நீங்கள் இனி என்னைத் தேற்றிப் பிரயோஜனம் இல்லை;
தென் திருப் பேரெயிலைப் போய்ப் புகக் கடவேன்,’ என்கிறாள்.
சேர்வன் சென்று என்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே–7-3-9-
சேர்வன் சென்று –
உன் ஆற்றாமையாலே சில சொல்லுகிற யாகில் இது கடைப் படவற்றோ?’ என்ன,
அவசியம் அங்கே புக்கு அல்லது விடேன்!’ என்கிறாள்.
என்னுடைத் தோழிமீர்காள் அன்னையர்காள் –
எனக்காக இருப்பாரும்,
என்னைத் தங்களுக்காக நினைத்திருப்பாரும்
ஒன்றும் சொல்ல வேண்டா.
தோழிமாரோடு தாய்மாரோடு வாசி இல்லை காணும் இவளைத் தேற்றப் போகாமைக்கு.
அஞ்ஞரோ -அறிவில்லாத மாக்களோ வியவசிதரை -ஞானிகளை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார்?
விஷயம் காரணமாக வருகின்றதனைச் சாதனத்தில் செலவு எழுதுகின்றவர்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார்?
இவள்,தன்னை மறந்து, அவனையே பார்த்துப் பேசுகிறாள்;
அவர்கள் அவனை மறந்து, தங்கள் தங்களையே பார்த்து மீட்கத் தேடுகிறார்கள்.
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு –
கலங்கினாரோ தெளிந்தாரைத் தேற்றுவார்?
நீங்கள் நிற்கிற நிலை எது? என் நிலை எது? போகையிலே துணிந்திருக்கிற என்னை,
புறப்படுகை பழி’ என்று இருக்கின்ற நீங்கள் சொல்லுவது என்?
இதற்கு –
எனக்கு ஓடுகிற நிலைக்கு.
ஆனாலும், நெஞ்சும் அடக்கமுடையார்க்கு இது வார்த்தையோ?
நாங்கள் சொன்னபடி செய்து எங்கள் வழியே ஒழுக வேண்டாவோ?’ என்ன,
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
அது வேணுமாகில் அங்கே போய்ச் சொல்லுங்கோள்.
மனமும் அடக்கமும் அவன் பக்கலின், நிறைவு – அடக்கம். நெஞ்சு – அது இட்டு வைக்கும் கலம்.
நெஞ்சும் நிறைவும் எனக்கு ஆம் படியோ அவன் படி இருக்கிறது?
கார் வண்ணன் –
தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாத படியாக வடிவைப் படைத்தவன்.
வெறும் வடிவழகேயோ உள்ளது?’ என்னில்,
கார்க் கடல் ஞாலம் உண்ட –
தளர்ந்தார் தாவளம், ஆபத்து வந்தால் காப்பாற்றி விடும் அத்தனையோ?’ என்னில்,
கண்ணபிரான் –
தன்னைப் பிறர்க்கு ஆக்கி வைக்கும் உபகாரகன்.
வந்து வீற்றிருந்த-
தன் ஐஸ்வர்யம் -செல்வம் எல்லாம் தோற்றும்படி இருந்த.
ஏர் வளம் ஒண் கழனிப் பழனம் தென் திருப் பேரெயில் மாநகரே –
ஏரினுடைய ஸம்ருத்தியை -நிறைவினை யுடையனவாய்,
அழகியனவான கழனிகளையும் நீர் நிலங்களையுமுடைய
திருப் பேரெயிலாகிற மா நகரிலே சென்று சேர்வேன்.
உங்கள் தடைக்கு மீளுதல், அவ் வழியில் நிற்றல் செய்யேன்.
என்னைத் தேற்ற வேண்டா.’ வளம் – மிகுதிக்குப் பெயர் .
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply