நம் பிள்ளை -இச்சை -ஸ்வரூபம் –இரக்கம் -உபாயம் -இனிமை -உபேயம் -என்று அருளிச் செய்தார் –
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸீமா -ததீய சேஷத்வம்–பர ஸ்வரூபத்துக்கு ஸீமா -அர்ச்சாவதாரம்
விரோதி ஸ்வரூபத்துக்கு -அஹங்கார மம ஹாரங்கள்–உபாய ஸ்வரூபத்துக்கு ஸீமா -பகவத் கிருபை
உபேய ஸ்வரூபத்துக்கு ஸீமா -பகவ ந் முகோலாசம்–என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
தன்னை சரீரியாக பிரபத்தி பண்ணி அனர்த்தப் படுதல்–தன்னை சரீரமாக பிரபத்தி பண்ணி உஜ்ஜீவித்தல்
செய்யும் அத்தனை -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் –
பிள்ளை நம் ஜீயர் ஸ்ரீ பாதத்திலே ஸ்ரீ பாஷ்யம் வாசியா நிற்கச் செய்தே -திருப் போனகம் சமைந்தது – என்றவாறே
சொக்கத் தேவரை திருவாராதனம் பண்ணி வாரும் -என்று அருளிச் செய்ய -அடியேன் திருவாராதனத்தை அறிந்தேனோ -என்று விண்ணப்பம் செய்ய –
நானோ சால க்ரமம் அறிந்து இருக்கிறேன் ?-த்வயத்தைக் கொண்டு திருவடி விளக்கி அமுது செய்ய மாட்டீரோ ? என்று அருளிச் செய்தார் –
பட்டர் ஸ்ரீ பாதத்தில் சம்பந்தம் உடையார் ஒரு சோமயாஜி யரான ஸ்ரீ வைஷ்ணவர் -எனக்கு திரு வாராதன க்ரமத்தை அருளிச் செய்ய வேணும் -என்ன -பட்டரும் இவருக்கு உடையவருடைய நித்ய பிரகாரத்தை அருளிச் செய்ய -அவரும் அது கொண்டு நெடு நாள் திருவாராதனம் பண்ணிப்
போரச் செய்தே -ஓன்று இரண்டு நாள் பட்டர் திருவாராதனத்தில் சேவித்து இருந்தார் -அங்கு தமக்கு அவர் அருளிச் செய்தவை ஒன்றும் கண்டிலர்
-அவர் திருவாராதனம் பண்ணி யருளின படி -தாம் திருமஞ்சனம் பண்ணி சேலை சாத்தி திருநாமம் சாத்தி -அமுது செய்ய தளிகை வைத்த அளவிலே –
தெற்கு ஆழ்வாரை -எழுந்து அருளி வைத்துக் கொண்டு -வாரும் கோள் -என்று தமக்கு படைத்த திருப் போனகத்தையும் தண்ணீர் அமுதத்தையும்
அமுது செய்யப் பண்ணி பிரசாதப் பட்டு அருளினார் -இத்தைக் கண்டு அந்த ஸ்ரீ வைஷ்ணவர் எனக்கு அருளிச் செய்த படி ஓன்று
-தேவரீர் இப்படி செய்து அருளிற்று -இதுக்கு அடி என் என்று – ஆரத்தியோடே கேட்க -சகல வேத சாஸ்திரங்களையும் ஆராய்ந்த -இடத்து
உமக்கு அப்படி அல்லது சொல்லலாவல் இல்லையாய் இருந்தது -என்னை நிரூபித்த இடத்து -கால்ஆழும் நெஞ்சு அழியும்
கண் சுழலும் -என்று தளர்ச்சி அடையும் என்னை பார்க்கும் பொழுது -இப்படி ஒழிய செய்கைக்கு ஒரு செயல் கண்டிலேன் என்று அருளிச் செய்தார் –
நஞ்சீயர் சரம தசையில் அருளிச் செய்த வார்த்தை —ஸ்வ விஷயமான வியாதி -சாந்த்யர்த்தமான பிரபதநமும் ஸ்வரூப ஹானி —
இது தான் பாரதந்த்ர்யத்துக்கு தூஷணம்-பர விஷய வியாதி சாந்த்யர்த்தமான சாங்க பிரபதநமும் ஸ்வரூப ஹானி -இது ஈஸ்வரனுடைய
பர ரஷண விஷயமான சர்வ ஞ்ஞத்வாதிகளுக்கு தூஷணம் –
அனந்தாழ்வான் நஞ்சீயரைக் கண்டு
-இது என் ஜீயா -ஸூகுமாரராய் இருக்கிற நீர் – வேர்த்த போது நீராடி -பசித்த போது அமுது செய்து -பட்டரை சேவித்து இருந்தால் –
சந்யசித்து வந்திலீர் என்று உம்மைப் பரம பதத்தில் நின்றும் தள்ளுவார் உண்டோ – இனி என் என்று பார்த்து
-மந்த்ராந்தரங்களை அடைய விட்டு -திரு மந்த்ரத்திலே பிறந்து -த்வயத்திலே வளர்ந்து த்வயைக நிஷ்டர் ஆவீர் -என்று வாழ்த்தி –
பின்னை அருளிச் செய்த வார்த்தை
-த்ருஷ்டத்தில் உள்ளது எல்லாம் பட்டருக்கு ஆக்கினோம் – த்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் என்று இருப்பதோர் இருப்பு உண்டு
-அது பூர்வ தசையிலும் அநர்த்தாயவாம் -என்று பார்த்து -த்ருஷ்டதுக்கு கடவார் பெருமாள் – அத்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் -என்று இரும்
-த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் என்னில்
-த்ருஷ்டத்தில் கர்மாதீனமாக ஏதேனும் சுருங்கு உண்டாகில் ஆசார்யனை வெறுத்த போது பெருமாளைக் கொண்டு
தீர்த்துக் கொள்ள ஒண்ணாது -பெருமாளை வெறுத்தான் ஆகில் ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் –
நஞ்சீயர் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்திலே-தெற்கு ஆழ்வார் பட்டர் -தூவிரிய பாசுர வ்யாக்யானத்தில் இவரை பெற்றி என்றும் சொல்வர்
-ஜீயர் ஸ்ரீ பாதத்திலே எழுந்து அருளி -உமக்கு செய்ய வேண்டுவது என் -என்று கேட்டு அருள -ஜீயர் – பெருமாள் சர்வ ஸ்வதானம் பண்ண அனுபவிக்க வேண்டி இரா நின்றது -என்று விண்ணப்பம் செய்ய -பட்டரும் இத்தை -திருமாலை தந்த பெருமாளுக்கு-இவர் நம் பெருமாளுடைய
அர்ச்சகர் -அருளிச் செய்ய -அவரும் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய -பெருமாளும் புறப்பட்டு அருளி -சேலையைக் களைந்து அருளி ஜீயரை அனுபவித்து அருள -ஜீயரும் அனுபவித்து – நம் பிள்ளை தொடக்கமான முதலிகளைக் குறித்து -பெருமாள் எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணி அருளினார் -நானும் சர்வ ஸ்வதானம் பண்ணக் கடவதாக ஒருப்பட்டேன் -அபேஷை உடையார் உடைய படியே அபேஷித்து கொள்ளும் கோள் என்று அருளிச் செய்ய -நம்பிள்ளையும் -அடியேனுக்கு தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய – மணக் கோலத்தே முளை தெளிப்பாரைப் போலே இப்போது தஞ்சமான ஒரு வார்த்தை உண்டோ கேட்பது -என்று பின்னையும் அருளிச் செய்த வார்த்தை – ஆத்மவிநியோகம் ஈஸ்வரன் என்று இராதே ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இரும் -என்று அருளிச் செய்ய -இவர் திரு உள்ளம் பிரசன்ன மாகாமையாலே பேசாதே நிற்க -உம்முடைய நினைவேது சொல்லிக் காணீர் -என்ன -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரம பதத்துக்கு எழுந்து அருளினால் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் என் நினைத்து இருக்கக் கடவர் -என்ன -அது அதிகார அநு குணமாய் அன்றோ இருப்பது -தருப்தன் ஆகில் ஆர்த்தனாய் இருக்கிறான் – ஆர்த்தனாகில் த்ருப்தனாய் இருக்கிறான் -என்று அருளிச் செய்ய -பிள்ளையும் இவ்வர்த்தத்தை
அநுஷ்டான பர்யந்தமாக கண்டபடி -அம்மங்கி அம்மாள் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்தில் -அவர் திரு மாளிகையிலே பிள்ளை எழுந்து அருள -அவருடைய தேவியார் பிரசன்னையாய் இருக்க -ஸ்ரீ பாதத்தில் சேவித்துப் போந்த முதலிகள் -இதுக்கு நிதானம் என் -என்று கேட்க -அம்மாள் தேவியார் விஷயத்தில் இதுக்கு முன்பு பண்ணின ப்ராதி கூல்யம் உண்டாகில் அன்றோ -அவர் பேற்றுக்கு இவர் வெறுக்க வேண்டுவது -என்று அருளிச் செய்தார்-அநந்தரம்
தம்முடைய ஸ்ரீ பாதத்தை உடையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாட்டுக்கு எழுந்து அருள -ஸ்ரீ வைஷ்ணவர் பிள்ளைகள் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே விழுந்து அழ இதுக்கு அடி என் என்று முதலிகள் கேட்க -பெறுகிற தேசம் கொந்தளிக்கிற படி கண்டால் -இழக்கிற தேசம் என் படக் கடவது -என்று அருளிச் செய்தார் –
பட்டர் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை -பிரசாதக் கிழியை எடுத்துக் கொண்டு வாரும் -என்ன -பிரசாதக் கிழியின் அருகே –
பணக் கிழியும் இருக்க -அவர் பிரசாதக் கிழியை எடுப்பது பணக் கிழியை எடுப்பதாக நிற்க -இவர் வரக் காணாமையாலே எழுந்து அருளி –
இவர் நிற்கிற நிலையைக் கண்டு -இடம்பெற்ற அளவிலே இருவரும் உம்மை நலிந்தார்கள் ஆகாதே வாரீர் -என்று அருளிச் செய்தார் –
நஞ்சீயர் மடத்திலே பட்டருடைய மூத்த பெண் பிள்ளை -காஞ்சோரிச் சருகுண்டோ -என்று கேட்டு வர அப்போது -முன்வாயிலே சிலவற்றை பார்த்து காணாமையாலே இல்லை என்று -பின்னையும் பார்த்தவாறே ஒரு கலத்திலே இட்டு -தம்முடைய மடியிலே இட்டு கொண்டு எழுந்து அருளினவாறே இத்தை
ஒருவர் கையிலே வர விடல் ஆகாதோ -நீர் கொண்டு எழுந்து அருள வேணுமோ -என்று பட்டர் அருளிச் செய்ய -அப்பொழுது இல்லை என்று விட்ட மஹா பாபிக்கு ஆளிட்டு இருக்கவும் வேணுமோ -என்று அருளிச் செய்தார் -இத்தால் ஆசார்ய புத்ர பௌத்ராதி களும் ஆசார்யவத் அநு வர்த்தநீயர்-என்று கருத்து –
பிள்ளை திரு நறையூர் அரையரும் நம்பி திரு வழுதி வளநாடு தாசரும் -வேம்பு முற்ற முற்ற கைக்குமா போலே இவ் வாத்மாவும் ஒரு நாளைக்கு
ஒரு நாள் விஷயாந்தரங்களிலே மண்டா நின்றது -இதுக்கு பகவத் பிராப்தி கூடுமோ -என்று -பட்டரைக் கேட்க
-சரீர வியோக சமயத்திலே யாகிலும் இஸ் சரீரத்தில் உபேஷை பிறக்கையாலும் -ஸ்ரீ மாலாகாரருக்கு தன் வடிவு அழகைக் காட்டினால் போலே
-இவனுக்கும் வடிவு அழகை காட்டுகையாலும் -அது கூடும் -என்று அருளிச் செய்தார் -இதுக்கு பிரமாணம் -ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி –
பட்டர் குடும்ப சஹிதமாக கூர குலோத்தமனிலே இருக்கிற நாளிலே -திரு நந்தவனத்திலே அல்பம் உபஹதி உண்டாய்த்தென்னா -திரு நந்தவனம் செய்கிற ஏகாங்கிகள் சில வார்த்தை சொன்னார்கள் என்று பெரிய ஜீயர்-கூர நாராயண ஜீயர் -அவர்களை அழைத்து -நான் பெருமாள் திருக்குழல் சிக்கு
நாறுகிறது என்றோ திரு நந்தவனம் செய்கிறது -பட்டரது குடும்பத்துக்கு இஷ்ட விநியோக அர்ஹமாக திரு நந்தவன வ்யாஜத்தாலே கோலினேன் அத்தனை அன்றோ -என்று அருளிச் செய்தார் -இத்தால் -சிஷ்யனுக்கு ஆசார்ய குடும்பமே உத்தேச்யம் -என்றது ஆய்த்து-
தூவியம் புள்ளு திரு அவதரித்தார் என்று -பட்டர் திரு வம்சத்தில் -நம்பிள்ளைக்கு சிலர் விண்ணப்பம் செய்ய -அப்போது அருகே சேவித்து இருந்த திருப் பேராச்சானைப் பார்த்து -எனக்கு ஒரு தமையனார் திரு அவதரித்தார் -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் –
நம்பி திருவழுதி வள நாடு தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற சமயத்தில் சேவித்துப் போந்த ஸ்ரீ வைஷ்ணவர் அழ -கெடுவாய் -செத்துப் போகிற நான் போகா நின்றேன் -ஸ்ரீ பராசர பட்டர் வாசிக்க கேட்க இருக்கிற நீ ஏன் அழுகிறாய் -என்று அருளிச் செய்தார் என்று -பிள்ளை அருளிச் செய்தார் –
நஞ்சீயர் பட்டரை -பெருமாள் சந்திர புஷ்கரணி கரையிலே கண் வளர்ந்து அருளுகிற இதுக்கு திரு உள்ளத்தில் கருத்து என் -என்று விண்ணப்பம் செய்ய –
நாராயணா ஒ மணி வண்ணா -என்று கூப்பிட்ட பின்பு இ றே மடுவின் கரையிலே வந்தது -இங்கு கண் வளர்கிறது நான் கூப்பிடுவதற்கு முன்பே -என்னை எடுக்கைகாக -நான் அகப்பட்ட பொய்கையிலே ஏற்கனவே வந்து கண் வளர்ந்து அருளுகிறார் -இவ்வர்த்தம் கேட்டது-
உம்முடைய வசநத்தால் அன்று காணும் -உம்மைக் கொண்டு பெருமாள் என் நினைவை வெளி இட்டு அருளினார் -என்று அருளிச் செய்தார் –
நஞ்சீயரை பெரிய கோயில் வள்ளலார் திருவாய் மொழியிலே -ஓர் அர்த்த பிரச்தாபத்திலே ஜீயர் அருளிச் செய்த படி ஒழிய -இங்கனே யானாலோ என்ன –
நான் சொன்னபடி அழகிது என்று திருக் கலி கன்றி தாசர் சொல்லுவர் -என்று ஜீயர் அருளிச் செய்ய – உம்முடைய அழகியது என்பர் என்றது பிரமாணமாக சொல்லுவான் என் -என்ன – அதில் ஒரு நிபந்தனம் இல்லை காணும் -சதாசார்ய சந்நிதியோடு -சச் சிஷ்ய சந்நிதியோடு –
வாசி இல்லை காணும் ஒருவனுக்கு திருத்தம் பிறக்க -என்று அருளினார் –
பிள்ளை பின்பு அழகிய ஜீயர் மடத்திலே ஒரு நாள் எழுந்து அருளி இருக்க -எல்லாருக்கும் ஆழ்வாருடைய அவஸ்தை-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருக்கும் நிலை – உண்டாய் பெற வேண்டி இரா நின்றது -ஸ்த்ரி அன்ன பாநாதிகளோடே இருக்கிற
நாங்கள் செய்வது என் -என்று விண்ணப்பம் செய்ய -இங்கு அந்த அவஸ்தை பிறந்தது இல்லை யாகிலும் சதாசார்ய விசேஷ கடாஷத்தாலே ஸ்தூல சரீர விமோசநத்துக்கும் -கைங்கர்ய ப்ராப்திக்கும் நடுவே – அவ்வஸ்தை பிறப்பித்து எம்பெருமான் கார்யம் செய்யும் -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் என்று
நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் அருளிச் செய்வர்-
எல்லாரும் ஸ்ப்ருஹை அர்த்த காமம் களிலே எங்களுக்கு ஸ்ப்ருஹை உண்டாய்தே ஆகிலும்-நாங்கள் உபதேசிக்கிற ஜ்ஞானத்துக்கு -ஒரு சம்சார பந்தத்தை அறுத்து புருஷார்த்தை தர வல்ல சக்தி உண்டு என்று இரும் -என்று அருளிச் செய்தார் – இத்தால் -ஆசார்யனுக்கு ஆதல் -வேறு ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆதல் -இதர சம்சாரிகளோ பாதி ஹேது சத்தா பிரயுக்தமான அர்த்த காம ப்ராவண்யம் உண்டாய்த்து என்னா -இவர்களையும் பிரக்ருதிமான்களோ பாதி யாக
நினைக்கல் ஆகாது -எங்கனே என்னில் -காமோபபோக பரமா ஏதாவதி தி நிஸ் சிதா -என்று அர்த்த காமங்கள் புருஷார்த்தம் என்றிருப்பர் அஞ்ஞர் -ஜ்ஞானவான்கள் சரீர அவசானத்தளவும் -சத்ருசம் சேஷ்டதே ஸ்வ ஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞனவா நபி -இத்யாதி பிரக்ரியையாலே வாசனா பிரயுக்தமாக செல்லக் கடவது என்று-நஞ்சீயர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்த அனந்தரத்திலே-அருளிச் செய்தார் –
பட்டர் திருவணை யாட எழுந்து அருளுகிற போது பகலில் வழி நடந்த ஆயாசத்தாலே விட்டதொரு தூற்றடியிலே நஞ்சீயர் மடியிலே திரு முடியை வைத்து கண் வளர்ந்து அருள -அவ்விரா முடியத் துடை மாறுதல் -சலிப்புதல் செய்யாதே -எழுந்தி அருளி இருந்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –
நம்பி திருவழுதி வள நாடு தாசர் -ஓருரு கண்ணி நுண் சிறுத் தாம்பை அருளிச் செய்து – மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டினவாறே ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருந்த ஸ்ரீ வைஷ்ணவர் லீலா விபூதியில் இத்தை ஒருவன் ஸ்ரத்தை பண்ணி -அநுசந்திக்க -அவ்விடம் நித்ய விபூதியாம்படி எங்கனே -என்று கேட்க -அது இருந்தபடி கேளீர் கூரத் தாழ்வான் திரு மகனார் திரு வவதரித்த பின்பு இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்து காண் என்று அருளிச் செய்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –
சிஷ்யன் ஆசார்ய விஷயத்தில் அர்த்த முகத்தாலே பிரதிபத்தி பண்ணும் இடத்து – அப்போது அங்குத்தைக்கும் அடி உண்டு இல்லை என்று நிரூபிக கடவன் அல்லன் – தன் சரீர தாரணத்தோ பாதியாகிலும் அங்குத்தைக்கு அம்முகங்களாலே ப்ரீதி பண்ணுகை ஸ்வரூபம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
நஞ்சீயர் பட்டரை ஸ்ரீ பாதம் தாங்குவதாக தோளிலே தண்டை வைக்கப் புக -உம்முடைய வேஷத்துக்கு விருத்தமாக செய்யலாகாது காணும் -என்று பட்டர் அருளிச் செய்ய – இங்குத்தை கைங்கர்யத்துக்கு ஏகாந்தம் என்று வேஷ பரி க்ரஹம் பண்ணினேன் –
இது தானே இதுக்கு விரோதி யாகில் பழைய வெள்ளையை உடுக்கிறேன் -என்றார் –
எல்லா ஆசார்யர்கள் உடைய அபிப்ராயமும் -எல்லா ஆழ்வார்கள் திரு உள்ளக் கருத்தும் – எல்லா வேதங்களுடைய கதியும் -எல்லா சாஸ்திரங்கள் உடைய நினைவும் நிரூபித்த அளவில் -ஆசார்ய கைங்கர்யமே பரம பிரயோஜனம் -என்று நஞ்சீயர் பிள்ளைக்கு அருளிச் செய்தார் என்று வடக்கு திரு வீதிப்
பிள்ளை அருளிச் செய்வர் –
பட்டர் -த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி சப்தாநதரத்தாலே இவ்வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ -என்று உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –
அனுசந்திகைக்கு குறை இல்லை -ஆகிலும் இப்பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறு ஒரு பாசுரத்துக்கு சுரவாது -என்று அருளிச் செய்தார் –
நஞஜீயருக்கு பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
உபாயாம்ச நிரூபகர் த்ரிவிதர் -எங்கனே என்னில் –கர்ம ஞான நிஷ்டர் என்றும் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டர் என்றும் -சித்த உபாயாந்தர்க்கத நிஷ்டர் என்றும் இதில் சித்த உபாய ஸ்வீகார நிஷ்டன் -கர்ம ஞாநாதி நிஷ்டனை அருவருக்கும்-சித்த உபாயாந்தர்க்கத நிஷ்டன் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டனை அருவருக்கும்-கர்ம ஞாநாதி நிஷ்டன் கர்ம பரிபாலன பங்கம் பிறக்கிறதோ என்று கலங்கிக் கொண்டு போரும் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டன் -சித்த சாதன பரிபாலன பங்கம் பிறக்கப் புகுகிறதோ -என்று கலங்கிக் கொண்டு போரும் – சித்த உபாயாந்தர்க்கத -தத்வ -நிஷ்டன் சித்த சாதன நிஷ்கர்ஷம் பண்ணிக் கொண்டு போரும் –
திருச் சங்கணித் துறை நம்பிக்கு பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
முமுஷு சேதனகதமான ஜ்ஞானம் த்ரிவிதம்
உபாசநாத்மக ஜ்ஞானம் -என்றும் -ப்ரபதநாத்மக ஜ்ஞானம் என்றும் -ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் என்றும் –
உபாசநாத்மக ஜ்ஞானம் உடையவன் -உபாஸ்யன் பக்கலில் தனக்கு உண்டான வ்ருத்தியில் உகப்பை அவனுக்கும் தனக்கும் என்று இருக்கும் –
ப்ரபதநாத்மக ஜ்ஞானம்உடையவன் பிரபத்தவ்யன் பக்கலிலே தனக்கு உண்டான வ்ருத்தியில் உகப்பை அவனுக்கே என்று இருக்கும்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -போலே உனக்கே நாம் ஆட் செய்வோம் –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவன் ஸ்வ தஸ் சர்வஞ்ஞன் பக்கல் உண்டான வ்ருத்தியை ஸ்வயம் ஸ்வ கார்யம் என்று இருக்கும் -இவற்றுக்கு உதாஹரணம் பதிவ்ரதை மாங்கல்ய ஸூ த்ரம் பெருகினால் பந்திக்கும் போது பர்த்தாவினுடைய நிக்ரஹ அனுக்ரஹங்களை ஹேது வாக்காமல்
தன்னுடைய அநர்த்த வ்ருத்தி என்று நினைத்து இருக்குமா போலே –
நம்பிள்ளை வார்த்தை
ஆத்ம சமர் -பிராண சமர் -திருஷ்டி சமர் -பாஹூ சமர் –ஆபரண சமர் -ஆயுத சமர் -பாத சமர் -பாத ரேகா சமர் -பாத ரஷா சமர்-சாயா சமர் –
அஜ்ஞ்ஞான தசை கும்பகரணனைப் போலே —தேவதாந்தர பஜனம் பண்ணுகிற தசை ராவணனைப் போலே –
பக்தி தசை சூர்பணகை போலே —பிரபத்தி தசை ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –என்று நம்பிள்ளை –
நம்பிள்ளை நஞ்சீயரை அவதாரங்கள் ஏதுக்காக என்ன –
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை -என்று ஜீயர் அருளிச் செய்தார்
த்ரிபுவன வீர தேவன் பட்டருடைய ஆபிஜாத்யம் கண்டு -நீர் நம் பக்கல் ஒருநாள் வந்து போகீர் -என்று அபேஷிக்க -பள்ளி கொள்கிறவர் கை மறுத்தால்
உன்னுடைய வாசல் ஒழிய வேறு ஒரு போக்கு உண்டோ -என்று அருளினார் –
இவ்வர்த்தத்தில் கந்தாடை யாண்டான் -பெரிய ஜீயருக்கு நியச்த பரனானவன் உடுத்த புடைவைக்கு பிரதி கூலர் பகலிலே கஞ்சி அரிசி -சில -வேண்டி
நிற்கையாவது -படி பெற்று உண்ணும் பதிவ்ரதை மேல் அழிவுக்கு பர பர்த்ரு ஸ்வீகாரம் பண்ணின மாத்ரம் -என்று அருளிச் செய்தார்
சாதனா புத்த்யா கைங்கர்யமாவது -பணி கொள்ளக் கூலி இன்றிக்கே பணி செய்து கூலி வேண்டுகை –
இவ்வர்த்தத்தில் கந்தாடை யாண்டான் கோபால ஜீயருக்கு அருளிச் செய்த வார்த்தை -கைங்கர்யம் பண்ணி பலம் வேண்டுகை யாவது நாடும் ஊரும் அறிய
ஒருவனுக்கு கை கொடுத்த ஸ்திரீயானவள் தன் பர்த்தாவோடே ராத்ரி சம்ச்லேஷித்து விடிந்தவாறே அதுக்கு கூலி தா வென்று அவனை மடி பிடித்து
வளைத்த மாத்ரம் -அது என் -கைங்கர்யம் பண்ணுமவனுக்கு ஜீவிக்க வேண்டாவோ – என்ன -கொட்டை இட்டு பணி செய்யா நின்றால் -கொட்டின் வாய் தேய்ந்தால் கொட்டுடையவன் இரும்பிட்டுக் கொள்ளும் இத்தனை யல்லது -கொட்டு தானே இரும்பிட்டுக் கொள்ளக் கண்டிலோமே -அப்படியே இவனைக் கைக் கொண்டு பணி கொள்ளும் அவனுக்கே அன்றோ ஜீவனம் இடுகையும் பரமாய் இருப்பது என்று அருளிச் செய்தார் –
விளை நகர்ப் பிள்ளை -பிள்ளை நகரிப் பிள்ளை -ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணுவர் -என்று பட்டர் கேட்டு -இதுக்கு அபிப்ராயம் அறிய வேணும் -என்று அவர் திருமாளிகை ஏற எழுந்து அருள -அமுது செய்ய காலமானவாறே -அகத்துக்கு எழுந்து அருள வேணும் -என்ன பட்டரும் பிள்ளையை அழைத்து -வாரீர் பிள்ளாய் நீர் என்ன நினைத்து அமுது செய்யப் பண்ணுவீர் என்ன -அடியேன் பின்வரும் முதலிகளுக்கு முன்பு எழுந்து அருளின முதலிகள் திருப் போனகப் பானை ஒழிச்சுவர் என்கிற இது பிரயோஜனமாக நினைத்து இருப்பன் என்ன -பட்டரும் முதலிகள் முகம் பார்த்து இச் சொல் அற்ற சோறு உண்டாகில் உஜ்ஜீவனம் -என்று அருளினார் புகழை விரும்பும் சொல் சொல்லாமல் ஸ்வயம் பிரயோஜனமாக செய்தார் ஆகில் இவருக்கு ஆத்ம உஜ்ஜீவனம் ஆகும் -என்று அருளினார் –
ஸ்ரீ விதுரர் திருமாளிகையில் அமுதுசெய்தது மடி தடவாத சோறு என்று இ றே–இச் சொல்லற்ற சோறு இ றே அது –
அக்கரைச்சடியார் வார்த்தை-தாஸித் தொழில் செய்து வந்த பெண் பிள்ளை -இவள் உச்சியம் போதினில் ஷூத்து நலியாது நின்றது என்று என் பக்கலிலே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்தால் ஷூநநிவ்ருத்தி பண்ணி உகபபிக்குமோபாதி பிரகிருதி வியாதி நலியா நின்றது என்று என் பக்கலிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
வந்தால் பிரகிருதி வியாதியை பிரகிருதி இட்டு சமிப்பித்தால் ஆகாதோ என்ன-நம்பிள்ளை அருளிச் செய்தபடி –
வாரீர் தாய் நெடும் காலம் மலடி நின்று பெற்றதொரு பிள்ளை பித்தேறி உன் பக்கலிலே -உறி போட்டுக் கொள்ளுகைக்கு கயிறு தா -கழுத்தை
அறுத்துக் கொள்ளுகைக்கு அரிவாள் தா -என்று வந்தால் கொடாது ஒழிகிறது அவன் சரீர நாசத்தை அஞ்சி அன்றோ -அவ்வளவும் போராதோ ஒரு
ஸ்ரீ வைஷ்ணவனுடைய ஸ்வரூப நாசம் என்று –
அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கினீர் -அழுந்திக் கிடந்த நாளிலே கரணங்களைத் தந்தீர்
பிரகிருதி சம்பந்தத்தை கழித்து அருளினீர் -சர்வ அபராதங்களையும் பொருது அருளினீர்
அர்ச்சிராதி மார்கத்தையும் பரமபதத்தையும் குண அனுபவத்தையும் தந்து யாவதாத்மபாவி நித்ய கைங்கர்யம் கொண்டு அருளினீர்
சர்வ ஸ்வாமி யான சர்வேஸ்வரனே தேவரீர் செய்து அருளினபடி என் தான் என்று நம்பிள்ளை அநு சந்தானம் –
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –
நீர் ஒருகாலும் உடம்போடு உண்டான உறவுக்கு உளைந்து போருகிறீர் இல்லை
இதுக்கடி உற்றானான எம்பெருமான் பக்கலிலே உறுதியை உணர்ந்தோ – அன்றியே உம்முடைய பக்கல் உண்டான உறுதியை உணர்ந்தோ என்று கேட்க –
அடியேனுக்கு இவை இரண்டும் உண்டோ -உள்ள உறவு இத்தனையும் உடம்போடு வந்த ஊற்றத்தால் அன்றோ -என்று விண்ணப்பம் செய்ய -எம்பாரும் இது கேட்டு க்ருதார்த்தராய் -நீர் இங்கனே சொல்லுவான் என் -ஆழ்வான் உடன் உண்டான குடல் துவக்காலே -அந்தரங்கமான அர்த்தங்களை ஆராயும்படியான ஆகாரங்களை உடையீர் -உடையவரால் உண்டான ஞானம் உடையீர் -அதடியாக எங்கள் உடன் உண்டான உறவு அறிவீர் -இப்படி இருக்க எங்களை நீ இங்கன் உழைப்பிக்கலாமா -இவ் வாகரங்களிலே உமக்கு உண்டான உறவு உறுதி சொல்லீர் -என்று உறுத்திக் கேட்க -பட்டர் விண்ணப்பம் செய்தபடி -என்னுடைய உயிருக்கு உடைமை யாகை அன்றோ உறுதி யாவது – அங்கன் அன்றியே இவ் உயிருக்கு உறுதி உண்டாகில்-அவ் உயிருக்கு உறுதி உண்டோ -ஆகையால் அவ் உயிரை உணர்ந்த ஆனந்தத்தாலே பிறந்த உறுதி அன்றோ -உண்டாகில் உள்ளது -என்று விண்ணப்பம் செய்ய -எம்பாரும் இதில் ஒரு குறை இல்லை -சொன்னபடி அழகிது -ஆனாலும் அவ் விஷய ஸ்பர்சத்தை உணர்ந்த ஆனந்தத்திலும் காட்டிலும் இவ் விஷயத்தில் அனாதர அதிசயம் காணும் அபேஷிதமாய் இருப்பது -ஆகையால் உடம்போடு உண்டான உறவுக்கு உளைந்து போரீர் -என்று அருளிச் செய்ய -பட்டரும் கிலேச ஹேதுவான பிரக்ருதியை உணர்ந்துசோகிக்க தொடங்கினார் -எம்பாரும் அருளிச் செய்த கார்யம் பலித்ததே என்று ப்ரீதரானார் –
நம்பிள்ளை வார்த்தை –
த்யாஜ்ய விஷயமும் -உதாசீன விஷயமும் -அனுக்ரஹ விஷயமும் -அனுபவ விஷயமும் -அதாவது -நாஸ்திகர் -ஆஸ்திக நாஸ்திகர் -நாஸ்திக ஆஸ்திகர் -ஆஸ்திகர் -நாஸ்திகர் ஆவார் புறம்போடு உள்ளோடு வாசி யற நாஸ்திகர் -ஆஸ்திக நாஸ்திகர் ஆவார் -புறம்பு ஆஸ்திகரைப் போலேயாய் உள்ளு நாஸ்திகர் –
நாஸ்திக ஆஸ்திகர் ஆவார்-புறம்பு நாஸ்திகரைப் போலேயாய் உள்ளு ஆஸ்திகர்–ஆஸ்திகர் ஆவார்-உள்ளோடு புறம்போடு வாசி யற ஆஸ்திகராய் இருப்பவர்கள்
பட்டர் நீராடி எழுந்து அருளா நிற்க -ஒரு சைவன் எதிரே வர -அவன் உடம்பில் சாம்பல் தம் திருமேனியில் படிந்தால் போலே இருக்க -பின்னையும் போய் நீராடி எழுந்து அருளி உள்ளே எழுந்து அருளாதே திருமாளிகை வாசலில் நின்று ஆண்டாளை அழைத்து இப்படி பட்டத்துக்கு பிராயச் சித்தம் அருளிச் செய்ய வேண்டும் -என்ன -ஆண்டாளும் நெடும் போது திகைத்து நின்று -ஸ்ரீ பாத தீர்த்தத்தை யாகிலும் கொள்ளும் இத்தனை யன்றோ -என்ன -அது சேருமோ என்ன -உயிர் மாளும் அளவில் உயிரை மாறி யாகிலும் உயிரை நோக்க வேண்டாவோ என்ன -ஆகில் திரு உள்ளம் ஆனபடி செய்யும் இத்தனை யன்றோ -என்ன -அவ்வளவிலே ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையரை ஸ்ரீ பாதம் தாங்குகிற சொல்லாமல் சுட்டார் இங்கே தண்டு வாங்க எழுந்து அருள –
ஆண்டாள் அவரைக் கண்டு -தீர்த்தம் வாரா நின்றது -என்ன -பட்டர் -நமக்கு கூடுகிறதோ என்ன -முற்றூண் இட்டுக் கறக்கிலும் பசலுக்கு பால் அன்றோ வேண்டுவது -என்ன – பட்டரும் -அப்படியே செய்கை யன்றோ உள்ளது -என -கலசப்பானையில் திருமஞ்சனம் கொண்டு ஸ்ரீ பாதத்திலே சொரிந்து தீர்த்ததையும் பிரசாதப்பட்டு ப்ரீதர் ஆனார் –
பட்டர் அறியில் சம்மதியார் என்று பட்டருடைய ஸ்ரீ பாதத்தை வேறே சிலரை இட்டு விளக்குவித்து ஆண்டாள் பிரசாதப்படுவார் என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
மத் பக்த விஸ்லேஷ விஷயத்தில் சத்தை உடனே இருக்குமவர்கள்-மத் விஷய சத்ருக்கள் -என்று ஈஸ்வர வாக்யம் -மறுவலிடாத சப்தாதி விஷயத்தில் ப்ராவண்யத்தில் விரக்தியும் -வளரா நிற்பதான பாகவத விஷய ப்ராவண்யமும் காண் -வைஷ்ணவ லஷணம் ஆவது -என்று நம்பிள்ளை –
ஒருவனுக்கு ஒரு வ்யசனம் உண்டானால் அந்த வ்யசனம் தீரும்படியாக பிரசாதிக்க வேண்டும் என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை அபேஷிக்க -அந்த ஸ்ரீ வைஷ்ணவனும் பிரசாதிக்க -அவனுக்கு அந்த வ்யசனம் தீரக் காணா நின்றோம் -இது பகவத் சக்தி யாலேயோ வைஷ்ணவன் சக்தி யாலேயோ -என்று பின்பழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளையை கேட்க
பகவத் சக்தியாலேயே என்று அருளிச் செய்ய -ஆனால் எம்பெருமானை அபேஷிக்க அமையாதோ -என்ன -அமையாது -அவனை பிரசாதிப்பித்திக்கொள்ளும் வகை இது வல்லதில்லை -என்ன -ஒரு வைஷ்ணவன் பிரதிஞ்ஜையை எம்பெருமான் முடித்துக் கொடுத்த இடம் உண்டோ -என்ன -அர்ஜுனனுக்கு ஜயத்ரதநோபாதி பலம் இன்றிக்கே இருக்க -நான் அஸ்தமிக்கும் முன்பே ஜயத்ரதனை வதிக்கக் கடவேன் -என்று அர்ஜுனன் பண்ணின பிரதிக்ஜையை சர்வேஸ்வரன் முடித்துக் கொடுத்தமை கண்டிலீரோ என்று அருளினார் –
நம் பிள்ளை வார்த்தை –பிரபன்னர் ஜுவரமாய் கிலேசியா நிற்க -பிள்ளை காரியார் தாசரும் -சக்ரபாணிப் பிள்ளானும் அறிய வந்த அளவிலே -இடவகையில் உத்தம நம்பி ரஷகனாய் கிலேசியா நின்றான் என்ன பிரபன்னர் -வர்த்தமானரோக ஸாந்தி ரஸ்து – என்று பிரசாதிக்க -பிள்ளான் -நீர் கிலேசியா நிற்க பிரசாதிக்கை ஆவது என் -அது சமிக்கை யாவது என் -என்ன -பிராட்டி ராவண பவனத்தில் இருந்து ராஷசிகளால் கிலேசிகப்பட்டாள் -என்ன -அவள் -சீதோ பவ ஹநூமத -என்ற வாக்யம் பலித்தது இல்லையோ -என்று மூதலித்துக் கொடுத்தார் –
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி ததீய சேஷத்வம் —பர ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமிஅர்ச்சாவதாரம் —விரோதி ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி அஹங்கார மமகாரங்கள் —உபாய ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவத் கிருபை —உபேய ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவந முகோல்லாசம் —என்று நம்பிள்ளை வார்த்தை –
அம்மணி ஆழ்வான் இரு நூற்று காதம் ஆறு வந்து பட்டர் ஸ்ரீ பாதத்திலே தெண்டனிட்டு -நெடுமாற்கு அடிமை அர்த்தம் அருளிச் செய்ய வேணும் -என்று
அபேஷிக்க -பட்டரும் -எம்பெருமானை அறிகை யாவது -அவனுக்கு அரை வயிற்றுப் படி – ததீயரை அறிகை யாவது -அவனை முழுக்க அறிகை -என்று அருளிச் செய்ய -இனி பலவகையாக அருளிச் செய்யில் அடியில் மறப்பேன் -என்று அவர் அது தன்னையே தாரகமாக கொண்டு போனார் –
கழிந்த நாளைக்கு அநுதபிக்கையும் வருகிற காலத்தை பழுது போக்காமையும் -காண் வைஷ்ணத்வம் ஆகிறது -என்று நம்பிள்ளை –
பழுதே பலகாலும் போயின என்று அஞ்சி அழுதேன் -முதல் திருவந்தாதி -16 அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-
பிறந்த பின் மறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-. அரவணை மேல் கண்டு தொழுதேன் -முதல் திருவந்தாதி -16
நம்பிள்ளை நஞ்சீயரை -தான் தனக்கு வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது எவ்வசஸ்தை பிறந்தால் -என்ன –
அர்ச்சாவதாரதுக்கு உயிர் உண்டு என்று நெஞ்சில் பட்ட வன்றும் –
ஒரு வைஷ்ணவன் பக்கல் புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹத்தளவாகிலும் ஸ் நேஹம் பிறந்த வன்றும் –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கடுத்து வார்த்தை சொன்னால் தன் நெஞ்சில் சிவிட்குத் தட்டாமல் -கோபம் கொள்ளாமல் -போக ரூபமான வன்றும் –
பர தார பர த்ரவ்யங்களில் நசை யற்ற வன்றும் –ஏகாந்தி என்று அறியலாம் –
ஸ்வ தார ஸ்வ தரவ்யங்களில் நசை யற்ற வன்று பரமை காந்தி என்று-அறியலாம் என்று அருளிச் செய்தார் –
பட்டர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் சேவிப்பார் ஒரு வைஷ்ணவரை -நீர் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி
என் -என்று கேட்டுவாரும் என்ன -அவரும் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் செல்ல – அன்று பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்கே அமுது செய்து அருள -அவரும் இடம் பெறாமையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யும் அளவும் பேசாதே இருக்க – அனந்தாழ்வானும் அவரைப் பார்த்து -அனந்தாழ்வானும் அவரைப் பார்த்து – அமுது செய்து அருளிற்று இல்லையே -நெடும் போதுண்டே இளைப்போடே நிற்கிறது என்று -அனந்தாழ்வான் தாமும் அவருமாக உள்ளே அமுது செய்துஅருளி -பின்னை எங்கு நின்றும் எழுந்து அருளுகிறது -என்ன -பட்டர் -அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் சென்று
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என்னென்று கேட்டுவா என்று அருளிச் செய்து விட்டார் -என்ன -ஆகில் – கொக்குப் போலே இருக்கும் –
பட்டரை ஒருவன் -தேவதாந்தரங்களை வைஷ்ணவர்கள் அனுவர்த்தியாது ஒழிவான் என் -என்ன -பிரமாண விரோதம் உள்ள இடத்தில் அன்றோ
சந்தேஹம் உள்ளது -இங்கு சந்தேஹம் இல்லை காண் -என்று அருளிச் செய்தார் – ஆவதென் என்ன -சத்வ ப்ரசுரரை ரஜஸ் தம பிரசுரர் அனுவர்த்திக்கும் அது ஒழிய சத்வ ப்ரசுரர் ரஜஸ் தம ப்ரசுரரை அனுவர்திகக் கடவதோ -என்று அருளிச் செய்தார் – தேஷாமபி நமோ நம -என்கிறபடியாலே –
நம்பிள்ளையை -ஒருவன் எம்பெருமானை ஒழிய தேவதாந்தரங்களை பஜிக்கலாகாது என்கிற நீங்கள் -நித்ய நைமித்திகாதிகளில் -அக்நி இந்திராதிகளை பஜிப்பான் என் – ஆலயத்தில் பஜியாது ஒழிவான் என் -என்ன -அக்நி ஹோதராதிகளில் அக்நியை உபாசித்தும் ஸமஸா நாக்நிகளை நிவர்தித்தும் போகிறாப் போலே —
இரண்டு இடத்துக்கும் வாசி எங்கனே என்னில் -நித்யாதிகளில் பகவத் ப்ரகார புத்த்யா பண்ணுகிற உபாசநம் -பகவத் உபாசநமேயாக விதிக்கையாலும் –
அவற்றினுடைய பிரதிஷ்டைகளில் பராபர தத்வ ப்ரத்யயம் -பண்ணி இருக்கும் தாமஸ புருஷர்களாலே வேத வ்ருத்த ஆகம மந்த்ர ப்ரகிரியையாலே
ஸ்வ தந்தரமாக தேவதாந்த்ரங்கள் க்ருத ப்ரதிஷ்டிதம் ஆகையாலும் – இவ்விடத்தில் பகவத் ப்ரகார புத்யயா உபாசிக்க விதி இல்லாமையாலும்
தேவதாந்தர வர்க்கங்களில் தூரதோ வர்ஜநீயத்வம் ருத்ரனுக்கு உண்டு – எங்கனே என்னில் -சத்வஸ்தருக்கு அத்யந்தம் விரோதியான தம ப்ராசுர்யத்தாலே –
நித்யாதிகளில் போலே ஆலயங்களிலும் பகவத் ப்ரகாரா புத்யயா உபாசிக்ச்லாமோ என்ன -அப்படி உபாசிக்க விதி இல்லாமையாலே ஆகாது -த்யாஜ்யதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் சவீ காரத்துக்கு உடலாகவும் -உபாதேயதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் விஷயம் த்யாகத்துக்கு உடலாகவும் கடவதோ என்று அருளிச் செய்தார் –தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூம் தாமம் -திருவாய்மொழி -2-8-6-என்கிற பாட்டில் ப்ரஸ்துதமான தேவதாந்தர பஜனம் அர்ஜுனனுக்கு ருத்ரன் பக்கலிலே ஓர் அஸ்தர லாபத்துக்காக பகவந நியோகத்தாலே வேண்டிற்று -எம்பெருமானால் நியமிக்க பெற்ற பூஜை –
வைஷ்ணவன் ஆகையாவது -தத்வ ஜ்ஞான நிஷ்டனாகை -தத்வ ஜ்ஞானம் தான் -ஆசார்ய விஷயீ கார லப்யம் –ஆசார்ய விஷயீ காரம் தான் -தத்வத்தை நாமறிய வேண்டும் என்னும் அபிநிவேச அதிசய பூர்வகமாக பஜன லப்யம் -இந்த இச்சைக்கு முதலடி பகவத் விஷயத்தில் அத்வேஷம் –
அந்த அத்வேஷதுக்கு காரணம் பகவத் கடாஷம் – பகவத் கடாஷத்துக்கு ஹேது என் என்னில் -இஸ் சம்ஸார சேதனனுக்கு அநாதியாக எம்பெருமான் பக்கல் த்வேஷ தூஷிதத்வம் உண்டாகையாலே அவன் பார்த்து அருளுகைக்கு ஈடாக ஓன்று செய்யக் கூடாமையாகையாலே பகவத் நிர்ஹேதுக கடாஷம்
-ஆனால் ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில் -இச் சேதனனுக்கு அஜ்ஞாதமான அநந்ய பிரவ்ருத்தி களிலே பிறப்பன சில
ஸூக்ருதம் அடியாக பார்த்து அருளுகிறான் ஆகையாலே வைஷம்ய நைர்க்ருண்யங்கள்வாராது – இங்கனே இருப்பதொரு ஸூ க்ருதம் அடியாய் இருக்க நிரஹேதுகம் ஆவான் என் என்னில் -விழ விட்டு மறந்து போன பொருளை எடுத்துக் கொண்டு சென்று கொடுத்தவனை -நம்மதை நமக்குத் தந்தான் என்று இராதே -இவன் நமக்குத் தந்தான் என்று இருக்கும் க்ருதஞதை போலே -தன் தலையிலே ஒன்றும் இன்றியிலே இருக்க -எம்பெருமான் பார்த்து அருளினான் என்று க்ருதஜஞனாய் இருக்கிற இவ்வதிகாரி அபிசந்தியாலே நிர்ஹேதுகம் என்கிறது – இந்த யாத்ருசிக ஸூ க்ருதம் என்கிறதுக்கு அடி சௌஹார்த்தம் –
அவனுக்கு சர்வாத்ம விஷயமாக எப்போதும் உண்டாய் இருக்க -ஒருத்தனுக்கு ஒருகாலாக யாத்ருசிக ஸூக்ருததை உண்டாக்குவான் என் என்னில் –
நெடும்காலம் அனுபவித்து போந்ததொரு பாபம் சுருக்கம் ஒழிய தொலைந்த அளவிலே இந்த சௌஹார்த்தம் இவனுடைய யாத்ருசிக ஸூ க்ருததுக்கு அடியாம் –
ஜபாகுஸூ மச்சாயை பதார்த்தங்கள் எல்லாம் கிடக்க -பளிங்கிலே பிரதி பலிக்குமா போலே அச்சபா பனான அதிகாரி பக்கலிலே சௌஹார்த்தம் பலிக்கக் கடவது
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
ஒருவன் தன்னை வைஷ்ணவன் என்று நினைத்து இருக்கலாவது-எவ்வளவு ஜ்ஞானம் பிறந்தால் -என்று பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –
பகவத் பாகவத விஷயங்களிலே ஒரு உச்சாராயம் கண்டால் நெஞ்சு சிவீல் என்று இருந்தது இல்லை யாகில் தன்னை -வைஷ்ணவன் என்று இருப்பது –
சிவீல் என்று இருந்தது ஆகில் நமக்கு எம்பெருமானோடு உறவு இல்லை யாகாதே – சம்பந்த ஜ்ஞானம் பிறந்தது இல்லை யாகாதே என்று நினைப்பது இருப்பது என்று அருளினார் –
த்ருஷ்டதுக்கு நாக்கு நீட்டாது ஒழிகையும்-அத்ருஷ்டதுக்கு கை நீட்டாது ஒழிகையும் காண் -வைஷ்ணவ லஷணம் -என்று நம் பிள்ளை வார்த்தை –
பெருமாள் எழுந்து அருளா நிற்கத் திருவடி தொழப் புறப்பட்டருளி நஞ்சீயர் திருமேனியிலே திருநாமங்கள் இன்றியிலே இருந்தபடியைப்
பார்த்து -பர்த்தாவின் முன்பே தாலி கட்டாமல் நின்ற ஸ்த்ரி யைப் போலே இரா நின்றது திருமண் கொண்டு வாரும் கோள் என்று அருளினார் –
ஸ்வரூபத்தில் தெளிவும் -உபாயத்தில் துணிவும் -உபேயத்தில் த்வரையும்-அதிகாரி க்ருத்யம் என்று நம்பிள்ளை –
வீர சிகாமணிப் பல்லவ ராயர் பட்டரை -ராஜ கார்யம் செய்கையாலே ஸ்ரீ வைஷ்ணவர்களை அநுவர்த்தித்து நல் வார்த்தை கேட்கப் போகிறதில்லை -அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -என்ன -கடற்கரை வெளியை நினைத்து இரும் -என்று அருளினார் -பல்லவ ராயரும் தெரியாமையாலே கையைப் பிசைந்து நிற்க -கடற்கரை வெளியிலே ஓர் அமிர்த கடல் போலே விட்டுக் கொண்டு இருக்க -எதிர்கரையிலே பிணம் தின்னிப் பையல் ராவணன் விட்டு இருக்க எழுபது வெள்ளம் சேனை உணர்ந்து கொண்டு பெருமாளைக் குறிக் கொண்டு நோக்கா நிற்க – பிரக்ருதிமான்கள் ஆகையாலே கண் தூங்கி கால் ஓய்ந்து கை சோர்ந்த அளவிலே – பெருமாள் தாமும் தம்பியருமாக முதுகிலே ஆனவனாழி கையைக் கட்டிக் கையிலே தெரிந்து பெருக்கிப் பிடித்த அம்பும் தாமுமாக -சில அண்டஜங்கள் முட்டை இட்டு நோகுமா போலே எழுபது வெள்ளம் சேனையும் சூழ நடையாடும் மதிள் போலே
சாரிகையாக வந்த சக்கரவர்த்தி திருமகனுடைய கையும் வில்லும் தஞ்சம் என்று ஸுகமே இரும் -என்று அருளினார் –
ஒருநாள் திரு வீதியிலே பட்டரும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் திரளாக எழுந்து அருளி இருந்து பகவத் குண அநுசந்தானம் நடவா நிற்க -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -நாம் பண்ணின ஸுக்ருதம் கண்டதே – இப்படி இருக்கப் பெற்றோமே -என்ன சிறியாச்சான் எழுந்து இருந்து -இது நெடுநாள் பெருமாள் ரஷகர் என்று சிஷித்தோம் -இப்போது ஒரு ஸுக்ருத தேவர் உண்டாவதே என்றார் –
எம்பெருமான் ரஷகர் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று – எம்பெருமான் ரஷ்யம் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று-எங்கனே என்னில்
ரஷகன் என்று இருந்தானாகில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு சேராது – ரஷ்யம் என்று இருந்தானாகில் ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்துக்கு சேராது –
முதலியாண்டான் திருக் குமாரர் கந்தாடை யாண்டான் பட்டருக்கு சரஸ்வதி பண்டாரத்தில் எழுந்து அருளி இருந்து பணித்த வார்த்தை –
எம்பெருமான் சிலரைப் போம் என்னும் -சிலரை வா வென்னும் -சிலரைப் போது என்னும் -பிரயோஜனந்தர நிஷ்டரை பலத்தைக் கொடுத்து போ என்னும் –
கர்ம ஜ்ஞான நிஷ்டரை கர்மம் கழிந்த வாறே வா வென்னும் –அநந்ய பிரயோஜனரை போது என்னும் -போதுவீர் போதுமினோ -உடனே வாரும்கோள்
என்று கை நீட்டி வரவேற்ப்பான் -இந்த தேசத்தில் ஒரு அநந்ய பிரயோஜனரை உண்டு என்று இருந்தோமோ – உண்டாகில் அங்கே கண்டு கொள்கிறோம் -எங்கனே என்னில் – பிராப்ய பிரபகங்கள் இரண்டும் எம்பெருமான என்றால் விஸ்வசிப்பார் இல்லை -விஸ்வசித்தால் க்ருதஜராய் இருப்பார் இல்லை –
க்ருதஜராய் பெற்றதாகில் பகவத் கைங்கர்யம் விரசமாய் இருக்கும் – -இவை மூன்றும் கூடிற்று ஆகிலும் -ராக த்வேஷ அபஹதர் ஆகையாலே
பாகவத கைங்கர்யத்துக்கு இசையார் -அதுவும் கூடிற்றாகில் ஆசார்ய உடைய தேக யாத்ரையைக் கண்டு நெகிழ நினைப்பர்கள் -இதுவும் கூடிற்றாகில் தங்களை
ஸூத்தராக நினைப்பர்கள் – ஆகையால் பகவத் குணம் சொல்லுகைக்கும் கேட்கைக்கும் இவ்விடத்தில் ஆள் இல்லை காணும் –
அவதாரம் இருக்கும்படி என் -என்று நம்பிள்ளையை முதலிகள் கேட்க -மெய் வெளுத்து நாக்கு வற்றி இருக்கும் -என்ன -அது என் என்ன -அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்து இருக்கும்-பெற்றால் பிரயோஜனாந்த பரர் ஆகையாலே மயிர் பட்ட சோறு என்று நாக்கு வற்றி இருக்கும்
-என்று அருளிச் செய்தார் –
நம்பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் பிணங்கி ஒருவரை ஒருவர் மடி பிடித்துக் கொண்டு செல்ல –
அதுக்கடி என்ன -என்று பிள்ளை கேட்டருள -பெரியவாச்சான் பிள்ளை -இத்தனை நாளாக சேவித்து நின்றதில் தேங்கின அர்த்தம் இது என்று காட்ட
வந்தார்கள் -என்ன -கோ மூத்தவன் பாடே போகாதே நம்பாடே வந்தார்கள் -என்று அருளினார் –
சர்ப்பாஸ் யகதமான மண்டூகத்தினுடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்தார் என்று நம் பிள்ளை அருளிச் செய்தார் -இத்தால்
பர துக்க அஸ ஹிஷ்ணுத்வமும் -பர ஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வமும் வைஷ்ணவனுக்கு ஸ்வபாவம் -என்றபடி –
வீர சுந்தர ப்ரஹ்ம ராயன் காலத்திலே பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே -வீர சுந்தர பட்டான் என்று பிள்ளை பிள்ளை யாழ்வான்
ஆண்டாளுக்கு விண்ணப்பம் செய்ய -போர க்லேசித்தார் -பட்டரை கோயிலில் இருக்கவும் கூட ஒண்ணாதபடி பண்ணின இவன் பட்டான் என்றதுக்கு இது வென் –
என்ன -பிள்ளையோடு உண்டான விரோதத்தாலே அத்ருஷ்டத்தை இழந்தான் – சில நாள் இருந்து த்ருஷ்ட சுகமாகிலும் அனுபவிக்கிறானோ என்று இருந்தோம் –
அதுவும் கூட இழந்தான் ஆகாதே -என்று க்லேசமாயிற்று -என்று அருளிச் செய்தார் –
நம்பிள்ளை திரு உள்ளத்திலே அபேஷை நடக்கும்படியையும் -அநபேஷை நடக்கும்படியையும் -வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்யும் படி –
அபேஷை நடப்பது -அஹங்கார நிரசநத்திலும் -அவிவேக நிரசநத்திலும் -அநபேஷை நடப்பது -ஆத்ம ஜ்ஞானத்திலும் -ஆத்ம லாபத்திலும் -பகவல் லாபத்திலும் -ஆத்ம ஜ்ஞானம் ஆவது -ஜ்ஞாநானந்த சாஷாத்காரம் -ஆத்ம லாபம் ஆவது -தத் பிரதிபந்தக நிவ்ருத்தி –
பகவல் லாபமாவது -ஸ்வ யத்ன சாத்யமுமாய் -ஸ்வ கதமுமான பகவத் அநுபவத்தை –
நம்பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன -முமுஷுவான அதிகாரிக்கு
அனுசந்தேயம் -ஸ்வரூபம் -பரதந்த்ரம் -விரோதி -பிரபலம் – புருஷார்த்தம் -அந்ய சாத்தியமன்று –
பரிஹார்யம் தேவதாந்திர பஜனமும் -பாகவத அபசாரமும் ஆகிற படு குழிகள் -என்று அருளினார் –
நம்பிள்ளை திருவெள்ளறை தேன கொள சோலை தாஸா மாளிகையிலே எழுந்தருளி -அவருடைய திருமாளிகையிலேயே ஐஸ்வர்யத்தைக் கண்டு
ப்ரீதராய் இருக்க -இதுக் கடி என் என்று எதிராஜ தாசர் பிள்ளையைக் கேட்க -நம்பிள்ளை -இஸ் சம்ஸார ஸுகம் தான் மூன்று படியாய் இருக்கும் –
இஸ் ஸுகத்தை தனக்கு என்றும் -தனக்கும் எம்பெருமானுக்கும் என்றும் -எம்பெருமானுக்கே என்றும் -நினைக்கை காண் –
தனக்கு என்கை -நரக அநுபவ சத்ருசம் -தனக்கும் எம்பெருமானுக்கும் என்கை ஸ்வர்க்க அநுபவ சத்ருசம் -எம்பெருமானுக்கே என்கை பரமபத அநுபவ சத்ருசம்
பட்டர் பிரபன்னரை அழைத்தருளி -உம்மை எல்லோரும் பிரபன்னர் என்னா நின்றார்கள் ப்ரபன்ன லஷணம் இருக்கும்படி என் -என்று கேட்க
அர்த்த ராத்ரியிலே தனி வழி போகா நிற்க -துஷ்ட மிருகங்களால் மிடைநததொரு காட்டிலே -முன்னடி தோற்றாதபடி மருண்டு -வர்ஷமும் இடியும் உண்டாய் –
கண்ணுக்கு உள்ளே கொள்ளியை வீசினாப் போலே மின்னிக் கொண்டு வாரா நிற்க – அவ்வஸ்தையிலே திருநாம உச்சாரணம் பண்ணாது ஒழிகை ப்ரபன்ன லஷணம் என்று அருளினார் –
ஒரு விசேஷ திவசத்திலே பெரிய திருமண்டபத்திலே பெருமாளும் நாய்ச்சிமாரும் புறப்பட்டருளி இருந்து திருத் திரை யிட்டு ஏகாந்தமாய் இரா நிற்க -பட்டர் திருவடித் தொழ என்று எழுந்தருளி திருத் திரையை வாங்கினவாறே பெரு மாள் முனிந்து புறப்படவிட திரு உள்ளமாக -இவர் புறப்பட்ட அளவிலே
-அவனை அழையும் கோள் -என்று திரு உள்ளமாக -அருளப்பாடு -என்ற அளவிலே இவரும் வந்து திருவடி தொழ -நாம் புறப்பட சொன்ன போது என நினைந்து இருந்தாய் என்று கேட்டருள -பெருமாளும் நாய்ச்சிமாருமாக நினைந்து இருந்தேன் -என்ன -நம்மை முன்பு என்ன நினைந்து இருப்பதென்று கேட்டருள -முன்பு ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்து இருப்பேன் என்ன -நம் ஆணையே -நம்மை முன்பு போலே நினைத்து இரு – என்று திரு உள்ளமாய் அருளினார் –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றது
அணுகதமான பாபம் -விபுகதமான கிருபைக்கு எதிர் நிற்குமோ –
நம்பிள்ளை ப்ரஹ்ம தேசத்தில் எழுந்தருளி நிற்கச் செய்தே பெரிய கோயில் வள்ளலார்
காண வர -குலம் தரும் -என்கிற பாட்டில் முதல் பதத்துக்கு தாத்பர்யம் அருளிச் செய்ய வேணும் என்று
பிள்ளையைக் கேட்க முரட்டு திருப்பதியானான உன்னை நம்பூர் குலத்துக்கு சேஷமாக்கின-குலம் தரும் -என்று விண்ணப்பம் செய்தார்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே -திருவாய்மொழி -2-5-8-
என்னுடைய சத்தாஹானி காணும்படிக்கு ஈடான கிருபா ஹாநி அவனுக்கு இல்லாமையாலே என்னை அங்கீகரித்தான் -தொடங்கின உபாயம் முடிவதற்கு முன்னே என்னுள் கலந்தான் வறுத்த பயறு போலே ஆத்ம அனுபவத்தளவிலே நின்று முடியாதபடி என்னுள் கலந்தான் –
என் அஹங்காரம் பாராதே குலம் கொண்டே பரிக்ரஹித்தான் அபரிச்சேதயனான தன்னை நான் புஜிக்குமா போலே அணு ஸ்வரூபனான என்னை புஜித்தான்
நாநாவித நரகம் புகும் பாவம் நானே செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- தேன விநா தருணக் ரம்பி ந சலதி -நீ செய்து என்னைச் சொல்லலாமோ -என்பார் –
அடாப் பழி யிடுகிறார்கள் அத்தனை யன்றோ -நான் செய்தது என் -தேவாங்கு சேற்றிலே விழுமா போலே அவனுக்கு ஸ்ப்ருஹணீயமான வஸ்து இப்படி படுவதே
நானே செய்தேன் -அஹங்காரம் ஒன்றாலும் செய்தேன் –
பிரபன்ன ஸ்வரூபம் இருக்கும்படி–நம் மனிசர்க்கு த்வயம் ஒழிய அனுசந்தானம் எல்லாம் கடலோசை மாத்ரம் என்று
நஞ்சீயர் அருளிச் செய்ததாக பிள்ளை அருளிச் செய்வர் –
நஞ்சீயர் பட்டரை -பிரபத்தியாவது ஜ்ஞான விசேஷமோ க்ரியா விசேஷமோ என்று கேட்க-வஸ்து விசேஷம் என்று அருளிச் செய்தார் –
—————————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply