து வழிப்படுத்தப் பார்த்தாள்.
பிரிவு என்றால் என்ன ?
நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ |
யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்தவையேதம் த்விஜோத்தம ||– விஷ்ணுபுராணம் 1-8-17
உலகிற்கெல்லாம் தந்தை பகவான் என்றால், மஹாலக்ஷ்மீ ஜகன்மாதாவாய், கருணைக்கடலாய் நிற்கின்றாள்.
பகவானை விட்டு ஒருபோதும் பிரியாதவள். எங்கும் நிறைந்திருப்பவன் விஷ்ணு. அதுபோல் இவளும் எங்கும் நிறைந்திருப்பவள்.
ஆக மிதுனமாய் நிற்கும் இவர்களே நமக்கு பெருந்தெய்வம்.
பராசர ரிஷி, தன்னுடைய விஷ்ணு புராணத்தில் – பிராட்டியானவள் பகவானை விட்டுப் பிரியாதவள்.
அவளுடன் நித்ய சம்பந்தம் உள்ளவன் எம்பெருமான் என்று முதலில் பொதுவாகக் கூறியவர் பின்னர்
அந்த நித்ய சம்பந்தத்தை பல பிரகாரங்களால் விளக்குகின்றார்.
அர்த்தோ விஷ்ணு இயம் வாணீ ||
அர்த்த: என்னும் பொருள் ஆண்பாலினத்தைச் சார்ந்து பகவானது விபூதியாக அதாவது பகவானாக கூறப்படுகின்றது.
வாணீ என்னும் சொல் பெண்பாலினத்தைச் சார்ந்து லக்ஷ்மியின் விபூதியாக அதாவது பிராட்டியாக கூறப்படுகின்றது.
சொல் மற்றும் பொருளின் சம்பந்தமும் நித்தியம் என்பது சாஸ்திரங்களால் வலியுறுத்தப்படுகின்றது.
இதனால் சொல்லும் பொருளும் போல் இணைந்து நிற்பவர் விஷ்ணு லக்ஷ்மீ என்னும் திவ்ய தம்பதிகள் என்பதும் சொல்லப்பட்டதாகின்றது.
நீதி பிராட்டி என்றால் நியமம் பெருமாள்; புத்தி பிராட்டி என்றால் போதம் பெருமாள்;
சத்க்ரியா பிராட்டி என்றால் தர்மம் பெருமாள்; ஸ்ருஷ்டி பிராட்டி என்றால் ஸ்ரஷ்டா பெருமாள்;
பிராட்டி பூமி என்றால் ஹரியே பூ-தரன் (பர்வதம் (அ) ராஜா); பிராட்டி துஷ்டி என்றால் ஹரியே சந்தோஷம்;
பிராட்டி இச்சை என்றால் ஹரியே காமம்; பிராட்டி ஆஜ்யாஹுதி (நெய்) என்றால் ஜனார்தனனே புரோடாஸம்.
கிம் சாதி பஹுநோக்தேந ஸங்க்ஷேபேண இதமுச்யதே ||
பலவாறு சொல்லி பயன் என்ன ? சுருங்கச் சொல்கிறேன் ஒன்றை.
தேவ திர்யங் மநுஷ்யாதௌ புந் நாமா பகவாந் ஹரி: |
ஸ்த்ரீநாம்நீ ஶ்ரீ: ச விக்ஞேயா நாநயோர் வித்யதே பரம் ||
தேவ ஜாதி, திர்யக் ஜாதி, மனுஷ்ய ஜாதி மற்றும் உள்ளவை இவைகளில் ஆண்பாலினத்தைச் சார்ந்தவை அனைத்தும்
பெருமாள் விபூதியாய் விஷ்ணு என்றே சொல்லப்படும்.
பெண்பாலினத்தைச் சார்ந்தவை அனைத்தும் லக்ஷ்மியினுடைய விபூதியாய் லக்ஷ்மி என்றே சொல்லப்படும்.
விபூதியென்றால் செல்வம் என்று பொருளாகும்). பல விபூதிகளைச் சொல்ல வேண்டும் என்று தொடங்கிய ரிஷி,
பல படிகளையும் காட்டி, முழுதும் சொல்ல முடியாமல் போய் “இவ்வாறே மேலும் கண்டு கொள்க ” என்று தலைக்கட்டுகின்றார்.
ஸ்ரத்தயா அதேவோ தேவத்வம் அஶ்நுதே ||
அதாவது தேவன் அல்லாதவன் ஸ்ரத்தையாகிற லக்ஷ்மியினால்தான் தேவனாகும் தன்மையை அடைகிறான் –
என்று வேதமும் சொல்லுகின்றது.
இப்படி லக்ஷ்மியானவள் நொடிப்பொழுதும் பிரியாது வாழும் மார்பனே என நம்மாழ்வாரும்,
’அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்றும்,
திருமங்கையாழ்வாரும் இதையே, ’திருவுக்கும் திருவாகிய செல்வா’ என்றும் கூறுகின்றனர்.
மஹாலக்ஷ்மி நித்யையானவள். பகவானைப் போல் ஆதியும் அந்தமும் இல்லாதவள்.
பகவானைப் போல் எங்கிருந்தாவது தோன்றுகின்றாள், மறைகின்றாள்.
மறுபடி வேண்டும் போது மற்றோரிடத்திலிருந்து ஆவிர்பவிக்கின்றாள்.
பகவான் அதிதி மகனாக அவதரித்தபோது இவள் பத்மையானாள்.
பரசுராமனாக அவதரித்தபோது இவள் தரணியாகத் தோன்றினாள்.
ராமாவதாரத்தில் ஸீதையாகவும், கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியாகவும் இவளே அவதரித்தாள்.
அவன் தேவனாக அவதரித்தால் தேவப் பிறவியை மேற்கொள்கிறாள்.
அவன் மனித பிறவியை எடுத்தால், இவளும் மனிதப் பிறவியை ஏற்கிறாள்.
இப்படி எப்பொழுதும் எம்பெருமானுக்கு ஏற்ப அவதரிக்கின்றாள். பிரிவதே இல்லை.
அனுமனும் இதைக் கூறுகின்றான்:
அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் |
தேந அயம் ஸ ச தர்மாத்மா முஹூர்தம் அபி ஜேவதி ||– ஸுந்தரகாண்டம் 15-52
இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது.
அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர்.
நாட்டைப் படை என்று அயன் முதலாத்தந்த நளிர் மாமலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே– நாச்சியார் திருமொழி
குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன்.
அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஆண்டாள்.
விமலன் – அவ்விளையாட்டுக்களால் தனக்கொரு பாவமோ கர்மமோ அண்டாதவன்.
திருவிண்ணகர் சேர்ந்தபிரான் பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.
ஒப்பிலியப்பனால் படைத்து, பேணப்பட்டு, அழிக்கப்படும் சோலையே இந்த மூவுலகங்களும் என்று நம்மாழ்வாரும் பாடினார்.
இங்கே பெருமாளை சொன்னது பிராட்டிக்கும் உபலக்ஷணம் ஆகும்.
அவதாரத்தில் பிரிவு என்பது ஒரு நாடகம், அவ்வளவே.
பிறர் சமையல் செய்யக் காணும்,நாம் அதைக் கற்பது போலவும், ஆசிரியர் பரிசோதனைச் சாலையில் செய்யக் காணும் நாம்
அதைக் கற்பது போலவும் தான் அவை. JUNIOR LAWYER, HOUSE SURGEON போல நாமும் SENIORS செய்யக் கண்டு PRACTICALS கற்கின்றோம்.
இதிஹாச புராணங்களில் பெருமாளும், பிராட்டியும், நித்யர்களும், பக்தர்களும், ரிஷிகளுமாக உபநிஷத், ஸ்ம்ருதிகளில்
காணும் விதி, நிஷேத தர்மங்களை அனுஷ்டித்தும், த்யஜித்தும் காட்டுகின்றனர்.
நாமும் விதி, நிஷேதங்களை அறிந்து கைக்கொள்ளவே அல்லது விடவே தான் அவை நடத்தப்படுகின்றன.
தப: ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்|
நாரதம் பரிப்ப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம்|| – பாலகாண்டம்-1-1
இதுவே ராமாயணத்தின் முதல் ஸ்லோகம் ஆகும். முதன்முதலில் தொடுக்கும் பாசுரத்தில் திருமகளை வழிபட்டு
தொடங்குவதானது ஒருவித மங்கல வழக்கு என்பர் . ரிஷிகளுக்கு தவமே தனம்(செல்வம்) ஆகும்.
தபோதனம் என்பதற்கு இலக்கண குறிப்பாக இருபெயரொட்டு பண்புத்தொகை அல்லது கர்மதாரய ஸமாஸம் என்கிறது வீரசோழியம்.
இதைத்தான் மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று வைத்து பிராட்டியை வணங்கியே ,
தன் காவியத்தை, “ஸீதையின் மஹாசரித்ரமாகத்” தொடங்குகின்றார்.
முதல்பாகத்தில் “பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக” என்று ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர்
அருளிய ஸ்ரீவசனபூஷண வரிகளை கண்டோம்.
இவ்விரண்டாம் பாகத்திலே “நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக” என்னும் வரிகளை விளக்கமாகக் காண்போம்.
பிராட்டி நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக.
ஒரு ஜீவாத்மாவுக்கு அவன் இச்சிக்கும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்பனவாற்றை,
பரமன் அருள்செய்ய, பிராட்டியின் சிபாரிசு(புருஷகாரம்) அவசியமாகிறது என்று பார்த்தோம்.
அங்ஙணம் சிபாரிசு செய்ய பிராட்டியிடம் காணப்படும் இன்றியமையாத குணங்களாக
1) க்ருபை ,2)பாரதந்த்ர்யம் மற்றும் 3) அநந்யார்ஹத்வம் என்றும் பார்த்தோம்.
அக்குணங்களில் க்ருபையை முற்பாகத்தில் கண்ட நாம் பாரதந்த்ர்யம் என்னும் குணத்தை இங்கே பரக்கக் காணலாம்.
பாரதந்த்ர்யம் என்றால் என்ன?
பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும்.
“நான்” என்னும் சொல்-ஸ்தூலமாக ஜீவனையும், ஸூக்ஷ்மமாக –அவ்வாத்மாவினுள் உறையும், அந்தர்யாமியான பரமனையும் குறிக்கும்.
நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு.
அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும்
“தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு.
அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்.
(இங்கே மனஸை அர்பணித்தல் என்பது உடலுக்கும் பொருந்தும்).
நம் உடலை கரணகலேவரம் என்பர் வடநூலார் (கரணம்=புலன்(6), கலேவரம்=உடல்).
அவற்றை தனக்காகக் கொள்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும். பாரதந்த்ர்யம் சாத்வீகமானது. ஆனால் ஸ்வாதந்த்ர்யமோ ராஜஸமானதாம்.
தனக்கு கொடுக்கப்பட்டவற்றுள் ஒன்றனை தேர்வு செய்ய பயன்படும் மனதின் செயல்பாடு “புத்தி” எனப்படும்.
எடுத்துக்காட்டாக பெண்டிர் பதின்மரிடம் 1000 சேலைகளை, அவர்களின் பார்வைக்கு வையுங்கள்.
அவர்கள், தமக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும்.
அவ்வாறன்றி தன் கணவனுக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது பாரதந்த்ர்யம் ஆகும்.
[புத்தியின் ந்யாசம்/(அவனிடத்தில் வைத்தல்) பாரதந்த்ர்யம் என்பர்.]
1. தயரதரும் கௌசல்யையும்
அயோத்யா காண்டம் 12 ஆம், ஸர்கத்தில் சக்கரவர்த்திக்கும் ,கைகேயிக்கும் நடக்கும் பேச்சுவார்த்தை பின்வருமாறு.
கைகேயி “ராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம், பரதனுக்கு பட்டாபிஷேகம்” என்று இரண்டு வரங்கள் கேட்டு, பிடிவாதம் செய்கின்றாள்.
சக்கரவர்த்தியாரோ அனலில் இட்ட புழுவாகத் துடிகின்றார். மந்திரத்தால் கட்டுப்பட்ட நாகம்போல சீறுகின்றார்.
அப்பொழுது கௌசல்யா தேவியார் பற்றிய நினைவு வந்து அவளை, கைகேயிக்கு ஒப்பிட்டு –
“ஹே ந்ருஸம்ஶே ! நீயோ ஹிம்சையே இயல்பாகக் கொண்டவள் ! அஹிம்ஸா தேவியான அவளோவெனில்,
யதா யதா ச கௌசல்யா தாஸீவச்ச ஸகீவ ச |
பார்யாவத் பகிநீவச்ச மாத்ருவத் ச உபதிஶ்டதி ||
ந மயா ஸத்க்ருதா தேவீ ஸத்காரார்ஹா க்ருதே தவ | -12-68
பொருள்: அந்தந்த சமயத்திற்கேற்றபடி ஒரு வேலைக்காரியைப் போல, ஒரு தோழியைப் போல, மனைவியாக,
ஒரு சகோதரியைப் போல ,தாயைப் போல கௌசல்யை நடந்து வந்திருக்கின்றாள். என்னுடைய பாராட்டுக்குரிய அவளை,
உன்னிடமிருந்த பயம் காரணமாக பகிரங்கமாக நான் பாராட்டியதே இல்லை – என்று புகழ் பாடுகின்றார்.
சக்கரவர்த்திக்கு கௌசல்யா தேவியானவள் “பகிநீவச்ச – சகோதரியைப் போல” என்று பாராட்டும் சொல் இங்கு சுவாரஸ்யமானது.
இதற்கு ஆசார்யர்கள் தரும் விளக்கம் பின்வருமாறு –“தயரதன் இரண்டாம் தாரமாக சுமித்ரா தேவியையும்,
பிறகு மூன்றாம் தாரமாக கைகேயி தேவியையும் மணம் முடித்து இல்லம் திரும்பும்பொழுது கௌசல்யை அவனுக்கு கற்பூர ஆலத்தி காட்டினாள்.
இது ஒரு இளைய சகோதரி ,அத்தம்பதியரின் நல்வாழ்வு, ஆயுள், ஒற்றுமை வேண்டி செய்யும் மங்கல சம்ஸ்காரம் ஆகும்.
இதுகண்டே தயரதர் அவளை “பகிநீவச்ச” என்று பாராட்டினார்.
இதுவே கைகேயியானவள், தனக்குப் பிறகு ,மேலும் நான்காவது தாரமாக ஒருத்தியை, தயரதன் கொண்டு வந்திருந்தால்
அங்கு பூரிக்கட்டை, தட்டு, பாத்திரம் பறந்திருக்கும். எனவே கௌசல்யை தன் புத்திக்கு அனுசரித்து நடக்காமல்,
தன் கணவனுடைய புத்திக்கு அனுசரித்து நடந்தாள்.
சம்பராசுர யுத்தத்தில் தயரதனை காப்பாற்றிய கைகேயி ,அவன் கொடுத்த இரண்டு வரங்களையும் ஸ்வீகரித்தாள்.
இதுவே கௌசல்யைக்கு அந்த வாய்ப்பு கிட்டியிருந்தால், அவ்விரு வரங்களையும் நிராகரித்திருப்பாள்.
ஏனெனில் ஒரு மனைவிக்கு தன் கணவனின் “புத்திக்கு அனுசரித்து நடத்தல்” என்பதற்கு மேம்பட்ட வரம்/சிறப்பு என்று ஒன்று கிடயாது.
வரம் என்றால் கணவன் என்றும் ஒரு பொருளுண்டு.
“நான் பெண்ணல்ல! “நான்” –இந்த பெண் உடம்பு- என்னும் கூட்டில் வாழும் ஒரு ஆத்மா ஆவேன்!
இப்பிறப்பில் என் கணவனுக்கு அனுசரித்து நடத்தலே எனது வரம் (சிறந்த தர்மம்)!
சுகம்-துக்கம் ,குளிர்-வெயில்,லாபம்-நஷ்டம்,வெற்றி-தோல்வி என இவையெல்லாம்
மனோ வ்யாபாரங்களேயன்றி ஆத்ம குணங்கள் அல்ல” என்றும் தெரிந்து வைத்திருந்தாள்.
“கடமையை செய்! பலனில் விருப்பம் கொள்பவனாய் இராதே!” – என்னும் கீதை வசனம் இவ்விடத்தில் நினைவு கொள்ளத் தக்கது.
இங்கு கௌசல்யையுடைய இயல்பாக ரிஷி காட்டியது பாரதந்த்ர்யம். கைகேயியுடைய இயல்பாக காட்டியது ஸ்வாதந்த்ர்யம்.
இம்மஹா குணத்திற்கு வசப்பட்டே அன்றோ, எம்பெருமானும் அவளுடைய திருவயிற்றில் 12 திங்கள் கர்ப்பவாசம் செய்தது.
“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” -பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும்
பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி
உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான்
“மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்”–என்றும்
“ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேதமுதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்” என்றும்-உருகுகின்றார் சடகோபர்.
மேலும் பாரதந்த்ர்யத்திற்கு, ஒரு தலையாய உதாரணம் காண்போம்.
2. ஶத்ருக்னரும் பரதரும்
“கச்சதா மாதுலகுலம் பரதேந ததா அநக: |
ஶத்ருக்நோ நித்யஶத்ருக்நோ நீத: ப்ரீதிபுரஸ்க்ருத:” -அயோத்யா காண்டம்-1-1
பொருள்: தன் தாய்மாமன் யுதாஜித்தின் கேகயநாட்டிற்கு செல்லும் பரதனால், பாபமில்லாதவனும்,
நித்யசத்ருக்களாம் ஐம்புலன்களை வென்ற ஶத்ருக்நன், மகிழ்ச்சி பொங்க, அழைத்துச் செல்லப்பட்டான் என்கிறார்
கவிக்குயில் வால்மீகி. 23999 ஸ்லோகங்களை ஒருதராசிலும் இச்ச்லோகத்தினை மற்றொரு தராசிலும் வைத்தால்,
இது வைக்கப்பட்ட தட்டானது தாழும்.
ஒரு உடைவாளோ, வில்லோ எடுத்துச் செல்லப்பட்டது போலே ஶத்ருக்நன் எடுத்துச் செல்லப்பட்டான்”—என்பது செயப்பாட்டு வினை.
அதற்கும் மேலாக, “ப்ரீதிபுரஸ்க்ருத:”-அவ்வாறு எடுத்துச் செல்லப்படுவதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்கிறார் ஆதிகவி.
(அதாவது கடகராசியில் நாலாம் பாதத்தில் குரு உச்சம் பெற்று மகிழ்வது போன்றதாம் இதுவும்.)
இங்கு செய்வினை ஏன் வரவில்லை ? செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் என்ன பெரிய வாசியென்று கேட்கலாம் !
செய்வினையில் பரதன் எழுவாய்(கர்தா காரகம்), ஶத்ருக்நன் பயனிலை (கர்ம காரகம்) ஆயிருப்பர்.
செயப்பாட்டு வினையால் ஶத்ருக்நன் எழுவாய், பரதன் கரணகாரகம் ஆகின்றனர்.
இங்கு ஶத்ருக்நனுக்கு முதன்மை இடத்தை கொடுக்கின்றார் மஹரிஷி.
ஏனெனில், ராமாயண காவியத்தில் ராமர் –“பெரியோர் சொல் கேட்டல்” என்னும்
சாமான்ய தர்மத்தை(ORDINARY) அனுஷ்டித்துக் காட்டினார்.
லக்ஷ்மணன் “தன் புத்திக்கு அனுசரித்து, ராமனை விட்டுப் பிரியாது அணுக்கத் தொண்டாற்றினார் / பகவத் கைங்கர்யம்”.
இது விஶேஷ(GOOD) தர்மம் ஆகும். இதனை ஶேஷத்வம் என்பர். இதில் சிறிது ஸ்வாதந்த்ர்யம் கலந்திருக்கும்.
ஆனால் லக்ஷ்மணன் அயோத்தியில், பெற்றொருக்கு துணையாக இருக்கவேண்டும் என்பதுதான் ராமரின் திருவுள்ளம் ஆகும்.
மேலே, பரதன் 14 ஆண்டுகள் ராமரை பிரிந்தும் அவருடைய திருப்பாதுகைகள் வைத்து ராஜ்யபரிபாலனத்தை செய்தார்.
இதனை பாரதந்த்ர்யம் என்பர். ராமருடைய திருவுள்ளம் உகக்க, ராமருடைய புத்திக்கு அனுசரித்து தொண்டாற்றினார்.
இந்த தர்மம் விஶேஷதரம்(BETTER) ஆகும்.
ஆனால் ஶத்ருக்நன் பரதனின்(ராமபக்தனின்) திருவுள்ளம் உகக்க தொண்டாற்றினார். இந்த தர்மம் விஶேஷதமம்(BEST) ஆகும்.
பகவத் பக்தியை விட பாகவத பக்தியே சிறந்தது என்று காட்டவே மேற்படி ஸ்லோகத்தில் செயப்பாட்டு வினை எடுத்தாளப்பட்டது.
நீத:-அழைத்துச் செல்லப்பட்டவன் ,ப்ரீதிபுரஸ்க்ருத: -கௌரவிக்கப்பட்டவன்/”தனக்கு எது இயல்போ அவ்வாறே
இருக்குமாறு விடப்பட்டவன்” என்பன வினையாலணையும் பெயர்கள்.
இரண்டும் செயப்பாட்டு வினையில் வந்து பாரதந்த்ர்யம் காட்டுகின்றன.(பரதனுக்கு அடிமைப்பட்டு கிடப்பதே அவனது இயல்பு/ஆநந்தம் ஆகும்.)
3. ஸ்ரீ ராமானுஜரும் ஸ்ரீ ப்ரஹ்ம ஸுத்ரமும்
ஸ்ரீ ராமானுஜர் தம்முடைய ஶ்ரீபாஷ்ய நூலில் கடவுள் வாழ்த்து/ ஆசார்யர்கள் வாழ்த்துப் பகுதியில்
“பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மஸுத்ர வ்ருத்திம் பூர்வாசார்யா: ஸங்க்ஷிபுஹு:|
தந்மதாநுஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே ||” – ஶ்ரீபாஷ்யம்-3
பொருள்: போதாயந பகவானால் செய்யப்பட்டுள்ளதும், மிக விரிவாகவுமுள்ள ப்ரஹ்மஸுத்ர வ்ருத்தியை
நம் பூர்வாசார்யர்கள் மிகச் சுருக்கமாக எழுதினார்கள். அவர்களுடைய திருவுள்ளத்தை அனுஸரித்தே
ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன.-என்று எழுதுகின்றார்.
இங்கு யாப்பு/சந்தஸ் கருதி “என்னால்(மயா)” என்னும் சொல் விடப்பட்டது.
எனவே அதையும் (அத்யாஸம்) சேர்த்துக் கொண்டு “என்னால் ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன”
என்று பொருள் கொள்ளவேண்டும். இதுவும் செயப்பாட்டு வினை ஆகும். இங்கு ராமானுஜரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார்.
பாஷ்யத்தினை தன் புத்திக்கு ஏற்றவாறு எழுதாமல், பூர்வாசார்யர்கள் (குஹதேவர், டங்கர், த்ரமிடர், நாதமுனிகள், ஆளவந்தார்
முதலியோர்) திருவுள்ளத்திற்கேற்ப எழுதுகின்றார். இந்தப் பண்பு
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாது – தன் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி, இது சுத்த உபதேச
வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார். என்ற உபதேச ரத்தினமாலை-71 ஆம் வெண்பாவுக்கேற்ப அமைகின்றது.
4. ஸ்ரீ நம்மாழ்வாரும் ஸ்ரீ எம்பெருமானும்
“தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்,
என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே” என்று தன்னை ஒரு கருவியாக்கி ,
தனது ப்ரபந்தங்களை எம்பெருமான் தானே எழுதிக்கொண்டான் என
ஸ்ரீ திருவாய்மொழியில் ஸ்ரீ நம்மாழ்வாரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார்.
5. ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ பெரியநம்பிகளும்
ஒருமுறை ஶ்ரீரங்கத்திற்கு பகைவர்களால் கேடு விளையுமென்று, எல்லோரும் அஞ்சியிருந்த சமயம்
ஸ்ரீ பெரியநம்பிகள் ஸ்ரீ ராமாநுஜரிடம்,-“நான் இத்திருத்தல நன்மை வேண்டி, வேத சம்ஹிதைகள்,ப்ரபந்தங்கள்
ஓதிக்கொண்டே, இத்திருவரங்கத்தை வலம் வரப் போகின்றேன். ஆனால் என்னுடன் மற்றொருவர்,
எனக்கு பின்னால் வர வேண்டும். அப்படி என்னுடன் வலம் வருபவர் –“ஒருவர் பின்னால் நான் செல்கிறேன்”- என்ற
எண்ணம் கொள்ளாதவராக இருத்தல் வேண்டும் என்றார். “அப்படி ஒருவர் கிடைப்பது அரிது”- என்றார் ஸ்ரீ ராமாநுஜர்.
”ஏன் !நம் ஸ்ரீ ஆழ்வானை அனுப்பலாகாதோ?“-என்றார் ஸ்ரீ நம்பிகள். சரியென ஸ்ரீ கூரத்தாழ்வாரை அனுப்பினார் ஸ்ரீ ராமானுஜர்.
ஸ்ரீ நம்பிகள் முன்னே செல்ல, பாரதந்த்ர்யத்தில் மூழ்கி முக்குளித்த ஸ்ரீ ஆழ்வானும் “தன் சித்தம், புத்தி, அபிமாநம் என ”
அனைத்திலும் பெரியநம்பிகளே தன்னுடைய ஆத்மா என்ற நிஷ்டையுடன், அவர் பின்னே செல்ல ,
திருவலமும் இனிதே முடிந்தது.
இந்த நிகழ்ச்சி ஸ்ரீ திருவாய்மொழி -ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -7-10-5 ஆம் பாசுர ஐதிஹ்யத்தில் காணலாம்.
6. ஸ்ரீ மதுரகவிகளும் ஸ்ரீ நம்மாழ்வாரும்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவும் மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே. – ஸ்ரீ கண்ணிநுண்சிறுத்தாம்பு- 2
ஸ்ரீ நம்மாழ்வார் திருநாட்டிற்கு எழுந்தருளும் பொழுது ,அவர் சீடரான ஸ்ரீ மதுரகவிகள், பிரிவாற்றாமையால் தானும்
உடனே ஸ்ரீ வைகுந்தம் செல்ல விழையாமல், தன் ஆசார்யன் திருவுள்ளத்திற்கு உகப்பாக
“அவர் அருளிய திருவிருத்தம்,திருவாசிரியம்,பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்னும் நான்கு
ப்ரபந்தங்களை உலகில் ப்ரசாரம் செய்து தன் வாழ்நாளைக் கழித்தார்.
இவர் “ஆசார்யர் ஸ்ரீ சடகோபருக்கு மேலாக தேவு மற்று அறியேன்” என்று வாழ்ந்தவர்.
————
இனி விஷயத்திற்கு (ஸ்ரீ பிராட்டி நடுவில் பிரிந்தது) வருவோம்.
ஸ்ரீ உத்தரகாண்டத்தில் 42 ஆம் ஸர்கத்தில் ஸ்ரீ ஸீதை கர்ப்பம் தரிக்கின்றாள். அப்படியான நாளில் ஶ்ரீராமர் அவளிடம்
“அழகான முகமுடையவளே ! வைதேஹீ! எனக்கு புத்திரன் பிறக்கின்ற புண்ணியம் கிட்டிற்று.
நீ ஆசையாக ஏதாவது எண்ணியிருந்தால்,அவையனைத்தையும் என்னிடம் கூறு” –என்றார்.
அதற்கு ஸ்ரீ ஸீதை – ஸ்ரீ ராகவரே! மிகுந்த புண்ணியம் பல உள்ளவர்களும் ,பழம் மற்றும் கிழங்கு முதலானவற்றை
மட்டும் உண்பவர்களும் ஆகிய முனிவர்களின் திருவடிகளின் கீழே வசிப்பதற்கு நான் விரும்புகின்றேன்.
கங்கையின் கரையில் உள்ளவைகளும், தூய்மை நிறைந்தவைகளுமான அவர்களின் பர்ணசாலைகளை
நான் விரும்புகின்றேன்.மேற்கூறிய ஒழுக்கமுள்ள முனிவர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளாவது வசிக்க விரும்புகின்றேன்.
இப்படியாக எனது ஆசைகள் உள்ளன” -என்றாள். இத்தகைய ஆசையை நிறைவேற்றும் விதமாக ,
உலகினர் ஸ்ரீ ஸீதை மீது கற்பித்த பொய்யான பழியை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அவளை ராமர் காட்டுக்கு அனுப்பினார்.
இந்தப் பிரிவிற்கு பலன் என்ன கிட்டியது என்றால் –ஸ்ரீ ராமர் தன்னை அன்புடன் அரண்மனையில் வைத்திருந்தாலும் ,
கானகம் அனுப்பினாலும் எந்தவிதமான வேறுபாடும் காணாமல் ;அவனுடைய நினைவிலேயே ஒன்றியபடி ஸ்ரீ ஸீதை இருந்தாள்.
இப்படியாகத் தன் பத்தினித் தன்மை மூலம் பாரதந்த்ர்யத்தை வெளிப்படுத்தியதே
ஸ்ரீ ராமனைப் பிரிந்த பயனாகும்.மஹரிஷி இதனை மேலும் விளக்குகின்றார்.
உத்தரகாண்டம் 48 ஆம் ஸர்கம் ஸ்ரீ லக்ஷ்மணன் அவளை கங்கை கரையில். ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்திற்கு அருகில்
இறக்கி விட்டான். ஸ்ரீ ராமர் அவளை கானகத்தில் விட்டு வர சொன்ன காரணத்தையும் கூறினான்.
ந கலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீ ஜலே |
த்யஜேயம் ராகவம் வம்ஶே பர்துர் மா பரிஹாஸ்யதி || -8
பொருள்: சுமித்திரையின் மகனே ! ராமன் மூலமாக உண்டான இந்த கர்ப்பம், இக்ஷ்வாகு குலத்திற்கு இல்லாமல்
போய்விடக் கூடாது என்ற காரணத்தால் அல்லவோ நான் இன்னமும் கங்கையில் விழுந்து உயிர் துறக்காமல் உள்ளேன் என்றாள்.
ஸ்ரீ நம்மாழ்வாரும் –“மாயும் வகையறியேன் வல்வினையேன்” என்கிறார். இங்கு பிரிவாற்றாமை காரணமாக ,
தன் புத்திக்கு அனுசரித்து தற்கொலை செய்துகொள்ளாமல், ஸ்ரீ ராமனின் திருவுள்ளத்திற்கு ஏற்ப,
அவன் குலம் தழைக்கவும், கர்ப்பம் வாழவும், தன் உயிரை பிடித்திருந்தாள்.
பதிர் ஹி தைவதம் நார்யா: பதிர்பந்து பதிர்கதி:|
ப்ராணைர் அபி ப்ரியம் தஸ்மாத் பர்து கார்யம் விஶேஷத: || – 17
பொருள்: எந்தக் காரணத்தினால் ஒரு பெண்ணிற்கு அவளது கணவன் தெய்வமாகவும், உறவினனாகவும்,மோக்ஷமாகவும்
உள்ளானோ ,அந்தக் காரணத்தை முன்னிட்டு மனைவியானவள் தனது உயிர் மற்றும் அதனினும் மேலாக வேறு ஏதாவது
இருந்தால் அதன் மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.- என்றாள்.
இப்படியாக நடுவிலே பிரிந்து பாரதந்த்ர்யத்தை வெளியிட்டாள்.
தன் மாமியார் ஸ்ரீ கௌசல்யாதேவியின் வழியிலே அச்சு பிசகாமல் நின்றாள்.
ஸ்ரீ மஹரிஷியும் தன்னுடைய மஹாகாவியத்திற்கு “ஸீதாயா: சரிதம் மஹத்” என்று பத்திரம் /பட்டா எழுதி கொடுத்துள்ளார்.
வழிபாட்டில் மக்களும், ஸ்ரீ பெருமாளை விட ஸ்ரீ பிராட்டிக்கே முதன்மை இடம் கொடுக்கின்றனர்.
ஸ்ரீ தைத்தீரிய உபநிஷத்தில்
“தபஸா ப்ரம்ஹ விஜிக்ஞாஸஸ்வ, தபோ ப்ரம்ஹ இதி”
(தவத்தினால் பரமனை அறியவேண்டும், தவமே பரமனாவான்” என்று காண்கிறோம்.
மேலும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் சொன்னபடி, தப: என்பது ஆண்பால் சொல். இது திருமாலைக் குறிக்கும்.
அதன் பொருளான சிந்தா(சிந்திக்கும் செயல்) என்பது பெண்பால் சொல். இது திருமகளைக் குறிக்கும்.
எனவே பிராட்டியும் தவசீலர்களின் இருப்பிடத்தில் வாழ விரும்பினாள்.
ஶ்ரீ: என்பது “ஶ்ரிங் ஸேவாயாம்” என்ற மூலச்சொல்லிலிருந்து பெறப்படும்.
ஶ்ரீ: – ஶ்ரயதே இதி ஶ்ரீ: என்பது வ்யுத்பத்தி.
இதற்கு நாராயணனை இருப்பிடமாக உடையவள்/ வணங்குபவள் / தொண்டு புரிபவள் என்பது பொருள்
(பாரதந்த்ர்ய, அந்ந்யார்ஹங்களுக்கு விளக்கம்).
ஶ்ரீ: ஶ்ரீயதே இதி ஶ்ரீ: என்று கொண்டால் பிற ஜீவாத்மாக்களுக்கு இருப்பிடம், வணங்கத்தக்கவள் ,
தொண்டினை ஏற்பவள் என்றும் பொருள்(க்ருபைக்கு விளக்கம்).
இதையே மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று “சிறையிருந்தவள் ஏற்றமாக” காவியத்தை தொடங்குகின்றார்.
ஸ்ரீ பிராட்டி, தான் திருவயிறு வாய்த்திருந்த தகவலை ,ஒருநாள் பூங்காவில் ஸ்ரீ பெருமாளோடு இருந்த சமயத்தில் தெரிவிக்கின்றாள்.
“என்ன வரம் வேண்டும்” என்று கேட்கிறார் ஸ்ரீ பெருமாள். நாட்டில் தன் மீது அபவாதம் கிளம்பியது என்று முன்னமே அறிந்தவள்,
ஸ்ரீ பெருமாளுக்கு எவ்விதத்திலும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே தபோவனம் செல்ல விருப்பம் தெரிவிகின்றாள்.
இதை அறியாத ஸ்ரீ பெருமாளும், மறுநாள் காலையில் ஸ்ரீ லக்ஷ்மணனுடன் அனுப்புவதாக சம்மதம் தெரிவிக்கின்றார்.
அதன் பிறகு நடக்கும் ஆலோசனையில் தான் பத்ரன் என்னும் ஒற்றன் மூலம் நாட்டில் நிலவும் அபவாதம் தெரிய வருகின்றது.
அவளை ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்தருகே விட்டு வரும்படி ஸ்ரீ இளையாழ்வாரை பணிக்கின்றார் ஸ்ரீ பெருமாள்.
பிறகு தொண்ணூற்று ஐந்தாம் ஸர்கத்தில் ,ஸ்ரீ லவகுசர்கள் மூலம் ஸ்ரீ ஸீதை விருத்தாந்தம் அறிகின்றார்.
அவளை திரும்ப அழைக்கின்றார். 48 ஆம் ஸர்கம் முதல் 97 ஆம் ஸர்கம் வரையில் நடந்த பிரிவில் பாரதந்த்ர்யம் வெளியாகின்றது.
“சிறையிருந்தவள்” என்று க்ருபையும், “ஏற்றம்” என்று பாரதந்த்ர்யமும் மற்றும் அநந்யார்ஹத்வமும் பொருள் தருகின்றன.
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply