ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/6. வருணனை வழி வேண்டு படலம்–

கடல் கடக்கும் உபாயம் உரைக்குமாறு இராமன் வீடணனைக் கேட்டல்

‘தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும் தோளால்
அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள் அன்றால்;
கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் பெருஞ் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல் கற்றாய்!’–1-

எண்ணுநூல்கற்றாய் – மதிக்கத்தக்க நல்ல நூல்களைக்
கற்றுணர்ந்தவனே! தொடக்கும் என்னில்- இந்தக் கடல் நமது
கட்டுக்கு உட்படுமானால்; இவ்வுலகு ஒரு மூன்றையும்- இந்த
மூன்று உலகங்களையும்; தோளால் அடக்கும் வண்ணமும்-
நமது தோள்களாலே அடக்கும் வண்ணமும்; அழித்தலும் ஒரு
பொருள் அன்றால் – அழிப்பதும் ஒரு பொருட்டல்ல;
கிடக்கும் வண்ண வெங்கடலினை – எதிரே பரந்து
கிடக்கின்ற நீலநிறமுள்ள இந்தக் கொடியகடலை; கிளர் பெருஞ்சேனை- கிளர்ந்து எழும் நமது
பெரிய சேனை; கடக்கும் வண்ணமும் எண்ணுதி- கடந்து
இலங்கை செல்வதற்குரிய வழியைப் பற்றி நினைப்பாயாக.

————–

கடல் கடக்க வீடணன் வழி கூறுதல்

‘கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக் கருதும்;
பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்; பரிவாய்
வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி வேறு
இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை’ என்றான். –2-

இந்த மாக்கடல்- நமக்கெதிரே உள்ள இந்தப் பெரிய
கடல்; உன் திருக்குல முதல் தலைவரால் பரந்தது- உனது
சிறந்த குலமான சூரிய குலத்திலே தோன்றிய முதல் தலைவரான
சகரர்களால் தோண்டப்பட்டுப் பரந்திருப்பதாகும்; கரந்து
நின்ற நின்தன்மையை- தெய்வ வடிவை மறைத்து மானிட
வடிவம் கொண்டு நின்ற உனது தன்மையை; அது செலக்கருதும்
– அக்கடல் தெய்வம் முழுதும் கடைபோக அறியும்; பரிவாய்
வரும் தரும்- நமக்குப் பரிவுடனே வரம் அளிக்கும் எனவே;
படை செல வழி- நமது படை கடலைக் கடந்து செல்வதற்குரிய
வழியை; எறிதிரைப் பரவையை- பொங்கும் அலைகளை உடைய
இந்தக் கடலை; வேறு இரந்து வேண்டுதி என்றான்- தனியே
இருந்து, சரணடைந்து இரந்து வேண்டிக் கொள்வாயாக என்றான்.

—————-

இராமன் துணைவருடன் கடற்கரையை அடைதல்

‘நன்று, இலங்கையர் நாயகன் மொழி’ என நயந்தான்,
ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல, உரவோன்,
சென்று வேலையைச் சேர்தலும், விசும்பிடை, சிவந்த
குன்றின் மேல் நின்று குதித்தன, பகலவன் குதிரை. -3-

நன்று இலங்கையர் நாயகன் மொழி – இலங்கையர்
வேந்தனான வீடணன் கூறிய மொழி நல்லதே; என நயந்தான்-
என்று விரும்பி உடன்பட்ட இராமபிரான்; ஒன்றுதன் பெரும்
துணைவரும்- நெருங்கியதனது சிறந்த துணைவர்களும்;
புடைசெல – இருபக்கமும் நெருங்கிவர; உரவோன் சென்று
வேலையைச் சேர்தலும்- வலிமை மிக்கவனாகிய இராமபிரான்
கடற்கரையை அடைதலும்; சிவந்த குன்றின் மேல்நின்று –
சிவந்த நிறம் வாய்ந்த உதயகிரியின் மேலிருந்து; பகலவன்
குதிரை – சூரியனுடைய தேரிலே பூட்டப்பட்ட குதிரைகள்;
விசும்பிடைக் குதித்தன – வானத்திலே குதித்துச்
செல்வனவாயின.

————–

இராமன் புல்லில் அமர்ந்து, வருண மந்திரத்தைத் தியானித்தல்

கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள் நீங்கிய கொள்கை,
செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள்
புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப் பொறி வரி அரவம்
விழுங்கி நீங்கியது ஒத்தது, வேலை சூழ் ஞாலம். 4-

வேலை சூழ் ஞாலம்- கடல் சூழ்ந்த இந்த உலகமானது;
கொழுங்கதிர்ப்பகை – செழுமைமிக்க சூரியனுடைய
கிரணங்களுக்குப் பகையாகிய; கோளிருள் நீங்கிய கொள்கை-
(இரவெல்லாம்) நிறைந்திருந்த இருள்நீங்கிய தன்மை; செழுஞ்சுடர்
பனிக் கலைஎலாம்- செழுமையான ஒளியை உடைய குளிர்ந்த
எல்லாக்கலைகளும்; நிரம்பியதிங்கள் – நிறைந்திருக்கும்
சந்திரனை; புழுங்கு வெஞ்சினத்து – மனம் புழுங்கிக்
கொடியசினத்தைஉடைய; அஞ்சனப் பொறி வரி அரவம்
– அஞ்சனம் போன்ற புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட
பாம்பாகியராகு; விழுங்கி நீங்கிய தொத்தது – விழுங்கி
உமிழ்ந்ததை ஒத்துக்காணப்பட்டது.

————–

‘தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக!’ என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி. –5-

தருண மங்கையை மீட்பதோர்-இளமைப் பருவத்தினளான
சீதையை இராவணனுடைய சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு
வருதற்குரிய ஒரு; நெறி தருக என்னும் பொருள் நயந்து-
வழியைத் தருவாயாக என்னும் பொருளை விரும்பி; நல்நூல்
நெறி அடுக்கிய புல்லில்- நல்ல நூலாகிய வேதத்தின் கூறிய
நெறிப்படி அடுக்கப்பட்ட தருப்பைப் புல்லில்; கருங்கடல்
நோக்கி – கருமை நிறமான கடலைப் பார்த்தபடி;
கருணையங்கடல் கிடந்தனன் – கருணைக் கடலான
இராமபிரான் படுத்தபடி இருந்தவன்; விதிமுறை வணங்கி-
வருணனைத் தொழவேண்டியமுறைப்படி தொழுது; – வருண
மந்திரம் எண்ணினான் – வருண மந்திரத்தைத்
தியானித்தவனாக இருந்தான்.

———–

ஏழுநாள் இராமன் இருந்தும் வருணன் வாராமை

பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும், பொறை தீர்
வாழி வெங் கதிர் மணி முகம் வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பன, ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன் வந்திலன், எறி கடற்கு இறைவன். -6-

பூழி சென்று தன் திருவுருப் பொருந்தவும்- கடற்கரைப்
புழுதியெல்லாம் இராமபிரானுடைய திருமேனியில் பொருந்தவும்;
பொறை தீர் வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும்-
குற்றம் நீங்கிய வெம்மை வாய்ந்த சூரியனுடைய கிரணங்கள்
அழகிய முகத்தைத் தடவவும்; வளர்ந்தான் – இராமபிரான்
தருப்பையின் மீது கண்களை மூடியவனாகப் படுத்திருந்தான்; ஒரு
பகல் ஊழி சென்றன ஒப்பன- ஒருநாள் கழிவது பல ஊழிகள்
செல்வன போன்றிருந்தது சென்றும்; அவை ஓர் ஏழு சென்றன-
அத்தகை நாட்கள் ஏழு சென்றன; எறிகடற்கு இறைவன்
வந்திலன் – அலையெறியும் கடல் அரசனான வருணன்
வந்தானல்லன்.

“ஒரு பகல் பற்பல ஊழிகளாய் விடும்’
என்ற திருவிருத்தம் நினைவு கூறத்தக்கது. இப்படிப்பட்ட ஏழு
நாள்கள் சென்றும் வருணன் வந்திலன்.

————-

இராமன் சினந்து மொழிதல்

‘ஊற்றம் மீக் கொண்ட வேலையான், “உண்டு”, “இலை”, என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம், யாம்’ எனும் மனத்தால்,
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்தென்னச்
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன, தாமரைச் செங் கண். –7-

ஊற்றம் மீக் கொண்ட வேலையான் – செருக்கு
மேலோங்கப் பெற்ற இந்தக் கடல் வேந்தன்; உண்டு, இலை
என்னும் மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம்-உண்டு, இல்லை
என்று சொல்லக் கேட்கவும் பெற்றோமில்லையாம்; எனும்
மனத்தால் – என்ற எண்ணத்தால்; ஏற்றம் மீக் கொண்ட
புனலிடை- பெருகிப் பொங்கி வரும் தண்ணீரிலே; எரி முளைத்தென்ன – நெருப்புத்
தோன்றியது போல; சீற்றம் மீக் கொண்டு- சினம் மேலோங்க;
தாமரைச் செங்கண் சிவந்தன- இராமபிரானுடைய தாமரை
மலர் போன்ற செம்மையான கண்கள் கோபத்தால் சிவந்தன.

————-

‘மாண்ட இல் இழந்து அயரும் நான், வழி, தனை வணங்கி,
வேண்ட, “இல்லை” என்று ஒளித்ததாம்’ என, மனம் வெதும்பி,
நீண்ட வில்லுடை நெடுங் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண்
பூண்ட வில் எனக் குனிந்தன, கொழுங் கடைப் புருவம். -8-

மாண்ட இல் இழந்து அயரும் நான்- மாண்புமிக்க
இல்லாளாகிய சீதாபிராட்டியை இழந்து வருந்தும் நான்;
வழிதனை வணங்கி வேண்ட- அந்த பிராட்டியை மீட்டு வரச்
செல்லவழியை வணங்கி வருணனை வேண்டவும்; இல்லை என்று
ஒளித்ததாம் என- வழிவிடுதற்கில்லை என்பதால் வருணன்
வராது ஒளிந்தனனோ என்று; மனம் வெதும்பி – இராமபிரான்
மனம் வெதும்பினானாக; நீண்ட வில்லுடை நெடுங்கனல்
உயிர்ப்பொடும்- நீண்ட ஒளியை உடைய நெருப்பைப் போன்ற
பெருமூச்சுடனும்; நெடு நாண் பூண்டவில் என- நீண்ட நாண்
பூட்டிய வில்லைப் போலவும்; கொழுங்கடைப் புருவம்
குனிந்தன – செழுமையான புருவங்கள் வளைந்தன.

—————

‘ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர்பால் ஒருவர்
சென்று வேண்டுவரேல், அவர் சிறுமையின் தீரார்;
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான்;
நன்று, நன்று!’ என, நகையொடும் புகை உக, நக்கான். -9-

ஒன்றும் வேண்டலர் ஆயினும்- ஒருவர், எவரிடமும்
எதையும் வேண்டாதவர் என்றாலும்; ஒருவர் பால் ஒருவர்
சென்று வேண்டுவரேல் – ஒருவரிடம் ஒருவர்சென்று ஒரு
பொருளை வேண்டுவாராயின்; அவர் சிறுமையின் தீரார்-
அவ்வாறு வேண்டியவர் சிறுமையிலிருந்து நீங்க மாட்டார்;
இன்று வேண்டியது- இன்று நான் வருணனை வேண்டியதாகிய;
நெறிதனை எறிகடல் மறுத்தான்- இலங்கைக்குச் செல்லும்
வழியைத் தர அலைபொங்கும் கடல் வேந்தன் மறுத்துவிட்டான்;
நன்று நன்று என- நல்லது நல்லது என்று; நகையொடு புகை
உக- சிரிப்போடு, கோபத்தால் புகையும் தோன்ற; நக்கான்-
இராமபிரான் கோபச்சிரிப்புச் சிரித்தான்.

——————-

‘”பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன், ஆதலின், தகைசால்
வீரம் நீங்கிய மனிதன்” என்று இகழ்ச்சி மேல் விளைய,
ஈரம் நீங்கியது, எறி கடல் ஆம்’ என இசைத்தான். -10-

பாரம் நீங்கிய சிலையினன்- பெருமையில்லாத
வில்லையுடையவன்; இராவணன் பறிப்பத்தாரம் நீங்கிய
தன்மையன்- இராவணன் கவர்ந்து கொண்டமையால் மனைவியை
நீங்கிய தன்மையினன்; ஆதலின், தகை சால் வீரம்
நீங்கியமனிதன் – ஆதலால், தகுதி நிறைந்ததான வீரம்
நீங்கிய மானிடன்; என்று இகழ்ச்சி மேல் விளைய –
எனக்கருதி, மேலும் இகழ்ச்சி தோன்ற; எறிகடல்-
அலையெறியும் கடலுக்கு அரசனான வருணன்; ஈரம் நீங்கியதாம் என இசைத்தான் – என்னிடம் இரக்கம்
இல்லாதவனானான் என்று மீண்டும் இராமன் கூறினான்.

————-

‘புரந்து கோடலும், புகழொடு கோடலும், பொருது
துரந்து கோடலும், என்று இவை தொன்மையின் தொடர்ந்த்
இரந்து கோடலின், இயற்கையும் தருமமும் எஞ்சக்
கரந்து கோடலே நன்று; இனி நின்றது என், கழறி? -11-

புரந்து கோடலும்-(ஒருவரிடமிருந்து ஒரு பொருளைப் பெற
விரும்பினால்) அவர்களைப் பாதுகாத்து அவரிடமிருந்து
வேண்டிய பொருளைப் பெற்றுக் கொள்வதும்; புகழொடு
கோடலும்- பொருளை வைத்திருப்பவருடன் போர் செய்து,
வெற்றி பெற்று, புகழோடு அப்பொருளைப் பெற்றுக்
கொள்ளுவதும்; பொருது துரந்து கோடலும்-போரிட்டு வென்று,
பகைவனைத் துரத்திவிட்டுப் பொருளைக் கைப்பற்றிக்
கொள்வதும்; என்று இவை தொன்மையின் தொடர்ந்த- என்ற
இவையெல்லாம் தொன்மைக் காலம் முதல் தொடர்ந்து
வருவனவாம்; இரந்து கோடலின்- (இருந்தும், நான் வருணனை
வேண்டி வழிபெற விரும்பினேன்) அப்படி இரந்து பெறுவதைவிட;
இயற்கையும் தருமமும் எஞ்ச – எனது இயற்கைக்கும்,
அறத்துக்கும் குறைவு உண்டாகும்படி; கரந்து கோடலே நன்று-
நமக்கு வேண்டிய வழியைக் கவர்ந்து கொள்வதே இனி நல்லது;
இனி நின்றது என் கழறி – இனி வேறு பேசி என்ன பயன்
(வருணனைப் பலவாறு குறை கூறி என்னபயன்).

———-

‘”கானிடைப் புகுந்து, இருங் கனி காயொடு நுகர்ந்த
ஊனுடைப் பொறை உடம்பினன்” என்று கொண்டு உணர்ந்த
மீனுடைக் கடல் பெருமையும், வில்லொடு நின்ற
மானுடச் சிறு தன்மையும், காண்பரால், வானோர். -12-

கானிடைப் புகுந்து – நாட்டை விட்டுவிட்டு
காட்டுக்கிடையிலே சென்று வாழ்ந்து; இரும் கனியொடு காய்
நுகர்ந்த- பெரிதான பழங்களையும் காய்களையும் உண்டதனால்;
ஊனுடைப் பொறை உடம்பினன்- உண்டான தசையையும்
பெரிய உடலையும் உடையவன் நான்; என்று கொண்டு
உணர்ந்த- என்று கருதி, கேவலமாக என்னை உணர்ந்த;
மீனுடைக் கடற் பெருமையும் – மீன்களை உடைய கடலின்
பெருமையையும்; வில்லொடு நின்ற மானுடச் சிறுதன்மையும்-
(படைத்துணையேதுமின்றி கையில் வில்லேந்தி நின்ற மானுடத்தின்
சிறுமையையும்; வானோர் காண்பரால்- தேவர்கள் காணட்டும்.

——————-

‘ஏதம் அஞ்சி, நான் இரந்ததே, “எளிது” என இகழ்ந்த
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக,
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும,
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர். -13-

ஏதம் அஞ்சி நான் இரந்ததே- தீமைக்குப் பயந்து நான்
வருணனை இரந்து வேண்டியதனையே கொண்டு; எளிதென
இகழ்ந்த – எளியவன் என்று இகழ்ந்து வராத; ஓதம்
அஞ்சினோடு இரண்டும் – ஐந்துடன் இரண்டாகிய ஏழு
கடல்களும்; வெந்து ஒரு பொடியாக- எனது அம்பால் வெந்து
தூள்தூளாகவும்; பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து –
ஐம்பெரும் பூதங்களும் வந்து என்னை வணங்கி; உயிர்
கொண்டு பொரும- உயிர் கொண்டு வாழ வேண்டி அழுது
தேம்பவும்; பாதம் அஞ்சலர்- நடந்து செல்ல அஞ்சாதவர்களாய்;
என் படைஞர் செஞ்செவே படர்வர்- எனது வானரப் படை
வீரர்கள் செம்மையாகக் கடலிடையிலே செல்வார்கள்.

—————–

‘மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்,
வெறுமை கண்ட பின், யாவரும் யார் என விரும்பார்;
குறுமை கண்டவர் கொழுங் கனல் என்னினும் கூசார்;
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்.’ -14-

மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர்- மறுமை இன்பமான
முத்தி இன்பத்தை அனுபவித்த உண்மையான ஞானிகள்;
ஞாலத்து வரினும் – இந்த உலகத்துக்கு வந்தார்களாயினும்
அவரிடம்; வெறுமை கண்டபின் – தாம் விரும்பும்
சிறப்பியல்பின்மை கண்டால்; யாவரும் யார் என விரும்பார்-
எவரும் அந்த ஞானிகளை யார் என்று கேட்டறிந்து
போற்றவிரும்பமாட்டார்; குறுமை கண்டவர் – ஒருவாறு உருவம்
சிறிதாயிருப்பதைப் பார்த்தவர்கள்; கொழுங்கனல் என்னினும்
கூசார்- அச்சிறிய வடிவுடையவர்கள் செழுமையான நெருப்பை ஒத்த திறம்
வாய்ந்தவர் என்றாலும் அவர்களுக்கு அஞ்சமாட்டார்; சிறுமை
கண்டவர்- உருவத்திலே சிறுமையைப் பார்த்தவர்கள்; பெருமை
கண்டு அல்லது தேறார் – பெருமை, வலிமைகளைக்
கண்டாலல்லது தெளிவு பெறமாட்டார்.

————-

இராமன் வேண்டுகோள்படி இலக்குவன் வில்லைக் கொடுத்தல்

திருதி என்பது ஒன்று அழிதர, ஊழியில் சினவும்
பருதி மண்டிலம் எனப் பொலி முகத்தினன், பல் கால்,
‘தருதி, வில்’ எனும் அளவையில், தம்பியும் வெம்பிக்
குருதி வெங் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான். 15-

திருதி என்ப தொன்று அழிதர- மனவடக்கம் என்ற
ஒன்று குறைந்திருப்பதால்; ஊழியில் சினவும் பரிதி மண்டிலம்
என- ஊழிக் காலமுடிவில் சினந்து தோன்றும் சூரிய மண்டிலம்
என்று கூறும்படியாக; பொலிமுகத்தினன்- பொலிந்து தோன்றும்
முகத்தினனான இராமபிரான்; பலகால் தருதி வில் எனும்
அளவையின்- பலமுறை ‘வில்லைத்தா’ என்று கேட்ட அளவிலே;
தம்பியும் வெம்பி – தம்பியான இலக்குவனும் வெகுளியால்
வெம்பி; குருதி வெங்கனல் உமிழ்கின்ற கண்ணினன்-
குருதியோடு, கொடிய தீப்பொறி உமிழும் கண்களை உடையவனாய்;
கொடுத்தனன்- இராமபிரானிடம் வில்லைக் கொடுத்தான்.

—————

இராமன் கடலின்மேல் அம்பு விடுதல்

வாங்கி வெஞ் சிலை, வாளி பெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு, தோள்வலம் வீக்கினன்; கோதையை விரலால்
தாங்கி, நாணினைத் தாக்கினன்; தாக்கிய தமரம்,
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல். 16-

வெஞ்சிலை வாங்கி-இலக்குவன் கொடுத்த கொடியவில்லை
கைகளில் வாங்கி; வாளி பெய்புட்டிலும் – அம்புகள்
பெய்துள்ள அம்பறாத் தூணியையும்; மலைபோல் வீங்கு
தோள்வலம் வீக்கினன்-மலை போன்ற பெரிய தோளின் வலது
பக்கம் கட்டினான்; கோதையை விரலால் தாங்கி –
விரல்களுக்கிடும் உறையையும் விரல்களில் அணிந்து;
நாணினைத் தாக்கினன் – வில்லின் நாணை இழுத்துப்
பிடித்தான்; தாக்கியதமாம்- அவ்வாறு தாக்கியதால் உண்டான
நாண் ஒலி; ஓங்குமுக்கணான் தேவியை- பெருமையில்
ஓங்கிய முக்கண் மூர்த்தியான சிவபிரானது தேவியான
உமாதேவியை; ஊடல் தீர்த்துளது- சிவபிரானுடன் கொண்ட
ஊடலைத் தீர்த்தது.

————-

மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல, வடித்த,
சீரிது என்றவை எவற்றினும் சீரிய, தெரிந்து,
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடு சரம் துரந்தான். 17-

மாரியின் பெருந்துளியினும் வரம்பில – மழையின்
பெரியதுளிகளை விட அளவற்றவையும்; வடித்த சீரிது
என்றவை எவற்றினும் சீரிய- கூர்மையானவையும் சிறந்தவை
எனக் கூறப்படும் எல்லாவற்றையும் விடச் சிறந்தவையும் ஆகிய
அம்புகளை; தெரிந்து – தேர்ந்து எடுத்து; பார்இயங்கு
இரும்புனல் எலாம்- நிலத்தில் பரந்துள்ள நீரெல்லாவற்றையும்;
முடிவினில் பருகும் சூரியன் கதிர் அனையன- ஊழிக்
காலத்தின் இறுதியில் பருகுகின்ற சூரிய கிரணங்களைப்
போன்றவையும் ஆகிய; சுடு சரம் துரந்தான்- வெப்பம் மிக்க
அம்புகளைக் கடல் மீது எய்தான்.

————-

பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற
வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கி,
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும் மடி கொடியன சுடு சரம் எய்தான். 18-

பெரிய மால் வரை ஏழினும்- பெரிய, கரிய மலைகளான
ஏழையும் விட; பெரு வலி பெற்ற- மிகுந்த வலிமையை உடைய;
வரி கொள் வெஞ்சிலை- கட்டமைந்த கொடிய வில்லை; வளர்
பிறையாம் என வாங்கி- வளர்பிறைச் சந்திரன் எனக் கூறுமாறு
நாணால் வளைத்து; திரிவ நிற்பன யாவையும்- சரம், அசாம்
ஆகிய எல்லாவற்றையும்; முடிவினில் தீக்கும்- யுகமுடிவிலே
தீய்த்து அழிக்கின்ற; எரியின் மும்மடி கொடியன – நெருப்பை
விட மூன்று மடங்கு கொடியனவான; சுடு சரம் எய்தான்- சுடு
சரங்களை இராமபிரான் கடலின் மீது எய்தான்.

—————

கடல் அடைந்த நிலையும், அம்புகளின் செயலும்

மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த,
பேன நீர் நெடு நெய் என, பெய் கணை நெருப்பால்
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது, கடற் குட்டம். 19-

மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா-
கடலில் உள்ள மீன்களும், நாகங்களும் விண்ணைத் தொடும்
மலைகளும் விறகாகவும்; ஏனை நிற்பன யாவையும்- மற்றும்
அங்கு நிற்கும் மரங்களும்; மேல் எரி எய்த- கடல்மீது
நெருப்புப்பற்றி எரிதலால்; பேன நீர் நெடு நெய் என-
நுரையோடு கூடிய கடல் நீர் எல்லாம் நெய்யாகவும்; பெய்கணை
நெருப்பால்- இராமன் கடல்மீது விட்ட அம்புகளாகிய
தீயினால் ; கடற்குட்டம்- அக் கடலாகியபள்ளம்; கூனை
அங்கியின் குண்டம் ஒத்தது- வளைந்த நெருப்பெரியும் யாக
குண்டத்தை ஒத்திருந்தது.

————–

பாழி வல் நெடுங் கொடுஞ் சிலை வழங்கிய பகழி,
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி,
ஊழி வெங் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி,
ஆழி மால் வரைக்கு அப் புறத்து இருளையும் அவித்த. 20

பாழிவல் நெடுங் கொடுஞ்சிலை- இராமபிரானுடைய
பெரிய, வலிய நெடிய, கொடிய வில்; வழங்கிய பகழி- வழங்கிய
அம்புகள்; ஏழு வேலையும் எரியொடு புகைமடுத்து ஏகி-ஏழு
கடல்களிலும் நெருப்புடன் புகையை நிறைத்துக் கொண்டு சென்று;
ஊழிவெங்கனல் கொழுந்துகள்- ஊழிக்காலத்தில் தோன்றும்
வெம்மையான தீயினது கொழுந்துகளைப் போல;, உருத்து
எழுந்து ஓடி- சினந்து எழுந்து ஓடி; ஆழிமால் வரைக்கு
அப்புறத்து – சக்கரவாள கிரிக்கும் அப்புறத்துள்ள; இருளையும்
அவித்த- இருட்டையும் அணைத்தன (நீக்கின).

————-

மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கிச்
செரும, வானிடைக் கற்பக மரங்களும் தீய,
நிருமியா விட்ட நெடுங் கணை பாய்தலின், நெருப்போடு
உருமு வீழ்ந்தெனச் சென்றன, கடல்-துளி உம்பர். 21-

மருமதாரையின் எரியுண்ட மகரங்கள்- அம்பு தைத்தலால்
உயிர் நிலையில் எரியுண்ட மகரமீன்கள்; மயங்கிச் செரும-
மயக்கமுற்று நெருங்கவும்; வானிடைக் கற்பக மரங்களும் தீய-
விண்ணுலகத்திலுள்ள கற்பக மரங்களும் தீய்ந்து போகவும்;
நிருமியாவிட்ட நெடுங்கணை பாய்தலின்- இராமபிரான்
சங்கற்பித்து விட்ட நெடிய அம்புகள் பாய்தலால்; நெருப்போடு
உருமு வீழ்ந்தென- நெருப்புடன் இடியும் சேர்ந்து விழுந்தது
போல்; கடல் துளி உம்பர் சென்றன- கடல்நீர் விண்ணுக்குச்
சென்றது.

————-

கூடும் வெம் பொறிக் கொடுங் கனல் தொடர்ந்தெனக் கொளுந்த,
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன் உம்பர்
ஆடும் மங்கையர் கருங் குழல் விளர்த்தன – அளக்கர்க்
கோடு தீந்து எழ, கொழும் புகைப் பிழம்பு மீக் கொள்ள. 22-

கூடும் வெம்பொறிக் கொழுங்கனல்- வெப்பமான
தீப்பொறிகளோடு கூடிய கொழுந்துவிட்டெரியும் நெருப்பு;
தொடர்ந்தெனக் கொளுந்த – தொடர்ந்து பற்றிக்
கொளுத்துவதாலே; ஓடும் மேகங்கள் பொரிந்து இடை
உதிர்ந்தன – வானத்திலே ஓடுகின்ற மேகங்கள் பொரிந்து போய்
இடையே உதிர்ந்தன; அளக்கர்கோடு தீந்து எழ – கடல் நீர்
கொதித்து கடலெல்லையைக் கடந்து மேலே பரந்து செல்ல;
கொழும்புகைப் பிழம்பு மீக்கொள- அதனாலே கொழுவிய
புகைத் தொகுதி மேல் சென்று சூழ; உம்பர் ஆடும் மங்கையர்-
விண்ணுலகத்திலே நாட்டியமாடும் நடன மங்கையரின்; கருங்குழல்
விளர்த்தன- கரிய கூந்தலும் வெளிறிப் போயின.

—————-

நிமிர்ந்த செஞ் சரம் நிறம்தொறும் படுதலும், நெய்த்தோர்
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல் உருவத்
துமிந்த துண்டமும் பல படத் துரந்தன, தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும் சிதறி. 23-

நிமிர்ந்த செஞ்சரம்- வளைதலில்லாது நிமிர்ந்துள்ள
செம்மையான அம்புகள்; நிறந்தொறும் படுதலும்- மார்புகள்
தோறும் சென்று படுதலால்; நெய்த்தோர் உமிழ்ந்து உலந்தன
– இரத்தம் சிந்தி இறந்தனவான; மகரங்கள் உலப்பில-
சுறாமீன்கள் அளவில்லாதனவாம்; உருவத் துமிந்த துண்டமும்-
இராமபாணம் ஊடுருவித்துண்டித்த துண்டங்களும்;
பலபடத்துரந்தன – பலவாக எங்கும் சிதறலாயின; தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி- தொடர்ந்து
அம்புகள் பாய்வதால் திமிங்கிலங்களும், திமிங்கிலகிலங்களும்
சிதறி (எங்கும் துண்டுகள் பரந்தன).

திமிங்கிலம் – மீன்களை
விழுங்கும். ஒருவகைப் பெரியமீன். அதையும் தின்னவல்ல மிகப்
பெரியமீன் திமிங்கில கிலம்

———-

நீறு மீச்செல, நெருப்பு எழ, பொருப்பு எலாம் எரிய,
நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய,
ஆறு கீழ்ப் பட, அளறு பட்டு அழுந்திய அளக்கர்
சேறு தீய்ந்து எழ, காந்தின சேடன் தன் சிரங்கள். 24-

நூறும் ஆயிர கோடியும் கடுங்கணை நுழைய – நூறும்,
ஆயிரமும் கோடியுமாக விரைந்து பாயும் அம்புகள் கடலில்
நுழைவதால்; நீறு மீச்செல நெருப்பெழ- சாம்பல் மேலே
செல்லும்படி நெருப்பு மேலோங்கி எழுதலால்; பொருப் பெலாம்
எரிய – மலைகளெல்லாம் தீப்பற்றி எரிந்தன; ஆறு கீழ்ப்பட-
அம்புகள் கீழேயும் நுழைவதால் பாதாளத்துக்கு வழி உண்டாக;
அளறுபட்டு அழுந்திய அளக்கர் – கீழே சேறுபட்டு
அழுந்தியிருந்த கடல்; சேறு தீய்ந்து எழ- சேறும் தீய்ந்து
கருகி மேலே எழுதலால்; காந்தின சேடன்தன் சிரங்கள்-
பூமியைச் சுமக்கும் ஆதிசேடனுடைய ஆயிரம் தலைகளும்
வெதும்பின.

—————–

மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின, மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என, பொரு கணை எரிய்
உய்த்த கூம்பொடு நெடுங் கலம் ஓடுவ கடுப்ப,
தைத்த அம்பொடும் திரிந்தன, தாலமீன் சாலம். 25-

பொருகணை எரிய- இராமபிரானுடைய போர்த் தொழில்
வல்ல அம்புகள் கொழுந்து விட்டு எரிவதால்; மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என- வழக்கில் பொய்ச் சாட்சி
கூறியவன் குலத்தோடு அழிந்து படுவது போல; மொய்த்த மீன்
குலம் முதல் அற முருங்கின- நெருங்கிய மீன் கூட்டமெல்லாம்
அடியோடு அழியலாயின; தாலமீன் சாலம்- பனைமீன்களின்
வரிசையானது; தைத்த அம்பொடு திரிந்தன- உடலில் தைத்த
அம்போடு திரிவன;உய்த்த கூம்புடை நெடுங்கலம்- கடலில் செலுத்தப்பட்ட
கூம்புகளை உடைய நெடிய மரக்கலங்கள்; ஓடுவ கடுப்ப-
ஓடுவதை ஒத்திருந்தன.

—————–

சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய,
அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்ப அரும் அளக்கர்;
பந்தி பந்திகளாய் நெடுங் கடுங் கணை படர,
வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன, சில மீன். 26-

சிந்தி ஓடிய குருதி வெங்கனலொடு செறிய- அம்பு
தைத்தலால் மீன் முதலியவற்றினிடமிருந்து சிந்தி ஓடிய இரத்தம்
வெவ்விய நெருப்புடன் செறிவதால்; அந்தி வானகம் கடுத்தது-
அந்தி வானத்தை ஒத்திருந்தது; அவ்வளப்படும் அளக்கர்-
அந்த அளவிடமுடியாத கடல்; பந்தி பந்திகளாய்- வரிசை
வரிசையாக; நெடுங்கணை படர – நீண்ட அம்புகள் பரந்து
படர்ந்தமையால்; சிலமீன் வெந்து தீந்தன கரிந்தன
பொரிந்தன- மீனினமெல்லாம் வெந்து, தீய்ந்து, கரிந்து பொரிந்து
போயின.

—————

வைய நாயகன் வடிக் கணை குடித்திட, வற்றி,
ஐய நீர் உடைத்தாய், மருங்கு அருங் கனல் மண்ட,
கை கலந்து எரி கருங் கடல் கார் அகல் கடுப்ப,
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன, சில மீன். 27-

வையநாயகன் வடிக்கணை குடித்திட – உலகின்
நாயகனாகிய ராமபிரான் எய்த கூர்மையான அம்புகள் கடல்
நீரைக் குடித்து விடுவதால்; வற்றி, ஐயநீர் உடைத்தாய்-
கடல் தண்ணீர் வற்றிப் போக சிறிதளவு நீரே கடலில் இருக்க;
மருங்கு அருங்கனல் மண்ட-பக்கங்களில் எல்லாம் அணைப்பதற்கரிய நெருப்புப் பற்றி
எரிய; கைகலந்து எரி கருங்கடல்- எல்லாப் பக்கங்களிலும்
நெருப்பு கலந்து எரியும் கருங்கடல்; கார் அகல் கடுப்ப-
கரிய சட்டியான வாணலியை ஒத்திருக்க; வெய்ய நெய்யிடை
வேவன ஒப்பன சிலமீன்- சிலமீன்கள் காய்ந்த நெய்யிலே
வேகின்றதை ஒத்திருந்தன.

————-

குணிப்ப அருங் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப,
கணிப்ப அரும் புனல் கடையுறக் குடித்தலின், காந்தும்
மணிப் பருந் தடங் குப்பைகள் மறி கடல் வெந்து,
தணிப்ப அருந் தழல் சொரிந்தன போன்றன, தயங்கி. 28-

குணிப்ப அருங் கொடும் பகழிகள்- அளவிட முடியாத
கொடிய அம்புகள்; குருதிவாய் மடுப்ப- இரத்தம் தோய்ந்த
தமது வாய் வழியே சென்று சேருமாறு; கணிப்பரும் புனல்-
அளவிடமுடியாத கடல் நீரை; கடையுறக் குடித்தலில் –
கடைபோகக் குடிப்பதாலே; காந்தும் மணிப்
பருந்தடங்குப்பைகள்- கடலின் கீழே ஒளிவீசும் பெரிய,
விசாலமான மணிகளின் குவியல்கள்; மறிகடல் வெந்து-
அலைமறியும் கடல் எல்லாம் வெந்து போக; தணிப்பருந்தழல்
சொரிந்தன போன்றன தயங்கி- தணிக்க இயலாத தணல்
வெப்பம் சொரியக் கிடப்பது போல விளங்கிக் காணப்பட்டன.

————-

எங்கும் வெள்ளிடை மடுத்தலின், இழுதுடை இன மீன்
சங்கமும், கறி கிழங்கு என, இடை இடை தழுவி,
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த்
பொங்கு நல் நெடும் புனல் அறப் பொரித்தன போன்ற. 29-

எங்கும் வெள்ளிடை மடுத்தலின்- அம்புகள் எங்கும்
தண்ணீர் இல்லாது வெற்றிடமாக்கி விட்டதால்; இழுதுடை
இனமீன் சங்கமும்- நிணத்தை உடைய மீன்களும் சங்குகளும்;
கறி, கிழங்கென இடைஇடை தழுவி- காய்களும், கிழங்குகளும்
இடையே கிடந்தது போல் இடையே கலந்து பொருந்தி; அங்கம்
வெந்து- தம்முடல் முழுதும் வெந்து போய்; அளற்றிடை
அடுக்கிய கிடந்த- சேற்றிலே அடுக்கடுக்காகக் கிடந்தவை;
பொங்கும் நல்நெடும் புனலற- பொங்கி எழும் நிறைந்த நீர்
முழுதும் வற்றிப் போக; பொரிந்தன போன்ற- பொரிந்து
கிடந்தன போன்றிருந்தன.

————–

அதிரும் வெங் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப,
வெதிரின் வல் நெடுங் கான் என வெந்தன, மீனம்;
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல் திரைகளும் பொருவன, ஒரு பால். 30-

அதிரும் வெங்கணை- அதிர்ந்து வருகின்ற வெம்மைமிக்க
அம்புகள்; ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப- ஒன்றுடன்
ஒன்று மோதுவதால் நெருப்பை உமிழ; வெதிரின் வல்
நெடுங்கான்என- வலிய, பெரிய மூங்கில்காடு தீப்பற்றி எரிவது
போல; மீனினம் வெந்தன- மீன் கூட்டமெல்லாம் தீயில்
வெந்தன; பொதுவின் மன்னுயிர்க் குலங்களும்- கடலில்
வாழுகின்ற பொதுவான உயிரினங்களின் குழுக்களும்; துணிந்தன
பொழிந்த- அம்புகளால் துணிக்கப்பட, அதனால் பொழிந்த;
உதிரமும் கடல் திரைகளும்- இரத்தமும் கடல் அலைகளும்;
ஒரு பால் பொருவன- ஒரு பக்கம் மோதுவன வாயின.

————

அண்ணல் வெங் கணை அறுத்திட, தெறித்து எழுந்து அளக்கர்ப்
பண்ணை வெம் புனல் படப் பட, நெருப்பொடும் பற்றி,
மண்ணில் வேர் உறப் பற்றிய நெடு மரம், மற்றும்,
எண்ணெய் தோய்ந்தென எரிந்தன, கிரிக் குலம் எல்லாம். 31-

அண்ணல் வெங்கணை அறுத்திட- இராமபிரான் எய்த
கொடிய அம்புகள் அறுப்பதாலே; தெறித்து எழுந்து
அளக்கர்ப் பண்ணைவெம்புனல்- மேலே தெறித்து எழுந்த
கடலாகிய நீர் நிலையின் கொதிக்கும் நீர்; மண்ணின் வேர்
உறப் பற்றிய நெடுமரம்- மண்ணிலே வேரூன்றி வளர்ந்த
நீண்ட மரங்களும்; மற்றும் கிரிக்குலம் எல்லாம்- மற்றும்
மலைக் கூட்டங்கள் எல்லாமும்; எண்ணெய் தோய்ந்தென
எரிந்தன- எண்ணெயில் தோய்ந்தன போல எரியலாயின.

————–

தெய்வ நாயகன் தெரி கணை, ‘திசை முகத்து ஒருவன்
வைவு இது ஆம்’ என, பிழைப்பு இல மனத்தினும் கடுக,
வெய்ய வல் நெருப்பு இடை இடை பொறித்து எழ, வெறி நீர்ப்
பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தது, புணரி. 32-

தெய்வ நாயகன் தெரிகணை- தெய்வங்களுக் கெல்லாம்
தலைவனான இராமபிரான் தெரிந்தெடுத்து எய்த அம்புகள்; திசை
முகத்து ஒருவன் வைவு இதாமென- பிரமதேவன் கொடுத்த
சாபம் இது என்று கூறும்படி; பிழைப்பில மனத்தினும் கடுக-
தவறுதலின்றி மனத்தைவிட வேகமாகச் செல்ல; வெய்ய
அந்நெருப்பு இடையிடை பொறித்து எழ- அதனால் வெம்மை
நிறைந்த நெருப்பு இடையிடையே தீப்பொறிகளுடன் மேலே எழ;
புணரி- அக்கடல்; வெறி நீர்ப் பொய்கை- மணம் மிக்க
நீரையுடைய பொய்கை; தாமரை பூத்தெனப் பொலிந்தது-
தாமரை மலர்களைப் பூத்தது போலப் பொலிந்தது.

—————–

செப்பின், மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமே? அது கண்டனம், உவரியில்; ‘தணியா
உப்பு வேலை’ என்று உலகு உறு பெரும் பழி நீங்கி,
அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ, அளக்கர்? 33-

செப்பின்- சொல்லுவோமானால்; மேலவர் சீறினும்-
மேலோர்கள் வெகுண்டாலும்; அது சிறப்பாதல் தப்புமே- அது
நன்மையாவது தவறுமோ? (தவறாது); அது கண்டனம்- அதனை
இப்போது நேரிலே பார்த்தோம்; உவரியில் தணியா உப்பு
வேலை என்று- கடலில் குறையாத உப்பு நிறைந்திருத்தலால்
‘உப்புக்கடல்’ என்று; உலகு உறு பெரும் பழி நீங்கி- உலகம்
இது வரை கூறிய பெரியபழி இன்று நீங்கி; அப்பு வேலையாய்
நிறைந்தது- அம்புக் கடலாக நிறைந்திருந்தது; அளக்கர்
குறைந்ததோ- கடல் குறைவுற்றதோ; (இல்லை)

—————

தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்களும் தானே
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ? –
பாரை உண்பது படர் புனல்; அப் பெரும் பரவை
நீரை உண்பது நெருப்பு எனும் அப் பொருள் நிறுத்தான்! 34-

தாரை உண்ட பேரண்டங்கள் அடங்கலும்- ஒன்றன்
மேல் ஒன்றாக ஒழுங்குபட அமைந்துள்ள பெரிய அண்டங்கள்
அனைத்தையும்; வாரி உண்டு அருள் செய்தவற்கு- ஊழிக்
காலத்திலே அவை அழியாத படி அண்டங்களை எல்லாம் வாரி
உண்டு காத்து அருள் செய்தவனாகிய எம்பெருமானுக்கு; இது
ஒரு வலியோ-கடல் நீரை வற்றச் செய்த இது ஒரு வலிமையோ;
பாரை உண்பது படர்புனல் – நிலத்தை உண்பது நிறைந்து
பரவும் நீரான கடல்; அப்பெரும் பரவை நீரை-அந்தப் பெரிய
கடலில் உள்ள தண்ணீரை; உண்பது நெருப்பு- உண்ணும்
வலிமை உடையது நெருப்பு; எனும் அப்பொருள் நிறுத்தான்-
என்று கூறும் அந்தப் பொருளை நிலை நாட்டி விட்டான்

—————–

மங்கலம் பொருந்திய தவத்து மா தவர்,
கங்குலும் பகலும் அக் கடலுள் வைகுவார்,
அங்கம் வெந்திலர், அவன் அடிகள் எண்ணலால்;
பொங்கு வெங் கனல் எனும் புனலில் போயினார். 35-

மங்கலம் பொருந்திய தவத்து மாதவர் – நன்மை
பொருந்தியதாகிய சிறந்த தவத்தைச் செய்யும் மாமுனிவர்கள்;
கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார்- இரவும், பகலும்
எப்போதும் அந்தக் கடலிலே தங்கியிருப்பவர்கள்; அங்கம்
வெந்திலர்- சுடுகணைகளாலே உடல் வேகப் பெற்றிலர்; அவன்
அடிகள் எண்ணலால்- அப்பரமனுடைய திருவடிகளையே
எப்போதும் எண்ணியிருப்பவர்களாதலால்; பொங்கு வெங்கனல்
எனும்- பொங்கி எரியும் வெம்மைமிக்க நெருப்பு என்று
கூறப்படும்; புனலில் போயினார்- நீரிலே செல்லலாயினர்.

———-

தென் திசை, குட திசை, முதல திக்கு எலாம்
துன்றிய பெரும் புகைப் படலம் சுற்றலால்,
கன்றிய நிறத்தன கதிரவன் பரி
நின்றன் சென்றில் நெறியின் நீங்கின. 36-

தென்திசை குட திசை முதல திக்கெலாம்- தெற்கு,
மேற்கு முதலான எல்லாத் திசைகளிலும்; துன்றிய
பெரும்புகைப்படலம் சுற்றலால் – நெருங்கிய நிறைந்த
புகைப்படலம் சுற்றிச் சூழ்தலால்; கதிரவன் பரி- சூரியனுடைய
தேரில் பூட்டிய குதிரைகள்; கன்றிய நிறத்தன- தமக்குரிய
பச்சை நிறம் நீங்கிக் கன்றிய நிறத்தை உடையனவாய்; நின்றன
சென்றில நெறியின் நீங்கின- வழி தவறிப் போய் மேற்
கொண்டு செல்லாதனவாய் நின்றன.

————-

‘பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர்
அறிந்திருந்து, அறிந்திலர் அனையர் ஆம்’ என,
செறிந்த தம் பெடைகளைத் தேடி, தீக் கொள,
மறிந்தன, கரிந்தன – வானப் புள் எலாம். 37-

பிறிந்தவர்க்கு உறு துயர்- பிரிந்து வாழ்பவருக்கு உற்ற
துன்பம்; என்னும் பெற்றி- என்னும் தன்மையை; அறிந்திருந்து-
அத்துன்பத்தை அறிந்திருந்தாலும்; அறிந்திலர் அனையர்
ஆம்என- அறியாதவரைப் போன்றவராவர்; செறிந்த தம்
பெடைகளைத் தேடி- நிறைந்த தம் பெண் பறவைகளைத் தேடி
வந்து; தீக்கொள மறிந்தன கரிந்தன வானப்புள் எலாம்- நெருப்புப் பற்றியதால்,
ஆண்பறவைகளெல்லாம் வீழ்ந்து கருகி மாண்டன.

————

கமை அறு கருங் கடல், கனலி கைபரந்து,
அமை வனம் ஒத்த போது, அறைய வேண்டுமோ?
சுமையுறு பெரும் புகைப் படலம் சுற்றலால்,
இமையவர் இமைத்தனர்; வியர்ப்பும் எய்தினார். 38-

கமை அறு கருங்கடல் – பொறுமையற்று எப்போதும்
முழங்கிக் கொண்டிருக்கும் கரிய கடல்; கனலி கை பரந்து-
இராமபிரான் எய்த அம்புகளால் உண்டான நெருப்பு
பக்கங்களிலெல்லாம் பரவ; அமை வனம் ஒத்த போது-
தீப்பிடித் தெரிந்த மூங்கிற் காட்டை ஒத்திருந்தபோது; அறைய
வேண்டுமோ – அதைக் கூற வேண்டுமோ?; சுமை உறு
பெரும்புகைப்படலம் சுற்றலால்- சுமை பொருந்திய பெரிய
புகைப்படலம் சூழ்ந்தமையால்; இமையவர் இமைத்தனர்-
இமையா நாட்டம் கொண்ட தேவர்கள் கண்களை
இமைக்கலாயினர்; வியர்ப்பும் எய்தினர் – உடம்பில்
வியர்வையும் எய்தினார்கள்.

————-

பூச் செலாதவள் நடை போல்கிலாமையால்,
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்,
தீச் செலா நெறி பிறிது இன்மையால், திசை
மீச் செலர் புனலவன் புகழின் வீந்தவால். 39-

பூச்செலாதவள்- பூமேல்கூட நடக்க முடியாதவளாகிய
சீதையின்; நடை போல்கிலாமையால் – நடையை
ஒத்தில்லாமையினால்;ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்-
பழிப்புக்கு ஆளாகிய அன்னப் பறவைகள் எல்லாம்; தீச்செலா
நெறி பிறிது இன்மையால்- தீ செல்லாத வழி வேறு எதுவும்
இல்லாமையாலே; திசை மீச் செலா – எல்லாத் திசைகளிலும்
மேலே பறந்து செல்ல; புனலவன் புகழின் வீந்தவால்-
அதனால், கடலரசனான வருணனது புகழ் எவ்வாறு அழிந்ததோ
அதுபோல அழிந்தொழியலாயின.

————-

பம்புறு நெடுங் கடல் பறவை யாவையும்,
உம்பரின் செல்லலுற்று, உருகி வீழ்ந்தன்
அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல,
இம்பரின் உதிர்ந்தன, எரியும் மெய்யன. 40-

பம்புறு நெடுங்கடல் பறவையாவையும் – எங்கும்
பரந்துள்ள நீண்ட கடலில் வாழும் நீர்ப்பறவைகள் அனைத்தும்;
உம்பரில் செல்லலுற்று – மேலே வானத்தில் செல்லத்
தொடங்கி; உருகி வீழ்ந்தன- நெருப்பில் வெந்து உருத்
தெரியாது உருகி விழுந்தன; அம்பரம் அம்பரத்து ஏகல்
ஆற்றல – மேகங்கள் வானத்திலே செல்ல இயலாதனவாய்;
எரியும் மெய்யன- உடலெல்லாம் தீயில் வெந்து எரிய; இம்பரில்
உதிர்ந்தன- தரையில் உதிர்ந்து விழுந்தன.

————–

பட்டன படப் பட, படாத புட் குலம்,
சுட்டு வந்து எரிக் குலப் படலம் சுற்றலால்,
இட்டுழி அறிகில, இரியல் போவன,
முட்டை என்று எடுத்தன, வெளுத்த முத்து எலாம். 41-

சுட்டு வந்து எரிக்குலப் படலம் சுற்றலால்- சுட்டுக்
கொண்டே வந்த நெருப்புப் படலம் எங்கும் சூழ்ந்து
இருத்தலால்; பட்டன படப்பட-பறவைக் கூட்டம் தீயில் வெந்து
இறப்பன இறந்து கொண்டே இருக்க; படாத புட்குலம்-
இறக்காத பறவைக் கூட்டம்; இட்டுழி அறிகில- புகையும்
நெருப்பும் சூழ்ந்திருத்தலால் தமது முட்டைகளை இட்ட இடத்தை
அறியாதனவாய்; இரியல் போவன- பாதுகாப்பான வேறு
இடத்துக்குச் செல்லுபவை; வெளுத்த முத்து எலாம்- வெண்மை
நிறமான முத்துக்களை எல்லாம்; முட்டை என்று எடுத்தன-
முட்டை என நினைத்து எடுப்பனவாயின.

—————-

‘வள்ளலை, பாவிகாள், “மனிதன்” என்று கொண்டு
எள்ளலுற்று அறைந்தனம்; எண் இலாம்’ என
வெள்ளி வெண் பற்களைக் கிழித்து, விண் உறத்
துள்ளலுற்று இரிந்தன – குரங்கின் சூழ்ந்தில. 42-

பாவிகாள்- பாவிகளே! வள்ளலை மனிசன் என்று கொண்டு –
இராமபிரான் மனிதன் தானே என நினைத்து; எள்ளலுற்று
அறைந்தனம் – ஏளனமாகப் பேசினோம்; எண் இலாம்-
இராமபிரானுடைய பேராற்றலை அறியும் ஆராய்ச்சி
இல்லாதவரானோம்; என வெள்ளி வெண் பற்களைக் கிழித்து-
என்று கூறி வெள்ளி போன்ற வெண்மையான பற்களைக் காட்டி
இளித்துக் கொண்டு; குரங்கு சூழ்ந்தில- நீரில் வாழும் குரங்குகள்
அந்தக் கடலைச் சூழ்ந்து கொண்டிருக்காமல்; விண்உறத்
துள்ளலுற்று இரிந்தன- வானத்தின் மீது துள்ளி விலகிச்
செல்லலாயின.

———

தா நெடுந் தீமைகள் உடைய தன்மையார்,
மா நெடுங் கடலிடை மறைந்து வைகுவார்,
தூ நெடுங் குருதி வேல் அவுணர், துஞ்சினார்;
மீன் நெடுங் குலம் என மிதந்து, வீங்கினார். 43-

தூ நெடுங் குருதி வேல் அவுணர்- தசையோடு கூடிய,
இரத்தம் தோய்ந்த நீண்ட வேலையுடைய அவுணர்கள்; தா
நெடும் தீமைகள் உடைய தன்மையார்- துயர் தரும்
பெருந்தீமைகள் கொண்ட பண்புடையவர் என்பதால்; மா நெடுங்
கடலிடை மறைந்து வைகுவார்- பெரிய நீண்ட கடலிலே
மறைந்து வாழ்கின்றவர்கள்; துஞ்சினார்- இராமபிரானுடைய
அம்புகளின் வெம்மையால் உயிர்துறந்தார்கள்; மீ
நெடுங்கிரியென- கடலின் மீது கிடந்த மலைகளைப் போல்;
மிதந்து வீங்கினார்- மிதந்து உடல் வீங்கலாயினர்.

—————–

தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய
பசும் பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன்
அசும்பு அற வறந்தன, வான ஆறு எலாம்;
விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே. 44-

பசும் பொனின் மானங்கள்- (இராமபிரான் அம்புகளால்
எங்கும் தீ எரிய) வானத்தில் செல்லும் பொன்னால் அமைந்த
விமானங்கள் எல்லாம்; உருகிப் பாய்ந்தன- தீயின் வெப்பத்தால்
உருகிப் பொழிந்தவை; தசும்பிடை விரிந்தன என்னும் தாரைய
– நீர்க்குடங்கள் உடைந்தால் நீர்தாரைதாரையாய் ஒழுகுவது
போல் இருந்தன; வான ஆறெலாம்- விண்ணுலகிலுள்ள ஆகாய
கங்கை முதலான ஆறுகள்; அசும்பறவறந்தன – ஈரம் சிறிது
மின்றி வறண்டு போயின; விசும்பிடை விளங்கிய-ஆகாயத்திலே
ஒளிர்ந்த; மீனும் வெந்தவே- விண்மீன்களும் வெந்தன.

————-

செறிவுறு செம்மைய, தீயை ஓம்புவ,
நெறியுறு செலவின, தவத்தின் நீண்டன,
உறு சினம் உறப் பல உருவு கொண்டன,
குறுமுனி எனக் கடல் குடித்த – கூர்ங் கணை. 45-

குறுமுனி எனக் கடல் குடித்த கூர்ங்கணை- குறுகிய
வடிவினரான அகத்திய முனிவரைப் போல, கடல் நீரை எல்லாம்
குடித்த (இராமபிரான் எய்த) கூரிய அம்புகள்; செறிவுறு
செம்மைய- செறிவுற்று செம்மை வாய்ந்தன; தீயை ஓம்புவ-
தீயை வளர்ப்பன; நெறியுறு செலவின- நெறியில் செல்லும்
செலவினை உடையன; தவத்தின் நீண்டன- நெடியதவத்தை
உடையன; உறுசினம் உற- மிக்க கோபம் கொண்டிருப்பதால்;
பல உருவு கொண்டன- பல வடிவங்களைக் கொண்டன.

—————

மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால்,
பூதலம் காவொடும், எரிந்த் பொன் மதில்
வேதலும், இலங்கையும், ‘மீளப் போயின
தூதன் வந்தான்’ எனத் துணுக்கம் கொண்டதால். 46-

மோதல் அம் கனைகடல்- அலைமோதுகின்ற முழங்கு
கின்ற கடலில் பற்றி; முருக்கும் தீயினால்- முழக்கத்துடன்
எரிகின்ற நெருப்பினால்; பூதலம் காவொடும் எரிந்த-
கடலைச் சூழ்ந்துள்ள நிலமெல்லாம் அங்குள்ள சோலைகளோடும்
எரிந்தது; பொன் மதில் வேதலும்- இலங்கைக்கு அரணாக
அமைந்துள்ள பொன்னாலான மதிலும் வெந்து போகவும்;
இலங்கையும்- இலங்கையில் வாழும் அரக்கர்கள் எல்லாம்;
போயின தூதன் மீளவந்தான் என – இங்கு வந்து
இலங்கைக்கு எரியூட்டிப் போன தூதன் மீண்டும் வந்தான்
என்று; துணுக்கம் கொண்டதால்- திடுக்கிட்டனர்.

——————

அருக்கனில் ஒளி விடும் ஆடகக் கிரி,
உருக்கு என உருகின, உதிரம் தோய்ந்தன,
முருக்கு எனச் சிவந்தன் முரிய வெந்தன,
கரிக் குவை நிகர்த்தன, பவளக் காடு எலாம். 47-

அருக்கனில் ஒளிவிடும் ஆடகக் கிரி – சூரியனைப்
போல ஒளிவீசும் பொன்னிற மலையான திரிகூடமலையானது;
உருக்கு என உருகின- தீயால் வெந்து, அரக்கு உருக்குப்
போல உருகலாயின; உதிரம் தோய்ந்தன- அதனுடன் இரத்தமும்
தோய்ந்தமையால்; முருக் கெனச் சிவந்தன – முருக்க மலர்
போலச் சிவந்து தோன்றின; பவளக் காடு எலாம்- கடலில்
உள்ள பவளக்காடுகளெல்லாம்; முரிய வெந்தன- அழியும்படி
வெந்து போயினவாய்; கரிக்குவை நிகர்த்தன- கரிக்குவியல்களை
ஒத்திருந்தன.

—————-

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்,
ஓர் இடத்து, உயிர் தரித்து, ஒதுங்ககிற்றில,
நீரிடைப் புகும்; அதின் நெருப்பு நன்று எனாப்
பாரிடைக் குதித்தன, பதைக்கும் மெய்யன. 48-

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்-
பெருமையுடைய ‘மலை’ என்று கூறத்தக்க பெரிய மீன்களும்;
ஓரிடத்து, உயிர் தரித்து ஒதுங்க கிற்றில- ஓரிடத்தில் இருந்து
உயிரைக் காப்பாற்றி ஒதுங்கி வாழ இயலாதவை ஆயின; நீரிடைப்புகும்- நிலம் வெப்பத்தால்
சூடாகத் தண்ணீருக்கிடையே செல்லும்; அதின் நெருப்பு
நன்றெனா- அதைவிட நெருப்பே நல்லது என்று; பாரிடைக்
குதித்தன பதைக்கும் மெய்யன- பதை பதைக்கும் உடம்பினை
உடையனவாய் நீரிலிருந்து தரைக்குக் குதித்தன.

———–

சுருள் கடல் திரைகளைத் தொலைய உண்டு, அனல்
பருகிடப் புனல் இல பகழி, பாரிடம்
மருள் கொளப் படர்வன, நாகர் வைப்பையும்
இருள் கெடச் சென்றன, இரவி போல்வன. 49-

சுருள் கடல் திரைகளைத் தொலைய உண்டு-
இராமபிரான் எய்த அம்புகள் சுருண்டு விழும் கடல் அலைகள்
அழியுமாறு அவற்றை உண்டு பின்; அனல் பருகிடப் புனல்
இலபகழி – நெருப்பு உண்பதற்கு எங்கும் தண்ணீர்
இல்லாமையால் அவ்வம்புகள்; பாரிடம் மருள் கொளப்
படர்வன- நிலம் மருளும்படி எங்கும் செல்வனவாய்ப்பின்;
இரவி போல்வன- சூரியனைப் போன்ற ஒளி உடையனவாய்;
நாகர் வைப்பையும்- நாகர்கள் வாழும் நாக உலகத்தையும்;
இருள் கெடச் சென்றன- அங்கு இருள் கெடும்படி
சென்றடைந்தன.

————–

கரும் புறக் கடல்களோடு உலகம் காய்ச்சிய
இரும்பு உறச் செல்வன, இழிவ, கீழுற
அரும் புறத்து அண்டமும் உருவி, அப் புறம்,
பெரும் புறக் கடலையும் தொடர்ந்து பின் செல்வ. 50-

கரும்புறக் கடல்களோடு – கறுத்துத் தோன்றும்
மேற்புறத்தைக் கொண்ட கடல்களோடு; உலகம் காய்ச்சிய
இரும்புறச் செல்வன- உலகமும் காய்ச்சிய இரும்பை ஒத்துச்
செல்லுவன; இழிவ கீழ்உற – கீழே பொருந்துமாறு
இறங்குவனவாய்; அரும்புறத்து அண்டமும் உருவி –
சக்கரவாளகிரிக்கு அப்பால் உள்ள செல்லுதற்கரிய புற
அண்டத்தையும் ஊடுருவிச் சென்று; அப்புறம்- அதற்கு அப்பால்
உள்ள; பெரும்புறக் கடலையும்- பெரும்புறக் கடலையும்;
தொடர்ந்து பின் செல்வ- தொடர்ந்து பின் செல்வனவாயின.

—————–

திடல் திறந்து உகு மணித் திரள்கள், சேண் நிலம்
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன்
கடல் திறந்து எங்கணும் வற்ற, அக் கடல்
குடல் திறந்தன எனக் கிடந்த, கோள் அரா. 51-

திடல் திறந்து உருமணித் திரள்கள்- கடல் நடுவே உள்ள
திட்டுகள் எல்லாம் அம்புகளால் பிளக்கப்பட்டு அங்கிருந்து
சிந்தும் மணித் திரள்கள் எல்லாம்; சேண் நிலம் உடல்
திறந்து- பெரிய நிலம் உடல் பிளந்து, அதனால்; உதிரம்
வந்து உகுவ போன்றன- இரத்தம் சிந்துவன போல இருந்தன;
கடல் திறந்து எங்கணும் வற்ற- இராமபிரானுடைய அம்புகள்
கடலைப் பிளத்தலால் எங்கும் நீரில்லாது வற்றிவிட; கோள்
அரா- (அக்கடலின் அடியில் வாழ்ந்த) வலிய நீர்ப் பாம்புகள்;
அக்கடல் குடல் திறந்தன எனக் கிடந்தன- அக்கடலின்
குடல்கள் கிடந்தன போலக் காணப்பட்டன.

—————–

ஆழியின் புனல் அற, மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன, பரவை; பேர்வு அறப்
பூழையின் பொரு கணை உருவப் புக்கன,
மூழையின் பொலிந்தன, முரலும் வெள் வளை. 52-

ஆழியின் புனல் அற – கடலின் நீர் அறவே வற்றிவிட;
பரவை மணிகள் அட்டிய பேழையின் பொலிந்தன-
அக்கடல் (அடியிலே மணிகள் கிடந்ததால்) மணிகள் சேர்த்து
வைத்த பெட்டியைப் போல விளங்கியது; முரலும் வெள் வளை
பேர்வற- (அக் கடலில் உள்ள) ஒலிக்கின்ற வெண்மை நிறமான
சங்குகள் பெயர இயலாதபடி; பூழையில் பொருகணை உருவ- முகப்பிலுள்ள
துளைகளில் அம்புகள் உருவியிருப்பதால்; மூழையின்
பொலிந்தன புக்கன- அகப்பைகளைப் போல விளங்கிச்
சென்றன.

————–

நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்,
குன்று நூறாயிரம் கோடி ஆயின் –
சென்று தேய்வு உறுவரோ, புலவர் சீறினால்? –
ஒன்று நூறு ஆயின, உவரி முத்து எல்லாம். 53

நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்- (இராமபிரான்
போர்க்கோலம் கொண்டு) நின்று நூறாயிரம் அம்புகளை
எய்தலால்; குன்று நூறாயிரம் கோடி ஆயின- கடலில் உள்ள
குன்றுகள் எல்லாம் நூறாயிரம் கோடியாயின; உவரிமுத்து
எலாம்- கடலில் உள்ள முத்துக்கள் எல்லாம்; ஒன்று நூறாயின
-அம்பு பட்டு ஒன்று நூறாக ஆயின; புலவர் சீறினால்-
அறிவுமிக்க சான்றோர்கள் சீறினாலும்; சென்று தேய்வுறுவரோ-
(சீற்றத்துக்கு ஆளானவர்) சென்று தேய்வடைவார்களோ?
(மாட்டார்).

————–

சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்
வீடு பெற்றன் இடை மிடைந்த வேணுவின்
காடு பற்றிய பெருங் கனலின் கை பரந்து
ஓடி உற்றது நெருப்பு, உவரி நீர் எலாம். 54-

சூடு பெற்று ஐயனே தொலைக்கும்- சினத்தால் சூடு
பெற்று உயிர்களுக்குத் தலைவனான இராமபிரானே அம்பெய்து
கொல்லும்; மன்னுயிர் வீடு பெற்றன – நிலைத்துவாழும்
உயிரினங்கள் எல்லாம் அழிவில்லாத பேரின்ப வீட்டை எய்தின;
இடைமிடைந்த வேணுவின்காடு- இடையிடையே நெருங்கியுள்ள
மூங்கில்கள் நிறைந்த காட்டில்; பற்றிய பெருங்கனலின்- பற்றி
எரியும் பெருந்தீயைப் போல; கை பரந்து ஓடி- (அம்பின்
நெருப்பு) பக்கங்களிலெல்லாம் பரவிச் சென்று; உவரி நீ ரெலாம்
உற்றது- கடல் நீரை அடைந்தது.

‘அம்பின் நெருப்பு கடல் நீரை அடைந்தது. மன்னுயிர் யாவும்
வீடுபேறு எய்தின’ என்பது கருத்து. இராமபிரானால் அம்பெய்து
கொல்லப்பட்ட எல்லா உயிர்களும் ‘வீடு பெற்றன’ என்றார்.

————

கால வான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்,
நீல வான் துகிலினை நீக்கி, பூ நிறக்
கோல வான் களி நெடுங் கூறை சுற்றினாள்
போல, மா நிலமகள் பொலிந்து தோன்றினாள். 55-

கால வான் கடுங்கணை- எமனுக் கொப்பான விரையும்
அம்புகள்; சுற்றும் கவ்வலால்- கடல் முழுவதையும் கவ்விக்
கொண்டதால்; மா நிலமகள்- பெரிய நிலமாகிய பூமித்தாய்;
நீலவான் துகிலினை நீக்கி- தான் உடுத்திருந்த நீலவானம்
போன்ற ஆடையை நீக்கிவிட்டு; பூ நிறக் கோல வான் களி
நெடுங்கூறை- பூ வேலைப்பாடுகளோடு கூடிய செந்நிறமான
புத்தாடையை; சுற்றினாள் போல- தனது உடம்பில் சுற்றிக்
கொண்டவளைப் போல; பொலிந்து தோன்றினாள்- பொலிவுடன்
காணப்பட்டாள்.

——————

கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக்
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு,
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால்,
மற்றொரு கடல் புக, வட வைத் தீ அரோ. 56-

கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக் கொற்றவன்-
கற்றறிந்தவர்களுக்குள் கற்றவராய் விளங்கும் மேலோர்களின்
உணர்வும்கூட காண இயலாத பெருமானாகிய இராமனது;
படைக்கலம் குடித்த வேலை விட்டு- அம்புகள் நீர்
முழுவதையும் குடித்து விட்ட கடலை விட்டு விட்டு; வடவைத்
தீ- கடல் மத்தியிலே வாழும் வடவா முகாக்கினித்தீ; மற்றொரு
கடல் புக- வேறு ஒரு கடலை அடைவதற்காக; உற்று உயிர்
படைத்து எழுந்து- வலிமைபெற்று உயிர் கொண்டு எழுந்து;
ஓடல் உற்றதால்- ஓடத் தொடங்கியது.

————-

வாழியர் உலகினை வளைத்து, வான் உறச்
சூழ் இரும் பெருஞ் சுடர்ப் பிழம்பு தோன்றலால்,
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய
ஆழியின் பொலிந்தது, அவ் ஆழி, அன்ன நாள். 57-

உலகினை வளைத்து – உலகத்தை எல்லாம் சுற்றி
வளைத்துக் கொண்டு; வான் உறச் சூழ் இரும் பெரும் சுடர்ப்
பிழம்பு – விண்ணை அளாவிச் சூழ்ந்த பெரிய தீயின் ஒளிப்
பிழம்பு எங்கும்; தோன்றலால்- காணப்படுதலால்; அவ்வாழி-
அந்தக் கடல்; அன்ன நாள் ஊழியின் உலகெலாம் உண்ண
ஓங்கிய- அந்த நாளிலே ஊழிக் காலத்தின் முடிவில்
உலகனைத்தையும் உண்ண உயர்ந்த; ஆழியின் பொலிந்தது-
ஊழிக் காலத்துப் பெருங் கடலைப் போல விளங்கியது.

————–

ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் –
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ –
மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப, மீதுபோய்,
வானவர் மலர் அயன் உலகின் வைகினார்? 58-

மேல் நிமிர்ந்து எழுகனல் வெதுப்ப- கடலை விட்டு
மேலே நிமிர்ந்து எழுந்த நெருப்பு வெதுப்புவதால் (பயந்து);
வானவர் மீதுபோய்- விண்ணுலகில் வாழும் தேவர்கள் தாம்
வாழும் விண்ணுலகுக்கும் மேலே சென்று; மலரயன் உலகின்
வைகினார்- பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் தங்கலாயினர்
என்றால்; ஏனையர் என்ன வேறுலகில் ஈண்டினார்- தேவரினும்
ஏனையோராகிய மண்ணுலகில் வாழ்பவர்கள்; ஆனவர் செய்தன
அறைய வேண்டுமோ- என்போர் செய்த செயல்களைச் சொல்ல
வேண்டுமோ?

—————

இராமன் வருணன் மேல் சதுமுகன் படையை ஏவுதல்

‘இடுக்கு இனி எண்ணுவது இல்லை; ஈண்டு இனி
முடுக்குவென் வருணனை’ என்ன, மூண்டு எதிர்
தடுக்க அரும் வெகுளியான், சதுமுகன் படை
தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார். 59-

இடுக்கு இனி எண்ணுவ தென்னை- இதனால் இனி வரப்
போகும் துன்பங்களைப் பற்றி நினைப்பதால் என்ன பயன்?;
ஈண்டு இனி முடுக்குவென் வருணனை என்ன- வருணனை
இனி இங்கு விரைவில் வருமாறு செய்வேன் என்று; மூண்டு எதிர்
தடுக்கரும் வெகுளியான்- பெருகி எழுகின்ற எதிர்த்து எவரும்
தடுக்க இயலாத வெகுளியை உடைய இராமன்; சதுமுகன் படை
தொடுத்தனன்- பிரமதேவனது கணையான (பிரம்மாஸ்திரத்தை
வில்லில் தொடுத்து விடத் தொடங்கினான்; அமரரும் துணுக்கம்
எய்தினார்- அதைக்கண்டு தேவர்களும் திடுக்கிட்டார்கள்.

——————-

பல இடத்தும் நிகழ்ந்த மாறுபாடுகள்

மழைக் குலம் கதறின் வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன்; உலகினில் அடைத்த, ஆறு எலாம்;
இழைத்தன நெடுந் திசை, யாதும் யாவரும்
பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால். 60-

மழைக்குலம் கதறின- (இராமபிரான் சதுமுகன் கணையை
ஏவ மேகக் கூட்டங்களெல்லாம் கதறலாயின; வருணன் வாய்
உலர்ந்து அழைத்தனன்- வருணன் வாய் வறண்டு கதறினான்;
உலகமும் ஆறெலாம் அடைத்த- உலகிலுள்ள ஆறுகளெல்லாம்
தூர்ந்து போயின; யார் இனிப் பிழைப்பவர் – சதுமுகன் படைக்குத்
தப்பி இனி யார் பிழைப்பார்கள்;என்பதோர் பெரும்பயத்தினால்
– என்பதொரு பெரிய பயத்தால் இவ்வளவு நடந்தது; நெடுந்திசை
இழைத்த- நீண்ட திசைகளெல்லாம் நுணுகிப் பொடியாயின;

———–

அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது; ஏழு
தெண் திரைக் கடலின் செய்கை செப்பி என்? தேவன் சென்னிப்
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே. 61-

அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது-
அண்டத்தின் அடிப்பகுதியில் உள்ள பெரும் புறக் கடலும்
கொதித்தது (என்றால்); ஏழு தெண்திரைக் கடலின் செய்கை
செப்பிஎன்- உலகத்திலுள்ள தெளிந்த அலைகளையுடைய
ஏழுகடல்களின் செய்கையைச் சொல்ல என்ன இருக்கிறது?;
தேவன் சென்னிப் பண்டை நாள் இருந்த கங்கை
நங்கையும் பதைத்தாள்- சிவபிரானுடைய சென்னியில் வெகு
காலமாக வீற்றிருந்த கங்கையாகிய பெண்ணும் பதைபதைத்தாள்;
பார்ப்பான் குண்டிகை இருந்த நீரும்- அந்தணர் தலைவனான பிரமனது
கமண்டலத்தில் இருந்த தண்ணீரும்; குளு குளு கொதித்தது
அன்றே – குளு குளு வென ஒலித்துக் கொதிக்கலாயிற்று.

—————

‘இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து, உலகு எலாம் ஈன்று, மீளக்
கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்திலன்; சீற்றம் கண்டும்,
வரக் கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார்
அரக்கரே? அல்லர்’ என்னா, அறிஞரும் அலக்கண் உற்றார். 62-

இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து – (தனது
திருவுள்ளத்திலே உயிர்களிடம்) இரக்கம் தோன்றிய காலத்திலே;
உலகெலாம் ஈன்று மீளக் கரக்கும் நாயகனை- உலகங்கள்
அனைத்தையும் படைத்து மறுபடியும் மறைத்துக் கொள்ளவல்ல
உலக நாயகனை; தானும் உணர்ந்திலன்- நாம் அறிந்திருத்தல்
போலத்தானும் அறியாதவனாயினான்; சீற்றம் கண்டும்
வரக்கருதாது- இராமபிரானுடைய கோபத்தைப் பார்த்தபின்பும்
வருவதற்கு நினைக்காமல்; தாழ்த்த வருணனின்-காலம் தாழ்த்த
இந்த வருணனைவிடவும்; மாறு கொண்டார் அரக்கரே
அல்லர் என்னா- இராமபிரானிடம் பகை கொண்ட அவர்கள்
அரக்கர் அல்லர் (இந்த வருணன்தான் அரக்கன்) என்று கூறி;
அறிஞரும் அலக்கண் உற்றார்- மற்றத்தேவர்கள் எல்லோரும்
துன்பமுற்றார்கள்.

————

பூதங்கள் வருணனை வைதல்

‘உற்று ஒரு தனியே, தானே, தன்கணே, உலகம் எல்லாம்
பெற்றவன் முனியப் புக்கான்; நடு இனிப் பிழைப்பது எங்ஙன்?
குற்றம் ஒன்று இலாதோர்மேலும் கோள் வரக் குறுகும்’ என்னா,
மற்றைய பூதம் எல்லாம், வருணனை வைத மாதோ. 63-

உற்று ஒரு தனியே தானே- தான் ஒருவனே தனியாகப்
பொருந்தியிருந்து; தன்கணே உலகம் எல்லாம் பெற்றவன்-
தன்னிடமிருந்தே உலகங்கள் எல்லாவற்றையும் ஈன்றவன்;
முனியப்புக்கான் – வெகுளத் தொடங்கினான்; நடு இனிப்
பிழைப்பது எங்ஙன்? – இந்தக் கோபத்துக் கிடையே நாம்
தப்பிப் பிழைப்பது எவ்வாறு; குற்றம் ஒன்று இலாதோர்
மேலும்- குற்றம் எதுவும் செய்யாத நம்மீதும்; கோள் வரக்
குறுகும் என்னா- தீங்கு வரக் கூடும் என்று கருதி; மற்றைய
பூதம் எல்லாம் வருணனைவைத- மற்றைப் பூதங்கள் யாவும்
வருணனைத் திட்டின.

———–

வருணன் தோன்றிப் பணிவுரை பகர்தல்

6652.

எழு சுடர்ப் படலையோடும் இரும் புகை நிரம்பி
எங்கும்
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன்
என்பான்,
அழுது அழி கண்ணன், அன்பால் உருகிய நெஞ்சன்,
அஞ்சித்
தொழுது எழு கையன், நொய்தின் தோன்றினன்,
வழுத்தும் சொல்லான்.–64-

எழு சுடர்ப் படலையோடும்- தொடர்ந்து எழுகின்ற
தீச்சுடர்களின் திரள்களோடு; இரும்புகை நிரம்பி- நிறைந்த புகை
நிரம்பி; எங்கும் வழி தெரிவு அறிவிலாத- எங்கும் வரும்
வழியைத் தெரிந்து கொள்ள அறியாத; நோக்கினன் வருணன் என்பான்-
நோக்கினை உடையவனான வருணன் என்பவன்; அழுது
அழிகண்ணன்- அழுது அழுது அழகிழந்த கண்களை
உடையவனாகவும்; அன்பால் உருகிய நெஞ்சன்-
இராமபிரானிடம் கொண்ட அன்பினால் உருகிய உள்ளத்தை
உடையவனாகவும்; அஞ்சித் தொழுது ஏழு கையன்-
அஞ்சி, தொழுதபடி மேலே உயர்த்தியகைகளை
உடையவனாகவும்; வழுத்தும் சொல்லான்- இராமபிரானைப்
போற்றிப் புகழும் சொற்களை உடையவனாகவும்; நொய்தின்
தோன்றினன்- விரைந்து (இராமபிரானுக்கு எதிரிலே வந்து)
தோன்றினான்.

————

நீ எனை நினைந்த தன்மை, நெடுங் கடல் முடிவில்
நின்றேன்
ஆயினேன் அறிந்திலேன்’ என்று அண்ணலுக்கு
அயிர்ப்பு நீங்க,
காய் எரிப் படலை சூழ்ந்த கருங் கடல்
தரங்கத்தூடே,
தீயிடை நடப்பான் போல, செறி புனற்கு இறைவன்
சென்றான்.–65-

நீ எனை நினைந்த தன்மை- பெருமானே! நீ என்னை
வருமாறு நினைத்த தன்மையை; நெடுங்கடல் முடிவில் நின்றேன்
ஆயினேன் – இந்தப் பெரிய கடலில் முடிவான இடத்திலே
நின்றவனாகிய நான்; அறிந்திலேன் என்று – அறியாதவனானேன்
என்று கூறிக் கொண்டு; அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க-
இராமபிரானுக்கு ஐயம் தீரும்படி; காய் எரிப்படலை சூழ்ந்த –
எரியும் தீத்திரள் எங்கும் சூழ்ந்திருந்த; கருங்கடல் தரங்கத்து
ஊடே-கரிய கடல் அலைகளுக்கு இடையிலே; தீயிடை நடப்பான்
போல- நெருப்புக்கு இடையிலே நடந்து வருபவனைப் போல்;
செறி புனற்கு இறைவன் சென்றான்-செறிந்த கடலுக்கு அரசனான
வருணன் வரலானான்.

———-

வந்தனன் என்ப மன்னோ, மறி கடற்கு இறைவன்;
வாயில்
சிந்திய மொழியன், தீந்த சென்னியன், திகைத்த
நெஞ்சன்,
வெந்து அழிந்து உருகும் மெய்யன், விழுப் புகைப்
படலம் விம்ம,
அந்தரின் அலமந்து, அஞ்சி, துயர் உழந்து,
அலக்கண் உற்றான்.–66-

மறி கடற்கு இறைவன்- அலைகள் மடிந்து விழும் கடலுக்கு
அரசனான வருணன்; வாயில் சிந்திய மொழியன்- வாயிலிருந்து
சிந்தும் சொற்களை உடையவனாயும்; தீந்த சென்னியன்-
தீயினால் தீய்ந்து போன தலையை உடையவனாயும்; திகைத்த
நெஞ்சன்- திகைப்புண்ட மனத்தை உடையவனாகவும்; வெந்து
அழிந்து உருகும் மெய்யன்- தீயால் வெந்து, உருவழிந்து,
உருகுகின்ற உடலை உடையவனாகவும்; விழுப்புகைப் படலம்
விம்ம – மிகுந்த புகைக் கூட்டம் எங்கும் நிறைந்து இருப்பதால்;
அந்தரின் அலமந்து- கண் பார்வை இல்லாதவனைப் போலத்
தடு மாறிக் கொண்டு; அஞ்சித்துயர் உழந்து- பயந்து கொண்டு
துன்பத்தால் வருந்துபவனாய்; அலக்கண் உற்றான் வந்தனன்-
வேதனைப்பட்டு வந்தான்.

———

வருணன் இராமபிரானிடம் அடைக்கலம் வேண்டுதல்

6655.

‘நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின்,
கவயம் நின் சரணம் அல்லால், பிறிது ஒன்று
கண்டது உண்டோ?
இவை உனக்கு அரியவோதான்; எனக்கு என வலி
வேறு உண்டோ?
அவயம், நின் அவயம்!’ என்னா, அடுத்து அடுத்து
அரற்றுகின்றான்:–67-

நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக- குற்ற மற்ற
இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பெருமானே!; நீயே
சீறின்- (கருணைமிகுந்த மனத்தை உடைய) நீயே இவ்வாறு என்
மீது சினம் கொண்டாயானால்; கவயம் நின் சரணமல்லால்-
(எனக்குப் பாதுகாப்பான) கவசம் உனது பாதங்களே அல்லாமல்;
பிறிது ஒன்று கண்டதுண்டோ – வேறு ஒன்றினை நான்
பார்த்ததுண்டோ?; இவை உனக்கு அரியவோதான்- கடலுக்குத்
தீயிட்டு, உலகை நடுங்கச் செய்யும் இச் செயல் உனக்கு
அரியதொன்றே!; எனக்கு என வலி வேறுண்டோ- உனது
வலிமையாய் வாழ்கின்ற எனக்கு எனத்தனியான வலிமை
வேறுளதோ?; அவயம் நின் அவயம் என்னா- அடைக்கலம்
உனக்கு அடைக்கலம் என்று; அடுத்து அடுத்து
அரற்றுகின்றான்- அடுத்தடுத்துக் கூறி அரற்றுவானானான்.

————

‘ஆழி நீ; அனலும் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
ஊழி நீ; உலகும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே;
வாழியாய்! அடியேன் நின்னை மறப்பெனோ?
வயங்கு செந் தீச்
சூழுற உலைந்து போனேன்; காத்தருள்-சுருதி
மூர்த்தி!–68-

சுருதி மூர்த்தி-மறைகளின் வடிவாய்த் திகழ்பவனே!; ஆழிநீ
அனலும் நீயே- இந்தக் கடலும் நீதான்; கடலை எரித்த தீயும்
நீயே; அல்லவை எல்லாம் நீயே- இவையிரண்டுமல்லாத வானும்,
மண்ணும், விசும்பும் ஆகிய அனைத்தும் நீயே; ஊழிநீ உலகும்
நீயே- உலகத்தை அழிக்கின்ற கடையூழிக் காலமும் நீயே
உன்னால் அழிக்கப்படும் உலகமும் நீயே; அவற்று உறை உயிரும்
நீயே- அவ்வுலகத்துள் வாழும் எல்லா உயிரினங்களும் நீயே;
வாழியாய் அடியேன் நின்னை மறப்பனோ- என்றும் வாழ்கின்ற
பெருமானே அடியவனாகிய நான் உன்னை மறப்பேனோ?; வயங்கு
செந்தீச் சூழுற- விளங்குகின்ற செந்நிறத் தீ என்னைச் சூழ்ந்து
கொள்ள; உலைந்து போனேன்- (அதனால் நான்) அழிந்தே
போனேன்; காத்து அருள்- அடியேனைக் காத்து அடைக்கலம்
தந்தருள்வாயாக.

சுருதி – வேதம். ‘திடவிசும் பெரி வளி நீர் நிலம் இவை
மிசை, படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்,
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்ற திருவாய்
மொழி நினைவு கூரத்தக்கது

———–

‘காட்டுவாய் உலகம்; காட்டிக் காத்து, அவை
கடையில் செந் தீ
ஊட்டுவாய்; உண்பாய், நீயே; உனக்கும் ஒண்ணாதது
உண்டோ?
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும்
தீய
வீட்டுவாய்; நினையின், நாயேற்கு இத்தனை
வேண்டுமோதான்?–69-

காட்டுவாய் உலகம்- உலகங்களை யெல்லாம் படைப்பாய்;
காட்டிக் காத்து- படைத்ததோடு அவற்றைக் காக்கவும்
செய்வாய்; அவை கடையில் செந்தீ ஊட்டுவாய்- அவைகளை
ஊழிக்காலத்து முடிவில் ஊழிக் காலப்பெருந்தீயூட்டி அழிப்பாய்;
உண்பாய் நீயே- உலகனைத்தையும் உண்டு வயிற்றிலே வைத்துக்
காப்பவனும் நீயே; உனக்கும் ஒண்ணாததுண்டோ- எல்லாம்
வல்ல உனக்குச் செய்ய இயலாத செயலும் உண்டோ?; தீட்டுவான் பகழி
ஒன்றால் – தீட்டிக் கூர்மையாக்கப்பட்ட சிறந்ததொரு
அம்பினாலேயே; உலகங்கள் எவையும் தீய வீட்டுவாய்-
எல்லா உலகங்களும் தீய்ந்து போகும்படி அழிப்பாய்; நினையின்
நாயேற்கு- நினைத்துப் பார்த்தால், நாய் போன்ற உனது
அடியவனான எனக்கு; இத்தனை வேண்டுமோதான்- இத்தனை
சினம் வேண்டுமோ?.

——–

‘சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருட் காடு
சாய்க்கும்
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே! மறையின்
வாழ்வே!
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து, உள்ளப்
பள்ளப்
புண்டரீகத்து வைகும் புராதனா! போற்றி, போற்றி!–70-

சண்ட வான் கிரண வாளால் – கொடிய, சிறந்த
கிரணங்களாகிய வாளால்; தயங்கு இருள் காட்டைச் சாய்க்கும்
– விளங்குகின்ற இருளாகிய காட்டை வெட்டிச் சாய்க்கின்ற;
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே- சூரிய மண்டலத்தின்
மத்தியிலே தங்கியிருக்கும் ஒளி வடிவான வள்ளலே; மறையின்
வாழ்வே- வேதங்களின் வாழ்வாக விளங்குபவனே; பண்டை
நான்முகனே ஆதி- பழமையான பிரமன் முதலாகிய; சராசரத்து
உள்ளப் பள்ளப் புண்டரீகத்து வைகும் – நிற்பதனவும்,
இயங்குவனவுமான உயிர்களின் உள்ளமாகிய தாமரையிலே வசிக்கும்;
புராதனா போற்றி போற்றி- பழமைமிக்கவனே போற்றி போற்றி.

——–

“கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்!
மறையில் கூறும்
எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள
வள்ளலே! காத்தி” என்ற மா கரி வருத்தம் தீர,
புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதனா! போற்றி,
போற்றி!–71-

கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்- ஒருவரும்
உணராதவாறு உலகத்தை எல்லாம் உதரத்தில் வைத்துக்
காத்தருளிய கருணை மிக்கவனே; மறையில் கூறும்-வேதங்களில்
விரித்துக் கூறப்படுகின்ற; எள்ளல் ஆகாத மூலத்து- எங்கும்
இகழ்ந்து பேசமுடியாத மூலப்பகுதியிலிருந்து தோன்றிய;
யாதுக்கும் முதலாயுள்ள வள்ளலே- எல்லா உயிர்களுக்கும்
முதலாக உள்ள வள்ளலே; காத்தி என்ற மாகரி வருத்தம் தீர-
என்னைக் காத்தருள்வாயாக என்று முறையிட்ட பெருமை மிக்க
யானையின் துன்பம் தீர; புள்ளின் மேல் வந்து தோன்றும்-
பறவையரசனான கருடன் மீதமர்ந்து வந்து தோன்றிய; புராதனா
போற்றி போற்றி- பழமையோனே போற்றி போற்றி!

————

‘அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, “நீ இகழ்ந்தது” என்றது எங்ஙனே? ஈசன்
ஆய
உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம்
உணர்வேன், உன்னை?’–72-

அன்னை நீ அத்தன் நீயே- எனக்குத் தாயும் நீ,
தந்தையும் நீயே; அல்லவை எல்லாம் நீயே- தாயும்
தந்தையுமல்லாத மற்ற எல்லா உறவும் நீயே; பின்னும் நீ
முன்னும் நீயே- எல்லாவற்றுக்கும் அந்தமும் நீ ஆதியும் நீயே;
பேறும் நீ இழவும் நீயே- எனக்குரிய நற்பேறுகளும் நீ இழப்பும்
நீயே; என்னை- (இவ்வாறு எல்லா நிலையிலும் உன்னையே
சார்ந்திருக்கும்) என்னைநோக்கி; ‘நீ இகழ்ந்தது’ என்றது
எங்ஙனே- ‘நீ என்னை இகழ்ந்தாய்’ என்று கூறுவது எப்படிப்
பொருந்துவதாகும்; ஈசன் ஆய உன்னை நீ உணராய்-
எல்லாம்வல்ல இறைவனாகிய நீயே உன்னை உணராதவனாய்
இருக்கிறாய்; உன்னை நாயேன் எங்ஙனம் உணர்வேன்-
எனவே, அடியவனாகிய நான் உனது வல்லபத்தை எவ்வாறு
உணர்வேன்?

“அத்தனாகி அன்னையாகி ஆளும்
எம்பிரானுமாய். ஒத்தொல்லாத பல் பிறப் பொழித்து நம்மை
ஆட் கொள்வான்’ என்ற திருச்சந்த விருத்தம் (115) ஒப்பு
நோக்கத் தக்கது ‘பேறும் நீ இழவும் நீயே’ என்பது
‘நல்குரவும் செல்வும்’ நரகும் சுவர்க்கமுமாய் வெல் பகையும்
நட்பும் விடமும் அமுதமுமாய், பல்வகையும் பரந்த பெருமான்’
என்ற திருவாய் மொழி (2656)யுடன் ஒப்பிட்டு உணரத்தக்கது

——–

பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும்
மாலை,
மா இருங் கரத்தால், மண்மேல் அடியுறையாக
வைத்து,
‘தீயன சிறியோர் செய்தால், பொறுப்பது பெரியோர்
செய்கை;
ஆயிர நாமத்து ஐயா! சரணம்’ என்று அடியில்
வீழ்ந்தான்.–73-

பாய் இருள் சீய்க்கும்- எங்கும் பரவிய இருளைப்
போக்குகின்ற; தெய்வப் பருதியை- தெய்வத்தன்மை வாய்ந்த
சூரியனையும்; பழிக்கும் மாலை- பழித்துக் கீழானதென்று
கூறச் செய்யும் ஒளிமிக்க மாலை ஒன்றை; மாயிரும் கரத்தால்
– தனது பெரிய கைகளால்; மண் மேல் அடியுறையாக
வைத்து- (ராமபிரானுக்கு முன்பு) தரைமீது காணிக்கையாக
வைத்து; தீயன சிறியோர் செய்தால்- சிறியவர்கள்
அறியாமையினாலே தீமை செய்வார்களானால்; பொறுப்பது
பெரியோர் செய்கை- அத்தீமையைப் பொறுத்தருள்வது
பெரியவர்களின் செய்கையாகும்; ஆயிரம் நாமத்து ஐயா-
ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனே; சரணம் என்று
அடியில் வீழ்ந்தான்- அடியேன் உனக்கு அடைக்கலம் என்று
கூறியபடி வருணன் இராமபிரானது திருவடிகளில் விழுந்தான்.

“சேராதன உளரோ
பெருஞ் செல்வர்க்கு வேதம் செப்பும், பேர் ஆயிரம் திண்
பெரும்புயம் ஆயிரம் பெய்துளவத், தாரார் முடி ஆயிரம் குரு
கூர்ச் சட கோபன் சொன்ன, ஆரா அமுதக் கவி ஆயிரம் அவ்
வரியினுக்கே’ என்ற சடகோபரந்தாதி (45) ஒப்பு நோக்கத் தக்கது.

———-

இராமபிரான் சினம் தணிந்து காலம் தாழ்த்தமைக்குக் காரணம் வினவுதல்

6662.

பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படராநின்ற
உருப் பெறக் காட்டி நின்று, ‘நான் உனக்கு அபயம்’
என்ன,
அருப்பு அறப் பிறந்த கோபம் ஆறினான், ஆறா
ஆற்றல்
நெருப்பு உறப் பொங்கும் வெம் பால் நீர் உற்றது
அன்ன நீரான்.–74-

பருப்பதம் வேவது என்ன- ஒரு மலையே நெருப்புப்
பற்றி எரிவது போல; படர் ஒளி படரா நின்ற உருப்பெறக்
காட்டி நின்று- பரவிய ஒளி படர்ந்து நின்று தனது வடிவத்தை
நன்றாகக் காட்டி நின்று; நான் உனக்கு அபயம் என்ன-
உனக்கு நான் அடைக்கலம் என்று வருணன் கூற; அருப்பறப்
பிறந்த கோபம் ஆறினான்- இராமபிரான் மிகுதியாக உண்டான
சினம் தணிந்தான்; ஆறா ஆற்றல் நெருப்பு உற- தணியாத
வலிமை கொண்ட நெருப்புப் பொருந்தலால்; பொங்கும்
வெம்பால்- பொங்கிய காய்ந்த பாலில்; நீர் உற்றது அன்ன
நீரான் – நீர் தெளித்தால் தணிவது போன்ற தன்மையன்
ஆயினான்.

————

ஆறினாம்; அஞ்சல்; உன்பால் அளித்தனம் அபயம்,
அன்பால்;
ஈறு இலா வணக்கம் செய்து, யாம் இரந்திட,
எய்திடாதே,
சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவதாகக்
கூறுதி, அறிய’ என்றான்; வருணனும், தொழுது
கூறும்:–75-

ஆறினாம் அஞ்சல் உன்பால் அளித்தனம் அபயம்-
கோபம் தணிந்தேன், அஞ்சாதே உனக்கு அடைக்கலம்
அளித்தேன்; அன்பால் ஈறிலா வணக்கம் செய்து- உன்னிடம்
அன்பு கொண்டவனாய் உனக்கு முடிவில்லாத வணக்கம் செய்து;
யாம் இரந்திட எய்திடாதே- நான் பணிவுடன் கெஞ்சிக் கேட்க
வராமல்; சீறுமா கண்டு வந்த திறத்தினை- சீற்றமிகக் கொண்டு
நின்றதைக் கண்டு அதன் பிறகு இங்கு வந்த தன்மையை;
தெரிவதாகக் கூறுதி அறியஎன்றான்- நான் தெரிந்து
கொள்ளுமாறு கூறுவாயாக என்றான் இராமபிரான்; வருணனும்
தொழுது கூறும்- அதைக் கேட்ட வருணன் இராமபிரானை
வணங்கிக் கூறுவானானான்;

———–

‘பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற
பண்பு
வார்த்தையின் அறிந்தது அல்லால், தேவர்பால்
வந்திலேன், நான்;
தீர்த்த! நின் ஆணை; ஏழாம் செறி திரைக் கடலில்
மீனின்
போர்த் தொழில் விலக்கப் போனேன்; அறிந்திலேன்
புகுந்ததுஒன்றும்.’–76-

பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு-
நிலமகளைக் காட்டிலும் பொறுமைமிக்க பத்தினியான சீதா
பிராட்டி; உற்ற பண்பு வார்த்தையின் அறிந்ததல்லால்-
நேர்ந்ததனை இப்போது உனது வார்த்தையால்
அறிந்தேனேயல்லாது; தேவர் பால் வந்திலேன் நான்- நான்
தேவர்களிடம் வந்தேனல்லேன் (எனவே பிராட்டியின் நிலையை
முன்பு அறியேன்); தீர்த்த! நின் ஆணை- தூய்மை மிக்கவனே!
உன் மீது ஆணையாகக் கூறுகிறேன்; ஏழாம் செறி திரைக்
கடலில்- அலைகள் மிகுந்து செறிந்துள்ள ஏழாவது கடலிலே;
மீனின் போர்த் தொழில் விலக்கப் போனேன்- மீன்கள்
தங்களுக்குள் பகை கொண்டு செய்த போரை விலக்கச்
சென்றிருந்தேன்; அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்- ஆதலால்
இடையில் நிகழ்ந்த செயல் ஒன்றினையும் அறியாதவனானேன்.

———

இராமபிரான் அம்புக்கு இலக்கு யாதென வருணன் கூறுதல்

6665.

என்றலும், இரங்கி, ஐயன், ‘இத் திறம் நிற்க; இந்தப்
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என்?
புகறி’என்ன,
‘நன்று’ என வருணன்தானும், ‘உலகத்து நலிவு தீர,
குன்று என உயர்ந்த தோளாய்! கூறுவல்’ என்று
கூறும்:–77-

என்றலும் இரங்கி ஐயன்- என்று வருணன் கூறக்
கேட்டதும் இராமபிரான் இரக்கம் கொண்டு வருணனை நோக்கி;
இத்திறம் நிற்க- இது இவ்வாறு இருக்கட்டும் (இனி நடப்பதைப்
பார்ப்போம்); இந்தப் பொன்றல் இல்பகழிக்கு- வில்லில்
பூட்டிய இந்த அழிவில்லாத அம்புக்கு (வீணாகப் போகாமல்);
அப்பால் இலக்கம் என் புகறி என்ன- இலக்கு யாதென்று
கூறுவாயாக என்று வினவ; நன்று என வருணன் தானும்-
நல்லது என்று வருணனும் ராமனை நோக்கி; குன்றென உயர்ந்த
தோளாய்- மலை போன்ற உயர்ந்த தோள்களை உடைய
பெருமானே; உலகத்து நலிவு தீர – இவ்வுலகத்தின்
துன்பமெல்லாம் தீரும்படி; கூறுவல் என்று கூறும்- அம்புக்கு
இலக்கம் யாதெனக் கூறுவேன் என்று சொல்லலானான்.

——————

‘மன்னவ! மருகாந்தாரம் என்பது ஓர் தீவின்
வாழ்வார்,
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார், அவுணர்
ஆயோர்,
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன; எனக்கும் தீயார்;
மின் உமிழ் கணையை வெய்யோர்மேல் செல விடுதி’
என்றான்.–78-

மன்னவ- உலகனைத்துக்கும் மன்னனாக விளங்குபவனே;
மருகாந்தாரம் என்பதோர் தீவில் வாழ்வார்- மருகாந்தாரம்
என்ற பெயர் கொண்ட கடல் நடுவே உள்ள தீவில் வாழ்பவர்கள்;
அன்னவர் சத கோடிக்கு மேல் உளர்- அத்தகையோர் நூறு
கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையினராக உள்ளனர்; அவுணர்
ஆயோர் தின்னவே உலகமெல்லாம் தீந்தன- அரக்கர்களான
அவர்கள் தின்பதால் உலகமெல்லாம் அழிந்து போயிற்று;
எனக்கும் தீயார் – அவ்வரக்கர்கள் எனக்கும் தீங்கு செய்யும்
தீயவர்கள்; மீன் உமிழ் கணையை- மின்னலைப் போல ஒளியை
உமிழும் இந்த அம்பை; வெய்யோர் மேற்செல விடுதி
என்றான்- அந்தக் கொடியவர்கள் மேல் செல்லுமாறு விடுவாயாக
என்றான்.

———

நேடி, நூல் தெரிந்துளோர்தம் உணர்விற்கும், நிமிர
நின்றான்,
‘கோடி நூறு ஆய தீய அவுணரைக் குலங்களோடும்
ஓடி நூறு’ என்று விட்டான்; ஓர் இமை ஒடுங்கா
முன்னம்,
பாடி நூறாக நூறி மீண்டது, அப் பகழித் தெய்வம்.–79-

நேடி நூல் தெரிந்துளோர் தம்- நல்ல ஞான நூல்களைத்
தேடி, ஆராய்ந்து கற்றுத் தெளிந்த அறிவுடைய ஞானிகளது;
உணர்விற்கும் நிமிர நின்றான்- ஞான உணர்வுக்கும் எட்டாது
உயர்ந்து விளங்குபவனான இராமபிரான்; கோடி நூறு ஆயதீய
அவுணரை- (தனது அம்பினை நோக்கி) நூறு கோடியினரான
கொடிய அரக்கர்களை; குலங்களோடும் ஓடி நூறு என்று
விட்டான்- அவர்களது குலங்களோடும் ஓடிச் சென்று
அழிப்பாயாக என்று கூறி எய்தான்; ஓர் இமை ஒடுங்கா
முன்னம்- ஒரு இமைப்பொழுது ஆவதற்கு முன்பே; அப்
பகழித் தெய்வம்- அந்த அம்பாகிய தெய்வம்; பாடி நூறாக
நூறி மீண்டது- அவ்வரக்கரூர் தூளாகும்படி அழித்துவிட்டு
மீண்டு வந்தது.

உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை உணர்வரிது’ (1.3.6) என்ற
திருவாய்மொழியும் நினைவு கூரலாம்.

———

ஆய்வினை உடையர் ஆகி, அறம் பிழையாதார்க்கு
எல்லாம்
ஏய்வன நலனே அன்றி, இறுதி வந்து அடைவது
உண்டோ?
மாய் வினை இயற்றி, முற்றும் வருணன்மேல் வந்த
சீற்றம்,
தீவினை உடையார்மாட்டே தீங்கினைச் செய்தது
அன்றே.–80-

ஆய்வினை உடையராகி- ஆராய்ந்து புரியும் நல்ல
செயல்களையே உடையவராகி; அறம்பிழையாதார்க்கு எல்லாம்-
அறநெறியிலிருந்து தவறாது வாழும் நல்லவர்களுக்கு எல்லாம்;
ஏய்வன நலனே அன்றி- எவ்விதத்தும் நன்மையே எய்துமே
யல்லாது; இறுதி வந்தடைவதுண்டோ- அழிவு வந்து அடைவதுண்டோ? (இல்லை); மாய் வினை இயற்றி-
அழியும்படியான செயலைச் செய்து; வருணன் மேல் வந்த
சீற்றம் – வருணன் மீது வந்த இராமபிரானது வெகுளி
(வருணனை எதுவும் செய்யாது); தீவினை உடையார் மாட்டே-
தீய செயல்களைப் புரிந்துவந்த மருகாந்தாரத்து அரக்கர் பக்கம்
சென்று; தீங்கினைச் செய்ததன்றே- அவர்களுக்குத் தீங்கை
விளைவித்ததல்லவா?

———-

பாபமே இயற்றினாரை, பல் நெடுங் காதம் ஓடி,
தூபமே பெருகும் வண்ணம், எரி எழச் சுட்டது
அன்றே,
தீபமே அனைய ஞானத் திரு மறை முனிவர் செப்பும்
சாபமே ஒத்தது அம்பு;-தருமமே வலியது அம்மா!–81-

பாபமே இயற்றினாரை- பாவம் மிக்க செயல்களையே புரிந்து
வந்த அரக்கர்களை; பல நெடும்காதம் ஓடி- பலகாதங்களாகிய
நெடும் தூரம் விரைந்து சென்று; தூபமே பெருகும் வண்ணம்-
மருகாந்தாரத் தீவு முழுதும் புகை சூழும்படி; எரி எழச் சுட்டது-
நெருப்பு எழும்படி சுட்டு அழித்தது; தீபமே அனைய ஞான- புற
இருளை மாற்றும் விளக்குப் போன்று, அக இருளை மாற்றவல்ல
தீபமாகிய ஞானம் மிக்க; திருமுறை முனிவர் செப்பும்-
தெய்வத்தன்மை வாய்ந்த வேதங்களை அறிந்த முனிவர்கள்
கூறுகின்ற; சாபமே ஒத்தது அம்பு- சாப மொழியை ஒத்தது
இராமபாணம்; தருமமே வலியது அம்மா- தருமம் எத்தனை
வலிவுடையது.

———

இராமன் வழி வேண்ட வருணன் சேதுகட்டச் சொல்லுதல்

6670.

‘மொழி உனக்கு அபயம் என்றாய்; ஆதலான், முனிவு
தீர்ந்தேன்;
பழி எனக்கு ஆகும் என்று, பாதகர் பரவை என்னும்
குழியினைக் கருதிச் செய்த குமண்டையைக் குறித்து
நீங்க,
வழியினைத் தருதி’ என்றான், வருணனை நோக்கி,
வள்ளல்.–82-

வள்ளல் வருணனை நோக்கி – வேண்டுவார்
வேண்டியதருளும் வள்ளலாகிய இராமபிரான் வருணனைப்
பார்த்து; மொழி உனக்கு அபயம் என்றாய்- ‘உனக்கு
அடைக்கலம்’ என்று ஒரு சொல் நீ சொன்னாய்; ஆதலால்
முனிவு தீர்ந்தேன்- அதனாலே உன் மீது கொண்டிருந்த சினம்
தீர்ந்தேன்; பழி எனக்கு ஆகும் என்று- இராமன் தனது
மனைவியைக் கூடக் காப்பாற்றும் வலிமை இல்லாதவன் என்று
உலக மக்கள் கூறும் பழிக்கு நான் ஆளாகட்டும் என்று; பாதகர்
பரவை என்னும் குழியினைக் கருதி – பாதகர்களாகிய
அரக்கர்கள் இலங்கைக்கு அரணாகக் கடல் என்ற குழி
இருப்பதைக் கருதி; செய்த குமண்டையைக் குறித்து-
செய்த கூத்தினைக் குறித்து; நீங்க வழியினைத் தருதி
என்றான்- அது நீங்க, இலங்கை செல்லுதற்குரிய வழியைத்
தருவாயாக என்றான்.

———-

ஆழமும் அகலம்தானும் அளப்ப அரிது எனக்கும்,
ஐய!
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை
இல்லை;
வாழியாய்! வற்றி நீங்கில், வரம்பு அறு காலம்
எல்லாம்
தாழும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும்-தவத்தின்
மிக்காய்!–83-

தவத்தின் மிக்காய் – மிகுந்த தவம் பொருந்திய
பெருமானே; ஆழமும் அகலம் தானும் அளப்பரிது எனக்கும்
ஐய- ஐயனே! இந்தக் கடலின் ஆழத்தையும் அகலத்தையும்
அளந்தறிவதென்பது கடல் வேந்தனான எனக்கும் அரிய
தொன்றாகும்; ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை
இல்லை- ‘ஏழுலகங்கள்’ என அடுக்காக உள்ள உலகுக்கும்
கடலில்லையேல் எல்லையில்லை; வாழியாய் வற்றி நீங்கில்
– வாழ்வுக்குரிய இறைவனே, இந்தக் கடலை வற்றச் செய்து,
நீர் முழுவதையும் நீங்கச் செய்ய; வரம்பறு கால மெல்லாம்
தாழும்- அளவில்லாத காலம் தாமதமாகும்; நின் சேனை
உள்ளம் தளர்வுறும்- உனது வானர சேனை, காலம்
நீட்டிப்பதால் மனம்தளர்ந்து போகநேரிடும் (என்றான்).

————

‘கல்லென வலித்து நிற்பின், கணக்கு இலா உயிர்கள்
எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும்; இட்டது ஒன்று
ஒழுகாவண்ணம்
எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென், இனிதின்;
எந்தாய்!
செல்லுதி, “சேது” என்று ஒன்று இயற்றி, என்
சிரத்தின் மேலாய்.’–84-

எந்தாய்- என் தந்தையே; கல் என வலித்து நிற்பின்-
கடல் நீரைக் கல்லைப் போலக் கடினமாக்கி நின்றால்;
கணக்கிலா உயிர்கள் எல்லாம் ஒல்லையில் உலந்து வீயும்-
கடலில் வாழும் கணக்கில்லாத உயிரினங்களெல்லாம் வாழ
முடியாதபடி விரைவில் இறந்து படும்; இட்டது ஒன்று ஒழுகா
வண்ணம்- என்னிடம் இட்டது எதுவும் கீழே ஒழுகிவிடாதபடி;
எல்லையில் காலமெல்லாம் ஏந்துவன்- அளவில்லாத
காலமெல்லாம் தாங்கி ஏந்திக் கொண்டிருப்பேன் என்
சிரத்தின் மேலாய்- எனது தலையின் மீதாக; சேது என்று
ஒன்று இயற்றி- அணை என்ற ஒன்றை இயற்றி; இனிதின்
செல்லுதி- அதன் வழியாக இனிதே செல்லுவாயாக (என்றான்)

———–

இராமபிரான் சேதுகட்டப் பணித்தல்

6673.

‘நன்று, இது புரிதும் அன்றே; நளிர் கடல் பெருமை
நம்மால்
இன்று இது தீரும் என்னில், எளிவரும் பூதம்
எல்லாம்;
குன்று கொண்டு அடுக்கி, சேது குயிற்றுதிர்’ என்று
கூறிச்
சென்றனன், இருக்கை நோக்கி; வருணனும்
அருளின் சென்றான்.–85-

நன்று இது புரிதும்- நல்லது இதைச் செய்வோம் என்று
கூறிய இராமபிரான்; நம்மால் நளிர்கடல் பெருமை- கடல்மீது
அணைகட்டுவோமானால், நம்மால் இந்தக் குளிர்ந்த
கடலுக்குள்ள பெருமை; இன்று இது தீரும் என்னில்- நாம்
அணைகட்டிக் கடந்து செல்வதால் தீருமாயின்; பூதமெல்லாம்
எளிவரும்- மற்ற நான்கு பூதங்களும் நமக்கு எளிமைப்படும்;
குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர்- குன்றுகளைக்
கொண்டு வந்து அடுக்கிக் கடலின்மீது அணைகட்டுங்கள்; என்று
கூறிச் சென்றனன் இருக்கை- என்று வானர வீரர்களுக்குப்
பணித்து விட்டுத் தனது இருப்பிடம் செல்லலானான்; வருணனும்
அருனின் சென்றான்- வருணனும் இராமபிரானது அருளுக்கு
உரியவனாகி (விடைபெற்றுச்) சென்றான்.

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading