ஸ்ரீ ஆதிசங்கரர், “பிரம்மம் என்பது அளவற்ற வலிமையை உடைய பகவானையே குறிக்கிறது.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அவனே செய்கிறான்.
பிரபஞ்சமானது ஒன்றுமில்லாச் சூன்ய நிலையிலிருந்தோ, ஒரு ஜடப்பொருளிலிருந்தோ, வெறும் அணுக்களைக்
காரணமாகக் கொண்டோ, பாப-புண்யங்களுக்கு ஆட்பட்ட ஒரு ஜீவனிடமிருந்தோ உண்டாவது சாத்தியமில்லை
(பிரம்மசூத்ர பாஷ்யம், 1.1.2)… சர்வ வலிமை மிக்கவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும், மிகப்பெரியவனாகவும்
உள்ள அந்த இறைவனைப் பற்றி என்னவென்று உரைப்பது! (பிரம்மசூத்ர பாஷ்யம், 1.1.3)” என்று அறுதியிட்டார்.
“கண்களுக்குப் பார்க்கும் ஆற்றல் எதனிடமிருந்து பிறக்கிறதோ, செவிகளுக்குக் கேட்கும் திறமை எதனால் கிடைக்கிறதோ,
மூக்கின் முகரும் சக்தி எதை மூலமாகக் கொண்டுள்ளதோ, நாவிற்கு சுவைக்கும் தன்மை எதனால் நிலைபெறுகிறதோ,
தோல் எதனால் தொடு உணர்வைத் தெரிந்துக்கொள்ள முடிகிறதோ, அந்த பொருளே பரம்பொருள்.
அத்தகைய புரிதற்கரிய பரம்பொருளை நீ மேற்கூறிய ஐம்புலன்களாலும் (ஞானேந்திரியங்களாலும்) அறியமுடியாது”
என்று உபநிடதங்களில் சுருதி வாக்கியங்களாக அறுதியிட்டனர்.
“கவலை”, “மகிழ்ச்சி”, “துயரம்”, “கோபம்” முதலானவற்றை “மனம்” என்னும் முக்கியமான கருவியால் தெரிந்து கொள்கிறோம்,
“வாக்கு” என்னும் பொறியினால் (கர்மேந்திரியத்தால்) இன்னொருவருக்கு எடுத்துச் சொல்கிறோம்.
(கேட்பவர்களும் கவலை என்றால் என்ன என்பதை நன்கு அறிந்தவராதலால் அதைப் புரிந்துக்கொள்கின்றனர்.)
ஆனால், “அந்த மனத்தாலும் அறிய முடியாத ஒன்றாக, வாக்காலும் வருணிக்க முடியாத ஒன்றாக அன்றோ
இந்தப் பரம்பொருள் உள்ளது!” என்பது தைத்திரீய உபநிடதமாகிய வேதத்தின் முடிவு.
பரம்பொருளை இப்படி நம் சொந்த முயற்சியால் எத்தனை செலவு செய்தும் தெரிந்துக் கொள்ள முடியாது”
என்று வேதத்தையும் பரம்பொருளையும் தவ வலிமையால் கண்ட வேதமுனிவர்கள் கூறியுள்ளனர்.
“மரணமற்ற உடலைப் பெற்றுள்ளதால் ‘அம்ருதவபு‘ எனப்படுகிறான்”
என்று ஆதி சங்கரர் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையில் இட்டுள்ள விளக்கம்
“தன்னுடைய அவதாரங்களில் ஒன்றில் கூட தோல்வியைக் கண்டதில்லையாதலால், திருமால் ‘அஜிதன்‘ எனப்படுகிறான்”
என்று விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையில் “அஜித” என்ற நாமத்திற்கு விளக்கம் தந்துள்ளார்.
——-
ஸ்ரீமந் நாராயணீயம் – – தசகம் – 38-ஆம் தசகம்
ஆனந்த வடிவான இறைவனே! உமது அவதாரத்துக்கு உரிய காலம் நெருங்கி விட்டது. உன் திருவுருவில் கிளம்பிய
ஒளியைப்போல மேகக்கூட்டங்கள் நிறைந்து காணப்பட்டன. அவ்வாறு மழைக்காலம் காட்சி தருகின்றது அல்லவா? …(1)
மேகங்கள் பொழிந்த நீரால், திக்கெங்கும் குளிர்ச்சி அடைந்தன. விரும்பியதைப் பெற்ற நல்லவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
அப்பொழுது நடு இரவில், விண்ணில் மதி தோன்றும் வேளையில், மூவுலகங்களின் துன்பங்களைப் போக்கக் கூடிய நீர் இவ்வுலகில் அவதரித்தீர். …(2)
சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தாலும், உன் திருமேனி மிகவும் வல்லமை வாய்ந்தது. தலையில் கிரீடம், கைவளை, தோள்வளை,
முத்துமாலை ஆகியவற்றின் ஒளியுடன், சங்கு, சக்கரம், தாமரை மலர், கதாயுதம் தரித்த கைகளோடு காட்சி தந்தீர்.
கார்மேகத்தை ஒத்த நீல நிறத்துடன் அந்த அறையில் காட்சி தந்தீர். …(3)
நீ பிறக்கும் இடத்தை லட்சுமி வசிப்பதற்கேற்ற இடமாகக் கம்சன் வைக்கவில்லை. ஆனால் எப்போதும் உன் மார்பில் வசிக்கும்
இலட்சுமி அங்கிருந்துகொண்டு கடைக்கண்ணால் பார்த்ததாலேயே அந்த இடம் லட்சுமிகரமாகக் காட்சி அளித்தது. …(4)
மகா ஞானிகளான முனிபுங்கவர்களின் அறிவுக்கு எட்டாத தொலைவில் உமது திருமேனி இருந்தது.
அதனை வசுதேவன் தன் கண்களால் கண்டார். கண்களில் நீர் பெருக, உடல் சிலிர்க்க எல்லையில்லா ஆனந்தத்தைப் பெற்றார்.
மனங்கனிந்த வசுதேவன் இனிய நறுங்கனியான உம்மைப் போற்றித் துதித்தார். …(5)
“தேவதேவனே! புருஷோத்தமனே! துன்பம் நீங்கப் பிறந்த தூயவனே! எல்லா உயிர்களையும் ஒன்றெனக் கருதிக்
கருணை காட்டுபவனே! மாயலீலா விநோதனே! கடைக்கண் காட்டி கவலை வினைகளைப் போக்க வேண்டும்!”
என்று நெடுநேரம் துதித்தார். …(6)
வசுதேவர் கொடியுடலாள் தேவகியின் கண்களிலும் மகிழ்ச்சிப் பெருக்கால் நீர் பெருகி வழிந்தது.
உன் கல்யாண குணங்களைப் பற்றிப் பாடித் துதித்துப் போற்றினாள். அருளுக்கு உறைவிடமான நீர்,
அவர்களிருவருக்கும் அவர்களது முன்னிரண்டு பிறவிகளைப் பற்றி எடுத்துரைத்தீர். பிறகு உமது தாயின் வேண்டுதல்படி,
மானிட உருவை எடுத்துக் கொண்டீர். முன்பெடுத்த இரு பிறவிகளில், பிருச்னி-சுதபஸ் ஆகியவர்க்கு பிருச்னிகர்ப்பனாகவும்,
அதிதி-காச்யபன் ஆகியவர்க்கு வாமனனாகவும் பிறந்துள்ளீர். …(7)
அதன் பிறகு உம்மை, நந்தகோபனுடைய மகளுக்குப் பதிலாக மாற்றி வைக்கும்படி வசுதேவனுக்கு ஆணை இட்டீர்.
உடனே அவர், உயர்ந்தோர் உள்ளமாகிய தாமரைத் தடாகத்தில் இருக்கும் அன்னமாகிய உம்மைத்
தமது இரு கரங்களாலும் வாரி எடுத்துக்கொண்டார். …(8)
நல்வினை பல செய்த வசுதேவன் உம்மைக் கரங்களில் தூக்கிக் கொண்டு மெதுவாகப் புறப்பட்டார்.
ஆதிசேஷன் படம் எடுத்துக் குடை பிடித்தான்; அவன் தலைகளில் இருந்த இரத்தினங்கள் ஒளி வீசி வழிகாட்டின.
இறைவா! (வாத/சம்சார) நோயைப் போக்கிக் காப்பாற்ற வேண்டும். …(10)
———————
39-ஆம் தசகம்
யாதவ மகளிர் நந்தகோபன் இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். பிறந்த பெண் குழந்தை மெதுவாக அழுது கொண்டிருந்தது.
கதவுகள் திறந்து கிடந்தன. அந்த இல்லத்திற்குள் வசுதேவன் சென்றார். அங்கே உம்மைப் படுக்கவைத்து விட்டு
அங்கே இருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு விரைவாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார். …(2)
முகுந்தனே! நந்தகோபனின் வீட்டில் கால்களை உதைத்து யசோதையின் பக்கத்தில் அழுது கொண்டிருந்தீர்.
உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் விழித்தெழுந்து, குழந்தை பிறந்த செய்தியை மற்றவர்களுக்குத் தெரிவித்தனர்.
என்ன சொல்வேன்? எப்படிச் சொல்வேன்? கோகுலம் முழுவதும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. …(8)
மனங்கவர்ந்த உம்மை முதன் முதலாகக் கண்டு யசோதை மகிழ்வுற்றாள். உம்மைத் தொட்டும் தடவியும்
மார்போடணைத்தும் பால் ஊட்டினாள். புண்ணியம் புரிந்தவர்கள் அனைவரிலும் அவளே மிகச் சிறந்தவள்;
யாருக்குக் கிடைக்கும் இத்தகைய பெற்றாகிய பேறு? …(9)
மகிழ்ச்சியில் திளைத்த நந்தகோபனும், மறையவர்களுக்குக் கேட்டதை இல்லை என்னாது கொடுத்தான்.
மற்ற இடையர்களும் மங்கல காரியம் பல புரிந்து மகிழ்ந்தனர். ஆயர்ப்பாடியே விழாக்கோலம் பூண்டது.
மூன்று உலகங்களையும் காப்பாற்றி நலம் அருள வந்தவனே!
என்னை (வாதம்/சம்சாரம் ஆகிய) கொடிய பிணியிலிருந்து காப்பாற்றி அருள் புரிய வேண்டுகிறேன்! …(10)
————
யஸ்மாத்3விச்’வம் உதே3தி யேன விவித4ம் ஸஞ்ஜீவ்யதே லீயதே
யத்ராந்தே க3க3னே க4னா இவ மஹாமாயின்யஸங்கே3ऽத்3வயே |
ஸத்யஜ்ஞான ஸுகா2த்மகே அகி2ல மனோऽவஸ்தா2னுபூ4த்யாத்மனி
ஸ்ரீராமே ரமதாம் மனோ மம ஹேமாம்பு3ஜே ஹம்ஸவத் ||”
இந்த சமஸ்கிருத சுலோகமானது, ஸ்ரீ ராமதீர்த்தர் என்னும் பண்டைய அத்வைதத் துறவியரால் எழுதப்பட்ட
“அன்வயார்த்த பிரகாசிகை” என்னும் விளக்க நூலில் உள்ள மங்கள சுலோகமாகும். இச்சுலோகத்தின் பொருள்,
“எவரிடத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றுகிறதோ, எவரால் (ஜீவராசிகள்) அனைத்தும் உயிர்வாழ்கின்றனவோ,
பிரளயத்தில் எவரிடம் போய்ச் சேருகின்றனவோ, எவரை மேகம் வானத்தைத் தொடாதது போல்
(ஸத்வம், ரஜஸ், தமஸ்ஸாகிய முக்குணங்களைக் கொண்ட) மாயை தொடாதோ, மெய்ப்பொருளாய்,
ஞானமாய், ஆனந்தமாய் விளங்கி, உயிருக்கு உயிராய் இருந்து, பிரமாணங்களால் அறியப்படும் அந்த இராமபிரான்
கண் என் மனம் தாமரை மலரை விரும்பும் அன்னப்பறவை போல இன்புறுகிறது”-என்பதாகும்.
ஆக, இராமாவதாரம் என்பது, பிரபஞ்சம் முழுவதையும் படைத்துக் காத்தழிக்கும் முழுமுதற்பொருளின் சற்றும் குறையாத,
சற்றும் வேறுபடாத உருவமே என்று இச்சுலோகம் கூறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார் பண்ணிய
“உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.”–என்னும் கம்பராமாயணப் பாயிரப் பாடலுடன் ஒப்பிடத்தக்கது.
“இயன்றவெல்லாம் தன்னுள்ளே பயின்று அடக்கி, வேத முதல்வனாய்த் தீதற விளங்கிய திகிரியோனாகிய”
[நற்றிணை கடவுள் வாழ்த்து] திருமாலானவன், அனைத்துயிர்களையும் பேணுதற்பொருட்டு இப்பூவுலகில் அவதாரங்களை எடுக்கிறான்.
ஆதிசங்கர பகவத்பாதரும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் “அமூர்த்திமான், அனேகமூர்த்திஹி” என்ற இடத்திற்கு,
“கர்மநிப3ந்த4னா மூர்த்திரஸ்ய ந வித்3யத இதி அமூர்த்திமான் | அவதாரேஷு ஸ்வேச்ச2யா லோகானாம் உபகாரிணீஹி
ப3ஹ்வீர்மூர்த்தீர் ப4ஜத இதி அனேகமூர்த்திஹி |” என்று விளக்கியுள்ளார்.
இவ்வாக்கியங்களின் அர்த்தம்
“கர்ம நிபந்தனையால் விளையும் உடல் அவனுக்கு இல்லாமையால் அவன் ‘அமூர்த்திமான்‘ எனப்படுகிறான்.
உலகத்தில் உள்ளோர்களுக்கு நன்மை செய்தருளும் பொருட்டு தன்னிச்சையாகப் பல உருவங்களை
எடுப்பதால் ‘அனேகமூர்த்தி‘ எனப்படுகிறான்.” என்பதாகும்.
இதுவும் “பிறவாப் பிறப்பு இலை, பிறப்பித்தோர் இலையே” [பரிபாடல் – 3] என்ற சங்கப்புலவர் வாக்குடனும்
“பிறப்பில் பல்பிறவிப் பெருமான்” [திருவாய்மொழி, 2.9.5] என்ற நம்மாழ்வார் வாக்குடனும் உடன்படுகிறது.
இப்படித் தன்னிச்சையாக அவதாரம் எடுக்க, அவனைப் பிறப்பிக்கச் செய்யும் கர்ம நிபந்தனையோ,
வேறு எவரோ கிடையாது என்பதே பொருள்.
நம் நாட்டில் பண்டிதர்கள், ஆச்சாரியார்கள் முதல் பாமரர் வரை அனைவரும் “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று
இராகவனையே விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவனன்றோ!
நாட்டிலுள்ள இந்துக்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்த அயோத்தி ராம் ஜன்ம பூமி இயக்கத்தின் கோஷமே
“மரியாதா புருஷோத்தம் ராம்” என்பதாயிற்றே. பரமனாகிய திருமாலுக்கு “புருஷோத்தமன்” என்பது தனிப்பெரும் பெயர்.
திருமாலே “அதோ அஸ்மி லோகே வேதே3 ச ப்ரதிதஹ புருஷோத்தம”
[லோகத்திலும் வேதாந்தத்திலும் நான் “புருஷோத்தமன்” என்று அழைக்கப்படுகிறேன் — பகவத்கீதை 15.18 ] என்று செப்பியுள்ளான்.
இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தா3ச’ரதி2 ராம” என்று சங்கரர்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-ஆவது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள்,
“மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும்.
இத்துடன், வேதாந்தத்தின் அடிப்படை நூல்களில் ஒன்றாகிய “உபநிடதங்களின் சாரம்” என்று ஆதிசங்கரர் முதலிய
வேதாந்திகளால் போற்றப்பட்ட கீதை கூறும் விளக்கம் ஒன்றை இங்கு நினைவுப் படுத்த வேண்டும் [கீதை 4.14]:
“ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம ப2லே ஸ்ப்ருஹா |
இதி மாம் யோ அபி4ஜானந்தி கர்மபி4ர் ந ஸ ப3த்4யதே ||”
இச்சுலோகத்தில் கண்ணன், “என்னைக் கன்மங்கள் (வினைகள்) தீண்டுவதில்லை, எனக்கு ஒன்றைச் செய்ய வேண்டும்
என்ற தனிப்பட்ட சுயநலமான ஆர்வமும் இல்லை. என்னைப்பற்றிய இவ்வுண்மையை எவனொருவன் உள்ளபடி அறிகிறானோ,
அவன் கன்மங்களின் பிடியிலிருந்து மீட்கப்படுகிறான்.” என்கிறார். ஆக, சற்றும் கன்ம சம்பந்தமற்ற முழுமுதற் பொருளின்
நேரிடையான தோற்றமே இராமன் என்று அறிகிறோம்.
ஆகையால், “இராவணனைக் கொன்றதால் இராமனுக்கு ஏதேதோ தோஷம் பிடித்துக்கொண்டது”,
“இராமன் வாலியை முதுகில் அம்பெய்து வதம் பண்ணியதன் காரணமாக, கிருஷ்ணாவதாரத்தின் இறுதியில் பாதத்தில்
அம்பு தைக்கப்பட்டு அவதாரம் முடிகிறது” போன்ற நூதனமான விளக்கங்கள் வேதாந்தத் தத்துவ ரீதியின் முன்பு செல்லாக் காசாகிவிடும்.
ஸ்ரீ ஸர்வஜ்ஞாத்ம முனிகள் ஸாங்க்ஷேப சாரீரகத்தில் விளக்கம் கூறுகிறார் [ஸங்க்ஷேப சாரீரகம், 2.182]:
“ஸங்கல்ப பூர்வகம் அபூ4த்3 ரகு4நந்த3னஸ்ய
நாஹம் விஜான இதி கம் சன காலம் ஏதத் |
ப்3ரஹ்மோபதேச’ம் உபலப்4ய நிமித்தமாத்ரம்
தச்ச உத்ஸஸர்ஜ ஸ க்ருதே ஸதி தே3வகார்யே ||”
இதன் பொருள்: “தன்னுடைய சுய சங்கல்பத்தால் இரகுநந்தனன் சிறிது காலம் “நான் அறிகிலேன்” என்று
(வெளியுலகத்திற்குத்) காட்சியளித்தான். பிரம்மாவின் உபதேசத்தை வெறும் கருவியாகக் கொண்டு,
அந்த வேஷத்தையும் தானே கலைத்துக் கொண்டான். இப்படிச் செய்தது (தீய அரக்கர்களைக் கொல்வதாகிய)
தேவர்கள் வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக.”
மேற்கண்ட இடத்தில் இராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியைக் முனிகள் குறிப்பிடுகிறார்.
யுத்த காண்டத்தில் இராவணவதம் முடிந்த பின்னர் தேவர்கள் அனைவரும் சீதாப்பிராட்டியின் அக்கினிப் பரீட்சையின் பொழுது
அங்கு தோன்றி, “இராம! நீயே பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமாய் உளாய்! ஜகன்மாதாவாகிய சீதையை இப்படி
நீ சாதாரண மனிதனைப் போல பரீட்சிக்கலாமா?” என்று வினவினர். அப்பொழுது இராமன் அவர்களைக் கண்டு கைகூப்பி,
“ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் த3ச’ரதா2த்மஜம் |
ஸோஹம் யஸ்ய யதச்’சாஹம் ப4க3வம்ஸ்தத்3 ப்3ரவீது மே ||”
[இராமாயணம், யுத்த காண்டம், 117.11]
அதாவது, “நான் என்னை தசரதன் புத்திரனாக, ‘இராமன்’ என்னும் பெயரை உடைய மனிதனாகத்தான் கருதுகிறேன்.
நான் யார், எத்தகையவன் என்று தேவர்களாகிய நீங்களே எனக்கு விளக்குங்கள்.” என்று மொழிந்தான்.
“பக்தவத்சலனாகிய இறைவன், தன்னுடைய பக்தனாகிய பிருகுவின் சாபத்தைப் பேணுதற்பொருட்டு தானே மனிதனைப் போல
அவதாரம் எடுத்து, துன்பப்படுவது போல நடித்தார்”
[ப4க்தவத்ஸலஸ்ய ப4க3வதோ ப4க்த ப்4ருகு சா’ப பரிபாலனாய ஸங்கல்பபூர்வகமேவ] என்று.
(அப்பைய தீட்சிதரும் “சித்தாந்த லேச சங்க்ரஹம்” என்னும் அத்வைத விளக்க நூலில் இதே நியாயத்தை
முன்வைத்து இராமாவதாரத்தை விளக்கியுள்ளார்).
———
நல்லார்க டம்மை நலம்புரிந்து காத்தற்கும்
பொல்லாரைப் பொன்றுநெறி போக்கற்குஞ் – சொல்லாரு
முந்தை யறநாட்ட முய்த்தற்கு நான்பிறப்ப
னிந்தவுகந் தோறு மிசைந்து.”
இவ்வரிகள் “பகவத் கீதை வெண்பா” என்னும் செய்யுள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
இதனை இயற்றியவர் ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர் என்னும் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியர்.
இந்நூலில் இவர் சமஸ்கிருத மூலத்தில் உள்ள கீதை சுலோகங்களை அழகிய தமிழ் வெண்பாக்களாக மொழிபெயர்த்துள்ளார்.
மேற்கண்ட வெண்பாவானது,
“பரித்ராணாய ஸாதூ4னாம் வினாசா’ய ச து3ஷ்க்ருதாம்
த4ர்ம ஸம்ஸ்தா2பனார்த்தா2ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3”–என்னும் கீதை (4.8) சுலோகத்திற்கான தமிழாக்கமாகும்.
இத்தகைய இறையனுபவத்தையே நாடி, “உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” என்று
அவனுக்காகவே ஏங்கித் தவிக்கும் மெய்யடியார்களுக்கு அனுக்கிரகம் புரியும் பொருட்டே திவ்ய மங்கள ரூபத்துடன்
ஸ்ரீமந் நாராயணன் அவதாரம் எடுக்கிறார் என்னும் செய்தியை ஸ்ரீ இராமானுஜர் விளக்குகிறார்.
ஸ்ரீ சங்கரரும் தம் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் “இச்சா2வசா’ன் மாயாமயம் ரூபம் ஸாத4கானுக்3ரஹார்த்த2ம்”
[பக்தி செலுத்துவதற்காகவும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் புரிவதற்காகவும் விரும்பிய ரூபத்தைத் தானே எடுத்துக்கொள்கிறான் –
பிரம்ம சூத்திர பாஷ்யம் 1.1.20] என்று விளக்கம் கூறியுள்ளார். இங்கு நோக்கத்தக்கது என்னவென்றால்,
சங்கரர் உருவத்தை வெறும் கற்பனையென்று தள்ளவில்லை.
மாறாக, உருவம் என்பது இறைவனே விரும்பி பக்தர்களுக்காக எடுக்கும் ஒன்று என்று கூறியுள்ளர்.
மேற்கண்ட அவதார விளக்கத்திற்குத் தக்கதொரு உதாரணம் கூறவேண்டுமானால், ஸ்ரீமத் பாகவத புராணத்தில் வரும்
கஜேந்திர மோட்ச சம்பவத்தைக் காணவேண்டும். கஜேந்திரனை முதலையின் பிடியிலிருந்து மீட்டுத் தர
ஸ்ரீமந் நாராயணன் புள்ளரசனாகிய கருடன் மேல் வீற்றிருந்து வந்தமையையும் ஒரு அவதாரம் (’ஹரி அவதாரம்’) என்றே சொல்லுவர்.
முதலையின் பிடியிலிருந்து மீள முடியாமல் கஜேந்திரன் இறைவனைத் துதிக்கிறான்.
இந்நிகழ்ச்சியை, பாகவதத்தைத் தமிழில் பாடிய ஆரியப்பப் புலவர், எட்டாம் கந்தத்தில் கசேந்திர அத்தியாயத்தில்
வாரண மாற்ற லோய்ந்து வானுறைத் தடக்கை நீட்டிப்
பூரண வுலக மெல்லாம் பூத்தளித் தழித்து நின்ற
காரண பரமா னந்தக் கடலிடைக் குளிப்போர் நெஞ்சும்
ஆரண முடிவு மேய வமலவோ வென்றரற்றும். … 28
வேதநூ லொருங்கு ணர்ந்து விரியுமெய் யறிஞ ருள்ளப்
போதுசேர் சோதி பொன்னிற் பொலியொளி போல வெங்கும்
தீதுறா தருளின் யார்க்குந் தெரிவுறா துறைந்து நின்ற
ஆதிகா ரணன்வந் தின்னே யளிக்கவென் றழைத்த தன்றே. …29 என்னும் விருத்தங்களின் வழியாகக் காட்டியுள்ளார்.
கஜேந்திரன் “ஆதிமூலமே! பரம் சோதியே! உலகத்திற்கெல்லாம் காரணப் பொருளாக இருப்பவனே” என்று அருவ நிலையைத் தான் துதித்தான்.
ஆனால் காக்க வந்தவனோ, “வெய்ய படர் சிறைக் கலுழன் ஊர்ந்து, தீப்பொழிந்திலங்கு கூர்வாய்த் திகிரிகைத் தாங்கி” வந்ததாக
அடுத்த பாடலில் புலவர் பாடுகிறார். முன்பு நாம் கேட்டவண்ணம் “எதற்கிப்படி உருவத்துடன் வர வேண்டும்,
எங்கும் வியாபித்திருப்பதால் அருவமாகவே நின்று முதலையைக் கொன்றிருக்கலாமே?” என்று இங்கும் கேட்கலாம்.
கஜேந்திர மோட்சத்தை வர்ணிக்கும் சித்திரத்தையோ சிற்பத்தையோ பார்த்துள்ளவர்களுக்கு இக்கேள்விக்கு பதில் தெரியும்.
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?
[திருவாய்மொழி, 3.1.9]
———-
விராதன் சாபம் நீங்கிய பிறகு செய்யும் மெய்சிலிர்க்க வைக்கும் துதியின் முடிவில்
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந்தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால் துடைத்தாய் நீ.–என்ற பாடல் உள்ளது.
விராதன் தான் செய்த தவப் பயனால் பாற்கடலில் பாம்பணையில் விரும்பி யோக நித்திரையில் உள்ள திருமால்
(“முன் உவந்து உறையும் அப்பு உறையுள்”) அதனைத் துறந்து, இராமனாய் அவதரித்துத் தனக்குக் காட்சியளித்ததில்
தன் கொடிய சாபம் மட்டுமின்றி, “போய பிழையும் புகுதருவான் நின்றனவும்” [திருப்பாவை – 5] ஆகிய
முன் வினைகள் நீங்கப் பெற்று மோட்ச நிலையைத் தான் எய்தியதை உவகையோடு உரைக்கிறான்.
பள்ளி கொண்ட பரமன் தான் விழைந்து அவதாரமெடுக்கும் இச் செய்தியைக் கம்பர்,
இராமானுஜர் தம் கீதை விளக்கத்தில் எடுத்துள்ள
“ஏஷ நாராயண: ஸ்ரீமான் க்ஷீரார்ணவ நிகேதன: நாக3பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆக3தோ மது2ராம் புரீம்”
எனும் கண்ணனைப் பற்றிய மகாபாரத வரிகளின் எதிரொலியாகவே இராமனைக் குறித்துச் செய்துள்ளாரோ என்று வியக்க இடமுண்டு.
ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்3த்4ருத்ய பு4ஜம் உச்யதே
வேத3 சா`ஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தை3வம் கேச`வாத் பரம்’
“க்ருஷ்ணம் த4ர்மம் ஸனாதனம்” என்பது மகாபாரதத்தில் முனிவர்களின் கூற்று.
கண்ணனையே நாடி கண்ணனுக்கே சேவை செய்து கண்ணனையே அனுபவிப்பதைத் தான் “தர்மம்” என்று சொல்கிறோம்.
“ச்’ரவணம் கீர்த்தனம் விஷ்ணோஸ் ஸ்மரணம் பாத3 ஸேவனம்
அர்ச்சனம் வந்த3னம் தா3ஸ்யம் ஸக்2யம் ஆத்ம நிவேத3னம்”[ஸ்ரீமத் பாகவதம், 7.5.23-24]
ஸ்ரீ சங்கரரே “விஷ்ணு தத்துவத்தை அறிபவன் ஞானி“
[“ஜ்ஞானீ விஷ்ணோ: தத்த்வவிச் ச ஹே ப4ரதருஷப4:” – ஆதி சங்கரர்
கீதா பாஷ்யம், 7.16] என்று கீதைக்கு உரையிடுகையில் கூறுகிறார்
“தன் சித்தத்தை என் மீது செலுத்தி, கண் முதலான ஐம்புலன்களையும் என்னில் ஆழ்த்தி,
வாழ்க்கையை எனக்கே அற்பணித்து, என் புகழைச் சொல்லிக் கொண்டு ஒருவருக்கொருவர் என்னைப்பற்றி
விளக்கி உணர்த்துவர். ஒப்பற்ற ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகிய ஆறு குணங்களோடு
கூடியவனாக என்னைப் பற்றிக் கலந்து பேசி மகிழ்வர். தமக்குப் பிரியமானவருடன் அனவரதம் சேர்ந்து இருப்பதைப்
போன்ற திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பர்” [ஆதி சங்கரர் கீதா பாஷ்யம், 10.9]
என்று கண்ணன் வாக்கை மிகச் சிறப்பாக மெருகேற்றி உரையிட்டிருப்பது கொண்டாடத்தக்கது.
சங்கரர் கூறுகிறார்: “நீண்ட நாள் — அதாவது வருடத்துக்கு ஆறு மாதம் என்றெல்லாம் அல்ல;
வாழ்நாள் முழுதும் இடைவிடாது — கண்ணனை மனதில் நிறுத்தி உபாசிக்க வேண்டும்.
அத்தகைய யோகிக்குக் கண்ணன் அடைய எளியவனாக உள்ளான்.” [ஆதி சங்கரர் கீதா பாஷ்யம், 8.14] அதற்கும் மேலாக,
மனதை ஸ்திரமாக வைக்கும் யோகத்தைக் கடைபிடித்து வேறு புகலிடமில்லாமல் சர்வேஸ்வரனாகிய கண்ணனிடத்திலேயே
சரண் புகவேண்டும். தாழ்ந்த பலன்களை விரும்பும் ஏனையோர் யாக வேள்விகளையும், விரதத்தையும், தானம் கொடுப்பதையும்
அப்பலனை அடைதற்குரிய சாதனமாகக் கடைபிடிப்பர். கண்ணனை அடைய விரும்புபவனோ வேறு சாதனங்களைக் கைவிட்டுத்
தன் சிந்தையை அவன் மீதே செலுத்தி அவனையே பற்றுகிறான்.
“இத்தகைய யோகியானவன் என்னை அடையத் தகுதி பெறுகிறான்” என்று கண்ணன் கூறுகிறான்.[ஆதி சங்கரர் கீதா பாஷ்யம், 7.1]
பிரகல்லாத ஆழ்வானும், சங்கரரும் கூறும் பக்தியை இடையறாது வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க,
அச்சுதனின் அவதார இலீலைகளல்லவோ நமக்கு வழி தருகிறது?
“இராமன் தாமரைக் கண்ணனாவன் அன்றோ” [ “ராமோ ராஜீவ லோசன:” – வால்மிகி இராமாயணம்] என்னும்படி
இவனுடைய சுகுமாரமான, மென்மையான திருமேனியானது காட்டிலும் மேட்டிலும் சென்று வாடுகிறதே என்று வருந்தி
அவனுக்குப் பல்லாண்டு பாட வேண்டாமா? அவன் புகழ் பாடுவதையே வாழ்நாள் முழுதும் செய்ய வேண்டுமானால்,
அவனைப் பற்றி நாள் தோறும் நினைத்திருக்க வேண்டுமானால், அவன் செய்த இலீலைகளைப் பற்றி இனிக்க இனிக்கப்
பேசுவதென்றால், நிர்விசேஷ சித் ஸ்வரூபம் (குணமற்ற ஆன்ம வடிவு) மாத்திரம் இருந்தால் போதாதே?
அப்படிப் புலன்களுக்கு எட்டா நிலையில் மாத்திரம் இருப்பவனை
எப்படி “அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே” என்று பாடி வணங்க இயலும்? ஆகையால் தான்,
வெறும் யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் மாத்திரம் கிடைத்தால் போதாது என்று கருதித் தன்னை
இப்படி எளிமையாக ஆக்கிக் கொள்கிறான் மாயவன்.
இக்காரணம் பற்றியே, நிர்விசேஷ பிரம்ம வாதியாக – பழுத்த அத்வைதவாதியாக இருந்தபோதும்
ஸ்ரீ மதுசூதன சரஸ்வதியும், சர்வஞாத்ம முனிகளின் சங்க்ஷேப சாரீரகம் என்ற வேதாந்த நூலில் வரும்
ப்ரபோ4: ஸகல லோக ஹிதாவதார
ஸ்வேச்சா2வினிர்மித வபுர் வரம் அந்தரேண” [சங்க்ஷேப சாரீரகம், 2.179]
என்ற இடத்திற்கு, அந்நூற்குத் தாம் எழுதிய ‘ஸார ஸங்க்3ரஹம்‘ என்னும் விளக்கவுரையில் முதலில்,
“கம்சன் முதலான அசுரர்களையோ, இராவணாதிகளையோ வதைப்பதனால் சகல லோகங்களுக்கும்
நன்மையை அளிக்கும் அழகிய திருமேனிகளாகிய அவதாரப்பெருமையையே ’ஸ்வேச்ச2யா… வபுர் வரம்’ என்று விவரிப்பது.”
என்று விளக்கிய பிறகு, அவ்விடத்தை ஒட்டியே
“தன்னுடையவர்களாகிய பக்தர்களின் இச்சைக்கு இணங்க, என்றுமாம். அவியக்த பிரம்மமாகிய அக்ஷரமாக இருக்கும்
பரமாத்மாவை உபாசிப்பது அதி துர்லபம் ஆகையாலே தன்னுடைய பக்தர்களுடைய வேண்டுதலைப் பூர்த்தி
செய்யும் வண்ணம் பகவானால் எடுக்கப்படும் அவதாரம்.” என்று கூறுகிறார்.
ஸங்க்ஷேப நூலில் முனிகளுடைய வாக்கியத்தில் “ஸ்வேச்சயா” [தன்னிச்சையாக (அ) சுதந்திரமாக] என்று இருப்பினும்,
“தன்னுடையவர்களாகிய பக்தர்களின் இச்சைக்கு இணங்க” என்று மதுசூதனர் பாஷ்யமிட்டிருப்பது
அருமையான விஷயமாகும் (ஸ்ரீ ராமதீர்த்தரும் அன்வயார்த்தபிரகாசிகையில் இப்படியே உரையிட்டுள்ளார்).
தமது ’கூடார்த்த தீபிகை’என்னும் பகவத்கீத உரையில் ஆங்காங்கு மெய்சிலிர்க்க வைக்கும்
அர்த்தங்களைக் கொண்ட பல சுலோகங்களை பாடியுள்ளார்:
“த்4யாநாப்4யாஸ வசீ’க்ருதேன மநஸா தந் நிர்கு3ணம் நிஷ்க்ரியம்
ஜ்யோதி: கிம் ச, ந யோகி3நோ யதி3 பரம் பச்’யந்தி பச்’யந்து தே |
அஸ்மாகம் து தத்3 ஏவ லோசன-சமத்காராய பூ4யாச் சிரம்
காலிந்தீ3 புலிநோதரே கிம் அபி யந் நீலம் மஹோ தா4வதி ||“
[தம்முடைய யோக பலத்தினால் மனதை அடக்கிக் குணமற்ற ஆன்ம ரூபத்தைச் சில ஞானிகள் கண்டால்
கண்டு கொள்ளட்டும். நமக்கோ, யமுனைக்கரையில் துள்ளி விளையாடும் அந்த நீலநிற ஒளிவடிவம் ஒன்றே
நம் நமது கண்கவர எப்போதும் நிலைத்திருக்கட்டும் – கூடார்த்த தீபிகை, 13-ஆம் அத்தியாய அவதாரிகை]
“காருண்யதோ நரவதா3சரத: பரார்த்தா2ந்
பார்த்தா2ய போதி4தவதோ நிஜமீச்‘வரத்வம் |
ஸச்சித்ஸுகை2கவபுஷ: புருஷோத்தமஸ்ய
நாராயணஸ்ய மஹிமா ந ஹி மாநமேதி ||”
“கேசிந்நிக்3ருஹ்ய கரணாநி விஸ்ருஜ்ய போ4கம்
ஆஸ்தாய யோக3மமலாத்மதி4யோ யதந்தே |
நாராயணஸ்ய மஹிமாநம் அநந்த பாரம்
ஆஸ்வாதயந்ந் அம்ருதஸாரம் அஹம் து முக்த: ||”
[மனிதனைப் போலக் காட்சியளித்து, ஆழ்ந்த மெய்ப்பொருளியலையும் தன்னுடைய உண்மையான ஈசுவர சொரூபத்தையும்
பார்த்தனுக்கு உரைத்தும் காட்டியும் விளக்கிய கருணைவள்ளலாகிய புருடோத்தமனாம் நாராயணனுடைய மகிமை
பெருவியப்பை அளிக்கின்றதன்றோ! சிலர் தம் ஐம்பொறிகளை அடக்கி, போக பலன்களைக் கைவிட்டு,
யோகத்தைக் கடைபிடித்து அடையும் சித்த சுத்தியினாலேயே மோட்சம் அடைய முயற்சி செய்கின்றனர்.
யானோ, நாராயணனுடைய மகிமையாகிய எல்லையற்ற அமுதக்கடலைச் சிறிது
சுவைத்ததினாலேயே முக்தனானேன். – கூடார்த்த தீபிகை, 15.18]
இப்படி ஞானிகள் பாமரர்கள் என்ற பாகுபாடின்றித் திருமாலின் எளிமையைப் புகழ்ந்துள்ளமை
அவன் அவதாரப் பெருமையையும் அதனால் நாம் அடையும் பயனையும் நன்கு உணர்த்தும்.
அச்சுதனின் அவதாரப் பெருமை (ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்த சாரம்) வள்ளல் அருணகிரிநாதர் வாக்குப் படி
மருகன் எனாமல் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
வரவிடு மாயப் பேய்முலை பருகா மேல்
வருமத யானைக் கோடவை திருகிவிளாவிற் காய்கனி
மதுகையில் வீழச்சாடியச் சதமாபுள்
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப்போதொரு
சகடுதையா மற்போர்செய்து விளையாடி
பொதுவியர் சேரிக்கே வளர்
புயல் மருகா வஜ்ராயுத
புரம் அதில் மாபுத் தேளிர்கள் பெருமாளே
மருமகன் என்றும் பாராமல் கம்ஸன் அனுப்பிய பூதனையின் ஸ்தனத்திலிருந்து பாலொடு உயிரை எடுத்தும்
குவலயா பீட யானையை வதம் செய்தும் விளாமர ரூபமாயும் கன்று ரூபமாயும் னின்ற கபிஸ்தாசுரன் மற்றும்
தேனுகாசுரன் இவர்களை வதம் செய்தும் இரு பெரு மருத மரங்களுக்கிடையில் போய் அவற்றை முறித்தும்
சகடாசுரனை உதைத்தும் (வதைத்தும்) சாணூர முஷ்டிக மல்லர்களுடன் மற்போர் செய்தும்
இடைச்சேரியில் வளர்ந்த கண்ணனின் மருகோனே என்று புகழ்கிறார்.–இஃது யதார்த்தம்.
மச்சந்தாதேவ தே ப்ரம்மந் ப்ரவ்ர்த்தே அயம் ஸரஸ்வதி|
ராமஸ்ய சரிதம் க்ருத்ஸ்நம் குரு த்வம் ரிஷிஸத்தம ||–பால காண்டம் 2ம் சர்க்கம் -31ம் சுலோகம்
ஓ ப்ரம்ம ரிஷியே உன் நாவில் உதித்த வார்த்தைகள் என் சங்கல்பத்தால் ஸரஸ்வதி ஸ்ருஷ்டித்தது .
எனவே நீர் பூரணமாக ராம கதையை (நாரதர் சொன்னபடி) விஸ்தாரமாக இயற்றுவீராக .
ஹஸிதம் பாஷிதம் சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம் |
தத் ஸர்வம் தர்ம வீர்யேந யதாவத் ஸம்ப்ரபஶ்யதி ||–பால காண்டம் 3ம் சர்க்கம் -4ம் சுலோகம்-
வால்மீகி முனிவர் தனது யோகசக்தியால் ராமர்,லக்ஷ்மணர் , ஸீதை மற்றும் எல்லா பாத்திரங்களும் தம்முள்
பேசியது ,சிரித்தது முதலிய அனைத்து செய்கைகளும்,நிகழ்வுகளும் நடந்தது அனைத்தும்
நேரில் காண்பது போல கண்டு எழுதினார் .
யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரித ச மஹீதலே |
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி || —பால காண்டம் 2ம் சர்க்கம் 33 ம் சுலோகம்
இதுவரையில் மலைகளும் ,நதிகளும் இத்தரணியில் நிற்குமோ அதுவரையில் உனது ராமாயணம் நிலைத்து இருக்கும் .
———————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ருக்மிணி சமேத ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சீதாப் பிராட்டி சமேத ஸ்ரீ ராமச்சந்திர பர ப்ரஹ்ம திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply