நீ அவனுக்கு நீர்மை இல்லை, அவன் நிர்க்ருணன் -அருள் அற்றவன்’ என்றாயாகிலும்,
அச் சொல்லுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை காண்,
அவன் குணம் இல்லாதவன் என்று குண ஹானி – நீ சொல்லுவது என்னை மீட்கைக்காக அன்றோ,
அதுவும் நான் அவனைப் பற்றுகைக்கு உறுப்பாகச் சொன்னாய் ஆயினாயித்தனை என்கிறாள்.
கடியன் கொடியன் நெடிய மால் உலகங் கொண்ட
அடியன் அறி வரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-3-5-
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் –
அவன் குணம் இல்லாதவன் என்று சொல்லும்போதும் நானே சொல்ல வேணும் காண்;
நீ மூட்டிக் கடக்க நின்றாயித்தனை போக்கி, அவனைக் கலந்து உட் புகா நின்ற என்னளவு தெரியுமோ உனக்கு அவனை;
ஆன பின்னர் அவை தம்மையும் நான் சொல்லக் கேள் என்கிறாள்.
கடியன்-
கூரியன்; ஸ்வ கார்ய பரன் -தன் காரியத்திலே நோக்குள்ளவன். என்றது,
தனக்கு ஒரு காரியம் உள்ளது ஆனால், எதிர்த் தலையின் அளவு பாராதே மேல் விழுந்து வந்து
கலக்குமவன் என்றபடி. கடுமை-கூர்மை.
கொடியன் –
தான் மேல் விழுந்து வந்து கலக்கச் செய்தே ‘பிரியேன்’ என்ன வல்லவன். என்றது,
சம்ச்லேஷத்தின் -கலவியின் மத்யத்திலே பிரிவினை நினைத்தவன் இனிச் செய்ய மாட்டாதது ஒன்று உண்டோ? என்றது,
“பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான்” என்கிறபடியே,
கலக்கச் செய்தே மற்று ஒன்றினை நினைக்க வல்லவனுக்கு இனிச் செய்ய அரியது ஒன்று உண்டோ? என்றபடி.
(ஏது செய்தால் மறக்கேன்? மனமே! தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே.-பெரிய திரு. 9. 3 : 3.)
நெடிய மால்-
மால் என்பது பெருமை. நெடிய என்பது, அதன் மிகுதியைக் குறிக்கின்றது. அறப் பெரியவன் என்றபடி.
இதனால், கை புக்கு இருக்கச் செய்தேயும் அளவிட ஒண்ணாதபடி இருக்குமவன் என்கை.
‘பிரிய நினைக்கின்றான்’ என்று அறியா நிற்கச் செய்தேயும்
“சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவு” என்ன ஒண்ணாதபடியாய் இருக்கை. என்றது,
மேல் விழுந்து வந்து கலவா நிற்கச் செய்தே பிரிய நினைத்தால், அதனை அறியச் செய்தேயும்,
‘நீ பிரிய நினைத்தாய்’ என்று மடி பிடித்துக் கால் கட்டி விலக்க ஒண்ணாதபடியாய் இருக்கை.
(காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாமறிந்தோம்
மாண் குன்ற மேந்தி தண் மா மலை வேங்கடத் தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே- என்பது, திருவிருத்தம், 8.)
உலகம் கொண்ட அடியன் –
பிறர் உடைமையைத் தனக்கு ஆக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் எஞ்சாதபடி செய்யுமவன்.
அவர்களைப் பின்னே பாதாளத்திலே தள்ளுமவன். பாதாளம் கலவிருக்கை கொடுக்குமவன்.
ஒன்றைக் கொள்ளப் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றும் சேஷியாதபடி -எஞ்சாதபடி கொள்ளும் திருவடிகளை யுடையவன்.
அறிவு அரு மேனி-
கிட்டினால், ‘இத்தலைக்கு சர்வஸ்வத்தையும் – எல்லாச் செல்வத்தையும் தர நினைக்கின்றானோ, –
சர்வ ஸ்வபாஹரம்- எல்லாச் செல்வத்தையும் கொள்ளை கொள்ள நினைக்கின்றானோ,
என்று அறிய ஒண்ணாதபடியான வடிவையுடையவன்.
‘என்னுடைய ஆத்மாத்மீயங்கள் -ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு’ என்பாரைப் போலே சொல்லி ஆயிற்று
இத் தலையில் ஆத்மாத்மீயங்களை -ஆத்மாவையும் மற்றைச் செல்வத்தையும் அபஹரிப்பது -கொள்ளை கொள்வது. என்றது,
தன்னையும் தன்னுடைமையையும் இவள் இட்ட வழக்கு ஆக்கி, பின்னை யாயிற்று இவளைத் தனக்கு ஆக்கிற்று என்றபடி.
மாயத்தன்-
நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு’ என்ற இவ்வார்த்தையை அனுசந்தித்து -நினைத்து அதிலே நெஞ்சு
அபஹ்ருதமாய் -மூழ்கியிருக்க, அவ்வளவிலே கண்களிலே மணலைத் தூவி அகல வல்லவன்.
ஆகிலும்-
நீ சொல்லிச் சொல்ல மாட்டாதவையும், சிசுபாலன் முதலானோர் சொல்ல மாட்டாதவையும் எல்லாம்
நான் சொல்ல வல்லவள் அன்றோ அவை விடுகைக்கு உறுப்பாகப் பெற்றேனாகில்.
கொடிய என் நெஞ்சம் –
உல்லோகமாய்-லோக விசஜாதீயமான – உலகத்திற்கு வேறுபட்டதான என் நெஞ்சு. என்றது,
நாட்டாருக்கு, குணம் பற்றுகைக்குப் பற்றாசாய்த் தோஷம் விடுகைக்கு உடலாய் இருப்பது;
அங்ஙனன்றிக்கே, குண ஹாநி தன்னையே பற்றுகைக்கு உடலாகக் கொள்ளும்படியான என் நெஞ்சம் என்றபடி.
அவன் என்றே கிடக்கும்-
இத் தோஷங்கள் அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக் கிடக்கும் என்று பிள்ளான் பணிப்பர். என்றது,
அவன் கடியன் என்றால் அவன் கடுமை இப்போதே காண வேணும்;
கொடியன் என்றால், அவன் கொடுமை இப்போதே காண வேணும்;
அவன் அடைய முடியாதவன் என்றால், அவன் அடைய முடியாதவனானபடியை இப்போதே காண வேணும்;
அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்பவன் என்றால், அவன் எல்லாச் செல்வங்களையும்
கொள்ளை கொள்ள நான் இழந்திருக்க வேணும்;
அவன் அறிய முடியாதவன் என்றால், அவன் அறிய முடியாதவனாக இருக்கும் தன்மையை
இப்போதே அறிய வேணும் என்ற படியாம்.
அன்றிக்கே, என் நெஞ்சுக்கு மாயா வாத ருசி உண்டோ? அறிகின்றிலேன் என்பர் சீயர். என்றது,
விசேஷணாம்சத்தில் தாத்பரியம் இன்றிக்கே, விசேஷ்யத்திற்கு அவ்வருகு அறிகின்றது இல்லை என்றபடி.
இதனால், அவனுடைய சம்பந்தம் குணம் காரணமாக வந்தது அன்று,
ஸ்வரூபத்தோடு கூடியிருப்பது என்கை.
எல்லே-
என்னே! இஃது ஓர் ஆச்சரியம் இருக்கும்படியே!
அன்றிக்கே, ‘உன்னை மீட்க நினைத்த நான் சொன்னபடியே அன்றிக்கே ஒழிந்த பின்பு,
இனி, நீ நினைத்தபடியே நினைத்திரு’ என்று போகப் புக்காள் தோழி;
இங்ஙனே வாராய் என்று அவள் கையைப் பிடித்து ‘எல்லே’ என்று அழைக்கிறாள் என்னலுமாம்.
இவள் இப்படிச் சொன்னவாறே, ‘இது ஓர் அன்பின் தன்மை இருந்தபடி என்?’ என்று நினைத்தவாறே
தோழிக்கு ஒரு விகாரம் பிறந்தது; அதனைக் கண்டு ‘
துடி கொள் இடை மடம் தோழி’
-என்கிறாள். துடியோடு ஒத்திருக்கிற இடையையும், ஆத்ம குணத்தையுமுடைய தோழீ!
அன்றிக்கே, உன் வடிவிற்கும் குணத்திற்கும் என் பக்கலுண்டான பாவ பந்தத்துக்கும் -அன்பிற்கும் ஈடாக
வார்த்தை சொல்லப் பாராய் என்கிறாள் என்னுதல்.
நான் அது அறியாமையாலும் வேண்டாமையாலும் சொல்லுகிறேனோ,
தாய் சொல்லுமதற்கு அஞ்சிக் காண் நான் இப்படிச் சொல்லுகிறது என்ன,
அன்னை என் செய்யுமே-
உன் சொல் கேளாத நான், இனி, தாய் சொல்லோ கேட்கப் புகுகிறேன்.
அநசூயை, பிராட்டியைப் பார்த்துப் ஸ்திரீகளுக்கு -பெண்களுக்குத் தெய்வம் பர்த்தாவே -கணவனே காணும்’ என்ன,
கேட்ட பிராட்டி நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருந்தாள்;
நான் இவர் பக்கல் ஈடுபாடுடையவளாய் இருக்கிற இருப்புக்குக் காரணம், பெருமாள் பக்கல் உண்டான குணங்களாலே என்றே
அன்றோ நாட்டார் நினைத்திருப்பது;
தெய்வ சம்பந்தத்தால் அவருக்குக் குணமுண்டான தித்தனை போக்கி, குணங்கள் இல்லாதவருமாய் அழகு இல்லாதவருமானாலும்
நான் அவரை விடமாட்டாதே இருக்கும் இருப்பைக் காட்டலாமே அன்றோ
அவரைக் குணங்களோடு பிரித்து வைக்கப் பெற்றதாகில்’ என்றாளே அன்றோ.
ஒரு விஷயத்தில் பாவ பந்தம் உறைத்திருப்பார் வார்த்தையாயிற்று இது.
“வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது;-பெரிய திருமொழி, 11. 8 : 7.- என்னக் கடவதன்றோ. நன்று;
“இது, குணாதிக விஷயத்தில் சொல்லுகிற வார்த்தையாகில்,
கரும்பின் புழு கரும்பு அன்றி உண்ணாது’ என்ன வேண்டவோ? என்னில்,
அவனுக்கு இந் நன்மைகள் இல்லையே யாகிலும் நான் அவனை விட மாட்டேன்’ என்கிற பாவ பந்தத்தில்
உறைப்புத் தோற்றும்படி மாறாடிச் சொல்லுகிறதல்லது, குணாதிக விஷயத்தில் இது இருப்பதாமோ என்க.
(ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் குண க்ருத தாஸ்யம் விட சிறந்ததே)
என் ஸ்வரூபத்தைப் பார்த்தால் நான் உன்னை விட மாட்டேன்,
நீ- நீ அன்றிக்கே – இருந்தாலும் என்னால் விடப் போகாது.
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply