இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று
பழங்கிணறு வாருகிறது என் –
இப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்ன வென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

இது நெடுங்காலம் பகல் விரவாத சம்சார காள ராத்திரியிலே கண் கெட்டு முன்னடி தோற்றாதே திரிந்த நான் –
இப்போது -ஸூப்ரபாதா ச மே நிசா –என்னும்படி –
இரவு விரவாத பகலாய்ச் செல்லும் படியான தொரு நல் விடிவைக் கண்டேன் –
பகவத் ஆஜ்ஜைக்கு பயப்பட்டு முப்பத்து வட்டத்தில் போவது வருவதாய்த் திரிகிற ப்ராதேசிகனான ஆதித்யன் அன்றிக்கே –
ஒரு காலத்திலும் போக்கு வரத்து அன்றிக்கே -சாஸ்தா ஜனா நாம் -என்னும் படி
சர்வத்தையும் நியமித்துக் கொண்டு
உபய விபூதி உக்தன் ஆகையால் சார்வத்ரிகனான நாராயணன் ஆகிற ஆதித்யனைக் கண்டேன் –

இந்திரியங்கள் துணை செய்யக் காண்கிற காட்சி அன்றிக்கே -ஸ்வப்ன தீ கம்யம் -என்னும் படி நேர் கோடு நேரே நெஞ்சாலே
காணப்படும் ஸ்வப்ன அவஸ்தையிலும் காட்டிலும் விசதமாய்-ப்ரத்யக்ஷ சாமானகாரமான மானஸ ஞானத்தால்
இந்திரியங்கள் கலக்க ஒண்ணாத படி அழகிதாக மீண்டு அவனைக் கண்டேன் –

வடிவு அழகு விளங்கா நின்றுள்ள திரு வாழி யையும் புகர் விளங்கா நின்றுள்ள சிவந்த திருவடிகளையும் யுடைய சர்வேஸ்வரனுடைய
பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள தேஜஸ்ஸை யுடைத்தான
வடிவு அழகை ப்ரத்யபி ஜ்ஞார்ஹமாம் படி அழகிதாகக் கண்டேன்

வான் திகழும் -என்றது
மேகத்தோடு ஓக்க விளங்கா நின்றுள்ள திரு மேனி என்னவுமாம் –

ஊன் திகழும் என்றது
சர்வேஸ்வரன் திரு மேனியில் விளங்கா நின்றுள்ள திரு வாழி என்னவுமாம் —
சத்ரு சரீரத்தில் விளங்கும் என்னுதல் –

(ஸூ ப்ரபாதா ச மே நிசா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2–
பீஷோ தேதி ஸூர்யா -தைத்ரியம் ஆனந்த வல்லி
அந்தப் ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம் -3-11-
ஸ்வப்ன தீ கம்யம் -மனு -12-122-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திரு மேனி யான் கனவில் -67-கனவில் மீண்டு அவனை மிகக் கண்டேன் -இதில்
அங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடராழி -67-இதில் ஊன் திகழும் நேமி –
ஊன் -என்று அழகு என்றும் திருமேனியைச் சொல்லி அதில் திகழும் ஆழி
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு —
அன்றிக்கே சத்ருக்களின் சரீரங்களில் விளையாடும் சுடர் ஆழி என்றுமாம்
வான் -பரமே வ்யோமன் -மேகம் போல் விளங்கா நிற்கும் நீல மேனி -முகில் வண்ணன் -)

—————————————————————————————-

வெறும் நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே
ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

(அபரிச்சேதய அழகு என்றும் -அவயவ பூதை என்றும் -புருஷகார பலம் என்றும் மூன்று நிர்வாகங்கள்)

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள் நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக் கண்களை யுடையவளும்
மா மலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செவ்விப் படிகோலம்–இயல்பான தக்க சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டு வைத்தும்
ஞாலத்தாள்–பூமிப் பிராட்டியானவள்
அடிக் கோலி–பாரித்துக் கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப் பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றி யிருக்கும் படியான அழகினால் குறை யில்லை யன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

(அடிக் கோலி–இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து_

நாட்டில் அழகு அடங்க லும் கோதாம்படி-அழகு படைத்த அவன் அழகு ஆகிற கோது கலவாத வடித்த அழகையும் –
வடிவிலே வடிவாய் ஒளி பெற்று போக்தாக்கு அளவிட ஒண்ணாத மிக்க யோக்யதையை யுடைத்தான திருக் கண்களையும் யுடையளாய்

(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

ஸ்லாக்யமான தாமரைப் பூவைப் பிறப்பிடமாக யுடையளாகை யாலே -ஸுகந்த்ய ஸுகுமார்யங்களைக் குறைவற உடையளுமான
பெரிய பிராட்டியாரும் -அரும்பினை அலரை-என்கிறபடியே
செவ்விய ஸ்வபாவமான அவன் வடிவு அழகைக் கண்டு
அனுபவித்துக் கண்ணை மாற வைத்தல் கால் வாங்குதல் செய்ய மாட்டாதே –

அவ் வழகு வெள்ளத்திலே ஆழம் கால் பட்டு
இறையும் அகலகில்லேன் -என்னும் படி
கால தத்வம் உள்ளதனையும் -க்ஷண காலமும் விஸ்லேஷிக்க க்ஷமை அன்றிக்கே இரா நின்றாள்-

ஷமையே வடிவான ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் -தலை நீர்ப் பாட்டிலே அனுபவிக்க இட்டுப் பிறந்த பேர் அளவு யுடையளான
அவள் ஆழம் கால் பட்டு அழுந்து கிறபடியைக் கண்டு இருக்கச் செய்தேயும்
அவளும் அவனுமான சேர்த்தியைக் கண் அழிவு அற அனுபவிக்கைக்கு அநு குணமாக –
இலை அகலப் படுத்துப் பாரித்து ஆசையைப் பண்ணிக் கொண்டு செல்லுகிற இது ஏதாய் இருக்கிறதோ

(மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

இதுக்கு அடி -இருவருக்கும் பாத்தம் போராமல் சீறு பாறு என்ன வேண்டும் படி
போக்யதை அளவு பட்டு இருக்கிற ஷூத்ர விஷயங்கள் போல் அன்றிக்கே
திரள் திரளாக இழிந்தாலும் குமிழ் நீர் உண்ணும் படி அழகால் குறை வற்று இருக்கை இறே –

(அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

(வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
யுவா குமார
அரும்பினை அலரை
செவ்விப் படிக் கோலம்
பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர -பால –77-36-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

——————————————————————————————-

பெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே
முன்பு (74-பாசுரத்தில் )செருக்கி வார்த்தை சொன்னவர் –
இப்போது நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி –
நாம் இவ் விஷயத்தையோ கவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று
கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன்  எனைப் பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)

ந இதி ந இதி என்றே வேதம் சொல்லும் அஸ்தி என்பதே அஸ்தமிக்காமல் -இது இல்லை இது இல்லை என்றே வேதம் சொல்லும்
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

அவன் படிகளை உள்ளபடி தறை கண்டு பேச ஒருப்பட்ட வேதங்களானவை -அது என்று சொல்லும் அத்தனை போக்கி
(யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ )இதம் இத்தம் என்று பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பெருமையை யுடைய சர்வேஸ்வரனை

அபரி பூர்ணானமாம் படியாக ப்ரேமம் வழிந்த -செவிக்கு இனிய செஞ்சொல் அன்றிக்கே –
கேட்டார் செவி வெடிக்கும் படி இருக்கிற வெட்டிய சொற்களால் சொன்னேன் –
இப்படிச் சொல்லி விஷய வைபவத்தைப் பார்த்ததும் அனுதபிக்க வேண்டி இருக்க –

அது செய்யாத அளவன்றிக்கே-
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையனானவன் இடத்தில் நின்றும் உண்டாய் வரக் கடவதான பிரசாதமானது
பண்டு கவி பாடினவர்களுக்கு அவன் கொடுத்துப் போரும் படியை நினைத்து –
நான் பாடின கவிக்கு பரிசிலாக ஏதேனும் சிறிதாகிலும் தாராதோ -என்று
அநேக நாள் எல்லாம் பிரதியுபகாரமாக நிரீக்ஷித்துக் கொண்டே இருந்தேன் –

1-விஷய கௌரவத்தையும்-2- சொல்லின் பொல்லாங்கையும் -3-பச்சையை நச்ச இருந்த படியையும் நினைத்து
என்ன மூர்க்கனோ -என்று அனுதாபிக்கிறார் –

பின்னை இவர் ஒரு பிரயோஜனத்துக்குக் கவி பாடினவரோ -என்னில் –
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக் கடாஷிக்குமாகில் –
அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு என்று இருப்பார் ஒருத்தர் இறே -அத்தாலே குறை இல்லை –

சென்ற வரம் –
அவன் பக்கல் சென்று பிறக்கக் கடவ வார்த்தை (அருள் கீழ் இங்கு சிறப்பான சொல் மா ஸூச வார்த்தை )- அவன் இறை யேனும் ஈயும் கொல்-என்று இருந்தேன் -என்றுமாம் –
மறை யாங்கு என உரைத்த மாலை—வாக் விக்ருதாஸ ச வேதா -என்கிறபடியே
சொல்லுகிற வார்த்தை எல்லாம் மறை என்னும் படி சொல்லுமவன் என்னவுமாம்

இத்தால்
அகச் செறிவில் பொல்லாங்கு அறியான் ஒருவனைச் சொல்லப் பெற்றதோ –
சர்வஜ்ஞனை இறே நான் மருட்டிச் சொல்லிற்று என்கை –

(பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்–திருவாய் -1-5-11-
இன் கவி பாடும் பரம கவிகள் –7-9-6-
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர் -பெரிய திருமொழி -2-10-4-
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தத் விஷ்ணோ பரமம் பதம் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –
வாக் விவ்ருதாஸ் ச வேதா –
பாடவும் செய்து-இளைய என் புன் கவிதைக்கு – பிரதியுதவியையும் எதிர்பார்த்து – பரிசும் வேண்டி இருந்தேனே -மூர்க்கனேன் மூர்க்கனேனே –
ப்ரயோஜனாந்தரங்களை எதிர்பார்த்தார் அல்ல -அனுதபிக்கவும் குறையில்லை –
மாயோன் கண் சென்ற வரம் -மாயோனான அவன் இடத்திலே பொருந்தி இருக்கும் சிறந்த அருள் என்றும்
வரம் -வார்த்தை என்றும் -சிறந்த வார்த்தைச் சிறிதேனும் நமக்கு அருள்வானோ என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்றுமாம் -)

——————————————————————————–

விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய
ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேஸ்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை

மூர்க்கத்தவனை-மூகத்தவனை -அஹங்காரம் -பிடிவாதம் கொண்டவனை
நரம் கலந்த சிங்கம் ஆய் கீண்ட–நரசிங்க வுருக் கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம் மா நிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

தேவர்கள் பக்கல் பெற்ற வரத்தைத் தனக்கு உறுதியாக நினைத்து –
அந்த தேவர்களுக்கும் அடியான பெருமையுடையனான தன்னை
ந நமேயம் என்னும் படி வணங்காதே போந்தவனாய் –
அந்த தேவர்கள் வரத்தால் வந்த மிடுக்கையும் -தன் தோளாலே எறிந்து கொண்ட
மிடுக்கையும் தனக்கு உபகரணமாக உண்டு என்று கருதி –
அத்தால் வந்த மேனாணிப்பை யுடையனான ஹிரண்யனை –

சேராச் சேர்த்தியான நரத்வ ஸிமஹத்வங்களோடே கூடின வடிவை யுடையனாய்க் கொண்டு கிழித்துப் பொகட்டவனாய் –
பரஸ்பர விருத்தமான இரண்டு வடிவை எடுத்துக் கொண்ட அளவில் பொல்லாதாய் இருக்கை அன்றிக்கே –
சேர் பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போலே அத்யந்த ரசாவஹமான அழகை யுடையவனுடைய
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளே -அழகிய இடமுடைத்தான மஹா பிருத்வியிலே
அநந்ய பிரயோஜனர்க்கு புஜிக்கலாம் படி நிரதிசய போக்யமான அம்ருதம் –

மூர்க்கத்தவனை என்ற பாடமான போது –
மூர்க்கனான ஹிரண்யனை -என்றபடி –

(த்விதா பஜ்யேயம் அப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-
ம்ருகோ ந பீம -ருக் -1-21-154-
நார ஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான்முகன் -22-
குறையாக வெஞ்சொற்கள் சொன்னேனே என்று கை வங்காத் தொடங்கின என்னை கவி பாட வைத்ததே இந்த ஆரா அமுதனுடைய அழகே என்கிறார் – )

——————————————————————————————-

அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் –

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன் மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திரு வாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்-அமுதினில் வரும் பெண்ணமுது கொண்டான் என்றுமாம்
சொல்லப் பட்ட–சொல்லப் பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப் பாசுரங்களினால்
ஏத்தி  நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

ஏத்தி நவின்று என்பதை அமுது தேன் ஆழியான் -அமுது கொண்டு உகந்தான் என்றும் ஒவ்வொன்றிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

நித்ய போக்யமான அம்ருதம் என்றும் –
சர்வ ரஸ சமவாயமான தேன் என்றும் –
நிரதிசய போக்யமான திரு வாழியை யுடையவன் என்றும் –
அஸூர பய வீதராய் தேவர்கள் சரணம் புக்க வன்று -கடலில் சாரமான அம்ருதத்தை
அந்தக் கடலைக் கடைந்து வாங்கிக் கொண்டு கொடுத்து
இதுக்காக வாகிலும் நம்மை வந்து அர்த்திக்கப் பெற்றோமே என்றும் ப்ரீதனானான் என்றும் –
ரஸோ வை ச -என்றும் -சர்வ ரஸ -என்றும்
மத்வ உத்ஸ -என்றும் -த்ருத சங்க சக்ர -என்றும் -சொல்லும் ஸ்ருதி சாஸ்த்ரங்களாலே சொல்லப் பட்ட விலஷணனான சர்வேஸ்வரனை

ஆதாரதிசயம் தோற்றப் புகழ்ந்து சொல்லி -எல்லா போக்யத்தையும் -தன் போக்யத்தையிலே பொதிந்து இருக்கையாலே
அமுது என்று சொல்லப்படுகிற அவனையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய்
இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர் மமனாய் விழுந்தேன் –

(அமுது அவனைச் சொல்லி –
அமுது கொண்டு உகந்தான் என்று அவளை சொல்லி
அமுது அன்ன சொன்மாலை மிதுனம் பற்றிய இவர் பிரபந்தம் –
இப்படி மூன்று அமுதன்கள் இதில் உண்டே)

(ஸர்வ ரஸ
ப்ரயோஜனாந்தர பரர்களும் தம்மை இதற்க்காகவாவது ஆஸ்ரயிக்கிறார்களே என்று உகக்குமவன் அன்றோ
உதாரா ஸர்வ ஏவைதே -ஸ்ரீ கீதை -7-18-
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -பெரிய திருமொழி -6-1-2-
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் -என்றவாறே
இப்பொழுது-ரஸோ வை ஸ-என்றும் ஸர்வ ரஸ என்றும் -சொல்லப்படும் அவ்விஷயத்தின் இனிமையை அனுசந்தித்த உடன்
அமுதன்ன சொன் மாலை என்கிறார்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-ருக் -1-21-124-
த்ருத சங்கு சக்ர
சங்க சக்ர கதா தர
யஸ்மின் அக்ருத்ரிம கிராம் கதிரேக ஏக கண்டா -பிரமம் பிரமாதம் விப்ரலிப்ஸை போன்ற தோஷங்கள் அற்ற ப்ரமாணங்களால்
ஸாஸ்த்ரங்களால் ஒரு மிடறாகக் கோஷிக்கப் படும் திருமால் அன்றோ – )

——————————————————————————————

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ –
சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–சாதன புத்தியால் (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்-சொல் ஏறு உழவர்கள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேஸ்வரனிடத்தில் நெருங்கி யாஸ்ரயித்து
அதனால் பெற்ற பயன் என் கொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜநம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வ ப்ரயத்நத்தால் என்ன பேறு பெற முடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநாநுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காண முடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்ற நிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப் பெற்றேன்?
(அவனே காட்டிக் கொடுக்கக் கண்டேனே யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை

அவனே தவம் செய்து என்னை அடைய இருக்க நான் செய்ய வேண்டுமோ )

அவன் திரு நாமங்களை ஆதாரம் தோற்றப் பல காலும் சொல்லிக் கொண்டு –
சப்தார்த்த சம்பந்தம் அறிந்து கவி பாட வல்ல பிரயோஜனாந்தர பரரான கவிகள் –
செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு அந்த சர்வேஸ்வரன் இடத்தில் நெருங்கி ஆஸ்ரயிக்க
அத்தால் பெற்ற பிரயோஜனம் ஏதோ –

இப்படி நெருங்கி சாதன அனுஷ்டானம் பண்ணினாருடைய சரீரத்தை ஒறுத்துப் பண்ணின
தபஸ்ஸாலே காண அரியனாய் -மேகம் போலேயும் -நீல மணி போலேயும்
ஸ்ரமஹரமான வடிவை யுடையனுமான சர்வேஸ்வரனை
அதி ஸூத்ரனான நான் இன்று எந்தத் தபஸ்ஸாலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே என்று கருத்து –

தே நைவ பல ப்ராப்ய பலம் அபி தேநைவ நாராயண -ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே -மாதா பிதா சரணம் ஸூஹ்ருத கதி நாராயணனே

(நா வலர் -நா வன்மை யுடையவர் என்றும்
நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்
மெய்த்தவம் -மெய் சரீரம் -சரீரத்தை வருத்திச் செய்யும் சாதன அனுஷ்டானம் –
யான் இன்று ஏத்தவத்தால் காண்பன் கொல்-தானே தன்னைக் காட்டி அருளினான் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்க்கு இனி மாறுண்டே -4-5-9-என்பது போலே
அவனைக் கொண்டே அவனைக் கண்ட தனது ஒப்பற்ற பெருமையை உணர்த்துகிறார் இதில் -)

—————————————————————————————

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் –
நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட
அவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து-பூவும் பிரகிருதி பதார்த்தம் தானே
திருக் கோட்டி எந்தை திறம்–திருக் கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை-ஸ்வரூப ரூப குண விபவங்களை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–அனுபவத்துக்குப் போக்கு வீடாக  கை தொழவும் பெற்றேன், (ஆன பின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந் நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்றா அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத் தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்ப வாஸமே தொடங்கி அறிவேன்)

கீழ் பாசுரத்தில் அவனே காட்டக் கண்டதுக்கு இதுவே திருஷ்டாந்தம்

ஒரு சாதனத்தை அறிந்து அனுஷ்டிக்கைக்கு யோக்கியதையும் கூட இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்துக்கு உள்ளே கிடந்து
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே சந்நிஹிதனாய் –
கர்ப்ப ஸ்தானான என்னுடைய தய நீய தசையைக் கண்டு
நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த என் ஸ்வாமி யுடைய குண சேஷ்டிதாதிகள் ஆகிற பிரகாரத்தைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்

அனுபவத்துக்கு போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அந்வயிக்கப் பெற்றேன்
ஆன பின்பு பரப்பை யுடைத்தான பூமியை ஒருவர் இரக்க அன்றிக்கே -அங்கே தானே சென்று
அளந்து கொண்ட திருவடியை இன்றாக அறிகிறேன் அல்லேன்-

ஸுலப்ய காஷ்டை -உலகளந்த காலத்துக்குப் பின்னானாரும் வணங்கும் ஜோதி அன்றோ

கை தொழுவதற்காகப் பெற்ற பலன் இல்லையே -அதுவும் இவனே செய்வித்தான் அன்றோ

(கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகேழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டானை நீயுமே –திருவாய் -1-10-5-
அறியாக் காலத்துள்ளே -2-3-8-
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
இவர் அயோனிஜர் என்று ப்ரஸித்தம் இறே -குருக்கத்தி மலரே இவருக்கு கர்ப்ப ஸ்தானம் –
அயோநிஜரான முதல் ஆழ்வாரும்
அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை -6- பாசுரத்தை அடி ஒற்றியே இப்பாசுரமும் –
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ச வை மோஷார்த்த சிந்தக -சாந்தி பர்வம் -358-73-
பரமபத நாதனோ என்னைக் கடாக்ஷித்தது
நீர்மைக்கு எல்லை நீளமான திருக்கோட்டியூரான் அன்றோ எனக்கு ஜாயமான கடாக்ஷத்தை அருளினான்
அதனாலேயே இன்று அளவும் அவனை மறவாமல் இருக்கும் படியும் அருளினான் -)

——————————————————————————————–

அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை —
வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் -(ஞானீ ஆத்மைவ மே மதம் பிரிய தமனை அவனே வரிப்பானே )

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கு மெம்பெருமானுடைய-ஸ்வாமி ஆகிற
திறம்பா வழி–அவ்யஹித உபாயமான -பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக் கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திருத் தேர்த் தட்டிலே அர்ஜுனன் ஒருவனுக்கும் -ஒரு கால் மாமேகம் -என்று சொன்ன தம்முடைய நிரபேஷ உபாயத்தை
சர்வ காலத்திலும் சர்வர்க்கும் கிரயம் செலுத்திக் கொண்டு
அழகிய கோயிலிலே அர்ச்சாவதார ஸூ லபனாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளுகிற
என் ஸ்வாமி யான பெரிய பெருமாளுடைய

(கொண்டல் வண்ணன் கோவலனாய் -இத்யாதி அவனே இங்கு பின்னானார் வணங்கும் ஜோதி அன்றோ இவன்
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்குமவன் அன்றோ)

மற்று ஒன்றால் -சலிப்பிக்க ஒண்ணாத நிரபேஷ உபாய பாவம் ஆகிற மஹா மார்க்கத்தைப் பற்றி நடக்கும் அவர்களுக்கு ஒழிய
அனுபவத்தாலும் தொலைக்க ஒண்ணாத படியான அவிஸால்யமாய் -அடித் தலை கண்டு அறுக்க ஒண்ணாத படி
தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரம் ஆகிற நரகத்தைத் தாங்கள் சாதன அனுஷ்டானத்தாலே போக்கித் தாங்கள் சென்று
கிட்டுவதுக்கு முன்னே நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற ஸ்தலமாய்-ஸ்வ யத்னம் சாத்தியம் அல்லாத
அரணை யுடைத்தான கலங்காப் பெரு நகரின் வாசலில் கதவு தப்பிற்று -இப்போது இத்தை நிரூபித்து அறிந்தேன்

(நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்)

கடி என்று பரிமளமாய்-போக்யதை விஞ்சின நகரம் என்றுமாம் –
இத்தால்
பகவத் ப்ரீதி சாத்தியம் பரம பதம் -ஸ்வ யத்ன சாதனம் அன்று என்ற படி –

(மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்
சரணம் நாராயணம்
நாராயணன் பாராயணம்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணவ் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-
அயோத்யா -அபராஜிதா -வானோர் நகர் -மரீசீநாம் பதம் -நித்ய ஸூரிகள் இட்ட வழக்காய் அன்றோ வைத்து அருளுகிறான்
அவனையே உபாயமாகக் கொண்டு அவனை அடைந்து அனுபவிக்கலாம் என்கிறார் ஆயிற்று – )

—————————————————————————————————-

நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மைப் பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன -விரோதியைப் போக்கியும்
விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் –

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-கதஞ்சிறந்து -பாட பேதம்

பதவுரை

முன்–முற் காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு-பதவி -நீர்மை என்றும் -வழி என்றும்
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

மிக்க சீற்றத்தை யுடையனான கம்சனைச் சீறி அவன் ஸந்நிதியில் தன் கொலை தானே காணும்படி முடித்து
தப்பிப் பிழைக்க இடம் அறும் படி அடர்த்து யுத்த உன்முகமான குவலயா பீடத்தை அநாயாசேன முறித்து விழ விட்டு

இப்படி மிடுக்குக் கொண்டு வியாபாரிக்க ஒண்ணாத படி உதாரம் என்பதொரு குண லேசம் (குண லேசம் என்றது இது இவன் சொத்து அல்லவே )கிடக்கையாலே நீர்மையை
யுடைமையாய்க் கொண்டு கொடுத்து வளர்ந்த கையாலே உதக ஜலத்தை ஏற்று வாங்கி முன்பு ஒரு காலத்தில் கொடுக்கையில்
தீஷித்து இருந்த மஹா பலியை இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்மச்சாரியாய்க் கொண்டு பூமியை அவன் பக்கலில்
நின்றும் வாங்கிக் கொண்டிலையோ –

உன்னை ஆஸ்ரயித்த வாஸூதேவர் -தேவகியார் -இந்திரன் இவர்களுக்கு விரோதியைப் போக்கிக்
கார்யம் செய்து கொடுத்திலையோ -என்றபாடு –

கதவுகை -சீறுகை
அதவுகை – நெருக்குகை –

கதவிக் கதஞ்சிறந்து -என்ற பாடமான போது –
கோபத்தால் சிறந்து அழகியனாய் -என்ற பொருளாகக் கடவது

பதவி என்றது –
பதவி என்று வழியாய்
கம்சனைக் கொன்றால் போலே மூலை அடியே யன்றிக்கே வழி கொடு வழி என்னவுமாம் –

(சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை -9-4-11-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் –4-3-1-
பாணியால் நீர் ஏற்று
அலம் புரிந்த நெடும் தடக்கை -அலம் அலம் போதும் போதும் என்னும்படி கொடுத்து நீண்ட திருக்கையால் நீர் ஏற்று
கிருஷ்ணா ஜினேந ஸம் வ்ருண்வன் வதூம் வக்ஷஸ் ஸ்தலா லயாம்
ஆஸ்ரிதர்களுடைய தடைகளைப் போக்கி நீ செய்து அருளிய கார்யங்கள் லோக ப்ரஸித்தம் அன்றோ
உன்னாலும் மறைக்கப் போகாதே என்கிறார் – )

———————————————————————————————–

நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் -உமக்குப்பெற வேண்டுவது
சொல்லீர் என்ன -உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார்

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியின் இடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேஸ்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்ட வழக்காக நிர்வஹிக்க மாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதி தேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

(திருமால் -மிதுனம் இல்லாமல் இழக்கிறேனோ
செம் கண் வாத்சல்யாதிகள் இல்லாமல் இழக்கிறேனோ
நெடியானை -புருஷோத்தமத்வம் இல்லாமல் இழக்கிறேனோ
எங்கள் பெருமானை -ஸ்வாமி இழக்கிறேனோ
நண்ணி -கிட்டாமல் இழக்கிறேனோ
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயிக்காமல் இழக்கிறேனோ

அவனைப் பெற்றால் பொன்னுலகம் ஆளீரோ புவனா எல்லாம் ஆளீரோ என்று கொடுக்க வல்லவன் ஆவேனே )

ஸ்ரீ யபதியாய் -வாத்சல்ய அம்ருத வர்ஷியான சிவந்த திருக் கண்களையும் யுடையனாய் –
ருணம் ப்ரவ்ருத்தம் -என்னும் படி
ஆஸ்ரித விஷயத்தில் -எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று உருகி நெஞ்சு பதண் பதண் என்று
இருக்குமவனாய் எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டி –

அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
பூமி யுப லஷிதையான லீலா விபூதியை நான் இட்ட வழக்காக நிர்வஹியேனோ –

நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான பெருமையை உடையனாய்க் கொண்டு பரம பதத்தில்
கால தத்வம் உள்ளதனையும் ஸூ கோத்தரனாய் பொருந்தி இரேனோ-

உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

(தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –தஸ்ய உதிதி நாம
கோவிந்த்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஸ்தோத்ர ரத்னம் -28-

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

அர்த்த தஸ் ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யா தயோ குணா
ஹத ஸத்ரும் விஜயினம் ராமம் பஸ்யாமி ஸூஸ் திதம் –யுத்த -116-24-

அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே -1-2-7-
அவனுடைய சம்பத்து என்னும் அனுசந்தானத்தால் லீலா விபூதியும் உத்தேஸ்யமாகுமே -)

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading