இராமன் வீடணனுக்கு உறையுள் அளித்தலும், சூரியன் மறைதலும்
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழித்
தந்தனன் விடுத்த பின், இரவி, ‘தன் கதிர்
சிந்தின வெய்ய’ என்று எண்ணி, தீர்ந்தனன். 1-
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு- பாடி வீட்டை
வலம் வந்தபின், வந்து இராமபிரானது திருவடிகளை வணங்கிய
அசுரர் குலவேந்தனான வீடணனுக்கு; அந்தம் இல்லாததோர்
உறையுள்- எல்லையற்ற பரப்பை உடைய ஒரு உறைவிடத்தை;
அவ்வழித் தந்தனன் விடுத்தபின் – அந்தப் பாசறையிலே
கொடுத்து அவனை அனுப்பி வைத்தபின்; இரவிதன் கதிர் சிந்தின
வெய்ய என்று எண்ணி – சூரியன் தனது கதிர்கள் வெப்பம் மிக்கன
என நினைத்து; தீர்ந்தனன் – தனது கிரணங்களைச் சுருங்கச்
செய்தான் மறைந்தான்.
————
அந்தி மாலையின் தோற்றம்
சந்தி வந்தனைத் தொழில் முடித்து, தன்னுடைப்
புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை
சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. 2-
சந்தி வந்தனைத் தொழில் முடித்து – (சூரியன்
மறைந்ததும் மாலை நேரம் என்பதால் இராமபிரான்)
சந்தியாவந்தனம் செய்து முடித்து); தன் நெடும் புந்தி நொந்து
– தனது நெடிய மனம் நொந்து; இராமனும் உயிர்ப்ப –
இராமபிரானும் (சீதையைப் பிரிந்த துயரால்) பெருமூச்சு விட;
மதனன் பூங்கணை சிந்திவந்து – மன்மதனும் மலரம்புகளை
எய்து கொண்டு வந்து; இறுத்தனன் – அங்கு தங்கலாயினான்;
தீநிறத்து அந்திவந்து இறுத்தது – நெருப்புப் போன்ற நிறத்தை
உடைய அந்தி மாலை வந்தடைந்தது; அண்டம் கறுத்தது –
(அதனால்) வானம் இருண்டு கறுத்தது.
———–
மாத் தடந் திசைதொறும் வளைத்த வல் இருள்
கோத்தது, கருங் கடல் கொள்ளை கொண்டென்
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர்
பூத்தென மீன்களால் பொலிந்தது, அண்டமே. 3-
மாத்தடந்திசை தொறும் – (பகல் முழுதும் பரிதிக்குப்
பயந்து) பெரியபரந்த திசைகள் தோறும் சென்று; மறைந்த வல்
இருள் – மறைந்திருந்த வலிய இருளானது; கருங்கடல்
கொள்ளை கொண்டென- கரிய கடல் நீர் உலகத்தைக்
கொண்டது போல;கோத்தது – வந்து கவிந்து கொண்டது; நீத்த நீர்ப்
பொய்கையில்- நிறைந்த நீரையுடைய பொய்கையிலே; நிறைந்த
நாண்மலர்பூத்தென- நிறைந்த அன்றலர்ந்தமலர்கள் பூத்தது
போல; அண்டம் மீன் குலம் பொலிந்தது – வானத்திலே
விண்மீன்கள் விளங்கின.
———
சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய
வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வேட்கையால்,
எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால்,
மல்லிகைக் கானமும், வானம் ஒத்ததே. 4-
சில் இயல் கோதையை நினைந்து – சில வகைகளாக
அழகு படுத்தும் கூந்தலையுடைய சீதா பிராட்டியை நினைத்து;
தேம்பிய வில்லியை – வருந்துகின்ற வில்வீரனான இராமனை;
திருமனம் வெதுப்பும் வெம்மையால் – அவனது அழகிய
மனத்தை வெதுப்புகின்ற வெப்பத்தால்; எல்லியைக்
காண்டலும் – இரவைக் கண்டவுடனே; மலர்ந்த ஈட்டினால்-
மலர்ந்திருக்கும் தன்மையால்; மல்லிகைக் கானமும் வானமும்
ஒத்தது – மல்லிகைக் காடும் விண்மீன்கள் பொலியும்
வானத்தை ஒத்தது.
—————-
ஒன்றும் உட் கறுப்பினோடு, ஒளியின் வாள் உரீஇ,
‘தன் திருமுகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன்’
என்றது போல, வந்து எழுந்தது – இந்துவே. 5-
ஒன்றும் உட் கறுப்பினோடும் – பொருந்திய உள்ளத்தே
பகைமையோடும்; ஒளியின் வாள் உரீஇ – ஒளியாகிய வாளை
உருவிக் கொண்டு; தன்தனி முகத்தினால் – தனது ஒப்பற்ற
முகத்தினாலே; என்னைத் தாழ்த்து – என்னைத் தாழ்ந்து
போகச் செய்து; அறவென்றவள் – அடியோடு வெற்றி
பெற்றவளாகிய சீதாபிராட்டியின்; துணைவனை இன்று
வெல்குவேன்-துணைவனான இராமபிரானை இன்று நான் வெல்லுவேன்; என்றது
போல – என்று கூறுவதுபோல; இந்து வந்து எழுந்தது-
வானத்திலே சந்திரன் வந்து எழுந்தான்.
———-
‘கண்ணினை அப்புறம் கரந்து போகினும்,
பெண் நிறம் உண்டுஎனின், பிடிப்பல் ஈண்டு’ எனா,
உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான். 6-
கண்ணினை அப்புறம்- கண்ணுக்குப் புலனாகாதபடி
அப்புறத்தில்; கரந்துபோகினும்- மறைந்து சென்றாலும்; பெண்
நிறம் உண்டெனில்- சீதை என்னும் பெண்ணின் உடல்
இருக்குமானால்; பிடிப்பல் ஈண்டு எனா – இப்போதே
பிடிப்பேன் என்று; உள் நிறை நெடுங்கடல்- உள்ளே நிறைந்த
நீரையுடைய கடல் சூழ்ந்த; உலகம் எங்கணும்- இவ்வுலகம்
எங்கும்; வெண் நிற நிலவு எனும் – வெண்மை நிறமான
நிலவொளி என்னும்; வலையை வீசினான் – வலையைச்
சந்திரன் வீசினான்.
———–
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல்,
‘உடைக் கருந் தனி நிறம் ஒளித்துக் கொண்டவன்,
அடைக்க வந்தான் எனை, அரியின் தானையால்;
கிடைக்க வந்தான்’ எனக் கிளர்ந்தது ஒத்ததே. 7-
புடைக்கை வன்திரை எடுத்து – பக்கங்களிலுள்ள
கைகளாகிய வலிய அலைகளை வீசி; ஆர்க்கும் போர்க் கடல்
– ஆரவாரம் செய்து போர்புரிய வரும் கடலானது; உடைக் கரும்
தனிநிறம் – என்னுடைய கருமையான ஒப்பற்ற நிறத்தினை;
ஒளித்துக் கொண்டவன் – தான் கவர்ந்து வைத்துக்
கொண்டவனாகிய இராமன்; அரியின் தானையால் –
வானரங்களின் படையைத் துணைகளாகக் கொண்டு; எனை அடைக்க வந்தான்- என்னைத்
தடுத்து அணைகட்ட வந்தான்; கிடைக்க வந்தான்- எனது
கைக்கு அகப்படும்படி இப்போது வந்துவிட்டான்; எனக்
கிளர்ந்தது ஒத்தது – என்று பொங்கி எழுந்தது போல் இருந்தது.
———–
மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்
தோல் உகுத்தாலென, அரவத் தொல் கடல்,
வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்,
பால் உகுத்தாலென, நிலவு பாய்ந்ததால். 8-
மேல் உகத் தொகுதியால்- கடந்துபோன பல யுகங்களால்;
முதிர்ந்த மெய் எலாம் – முதுமையடைந்த தன் உடலெல்லாம்;
தோல் உகுத்தால் என – தோலை உரித்தது போல; அரவத்
தொல்கடல்- பெரிய ஒலியையுடைய பழைமை வாய்ந்த கடல்;
வாலுகத்தால் இடை பரந்த வைப் பெலாம் – மணல்
குன்றுகளால் இடையே பரந்த இடமெல்லாம்; பால் உகுத்தால்
என – பாலைச் சொரிந்தது போல்; நிலவு பாய்ந்தது- நிலவு
பாய்ந்து பரவியது.
—————
மன்றல்வாய் மல்லிகை எயிற்றின், வண்டு இனம்
கன்றிய நிறத்தது, நறவின் கண்ணது,
குன்றின்வாய் முழையின் நின்று உலாய கொட்பது,
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால். 9-
மன்றல்வாய் மல்லிகை எயிற்றின் – மணம்
பொருந்திய மல்லிகை அரும்புகளாகிய பற்களையும்; வண்டினம்
கன்றிய நிறுத்தது- வண்டினமாகிய கரிய கோடுகளை உடைய உடலையும்;
நறவின் கண்ணது- தேனாகிய சிவந்த கண்களையும்; குன்றின்
வாய் முழையின் நின்று – மலையிடத்தே உள்ள குகையிலிருந்து;
உலாய கொட்பது – உலாவும் தன்மையுடையதுமாகிய; தென்றல்
என்று ஒரு புலி – தென்றல் என்னும் ஒரு புலியானது;
உயிர்த்துச் சென்றது- பெருமூச்சுவிட்டபடி வந்தது.
——————–
கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய
மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். 10-
கரத்தொடும்பாழிமாக்கடல் கடைந்துளான் – தனது
கைகளினாலே வன்மைமிக்க பெரிய பாற்கடலைக் கடைந்த
வாலியினது; உரத்தொடும் கரனொடும்- மார்பையும், கரனையும்;
உருவ ஓங்கிய மரத்தொடும் – உயர்ந்து வளர்ந்த வடிவத்தை
உடைய ஏழுமரங்களையும்; தொளைத்தவன்- ஊடுருவிச்
செல்லுமாறு அம்புதைய்த்த இராமபிரானுடைய; மார்பில்
– மார்பிலே (இன்று); மன்மதன் சரத்தொடும்-
மன்மதனுடைய அம்புகளோடு; நிலவின்தாரை வாள்
பாய்ந்தது- நிலவின் கதிர்களாகிய வாளும் பாய்ந்தது.
——————
இராமன் சீதையை நினைந்து வருந்துதல்
உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்குமால்;
இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்;
கடலினை நோக்கும்; அக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால். 11-
உடலினை நோக்கும்- (அப்போது இராமபிரான்) சீதையின்
பிரிவால் மெலிந்து போன தனது உடலைப் பார்த்தான்; இன்
உயிரை நோக்கும் – தனது இனிய உயிர் போன்றவளாகிய
சீதாபிராட்டியை மனதால் நினைத்தான்; இடரினை நோக்கும்-
அப்பிராட்டிக்கு நேர்ந்த துன்பத்தை நினைத்தான்; மற்று
யாதும் நோக்கலன் – வேறெதுவும் எண்ணாதவனாயிருந்தான்;
கடலினை நோக்கும் – தன்னெதிரே உள்ள கடலைப்
பார்ப்பான்; அக்கள்வன் வைகுறும்- சீதையைக் கவர்ந்து சென்ற
கள்வனாகிய இராவணன் தங்கியிருக்கும்; திடரினை நோக்கும் –
இலங்கையாகிய திட்டைப் பார்க்கிறான்; தன் சிலையை
நோக்கும் – தன் கையிலிருக்கும் வில்லையும் பார்த்துக்
கொள்கிறான்.
————
பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்,
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்,
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ? 12-
பணி ப ழுத்து அமைந்த பூண் – வேலைப்பாடு நிரம்பிப்
பொருந்திய அணிகலன்களை அணிந்துள்ள; அல்குல் பண்பினால்
– அல்குலையுடைய சீதா பிராட்டியின் சிறந்த பண்புகளை
நினைத்துப் பார்ப்பதால்; பிணி பழுத்து அமைந்ததோர்-
காமநோய் முதிர்ந்து அமைந்தமையால் உண்டானதொரு; பித்தின்
உள்ளத்தான்- பித்துப் பிடித்தது போன்ற மனத்தை உடைய
இராமபிரான்; அணி பழுத்து அமைந்த – அழகு பழுத்து அமைந்ததாகிய; முத்து அரும்பு செம்மணி – முத்துக்கள்
அரும்பிய சிவந்த மணி போன்ற; மணி பழுத்து அமைந்தவாய்
– அழகு நிறைந்து விளங்கும் சீதாபிராட்டியின் திருவாயினை;
மறக்க வல்லனோ – மறக்கும் வல்லமை உடையவனோ?
வல்லன்.
————-
வீடணனோடு மேல் விளைவு பற்றி எண்ணமாறு சுக்கிரீவன் இராமனிடம் கூறுதல்
ஆயது ஓர் – அளவையின், அருக்கன் மைந்தன், ‘நீ
தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை;
மேயவன் தன்னொடும் எண்ணி, மேல் இனித்
தூயது நினைக்கிலை’ என்னச் சொல்லினான். 13-
ஆயதோர் அளவையின் – (சீதையின் நினைவால் இராமன்
வருந்திய) அத்தகைய நேரத்திலே; அருக்கன் மைந்தன்-
சூரியகுமாரனான சுக்கிரீவன் (இராமபிரானை நோக்கி); நீ
தேய்வது என்- (பெருமானே) நீ இவ்வாறு வருந்தித் தேய்வது
என்ன பயனைக் கருதி; காரியம் நிரப்பும் சிந்தையை
– செய்யவேண்டிய காரியங்களை எண்ணி நிறைவேற்றத் தக்க
சிறந்த மனத்தை உடையவன் நீ (ஆதலின்); மேயவன்
தன்னொடும் எண்ணி – நம்மை நாடி வந்துள்ள இலங்கை
வேந்தனான வீடணனுடன் கலந்து சிந்தித்து; மேல் இனித்
தூயது நினைக்கிலை – இனிமேல் நடக்க வேண்டிய நமக்கு
நன்மைதரும் செயல்களை நினைக்காமலிருக்கிறாயே; என்னச்
சொல்லினான் – என்று இராமபிரானிடம் கூறலானான்.
—————
இராமன் கட்டளைப்படி, வீடணனை அழைத்துவருதல்
அவ்வழி, உணர்வு வந்து, அயர்வு நீங்கினான்,
‘செவ்வழி அறிஞனைக் கொணர்மின், சென்று’ என,
‘இவ்வழி வருதி’ என்று இயம்ப, எய்தினான் –
வௌ; வழி விலங்கி, நல் நெறியை மேவினான். 14-
அல்வழி உணர்வு வந்து- அப்பொழுது, தன்னுணர்வு
வரப்பெற்று; அயர்வு நீங்கினான் – மனத்துயர் நீங்கியவனான
இராமபிரான்; செவ்வழி அறிஞனைக் கொணர்மின் சென்றென-
நன்னெறி நின்று ஒழுகும் அறிஞனான வீடணனை அழைத்து வருக
என வானர வீரர்களுக்குக் கட்டளை இட; இவ்வழி வருதி என்று
இயம்ப – (சென்ற வானரவீரர்கள் வீடணனை அடைந்து)
இராமபிரானிடம் வருக என்று கூற; வெவ்வழிவிலங்கி
நல்நெறியை மேவினான் – தீய நெறியிலிருந்து நீங்கி,
நல்லநெறியைக் கடைப் பிடிப்பவனாகிய வீடணன்; எய்தினான்
– இராமபிரான் இருக்குமிடத்தை அடைந்தாள்.
இராமபிரான் அனுமனுக்குச் ‘சொல்லின் செல்வன்’ என்றொரு
பெயர் சூட்டிய திருவாயால் வீடணனை “செவ்வழி அறிஞன்”
என்றது குறிப்பிடத்தக்கது. இராமபிரான் கூற்றாகப் போற்றிக்
கூறியது போதாதென்று கவிக் கூற்றாகவும் ‘வெவ்வழி விலங்கி
நன்னெறியை மேவினான்” என்றது குறிப்பிடத்தக்கது.
————
இராமன் இலங்கையின் அரண் முதலியன பற்றி வீடணனை வினவுதல்
‘ஆர்கலி இலங்கையின் அரணும், அவ் வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்,
தார் கெழு தானையின் அளவும், தன்மையும்,
நீர் கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்’ என்றான். 15-
ஆர்கலி இலங்கையின் அரணும் – கடல் சூழ்ந்த
இலங்கையின் மதில் முதலிய பாதுகாப்புப் பற்றியும்; அவ்வழி
வார் கெழு கனைகழல் அரக்கர் வன்மையும்- அங்கு நீண்டு
ஒலிக்கும் வீரக் கழல் அணிந்தவர்களான இராவணன் முதலிய
அரக்கர்களின் வலிமைபற்றியும்; தார் கெழு தானையின்
அளவும் தன்மையும் – வெற்றி மாலை பொருந்திய இலங்கைப்
படையின் அளவு பற்றியும் தன்மை பற்றியும்; நீர் கெழு
தன்மையாய் – நற்குணங்கள் உடையவனே; நிகழ்த்துவாய்
என்றான் – கூறுவாயாக என, இராமபிரான் வீடணனைக்
கேட்டான்.
—————–
வீடணன் விடை பகர்தல்
எழுதலும், ‘இருத்தி’ என்று இராமன் ஏயினான்,
முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்புற,
தொழுது உயர் கையினான், தெரியச் சொல்லினான்: 16-
எழுதலும்- (இராமன் கேட்டவைகளுக்கான விடை கூற
வீடணன்) எழுந்தான், அவ்வாறு எழலும்; முழுதுணர் புலவனை
– முற்றும் உணர்ந்த அறிஞனான வீடணனை;’இருத்தி’ என்று
இராமன் ஏயினான் – (உட்கார்ந்தே பேசலாம் என்ற
எண்ணத்தால்) இருப்பாயாக என்று இராமபிரான் கூறினான்;
முளரிக் கண்ணினான் – தாமரை மலர் போன்ற
கண்களைஉடைய இராமபிரான்; பழுதற வினவிய பொருளை
– குற்றம் நீங்கக் கேட்ட பொருள்களைப் பற்றியெல்லாம்;
பண்பினால் தொழுதுயர் கையினான் – பண்போடு,
தொழுதுயர்த்திய கைகளை உடையவனாக; தெரியச்
சொல்லினான்- இராமபிரான் நன்கு தெரிந்து கொள்ள
கூறுவானாயினான்.
————-
இலங்கையின் அரண்
‘நிலையுடை வட வரை குலைய நேர்ந்து, அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும் முடி வாங்கி, ஓங்கு நீர்
அலை கடல் இட்டனன், அனுமன் தாதையே. 17-
அனுமன்தாதை – அனுமானுடைய தந்தையாகிய வாயுதேவன்
(காற்று); நிலையுடைவடவரை – நிலைத்ததன்மை கொண்ட
வடமேருமலையை; குலைய நேர்ந்து – நிலைகுலைந்து
சிதையும்படி செய்ய நினைத்து; அதன் தலை என விளங்கிய
– அந்தவடமலையின் முடி என்று திகழ்ந்த; தமனியப்
பெருமலையினை- பொன்மயமான பெரிய மேரு மலையை;
மும்முடிவாங்கி – மூன்று சிகரங்களைப் பறித்து வாங்கி; ஓங்கு
நீர் அலைகடல் இட்டனன்- நிறைந்த நீரையுடைய கடலிலே
இட்டான்.
————
‘ஏழு நூறு யோசனை அகலம்; இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை; ஆழி மால் வரை,
வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால். 18-
வாழியாய்- நல்வாழ்வுடையவனே!; ஏழு நூறு யோசனை
அகலம் – எழுநூறு யோசனை அகலமுடையதாகவும்; இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை – கீழ் ஆழம் நூறு யோசனை
உடையதாகவும்; சூழும் மாமதில் – இலங்கை நகரைச்
சூழ்ந்திருக்கும்படி கட்டப்பட்ட பெரிய மதில்; ஆழி மால் வரை
– சக்கரவாளகிரி; உலகினை வளைத்த வண்ணமே – உலகத்தை
வளைத்திருப்பதைப் போன்றதாகும்; அது சுடர்க்கும் மேலதால்
– அம்மதில் சூரிய, சந்திரர்களுக்கும் எட்டாதபடி மேலே
உயர்ந்ததாகும்.
—————-
‘மருங்குடை வினையமும், பொறியின் மாட்சியும்,
இருங் கடி அரணமும், பிறவும், எண்ணினால்,
சுருங்கிடும்; என், பல சொல்லி? சுற்றிய
கருங் கடல் அகழது; நீரும் காண்டிரால். 19-
மருங்கு உடை வினையமும் – அந்த மதிலிடத்தே
அமைந்திருக்கும் வஞ்சக வேலைப்பாடுகளும்; பொறியின்
மாட்சியும் – இயந்திரங்களின் சிறப்பும்; இருங்கடி அரணமும்
– பெரிய காவலையுடைய மதிலும்; பிறவும் எண்ணினால்
– மற்ற ஏற்பாடுகளையும் நினைத்துப் பார்த்தால்; சுருங்கிடும் –
ஆயுட்காலம் போதாதபடி சுருங்கிவிடும்; என் பல சொல்லி
– பலவற்றையும் சொல்வதால் என்ன பயன்?; சுற்றிய
கருங்கடல் அகழது – சுற்றிலுமுள்ள கரிய பெரிய கடலே
இலங்கையின் அகழியாயுள்ளது; நீரும் காண்டிரால்- நீங்களும்
நேரில் காணலாம்.
————–
வாயில் முதலியவற்றைக் காக்கும் காவலர்
‘வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்,
இடை இலர், எண் – இரு கோடி என்பரால்;
கடையுக முடிவினில் காலன் என்பது என்?
விடை வரு பாகனைப் பொருவும் மேன்மையோர். 20-
வடதிசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்- இலங்கை
நகரின் வடக்குத் திசையில் உள்ள ஒளி விளங்கும் வாயிலில்
தங்கிக்; காவல் காப்பவர்கள்; இடை இலர் – எதற்கும்
பின் வாங்காத வலிமை உள்ளவர்கள்; எண் இரு கோடி என்பர்
– பதினாலு கோடி பேர் என்பார்கள்; கடையுக முடிவினில்
– யுகாந்த காலமுடிவிலே; காலன் என்பது என்
– உயிர்களையெல்லாம் கொல்லுகின்ற எமனைப் போன்றவர் என்று
எப்படிச் சொல்வது?; விடை வரு பாகனை – காளை
வாகனத்திலே வரும் சிவபிரானை; பொருவும் மேன்மையோர் –
ஒத்த பெருமை மிக்கவராவார்.
————–
‘மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு
ஏற்றமும் உள, அவர்க்கு இரண்டு கோடி மேல்;
கூற்றையும் கண் – பொறி குறுகக் காண்பரேல்,
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார். 21-
மேல்திசை வாயிலில் வைகும்- இலங்கை மாநகரின் மேற்குத்
திசை வாயிலைக் காவல் புரிந்து தங்கியுள்ள; வெய்யவர்க்கு
ஏற்றமும் உள- கொடியவர்களுக்குச் சில தனியான மேன்மைகளும்
உண்டு; அவர்க்கு இரண்டு கோடி மேல் – வடதிசை வாயிலில்
உள்ளவர்களை விட இரண்டு கோடி அதிகம் (எனவே இவர்கள் 12
கோடி பேர்); கூற்றையும் கண்பொறி குறுகக் காண்பரேல்-
எமனையும் கூட கண்ணைச் சிறிதே குறுக்கிப் பார்ப்பாரென்றால்;
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்பர்- ஊறுகின்ற
இரத்தத்துடன் உயிரையும் உண்டு விடுவார்கள்.
செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ” என்பது
கோதையார் வாக்கு.
———-
‘தென் திசை வாயிலின் வைகும் தீயவர்
என்றவர் எண் – இரு கோடி என்பரால்;
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்?
வன் திறழ் யமனையும் அரசு மாற்றுவார். 22-
தென்திசை வாயிலின் வைகும் தீயவர் – தென்திசை
வாயிலைக் காவல் புரியும் தீயவர்கள்; என்றவர் எண் இரு
கோடி என்பரால்- என்று கூறப்படுபவர் பதினாறு கோடிப் பேர்
என்பார்கள்; குன்று உறழ் நெடியவர்- மலைக்கு நிகரான
நெடிய உடலினர்; கொடுமை கூறி என் – இவர்களது
கொடியசெயலை என்னவென்று கூறுவது; வன்திறல் யமனையும்
– வலிய திறத்தை உடைய எமனையும் கூட; அரசு மாற்றுவார்- ஆட்சியை மாற்றித்
தாமே ஆள வல்லவராவார்.
———–
‘கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர்
ஈட்டமும் எண் – இரு கோடி என்பரால்;
கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும்
தாள் துணை பிடித்து, அகன் தரையின் எற்றுவார். 23-
கீழ்த்திசை வாயிலின் வைகும் கீழவர்- கிழக்குத்
திசையிலுள்ள வாயிலில் காவல் புரிந்திருக்கும் கீழ்மக்கள்;
ஈட்டமும் எண்இரு கோடி என்பரால் – கூட்டமும்
பதினாறுகோடி; கோட்டு – வலியதந்தங்களை உடைய;
இருந்திசை நிலை – அகன்ற எட்டுத் திசைகளிலும் நிலைத்து
நிற்கும்; கும்பக் குன்றையும்- மத்தகத்தையுடைய மலைபோன்ற
திக்கு யானைகளையும்; தாள் துணை பிடித்து- அவற்றின் இரு
கால்களையும் பிடித்துத் தூக்கி; அகன் தரையின் எற்றுவார்
– தரையிலே மோதியடித்துக் கொல்லும் வல்லமை உடையவர்கள்;
அகன்தரை-அகன்ற தரையிடம்.
————–
‘விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
எண் – இரு கோடியின் இரட்டி என்பரால்;
மண்ணிடை வானவர் வருவர் என்று, அவர்
கண் இலர், கரை இலர், கரந்து போயினார். 24-
விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
– வானத்திலே தேவர்கள் வரக்கூடும் என்பதால் உறங்காமல்
கண் விழித்தவர்களாக நின்று காவல் புரியும் கொடியவர்; எண்
இரு கோடியின் இரட்டி என்பரால் – பதினாறு கோடியின்
இரண்டு மடங்கான முப்பத்திரண்டு கோடி என்பார்கள்;
மண்ணிடை வானவர் வருவர் என்று – மண்ணுலகத்துக்கு
தேவர்கள் வருவார் என்று கருதி; கண்ணிலர் – ஒரு சிறிதும் கண்ணோட்டம் இல்லாதவர்களாய்;
கரந்து போயினார்- தமது வடிவத்தை மறைத்துக் கொண்டு,
வேறு வடிவத்திலே உலாவுபவர்கள்; கரை இலர் –
அளவற்றவராவர்.
—————
‘பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும்,
உறங்கலர், உண் பதம் உலவை ஆதலால்,
கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல்,
அறைந்துளது ஐ-இரு நூறு கோடியால். 25-
பிறங்கிய நெடுமதில் – விளங்கித் தோன்றும் அந்த நீண்ட
மதிலின்; பின்னும் முன்னரும்- பின்புறத்திலும்,
முன்புறத்திலுமாக; உறங்கலர் – சிறிதும் உறங்காதவராய்;
உண்பதம் உலவை ஆதலால்- அவர்கள் உண்ணும் உணவு
காற்று ஆதலால்; கறங்கெனத் திரிபவர்- அந்தக் காற்றை நாடிக்
காற்றாடி போலத் திரிவார்கள்; கணக்கு வேண்டுமேல்
– அவர்களது எண்ணிக்கை வேண்டுமானால்; அறைந்துளது
ஐயிரு கோடி – நூறு கோடி என்று சொல்லப்பட்டுள்ளது.
———-
‘இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ?
மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார். 26-
இப்படி மதில் ஒரு மூன்று – இத்தகைய கட்டுக் காவலை
உடைய மதில்கள் மூன்றாகும்; வேறு இனி ஒப்பரும்
பெருமையும்- இதை விட வேறாக அந்த மதில்களின் ஒப்பற்ற
பெருமையை; உரைக்க வேண்டுமோ – விரிவாகக் கூறவும்
வேண்டுமோ?; மெய்ப் பெரும் திருநகர் – உண்மையான பெருமைமிக்க அந்த அழகிய
இலங்கை நகரை; காக்கும் வெய்யவர் – காவல் காக்கும்
கொடியவர்கள்; முப்பது கோடியின் மும்மை முற்றினார்-
தொண்ணூறு கோடிபேர் என நிறைந்துள்ளனர்.
————
‘சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார்,
அறப் பெரும் பகைஞர்கள், அளவு இல் ஆற்றலர்,
உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர்,
இறப்பு இலர், எண் – இரு நூறு கோடியே. 27-
சிறப்பு அவன் செய்திட- அந்த இராவணன் சிறப்புச்
செய்ய; செல்வம் எய்தினார்- அவனால் செல்வம்
அடைந்தவர்களும்; அறப்பெரும் பகைஞர் – அறத்துக்குப்
பெரிய பகைவர்களாய் உள்ளவர்களும்; அளவு இல் ஆற்றலர்
– அளவில்லாத வலிமை உடையவர்களும்; உறப் பெரும் பகை
வரின் – அந்த இராவணனுடன் போரிடப் பெரும்பகைவர்
வருவாராயின்; இறப்பிலர் – எப்போதும் இராவணனது
கட்டளையை மீறாதவர்களுமானவர்கள்; எண் இரு கோடியே –
பதினாறு கோடி பேராவார்.
———————-
கோயில் வாயிலின் காவலர்
‘”விடம் அல, விழி” எனும், வெகுளிக் கண்ணினர்,
“கடன் அல, இமைத்தலும்” என்னும் காவலர்,
வட வரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர், எண் – எண் கோடியால். 28-
விடம் அல விழி எனும்- இவை விடம் அல்ல விழிகள்தான்
என்று கூறும்படி; வெகுளிக் கண்ணினர்- கோபம் மிக்க கண்களை
உடையவர்கள்; இமைத்தலும் கடன் அல – கண்களை
இமைப்பதும் நமது கடமையல்ல; என்னும் காவலர் – என்று
கூறும்படி காவல் காப்பவர்கள்; வட வரை புரைவன – வட
வரையான மேரு மலையைப் போன்றனவாகிய; கோயில்
வாயிலின்- இராவணனுடைய அரண்மனை வாயிலில்; இடம்
வலம் வருபவர்- இடதுசாரி, வலது சாரியாகத்
திரிந்துவருகின்றவர்கள்; எண்ணெண் கோடி- அறுபத்து நான்கு
கோடிப் பேராவர்.
——–
‘அன்றியும், அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்,
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்;
குன்றினும் வலியவர்; கோடி கோடியால். 29-
அன்றியும் அவன் அகன் கோயில் – அல்லாமலும் அந்த
இராவணனுக்குரிய விசாலமான அரண்மனையில்; ஆய்மணி
முன்றிலின் – ஆராய்ச்சி மணி கட்டப்பட்டுள்ள முற்றத்திலே;
வைகுவார் முறைமை கூறிடின் – தங்கிக் காவல் புரிபவர்களின்
தன்மையைக் கூறுவோமாயின்; ஒன்றிய உலகையும் – ஒன்றாக
உள்ள உலகத்தை எல்லாம்; எடுக்கும் ஊற்றத்தார் – தமது
கைகளால் தூக்கவல்ல ஆற்றல் உள்ளவர்களும்; குன்றினும்
வலியவர் – மலையினும் வலிமைமிக்கவர்களும் ஆகிய வீரர்கள்;
கோடி கோடியே – கோடி கோடிப் பேராவர்.
———–
படைகளின் பெருக்கம்
‘தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக்
கார்வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம்
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே. 30-
தேர் பதினாயிரம் பதுமம்- இராவணனது படையிலுள்ள
தேர்கள் பதினாயிரம் பதுமமாகும்; செம்முகக் கார் வரை
அவற்றினுக் கிரட்டி – சிவந்த புள்ளிகளைக்
கொண்டமுகத்தையுடைய கரிய மலைபோன்ற யானைகளின்
எண்ணிக்கை தேர்ப் படையிலும் இரண்டு மடங்கு (இருபதாயிரம்
பதுமம்); கால் வயத்து ஊர் பரி – கால்கள் வலியனவாய் ஏறிச்
செல்லப் பயன்படும் குதிரைகள்; அவற்றினுக்கு இரட்டி –
யானைப்படையை விட இரண்டுமடங்கு (நாற்பதாயிரம் பதுமம்);
ஒட்டகம் தார்வரு புரவியின் – ஒட்டகப் படை, மாலை
யணிந்த குதிரைப் படையை விட; இரட்டி சாலுமே – இரண்டு
மடங்கு நிறைந்ததாயிருக்கும் (எண்பதாயிரம் பதுமம்);
———–
‘பேயனேன், என், பல பிதற்றி? பேர்த்து அவன்
மா இரு ஞாலத்து வைத்த மாப் படை
தேயினும், நாள் எலாம் தேய்க்க வேண்டுவது,
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது – ஆழியாய்! 31-
ஆழியாய் – ஆணையாகிய சக்கரத்தை உடையவனே;
பேயனேன் – பேய் போன்றவனாகிய நான்; என் பல பிதற்றி
பேர்த்து- பலவும் திரும்பத்திரும்பக் கூறுவதால் என்ன பயன்?;
அவன் மாயிரு ஞாலத்து – அந்த இராவணன் இப் பெரிய
உலகத்திலே; வைத்த மாப்படை – நிறுத்தி வைத்துள்ள
பெரியபடை; நாளெலாம் தேயினும் – உலகுள்ள நாள் வரை
அழித்தாலும்; தேய்க்க வேண்டுவது – அழித்துக் கொண்டே
இருக்க வேண்டியதாய் இருக்கும்; ஆயிர வெள்ளம் என்று
அறிந்தது- எனத் தெரிந்தது ஆயிரம் வெள்ளம் அளவினதாகும்.
———–
இராவணனது துணைவர்கள்
‘இலங்கையின் அரண் இது; படையின் எண் இது;
வலங் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர், அந்தம் இல்
வலங்களும் வரங்களும், தவத்தின் வாய்த்தவர். 32-
இலங்கையின் அரண் இது- இலங்கை மதிலின் பெருமை
இது; படையின் எண் இது – படைகளின் எண்ணிக்கை இது;
வலங்கையில் வாள்- இராவணன் தனது வலது கையிலே
தாங்கியுள்ளவாள்; சிவன் கொடுக்க வாங்கிய- சிவபிரான் தரப்
பெற்றுக் கொண்ட; அலங்கல் அம் தோளவன் – வெற்றி
மாலை சூடிய அழகிய தோள்களை உடைய இராவணனது;
துணைவர் – தம்பிமார்கள்; அந்தம் இல்வலங்களும்-
அழிவில்லாத வலிமைகளும்; வரங்களும் – பலவகையான
வரங்களும்; தவத்தின் வாய்த்தவர் – தாம் செய்த தவ
பலத்தாலே வாய்க்கப் பெற்றவராவர்.
—————
‘உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்,
சுகம் பல் போர் அலால் வேறு இலன், பொரு படைத் தொகையான்,
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான்,
அகம்பன் என்று உளன்; அலை கடல் பருகவும் அமைவான். 33-
உகம் பல் காலமும் தவம் செய்து – பலயுகங்கள் தவம்
செய்து; பெருவரம் உடையான் – பெரிய வரங்களைப்
பெற்றிருப்பவனும்; சுகம் பல்போரலால் வேறிலன்- பல
போர்களைச் செய்வதை விட வேறு இன்ப மில்லாதவனும்;
பெரும்படைத் தொகையான்- பெரிய படையை உடையவனும்;
நகம் பல் என்றிவை இல்லதோர்- நகம், பல் என்பவைகளைப்
பெற்றிருக்காத ஒரு; நரசிங்கம் அனையான்- நரசிங்கத்தைப்
போன்றவனும் ஆன; அகம்பன் என்றுளன் – ‘ அகம்பன்’ என்ற
பெயர் கொண்ட ஒரு அரக்கர்தலைவன் உள்ளான்; அலை கடல்
பருகவும் அமைவான் – அலைகளை உடைய கடல்நீர்
முழுவதையும் குடிக்கவும் வல்லவன்.
அகம்பன் இராவணனுக்கு மாமன்முறைதான்.
————-
‘பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும்,
உருப்ப விற் படை, ஒன்பது கோடியும் உடையான்,
செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து செறுத்த
நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு நெடியோன். 34-
பொருப்பை மீதிடும் – மலைகளையும் மீதிட்டுச் செல்லும்;
புரவியும் பூட்கையும் தேரும் – குதிரைகளும், யானைகளும்,
தேர்களும்; உருப்ப விற்படை – சினம் மிக்க விற்படையினரான
காலாட்படை வீரர்களும்; ஒன்பது கோடியும் உடையான்-
ஒன்பது கோடியை உடையவனும்; வானிடை செருப்பெய்
சினக்கடாய்- வானத்திலே போர்புரிந்த சினம்மிக்க ஆட்டுக்
கடாவினை; கடாய் வந்து செறுத்த – வாகனமாகச் செலுத்தி
வந்து போரிட்ட; நெருப்பை வென்றவன் – அக்கினி தேவனை
வென்றவனும்; நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் –
சிறந்த வீரனுமான நிகும்பன் என்பவனும் உள்ளான்.
இங்குக் கூறப்படும் நிகும்பனும், அடுத்த பாடலில் வரும்
கும்பனும் கும்பகர்ணனுடைய பிள்ளைகள் என்று வான்மீகம்
கூறும்.
————-
‘தும்பி ஈட்டமும், இரதமும், புரவியும், தொடர்ந்த
அம் பொன் மாப் படை ஐ-இரு கோடி கொண்டு அமைந்தான்,
செம் பொன் நாட்டு உள சித்திரைச் சிறையிடை வைத்தான்,
கும்பன் என்று உளன்; ஊழி வெங் கதிரினும் கொடியான். 35–
தும்பி ஈட்டமும், இரதமும் புரவியும்- யானைக் கூட்டமும்,
தேர் குதிரை ஆகியவற்றுடன்; தொடர்ந்த அம்பொன் மாப்படை
– சேர்ந்த அழகிய பொன் போன்ற அரிய பெரிய படை; ஐயிரு
கோடி கொண்டமைந்தான்- பத்துக் கோடி பேரைக் கொண்டு
அமைந்தவனும்; செம்பொன் நாட்டுள சித்தரை – செம்பொன்
நாடாகிய தேவ உலகில் வாழும் சித்தர்களை; சிறையிடை
வைத்தான் – போரில் வென்று சிறையிலே வைத்தவனுமான; ஊழி
வெங்கதிரினும் கொடியான் – யுகாந்த காலத்துச் சூரியனை
விடவும் கொடியவன்; கும்பன் என்று உளன் – கும்பன்
என்பவனும் இருக்கிறான்.
—————
‘பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது
ஆய தேர்ப் படை ஐ – இரு கோடி கொண்டு அமைந்தான்,
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா
மாயையான் உளன், மகோதரன் என்று ஒரு மறவோன். 36-
பேயை யாளியை யானையை- பேய்களையும், யாளிகளையும்
யானைகளையும்; கழுதையைப் பிணித்த தாய – கழுதைகளையும்
பூட்டியதாகிய; தேர்ப்படை ஐயிரு கோடி கொண்டமைந்தான்-
தேர்ப்படைபத்துக் கோடியை யுடையவன்; தாயை ஆயினும்
சலித்திடு – பெற்ற தாய் ஆனாலும் கலக்கம் செய்யவல்ல;
வஞ்சனை தவிரா மாயையான்- வஞ்சம் நீங்காத மாயையை
உடையவன்; மகோதரன் என்று ஒரு மறவோன் உளன்
– மகோதரன் என்னும் பெயருடைய ஒரு வீரன் உள்ளான்.
—————-
‘குன்றில் வாழ்பவர் கோடி நால் – ஐந்தினுக்கு இறைவன்,
“இன்று உளார் பினை நாளை இலார்” என எயிற்றால்
தின்றுளான், நெடும் பல் முறை தேவரைச் செருவின்
வென்றுளான், உளன், வேள்வியின் பகைஞன், ஓர் வெய்யோன். 37-
குன்றில் வாழ்பவர்- மலைகளிலே வாழும் அரக்கர்கள்;
கோடி நாலைந்தினுக் கிறைவன் – இருபது கோடி பேருக்குத்
தலைவனும்; இன்றுளார் பினை நாளை இலாரென – இன்று
இருப்பவர்கள் பின்பு நாளைக்கு இருக்க மாட்டார்கள் என்னும்படி;
எயிற்றால் தின்றுளான் – பற்களால் கடித்துத் தின்று தீர்க்க
வல்லவனும்; தேவரைச் செருவின்- தேவர்களைப் போரிலே;
நெடும் பல்முறை வென்றுளான் – பலமுறையும் வென்றவனும்
ஆகிய; வேள்வியின் பகைஞன் – வேள்விப் பகைவன் என்ற
பெயர் கொண்ட; ஓர் வெய்யோன் உளன்- ஒரு கொடியவன்
இருக்கிறான்.
—————-
‘”மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால்,
உண்ணும் நாள் ஒரு நாளின்” என்று ஒளிர் படைத் தானை
எண்ணின் நால் – இரு கோடியன், எரி அஞ்ச விழிக்கும்
கண்ணினான், உளன், சூரியன் பகை என்று ஒர் கழலான். 38-
மண்ணுளாரையும் வானிலுள்ளாரையும் – மண்ணுலகத்தில்
உள்ளவர்களையும், விண்ணுலகத்தில் உள்ளவர்களையும்;
வகுத்தால் உண்ணும் நாள் ஒரு நாளின் என்று – சேர்த்து
வகைப்படுத்தி வைத்தால் அனைத்தையும் உண்ணும்நாள் ஒரு
நாள் என்று கூறத்தக்க; ஒளிர்படைத்தானை – ஒளிவீசும்
படைக்கலங்களை உடைய சேனை; எண்ணின் நாலிரு
கோடியன்- எண்ணினால் எட்டிக் கோடி உடையவனாவான்;
எரிஅஞ்ச விழிக்கும் கண்ணினான்- நெருப்பும் அஞ்சுமாறு
விழிக்கும் கண்களை உடையவன்; சூரியன் பகை என்றோர்
கழலான் உளன்- சூரியன் பகைஞன் என்ற பெயருடைய
கழலணிந்த வீரன் ஒருவன் உள்ளான்.
———————
‘தேவரும், தக்க முனிவரும், திசைமுகன் முதலா
மூவரும், பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான்,
தா வரும் பக்கம் எண் – இரு கோடியின் தலைவன்,
மாபெரும்பக்கன் என்று உளன், குன்றினும் வலியான். 39-
தேவரும் தக்க முனிவரும் – தேவர்களும், தகுதியுடைய
முனிவர்களும்; திசைமுகன் முதலா மூவரும் – பிரமன் முதலான
மும்மூர்த்திகளும்; பக்கம் நோக்கியே மொழிதர- (நேருக்கு
நேராக நின்று பேசுவதற்கு அஞ்சிப்) பக்கம் பார்த்தே பேசுமாறு;
முனிவான் – கோபம் உடையவனும்; தாவரும் பக்கம் எண்
இரு கோடியின் தலைவன் – மிகுந்த வலிமை கொண்ட
சேனையின் பதினாலு கோடி பேருக்குத் தலைவனும்; குன்றினும்
வலியான் – மலையை விட வலியவனுமான; மாபெரும் பக்கன்
என்றுளன்- மாபெரும் பக்கன் என்னும் பெயருடைய ஒருவன்
உள்ளான்.
————–
‘உச் சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன்,
நச் சிரப் படை நால் – இரு கோடிக்கு நாதன்,
முச் -சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரு மொய்ம்பன்,
வச்சிரத்துஎயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான். 40-
உச்சிரத்து எரி கதிர் என – தலைக்கு மேலே எரிகின்ற
சூரியன் என்னும்படி; உருத்து எரி முகத்தன் – சினந்து எரியும்
முகத்தை உடையவனும்; நச்சிரப்படை நாலிரு கோடிக்கு
நாதன் – சிறந்த தலைமை வாய்ந்த எட்டுக் கோடி பேரைக்
கொண்ட படைக்குத் தலைவனும்; முச்சிரத்து அயில்
தலைவற்கும்- முக்கவட்டுச் சூலத்தைஉடைய சிவபிரானுக்கும்;
வெலற்கு அரு மொய்ம்பன்- போரில் வெல்லுதற்கரிய வலிமை
உடையவனும்; கூற்றுவன் மாற்றான் – எமனையும் எதிர்த்து
நிற்கவல்ல பகைவனுமான; வச்சிரத்தெயிற்றவன் உளன் –
வச்சிரதந்தன் என்னும் பெயர் கொண்டவன் இருக்கிறான்.
—————
‘அசஞ்சலப் படை ஐ – இரு கோடியன், அமரின்
வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான்,
இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரொடும், முன் நாள்
பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு பித்தன். 41-
அசஞ்சலப்படை ஐயிரு கோடியன் – பகைவரைக் கண்டு
நடுங்காத தன்மையினரான பத்துக் கோடி வீரர்களைக் கொண்ட
படையை உடையவனும்; அமரின் வசம் செயாதவன்- போரில்
வெல்லப்படாதவன்; தானன்றிப் பிறர் இலாவலியன்-
தானேயல்லாது பிறர் எவருமில்லாத வலிமை உடையவனும்;
இசைந்த வெஞ்சமத்து – தான் இசைந்து செய்த கொடிய போரில்;
இயக்கரை வேரொடும் முன்நாள் பிசைந்து மோந்தவன்-
இயக்கர்களை முன் ஒரு காலத்தில் வேருடன் அழியுமாறு
கைகளால் பிசைந்து முகர்ந்து பார்த்தவனும்; ஒரு பித்தன்- போர்
புரிவதே நோக்கமான பைத்தியம் பிடித்தவனுமான; பிசாசன்
என்று உளன் – பிசாசன் என்பவன் உள்ளான்.
————–
‘சில்லி மாப் பெருந் தேரொடும், கரி, பரி, சிறந்த
வில்லின் மாப் படை ஏழ் – இரு கோடிக்கு வேந்தன்,
கல்லி மாப் படி கலக்குவான், கனல் எனக் காந்திச்
சொல்லும் மாற்றத்தன், துன்முகன் என்று அறம் துறந்தோன். 42-
சில்லிமாப் பெரும் தேரொடும் – சக்கரத்தை உடைய
பெரியதேர்ப் படையுடனே; கரி, பரி, சிறந்த வில்லின்
மாப்படை – யானை, குதிரை, சிறந்த வில் வீரர்களையுடைய
காலாட் படை என்ற; ஏழ் இரு கோடிக்கு வேந்தன் –
பதினான்கு கோடிப் பேர் கொண்ட பெரும்படைக்குத்
தலைவனும்; கல்லி மாப்படி கலக்குவான் – இந்தப் பெரிய
பூமியையேதோண்டி எடுத்துக் கலங்கச் செய்பவனும்; கனல்
எனக் காந்திச் சொல்லும் மாற்றத்தன்- தீயைப் போல்கனல்
காந்தும்படி பேசும் பேச்சை உடையவனும்; அறம் துறந்தோன் – அறச் செயல்களை நீக்கியவனுமான;
துன்முகன் என்று- துன்முகன் என்ற பெயருடைய ஒருவன்
உள்ளான்.
————
‘இலங்கை நாட்டினன், எறி கடல் தீவிடை உறையும்
அலங்கல் வேற் படை ஐ – இரு கோடிக்கும் அரசன்,
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்,
விலங்கு நாட்டத்தன் என்று உளன், வெயில் உக விழிப்பான். 43-
இலங்கை நாட்டன்ன – இலங்கை நாட்டைப் போன்று;
எரிகடல் தீவிடை உறையும் – அலையெறியும் கடல் நடுவே
அமைந்த தீவுகளிலே வாழ்கின்ற; அலங்கல் வேற்படை – மாலை
சூடிய வேற்படை வீரர்கள்; ஐயிரு கோடிக்கும் அரசன் – பத்துக்
கோடி பேருடைய படைக்குத் தலைவனும்; வலம் கொள்வாள்
தொழில் – வலிமை மிக்க வாட்போரில் வல்ல; விஞ்சையர்
பெரும்புகழ் மறைத்தான் – விஞ்சையரோடு போரிட்டு வென்று,
அவர்களது புகழைமறையுமாறு செய்தவனும்; வெயில் உக
விழிப்பான்- தீப்பொறி பறக்க விழிப்பவனும்; விலங்கு
நாட்டத்தன் என்று உளன் – வீரூபாக்கன் என்ற பெயர் கொண்ட
ஒருவன் உள்ளான்.
—————
‘நாமம் நாட்டிய சவம் எனின், நாள் தொறும் ஒருவர்
ஈம நாட்டிடை இடாமல், தன் எயிற்றிடை இடுவான்,
தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன்,
தூம நாட்டத்தன் என்று உளன், தேவரைத் துரந்தான். 44-
நாமம் நாட்டிய சவம் எனின்- பிறருக்கு அச்சத்தைத் தரும்
வீரர்களின் பிணம் என்றால்; நாள் என்றும் ஒருவர் – அதனைச்
சுடலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நாளாயிற்றென்று ஒருவர்;
ஈம நாட்டிடை இடாமல் – சுடுகாட்டிலே சென்று புதைக்க
விடாமல்; தன் எயிற்றிடை இடுவான் – தன் வாயிலே பெய்து
தின்பவனும்; தாமம் நாட்டிய கொடிப் படை – மாலை சூடி,
கொடிகளை உடைய சேனை; பதுமத்தின் தலைவன் – பதுமம்
என்ற அளவையுடையவற்றின் தலைவனும்; தேவரைத் துரந்தான்
– தேவர்களைப் போரில் வென்று விரட்டியவனுமாய; தூம
நாட்டத்தன் என்றுளன் – புகைக் கண்ணன் என்ற பெயருடைய
ஒருவன் உள்ளான்.
—————-
‘போரின் மத்தனும், பொரு வயமத்தனும், புலவர்
நீரின் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் படையார்;
ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அமரில்
பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய்! 45-
பெரியோய் – பெருமைமிக்கவனே; போரின் மத்தனும்
பொருவய மத்தனும்- போர்த் தொழில்வல்ல மத்தனும், போரில்
வல்லவய மத்தனும் ஆகிய இருவரும்; புலவர் நீரின் மத்து
எனும் பெருமையர் – தேவர்கள் பாற்கடலில் இட்ட மத்தாகிய
மந்தரமலை என்று சொல்லும் பெருமை உடையவர்கள்; நெடுங்
கடற்படையார் – நீண்ட பெரிய கடல் போன்ற படையை
உடையவர்கள்; ஆரும் அத்தனை வலியுடையாரிலை –
இவர்களுக்கு ஒப்பான வலிமை உடையவர்கள் யாருமே இல்லை;
அவரால் அத்தனை எத்தனை உலகமும் பேரும் –
இவர்களால் எத்தனை உலகங்கள் உண்டோ அத்தனையும் நிலை
பெயர்ந்து கெட்டழிந்து போகும்.
————–
சேனை காவலன் பிரகத்தன்
‘இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் –
அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு அமைந்தார்?
சொன்ன சொன்னவர் படைத் துணை இரட்டியின் தொகையான்,
பின்னை எண்ணுவான், பிரகத்தன் என்று ஒரு பித்தன்; 46-
அன்னவன் பெருந்துணைவராய் – அந்த இராவணனுக்குப்
பெரிதும் துணைநிற்பவராய்; அமர்த் தொழிற்கு அமைந்தார்
– போர்த் தொழிலுக்கென அமைந்தவர்கள்; இன்ன தன்மையர் –
இத்தகைய (முன்னர்க் கூறிய) ஆற்றல் மிக்கவர்; எத்தனை
ஆயிரம் என்கேன் – எத்தனையாயிரம் பேருள்ளனர் எனக்
கூறுவேன்; சொன்ன சொன்னவர் படை – முன்னே நான்
சொன்னவர்களின் விவரித்துக் கூறிய படையினும்; துணை
இரட்டியின் தொகையான் – இரண்டு மடங்கு எண்ணிக்கை
உடையவனும்; பின்னை எண்ணுவான் – (எண்ணித்துணியாது)
துணிந்த பின் எண்ணுபவனும் ஆன; பிரகத்தன் என்று ஒரு
பித்தன்- பிரகத்தன் என்ற பெயருடைய ஒருவன் போரிடுவதில்
பித்துடையவன் உள்ளான்.
————
‘சேனை காவலன்; இந்திரன் சிந்துரச் சென்னி
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல,
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய,
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான். 47-
சேனை காவலன் – இந்தப் பிரகத்தன் இராவணனுடைய
சேனைக்குக் காவலன் ஆவான்; இந்திரன் சிந்துரச்
சென்னியானை – தேவேந்திரனுடைய சிந்தூரம் அப்பிய
மத்தகத்தை உடைய ஐராவதமானது; கால்குலைந்து ஆழியோர்
ஏழும் விட்டகல – கால்கள் தடுமாறி ஏழுகடல்களையும் தாண்டிப்
பயந்தோடவும்; ஏனைவானவர் – மற்றுமுள்ள தேவர்கள்
அத்தனைபேரும்; இருக்கைவிட்டு இரியலுற்று அலைய- தங்கள்
இருப்பிடங்களை விட்டு ஓடி அலைந்து திரியவும்; சோனை
மாரியின் – விடாது பெய்யும் மழையைப் போல; சுடுகணை
பலமுறை துரந்தான் – சுடுகின்ற அம்புகளைப் பலமுறையும்
செலுத்தியவனாவான்.
———–
கும்பகருணனின் வலிமை
‘தம்பி, முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும்
கும்ப மாக் கிரிக் கோடு இரு கைகளால் கழற்றி,
செம் பொன் மால் வரை மதம் பட்ட தாம் எனத் திரிந்தான்,
கும்பகன்னன் என்று உளன், பண்டு தேவரைக் குமைந்தான். 48-
தம்பி – அந்த இராவணனுடைய தம்பி; முற்பகல் சந்திரர்
நால்வரின் தயங்கும்- முதல் நாளைய பிறைச் சந்திரர்
நால்வர் சேர்ந்தது போல விளங்கும்; கும்ப மாகிரிக் கோடு
– மத்தகத்தையுடைய பெரிய மலை போன்ற யானையான
ஐராவதத்தின் தந்தங்களை; இரு கைகளால் கழற்றி – தனது
இரண்டு கைகளாலும் வாங்கி; செம்பொன் மால்வரை – செம்பொன் மலையான பெரியமேருமலை; மதம் பட்டதாமெனத்
திரிந்தான் – மதம் கொண்டு அலைந்தது எனும்படி எங்கும்
திரிந்தவன்; பண்டு தேவரைக் குமைத்தான் – முன்பு
தேவர்களையெல்லாம் அடியோடு அழித்த; கும்பகன்னன் என்று
உளன் – கும்பகன்னன் என்ற பெயருடைய வீரன் உள்ளான்.
————–
இராவணனது புதல்வர்களின் ஆற்றல்
‘கோள் இரண்டையும் கொடுஞ் சிறை வைத்த அக் குமரன்
மூளும் வெஞ் சினத்து இந்திரசித்து என மொழிவான்;
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை,
தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு. 49-
கோள் இரண்டையும் – (கோள்கள் ஒன்பதிலும் முதன்மை
வாய்ந்த) சூரியன், சந்திரன் என்னும் இரண்டினையும்;
கொடுஞ் சிறைவைத்த அக்குமரன்- கொடிய சிறையிலே
வைத்த இராவணனது மகனான; மூளும் வெஞ்சினத்து –
மூண்டெழும் கொடிய வெகுளியை உடைய; ‘இந்திரசித்து’ என
மொழிவான் – இந்திரசித்து எனக் கூறப்படுபவன்; ஆளும்
இந்திரற்கு – விண்ணுலகத்தை ஆளும் தேவேந்திரனுக்கு;
அன்னவன் பிணித்ததன் பின்னை – இந்திரசித்து அவனை
வென்று கட்டிவைத்த பின்பு; இனம் தழும்பு தாளினும் உள
தோளினும் உள – இந்திரனுடைய கால்களிலும் தோள்களிலும்
இன்னும் தழும்புகள் உள்ளன.
————-
‘தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான்,
முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் சிலையான்,
அன்னவன் தனக்கு இளையவன், அப் பெயர் ஒழிந்தான்
பின் ஒர் இந்திரன் இலாமையின்; பேர் அதிகாயன். 50-
தன்னையும் தெறும் தருமம் என்று – அறத்துக்கு மாறாக
நடப்பவர்களை அழிக்கும் அறக்கடவுள் தன்னையும் அழிக்கும்
என்று; இறை மனம் தாழான் – சிறிதும் மனத்திலே கருதாமல்
விரைந்து பாவச் செயல் புரிபவன்; முன்னவன் தரப் பெற்றதோர்
– முன்னவனாகிய பிரமதேவன் தரப் பெற்றதாகிய ஒரு; முழுவலிச்
சிலையான் – முழுமையான வலிமையை உடையவில்லை
உடையவன்; அன்னவன் தனக்கு இளையவன் – அந்த
இந்திரசித்துக்குத் தம்பி; பின் ஓர் இந்திரன் இலாமையின் –
இந்திரசித்து வென்ற இந்திரனைத் தவிர வேறு ஒரு இந்திரன்
இல்லாமையால். அப்பெயர் ஒழித்தான் – அந்தப் பெயரை
நீக்கினவனாய்; பேர் அதிகாயன் – அதிகாயன் என்னும் பெயர்
கொண்டவனாய் உள்ளான்.
————–
‘தேவராந்தகன், நராந்தகன், திரிசிரா, என்னும்
மூவர் ஆம், – “தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின்,
போவாராம்; தகை அழிவராம்” எனத் தனிப் பொருவார்
ஆவாரம் – தகை இராவணற்கு அரும் பெறல் புதல்வர். 51-
தேவராந்தகன், நராந்தகன் திரிசிரா என்னும் மூவராம்
– தேவராந்தகன், நராந்தகன் திரிசிரா என்ற மூவருடனும்; தகை
முதல்வராம் தலைவரும் முனையின் போவராம் – தகைசிறந்த
முதல் தலைவர்களான பிரமன், திருமால், சிவன் ஆகிய மூவரும்
போரிட்டால் தோற்றுப்போவார்; தகை அழிவராம் – தமக்குரிய
பெருமையை இழந்துவிடுவர்; எனத் தனிப் பொருவா ராவராம்-
என்று உலகம் கூறுமாறு போரிட்டு வெல்லவல்ல; தகை
இராவணற்கு – தகை சிறந்த இராவணனுக்கு; அரும் பெரும்
புதல்வர் – (இந்திரசித்து, அதிகாயன் என்பவரைத்தவிர) அரிய,
பெருமைமிக்க புத்திரர்களாவர்.
———–
இராவணனது திறம் எடுத்துரைத்தல்
‘இனைய நன்மையர் வலி இஃது; இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி அளவு எலாம் அறைவென்;
தனையன், நான்முகன் தகை மகன் சிறுவற்கு; தவத்தால்,
முனைவர் கோன் வரம், முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான். 52-
இனைய தன்மையர் வலி இஃது – இராவணனது துணைவர்,
தம்பி, மக்கள் ஆகிய இத்தன்மையோர் வலிமை இது; இராவணன்
என்னும் அனையவன் திறம்- இராவணன் என்ற பெயர்
உடைய அவனது திறத்தை; யானறி அளவெலாம் அறைவென்
– யான் அறிந்திருக்கும் அளவுக்கு எல்லாம் எடுத்துக் கூறுவேன்;
நான்முகன் தகைமகன் சிறுவற்குத் தனையன்- பிரம
தேவனது தகுதிமிக்க மகனான புலத்தியனுக்கு மகனான
விச்சிரவசுவின் மகனாகும்; தவத்தால் – இராவணன் செய்த
தவத்தினாலே; முனைவர் கோன் வரம் – அந்தணர்
தலைவனான பிரமன் தந்தவரம்; முக்கணான் வரத் தொடும்
உயர்ந்தான் – மூன்று கண்களை உடைய சிவபெருமான் தந்த
வரம் இவைகளால் உயர்ந்தவனானான்.
பிரமனுக்கு மகன் புலத்தியன்; அவன் மகன் விச்சிரவசு;
அவன் மகன் இராவணன். முனைவர் கோன் – அந்தணர்
தலைவன் (நான்முகன்) பிரமன் தந்தவரம் முக்கோடி வாழ்நாள்.
முக்கணான் தந்த வரம் “யாராலும் வெலப்படாய் எனக்
கொடுத்தவாள்” (சந்திரகாசம்)
—————
‘என் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும்
வெள்ளி அம் பெருங் கிரியினை வேரொடும் வாங்கி,
அள்ளி விண் தொட எடுத்தனன், உலகு எலாம் அனுங்க. 53-
எள்இல் ஐம்பெரும் பூதமும் – எவரும் சிறிதென இகழாத
மண், நீர், கால், தீ என்ற ஐந்து பெரிய பூதங்களும்; யாவையும்
உடைய – இவற்றின் வேறுபாட்டால் உண்டான பிற எல்லாப்
பொருள்களையும் உடையவனாகிய; புள்ளிமான் உரி ஆடையன்
– புள்ளிகளை உடைய புலியின் தோலை ஆடையாக
அணிந்துள்ள சிவபிரான்; உமையொடும் பொருந்தும் –
உமாதேவியுடன் தங்கியிருக்கும்; வெள்ளி அம் பெருங்
கிரியினை – வெள்ளியங்கிரியாகிய பெரிய மலையினை;
வேரொடும் வாங்கி அள்ளி – வேரோடு பேர்த்து அள்ளி;
உலகெலாம் அனுங்க- எல்லா உலகங்களும் வருந்தும்படி;
விண் தொட எடுத்தனன்- விண்ணைத் தொடும்படி எடுத்தவன்.
—————
‘ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை
ஊன்று கோடு இற, திரள் புயத்து அழுத்திய ஒண்மை
தோன்றும் என்னவே, துணுக்கமுற்று இரிவர், அத் தொகுதி
மூன்று கோடியின்மேல் ஒரு முப்பத்து மூவர். 54-
ஆன்ற எண் திசை – விசாலமான எட்டுத் திசைகளிலும்
நின்று; உலகெலாம் சுமக்கின்ற யானை – உலகத்தை எல்லாம்
சுமக்கின்ற திக்கு யானைகளின்; ஊன்று கோடு இற – தனது
மார்பில் ஊன்றிய தந்தங்கள் முறியும்படி; திரள்புயத்து
அழுத்திய ஒண்மை – அதனைத்தன் திரண்ட தோள்களிலே
அழுந்தச் செய்த மிக்க வலிமை; தோன்றும் என்னவே –
காணப்படும் என்ற மாத்திரத்தில்; அத்தொகுதி மூன்று
கோடியின் மேல் – தொகுதியான மூன்று கோடிக்கு மேல்; ஒரு
முப்பத்து மூவர்- மூப்பத்து மூன்று பேராக இருக்கும் தேவர்கள்;
துணுக்கம் உற்று இரிவர்- நடுங்கிக் கொண்டு விலகி ஓடுவார்கள்.
—————-
‘குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய,
அலங்கல் வாள் கொடு காலகேயரைக் கொன்ற அதன்பின்,
“இலங்கை வேந்தன்” என்று உரைத்தலும், இடி உண்ட அரவின்
கலங்குமால் இனம், தானவர் தேவியர் கருப்பம். 55-
கால கேயரை – இராவணன் கால கேயர்கள் என்னும்
தானவர்களை; குலங்களோடும் – அவர்களின் குலமக்களோடு;
தம் குலமணிமுடியொடும் குறைய – மணிகள் பதிக்கப் பெற்ற
மகுடங்களோடு, தலை குறையும்படி; அலங்கல் வாள் கொடு –
வெற்றிமாலை சூட்டியவாளைக் கொண்டு; கொன்ற அதன் பின்
– கொன்ற அதற்குப் பிறகும்; இலங்கை வேந்தன்-
இலங்காதிபன்; என்று உரைத்தலும் – என்று கூறக் கேட்ட
அளவிலே; தானவர் தேவியர் கருப்பம் – தானவர்களது
மனைவி மார்களின் கருப்பம்; இடியுண்ட அரவின்- இடியோசை
கேட்டு அஞ்சும் பரம்பைப் போல; இனம் கலங்குமால் –
இன்னும் கலங்கும்.
————-
‘குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன்,
திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், இழந்து,-
புரண்டு, மான் திரள் புலி கண்டது ஆம் என, போனான்-
இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து. 56-
குரண்டம் ஆடு நீர் அளகையின்- கொக்குகள் விளையாடித்
திரியும் நீர் நிலைகளை உடைய அளகாபுரியில்; ஒளித்து உறை
குபேரன்- இராவணனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த
குபேரன்; திரண்டமாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து-
தனக்குரிய திரண்ட செல்வத்தையும் வெற்றித் திருமகளையும்,
சங்க நிதி, பதுமநிதி என்பவைகளையும் இராவணனிடம் இழந்து
போய்; இரண்டு மானமும் இலங்கை மாநகரமும் இழந்து – தன்
மானம், விமானம் என்று இரண்டு மானமும், இலங்கை
மாநகரத்தையும் இழந்து; மான்திரள் புலிகண்டதாம் என –
புலியைக் கண்ட மான் கூட்டம் அஞ்சி ஓடுவது போல; புரண்டு
போனான்- இராவணனிடம் தோற்று புரண்டு ஓடிப் போயினான்.
————-
‘”புண்ணும் செய்தது முதுகு” என, புறங்கொடுத்து ஓடி,
“உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் தன் உயிர்மேல்
நண்ணும் செய்கையது” எனக் கொடு, நாள்தொறும், தன் நாள்
எண்ணும் செய்கையன், அந்தகன், தன் பதம் இழந்தான். 57-
உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம்- உயிரை
உண்ணும் படியான செயலை உடைய பத்து முகங்களை உடைய
இராவணன் என்னும் கூற்றமானது; தன் உயிர் மேல் நண்ணும்
செய்கையதெனக் கொடு – தன்னுயிரையும் கவர வருதல்
செய்யும் என்றுஎண்ணி; புண்ணும் செய்தது முதுகு என – எனது
முதுகையும் புண் செய்து விட்டது என்று; புறம் கொடுத்து ஓடி
– புறமுதுகு காட்டி ஓடித் தப்பித்து; நாள் தொறும் தன்நாள்
எண்ணும் செய்கையன் – தனது இறுதி நாளைப் பற்றி நாள்
தோறும் நினைக்கும் செய்கையனாய்; அந்தகன் தன் பதம்
இழந்தான் – எமன் தனது தென்திசைக் காவல் பதவியையும்
இழந்தான்.
——————-
‘இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க் என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, பண்டு அமரில்,
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு, பயத்தால்
வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து மறைந்து. 58-
இருள் நன்கு ஆசற- இருள் நன்றாக விலகும்படி; எழு
கதிரவன் நிற்க – கீழ்த்திசையில் எழும் சூரியன் இருக்கட்டும்;
என்றும் அருணன் கண்களும் – சூரியனுடைய தேரில்
சாரதியாக முன்னால் அமர்ந்திருக்கும் அருணனது கண்களும்
கூட; கண்டிலா இலங்கை- பார்த்திராதது இலங்கை நகர்; பண்டு
அமரில் – முன்பு இராவணனுடன் செய்த போரிலே;
பருணன்தன் பெரும் பாசமும் பறிப்புண்டு – திறமை
உடையவன் என்றாலும் தனது படையாகிய பாசம் பறிக்கப்பட;
பயத்தால் – இராவணனைப்பற்றிய அச்சத்தினாலே; மகர நீர்
வெள்ளத்து – மகாமீன்களை உடைய கடல் நீரிலே; மறைந்து
வருணன் உய்ந்தனன் – மறைந்து வருணன் தப்பிப் பிழைத்தான்.
—————-
‘என்று, உலப்புறச் சொல்லுகேன், இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் கொற்றம்?
இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சில நாள்
சென்று உலப்பினும், நினக்கு அன்றி, பிறர்க்கு என்றும் தீரான். 59-
இராவணன் என்னும் – இராவணன் என்ற பெயரை உடைய;
குன்று உலப்பினும் – மலை அழிந்தாலும்; உலப்பிலாத்
தோளினான் கொற்றம் – அதனுடன் மாறு கொண்டும் அழியாது
தோள்களை உடையவனது வெற்றியை; என்று உலப்புறச்
சொல்லுகேன்- என்று நான்முடிவாகச் சொல்லுவேன்; இன்று
உலப்பினும் நாளையே உலப்பினும் – இராவணன் இன்று
இறப்பான் ஆயினும், நாளையே இறப்பானாயினும்; சிலநாள்
சென்று உலப்பினும் – அல்லது இன்னும் சில நாட்கள் கழிந்த
பின் இறந்தானாயினும்; நினக்கு அன்றிப் பிறர்க்கு என்னும் தீரான்- உனக்கு அல்லாமல்
வேறு எவருக்கும் அழிந்து தீரான்.
————-
அனுமன் இலங்கையில் புரிந்த வீரச் செயல்கள்
‘ஈடு பட்டவர் எண்ணிலர், தோரணத்து, எழுவால்;
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால்;
சூடு பட்டது, தொல் நகர்; அடு புலி துர்ந்த
ஆடு பட்டது பட்டனர், அனுமனால் அரக்கர். 60-
தோரணத்து – அசோக வனத்தின் வெளியே அமைந்த
கட்டுவாயிலில்; எழுவால் ஈடுபட்டவர் எண்ணிலர்-
அனுமானது இரும்புத் தடியால் வலிமை இழந்தவர் பல பேர்;
பாடுபட்டவர் – அடிபட்டு அழிந்து போன அரக்கர்கள்;
படுகடல் மணலினும் பலரால்- கடற்கரை மணலைவிட
எண்ணற்றவராவார்; தொல்நகர் சூடுபட்டது – பழமையான
இலங்கை மாநகரம் அனுமன் வைத்த தீயால் சூடுபட்டழிந்தது;
அனுமனால் அரக்கர் – அனுமனுடைய வலிமையால் இலங்கை
அரக்கர்கள்; அடுபுலிதுரந்த ஆடுபட்டது பட்டனர்-
கொல்லவல்ல புலி துரத்த ஆட்டுக் கூட்டம் என்ன பாடுபடுமோ
அந்தப் பாடுபட்டனர்.
—————-
‘எம் குலத்தவர், எண்பதினாயிரர், இறைவர்,
கிங்கரப் பெயர்க் கிரி அன்ன தோற்றத்தர், கிளர்ந்தார்;
வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி,
சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார். 61-
எம் குலத்தவர் எண் பதினாயிரர்- எமது அரக்கர்
குலத்தில் பிறந்தவர்கள் எண்பதினாயிரம் பேர்களும்; இறைவர் -அவர்களுக்குத்தலைவர்களான; கிங்கரப் பெயர் கிரியன்ன
தோற்றத்தர்- கிங்கார் என்னும் பெயருடைய மலை போன்ற
தோற்றத்தவரும் ஆகி; கிளர்ந்தார்- அனுமனுடன் போரிடப்
பொங்கி எழுந்தவர்களை; வெங்கரத்தினும்- அனுமான் தனது
வலிய கைகளினாலும்; காலினும், வாலினும் – கால்களாலும்
வாலினாலும்; வீக்கி – இறுகப் பிணித்தமையால்; சங்கரற்கு
அழி – சிவ பெருமானாலே அழிந்துபோன; முப்புரத்தவர்
எனச் சமைந்தார் – திரிபுரத்து அரக்கர்களைப் போல
முடிந்தனர்.
————
‘வெம்பு மாக் கடற் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான்,
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி,
உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று உற்றான்,
சம்புமாலியும், வில்லினால் சுருக்குண்டு – தலைவ! 62-
தலைவ- தலைவனே!; சம்பு மாலியும்- சம்புமாலி என்ற
அரக்கர் தலைவனும்; வெம்பும் மாக்கடல் சேனைகொண்டு
– சினம் மிக்க பெரியகடல் போன்ற படையைக் கொண்டு; எதிர்
பொர வெகுண்டான் – அவனை எதிர்த்துப் போர் செய்யச்
சினம் கொண்டு வந்தான்; அம்பும் ஆயிரத்து ஆயிரம் –
ஆயிரம் ஆயிரம் அம்புகளை விட்டு; இவன் புயத்து அழுத்தி
– இந்த அனுமன் புயத்திலே அழுந்தச் செய்து; வில்லினால்
சுருக்குண்டு – அவன் கை வில்லினாலேயே அனுமனால்
சுருக்கிடப்பட்டு; உம்பர் வானத்து- தேவர்கள் வாழும்
விண்ணுலகுக்கு; ஒருதனி நமனைச் சென்று உற்றான்- தனி
ஒருவனாக எமனைச் சென்று அடைந்தான்.
—————
‘சேனைக் காவலர் ஓர் ஐவர் உளர், பண்டு தேவர்
வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர்,
தானைக் கார்க் கருங் கடலொடும், தமரொடும், தாமும்,
யானைக் கால் பட்ட செல் என, ஒல்லையின் அவிந்தார். 63-
சேனைக்காவலர் ஓர் ஐவர் உளர் – இராவணனது
சேனையின் காவலர் ஐந்து பேர் உள்ளனர் (பஞ்சசேனாதிபதிகள்);
பண்டு தேவர் வானை – முன்பு தேவர்களின் வானுலகத்தை;
காவலும் மானமும் மாற்றிய மறவர் – பாதுகாப்பையும்,
மானத்தையும் மாற்றியவீரர்கள்; தானைக் கார்க் கரும்
கடலொடும் – படையாகிய கரிய பெரிய கடலுடனே;
தமரொடும் தாமும் – தமது உறவினருடனே தாங்களும்
(அனுமனுடன் போரிட வந்தவர்கள்); யானைக் கால்பட்ட
செல்என – யானையினது கால்களில் மிதிபட்ட கறையானைப்
போல; ஒல்லையின் அவிந்தார் – விரைந்து அழிந்து
போயினர்.
—————-
‘காய்த்த அக் கணத்து, அரக்கர்தம் உடல் உகு கறைத் தோல்,
நீத்த எக்கரின், நிறைந்துள கருங் கடல்; நெருப்பின்
வாய்த்த அக்கனை, வரி சிலை மலையொடும் வாங்கி,
தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் தெருவில். 64-
காய்த்த அக்கணத்து- (அனுமனை) சினமடையச் செய்த
அந்தக் கணத்திலே; அரக்கர்தம் உடல் உகு- அந்த அரக்க
வீரர்களின் உடலில் இருந்து சிந்தும்; கறைத்தோல் –
இரத்தமும் அவர்களின் உடல் தோல்களும்; நீத்த எக்கரின்
– கடற்கரையிலுள்ள மணல் திட்டுக்களைப் போல; நிறைந்துள
கருங்கடல் – எங்கும் கரிய கடலாக நிறைந்துள்ளனவாயின்;
நெருப்பின் வாய்த்த அக்கனை – நெருப்பென வெகுண்டு
வந்த இராவணன் மகனான அட்சய குமாரனை; வரி சிலை
மலையொடும் வாங்கி- கட்டமைந்த வில்லாகிய மலையோடு
இழுத்து வாங்கி; தேய்த்த அக்குழம்பு – காலால் தேய்த்த
அக்குழம்பு; இலங்கையின் தெருவில் உலர்ந்தில –
இலங்கை வீதியிலே இன்னும் உலரவில்லை.
————
‘சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச்
சின்னம் ஆனவர் கணக்கு இலர்; யாவரே ஆதரிப்பார்?
இன்னம் ஆர் உளர், வீரர்? மற்று, இவன் சுட எரிந்த
அன்ன மா நகர் அவிந்தது, அக் குருதியால் அன்று. 65-
சொன்னமாமதில் – ஏற்கனவே கூறியபடி அமைந்த பெரிய
மதில்களால்; இலங்கையின் பரப்பினில் – இலங்கை நகரின்
பரப்பினுள்; துகைத்துச் சின்னமானவர்- அனுமன் காலால்
துகைக்கப்பட்டுச் சின்ன பின்னமான அரக்கர்; கணக்கிலர்
யாவரே தெரிப்பார் – கணக்கற்றவர் என்பதையார்
தெரிந்துரைக்கவல்லார்; இன்னம் யாருளர்வீரர் – இன்னும்
இலங்கையிலே வீரர்கள் யாருள்ளனர்?; மற்று இவன் சுட
எரிந்த – இந்த அனுமன் வைத்த தீயினால் எரிந்த; அன்ன
மாநகர் – அந்தப் பெரிய இலங்கை நகரம்; அக்குருதியால்
அவிந்தது – அனுமனால் சின்னமானவர்கள் சிந்திய
இரத்தத்தால் அணைந்து போயிற்று.
—————-
இலங்கை அனலால் அழிந்ததும், அதை அயன் மீண்டும் படைத்ததும்
‘விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ-
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த
கலங்களோடும், அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள்
இலங்கை வேந்தனும், ஏழு நாள் விசும்பிடை இருந்தான்! 66-
அலங்கல் மாலையும் சாந்தமும்- அணிந்த மாலையும்;
பூசிய சந்தனமும்; அச் சாத்தியதுகிலொடும் – அணிந்திருந்த
அந்த ஆடையோடும்; கதிர்வாள் இலங்கை வேந்தனும் –
ஒளிரும் வாளை உடைய இலங்கை வேந்தனான இராவணனும்;
ஏழுநாள் விசும்பிடை இருந்தான்- ஏழுநாட்கள் வானிலேயே
தங்கியிருந்தான் என்றால்; விலங்கல் வெந்தவா- இலங்கைக்கு
ஆதாரமாயிருந்த திரிகூடமலை அனுமன் வைத்த தீயால்
வெந்ததை; வேறுஇனி விளம்புவது எவனோ- இனித்தனியாக
விளம்பவும் கூடுமோ?.
—————
‘நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன்;
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்;
இது மற்று அவ்வழி எய்தியது; இராவணன் விரைவினின் ஏவ,
பதுமத்து அண்ணலே பண்டுபோல் அந் நகர் படைத்தான். 67-
நொதுமல் திண் திறல் அரக்கனது- வலிய, திண்ணிய,
ஆற்றலை உடைய அரக்கனான இராவணனது; இலங்கையை
நுவன்றேன் – இலங்கையின் வரலாறு பற்றிக் கூறினேன்;
அதுமற்றவ்வழி அரணமும் – அதுவல்லாது இலங்கையின்
மதிலைப் பற்றியும்; பெருமையும் அறைந்தேன்- இராவணனது
பெருமையும் சொன்னேன்; இது மற்றவ் வழி எய்தியது- இந்த
அனுமனது செய்தி அங்குநடந்தது (அதனையும் சொன்னேன்);
இராவணன் ஏவ – இராவணன் கட்டளை இட; பதுமத்து
அண்ணலே – தாமரை மலரில் வசிக்கும் பிரமதேவனே;
பண்டுபோல் அந்நகர் படைத்தான்- முன்பு போலத்
திகழும்படி அந்த நகரத்தைப் படைத்தான்.
————–
வீடணன் தான் போந்த காரணத்தை உரைத்தல்
‘காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின்
வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று; அவ் இலங்கை
தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப்
போந்தவா கண்டும், நான் இங்குப் புகுந்தது – புகழோய்!’ 68-
புகழோய் – புகழ்மிக்கவனே; நான் இங்குப் புகுந்தது –
நான் உன்னைச் சரண்புகுந்து இங்கு வந்தது; காந்தும் வாளியின்-
உனது எரிக்கும் அம்புகளால்; கரன்முதல் வீரரும் – கரனும்
அவனுக்குத் துணையாக வந்த வீரர்களும்; கவியின் வேந்தும்-
வானர சேனையின் அரசனான வாலியும்; என்றிவர் விளிந்தவா
கேட்டன்று – ஆகிய இவர்களெல்லாம் மடிந்ததைக் கேட்டதனால்
அல்ல; அவ்விலங்கை தீந்தவா கண்டும்- அந்த இலங்கை
உன்னருள் பெற்ற அனுமன் ஒருவனாலே அழிந்தது கண்டும்;
அரக்கரைச் செருவிடை முருக்கிப் போந்தவா கண்டும்-
இலங்கை அரக்கர்களை எல்லாம் போரிலே அனுமன் அழித்துத்
திரும்பி வந்ததை நேரில் கண்டதாலுமேயாம்.
——————–
இராமன் அனுமனைப் புகழ்ந்து உரைத்தல்
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான்,
வாள் கொள் நோக்கியை, பாக்கியம் பழுத்தன்ன மயிலை,
நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கி, தன் தூதனைப் பார்த்து, இவை சொன்னான்: 69-
கேள் கொள் மேலையான் – தன்னுடன் நட்புக்கொண்ட
வீடணன்; கிளத்திய பொருள் எலாம் கேட்டான் – கூறிய
பொருள்களை எல்லாம் கேட்ட இராமபிரான்; வாள் கொள்
நோக்கியை – வாள் போன்ற கண்களை உடையவளும்;
பாக்கியம் பழுத்தன்ன மயிலை- புண்ணியம் பழுத்துப் பயன்
தந்தது போன்ற மயிலைப் போன்றவரும் ஆகிய சீதாபிராட்டியை;
நாள்கள் சாலவும் நீங்கலின்- பல நாட்கள் பிரிந்தமையால்;
நலம் கெட மெலிந்த தோள்கள் வீங்கி – அழகு கெட
மெலிந்து போன தோள்கள் வீங்கி; தன் தூதனைப் பார்த்து
இவை சொன்னான்- தன் தூதனான அனுமானைப் பார்த்துப்
பின்வருமாறு கூறலானான்.
—————-
‘கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்;
ஊட்டினாய், எரி ஊர் முற்றும்; இனி, அங்கு ஒன்று உண்டோ?
கேட்ட ஆற்றினால், கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும்
மீட்டிலாதது, என் வில் தொழில் காட்டவோ? – வீர! 70-
வீர- வீரம் மிக்கவனே!; கூட்டினார் படை பாகத்தின்
மேற்படக் கொன்றாய் – இலங்கையில் இராவணன்
கூட்டிவைத்திருந்த படையில் பாதிக்கு மேல் நீயே கொன்று
தீர்த்தாய்; எரி ஊர் முழுதும் ஊட்டினாய் – இலங்கை நகர்
முழுவதும் தீமூட்டி அழியச் செய்தாய்; இனி, அங்கு ஒன்று
உண்டோ – இனி அங்கு நான் செய்ய வேண்டியது ஏதேனும்
ஒன்று உள்ளதோ?; கேட்ட ஆற்றினால் – வீடணன் கூறக்
கேட்ட செய்திகளால்; கிளிமொழிச் சீதையை- கிளி போன்ற
மொழிகளை உடைய சீதா தேவியை; கிடைத்தும் மீட்டிலாதது – நேரில் பார்க்கக் கிடைத்தும் கூட
நீ மீட்டு வராதது; என் வில் தொழில் காட்டவோ – நான்
எனது வில்லாற்றலைக் காட்ட வேண்டும் என்பதற்காகவோ?
————-
‘நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்;
பின் செய்தோம் சில் அவை இனிப் பீடு இன்று பெறுமோ? –
பொன் செய் தோளினாய்! – போர்ப் பெரும் படையொடும் புக்கோம்;
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்? 71-
பொன் செய் தோளினாய் – பொன்னாலமைந்தது போன்ற
தோள்களை உடையவனே; நின் செய் தோள் வலி நிரம்பிய-
உனது தோள்கள் புரிந்த ஆற்றலே எங்கும் நிறைந்துள்ள;
இலங்கையை நேர்ந்தோம் – இலங்கையை நாங்கள்
அடைந்தோம்; பின் செய்தோம் சில – எங்கள் வலிமையைக்
காட்டி பின் சில போர்கள் செய்தோம்; அவை இனிப் பீடு
ஒன்று பெறுமோ – அப்படி நாங்கள் செய்யும் போர் முதலிய
வீரச் செயல்கள் ஒரு பெருமை பெறுமோ?; போர்ப் பெரும்
படையொடும் புக்கோம் – போர்த் தொழில் வல்ல
பெரும்படையுடன் நாங்கள் புகுந்துள்ளோம்; என் செய்தோம்
என்று – என்ன பெரிய செயலைச் செய்து விட்டோம் என்று;
பெரும்புகழ் எய்துவான் இருந்தோம்- பெரிய புகழ் அடைய
இருந்தோம்.
—————
‘என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும்
உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்!
முன்னது ஆக்கிய மூஉலகு ஆக்கிய முதலோன்
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.’ 72-
பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய் – புண்ணியமே
வடிவு கொண்டது போன்றவனே; என்னது ஆக்கியவலியொடு
– எனக்கே உரியதான வலிமையோடு; அவ்விராவணன் வலியும்
– அந்த இராவணனது வலிமையையும்; உன்னது ஆக்கினை –
உனக்கே உரியது ஆக்கிக் கொண்டாய்; முன்னது ஆக்கிய
மூவுலகு- முன்னால் படைக்கப்பட்ட மூன்றுலகங்களையும்;
ஆக்கிய முதலோன் – படைத்த பிரமதேவனுக்காக; பின்னது
ஆக்கிய பெரும் பதம்- ஏற்பட்ட பதவியாகிய பிரமபதத்தை;
நின்னது ஆக்கினென் பெற்றாய் – உனக்கு உரியதாக்கினேன்;
பெற்று உயர்வாயாக.
—————–
என்று கூறலும், எழுந்து, இரு நிலன் உற இறைஞ்சி,
ஒன்றும் பேசலன் நாணினன், வணங்கிய உரவோன்;
நின்ற வானரத் தலைவரும் அரசும், அந் நெடியோன்
வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார். 73-
என்று கூறலும் – என்று இராமபிரான் கூறியதும்; எழுந்து,
நிலன்உற இறைஞ்சி- அனுமன், எழுந்து, நிலத்தோடு படும் படி
கீழே வீழ்ந்து இராமனை வணங்கி; ஒன்றும் பேசலன்-ஒன்றுமே
பேசாதவனாக; நாணினன் வணங்கிய உரவோன் – தன்னை
இராமன் புகழ்வதற்கு நாணப்பட்டவனாய் வலிமைமிக்கவனான
அனுமன் மீண்டு வணங்குவானானான்; நின்ற வானரத்
தலைவரும் அரசும்- அங்கு நின்ற மற்றை வானரப்படைத்
தலைவர்களும் சுக்கிரீவனும்; அந் நெடியோன் வென்றி
கேட்டதும் – அந்த நெடியவனாகிய அனுமானது வெற்றியை
வீடணன் கூறக் கேட்டதும்; வீடு பெற்றார் எனவியந்தார்-
வீட்டின்பத்தைப் பெற்றவர்களைப் போல வியந்து நின்றனர்.
————
மிகைப் பாடல்கள்
திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும்,
அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே,
‘அரு வரை அனைய தோள் அறிஞ! நீ புகல்
பொருள் உளது எமக்கு; அது புகலக் கேட்டியால். 14-1
மருக் கிளர் தாமரை வாச நாள்மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்,
திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை,
‘இருக்க, ஈண்டு எழுந்து’ என இருந்த காலையில். 14-2
‘வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு,
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனைத்
தலம் கொடு சமைத்து, நல் நகரும் தந்து, இதற்கு
“இலங்கை” என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள். 18-1
‘ஆய இந் நகரிடை, அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினைத் தெரிக்கின், எண் இல் நாள்
போயிடத் துணிந்து, அவை புந்தி ஓரினும்
ஓயுமோ? அறிந்தவை உரைப்பென், ஆழியாய்! 19-1
‘பேயர்கள் என்ன யான் பிதற்ற, பேர்கிலா
மா இரும் புற மதில் வகுத்த மாப் படை
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள்
ஆயிர வெள்ளமே அறிந்தது, ஆழியாய்! 28-1
‘ஈங்கு இவை அன்றியும், ஏழு தீவினும்,
ஓங்கு பாதலத்தினும், உயர்ந்த வானத்தும்,
தாங்கிய சக்கர வாளச் சார்பினும்,
ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால். 30-1
‘ஆயவர் அளவிலர், அறத்தை நுங்கிய
தீயவர், தேவரைச் செறுத்து, தேவர் ஊர்
காய் எரி படுத்திய கடுமையார்களில்,
நாயக! அறிந்தமை நவிலக் கேட்டியால். 32-1
‘இன்னும் மைந்தர்கள் இயம்பின், மூவாயிர கோடி
என்ன உண்டு; அவர் இரதமும், கரிகளும், பரியும்,
துன்னும் ஆள் வகைத் தொகுதியும், செறிந்திட, மேல்நாள்
பன்னகாதிபன் உலகினைப் பரிபவப் படுத்தோர். 51-1
கோ…ன் குடைப்பரா கடு களிற்றை மீக்கொள்ளா
வாடலிந்திர …….ளடைவர வமரிற்
கோடி வெங்கரி கோள் அரி கண்டெனக் குலையா
ஓடினான் தரு முதலியர் பிற விழுந்துருகி. 56-1
‘பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும்
திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின் இவர்ந்தே,
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து, அரசுரிமை
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில், கொடியோன். 58-1
‘சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி வாழ்தற்கு
உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன், சிவன் கொடுத்திடப் பெரு வரம்; பெரியோய்!
இற்று அவன் செயல்’ என்று கொண்டு இனையன உரைப்பான்: 58-2
‘ஈது நிற்க, மற்று எந்தை! நீ ஏவிய தூதன்
மோது வாரிதி கடந்து, ஒரு கணத்தினில் முடுகி,
ஆதி நாயகிதன்னைக் கண்டு, அணி நகர் அரணும்,
காது வெஞ் சினத்து அரக்கர் தம் வலிமையும், கடந்தான். 59-1
மழுவும் ஈட்டியும் தோட்டியும் முசலமும் மலையும்
தழுவு மாப் படை முடிவு இலாது அதனொடும் தாமும்,
எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக்
குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார். 63-1
‘இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது எவனோ?
அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான் அணிந்த
கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான். 65-1
—————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply