ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –நான்காம் பத்து –
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் –
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்–4-1-11-
உய்யப் புகுமாறு அஃதே என்று –
திருநாரணன் தாள்’ என்று நான் சொன்ன அதுவே உஜ்ஜீவிப்பதற்கு -உய்வதற்கு உரிய-
உபாயமும் உபேயமும் – வழியும் பலமும் என்று.
கண்ணன் கழல்கள் மேல் – ‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி,
கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?
அது தன்னையே அருளிச் செய்கிறார்.
இப்படி ‘அடி யுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ் வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று தம் திரு வுள்ளத்திற்கு அருளிச் செய்தார்;
‘வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார். இது என்ன அடிப் பாடு தான்!
‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல் –
நித்ய வசந்தமான -எப்பொழுதும் பூவும் தளிருமாய் இருக்கின்ற திருச் சோலை சூழ்ந்த திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார், சர்வேஸ்வரன் திருவடிகளில் அந்தரங்கக் கைங்கரியம்-விருத்தி – செய்தவை இவை தாம்.
——————-
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்–4-2-11-
மெலியும் நோய் தீர்க்கும் –
‘மெலியும்’ என்று தாயார் கை வாங்கினாள்;
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே!’–பெரிய திருமொழி. 8. 9 : 7.–என்கிற பாசுரப்படியே
பின்னையும் உடையவன் கை விடானே? உடையவன் – ஸ்வாமி.-ஆதலின், ‘மெலியும் நோய் தீர்க்கும்’ என்கிறது.
நம் கண்ணன் –
இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான் என்னும் பிரமாண பிரசித்தியைப் பற்ற, ‘நம் கண்ணன்’ என்கிறது.
தாஸாம் ஆவிராபூத் ஸுரி ‘கண்ணபிரான் அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்,’ என்பது ஸ்ரீ பாகவதம்.
கண்ணன் கழல்கள் மேல் –
இப்படிச் சரீரம் மெலிவதற்கு-சிதிலையாகைக்கு – அடியான விரக வியசனத்தைப் போக்கும்-
ஆஸ்ரித -அடியார்கட்கு ஸூலபனான ஸ்ரீகிருஷ்ணன் திருவடிகள் விஷயமாக.
மலி புகழ் –
‘தேச காலங்களால்-விப்ரக்ருஷ்டமான – கை கழிந்த அவன் படிகளையும் இப்போதே பெற வேண்டும்’ என்று
விடாய்க்கும்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கையால் வந்த புகழே அன்றோ? ஆதலின், ‘மலி புகழ்’ என்கிறது.
வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
இப்படிப்பட்ட புகழை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த.
—————–
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்-4-3-11-
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி –
இவர் சர்வேஸ்வரனுடைய பிரணயித்வத்தை – காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது,
பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று;
இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.
கண்ணன் ஒண் கழல் மேல் –
தான் பரம பிரணயி காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ண பிரானுடைய திருவடிகளிலே.
செய்ய தாமரைப் பழனம் தென் நல் குருகூர்ச் சட கோபன் –
சிவந்த தாமரையை யுடைய பழனங்களை யுடைத்தாய்த் தெற்குத் திக்கிற்குச் சிறந்ததாயுள்ள
திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த.
அவனுடைய பிரணயித்வ- காதல் குணத்தைச் சொல்லுதலாலே இவர் தரித்தவாறே
அகால பலிநோ வ்ருஷ ‘எல்லா மரங்களும் காலம் அல்லாத காலத்திலும் பழங்களையுடையன ஆகக்கடவன,’ என்கிறபடியே
ஆயின ஆதலின், ‘செய்ய தாமரைப் பழனம்’ என்கிறது.
——————
வல் வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சட கோபன்-4-4-11-
ஆஸ்ரிதருடைய -அடியார்களுடைய -விஸ்லேஷ ஹேதுவான -பிரிவிற்குக் காரணமான
மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை.
இதனால், ‘பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்கள்,’ என்பதனைத் தெரிவித்தபடி.
பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்றடியேனுக் குற்றானாய் வளர்த்து என் னுயிராகி நின்றானை’ — பெரிய திருமொழி
வண் குருகூர்ச் சடகோபன் –
பரம உதாரரான -பெருவள்ளலான ஆழ்வார். இன்று நாமும் கூட இருந்து பகவானுடைய குணங்களை
அநுசந்தானம் பண்ணும்படி பண்ணின வள்ளன்மை அன்றோ? ஆதலால், ‘வண்சடகோபன்’ என்கிறது.
———————————-
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல்–4-5-11-
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை –
நிரந்தரமாக வர்ஷிக்கையாலே -எப்பொழுதும் மழை பெய்கையாலே -ஸ்ரமஹரமாய்–
சிரமத்தைப் போக்கக் கூடியதாய்க்- தர்ச நீயமான – காட்சிக்கு இனியதான திருமலையையுடைய
சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று;
‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே, நித்ய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு
முன்பே நித்ய சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கும் சீலமுடையவனது தன்மையைச் சொல்லிற்றாகையாலே,
சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று.
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்,
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மாமலை’-திருவிருத்தம், 50-
ஆகையாலே, -அறற்றலையாய்-தர்ச நீயமாய் – காட்சிக்கு இனியதாய் இருத்தலின்,
‘மாரி மாறாத தண் அம் மலை’ என்கிறது.
(‘அறற்றலை’ என்பது, சிலேடை : ‘தண்ணீரைத் தலையிலேயுடையது’ என்பதும்,
‘தர்மத்தைத் தலையிலேயுடையது’ என்பதும் பொருள்.)
வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் –
அழகியதாய் தர்ச நீயமாய் காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி.
திருநகரிக்கு ஸஹ்யம் திருமலை யாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே
திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால் ‑
சொன்ன அர்த்தத்தில் -பொருளில்- அதி சங்கை பண்ணாமைக்கு ஆப்தி அதிசயம் சொல்லுகிறது.
————————-
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன்–4-6-11-
இதற்கு, ‘மோஹித்தவள் அல்பம் ஆஸ்வசித்தவாறே சிறிது தெளிந்தவாறே,
மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண்விழித்தாள், வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’
அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய் மொழியாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது.
இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடைய பெருமையை.
அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ? அது வேண்டாதே,
தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இது தானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை-பிரபாவம் – புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று,
உட் புகுந்தாராய் அறிந்தாராய் உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.
வழுவாத தொல் புகழ் –
வழுவாத தொல் புகழாவது, -அஞ்ஞான திசையிலும் -மயங்கிக் கிடக்கிற நிலையிலும்
தேவதாந்த்ர ஸ்பர்சமும் வேறு தெய்வங்களின் சம்பந்தமும் -ததீய ஸ்பர்சமும் -அத் தெய்வங்களின்
அடியார்களுடைய சம்பந்தமும் –சத்தயா அவ்வப் பொருள்களின் தன்மையால் விநாசத்திற்கு ஹேதுவாய்,
அவ்வாறு மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப் பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும்
பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலை நின்ற புகழ்.
ஒருவன் வைஷ்ணவனாகையாவது, இது.
‘சர்வேஸ்வரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு,
தேவதாந்த்ர ஸ்பர்சமும் -வேறு தெய்வங்களின் சம்பந்தமும்-அபாகவதர் ஸ்பர்சமும் – பாகவதர் அல்லாதார்
சம்பந்தமும் உண்டாகுமேயானால்,வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லை கண்டீர்.
பூர்வார்த்தத்தை -முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும் தகுதி இல்லாதபடியாய் இருக்கும்;
உத்தரார்த்தை -பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப் போலே கண்ணுறங்கவும் விரகு இல்லையாய் இருக்கும்;
கர்மம் கைங்கரியத்திலே புகும்’ என்பது, ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ ஸூக்தி.
கொடியாடு மணி மாட அயோத்தி மூதூர்
குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
நெடியானே! அடியேன் நான் முயற்சி யின்றி
நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே.’– திவ்விய கவி-
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’-திருவிருத்தம், 97- என்றே அன்றோ இருப்பது?
சொரூபம் இது’ என்று அறிந்தால் சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியமும்
அதற்கு விரோதியானவற்றைக் காற்கடைக் கொள்ளுமதுவும் இல்லையாகில்,ஞானம் பிறந்தது இல்லையா மித்தனையே அன்றோ?
இஃது இல்லையாகில், ஆழ்வார்கள் போன வழியிலே சேர்ந்திலனாமித்தனை.
திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழா மாந்தர்’-நான்முகன் திருவந். 68.- என்றும்,
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’-நான்முகன் திருவந். 53.- என்றும்,
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே’-பெரிய திருமொழி, 11. 6 : 7- என்றும்,
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’-பெரிய திருமொழி, 7. 4 : 4.- என்றும் அன்றோ இவர்கள் படி?
அநாதி -பல காலங்களாக இவன் சூழ்த்துக் கொண்ட பாவங்கள் போகையும்,
நித்ய கைங்கரியம் பெறுகையுமாகிற இப்பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?
————————
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்-4-7-11-
நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அதிமாத்ரமான –
அளவு கடந்த காதலாலே.
தாமரைக்கண்ணன் தன்னை – இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்ர பூதரைச் சொல்லுகிறார்.
குழுவு மாடம் தென்குருகூர் –
ஆழ்வார்க்குத் துக்கம்-ஆர்த்தி – மிக மிகச் சர்வேஸ்வரன் வரவு தப்பாது’ என்று
திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.
இதனை சரவஞ்ச குசலம் க்ருஹே -ஸ்ரீராமா. யுத். 127 : 5.
(ஸ்ரீ பரதாழ்வான் துன்பக்கடலின் மூழ்கினவனாயிருக்கிறபடியைக் கண்டு
பெருமாள் வரவை நிச்சயித்துத் தரித்தபடியாலே யன்றோ ‘எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்று
பரத்வாஜ முனிவர் ஸ்ரீ ராம பிரானைப் பார்த்துக் கூறியருளினார்?’ என்றபடி.-)
வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்பது போலே
மாறன் –சம்சாரத்தை மாற்றினவர்.
சடகோபன் –பகவானிடத்தில் விருப்பமில்லாதவர்கட்குப் -விமுகருக்கு சத்ரு -பகைவர்.
—————-
உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்-4-8-11-
உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு –
அஸங்யேரான ஆத்மாக்கள் -பூர்ணமாய் -நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும்.
தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை –
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிற போது,
செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே அந்ய பரதைக்கு- வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று
எல்லா உலகங்களுக்கும் வேண்டுவன வற்றை -சம்விதானம் -யெல்லாம் தன் சங்கல்பத்தாலே -நினைவாலே செய்து,
பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
அன்றிக்கே,
‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக போஜனாதிகள் -உணவு முதலானவைகளை
உட் கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல்.
அன்றிக்கே,-
ஸர்வஸ்ய ஜகத பாலவ் வத்சா பாலவ் பபூவது – எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான
அந்தக் கிருஷ்ண பலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே,
சர்வேஸ்வரனாயிருந்து வைத்து, அடியார்கள் ஸ்பர்சம் – சம்பந்தம் உள்ள பொருள்களால்
அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.
தடம் குருகூர்ச் சடகோபன் –
பிருந்தம் பிருந்தம் அயோத்யாயாம் –அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே,
பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மகோத்சவத்தைக் காணவேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தால் போலே,
இவர் ஆத்மாவையும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக்
காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான
பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.
———————-
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்-4-9-11-
புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.
நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-
வத்சலனாய் – இருப்பவனை.
கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து,
இவர்கள் விரோதியைப் போக்குமவனை.
பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.
திருவடி சேர்வது கருதி –
அவன் திருவடிகளைக் கிட்டினோமாக வேண்டும்’ என்னும் மநோ ரதத்தை எண்ணத்தை யுடையராய்;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் மநோ ரதம் இதுவே அன்றோ?
செழுங்குருகூர்ச் சடகோபன் –
திரு வயோத்தியையில் மண்பாடுதானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு போலே,
அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ப்ராவண்யத்துக்கு – ஈடுபாட்டிற்குக் காரணம்.
—————-
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்-4-10-11-
அடிமை செய்து சர்வேஸ்வரனைக் கிட்டினவர்.
முறையிலே சர்வேஸ்வரனைப் பற்றினவர் ஆயிற்று இவர்
ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தால் போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.
கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.
உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?
பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ?
சர்வேஸ்வரன் திரு அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சம்சாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத்
தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே,
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.
இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று.
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் -இம் மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து,
சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு;
இப்போது, பகவானுடைய பரத்வத்தை உபபாதித்து -விரித்து அருளிச் செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு,
இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.
(திரு குருகூர் பாசுரம் மட்டும் தான் மகிழ் மாலை–மொய்ம் மகிழான்
வகுளாபரணன் இவரே சொல்லி அருளி- தம்முடைய பெருமை அருளி / கலியன் -சீர்காழி)
மாறன் சடகோபன் –
பகவானை அடைவதற்குத் தடையாக -பகவத் பிராப்தி பிரதிபந்தகமான -உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர்.
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply