மீமாம்ஸை’ என்ற வார்த்தையில் ‘மாம்’ என்பது தாது; ‘ஸன்’ என்பது ‘பிரத்யயம்’ (விகுதி) .
இந்த வார்த்தைக்கு அர்த்தம் ‘பூஜித விசாரம்’.
தமிழில் சொல்வதானால், “நல்ல விஷயத்தைப் பற்றிய விசாரணை அல்லது ஆராய்ச்சி.”
எது “பூஜிதம்”? எது நல்ல விஷயம்? வேதம்தான்.
வேதத்தை விசாரித்து – ஆராய்ந்து – அர்த்தத்தை எடுத்துச் சொல்வது மீமாம்ஸை.
ஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் ஸூத்ரம்-வார்த்திகம்-பாஷ்யம் என்ற மூன்று உண்டு என்று சொல்லியிருக்கிறேனல்லவா?
இப்படி (பூர்வ) மீமாம்ஸைக்கான ஸூத்ரத்தைச் செய்தவர் ஜைமினி மஹரிஷி.
அதற்கு பாஷ்யகாரர் சபரஸ்வாமி என்பவர். வார்த்திககாரர் குமாரிலபட்டர்.
குமாரிலபட்டரின் “பாட்டதீபிகை” இந்த சாஸ்திரத்தின் மிக முக்கியமான நூலாக இருக்கிறது.
ஸாக்ஷாத் குமாரஸ்வாமியான ஸுப்ரமண்யரின் அவதாரமே குமாரிலபட்டர். மீமாம்ஸையில் குமாரிலபட்டருடைய
அபிப்ராயத்துக்குச் சில விஷயங்களில் வித்யாஸமாகப் பிரபாகரர் என்பவர் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.
அதனால் மீமாம்ஸகர்களில் “பாட்டமதம்”, “ப்ரபாகர மதம்” என்று இரண்டு உட்பிரிவு (sub-division) உண்டாயிற்று.
இந்த உள் வித்யாஸங்கள் நமக்கு வேண்டாம். ஜெனரலாக இருக்கப்பட்டவைகளையே பார்க்கலாம்.
(குமாரில) பட்டர் கொள்கைகளைச் சொல்கிறதாலேயே ஒரு பிரிவுக்கு பாட்ட மதம் என்ற பெயர் வந்தது.
முதலில் ஒரு வேதவாக்கியத்தை எடுத்துக் கொள்வது (விஷயயாக்யா);
இரண்டாவதாக அதன் அர்த்தம் இதுவா என்ற கேள்வி (ஸம்சயம்);
மூன்றாவதாக எதிர்த்தரப்பிலே அர்த்தம் பண்ணுவது (பூர்வ பக்ஷம்);
நாலாவதாக, அந்தத் தரப்பை ஆக்ஷேபிப்பது (உத்தரபக்ஷம்);
ஐந்தாவதாக, கடைசியில் இதுதான் தாத்பரியம் என்று முடிவு பண்ணுவது (நிர்ணயம்).
ஒவ்வொரு விஷய நிர்ணயம் ஒவ்வொர் அதிகரணமாக இருக்கிறது.
ஜைமினி செய்தவை சின்னசின்ன ஸூத்திரங்களாக இருக்கின்றன.
அந்த ஸூத்திரங்களின் அபிப்பிராயத்தை விரிவாக விளக்குவது சாபரபாஷ்யம்.
சபரர் செய்த பாஷ்யம் ‘சாபரம்’. சபரர் என்று வேடர்களுக்குப் பேர் உண்டு. சபரி பூர்வத்தில் வேட ஸ்திரீ என்பார்கள்.
சபரர் ஈச்வராம்சம் உடையவர். ஈச்வரன் அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்க வேடராக வந்தபோது
சபரராகி இந்த வார்த்திகம் செய்தார் என்றும் சொல்வதுண்டு.
ஆயிரம் அதிகரணத்தை உடைமையால் பூர்வமீமாம்ஸைக்கு ‘ஸஹஸ்ராதிகரணி’ என்று ஒரு பெயர் உண்டு
அர்த்தாபத்தி என்பதற்கு நம் சாஸ்திர நூல்களில் ஒரு உதாரணம் சொல்லிச் சட்டென்று புரிய வைத்திருக்கிறது.
“பீனோ தேவதத்தோ திவா ந புங்க்தே” என்று சொல்லியிருக்கும்.
“குண்டன் தேவதத்தன் பகல் வேளையில் சாப்பிடுவதில்லை” என்று அர்த்தம்.
பகலில் சாப்பிடாமலும் அவன் இளைக்கவில்லை, குண்டாக இருக்கிறான் என்று இந்த வாக்கிலிருந்து ஆகிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? அவன் இரவில் நன்றாகச் சாப்பிடுகிறான் என்று தெரிகிறது.
சாப்பிடாமலிருப்பது, ஆனாலும் அதனால் இளைக்காமலிருப்பது என்பது மாதிரியான ஒரு முரண்பாட்டிலே
இது முரண்பாடு இல்லை என்பதற்கான காரணத்தைக் கண்டு கொள்ள உதவுவதே ‘அர்த்தாபத்தி’ என்ற பிரமாணம்.
“வேதோ (அ) கிலோ தர்ம மூலம்” என்று மநு சொல்கிறபடி வேதந்தான் நாம் என்னென்ன செய்யவேண்டும்
என்ற நெறிகளுக்கும் காரியங்களுக்கும் மூலமாக, வேராக, ஊற்றாக இருக்கிறது.
ஆத்ம க்ஷேமத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே லோக க்ஷேமத்தையும் பயனாக ஏற்படுத்தித் தருவது வேதம்.
இந்த இரண்டும் ஏற்பட எது உதவுகிறதோ அதுதான் ‘தர்மம்’ என்பது.
ஸ்ம்ருதி என்பதே தர்ம சாஸ்திரம்.
வேதோகிலோ தர்மமூலம்| தத்விதாம் ச ஸ்ம்ருதிசீலே|
“ஸ்ம்ருதி” என்றால் நினைவுக் குறிப்பு;
மநு, பராசரர், யாக்ஞவல்கியர், கௌதமர், ஹாரீதர், யமன், விஷ்ணு, சங்கர், லிகிதர், பிருஹஸ்பதி, தக்ஷன்,
அங்கிரஸ், பிரசேதர், ஸம்வர்த்தர், அசனஸ், அத்ரி, ஆபஸ்தம்பர், சாதாதபர் என்றிப்படிப் பதினெட்டு மஹரிஷிகள்
தங்களுடைய அதிமாநுஷ்ய சக்தியால் வேதங்களை முழுக்கத் தெரிந்து கொண்டு அதிலிருந்து தொகுத்து
தர்ம சாஸ்திரங்களைத் தந்திருக்கிறார்கள். இவை மநு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி என்று
அவரவர் பெயரால் வழங்குகின்றன. இவற்றைப் பார்த்தால் போதும், வாழ்க்கையில் செய்யவேண்டிய
ஸகல அநுஷ்டானங்களையும் தர்மங்களையும் தெரிந்து கொண்டு விடலாம்.
18 ஸ்மிருதிகளைத் தவிர, உப ஸ்மிருதிகள் என்று 18 துணை நூல்கள் இருக்கின்றன*.
உப ஸ்மிருதிகளைச் செய்த பதினெண்மர்: ஜாபாலி, நாசிகேதஸ், ஸ்கந்தர், லெளகாக்ஷி, காச்யபர், வியாசர்,
ஸநத்குமாரர், சந்தனு, ஜனகர், வியாக்ரர், காத்யாயனர், ஜாதூகர்ண்யர், கபிஞ்ஜலர், போதாயனர்,
காணாதர், விச்வாமித்ரர், பைடீனஸர், கோபிலர்.
தஸ்யா: குரந்யாஸ பவித்ர பாம்ஸும்
அபாம்ஸுலாநாம் துரி கீர்த்தநீயா|
மார்கம் மநுஷ்யேச்வர தர்மபத்நீ
ச்ருதேரிவார்த்தம் ஸ்ம்ருதிரந்வகச்சத்||
‘பாம்ஸு’ என்றால் தூசி. நந்தினி குளம்பு வைக்கிற இடத்தில் தூசி கிளம்புகிறது. ‘குர’ என்று குளம்புக்குப் பெயர்.
‘குரந்யாஸ’- குளம்பு வைத்ததினாலே; ‘பவித்ர பாம்ஸும்’-கிளம்புகிற பவித்திரமான தூசியைப் பார்த்துக் கொண்டு போனாள்.
பசுவின் பாத தூசி மிக விசேஷமானது. அது எந்த இடத்தையும் பரிசுத்தம் செய்துவிடும்.
ஸாதாரணப் பசுவின் தூசியே பவித்ரம் என்றால், காமதேனு புத்திரியான நந்தினியின் பாத தூசி எத்தனை உயர்ந்ததாயிருக்கும்?
அதற்குப் பாத்திரமான ஸுதக்ஷிணையோ இயல்பாகவே பரம பவித்ரமான தூசிபடியாத சரித்திரத்தை உடையவள்!
அபாம்ஸுலாநாம் துரி கீர்த்தநீயா
‘அபாம்ஸு’ ஒரு தூசி இல்லாதவள்! யாதொரு பழியோ களங்கமோ இல்லாத ஜன்மம்.
அப்பேர்ப்பட்ட உத்தமமான ஸுதக்ஷிணை, நந்தினியின் குளம்பு படுவதனாலே எழும்புகிற பவித்திரமான தூசியை அநுஸரித்து,
சுத்தமான மார்க்கத்தை அநுஸரித்து காலடி எடுத்து வைத்து நடந்தாள். அது எப்படியிருந்தது என்றால்
வேதத்தினுடைய (ச்ருதிகளுடைய) அர்த்தத்தை அநுஸரித்து மஹரிஷிகள் செய்திருக்கும்படியான
ஸ்மிருதிகள் எப்படிச் சென்றிருக்கின்றனவோ அப்படியிருந்தது என்கிறான் காளிதாஸன்.
ச்ருதேரிவார்த்தம் ஸ்ம்ருதிரந்வகச்சத் |
‘அந்வகச்சத்’ – பின்தொடர்ந்தாள். இங்கே பசுமாட்டுக்கு உபமானம் வேதம்-ச்ருதி. அதனுடைய குளம்படிதான் அர்த்தம்.
வேத அர்த்தத்தையே ஸ்மிருதி பின் தொடர்கிற மாதிரி பசு மாட்டின் அடியை ஸுதக்ஷிணை பின்பற்றினாள்.
ஸுதக்ஷிணை முழுக்க அப்படியே பசு மாட்டோடு போகாது கொஞ்ச தூரம்தான் போனாள்.
அதுபோல் வேதத்தில் இருப்பதை எல்லாம் ஸ்மிருதிகள் சொல்லவில்லை. அவை நினைவுக் குறிப்புகள்தான்.
ஆனால் வேதத்தின் அடியும் பொருளும் தப்பாமல், அதில் இருப்பதையே ஸ்மிருதிகள் சொல்லியிருக்கின்றன.
வேதத்திலிருக்கிற அத்தனை ஆயிரம் மந்திரங்களையும் ஸ்மிருதி சொல்லவில்லை.
அவற்றை பிரியோஜனப் படுத்துகிற வழியையே சொல்கிறது. அதாவது வேதம் போகிற வழியில் அதை கொஞ்ச தூரம் அநுஸரிக்கிறது.
“பரிசுத்த அந்தஃகரணத்தையுடைய ஸுதக்ஷிணை பதியைப் பின்பற்றி நந்தினியின் குரதூளி எழும்பும்
பவித்திர மார்க்கத்திலிருந்து சிறிதேனும் வழுவாமல் போனாள்” என்று சொன்ன காளிதாஸன் இதற்கு
ஒரு நல்ல உவமை சொல்ல வேண்டும் என்று நினைத்தவுடன் தன் மனஸில் பளீரென்று எழுந்த உவமையாக,
“வேத அர்த்தத்திலிருந்து கொஞ்சங்கூட வழுவாமல் ஸ்மிருதி அதைப் பின்பற்றிப் போவது போலப் போனாள்” என்கிறான்.
எப்பொழுதும் உபமானமானது உபமேயத்தைவிட உயர்ந்ததாக இருக்கும்.
சந்திரன் மாதிரி, தாமரைப்பூ மாதிரி ஒருத்தர் முகம் இருந்தது என்று சொன்னால் வாஸ்தவத்தில்
உபமானமான சந்திரனும், தாமரைப்பூவும் உபமேயமான முகத்தைவிட உயர்ந்ததாகத்தான் இருக்கும்.
அந்தப்படி, இங்கு பர்த்தாவான திலீபனைப் பசுவின் சுவட்டால் பின்பற்றிய பரம பவித்ரையான ஸுதக்ஷிணை என்ற
உபமேயத்துக்கு உபமானமாகச் சொல்லப்பட்ட ஸ்ம்ருதியானது ச்ருதியை இன்னம் ரொம்ப க்ளோஸாக பின்பற்றுகிறது என்று ஆகிறது.
உவமை சொல்வதில் அதிச்ரேஷ்டனான காளிதாஸன் இந்த உபமானத்தைச் சொன்னான் என்பதைவிட,
ஸ்மிருதிகள் முழுக்கவும் ச்ருதிகளை அநுஸரித்தவையே என்பதற்கு ஆதாரம் வேண்டியதில்லை.
ஜீவாத்மாவுக்குப் பரிசுத்தி ஏற்படுவதற்காக நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன –
அவை கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அன்ன ப்ராசனம், சௌளம், உபநயனம்,
குருகுலவாஸத்தில் செய்ய வேண்டிய பிராஜாபத்தியம் முதலிய நாலு வேத விரதங்கள், அது முடிந்ததும் செய்கிற ‘ஸ்நானம்’,
பிறகு விவாஹம், அதன்பின் கிருஹஸ்தன் செய்யவேண்டிய ஐந்து நித்ய கர்மாக்களாகிய பஞ்ச மஹா யக்ஞங்கள் ஆக,
இதுவரை மொத்தம் பத்தொன்பது; இதோடு கிருஹஸ்தன் செய்ய வேண்டிய பாக யக்ஞங்கள் ஏழும்,
ஹவிர் யக்ஞங்கள் ஏழும், ஸோம யக்ஞங்கள் ஏழும் ஆக யக்ஞங்கள் இருபத்தொன்றும் ஸம்ஸ்காரங்களே ஆகும். 19+21=40 ஸம்ஸ்காரம்.
அஷ்டகை (அன்வஷ்டகை) , ஸ்தாலீபாகம், பார்வணம், ச்ராவணி, ஆக்ரஹாயணி, சைத்ரி, ஆச்வயுஜி என்ற
ஏழும் பாக யக்ஞங்கள். அக்னியாதானம், அக்னிஹோத்ரம், தர்சபூர்ண மாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம்,
நிரூடபசுபந்தம், ஸெளத்ராமணி என்ற ஏழும் ஹவிர் யக்ஞங்கள். அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம்,
ஷோடசி, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்னும் ஏழும் ஸோம யக்ஞங்கள்.
நாற்பது ஸம்ஸ்காரங்களில் தினந்தோறும் பண்ண வேண்டியவை சில இருக்கின்றன.
சில சில காலங்களில் பண்ணவேண்டியவை சில. ஆயுளில் ஒரு தரம் பண்ண வேண்டியவை சில.
இவைகளுக்குள் ஒவ்வொரு கிருஹஸ்தனும் நன்றாகத் தெரிந்துகொண்டு தினமும் செய்யவேண்டிய
முக்கியமான ஸம்ஸ்காரங்கள் பஞ்ச மஹா யக்ஞங்கள் என்ற ஐந்து.
பஞ்ச மஹா யக்ஞங்கள் – பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் என்பவை.
வேதம் ஓதுவது என்ற அத்யயனமே பிரம்ம யக்ஞம், யாகமும் பூஜையும் தேவ யக்ஞம்.
தர்ப்பணம் பித்ரு யக்ஞம். விருந்தோம்பல் மநுஷ்ய யக்ஞம். ஜீவ ஜந்துக்களுக்கெல்லாம் பலி போடுவது பூத யக்ஞம்*.
————-
வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே|
வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||
“வேதவேத்யே”- வேதத்தினால் அறியப்பட வேண்டிய ஒருவன். அவன் யார்?” பரே பும்ஸி”- பரம புருஷன்.
வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம புருஷன் ராமனாக உலகில் அவதாரம் செய்தான்.
அவன் தசரதனுடைய குழந்தையாக வந்தவுடன், வேதம்,
‘ராமாயணமாக அவதாரம் பண்ணுவோம்’ என்று வால்மீகியின் குழந்தையாக வந்தது!
பரம்பொருள், அல்லது பரம புருஷன், அல்லது ஓங்காரம் என்கிற ஒரே ஸத்ய தத்வம் தான் எல்லா வேதங்களுக்கும்
பொதுவான லக்ஷியம் என்று தெரிகிறது. கடோபநிஷத்தில் “ஸர்வே வேதா:” என்று சொன்னாற் போலவே,
கீதையிலும் பகவான் “வேதைச்ச ஸர்வை:அஹம் ஏவ வேத்ய:” – “எல்லா வேதங்களாலும் நானே அறியப்படுகிறேன்” என்கிறார்.
இவற்றையெல்லாம் பார்க்கிற போது, “வேதத்தில் அநேக சமாசாரங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் வேதங்கள் எல்லாம்
சேர்ந்து பொது லக்ஷ்யமாக சொல்வது ஒரு பொருளைத்தான்” என்று ஆகிறது.
நாம் “யோ வேத (ஆ) தௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித:” என்கிறோமே,
இது மேலே சொன்னதற்கு proof தான். வேதத்தின் ஆதியிலும் (ஆரம்பத்திலும்), அந்தத்திலும் (முடிவிலும்)
பிரதிஷ்டையானது ஒரே மஹா தத்வமான ஈச்வர தத்வம்தான் என்று இந்த மந்திரம் சொல்கிறது.
“வேத ஆதௌ” விலும் (வேத ஆரம்பத்திலும்) “வேதாந்தே ச”விலும் (வேத முடிவிலும்) ஒரே பரமாத்மாவான
ஈச்வர தத்வத்தையே சொல்லியிருப்பதால் அதுவே வேதத்தின் ஸப்ஜெக்ட் ஆகிறது.
வேத வாக்கியம் ஒன்றுக்கு இன்னதுதான் அர்த்தம் என்று நிர்ணயம் பண்ணுவதற்கு,
மீமாம்ஸா சாஸ்திரத்தில் ஆறு வழிகள் சொல்லியிருக்கின்றன. அந்த ஆறு,
உபக்ரம- உபஸம்ஹாரௌ அப்யாஸ: அபூர்வதா பலம்|
அர்த்தவாத உபபத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே||–என்று சொல்லியிருக்கிறது.
உபக்ரம – உபஸம்ஹாரம், அப்யாஸம், அபூர்வதா, பலம், அர்த்தவாதம், உபபத்தி என்பனவே இந்த ஆறு.
வேதம் மட்டுமின்றி, எந்த ஒரு கட்டுரை அல்லது பிரவசனத்துக்கும் உத்தேசம் என்ன
என்று கண்டுபிடிக்க இந்த ஆறும் உதவி செய்கின்றன.
வேதத்தின் பெருமை. எல்லா தேவதைகளாகவும் இருக்கிற ஆத்மாவையே பிரியமானதாக உபாஸிக்க வேண்டும்
என்று தான் வேதம் (பிருஹதாரண்யகம் 1.4.8.) சொல்கிறது.
“ஆத்மாவே பார்க்கப்பட வேண்டும். ஆத்மாவே கேட்கப்படவேண்டும். ஆத்மாவே மனனம் செய்யப்பட வேண்டும்.
ஆத்மாவே அநுபவித்து அறியப்பட வேணடும். அதனாலேயே எல்லாம் அறியப்பட்டதாகும்” என்று தான்
யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்குச் செய்கிற உபதேச வாயிலாக,
நம் எல்லாருக்கும் வேதமானது முடிவான goal-ஐ (லக்ஷ்யத்தை)ச் சொல்கிறது.
நீயே அது என்பதைத் ‘தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. தத்வம் என்றால்
இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. ‘த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. தன்மை என்பது ஒன்று.
‘நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்- த்வம் அஸி என்னும் போது ‘தத்- அது, த்வம்- நீ (யாக), அஸி- இருக்கிறாய்’ என்று அர்த்தம்.
தத்-த்வம் என்ற இரண்டு வார்த்தைகளும் சேர்ந்துதான் தத்வம் என வழக்கில் வந்திருக்கிறது. ஒரே ஸத்யமான பரமாத்மாவின்
தன்மையைத் தெரிவிக்கிற வார்த்தையைக் கொண்டே, எந்த ஸத்யமான முடிவுக்கும் ‘தத்வம்’ என்று பெயர் சொல்லுகிறோம்.
————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply