ஸ்ரீ அன்னம் திரு அவதாரங்கள் பற்றிய அருளிச் செயல்கள் –

ஸ்ரீ அன்னம் திரு அவதாரம் – பற்றிய அருளிச் செயல்கள் –

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே அச்சோ அச்சோ அருமறை தந்தானே அச்சோ அச்சோ ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -1 8-10 – –

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம் –19-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே — ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் –30-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—–ஸ்ரீ பெரிய திருமொழி -2-1-10-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே—5-1-9-

முன் இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8-

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள் நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-3-

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே—-8-6-5-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading