ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-எட்டாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

தன் பெண் பிள்ளை சொல்லக் கடவ இது தனக்கு ரசித்த படியாலே அப்பாசுரத்தை தன் வாயாலேயும் ஒரு கால் பேசி
அனுபவிக்கப் பார்க்கிறாள் –

————————-

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-

கையும் திவ்ய ஆயுதங்களுமாய் பண்ணின உபகாரம் இன்னளவு என்று பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –
நிருபாதிக பந்து என்று தோற்றி யன்றோ செயல் இருக்கிறது –
தன்னை உபகரிக்கைக்கு தான் முற்பாடனாய் அவசர ப்ரதீஷனாய் -வந்து நிற்கிறபடி –
அஞ்சன கிரி போலே யாயிற்று கண்ணுக்கு விஷயமான போது இருக்கிறபடி –
அவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கையே அன்றிக்கே-இவளும் ஆபி முக்கியம் பண்ணப் பெற்றது
வடிவு அழகிலும் ஔதார்யம் தோற்ற நின்ற நிலையிலும் போலே காணும் இவள் கண் விழித்தது –

——————-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

இத்தனை அதிமாத்ர பிராவாண்யம் ஆகாது காண்-
எல்லாம் செய்தாலும் நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்தை நீ கேட்க வேணும் காண் என்று
நீங்கள் சொன்னால் -அவனுடைய ஆபரண சோபை கண்களுக்கு முற்படா நின்றது –
உங்கள் வார்த்தை செவிப் படுகிற இத்தை நான் கேட்கவோ
கண்ணுக்கு இலக்கான அவன் அழகிலே துவக்குண்ணவோ -என்னா நின்றாள் –
சேஷித்வ ஸூசகமாய் இருக்கவோ -என்னா நின்றாள் –

——————-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4-

ஸ்ரீ பெரிய திருவடி முதுகில் இருந்து இருப்பைக் காட்டி என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் –
ஹிதம் சொல்லி விலக்குகிற நீங்களும் பாருங்கோள்-
அழகிய பவளம் போலே இருந்துள்ள திரு வதரத்தைக் கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ –
உக்தி மாத்ரத்திலே மீளாதே அவ்விஷயத்தைக் கண்டு அனுபவித்தாள் என்று தோற்றி இரா நின்றது –

———————–

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித் தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-5-

நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது –
சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் –
எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது
போக்யதை இல்லாமையோ –பிராப்தன் அல்லாமையோ –சேர்ப்பார் இல்லாமையோ –நான் எத்தைச் சொல்லி அகலுவது –
நிரதிசய போக்யனான இவனை இவள் அனுபவித்து சொல்லுகிறாள் போலே இருந்தது

———————-

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-6-

உபமானம் கதிர் பெருக்க வேண்டி இருக்கிறபடி –
கடலைக் கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலேயும்-அஞ்சன கிரி போலேயும்
இருக்கிற வடிவை உடையவன் என்னா நின்றாள் –
ஸ்ரமஹரதையும் அபரிச்சேத்யையும் இரண்டையும் சொல்லுகிறது –

———————

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-7-

அவன் உடைய உடை வாய்ப்பிலே தோற்றமை தோற்ற வாய் விடா நின்றாள் –
திருப் பீதாம்பரம் சாத்தினால்- கௌசேய புஷ்பித கடீ தடம் -என்கிறபடியே
திருவரை பூத்தாப் போலே யாயிற்று இருப்பது –

——————

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-8-

கீழே அவன் அடியைப் பிடித்தும் மடியைப் பற்றியும் படியை அனுபவித்ததை கேட்டவர்கள்-
இவளுக்கு இப்படி அனுபவம் செல்லா நின்றால்
முலையில் பூம் பயலை பிறக்கும்படி விரஹ வ்யசனம் நடக்கைக்கு அடி என் என்று கேட்க –
இவளுக்கு கிட்டே வந்து சம்ச்லேஷித்தது அல்லாதே
அதூர விப்ரக்ருஷ்டமாய் வந்தாப் போலே தோற்றுகையாலே
தன்னிடத்தில் வரவில் நிர்ணயம் பிறவாதே விரஹ கிலேசத்தை அடைந்தாள் என்று
அவள் வார்த்தையாலே அறிந்தாளாக -அனுவதிக்கிறாள் -என்று சங்கதி –

ஸ்ரீ பிள்ளை அமுதனார் இத் திருமொழிக்கு பிரவேசம் சொல்லா நிற்க
ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே -பள்ளி யந்துலாத்திலே ஏறி உலவா நிற்பர்கள் காண் –
என்றாப் போலே அநேகம் வாக்ய சில்பங்களை பண்ணினார் –
அப்போது பால்யத்தாலே அவ்வடைவுகள் புத்தி பண்ணப் பெற்றிலோம்
அவற்றுக்கு இதில் பற்றாசு ஏது என்று விசாரித்தோம் –
இதுவாகாதே என்று தெளிந்தோம் காண் என்று இவ்வளவிலே ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் –

————————-

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-

நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே –எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஸ்ரீ ஜீயர் –
கண்டவர்கள் நெஞ்சை மேல் எழுத்துக் கொடா நிற்பர்கள் ஆயிற்று

————————

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே
தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள் –

————————-

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

கை வளை கொள்ளுவது தக்கதே என்ன -என்றாள்
நமகக்குக் கைவளை கொள்ளத் தகாமை என் -என்று ஸ்ரீ சௌரிப் பெருமாள் கேட்க –
தகாது என்னும் இடத்தை உபபாதிக்கிறாள் –

——————-

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஞை குலைந்து-ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்கிறபடியே
அவிவாதம் தோற்ற ஓர் அஞ்சலி பண்ணினாள் ஆகில் இது குறையோ -என்று இறே கீழ்ச் சொல்லிற்று –
இத்தைக் கேட்ட ஸ்ரீ சௌரி பெருமாள் -நீ நம்மைக் குறை சொல்லக் கடவையோ
உன் மகளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ
ஸ்திரீகளுக்கு நாண் மடம் அச்சம் பயிர்ப்பு -என்கிற ஆத்மா குணங்களில் பிரதான குணம் அன்றோ லஜ்ஜை –
அது உன் மகளுக்கு இல்லையான பின்பு அவளை நியமிக்க வன்றோ அடுப்பது -என்ன
அவளுடைய உக்தி வியாபாரங்கள் இருந்தபடியாலும் –
சம்சர்க்க தோஷம் இருந்த படியாலும் – அவளை நியமிக்க என்பதும் ஓன்று உண்டோ
இவளை அடியிலே அலைவலையாக்கி புறப்பட விட்ட இவர் கார்யமே தலை காட்டிற்று -என்கிறாள் –

————————

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ –8-2-3-

இனி இவள் நாணுமோ என்று இறே கீழ் சொல்லிற்று
அந்த லஜ்ஜை தான் உண்டாவது சத்தை உண்டானால் இறே
தான் பண்ணுகிற சிசுரோபசாரங்கள் கார்யமாய்த் தலைக் கட்ட காண்கிறிலோம்
என்னாய் முடியப் போகிறதோ -என்கிறாள்
தாபார்த்தராய் இருப்பார் தாப ஹரனான ஜலநிலையனை இறே பற்றுவது
அவனைப் பற்றுமவள் அல்லை இறே இவள்
அவனைப் பற்றுவார் முக்த ப்ராயரான சநகாதிகள் இறே
இவள் பற்றுவது அர்ச்சாரூபத்திலே இறே
அதில் தனக்கு தாப ஹராமான திருப்பதிகளிலே சிலவற்றைச் சொல்லுகிறாள் –

—————-

உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லைப்
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ —8-2-4-

வாய் வெருவினாள்-வினவி இருக்கின்றாள்-பேசினாள்-உருகினாள்
என்கிற இவ்வாற்றாமை தான் உண்டானது தாரகம் உண்டானால் இறே
அது இருந்தபடி என் என்ன-அது தானே இல்லை -என்கிறாள் –
கீழ் உண்டான தசைகள் ஸ்வஸ்த்த தசைகள் என்னும்படி இருந்ததீ -என்கிறாள்
ஊணும் உறக்கமும் உண்டானால் இறே கீழ்ப் பிறந்த அவஸ்தைகளுக்கு அவகாசம் உள்ளது –

—————————-

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே —-8-2-5-

பெண்மையும் சால நிறைந்திலள் -என்று இறே கீழ்ப் பாட்டில் சொல்லிற்று –
அது காலாந்தரேண உண்டாகிறது –-அதுக்கடியான பெண்மை தான் உண்டோ -என்ன
அது தானே இல்லை என்கிறாள் –
நீ எது கொண்டு அறிந்தாய் என்ன
கரண த்ரயங்களும் அவனை நினைத்த மாத்ரத்திலே விக்ருதமாகா நின்றன-இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –

——————-

வடவரை நின்றும் வந்தின்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே —8-2-6-

கீழ்ப் பாட்டிலே-தன்னுடை உண்மை உரைக்கின்றாள் -என்றும்
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால் வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியும் -என்றும் சொன்னாய்
அதில் உண்மை எது-பொன்னிறம் போனபடி என் -என்ன -அத்தைச் சொல்லுகிறாள் –
ஸ்ரீ கண்ணனூர் -என்றாள் இறே கீழ்-அந்த ஸ்ரீ கண்ணனூரான ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலெ பெண்கள் அடைய
குரவ கிம் கரிஷ்யந்தி தக்த்தா நாம் விரஹாக்னி நா -என்று-இக்குருக்கள் நம்மைச் செய்யப் புகுகிறது என் –
விரஹ அக்னியால் வெந்து கிடக்கிற நம்மை ஆற்றி ஒரு குடம் நீர் சொரிவார்களோ -என்று
பந்து வர்க்கங்களை நேராக விட்டு ஸ்ரீ கிருஷ்ணனை அனுபவிக்கக் கடவதாக யமுனா தீரத்தேற வந்தார்கள் –
அங்கு ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்டிலர்கள் – பின்பு அனுகாரத்திலே இழிந்து
நான் நடவா நின்றேன் -நீ நடைச் சக்கரவத்து பிடித்துக் காண் -எனபது
துஷ்ட காளிய திஷ்டாத்ரா கிருஷ்ணோஹமிதி சாபரா -என்று
பாரடா காளியனே -நான் உன் மேல் ஏறி ஆடப் புகா நின்றேன் -எனபது-இப்படிகளாலே அனுகரித்தார்கள் இறே
இவளும் -ஸ்ரீ திரு ஆய்ப்பாடி -ஸ்ரீ திருக் கண்ணபுரம் ஆகவும் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ சௌரிப் பெருமாள் ஆகவும் –
ஸ்ரீ சௌரிப் பெருமாள் தான் ஆகவும் அனுகரித்து பேசுகிறாள் –

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-அஹம் பிரஹ்மாஸ்மி-என்று தான் அவனாய்-அவன் தானாய்-இறே இருப்பது
இது இறே இவளுடைய வைதிக லோகாயுத மதம் இருக்கிறபடி –
வேறே அனுகரித்தாரும் சிலர் உண்டு இறே
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -என்று-அவளைப் போலே ஜகத் காரண ரூபியை பற்றுமவள் அன்று இறே இவள் –
அர்ச்சாவதார ரூபியை இறே இவள் அனுகரிப்பது
இவ் வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அனுபவம் ஒழிய
அந்த அந்த அவதாரங்களால் பிறக்கும் அனுபவத்தை நாய்க்கு இட என்று இருக்குமவள் இறே இவள் –
ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் ஸ்ரீ ஆழ்வார் திரு நறையூர் அரையரும் இப்பாட்டை அனுசந்தித்து
இப்பாட்டுக்கு ஒரு சேர்த்தி கண்டிலோம் -என்று ஸ்ரீ பட்டர் பாடே வந்து இப்பாட்டு இருக்கிறபடி என் -என்று கேட்க –
மகள் அனுகாரத்தை தாய் அநு பாஷிக்கிறாள் -என்று அருளிச் செய்தார் –
ஆரூட யோகராய் இருப்பார் சிலர் வந்தால் யோபவான் யன்நிமித்தம் வாயதாகம நகாரணம் -என்கிறபடியே
நீ யார்-வந்தது எங்கு நின்றும் -என்று கேட்கக் கடவது இறே-அப்படியே -நீ எங்கு நின்றும் வந்தது -வந்த காரணம் ஏது -என்ன
வந்தது இன்னிடத்தில் நின்றும் –-வந்த கார்யம் இன்னது -என்கிறாள் –

—————-

தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும்
இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
அரங்கமே எனபது இவள் தனக்காசையே —8-2-7-

இவர்க்கு இவள் கடவது என் -என்று இவள் கண்ணுறக்கத்தை இவர் கொள்ளுகைக்கு பிராப்தி உண்டோ என்றாய்
இப்படி இவரோடும் இவளோடும் கொள் கொடை அற்றோ இருக்கிறது
கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்றும்
கண்ண புரம் தொழும் என்றும்
கண்ண புரம் என்று பேசினாள் என்றும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அவனேயாம் படி அன்றோ அவள் இருக்கிறது –
அவரோடு அவளோடு பிராப்தி இல்லை என்று சொல்லக் கடவையோ
அது கிடக்கட்டும்
உன் மகள் தான் இவ்வீடுபாடுகள் தானே பொறுக்க ஷமையோ-என்ன
இவற்றுக்கு இவள் இளைக்குமவளோ -என்கிறாள் –

—————————

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே —8-2-8-

முதல் பாட்டிலே -தெள்ளியீர் தொழுத இவள் கை வளை கொள்வது தக்கதே -என்று
தொழுத இவள் கையில் வளையை வாங்குகை தகுதி அல்ல தப்பச் செய்தோம் -என்று இசைந்து நின்றார் ஸ்ரீ சௌரிப் பெருமாள் –
பின்பு தன்னிலே-இவர்க்கு இவள் கடவது என் கண் துயில் இன்றி இவர் கொள்ள -என்றும் –
அரங்கமே இவள் தனக்கு ஆசையே -என்றும் சொன்னதை ஸ்ரீ சௌரிப் பெருமாள் கேட்டார் –
சர்வதஸ் ஸ்ருதி மல்லோகே -என்று இருக்குமவர் இறே அவர்
இப்படி இவள் சொன்னவாறே-வளை கொடுப்பதாக நினைத்து இருந்தோம் –
இனி கொண்டு அது கொடுக்கிறது என் – இன்னம் எட்டுமது உண்டாகில் வாங்க அமையாதோ -என்று
ஸ்ரீ சௌரிப் பெருமாள் சிவட்கு என்று-உன் மகளுக்கு ஸ்ரீ அரங்கமே எனபது ஆசை என்றாய் –
அவளோடு நம்மோடு பிராப்தி இல்லை என்றும் சொன்னாய் –
ஆனால் நம்மூருக்கு இவள் வருவான் என்-நாம் இவளை அழைத்தோமோ
ஆசைப் பட்ட இடத்தேறப் போகல் ஆகாதோ -என்ன
அதில் சம்சயம் இல்லை -ஸ்ரீ அரங்கமே இவள் தனக்கு ஆசை -நினைவும் அதுவே
ஸ்வ அபிமத சித்திக்கு உறுப்பாக நாட்டார் செய்கிறதைக் கண்டு
தனக்கும் தன் அபிமதம் சித்திக்குமோ -என்று தன் ஆசையாலே
செய்வான் முறைமை கண்டு போனாள் இத்தனை -என்கிறாள் –
கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்று என்றே இவளுக்கு மநோ ரதம்
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி யுண்ண பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்று
கடலைப் பருகின காள மேகம் போலே இறே ஸ்ரீ பெரிய பெருமாள் வடிவு இருப்பது –
ஆகையாலே நினைவும் அங்கே என்னும் இடம் சித்தம் இறே –

——————–

முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே —8-2-9-

கீழ்ப் பாட்டிலே -என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -என்று
நிவாரகர் இல்லாத தேசத்திலே வழி யடிப்பாரைப் போலே முக்த்தையான இவள்
நிறத்தை கொள்ள வேணுமோ என்று இவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட ஸ்ரீ சௌரிப் பெருமாள் –
நீர் நம்மை நியமிக்கக் கடவையோ –
சர்வச்ய வஸி சர்வச்ய ஈசானா -என்று சர்வர்க்கும் நியாமகராய் நம்மை நியமிக்கக் கடவையோ
மடவரல் மாதர் என் பேதை -என்று-உன் மகள் என்றும்-உனக்கு பவ்யை என்றும் -சொன்னாய்
அவளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ – நீ நம்மை நியமிக்க போராய் காண் -என்ன
இவள் பருவம் இது-பாவம் இது-ஆனபின்பு என்னால் நியமிக்கலாயோ இருப்பது -என்கிறாள் –
இவள் அளவு இதுவாய் இருக்க இவளைப் போலே அவஹாகித்தாள் ஒரு பெண் பிள்ளை வார்த்தையாலே
சொன்னாள் இறே அவள் உடைய திருத் தாயார் –

முலையோ -இத்யாதி –
இவள் அளவு இதுவாய் இருக்க -அவகாஹனம் இருந்த படி என் –அளவன்றி இருந்ததீ-என்றாள் இறே –
முலையோ முழு முற்றும் போந்தில – முலை புரைகிற வித்தனை –வளரும் அளவும் செல்ல வரையிட்டதில்லை –
இது பருவம் இருந்தபடி –
ஸ்ரீ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே –
ஸ்ரீ திருமலையை விடாமல் சொல்லா நின்றாள் இது அவகாஹனம் இருந்த படி –
இவள் பரமே –
இவள் அளவன்றிக்கே இருந்ததீ-என்றாள் இறே – அவளுடைய பருவம் இல்லையே இவளுக்கு
அவகாஹனத்திலும் வாசிக மாத்ரமே இறே அவளுக்கு உள்ளது –
காயிகத்தால் வந்த அவகாஹனம் உண்டே இவளுக்கு –
பங்குக்களாய் இருப்பார்க்கும் அந்தரராய் இருப்பார்க்கும் போக ஒண்ணாதபடி ஸ்ரீ பரமபதத்துக்கு அடுத்து அணித்தாய்
அர்ச்சிராதி போலே பெரிய ஏற்றம் ஏற வேண்டி இறே ஸ்ரீ திருமலை இருப்பது
அத்தனை துஷ்ப்ராப்யமாய் அன்றே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருப்பது
இருந்தபடியே எல்லார்க்கும் புக்கு அனுபவிக்கலாம் படி இறே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருக்கிற படி –
ஆகையால் இவள் அளவு இதுவாய் இருந்தது – அவகாஹநத்தில் எல்லை இதுவாய் இருந்தது
ஆன பின்பு இவளை நியமிப்பார் உண்டோ என்று பொதுவிலே சொல்லுகிறாள் –

பெறுவேனோ என்னாதே பெறுவரே -பொதுவிலே
மமமத்பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்ற உன்னாலும் இவ்வளவு அவகாஹிக்கப் போமோ –

————————

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை
பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே –8-2-10-

இத்தால்-கவி பாடிற்று இன்னாரை பாடினேன் இந் நான் என் கவி தான் இன்னது -இது கற்றார்க்கு பலம் இன்னது -என்று
இவை நாலையும் சொல்லுகிறார் –

———————–

கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரையெடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-

மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய் பெரிய மிடுக்கையும் உடைத்தாய்
மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக
மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன் –

——————–

அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தரு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளை —8-3-2-

குவலயா பீடமானது வெருவும்படியாக அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட
அச் செயலுக்கு வளை இழந்தேன் –

——————-

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும்
பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த
செங்கண் மால் யம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-3-

சந்த்ரனுக்கு வந்த ஷயத்தை போக்கி-அது தன்னை தன் பேறாக நினைத்து இருக்கிற
புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன் –

——————

கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும்
மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப் போய் உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-

இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர்விவரமாய் இருக்கிற மருதுகள் முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு
என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன் –

———————–

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே—8-3-5-

ஈடுபட்டு ஓடி அமுது செய்த-தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து
அத்தை இல்லை செய்கைக்காக –முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன் –

——————-

மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-

அன்று ஹிரண்யன் மிடுக்கு அழியும்படி யாக ஸ்ரீ பிராட்டிமாரும் கண்டு கொண்டு இருக்கும் படியாக
ஸ்ரீ உகிராலே-அவன் உடைய சரீரத்தை பேதித்து தன்னுடைய ஸ்ரீ ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு
என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ-என்று இருந்தாயிற்று வளை இழந்தது –

—————–

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-

பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார் –

————————

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-

தர்ச நீயமான வடிவை உடையனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற –
சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை விஸ்வசித்து முடிந்தேன் -என்கிறாள் –

————————-

வாராளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ –
நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள் –

——————-

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே —8-3-10-

நாவிலே பொருந்தும் படி பாட சஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் –
உக்தி மாத்ரத்தைச் சொல்ல புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார் –

——————–

விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-1-

சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை –
இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்ணாலே காண்கையாலே
அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று –
கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை
சர்வரச -என்கிற வஸ்துவைப் போய் அனுபவி என்று அன்றோ சொல்கிறது –
ஸ்வாபதேசம்-சப்தாதி விஷய நிச்சாரதையும் –-பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும் சிஷ்யருக்கு அறிவிக்கிறார்

———————–

வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-2-

திருவடிகளை அக்ரமமாக ஏத்தி அதிலே விழுந்து எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி ஸ்நேஹத்தைப் பண்ணுகிற
நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது

————————-

விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-3-

தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும் அவ்விறுமாப்பைப் பொகட்டு
திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் –
சஜாதீயர் உடைய யாத்ரை அமையாதோ உனக்கு –

———————-

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-

எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான வடிவை உடையனுமாய்க் கொண்டு
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது –

————————–

ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ —8-4-5-

பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –

————————–

மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ–8-4-6-

நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு அவன் தான் விரோதி நிரசன சீலன்-
என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன்
உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன்
ஆனபின்பு அவன் பக்கலிலே சென்று இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள் –

————————

வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன்
தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-7-

ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் –
அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் –
மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய் –

——————-

நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலரெல்லாமூதாதே வாளரக்கர்
காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ —8-4-8-

விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் – ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-தர்ச நீயமான திருத் துழாய் மாலையிலே வந்தூதாய் –

———————-

நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ —8-4-9-

நமக்கு அபூமியான இருக்கிற இடத்தில் போகச் சொல்லுகிறேனோ –

——————–

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -8-4-10-

சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு
அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும் –

——————–

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1-

பிறரால் வந்த விலங்கு பரிஹரிக்குமவன் தன்னால் வந்த விலங்கு பரிஹரியாது ஒழிவதே –
ஸ்ரீ வசுதேவர் காலிலே விலங்கு கழலும்படி வந்து அவதரித்த முக்த்தன் உடைய ஸவபாவத்தை அனுசந்தித்து
ஆபத்துக்களிலே வந்து உதவும் ஸ்வ பாவனான பின்பு
அந்த பித்ராதிகள் அளவில்லாத ஆசையை உடைய நமக்கு வந்து உதவுவானோ என்று பிரிந்து தனி இருக்கிற
என் நெஞ்சானது அவன் பின்னே போயிற்று –

————————-

மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று – நாயகனோ வந்து அணைகிறிலன்-
இனி எத்தைச் செய்வது –

——————

ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் இறை நில்லா
பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ
தூய மா மதிக் கதிர் சுடத் துணை யில்லை யிணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சல் என்பார் இல்லையே–8-5-3-

இவ்வளவிலே வாராதே இரான் என்கிற நெஞ்சையும் அழித்து கொடு வந்து தோற்றா நின்றதாயிற்று
இடையன் ஊதுகிற குழல் –பிராமணர் ஊதுகிற குழலுக்கு அகப்படாள் காணும் இவள் –
மாஸூச -என்பார் ஒருவரையும் காண்கிறதில்லை –

———————–

கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –8-5-4-

ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன்
பாதக பதார்த்தம் தானே இனிக் கிருபை பண்ணி மீளில் நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம் –

——————-

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே -8-5-5-

நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட அதினுடைய பல ரூபமான பகலும் போய் நின்றதாயிற்று –
அருள் போகவே பகலும் போம் இறே –

—————–

முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண் துயிலா
கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே -8-5-6-

நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த
மிடுக்கன் வருகிறிலன்-இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ –

———————-

கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன்
விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-

நான் முடியவே அவனைக் கிடையாது –
அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்
ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –

———————-

முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே —8-5-8-

அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு
பாபம் உண்டாக அறிகிறிலேன் –
இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –

——————-

கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக விருந்தேனை
சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை என் சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலினிரி குரல் பாவியேன் ஆவியை யடுகின்றதே —-8-5-9-

கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி மகா பாபத்தை பண்ணின என்னுடைய
தரமி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது –

—————————

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே —8-5-10-

இத் திரு மொழியை அப்யசிக்க வல்லார் –பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து நித்ய விபூதியில் நித்ய சூரிகளோடே கூடி
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்கிறபடியே ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு பின்னை
ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவர் –

——————

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-

ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே
பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று –
அவனும் நாமும் இவர்களும் சேர வர்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த ஸ்ரீ திருக் கண்ண புரத்தை தொழுவோம் –

———————–

பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் போன்ற வன்று புள்ளூர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒழிப்பக்
கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-2-

அது ஸ்ரீ பிராட்டி பக்கல் ஓரத்தால் செய்த செய்யல் அன்றோ – நாம் அதற்க்கு பிற்பாடர் ஆனோமே -என்ன
அது வேண்டா -அவன் விரோதி நிரசன சீலன் -என்கிறார் –

————————–

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான்
வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-3-

ப்ரஸ்துதமான ஸ்ரீ ராமாவதாரம் பின்னாட்டின படி சொல்லுகிறது-

——————–

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-4-

நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
வாசஸ் ஸ்தானமான ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே –

——————-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே—-8-6-5-

ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாதே ரஷிக்கும்-ஸ்வபாவன் -ஆயிற்று-

————————–

வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள்
பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன்
கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-6-

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் – முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய
குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர் –

————————

இலையார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலைநீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-7-

ராவணன் பண்ணின பிராதி கூல்யம் தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும்
அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –அதுக்கு முன்பு
தமையனுடைய வைரத்துக்கு ஹேதுவாய்க் கொண்டு வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன் –

———————–

மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
காலார் மறுத்தும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே—8-6-8-

கீழ்ப் பாட்டில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு திவ்யம் வர்ஷ சஹச்ரம்-என்று பதினாயிரம் சம்வத்சரம் கிலேசப் பட்டு
ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு வந்து உதவினான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு -த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச்ச-என்று பிராப்ய ஆபாசங்களையும் விட்டு
சரணம் புகுருகையாலே அரசு அளித்தான் –
எனக்கு அங்கனே இருப்பதொரு நிலையும் அன்றிக்கே சஞ்சலம் ஹி மன -என்கிறபடியே
நின்றவா நில்லாத ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கை உண்டாகையாலே
எங்கனே வந்து இருப்பது என்ன
ஸ்ரீ பாஞ்சாலிக்கு விரோதிகள் என்ற பேர் பெற்றவற்றை எல்லாம் போக்கி அருளினவன் -என்கிறார் –
நெஞ்சை தேற்றுகிறார் -இரண்டு பாட்டாலும்

———————

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-

மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி கொடி போலே அழகிய இடையை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்த –
ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே –

———————-

கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே –8-6-10-

இத் திரு மொழியை வல்லார் –பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே
அலங்காரங்கள் எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –இவ்வளவிலே போகாதே
ஸ்ரீ பரமபதத்திலே போய் புக்கு பதியினில் பாங்கினில் -என்கிறபடி
ஸ்ரீ நித்ய சூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார் –

———————-

வியமுடை விடையின முடைதர மட மகள்
குயமிடை தடவரை யகலம துடையவர்
நயமுடை நடையன மிளையவர் நடை பயில
கயமிடை கண புர மடிகள் தமிடமே —8-7-1-

பொய்கைகளாலே நெருங்கி இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் நமக்கு ஸ்ரீ ஸ்வாமி யானவனுடைய
வாசஸ் ஸ்தானம் –

————————

இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்
மண மலி விழவினொடடிய வரளவிய
கண மலி கண புர மடிகள் தமிடமே –8-7-2-

ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய நெஞ்சு கலந்த திரள் மிக்கு இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் –

——————–

புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை
மயலுற வரை குடை யெடுவிய நெடியவர்
முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல்
கயல் துளு கண புர மடிகள் தமிடமே —8-7-3-

அவனும் ரஷிக்க-தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே அவனே ரஷகனாம்படி இருக்கை-
மலையை குடையாக எடுத்து பரிஹரித்து ரஷணத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாத படி இருக்கிறவர் –

——————

ஏதலர் நகை செய விளைய வரளை வெணெ
போது செய்தமரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மது கரம் குலவிய மலர் மகள்
காதல் செய் கண புர மடிகள் தமிடமே —8-7-4-

பூவை இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி வர்த்திக்கிற தேசம் –

————————

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொட கலிடமளந்த வரமர் செய்து
விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி யெழக்
கண்டவர் கண புரமடி கள் தமிடமே —8-7-5-

பூசல் செய்து –-த்விதாபஜ்யேயம் -என்று பொருந்தாமையிலே நின்றவர்கள் முடிய –
ப்ரஹ்மாதிகளும் கூட கணிசிக்க வரிதான ஊரை

—————————-

மழு வியல் படை யுடையவனிடம் மழை முகில்
தழுவிய வுருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கண புர மடிகள் தமிடமே —8-7-6-

ஸ்ரீ பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே இளைதாய் கொழுவியதாய் அழகியதான பூவிலே
முழுகின வண்டின் உடைய பண் கிளர்ந்த ஸ்ரீ திருக் கண்ண புரம் அடிகள் தம் இடமே

——————————-

பரிதி யொடணிமதி பனிவரை திசை நிலம்
எரிதி யொடென வினவியல் வினர் செலவினர்
சுருதியொ டருமறை முறை சொலு மடியவர்
கருதிய கண புர மடிகள் தமிடமே–8-7-7-

அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்று இருக்கிற முறையிலே சொல்லுகிற அடியார்
தங்களுக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கண்ண புரம் –

——————–

படி புல்கு மடி யிணைப் பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை யகலமது டையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே –8-7-8-

பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்-சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே
அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி அணையா நின்றுள்ள பெரிய வரை போன்று இருந்த மார்வை உடையவர் –

—————–

புல மனு மலர் மிசை மலர் மகள் புணரிய
நில மகளென வின மகிளர் களிவரொடும்
வலமனு படை யுடை மணி வணர் நிதி குவை
கல மனு கண புர மடிகள் தமிடமே —-8-7-9-

மலரை தனக்கு இருப்பிடமாக வுடையாளாக இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் –
தன்னோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் ஸ்ரீ பூமிப் பிராட்டி என்று இப்படி சொல்லப் படுகிற நிருபாதிக
ஸ்த்ரீத்வத்தை உடையராய் இருக்கிற இவர்களோடும் –
வலத் திருக் கையிலே மன்னா நின்றுள்ள ஸ்ரீ திரு ஆழியை உடையனுமாய்
நீல மணி போலே போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை உடையவர் –

———————

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை
வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு
ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே —-8-7-10-

அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண் குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் –
இத்தை அப்யசிக்குமவர்கள் –அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபங்கள் கிட்டாது –

——————

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –
சேஷ பூதனான நான் காணப் பெற்றேன் –

———————–

மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-2-

தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும் நீருக்கு இறாயாதாய வடிவை உடைய ஆமையாய்-
மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு
கிடந்த விஸ்மய நீயனை ஸ்ரீ கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–

—————————–

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

அண்டபித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான
வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை

–———————–

உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4-

சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்-உளை மயிருமாய் மனுஷ்ய வேஷமும்
சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –சத்ருவான ஹிரண்யனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த
திரு வுகிரை உடையவனை –

———————–

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-5-

சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு நிலை நின்ற வடிவு

——————

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-

வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக
வந்து தோன்றின –ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை

—————-

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7-

வெவ்விய சீற்றத்தை உடைய கடியிலங்கை குடி கொண்டோட யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின
நம்முடைய ஸ்ரீ ஸ்வாமியை –

———————

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-

வெற்றியே தொழிலாக உடைய வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல
யுத்தத்திலே செற்ற வெற்றியை தொழிலாக உடையவனை –

———————–

துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-9-

அபர பஷத்திலே அஷ்டமியிலே நள் இருளிலே பிறந்தவனை –

———————-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம் –

——————-

கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே—8-9-1-

வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை – எனக்கு உபகாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை –
என் நெஞ்சிலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன் –

—————–

தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே —8-9-2-

என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வாதிகனை –
ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பெரியவனை –அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன் –

———————-

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

இது தான் உமக்கு எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன
நான் பிறர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார் –

——————–

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே–8-9-4-

ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே –
இது ஒரு நீர்மை இருக்கும்படியே என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த
மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை –
அடைந்து உய்ந்து போனேனே –

—————————-

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே —8-9-5-

நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன –
நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் – ஸ்ரீ திருக் குடந்தையிலே கண் வளர்ந்து
நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து –
இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் – நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் –
நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ –

—————-

எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6-

நெஞ்சைப் பார்த்து அதினுடைய நினைவை காதாசித்கமாக்கி அவன் நம்மை உபகரித்து நின்றான்
நீ தப்பச் செய்யா நின்றாய் – என்கிறார் –

———————-

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-

உமக்கு இத்தனை அதி மாத்திர நிர்பந்தம் என் என்ன –
இவ்விஷயத்தை விட்டுப் போய்-பின்னை நீ ஆரை நினைக்க இருக்கிறாய் -என்
புறம்பு நினைக்க ஒருவரும் இல்லையோ என்னில் இது வன்றோ புறம்பு உள்ளார் படி –

———————–

கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே —4-8-8-

உமக்கு உற்றானாய் நின்றவன் பண்ணின உபகாரம் தான் என் என்ன
ஸ்வ அனுபவத்துக்கு விச்சேதம் வாராத படி பண்ணி தந்தவன் அன்றோ -என்கிறார்
அதுக்கு உம்முடைய பக்கல் உள்ளது என் என்னில் –

——————–

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-

ஒரு தேச விசேஷத்திலே போனால் சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் –
இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே-

———————-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே —8-9-10-

இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –கடல் சூழ்ந்த பூமியிலே
இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –
அன்றிக்கே –
சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி
நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை
உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல் –

—————————————————————

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-

ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்னும் சாபல்யத்தை உடைய எனக்கு –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனும் அவளுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் நினைத்து இருப்பது –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –
பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சுலபனான நீ சொல்லு –

———————–

பெரு நீரும் விண்ணும் மலையும் உலகேழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை யல்லால்
வருதேவர் மற்றுளர் என்று என் மனத்திறையும்
கருதேன் நான் கண்ண புரத்துறை யம்மானே —8-10-2-

உன் தனக்கே தொண்டனானேன் என்றாரே-இங்கன் சொல்லுவான் என்
புறம்பே ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயநீயருமாய் அன்றோ இருக்கிறது -என்ன
அவர்கள் செய்தபடி செய்கிறார்கள் –-எனக்கு முன்னம் இதர விஷயங்களில் புத்தி இல்லை -என்கிறார்

———————–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

வேறு சிலரை ஆஸ்ரயநீயர் அல்லர் -என்று நினைத்து இருக்கும் அளவேயோ –
தாமஸ புருஷர்களோடு சம்பர்க்கமும் இல்லை –
சாத்விகரை ஒழிய காலம் செலுத்தவும் மாட்டேன் -என்கிறார் –
எண்ணாத மானிடத்தை எண்ணுமவன் அல்லேன் -என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிவிலேன்-என்கிறார் –

——————-

பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே —8-10-4-

அக்குணங்கள் எல்லாம் உண்டானாலும் நாம் விரும்பி இருத்தல் -செய்த அன்று -அன்றோ –
அது -கார்யகரமாவது என்ன –
நஞ்சு தாரகமான உனக்கு ஆகாதது -இல்லை
ஸ்ரீ பிராட்டிமார் எனக்கு புருஷகாரம் ஆனபின்பு என் கார்யத்துக்கு குறை உண்டோ -என்கிறார் –

———————–

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-

நாமும் உகந்து –வலிய புருஷகாரமும் உண்டாய் –சுலபனும் -ஆனாலும்-நீர் புறம்பு பற்றற்று
அகிஞ்சனராய் வரும் அன்று அன்றோ கார்யகரம் ஆவது -என்ன
என் குறை அறுத்து வைத்தேன்-நீ உன் தலையிலே குறை கிடவாதபடி பரிஹரித்துக் கொள்ளாய்-என்கிறார் –

———————-

ஏத்தி உன் சேவடி எண்ணி யிருப்பாரை
பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதம் என்று தொடாமை நீ
காத்தி போல் கண்ண புரத்துறை யம்மானே–8-10-6-

என்னைக் கொள்ளும் அளவு போராது- செய்த குற்றங்கள் ஆராய்வதாக நீ இட்ட
யமாதிகளும் என் பக்கல் வாராத படி பண்ண வேணும் -என்கிறார்

——————-

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே—8-10-7-

அவர்கள் கிட்டாமையையோ –
உன் பிரபாவத்தாலே அவர்களுக்கு மறைந்து வர்த்திக வேண்டும்படியாய் அன்றோ
இருக்கிறது -என்கிறார் –

———————–

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே—8-10-8-

நீ பாபங்களைக் கனக்க கூடு பூரித்து வைக்க –அதனுடைய பலானுபவத்தை பண்ணுவிக்குமவர்களுக்கு
மறைந்து வர்திக்கைக்கு ஹேது என் -என்ன –
நீ ஆஸ்ரிதர்க்காக உன்னை அர்த்தி யாக்கின படியையும்-விரோதி நிரசன சீலனாய் இருக்கிற படியையும் அனுசந்தித்தேன் –
அவை வாசனையோடே போய் நிற்க்கக் கண்டேன் -என்கிறார்-

———————-

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே —8-10-9-

உம்முடைய விரோதி போன படி தான் என் – நீர் பெற்ற பேறு தான் என் -என்ன –

———————-

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10-

இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே ஸ்ரீ பரமபதம் ஆட்சியாகக் கடவது –
ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி கண்டேனுக்கு இத்தை அப்யசித்தவர்களுக்கும்
அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம்

———————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading