சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-
ஆயுதம் என்று இருக்கும் அளவன்றிக்கே பூஷணம் என்று இரா நின்றாள் –
அனுகூலருக்கு வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டே இருக்கும் படியையும்
பிரதிகூலர் பிடித்த பிடியிலே மண் உண்ணும் படியுமாயும் இருக்கும் –
இவள் சொல்லுகிறது தன்னையே தானும் சொல்லச் செய்தே இவள் சொல்லக் கேட்டால் போலே இருக்கிறது
இல்லை யாயிற்று திருத் தாயாருக்கு –
திவ்ய ஆயுதங்களை அனுசந்தித்த இது-அவ்வாயுதங்களின் வழியே -அவற்றைத் தரித்து இருக்கும்
திருத் தோள்கள் அளவும் கொண்டு போய் மூட்டிற்று
திவ்ய ஆத்மா குணங்களிலும் திவ்ய ஆத்மா ஸ்வரூபத்தில் காட்டிலும் அனுபாவ்யமாய் இருப்பது திவ்ய விக்ரஹம் இறே
பகவத் பிரசாதம் அடியாக ஜ்ஞானம் பிறந்த ஆழ்வார்கள் திவ்ய விக்ரஹம் அல்லது அறியார்கள் இறே
இவ்விஷயத்தில் பிராவண்யம் தான் திருத் தாயாருக்கு அபிமதமாய் இருக்கச் செய்தே
அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது என்று நிஷேதிக்கிறாள் இத்தனை இறே –
நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று அவ் ஊரில் சம்பந்தம் தோற்றி இரா நின்றது
இவள் வார்த்தை இருக்கிறபடி –
முதலிலே சர்வ பர ந்யாசம் பண்ணினவர்களுக்கு இங்கேயே எல்லாம் புஷ்க்கலாமாய் இருக்கும் இறே
இவள் பேச்சைக் கொண்டு இவள் ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே புக்கு
ஸ்ரீ சௌரிப் பெருமாளை சாஷாத் கரித்தாள் ஆகாதே என்று சொல்லலாய் இரா நின்றது –
அகவாயில் ஓட்டம் எல்லாம் வார்த்தையிலே தெரியும் இறே-என்கிறார் முதல் பாசுரத்தில்
கையும் திவ்ய ஆயுதங்களுமாய் பண்ணின உபகாரம் இன்னளவு என்று பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –
நிருபாதிக பந்து என்று தோற்றி யன்றோ செயல் இருக்கிறது –
தன்னை உபகரிக்கைக்கு தான் முற்பாடனாய் அவசர ப்ரதீஷனாய் -வந்து நிற்கிறபடி –
அஞ்சன கிரி போலே யாயிற்று கண்ணுக்கு விஷயமான போது இருக்கிறபடி –
அவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கையே அன்றிக்கே-இவளும் ஆபி முக்கியம் பண்ணப் பெற்றது
வடிவு அழகிலும் ஔதார்யம் தோற்ற நின்ற நிலையிலும் போலே காணும் இவள் கண் விழித்தது –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
சேஷித்வ சூசகமாய் இருக்கும் இறே திரு அபிஷேகமும் திருத் துழாயும் –
அர்ஜுனனுக்கு பர பஷத்தின் உடைய கழுத்து தோற்றினால் போலே
வைத்த வளையமே யாயிற்று இவளுக்கு தோற்றுகிறது –
ஸ்ரீ பிராட்டி எழுந்து அருளி இருந்த திரு மார்பிலே விளங்கா நின்றது –-ஆபரணம் மிகையான மார்பு –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும்படி ஆபரணத்துக்கு ஆபரணமான திரு மார்பிலே
ஆபரணங்களும் ஸ்ரீ கௌஸ்துபமும் விளங்கா நின்றது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
ஸ்ரீ பெரிய திருவடி முதுகில் இருந்து இருப்பைக் காட்டி என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் –
ஹிதம் சொல்லி விலக்குகிற நீங்களும் பாருங்கோள்-
அழகிய பவளம் போலே இருந்துள்ள திரு வதரத்தைக் கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ –
உக்தி மாத்ரத்திலே மீளாதே அவ்விஷயத்தைக் கண்டு அனுபவித்தாள் என்று தோற்றி இரா நின்றது –
சேமித்து வைத்த வஸ்துவை இவள் ஒருத்தியுமே அறிந்து கொண்டாள் போலே இருந்தது –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்
நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது –
சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் –
எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது
போக்யதை இல்லாமையோ –பிராப்தன் அல்லாமையோ –சேர்ப்பார் இல்லாமையோ –நான் எத்தைச் சொல்லி அகலுவது –
நிரதிசய போக்யனான இவனை இவள் அனுபவித்து சொல்லுகிறாள் போலே இருந்தது
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –
உபமானம் கதிர் பெருக்க வேண்டி இருக்கிறபடி –
கடலைக் கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலேயும்-அஞ்சன கிரி போலேயும்
இருக்கிற வடிவை உடையவன் என்னா நின்றாள் –
ஸ்ரமஹரதையும் அபரிச்சேத்யையும் இரண்டையும் சொல்லுகிறது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
அவ் ஊரில் ஒருவரும் தஷிணை கொடுத்து ஹோமம் பண்ணுவிப்பார் இல்லை யாயிற்று –
தன கையால் வளர்க்கப் பட்ட அக்னியை உடையனாகை அன்றோ
அவன் பரியட்டமே பிடித்து அடைய இவளுக்கு சிவந்து தோற்றுகிறது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
அவ் ஊரில் விழுவேடு எடுத்துக் கொண்டு அறிதல் – புஸ்தகம் பார்த்து அறிதல் -செய்வார் இல்லை –
ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண க்ரமத்தாலே கற்ற சாஸ்திரங்களையும்
வேதங்களையும் உடையராய் யாயிற்று எல்லாரும் இருப்பது –
அவ் ஊரில் அவனையே கண்டாள் ஆக வேண்டாவோ –
வேதமயன் மேலே வருகிறபடியையும்-யமிந்திரமாஹூ -இத்யாதிப் படியையும் சொல்லும் போது –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே –எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஸ்ரீ ஜீயர் –
கண்டவர்கள் நெஞ்சை மேல் எழுத்துக் கொடா நிற்பர்கள் ஆயிற்று-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே
தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
————–
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-
உம்முடைய சர்வஞ்ஞதைக்குப் போருமோ இவள் கையில் வளையை அபஹரிக்கை –
அது கிடக்கட்டும் –அக்லிஷ்ட ஜ்ஞானரான நித்ய சூரிகளுக்கு நிர்வாஹகராய் இருக்கக் கடவ நீர்
ஒரு அபலை கையில் வளையை அபஹரிக்கை உம்முடைய மேன்மைக்கு போருமோ –
உம்முடைய பிரணயிதவத்துக்கு நமஸ்காரம் –
ஒரு பெண் பெண்டாட்டியை மார்விலே வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறே நீர்
ஒரு அபலை கையில் வளையை அபஹரிகைக்கு தகுதியோ
பிறர்க்கு உடைமையாம் உம்முடைய இவ்வடிவை அபேஷித்தாருக்கு கொடுக்க அன்றோ தகுவது –
இத்தனை போக்கி-பிறர் உடைமையை அபஹரிக்குமோ -(என்று திருத்தாயார் சொல்ல )
அந்நிதியை உடையவன் கொடுக்க கொள்ளுமது ஒழிய
மேல் விழுந்து கொள்ளுதல் ஆத்மா அபஹாரிகள் கிருத்தியம் அன்றோ
ஆனபின்பு இக் கைவளையை கொள்ளத் தகும் காண்-என்று ஸ்ரீ சௌரிப் பெருமாள் இதுக்கும் உறைக்க நின்றார்-
ஓர் அஞ்சலி பண்ணினாள் என்ன
இது குறையாக வேணுமோ –பக்தா நாம் -ந தே ரூபம் – என்று அன்றோ உன் ஸ்வரூபம்
உன் உடைமை யானது தோற்ற அஞ்சலி பண்ணினாளே
இவள் உடைமையை கட்டிக் கொண்டு கிடக்கிற நீ அன்றோ ஆத்மா அபஹாரி
பரம பிரணியியாய் இருக்கிற உனக்கு கொடு போக்கை தகுமோ
சங்கு தங்கு முன்கை நங்கை -என்கிற அவனைப் போலே இருக்கை அன்றோ தகுவது-என்கிறார் முதல் பாசுரத்தில்
தன் மகளுக்கு இந்த அதி பிராவண்யம் உண்டாகைக்கு அடி சம்சர்க்க தோஷம் இறே என்று நினைத்து
நிர்மானுஷ்யமான நீணிலா முற்றத்திலே வைத்தாள் –
இவளுக்கு அபிமதம் ஸ்ரீ சௌரிப் பெருமாள் பக்கலிலே ஆகையாலும் –
இவள் தான் லஷ்யத்தை உடையாள் ஆகையாலும்
திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –
நிஷேதிக்கிற தாயையும் கூட திருக் கண்ண புரத்தைப் பாராய் -என்றால்
நல்லது கண்டால் தனியே அனுபவிக்கும் பிரகிருதி அன்றே –
பிராப்ய பிர்ராபகங்கள் இரண்டும் ஸ்ரீ ஈஸ்வரன் திருவடிகளே -என்று காட்டிக் கொடுக்கும் ஸ்ரீ ஆசார்யன் –
அவ்விரண்டு அர்த்தைத்தையும் என் நெஞ்சில் பிரதிஷ்டிப்பித்த
உன் திருவடிகள் அன்றோ என் புருஷார்த்தம் -என்று இறே சச் சிஷ்யன் இருப்பது –
ஸ்ரீ பாணனார் ஆகிறார் –-சேதனருக்கு ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் மறத்தைப் போக்கி
சேஷத்வ ஞானத்தை உணர்த்தி சேர விடும் ஸ்ரீ ஆச்சார்யன் இறே
இவள் காரியமும் கிடக்கிடும் -ஸ்ரீ சௌரி பெருமாள் காரியமும் கிடக்கிடும்
அடியிலே இவள் கையிலே மடலைக் கொடுத்து கொல்லை யாக்கி
புறப்பட விட்ட-ஸ்ரீ நறையூரார் கார்யமே நன்றாய் தலைக் காட்டிற்று -என்கிறாள் –இரண்டாம் பாசுரத்தில்
அபஹ்ருதய ஹ்ருதையை யாகையாலே அஹ்ருதய உக்திகளை பண்ணா நின்றாள் –
ஆற்றுப் பெருக்குப் போலே மேன்மேல் என வரை யிட்டுக் காட்டும்
ஐஸ்வர்யத்தை உடைத்தான -வரையிட்டு -அந்த அந்த மலைகளை இட்டு -திருமலை -நீர்மலை -திரு மெய்ய மலை –
அங்கு உள்ள கல்யாண குணங்கள் நிறைந்த –ஸ்ரீ திருக் கண்ண புரத்தை வாய் விட்டுப் பேசா நின்றாள் –
பேசுவதோர் அவஸ்தையும்-உருகுவதோர் அவஸ்தையும் இன்றிக்கே பேசின வாயோடு நீர்ப் பண்டம் ஆகா நின்றாள் —
இவ்வாற்றாமைகளுக்கு அடி பாபம் இறே –
மதுரா நாம நகரீ புண்யாபாபா ஹரீ சுபா -என்று அநவத்யம் நின்ற தேசத்தை பேசவே பாபங்களும் போம் –
போகங்களும் உண்டாம் -என்றது இறே சாஸ்த்ரம்-அது இவள் அளவும் காணாது ஒழிகிறது என் பாபம் இறே
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
இப்பருவமாய் இருக்கிற இவளுக்கு தாரக போஷகங்கள் வேண்டாவோ-இவை இருந்தபடி என் என்ன –
ஸ்ரீ கண்ணபுரம் தொழும் –இது இவளுடைய தாரகம் –
அவன் ஊரைத் தொழுகையாலே ஊண் போயிற்று –அவன் வடிவை மநோ ரதிக்கையாலே உறக்கம் போயிற்று இவளுக்கு –
பருவம் இதுவாவதாம்-தாரக போஷங்கள் இவை யாவதாம் இது என்ன ஆச்சர்யம் இருந்த படி
என்கிறார் நாலாம் பாசுரத்தில்
அவனைத் தொழும் அளவன்றியே அவனூரைத் தொழும் இவளுக்கு என்ன பெண்மை-
தொழும் –அவனுக்கு அவ் ஊர் நிரூபகம் ஆனாப் போலே யாயிற்று இவளுக்கு தொழுகையே நிரூபகமாய் இருக்கிறபடி
அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியனாகப் பெற்றோமே -என்ற வ்யபதானங்களைக் கேட்ட மாத்ரத்திலே
அவ் உடம்போடு அணைந்தால் பிறக்கும் ஆச்வாசங்கள் அடைய பிறந்து சந்துஷ்டை யானாள் –
அவாப்த சமஸ்த காமனானவன்-ஒருத்தி உடைமையை ஆசைப் படுவதாம்-சர்வ சக்தனானவன் களவிலே இழிவதாம்
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியன் ஆவதாம்-இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறாள் –ஐந்தாம் பாசுரத்தில்
அர்ச்சாவதாரத்தை பற்றுமவள் இறே-அர்ச்சாவதாரத்துக்கு கொண்டக்கோல் நாட்டின தேசம் இறே திருமலை –
பொன்னிறம் ஆவது எது-ஸ்வா பாவிகமான தன்னிறம் ஆவது எது-என்ன
ய ஆத்ம நிதிஷ்டந ஆத்ம நோந்தர – யஸ் ஆத்மா சரீரம் -என்று ஸ்ருதிகள் சொல்லுகிறபடியே
சரீர சேஷத்வமும் சேஷ சேஷி ஜ்ஞானமும் அந்த ஜ்ஞானத்தால் பிறக்கும் ஆனந்தமும்
ஆக -சேஷத்வ ஞானா நந்தங்கள் -தன்னிறம் ஆகிறது
பொன்னிறம் ஆகிறது-தேவோஹம் மனுஷ்யோஹம் என்று ப்ரவிஷ்ட சரீரங்க ளிலே ஆத்ம புத்தியைப் பண்ணி
துக்க அஞ்ஞான அமல அதர்ம என்கிற தர்மங்களை ஏறிட்டுக் கொள்ளுகை
ஆரூட யோகராய் இருப்பார்க்கு கிட்டாத ஸ்வ பாவங்கள் அடைய ஆரு ருஷூவாய் இருக்கிற இவளுக்குப் பிறப்பதே
இது ஓர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறாள் –ஆறாம் பாசுரத்தில்-
திரு வரங்கம் திரு வரங்கம் -எனபது இவளுக்கு ஆசை –ஆனால் அது சொல்லத் தட்டு என் -என்ன
இவள் சத்பிரக்ருதி யாகையாலே வாய் விடில் சிதிலை யாகக் கூடும் என்று வாய்க்காவல் இட்டு வைப்பார்கள் பந்துக்கள் –
திருக் கண்ண புரம் ஆகிறது சமுத்திர மத்யத்திலே புதியதாக குடி ஏறின த்வாராவதி போலே ஆயிற்று
வேலை மோதும் மதிள்-வெள்ளி ஏய்ந்த மதிள் -என்றது தனக்கு ஸ்மாரகமாய்
நலிந்த சந்த்ரனுக்கும் கடலுக்கும் தோள் தீண்டியாய் இறே இருப்பது
மயர்வற்ற யதா ஜ்ஞானம் பிறந்தால் ஆரூட யோகராய் இருப்பார்க்கும்
அபஏவச சர்ஜா தௌ -என்கிற அப்ஸ்ருஷ்டி வாசகமான மூல பிரக்ருதியும்
அதின் கார்யமான சப்தாதிகளும் போனால் அல்லது அனுபவம் பூர்ணம் ஆகாது இறே
இங்கே கடலின் உடைய ஸ்தானத்திலே பிரக்ருதி-அதில் பிறந்த சந்தரன் ஸ்த்தானே சப்தாதிகள் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
இவர்களுக்கு பந்தத்திலும் ஆஸ்ரயணத்திலும் பேதம் இல்லை இறே –
பலத்திலே இறே பேதம் -ஆகையால் -எல்லாம் -என்கிறாள் –
இவளும் இவ் ஊரை ஆசைப் பட்டவள் ஆகையாலே இவ் ஊரைத் தொழுகிறாள்
ஸ்ரீ கிருஷ்ணனை ஆசைப் பட்ட பெண்கள் ஸ்ரீ கிருஷ்ணன் மகனான காமன் காலிலே விழுந்தார்கள் இறே
ஸ்ரீ உடையவர் பெருமாளுக்கு நெடுநாள் திரு மஞ்சனம் எடுத்து-அவரை ஆஸ்ரயமாகப் பற்றி
பின்பு இறே ஸ்ரீ கோயிலிலே வந்தது –
ராஜ நீதி இல்லாதார் செய்யவற்றை நீர் செய்யக் கடவரோ –-இழந்தவற்றை மீட்டுக் கொடுக்கை அன்றோ ராஜ க்ருத்யம்
ராஜாக்களே வழி பறிக்கை-ராஜ நீதியோ – அமர்ந்த நிலத்திலே கொடு போய் அனுபவிக்கை அன்றோ தகுதி–என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
இவள் அடியிலே தொழுத போதே அமர்ந்த நிலத்திலே கொடு போனால் -இத் திரு மொழி முடிய அருளிச் செய்விக்க வேண்டுமே-
இங்கு நாமும் நம்முடையாரும் வாயிலே மண்ணைப் பொகட்டு கொள்ளவோ என்று இறே அவன் இருக்கிறது –
பால்யாத்ப்ருப்ருதி ஸூஸ் நிக்த்த -என்று பிறந்த அன்றே கால்கடையிலே தொட்டிலிட்டு வளரும்படி
ஸூஸ் நிக்தராய் இறே ஸ்ரீ இளைய பெருமாள் இருப்பது –
இப்படி இருந்த அவரும் -ப்ராஞ்சலீம் ப்ரஹ்வமாசீ நம் -என்று அவனைத் தொழுதார் இத்தனை இறே
அவனூரைத் தொழுமவள் இறே இவள் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
ஸ்ரீ பெரிய திருவடி -பர்வத சிகரத்திலே ஒரு பெண் பெண்டாட்டி பகவத் குணங்களைப் பேசக் கேட்டு
ஒரு புண்ய ஷேத்ரத்திலே இருக்கப் பெற்றது இல்லையே -என்று வெறுக்க அநந்தரம் விடிந்த அளவிலேபர்வத இவன் போக நினைக்க
இவன் சிறகுகள் உதிர்ந்து எழுந்து இருக்க மாட்டாதே இருந்தான் -என்று ஸ்ரீ மகா பாரதத்திலே ஆரண்ய பர்வதத்திலே எழுதிற்று –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து- பகவத் விஷயத்தில் ஒரு கீற்றுப் புகுர நின்றான் யாவன் ஒருவன்
அவன் பூர்வ வ்ருத்தத்தை பார்த்துக் குறைய நினைக்கக் கடவன் அல்லன் –
அவன் இருந்தபடியே உத்தேச்யம் பண்ணிக் கொண்டாட அடுக்கும் -என்கிற அர்த்தத்தை வெளியிடுகிறது –
இயலாகவுமாம் –இசை யாகவுமாம் -ஏதேனும் ஒரு பிரகாரத்திலே வல்லவர்கள் –
கடல் சூழ்ந்த பூமியிலே சிரகாலம் வாழப் பெறுவார்கள் –
இது கற்றார்க்கு பலம் சம்சாரத்தில் இருக்கையோ -என்ன ஸ்ரீ பரம பதத்தில் தெள்ளியீர் இல்லையே
தெள்ளியீர் உள்ளது இங்கேயே அன்றோ
பாவோ நான்யத்ர கச்சதி -என்று ஸ்ரீ திருவடி ஸ்ரீ ராம குணங்களைக் கேட்டு-அத்தாலே பூர்ணனாய் –
அத்தேசத்தே இருந்தால் போலே தெள்ளியீரை இங்கே பாடக் கேட்டு பூர்ணராய் இருக்கப் பெறுவர்கள் –
————————
கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரையெடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-
மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய் பெரிய மிடுக்கையும் உடைத்தாய்
மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக
மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன் –
என்கிறார் முதல் பாசுரத்தில்
குவலயா பீடமானது வெருவும்படியாக அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட
அச் செயலுக்கு வளை இழந்தேன் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
சந்த்ரனுக்கு வந்த ஷயத்தை போக்கி-அது தன்னை தன் பேறாக நினைத்து இருக்கிற
புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர்விவரமாய் இருக்கிற மருதுகள் முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு
என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்
ஈடுபட்டு ஓடி அமுது செய்த-தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து
அத்தை இல்லை செய்கைக்காக –முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
அன்று ஹிரண்யன் மிடுக்கு அழியும்படி யாக ஸ்ரீ பிராட்டிமாரும் கண்டு கொண்டு இருக்கும் படியாக
ஸ்ரீ உகிராலே-அவன் உடைய சரீரத்தை பேதித்து தன்னுடைய ஸ்ரீ ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு
என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ-என்று இருந்தாயிற்று வளை இழந்தது
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
தர்ச நீயமான வடிவை உடையனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற –
சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை விஸ்வசித்து முடிந்தேன் –
என்கிறாள் எட்டாம் பாசுரத்தில்
தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ –
நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள் ஒன்பதாம் பாசுரத்தில்
நாவிலே பொருந்தும் படி பாட சஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் –
உக்தி மாத்ரத்தைச் சொல்ல புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
————————-
விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-1-
சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை –
இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்ணாலே காண்கையாலே
அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று –
கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை
சர்வரச -என்கிற வஸ்துவைப் போய் அனுபவி என்று அன்றோ சொல்கிறது –
ஸ்வாபதேசம்-சப்தாதி விஷய நிச்சாரதையும் –-பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும் சிஷ்யருக்கு அறிவிக்கிறார்
என்கிறார் முதல் பாசுரத்தில்
திருவடிகளை அக்ரமமாக ஏத்தி அதிலே விழுந்து எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி ஸ்நேஹத்தைப் பண்ணுகிற
நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும் அவ்விறுமாப்பைப் பொகட்டு
திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் –
சஜாதீயர் உடைய யாத்ரை அமையாதோ உனக்கு –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான வடிவை உடையனுமாய்க் கொண்டு
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்
பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு அவன் தான் விரோதி நிரசன சீலன்-
என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன்
உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன்
ஆனபின்பு அவன் பக்கலிலே சென்று இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள் –ஆறாம் பாசுரத்தில்
ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் –
அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் –
மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் – ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-தர்ச நீயமான திருத் துழாய் மாலையிலே வந்தூதாய் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
காயம் பூ போலே இருக்கிற திரு நிறத்தை உடையவன் –காயாவோடு ஒப்புச் சொல்ல லாவது நிறம் மாத்ரமே –
சர்வ கந்த -என்கிற ஏற்றமே உண்டு –கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு
அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும் –
———————-
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1-
பிறரால் வந்த விலங்கு பரிஹரிக்குமவன் தன்னால் வந்த விலங்கு பரிஹரியாது ஒழிவதே –
ஸ்ரீ வசுதேவர் காலிலே விலங்கு கழலும்படி வந்து அவதரித்த முக்த்தன் உடைய ஸவபாவத்தை அனுசந்தித்து
ஆபத்துக்களிலே வந்து உதவும் ஸ்வ பாவனான பின்பு
அந்த பித்ராதிகள் அளவில்லாத ஆசையை உடைய நமக்கு வந்து உதவுவானோ என்று பிரிந்து தனி இருக்கிற
என் நெஞ்சானது அவன் பின்னே போயிற்று – என்கிறார் முதல் பாசுரத்தில்
புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று – நாயகனோ வந்து அணைகிறிலன்-
இனி எத்தைச் செய்வது –
ஆசார்ய ஹிருதயம் ஸ்வாபதேசம் -ஊரார் நாட்டார் உலகர் கேவல ஐஸ்வர்யகாம ஸ்வ தந்த்ரர்
பொன்னாச்சி நாச்சியார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருள –
பிரிவாற்றாமை பாசுரங்கள் அனுசந்தித்து இந்த இரண்டாம் பாசுரம்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே -என்னவே
பொன்னாச்சியின் பிராணனும் தன்னடையே விட்டு நீங்கிப் போயிற்று – ஐதிஹ்யம்-
இவ்வளவிலே வாராதே இரான் என்கிற நெஞ்சையும் அழித்து கொடு வந்து தோற்றா நின்றதாயிற்று
இடையன் ஊதுகிற குழல் –பிராமணர் ஊதுகிற குழலுக்கு அகப்படாள் காணும் இவள் –
மாஸூச -என்பார் ஒருவரையும் காண்கிறதில்லை –-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன்
பாதக பதார்த்தம் தானே இனிக் கிருபை பண்ணி மீளில் நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம் –-
என்கிறார் நாலாம் பாசுரத்தில்
நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட அதினுடைய பல ரூபமான பகலும் போய் நின்றதாயிற்று –
அருள் போகவே பகலும் போம் இறே –-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த
மிடுக்கன் வருகிறிலன்-இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
நான் முடியவே அவனைக் கிடையாது –
அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்
ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு
பாபம் உண்டாக அறிகிறிலேன் –
இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி மகா பாபத்தை பண்ணின என்னுடைய
தரமி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இத் திரு மொழியை அப்யசிக்க வல்லார் –பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து நித்ய விபூதியில் நித்ய சூரிகளோடே கூடி
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்கிறபடியே ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு பின்னை
ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
———————-
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே
பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று –
அவனும் நாமும் இவர்களும் சேர வர்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த ஸ்ரீ திருக் கண்ண புரத்தை தொழுவோம் –
என்கிறார் முதல் பாசுரத்தில்
வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை கையிலே பிடித்தவனுடைய ஊரான ஸ்ரீ திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
ஆஸ்வாஸ்ய-இவன் இளைத்தால் தன் பரிகரத்தில் உள்ளாரை ஆஸ்வசிப்பிக்குமா போலே நீ போய் ஆஸ்வசித்து வா -என்றான் இறே –
ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று தன்னதான வில்லை வாங்குவதற்கு முன்பே
பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
வாசஸ் ஸ்தானமான ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்
இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் உடைய தலைகளை அறுப்பது தோள்களை துணிப்பதாக கொண்டு
போது போக்காக கொன்ற படி –
நாட்டைத் தன் வடிவாலே பகட்டித் திரிகிற காமனுக்கும் உத்பாதகனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
ஸ்ரீ பிராட்டி தன் பிரதி பந்தத்தை போக்குகைக்காக தான் யத்தனித்தது உண்டோ –
பிரதிபந்தம் பிரபலமான தனையும் அவனுக்கு கார்யம் செய்தோமாம் படி என்றோ அவன் படி
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் – முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய
குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
ராவணன் பண்ணின பிராதி கூல்யம் தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும்
அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –அதுக்கு முன்பு
தமையனுடைய வைரத்துக்கு ஹேதுவாய்க் கொண்டு வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
கீழ்ப் பாட்டில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு திவ்யம் வர்ஷ சஹச்ரம்-என்று பதினாயிரம் சம்வத்சரம் கிலேசப் பட்டு
ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு வந்து உதவினான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு -த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச்ச-என்று பிராப்ய ஆபாசங்களையும் விட்டு
சரணம் புகுருகையாலே அரசு அளித்தான் –
எனக்கு அங்கனே இருப்பதொரு நிலையும் அன்றிக்கே சஞ்சலம் ஹி மன -என்கிறபடியே
நின்றவா நில்லாத ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கை உண்டாகையாலே
எங்கனே வந்து இருப்பது என்ன
ஸ்ரீ பாஞ்சாலிக்கு விரோதிகள் என்ற பேர் பெற்றவற்றை எல்லாம் போக்கி அருளினவன் -என்கிறார் –
நெஞ்சை தேற்றுகிறார் -ஏழு எட்டு -இரண்டு பாட்டாலும்
முன்பு பண்ணின பாபங்களை அனுசந்தித்து-என் படக் கடவோம் -என்று பிச்சேறின நெஞ்சே
அனுபவித்து தலைக் கட்ட ஒண்ணாத துக்கங்களிலே நீ கிலேசியாது இரு –என்கிறார் –
மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி கொடி போலே அழகிய இடையை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்த –
ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே -என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இத் திரு மொழியை வல்லார் –பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே
அலங்காரங்கள் எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –இவ்வளவிலே போகாதே
ஸ்ரீ பரமபதத்திலே போய் புக்கு பதியினில் பாங்கினில் -என்கிறபடி
ஸ்ரீ நித்ய சூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
————————-
வியமுடை விடையின முடைதர மட மகள்
குயமிடை தடவரை யகலம துடையவர்
நயமுடை நடையன மிளையவர் நடை பயில
கயமிடை கண புர மடிகள் தமிடமே —8-7-1-
பொய்கைகளாலே நெருங்கி இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் நமக்கு ஸ்ரீ ஸ்வாமி யானவனுடைய
வாசஸ் ஸ்தானம் -என்கிறார் முதல் பாசுரத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய நெஞ்சு கலந்த திரள் மிக்கு இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
அவனும் ரஷிக்க-தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே அவனே ரஷகனாம்படி இருக்கை-
மலையை குடையாக எடுத்து பரிஹரித்து ரஷணத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாத படி இருக்கிறவர்
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
பூவை இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி வர்த்திக்கிற தேசம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்
பூசல் செய்து –-த்விதாபஜ்யேயம் -என்று பொருந்தாமையிலே நின்றவர்கள் முடிய –
ப்ரஹ்மாதிகளும் கூட கணிசிக்க வரிதான ஊரை-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே இளைதாய் கொழுவியதாய் அழகியதான பூவிலே
முழுகின வண்டின் உடைய பண் கிளர்ந்த ஸ்ரீ திருக் கண்ண புரம் அடிகள் தம் இடமே -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்று இருக்கிற முறையிலே சொல்லுகிற அடியார்
தங்களுக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கண்ண புரம் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்-சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே
அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி அணையா நின்றுள்ள பெரிய வரை போன்று இருந்த மார்வை உடையவர்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
மலரை தனக்கு இருப்பிடமாக வுடையாளாக இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் –
தன்னோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் ஸ்ரீ பூமிப் பிராட்டி என்று இப்படி சொல்லப் படுகிற நிருபாதிக
ஸ்த்ரீத்வத்தை உடையராய் இருக்கிற இவர்களோடும் –
வலத் திருக் கையிலே மன்னா நின்றுள்ள ஸ்ரீ திரு ஆழியை உடையனுமாய்
நீல மணி போலே போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை உடையவர் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண் குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் –
இத்தை அப்யசிக்குமவர்கள் –அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபங்கள் கிட்டாது –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
————————–
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-
சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –
சேஷ பூதனான நான் காணப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்
தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும் நீருக்கு இறாயாதாய வடிவை உடைய ஆமையாய்-
மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு
கிடந்த விஸ்மய நீயனை ஸ்ரீ கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
அண்டபித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான
வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்-உளை மயிருமாய் மனுஷ்ய வேஷமும்
சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –சத்ருவான ஹிரண்யனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த
திரு வுகிரை உடையவனை –என்கிறார் நாலாம் பாசுரத்தில்
சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு நிலை நின்ற வடிவு-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக
வந்து தோன்றின –ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
வெவ்விய சீற்றத்தை உடைய கடியிலங்கை குடி கொண்டோட யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின
நம்முடைய ஸ்ரீ ஸ்வாமியை –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
வெற்றியே தொழிலாக உடைய வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல
யுத்தத்திலே செற்ற வெற்றியை தொழிலாக உடையவனை –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
அபர பஷத்திலே அஷ்டமியிலே நள் இருளிலே பிறந்தவனை –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
———————-
கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே—8-9-1-
வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை – எனக்கு உபகாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை –
என் நெஞ்சிலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்
என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வாதிகனை –
ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பெரியவனை –அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
சேஷ பூதனான நான் – வேறு சிலர்க்கு உரியேன் அல்லேன் –இத்தால்-தம் ஸ்வரூபம் சொல்லுகிறார் –
பிறர்க்கு உரியேன் அல்லேன் என்னும் இடம் சொல்லுகிறார் –
அசாதாராண விபூதி உக்தன் ஆனவனுக்கு என்னும் இடம் சொல்லுகிறார் –மூன்றாம் பாசுரத்தில்
ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே –
இது ஒரு நீர்மை இருக்கும்படியே என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த
மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை –
அடைந்து உய்ந்து போனேனே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்
நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன –
நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் – ஸ்ரீ திருக் குடந்தையிலே கண் வளர்ந்து
நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து –
இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் – நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் –
நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
நெஞ்சே -நீ ஜ்ஞான பிரசார த்வாரம் அன்றோ-நீ நினை என்று என்னை பிரேரிக்க வேண்டாவோ –
ஒரு ஷண காலமும் நீ நினையாதே இரா நின்றாய் –
நினைக்க அருமைப் பட வேண்டும்படி அவன் தன்னை அரியனாகத் தான் நீ நினையாது இருக்கிறாயா –
மேக பதத் தளவும் ஓங்கின மாடங்கள் சூழ்ந்து இருப்பதாய் வயலோடு கூடின ஸ்ரீ திரு வாலியிலே வந்து
சந்நிஹிதன் ஆன மைந்தனையே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ –புறம்பேயும் ஒரு புகல் உண்டாய் மறக்கவோ –
சம்சாரத்தே சில விடவுமாய்-பற்றவுமாய் இருக்கிற இருப்பைக் கொண்டு
பகவத் விஷயத்தை மறக்கலாம் என்று இருக்கிற நீ சொல்லு –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
திரை மேலே திரையாக கொண்டு போந்து ஏறடுமா போலே ஒரு ஜன்மம் ஒரு ஜன்மத்திலே தோள் மாற
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து போனேன் –
இப்படி பிறந்து போரா நிற்கச் செய்தே
நான் பிறந்த சம்சாரத்திலே அவன் வந்து சந்நிஹிதன் ஆகையாலே அவனைப் பெற்றுக் கொண்டு நின்றேன்
உபகார் ஸ்ம்ருதி அனுவர்த்தித்த அன்று பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டும்படி இருக்கும் இறே
அது வேண்டாத படி பிராப்தம் இது என்று இருக்கும் படி உபகரித்தான் ஆயிற்று –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
ஒரு தேச விசேஷத்திலே போனால் சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே-
பத்தாம் பாசுரத்தில்
இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –கடல் சூழ்ந்த பூமியிலே
இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –
அன்றிக்கே –
சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி
நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை
உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல் –
———————–
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-
ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்னும் சாபல்யத்தை உடைய எனக்கு –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனும் அவளுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் நினைத்து இருப்பது –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –
பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சுலபனான நீ சொல்லு –என்கிறார் முதல் பாசுரத்தில்
பிரளய ஆபத்தை பரிஹரித்து இன்று ஆஸ்ரயநீயன் என்னும் இடம் தோற்ற நீ வந்து சந்நிஹிதனாக
நான் எங்கனே வேறு சிலரை ஆஸ்ரயநீயன் என்று இருக்கும் படி –
சம்சார பிரளயத்தை பரிஹரிக்கைகாக இறே நீ இங்கே வந்து நிற்கிறது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
ஸ்ரீ கண்ண புரத்துறை அம்மானே –நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றாவது –
உன் அளவில் நின்றவன் அல்லேன் -என்ற போது அவன் திரு உள்ளம் என் படுகிறதோ -என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்ய
ஸ்ரீ பிள்ளை -அல்லிக் கமலக் கண்ணன் ஆகிறான் -என்று அருளிச் செய்தார் –
நீக்கமில்லா அடியார் தன் அடியார் அடியார் எம் கோக்கள் -என்று
இவர் பாகவத சேஷத் தளவில் நின்றவாறே அவன் அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் –
பிரபன்னன் உடைய லஷணம் ஆகிறது –
ஸ்ரீயபதியே -உபாய உபேயங்கள் என்று இருக்கையும்
தேவதாந்தர ஸ்பர்சமும்-தாமஸ புருஷர்களோடு சம்சர்க்கமும் இன்றிக்கே இருக்கையும் –
பாகவதரை ஒழிய செல்லாமை யுண்டாய் இருக்கையும் –
தர்மியை அனுபந்தித்து இருக்கும் தர்மங்களை நேரே வ்யவஹரித்தது இல்லையே யாகிலும்
தர்மியைச் சொன்ன போதே தர்மங்களை எல்லாம் சொல்லிற்றாம் இறே-
விஷம் தாரகமான உனக்கு ஆகாதார் இல்லை –
நீ கை விடப் பார்க்கும் அன்றும் விட ஒண்ணாத புருஷகாரம் உண்டு –
தான் பொறை யாளாய் இருக்கும் அளவன்றிக்கே செய்த குற்றங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி
ந கச்சின் ந அபராத்யதி – என்று அவனையும் பொறுப்பிக்கும் அவள் ஆயிற்று –
நோக்காலும் போக்யதையாலும் அவன் தன் வழியே போம்படி நியமிக்கும் அவள் ஆயிற்று –
இவை எல்லாம் உண்டானாலும் கார்யகரம் ஆகாது இறே நீ தூரஸ்தனாய் இருந்தாய் ஆகில் –
அக் கண் அழிவையும் அறுத்து வைத்தாயே -என்கிறார் நாலாம் பாசுரத்தில்
என்னால் அறுத்துக் கொள்ள ஒண்ணாத சம்பந்தம் உன் கை யதன்றோ –
இவன் கீழ் விட்டுப் போந்த உறவு முறை எல்லாம் நாமே அன்றோ என்ற இத்தை திரு உள்ளத்திலே கொண்டு
என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேண்டும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
அந்திம சமயத்திலே யமபடர் வந்து கிட்டாதே-அவர்கள் அனுகூலராய் இருப்பாரைக் கண்டால்
சொல்லுவன இச் சப்தங்கள் –
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் -என்கிறபடியே –அவர்களைக் கண்டால் நாங்கள் அருகு வாரோம் -என்று
கடக்கப் போம் படியாய் அன்றோ உன் ஸ்வபாவம்
அவ்வளவுகள் அறிந்து நோக்குகைக்காக அன்றோ இங்கு வந்து நிற்கிறது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
உன்னுடையாரைக் கண்டால்-யமபடர் கிட்டாமையேயோ–மறைந்து அன்றோ வர்திபபது
காக்கிற நீ சந்நிஹிதனாய் இருக்க அவர்கள் எங்கனே வெளியில் திரியும் படி –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
தேகாத் வ்யதிரிக்தமாய் இருப்பதோர் ஆத்மா உண்டு என்று அதுக்கு ஒரு நன்மை பாராதே
தேஹாத்மா அபிமானியாய்-மகா பாபங்களை திரட்டின நான்
அவை அடங்கலும் நிஸ் சேஷமாக போய் கொடு நிற்கக் கண்டேன் –
போக்குமவன் அளவுக்கு ஈடாய் அன்றோ போமதின் அளவு இருப்பது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
விரோதி போகப் பெற்ற அளவேயோ –அது போனால் பெறக் கடவ கைங்கரியத்தையும் பெற்றேன் –
வாசிகமான வடிமையும் செய்யப் பெற்றேன் –
நாம் பாடின கவியினுடைய மதிப்பு இருந்த படியாலே இது நம்மால் வந்ததாகக் கூடாது –
உள்ளே இருந்து பாடுவிக்கிறான் ஒருத்தன் உண்டு என்று அறிந்த இது கொண்டே
நீ என் ஹிருதயத்தில் இருக்கிற இருப்பை நிச்சயிக்கலாம் படி பண்ணினாய் –
ஸ்ரீ கண்ண புரத்துறை யம்மானே –-இவரைப் பாடுவித்த முக்கோட்டையாய் இருந்தபடி –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே ஸ்ரீ பரமபதம் ஆட்சியாகக் கடவது –
ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி கண்டேனுக்கு இத்தை அப்யசித்தவர்களுக்கும்
அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம்
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply