ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே
நற் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற் பாலுக்கு உய்த்த நான்முகனார் பெற்ற நாட்டுளே
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன வின மாயமா அன்பின் எழில் சேர்
அலை மலி வேல் கணாளை யகல்விப்பதற்கோர் உருவாய் மானை யமையாக்
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றிய மருள்
சிலை மலி செஞ்சரங்கள் சேலை வுய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே–
————-
கல்வியில் பெரியர் கம்பர் -கவி சக்கரவர்த்தி -கம்பன் வீட்டுத் தறியும் கவி சொல்லும் –
விருத்தம் எனும் ஒண் பாவில் உயர் கம்பன் –
கதைபோக்குக்கு ஏற்ப வேறே வேறே விருத்தங்களுடன் அமைத்துள்ளார் –
வேதம் -பிரபு ஸம்மிதம்-சாசனம் இடும் சாஸ்திரம்
புராணங்கள் -ஸூஹ்ருத் ஸம்மிதம் -அனுஷ்டானங்களால் -வாழ்க்கை வழி முறை காட்டும்
காப்பியம் -காந்தா ஸம்மிதம் -கண்ணாலே பேசி உணர்த்துதல்
கதலி பாகம் -திராட்சா பாகம் -நாரிகேன பாகம் -நெல் நாலாயிரம் -புல் நாலாயிரம் -கல் நாலாயிரம் –
கம்ப நாடகம் -என்பர் —
திருவழுந்தூர் கம்பன் தழையக் கருணை செய்தோர் மற்றும் புலவோரையும் வாழ வைத்தார் சோழ மண்டலமே –
சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூர் உவச்சன் -உவச்சர் சாதி
கைம்மணிச் சீர் அன்றிச் சீர் அறியாக் கம்ப நாடன் –
தந்தையின் பெயர் ஆதித்யன்
ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்துத் தேவன் திரு வழுந்தூர் நன்னாட்டு மூவலூர்ச் சீரார்
குண ஆதித்யன் சேயமையைப் பாடினான் காரார் காகுத்தன் கதை –
கம்ப நாட்டை உடையவர் ஆதலால் கம்பர்
கம்பத்தின் அடியில் உள்ள பிள்ளையை உவச்சன் கண்டு எடுத்ததால் இந்தப் பெயர் –
உத்தர காண்டம் மட்டும் கம்பர் இயற்றாமல் -வாணிதாதன்-இயற்றினார் என்பர் -இவரே ஓட்டக் கூத்தர் என்பர்
பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின் பூவைப் பொரு கடல் போது அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை அல்லால் என்னைக் குற்றம் கண்டு என் நாவைப் பழிப்பினும்
நல்லோர் அன்றோ மற்றை நாவலர் -சடகோபர் அந்தாதி பாடல் -என்றபடி
ஆழ்வார் சம்பந்தம் இல்லாததால் பல குற்றங்கள் கண்டனர்
நம் சடகோபனைப் பாடினாயோ என்று நம் பெருமாள் விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரித்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித் துறை நூறும் -சடகோபர் அந்தாதி பாடல்
எண்ணி சகரத்து எண்ணூற்று ஏழில் மேல் சடையன் வாழ்வு
புண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராம காதை பங்குனி உத்தரத்தில்
கண்ணிய யரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே –சாலிவாகன சகாப்தம் 807- கி பி -885-
ஆயிரத்து நூற்று எண்ணி சகரத்து எண்ணூற்று -என்று கொண்டு சிலர் இரண்டாம் குலோத்தமன் காலம் –என்பர்
பதிமூன்றாம் நூற்றாண்டில் பிரசித்தம் என்பதை
பெரியவாச்சான் பிள்ளை- ஈடு -வியாக்யானங்களில் காட்டப்பட்டு இருப்பதால் உணரலாம் –
பாடத் தொடங்கும் முன்பே திரு மண் தரித்து ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார் –
மீளாக் குறி சேரத் சேர்த்திடு தன் திரு நாமத்தை தானும் சாத்தியே -என்று வால்மீகி திருமண் பற்றி சொல்லாமலே இவர் கூறி உள்ளார்
பத்து செய்யுள்களில் சடையப்ப வள்ளல் பற்றியுண்டு –
பால காண்டத்தில் மூன்றும் யுத்த காண்டத்தில் ஆறும் -விடை கொடுத்த படலத்தில் ஒன்றும் –
இவருக்கு அம்பிகாபதி மகன் -அவனும் சிறந்த வித்வான் -ராஜ சபையில் கௌரவிக்கப் பட்டவன்
இவர் செய்த நூல்கள் -இராமாயணம் -சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி -ஏர் எழுபது -சிலை எழுபது திருக்கை வழக்கம்
இவர் காலத்து வித்வான்கள் -புகழேந்தி ஓட்டக் கூத்தர் ஒளவை –
வெண்பாவில் புகழேந்தி பரணிக்கு ஓர் சயம்கொண்டான்
விருத்தம் என்னும் வெண்பாவில் உயர் கம்பன் கோவை யுலா யந்தாதிக்கு ஓ ட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற்குஇரட்டையர்கள் வசை பாடக் காள மேகம்
பண்பாகப் பகர் சந்தம் படிக்காசலால் ஒருவர் பகர் ஓணாதே
——-
காப்புச் செய்யுள்கள்
ஒன்றாய் இரண்டு சுடராய் ஒரு மூன்றுமாகிப்
பொன்றாத வேதம் ஒரு நான்கோடு ஐம்பூதமாகி
அன்றாகி யண்டத் தகத்தாகி யப்புறத்துமாகி
நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் என் நெஞ்சில் வைப்பாம்
மாதுளம் கனியைச் சோதி வயங்கிரு நிதியை வாசத்
தாதுகு நறு மென் செய்ய தாமரைத் துணை மென் போதை
மோது பாற் கடலின் முன்னாள் முளைத்து நற் கரத்தில் ஏந்தும்
போது தாயாகத் தோன்றும் பொன்னடி போற்றி செய்வோம் –
தருகை நீண்ட தயரதன் தன் அரும்
இரு கை வேழத்து இராகவன் தன் கதை
திரிகை வேலைத் தரை மிசைச் செப்பிடக் குருகை நாதன் குரை கழல் காப்பதே –சடகோபர் -ஸ்ரீ விஷ்வக் சேனர் அம்சம் ஸ்துதி
அஞ்சிலே ஓன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஓன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஓன்று பெற்ற அணங்கு கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் –திருவடி ஸ்துதி
புத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
மொய்த்த கொந்து அளகபார முகிழ் மலை தவள மேனி
மைத்தகு கரும் கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம் –செய்வோம் –ஸ்ரீ சரஸ்வதி ஸ்துதி
ஞான பொருள் சேர் வித்தகம் –ஞானம் புகட்டுதலை பொருளாகக் கொண்ட சிந் முத்திரை
விமலையை –உடல் குற்றம் அற்றவள் -தான் பரிசுத்தம் –
அமலை -மன மாசு அற்றவள் -தன்னை ஸ்துதிப்பாரை பரிசுத்தம் ஆக்குபவள்
அணங்கினை-தெய்வப் பெண்ணை -காளிகா தேவி அருளால் கம்பருக்கு சரஸ்வதி தேவி ப்ரத்யக்ஷம் என்பர்
———
கம்பரைப் பற்றிய தனியன்கள்
தரா தலத்தின் உள்ளே தமிழ்க் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே -இராவணன் மேல்
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி –ஆதித்யன் புதல்வனாகிய கம்பர் -ஆதித்யன் போலே அஞ்ஞானம் போக்குவார்
வாழ்வார் திரு வெண்ணெய் நல்லூர் சடையப்பன் வாழ்த்து பெறத்
தாழ்வார் உயரப் புலவோர் அகம் இருள் தான் அகலப்
போழ் வார் கதிரின் உதித்த தெய்வப் புலமைக் கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்தப்பவர்க்கு யாதுஉம் அரியது அன்றே –சரஸ்வதி கடாக்ஷம் -தெய்வப் புலமை
வாழ்வார்-வளங்கள் நிரம்பிய / போழ்-இருளைப் பிளக்கின்ற/ யாதுஉம்-இம்மையிலும் மறுமையிலும் இன்பங்களில் எதுவும்
அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
உம்பரால் முனிவரால் யோகரால் உயர்
இம்பரால் பிணிக்கு அரு இராம வேழம் சேர்
கம்பராம் புலவரைக் கருத்து இருத்துவாம் –ஸ்ரீ ராம வேழத்தை மனம் ஆகிய கட்டுத் தறியில் சேர்த்து கட்டிய கம்பர்
சம்பு அந் நாள் உமை செவி சாற்று பூம்
கொம்ப நாடன் கொழுநன் இராமப் பேர்
பம்ப நாடு அழைக்கும் கதை பாச் செய்த
கம்ப நாடன் கழல் தலையில் கொள்வாம்
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசாண்டு இருந்தாலும்
உம்பர் நாட்டில் கற்பகக் கா வோங்கு நீழலில் இருந்தாலும்
செம் பொன் மேரு யனைய புயத்திறல் சேர் இராமன் திருக் கதையில்
கம்ப நாடன் கவிதையில் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே
நாள் ஒன்றுக்கு -700-பாடல் வீதம் பதினைந்து நாளில் ஆறு காண்டங்களும் -15500-செய்யுள்கள் அருளிச் செய்தாராம் –
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற
ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வால்மீகி என்பான்
சீரணி சோழ நாட்டுத் திரு வழுந்தூரில் வாழ்வோன்
காரணக் கொடையான் கம்பன் தமிழினில் கவிதை செய்தானே –25
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதமும் ஈந்த
தம் பிரான் என்னத் தானும் தமிழிலே தாலை நாட்டிக்
கம்ப நாடுடைய வள்ளல் கவிச் சக்ரவர்த்தி பார் மேல்
நம்பு பா மாலையாலேன் நரருக்கு இன்று அமுதமும் ஈந்தான்
அம்பிலே சிலையை நாட்டி–அம்பு -நீர் -லக்ஷணையால்-திருப் பாற் கடலிலே மந்த்ர மலையை மத்தாக நிறுத்திக் கடைந்து-
சிலை -கல்லினாலான மலைக்கு ஆகு பெயர்
தம் பிரான்-தமது தலைவன் திரு மாலைப் போலே
தாலை நாட்டி–தனது நாவாகிய மந்த்ர மலையை நிறுத்திக் கடைந்து -தாலை -தாலுவை-
நம்பு -விரும்புகின்றன –
மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து –
துறைப் பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை அமுதம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த நிறைப்பான் -போலே இந்த தனியன்
————-
நூல் பயன்
நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்னும் இரண்டு எழுத்தினால் –
ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே
இராம என்று ஒரு மொழி இயம்பும் காலையே
வடகலை தென்கலை வடுகு கன்னடம்
இடமுள்ள பாஷை யாது ஓன்று ஆயினும்
திடமுள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே
மற்றொரு தவமும் வேண்டாம் அணி மதில் இலங்கை மூதூர்ச்
செற்றவன் விசயப் பாடல் தெளிந்ததில் ஓன்று தன்னைக்
கற்றவர் கேட்போர் நெஞ்சம் கருதுவோர் இவர்கள் பார் மேல்
உற்று அரசு ஆள்வர் பின்னும் உம்பர் வாழ் வீட்டில் சேர்வர்
சென்றி சேர் இலங்கை யானை வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தின் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும் உரைத்திடக் கேட்டோர்
நன்று இது என்றோர் தாமும் நரகம் எய்திடாரே
இராகவன் கதையில் ஒரு கவி தன்னில் ஏக பாதத்தினை உரைப்பார்
பராவு அரு மலரோன் உலகில் அவனும் பல்முறை வழுத்தவீற்று இருந்து
புராதன மறையும் அண்டர் பொற் பாதமும் பொன்றும் நாள் அதனினும்
பொன்றா அரவணை அமலன் உலகு எனும் பரமபதத்தின அணுகுவர் அன்றே —
இறு வரம்பில் ராம என்றோர் உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலான்
மறுவில் மாக் கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ
அன்ன தானம் அகில நல் தானங்கள்
கன்னி தானம் கபிலையின் தானமே
சொன்ன தானப் பயன் எனச் சொல்லுவர்
மன்னி ராம கதை மராவார்க்கு அரோ–
கபிலையின் தானம் — கோ தானத்தின் பயனும் -/ அரோ-அசைச் சொல் -/ கபிலையின் தானமே
சொன்ன தான-ஸ்வர்ண தானம் என்னவுமாம்
ஆதி அரி ஓ நம நாராயணர் திருக்கதை அறிந்து அநு தினம் பரவுவோர்
நீதி அநு போக நெறி நின்று நெடு நாள் அதன் இறந்து சகத் அண்டம் முழுதுக்கு
அதிபர்களாய் அரசு செய்து உளம் நினைத்தது கிடைத்து அருள் பொறுத்து முடிவில்
சோதி வடிவாய் அழிவில் முக்தி பெறுவார் என யுரைத்த சுருதித் தொகைகளே
இத் தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து, பரிவுடன் கேட்பரேல்,
புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
அத் தலத்தில் அவன் பதம் எய்துமே–எய்துவர் -எய்துமால் -பாட பேதம்
இனைய நற் காதை முற்றும் எழுதினோர் வியந்தோர் கற்றோர்
அனையது தன்னைச் சொல்வோர்க்கு யரும் பொருள் கொடுத்துக் கேட்போர்
கனை கடல் புரவி மீதே காவலருக்கு அரசாய் வாழ்ந்து
வினயம் அது அறுத்து மேலாம் விண்ணவன் பதத்தில் சேர்வர் –
காவலருக்கு அரசாய் வாழ்ந்து -அரசர்க்கு அரசராய் –சக்கரவர்த்தியாக இருந்து
வினயம் அது அறுத்து-பிரதிபந்தகங்களை அனைத்தையும் அறுத்து –
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியது ஆக்கும் வேரி யம் கமலை நோக்கும்
நீடிய வரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய இராமன் தோள் வலி கூறுவோர்க்கே –வீடியல் வழி-மோக்ஷம் அடைய வழியான பக்தி
அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரா -அருளிச் செயலுக்கு ஏற்ப -நீறு பட்டு அழிய-என்கிறார்
————-
மங்கள பாடல்கள்-
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1-
பிராணவார்த்தம் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -போலே
சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2
சிற்குணத்தர்–ஞானவான்கள்
தெரிவு அரு நல் நிலை எற்கு உணர்த்த அரிது–அறிந்து சொல்ல முடியாத பர ப்ரஹ்மத்தின் தன்மையை –
பிறர் அறியும்படி சொல்லுவது எனக்கு முடியாததாகும்
எண்ணிய மூன்றினுள்–சாஸ்திரங்கள் மதித்து கூறும் சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்களுள்
முற் குணத்தவரே முதலோர்–மும்மூர்த்திக்களுக்குள் சுத்த சத்வம் யுடைய திருமாலே முதல்வர்
அவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ–அவனது கல்யாண குண சாகரத்தில் நீராடுவதே நன்று
ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன – மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3-
அலகு இல்லன, உள்ளன வேதம் என்பன –யாவையும் -அளவு இல்லாததும் என்றும் அழியாததுமான
வேதம் என்று சொல்லப்பட்ட எல்லாவற்றையும் -தாம் ஓதுகையில்
ஆதி, அந்தம், அரி என, -ஓதத் தொடங்கும் போதும் ஓதி முடிக்கும் போதும் ஹரி ஓம் என்று சொல்லி
ஓதினார் -ஓதி அந்த வேதத்தின் பொருளை அறிந்தவரும்
பற்றிலர்-வைராக்யம் உள்ளவர்களுமான பெரியோர்கள்
மெய்ந் நெறி நன்மையன்-உண்மைப் பொருளாய் உபாயமாகப் பற்றினார்க்கு நன்மை தருபவனாகிய அக்கடவுளினது
பாதம் அல்லது பற்று இலார்-திருவடியையே அன்றி வேறு ஒன்றிலும் ஆசை கொண்டவராகார்
அவர் போலே பற்றுகளை ஒழித்து அப்பரமன் திருவடிகளைப் பற்றுவோம் –
——
அவை அடக்கப் பாடல்கள்
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4-
ஒரு பூசை, -ஒரு பூனையானது -பாற் கடலை நக்கி முழுவதும் நக்கிப் பருக புகுந்தால் போல் அன்றோ
காசு இல் கொற்றத்து இராமன் – குற்றம் அற்ற வெற்றியை யுடைய ஸ்ரீ ராம பிரானைப் பற்றிய கதையை
அறையலுற்றேன்-சொல்லப் புகுந்தேன்
நொய்தினால் நொய்ய சொல் நூல் கற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் தொளை
எய்த எய்வதற்கு எய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொல் நின்ற தேயத்தே –
வைத வைவின்-பெரியோர்கள் சபித்த சாப வார்த்தை போலே -வசவே வியாஜமாக
தப்பாமல்
மராமரம் ஏழ் தொளை எய்த-ஏழு மராமரங்களையும் தொளையாகும்படி
எய்வதற்கு -அம்பைத் தொடுத்து விட்ட ஸ்ரீ ராமன் பொருட்டு
எய்திய மாக்கதை-தெய்விகமாகத் தோன்றிய சிறந்த சரித்ரத்தை
செய்த -ஸ்ரீ வால்மீகி ராமாயணமாகச் செய்து முடித்த
செய் தவன் சொல் –செய்து முடித்த தவத்தை உடைய வால்மீகி முனிவன் வாக்கு
நின்ற தேயத்தே -வழங்கி நிலை பெற்றுள்ள தேசத்தில் தானே
நொய்தினால் நொய்ய சொல் -எளியவற்றிலும் எளியதான பொருள் பொலிவு இல்லாத சொற்களைக் கொண்டு
நூல் கற்றேன் எனை –நூல் செய்யத் தொடங்கினேன் -இது என்ன பேதைமை
மா நிஷாத ப்ரதிஷ்டான் த்வம் காம் ஸாஸ்வதீஸ் சமாயத் கிரௌஞ்ச மிதுனா தேகம் அவதி காம மோஹிதம்
சோகத்தில் வந்த வார்த்தையே மங்கள ஸ்லோகம் ஆனதே
வையம் என்னை திகழவும் மாசு எனக்கு
எய்தவும் இயம்புவது இது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலைமையினோன் புகழ்
தைவ மாக் கவி மாட்சி தெரிக்கவே
துறை யடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை யடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை யடுத்த அசுண நல் மாச் செவி
பறை படுத்தது போலும் என் பா அரோ –
முத்தமிழ் துறையின் முறை போகிய
உத்தமக் கவி கட்கு ஓன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
அறையும் ஆடரங்கும் படைப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையில் நூல் உணர்ந்தாரும் முனிவரோ —தச்சர் -சிற்ப நூல் வல்லரான சிற்பிகள்
எறி கடல் உலகம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக்க மொழிந்தனன் மொழிந்த என் சொல்
சிறுமையும் சிலை ராமன் கதை வழிச் செறி தற அன்னால்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே
———
நூல் வரலாறு
தேவ பாஷையில் இக் கவி செய்தவர்
மூவரானவர் தம்முள் முந்திய
நாவினான் உரையின் படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ
வால்மீகி வசிஷ்டர் போதாயனர் / வாலமீகி வியாசர் போதாயனர் என்றும் சொல்வர்
வியாசர் செய்தது அத்யாத்ம ராமாயணம்
மூவரானவர் தம்முள் முந்திய நாவினான் உரையின் படி-என்றது வாலமீகி ராமாயணம் படி-
ஆழ்வார்கள் அருளிச் செயல்களின் படி என்றும் சொல்வர்
நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த ராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக் கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்தது –
நடையில் நின்று-நல் ஒழுக்கத்தில் நிலை பெற்று இருந்து ஸ்தாபித்து
உயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த- பராத்பரனது அவதாரங்களில் நிகழ்ந்த
சடையன் வெண்ணெய் நல்லூர்–நூல் செய்த இடம்
—————
பால காண்டம்-பாலன் -16-வயசுக்குள் இளமைப் பருவம் -பாலனது காண்டம் -22-படலங்கள் கொண்டது
1. ஆற்றுப் படலம்
2. நாட்டுப் படலம்
3. நகரப் படலம்
4. அரசியற் படலம்
5. திரு அவதாரப் படலம்
6. கையடைப் படலம்
7. தாடகை வதைப் படலம்
8. வேள்விப் படலம்
9. அகலிகைப் படலம்
10. மிதிலைக் காட்சிப் படலம்
11. கைக்கிளைப் படலம்
12. வரலாற்றுப் படலம் 13. கார்முகப் படலம்
14. எழுச்சிப் படலம்
15. சந்திரசயிலப் படலம்
16. வரைக்காட்சிப் படலம்
17. பூக் கொய் படலம்
18. நீர் விளையாட்டுப் படலம்
19. உண்டாட்டுப் படலம்
20. எதிர்கொள் படலம்
21. உலாவியற் படலம்
22. கோலம் காண் படலம்
23. கடிமணப் படலம்
24. பரசுராமப் படலம்
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ சீதா ராமர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply